Friday, December 31, 2004

நாகை மாவட்ட மீட்பு விவரம்

ரஜினி ராம்கி பூம்புகார் பகுதிக்குச் சென்றுள்ளார். தேவையான பொருட்கள் அங்கு வந்து சேர்ந்து விட்டதாகவும், இப்பொழுதைக்கு பற்றாக்குறை disposable syringes தான் என்றும் சொல்கிறார். மேற்கொண்டு என்ன தேவை என்பதை அங்கிருந்து சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்.

நேற்று நாகைக்கு நாங்கள் அனுப்பிய மருந்துப் பொருட்கள் அரசின் முட்டாள்தனத்தால் போய்ச்சேர தாமதாமாகியுள்ளது. எந்த வண்டியையும் திருவாரூர் தாண்டி அனுப்பவில்லை. எனவே இன்று காலைதான் மருந்துப் பொருட்கள் நாகை போய்ச்சேர்ந்துள்ளன.

நேற்று ஜெயலலிதா நாகையில் இருக்கும்போதுதான் இந்த அரசின் 'எச்சரிக்கைச் செய்தி' கூத்து நடந்தேறியுள்ளது. உடனே ஜெயலலிதாவும், பிற அமைச்சர்களும் அலறியடித்துக்கொண்டு தாங்கள் வழங்கிக்கொண்டிருந்த உதவிப்பொருட்களை அப்படியே போட்டுவிட்டு வண்டிகளில் ஏறி ஓட, மற்ற ஜனங்களும் ஓட, போக்குவரத்து நெரிசலாக, அதனை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் எல்லாவற்றையும் சரிசெய்து விட்டு திரும்பிப் பார்த்தால் அவரது காரின் ஓட்டுனரும், ஆட்சியரின் உதவியாளரும் ஓட்டமெடுத்திருந்தனர். ஆட்சியரை அம்போவென விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். உடனே கிடைத்த காரில் ராதாகிருஷ்ணனும் சென்றுவிட்டார்.

கோமாளிக்கூட்டம்!

ஆலடி அருணா வெட்டிக்கொலை

இன்று காலை நெல்லை அருகே தமிழக முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ஆலடி அருணாவும், அவரது நண்பரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆலடி அருணா திமுகவில், பின் எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுக, பின் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் மீண்டும் திமுக என்று இருந்தவர். கடைசியாக திமுக ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர். பாராளுமன்றத்தில் உறுப்பினராக பல வருடங்கள் இருந்தவர். போபோர்ஸ் நேரத்தில் அந்த பிரச்னையை விசாரித்த பாராளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவராகவோ, உபதலைவராகவோ (சரியாக ஞாபகம் இல்லை) இருந்தவர். போபோர்ஸ் ஊழல் பற்றி தமிழில் திமுக வெளியிட்ட சிறு பிரசுரம் ஒன்றை எழுதியவர்.

கடைசியாக திமுகவில் தனக்கு சீட் கிடைக்கவில்லை என்று வெளியேறியவர். திமுக தலைமை, பாராளுமன்றத் தேர்தலின்போது அதிக அளவில் பணம் கேட்டார்கள் என்று புகார் செய்தவர்.

மேற்கொண்டு தகவல் வரும் நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இப்பொழுதைய சுனாமி பிரச்னையில் இந்த விஷயம் அடிபட்டுப் போனாலும் போகலாம்.

சுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை

நான் எதிர்பார்த்தது போலவே TRO பற்றிய முதல் அறிக்கை சுப்ரமணியம் சுவாமியிடமிருந்து.

தி ஹிந்து செய்தி

TRO வழியாக யாரும் வடகிழக்கு இலங்கைக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறார். ஆக தமிழகத்தில் இருந்து TRO-வுக்கு உதவி செய்ய நினைக்கும் கொஞ்சம் நஞ்சம் பேரையும் பயமுறுத்தியாகி விட்டது.

வைகோ போன்றோருக்கு TRO என்று ஒன்று இருப்பது கூடத் தெரியுமோ, தெரியாதோ. இன்றுவரை ஜெயலலிதா அரசு தமிழக மக்களுக்கு நிவாரண உதவிகளைச் சரியாகச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு மட்டும்தான் அவரிடமிருந்து வந்துள்ளது. வடகிழக்கு இலங்கையில் புலிகள் கீழுள்ள பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் நாசங்களுக்காக வருந்தியோ, இரங்கியோ இன்றுவரை தமிழகத்தில் ஒரு செய்தியையும் காணோம். புலிகளுக்கு எதிர்ப்பு காட்டலாம். ஆனால் அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் திண்டாடுவதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் முல்லைத்தீவில் நங்கூரம் பாய்ச்சியிருந்த 'கடல் புலிகள்' படகுகள் 80% அழிந்துவிட்டன என்று சந்தோஷப்படும் சுவாமியை... என்னவென்று சொல்ல?

மேலும் TRO வழியாக இலங்கைக்கு அனுப்பும் பாராசிடமால், அமாக்சிசிலின் மருந்துகளை வைத்தா புலிகள் வெடிகுண்டு செய்யப்போகின்றனர்?

நேற்றுகூட (இலங்கைக்கான இந்தியத் தூதர்) நிருபமா ராவ் பேசுவதை தொலைக்காட்சியில் பார்த்தேன். அதிகபட்சமாக இந்திய உதவி திரிகோணமலையோடு நின்றுவிட்டது. நிருபமா ராவுக்கு இலங்கையில் உள்ள பிற இடங்களைப் பற்றி தெரியவே தெரியாதோ என்னவோ? கொழும்பு... அதன்பின் திரிகோணமலை.

Thursday, December 30, 2004

இன்றைய தேவையற்ற கலவரம்

திடீரென - குற்ற உணர்ச்சி மிகுதியால் - இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் "மற்றுமொரு சுனாமி" என்று பயமுறுத்தல் அழைப்பு விட, அதனைக் கேட்டு ஒவ்வொரு தென் மாநிலமும் அவசர அவசரமாக எல்லோரையும் கடலை விட்டு அகன்று, மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு சொல்ல, ஒரே களேபரம்.

கடலை ஒட்டி இரண்டு கி.மீ தொலைவில் உள்ள அனைவரும் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்று சொல்வது சாதாரண விஷயமல்ல. இந்தியாவின் மாபெரும் கடற்கரை ஓரங்களில் பல லட்சம் பேர் குடியிருக்கின்றனர்.

என்னதான் நடக்கிறது?

கடந்த ஏழு நாள்களில் எங்கெங்கெல்லாம் நில அதிர்வு, எந்த அளவில் நடக்கிறது என்பதை அமெரிக்காவின் நிலவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தளத்தில் பார்க்கலாம்.

வடக்கு சுமத்ராவில் 9.0 ரிக்டர் அளவில் நடந்த நில நடுக்கத்தையொட்டி, அங்கும், அந்தமான் நிகோபார் தீவுகளிலும், தினமும்... ஆம், தினமும், நில அதிர்ச்சி வந்தவண்ணம் உள்ளது. இந்த after shock இன்னமும் சில நாள்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். கடந்த 12 மணி நேரத்தில் சுமத்ராவில் மூன்று நில அதிர்ச்சிகள் 5.6, 5.7, 5.3 ரிக்டர் நிகழ்ந்துள்ளன. கடந்த நான்கு நாள்களில் அந்தமான் நிகோபார் தீவுகளில் கிட்டத்தட்ட 30 நில அதிர்வுகள்.

இந்த அதிர்ச்சிகளால் சுனாமி ஏற்படப் போவதில்லை.

ஒருவர் சென்னை ரிசர்வ் வங்கிக் கட்டடம் வரை தண்ணீர் வந்துவிட்டது என்று எழுதியிருந்தார். அப்படியொன்றும் நடக்கவேயில்லை. கடல் உறுமியிருக்கலாம். அலைகள் கூட ஆர்ப்பரித்திருக்கலாம். ஆனால் சுனாமி ஏதும் இதுவரையில் இல்லை.

அரசின் வீண் "புலி வருது" பயமுறுத்தலால் இன்று நாகை போன்ற இடங்களில் மீட்புப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மக்கள் மனதில் தேவையற்ற பீதி.

ஆனால் அவ்வப்போது "No need to panic, we are asking people only to be cautious" என்கிறார்கள் மத்திய அரசுத் தரப்பினர்.

Wednesday, December 29, 2004

இலங்கை நிலவரம்

இந்தோனேஷியா, இலங்கை ஆகிய இடங்களில் நேர்ந்துள்ள இழப்பு மிகவும் மோசமானது. இவ்விரு நாடுகளிலும் ஆளும் அரசுக்கு எதிராக சண்டையிட்ட குழுவினர் கையில் இருக்கும் இடங்களிலும் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் சேதம் ஏற்பட்டுள்ள, அரசின் கீழுள்ள பகுதிகளில்கூட மீட்புப் பணிகள் நடப்பதில் சிரமங்கள் உள்ளன. அரசின் அங்கம் ஏதும் இல்லாத விடுதலைப்புலிகள் கீழுள்ள பகுதிகளில் அரசு நிறுவனத்தால் எந்தவிதத்தில் உதவி செய்யமுடியும்?

இந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் கையிலான தமிழர் பகுதிகளுக்கான நிவாரணத்தை சரியாகச் செய்யக்கூடியவர்கள் விடுதலைப் புலிகள்தான். ஆனால் பிற நாட்டு அரசுகளால் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படாத ஓரமைப்பிற்கு எந்த அளவுக்கு பிற நாட்டு அரசுகள் உதவி செய்யும் என்று தெரியவில்லை.

இந்தியா இலங்கைக்கு ரூ. 100 கோடி உதவி செய்வதாகச் சொல்லியிருக்கிறது. இதில் எத்தனை வடகிழக்கிலங்கைக்குப் போய்ச்சேரும் என்று தெரியவில்லை. அதைப்போல இந்தியா அனுப்பியுள்ள மருத்துவர்களில் சிலர்தான் திரிகோணமலைப் பகுதிக்கு மட்டும் சென்றுள்ளனர். தமிழகத்தில் ஏதேனும் அமைப்பு மருத்துவர்கள் பலரை ஒன்று சேர்த்து வன்னி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். இந்திய அரசே இந்தச் செயலை முன்னின்று செய்யும் என்று எனக்குத் தோன்றவில்லை.

செஞ்சிலுவைச் சங்கம் போன்றவை, (ஆக்ஸ்ஃபாம்?) வடகிழக்கிலங்கையில் எந்த அளவுக்கு இருக்கின்றன என்றும் தெரியவில்லை.

வடகிழக்கிலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை மிகவும் வருத்தத்தைத் தருகிறது.

நாகை மாவட்டம் மீட்புப் பணிகள்

இன்றைய நிலவரப்படி நாகை மாவட்டத்தில் வேண்டிய அளவு உணவு, (பாக்கெட்) தண்ணீர், உடைகள் என நிறைய வந்துள்ளன. ரஜினி ராம்கியும் தரங்கம்பாடி, பூம்புகார் பகுதிகளிலும் தேவையான அடிப்படைப் பொருட்கள் வந்து சேர்ந்துள்ளன என்று தகவல் கிடைத்ததாகச் சொல்கிறார்.

ஆனால் இப்பொழுதும் கூட உடல்கள் கடலிலிருந்து உள்ளே அடித்துவரப்படுகின்றன. இப்பொழுது தன்னார்வத் தொண்டர்கள் சற்று அதிகமான அளவில் வந்துள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. அனைவரும் முகம்/வாய் மூடிய நிலையில்தான் உடல்களை அப்புறப்படுத்தி எரிக்கின்றனர்/புதைக்கின்றனர்.

தொற்று நோய்கள் (காலரா போன்றவை) ஏதும் பரவும் முன்னர் உடல்களை அப்புறப்படுத்தும் பணி நடந்து முடிய வேண்டுமே என்று வேண்டுவோம்.

சர்ஜிகல் கையுறைகள், முகத்தை மறைக்கும் முகமூடிகள், பிளீச்சிங் தூள் போன்ற மருத்துவப் பொருட்கள் தேவைப்படுகின்றன. இன்று இவற்றுள் சிலவற்றை வாங்கி நாகைக்கு அனுப்ப நண்பர்கள் சிலர் முயற்சி செய்கிறோம்.

இன்றைய செய்திப்படி தமிழக அரசு மீனவர்கள் இழந்த வலைகளுக்கு பதிலாக புதியதை வாங்கித்தரும் என்றும், வேறு பல்வேறு உதவிகளும் செய்து தரும் என்றும் வந்துள்ளது.

Tuesday, December 28, 2004

கல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து

எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்படி:
  • கல்பாக்கம் டவுன்ஷிப், அலைகளால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 30 பேர்கள் இறந்திருக்கின்றனர்.
  • கல்பாக்கம் டவுன்ஷிப்பில் இருந்தவர்கள், அங்கிருக்கும் மருத்துவமனையில் இருந்தவர்கள் அனைவரும் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த இடப்பெயற்சி அலைகளால் ஏற்பட்ட அழிவினால்தான்.
  • இரண்டு அணு உலைகளில் ஒன்று ஏற்கனவே பராமரிப்பு காரணமாக மூடப்பட்டிருந்தது.
  • சுனாமியைத் தொடர்ந்து இரண்டாவது அணு உலையும் மூடப்பட்டுள்ளது.
  • இரண்டு உலைகளுக்கும் எந்தச் சேதமுமில்லை. கதிர்வீச்சு அபாயம் எதுவுமில்லை.

இன்று மதியம் அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் காகோட்கர் பத்திரிகை, ஊடக நிறுவனங்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

யாரும் அணுக்கதிர்வீச்சு தொடர்பாக பயப்பட வேண்டிய தேவையில்லை.

நாகை நிவாரண உதவி

இன்று நண்பரிடம் பேசியதில் நேற்று இரவிலிருந்து உதவிக்குழுக்கள் நாகைக்கு விரைந்துள்ளதாகவும், வண்டிகளில் உணவு, உடைகள் வந்து குவிந்துள்ளதாகவும் சொன்னார். (more than 15 trucks full of goods!) பல்வேறு நல அமைப்புகள் - அரிமா சங்கம் போன்றவை - உதவிக்குழுக்களையும், பொருட்களையும் அனுப்பியுள்ளதாகச் சொன்னார்.

கடைசியாக, இரண்டு நாள்கள் தாமதமானாலும், உதவிகள் பெருமளவில் வந்து சேர்ந்திருப்பது நிம்மதியைத் தருகிறது.

இப்பொழுது மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு ஒன்று கூட்டி பொதுமக்களே ஒன்றுசேர்ந்து கரையோரம் ஒதுங்கியுள்ள உடல்களை (மனித, விலங்குகள்) சேகரித்து எரிப்பது, புதைப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே இப்பொழுதைக்கு நாகைக்குப் பண உதவி எதுவும் தேவையில்லை. ஆனால் இன்னமும் ஒரு வாரத்துக்குப் பின்னர் (உயிர் பிழைத்த) பள்ளிச் சிறுவர்களுக்கான பாடப் புத்தகங்கள், பிற கல்விப் பொருட்கள் தேவைப்படலாம்.

தமிழோவியம் கிரிக்கெட்

சென்ற வாரத் தமிழோவியம் கிரிக்கெட் கட்டுரை - இர்ஃபான் பதானைப் பற்றி.

Monday, December 27, 2004

நாகை நிலவரம்

சற்றுமுன் பேசியதில் கிடைத்த தகவல்.

2,000க்கும் மேற்பட்டவர் இறந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் சொல்கின்றனவாம். ஆனால் இன்னமும் பலர் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் இல்லை. அதனால் இறப்பு இதைவிட அதிகமாகத்தான் இருக்கும்.

நகரில் பாதிபேர் வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியூர்களுக்கு - கடலை விட்டு வெகு தொலைவு - சென்றுவிட்டனர். (இது சற்றே தேவையில்லாத பயம்.)

வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கோவில்கள், கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று அரசுத் தரப்பிலிருந்து உணவு ஆகியவற்றுக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. பொதுமக்களே இதைக் கவனித்துள்ளனர். இன்று காலை கடும் மழை பிடித்துக்கொண்டுள்ளது. இதனால் உடல்களைத் தேடுவது சிறிது தடைப்பட்டுள்ளது. மேலும் உடல்களை முழுவதுமாக அப்புறப்படுத்தாதனால், மழையும் சேர்ந்து கொண்டுள்ளதால் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

அரசு ஒருங்கிணைப்புக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.

இப்பொழுதைய உடனடி தேவை:

* உடல்களை அப்புறப்படுத்துவது, கணக்கெடுப்பது, உறவினர்கள் மூலம் முடிந்தவரை அடையாளம் காணவைப்பது, உடல்களை எரிப்பது/புதைப்பது.

* மருத்துவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவி. நாகை அரசு மருத்துவமனையால் இறந்தவர்களை, உயிருக்குப் போராடுபவர்களை கவனிக்க முடியாத நிலைமை.

* வீடில்லாதவர்களுக்கு தேவையான தாற்காலிக உணவு, கழிவறை வசதி. கிட்டத்தட்ட 10,000 பேர்களுக்கு மேல் வீடிழந்துள்ளனர் என அறிகிறேன். இதற்கான முயற்சிகள் பற்றிய விவரங்களைத் தருகிறேன். பணவசதி உள்ளவர்கள் பண உதவி செய்யலாம்.

* பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது. தமிழக அரசு, இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. முழுமையாக - நடுவில் பிறர் திருடாமல் - நடக்குமா என்பது தெரியவில்லை. வேறு இடங்களில் வீடுகள் அமைப்பது, வேலைகள் தேடித்தருவது... வாழ்க்கை அமைத்துத் தருவது...

இப்பொழுதைக்கு மைய, மாநில அரசுகளின் முழு கவனமும் நாகையை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் நாகையில்தான் அதிக நாசம் என்று தெரிந்தும் அங்கு அரசுகளின் ஈடுபாடு குறைவாக இருப்பது போலவே தோன்றுகிறது. நாகையை ஒப்பிடுகையில் கடலூர், சென்னை, பாண்டி, கன்யாகுமரி ஆகிய இடங்களில் சேதம் வெகு குறைவே.

Sunday, December 26, 2004

உயிரிழப்புகள்

காலை 6.30க்கு நில அதிர்வுகள் ஏற்பட்டதும், இந்தியாவில் உயிர்ச்சேதம் ஏதும் இருக்காது, மிகவும் மெலிதானதுதானே என்று தோன்றியது.

பின் 8.30 மணிக்குப் பிறகு சிறிது சிறிதாக தகவல்கள் வர ஆரம்பித்ததும் உயிர்ச்சேதம் நூறுகளில் இருக்கும் எனக்கருதினேன்.

பின் மதியம் ஆனதும், இந்தியாவில் மட்டுமே ஆயிரத்தைத் தொட்டுவிடும் என்று தோன்றியது.

இப்பொழுதைக்குக் கிடைத்த தகவல்கள்படி இந்தியாவின் மொத்த உயிர்ச்சேதம் மட்டுமே பத்தாயிரத்தைத் தொடும் என்று தோன்றுகிறது. இது அதிகாரபூர்வத் தகவல் இல்லை. எனது யூகம் மட்டுமே.

எண்ணிக்கையில் இதைவிடக் குறைவுதான் பிற நாடுகளில் இருக்கும் என்று தோன்றுகிறது. இலங்கையில் ஐந்தாயிரம் வரை இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

சென்ற வருடத்தைய இரானிய நிலநடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30,000. ஆனால் இம்முறை அதைவிடக் குறைவாக இருந்தாலும் பரவலாக, பல்வேறு நாடுகளில், பரந்த கடற்கரையோரத்தில் நிகழ்ந்த இந்தக்கொடுமை மிக அதிகமான மக்களைத் தொட்டுள்ளது.

பொதுவாகவே நிலநடுக்கம் ஏழை-பணக்கார வித்தியாசம் இல்லாது கொல்லும்.

ஆனால் இப்பொழுதைய சுனாமி ராட்சத அலைகளால் இந்தியாவில் இறந்தவர்கள் யார் யார் என்று மேலோட்டமாகப் பார்க்கும்போது நமக்குத் தெரிவது:

1. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்
2. கடலோரத்தில் உள்ள மீனவர் குடியிருப்புகள்
3. சில சுற்றுலாப்பயணிகள், சென்னையில் கடற்கரஒயோரம் உடற்பயிற்சி செய்த சிலர், ஏதோ பண்டிகையையொட்டி கடலில் குளிக்கச்சென்ற இந்துக்கள், வேளங்கண்ண்ணி போன்ற இடங்களில் கடலோர தேவாலயத்தில் கிறிஸ்மஸ் கொண்டாடச்சென்ற கிறித்துவர்கள்.

மொத்தத்தில் இந்தியாவில் பேரிழப்பு மீனவர்களான ஏழைகள்தான்.

ராட்சத அலைகள் பற்றிய புரிதல் பசிபிக் கடல் வாசிகளுக்கு இருக்கும் அளவுக்கு இந்துமாக்கடல் வாசிகளுக்கு இல்லை என்றார் ஒரு நிபுணர்.

அதேபோல கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி இருக்கும் என்பது நில அறிவியலாளர்களுக்குத் தெரிந்துள்ளது, ஆனால் அரசுகளுக்கு இந்தப் புரிதல் இல்லை. இரண்டு மணிநேர அவகாசம் இருந்துள்ளது இந்தியர்களுக்கு. (இலங்கைக்கு 1.5 மணிநேரம்). இதற்குள் கடலோர கிராமங்களில் உள்ளவர்களை ஓரளவுக்கு அரை கிலோமீட்டர் உள்ளே கொண்டுவந்திருக்க முடியும். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றவர்களை ஹெலிகாப்டர் மூலம் சீக்கிரமாக உள்ளே வரவைக்க முடிந்திருக்கும். உயிர்ச்சேதத்தைப் பெருமளவுக்குக் குறைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

இலங்கையிலும் பேரிழப்பு

1,500க்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில் இறந்திருக்கலாம் எனத் தெரிய வருகிறது. நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

தொலைபேசியில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

தமிழ்நாட்டிலே மொத்த இழப்பு - 90% மீனவர்கள் - மிகப்பெரிய எண்ணிக்கையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. கடலுக்குள் சென்ற படகுகள் - வெறும் படகுகளாக மட்டுமே திரும்பி வருகின்றனவாம்.

அதேபோல பொருள் சேதமும் மிகப்பயங்கரம்: பல மீன்பிடிப் படகுகள், கட்டுமரங்கள், மீன்வலைகள் ஆகியவை முழுதும் நாசமாகி, அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கம் இது என்பதோடு கூட இழப்பு பல நாடுகளை மொத்தமாகத் தழுவியுள்ளது என்பதும் மிகவும் வருந்தத்தக்கது.

நாகையில் தீவிர இழப்பு

சென்னையில் நடந்தது ஒன்றுமேயில்லை என்பது போல சற்றுமுன்னர் நாகபட்டிணம் நண்பரிடம் தொலைபேசியில் பேசியதில் கிட்டத்தட்ட 5,000 (ஐந்தாயிரம்) நாகையில் மட்டுமே இறந்திருக்கலாம் என்கிறார். தானே முப்பது உடல்களை இழுத்து வந்து மருத்துவமனையில் சேர்த்ததாகச் சொல்கிறார். நாகபட்டிணம், வேளாங்கன்னி (மாதா கோவில் விசேஷம்...), நாகூர், காரைக்கால் கடற்கரையோரங்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்று இரவும் மீண்டும் இந்தோனேசியாவை ஒட்டி மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும், அதனால் மீண்டும் கரையோரங்களில் கடலில் கொந்தளிப்பு இருக்கும் என்றும் சந்தேகிக்கிறார்களாம்.

தொலைக்காட்சியில் இப்பொழுதைக்கு நாகையில் 1,500 சாவு என்றுமட்டும் செய்தி வருகிறது.

நாகை/காரைக்கால் பகுதிகளில் பல பாலங்கள் உடைபட்டுவிட்டன. இப்பொழுதைக்கு ஒரேயொரு பாலம் திருவாரூரை இணைப்பது மட்டும்தான் இப்பொழுதைக்கு உடையாமல் உள்ளது.

இலங்கையில் 500ஐத் தாண்டிவிட்டது.

கடலூரில் 200க்கும் மேல்.

இராணுவம், கப்பல்படை மீட்புக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கொண்டு விவரங்கள் கிடைக்கக் கிடைக்கத் தருகிறேன்.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு

இன்று காலை (இந்திய நேரம் 5.00-6.30 மணி?) சுமத்ரா, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா அருகில் கடல் - இங்கெல்லாம் தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்த நில அதிர்வுகள் இந்தியாவில் வங்காள விரிகுடாக் கடலோரங்களில் ஏற்பட்டுள்ளது. பெரும் அலைகள் 7.30 - 8.30 அளவில் கடலோரக் கரைகளைத் தாண்டி உள்ளே வந்து விட்டது.

தமிழகக் கடலோர கிராமங்கள், சென்னை நகரம் சேர்த்து, இதில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் நான் இருப்பது கடல் கரையிலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தள்ளி. முதலிரண்டு கிலோமீட்டர்களுக்குள்ளாக இருக்கும் மீனவர் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றவர்கள், கடலோரங்களில் காலைக்கடன்கள், குளியலுக்காகச் சென்றவர்கள், மெரீனாவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்கள், ஜாக்கிங் வந்தவர்கள் என பலரும் தண்ணீரில் அடித்துக்கொண்டு போகப்பட்டுள்ளார்கள்.

அதிகாரப்பூர்வமான செய்திகள் இன்னமும் வரவில்லை. ஆனால் சென்னையில் மட்டுமே குறைந்தது 100க்கு மேற்பட்டவர் இறந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். தமிழகம் முழுவதுமாக கிட்டத்தட்ட 500 சாவுகள் இருக்கலாம்.

சென்னைக் கடற்கரை அருகே வசிக்கும் பலர் பீதியில் அலறியடித்துக்கொண்டு கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஆட்டோ, கார், கால்நடையாகவே என்று கடற்கரையிலிருந்து கிளம்பி ஊரில் உள்ளே சென்றனர். என் வீட்டில் இருந்தபடியே மக்கள் அலறியடித்துக்கொண்டு செல்வதைக் காண முடிந்தது.

உயிர்ச்சேதம் இருந்தாலும், இது பெரும்பீதி ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சி இல்லை. கடலோரத்தில் பெரும் அலைகள் இன்றுமட்டுமல்ல, அடுத்த இரண்டு நாள்களும் இருக்கத்தான் செய்யும்.

காலை முழுவதும் முடிந்தவரை நண்பர்களைக் கூப்பிட்டு பயப்பட வேண்டாம் என்று சொல்லவேண்டிய ஒரு நிலை.

===

மாநகர நிர்வாகம், எதிர்பார்த்தது போலவே, நிலைகுலைந்த நிலையில்தான். தொலைக்காட்சிகளில் அதிகாரபூர்வமான செய்தி எதுவும் இல்லை. சென்னை நகர (ஆக்டிங்) மேயரிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை. மாநில முதல்வரிடமிருந்து ஆசுவாசம் அளிக்கும் எந்தச் செய்தியும் இல்லை. மாநகரக் காவலதுறை கமிஷனரிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை.

சன் நியூஸ் அவ்வப்போது பழைய தண்ணீர் வந்த கிளிப்களைக் காண்பிக்க, அதில் அடித்துக்கொண்டு மிதக்கும் சில பிணங்கள் பார்ப்போரை இன்னமும் பீதியில்தான் ஆழ்த்தியிருக்கும். இந்தப் படங்கள் காண்பிக்கப்பட்டவுடனேயே இன்னமும் சில தொலைபேசி அழைப்புகள் வெளி மாநிலத்தில் இருக்கும் உறவினர்களிடமிருந்து வரத்தொடங்கியது.

பாதிப்புகள் உண்டு. ஆனால் பீதி வேண்டாம். கடலையொட்டி இருப்போர்/இருந்தோர் தவிர பிறருக்கு எந்த பாதிப்பும் இல்லை. கடல் கொந்தளித்து உள்ளே வந்து நகரை அழிக்கப்போவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வேண்டிய உதவிகள் செய்வதும், கடலோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசென்று இன்னமும் ஒரு வாரம் உணவு கொடுத்துக் கவனித்துக்கொள்வதும்தான் இப்பொழுதைய உடனடித் தேவை.

சென்னை விமானநிலைய ஓடுதளத்தில் விரிசல் விழுந்திருப்பதால் இன்று சென்னையிலிருந்து பறக்கவிருந்த விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை

கவிஞராக அறியப்படும் சல்மா எழுதிய "இரண்டாம் ஜாமங்களின் கதை" எனும் நாவல் ஜனவரி 10, 2005 வெளியாகிறது. காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு.

இதுபற்றிய தி ஹிந்து செய்தி.

வரும் புத்தகக் கண்காட்சி 2005 (ஜனவரி 7 -16, 2005) நேரத்தில் வாங்கிப் படிக்கவேண்டிய இரண்டாவது புத்தகம். முதலாவது ஜெயகாந்தனின் "ஹர ஹர சங்கர", கவிதா பதிப்பகம் வெளியீடு.

மேற்குறிப்பிட்ட செய்தியில் விவாதத்தை ஏற்படுத்தக்கூடிய இரண்டு விஷயங்கள்.

1. சித்தி ஜுனைதா பேகம் தான் தமிழ் இஸ்லாமிய சமூகத்திலிருந்து வந்து கதை எழுதிய முதல் பெண்மணி என்று அறியப்படுபவர். இவர் எழுதிய "காதலா, கடமையா" நாவல் 1938இல் பதிப்பாகியது. இந்த நாவல் இப்போது அச்சில் இல்லை. ஆனால் இது மின்புத்தக வடிவில் முதுசொம் காப்பகம் (Tamil Heritage Foundation) நா.கண்ணனால் ஸ்கேன் செய்யப்பட்டது. இணையத்தில் எங்கு இருக்கிறது என்று இப்பொழுது ஞாபகம் இல்லை.

[கண்ணன் தகவல்: ஜுனைதா பேகத்தின் காதலா?, கடமையா? யூனிகோடில். நன்றி நா.கண்ணன், முதுசொம் காப்பகம்]

மேற்கண்ட செய்தியில், இந்த நாவல், அந்தோணி ஹோப் எழுதிய "தி பிரிசனர் ஆஃப் ஸெண்டா" (The Prisoner of Zenda) எனும் நாவலைத் தழுவியதாக இருக்கலாம் என்று சொல்கிறார் கட்டுரை ஆசிரியர். இந்த செய்தியின் ஆதாரம் என்னவென்று தெரியவில்லை. தி பிரிசனர் ஆஃப் ஸெண்டா, 1894இல் வெளியான புத்தகம். இப்பொழுது இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றது (தளம் 1, தளம் 2).

ஜுனைதா பேகம், எழுத்தாளர் நாகூர் ரூமியின் பாட்டி. ரூமியிடமிருந்த பிரதியைத்தான் கண்ணன் வருடி மின்புத்தகமாக மாற்றியிருந்தார். ஜுனைதா பேகம் மிகக்குறைந்த அளவே படித்தவர். அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. அதுவும் 1894இல் வெளியான ஓர் ஆங்கில நாவல் ஜுனைதா பேகத்திடம் எப்படிப் போய்ச் சேர்ந்தது, அதை அவருக்கு யார் படித்துக் காண்பித்தார்கள் என்பதையும் கண்டறிய வேண்டும்.

நாகூர் ரூமி/நா.கண்ணன் வழியாக முதலில் "காதலா, கடமையா" நாவலைப் படிக்கிறேன். "தி பிரிசனர் ஆஃப் ஸெண்டா"வையும் படித்துவிட்டுப் பின்னர் இதுபற்றி எழுதுகிறேன்.

2. முஸ்லிம் சமூகத்தில் பிறந்த தமிழ் எழுத்தாளர்கள் பற்றி. ஆ.இரா.வெங்கடாசலபதி முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்களாகச் சொல்வது மூன்று பேர்களை மட்டும்தான்! தோப்பில் முகமது மீரான், H.G.ரசூல், சல்மா! அதிலும் தோப்பில் ஒருவர்தான் புதினம் எழுதுபவர் (மற்ற இருவரும் கவிஞர்களாக மட்டுமே அறியப்படுபவர்கள் என்பதால்) என்கிறார்!

எனக்குத் தெரிந்து மனுஷ்யபுத்திரன் (ஹமீது), களந்தை பீர் முகமது, நாகூர் ரூமி, ஆபிதீன் (சரி, இவர் இப்பொழுது ஒன்றும் எழுதுவதில்லை!) என சிறுபத்திரிகைகளில் கவிதைகள், கதைகள் எழுதும் பலர் இருக்கிறார்கள். அப்துல் ரகுமான், இன்குலாப், மு.மேத்தா, அப்துல் காதர் போன்ற பல கவிஞர்கள் இருக்கிறார்கள். மீரான் மைதீன், மும்தாஜ் யாசீன் (ஆண், பெண் பெயரில் எழுதுபவர்), மு.சாயபு மரைக்காயர் போன்ற பிற சிலரும் கதைகள் எழுதுபவர்கள்.

என் படிப்பு குறைவு. நிச்சயம் நண்பர்கள் இன்னமும் பல பேர்களை நினைவுகூரலாம்.

Friday, December 24, 2004

இரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004

காங்கிரஸ் எனும் பேரியக்கத்தில் எத்தனையோ தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்று காங்கிரஸ் என்றாலே நேரு-காந்தி குடும்பம் (மஹாத்மா காந்தி இல்லை) என்று மக்கள் நினைக்குமளவுக்கு ஒரு குடும்பம் காங்கிரஸை சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. இன்றும் கூட காங்கிரஸ் கட்சி அந்தக் குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது.

நேரு-காந்தி குடும்பம் முன்னுக்கு வர வர, பிற தலைவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டதுடன், புதிதாக வேறெந்தத் தலைவர்களும் வந்ததில்லை. விதிவசத்தால் உருவான விதிவிலக்கு நரசிம்ம ராவ்.

1991இல் ராஜீவ் காந்தி வெடித்துச் சிதறியிருக்காவிட்டால் நரசிம்ம ராவும் மற்ற இரண்டாம் நிலை காங்கிரஸ் தலைவர்களைப் போல காணாமல் போயிருப்பார். நேரு-காந்தி குடும்ப காங்கிரஸ் உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் அவரவர்தம் மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராகலாம், மாநில அமைச்சராகலாம், முதலமைச்சராகலாம், பாராளுமன்ற உறுப்பினராகலாம், மத்திய அமைச்சருமாகலாம். குடும்பத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட கொள்கைகள் என்று எதுவும் தேவையில்லை. நாட்டுக்கு நல்லது செய்யவேண்டுமென்ற அவசியங்கள் எதுமில்லை. குடும்பத்தலைவர் தன் முகத்தைக் காட்டியே எப்பொழுதும் ஜெயித்து விடுவார். அல்லது தோற்றாலும், அடுத்த தேர்தலில் ஜெயம்தான்.

நரசிம்ம ராவும் ஆந்திர பிரதேச சட்டமன்ற உறுப்பினர் (1957), ஆந்திர மாநில அமைச்சர் (1962), ஆந்திர முதலமைச்சர் (1971), நாடாளுமன்ற உறுப்பினர் (1977), மத்திய அமைச்சர் (1980) என்று ஒரு நேர்மையான காங்கிரஸ் ஊழியனின் வழியில் வந்தவர். மத்திய அமைச்சராக இந்திரா காந்தியிடமும், ராஜீவ் காந்தியிடமும் வேலை பார்த்தவர். இன்றைய 'கோட்டரி' அமைச்சர்களைப் போல கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் தலையை விட்டவர் - இராணுவம், வெளியுறவு, மனிதவள மேம்பாடு (இதெல்லாம் கனமான துறைகள்!).

காங்கிரஸ் தோற்று வி.பி.சிங், சந்திரசேகர் பரிசோதனைகள் நடந்த நேரத்தில் நரசிம்ம ராவ் ஒதுக்கப்பட்டார். வயசும் எழுபதை நெருங்கிவிட்டது. சரி, ஹைதராபாத் போய் மிச்சமிருக்கும் வாழ்க்கையைக் கழிக்கலாம் என்று முடிவு செய்து 18 மாதங்கள் அரசியலிருந்து அஞ்ஞாத வாசம்.

1991-ல் திருப்பெரும்புதூர் வெடித்தது. துக்கம் அனுஷ்டித்த காங்கிரஸ் செயல்வீரர்கள், அடுத்து சோனியா காந்தியை தலைமையேற்கச் சொல்லி வற்புறுத்தினர். சோனியா அன்றும் தியாகம் செய்தார். சரி, பிள்ளைகள் வளரும் வரை ஏதாவது ஒரு பேராசை பிடிக்காத, சாகக் கிடக்கும் கிழத்தைக் கொண்டுவந்து ஆட்சியை நடத்திவிடுவோம் என்று நரசிம்ம ராவைக் கொண்டுவந்தனர்.

நரசிம்ம ராவ் கட்சியின் தலைவராகவும், சிறுபான்மை காங்கிரஸ் அரசின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் நாடாளுமன்ற உறுப்பினர் கூடக் கிடையாது. சொந்த மாநிலமான ஆந்திரம் தெலுகு தேசத்தின் கட்டுப்பாட்டில். கடந்தமுறை அவர் நாடாளுமன்றம் சென்றதே மஹாராஷ்டிர மாநிலத்தின் மேடக் தொகுதி வழியாகத்தான் - ஆந்திராவில் நின்றிருந்தால் நிச்சயம் டெபாசிட் கூட இழந்திருப்பார். நரசிம்ம ராவுக்கென்று வெளிப்படையான கோஷ்டி எதுவும் கிடையாது. அவர் சொல்வதை யாராவது கேட்பார்களா என்றுகூடத் தெரியாது. இந்தச் சிறுபான்மை அரசு இரண்டு-மூன்று வருடங்களாவது தங்குமா என்று தெரியாது. இந்த அரும்பெரும் தகுதிகள் இருந்த ஒரே காரணத்துக்காகத்தான் காங்கிரஸ்காரர்கள் அவரைக் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுத்தனர்.

முதலில் ஆட்சி அமைக்க வேண்டும். அதுவும் ஓரளவுக்கு நிலையான ஆட்சியாக இருந்தால் நல்லது. அதற்கு எதிர்க்கட்சிகளைக் குலைக்க வேண்டும். அவர்கள் கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைத் தகர்க்க வேண்டும். ஆந்திராவில் ஒரு காலத்தில் கோலோச்சிய ராவுக்கு இது ஒன்றும் கஷ்டமான விஷயமில்லை.

மற்றொருபுறத்தில் கஜானாவில் பைசா இல்லை. கிடுகிடுவென ஏறும் விலைவாசி, பணவீக்கம். எக்கச்சக்கமான அந்நியக் கடன். கடந்த பதினைந்து வருடத்தில் அரசின் நிதிப் பற்றாக்குறை எகிறிச் சென்றிருந்தது. கையில் தேவையான அந்நியச் செலாவணி இல்லை. யாராவது ஒரு கட்சிக்காரரை, அரசியல்வாதியை, குடும்பத்தின் அடிவருடி யாரையாவது நிதியமைச்சராக்குவதற்கு பதில் ஒரு திறமையான, அனுபவமிக்க, பொருளாதார நிபுணரை வற்புறுத்தி நிதியமைச்சராக்கினார். மன்மோகன் சிங் - இன்றைய பாரதப் பிரதமர். அவரை நிதியமைச்சராக்கியதோடு மட்டுமல்லாமல் அவர் செய்வதற்கு பலத்த எதிர்ப்பிருக்கும் என்று எதிர்பார்த்து, அந்த எதிர்ப்புகளை நீர்த்துப் போகச்செய்து அரசியல்வாதியில்லாத, அதனால் தடித்த தோலில்லாத மன்மோகன் சிங்கை வலிக்கும் வாய்ச்சொற்களிலிருந்து காப்பாற்றினார். இந்தியா வலிமையான பொருளாதார நாடாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அப்பொழுது இந்தியர்கள் எந்த அளவுக்கு மன்மோகன் சிங்கைப் புகழ்வார்களோ, அந்த அளவுக்கு நரசிம்ம ராவையும் புகழ வேண்டும்.

ஏப்ரல் 1992இல் ஹர்ஷத் மேஹ்தா பங்குச்சந்தை ஊழல் அம்பலமானது. தொடர்ச்சியாக பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஏற்கனவே திண்டாடும் இந்தியப் பொருளாதாரம், பங்குச்சந்தை குழப்பத்தால் இன்னமும் தடுமாறியது. ஆனால் நிதியமைச்சரும், பிரதமரும் தொடர்ந்து எடுத்த முயற்சிகளால் பங்குச்சந்தை மீண்டு வந்தது. அப்பொழுதுதான் SEBI என்னும் பங்குச்சந்தைகளைக் கண்காணிக்கும் அரசு இயந்திரத்துக்கு நிறையச் சக்திகள் கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு நெருக்கடியையும் சரியான முறையில் சமாளித்து அதையே சீர்திருத்தத்துக்கான நல்ல வாய்ப்பாக மாற்றினார் நரசிம்ம ராவ்.

ஒரு நெருக்கடி தீர்ந்தால் அடுத்ததைக் கொடுக்கத்தான் எதிர்க்கட்சிகள் தயாராக இருந்தனவே?

எப்படியாவது பாஜகவை முன்னுக்குக் கொண்டுவந்து, தான் பிரதமராகிவிடவேண்டும் என்று முயற்சி செய்துகொண்டிருக்கும் லால் கிருஷ்ண அத்வானி அயோத்யா மீது சில நாள்களாகவே கண்வைத்திருந்தார். முதலில் விபி சிங் ஆட்சியை அடியோடு சாய்க்க தன் ரதத்தின் மேலேறி ஊர் சுற்றி, பிஹாரில் லாலு பிரசாத் யாதவால் கைது செய்யப்பட்டார். ஆனால் இம்முறை உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி. கல்யாண் சிங் ஆட்சி.

ராமர் பிறந்த இடம்-பாபர் மசூதி விவகாரம் பல வருடங்களாக நடப்பது. நரசிம்ம ராவ் 'இதுவும்' தன்னைக் 'கடந்து போகும்' என நினைத்திருக்கலாம். ஆனால் டிசம்பர் 1992இல் புயல் கரையைக் கடந்து விட்டது. வானர சேனை கையில் கடப்பாரையுடன் குதித்து தொழுகை நிறுத்திவைக்கப்பட்ட, சிதிலமடைந்து கொண்டிருந்த பாபர் மசூதி கட்டடத்தை இடித்துத் தரைமட்டமாக்கியது. நரசிம்ம ராவ் முழுவதுமாகத் தடுமாறிய நேரம் இதுவாகத்தான் இருக்க முடியும். தொடர்ச்சியாக இந்தியாவில் பல மத வன்முறைகள். பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக, மார்ச் 1993இல் மும்பை முழுவதும் தொடர்ச்சியாக பல வெடிகுண்டுகள் வெடித்தன. சுதந்தர இந்தியாவில் காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம் என பிரச்னை மிகுந்த பகுதிகள் தவிர்த்து நாட்டுக்குள் நடக்கும் மிகப்பெரிய கலவரம் இது. இந்தக் கலவரமும் சில நாள்களில் ஓய்ந்தது.

அடுத்த நெருக்கடி ஜூலை 1993இல். எதிர்க்கட்சிகள் இணைந்து கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடிக்க வேண்டும். நரசிம்ம ராவ் அர்த்த சாஸ்திர வழியில் சென்று இந்தத் தீர்மானத்தை முறியடித்தார். பணப்பெட்டிகள் பரிமாறப்பட்டு, (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா) வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டு, 14 வாக்குகள் அதிகமாக நரசிம்ம ராவ் அரசு தொடர்ந்தது. பின்னாள்களில் CBI நரசிம்ம ராவ் மீது வழக்கு கொண்டுவந்து, நரசிம்ம ராவ் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். ஆனால் நரசிம்ம ராவ் தன் மனத்தளவில், ஆட்சி நிலைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்திருக்கலாம்.

குற்றம் குற்றமே. ஆனால், சற்று யோசித்துப் பார்ப்போம். அந்த நேரத்தில் நரசிம்ம ராவ் ஆட்சி கவிழ்ந்திருந்தால் என்னவாகியிருக்கும்? ஒருவேளை பாஜக 1993இலேயே ஆட்சிக்கு வந்திருக்கலாம். அத்வானி பிரதமராகியிருக்கலாம். அந்நேரத்தில் பாஜகவுக்கு தாராளமயமாக்கல் கொள்கைகள் மீது எந்த நம்பிக்கையும் இருக்கவில்லை. அதனால் நிச்சயமாக மன்மோகன் சிங்-நரசிம்ம ராவ் கொள்கைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டிருக்கும். ஆனாலும் நரசிம்ம ராவ் செய்தது சரிதான் என்று நான் இங்கு வாதாட வரவில்லை.

நரசிம்ம ராவ் ஆட்சி தொடர்ந்தது. 1994இல் அமெரிக்காவின் இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் நரசிம்ம ராவ் பேசினார். இந்திய-அமெரிக்க உறவை வலுப்படுத்தத் தொடங்கிய மிக முக்கியமான நிகழ்வு இது. சோவியத் ரஷ்யா நொறுங்கிப்போன காலக்கட்டம் இது.

1994இல்தான் தேசியப் பங்குச்சந்தை தொடங்கியது. முழுக்க முழுக்க கணினி வழியாக நடந்த வெளிப்படையான இந்தப் பங்குச்சந்தை இன்று மும்பை பங்குச்சந்தையை வெகுவாகப் பின்னுக்குத் தள்ளி, பங்கு வர்த்தகம் வளர வகை செய்தது. ஊழல்கள் வெகுவாகக் குறையவும், பங்குகளில் விலையில் சில புரோக்கர்கள் தகிடுதத்தம் செய்வதைத் தடுக்கவும் பெரிதும் துணைபுரிந்தது.

1995-1996 வருடங்களில் நரசிம்ம ராவ் அரசுக்கு பெரிய தலைவலி ஒன்றும் வரவில்லை. வெளியுறவு, நிதிச் சீர்திருத்தம் ஆகியவற்றில் அவரது அரசால் கவனம் செலுத்த முடிந்தது. பல முக்கிய துறைகளில் அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment) அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் (நேரு-காந்தி) குடும்பம், அந்நியர் ஒருவர் ஐந்து வருடங்கள் பத்திரமாக அரசை வழிநடத்திச் சென்றதை எதிர்பார்க்கவில்லை. நரசிம்ம ராவுக்கும் வயது 75ஐத் தொடவே, அவரும் மேற்கொண்டு தேர்தலில் ஈடுபட விரும்பவில்லை. கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார். இப்பொழுதும் குடும்பத்தின் வாரிசுகள் வயசுக்கு வராத காரணத்தால், கட்சித் தலைவராக மற்றுமொரு சாகக் கிடக்கும் கிழவர் சீதாராம் கேசரி கொண்டுவரப்பட்டார்.

நரசிம்ம ராவ் அப்பழுக்கற்றவர் என்று சொல்ல முடியாது. 'மோசடி' சாமியார் சந்திரஸ்வாமியுடன் ராவுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. விட்டால் புட்டபர்த்தி சாய்பாபா காலடியில் விழுந்து கிடப்பார்.

லக்குபாய் பாதக் என்னும் பிரிட்டன்-இந்திய ஊறுகாய் வியாபாரி ராவ் மத்திய அமைச்சராக இருந்தபோது தன் பணத்தை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு தான் செய்து கொடுப்பதாகச் சொன்ன காரியத்தைச் செய்யவில்லை என்று வழக்குத் தொடுத்திருந்தார். நீதிமன்றத்தில் ராவ் மீதான் குற்றத்துக்கு சரியான சாட்சியம் இல்லை என்று தீர்ப்பானது. நாம் ஏற்கனவே பார்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் லஞ்ச வழக்கில் ராவ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. நரசிம்ம ராவின் பிள்ளை பிரபாகர ராவ் 1998இல் யூரியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். பின் இந்த வழக்கில் என்ன ஆனது என்றே தெரியவில்லை. நரசிம்ம ராவின் மற்றொரு பிள்ளை ரங்கா ராவ் ஆந்திரா காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் - சட்டமன்ற உறுப்பினராகவும், மாநிலக் கல்வி அமைச்சராகவும் இருந்தவர். இவரும் தமிழ் நடிகர் ரஜினி காந்த் கொடுத்த புகாரின் பேரில் (2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக) 2001இல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கும் பின்னர் என்ன ஆனது என்று தெரியவில்லை. நரசிம்ம ராவின் மற்றொரு மகன் ராஜேஷ்வர ராவும் ஆந்திர காங்கிரஸ் தலைவர். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். நரசிம்ம ராவின் பிற உறவினர்களும் (ஒரு மருமகன், அவர் பேரும் ராஜேஷ்வர ராவ்) சில ஊழல் குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்கள்தான்.

நரசிம்ம ராவ் பன்மொழி அறிவு பெற்றவர். பதினேழு மொழிகளில் இவருக்குப் பேசவும், எழுதவும் தெரியும் என்று சொல்கிறார்கள். எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. நான் இவர் தெலுகு, ஹிந்தி, ஆங்கிலம் எனும் மூன்று மொழிகள் பேசிக் கேட்டிருக்கிறேன். அவ்வளவே. நரசிம்ம ராவ் தன் ஓய்வு நாள்களில் "Insider" என்றதொரு புதினத்தை எழுதினார். அதில் பல உண்மைகள் வெளிவரும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் கடைசியில் இந்தப் புத்தகத்தில் அதிகமாக ஒன்றுமில்லை. பின்னர் "A Long Way" என்ற தன் பேச்சுக்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார்.

நரசிம்ம ராவ் ஆட்சியில் இருந்த காலம் முழுவதும் நான் அமெரிக்காவில் (ஆராய்ச்சி மாணவனாக) இருந்தேன். ஆனால் அவர் ஆட்சியின் காரணமாகத்தான் என்னால் இந்தியாவுக்கு வர முடிந்தது, தொழில்முனைவனாக முடிந்தது. அந்த வகையில் நரசிம்ம ராவ் எனக்கு மிகவும் பிடித்தமானவர். May his soul rest in peace.

[இகாரஸ் பிரகாஷ் இரங்கல்]

Wednesday, December 22, 2004

தமிழன்பனுக்கு சாகித்ய அகாதெமி

இந்த வருட தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது ஈரோடு தமிழன்பனுக்குக் கிடைத்துள்ளது. பரிசு பெற்ற நூல் "வணக்கம் வள்ளுவ!" என்னும் கவிதைத் தொகுப்பு.

Erode Tamilanban/ஈரோடு தமிழன்பன்
ஈரோடு தமிழன்பன்
படம் © பத்ரி சேஷாத்ரி


சென்ற வருடம் தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது "கள்ளிக்காட்டு இதிகாசம்" நாவலுக்காக வைரமுத்துவுக்குக் கிடைத்தது.

Monday, December 20, 2004

பங்குமுதல் (equity) vs கடன் (debt)

இன்றைய பிசினஸ் லைன் செய்தித்தாளில் பங்குமுதல், கடன் ஆகியவை பற்றிய அருமையான, எளிமையான பாடம் ஒன்று (ஆங்கிலத்தில்). படித்துப் பயன்பெறுங்கள்.

அவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி

மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் தில்லி போலீஸ் நடந்துகொண்டிருக்கிறது.

பாஸீ.காம் என்னும் இந்திய இணைய ஏலச்சந்தையின் தலைமை நிர்வாகி அவ்னீஷ் பஜாஜ். இவர் இணைந்து உருவாக்கிய பாஸீ.காம் இணைய நிறுவனத்தை அமெரிக்காவின் ஈபே, சில மாதங்களுக்கு முன்னர் விலைக்கு வாங்கியது.

தில்லி பப்ளிக் ஸ்கூல் மாணவர் ஒருவர், மாணவி ஒருத்தியுடன் உடலுறவில் ஈடுபட்டு அதனை செல்பேசி வழியாகப் படமும் எடுத்து ஊரெல்லாம் MMS வழியாகப் பரப்பியுள்ளார். அதனை ஐஐடி கரக்பூர் மாணவர் ஒருவர் VCDயில் வெட்டி எடுத்து (2.37 நிமிடங்கள்) பாஸீ வழியாக 100 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அதையும் ஆறு பேர் காசு கொடுத்து வாங்கியுள்ளனர்.

விஷயம் வெளியே தெரிய வந்ததும் தில்லி காவல்துறை படு சுறுசுறுப்பாக வேலை செய்தது.

விசாரணைக்கு அழைக்கப்பட்ட பாஸீ தலைமை நிர்வாகி அவ்னீஷ் பஜாஜ் போலீஸால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் பஜாஜுக்கு பெயில் தராமல் ஆறு நாள்கள் நீதிமன்றக் காவலில் திஹார் ஜெயிலில் அடைத்துள்ளனர்.

அவ்னீஷ் பஜாஜ் செய்தது கொலைக்குற்றமல்ல. ஊரை விட்டு ஓடிவிடக் கூடியவரும் அல்ல. பாஸீ.காம் ஒரு பெரிய நிறுவனம். விஷயம் வெளியே தெரிய வந்ததும் இந்த "போர்னோ" விசிடி விற்பனை தடுக்கப்பட்டிருக்கிறது.

உடனடியாக அவ்னீஷ் பஜாஜ் பெயிலில் வெளியே விடப்பட வேண்டும். எதற்கெடுத்தாலும் ஆள்களை ஜெயிலில் தள்ள வேண்டியதன் அவசியத்தை போலீஸும், நீதிமன்றமும் சிந்திக்க வேண்டும். அவ்னீஷ் பஜாஜ் பெயிலில் வெளியே விடப்படக்கூடாது என ஆவேசமாக வாதாடிய தில்லி அரசு வழக்கறிஞர், முட்டாள்தனமான சட்டம் இரண்டுமே கண்டிக்கப்படவேண்டியவை. அரசு வழக்கறிஞரின் வாதத்தை அப்படியே ஏற்றுக்கொண்ட நீதிபதியின் நிலை வருத்தத்தைத் தரவைக்கிறது.

மேற்படி தகவல் தொழில்நுட்பச் சட்டத்தைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்யவேண்டும்.

[பாஸ்டன் பாலாஜியின் பதிவு]
[ராஜேஷ் ஜெயின் பதிவு]

Sunday, December 19, 2004

பங்களாதேஷின் தடுமாற்றம்

இன்று காலை பங்களாதேஷ் விளையாடிய அற்புதமான கிரிக்கெட், மாலை மயங்கும் நேரத்தில் கிளப் கிரிக்கெட்டை விட மோசமான நிலைக்குப் போயிருந்தது. வெளிச்சம் குறைவான ஒரே காரணத்தால் மட்டும்தான் இன்றே இந்தியாவால் வெற்றி பெற முடியவில்லை.

இன்று ஆட்டத்தின் மூன்றாம் நாள். மொஹம்மத் அஷ்ரஃபுல் - தன் முதல் டெஸ்டிலேயே 18வது வயதில் சதமடித்தவர், அணித்தலைவர் ஹபிபுல் பஷாருடன் இந்தியப் பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தார். இந்தியப் பந்துவீச்சாளர்கள் காலையில் சட்டென்று சில விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தை சீக்கிரம் முடித்து விடலாம் என நினைத்திருக்கலாம். நடக்கவில்லை. இரண்டாம் நாள் மாலை விழுந்த மூன்று விக்கெட்டுகளுமே சுழற்பந்து வீச்சாளர்கள் (கும்ப்ளே 2, ஹர்பஜன் 1) பெற்றது. ஆனால் இன்று காலை முதற்கொண்டே கங்குலி பதான், கான் இருவரையும் பந்துவீச வைத்தார். அஷ்ரஃபுல் இருவரையும் வெளுத்து வாங்கினார்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கழித்து சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீச வந்தனர். கும்ப்ளே வந்தவுடனேயே அருமையான பந்து மூலம் பஷாரை ஸ்டம்பிங் செய்ய வைத்தார். தொடர்ந்து வந்த அஃப்தாப் அஹ்மத் கொடுத்த ஆதரவில் அஷ்ரஃபுல் அருமையாக விளையாடினார். இப்பொழுது சுழற்பந்து வீச்சாளர்களையும் பின்னி எடுத்துவிட்டார். காலையில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் பதானின் அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் அஷ்ரஃபுல் அடித்த இரு பிரமாதமான கவர் டிரைவ்கள். திராவிட் கூட இப்படியொரு அடியை அடித்திருக்க முடியாது! புத்தகத்தில் எப்படிச் சொல்லப்பட்டிருக்குமோ, அப்படியே, தலையை ஆட்டாது, சற்றே முட்டி போட்டு, மட்டையை நேராகப் பிடித்து, பந்தை செலுத்தி அடித்தார். மூன்றாவது பந்து, கால் திசையில் வந்ததை, தூக்கி மிட்விக்கெட் மேல் அடித்து நான்கு.

கான் வீசிய பவுன்சர் ஒன்றை ஃபைன் லெக் மேல் ஹூக் செய்த சிக்ஸ், ஹர்பஜன் பந்தை மிட் ஆன் மேல் அடித்த சிக்ஸ், பின் மைதானத்தைச் சுற்றிலும் ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் அடித்த நான்குகள் என ரன்கள் குவிந்தவண்ணம் இருந்தன. அஷ்ரஃபுல் துணையுடன் காலை இரண்டு மணிநேரங்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு பங்களாதேஷ் அடித்த ரன்கள் 120!

ஆனால் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் சரிவு ஆரம்பம். அந்தச் சரிவுக்கு முன்னர் அஷ்ரஃபுல் ஹர்பஜனை அடுத்தடுத்து இரண்டு நான்குகள் அடித்து தன் இரண்டாம் சதத்தைப் பெற்றார். கும்ப்ளே மீண்டும் வந்து அஃப்தாப் அஹ்மதை எல்.பி.டபிள்யூ ஆக்கினார். ஏற்கனவே இரண்டு முறை அஃப்தாபை கும்ப்ளே அவுட்டாக்கியிருந்தார். நடுவர்தான் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை! அவுட்டான பந்திற்கு இரண்டு பந்துகள் முன்னால் கூட அஃப்தாபுக்கு எல்.பி.டபிள்யூ கொடுத்திருக்கலாம். அடுத்த ஓவரிலேயே மஞ்சுரல் இஸ்லாம் ஜாகீர் கானிடம் எல்.பி.டபிள்யூ ஆனார். இது ஜாகீர் கானின் 100வது விக்கெட்.

மீண்டும் அஷ்ரஃபுல், காலித் மசூதுடன் ஜோடி சேர்ந்து சில ரன்களைப் பெற்றார். புதுப்பந்து எடுக்கப்பட்டது. காலித் மசூத் துரதிர்ஷ்டவசமாக அவுட் கொடுக்கப்பட்டார், கானின் பந்து மட்டையிலே படாமலேயே ஸ்விங் ஆகி விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால் நடுவர் அதை கேட்ச் என்று தீர்மானித்தார். தேநீர் இடைவேளை வந்தது. பங்களாதேஷ் 312/7, அஷ்ரஃபுல் 140*.

இதுவரை பங்களாதேஷ் டெஸ்ட் தரத்தில் விளையாடியது. இடைவேளையைத் தொடர்ந்ததோ படுமோசமான ஆட்டம். இடைவேளைக்குப் பின்னர் இந்தியா வீசிய இரண்டாவது ஓவர் - பதானின் முதல் ஓவரில் பவுன்சர் ஒன்றில் மொஹம்மத் ரஃபீக் இரண்டாம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். அடுத்த பந்தில் தல்ஹா ஜுபேர் பவுல்ட் ஆனார். ஆனால் அஷ்ரஃபுல் வெறியுடன் கானின் அடுத்த ஓவரில் மூன்று நான்குகள், அடுத்த பதான் ஓவரில் ஒரு சிக்ஸ் என அடித்து, பதான் ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்து அடுத்த முனைக்கு செல்ல முற்படும்போது கடைசி மட்டையாளர் நஜ்முல் ஹுசைன் ரன் அவுட் ஆனார். அஷ்ரஃபுல் 158 ஆட்டமிழக்காமல்!

ஆனால் இன்னமும் சில ஓவர்களிலேயே அஷ்ரஃபுல் ஆட்டமிழப்பார் (நடுவர் தவறால்) என அவரே நினைத்திருக்க மாட்டார். பங்களாதேஷ் 333க்கு ஆட்டமிழந்ததால் இன்னமும் 207 ரன்கள் பின்னால் இருந்தது. நான் கூட இந்தியா மீண்டும் பேட்டிங் செய்யும் என எதிர்பார்த்தேன். ஆனால் இந்தியா ஃபாலோ-ஆன் கொடுத்தது.

இரண்டாம் இன்னிங்ஸில் முதல் பந்தில் பதான் நஃபிஸ் இக்பாலை எல்.பி.டபிள்யூ செய்தார். தொடர்ந்து அடுத்த நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அதில் ஒன்று கால் திசையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச், ஆஃப் திசையில் விக்கெட் கீப்பரிடம் ஒரு கேட்ச், மூன்றாம் ஸ்லிப்பில் சேவாகிற்கு ஒரு கேட்ச், மற்றுமொரு எல்.பி.டபிள்யூ. முதல் ஐந்து விக்கெட்டுகளையும் சாய்த்த பதான் இந்தத் தொடரில் பெறும் மூன்றாவது 5-விக்கெட் இன்னிங்ஸ் இது. இதுவரை இரண்டு டெஸ்ட்களில் 18 விக்கெட்டுகள்!

கும்ப்ளே நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் பெற்றார். ஒன்று சில்லி பாயிண்டில் எளிதான கேட்ச். மற்றொன்று முதல் இன்னிங்ஸ் ஹீரோ அஷ்ரஃபுல் விக்கெட் - பந்து உள் விளிம்பில் பட்டு கால் காப்பில் பட, நடுவர் எல்.பி.டபிள்யூ எனத் தீர்மானித்தார். எட்டாவது விக்கெட் ஹர்பஜனுக்குக் கிடைத்தது. அருமையான தூஸ்ராவில் திராவிட் கைக்கு ஒரு கேட்ச்.

இதற்கிடையில் வெளிச்சம் மிக மோசமானதான் பதான், கும்ப்ளே இருவரும் வீசக்கூடாது என்பதால், டெண்டுல்கர் பந்துவீச வந்தார். மிக மோசமான லாங் ஹாப் பந்தில் மஷ்ரஃபே மொர்தாசா டீப் மிட்விக்கெட்டில் ஒரு கேட்ச் கொடுக்க, ஹர்பஜன் அதைப் பிடித்தார். ஆனால் இந்தியாவிற்கு இறுதி விக்கெட் கடைசிவரை கிடைக்கவில்லை. நாளின் கடைசி ஓவரில் டெண்டுல்கர் பந்துவீச்சில் 18 ரன்கள் பெற்றனர் பங்களாதேஷ் அணியினர்.

நாளை முதல் அரை மணிநேரத்திற்குள் ஆட்டம் முடிந்துவிடும். பங்களாதேஷுக்கு மற்றுமொரு தோல்வி. ஆனால் இன்று காலை பங்களாதேஷ் தங்களாலும் நல்ல கிரிக்கெட் விளையாட முடியும் என்பதைக் காட்டியுள்ளனர். இதைத் தொடர வேண்டும்.

உலகில் பிற பகுதிகளில் நடக்கும் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானை 491 ரன்கள் வித்தியாசத்தில் அடித்து நொறுக்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தொடரும் ஆட்டத்தில் இங்கிலாந்து முன்னிலைக்குச் சென்றுள்ளது.

Saturday, December 18, 2004

விஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை இந்தியாவுக்குப் பெற்றுத்தந்த அணிக்குத் தலைவராக இருந்த விஜய் சாமுவேல் ஹஸாரே இன்று உயிர் நீத்தார்.

கிரிக்கின்ஃபோ தளத்தில் ஹஸாரே வாழ்க்கை பற்றிய பல தகவல்களையும், புகைப்படங்களையும், ஹஸாரே பற்றிய பிறரது கருத்துகளையும் பார்க்கலாம். [ செய்தி | துங்கர்பூரின் இரங்கல் கட்டுரை | ஹஸாரேயின் ஆட்டத்தைப் பற்றிய போரியா மஜூம்தார் கட்டுரை ]

இந்திய கிரிக்கெட் அணி வளரும் நேரத்தில் தனிப்பட்ட முயற்சிகள்தான் ரசிக்கத்தக்கவையாக இருந்தன. இந்திய அணியோ தோல்வியையை மட்டுமே சந்தித்தது. எப்பொழுதாவதுதான் பளிச்சென மின்னும் ஓரிரு வெற்றிகள். ஹஸாரே போன்ற சிலர்தான் அந்த நேரத்தில் உலகத்தரம் வாய்ந்த மட்டையாளர்களுல் ஒருவராகக் கருதப்படக்கூடியவர்களாக இருந்தனர்.

ஹஸாரேயின் ஆட்டம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் இன்றைய ராகுல் திராவிட் ஆட்டத்தைப் பார்த்தால் போதும்.

இந்தியக் குடியரசுத்தலைவரின் வாழ்த்துச்செய்தி

சிங்கப்பூரில் நடந்த தமிழ் இணையம் 2004 மாநாட்டிற்கான (11-12 டிசம்பர் 2004) இந்திய குடியரசுத்தலைவரின் வாழ்த்துச்செய்தி

தமிழ் இணைய வளர்ச்சி: உயர்ந்த லட்சியம் எதுவாகும்

1. சர்ச் எஞ்சின்

என்னுடைய கணிணியிலிருந்து இண்டர்நெட் மூலமாக எந்தவிதமான தகவல்களையும் விஞ்ஞான நிகழ்ச்சிகளையும், தொழில்நுட்ப அறிவுத்தாள்களையும், எண்ணக்களஞ்சியங்களையும் search engine கள் மூலமாக ஒரு சில விநாடிகளில் ஆங்கிலத்தில் அறிய முடிகிறது. எனக்கு ஓர் எண்ணம் ஆங்கிலத்தில் எனக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை ஆங்கிலத்திலும் சில மேற்கத்திய நாட்டு மொழிகளில் மட்டுமே மெஷின் மொழிபெயர்ப்பு மூலம் கிடைக்கிறது. நான் அறிந்த வரையில் எந்த மொழியில் தயாரிக்கிறோமோ அதே மொழியில்தான் நாம் தகவலை client server and web architecture மூலமாக திரும்பப் பெற முடியும். சில search engine கள் மட்டும் மேற்கத்திய மொழிகளிலிருந்து (French, German, Spanish, Italian & Portugese) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத்தருகிறது. ஆங்கிலத்தில் உள்ள தகவல் களஞ்சியங்கள் தமிழர்களுக்கு தமிழில் கிடைக்க வேண்டுமானால் அதை எந்த எந்த விதங்களில் நாம் அடைய முடியும் என்பதை இந்த மாநாட்டு நிபுணர்கள் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

2. இண்டர்நெட் அப்ளிகேஷன் ஆர்க்கிடெக்சர்

இதுவரை நாம் ஒவ்வொருவரும் சிறு சிறு முயற்சிகள் செய்து தமிழ் இண்டர்நெட் வளர்ச்சிக்கு பாடுபடுகிறோம். இந்நிலை மாறி நமக்கு ஒரு பெரிய இலட்சியம் அவசியம். அந்த இலட்சியம் என்னெவென்றால் தமிழ் சார்ந்த இண்டர்நெட் அப்ளிகேஷன் ஆர்க்கிடெக்சர் அடிப்படை கட்டமைப்புகளான browser, web server, application server, database server, mail server களை சொந்தத் தமிழ் மொழியில் unicode version 4.0 மூலமாக open source code வழியே வடிவமைக்கும் ஒரு மிகப்பெரிய திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த ஐந்தையும் ஒருங்கிணைத்து தமிழ் வழியே இண்டர்நெட் தகவல் பரிமாற்றங்களையும், தொடர்புகளையும், store செய்தலையும், retrieve செய்தலையும் செயல்படுத்திக் காட்டவேண்டும். இதன் மூலம் உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தாய்மொழி வழியே ஏராளமான அறிவுக் களஞ்சியங்கள் நேரடியாகச் சென்றடையும். தமிழ் வளர்ச்சி, தமிழ் படைப்பு, தமிழர்களின் ஒற்றுமை, தமிழர்கள் செயல்பாடு எல்லாம் இதன் மூலம் பெருகும். நீங்கள் இந்த இண்டர்நெட் அப்ளிகேஷன் ஆர்க்கிடெக்சர் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மட்டும் அல்ல, மற்ற இந்திய மொழிகளும் இந்த அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு அங்கமாக மாறி அம்மொழிகளுடன் தொடர்பு கொள்ள ஒரு ஊன்றுகோலாக அமையும். இந்த அடிப்படை கட்டமைப்பு தமிழ் உலகம் முழுதும் பயன் படுத்தப்படும் போது மற்ற search engineகள் அதன் சொந்த மொழியிலேயே எடுத்து உலகிலுள்ள எல்லாத் தமிழர்களுக்கும் கொடுக்க ஏதுவாக இருக்கும். இந்த இரண்டு எண்ணங்களும் நிறைவேற்றப்பட்டால் பல மொழி அறிவுக் களஞ்சியங்கள் அனைத்தும் தமிழருக்கு தமிழிலேயே கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் தமிழ் மொழி அறிவுக் களஞ்சியங்கள் (கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், அறிவியல் விஞ்ஞானம், தொழில்நுட்பம்) அனைத்தும் search engineகள் மூலமாக உலகெங்கும் சென்றடையும்.

உங்கள் முயற்சி வெல்க.

(ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்)

Wednesday, December 15, 2004

மின்வெளியில் பாரதி மணிமண்டபம்


கணினி மூலம் பாரதி மணிமண்டபத்தை
மாலன் திறந்து வைத்தல்
11 டிசம்பர் 2004 அன்று (பாரதியார் பிறந்த தினம்) இரவு 7.30 மணியளவில் சிங்கப்பூர் அன்னலக்ஷ்மி உணவகத்தில் மாலன் மின்வெளியில் பாரதி மணிமண்டபத்தைத் தொடங்கி வைத்தார்.

தமிழ் இணையம் 2004 மாநாட்டிற்கு வந்திருந்த பேராளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். பாரதி களஞ்சியத்திற்காக உழைத்த சிங்கப்பூர் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மாலன் இந்த தகவல், படம், ஒலி/ஒளிக் களஞ்சியத்தில் என்னென்ன கிடைக்கும், இப்பொழுதைக்கு என்னென்ன உள்ளது என்பதைப் பற்றி விளக்கினார்.

பாரதி பற்றிய பல்வேறு தகவல்களுக்கிடையே, "தனியொருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" எனும் பாரதியின் பாடல் எந்த சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டது (நீலகண்ட பிரம்மச்சாரி சிறையிலிருந்து வெளியே வந்து உணவுக்குத் திண்டாடி, பாரதியிடம் கடன் கேட்டதைத் தொடர்ந்து), இந்தப் பாடலை பாரதியே பலமுறை கடற்கரைக் கூட்டங்களில் பாடியது ஆகியவை பற்றியும் பேசினார். தொடர்ந்து சிங்கப்பூர் தமிழ் இளைஞர் இசைக்குழு ஒன்று (பெயர் ஞாபகமில்லை) இந்தப் பாடலை தாள வாத்தியங்களுடன் அருமையான முறையில் பாடிக்காட்டினர். பாடலை இசையமைத்து கற்றுக்கொடுத்தவர் தமிழ் தெரியாத ஒரு மராட்டியர் என்று மாலன் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார்.

செவிக்கு உணவு முடிந்ததும் வயிற்றுக்கும் (சிறிதல்ல, நிறையவே) கிடைத்தது.


பாரதி மண்டபத் திறப்பு விழாவில்
பேரா. ராமகிருஷ்ணா
மறுநாள் தமிழ் இணைய மாநாட்டில் நெகிழ்வான ஒரு நேரம். பெங்களூர் ஐஐஎஸ்சி பேராசிரியர் AG ராமகிருஷ்ணா தலைவராக இருந்து நிகழ்த்திய அமர்வுக்குப் பிறகு கடைசியில் ஒரு செய்தியைச் சொன்னார். அவரது தந்தை, தாயார், (சகோதரரும் உண்டு என நினைக்கிறேன்) பயணம் செய்த கார் விபத்துக்குள்ளாகி தந்தை அங்கேயே இறந்து விட்டார். காரில் அமர்ந்திருந்த தாயார் அதன்பின் மன வேதனையில் உழன்று வந்த சமயம் மாலனின் பாரதி மின்மண்டப முயற்சி தெரிய வந்து இப்பொழுது அதிலேயே மூழ்கி, ஓரளவுக்கு மனதைத் தேற்றிக்கொண்டுள்ளார் என்றார் ராமகிருஷ்ணா. அவ்வகையில் இந்த மாநாடும், அதையொட்டிய பாரதி மின்மண்டபத் திறப்பும் தனக்கு தனிப்பட்ட வகையில் நிம்மதியைத் தருவது என்றார்.

Sunday, December 12, 2004

தமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்

நான் நேற்று பேசியதன் ஓப்பன் ஆஃபீஸ் பிரசெண்டேஷன் (1.4MB, தமிழ், டிஸ்கி, TSCu_InaiMathi எழுத்துருவில்), மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் வோர்ட் கோப்பு (1.14MB, தமிழ், டிஸ்கி, TSCu_InaiMathi எழுத்துருவில்) (மாநாட்டு இதழில் பிரசுரமானது).

[மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்பி, ஓப்பன் ஆஃபீஸில் இன்னமும் யூனிகோடில் பிரசெண்டேஷன் செய்யமுடியாது என்பதை நினைவில் வைக்க...]

கட்டுரையை எழுதும்போது "tamilbooks.net" என்ற பெயரில் இணையக்கடை வைக்க எண்ணியிருந்தோம். பின்னர் "kamadenu.com" என்ற பிராண்ட் பெயர் வைக்க முடிவு செய்தோம். அதனால் இரண்டிலும் உள்ள படங்களில் கடையின் பெயர் மாறியிருக்கும்.

Saturday, December 11, 2004

டெண்டுல்கர் - 34

கடைசியாக - 8 டெஸ்ட்கள் கழித்து, 9 மாதங்கள் கழித்து 34வது சதம் வந்துவிட்டது. காவஸ்கருடன் சமன் செய்துவிட்டார்.

பங்களாதேஷுக்கு எதிரானதுதான். ஆனாலும் இந்தியாவுக்குத் தேவையான நேரத்தில் கிடைத்தது. வாழ்த்துவோம்.

அத்துடன் கும்ப்ளே கபில் தேவ் எடுத்த விக்கெட்டுகளைத் தாண்டி விட்டார். அதற்கும் சேர்த்து அவருக்கும் வாழ்த்துகள். இருவருமே தம் கிரிக்கெட் வாழ்நாளின் கடைசிப் பகுதியில் இருக்கிறார்கள். இனி எவ்வளவு தூரம் செல்வார்கள், எப்பொழுது ஓய்வு பெற்றுக்கொள்வார்கள் என்பதுதான் கேள்வியே.

தமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application Softwares



அமர்வின் தலைவர்: குமார் குமரப்பன்

1. பத்ரி சேஷாத்ரி: தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்

காமதேனு.com எனும் தமிழ் புத்தக வணிகத்தளம் பற்றி நான் பேசினேன். எனது முழு பிரசெண்டேஷனை நாளை wi-fi இணைப்பு வந்ததும் போடுகிறேன்.

2. ரவீந்திரன் பால்: Encoding Independent Database Applications in Tamil

எல்லோரும் யூனிகோட் என்று பேசும்போது இவர் எந்த எழுத்துக் குறியீடு என்பதைப் பற்றிய கவலையே இல்லாமல் எல்லாக் குறியீட்டில் உள்ளவற்றையும் ஒரு neutral "encoding free" வழியில் தரவுத்தளத்தில் சேர்த்து வைக்கலாம் என்பது இவர் வாதம்.

இதில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை, இதைப்பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

3. டேவிட் பிரபாகர்: Tamil Hyphenation

தமிழில் கிடைக்கோடு (hyphen) என ஒன்றும் இல்லை. ஆனால் அழகுணர்ச்சி காரணமாகவும், படிப்பதற்கு வசதியாக இருப்பதற்குமென வேண்டுமென்றால் கிடைக்கோட்டைப் பயன்படுத்தலாம் என்கிறார். அதற்கு சில விதிகளைத் தருகிறார்.

ஆனால் அச்சுத்தொழிலில் இருப்பவர்கள் கிடைக்கோட்டைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது. டேவிட் சொன்ன விதிகளைத்தான் கிட்டத்தட்டப் பயன்படுத்துகிறோம், ஆனால் கிடைக்கோட்டை விட்டுவிடுகிறோம். தமிழுக்கு கிடைக்கோடு அவசியமில்லை, நிறுத்தல் குறிகள் கூட மிகவும் குறைவாகத்தான் தேவைப்படுகிறது என்பது என் எண்ணம்.

4. பாலாஜி ஸ்வாமி: National Language Support in Oracle

சிறப்புப் பேச்சாளராக இந்த அமர்வில் வாசித்தவர் ஆரக்கிள் கார்பொரேஷனின் பாலாஜி ஸ்வாமி. ஆரக்கிளில் யூனிகோட் (UTF-8) வழியில் தமிழ் முதற்கொண்டு பிற இந்திய மொழிகளுக்கு எப்படிப்பட்ட ஆதரவு உள்ளது என்பதை விளக்கினார். கூடவே சில எடுத்துக்காட்டுகளை செயல்முறை மூலம் விளக்கினார்.

கேள்வி-பதில், அடுத்த அமர்வு ஆகியவை பற்றி நாளையோ, திங்களோதான்.

என் அமர்வு

மதிய உணவுக்குப் பிறகு நான் பங்குபெறும் அமர்வு நடைபெறவிருக்கிறது. அதன்பின் இந்த அமர்வைப் பற்றி எழுதுகிறேன்.

தமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devices



தலைவர்: சிவராஜ் தொட்டண்ணன்

பாஸ்கரன் (AU-KBC): Intelligent Tamil texting for Mobile environment

* செல்பேசிக் கைக்கருவிகளில் உள்ள 1-9 எண்களின் பட்டன்களை வைத்து தமிழ் எழுத்துகளைக் கொண்டுவர வேண்டும். *, # போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. 'ஸ்ரீ', ஃ ஆகியவையும் வரும்.

* தமிழில் எதேனும் ஒரு எழுத்தைக் கொண்டுவர அதிகபட்சம் 4 'தட்டல்'கள் மட்டும்தான் தேவை. சில ஹிந்தி மாடல்களில் கிட்டத்தட்ட 9 தட்டல்கள் தேவை. (ஆங்கிலத்தில் 3 போதும் என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்)

* அகராதி உண்டு. அதன்மூலம் அதிகமாகப் பயன்படும் சொற்களை உள்ளிடலாம். This uses a predictive algorithm, and hence cuts down the number of strokes (from multi-key approach) by as much as 50%.

* இப்பொழுதைக்கு லினக்ஸ், பெர்ல் மூலம் கணினியில் செய்யப்பட்டுள்ளது. செல்பேசிகளுக்குள்ளாகக் கொண்டுவர வேண்டும்.

===

AG ராமகிருஷ்ணன் (IISc, Bangalore): Word Prediction for Tamil SMS

பாஸ்கரன் ஏற்கனவே செல்பேசி பட்டன்களை வைத்து வார்த்தைகளை உள்ளிடுவதன் கஷ்டங்களைப் பற்றிப் பேசினார். ராமகிருஷ்ணன் ஓரிரண்டு பட்டன்களை அழுத்துவதன் மூலம் சொற்களை ஓர் அகராதியிலிருந்து தேடி வேகமாக எடுப்பது பற்றிய தம் அல்கொரிதத்தைப் பற்றிப் பேசினார்.

===

நிரஞ்சயன் (National University of Singapore): Assignment of Tamil characters to the Telephone Keypad

இந்தப் பேச்சு செல்பேசி பட்டன்கள் தரப்படுத்துதல் பற்றியது. இது எந்த எழுத்துகள் அதிகமாக (high frequency) தேவைப்படுகின்றன என்பதை முன்வைத்து எந்த எண் பட்டன்களில் எந்தத் தமிழ் எழுத்துகள் இருக்க வேண்டும் என்பதைப் பற்றியது.

தமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு

இன்று காலை தமிழ் இணையம் 2004 மாநாடு சிங்கப்பூரில் தொடங்கியது. இப்பொழுதுதான் ஒருவழியாக இணைய இணைப்பைப் பெற்றிருக்கிறேன். சிறிது சிறிதாக என் பதிவில் செய்திகளை அனுப்புவேன்.

இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உரையுடன் (கல்யாணசுந்தரத்தால் வாசிக்கப்பட்டது) தொடங்கியது. அதற்கு முன்னர் முத்து நெடுமாறன், அருண் மகிழ்நன் உரைகள்.

முதல் அமர்வு அனந்த கிருஷ்ணன் தலைமையில் "Tools for Computing" என்ற தலைப்பில்.

அன்பரசன் "Migration Needs for Tamil Users" என்ற தலைப்பில் பேசினார். இதன் விவரங்கள் பின்னால். பெரதானியா பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவசேகரத்தின் "Ergonomic considerations in the design of Tamil Keyboard layout" என்ற பெயரில் எழுதியிருந்த கட்டுரையை முத்து நெடுமாறன் அளித்தார்.

தொடர்ந்து கேள்வி-பதில்கள்.

இப்பொழுது இரண்டாம் அமர்வு - "Mobile Devices" பற்றி.

Wednesday, December 08, 2004

Tuesday, December 07, 2004

சென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு

இன்று தி ஹிந்துவில் கண்ணுக்குப் பட்ட செய்தி:

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நாளை தொடங்கி மூன்று நாள் கருத்தரங்கு ஒன்று நடக்கவிருக்கிறது. அங்கு மொழிநுட்பத்தைப் பயன்படுத்தி தமிழை வளர்ப்பது எப்படி, மொழியியல் அடிப்படையில் தமிழ் மென்பொருள்கள் தயாரிப்பது எப்படி என்பது பற்றியெல்லாம் பேசப்போவதாக மேற்கண்ட செய்தி சொல்கிறது.

சனி, ஞாயிறு இரண்டு நாள்களும் சிங்கப்பூரில் தமிழ் இணையம் 2004 மாநாடு நடக்க உள்ளது என்பதையும் அனைவரும் அறிவீர்கள்.

சனி அன்றே சென்னையில் செம்மொழி தமிழ் மீது ஒருநாள் கூட்டமும் நடைபெறுகிறது.

சிங்கப்பூர் நடப்புகளை எனது வலைப்பதிவில் பார்க்கலாம். மற்றவற்றில் பங்கேற்பவர்கள் யாராவது வலைப்பதிவு ஏதும் வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

மென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டுரை

புதிய மின்மஞ்சரியில் முக்கியமான கட்டுரை காசியின் Nucleus CMS மொழிமாற்றல் அனுபவங்கள். புதிதாக மென்பொருள் தமிழாக்கத்தில் ஈடுபடும் அனைவரும் படித்துப் புரிந்துகொள்ளவேண்டிய கட்டுரை.

மென்பொருள் பன்மொழியாக்கல், தன்மொழியாக்கல் பற்றிய அறிமுகத்துக்கு என் கட்டுரையைப் பார்த்துக்கொள்ளலாம்.

இந்தமுறை தமிழ் இணையம் 2004 மாநாட்டில் இரண்டு அமர்வுகள்

Session 1/Tools for Tamil Computing
Session 3/Application Softwares

தமிழாக்கப்பட்ட மென்பொருள்கள், அல்லது தமிழ் மென்பொருள்கள் மீது கவனம் செலுத்தலாம் எனத் தோன்றுகிறது. ஆனால் அடுத்த வருட மாநாட்டுக்கு முன்னர் பொதுவில் பயன்படும் பல்வேறு திறமூல மென்பொருள்களும் தமிழாக்கப்பட்டிருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

இந்த மாநாட்டுக்குப் பிறகு இணையம் மூலம் மாபெரும் படை ஒன்றைத் திரட்டி கூட்டம் கூட்டமாக சில முக்கியமான திறமூலச் செயலிகள் மீது கவனத்தைச் செலுத்தி வேலை செய்ய வேண்டும்.

Monday, December 06, 2004

வாரக்கடைசியில் சிங்கப்பூரில்

10-14 டிசம்பர் 2004 சிங்கப்பூரில் இருப்பேன். 11-12 டிசம்பர் 'தமிழ் இணையம் 2004' மாநாட்டில் கலந்துகொள்ள வருகிறேன். சிங்கப்பூரில் இருப்பவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பவும். நிச்சயம் சந்திக்கலாம்.

Saturday, December 04, 2004

ஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை

உண்மையான சங்கர மடமான த்வாரகா பீடத்தின் சங்கராச்சாரியார் ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி ஜெயேந்திரர் கைதை அடுத்து அவர் காஞ்சி மடப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுதான் இதுவரை ஜெயேந்திரர் பதவி பற்றி வந்துள்ள மிகப்பெரும் கோரிக்கை. மிகப்பெரிய இடத்திலிருந்து வந்துள்ளது.

சங்கர மடங்கள் இந்தியாவில் நான்கு இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டன. தெற்கில் சிருங்கேரி, மேற்கில் த்வாரகை, வடக்கில் ஜ்யோதிர்மத், கிழக்கில் புரி என்ற இந்த நான்குதான் வழிவழியாக வந்துகொண்டிருப்பவை. இதில் ஜ்யோதிர்மத் பீடத்தின் பரம்பரை வழக்கொழிந்துபோனபின் மீண்டும் 1941இல் புனரமைக்கப்பட்டது. ஆனாலும் இந்தப்பட்டத்திற்கு யார் வருவது என்பது பற்றி பல வழக்குகள் உண்டு. இந்த வழக்கில் ஈடுபட்ட ஒருவர்தான் ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி. ஆனால் பின்னாளில் இவரே நியாயமான முறையில் த்வாரகா பீடத்துக்கு சங்கராச்சாரியாராக நியமிக்கப்பட்டார். 1992வரை ஸ்வரூபானந்த சரஸ்வதி த்வாரகா, ஜ்யோதிர்மத் ஆகிய இரண்டு பீடங்களுக்கும் சங்கராச்சாரியார் என்ற முறையிலேயே செயல்பட்டு வந்தார். (ஜ்யோதிர்மத் பதவிக்கு மட்டும் வேறு சிலரும் தாங்கள்தான் சங்கராச்சாரியார் என்று சண்டையிட்டனரே தவிர இவரது த்வாரகா பதவியில் யாரும் தலையிடவில்லை.)

தெற்கில் சிருங்கேரி தவிர மற்ற மடங்களில் அவ்வப்போது சில குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன. பாரதி க்ருஷ்ண தீர்த்தா (இவர் ஒரு தமிழ் ஸ்மார்த்த பிராமணர்! பெயர் வெங்கட்ராமன்) என்பவர் 1925 வரை த்வாரகா சங்கராச்சாரியாராக இருந்து, பின் 1925-1960 வரை புரி சங்கராச்சாரியாராக இருந்தவர். (ஆங்கிலத்தில்) வேதிக் கணிதம் என்ற புத்தகத்தை எழுதியவர் . (இந்தப் புத்தகத்தை நான் படித்துள்ளேன். பெருக்கல், ஸ்கொயர் ரூட் கண்டுபிடிப்பது ஆகியவை போன்ற சிலவற்றில் சுவையான சில குறுக்கு வழிகளைக் காண்பிக்கிறதே தவிர பெரிய உயர் கணித உண்மைகள் எதுவுமே இந்தப் புத்தகத்தில் கிடையாது.) சங்கராச்சாரியாராக இருந்தபோதே சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டவர். இவருக்கு எதிராக பிரிடிஷ் அரசு வழக்கு ஒன்றையும் கொண்டுவந்தது.

இப்படி இஷ்டத்துக்கு இந்த மடத்திலிருந்து அந்த மடத்துக்கு சங்கராச்சாரியார் ஆவது, நாலைந்து பேர்கள் ஒரு மடத்தின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுவது என்று பிற மடங்கள் இருக்கையில், சிருங்கேரி மட்டும் அமைதியாக இருந்து வந்தது. அதனால்தான் ஆதி சங்கரரே காஞ்சியில் ஒரு பெரிய மடத்தை உருவாக்கினார் என்று கும்பகோணத்தில் இருந்துவந்த 'மஹா பெரியவாள்' சொல்லிவைத்தார். ஒன்றுக்கு இரண்டாக வாரிசுகளும் வந்தன.

ஆனால் பிற சங்கராச்சாரியார்கள் காஞ்சி மடத்தை தங்களுக்குச் சமமானதாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதே சமயம் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் காஞ்சி மடத்தை ஒதுக்கி வைக்கவும் முடியவில்லை. எனவே சங்கர மடத்தலைவர்கள் இணைந்து பங்கேற்கும் கூட்டங்களில் நான்கு பெரிய இருக்கைகளும், காஞ்சி மடாதிபதி உட்கார சின்ன இருக்கையும்தான் (ஒருபடி கீழே) இருக்கும். அதனால் 'மஹா பெரியவாள்' இந்தக் கூட்டங்களுக்கு எப்பொழுதுமே ஜெயேந்திரரை அனுப்பி வைத்துவிடுவார். அனைத்து சங்கராச்சாரியார்களும் இணைந்து கையெழுத்திடும் அறிக்கையிலும் (உதாரணத்துக்கு, பாபர் மசூதி இடிப்பு சம்பந்தமான அறிக்கை) காஞ்சி மடாதிபதிக்கு எல்லாக் கையெழுத்தும் முடிந்து கீழாக ஓரிடம். [இந்த மேல்-கீழ் நிலை வேறுவிதமாகவும் நடப்பது உண்டு. சில மாதங்களுக்கு முன்னர் கர்நாடகாவில் நடைபெற்ற, ஹிந்துமதத் தலைவர்கள் ஈடுபட்ட ஒரு மாநாட்டில் ஜெயேந்திரருக்கு மட்டும் உயர்ந்த இருக்கை, மற்ற பிராமணரல்லாத மதத்தலைவர்கள் உட்கார சற்றே தாழ்ந்த இருக்கை!]

ஸ்வரூபானந்த சரஸ்வதி காஞ்சி மடத்தை சிருங்கேரி மடத்தின் ஓர் அங்கமாகவே கருதி வந்தார், அதைப் பளிச்சென்று சொல்லியும் வந்திருக்கிறார். இப்பொழுது ஜெயேந்திரர் தண்டத்தையும், காஞ்சி மடப் பதவியையும் தூர எறிந்துவிட்டு தன் மீதுள்ள களங்கத்தைத் துடைக்க முற்படவேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கும் சங்கராச்சாரியாரும் இவரே.

சிருங்கேரி, புரி, ஜ்யோதிர்மத் சங்கராச்சாரியார்களும் இனி வரும் நாள்களில் வெளிப்படையாகவே தங்கள் எண்ணங்களை வெளியிடுவதன்மூலம் ஜெயேந்திரர் மூலமாக சங்கர மடம் என்ற பெயருக்கு வந்திருக்கும் களங்கத்தை நீக்க முயலவேண்டும்.

Thursday, December 02, 2004

கொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்

தென் ஆப்பிரிக்கா 305 & 222, இந்தியா 411 & 120/2; இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2 டெஸ்ட்கள் அடங்கிய போட்டித்தொடரையும் இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றது.

இன்று காலை இந்தியா மிச்சமிருக்கும் தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்டுகளை எவ்வளவு சீக்கிரம் கைப்பற்றும் என்பதுதான் கேள்வியாக இருந்தது. முக்கியம் கால்லிஸ் விக்கெட். நேற்று மாலை போலவே ஹர்பஜன் சிங் அற்புதமாகப் பந்துவீசினார். அவர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் ஒரு விக்கெட் விழும்போல இருந்தது. ஆனால் கும்ப்ளே வருத்தம் தரக்கூடிய வகையில், சரியாக வீசவில்லை.

காலையில் நான்காவது ஓவரில் இந்தியாவுக்கு எதிர்பாராத வகையில் கால்லிஸ் விக்கெட் கிடைத்தது. ஹர்பஜன் பந்தை மிதக்க விட்டார். கால்லிஸ் முன்னால் இறங்கி வந்து பாதி தடுத்தும், பாதி அடித்தும் விளையாட எத்தனித்தார். ஆனால் பந்து உள்புற விளிம்பில், எதிர்பாராத விதத்தில் பட்டு பந்துவீச்சாளர் கைக்கே மிக எளிதான கேட்சாக வந்தது. கால்லிஸ் 98 பந்துகளில் 55, 4x4, தென் ஆப்பிரிக்கா 183/6. உள்ளே வந்த போலாக் தட்டித் தடவித்தான் விலையாடினார். ஆனால் மறுமுனையில் டி ப்ருயின் மிக நன்றாகவே விளையாடினார். கால்லிஸ் அவுட்டானதற்குப் பின்னர் ஆறு ஓவர்கள் கழித்து மீண்டும் ஹர்பஜன் ஓவரில் இந்தியாவிற்கு நிறைய அதிர்ஷ்டம் அடித்தது. ஹர்பஜனின் முதல் பந்தில் போலாக் முன்வந்து தடுத்தாடினார். பந்தை ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் நின்ற கம்பீர் பிடித்தார். ரீப்ளேக்களில் பார்க்கும்போது பந்து மட்டையில் பட்டதுபோலவே தெரியவில்லை. ஆனால் நடுவர் ஹார்ப்பர் இதை அவுட் என்று தீர்மானித்தார். போலாக் 6, தென் ஆப்பிரிக்கா 193/7. ஒரு பந்து விட்டு, மூன்றாவது பந்தில் புதிதாக உள்ளே வந்த ஆண்டாங் பந்தை ஸ்வீப் செய்யப்போய், கையுறையால் தட்டி விக்கெட் கீப்பர் கார்த்திகிடம் கேட்ச் கொடுத்தார். ஆண்டாங் 0, தென் ஆப்பிரிக்கா 193/8.

அதற்கடுத்த ஓவரின் இரண்டாவது பந்தில் கும்ப்ளே வீசிய லெக் பிரேக் தாமி சோலிகிலேயின் தடுப்பாட்டத்தை மீறி ஸ்டம்பைத் தகர்த்தது. சோலிகிலே 1, தென் ஆப்பிரிக்கா 194/9. ஆனால் டி ப்ருயின், எண்டினியுடன் ஜோடி சேர்ந்து இந்தியப் பந்துவீச்சாளர்களை படுத்தினார். கடைசி விக்கெட்டுக்கு ஒரு வழியாக 28 ரன்கள் வந்ததும், எண்டினி, கும்ப்ளே வீசிய ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்த லெக் பிரேக்கை அடிக்கப்போய், ஸ்லிப்பில் நின்ற திராவிட் இடம் கேட்ச் கொடுத்தார். இது கும்ப்ளேயின் 434ஆவது விக்கெட். இத்துடன் கபில் தேவ் எடுத்த விக்கெட்டுகள் எண்ணிக்கையை கும்ப்ளே அடைந்தார்.

இந்தியா வெற்றிபெற 117 ரன்கள் தேவை. இதுபோன்ற இலக்குகள் இரண்டுங்கெட்டான். 'சீ இவ்வளவுதானா' என்று விட்டுவிடவும் முடியாது, 'நிச்சயமாகப் பெறமுடியாது' என்று கடையை இழுத்துமூடவும் முடியாது. விக்கெட்டுகள் இரண்டு-மூன்றுக்கு மேல்போகாமல் 70-80 எடுத்துவிட்டால் சுலபம். ஆனால் 30க்குள் நான்கு விக்கெட்டுகள் போய்விட்டால் தடுமாற்றம்தான். சேவாக், கம்பீர் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். சேவாக் 10 ரன்கள் எடுத்த நிலையில் எண்டினியின் சற்றே எழும்பிய பந்தில் இரண்டாம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்தியா 15/1.

அதையடுத்து கம்பீர், திராவிடின் துணையுடன் ரன்கள் சேர்த்தார். உணவு இடவேளை நெருங்கவும், ஸ்மித் தன் சுழற்பந்துவீச்சாளரான ஆண்டாங்கைப் பந்துவீச அழைத்தார். ஆண்டாங்கின் முதல் பந்து ஃபுல் டாஸ், திராவிட் கவர் திசைக்கு அடித்து நான்கைப் பெற்றார். இரண்டாம் பந்தில் ஒரு ரன். மூன்றாம் பந்து அளவு குறைந்து வீசப்பட்டது, அதை கம்பீர் பின்னால் சென்று கவர் திசையில் அடித்து நான்கைப் பெற்றார். நான்காம் பந்தில் 2, ஐந்தாம் பந்தில் 1 ரன். ஆக உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் இந்தியாவிற்கு 12 ரன்கள் கிடைத்தன. இதுபோன்ற குறைந்த இலக்கு இருக்கும் நேரத்தில் 10% ரன்கள் ஒரே ஓவரில் கிடைத்தது தென் ஆப்பிரிக்காவிற்கு மிகவும் பாதகமாக அமைந்தது. அந்நிலையில் இந்தியா பத்து ஓவர்களில் 36/1 என்று இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் ஸ்மித் எண்டினியை முழுமையாகப் பந்துவீச்சிலிருந்து எடுத்துவிட்டார். போலாக்கிற்கும் இரண்டே ஓவர்கள்தான் கொடுத்தார். இது முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு நிலை. அத்துடன் விடாது ஹால், டி ப்ருயின் ஆகியோருக்கு பதில் அரைகுறை ஸ்பின்னர் ஜாக் ருடால்ப், ஆண்டாங் ஆகியோர் கையில் பந்துவீச்சைக் கொடுத்து விட்டார். இவ்விருவரும் நிறைய ரன் எடுக்கும் வாய்ப்பைக் கொடுத்தனர். கம்பீர், ருடால்ப் பந்துவீச்சில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்து உள்நோக்கி வந்த பந்தை அடிக்காமல் கால் காப்பில் வாங்க நடுவர் அவர் எல்.பி.டபிள்யூ என்று தீர்மானித்தார். கம்பீர் 26, இந்தியா 60/2.

டெண்டுல்கர் உள்ளே வந்தார். ஆனால் அவருக்கு சிறிதும் கஷ்டம் கொடுக்காமல் ருடால்ப், ஆண்டாங், ஸ்மித் தானே பந்து வீசியதால் திராவிட், டெண்டுல்கர் இருவரும் மெதுவாக வேண்டிய ரன்களைச் சேர்த்தனர். டெண்டுல்கர் கடைசியில் ஸ்மித் பந்தில் ஒரு சிக்ஸ் அடித்தார். ஜெயிக்கும் ரன்களையும் அவரே ஆண்டாங் பந்துவீச்சில் நான்கின் மூலம் பெற்றார்.

ஸ்மித், தன் முன்னிலை பந்துவீச்சாளர்களிடம் பந்தைக் கொண்டுக்காததால் இந்தியா மீது எந்தவித அழுத்தத்தையும் கொண்டுவரமுடியவில்லை. ருடால்ப், ஆண்டாங் இருவருமே நிறைய ஃபுல் டாஸ் பந்துகளை வீசினர். இதெல்லாம் டெண்டுல்கர், திராவிடுக்கு அல்வா சாப்பிடுவதைப் போல.

நல்ல வெற்றி. இதற்கான முக்கிய காரணி ஹர்பஜன் சிங். அவரே ஆட்ட நாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகனாக சேவாக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவும் சரியான தேர்வே.

அடுத்து இந்தியா பங்களாதேஷை எதிர்த்து இரண்டு டெஸ்ட்கள் விளையாடப்போகின்றது. அப்பொழுது மேலும் ஆட்ட விவரங்களுடன் உங்களைச் சந்திக்கிறேன். அதுவரை கிரிக்கெட்டல்லாத பிற விஷயங்கள் இருக்கவே இருக்கின்றன!

Wednesday, December 01, 2004

கொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்

தென் ஆப்பிரிக்கா 305 & 172/5 (58 ஓவர்கள்) - கால்லிஸ் 52*, டி ப்ருயின் 9*; இந்தியா 411

நான்காம் நாளின் கடைசி இரண்டரை மணிநேரங்களுக்கு முன்னர் ஆட்டம் சுவாரசியமற்று இருந்தது. யாரோ ஒருவர் ஸ்விட்ச் ஒன்றைப் போட்டது போல, தென் ஆப்பிரிக்காவின் 23ஆவது ஓவரில் தொடங்கி திடீரென எல்லாமே மாறி விட்டது.

காலையில் கார்த்திக், பதான் ஜோடி கருமமே கண்ணாக, மெதுவாக ரன்கள் சேர்த்தனர். முதல் ஓவரிலிருந்தே தென் ஆப்பிரிக்கா புதுப்பந்தை எடுத்துக்கொண்டது. 125 ஓவர்கள் வரை புதுப்பந்தை எடுக்காதது ஆச்சரியம்தான்! வெகு சீக்கிரமே பதான் லெக் ஸ்டம்பிலிருந்து ஆஃப் ஸ்டம்ப் நோக்கிச் சென்ற எண்டினியில் பந்தை அடிக்க, அது இரண்டாம் ஸ்லிப்பில் இருந்த ஸ்மித்தினால் அற்புதமாகப் பிடிக்கப்பட்டது. பதான் இன்று காலை தன் எண்ணிக்கையில் மூன்று ரன்களை மட்டுமே அதிகரித்திருந்தார். பதான் 24, இந்தியா 366/7. இந்தியா தனது ஆட்டத் திட்டத்தில் சிறிதும் மாறுதல் செய்யவில்லை. ஹர்பஜனை உள்ளே அனுப்பி ரன்களை அவசரமாகச் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கும்ப்ளேதான் வந்தார். வந்தவர் தடவித் தடவித்தான் விளையாடினார். இதற்கிடையில் கார்த்திக் சிறிது சிறிதாக ரன்கள் சேர்த்து தன் அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். கும்ப்ளே எண்டினியின் பந்துவீச்சில், அளவு குறைந்து வந்த பந்தைத் தட்டி இரண்டாம் ஸ்லிப்பில் நின்ற கால்லிஸ் கையில் கேட்ச் கொடுத்தார். கும்ப்ளே 26 பந்துகளில் 8, இந்தியா 382/8.

கார்த்திக் 46 ரன்களில் இருக்கும்போது போலாக் பந்துவீச்சில் கால் திசையில் பந்தை அடித்தாடப்போய், பந்தை விட்டுவிட, அது கால்காப்பில் பட்டது. எல்.பி.டபிள்யூ. கார்த்திக் 147 பந்துகளில் 46, 6x4, இந்தியா 387/9. முதல் டெஸ்டைப் போலவே ஹர்பஜனும், ஜாகீர் கானும் சேர்ந்து கடைசி விக்கெட்டுக்காக சில ரன்களைப் பெற்றனர். 400ஐத் தாண்டினர். ஆனால் அதே நேரத்தில் காலத்தையும் கடத்தினர். கிட்டத்தட்ட உணவு இடைவேளை நெருங்கியபோது ஹர்பஜன் ஆண்டாங் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் செய்யப்போய் பந்தை பாயிண்ட் திசையில் ட்Hஉக்கி அடிக்க, அங்கு டிப்பெனார் கேட்ச் பிடித்தார். ஹர்பஜன் 14, ஜாகீர் கான் 11*, இந்தியா 411 ஆல் அவுட். முதல் இன்னிங்ஸில் 106 ரன்கள் அதிகம்.

தென் ஆப்பிரிக்காவை 200 ரன்களுக்குள் - சீக்கிரமாக - அவுட்டாக்கினால்தான் இந்தியாவிற்கு ஜெயிக்க வாய்ப்பு என்று இருந்தது.

உணவு இடைவேளைக்குப் பின்னர் ஸ்மித், ஹால் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆளுக்கு மூன்று ஓவர்களைப் போட்டதும் கும்ப்ளேயிடம் பந்து ஒப்படைக்கப்பட்டது. இந்த முதல் ஆறு ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 23/0 என்ற நிலையில் இருந்தது. அதில் ஐந்து நான்குகளும் அடக்கம். ஸ்மித் நன்றாகவே விளையாடினார்.

கும்ப்ளே வந்ததற்கு பதில் ஹர்பஜனைப் பந்துவீச அழைத்திருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது. கும்ப்ளே பந்துவீச வந்தது முதலே மட்டையாளர் யார், அவருக்கு எங்கு பந்துவீசுவது என்பதை யோசிக்காமல் முந்தைய பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது ஏற்படும் கால் அடையாளங்கள் (bowlers' footmarks) - இதை ரஃப் (rough) என்று சொல்வார்கள் - எங்கு உள்ளதோ அங்கேயே வீசுவேன் என்று விடாப்பிடியாக வீசினார். இந்த காலடையாளங்கள் ஆடுகளத்தின் மேற்பரப்பை சிதைத்து குழிகளை ஏற்படுத்தியிருக்கும். பொதுவாக good length என்று சொல்லப்படும் நல்ல அளவுள்ள பந்துகள் விழும் இடங்களில் இருக்கும். நான்காவது, ஐந்தாவது நாள்களில் இந்தக் காலடையாளப் பரப்பு பந்துவீச்சாளர்களுக்கு உபயோகமாக இருக்கும். இந்த ஆடுகளத்தில் இடதுகை மட்டையாளருக்கு ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியேயும், வலதுகை மட்டையாளருக்கு லெக் ஸ்டம்பிற்கு வெளியேயும் இருந்தது. ஷேன் வார்ன் போன்ற அதிக சுழற்சியைக் கொடுக்கும் பந்துவீச்சாளரால் இந்த ரஃப் பகுதியை மிக அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதிகமாக ஸ்பின் ஆவதால் இதுபோன்ற பந்துகளை ஸ்வீப் செய்வதும் கஷ்டம்.

ஆனால் கும்ப்ளே வார்ன் அளவுக்கு பந்தை சுழற்றுபவர் அல்ல. அதனால் இவர் ரஃபில் வீசுவது அனைத்தும் வீணாகப் போயிற்று. வீசும் கை விக்கெட்டை விட்டு விலகிவர மீண்டும் மீண்டும் ரஃபில் இவர் வீச, மட்டையாளர்கள் இஅடலைக் காட்டியோ, இல்லை, மட்டையால் பந்தைத் திருப்பி விட்டோ விளையாடினர்.

15 ஓவர்கள் வரை ஹர்பஜனைக் காணவே காணோம். ஹர்பஜன் வந்ததுமே முதலிரண்டு ஓவர்களை நன்றாக வீசினார். இவரது மூன்றாவது ஓவரில் அதுவரை தூங்கிக்கொண்டிருந்த ஹால் இறங்கி வந்து மிட்விக்கெட் மேல் சிக்ஸ் அடித்தார். ஹர்பஜனின் நான்காவது ஓவரில் ஒரு நான்கு போனது. 22 ஓவர்கள் முடிந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா 69/0 என்ற நிலையில் இருந்தது. கும்ப்ளே அதுவரை 8 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்திருந்தார். ஹர்பஜன் 4 ஓவர்களில் 14 ரன்கள்.

23ஆவது ஓவரை கும்ப்ளே வீசினார். இப்பொழுது ரஃபில் விழுந்த பந்துகள் மிக அதிகமாக ஸ்பின் ஆக ஆரம்பித்தன. ஒரு பந்து ஸ்மித்தின் வயிற்றில் அடித்தது. இன்னொரு பந்தில் ஸ்லிப், கீப்பர் நடுவில் விளிம்பில் பட்டு நான்கு ரன்கள் கிடைத்தன. மற்றுமொரு பந்தை மட்டையாளர், விக்கெட் கீப்பர் இருவரௌம் தடவி, நான்கு ரன்கள் பையாகக் கிடைத்தன. இன்னொரு பந்தில், ஸ்மித் வெட்டியாடப் போய் பந்து தரையில் விழுந்து ஸ்டம்பிற்கு மேலாகப் போனது! இப்படியாக ஸ்மித் மிகவும் ஆடிப்போயிருந்தார் இந்த ஓவரில்.

24ஆவது ஓவர் ஹர்பஜன் வீசிய முதல் பந்தை ஹால் ஸ்வீப் செய்யப்போனார். பந்து கையுறையில் பட்டு, எழும்பி விழுந்தது. கார்த்திக் நன்றாகத் தாவிப்பிடித்தார். ஹால் 21, தென் ஆப்பிரிக்கா 77/1. புதிதாக உள்ளே வந்தவர் ஜாக் ருடால்ப். ஸ்மித் இப்பொழுது 49 ரன்களில் இருந்தார். அடுத்த ஓவரில் ஒரு ரன் பெற்று தன் அரை சதத்தைப் பெற்றார். அடுத்த ஓவர் ஹர்பஜன் பிரமாதமாக வீசினார். ஒவ்வொரு பந்தையும் ருடால்பை விளையாட வைத்தார். ஒவ்வொன்றும் ஆஃப், அல்லது நடு ஸ்டம்பில் விழுந்து ஆஃப் ஸ்பின் ஆனது. ஆனால் கடைசியாக வீசிய பந்து மிகப்பெரும் 'தூஸ்ரா'. இடதுகை ஆட்டக்காரர் ருடால்பின் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்தது. இது நிச்சயமாக வெளியே போய்விடும் என்று இரண்டு கைகளையும் தூக்கி கால்காப்பை முன்னால் வைத்தார் ருடால்ப். ஆனால் பந்து சடாரென உள்ளே வந்து கால்காப்பில் பட, நடுவர் ஹார்ப்பரால் அவுட் கொடுப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. ருடால்ப் 2. தென் ஆப்பிரிக்கா 81/2. உள்ளே வந்தவர் கால்லிஸ்.

அடுத்த ஓவர் கும்ப்ளே வீசினார். லெக் ஸ்டம்பிற்கு வெகு வெளியே போன ஒரு பை நான்கு ரன்கள். மீண்டும் ஹர்பஜன் வந்தார். தன் முந்தைய இரண்டு ஓவர்களில், ஓவருக்கு ஒரு விக்கெட் எடுத்திருந்தார். இந்த ஓவரில் கால்லிஸ் முன்னால் வந்து தடுத்தாட முற்பட்டார். பந்து உள்விளிம்பில் பட்டு, கால்காப்பில் பட்டு, ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் நின்ற கம்பீர் கையில் விழுந்தது. இந்தியர்கள் அனைவரும் குதித்தனர். கால்லிஸ் தன் மட்டையை மேலே தூக்கிக் காட்டி பந்து காலில் பட்டது என சைகை காட்டினார். நடுவர் ஹார்ப்பரும் நம்பினார். அவுட் தரவில்லை. அப்பொழுது தென் ஆப்பிரிக்கா 89/2. கால்லிஸ் 2. மேலும் இரண்டு ரன்கள் கால்லிஸ் பெற 91/2 என்ற நிலையில் தேநீர் இடைவேளை.

தேநீர் இடைவேளையின்போது இந்தியர்கள் கொதித்துப் போயிருக்க வேண்டும். கால்லிஸ் அவுட்டாகியிருந்தால் ஆட்டமே வேறு மாதிரியாக இருந்திருக்கும்! இடைவேளைக்குப் பின்னர் ஹர்பஜன் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட் விழும்போலவே இருந்தது. வருத்தம் என்னவென்றால் கும்ப்ளே அந்த அளவுக்கு ஈடுகொடுக்கவில்லை. அது மட்டுமல்ல, ஸ்மித்துக்கு ரன்களும் கொடுத்துக்கொண்டிருந்தார். சில ஓவர்கள் கழித்து ஹர்பஜன் ஸ்மித்துக்கு நன்கு மிதந்துவந்த, அளவு அதிகமாக விழுந்த ஆஃப் பிரேக் ஒன்றை வீசினார். அது ஸ்மித்தின் வெளி விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பிற்குத் தள்ளிப் பறந்தது. ஆனால் அங்கு நின்றுகொண்டிருந்த லக்ஷ்மண் பறந்து இடதுகையால் அந்த கேட்சை லபக்கென்று பிடித்தார். ஸ்மித் 124 பந்துகளில் 71, 11x4, தென் ஆப்பிரிக்கா 126/3. உள்ளே வந்தவர் ஹாஷிம் ஆம்லா.

கால்லிஸ் விக்கெட் கிடைக்காதது துரதிர்ஷ்டம் என்றால் அடுத்து ஹர்பஜனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அதிகமாக சுழலும் என எதிர்பார்த்து ஆம்லா பந்தை மிட்விக்கெட் திசையில் திருப்ப நினைக்க, பந்து கால்காப்பில் பட்டு ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த லக்ஷ்மண் கையில் விழுந்தது. ஆனால் ரீப்ளேயில் பந்து மட்டையில் படவில்லை என்று தோன்றியது. ஹார்ப்பரோ இது அவுட் என்று சொல்லிவிட்டார். ஆக ஆம்லா 2, தென் ஆப்பிரிக்கா 138/4.

சில ஓவர்கள் கழித்து கடைசியாக கும்ப்ளே விக்கெட் ஒன்றை எடுத்தார். நடு ஸ்டம்பில் விழுந்து பந்து லெக் ஸ்பின் ஆகி வெளியே சென்றது. டிப்பெனாரில் மட்டையில் பட்டு விக்கெட் கீப்பர் கார்த்திக்கின் கால்காப்பில் பட்டு கல்லி திசையில் சென்றது. அங்கு நிற சேவாக் அதைப் பிடித்தார். டிப்பெனார் 2, தென் ஆப்பிரிக்கா 147/5. ஆக விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது. ஆனால் ஐந்தாவது விக்கெட்டுக்குப் பிறகு கால்லிஸ், ஜாண்டர் டி ப்ருயின் இருவரும் நாளின் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கால்லிஸ் தன் அரை சதத்தையும் பெற்றார். முதல் இன்னிங்ஸில் கால்லிஸ் சதமடித்திருந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

இப்பொழுதைக்கு தென் ஆப்பிரிக்கா கையில் ஐந்து விக்கெட்டுகளுடன் 66 ரன்கள் அதிகத்தில் உள்ளது.

நாளை - கடைசி நாள் - ஆட்டத்தில் இந்தியா மிச்சமிருக்கும் விக்கெட்டுகளை சுலபமாக எடுத்துவிடும் என்றே தோன்றுகிறது. ஹர்பஜன் மிக அருமையாக வீசுகிறார். கும்ப்ளே சிறிது தோள் கொடுத்தால் இன்னமும் 40-50 ரன்களுக்குள் மிச்சமிருக்கும் ஐந்து விக்கெட்டுகளைப் பெற்று விடலாம். அதன்பின் இந்தியாவால் 120 ரன்களை வேகமாகப் பெற முடியுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தென் ஆப்பிரிக்காவிடம் உருப்படியான ஸ்பின்னர்கள் யாரும் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். முதல் கட்டமாக கால்லிஸை இன்னொருமுறை அவுட்டாக்க முனைய வேண்டும்.

Tuesday, November 30, 2004

கொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - மூன்றாம் நாள்

தென் ஆப்பிரிக்கா 305, இந்தியா 359/6 (125 ஓவர்கள்) - கார்த்திக் 35, பதான் 21

முன்பெல்லாம் டெண்டுல்கர் விளையாடப்போகிறார் என்றாலே கூட்டம் திரண்டு வரும். தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். டெண்டுல்கர் அவுட்டானதுமே உடனே பலர் அரங்கிலிருந்து கிளம்பி விடுவார்கள். தொலைக்காட்சியின் TRP ரேடிங் குறைந்துபோகும்.

சேவாக் டெண்டுல்கரைப் போலக் காட்சி அளிக்கிறாரோ, இல்லையோ; டெண்டுல்கரைப் போலவே விளையாடுகிறாரோ, இல்லையோ; நிச்சயமாக டெண்டுல்கரைப் போல பார்வையாளர்களை ஈர்க்கிறார். இன்றைய ஆட்டம் அதற்கு அத்தாட்சி. நேற்று சேவாக் அரங்கில் இருந்தவரை ஆட்டத்தில் விறுவிறுப்பு இருந்தது. முதல் டெஸ்டிலும் அப்படியே. இன்று காலை சேவாக் அவுட்டானதும் ஆட்டமும் சோபை இழந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் கடைசி ஓவரில் மிச்சமிருந்த இரண்டு பந்துகளும் இன்று காலை போடப்பட்டன. அந்த இரண்டு பந்துகளில் புதுமையாக ஒன்றும் நடந்துவிடவில்லை. ஆனால் அடுத்த ஓவரில் திராவிட் எண்டினி பந்துவீச்சில் அற்புதமாக இரண்டு நான்குகளைப் பெற்றார். கால் திசையில் வந்த பந்தை மிட்விக்கெட் திசையில் தள்ளிப் பெற்றது முதல் நான்கு. அடுத்தது இரண்டாம் ஸ்லிப்பிற்கும், கல்லிக்கும் இடையே அடித்தது. அடுத்த ஓவரில் போலாக் பந்துவீச்சில் நல்ல அளவில் வீசப்பட்ட - குற்றம் ஒன்றுமே சொல்லமுடியாத பந்தை - அனாயாசமாக லாங் ஆன் மேல் தூக்கி ஆறாக அடித்தார். போலாக் நம்பவே முடியாமல் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். காலையில் இரண்டு ஓவர்களில் 14 ரன்கள். இந்த வேகத்தில் எங்குபோய் முடியுமோ என்று தென்னாப்பிரிக்கர்கள் மிகவும் கவலையுடன் காணப்பட்டனர்.

எண்டினி தன் இரண்டாவது ஓவரைத் தொடங்கினார். முதல் பந்தில் திராவிடுக்கு ஒரு ரன். சேவாக் வந்ததுமே எண்டினி அவருக்கு குறைந்த அளவுள்ள பந்துகளாக வீசத்தொடங்கினார். எல்லாமே அளவு குறைந்து, ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசப்பட்டு, உள்நோக்கி, முகத்தைப் பார்த்து வீசப்பட்டவை. முதல் பந்தை சேவாக் விட்டுவிட்டார். இரண்டாவதை சற்று பின்னால் சென்று நன்றாகவே தடுத்தாடினார். மூன்றாவது பந்தோ அவர் எதிர்பார்த்ததை விட வேகமாக வந்துவிட்டது. அதனால் பந்து கைக்காப்பில் பட்டு மேல்நோக்கிச் சென்றது. முதல் ஸ்லிப்பிலிருந்து ஸ்மித் ஓடிச்சென்றுப் பிடித்தார். தென்னாப்பிரிக்கர்கள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. சேவாக் 118 பந்துகளில் 88, 11x4, 2x6. இந்தியா 144/2.

டெண்டுல்கர் உள்ளே வந்ததும் மிகவும் பாதுகாப்பாகவே விளையாடினார். திராவிட் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்தி தன் அரை சதத்தை எட்டினார். அதன்பின் இருவரும் எப்படியாவது அவுட்டாகாமல் இருப்பதே நோக்கம் என்பதுபோல விளையாடினர். தாங்களாகவே ரன் அடிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றவில்லை. அடிப்பது போல பந்துவந்தால் அடிப்பார்கள் - அதுவும் 1, 2 ரன்களுக்குத்தான். இல்லாவிட்டால் சந்தோஷமாக தடுத்தாடிவிடுவார்கள். அவ்வப்போது விளிம்பில் பட்டு ஃபைன் லெக்கிலோ, தர்ட்மேனிலோ நான்குகள் கிடைக்கும்.

ஜஸ்டின் ஆண்டாங் பந்துவீச வந்ததும் டெண்டுல்கர் ஒரு ஷாட் தூக்கியடித்து விளையாடினார். ஆகா, மனிதர் இனியாவது நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்த்தால்... வெகு சீக்கிரத்திலேயே டி ப்ருயின் பந்துவீச்சில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற பந்தை வெட்டி ஆடப்போய், உள்விளிம்பில் பட்டு பவுல்ட் ஆனார். டெண்டுல்கர் 20, இந்தியா 189/3. கங்குலி உள்ளே வந்தார். வந்தது முதற்கொண்டே அவசரமாக ரன்களைப் பெறுவதன் மூலம்தான் இந்த ஆட்டத்தை வெல்ல முடியும் என்பதைப் புரிந்துகொண்டவர் போல விளையாடினார். ஆனால் தென்னாப்பிரிக்காவின் பந்துத் தடுப்பு வியூகம் கங்குலிக்கு நிறைய வாய்ப்பைக் கொடுக்கவில்லை. திராவிடோ இந்த முயற்சியைக் கூடச் செய்யவில்லை. தடுத்தாடுவதிலேயே அவரது வாழ்க்கை கழிந்தது. உணவு இடைவேளையின்போது இந்தியா 198/3 என இருந்தது.

இடைவேளைக்குப் பின்னரும் கங்குலி ரன்கள் பெறும் வேகத்தைக் கூட்டினார். ஆனால் திராவிடும், டெண்டுல்கர் வழியிலேயே ஆண்டிரூ ஹால் பந்துவீச்சில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற பந்தை உள்ளே இழுத்து வந்து ஸ்டம்பில் விழவைத்து தன் விக்கெட்டை இழந்தார். திராவிட் 247 பந்துகளில் 80, 8x4, இந்தியா 238/4. அடுத்து லக்ஷ்மண் உள்ளே வந்தார். லக்ஷ்மணும் மிக மோசமான ஃபார்மில் இருப்பதால் தடவித் தடவியே விளையாடினார். கங்குலி மட்டும் ஆஃப் திசையில் சில நல்ல விளாசல்களையும், கால் திசையில் கிடைக்கும் ரன்களையும் சேகரித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, ஆட்டம் கிட்டத்தட்ட சதுரங்கத்தில் 'stalemate' என்பார்களே - அதுபோன்று விட்டது. இந்தியாவால் பந்துவீச்சைத் தகர்த்து ரன்களை வேகமாக சேர்க்க முடியவில்லை. தென்னாப்பிரிக்காவால் இந்தியாவின் மிஞ்சிய விக்கெட்டுகளை கிடுகிடுவென சாய்க்க முடியவில்லை. விளைவு? பார்வையாளர்கள் தூங்கி வழிந்தனர். இந்த நேரத்தில் இதுவரையில் செய்யாத தவறொன்றை நடுவர் டாஃபல் செய்தார். டி ப்ருயின் பந்துவீச்சில் லெக் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்து, கங்குலியின் காலில் பட்ட பந்தில் கங்குலி எல்.பி.டபிள்யூ என்று தீர்மானித்தார். கங்குலி 73 பந்துகளில் 40 ரன்கள், 5x4, இந்தியா 267/5. இப்பொழுதும் இந்தியாவின் எண்ணிக்கை தென்னாப்பிரிக்காவின் எண்ணிக்கையை விடக் குறைவுதான்.

புதியவர் தினேஷ் கார்த்திக்குடன் லக்ஷ்மண் ரன்களைச் சேர்த்து எப்படியாவது 305ஐத் தாண்டுவது என்று விளையாடினார். லக்ஷ்மணை விட கார்த்திக் சற்று ஆக்ரோஷமான விளையாட்டைக் காண்பித்தார். தேநீர் இடைவேளையின்போது இந்தியா தென்னாப்பிரிக்காவின் ஸ்கோருக்கு அருகில் வந்துவிட்டது. 293/5.

இடைவேளைக்குப் பின், லக்ஷ்மண் சற்று சுதந்திரமாக விளையாடத் தொடங்கினார். எண்டினி பந்தில் அவருக்கு அடுத்தடுத்த ஓவர்களில் மூன்று நான்குகள் கிடைத்தன. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவின் எண்ணிக்கையைத் தாண்டியது. ஆனால் எண்டினி அகலம் கொடுத்த ஒரு பந்தை அடிக்கப்போய் அதை பாயிண்ட் திசையில் நின்றிருந்த ஆண்டாங் கையில் கேட்சாகக் கொடுத்தார். லக்ஷ்மண் 86 பந்துகளில் 39, 4x4, இந்தியா 308/6.

ஆனால் இந்த நிலையிலும் கூட தென்னாப்பிரிக்காவின் பலம் குறைந்த பந்துவீச்சால் இந்தியாவின் வாலை ஒட்ட நறுக்க முடியவில்லை. இர்ஃபான் பதான் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து இன்றைய ஆட்டம் முடியும்வரை எண்ணிக்கையை 359/6 என்ற நிலைக்குக் - 54 ரன்கள் கூடுதலாகக் - கொண்டு சென்றனர். இன்றும் வழக்கம் போல 4.15க்கே ஆட்டம் முடிந்தது. இன்றைய கணக்கான 90 ஓவர்களுக்கு நான்கு ஓவர்கள் குறைவு.

இனி ஆட்டம் என்ன ஆகும்? இந்திய ஆட்டக்காரர்கள் அனைவரும் மட்டையை முடிந்தவரை வீசி ஓவருக்கு 4 ரன்களுக்கு மேல் சேர்க்க முயல வேண்டும். அவுட்டானாலும் தவறில்லை. இன்னமும் 100 ரன்கள் சேர்த்தபின் பந்துவீச வேண்டியதுதான். தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர்களை 200க்குள் அவுட்டாக்கினால், இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு உண்டு. இல்லாவிட்டால் ஆட்டம் டிரா.

Monday, November 29, 2004

கொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம் நாள்

தென் ஆப்பிரிக்கா 305, இந்தியா 129/1 (38.4 ஓவர்கள்) - சேவாக் 82*, திராவிட் 33*

நேற்று 6.3 ஓவர்கள் பாக்கியிருந்த நிலையில் இன்று ஆட்டம் வெறும் 6 நிமிடங்கள் முன்னால் தொடங்கியது. நேற்று மட்டுமல்ல, இனி ஒவ்வொரு நாளுமே ஆட்ட இறுதியில் நேரம் கிடைக்கப்போவதில்லை எனும்போது ஆட்டம் 9.00 மணிக்கே தொடங்க வேண்டும்.

புதிய பந்தை வைத்துக்கொண்டு ஜாகீர் கானும், இர்ஃபான் பதானும் இன்று காலை அற்புதமாகப் பந்து வீசினர். காலையில் வீசப்பட்ட மூன்றாவது ஓவரிலேயே ஜாகீர் கான் வெளியே போகும் பந்தின் மூலம் டி ப்ருயினை விக்கெட் கீப்பர் கார்த்திக் கேட்ச் பிடிக்க அவுட்டாக்கினார். டி ப்ருயின் தன் முதல் நாள் ஸ்கோரில் மாற்றமெதையும் ஏற்படுத்தவில்லை. டி ப்ருயின் 15, தென் ஆப்பிரிக்கா 230/6. தொடர்ந்து உள்ளே வந்த ஷான் போலாக் துல்லியமான வேகப்பந்து வீச்சில் மிகவும் தடுமாறினார். அடுத்த ஒரு மணி நேரம் கால்லிஸ், போலாக் இருவரும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு விளையாடினர். ரன்கள் பெறுவது விளிம்பு வழியாக தர்ட்மேனில்தான் என்ற நிலைமை. கல்லியில் நின்ற சேவாக் கையருகே ஒரு கேட்ச் போனது. பல பந்துகள் கால் காப்பில் பட்டன. நடுவர்கள் ஹார்ப்பரும், டாஃபலும் எல்.பி.டபிள்யூ கொடுப்பதில்லை என்ற தீர்மானத்தில் இருந்தனர்.

ஜாகீர் கானுக்கு பதில் கங்குலி பந்துவீச வந்தார். ஏன் இப்படி வீணாக, தானே பந்துவீச வருகிறார் என்று தோன்றியது. ஆனால் கங்குலி மிகவும் துல்லியமாக ரன்கள் ஏதும் அளிக்காத வகையில் பந்துகளை ஆஃப் கட்டர்களாக வீசிக்கொண்டிருந்தார். ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ஆஃப் கட்டர்கள் போலாக் கால்காப்பில் பட்டன. இரண்டுமே அவுட்தான், ஆனால் ஹார்ப்பர் தரவில்லை. அடுத்த கங்குலி ஓவரில் கால்லிஸ் மட்டையில் பட்டு ஒரு கேட்ச் விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால் கார்த்திக் ஸ்டம்பிற்கு அருகில் இருந்ததால் அந்த கேட்சைப் பிடிக்க முடியவில்லை. கார்த்திக்கின் கைக்காப்பில் பந்து படாதிருந்தால் முதல் ஸ்லிப்பில் இருந்த திராவிட் கையில் எளிமையான கேட்ச் ஆகியிருக்கும். அடடா, இப்படி ஆகிவிட்டதே என்று கங்குலி கார்த்திக்கை சற்று பின்னால் நிற்கச் சொன்னார்.

அடுத்த பந்தைப் போல கங்குலி தன் டெஸ்ட் வாழ்க்கையில் இதுவரை வீசியிருந்திருக்க முடியாது. ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே குத்தியது. கால்லிஸ் அப்பொழுது 121இல் இருந்தார். பந்தினால் தனக்கேதும் தொல்லை வராது என்று பந்தை விட்டுவிட, பந்து சடாரென உள்நோக்கித் திரும்பி, மிடில் ஸ்டம்பின் மேலாகத் தட்டியது. கால்லிஸ் 259 பந்துகளில் 121 ரன்கள், 12x4. தென் ஆப்பிரிக்கா 261/7. அடுத்த சில ஓவர்கள் கழித்து கும்ப்ளே வீசிய கூக்ளியை - உள்நோக்கி வந்த பந்து - சரியாகக் கவனிக்காது போலாக் முன்னதாகவே மட்டையை கால் திசை நோக்கித் திருப்பி விட, பந்து வெளி விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பில் நின்ற திராவிட் கையில் கேட்ச் ஆனது. போலாக் 18, தென் ஆப்பிரிக்கா 273/8.

அவ்வளவுதான், இனி தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் உடனடியாக முடிந்துவிடும் என்று எதிர்பார்த்தால், அதுதான் நடக்கவில்லை. ஜஸ்டின் ஆண்டாங், தாமி சோலிகிலே இருவரும் மேற்கொண்டு விக்கெட் கொடுக்காமல் உணவு இடைவேளை வரை அணியைக் கொண்டுசென்றனர். தென் ஆப்பிரிக்கா 289/8.

உணவு இடைவேளைக்குப் பின்னர், சிறிது சிறிதாக ரன்கள் வந்தவண்ணம் இருந்தன. 300ஐத் தாண்டியது தென் ஆப்பிரிக்கா. இப்படியே போனால் தாங்காது என்று இன்று முதல்முறையாக ஹர்பஜன் சிங் பந்துவீச அழைத்துவரப்பட்டார். முதல் பந்து! ஃபுல் டாஸ். சோலிகிலே தூக்கி அடிக்கப்போய் ஹர்பஜன் சிங்கிற்கே கேட்ச் கொடுத்தார். சோலிகிலே 15, தென் ஆப்பிரிக்கா 305/9. ஒரு பந்து விட்டு, மூன்றாவது பந்தில் - மிதந்து வந்த பந்து - எண்டினி கவர் திசையில் மேலாக அடித்து அங்கு நின்ற பதான் கையில் எளிதான கேட்ச் கொடுத்தார். எண்டினி 0, ஆண்டாங் 16*, தென் ஆப்பிரிக்கா 305 ஆல் அவுட். ஆக ஹர்பஜன் இன்று தான் வீசிய முதல் மூன்று பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளைப் பெற்று, தென் ஆப்பிரிக்கா அணியை ஆல் அவுட்டாக்கினார். நேற்று நான் சொன்னது போல தென் ஆப்பிரிக்கா 300க்கருகே தன் இன்னிங்ஸை முடித்தது.

இந்தியாவிற்கு சேவாகும், கம்பீரும் ஆட்டத்தைத் தொடங்கினர். சேவாக் எப்பொழுதும் போல தடாலடியாகவே தொடங்கினார். கம்பீர் தானும் நல்ல தன்னம்பிக்கையுடன் ஆரம்பித்தார். ஆனால் 7வது ஓவரில் போலாக் பந்துவீச்சில் லெக் ஸ்டம்பில் விழுந்து நடு ஸ்டம்பிற்குச் செல்லும் பந்து கால்காப்பில் பட ஒருவழியாக ஹார்ப்பர் ஆட்டத்தின் முதலாவது எல்.பி.டபிள்யூவைக் கொடுத்தார். கம்பீர் 9, இந்தியா 17/1. திராவிட் சேவாகுடன் ஜோடி சேர்ந்தார். சேவாக் அதுவரை தர்ட்மேன் திசையில் உயரத்தூக்கி அடித்த ஒரு நான்குடன் விளையாடிக்கொண்டிருந்தார். போலாக் பந்தில் (வெவ்வேறு ஓவர்களில்), தர்ட்மேன் திசையில் ஒன்று, மிட்விக்கெட் திசையில் ஒன்று, கவர் திசையில் ஒன்று என மூன்று நான்குகளைப் பெற்றார். இதற்கிடையில் திராவிடும் எண்டினியின் ஓர் ஓவரில் இரண்டு அழகான நான்குகளைப் பெற்றார் - ஒன்று பேக்வர்ட் பாயிண்டில் ஒரு கட் ஷாட், மற்றொன்று தர்ட்மேன் வழியாக ஒரு ஸ்டியர். தேநீர் இடைவேளையின்போது இந்தியா 48/1 என்ற ஸ்கோரில் இருந்தது.

தேநீர் இடைவேளை தாண்டியதும் இந்தியாவால் வேகமாக ரன்களைப் பெற முடியவில்லை. முக்கியமாக திராவிடால் ரன்களைப் பெற முடியவில்லை. சேவாக் அவ்வப்போது நான்குகளும், சில ஒன்று, இரண்டுகளும் பெற்றுக்கொண்டிருந்தார். சேவாக் 79 பந்துகளில் தன் அரை சதத்தைப் பெற்றார். ஆண்டாங் வீசிய ஓவர் ஒன்றில் சேவாக் அவுட்டாகும் நிலைக்கு வந்தார். ஆண்டாங் டெஸ்ட் போட்டிகளில் லெக் ஸ்பின் வீசுவாராம். ஒருநாள் போட்டிகளில் ஆஃப் ஸ்பின்னாம் (!). ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசிய பந்தை சேவாக் அடிக்காது விட, பந்து லேசாக உள்ளே வந்து கால்காப்பில் பட்டது. எல்.பி.டபிள்யூவுக்கான அப்பீலை நடுவர் நிராகரித்தார். திடீரென சுதாரித்துக்கொண்ட சேவாக் அடுத்த நான்கு பந்துகளையும் எல்லைக்கோட்டைத் தாண்டி அனுப்பினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெகு வெளியே சென்றது, அதை கவர் திசையில் இழுத்து அடித்தார். எல்லைக்கோட்டுக்கு அருகே நின்றுகொண்டிருக்கும் ஸ்வீப்பர் கவர் பந்துத் தடுப்பாளரால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. நான்காவது பந்து ஃபுல்டாஸ், அதை மிட்விக்கெட் திசைக்கு மேல் வளைத்து ஆறாக அடித்தார். ஐந்தாவது பந்து, அளவு அதிகமாக வீசப்பட்டது, அதை இறங்கி வந்து மிட்விக்கெட் மேல் வளைத்து அடித்தார், இம்முறை நான்குதான். ஆடிப்போன அணித்தலைவர் ஸ்மித் இரண்டு நிமிடங்கள் எடுத்துக்கொண்டு பந்துத்தடுப்பாளர்களை மாற்றி அமைத்தார். ஆண்டாங், ஆறாவது பந்தை, வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர வந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே வீசினார். இதை எதிர்பார்த்த சேவாக் அந்தப் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து பேக்வர்ட் பாயிண்ட் திசையில் நான்கடித்தார்!

இது போதாதென்று அடுத்த ஓவரின் முதல் பந்தை - போலாக் வீசியது - திராவிட் அற்புதமாக பாயிண்ட் திசையில் கட் செய்து நான்கைப் பெற்றார்.

ஸ்மித் மிகவும் தைரியமாக ஆண்டாங்கை அடுத்த ஓவரையும் வீசச் செய்தார். முதல் பந்தை சேவாக் இறங்கி வந்து லாங் ஆன் திசை மேல் அடித்து நான்கைப் பெற்றார். அடுத்த பந்தில் சேவாகிற்கு ஒரு ரன்தான். ஆனால் அதே ஓவரில் திராவிடும் மிட்விக்கெட் திசையில் அழகான ஒரு நான்கை அடித்தார். ஆக, ஆண்டாங் இரண்டு ஓவர்களில் 28 ரன்களைக் கொடுத்துவிட்டார். இந்த அமளி துமளியில் இந்தியா 100 ரன்களைத் தாண்டியிருந்தது. தொடர்ந்தும் ரன்கள் வந்தவண்ணம் இருந்தன. இதற்குள் நேரம் 4.20 ஆகியிருக்க இருட்டத் தொடங்கியது. இன்று மொத்தமாக 76.4 ஓவர்களே வீசப்பட்டிருந்தன. நடுவர்கள் வெளிச்சமின்மை காரணமாக இன்றும் ஆட்டத்தை நிறுத்தி விட்டனர்.

இந்தியா என்ன செய்யவேண்டும்? இந்தியாவுக்கு சேவாக் ஒருவர்தான் அதிரடியாக விளையாடுகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு ஜெயிக்க வாய்ப்புகள் குறைவு. இந்தியா நாளை முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டும். நான்காவது நாளும் பேட்டிங் செய்ய வேண்டும். நான்காம் நாள் உணவு இடைவேளைக்கு அடுத்து ஒரு மணி நேரமாவது விளையாடி, 520-570 ரன்கள் வரை பெற்றிருக்க வேண்டும். அப்படிச் செய்தால் இந்தியா ஜெயிக்க நிறைய வாய்ப்பு. அதற்கு திராவிட், டெண்டுல்கர், கங்குலி, லக்ஷ்மண் என அனைவரும் சேர்ந்து ரன்கள் பெற வேண்டும்.

Sunday, November 28, 2004

கொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்

தென் ஆப்பிரிக்கா 227/5 (83.3 ஓவர்கள்) - கால்லிஸ் 103*, டி ப்ருயின் 15*

கங்குலி கடைசியாக டெஸ்ட் ஆட்டங்களில் எப்பொழுது டாஸில் வென்றார் என்று யாருக்காவது நினைவிருக்கிறதா? தொடர்ச்சியாக இந்த சீஸனில் இந்தியா விளையாடிய ஆறு டெஸ்ட்களிலும் டாஸ் எதிரணிக்குத்தான்.

கொல்கொத்தா ஆடுகளத்திலும் என்ன செய்தான் ஸ்பின் எடுக்கும் என்று யோசித்து, புல்லை வெட்டி, தண்ணீர் குறைவாக விட்டு வைத்திருந்தனர். ஆனால் கான்பூர் அளவுக்கு செத்த பிட்ச் கிடையாது. இந்தியா முரளி கார்த்திக்கு பதில் இர்ஃபான் பதானை விளையாட வைத்தனர். வேறு எந்த மாற்றமும் இல்லை. நேற்று இரவு தென் ஆப்பிரிக்கா அணித்தலைவர் கிராம் ஸ்மித் கால் மீது அவரை ஹோட்டலில் இறக்கிவிட்ட டாக்சியோ ஏறிச்சென்றது. டாக்சியை விட்டு இறங்கிய ஸ்மித் ஏன் சக்கரத்துக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார் என்பது புரியாத புதிர். அத்துடன் அவர் காலில் ஏறிச்சென்ற டாக்சி சுற்றியிருப்பவர்கள் சத்தம் போட்டதால், என்ன ஏது என்று தெரியாமல் ரிவர்ஸில் வந்து மீண்டும் கால் மீது ஏறி அப்படியே நின்றுவிட்டதாம்! நம்பவா முடிகிறது? இன்று ஸ்மித் விளையாடுவாரா இல்லையா என்பதே தெரியாத நிலை. ஆனால் டாஸ் போட வந்து, டாஸில் வென்று, பேட்டிங் செய்யத் தீர்மானித்தார் ஸ்மித். தென் ஆப்பிரிக்கா அணியில் இரண்டு மாற்றங்கள். இந்திய வம்சாவளி ஹாஷிம் ஆம்லா என்பவரும், ஜஸ்டின் ஆண்டாங் என்பவரும் அணிக்கு உள்ளே வந்தனர். மார்ட்டின் வான் யார்ஸ்வெல்ட், ராபின் பீட்டர்சன் இருவரும் வெளியே.

முதல் ஓவரை வீசவந்தவர் பதான். காலில் டாக்சி ஏறியதன் விளைவோ என்னவோ ஸ்மித் கால்களை நகர்த்தாமல் ஆஃப் ஸ்டம்பிற்கு வெகு வெளியே சென்ற பந்தைத் துரத்திச் சென்று தட்டி தினேஷ் கார்த்திக் கையில் இரண்டாவது பந்திலேயே கேட்சைக் கொடுத்தார். ஸ்மித் 0, தென் ஆப்பிரிக்கா 0/1. அடுத்து உள்ளே வந்தவர் ஜாக் ருடால்ப். மற்றுமொரு இடதுகை ஆட்டக்காரர். முதல் டெஸ்ட் ஆட்ட நாயகர் ஆண்டிரூ ஹாலுடன் சேர்ந்து ரன்களைச் சேர்த்தார். ஹாலும், கான் வீசிய ஆஃப் ஸ்டம்பிற்கு வெகு வெகு வெளியே சென்ற பந்தைத் துரத்தி கார்த்திக்கிற்கு இரண்டாவது கேட்சைக் கொடுத்தார். ஹால் 7, தென் ஆப்பிரிக்கா 21/2.

முதல் அரை மணிநேரத்திற்குள்ளாக இரண்டு தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகளைப் பெற்ற இந்தியா தொடர்ச்சியாக நன்றாகவே பந்து வீசியது. கான், பதான் வீச்சை ஜாக் கால்லிஸ், ஜாக் ருடால்ப் இருவருமே தட்டுத்தடுமாறியே எதிர்கொண்டனர். ஆனால் சிறிது சிறிதாக அவர்கள் கஷ்டமான நிலையிலிருந்து மீண்டு, உணவு இடைவேளைக்கு முன் வேறெந்த விக்கெட்டும் விழாமல் காத்தனர். கும்ப்ளே, ஹர்பஜன் இருவரும் நன்றாகப் பந்து வீசினர். கும்ப்ளே எப்பொழுதும் போலல்லாமல் ஸ்டம்பிற்கு நேராகவே வீசினார். ஹர்பஜன் உணவு இடைவேளைக்கு முன்னர் நான்கு அருமையான ஓவர்களை வீசினார். ஒரு விக்கெட்டும் எடுக்காதது அவரது துரதிர்ஷ்டம். ருடால்ப் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் தன் விக்கெட்டைக் காத்தார் என்று சொல்லவேண்டும். கால்லிஸ் அந்த அளவிற்குத் திண்டாடவில்லை. உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்கா 28 ஓவர்களில் 60/2 என்ற நிலையில் இருந்தது.

உணவு இடைவேளைக்குப் பின்னர் ஒரு புறத்திலிருந்து வேகப்பந்தும், மறுபுறம் ஸ்பின்னுமாக இருந்தது. ஆனால் கால்லிஸ், ருடால்ப் இருவருமே மிக அருமையாக, நிதானமாக விளையாடினர். எந்த அவசரத்தையும் காண்பிக்கவில்லை. ரிஸ்க் எதுவும் எடுக்காமலேயே ஓவருக்கு 2-3 ரன்கள் பெற்றனர். இருவரும் அரை சதத்தைத் தாண்டினர். ஆட்டம் வெகு சீக்கிரமாக இந்தியாவின் கையை விட்டுப் போய்க்கொண்டிருந்தது. கங்குலி பதானுக்கு பதில் கானைக் கொண்டுவந்தார். இதற்குள் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகத்தொடங்கியிருந்தது.

கான் ருடால்புக்கு வீசிய ஓர் ஓவரில் முதல் பந்து பளபள பக்கம் வெளியே இருந்ததால் ரிவர்ஸ் ஸ்விங் ஆகி ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்து இன்னமும் வெளியே போனது. ஆனால் அடுத்த பந்து ஸ்விங் ஆகாமல் குத்திய அதே திசையில் உள்ளெ வந்து பேட், கால் காப்பிற்கான இடைவெளியில் புகுந்து ஆஃப் ஸ்ட்ம்பை எகிற வைத்தது. அற்புதமான பந்து இது. ருடால்ப் 61 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். தென் ஆப்பிரிக்கா 130/3. தொடர்ந்து முதல் டெஸ்டில் விளையாடும் ஹாஷிம் ஆம்லா வந்தார். மனிதர் தலையை மொட்டையடித்து, கறுகறுவென பெரிய முஸ்லிம் தாடி வைத்துள்ளார். அழகாக விளையாடினார். இவர் நிற்கும் ஸ்டைல் சற்று மோசமானது. ஆனால் பேட்டைக் கொண்டுவந்து பந்துடன் சந்திக்கும்போது கால்கள் சரியாக மாறிவிடுகின்றன. இப்படியே தேநீர் இடைவேளை வந்தது. தென் ஆப்பிரிக்கா 152/3 என்ற நிலையில் இருந்தனர்.

தேநீர் இடைவேளைக்குப் பின் கும்ப்ளே, கான் இருவரும் தொடர்ந்து வீசினர். ஹர்பஜன், கும்ப்ளேக்கு பதில் வந்தார். கானுக்கு பதில் பதான் மீண்டும் வந்தார். திரும்பி வந்த முதல் ஓவரிலேயே லெக் ஸ்டம்பில் பந்தைக் குத்தி அதை ஆஃப் ஸ்டம்பிற்கு எடுத்து வந்து ஆம்லாவை பவுல்ட் ஆக்கினார் பதான். ஆம்லா 24, தென் ஆப்பிரிக்கா 176/4. அடுத்து தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரும் அறுவை மன்னர் போடா டிப்பெனார் விளையாட வந்தார். கால்லிஸுடன் சேர்ந்து ஆட்டத்தை அழித்தே விடுவார் என நினைத்தோம். ஆனால் மிகக் குறுகிய நேரத்திலேயே பதானின் மற்றுமொரு பந்தில் - இதுவும் லெக்/நடு ஸ்டம்பில் விழுந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே போனது, டிப்பெனார் மட்டையில் விளிம்பில் பட்டு கார்த்திகிடம் கேட்சானது. டிப்பெனார் 1, தென் ஆப்பிரிக்கா 182/5.

இந்த நேரத்தில் இந்தியாவின் கை நிச்சயமாக மேலோங்கியிருந்தது. கால்லிஸ் 74 ரன்களுடன், புதிதாக உள்ளே வந்த ஜாண்டர் டி ப்ருயினுடன் சேர்ந்து அணியைக் காக்க வேண்டிய நிலைமை. அதை அருமையாகச் செய்தார். தடாலடி ஏதும் கிடையாது. அவ்வப்போது இங்கும் அங்குமாக ஒரு நான்கு. மற்றபடி ஒன்று, இரண்டு. ஸ்பின் பந்துவீச்சாளர்கள் கும்ப்ளே, ஹர்பஜன் இருவருமே மிக நன்றாகத்தான் வீசினர். ஆனால் விக்கெட் ஏதும் விழவில்லை. பதான், கான் இருவருமாவது அவ்வப்போது விக்கெட்டுகளைப் பெற்றனர். 81 ஓவர்கள் தாண்டியதும், இந்தியா புதுப்பந்தை எடுத்து கான் கையில் கொடுத்தது. அப்பொழுது கால்லிஸ் 98இல் இருந்தார். அடுத்த பதான் ஓவரில் கவர் திசையில் அடித்த நான்கின் மூலம் கால்லிஸ் இந்தியாவிற்கெதிரான தன் முதல் சதத்தை அடித்தார். ஆனால் அடுத்த ஓவர் - கான் வீசியது - நடந்துகொண்டிருக்கும்போதே சூரிய அஸ்தமனம் நெருங்க, வெளிச்சம் குறைய ஆட்டம் நிறுத்தப்பட்டது. முதல் நாள் இறுதியில் கால்லிஸ் 211 பந்துகளில் 103 ரன்கள், 11x4.

கால்லிஸ் மிக அருமையாக விளையாடினார். திராவிட் விளையாடுவதைப் போன்று. ருடால்ப் - கால்லிஸ் ஜோடி சேர்த்த ரன்கள் மிகவும் முக்கியமானவை. இந்தியாவிற்கு பதான், கான் பந்துவீச்சு நன்றாக இருந்தது. பழைய பந்து, புதுப்பந்து இரண்டையும் வைத்து இருவரும் மிக அருமையாகவே வீசினர். சுழற்பந்து வீச்சாளர்களும் நன்றாகத்தான் வீசினர். சில நாள்கள் நன்றாக வீசியும் விக்கெட் கிடைக்காமல் போய்விடுவதுண்டு. அப்படித்தான் இன்றும். ஹர்பஜன் பந்தில் டி ப்ருயின் மட்டையில் பட்டு பின்னால் கேட்ச் போனது. மீண்டும் மீண்டும் பார்த்ததில் அது கேட்ச் போலத்தான் தோன்றியது. ஆனால் நடுவர் சைமன் டாஃபல் அவுட் கொடுக்கவில்லை.

நாளை இந்தியப் பந்துவீச்சாளர்கள் கிடுகிடுவென கடைசி ஐந்து விக்கெட்டுகளையும் எடுத்து விடுவார்கள் என்று தோன்றுகிறது. தென் ஆப்பிரிக்கா 350ஐத் தொடாது, 300க்கருகில் முடிந்துவிடும் என்று தோன்றுகிறது. கால்லிஸ் போல நிலைத்து நின்று ஆடுவதற்கு யாருமில்லை.

H4 விசாவில் அமெரிக்கா போகும் இந்தியப்பெண்கள் கதி

இன்றைய 'தி ஹிந்து' துணையிதழில் H4 விசாவில் அமெரிக்கா போய் தன் கணவன், அவன் குடும்பத்தாரிடம் மாட்டும் பெண்களின் நிலை பற்றிய கட்டுரை ஒன்று வந்துள்ளது.

இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது, ஒரு வருடத்திற்கு முன்னர் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்தின் மகன், மருமகள் தொடர்பாக நடந்த வழக்கு ஞாபகத்துக்கு வருகிறது.

சேதுபதி ராமலிங்கத்தின் மகன் ராஜவேல் சேதுபதி என்பவர் அமெரிக்காவில் வேலை செய்கிறார். (H1B விசாவாக இருக்கும் என நினைக்கிறேன்.) இவர் மணமுடித்த சங்கீதா என்னும் பெண்ணை தன் பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு ராஜவேல் அமெரிக்கா சென்றுவிட்டார். வரதட்சணை தராவிட்டால் மகனோடு சேர விடமாட்டோம் என்று துணைவேந்தர் குடும்பம் சங்கீதாவை அச்சுறுத்தியதாகவும், முறைதவறி நடந்துகொள்ள முயற்சி செய்ததாகவும் சங்கீதா வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம் முன்னர் வந்தது.

அவரது அறிவுரையின்படி ராஜவேல் சங்கீதாவை அமெரிக்காவுக்கு அழைத்துக்கொண்டு செல்ல முடிவு செய்தார். ஆனால் விசா கிடைப்பதில் தாமதமானதாகச் சொல்லப்படுகிறது. [இது எனக்கு சற்றே குழப்பம் தருவதாக உள்ளது. H1B விசா வைத்துள்ளவர்களுக்கு மனைவியை/கணவனை அழைத்துவரக் கிடைக்கும் H4 விசாவில் எந்தத் தாமதமும் ஆவதில்லை அல்லவா? பின் ஏன் வருடக்கணக்காக ராஜவேல் இந்த விசா கிடைப்பதைத் தள்ளி வைக்கப் பார்க்கிறார் என்று புரியவில்லை.]

இந்நிலையில் சங்கீதா தனியாக பெண்கள் விடுதி ஒன்றில் தங்கவும், அதற்கான செலவுகளை ராஜவேல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கற்பகவிநாயகம் உத்தரவிட்டிருந்தார்.

சங்கீதாவுக்கு விசா கிடைப்பதில் ஆன தாமதம் தொடர்பாக நீதிபதி ராஜவேலை அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து நீதிமன்றத்தில் ஆஜராகச் சொன்னாராம். ஆனால் இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தடை செய்தது. அதற்குப்பின்னர் இந்த வழக்கில் என்ன ஆனது என்று தெரியவில்லை.

இப்படியே சங்கீதா அமெரிக்கா சென்றாலும், ஷிவாலி ஷா எழுதியுள்ள கட்டுரையைப் படித்தால் சங்கீதாவுக்கு அங்கே நிம்மதி கிடைக்குமா என்பது தெரியவில்லை. பழிவாங்கும் நோக்குள்ள கணவனிடம் மாட்டினால் அமெரிக்காவில் சரியான சட்டபூர்வமான குடிபுகல் அனுமதியில்லாத நிலையில் வீட்டோடு அடைபட்ட அடிமையாக மட்டும்தான் இருக்க முடியும். இதற்கு பதில் இந்தியாவிலேயே இருந்துவிடுதல் நலம். விவாகரத்து பெறுவதன்மூலம், ஜீவனாம்சம் பெறவாவது வழியுண்டு.

தீர விசாரிக்காமல், அமெரிக்க மாப்பிள்ளை கிடைக்கிறான் என்று ஒருமாத காலத்தில் நடக்கும் அவசர அடித் திருமணங்களில் இந்தியப் பெண்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது. இந்த விகாரங்கள் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த, நன்கு படித்த, நல்ல வேலையில் உள்ள இளைஞர்களால் செய்யப்படுகிறது என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது.

இந்த பிரச்னைகளுக்கு மற்றுமொரு பக்கமும் உள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் டாக்டர் ஜெயகிருஷ்ண அம்பாடி, அவரது அண்ணன், பெற்றோர் ஆகியோர் மீது வரதட்சணை வழக்கு ஒன்று நடைபெற்றது. இது அந்த நேரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு. ஜெயகிருஷ்ணா மிகக்குறைந்த வயதிலேயே - 17 வயது - அமெரிக்காவில் MD படிப்பை நிறைவு செய்தவர். இவர் இந்தியா வந்து மணம் செய்துகொண்ட அர்ச்சனா என்னும் பெண், இந்தியா வந்து அம்பாடி குடும்பத்தினர் மீது வரதட்சணை வழக்குத் தொடுத்தார். அந்த நேரத்தில் அமெரிக்கக் குடிமகன்களாகிய இந்தக் குடும்பத்தினர் இந்தியா வந்திருந்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டனர். பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 3 1/2 வருடங்கள் நடந்த வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பொய்யான வழக்கு என்று தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அர்ச்சனாவின் தந்தை USD 500,000 கொடுத்தால் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக தொலைபேசியில் பேசியது ஆதாரமாகக் காட்டப்பட்டது. இதுபற்றிய முழு விவரங்களும் இங்கே உள்ளது.

இம்மாதிரி ஓரிரண்டு விஷயங்களில் பெண்கள் பக்கம் தவறிருந்தாலும் பெரும்பாலும் பாதிப்புக்கு உள்ளாவது பெண்கள்தான்.

Saturday, November 27, 2004

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக...

சென்னை CASஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

* இனி போகோ (POGO) சானல் மாதம் ரூ. 10 ஆகும். செட் டாப் பாக்ஸ் இல்லாத மானிடர்களுக்கு சானல் கிடைக்காது.

* The History Channel - இப்பொழுதைக்கு இலவசமாம். ஆனால் சுமங்கலி கேபிள் விஷனில் (அதாங்க, நம்ம தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரோட குடும்ப நிறுவனம்) ஒரு குறிப்பிட்ட பேக்கேஜ் வாங்குபவர்களுக்குத்தான் இந்த சானல் கிடைக்கும்.

* சுமங்கலி கேபிள் விஷன் வழியாக செட் டாப் பாக்ஸ் வைத்திருக்கும் மாந்தர்களுக்கு ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல் பிளஸ் இரண்டும் கிடைக்காது. தேடிப்பார்த்து அலுத்துப்போகலாம். ஆனால் அவர்களிடமிருந்தே செட் டாப் பாக்ஸ் இல்லாமல் கேபிள் இணைப்பு பெறுபவர்களுக்கு இந்த சானல்கள் கிடைக்கின்றன.

* விண் டிவி, தமிழா டிவி போன்றவையும் சுமங்கலி கேபிள் விஷனில் கண்ணுக்குத் தெரிவதில்லை. எங்கோ சமீபத்தில் படித்தது: செயற்கைக்கோள் ஒளிபரப்புக்கு காசு கட்ட முடியாததால் தாற்காலிகமாக இவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று.

* டிஸ்னி சானல்கள் இரண்டு - அதில் ஒன்று சிறுவர்களுக்கு (டூன் டிஸ்னி) - சீக்கிரமே வரப்போகிறது. ஸ்டார் வழியாக வரும் இவை இலவசமாகக் கிடைக்காது.

* ஸ்ப்லாஷ் என்று பெண்டாமீடியா நடத்தி வந்த சானல் சுமங்கலி கேபிள் விஷனில் காணக்கிடைக்கவில்லை. இந்த சானல் மிக மோசமான முறையில் நிர்வகிக்கப்பட்டது என்று கேள்விப்படுகிறேன். இழுத்து மூடிவிட்டார்களா அல்லது சு.கே.வி யால் ஒதுக்கப்பட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. [பெண்டாமீடியாவின் The Legend of Buddha, அனிமேஷன் படங்களுக்கான ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனைப் பட்டியலில் உள்ளது என்ற விஷயம் தெரியுமல்லவா?]

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியத்தில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கங்குலியின் குற்றமும், தண்டனையும், தொடர்ந்த மேல்முறையீடும், தண்டனையிலிருந்து தப்பித்தலும் பற்றி.

Friday, November 26, 2004

அம்பானி குடும்பத் தகராறு

கடந்த சில நாள்களாக ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரரான அம்பானி குடும்ப சகோதரர்கள் முகேஷ், அனில் ஆகியோருக்கிடையே உள்ள பிரச்னை வெளியே வந்துள்ளது.

இந்தியாவில் குடும்பம் சார்ந்த நிறுவனங்களில் இதுபோன்ற பிரச்னை எழுவது இயல்பே. ஆனால் ரிலையன்ஸ் போன்ற மாபெரும் நிறுவனத்தில் இந்த பிரச்னை எழுந்துள்ளது முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குடும்பப் பின்னணியில் கட்டப்பட்டுள்ள நிறுவனங்கள்தான் அதிகம். பன்னாட்டு நிறுவனங்களின் இந்தியக் கிளைகள் தவிர்த்து, இந்தியாவின் பெரிய நிறுவனங்கள் அனைத்துமே குடும்பங்களின் வழி வழியாக வருவதுதான். டாடா, பிர்லா என்று சொல்வோமே... இதில் பிர்லா என்பது பல துண்டுகளாக உடைந்த சில பல பிர்லாக்களின் நிறுவனங்கள். இதில்தான் கடைசியாக இறந்துபோன பிரியம்வதா பிர்லாவின் உயில் பற்றிய வழக்கு இன்னமும் தொடர்கிறது. இந்த பிர்லா குடும்ப நிறுவனங்களில் உருப்படியானது என்று பார்த்தால் அது ஏ.வி.பிர்லா நிறுவனங்களே. குமார் மங்கலம் பிர்லா தலைமையில் இயங்கும் குழுமம் இது. டாடா நிறுவனங்கள் துண்டாகிப் போகாமல் ஒரு குடையின் கீழ்தான் இன்னமும் உள்ளன. அதற்கு இந்த நிறுவனங்கள் முழுக்க முழுக்க திறமையான நிர்வாகிகளால் நடத்தப்படுவதும், குடும்பத்தின் ஆசாமிகள் அதிகமாக உள்ளே மூக்கை நுழைக்காது இருப்பதும் காரணமாகும். காந்தியின் நெருங்கிய நண்பர் ஜம்னாலால் பஜாஜ் தொடங்கிய பஜாஜ் நிறுவனம் இன்று அவரது பையன்கள், பேரன்கள் இடையேயான சண்டையில் துண்டுகளாக வெட்டப்படப்போகின்றன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நம்மூர் காவி ஆடிட்டர் குருமூர்த்தி அந்த பிரச்னையில் கட்டப்பஞ்சாயத்து செய்து பெயர் பெற்றார் (ஆனால் பிரச்னை என்னவோ இன்னமும் தீரவில்லை.) ஆதி கோத்ரேஜ் தன் மகள்கள் இருவரையும் அவசர அவசரமாக நிறுவனத்துக்குள் நுழைக்கப் பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.

பார்தி டெலிசர்வீசஸ் சுனில் பார்தி மிட்டலின் குடும்ப நிறுவனம் போலத்தான் தொடங்கியது. மேற்பதவிகளில் இன்னமும் இரண்டு மிட்டல்களைப் பார்க்கலாம். ஆனால் இப்பொழுது சிங்டெல், வார்பர்க்-பிங்கஸ் போன்ற நிறுவனங்கள் செய்துள்ள முதலீட்டினால் வருங்காலத்தில் புரொபஷனல் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

தகவல் தொழில்நுட்பம், த.தொவினால் வாய்த்த சேவைகள் ஆகிய துறைகளில் குடும்ப நபர்களின் தொல்லை இல்லை. விப்ரோவின் பங்குகள் கிட்டத்தட்ட 80% அசீம் பிரேம்ஜியிடம் இருந்தும், நிறுவனம் முழுதும் வெளியிலிருந்து வந்த நிர்வாகிகள் கையில்தான் உள்ளது. பிரேம்ஜியின் மகன், மகள், மனைவி, மருமகன்கள் என்று கிடையாது. இன்ஃபோசிஸ், சத்யம் கம்ப்யூட்டர்ஸ், டி.சி.எஸ், ஆயிரக்கணக்கான BPO நிறுவனங்கள் அனைத்திலும் நிர்வாகம் முக்கியப் பங்குதாரரின் குடும்பத்தினரிடம் கிடையாது. பழைய நிறுவனங்கள் என்று எடுத்துக்கொண்டால் எல்&டி மட்டும்தான் இதுபோன்று நடக்கும் நிறுவனம்.

சரி, அம்பானி விஷயத்துக்கு வருவோம். ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் என்பது பெட்ரோகெமிகல், எண்ணெய் சுத்திகரிப்பு, எண்ணெய், எரிவாயு தேடுதல், தோண்டுதல், பெட்ரோல் பம்புகளை நாடெங்கிலும் நிறுவுவது ஆகிய வேலைகளைச் செய்யும் மிகப்பெரும் நிறுவனம். ரிலையன்ஸ் எனர்ஜி என்பது மின்சாரம் உற்பத்தி, விநியோகம் ஆகிய துறைகளில் உள்ளது. ரிலையன்ஸ் இன்ஃபோகாம் என்னும் தொலைதொடர்பு நிறுவனம் மொபைல் செல்பேசிகள், பிராட்பேண்ட் இணையம் போன்ற சேவைகள் தருவது. ரிலையன்ஸ் கேபிடல் என்னும் நிறுவனம் பணத்தைப் பணமாக்கும் முதலீடு, பரஸ்பர நிதி ஆகிய வேலைகளைச் செய்வது. ரிலையன்ஸ் சில மாதங்களுக்கு முன்னர்தாம் ஐ.பி.சி.எல் என்னும் அரசின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியிருந்தது.

திருபாய் அம்பானி உயில் எழுதிவைக்காது இறந்துபோனார். அவர் இறந்தவுடனேயே அவரது மகன்களுக்குள் ஏதேனும் பிரச்னை வருமோ என்று எதிர்பார்த்தனர். ஆனால் தொடக்கத்தில் அப்படி ஏதும் இல்லை. மூத்தவர் முகேஷ் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தையும், ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனத்தையும் நேரடியாகக் கவனித்துக்கொள்ள, இளையவர் அனில் ரிலையன்ஸ் எனர்ஜியில் கவனத்தைச் செலுத்தினார்.

ஆனால் சமீபகாலங்களில் முகேஷ் தான்தோன்றித்தனமாக ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனத்தை நடத்துவது பற்றியும், ரிலையன்ஸ் எனர்ஜிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் மூலம் எரிவாயு வழங்குவதில் ஏற்படப்போகும் காலதாமதம் பற்றியும், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் போர்டில் அனிலுக்குத் தெரியாமல் நுழைக்கப்படும் மாற்றங்கள் பற்றியும் கண்டு கோபமான அனில், முகேஷுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து சி.என்.பி.சி தொலைக்காட்சி சானலில் ஒரு பேட்டியில் முகேஷ் தனக்கும், தன் தம்பிக்கும் இடையில் சில பிரச்னைகள் இருப்பதாகவும், ஆனால் அதனால் நிறுவனங்களில் எந்த பாதிப்பும் இருக்கப் போவதில்லை என்றும் சொன்னார். சொல்லிவிட்டு அமெரிக்காவிற்கு மூன்றுநாள் விடுமுறைக்குப் போய்விட்டார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளில் விலைகள் இறங்கத் தொடங்கின.

இந்த வாரம் திங்களன்று முகேஷ், தான் சொன்னதை தொலைக்காட்சி சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று எல்லாப் பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுத்தார். பங்குச்சந்தையில் பங்குகள் விலை முன்னளவுக்கு வந்தது. ஆனால் அடுத்த நாளே ரிலையன்ஸ் ஊழியர்கள் அனைவருக்கும் அனுப்பிய மின்னஞ்சலில் தான்தான் தலைவர் என்று திட்டவட்டமாக முகேஷ் அறிவிக்க, அனிலும் வாய் பேசாது இருக்க, அனைவருக்கும் இந்த பிரச்னை இப்பொழுதைக்குத் தீராது என்று தெரியவந்துவிட்டது. பங்குகள் மீண்டும் இறக்கம்.

அனில், முகேஷ் இருவருக்கும் இரண்டு சகோதரிகள். தாயார் கோகிலாபென் இந்த பிரச்னையில் தலையிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளாராம். சென்ற வார இறுதியில் குடும்பத்திற்குள்ளாகப் பேசி பிரச்னை தீர்ந்துவிடும் என்று சிலர் எதிர்பார்த்தனர். நடக்கவில்லை.

இதற்குள் நேற்று அனில் அம்பானி சேர்மனாக இருக்கும் ரிலையன்ஸ் எனர்ஜியில் இருந்து ஆறு டைரக்டர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் டைரக்டர் ஒருவரும் ராஜினாமா செய்துள்ளார். அனில் அம்பானி தன் கைகள் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பார் என்று சொல்லப்படுகிறது.

உயில் எழுதாமல் திருபாய் இறந்தது நிஜமென்றால் அவர் பெயரில் நேரடியாக இருந்த சொத்துக்கள் ஐந்தாகப் பிரிக்கப்படும்: மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். முகேஷ், அனில் பெயரில் தனியாக இருக்கும் பங்குகள் அவரவர்களுக்கே. இப்பொழுதைக்கு இந்த வழக்கு தீரப்போவதில்லை என்று தோன்றுகிறது.

சங்கராச்சாரியார் வழக்கு கூட இதற்கு முன்னால் முடிந்துவிடும்.