Tuesday, February 26, 2013

NHM Reader-இல் அசோகமித்திரன் புத்தகங்கள்

NHM Reader - தமிழ் மின்-புத்தகப் படிப்பான் செயலி இப்போது iOS இயங்குதளத்தில் மட்டுமே கிடைக்கிறது. ஆண்டிராய்ட் செயலி வெகு விரைவில் கிடைக்கத் தொடங்கிவிடும். கடைசிக் கட்டப் பரிசோதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

[NHM Reader-ஐ இறக்கிக்கொள்ள, உங்கள் ஐஃபோன் அல்லது ஐபேடில் App Store சென்று, NHM Reader என்று தேடி, இலவசமாக டௌன்லோட் செய்துகொள்ளுங்கள்.]

கொஞ்சம் கொஞ்சமாகப் புத்தகங்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளோம். புத்தகங்களைச் சேர்க்கும்போதும் ஆப்பிள் நிறுவனம், அவற்றைப் பரிசீலித்தபின்னரே அனுமதிக்கிறது என்பதால் கொஞ்சம் கால தாமதம் ஆகிறது. இந்தச் சுற்றுக்கான நேரம் எவ்வளவு என்பது இப்போதுதான் கொஞ்சம் புரிபடத் தொடங்கியிருக்கிறது. விரைவில் மேலும் மேலும் அதிகப் புத்தகங்களைச் சேர்க்கத் தொடங்குவோம். இந்தப் புத்தகங்கள் அனைத்தையும் இப்போதைக்கு ஆப்பிள் மூலமாக, App உள்ளிருந்தேதான் வாங்க முடியும். விரைவில், வெளியிலிருந்து (எங்கள் மின் வணிகத் தளத்திலிருந்து) வாங்கி, NHM Reader மின் படிப்பானில் படிக்குமாறு செய்ய உள்ளோம்.

இன்றுமுதல் அசோகமித்திரனின் நாவல்கள் அனைத்தையும் (ஒற்றன் நீங்கலாக - ஒற்றன் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது) நீங்கள் NHM Reader மூலம் வாங்கிப் படிக்கலாம். இவை: கரைந்த நிழல்கள், தண்ணீர், 18-வது அட்சக்கோடு, மானசரோவர், ஆகாயத் தாமரை, இன்று ஆகியவை அடங்கும். இவற்றில் இரண்டை நாங்களே ஆங்கிலத்தில் கொண்டுவந்துள்ளோம். அவையும் NHM Reader மூலம் படிக்கக் கிடைக்கும். அவை: Star-Crossed (கரைந்த நிழல்கள்), Today (இன்று).

மின்புத்தகங்களாக இவற்றைப் படிக்கும் அனுபவத்தை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

[26 பிப் 2013 அப்டேட்: புத்தகங்களின் விலை யு.எஸ்.டாலரில் $0.0 என்று தெரிகிறது என்று சிலர் சொல்லியிருந்தனர். அது ஒரு bug. இந்திய ரூபாயில் சரியாகத் தெரிகிறது. இந்தச் சில்லறைத் தவறை சரி செய்து அப்ளிகேஷனை மீண்டும் அனுப்பியுள்ளோம். அது நிறுவப்படும்வரை இந்தப் பிரச்னை இருக்கும். தவறுக்கு வந்துகிறோம்.

28 பிப் 2013 அப்டேட்: மேற்கண்ட பிரச்னை சரி செய்யப்பட்டுவிட்டது. விலை 0.0 என்று சொல்லி, பின் வாங்கும்போது விலை வருமாறு இனி இருக்காது.]

Wednesday, February 13, 2013

அலமாரி - புத்தக விரும்பிகளுக்கான மாத இதழ்

ஜனவரி 2013 முதல் NHM ஒரு புது மாத இதழை அறிமுகம் செய்துள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சியில் எங்கள் கடைக்கு வந்த அனைவருக்கும் இந்த இதழைக் கொடுத்தோம். இந்த மாதம் முதல் இது டாப்லாய்ட் வடிவில் வெளியாகும். ஒவ்வொரு மாதமும் 7 முதல் 15 தேதிக்குள் இந்த இதழ் வெளியிடப்படும். எட்டு பக்கங்கள் கொண்ட இதழ் இது. பெரும்பாலும் புதிய புத்தகங்களையும் சில பழைய புத்தகங்களையும் அறிமுகம் செய்வதுதான் இந்த இதழின் நோக்கம். நீண்ட விமரிசனக் கட்டுரைகளைத் தருவது இந்த இதழின் நோக்கமல்ல. குறிப்பிட்ட கருத்தியல் சாயல் கொண்ட புத்தகங்களை மட்டும் அறிமுகப்படுத்தும் சில இதழ்களைப் போலன்றி, அனைத்துவிதமான புத்தகங்களையும் அறிமுகப்படுத்துவதுதான் இந்த இதழின் நோக்கம்.

அவ்வப்போது எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுடனான பேட்டிகளையும் பிரபலமானவர்கள் படிக்கும் அல்லது பரிந்துரைக்கும் புத்தகங்களையும் இந்த இதழில் வெளியிடுவோம்.

இந்த இதழை நீங்கள் சந்தா செலுத்திப் பெறலாம். இதழ் விலை ரூபாய் 5/-. ஆண்டுச் சந்தா ரூபாய் 50/-. ஆன்லைனில் சந்தா செலுத்த விரும்புபவர்கள் இங்கே செல்லவும்.

பிப்ரவரி இதழின் முதல் பக்கத்தைக் கீழே காணவும்.

கடந்த இரு இதழ்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்கள், உங்கள் பார்வைக்கு:
  1. ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை - செவ்வியல் அரசியல் பொருளாதாரம், எஸ். நீலகண்டன், காலச்சுவடு
  2. அயல் மகரந்தச் சேர்க்கை, ஜி. குப்புசாமி, வம்சி
  3. பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே, முனைவர் துளசி. இராமசாமி, விழிகள்
  4. அசடன், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, பாரதி பதிப்பகம்
  5. 6174, க. சுதாகர், வம்சி
  6. பயணக்கதை, யுவன் சந்திரசேகர், காலச்சுவடு
  7. வாசக பர்வம், எஸ். ராமகிருஷ்ணன், உயிர்மை
  8. பட்சியின் சரிதம், இளங்கோ கிருஷ்ணன், காலச்சுவடு
  9. சப்தரேகை, ராணிதிலக், அனன்யா
  10. வேளாண் இறையாண்மை, பாமயன், தமிழினி
  11. தோல், டி. செல்வராஜ், NCBH
  12. ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம், திருச்சி வேலுசாமி, தோழமை வெளியீடு
  13. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், சுப்ரமணியன் சுவாமி, கிழக்கு பதிப்பகம்
  14. பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், என். கணேசன், பிளாக்ஹோல் பப்ளிகேஷன்
  15. ஆடத் தெரியாத கடவுள், நீதிபதி எஸ். அகாராஜன், விகடன் பிரசுரம்
  16. சூடிய பூ சூடற்க, நாஞ்சில் நாடன், தமிழினி
  17. இங்கிதம் பழகு, கிரண்பேடி, பவுன் சவுத்திரி, விஸ்டம் வில்லேஜ்
  18. எட்றா வண்டியெ, வா.மு. கோமு, உயிர்மை
  19. பரதகண்ட புராதனம், டாக்டர் கால்டுவெல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  20. மாற்று சினிமா, கிராபியன் ப்ளாக், புதிய கோணம்
  21. எரியும் பனிக்காடு, எச். டேனியல், விடியல் பதிப்பகம்
  22. எம்.ஜி.ஆர். கொலை வழக்கு, ஷோபா சக்தி, கருப்பு பிரதிகள்
  23. தமிழகத்தில் தேவரடியார் மரபு, டாக்டர் நர்மதா, போதிவனம்
  24. என் சரித்திரம், உ.வே. சாமிநாதையர், உ.வே.சா. நூலகம்
  25. ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம் , திருச்சி வேலுசாமி, தோழமை வெளியீடு
  26. இந்திய சரித்திரக் களஞ்சியம் (8 தொகுதிகள்), ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்.
  27. அறம், ஜெயமோகன், வம்சி
  28. எந்த ஊரில் என்ன ருசிக்கலாம், ப்ளாக்ஹோல் மீடியா
  29. பாபர் நாமா, ஆர்.பி. சாரதி, மதி நிலையம்
  30. தாயார் சன்னதி, சுகா, சொல்வனம் வெளியீடு
  31. காற்றால் நடந்தேன், சீனு ராமசாமி, உயிர்மை
  32. திராவிட இயக்க வரலாறு, முரசொலி மாறன், சூரியன் பப்ளிகேஷன்ஸ்
  33. மனநல மருத்துவர் இல்லாத இடத்தில், _, அடையாளம் பதிப்பகம்
  34. விஷ்ணுபுரம், ஜெயமோகன், நற்றிணை
  35. உணவே மருந்து, டாக்டர் எல். மகாதேவன், காலச்சுவடு
  36. காங்கிரஸ் மகாசபை சரித்திரம், பட்டாபி சீதாராமையா, அலைகள் வெளியீட்டகம்
  37. வயது வந்தவர்களுக்கு மட்டும், கி. ராஜநாராயணன், அகரம்
  38. வாலிப வாலி, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம்
  39. பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம், பழ. நெடுமாறன், தமிழ்க்குலம் வெளியீடு
  40. கரிகால் சோழன், டாக்டர் ரா. நிரஞ்சனாதேவி, விகடன் பிரசுரம்
  41. நாடாளுமன்றத்தில் வைகோ, தொகுப்பாசிரியர்: மு. செந்திலதிபன், பிரபாகரன் பதிப்பகம்
  42. உடையும் இந்தியா?, ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம்
  43. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது, அ. முத்துலிங்கம், உயிர்மை
  44. வாலிப வாலி, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம்
  45. திராவிட இயக்கம் புனைவும் உண்மையும், மலர்மன்னன், கிழக்கு பதிப்பகம்
  46. பல்லவர் வரலாறு, ராசமாணிக்கனார், பூம்புகார் பதிப்பகம்
  47. ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், பிரான்ஸிஸ் ஹாரிசன், காலச்சுவடு
  48. ஜாலியா தமிழ் இலக்கணம், இலவச கொத்தனார், கிழக்கு பதிப்பகம்
  49. மௌனி படைப்புகள், சுகுமாரன், காலச்சுவடு
  50. பாபர் நாமா, மதி நிலையம்
  51. இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு, அசோகமித்திரன், நற்றிணை
  52. மாநகர் மதுரை அன்றும் இன்றும், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம்
  53. முகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள், வின்ஸண்ட் ஸ்மித், சந்தியா பதிப்பகம்
  54. வலுவான குடும்பம் வளமான இந்தியா, பேராசிரியர் ப.கனகசபாபதி, கிழக்கு பதிப்பகம்
  55. சர்க்கரை நோயும் அதைத் தீர்க்கும் முறைகளும், பச்சையப்பன், கடலங்குடி
  56. சோழர் வரலாறு, ராசமாணிக்கனார், பூம்புகார் பதிப்பகம்
  57. அஞ்ஞாடி, பூமணி, க்ரியா
  58. டாக்டர் இல்லாத இடத்தில், டேவிட் வெர்னர், அடையாளம் பதிப்பகம்
  59. அறிவியல் வரலாறு, எஸ். கிரிகர், முகம்
  60. நாடாளுமன்றத்தில் வைகோ, மு. செந்திலதிபன், பிரபாகரன் பதிப்பகம்
  61. காந்தியை அறிதல், தரம்பால், காலச்சுவடு
  62. தமிழ்நாட்டில் காந்தி, தி.சே.சௌ. ராஜன், சந்தியா பதிப்பகம்
  63. இந்திய வரலாறு ஓர் அறிமுகம், டி.டி.கோசாம்பி, விடியல் பதிப்பகம்
  64. சின்மயி விவகாரம் மறுபகத்தின் குரல், விமலாதித்த மாமல்லன், சத்ரபதி வெளியீடு
  65. நடந்தது நடந்தபடி, ஏ.எம்.சுவாமிநாதன், நர்மதா பதிப்பகம்
  66. சயாம் மரண ரயில், சண்முகம், தமிழோசை பதிப்பகம்
  67. பாட்ஷாவும் நானும், சுரேஷ் கிருஷ்ணா, வெஸ்ட்லாண்ட்
  68. உலக வரலாறு என்சைக்ளோ பீடியா, தொகுப்பு, பாரகன்
இந்தப் புத்தகங்கள் அனைத்தையும் டயல் ஃபார் புக்ஸ் (094459-01234, 09445-979797) மூலம் ஃபோன் செய்து வாங்கிக்கொள்ளலாம்.

இந்த இதழை இலவசமாக (ஒரு இஷ்யூ மட்டும்!) பெற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால் ஹரன்பிரசன்னாவுக்கு (hp@nhm.in) ஓர் அஞ்சலைத் தட்டிவிடுங்கள்.

நீயா, நானா: இளைஞர்கள் vs களப்பணியாளர்கள்

சென்ற ஞாயிறு அன்று காட்டப்பட்ட நீயா, நானா நிகழ்ச்சியை யூட்யூபில் பார்த்தேன். பார்க்காதவர்கள் நேரம் செலவழித்துப் பார்த்துவிடுங்கள்.

http://www.youtube.com/watch?v=QubyOMCTkHc&list=ELCGfx6tAff04&index=46

கல்லூரிகளில் இளநிலை படிக்கும் மாணவர்கள் ஒருபக்கம். பத்திரிகையாளர்கள், களப்பணியாளர்கள், அரசியல்வாதி(கள்) மறுபக்கம். இன்றைய மாணவர்கள் சமூக, அரசியல் நிகழ்வுகளை எந்த அளவுக்குப் புரிந்துவைத்துள்ளனர், அவர்களுடைய அரசியல், சமூக நிலைப்பாடுகள் என்னென்ன என்பது தொடர்பான விவாதம்.

இளைய மாணவர்கள் யாரும் ஆழமான புரிதலைக் காண்பிக்கவில்லை. இதில் வியப்பு ஏதும் இல்லை. மாணவர்களின் பேச்சிலிருந்து கீழ்க்கண்ட விஷயங்கள் தெரியவந்தன.
  1. அவர்கள் தமிழ் தினசரி, வார, மாத இதழ்களைப் படிப்பதில்லை.
  2. அவர்கள் தமிழ் எழுத்தாளர்கள் எழுதும் புத்தகங்கள் எவற்றையும் படிப்பதில்லை. தமிழ் எம்.ஏ படிக்கும் ஒரு மாணவர் மு.வரதராசனார் தாண்டி யாரையும் சொல்லவில்லை.
  3. இட ஒதுக்கீட்டில் பலன் பெறுவோர்கூட அதுகுறித்த தாழ்வு மனப்பான்மையையே கொண்டிருக்கிறார்கள்.
  4. அரசியல் என்றால் சாக்கடை என்ற பொதுவான கருத்து அவர்களிடம் நிலவுகிறது.
  5. தொலைக்காட்சி ஊடகங்கள் பெரிதாக்கும் விஷயங்களைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தெரிவதில்லை.
  6. அடிப்படை விஷயங்கள் தெரியாத காரணத்தால் கொஞ்சம் தீவிரமாகக் கேள்வி கேட்டால் எனக்குத் தெரியாது என்று பின்வாங்கிவிடுகின்றனர்.
  7. அரசியல் தொடர்பாக எந்தக் கருத்தும் சொல்லப் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை, அல்லது அவர்களுக்கு எந்தக் கருத்துமே இல்லை.
மறுபக்கம் களப்பணியாளர்கள் மிகவும் அதீதமான முகபாவங்களைக் காட்டி அதிர்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர். ஆனால் சிறிது நேரத்துக்குப் பிறகு சில களப்பணியாளர்களாவது, தாம்தாம் மாணவர்களிடம் சென்று சேராமல் ஒரு சிறு குழுவாக இருந்துவிட்டோமோ என்ற தம் அச்சத்தை வெளிப்படுத்தினர்.

களப்பணியாளர்களாக அங்கு வந்திருந்த அனைவருமே திராவிட அல்லது இடதுசாரிப் பின்புலம் கொண்டவர்கள். பிற களப்பணியாளர்களே தமிழகத்தில் ஒருவேளை இல்லை போலிருக்கிறது. எனவே இவர்கள் அனைவரிடமும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான கருத்துகள்தான் நிலவின.

இளைஞர்கள் எம்மாதிரியான புத்தகங்களைப் படிக்கவேண்டும் என்று களப்பணியாளர்கள் கொடுத்த பரிந்துரை கீழே:
இளைஞர்கள் எம்மாதிரியான புரிதலை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று களப்பணியாளர்கள் கொடுத்த அறிவுரைகள் இதோ:
  1. பல இடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட நியூட்ரினோ ஆய்வுச்சாலை, இப்போது தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது. அந்த மாவட்டங்களில் உள்ள மாணவர்களாவது அது பற்றி அறிந்துகொள்ளவேண்டும்.
  2. சாலையோரக் கழிப்பறைகள், பெண்கள் எவ்வாறு இதனால் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
  3. மேற்குத் தமிழகத்தில் பல இடங்களில் இரண்டு டம்ளர்கள் அல்ல, நான்கு டம்ளர்கள்வரை டீக்கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. அது பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
  4. வீட்டின் பக்கத்தில் இருக்கும் குடிசைப் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையைப் பாருங்கள். உதாரணமாக வட சென்னைக்குச் செல்லுங்கள்.
  5. அரசு மருத்துவமனை சென்று பாருங்கள்.
  6. (அரசியல்ரீதியாக) உங்கள் சுயசரிதையை எழுதுங்கள்.
இட ஒதுக்கீடு, சமூக நீதி தொடர்பான என் கருத்துகளை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

Monday, February 11, 2013

அஞ்சலி: மலர்மன்னன்

எழுத்தாளர் மலர்மன்னன் இரு தினங்களுக்குமுன், சனிக்கிழமை காலை 4.45 மணிக்கு இறந்துபோனார். கிழக்கு பதிப்பகத்துக்காக ஆரிய சமாஜம், திமுக உருவானது ஏன், திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் ஆகிய மூன்று நூல்களை எழுதியுள்ளார். இது தவிர, பிற பதிப்பகங்கள்மூலம் அவருடைய பல நூல்கள் வெளிவந்துள்ளன.

அவர் சென்ற வாரம் என் அலுவலகத்துக்கு வந்ததுகூட அவர் எழுதி, பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள ‘நாயகன் பாரதி’ என்ற புத்தகத்தின் பிரதியைக் கொடுத்துவிட்டுச் செல்லத்தான். பாரதியின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை மையமாக வைத்து, அவற்றையே கதைபோல எழுதியிருந்தார். அந்தக் கதைகள் சிலவற்றுடன் அவருடைய வேறு சில கதைகளையும் சேர்த்து பழனியப்பா பிரதர்ஸ் இந்தப் புத்தகத்தைக் கொண்டுவந்துள்ளது.

என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, தனக்கு நெஞ்சு வலி அதிகமாக ஆகியிருப்பதாகச் சொன்னார். உடனடியாக மருத்துவமனை செல்லச் சொன்னேன். ஆனால் நெஞ்சு வலி தொடர்பான சிகிச்சை என்றால் நிறையப் பணம் செலவாகுமே என்றார். அவருக்கு தற்போதைய அரசியல் அமைப்பில் பதவி வகிக்கும் சிலரை நெருக்கமாகத் தெரியும். அவர்கள் ஒரு வார்த்தை சொன்னால் சென்னை அரசு பொது மருத்துவமனையிலேயே நல்ல சிகிச்சை தருவார்கள் என்று சொன்னேன். சில ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையாளர் ஞாநி பொது மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டதைப் பற்றி எழுதியிருந்தார். அதை மலர்மன்னனிடம் குறிப்பிட்டேன். சரி, பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அடுத்த இரு தினங்களில் நான் தில்லி சென்றுவிட்டேன். தில்லியில் இருக்கும்போது வெள்ளிக்கிழமை இரவு அவரிடமிருந்து போன் வந்தது. அவரைப் பார்த்துக்கொள்பவர்தான் பேசினார். வலி அதிகமாகியிருப்பதாகவும் பொது மருத்துவமனைக்குச் செல்லலாமா அல்லது ஒரு தனியார் மருத்துவமனை பெயரைக் குறிப்பிட்டு அந்த மருத்துவமனைக்குச் செல்லலாமா என்றும் கேட்டார். நான் மீண்டும் மலர்மன்னனுக்கு நன்கு தெரிந்த, (பதவியில் இருக்கும்) ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியின் பெயரைச் சொல்லி அவரிடம் பேசினீர்களா என்று கேட்டேன். அவரிடம் பேசியாயிற்று என்றும் பொது மருத்துவமனைக்கு அவரும் தகவல் சொல்லி, உடனடியாகப் போய் சேர்ந்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டார் என்றும் சொன்னார்.

ஆனால் சனி காலை 5 மணிக்கு போன் வந்தது, அவர் இறந்துவிட்டார் என்று. மருத்துவமனை சென்று சிகிச்சை ஆரம்பம் ஆவதற்கு முன்னதாகவே உயிர் போய்விட்டது. அவர் கொஞ்சம் முன்னேற்பாடாக மருத்துவமனைக்கு உடனே சென்றிருந்தால் தன் உயிரை ஒருவேளை காப்பாற்றியிருக்கலாம்.

***

மலர்மன்னன் பலமுறை என் அலுவலகம் வந்துள்ளார். பொதுவாக அவர் எங்களுக்காக எழுதும் புத்தகத்தைப் பற்றி மட்டும்தான் அவருடன் பேசுவேன். அவருடைய தீவிர இந்துத்துவக் கொள்கை எனக்கு ஏற்புடையதன்று. ஒரிஸ்ஸா கந்தமால் விவகாரம் பற்றி அவருடன் வாதிட்டிருக்கிறேன். அயோத்தி ராமர் கோவில் விவகாரம் பற்றிப் பேசியிருக்கிறேன். கோத்ரா சம்பவம் பற்றிப் பேசியிருக்கிறேன்.

அவருடைய இளம் வயதில் அவர் எப்படி இருந்திருப்பார் என்று தெரியாது. அவர் சட்டை அணிந்து நான் பார்த்திருக்கிறேன் என்று ஞாபகம், ஆனால் திடீரென சட்டை அணிவதைத் துறந்து, சந்நியாசிகளுக்கான காவி உடுப்பும் மேலே ஒரு துண்டும், பூணூல் இல்லாமலும், நீண்ட தாடியுமாகக் காட்சியளிக்கத் தொடங்கினார். ஒரு முறை நான் கேட்டபோது இப்ப நான் சந்நியாசிதான் என்று சொன்னார். ஒருமுறை உணவு பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ‘ஒரு சந்நியாசியாக யாராவது எனக்கு என்ன பிட்சை போட்டாலும், அது மாமிசமாக இருந்தால்கூட அதை நான் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்’ என்றார்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிப்போய் காலில் புண் வந்து நடப்பதற்கு மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அந்த நிலையிலும் என் அலுவலகத்துக்கு ஒரு புத்தகத்தைக் கொடுத்துவிட்டுப் போக வந்திருந்தார். ஏன் இப்படி வலியிலும் அலைகிறீர்கள் என்று கேட்டேன். ‘வலி நல்லது. நான் உயிருடன் இருப்பதை அது எனக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது. வலி இல்லை என்றால் எனக்கு உயிர் போய்விட்டது என்று பொருள்’ என்றார். அப்போது அவரிடம் நான் அரசுப் பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு புத்தகங்களை இலவசமாகத் தந்து அவர்களைப் படிக்கவைக்கவேண்டும் என்ற என் திட்டத்தைச் சொன்னேன். ‘அப்படியானால் என்னுடன் வா’ என்று சென்னை மேயர் சைதை துரைசாமியிடம் என்னை அழைத்துச் சென்றார். அதன் தொடர்ச்சியாக சென்னை கார்ப்பரேஷன் பள்ளிகளில் இந்தத் திட்டத்தை பைலட் முறையில் செயல்படுத்த உதவியாக இருந்தார்.

சென்னை மேயர் அலுவலகத்தில் நாங்கள் காத்துக்கொண்டிருந்தபோது அருகில் ஒரு வயதான பெண் விண்ணப்பப் படிவம் ஒன்றை நிரப்ப உதவி கேட்டார். அந்தப் பெண் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு மாறியவர் என்பது தெரிந்ததும் மலர்மன்னன் மிகக் கோபம் அடைந்தார். ‘ஏம்மா இப்படிச் செய்யறீங்க, தாய் மதத்துக்குத் திரும்ப வாங்கம்மா’ என்று அங்கேயே சத்தம் போட ஆரம்பித்துவிட்டார். நான் அவரிடம் உடனேயே விவாதத்தில் இறங்கினேன். அப்போது அவர், இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு மாறிய பலரை தான் மீண்டும் இந்து மதத்துக்கு மாற்றியுள்ளதாகவும் அப்படிச் செய்வதுதான் சரியானது என்றும் வாதிக்கத் தொடங்கினார். கிறிஸ்தவர்களின் மதமாற்றக் கூட்டங்கள் பற்றியும், ‘சாது something’ என்ற பெயரில் பிராமணப் பெயர்கொண்ட ஒருவரைப் பற்றியும் என்னிடம் நிறையப் பேசினார். இந்துக்கள் மதம் மாற்றப்படுவது குறித்து அவருக்குக் கடுமையான கோபம் இருந்தது. அது ஏன் நடக்கிறது என்பது தொடர்பாக அவரிடம் முழுமையான பார்வை இருந்ததா என்று எனக்குத் தெரியாது. அது குறித்து அவரிடம் நிறைய விவாதிக்க எண்ணியிருந்தேன். ஆனால் அது கடைசிவரை நடக்கவில்லை.

மலர்மன்னனிடம் பிராமணீயப் பார்வை ஏதும் இருந்ததாகச் சொல்ல முடியாது. மக்களை சாதிகள் அற்ற, ஒற்றை அடையாளம் கொண்ட ஓர் இந்துக் குழுவாகவும் இந்தியாவை ஓர் இந்து தேசமாகவுமே அவர் பார்த்தார். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அவருடைய இந்து மதம் சடங்குகள் கொண்டதல்ல. சித்தர்கள், அவர்களின் அதிசயச் செயல்கள் ஆகியவற்றை அவர் முழுமையாக நம்பினார்.

அவருடைய இறுதிக் காலத்தில் டிஸ்கவரி போன்ற தொலைக்காட்சி சானல்களுக்கு மொழிமாற்றம் செய்துகொடுப்பதன்மூலம் அவர் வருவாய் ஈட்டிவந்தார். அப்படி ஈட்டிய வருவாயையும் அவர் பிறருக்குத் தூக்கிக் கொடுத்துவிடக்கூடியவராகவே இருந்தார். அவருடைய குடும்பம், உற்றார், உறவினர் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.

தமிழக அரசியலில் அவருக்கு அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோர்மீது மட்டும்தான் ஈடுபாடு. அவரைப் பொருத்தமட்டில் அண்ணாதுரை தவறே செய்ய முடியாதவர். ஆனால் பெரியார், கருணாநிதி ஆகியோர் கடுமையான எதிரிகள். அவருடைய திமுக, திராவிட இயக்கம் ஆகியவை பற்றிய புத்தகங்களில் இந்தக் கருத்துகளை நீங்கள் காண முடியும். புத்தகம் எழுதுவதற்குக் கடுமையாக உழைக்கக்கூடியவர். புதுக்கோட்டை ஞானாலயா நூலகம் சென்று அங்கேயே தங்கி, குறிப்புகள் எடுத்து, வேகமாக எழுதி, திருத்தி, டிஜிட்டல் கோப்பாக அனுப்பிவிடுவார். எடிட்டிங் செய்யும்போது சில இடங்களில் மாற்றங்கள் வேண்டும், சில இடங்களை நீக்கிவிடலாம் என்று அவரிடம் பேசும்போது மிகவும் தன்மையுடன் நடந்துகொள்வார். அடுத்தடுத்துப் பல புத்தகங்கள் எழுதுவது குறித்து நிறையத் திட்டங்கள் வைத்திருந்தார். சென்ற வாரம் வந்தபோதுகூட, அவர் வேறொரு பதிப்பகத்தில் கொடுத்து இப்போது நின்றுபோயிருந்த இரு புத்தகங்களை மறுபதிப்பு செய்வதுபற்றிப் பேசினார். அதில் ஒன்றில் மிகுதியாக இருக்கும் பிரதிகளை விற்றுத்தருமாறு என்னைக் கேட்டுக்கொண்டார்.

புத்தகப் பதிப்புத் தொழிலில் நான் சந்தித்துள்ள வித்தியாசமான மனிதர்களில் மலர்மன்னன் ஒருவர். அவர் கருத்துகள் பலவும் எனக்கு ஏற்புடையவையாக இல்லாவிட்டாலும் அவர்மீது மிகுந்த மரியாதை உண்டு எனக்கு.

Thursday, February 07, 2013

ஆங்கில மாயை

ஆங்கில மாயை, நலங்கிள்ளி, விஜயா பதிப்பகம், டிசம்பர் 2012, பக்கம் 160, விலை ரூ. 80 நலங்கிள்ளியின் மின்னஞ்சல் முகவரி enalankilli@gmail.com

விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்கிறார் நலங்கிள்ளி. ‘தமிழ்மொழியில் ஆங்கிலக் கலப்பு சரிதானா, கூடாதா?’ என்பதுதான் தலைப்பு. பிற மொழி கலப்பதால் தமிழ் மொழி ஒன்றும் அழிந்துவிடாது என்பதாக மீனா கந்தசாமி, இளங்கோ கல்லாணை ஆகிய பிறர் பேசுகிறார்கள். மக்கள் தொலைக்காட்சியில் ‘புதுமைக்குத் தடையாகுமா தமிழ்?’ என்ற தலைப்பில் ஓர் உரையாடலில் கலந்துகொள்கிறார் நலங்கிள்ளி. அதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் என்ற இதழில் ‘ஆங்கிலத்தின் முற்போக்கு: பகுத்தறிவா மூடநம்பிக்கையா?’ என்ற தலைப்பில் 12 இதழ்களுக்கு தொடர் கட்டுரை எழுதுகிறார்.

அந்தக் கட்டுரைத் தொடரை அடிப்படையாகக் கொண்டு, மேலும் சில மாற்றங்களுடன் உருவானதே இந்தப் புத்தகம் ‘ஆங்கில மாயை’.

நலங்கிள்ளி பல தமிழர்களிடமும், அதுவும் பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வருவோரிடமும், ஆங்கிலம் தொடர்பாக உள்ள நம்பிக்கைகளை இவ்வாறு பட்டியலிடுகிறார்:
  • தமிழ்போலன்றி, கற்றுக்கொள்ள எளிதாக 26 எழுத்துகள் மட்டுமே உள்ள மொழி.
  • தமிழ்போலன்றி, உலகப் பொதுமொழி.
  • தமிழ்போலன்றி, மனிதர்களிடம் உயர்வு, தாழ்வு கற்பிக்காத சனநாயக மொழி
  • தமிழ்போலன்றி, பாலியல் வேற்றுமை கற்பிக்காத பெண்ணிய மொழி
  • தமிழ்போல் பழமை பேசும் காட்டுமிராண்டி மொழியன்று, நவீன காலத்துக்கான அறிவியல் மொழி
  • தமிழ்போல் பத்தாம்பசலி மொழியன்று, மூட நம்பிக்கைகள் அற்ற பகுத்தறிவு மொழி
  • அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகுக்குத் தந்த மொழி
இந்தக் கருத்துகளை எதிர்கொள்வதே புத்தகத்தின் பெரும் பகுதி. இதில் மூன்று கருத்துகளை மட்டும் விரிவாக எடுத்துக்கொண்டு தனித்தனி அத்தியாயங்களை அவற்றுக்காகச் செலவிடுகிறார். ஆங்கிலம் ஜனநாயகத் தன்மை கொண்ட மொழியா? ஆங்கிலம் பெண்ணிய மொழியா? ஆங்கிலம் அறிவியல் மொழியா?

இவை பற்றி உண்மையிலேயே நீட்டி முழக்கவேண்டுமா என்று சிந்தித்தால் இந்த விவாதம் சில நேரங்களில் அவசியமே என்று படுகிறது. ஆங்கிலம் உண்மையிலேயே ஜனநாயகத் தன்மை கொண்ட மொழி என்றால், ஆங்கிலம் பேசும் பகுதிகளில் இனவேற்றுமை சமீப காலங்கள் வரை பரவியிருந்தது ஏன் என்பதைப் பற்றிப் பேசத்தான் வேண்டும். அந்தக் கருத்துகள் மொழியிலும் பரவியிருப்பதைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். அதேபோல பெண்ணடிமைக் கருத்துகளில் ஆங்கிலேயர்கள் எந்த அளவிலும் பின்தங்கி இருக்கவில்லை. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் பெண்கள் தமக்கான உரிமைகளை அந்நாடுகளில் பெற்றார்கள். இருப்பினும் பெண்ணடிமைக் காலத்தில் அக்கூறுகள் ஆங்கில மொழியில் பரவி, இன்றளவும் புழக்கத்தில் இருப்பதைக் காணலாம். இதேபோல ஆங்கிலம் பல்வேறு சொற்களை உருவாக்குவதற்கும் ரோம, கிரேக்க, நார்டிக் புராணங்களின் கட்டுக்கதைகளை நம்பியிருப்பதையும் நலங்கிள்ளி சுட்டிக் காட்டுகிறார்.

தமிழகத்தில் ஆங்கில மொழிமீதான மோகம் ஏன் ஏற்பட்டது என்பதை நலங்கிள்ளி இவ்வாறு விளக்குகிறார். மெகாலே இந்திய மொழிகளைத் தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலத்திலேயே கல்வி கற்பிக்கப்படவேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார். தொடர்ந்து...
உடல் உழைப்பு செய்யாது ஒடுக்குண்ட மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்திவந்த பார்ப்பனர்கள் பிரித்தானிய ஆட்சியில் ஆங்கில முகமூடியை மாட்டிக்கொண்டு தங்களைப் பெரும் அறிவாளிகள்போல் காட்டிக்கொண்டு ஆங்கிலேயர்களுக்கு நன்கு சேவகம் செய்யத் தொடங்கினர். இந்தப் போலி முகமூடியைக் கிழித்தெறிந்து பார்ப்பனர்களின் மூடத்தனங்களை அம்பலப்படுத்துவதற்கு பதிலாக, அதே முகமூடியைத் தமிழர்களும் அணிந்துகொள்ளவேண்டும் என ஆசைப்பட்டார் பெரியார். (பக்கம் 132)
தொடர்கிறார் நலங்கிள்ளி.
உழைக்கும் மக்களை ஊருக்கு வெளியே துரத்தியடிக்கும் பார்ப்பனியந்தான் அம்மக்களின் தாய்மொழியாம் தமிழையும் கல்வி நிலையங்களில் இருந்தும் அரசுத் துறைகளில் இருந்தும் துரத்தியடித்தது. ஆனால் மக்களின் மொழியைப் புறந்தள்ளுவதற்கு மெகாலேயும் பார்ப்பனர்களும் சொன்ன அதே காரணங்களைப் பெரியாரும் சொன்னார்.
1. ஒருவன் ஆங்கில மொழியை சுலபமாகக் கற்றுக்கொள்ள முடியும். 2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்ப இயலும். 3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்தரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒருபோதும் கிடையாது. (பெரியார் ஈவெரா சிந்தனைகள், வே.ஆனைமுத்து, தொகுதி 3, அரசியல் 2, பக். 1762)
இதில் பார்ப்பனர்களைப் பற்றியும் பார்ப்பனியம் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ள விவரணங்களை இப்போதைக்கு விட்டுவிடுவோம். தமிழர்களின் ஆங்கில மோகம் இப்படியாக வந்தது: முதலில் மெகாலே அறிமுகப்படுத்துகிறார். அடுத்து பார்ப்பான் இறுக்கிப் பிடித்துக்கொள்கிறான், பிறகு பார்ப்பானை எதிர்க்கும் பெரியாரும் அதே கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார். எனவே தமிழகம் ஆங்கில மோகம் கொள்கிறது.

பெரியாரின் மேற்படிக் கருத்துகளை நலங்கிள்ளி விவரமாக மறுக்கிறார்.

“ஆங்கிலந்தான் உலகத்தின் ஒரே மொழி என்று நம்பி ஆங்கிலத்தின் பின்னாலேயே தமிழர்கள் ஓடியதால்தான் தமிழர்கள் விசாலமான அறிவின்றித் தரந்தாழ்ந்து வாழ்ந்துவருகிறார்கள்” என்கிறார் நலங்கிள்ளி. (பக்கம் 137). இது முழுதான உண்மையாக எனக்குத் தெரியவில்லை. இதுவும் விவாதத்துக்கு உட்படுத்தப்படவேண்டிய ஒரு கூற்று. மேலும், “ஆங்கிலம் ஒன்றே அறிவின் ஒளி என நம்பித் தமிழர்கள் பல பத்தாண்டுகளாய் ஓடினார்கள். நடந்தது என்ன? இன்று உலக அறிவு எதையும் அதைப் படைத்தவர் எழுதிய மூல மொழியிலிருந்து நமக்கு நேரடியாக மொழிபெயர்த்துத் தருவதற்கு ஆளில்லை” என்கிறார் நலங்கிள்ளி. (பக்கம் 137).

ஆனால் இன்று உலக மொழிகள் பலவற்றுக்கும் இதே நிலைதான். இந்திய மொழிகள் அனைத்திலும் இதே நிலைதான். பல மொழிகளையும் மதிக்காத எல்லாச் சமுதாயங்களிலும் இந்நிலைதான் இருக்கும். எனவே இதனைத் தமிழுக்கு மட்டுமான குறையாகக் காட்ட முடியாது.

***

புத்தகத்தின் அடிப்படைக் கருத்து எனக்கு ஏற்புடையதே. எம்மொழிக்கும் தனியான ஏற்றம் என்பது எதுவும் இல்லை. ஒரு மொழி, அதனை உருவாக்கிய மக்களின் அன்றைய கலாசாரத்துக்கு ஏற்ப சொற்களை உருவாக்கிக்கொண்டது. அந்தச் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளும் ஒவ்வாத கருத்துகளும் இருந்தால் அது அம்மொழியில் பிரதிபலித்தது. காலப்போக்கில் அக்கருத்துகள் தவறு என்று அச்சமுதாயம் கருதும்போது, அச்சொற்களை நீக்கும், அல்லது அவற்றின் பொருளை மாற்றும்.

சில மொழிகளின் சில கூறுகள் கற்க எளிதாக இருக்கும், ஆனால் வேறு சில கூறுகள் கற்கக் கடினமாக இருக்கும். ஆங்கிலத்தில் 26 எழுத்துகள்தான், ஆனால் உச்சரிப்புக்கு ஏற்ப ஸ்பெல்லிங்கைச் சரியாக எழுதுவது கடினம். தமிழில் ஹிந்தி அல்லது பிற இந்திய மொழிகளில் இருப்பதுபோல அதிக எழுத்துகள் இல்லாவிட்டாலும் ஆங்கிலத்தைவிட அதிகம் (உயிர்மெய் சேர்த்து). ஆனால் ஸ்பெல்லிங் என்ற சிக்கல் இல்லை (ன-ண-ந, ர-ற தவிர்த்து). இலக்கணங்களின் நிறைய மாறுபாடுகள் இருந்தாலும் ஒவ்வொரு மொழிக்கும் பல தனித்தன்மைகள் உள்ளன. ஒரு மொழி நம் தாய்மொழியாக அமைந்துள்ள ஒரே காரணத்தாலேயே அந்த மொழி வளம் பெறவேண்டும் என்று நாம் உழைக்கவேண்டும். ஒரு மொழியை விடுத்து இன்னொரு மொழியைக் கற்பது எளிதல்ல. அப்படியே ஒரு சிலருக்கு அது எளிதாகிவிட்டாலும், ஒரு சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அது எளிதல்ல. இதில் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் தம் தாய்மொழியைக் கைவிடும் பட்சத்தில் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் கடும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

ஆங்கிலத்தில் உலக அறிவு அனைத்தும் வருகிறது என்றால் ஆங்கிலேயர்கள் ஆரம்பக் கட்டத்தில் உலக அறிவு அனைத்தையும் முயற்சி செய்து ஆங்கிலத்துக்குக் கொண்டுசென்றார்கள். அதேபோலவே ஜெர்மானியர்களும், ஜப்பானியர்களும், ரஷ்யர்களும், கொரியர்களும், சீனர்களும் செய்தார்கள். தமிழர்கள் அதனைச் செய்யாமல் எளிதாக ஆங்கிலத்துக்குத் தாவிவிடலாம் என்று நினைத்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். தனிப்பட்ட முறையில் சில பல தமிழர்கள் தப்பிவிடுவார்கள். ஏனெனில் அவர்களால் பல மொழிகளைக் கற்றுக்கொண்டுவிட முடியும். ஆனால் அனைத்துத் தமிழர்களாலும் முடியாது. ஒரு மொழியை ஒட்டுமொத்தமாகத் துடைத்துவிட்டு மற்றொரு மொழியை அந்த இடத்தில் விதிப்பது எளிதான காரியமல்ல. அப்படிப்பட்ட செயல்களால் மக்கள் இரண்டுங்கெட்டானாக அலையவேண்டியிருக்கும்.

இந்தப் புத்தகத்தின் குறைபாடுகளாக நான் காண்பது கீழ்க்கண்டவற்றை:

(1) பார்ப்பனியம் - பார்ப்பனர் என்பதாகப் பிரித்து, பார்ப்பனியம்தான் கொடியது, அதனை பார்ப்பனர்கள் அல்லாதோரும் பின்பற்றுகிறார்கள் என்று சொல்லிவிட்டு, பின்னர் பார்ப்பனியம் என்ற ஆதிக்கக் கருத்தியலை எதிர்ப்பவர்கள் சிலர். ஆனால் நலங்கிள்ளியைப் பொருத்தமட்டில் அந்த வித்தியாசமே தேவையில்லை. பார்ப்பனர்கள் நயவஞ்சகர்கள். பார்ப்பனர்கள் அடாவடி செய்பவர்கள் என்று தொடங்கி பக்கம் பக்கமாக எழுதுகிறார். அவருடைய அரசியல் கருத்தாக்கத்துக்கு இவையெல்லாம் அவசியம். இவை தொடர்பாக அவருடன் ஓர் உரையாடலை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றால் அவரிடம் நான் விவாதிப்பதாக உள்ளேன். பார்க்கலாம்.

(2) ஆங்கிலத்தின் உயர்ச்சி என்று பிறர் சொல்வதாகச் சில கருத்துகளை முன்வைத்து, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, ஆங்கில மொழியும் குப்பைதான் என்பதாக நிறையப் பக்கங்களைச் செலவழிக்கிறார். ஆனால் உண்மையில் எந்த மொழியும் அந்தக் கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள் செய்யும் குறை குற்றங்களுக்குப் பொறுப்பாக முடியாது; அவர்களுடைய உயர்வுக்கும் பொறுப்பாக முடியாது. இந்தக் கருத்தை நலங்கிள்ளி வெளிப்படுத்துகிறார். என்றாலும், அவர் ஏன் இத்தனை பக்கங்கள் ஒதுக்கி ஆங்கில மொழியைக் கிண்டல் செய்யவேண்டும்?

(3) எத்தனையோ காரணங்களால் இன்று ஆங்கிலம் முன்னணி மொழியாக இருக்கிறது. தமிழ் அப்படி இல்லை. எப்படி தமிழின் நிலையை உயர்த்தி, தமிழில் கலைச் செல்வங்களைப் பல மொழிகளிலிருந்தும் கொண்டுவந்து சேர்ப்பது, அதற்கான உணர்வை தமிழ் கல்விப்புலத்தில் எப்படிக் கொண்டுவருவது என்பது பற்றிய கருத்துகள் முன்வைக்கப்படவில்லை.

(4) இப்போதைய ஆங்கில மோகத்துக்கான அடிப்படைக் காரணம், நடைமுறை வாழ்வியல்; ஒரு நல்ல வேலை கிடைக்க அரைகுறை ஆங்கில அறிவாவது வேண்டும் என்ற தவறான கருத்தை மக்கள் மனத்திலிருந்து எப்படிப் போக்கடிப்பது என்று எந்த விவாதமும் இல்லை. ஆங்கிலத்தைக் கீழ்மைப்படுத்தி மக்களை அதனிடமிருந்து பிரிக்கமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. தமிழில் படிப்பது எளிது, அதன்மூலம் ஆங்கிலத்தில் ஒன்றைத் தெரிந்துகொள்வதைவிட வேகமாகத் தெரிந்துகொள்ள முடியும், எனவே வேலையிலும் சிறந்து விளங்கலாம் என்பதை வெறும் வாயால் சொல்லிக்கொண்டிருந்தால் போதாது. அதற்கான அடிப்படைச் செயல்முறை வேலைகளில் இறங்கவேண்டும். அதற்கு அரசியல் அதிகாரம் இல்லாமல் முடியாது. அதற்கான செயல்திட்டம் பற்றி அனைவரும் யோசிக்கவேண்டும்.

Wednesday, February 06, 2013

டோண்டு ராகவன்

காலை அலுவலகத்துக்கு வரும்போது சுமார் 8.30 மணி அளவில் ட்விட்டரைப் பார்த்தபோது டோண்டு ராகவன் மறைவு என்ற செய்தி கண்ணில் பட்டது.

இணையம் மூலமாக அறிமுகமானவர். அவர் மொழிமாற்றல் வேலைகளைச் செய்துவந்ததால் தொடர்ந்து NHM Writer, NHM Converter தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டே இருப்பார். ‘பாமினில ஒரு வேலை வந்திருக்கு’ அல்லது ‘லதா ஃபாண்ட்ல டைப் அடிக்கணும்’ என்ற மாதிரியாக அந்தக் கேள்விகள் இருக்கும். அவருடைய பிரதானமான மொழிபெயர்ப்பு வேலைகள் பிரெஞ்ச், ஜெர்மன், ஆங்கிலம் என்றாலும் அவ்வப்போது தமிழ் மொழிபெயர்ப்பு வேலைகளையும் செய்துதருவார்.

போனில் பேசும்போது எப்போதுமே, ‘நான் டோண்டு ராகவன் பேசறேன்’ என்றுதான் ஆரம்பிப்பார். டோண்டு என்பதற்கான பெயர்க்காரணத்தை அவரே தன் வலைப்பதிவில் கொடுத்துள்ளார்.

கடைசியாக நாங்கள் சந்தித்துக்கொண்டது சுமார் நான்கைந்து மாதங்கள் முன்பாக என்று நினைக்கிறேன். சத்தியம் தொலைக்காட்சியில் ஒரு நேரலை விவாத நிகழ்ச்சியில் இருவரும் பங்கெடுத்துக்கொண்டோம். அப்போதுதான் அவருடைய உடல் நலக்குறைவு பற்றித் தெரிந்துகொண்டேன்.

ஹாரி பாட்டர் தொடர் புத்தகங்களில் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை ஜெர்மன் மொழியில் படிக்கவேண்டும் என்றும் அந்தப் புத்தகத்தை வாங்கித் தரமுடியுமா என்றும் என்னிடம் கேட்டிருந்தார். அந்தப் புத்தகத்தை எங்கிருந்து சோர்ஸ் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அதனைக் கடைசிவரை வாங்கித் தரமுடியவில்லை. நிறையப் புத்தகம் படிப்பவர். எப்போதும் கையில் ஒரு புத்தகத்துடனேயேதான் இருப்பார்.

பார்ப்பனர்கள், பிற சாதிகள் பற்றி அவருக்குப் பல்வேறு கருத்துகள் இருந்தாலும் பிற சாதியினர்மீது அவருக்கு எந்த வெறுப்பும் இருந்ததுபோல் நான் உணரவில்லை. வெறுப்பு நோய்க்கு மரணம்தான் மருந்து என்பதாக ஒருசிலர் கொண்டுள்ள கருத்து அதிர்ச்சி அளிக்கிறது.

போலி டோண்டு விவகாரம் வந்த நேரத்தில் டோண்டு ராகவன் நிறைய நேரத்தை வீணடித்து வெட்டிச் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். அவற்றையெல்லாம் மிக எளிதாகக் கடந்து சென்றிருக்கலாம். அதேபோல ஒரு சில போலிப் பெயர்களை அவர் பயன்படுத்தியது தொடர்பான சர்ச்சையும் தேவையற்ற ஒன்று. கடும் உழைப்பாளியான அவர் இந்த நேர விரயங்களில் ஈடுபட்டிருக்கவேண்டாம். எல்லா இணையர்கள் சந்திப்பிலும் எப்படியோ ஆஜர் ஆகிவிடுவார்.

இன்று காலை அலுவலகம் வந்ததும் 9.29 மணிக்கு ஃபோன் அடித்தது. டோண்டு ராகவன் என்று பெயர். ஒருவேளை இந்த மரணச் செய்தியே ஒரு புரளியோ என்று ஒரு கணம் நினைத்தேன். ஆனால் எடுத்துப் பேசியது டோண்டு ராகவனின் மனைவி. இறப்பு செய்தியை என்னிடம் தெரிவிப்பதற்காக அழைத்திருந்தார். இதுபோன்ற நேரத்தில் அவரிடம் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று தெரியவில்லை. தகவல் காலையிலேயே தெரிந்துவிட்டது என்று சொன்னேன். என் இரங்கலைத் தெரிவித்தேன். காலையில் அவர் வீட்டுக்குச் செல்ல முடியவில்லை. பின்னர் ஒருநாள் பொறுமையாகப் போய்ப் பார்த்து அவர் மனைவியிடம் பேசவேண்டும்.

Saturday, February 02, 2013

வரலாற்றுக்கு முந்தைய காலம் - மகேந்திரன் தங்கவேலு

இன்று மாலை, 5.30 மணிக்கு, தக்கர் பாபா பள்ளியின் வினோபா அரங்கில் தமிழ் பாரம்பரியக் குழுமத்தின் மாதாந்திரக் கூட்டம் நடைபெறுகிறது.

ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று நடைபெறும் கூட்டம் இது. 2008 டிசம்பர் முதல் ஒரு மாதம்கூடத் தடையின்றித் தொடர்ந்து நடந்துவருகிறது. இன்று நடக்கப்போவது 51-வது நிகழ்ச்சி.

இன்று மகேந்திரன் தங்கவேலு என்பவர் வரலாற்றுக்கு முந்தைய காலம் பற்றித் தான் எடுத்துள்ள சுமார் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய ஓர் ஆவணப்படத்தைக் காண்பிக்க உள்ளார். அதன்பின் பேசுவார்.

இவர் பல கற்காலக் கருவிகள், குகை ஓவியங்கள், கல் முண்டுகள், வழிபாட்டுக் கற்கள் போன்றவற்றைக் கண்டுபிடித்துள்ளார்.

தக்கர் பாபா பள்ளி சென்னை தியாகராய நகர் பகுதியில், நந்தனம் ஜங்க்‌ஷனிலிருந்து (தேவர் சிலை) கூப்பிடு தூரத்தில் உள்ளது. கட்டாயம் வாருங்கள். உங்கள் நண்பர்களையும் அழைத்துவாருங்கள். அனுமதி இலவசம்.

மேலும் தகவல்களுக்கு