Tuesday, December 31, 2013

2013-ல் கிண்டிலில் நான் வாங்கிய புத்தகங்கள்

இவையெல்லாம் கிண்டில் எடிஷன்களாக 2013-ல் வாங்கிய புத்தகங்கள். இவற்றில் 75% படித்துவிட்டேன். மீதி படிக்கவேண்டியவை. மேலும் இவைதவிர இலவசமாக கிண்டிலில் கிடைத்த சுமார் 20 புத்தகங்களையும் “வாங்கி” வைத்துள்ளேன். பெரும்பாலும் படிக்கப்போவதில்லை என்றுதான் நினைக்கிறேன்.
 1. Master of Deceit, Marc Aronson
 2. J. Edgar Hoover: The Man and the Secrets, Curt Gentry
 3. A Universe from Nothing: Why There Is Something Rather than Nothing, Lawrence Krauss, Richard Dawkins
 4. Muslims in Indian Cities, Christophe Jaffrelot, Laurent Gayer, Laurent Jaffrelot
 5. 24 Akbar Road: A Short History of the People behind the Fall and Rise of the Congress, Rasheed Kidwai
 6. Nikola Tesla: Imagination and the Man That Invented the 20th Century, Sean Patrick
 7. Tippi - My Book of Africa, Tippi Degré, Sylvie Robert, Alain Degré
 8. David and Goliath: Underdogs, Misfits and the Art of Battling Giants, Malcolm Gladwell
 9. The Siege: The Attack on the Taj Mumbai, Cathy Scott-Clark, Adrian Levy
 10. Reimagining India: Unlocking the Potential of Asia's Next Superpower, McKinsey & Company
 11. Inferno, Dan Brown
 12. Mapping The Mind, Rita Carter
 13. Force of Nature: The Life of Linus Pauling, Thomas Hager
 14. Jules Verne Collection, 33 Works, Jules Verne, Doma Publishing House
 15. The New Digital Age: Reshaping the Future of People, Nations and Business, Jared Cohen, Eric Schmidt
 16. Gods, Kings & Slaves: The Siege of Madurai, Venketesh R.
 17. The Greek Myths: Stories of the Greek Gods and Heroes Vividly Retold, Robin Waterfield
 18. Gandhi Before India, Ramachandra Guha
 19. The Theory of Almost Everything: The Standard Model, the Unsung Triumph of Modern Physics, Robert Oerter
 20. Why Nations Fail: The Origins of Power, Prosperity and Poverty, Daron Acemoglu, James A. Robinson
 21. Erwin Schrodinger and the Quantum Revolution, John Gribbin
 22. In Search Of Schrodinger's Cat: Updated Edition, John Gribbin
 23. Breakout Nations: In Pursuit of the Next Economic Miracles, Ruchir Sharma
 24. An Uncertain Glory: India and its Contradictions, Jean Dreze, Amartya Sen
 25. The Alchemy of Air: A Jewish Genius, a Doomed Tycoon, and the Scientific Discovery That Fed the World but Fueled the Rise of Hitler, Thomas Hager
 26. Narendra Modi : The Man. The Times, Nilanjan Mukhopadhyay
 27. Land of seven rivers: History of India's Geography, Sanjeev Sanyal
 28. The Oath of The Vayuputras, Amish Tripathi
 29. Beyond the Hole in the Wall: Discover the Power of Self-Organized Learning, Sugata Mitra
 30. The Kite Runner, Khaled Hosseini
 31. A Thousand Splendid Suns, Khaled Hosseini
 32. Theodore Roosevelt; an Intimate Biography, William Roscoe Thayer
இவைதவிர, அச்சில் சில ஆங்கிலப் புத்தகங்களை வாங்கியுள்ளேன். அவை குறித்து அடுத்து ஒரு பதிவு.

அச்சுப் புத்தகங்களாக நான் காசு கொடுத்து வாங்கியவை இவை. தவிர, இலவசமாக, பரிசாக என்று கிடைத்தவை பல. கீழே உள்ளவற்றில் கடைசி இரண்டு புத்தகங்களைத் தவிர மீதமெல்லாவற்றையும் வாங்கிய உடனேயே படித்துவிட்டேன். நேருவின் புத்தகம், reference-க்காக. பொருளாதாரப் புத்தகம் இனிதான் படிக்கவேண்டும்.
 1. The Girl with the Dragon Tattoo, Stieg Larsson
 2. The Girl who played with Fire, Stieg Larsson
 3. The Girl Who Kicked the Hornest' Nest, Stieg Larsson
 4. The Cobra, Frederick Forsyth
 5. The Kill List, Frederick Forsyth
 6. Bankerupt, Ravi Subramanian
 7. The Namo Story A Political Life, Kingshuk Nag
 8. The Discovery of India, Jawaharlal Nehru
 9. IIM Ahmedabad Business Books: Day to Day Economics, Satish Y. Deodhar

2013-ல் நான் பார்த்த திரைப்படங்கள்

இந்த ஆண்டு நான் ஒன்பது சினிமாப் படங்களைப் பார்த்திருக்கிறேன். இந்தப் பதிவை எழுதுவதற்காக உட்கார்ந்தபோது இரண்டு மூன்று படங்கள்தான் ஞாபகத்தில் வந்தன. பிறகு டிக்கெட் (பிடிஎஃப்) கோப்புகளைத் தேடிப் பார்த்தபோதுதான் இத்தனை படங்களைப் பார்த்திருப்பது தெரியவந்தது.

Chennai Express (Hindi) (செப்டெம்பர் 2013)
சிங்கம் 2 (ஜூலை 2013)
சூது கவ்வும் (மே 2013)
எதிர் நீச்சல் (மே 2013)
சேட்டை (ஏப்ரல் 2013)
விஷ்வரூபம் (மார்ச் 2013)
Zero Dark Thirty (பிப்ரவரி 2013)
கண்ணா லட்டு தின்ன ஆசையா (பிப்ரவரி 2013)
கடல் (பிப்ரவரி 2013)

அனைத்துமே சத்யம் அல்லது எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பார்த்தவை.

Tuesday, December 24, 2013

சாதாரணனின் அசாதாரண சாதனை

அர்விந்த் கெஜ்ரிவால் தில்லியின் முதல்வர் ஆவது குறித்து எனக்குப் பெருத்த மகிழ்ச்சி. கட்சி ஆரம்பித்து ஒராண்டிலேயே ஒரு மாநிலத்தின் தேர்தலில் நின்று, இரு முனைப் போட்டியை உடைத்து, மூன்றாவது அணியை மாற்றாக முன்வைத்து, இரண்டாவது அதிக எண்ணிக்கை கொண்ட தொகுதிகளைக் கைப்பற்றி, மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீக்ஷித்தை வீழ்த்தியது என்பது சந்தேகமே இல்லாமல் மாபெரும் சாதனை.

இதில் பாஜகவுக்குப் பெரிய வருத்தம் இருப்பது நியாயமே. அர்விந்த் கெஜ்ரிவால் இல்லை என்றால் பாஜக 45-50 தொகுதிகளை அள்ளிக்கொண்டு போயிருக்கும். பாஜக தொண்டர்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருவது சகஜமே. ஆனால் அதற்காக அவர்கள் ஆம் ஆத்மி கட்சியைக் கரித்துக்கொட்டுவது சிரிப்பை வரவழைக்கிறது. காங்கிரஸின் ஊழலை எதிர்த்தவர் இப்போது காங்கிரஸின் ஆதரவை ஏற்பது குற்றம் என்கிறார்கள். எந்தக் கட்சிக்கும் ஆதரவு தரமாட்டோம், எந்தக் கட்சியிடமிருந்தும் ஆதரவு பெறமாட்டோம் என்று கெஜ்ரிவால் சொன்ன ட்வீட்டையும் வீடியோ ஆதாரங்களையும் போட்டு, சொன்ன சொல்லிலிருந்து வழுவிய துரோகி என்கிறார்கள்.

உண்மையில் கெஜ்ரிவால் வாயைப் பொத்திக்கொண்டு இருந்திருக்கவேண்டும். ‘என் பிள்ளைகளின்மீது சத்தியம்’ என்றெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்து பேசியிருந்திருக்கக்கூடாது. ஆனால் புதிதாகக் கட்சி ஆரம்பித்திருக்கும் ஒருவரின் அதீத ஆர்வக்கோளாறு என்று இதனை மன்னித்துவிடலாம்.

கட்சி அமைப்பது, ஆட்சியைப் பிடிப்பது இரண்டுமே, அரசியல் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கே. சிறுபான்மை எண்ணிக்கையை வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்தாலும் பல மாற்றங்களைக் கொண்டுவரலாம். அந்த மாற்றங்கள் நீடித்து நிலைப்பவையாக இருக்கலாம். உதாரணமாக லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டுவருவதன்மூலம் (கெஜ்ரிவால் ‘அண்ணாவின் ஜன் லோக்பால்’ என்றே சொல்லிவருகிறார்) நீடித்த ஒரு மாற்றத்தை தில்லியில் நிறுவலாம். தனக்கும் பிற அமைச்சர்களுக்கும் பந்தோபஸ்து, பந்தா ஆகியவற்றை விலக்குவதன்மூலம் காங்கிரஸ், பாஜக அரசியல்வாதிகளின் வெறியாட்டத்துக்கு ஒரு முடிவு கட்டலாம்; குறைந்தபட்சம் அவர்களில் ஒரு சிலரையேனும் வெட்கப்படச் செய்யலாம். (பாஜகவின் டாக்டர் ஹர்ஷவர்தன் எளிமையானவராகத்தான் தோற்றமளிக்கிறார்.) ஊழல் எளிதில் புகுந்துவிடாமல் இருக்க சில நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவரலாம். மின்சாரமோ, தண்ணீரோ, மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து அவற்றைத் தர முயற்சி செய்யலாம். கடந்த 15 ஆண்டுகளில் ஷீலா தீக்ஷித் இவை அனைத்திலும் தோற்றுள்ளார் என்பது மக்களின் கோபத்திலிருந்து தெரிகிறது.

ஆனால் தில்லியின் பிரச்னைகள் இவற்றுக்கெல்லாம் மேலானவை. அங்கே இந்தியாவெங்கிலிருந்து ஏழை மக்கள் சாரி சாரியாகப் படையெடுத்துச் சென்று தங்கள் வாழ்க்கையைத் தொடர நினைக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வேலை கொடுக்கும் அளவுக்கு தொழில் நிறுவனங்கள் அங்கில்லை. தில்லியின் அண்மைய மாநிலங்கள் உத்தரப் பிரதேசமும் ஹரியானாவும் விளை நிலங்களையெல்லாம் கூறு கட்டி வசிப்பிடங்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. வேலையில்லா, திறனில்லா, படிப்பில்லா இளைஞர்கள் தெருவில் உலா வருகிறார்கள். பெண்களைக் கொலைவெறியுடன் அணுகி அழிக்கிறார்கள். இதனை வெறும் சட்டம் ஒழுங்கு மட்டும் கொண்டு அடக்கிவிட முடியாது. தில்லியின் ஏற்றத்தாழ்வு அளவுக்கு வேறு எந்த நகரிலும் இருக்காது என்று நினைக்கிறேன். எண்ணற்ற சேரிகள் இருக்கும் அதே நகரில்தான் ஏக்கர் கணக்கிலான நிலத்தை வளைத்து தில்லியில் நடுவில் பங்களாக்களும் உள்ளன. இன்றைய இந்திய சொத்துரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இந்த நிலங்களையெல்லாம் கைப்பற்றி அனைத்து மக்களும் வாழக்கூடியதற்கான இருப்பிடங்களை எளிதில் கட்டிவிட முடியாது. ஆனால் எங்கோ ஆரம்பிக்கவேண்டியிருக்கும்.

அடுத்து தில்லியின் ஸ்டேடஸ். தில்லி ஒரு யூனியன் பிரதேசமாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஓரிடமாக உள்ளது. தில்லியின் காவல்துறை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. அதனைத் தன் கையில் எடுத்துக்கொள்ளாமல் தில்லி அரசால் சட்டம் ஒழுங்கைச் சரியாகக் காக்க முடியாது. இது மாறவேண்டும் என்றால் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபடவேண்டும். தில்லி யூனியன் பிரதேசத்தை முழுமையான மாநிலமாக மாற்றினால் என்னென்ன சிக்கல்கள், என்னென்ன நன்மைகள் என்பது குறித்து நான் யோசிக்கவில்லை. அதுகுறித்து யோசிக்கத் தேவையான அடிப்படைத் தரவுகள்கூட என்னிடம் கிடையாது. ஆனால் அந்தத் தேவை குறித்து தேர்தல் அறிக்கைகளில் வரத்தொடங்கியிருப்பது முக்கியமானது என்று நினைக்கிறேன். இது ஒரு விவாதத்தை ஏற்படுத்தும்.

ஆம் ஆத்மி கட்சி எதற்கெடுத்தாலும் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவதைப் பலர் கேலி செய்கிறார்கள். இது புதுமாதிரியான அரசியல் என்பதால் இப்படித் தோன்றுகிறது. ஆனால் ஆம் ஆத்மியின் வழிமுறைகள் உண்மையிலேயே மிகவும் ஜனநாயகமானவை. தெருவில் போகிறவன் வருகிறவன் என்று பொதுமக்களை கேலி செய்வது அசிங்கமானது. அவர்கள் வாக்களித்துவிட்டுப் போய்விடவேண்டும், பிறகு முடிவுகளையெல்லாம் தாங்களே எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அரசியல்வாதிகள் கருதினால் அதற்கான மரண அடி இப்போது கொடுக்கப்பட்டுவிட்டது. ஆம் ஆத்மி தெருவெங்கும் சென்று மக்களை அரசியல்படுத்தும் முயற்சி வரவேற்கப்படவேண்டிய ஒன்று. பாஜகவும் காங்கிரஸும் இதனைக் கையில் எடுத்துக்கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆம் ஆத்மி கட்சியின் வழிமுறைகளைக் கேலி செய்தால் நாளை இவர்களே கேலிக்கு உள்ளாகவேண்டிவரும். மக்களுக்கான எந்தத் திட்டமுமே மக்களிடம் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படுவதுதான். அதனை ஆம் ஆத்மி கட்சி மாற்றினால் அக்கட்சிக்கு என் முழு ஆதரவும் உண்டு.

ஆம் ஆத்மி எல்லாம் தில்லியில் மட்டும்தான் சரிப்படும்; பிற மாநிலங்களில் உள்ளூர் விஷயங்கள் குறித்து அவர்கள் கருத்தென்ன; ஈழப் பிரச்னை குறித்து, கூடங்குளம் குறித்து அவர்கள் கருத்தென்ன என்று அடுத்து தமிழ்நாட்டு அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். நல்ல விஷயமெல்லாம் வெளியிலிருந்து உள்ளே வந்துவிடுவதா; அதுவும்கூட பெரியார், அண்ணா(துரை)யிடமிருந்து வந்தால்தான் ஏற்றுக்கொள்வோம் என்பது அவர்கள் கருத்துபோலும். ஆம் ஆத்மி கட்சியினர் தில்லியில் தில்லியின் உள்ளூர்ப் பிரச்னைகளைப் பற்றிப் பேசித்தான் வாக்குகளை சேகரித்தனர். தமிழகத்தில் தமிழகத்தின் உள்ளூர்ப் பிரச்னைகளைப் பற்றிப் பேசித்தான் வாக்கு சேகரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

அடுத்து மோதி vs கெஜ்ரிவால். அர்விந்த் கேஜ்ரிவாலை நான் ஆதரித்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் என் ஆதரவு நரேந்திர மோதிக்குத்தான். மத்தியில் கெஜ்ரிவாலால் எந்தப் பெரிய மாறுதலையும் ஒப்போதைக்குச் செய்துவிட முடியாது என்பது ஒன்று. இரண்டாவது, கெஜ்ரிவாலின் இடதுசாரிச் சாய்வு இந்தியப் பொருளாதாரத்துக்கு உகந்ததல்ல என்பது. ஆனால் மாநில அரசியலில் கெஜ்ரிவால் அல்லது அவர்போன்ற மக்கள் சார்ந்த, பெரும் குழாமை அரசியல்மயப்படுத்தும் இயக்கத்துக்கான தேவை மிக வலுவாக உள்ளது. ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்த தில்லி மக்களே, நாடாளுமன்றத் தேர்தலில் மோதிக்குத்தான் வாக்கு என்று சொல்லியிருப்பதாக exit polls சொல்கின்றன. கெஜ்ரிவால் வரவால் மோதிக்கு ஆதரவு குறைந்துவிட்டது, மோதி அலை என்று ஒன்று இல்லவே இல்லை, அல்லது அந்த பலூன் வெடித்துவிட்டது என்று நினைப்பவர்கள் கருத்து முழுமையாகத் தவறு என்று நான் நினைக்கிறேன்.

மோதிக்கான ஆதரவும் கெஜ்ரிவாலுக்கான ஆதரவும் கிட்டத்தட்ட ஒரே புள்ளியிலிருந்துதான் தோன்றுகின்றன: காங்கிரஸின் ஊழல் ஆட்சியும், பொறுப்பற்ற தன்மையும், மக்களை மதிக்காத அரசியலும். அதற்கான அடிப்படை அந்தக் கட்சியின் குடும்ப அரசியலில் உள்ளது. அதன் அலட்சியப் போக்கில் உள்ளது. தகுதியற்றவர்களாக இருந்தாலும் தங்கள் மகனும் மகளும்தான் கட்சியின் அடுத்த வாரிசுகள் என்று கட்சியினர் அனைவரையும் பேசவைப்பதில் உள்ளது.

கெஜ்ரிவால், மோதி இருவருமே அதற்கான மாற்றை முன்வைப்பவர்கள். மக்கள் சார்ந்த, கருத்தியல் சார்ந்த அரசியலை முன்வைப்பவர்கள். மோதி மக்களுக்குப் பல நல மாற்றங்களைச் செய்துகொடுத்திருக்கிறார். அவருடைய டிராக் ரெகார்ட் வலுவானது. குஜராத்துக்கு வெளியே இருப்போரும் மோதியால் தங்களுக்கும் நல்ல மாற்றத்தைக் கொடுக்கமுடியும் என்று நம்புகிறார்கள்.

கெஜ்ரிவால் ஒரு நம்பிக்கையை முன்வைக்கிறார். மக்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கமுடியும் என்றும் அவர்களிடம் ஆலோசனைகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கப்படும் என்றும்  சொல்வதன்மூலம் மக்கள் தங்கள்மீதான தன்னம்பிக்கையை, சுயமரியாதையை அதிகப்படுத்துக்கொள்ள அவர் ஒரு வாய்ப்பை அளிக்கிறார்.

அதனால்தான் இருவரும் மக்களிடையே நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். இருவருக்கும் அதனாலாயே மக்கள் மனங்களைப் பிடிக்கப் போட்டி இருக்கும். ஆனால் இருவரும் இப்போதைக்கு இயங்கும் தளங்கள் வேறு வேறு. இருவரும் நேரிடையாக மோதிக்கொள்ளப்போவதில்லை. அந்தமாதிரியான ஒரு மோதல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டுதான் பாஜக ஆதரவாளர்கள் தேவையின்றி கெஜ்ரிவாலைச் சிறுமைப்படுத்தும் ஒரு சிறுபிள்ளைத்தனமான விளையாட்டை ட்விட்டரில் செய்துவருகின்றனர்.

இப்போதைக்கு ஜனநாயகத்தை மதிக்கும் அனைவருமே கெஜ்ரிவாலின் முன்னேற்றத்தை, ஆம் ஆத்மியின் வளர்ச்சியை, அது மக்களிடம் தொடர்ந்து உரையாடுவதை ஆரவாரத்துடன் வரவேற்கவேண்டும். கெஜ்ரிவால் தில்லியை ஆட்சி செய்வதில், நல்ல நிர்வாகத்தைத் தருவதில் தடுமாறலாம்; சில தவறுகளைச் செய்யலாம். ஆனால் அவர் தொடர்ந்து மக்களிடம் பேசிவந்தாரென்றால் அவரது தவறுகள் மன்னிக்கப்பட்டு, அவர் தன்னை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுவார். அப்போது வேறு வழியில்லாமல் பிற கட்சிகளின் அரசியல்வாதிகளும் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டிவரும். அதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு. அதுதான் சாமானியனின் வெற்றி.

Monday, December 23, 2013

பல்ப்பிலக்கியம்

பல்ப் என்றால் மரக்கூழ். மரத்துண்டுகள், கரும்புச்சக்கை, வீணாகப்போகும் பருத்தி நூல் அல்லது யானை லத்தி என்று செல்லுலோஸ் அதிகமாக உள்ள எதையும்கொண்டு தாள் செய்யலாம். ஏன், ஏற்கெனவே அச்சான தாளை மறுசுழற்சி செய்வதன்மூலம் மீண்டும் தாள் செய்யத் தேவையான கூழை உருவாக்கிக்கொள்ளலாம்.

பல்ப் ஃபிக்‌ஷன் என்னும் பெயர், இலக்கியத் தரம் குறைவான, ஆழமற்ற, சாரமற்ற, சட்டென்று படித்துத் தூக்கிப் போட்டுவிட்டுச் செல்லக்கூடிய கதைப் புத்தகங்களுக்கு இன்று புழங்கும் பெயர். எல்லாப் புத்தகங்களுமே “தாளால்” எனவே “பல்ப்பால்” ஆனவை என்றாலும் பல்ப் என்ற பெயர் இம்மாதிரிப் புத்தகங்களுக்கு மட்டுமே ஏன் வழங்கப்படுகிறது?

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் உலகம் முழுவதிலும் படிப்பறிவு அதிகமாகப் பரவத்தொடங்கியது. இங்கிலாந்தில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கூடம் சென்று படிக்கக்கூடிய நிலை அப்போதுதான் ஏற்பட்டது. அதற்கு லேபர் கட்சி உழைக்கும் மக்களின் ஆதரவுடன் முதன்முறையாக அரசு அமைத்ததுதான் முக்கியக் காரணம். இப்படிப் புதிதாகப் படிக்க வந்தவர்கள் எளிதில் படிக்கக்கூடியவண்ணம் புத்தகங்கள் தேவைப்பட்டன. எளிமையான கற்பனாவாதக் காதல் கதைகளும், சாகசக் கதைகளும், துப்பறியும் கதைகளும் கொஞ்சம் படைப்பூக்கத்துடனும் அதிகம் இயந்திரத்தனமாகவும் உருவாக ஆரம்பித்தது இந்த மக்களை மனத்தில்கொண்டுதான்.

இந்தப் புத்தகங்கள் பலரையும் சென்று சேரவேண்டுமானால் விலை மலிவாக இருக்கவேண்டும். அப்படியென்றால் மிகவும் விலை குறைவான தாளில், கட்டுமானச் செலவு மிகக் குறைவாக இருக்குமாறு செய்யவேண்டும். போற்றிப் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷமல்ல; வெறும் மனமகிழ்வுக்கானதுதான் என்பதால் நாள்பட தாங்கவேண்டியதில்லை. அப்படியானால் மறுசுழற்சி செய்யப்பட்ட கொஞ்சம் அழுக்கு வண்ணத் தாளில் இருந்தால் போதும். அப்படிப்பட்ட புத்தகத்தின் மிக்ச் சுமார் கட்டுமானத்தையும் தாளையும் குறிப்பிடும் பெயர்தான் ‘பல்ப்’.

பின்னர் ஆங்கில பல்ப் புத்தகங்களின் அட்டைகள், சிறப்பான ஸ்பாட் லேமினேஷன், கோல்ட், சில்வர் ஃபாயில் என்றெல்லாம் கலக்கின/கலக்குகின்றன.

ஜி.அசோகன் பேசுகிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் அமர்ந்திருக்கிறார்.
தமிழில் பல்ப் புத்தகங்களின் தந்தை ஜி.அசோகன்தான். அவர் இத்துறையில் இறங்குவதற்கு முன்பே, ராணி முத்து, மாலைமதி ஆகியவை முறையே தினத்தந்தி, குமுதம் நிறுவனங்களிலிருந்து வந்துகொண்டிருந்தாலும், இந்தத் துறையில் குறிப்பிடத்தகுந்த பல மாற்றங்களைக் கொண்டுவந்தவர் அசோகனே. அப்போது மிகப்பெரும் பிராண்ட் பெயர் பெற்றிருந்த ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார், மேலே ஏறிவந்துகொண்டிருந்த பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா என்று பலருக்கும் சரியான களம் அமைத்துக்கொடுத்தது அசோகனே. அப்போதைய தொழில்நுட்ப சாத்தியத்துக்குள்ளாக கவர்ச்சிகரமாக புத்தகங்களை உருவாக்கியது, வெறும் ஒரு கதை என்பதிலிருந்து பல சுவாரசியமான அம்சங்களை அந்த இதழ்களில் புகுத்தியது, விற்பனையைப் பரவலாக்க விநியோகத்தை வலுவாக்கியது, வாசகர்களுடன் தொடர்ந்து கடித உறவு வைத்திருந்தது என்று பலவற்றைச் சொல்லலாம்.

1980-களிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட 30 வருட காலமாக இந்தத் துறையில் தனியான பாதையைத் தனக்கென அமைத்துக்கொண்டிருக்கிறார் அசோகன். அவர் படித்தது அதிகம் இல்லை என்றே அவரே ஒப்புக்கொள்கிறார்.

தமிழச் சமூகத்துக்கு ஜி.அசோகனுடைய பங்களிப்பு என்ன?

படிப்பு என்பது தனித் திறன். நாம் பள்ளிக்கூடம் சென்று கற்றுக்கொள்ளும் முதல் திறன் அதுவே. பிறந்து சில மாதங்களிலேயே மொழியை ஒலியாகக் கேட்பது, மொழியைப் புரிந்துகொள்வது, சொற்களை உருவாக்குவது, பேசுவது போன்ற பல திறன்களை நாம் கற்றுக்கொண்டுவிடுகிறோம். ஆனால் இதை மட்டுமே நாம் செய்துவந்தால் நம்முடைய சொற்குவியல் (vocabulary) குறைவாகவேதான் இருக்கும். எழுத்துகளைப் புரிந்துகொள்வது, அவற்றைக்கொண்டு ஒரு வார்த்தையை, ஒரு வரியை, ஒரு பத்தியை, ஒரு பக்கத்தைப் படிப்பது என்பது படிப்படியான அடுத்த திறன். இந்தத் திறனைப் பெறாமலேயே பல பேர் வாழ்ந்து மடிந்துள்ளனர். இன்று நாம் படிப்பறிவு (literacy) என்று குறிப்பிடுவது இந்தப் படிக்கும் திறனுடன் எழுதும் திறனும் சேர்ந்த ஒன்றாகும். என்னைப் பொருத்தமட்டில் எழுதும் திறன்கூட இரண்டாம் பட்சம்தான். யோசித்துப் பாருங்கள். நம்மில் பலர் ஒரு பக்கம்கூடச் சேர்த்து எழுதாமலேயே நம்முடைய மொத்த அலுவல் காலத்தை முடித்துவிடுகிறோம்.

அரசு அலுவலகங்கள் பலவற்றிலும் பெரும்பாலான தனியார் அலுவலகங்களிலும் பணியாற்றும் பலரும் இன்று எழுதுவது என்பதே மிகக் குறைவானது. வங்கிகளில் வேலை செய்வோர்கூட சேர்ந்தாற்போல நான்கைந்து வரிகள் எழுதுவதில்லை. ஆனால் ஓர் அலுவலகத்தில் பணி புரியவேண்டும் என்றால் குறைந்தபட்சம் படிக்கத் தெரிந்திருக்கவேண்டும்.

ஆனால் உண்மையில் நான் பல பள்ளிக்கூடங்களிலும் சென்று பார்த்துத் தெரிந்துகொண்டது, பெரும்பாலான குழந்தைகளுக்குப் படிக்கத் தெரிவதே இல்லை என்பதுதான். தட்டுத் தடுமாறி வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத் தெரியாமல் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நன்கு பேசக்கூடியவர்கள். ஆனால் எழுத்துகூட்டிப் படிக்கத் தெரிவதில்லை. (நான் சொல்வது தமிழை. ஆங்கிலம் நாசமாகப் போகட்டும்.)

எழுத்துகூட்டிப் படிக்கத் தெரியாவிட்டாலும்கூட அவர்கள் பள்ளிப் பாடங்களை எப்படியோ படித்து, ஒழுங்காக எழுதத் தெரியாவிட்டாலும்கூட எப்படியோ எதையோ எழுதி பாஸ் செய்துவிடுகிறார்கள். இப்படி எஞ்சினியரிங், எம்.சி.ஏ வரைகூட இவர்கள் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள் என்பதுதான் இன்றைய நிதர்சனம். எப்படி என்று என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். இன்று இதுதான் நடக்கிறது.

இப்படிப்பட்டவர்கள் பள்ளி, கல்லூரியில் சான்றிதழ் வாங்கியவுடன் lapsed readers ஆகிவிடுகிறார்கள். அவர்கள் படிப்பது நின்றுபோய்விடுகிறது. ஒருசிலர் மட்டும் தினசரி அல்லது வார/மாத இதழ்களைப் படிக்கிறார்கள். அவர்களுக்கு ஓரளவுக்குப் படிக்கும் பழக்கம் தொடர்கிறது. மீதிப் பேர் சினிமா போஸ்டர்களை அல்லது அரசியல் சுவரொட்டிகளைப் படிப்பதற்குமேல் வேறு எதையும் படிப்பதில்லை.

அலுவலகத்தில் அரசாணைகளை அல்லது விண்ணப்பங்களைப் படிக்கும் பலர் உண்மையில் எதைப் படிக்கிறார்கள், எதைப் புரிந்துகொள்கிறார்கள் என்பது எனக்கு விளங்குவதில்லை. பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெரும் குழப்பம், செயல்திறனின்மை ஆகியவை ஏற்படுவதற்குக் காரணம், படிக்கும் திறனில்லாமை, புரிந்துகொள்ளும் திறனில்லாமை ஆகியவற்றால் வருவதே.

இப்படிப்பட்டவர்களில் ஒரு சிலரையாவது தொடர்ந்து படிக்கவைத்தது பல்ப் மாத இதழ்கள்தாம். ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட 50,000 இதழ்கள் வரை விற்ற பல்ப் மாத இதழ்கள் இன்று 6,000 - 7,000 என்று சுருங்கியுள்ளன. 7.5 கோடி எண்ணிக்கை கொண்ட தமிழ்ச் சமூகத்தில் முதன்மைத் தமிழ் நாளிதழ் வெறும் 10 லட்சம்தான் விற்கிறது. தங்களுடைய பள்ளிக்கூடம் அல்லது வேலை என்பதில் வரும் “படிப்பு” தாண்டி, தினசரி ஒரு பக்கமாவது படிப்பவர்கள் என்று பார்த்தால் அது 50 லட்சத்தைத் தாண்டாது என்பது என் கணிப்பு. (ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் மெசேஜ் படிப்பது என்பது இதில் சேராது!)

சாதாரண மக்களை எளிதில் படிக்கவைப்பது எளிய, விறுவிறுப்பான கதைகள்தாம். கொலை, துப்பு துலக்குதல், அதிர்ச்சி, திடுக் சம்பவங்கள், கொஞ்சம் பாலியல் தூண்டுதல், கடைசி கிளைமேக்ஸ் துரத்தல்கள், இறுதியில் சிடுக்குகளைத் தீர்த்து வாசகனுக்கு ஆசுவாசம் தருதல் என்று இவை சாதாரண மக்களுக்கு ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. மெல்லிய காதல் கதைகளும் குடும்பப் பிரச்னைகளை மையமாக வைத்து வரும் கதைகளும் இவை போன்றவையே. முந்தையவை அதிகம் ஆண்களுக்காக என்றால் பிந்தையவை பெண்களுக்காக.

உண்மையில் தமிழகம் படிப்பறிவில் சிறந்து விளங்குவதாக இருந்தால் இன்று இதுபோன்ற கதைகளையும் வார/மாத இதழ்களையும், தினசரிகளையும் படிப்போர் எண்ணிக்கை இப்போது இருப்பதுபோல ஏழெட்டு மடங்கு அதிகமாக இருக்கவேண்டும். ஆனால் இன்றைய நிலைமை அப்படி இல்லை.

ஜி.அசோகன் உருவாக்கிய புரட்சி போன்று இன்றைய நிலையில் வெகுமக்களைப் படிக்கவைக்க சுவாரசியமான கதைகளை உருவாக்கவேண்டிய கட்டாயம் நமக்கிருக்கிறது. படிக்காத மக்களால் அதிக விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. அப்படிப்பட்டவர்களால் அரசியலிலும் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. அதனால்தான் நாம் இந்த இரு துறைகளிலும் மிகவும் பின்தங்கியிருக்கிறோம்.

எளிய படிப்பையாவது மக்களிடம் பரவலாக்கினால்தான், கொஞ்சம் ஆழமான விஷயங்களைப் படிக்க அதிகம் பேர் உருவாவார்கள். அவர்களில் சிலர் தீவிரமான அறிவுஜீவிகளாகப் பரிணமிப்பார்கள். எனவே நம் முதல் கடமை பல்ப் இலக்கியத்தைப் பரவலாக்குவதுதான்.

LIPS அமைப்பு ஜி. அசோகனுக்கு நடத்திய பாராட்டு விழாவில் நான் கலந்துகொண்டேன். பட்டுக்கோட்டை பிரபாகர் இந்த நிகழ்ச்சியில் ஜி. அசோகனை வாழ்த்திப் பேசினார். அந்த நிகழ்ச்சியின் ஆடியோ என்னிடம் உள்ளது. அதனை விரைவில் இணையத்தில் சேர்ப்பிக்கிறேன். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சிவராமன், யுவகிருஷ்ணா, நாராயணன் ஆகியோருக்கும் இடம் அளித்த பனுவல் புத்தகக்கடைக்கும் நன்றி.

Wednesday, December 18, 2013

புத்தகங்களின் விலை

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் பரவியுள்ளதன் காரணமாக, எல்லோரும் புத்தகங்களின் விலை குறித்து புத்தகப் பதிப்பாளர்களைக் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்!

புத்தகங்களுக்கு எப்படி விலை வைக்கப்படுகிறது என்று முகில் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார். அதற்கு சில பதில்களை நான் எழுதியிருந்தேன். எந்த அளவுக்கு இது வாசகர்களுக்கு அவசியம் என்று தெரியவில்லை. பொதுவாக வாசகர்கள் இந்தக் கேள்விகளைக் கேட்கும்போது அடிப்படையில் ஒரேயொரு ஆதங்கம்தான் உள்ளது. என் பர்ஸில் உள்ள பணத்துக்கு எட்டாமல் இந்தப் புத்தகங்களின் விலை ஏறிக்கொண்டே போகிறது; விலை குறையவேண்டும். அவ்வளவுதான். அல்லது, நான்கு வருடங்களுக்குமுன் புத்தக விலை குறைவாக இருந்ததே, இப்போது ஏன் அதிகமாகிப்போனது? அதுவும் இவ்வளவு அதிகமா?

எனவே சில விஷயங்களை மட்டும் இங்கே விளக்குகிறேன்.

தமிழ்ப் புத்தகத் தொழிலில் பல விஷயங்கள் சதவிகிதத்தில் இயங்குகின்றன. உதாரணமாக, ராயல்டி என்பது புத்தக எம்.ஆர்.பி விலையில் 10% (அல்லது 7.5% அல்லது 5%). புத்தக விற்பனையாளர்களுக்கு எம்.ஆர்.பியில் 25% அல்லது 30% அல்லது 35% தொகையை பதிப்பாளர் தரவேண்டும். ஆக, அதிகபட்சமாக எடுத்துக்கொண்டால், புத்தக எம்.ஆர்.பியில் 45% வரை ராயல்டி + விற்பனையாளரருக்குப் போய்விடும். குறைந்தபட்சம் என்றால் ராயல்டி = 0, புத்தக விற்பனையாளருக்கு 25% = மொத்தம் 25%.

ஆங்கிலப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு 50% வரை, சிலர் அதற்குமேலும்கூடக் கொடுக்கிறார்கள். அதனை நாம் இங்கே கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டாம்.

கிழக்கு பதிப்பகம் நேராக எழுதப்பட்ட புத்தகங்களுக்கு 10% ராயல்டி தருகிறது. ப்ராடிஜி புத்தகங்களுக்கு 7.5% ராயல்டி. மொழிமாற்றல் புத்தகங்களில் எழுத்தாளருக்கு 7.5%, மொழிபெயர்ப்பாளர்களுக்கு 5% என்று ராயல்டி கொடுக்கிறது. இதில் சிலச்சில மாற்றங்கள் இருக்கலாம். அதேபோல விற்பனை விநியோகஸ்தர்களுக்கு 35% வரை கொடுக்கிறோம்.

மீதமுள்ள சுமார் 52.5 - 55% தொகையில்தான் புத்தகத்தை அச்சிடவேண்டிய தாள், அச்சுக்கூலி, பைண்டிங் கூலி, ஊழியர்களின் சம்பளம், வாடகை, மின்சாரம், இத்யாதி என்று பார்த்துக்கொள்ளவேண்டும். உங்களுடைய overheads-ஐப் பொருத்து அச்சுக்கான செலவு எவ்வளவு, பிற செலவுகள் எவ்வளவு என்று நீங்கள் முடிவு செய்யவேண்டும். நாங்கள் பொதுவாக, அச்சுக்கான செலவு 20-22.5% இருக்குமாறும் பிற செலவுகள்+லாபம் சேர்த்து 30% இருக்குமாறும் திட்டமிடுவோம். இவ்வாறு திட்டமிட்டவுடனேயே, ஒரு புத்தகத்துக்கு என்ன விலை வைக்கவேண்டும் என்பது தெளிவாகிவிடும்.

புத்தகத்தை அச்சிட என்ன செலவு என்று முதலில் தீர்மானிக்கலாம். எத்தனை பக்கம், எந்தமாதிரியான உருவாக்கம், யாரிடம் கொடுத்து பிரிண்ட் செய்யப்போகிறோம், எத்தனை பிரதிகள் அடிக்கப்போகிறோம் என்று தெரிந்தவுடனேயே, ஒரு பிரதியை அச்சடிக்க என்ன செலவு என்பது தெளிவாகிவிடும். அந்த எண்ணிக்கையை 0.2 அல்லது 0.225 என்பதால் வகுத்தால், புத்தகத்துக்கு என்ன விலை வைக்கவேண்டியிருக்கும் என்பது முடிவாகிவிடும். அதன்பின் கொஞ்சம் மேலே அல்லது கீழே ரவுண்ட் ஆஃப் செய்யலாம். இவ்வளவுதான்.

2,000 பிரதிகள் அடிக்கும் ஒரு பிரதியின் உருவாக்கச் செலவு, 1,200 பிரதிகள் அடிக்கும்போது ஆவதைவிடக் குறைவு. எனவே அதிகம் விற்கும் புத்தகங்களுக்கு எம்.ஆர்.பியைக் குறைவாக வைக்க முடியும்.

குறிப்பிட்ட பக்கங்கள் கொண்ட புத்தகத்துக்கே பல பதிப்பாளர்கள் வைக்கும் விலை ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை இருக்கும்.

உதாரணமாக, ராயல்டி தராத, 25%-க்குமேல் கழிவு தராத, ஓவர்ஹெட்ஸ் அதிகம் இல்லாத, மிகச் சுமாரான தாளில் புத்தகத்தை உருவாக்கும் ஒன் மேன் ஆர்மி பதிப்பாளர் ஒருவர், புத்தக விலையை மிகவும் குறைவாக வைக்கலாம். மாற்றாக, 10%-12.5% ராயல்டி, 35% விற்பனையாளர் கமிஷன், அதிக ஓவர்ஹெட்ஸ், மிகத் தரமான உருவாக்கம் ஆகியவற்றை முன்வைக்கும் பெரிய பதிப்பாளர் ஒருவர், புத்தக விலையை அதிகமாகத்தான் வைக்கவேண்டியிருக்கும். வேறு வழியில்லை.

எவ்வளவு வித்தியாசம் இருக்கலாம்? 160 பக்க டெமி 1/8 புத்தகம், பெர்ஃபெக்ட் பைண்டிங் செய்யப்பட்டது ரூ. 70 முதல் ரூ. 150 வரை முழு ஸ்பெக்ட்ரம் விலை கொண்டதாக இருக்கலாம்.

2004-ல் கிழக்கு பதிப்பகம் ஆரம்பித்தபோது 160 பக்க டெமி 1/8 புத்தகங்களை ரூ. 60 என்ற விலையில் விற்றுவந்தோம். 2006-ல் ப்ராடிஜி புத்தகங்கள், 80 பக்க கிரவுன் 1/8, ரூ. 25 என்ற விலையில் விற்றோம். அப்போது பேப்பர் ஒரு கிலோ ரூ. 23-24 என்ற கணக்கில் இருந்தது. இன்று நல்ல பேப்பர் கிலோ ரூ. 67-70, அதாவது மூன்று மடங்கு ஏறியுள்ளது. அச்சுக்கூலி அதிகம் ஏறவில்லை. இந்தப் பத்தாண்டுகளில் 25% ஏறியிருந்தால் அதிகம் என்று நினைக்கிறேன். பிளேட், நெகடிவ், லாமினேஷன் இவையெல்லாம் அதிகம் ஏறவில்லை. பைண்டிங் செய்வதற்கான கூலியும் அதிகம் ஏறவில்லை. ஆனால் அலுவலக வாடகை, புத்தகக் கிடங்கின் வாடகை, மின்சாரம், அலுவலர்களின் சம்பளம் ஆகியவையெல்லாம் வெகுவாக ஏறியுள்ளது.

இன்று 80 பக்க கிரவுன் 1/8 புத்தகங்களை ரூ. 40-க்கு விற்கிறோம். 160 பக்க டெமி 1/8 புத்தகத்தை 100 ரூ முதல் 150 ரூபாய்வரை விற்கிறோம். அது எவ்வளவு பிரதிகள் அச்சடிக்கிறோம் என்பதைப் பொருத்தது.

தாளின் விலை ஏறிக்கொண்டேதான் போகும். விலையைக் குறைக்கவேண்டுமானால் மின் புத்தகங்கள் மட்டும்தான் ஒரே வழி.

***

ஃபேஸ்புக்கில் முகிலுடைய ஸ்டேடஸ் மெஸேஜின்கீழ் எழுதியது:

ஒரு 160 பக்கப் புத்தகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். டெமி 1/8 சைஸ். பேப்பர்பேக். 1,200 பிரதிகள் அடிக்கவேண்டும். இதனை மிகக் குறைந்த செலவில் செய்யவேண்டுமானால் நீங்கள் சற்றே சுமாரான 60 ஜி.எஸ்.எம் வெள்ளைத் தாளில் அச்சடிக்கலாம். அல்லது நல்ல மில் தயாரிப்பில் 70 ஜி.எஸ்.எம் நேச்சுரல் ஷேட், ஹை பல்க் பேப்பரில் அச்சடிக்கலாம். அட்டையானது, 300 ஜி.எஸ்.எம் தாளில், நான்கு வண்ணத்தில் இருக்கும். 70 ஜி.எஸ்.எம், 300 ஜி.எஸ்.எம் காம்போவில் பேப்பர், பிரிண்டிங், பைண்டிங், லேமினேஷன், பிளேட் மேக்கிங் என்று பார்த்தால், ஒரு புத்தகத்தை அச்சிட உங்களுக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட ரூ. 29-32 ஆகிவிடும். இது ஒரேயொரு புத்தகத்தை மட்டும் நீங்கள் அச்சிடௌவதாக இருந்தால். பேப்பர் விலை கிலோ ரூ. 67-70 என்ற நிலையில் உள்ளது. இதற்குபதில் கிலோ பேப்பர் ரூ. 60-க்குக்கூடக் கிடைக்கும் மில்லிலிருந்து வாண்க்கிக்கொண்டு, 70-க்கு பதில் 60 ஜி.எஸ்.எம் பேப்பரைப் பயன்படுத்திக்கொண்டால், செலவைக் கணிசமாகக் குறைக்கலாம். ஒரு பிரதி ரூ. 23-24 என்று முடியும். இதையே நான்கு புத்தகங்களைச் சேர்த்து பிரிண்ட் செய்தால், நான்கு அட்டைகளையும் ஒரே நேரத்தில் அச்சிடலாம். அதனால் மேலும் 2-3 ரூபாய்கள் குறையும். ஒரு பிரதி ரூ. 22 முதல் ரூ. 26 வரை ஆகலாம். (பேப்பரைப் பொருத்து)

நாங்கள் பெரும்பாலான புத்தகங்களை மும்பையில் அச்சிடுகிறோம். (அதற்குப் பல காரணங்கள் உண்டு.) எங்களுக்கு இதே புத்தகத்தை அச்சிட கிட்டத்தட்ட ரூ. 36 வரை ஆகிறது (இப்போதைக்கு).

எழுத்தின் அளவைக் குறைத்து, மார்ஜின் அளவைக் குறைத்து, அதனால் பக்கங்களைக் குறைத்து, வெகு சுமார் கிரீமோ செகண்ட் கிரேட் மில் பேப்பரைப் பயன்படுத்தி, டிரெக்ட் டு பிளேட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் லேசர் பிரிண்ட்-ஃபில்ம் நெகடிவ்-பிளேட் என்று போனால் அச்சாக்கும் செலவையும் குறைக்கலாம், பேப்பர் செலவையும் குறைக்கலாம்.

ஆக, இதே புத்தகத்தை வேறுமாதிரியான பேப்பர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரூ. 16-க்கும் உருவாக்கலாம். ஆக 16 ரூ. டூ 36 ரூ. என்று ஒரு பெரிய ரேஞ்ச் இருக்கிறது.

இதுதான் அடக்கவிலை. அடுத்து, ராயல்டி தருகிறோமா, இல்லையா என்பதைப் பொருத்தும், விற்பனையாளர்களுக்கு என்ன மார்ஜின் தருகிறோம் என்பதைப் பொருத்தும் பிற விஷயங்கள் மாறுகின்றன.

விகடன், வானதி, அல்லயன்ஸ் போன்ற பதிப்பகங்கள் 25% மார்ஜின்தான் கொடுக்கிறார்கள். கிழக்கு பதிப்பகம், 30% (கடைக்காரர்களுக்கு) அல்லது 35% (விநியோகஸ்தர்களுக்கு) கொடுக்கிறது. பெரும்பாலான தமிழ்ப் பதிப்பாளர்கள் 25, 30, 35 சதவிகிதத்துக்குள்தான் இயங்குவார்கள். ராயல்டி ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். நான் அதுகுறித்துப் பேசப்போவதில்லை.

இப்போது ஒரு பிரதிக்கு ஆகும் அடக்கவிலை 30 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். கடைக்காரருக்குத் தரப்போவது 35% என்று வைத்துக்கொள்ளுங்கள். எழுத்தாளருக்கு 10% ராயல்டி. உங்கள் பதிப்பகத்துக்கு 30%-ஆவது வேண்டும். (இது லாபமல்ல. உங்கள் அலுவலக வாடகை, மின்சாரம், ஆள் சம்பளம், வேர்ஹவுஸ் வாடகை, நீங்கள் பணம் கடன் வாங்கி அச்சடிக்கும்போது, அதற்குத் தரவேண்டிய வட்டி.... அதற்குப்பின் உங்கள் லாபம்). அப்படியானால் அச்சடிக்க ஆகும் செலவு 25% என்று இருக்கவேண்டும். (25%+10%+35%+30% = 100%). அப்படியானால், அச்சுக்கு ஆகும் செலவை நான்கால் பெருக்கினால், புத்தகத்துக்கு வைக்கவேண்டிய எம்.ஆர்.பி கிடைத்துவிடும். இந்த இடத்தில் 30*4 = 120 ரூ. எனக்கு அச்சாக்கும் செலவு ரூ. 36 ஆகிறது என்றால் நான் புத்தகத்துக்கு 145 ரூ. அல்லது 150 ரூ. வைப்பேன். இதுதான் விஷயம்.

அதுவும் 1200 பிரதிகளும் விற்றால்தான் உங்களுக்குக் கையில் பணம் வரும். இல்லை என்றால் நஷ்டம்.

இதே இன்னொருவர் ராயல்டி தரப்போவதில்லை, அச்சாக்கும் செலவு அவருக்கு ரூ. 20 மட்டும்தான் என்று வைத்துக்கொள்வோம். மேலும் அவர் 25% மட்டுமே டிஸ்கவுண்ட் தருவார். அவருக்கும் 30% போதும் என்று வைத்துக்கொண்டால், அச்சுச் செலவு 45%வரை இருக்கலாம் (45% + 25% + 30% = 100%). அப்படியானால் அவர் புத்தகத்துக்கு 20/(45%) = 20/0.45 = ரூ. 45 என்று வைத்தாலே போதும். ஆக, ஒரே புத்தகத்துக்கு 45 அல்லது 50 ரூபாயும் வைக்கலாம், கிட்டத்தட்ட 150 ரூபாயும் வைக்கலாம்.

இந்த ரேஞ்சில் ஒரு பதிப்பகம், தாங்கள் எங்கே இருக்கவேண்டும் என்பதை முடிவெடுத்துக்கொள்ளலாம்.
=======

Friday, December 13, 2013

தமிழ் ஊடகங்களின் அழும்பு

(எச்சரிக்கை: சில்லி அவுட்ரேஜ் பதிவு)

நான் கிரிக்கின்ஃபோவில் பணி புரிந்தபோது இதுகுறித்து நிறைய அனுபவம் உண்டு.

ஆரம்பகாலத்தில் கிரிக்கின்ஃபோவிலிருந்து ஸ்கோர்கார்டுகளை எடுத்துப் பதிப்பிப்பார்கள். இங்கிருந்துதான் எடுத்தோம் என்று சொல்லவே மாட்டார்கள். பின்னர் கண்ணுக்கே தெரியாத ஃபாண்டில் “Source: Cricinfo" என்று போடத்தொடங்கினார்கள். கொஞ்சம் பெரிய ஃபாண்டாகப் பொட்டு, அது எங்கள் கண்ணில் பட்டுவிட்டால் நாங்கள் காசு கேட்டுவிட்டால் என்ன ஆவது என்ற பயம். சில பிரிட்டிஷ் ஊடகங்கள் எங்களை "Internet" என்றுதான் அழைத்தன. கிரிக்கின்ஃபோ கமெண்ட்ரியிலிருந்து மேற்கோள் காட்டும்போது, ‘இணையத்தில் எழுதும் ஒருவர் இப்படி எழுதியிருந்தார்’ என்று குறிப்பிட்டிருப்பார்கள். “இணையத்தில் எழுதும்”? அதற்கு பதில், “இந்த உலகத்தில் வசிக்கும் ஒருவர் இப்படி எழுதியிருந்தார்” என்று சொல்லியிருக்கலாம். பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் கிரிக்கின்ஃபோ பெயரை தைரியமாக எழுத ஆரம்பித்தார்கள்.

இதற்கு ஒரு காரணம் உண்டு. தங்களால் கிரிக்கின்ஃபோவுக்கு எந்த ஆதாயமும் “இலவசமாக” போய்விடக்கூடாது என்ற நல்ல எண்ணம்தான் அந்தக் காரணம். கிரிக்கின்ஃபோவிலிருந்து வேண்டிய எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். அது பிரச்னை இல்லை. ஆனால் கிரிக்கின்ஃபோவுக்கு எந்த இலவச விளம்பரத்தையும் கொடுத்துவிடக்கூடாது. பின்னர் இந்த விளம்பரங்கள் எல்லாம் இல்லாமலேயே கிரிக்கின்ஃபோவுக்குக் கூட்டம் கூடுகிறது என்றதும் அடங்கிவிட்டனர்.

அதே பாணியில்தான் இன்றைய தமிழ் மீடியாவும் இயங்குகிறது.

2002-லிருந்து - அதாவது கிழக்கு பதிப்பகம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே தொலைக்காட்சிகளில் அவ்வப்போது முகம் காட்டி வருகிறேன். பெரும்பாலும் கிரிக்கெட் பற்றிப் பேசத்தான் அழைத்துக்கொண்டிருந்தார்கள். அப்புறம் கொஞ்சம் டெக்னாலஜி. இப்போது அரசியல், சமூகம் குறித்த பல விஷயங்களைப் பற்றிப் பேச அழைக்கிறார்கள். ஆரம்பத்தில் எனக்கு “கிரிக்கெட் விமர்சகர்” என்ற அடைமொழிதான். கிரிக்கின்ஃபோ பெயர் வராது. (அது விளம்பரமாம்!) பின்னர் மற்ற விஷயங்கள் குறித்துப் பேசும்போது கிழக்கு பதிப்பகத்தை ஆரம்பித்திருந்தேன். அது குறித்து எதையும் சொல்ல மாட்டார்கள். “சமூக ஆர்வலர்” போன்ற பஜனையான அடைமொழியெல்லாம் கொடுத்திருப்பார்கள். இப்போது ‘எழுத்தாளர்’ என்றுவேறு சொல்கிறார்கள். சில இடங்களில் இப்போது ‘பதிப்பாளர்’ என்று சொல்வது உண்டு. எந்தப் பதிப்பகம் என்பதைச் சொல்ல, பாவம், அவர்களுக்குப் பெரும்பாலும் இடம் இருப்பதில்லை.

ஆனால் நான் விடுவதில்லை. எங்கே போனாலும் நம்ம பிராண்ட் கிழக்கு டி-ஷர்ட்டைப் போட்டுக்கொண்டு போய்விடுவது. லைவ் டிவியில் அதையெல்லாம் அழிக்கமுடியாதில்லையா?

செய்தித்தாள் அல்லது வார/மாத இதழ் என்று யார் கேட்டாலும், என்னால் எழுதக்கூடிய விஷயம் என்றால் பொதுவாக எழுதிக்கொடுத்துவிடுவேன். பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. (பெரும்பாலும்) அவர்கள் கேட்கும் காலத்துக்குள், எத்தனை வார்த்தைகளோ அத்தனை வார்த்தைகளுக்கு அருகில் வருமாறு, அவர்களுக்கு எடிட்டிங் சிக்கல் இல்லாமல் எழுதிக் கொடுத்துவிடுவேன். அவர்களும், எழுத்தாளர், பதிப்பாளர், சமூக ஆர்வலர் (அல்லது ஒன்றுமே போடாமல் வெறும் பத்ரி சேஷாத்ரி என்று போட்டு) பதிப்பித்துவிடுவார்கள். சில சமயங்களில் ஸ்டாம்ப் அளவுக்கு முகம் இருக்கும்.

சில நாள்களுக்குமுன் குங்குமம் தோழியிலிருந்து எனக்கு சமையல் செய்யத் தெரியுமா என்று கேட்டு அழைப்பு. தெரியும் என்றேன். உரையாடல் எல்லாம் முடிந்ததும் நான் சமைப்பதைப் படம் எடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அதற்காக நாள் குறித்து, ஒரு ஃபோடோகிராபர் வந்திருந்தார். வந்தவுடனேயே ‘சார், இந்த டி-ஷர்ட் போட்டிருக்கிறீர்களே, வேறு ஏதாவது பளிச்சென்று சட்டை போட்டுக்கொள்ளலாமே’ என்று கேட்டார். ‘இல்லை, இதுதான் நான் எப்போதும் போட்டுக்கொண்டிருக்கும் சட்டை, ஜீன்ஸ். இதிலேயே இருக்கிறேன்’ என்றேன். பொறுமையாக காய்கறிகளை வெட்டி, சமையல் முழுதையும் முடிக்கும்வரை படங்கள் எடுத்துக்கொண்டார்.

பதிப்பிக்கும்போது கவனமாக ஃபோட்டோஷாப்பில் எடுத்துக்கொண்டுபோய் அனைத்து கிழக்கு பதிப்பக லோகோக்களையும் அழித்துவிட்டுத்தான் பதிப்பித்திருக்கிறார்கள். ஒரே ஒரு படத்தில் அதை சரியாக அழிக்கவில்லை.


சிரிப்பாக வந்தது. இந்த லோகோவை உங்களுடைய பத்திரிகையில் வருவதாலா, எனக்குப் பிரமாதமான விளம்பரம் வந்து, என் பதிப்பகப் புத்தகங்கள் விற்று நான் கோடி ரூபாய் சம்பாதித்துவிடப் போகிறேன்? இந்த சட்டை போட்டிருந்தால் அதைப் படமாகப் போட உங்கள் நிறுவனத்தின் சட்ட திட்டங்கள் அனுமதிக்காது என்றால் அதை என்னிடம் சொல்லியிருக்கலாமே? நானும் விரும்பியிருந்தால் வேறு சட்டை போட்டிருப்பேன், அல்லது உங்கள் சங்காத்தமே வேண்டாம் என்று சொல்லியிருப்பேன். அல்லது நீங்களும் என் பிடிவாதத்தைப் பார்த்து, நீயும் வேண்டாம் உன் சமையலும் வேண்டாம் என்று சொல்லியிருப்பீர்கள். நான் பாட்டுக்கு ஏதோ புத்தகத்தைப் படித்துக்கொண்டு என் நேரத்தை நல்லபடியாகச் செலவழித்திருப்பேன். (சமையலும் செய்திருப்பேன். ஏனெனில் வீட்டில் அனைவரும் சாப்பிடவேண்டும் அல்லவா? ஆனால் ‘இங்கே முகத்தைக் காண்பி, அங்கே முகத்தைக் காண்பி’ என்று உங்களுக்காக போஸ் கொடுத்து நேரத்தை வீணடித்திருக்க மாட்டேன்.)

இனி ஒரு முடிவு எடுத்துவிட்டேன். என் பெயரை ‘பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்’ என்று போட்டால்தான் கட்டுரை எழுதித்தருவேன். இல்லாவிட்டால் தயவுசெய்து என்னை அணுகவேண்டாம். அதேபோல, தொலைக்காட்சிகளில் பேச அழைத்தால், கேப்ஷனில் ‘பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்’ என்று போடவேண்டும். இல்லாவிட்டால் என்னைக் கூப்பிடாதீர்கள். உலகில் எவ்வளவோ நல்லவர்கள் இருக்கிறார்கள்.

மணி ரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல்

சென்னை புத்தகக் கண்காட்சியின்போது வெளியாக உள்ள புத்தகம் இது. பரத்வாஜ் ரங்கன் ஆங்கிலத்தில் எழுதி பெங்குவின் வெளியிட்ட இந்தப் புத்தகம் இப்போது அரவிந்த் சச்சிதானந்தத்தின் மொழிபெயர்ப்பில் கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியாகிறது.

*

டைம்ஸ் வெளியிட்ட மிகச் சிறந்த 100 திரைப்படங்கள் பட்டியலில் நாயகன் இடம்பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானை உலகுக்கு அறிமுகப்படுத்தியது, ரோஜா. இந்த இரு படங்கள் மட்டுமல்ல, மணி ரத்னம் இயக்கிய 19 பிற படங்களும் ஒவ்வொரு வகையில் வெவ்வேறு காரணங்களுக்காகத் தனித்தன்மையுடன் திகழ்கின்றன.

இருந்தும் மணி ரத்னம் குறித்து நமக்கு அதிகம் தெரியாது என்பதே ஆச்சரியமளிக்கும் உண்மை. இந்தப் படங்களை அவர் எப்படிக் கற்பனை செய்தார்? காட்சியமைப்புகள் குறித்து எப்படிச் சிந்தித்தார்? சினிமாவுக்குமுன் அவர் வாழ்க்கை எப்படி இருந்தது?

முதல்முறையாக மணி ரத்னம் தன்னைப் பற்றியும் தன் படங்கள் பற்றியும் மனம் திறந்து விரிவாக இந்தப் புத்தகத்தில் உரையாடியிருக்கிறார். பரத்வாஜ் ரங்கனின் அற்புதமான முயற்சியால் இது சாத்தியமாகியிருக்கிறது. அதிகம் பேசாதவர் என்று அறியப்பட்ட மணி ரத்னத்திடம் ஆழகாகவும், வெளிப்படையாகவும், காரசாரமாகவும் கேள்விகள் கேட்டு சரளமாக உரையாட வைத்திருக்கிறார் பரத்வாஜ் ரங்கன்.

அக்னிநட்சத்திரத்தில் காணப்படும் நகர்ப்புற உறவுச் சிக்கல்கள், பம்பாயின் தேசியவாதம், அஞ்சலி இயக்கப்பட்ட விதம், ஒளியமைப்பில் செய்த புதுமைகள், இளையராஜா, ரஹ்மான் இருவருடைய மாறுபட்ட பாணிகள், நாயகன் படத்துக்கு கமல் ஹாசன் கொடுத்த புதிய பரிமாணங்கள், ராவணன் படத்தின் பின்னணி என்று சுவாரஸ்யமான பல விஷயங்கள் இதில் உள்ளன. பாலு மகேந்திரா, பி.சி.ஸ்ரீராம், தோட்டா தரணி, வைரமுத்து, குல்சார் போன்ற திறமைசாலிகளுடனான இனிய நினைவலைகளும் இடம்பெற்றிருக்கின்றன.
போஸ்டர்கள், திரைக்கதைப் பக்கங்கள், படங்கள் ஆகியவற்றுடன் வெளிவரும் இந்தப் புத்தகம் தீவிர திரைப்பட ரசிகர்களுக்கும் சாமானிய வாசகர்களுக்கும் நல்லதொரு விருந்தை அளிக்கிறது.

*

பரத்வாஜ் ரங்கன்

தேசிய விருது பெற்ற திரை விமர்சகர். ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழின் துணை ஆசிரியர். ‘ஓப்பன்’, ‘தெஹல்கா’, ‘பிப்லியோ’, ‘அவுட்லுக்’, ‘கேரவான்’ போன்ற தேசிய இதழ்களில் திரைப்படங்கள், இசை, ஓவியம், புத்தகங்கள், பயணம், நகைச்சுவை போன்றவை பற்றி இவர் எழுதியவை இடம்பெற்றுள்ளன. தமிழ் ரொமாண்டிக் காமெடித் திரைப்படமான ‘காதல் 2 கல்யாணம்’ திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர். சென்னையில் இருக்கும் ‘ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்’ கல்லூரியில் திரைப்படம் பற்றி வகுப்புகள் எடுத்துவருகிறார்.

*

அரவிந்த் சச்சிதானந்தம்

மெட்ராஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் பட்டம் பெற்று, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். தற்போது முழு நேரப் படைப்பாளியாக இயங்கிக்கொண்டிருக்கிறார். இவரது கதைகளும் கட்டுரைகளும், பல்வேறு இதழ்களிலும் தளங்களிலும் வெளியாகியுள்ளன. தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி வரும் இவர், குறும்படங்களையும், கார்ப்பரேட் வீடியோக்களையும் உருவாக்கியிருக்கிறார்.

Tuesday, December 10, 2013

தமிழ்ப் பாடத்திட்டம்

(எச்சரிக்கை: மிக நீண்ட பதிவு)

சென்ற வாரம், பேராசிரியர் அ.ராமசாமியின் அழைப்பின்பேரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சென்றிருந்தேன். கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை தமிழ்ப் பாடத்திட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்த கருத்துரையாடல் தொடர்பாக தமிழகத்தின் பல பேராசிரியர்களை அவர் அழைத்திருந்தார். சுமார் 60+ பேராசிரியர்கள் வந்திருந்தனர். கூடவே, சில இதழாளர்களையும் பதிப்பாளர்களையும் அழைத்திருந்தார். நானும் ஆழி செந்தில்நாதனும் மட்டும்தான் சென்றிருந்தோம். நூலகராகப் பணிபுரியும் எழுத்தாளர் முருகேச பாண்டியனும் வந்திருந்தார்.

கல்லூரியில் தமிழ்ப் பாடத்திட்டம் என்பது எனக்கு அந்நியமானது. நான் கடைசியாகத் தமிழ் படித்தது 1980-களில், 12-ம் வகுப்புவரையில் மட்டுமே. எனவே நிறைய விஷயங்களைப் புதிதாகப் பரிச்சயம் செய்துகொள்ளவேண்டியிருந்தது. நான் புரிந்துகொண்டவற்றை, முடிந்தவரையில் சரியாக எழுத முயற்சி செய்திருக்கிறேன். தவறு ஏதேனும் கண்ணில் பட்டால் திருத்துங்கள்.

கருத்தரங்கின் முதல் நாள், மூன்று அமர்வுகள். முதல் அமர்வு ‘இருப்பும் நடப்பும்’. இரண்டாவது அமர்வு ‘மாற்றங்களும் தேவைகளும்’. மூன்றாவது அமர்வு ‘தமிழ் மொழிக் கல்வி பயன்படு மொழியாக ஆகவேண்டுமானால் என்ன மாற்றங்கள் தேவை?’.

நெல்லை எக்ஸ்பிரஸ் தாமதமாகப் போய்ச் சேர்ந்ததனால், முதல் அமர்வு பெரும்பாலும் முடியும் நேரத்தில்தான் அரங்குக்கே போய்ச் சேர்ந்தேன். மிகவும் காரசாரமான விவாதம் நடந்துகொண்டிருந்தது. பேசுபவர்கள் சிலர், வெளிப்படையாகவே, இப்போதுள்ள பாடத்திட்டத்தின் குறைபாடுகள், பாடங்கள் உருவாக்குவதில் இருக்கும் குறைகள், புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கும் ஊழல் ஆகியவற்றை முன்வைத்துச் சாடினார்கள். அதற்குக் கடுமையான எதிர்வினையும் பிறரிடமிருந்து வந்துகொண்டிருந்தது. இவ்வளவு வெளிப்படையாக இவர்கள் பேசுவார்கள் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

கல்விப் புலத்தில் உள்ள அனைவருக்குமே இவையெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கும். தகுதியற்ற பலரும் கல்வித் தளத்துக்குள் பேராசிரியர்களாக வந்துவிடுகிறார்கள். பாடத்திட்டக் குழுக்கள் உருவாக்கும் பாடத்திட்டம் காலத்துக்கு ஒவ்வாததாக இருக்கிறது. பாடப் புத்தகங்கள் சரியில்லை. புத்தகம் தேர்வு செய்யப்படுவதற்கு கையூட்டு தரப்படுகிறது. வகுப்பில் பேராசிரியர்கள் பாடம் நடத்தும் முறை சரியில்லை. படிக்கும் பெரும்பான்மை மாணவர்களுக்குத் தமிழ் பிடிப்பதில்லை. இத்யாதி, இத்யாதி. ஆனால் இவை குறித்து வெளிப்படையாக விவாதிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்பதால்தான் ஆச்சரியமே.

மூன்றாவது அமர்வில், சில புள்ளிகளைத் தொட்டு நான் பேசினேன். எங்கள் பதிப்பகத்தில் எடிட்டோரியல் துறையில் வேலை செய்த/செய்யும் யாருமே தமிழ் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் கிடையாது. எனக்குத் தெரிந்து, இதழியலில் வேலை செய்யும் பெரும்பான்மை ஆட்கள் வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்கள். பல புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளோம். எங்கள் பதிப்பகத்துக்காக இவற்றைச் செய்துள்ள அனைவருமே தமிழல்லாது வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்கள் என்று நினைக்கிறேன். ஆக, தமிழில் பட்டம் பெற்றோர், மீண்டும் மீண்டும் பள்ளிக்கூடங்களில் தமிழாசிரியர்களாக அல்லது கல்லூரிகளில் பேராசிரியர்களாக மட்டும்தான் ஆகின்றார்கள்போல. ஆனால் நான் மேலே சொன்ன துறைகள் அனைத்தும் - இதழியல், மொழிபெயர்ப்பு, புத்தகமாக்குதல் போன்றவை - தமிழ் சார்ந்தவை. நல்ல தமிழ் தெரிந்தவர்களால் இந்தத் துறைகளுக்கு மேலும் மெருகூட்ட முடியும். திரைப்படம், தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் ஆகியவற்றுக்கும் தமிழ் அறிந்தவர்கள் தேவை. திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுத படைப்புத் திறன் முக்கியம் என்றாலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட படைப்புகளைச் செப்பனிட தமிழறிந்த ஆட்கள் தேவை. அதேபோலத்தான் கணினி மொழியியல், இயற்கை மொழி ஆய்வு ஆகிய துறைகள். தமிழ்த் துறை மாணவர்கள் இதழியல், எடிட்டிங், மொழிபெயர்ப்பு, கணினி மொழியியல் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டால் தமிழ்ச் சமூகத்துக்குச் சிறந்த பணியாற்ற முடியும். நல்ல வேலைகளையும் பெற்று, நன்கு சம்பாதிக்கவும் முடியும். இப்படிப்பட்ட திறனுடன் மாணவர்களை உருவாக்க, பாடத்திட்டத்தில் மாறுதல்கள் தேவை. இதுதான் நான் பேசியதன் சாரம்.

ஆழி செந்தில்நாதன், மொழிபெயர்ப்பு குறித்து விரிவாகப் பேசினார். அவருடைய முழுப் பேச்சின் அச்சு வடிவத்தை என்னிடம் கொடுத்தார். அதை அவரே இணையத்தில் வெளியிடக்கூடும். தமிழ்ச் சந்தையின் பரப்பைப் புரிந்துகொண்டுள்ளதால் இன்று கூகிள், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ் இடைமுகத்தைத் தர முனைந்துள்ளன; நாளை ஆங்கிலத்தில் உள்ள பலவற்றையும் தமிழில் தர அவர்கள் முன்வருவார்கள்; எனவே தமிழாக்கத்துக்குப் பெரும் வாய்ப்புகள் உள்ளன; கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும் - இதுதான் அவருடைய பேச்சின் சாரம்.

***

இரண்டாம் நாள், மூன்று குழுக்களாகப் பிரிந்து, பாடத்திட்டங்கள் குறித்துக் கூடிப் பேசி, மூன்று அறிக்கைகள் தரவேண்டும் என்பதாக முடிவு செய்யப்பட்டது.

ஏன் மூன்று குழுக்கள்?

பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற படிப்புகள் தவிர்த்து, அனைத்துக் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ‘பகுதி ஒன்று’ என்பது தமிழ் மொழிப் பாடமாக இருக்கிறது. இதில் நான்கு தாள்கள். இதற்கான பாடத்திட்டத்தை உருவாக்குவதுதான் முதல் குழுவின் வேலை.

இரண்டாவது குழு, பி.ஏ (தமிழ்) என்ற இளங்கலைப் படிப்புக்கான பாடத்திட்டம் குறித்து விவாதிக்கும்.

மூன்றாவது குழு, எம்.ஏ (தமிழ்) முதுகலைப் படிப்புக்கான பாடத்திட்டம் குறித்து விவாதிக்கும்.

‘பகுதி ஒன்று’ படிக்கும் மாணவர்கள்தான் எண்ணிக்கைப்படி அதிகம். ஆனால் அவர்கள் மேலோட்டமாகத்தான் படிக்க முடியும். அவர்களுக்கு என்ன பாடத்திட்டம் இருக்கவேண்டும் என்று விவாதிக்கும் குழுவில்தான் நான் இருந்தேன். எனவே பிற இரு குழுக்களும் விவாதித்தது என்ன என்பதை என்னால் அறிய முடியவில்லை. இறுதியாக ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவர் வந்து பேசும்போது, அவர்களது இறுதி வரைவு என்ன என்பது தெரியவந்தது.

***

நான் இதற்குமுன் கல்லூரிப் பாடத்திட்டம் குறித்த ஒரு சந்திப்பில் கலந்துகொண்டிருக்கிறேன். சென்னையில் உள்ள ஒரு தன்னாட்சிக் கல்லூரி, என்னை அழைத்திருந்தது. அங்கே என்ன நடந்தது என்று அப்போது எழுதியிருந்தேன்.

இந்த விவாதத்தின்போதும் என் கருத்துகளைக் கிட்டத்தட்ட இதுபோலவே எடுத்துவைத்தேன். சங்கத்தமிழ், இலக்கியக் கோட்பாடுகள் ஆகியவற்றை விடுத்து, உரைநடைத் தமிழ், கதைகள், நாடகம், திரைப்படம், விளம்பரத்துறை, ஊடகத்துறை, மொழிபெயர்ப்பு, கணினி மொழியியல் ஆகியவற்றைக் கொண்டுவந்து சுவாரஸ்யமாகப் பாடங்கள் இருக்குமாறு செய்யலாமே என்பது என் கருத்து. இந்தக் குழுவில் வெளியாள் நான் ஒருவன் மட்டும்தான். மைசூர் நடுவண் இந்திய மொழிகள் மையத்திலிருந்து ஒருவர் இருந்தார். ஒருசில விஷயங்கள் குறித்து தீவிரமாக மறுத்து/எதிர்த்து என் கருத்தை வைத்தேன். அதற்குக் கடுமையாக எதிர்ப்பு வந்தால், வேலை பாதிக்கக்கூடாது என்பதால் என் கருத்தைப் பின்வாங்கிக்கொள்வது என்பதுதான் என் முடிவு. மேலும் நான் சில விவாதப் பொருள்களை முன்வைப்பது கலகமாகத்தான் என்றும் யாரும் கோபித்துக்கொள்ளவேண்டாம் என்றும் முன்னதாகவே கேட்டுக்கொண்டேன்.

நான்கு தாள்களில், தமிழின் நீண்ட, நெடிய இலக்கிய, இலக்கண, பண்பாட்டுப் பாரம்பரியத்தைச் சொல்லிவிடவேண்டும் என்ற கவலை பேராசிரியர்கள் அனைவரிடமும் இருந்தது. சங்க இலக்கியம், அற இலக்கியம், காப்பியங்கள், பக்தி இலக்கியம், பிரபந்த இலக்கியம், நவீன மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள்; இவைதவிர நவீன சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை என அனைத்தையும் சொல்லித்தரவேண்டும்; அத்துடன் தமிழர் பண்பாடு குறித்தும் சொல்லித்தரவேண்டும் என்றனர். எனக்கோ, பிழையின்றி எழுதுதல், கட்டுரைகளை அமைத்தல், கணினிகளையும் கணினிபோன்ற கருவிகளையும் தமிழில் பயன்படுத்துதல், அவரவர் துறையில் இருக்கும் ஆங்கில விஷயங்களைத் தமிழுக்குக் கொண்டுவருதல், கணினித் துறையைச் சேர்ந்தவராக இருந்தால் மொழியியலைக் கற்றுக்கொண்டு கணினி மொழியியல் துறையைப் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றைப் புகுத்தவேண்டும் என்ற ஆவல். இறுதியில் எல்லோருடைய விருப்பத்துக்கும் கொஞ்சம் கொஞ்சம் இடம் கொடுக்கப்பட்டு, கீழ்க்கண்ட பாடத்திட்டம் முன்மொழியப்பட்டது. இது ஏற்கெனவே இருக்கும் ஒன்றிலிருந்து எந்த அளவு வேறுபட்டது என்பதை நான் அறியேன்.

இளநிலைப் பட்ட வகுப்பு, பகுதி 1

தாள் 1:

அலகு 1: சங்க இலக்கியம்
அலகு 2: இக்கால இலக்கியம்: சிறுகதைகள்
அலகு 3: இலக்கிய வரலாறு (சங்க இலக்கியம், சிறுகதைகள்)
அலகு 4: பயன்பாட்டுத் தமிழ்: நிர்வாகத் தமிழ்/ஆட்சித் தமிழ்
அலகு 5: மொழித் திறன்: வாக்கிய அமைப்பு, பத்தி அமைப்பு, பிழை நீக்கம்

தாள் 2:

அலகு 1: அற இலக்கியம், பக்தி இலக்கியம்
அலகு 2: இக்கால இலக்கியம்: நாவல்
அலகு 3: இலக்கிய வரலாறு (அற இலக்கியம், பக்தி இலக்கியம், நாவல்)
அலகு 4: பயன்பாட்டுத் தமிழ்: கணினித் தமிழ்
அலகு 5: மொழித்திறன்: கட்டுரை எழுதுதல்

தாள் 3:

அலகு 1: காப்பியங்கள்
அலகு 2: இக்கால இலக்கியம்: நாடகம், கட்டுரைத் தொகுப்பு
அலகு 3: இலக்கிய வரலாறு (காப்பியம், நாடகம், கட்டுரைகள்)
அலகு 4: பண்பாட்டுத் தமிழ்: தமிழர் பண்பாடு - சங்ககாலம்முதல் ஐரோப்பியர் வருகைவரை
அலகு 5: மொழித்திறன்: படைப்பாக்கம்

தாள் 4:

அலகு 1: பிரபந்த இலக்கியம்
அலகு 2: இக்கால இலக்கியம்: மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள்
அலகு 3: இலக்கிய வரலாறு (பிரபந்தம், கவிதைகள்)
அலகு 4: பண்பாட்டுத் தமிழ்: தமிழர் பண்பாடு - ஐரோப்பியர் வருகைக்குப் பின், இன்றுவரை
அலகு 5: மொழித்திறன்: மொழிபெயர்ப்பு

***

பி.ஏ (தமிழ்) பாடத்திட்டத்தைத் தயாரித்தவர்கள், பி.லிட் (தமிழ்) பாடத்திட்டத்தில் தொல்காப்பியம் உள்ளது என்றும் ஆனால் பி.ஏ (தமிழ்) திட்டத்தில் அது இல்லை என்றும் அதைப் புகுத்தவேண்டும் என்றும் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர். ஆக, அவர்கள் முன்வைத்த பி.ஏ (தமிழ்) பாடங்களில் நன்னூல், தொல்காப்பியம் இரண்டும் இருந்தன. எம்.ஏ (தமிழ்) தாள்களிலும் தொல்காப்பியம், அனைத்து உரைகளுடன் இருந்தன.

பி.ஏ (தமிழ்) என்றாலுமே அங்கு சங்க இலக்கியத்தை ஆழ்ந்து கற்கவேண்டுமா, தொல்காப்பியத்தைக் கற்கவேண்டுமா என்ற கேள்வி எனக்கு இருக்கிறது. முதலில் பொதுத்தமிழ் பகுதியிலேயே சங்க இலக்கியம் முதல் பிரபந்தம் வரை, மரபுக்கவிதை, புதுக்கவிதை ஆகியவையும் சேர்த்து இருக்கவேண்டுமா என்ற என் அடிப்படைக் கேள்வி அப்படியே உள்ளது. மேலும், ‘இலக்கிய வரலாறு’ என்ற விஷயம் பற்றியும் என் எதிர்ப்பைத் தெரிவித்தேன், சில அருமையான சிறுகதைகளைப் படிப்பது நல்ல விஷயம். ஆனால் சிறுகதை என்னும் கோட்பாடு பற்றியும், எது சிறுகதை, அதன் கூறுகள் என்னென்ன என்பதைக் கற்பதும் எந்த அளவுக்கு பொதுத்தமிழின் தேவை என்பதுதான் என் கேள்வி. ஆனால் என் கருத்துக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. நான் மீண்டும் அமைதியானேன்.

இரண்டாம் நாள் இறுதியில் பேசும்போது என் கருத்துகள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டேன். தமிழர்களின் தொன்மையே ஒருவிதத்தில் அவர்கள் கழுத்தைச் சுற்றியுள்ள கருங்கல்லாக ஆகிவிட்டதோ என்ற என் எண்ணத்தைச் சொன்னேன். அந்த நீண்டகால வரலாற்றின் அனைத்துக் கூறுகளையும் எப்படியாவது மாணவர்களுக்குச் சொல்லித் தந்துவிடவேண்டும் என்ற பதற்றம் பேராசிரியர்களுக்கு இருக்கிறது. ‘சங்கத் தமிழில்’தான் ஆரம்பிக்கவேண்டும் என்று அவர்கள் அடம் பிடிப்பதும் இதனால்தான். இன்றைய தேவை என்று நான் பார்ப்பது தமிழைப் பிழையின்று எழுதுதல், தமிழில் உலக விஷயங்கள் அனைத்தையும் கொண்டுவருதல், நாம் எதைச் சொல்ல விரும்பினாலும் அதைத் தமிழில் சொல்லக்கூடிய நிலையை அடைதல், உலக அறிவு அனைத்தும் தமிழில் எழுத்துகளாக, புத்தகங்களாகக் கொண்டுவரப்படுதல், தமிழர்கள் தங்களுக்குள் பேச, எழுத தமிழைத் தடையின்றிப் பயன்படுத்துதல், பொது ஊடகங்களில் புழங்கும் தமிழ் பிழையின்றி இருத்தல் ஆகிய இவையே. இதற்குமேலாக, தமிழை விரும்பிப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்கள் தமிழின் தொன்மையை, தமிழின் இலக்கியச் சுவையை, தமிழ் இலக்கணத்தின் மேன்மையை, தமிழர்தம் பண்பாட்டை உணர்ந்துகொண்டால் போதும். மேலும், பண்பாடு என்பதை வரலாற்றுப் பாடமாகத்தான் சொல்லித்தரவேண்டும்; தமிழ்ப் பாடமாக அல்ல என்பதும் என் கருத்து.

***

தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றின்கீழும் பல கல்லூரிகள் உள்ளன. அவற்றில் சில கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனக்கென பாடத்திட்டத்தை உருவாக்கிக்கொள்கிறது. தன்னாட்சிக் கல்லூரிகள் ஒவ்வொன்றும் தத்தம் சொந்தப் பாடத்திட்டத்தை வைத்துக்கொள்கின்றன. ஒரு குழு சேர்ந்து ஒரு பாடத்திட்டத்தை அனைவர்மீதும் திணிக்க முடியாது. ஒற்றைப் பாடத்திட்டம் என்பது கல்லூரி அளவில் நல்லதும் அல்ல.

என்னைப் பொருத்தமட்டில் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டது எனக்குப் பயனுள்ளதாக இருந்தது. பாடத்திட்டங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்து ஒரு மேலோட்டமான புரிதல் ஏற்பட்டது. மாற்றுக் கருத்துகளைக் கொஞ்சமாவது முன்வைக்க முடிந்தது. அதில் ஒரு சிலவற்றையாவது ஏதேனும் ஓரிரு கல்லூரிகள் ஏற்றுக்கொள்ளக்கூடும். தனிப்பட்ட முறையில் பல பேராசிரியர்களுடன் பேச முடிந்தது. இவர்கள் அனைவரையும் நான் முதன்முதலாகப் பார்க்கிறேன். அவர்களுக்கு தாம் கற்றுத்தரும் கல்வியில் கொஞ்சமாவது அதிருப்தி இருப்பதாக எனக்குத் தோன்றியது. மாறும் உலகத்துக்கேற்ப பாடங்களை மாற்றவேண்டும், தம் மாணவர்களின் தரத்தை உயர்த்தவேண்டும் என்று அவர்கள் பலரும் விரும்புவது தெரிந்தது. பாடத்திட்ட உருவாக்கம் மிகவும் கெட்டித்தட்டிப்போய் இறுகிக்கிடக்கிறது என்று பலரும் வெளிப்படையாகவே சொன்னார்கள்.

ஒவ்வொரு கல்லூரிக்குமே பாடத்திட்டத்தை ஏற்படுத்துவதில் தன்னாட்சி அதிகாரம் வேண்டும் என்று நான் கருதுகிறேன். பாடம் நடத்தும் பேராசிரியர்தான், மாணவர்களுக்கு ஏற்ற பாடத்திட்டத்தைத் தீர்மானிக்கவேண்டும். ஆனால் நடைமுறையில் பல குளறுபடிகள் ஏற்படலாம் என்ற பயம் பொதுவாகவே இருக்கிறது. அதனால்தான் பல்கலைக்கழகம் என்ற அமைப்பு பாடத்திட்டத்தை உருவாக்கி, மேலிருந்து கீழாக அனைத்துக் கல்லூரிகள்மீதும் திணிக்கவேண்டும் என்ற அமைப்பை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

உலகத்தரம், உலகத்தரம் என்று சொல்கிறோமேதவிர, உண்மையில் நாம் உருவாக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் எழுத்துக்கூட்டிப் படிக்கக்கூட லாயக்கற்றவர்களாக இருக்கின்றனர். அது பள்ளிக்கூட ஆசிரியர்களின் பிழை என்று சாக்குப்போக்கு சொல்லித் தப்பித்துவிடுகிறார்கள் கல்லூரிப் பேராசிரியர்கள். ஒட்டுமொத்த கல்விப்புலக் குறைபாடு அது என்பதை நாம் உணர்ந்துகொண்டால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

என்னிடம் பதில்கள் ஏதும் இல்லை. ஓரத்திலிருந்து எட்டிப் பார்த்து, கல்விச் சூழலைப் புரிந்துகொள்ள முடியுமா என்ற நிலையில்தான் நான் இருக்கிறேன்.

Monday, December 02, 2013

மதுரையின் முற்றுகை: கடவுள்கள், அரசர்கள், அடிமைகள்

Gods, Kings & Slaves: The Siege of Madurai, R.Venkatesh, Hachette India, Rs. 395 (Paperback).

கொஞ்சம் கனமான புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கையில் இடையில் சற்றே இளைப்பாறப் படிக்க எடுத்தது இந்த வரலாற்றுப் புதினத்தை. தமிழில் சில வரலாற்றுப் புதினங்களை எழுதியுள்ள ஆர். வெங்கடேஷ், ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் முதல் நாவல்.

மதுரையின் இரண்டாம் பாண்டியப் பேரரசின் வீழ்ச்சியையும் மாலிக் காஃபுர் தலைமையில் மதுரைமீதான இஸ்லாமியப் படையெடுப்பையும் இணைக்கும் கதை. மிக மிகச் சுவாரசியமாகச் சொல்லிச் சென்றுள்ளார். உண்மையில் முதல் 19 அத்தியாயங்கள் அவ்வளவு வேகமான இருந்ததால் அந்த வேகம் குறையத் தொடங்கும் 20-வது அத்தியாயம் ஒருவிதத்தில் கவுண்டர்-கிளைமாக்ஸ் ஆகிவிடுகிறது.

குலசேகர பாண்டியனின் மகன்கள் வீரபாண்டியன், சுந்தரபாண்டியன். இதில் இளையவன் சுந்தரபாண்டியன் பட்டத்து ராணிக்குப் பிறந்தவன். மூத்தவன் வீரபாண்டியன் ‘துணைவி’ ஒருத்திக்குப் பிறந்தவன். வீரபாண்டியனுக்குத்தான் முதலில் இளவரசுப் பட்டம் கட்டப்படுகிறது. சுந்தரபாண்டியனுக்கும் சில ஆண்டுகள் கழித்து இளவரசுப் பட்டம் கட்டப்படுகிறது. வீரபாண்டியனுக்கு அரசு கிடைத்துவிடுமோ என்று சந்தேகத்தில் தன் தந்தையைக் கொன்றுவிட்டு மதுரையைக் கைப்பற்றிக்கொள்கிறான் சுந்தரபாண்டியன். அவனை எதிர்த்துத் துரத்தி ஓடச் செய்து மதுரையைத் தான் பிடித்துக்கொள்கிறான் வீரபாண்டியன். வெறுப்பில் நாடு முழுதும் அலையும் சுந்தரபாண்டியன், வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் படையெடுத்துவரும் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக் காஃபுரிடம் உதவி கோருகிறான். இறுதியில் இஸ்லாமியப் படைகள் மதுரையைத் தாக்கிக் கொள்ளையடித்துச் செல்கின்றன.

அதன்பின்னும் சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும் தங்கள் சண்டையைத் தொடர்கின்றனர். அடுத்த பத்தாண்டுகளில் மேலும் இருமுறை கில்ஜியின் தளபதிகள் மதுரையைத் தாக்குகின்றனர். 1323-ல் நடந்த கடைசித் தாக்குதலில் மதுரையின் ஆட்சி முஸ்லிம்கள் வசம் செல்கிறது. மதுரை சுல்தான்கள் சில பத்தாண்டுக் காலம் ஆட்சி நடத்துகின்றனர். 1371-ல் விஜயநகரப் பேரரசின் குமார கம்பண்ண உடையார் மீண்டும் மதுரையைக் கைப்பற்றும்வரையில் மதுரை, முஸ்லிம் சுல்தான்கள் கையில் இருக்கிறது.

இது உண்மை வரலாறு. நான் மேலே எழுதியதுபோல எழுதினால் அது போரடிக்கும்.

ஆனால் ஆர்.வெங்கடேஷின் கையில் இந்தக் கதை பேருருவம் அடைகிறது. முக்கியமாக மாலிக் காஃபுரின் வாழ்க்கை, ஒரு ஹாலிவுட் சினிமாவுக்குரிய பிரம்மாண்டத்தை அடைகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் வீரபாண்டியனும் மாலிக் காஃபுரும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டே வருகிறார்கள். ஓர் இந்து பனியா, அலியாக்கப்பட்டு, அடிமையாக்கப்பட்டு, பின்னர் அலாவுதீன் கில்ஜியையே அடக்கி ஆளக்கூடிய படைத் தளபதியாக ஆவது அச்சு அசல் சினிவாக்கான திரைக்கதை. அதன் காரணமாக, மாலிக் காஃபுரின் கொடூரச் செயல்களை ஆசிரியர் கொஞ்சம் நீர்க்கடிக்கிறார். இந்துத்துவர்கள் இதைக்கண்டு கொதித்தெழலாம். மாலிக் காஃபுரின் வெறிச் செயல்களுக்கு அடிப்படைக் காரணம் உள்ளது, அது கொஞ்சம் நியாயமானதும்கூட என்பதாக உள்ளது ஆசிரியரின் சில கூற்றுகள். ஆனால் இது வரலாற்றுப் புத்தகம் அல்ல, வரலாற்றுப் புனைகதைதான்.

எனக்கு இந்த வரலாறு ஓரளவு தெரியும் (பேராசிரியர் கே.வி.இராமனின் ‘பாண்டியர் வரலாறு’ மேசையில் உள்ளது) என்றாலும், கதையில் மூழ்கிப்போய் வீரபாண்டியனும் மாலிக் காஃபுரும் ஒரு மாபெரும் யுத்தத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளக்கூடாதா என்று மனம் நினைக்கும் அளவுக்கு கதையின் போக்கை வடித்திருக்கும் ஆர்.வெங்கடேஷைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஒரு பாபுலர் புனைகதைக்கு ஏற்றவகையில் ஆங்காங்கே செக்ஸ் சீன்கள் வருகின்றன. கல்கியை விடுங்கள், சாண்டில்யன்கூடக் கொஞ்சம் வெட்கப்படுவார். நீங்கள் மகிழ்ச்சி அடையலாம். ஏனெனில் இது 21-ம் நூற்றாண்டு. வீரபாண்டியனின் பாலியல் திருவிளையாடல்கள் முழுவதும் புனைகதையாக மட்டுமே இருக்க வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன். வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.

கில்ஜிகள் பற்றியும் மாலிக் காஃபுர் பற்றியும் எனக்கு மிக மிகக் குறைவாகவே தெரியும். காஃபுர் குறித்து மேலும் படிக்க ஆவலைத் தூண்டியிருக்கிறது இந்தப் புத்தகம்.

கொஞ்சம் செக்ஸ், நிறைய வீரம், மிலிட்டரி ஸ்ட்ரேட்டஜி, கொஞ்சம் அமானுஷ்யம், தேவையான அளவு ஆழமான அடிப்படை ஆராய்ச்சி, ஒரு த்ரில்லர் கதையைப் படுவேகமாக சொல்லிச்செல்லும் எளிமையான ஆங்கில மொழி, அத்தியாயங்களை அடுக்கிவைத்துள்ள பாங்கு, புத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழே வைக்கவிடாத கதையமைப்பு. அருமையான புத்தகம் என்ற பாராட்டைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

எழுத்தாளர் தமிழிலும் எழுதக்கூடியவர் என்பதால் இந்தக் கதை தமிழிலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆங்கிலம் படிக்க முடியாதவர்கள் காத்திருங்கள்.