Saturday, March 28, 2009

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - அ.கி.வெங்கட சுப்ரமணியன்

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம், வரும் திங்கள் கிழமை, 30 மார்ச் 2009 அன்று மாலை 6.00 மணிக்கு நடக்க உள்ளது.

மறக்காமல் உங்களது நாட்குறிப்பில் குறித்து வைத்துக்கொண்டு வந்துவிடுங்கள்.

அ.கி.வெங்கட சுப்ரமணியன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அலுவலர். தமிழகர் அரசின் பல துறைகளில் செயலராக இருந்துள்ளார். ஓய்வுக்குப்பின், உந்துநர் அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்திவருகிறார். அதன் சார்பாக குடிமக்கள் முரசு என்ற தமிழ் மாத இதழை நடத்திவருகிறார். கிராமங்கள் பலவற்றில் மக்கள் மன்றங்கள் என்ற அமைப்புகளை ஏற்படுத்தி, கிராம மக்களுக்கு குடியாட்சி முறையின் அடிப்படைகளைத் தெரியப்படுத்தி, எப்படி அவர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடலாம் என்று தெளிவுறுத்தி வருகிறார்.

உள்ளாட்சி அமைப்புகள் வலுப்படவேண்டும் என்பது இவரது வாதம். மாநிலங்கள் போராடி தங்களுக்கான உரிமைகளை மத்திய அரசிடமிருந்து பெற்றுவிடுகின்றன. ஆனால் தமக்குக் கீழுள்ள பஞ்சாயத்து அமைப்புகளுக்கு எந்தவிதமான உரிமைகளையும் மாநில அரசுகள் தருவதில்லை. முக்கியமாக தமிழக அரசு. இதில் திமுக, அஇஅதிமுக ஆகிய இரு அரசியல் கட்சிகளுமே ஒருமித்த கருத்துடையவை.

ஆனாலும், பஞ்சாயத்துத் தலைவர்களும் உறுப்பினர்களும் மனது வைத்தால் தங்களுக்கு வேண்டிய உரிமைகளைப் பெறப் போராடலாம், ஓரளவுக்கு வெற்றியும் பெறலாம். பஞ்சாயத்துத் தேர்தலில் கட்சிச் சார்பற்ற முறையில் போட்டியிடவேண்டும் என்பதும் இவர் கொள்கை.

தேர்தலில் வாக்களிப்பது இவருக்குப் பிடித்த மற்றொரு விஷயம். நகர்ப்புற மக்கள் தேர்தலில் வாக்களிப்பதில்லை, ஆனால் ‘இந்த அரசியல் கட்சிகளே மோசமப்பா’ என்ற சினிகல் மனோபாவத்துட்ன புலம்புபவர்கள் என்று புள்ளிவிவரங்களுடன் அலசுகிறார் இவர். குறைந்தபட்சம் 49 ஓ பிரிவிலாவது வாக்குச்சாவடிக்குச் சென்று கையெழுத்திட்டு யாருக்கும் வாக்களிக்காமல் வாருங்கள் என்கிறார். [வெங்கட சுப்ரமணியன் பற்றி நான் எழுதிய சில பதிவுகள்: ஒன்று | இரண்டு | மூன்று]

பேசவாருங்கள் என்று நான் அழைத்ததும் அவர் தேர்தல் பற்றியும், 49 ஓ பற்றியும் பேசட்டுமா என்றுதான் கேட்டார். நான்தான் பேச்சைக் கேட்கவரும் அனைவரும் எப்படியும் தேர்தலில் வாக்களிக்கக்கூடியவர்களே என்றும், அதற்குப் பதில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிப் பேசுங்கள் என்றும் சொன்னேன்.

தமிழர்களிடையே கட்சிகள் பற்றி பெரும் பயம் உள்ளது. ‘வூட்டுக்கு ஆட்டோ வந்திரும்பா’ என்று தேவையில்லாமல் பயப்படுகிறார்கள். கட்சிகளில் தில்லுமுல்லுகளை, பொறுக்கித்தனங்களை, நம்மைச் சிறுமைப்படுத்துகிற விஷயங்களைப் பற்றி பயமின்றிப் பேசுவோர் குறைவாக உள்ளனர்.

முன்னர்தான் நம்மிடம் தகவல்கள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்தோம். இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் எல்லாம் தேவைப்பட்டது. இப்போது சிறு மாற்றம். சில தகவல்களையாவது நாம் கேட்டால் மத்திய, மாநில அரசுகள் தந்தாகவேண்டும். சென்ற வாரம் வேறு ஒரு (நேர்மையான) ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி அவர் செய்த சிலவற்றை பொதுக்களத்துக்குக் கொண்டுவந்து புத்தகங்களாகப் பிரசுரிக்கலாம் என்று நினைத்திருப்பதாகச் சொன்னார்.

வெங்கடசுப்ரமணியன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மிகவும் திறம்படப் பயன்படுத்துபவர். அரசுச் செயலராக இருந்ததால் எந்தத் துறை என்ன செய்யும், என்ன செய்யாது என்று நன்கு அறிந்தவர். அவர் கல்வி, சேது சமுத்திரம் ஆகியவை தொடர்பாக த.அ.உ.சட்டத்தைப் பயன்படுத்திக் கேட்ட சிலவற்றை கட்டுரைகளாகக் குடிமக்கள் அரசு பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். மேலும் கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் மன்றத்தையும்கூட இதுபோல் த.அ.உ.சட்டத்தைப் பயன்படுத்தி தகவல்கள் பெற உதவி செய்துள்ளார்.

எனக்கும் த.அ.உ.சட்டத்தைப் பயன்படுத்தி பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆவல். ஆனால் சரியான வழிமுறை தெரியவில்லை. வெறும் விண்ணப்பப்படிவத்தை நிரப்பி அனுப்புவது பெரிய விஷயமில்லை. எந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும் என்பது முக்கியம். வெங்கட சுப்ரமணியன் சொல்வதும் இதைத்தான். சிலர் ‘ஆயிரம் கேள்விகள் கேட்டுட்டேன் சார்’ என்று பெருமையாகச் சொல்கிறார்களாம். ஆயிரம் கேள்விகள் கேட்பதில் பெருமையில்லை. சரியான கேள்விகளைக் கேட்பதன்மூலம், சரியான தகவல்களைப் பெறுவதன்மூலம் அடுத்தகட்டப் போராட்டத்துக்கு நம்மைத் தயார் செய்துகொள்கிறோம். நமக்கு வேண்டியவற்றை நடத்திக்கொள்ள இவை உதவுகின்றன.

இந்த வழிமுறைகளை தனது அனுபவத்தின் வாயிலாக நம்மோடு பகிர்ந்துகொள்ள வருகிறார் அ.கி.வெங்கட சுப்ரமணியன். மீண்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: திங்கள், 30 மார்ச் 2009, மாலை 6.00 மணி, கிழக்கு மொட்டைமாடியில், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18.

***

அ.கி.வெங்கட சுப்ரமணியன் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இரு புத்தகங்களாக கிழக்கு வெளியிட்டுள்ளது.

1. கட்சி, ஆட்சி, மீட்சி
2. மக்களாகிய நாம்

ராமச்சந்திர குஹாவின் 97 லட்ச ரூபாய் டீல்

ராமச்சந்திர குஹா, இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாளர்களில் ஒருவர். சூழலியல், இடதுசாரியம், கிரிக்கெட், அம்பேத்கர், காந்தி என அவரது ஆர்வம் பல திசைகளில் செல்வது. மத்தியப் பிரதேசத்தில் கோண்டு பழங்குடி மக்களிடையே வேலை செய்த வெர்ரியர் எல்வின் என்ற சூழலியலாளர் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இந்தியாவின் முதல் ‘தீண்டப்படாத’ கிரிக்கெட் வீரர் பல்வாங்கர் பாலு பற்றி விரிவாக எழுதியுள்ளார். தி ஹிந்து பத்திரிகையில் தொடர் பத்திகள், கொல்கத்தா டெலிகிராப், ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைகளிலும் பத்திகள் எழுதிவருபவர்.

கல்வித்துறைக்குள்ளாக மட்டுமே இருந்தவந்த குஹா சமீப காலமாக தொலைக்காட்சிகளில் இந்திய கலாசாரம், வரலாறு போன்ற பலவற்றைப் பற்றிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

கல்வித்துறைக்கு வெளியேயான பொதுமக்களுக்கு என இவர் எழுதிய மாபெரும் புத்தகம் India After Gandhi என்ற சமகால இந்தியாவைப் பற்றிய வரலாற்று நூல். ஆங்கிலத்தில் சக்கைப்போடு போடும் இந்நூல் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்போது குஹா எழுதிவரும் புத்தகம் காந்தியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல். காந்தியைப் பற்றி ராஜ்மோகன் காந்தி நிறையவே எழுதியுள்ளார். ஆனால் குஹாவின் பார்வையும் எழுத்தும் அதை நிச்சயம் மிஞ்சும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. 2004-ல், சென்னையில் குஹா காந்தி பற்றி ஆற்றிய உரையை இரண்டு பாகங்களாக வலைப்பதிவில் எழுதியிருந்தேன் [ஒன்று | இரண்டு].

இவர் எழுதிவரும் காந்தி புத்தகம் இரண்டு பாகங்களாக வெளியாகுமாம். முதல் பாகம் 2012-ல், இரண்டாம் பாகம் 2015-ல்! அதை யார் பதிப்பிப்பது என்பதில் கடுமையான போட்டி. இவருடைய பழைய புத்தகங்களையும் சேர்த்து, மொத்தமாகப் பதிப்பிப்பதற்கு ஹார்ப்பர் கால்லின்ஸ் இந்தியா, ராண்டம் ஹவுஸ் இந்தியா ஆகியவை ரூ. ஒரு கோடிக்கு மேல் முன்பணம் தருவதாகச் சொல்லியுள்ளனர். பெங்குவின் இந்தியா ரூ. 97 லட்சம் கொடுப்பதாகச் சொன்னது. ஆனால் அவர்கள் பழைய புத்தகங்களையும் சிறப்பாகப் பதிப்பிப்பார்கள் என்பதால் பெங்குவினுடன் செல்வதாக குஹா முடிவெடுத்துள்ளார்.

***

குஹா போன்ற சிறப்பான எழுத்துக்குச் சொந்தக்காரர்களுக்கு நல்ல பணம் கிடைப்பது இந்தியாவுக்கு நல்ல விஷயம்.

ஒரு சந்தோஷமான விஷயம். குஹாவின் ‘காந்திக்குப் பிந்தைய இந்தியா’ புத்தகம் இரண்டு பாகங்களாக தமிழில் வெளியாகும். கிழக்கு பதிப்பகம் இதற்கான உரிமையைப் பெற்று மொழிமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளது. முதல் பாகம் மே 2009-ல் வெளியாகும். இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 2009-ல் வெளியாகும். கோடிகளில் இல்லாவிட்டாலும் லட்சங்களிலாவது விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கிறோம்:-)

தொடர்ந்து, குஹாவின் முந்தைய சில புத்தகங்களையும் தமிழுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இறங்குவோம்.

Thursday, March 26, 2009

தமிழகக் கூட்டணிகள்

பாமக, எதிர்பார்த்தபடியே, அஇஅதிமுக கூட்டணிக்கு வந்துள்ளது. என் கணிப்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி தொகுதிகளை இப்படித்தான் பிரித்துக்கொள்வார்கள்:

அஇஅதிமுக: 21
கம்யூனிஸ்டுகள்: 8 (5+3)
பாமக: 7
மதிமுக: 4

விஜயகாந்த், திமுக+காங்கிரஸ் கூட்டணியில் சேருவாரா என்று பார்க்கவேண்டும். அப்படிச் சேர்ந்தால், இப்படிப் பிரித்துக்கொள்ளலாம்.

திமுக: 19
காங்கிரஸ்: 13
தேமுதிக: 6 அல்லது 7
விடுதலைச் சிறுத்தைகள்: 2 அல்லது 1

தேமுதிக, திமுக கூட்டணியில் சேராவிட்டால் தொகுதிப் பங்கீடு இப்படி இருக்கலாம்.

திமுக + ஊர் பேர் தெரியாத கருணாநிதியின் நண்பர்கள் (ஜெகத்ரட்சகன் போல): 23
காங்கிரஸ்: 15
விடுதலைச் சிறுத்தைகள்: 2

===

தேமுதிக, திமுக அணியில் இருந்தால் தமிழக, புதுச்சேரி முடிவுகள் இப்படி இருக்கும்:

அஇஅதிமுக கூட்டணி: 25
திமுக கூட்டணி: 15

தேமுதிக தனியாகப் போட்டியிட்டால், முடிவுகள் இப்படி இருக்கும்:

அஇஅதிமுக கூட்டணி: 30
திமுக கூட்டணி: 10

கலக்கும் கம்ப்யூட்டர் கேடிகள் - குங்குமம்

எனது பதிவு ஒன்றில் மாயவரத்தான் ஒரு பின்னூட்டம் விட்டுச் சென்றிருந்தார்:
போன வார குங்குமம் இதழில் இணைய தளங்களின் மூலம் எப்படி ஏமாற்றி காசு பிடுங்குகிறார்கள் என்ற ஒரு கட்டுரை வந்திருக்கிறது. ஆனால் அதற்கு போடப்பட்டுள்ள புகைப்படம் உங்களுடைய இந்த வலைத்தளம். கொஞ்சம் என்னன்னு விசாரிங்க.
அந்தப் பக்கம் இங்கே:இதில் பக்கத்தில் மேல் கோடியில், லே அவுட்டுக்காக - இணையப்பக்கம் என்று காண்பிக்க - சந்திரயான் பற்றி நான் எழுதிய ஒரு பதிவின் படம் வருகிறது.

மற்றபடி குங்குமம் எடிட்டோரியலில் உள்ள அனைவரும் என் நண்பர்கள்தான்:-) என்னை கேடி லிஸ்டில் சேர்க்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

தகவலுக்காக மட்டுமே.

ஐ.பி.எல் கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட் (பொதுவாக 20/20) எனக்கு அவ்வளவு உவப்பில்லாதது. கிழ போல்ட்டுகள் “எங்க காலத்துல பிரசன்னா வந்து ஆஃப் ஸ்பின் போட்டா...” என்று பேசுவதுபோல அரைக்கிழமான நான் இன்றைய இளைஞர்களின் விருப்பத்துக்கு உகந்த 20/20-ஐக் கேவலமாகப் பேசுவதாக நினைக்கவேண்டாம். 20/20 வேகம் இருந்தாலும் விவேகம் குறைவான, அறிவு அதிகம் தேவைப்படாத, முரட்டுத்தனம் மட்டுமே போதும் என்கிற ஆட்டம் என்பது என்னுடைய இன்றைய கருத்து. இது நாளை மாறலாம்.

யூசுஃப் பதான் 20/20-ல் ராஜாவாக இருக்கமுடியும். ஏதோ நூற்றில் ஒரு ஒருநாள் ஆட்டத்தில்தான் பிழைப்பார். டெஸ்ட் பக்கம் அவர் போக வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

சென்ற ஆண்டு ஐ.பி.எல் இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஊத்திவிடும் என்றே நினைத்தேன். நிச்சயம் டிக்கெட் வாங்கிக்கொண்டு நான் பார்த்திருக்கமாட்டேன். அரங்கம் சென்று டெஸ்ட் மேட்ச்கள் மட்டுமே பார்ப்பவன் நான். ஒருநாள் போட்டிகள் என்றால் டிவியே போதும் என்று நினைப்பவன்.

20/20 பார்க்க என்று செட் மேக்ஸ் சப்ஸ்கிரைப் செய்தேன். சில ஆட்டங்கள் பார்த்தேன். கடைசியில் நிறைய ஆட்டங்கள் பார்த்தேன். இறுதி ஆட்டம் எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் பல ஆட்டங்கள் நன்றாகவே இருந்தன. கடைசியில் ஐ.பி.எல் எனக்கு ஓரளவுக்குப் பிடித்துப்போனது.

***

இரண்டாம் சீசன் ஐ.பி.எல் ஆரம்பமே கொஞ்சம் தகராறில்தான் இருந்தது. முதலாவது பிரச்னை பொருளாதார வீழ்ச்சி. அதன் பாதிப்பு. இரண்டாவது மும்பை தாக்குதல். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்மீதான தாக்குதல். மூன்றாவது லலித் மோடிக்கும் ராஜஸ்தானில் புதிதாக ஜெயித்த காங்கிரஸ் அரசுக்கும் இடையேயான பிரச்னை. நான்காவது இந்திய நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல்.

இந்தியாவில் தேர்தல் மிகப்பெரிய விஷயம். அடிப்படையில் இந்தியா இன்னமும் வன்முறையை விட்டு வெளியே வரவில்லை. இந்தியத் தேர்தல்கள் ஊழல் நிறைந்தவை. வாக்காளர்களுக்குக் காசு கொடுப்பது, திமுக, அஇஅதிமுக மட்டுமல்ல, முலாயம், பாஜக, லாலு என்று அனைவரும்தான். கள்ள வாக்களிப்பதில் பிஎச்.டி வாங்க ஒவ்வொரு கட்சியும் முயன்று வருகிறது. வாக்காளர்களை அடித்து உதைத்துத் துரத்துவது பீகாரிலும் உத்தரப் பிரதேசத்திலும்தான் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும்போது, உள்ளாட்சித் தேர்தல்களில் கருணாநிதியின் திமுக, “நானும் இருக்கேண்டா” என்று தமிழகத்தை உத்தரப் பிரதேசம், பீகார் அளவுக்குக் கொண்டுசெல்கிறது.

உள்ளூர் போலீஸ் என்றாலே ஆளும் கட்சியின் ஜிஞ்சா என்று அனைவரும் ஒப்புக்கொண்டுவிட்டனர். உளவுத்துறையின் வேலை எதிர்க்கட்சிகளை உடைப்பது, ஒட்டுக் கேட்பது.

***

இப்படி இருக்கும்போது தேர்தலை எப்படி நியாயமாக நடத்துவது? இதற்குத்தான் தேர்தல் ஆணையம், ஒரு போருக்குத் தேவையான அளவுக்கு பாராமிலிட்டரி, ராணுவம் ஆகியவற்றின் துணையை நாடுகிறது.

ஒழுக்கம் கெட்ட நாட்டில், தேர்தல் மட்டுமாவது ஓரளவுக்கு ஒழுக்கமாக நடக்கவேண்டும் என்றால் ராணுவ மொபிலைசேஷன் தேவை என்று கடந்த 17 வருடங்களாக தேர்தல் ஆணையம் நினைக்கிறது. நவீன் சாவ்லா இதனை ஒருவேளை மாற்றக்கூடும்.

இந்தத் தேர்தல் ஆணைய நிலைப்பாடுதான், கடைசியாக ஐ.பி.எல் இந்தியாவில் நடப்பதற்கு சங்கூதியது. ஐ.பி.எல், பிசிசிஐ ஆசாமிகள் கேவலமானவர்கள்தான் என்றாலும் ஊடகங்கள், கார்ட்டூன்கள் சொல்வதுபோல அவ்வளவு மோசமானவர்கள் அல்ல. தேர்தலை வேறு நாட்டுக்கு நகர்த்தினால் என்ன அல்லது தேர்தலைத் தள்ளிவைத்தால் என்ன என்று இவர்கள் எந்தக் காலத்திலும் கேட்க மாட்டார்கள். ஆனாலும் கார்ட்டூன்கள் அப்படித்தான் சித்திரித்தன.

ஐ.பி.எல் என்பது பல கோடி ரூபாய்கள் புழங்கும் தொழில். ஓர் ஆண்டு தொலைக்காட்சி வருமானம் 820 கோடி ரூபாய்! அதை நகர்த்துவது, மாற்றுவது என்பது கடினமான காரியம். உள்துறை அமைச்சகம், பாதுகாப்புக்கு என்று நல்ல பணத்தை வாங்கிக்கொண்டு, இந்தியாவிலேயே ஆட்டங்களை நடத்த ஒத்துழைப்பு கொடுத்திருக்கலாம். சும்மா இருக்கும் சில ராணுவ டிவிஷன்களை இதற்கென வேலைக்கு அமர்த்தி, ஓர் ஆட்டத்துக்கு இத்தனை ரூபாய் என்று கேட்டு வாங்கியிருக்கலாம்.

ஆனால், காங்கிரஸ் மேலிடத்துக்கு லலித் மோடியிடம் என்ன குறையோ தெரியவில்லை. மூன்று முறை ஷெட்யூலை மாற்றியும் மஹாராஷ்டிரம் (காங்கிரஸ் அரசு), ஆந்திரம் (காங்கிரஸ் அரசு) ஆகியவை தங்கள் நிலையை மாற்றிக்கொண்டே இருந்தன. விளைவு: ஐ.பி.எல் வேறு நாட்டுக்குப் போகவேண்டியதாயிற்று.

இதனால் யாருக்கும் நஷ்டம் இல்லை. போ, ஒழியட்டும் ஐ.பி.எல் என்று சில விமரிசகர்கள் சொல்கிறார்கள். இது நியாயமற்றது. பணம் பண்ணும் முரட்டு ஆசாமிகளைக் கண்டு சிலருக்கு வரும் நியாயமற்ற கோபம்தான் இது.

இதில் என்ன வேடிக்கை என்றால், ஐ.பி.எல் தென்னாப்பிரிக்கா செல்கிறது. அங்கும்... ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல்! அதுவும் மிக இளைய குடியாட்சிதான். இந்தியா அளவுக்கு அங்கு தீவிரவாத பயம் இல்லை என்றாலும், அங்கும் வன்முறை உண்டு.

ஒரே நேரத்தில் தேர்தலையும் நடத்தி, விளையாட்டுப் போட்டிகளுக்குத் தேவையான பாதுகாப்பையும் தர இந்தியா வக்கற்றது என்றுதான் உள்துறை அமைச்சர் சிதம்பரம் சொல்கிறார். பாஜகவின் அருண் ஜெயிட்லி இப்படிக் குற்றம் சாட்டுவதில் உள்ள நியாயத்தை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது.

எப்படி இந்தியா ஒரு வல்லரசாக முடியும்?

Tuesday, March 24, 2009

திருவல்லிக்கேணி கிழக்கு புத்தகக் கண்காட்சி

சென்னையில் NHM நடத்தும் தொடர் புத்தகக் கண்காட்சி, அடுத்து திருவல்லிக்கேணியில் நடக்க உள்ளது.

இதற்குமுன் மைலாப்பூர், நங்கநல்லூர் நடைபெற்றது. தி.நகரில் இன்னும் தொடர்ந்து நடைபெறுகிறது.

நாள்: 26 மார்ச் 2009 முதல் (குறைந்தது நான்கு நாள்களுக்காவது நடைபெறும். மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளது.)
இடம்: பி என் சி சி ராமனுஜக் கோட்டம் (ராகவேந்திரா கோயில் அருகில்), 12, டி பி கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005
நேரம்: காலை 10.00 முதல் இரவு 8.30 வரை

தினமும், மாலை 6.00 மணிக்கு மாணவர்களுக்கான சிறப்பு வினாடி வினா எழுத்துத் தேர்வு நடைபெறும்.

தி.நகரில் 12 மார்ச் 2009 முதல் NHM நடத்திவரும் புத்தகக் கண்காட்சி மீண்டும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்போது 30 மார்ச் 2009 வரை நடைபெறும். அதற்குமேலும் நீட்டிக்கப்படலாம்.

உயிர்கள் எப்படித் தோன்றின? - விமர்சனம்

நான் எழுதிய Prodigy புத்தகம் “உயிர்கள் எப்படித் தோன்றின?” என்பதன் மீதான அரவிந்தன் நீலகண்டனின் விமர்சனம் இங்கே.

Monday, March 23, 2009

வருண் காந்தியும் தேர்தல் கமிஷனும்

இந்திரா காந்தியின் ஒரு பேரனான வருண் காந்தி, இன்று பாரதீய ஜனதா கட்சியில் உள்ளார். அவரது தாய், சஞ்சய் காந்தியின் மனைவி, மேனகா காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிலிபித்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராக வருண் காந்தி நிறுத்தப்பட்டுள்ளார்.

ஒரு மாதத்துக்குமுன் வருண், தான் கலந்துகொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களைக் குறிவைத்து கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு பேச்சைப் பேசியுள்ளார். இதன் ஒளித்துண்டுகளைத் தொலைக்காட்சியில் காட்டினர். இது சிடியாகவும் உலா வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஆணையம் வருண், பாஜக இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. வருண்மீது காவல்துறையும் வழக்கு பதிவுசெய்துள்ளது. கைதிலிருந்து தப்பிக்க வருண் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு அறிவுரை ஒன்றை அளித்துள்ளது. வருண் காந்தி தேர்தலில் நிற்கத் தகுதியற்றவர் என்றும் அவரைத் தேர்தலில் நிறுத்தவேண்டாம் என்றும் தேர்தல் ஆணையம் பாஜகவிடம் சொல்லியுள்ளது.
The Commission said, “Mr. Gandhi does not deserve to be a candidate” and asked the BJP not to nominate him from Pilibhit constituency for the Lok Sabha polls.
இதை நீங்களோ, நானோ சொல்லலாம். பாஜகவின் உறுப்பினர்கள் சொல்லலாம். பாஜகவின் ஆதரவுக் கட்சிகளும் எதிரிக் கட்சிகளும் சொல்லலாம். இந்தியாவில் ஒரு சிலர் மட்டும் சொல்லக்கூடாது. குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், மாநில ஆளுநர்கள், தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையர்கள்... போன்ற constitutional பதவியில் இருப்பவர்கள், இதுபோன்ற அறிவுரைகளைத் தருவதிலிருந்து விலகி நிற்கவேண்டும்.

வருண் காந்தி தேர்தலில் நிற்பதை தேர்தல் கமிஷனால் சட்டபூர்வமாகத் தடை செய்யமுடியும் என்றால் அதைச் செய்யவேண்டும். ஆனால் இன்றைய சட்டங்களால் இதைச் செய்யமுடியாது. வருண் காந்தி மட்டுமல்ல, பல கிரிமினல்கள், திருடர்கள், வெளிப்படையாக லஞ்சம் வாங்கியவர்கள், ஏன் கொலையே செய்தவர்கள், மதக் கலவரத்தைத் தூண்டியவர்கள் எனப் பலரும் இன்று ஜாலியாகத் தெருக்களில் உலா வருகிறார்கள். தேர்தலில் நிற்கிறார்கள். மந்திரிகள் ஆகிறார்கள். அங்கெல்லாம் வாயைத் திறக்காத தேர்தல் ஆணையம், இங்கே தனது இயலாமையை வெளிக்காட்டினாலும்...
However, the Commission is conscious of its limitations under the law, as it stands at present, that it cannot impose such disqualification on the respondent and debar him from contesting elections unless he is convicted or held guilty by a competent court of law in an appropriate legal proceeding. In the circumstances, the Commission strongly condemns and censures the respondent, Mr. Gandhi.
...அத்துடன் நில்லாது தேவையற்ற ஓர் அறிவுரையை வழங்குகிறது.

இதுபோன்ற அறிவுரைகளுக்கு பதிலாக, The Representation of the People Act சட்டத்தில் தேவையான மாறுதல்களை வரவழைத்து, சட்டபூர்வமாக அதிகாரத்தைப் பெறும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபடவேண்டும். காங்கிரஸ் போன்ற கட்சிகள் நிஜமாகவே வருண் காந்தி போன்றவர்களைத் தடுத்து நிறுத்த விரும்பினால், தேர்தல் ஆணையத்துக்குத் தேவையான அதிகாரத்தை வழங்க முற்படவேண்டும்.

Friday, March 20, 2009

NHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (3)

முந்தைய பதிவுகள்: ஒன்று | இரண்டு

இந்தப் புத்தகங்கள் உங்களுக்கு வேண்டுமா?
 1. நிர்வாக விதிகள், ரிச்சர்ட் டெம்ப்ளர்
 2. வேலை விதிகள், ரிச்சர்ட் டெம்ப்ளர்
 3. செல்வம் சேர்க்கும் விதிகள், ரிச்சர்ட் டெம்ப்ளர்
 4. அள்ள அள்ளப் பணம் 4: போர்ட்ஃபோலியோ முதலீடுகள், சோம.வள்ளியப்பன்
 5. வீர் சாவர்க்கர், இலந்தை சு. இராமசாமி
 6. இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு, மருதன்
 7. இரா. முருகன் கதைகள்
 8. மால்கம் எக்ஸ், மருதன்
 9. பெரியார், ஆர்.முத்துக்குமார்
 10. ராமகியன் - தாய்லாந்து ராமாயணம், ஆனந்த் ராகவ்
 11. எம்.ஆர்.ராதாயணம், முகில்
 12. உமர் – செங்கோல் இல்லாமல், கிரீடம் இல்லாமல், நூறநாடு ஹனீஃப், தமிழில் நிர்மால்யா
 13. மக்களாகிய நாம்..., அ.கி.வேங்கட சுப்ரமணியன்
 14. என் ஜன்னலுக்கு வெளியே, மாலன்
 15. ரத்தன் டாடா, என்.சொக்கன்
 16. நேரு முதல் நேற்று வரை, B.S.ராகவன்
 17. ஜார்ஜ் வாஷிங்டன், பாலு சத்யா
 18. கீரைகள், டாக்டர் அருண் சின்னையா
 19. கொலஸ்டிரால் குறைப்பது எப்படி? டாக்டர் சு. முத்து செல்லக்குமார்
 20. கருட புராணம், ஸ்ரீ கோவிந்தராஜன்
கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டால் போதும்!
 1. உங்களிடம் ஒரு வலைப்பதிவோ, வலைத்தளமோ (தமிழோ, ஆங்கிலமோ) இருக்கவேண்டும்.
 2. மேலே உள்ள புத்தகங்களில் எது உங்களுக்கு வேண்டும் என்று குறிப்பிடுங்கள்.
 3. ஒவ்வொரு புத்தகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பிரதிகளையே வழங்க உள்ளோம். அதனால் முதலில் தொடர்புகொள்கிறவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
 4. உங்களது அஞ்சல் முகவரியையும் செல்பேசி எண்ணையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்தியாவுக்குள் என்றால் எங்கள் செலவில் அஞ்சலில் அனுப்பிவைப்போம். அல்லது நீங்களே எங்களது அலுவலகத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
 5. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இரண்டு விமர்சனத் திட்டங்களும் நிறைவு பெற்றுவிட்டன. மேலே உள்ள புத்தகங்களில் இருந்து மட்டுமே புத்தகங்களைத் தேர்வு செய்யவேண்டும்.
 6. பெற்றுக்கொண்ட புத்தகத்தைப் படித்துவிட்டு, உங்களது வலைப்பதிவில் அதைப்பற்றி 500 வார்த்தைகளுக்குக் குறையாமல் (தமிழிலோ, ஆங்கிலத்திலோ) விமர்சனம் எழுதவேண்டும்.
 7. விமர்சனம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். புத்தகம் நன்றாக இல்லை, பிடிக்கவில்லை என்றால் அதை உள்ளது உள்ளபடியே குறிப்பிடலாம். ஆனால் கட்டாயமாக விமர்சனம் எழுதியாகவேண்டும். 500 வார்த்தைகளுக்குக் குறையாமல்.
 8. புத்தக விமர்சனப் பதிவின்கீழ், அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் இணைய வணிகத் தள முகவரி (URL) இருக்கவேண்டும். அந்த முகவரியை உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சலில் அனுப்பிவிடுவோம்.
 9. விமர்சனம் எழுதிமுடித்தவுடன் அந்தப் பதிவின் முகவரியை எங்களுக்கு அனுப்பிவைக்கவேண்டும். அதனை நாங்கள் எங்களது தளத்தில் சேர்த்துக்கொள்வோம்.
 10. ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு புத்தகத்தை மட்டுமே பெறமுடியும். ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை ஒரே நேரத்தில் பெறமுடியாது. ஆனால், புத்தகங்களைக் கேட்கும்போது, 2 அல்லது 3 விருப்பங்களை வரிசைப்படுத்திக் கேட்கவும். உங்களது முதல் விருப்பம் முற்றுப்பெற்றுவிட்டால், அடுத்த விருப்பத்தைக் கொடுக்க முயற்சி செய்வோம்.
 11. ஒரு புத்தகத்தைப் படித்து, விமர்சனம் எழுதிய பின்னரே, நீங்கள் அடுத்த புத்தகத்தைக் கேட்டுப் பெறலாம்.
 12. இந்தத் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு நிறுவனத்துக்கு எல்லாவித உரிமையும் உள்ளது. சில காரணங்களுக்காக ஒரு சிலருக்குப் புத்தகங்களை வழங்காமல் இருக்கவும், காரணத்தைப் பொதுவில் சொல்லாமல் இருப்பதற்கும் நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.
 13. இத்திட்டம் தொடர்பாக மின்னஞ்சலில் மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும்.
 14. புத்தகம் அனுப்பப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் விமர்சனம் எழுதவேண்டும்.
 15. ஏற்கெனவே விமர்சனத்துக்கென புத்தகங்களை வாங்கியவர்கள், அதற்கான விமர்சனத்தை எழுதி, எங்களுக்கு அனுப்பியிருந்தால் மட்டுமே, அடுத்த புத்தகத்தைப் பெறமுடியும். ஏற்கெனவே புத்தகத்தை வாங்கி, விமர்சனம் எழுதியவர்கள், இந்த முறை புத்தகம் கேட்கும்போது, முன்னர் எந்தப் புத்தகத்தை வாங்கினீர்கள், நீங்கள் விமர்சனம் எழுதிய சுட்டி ஆகியவற்றை மின்ஞ்சலில் குறிப்பிடவும்.
 16. ஏற்கெனவே உங்களின் முகவரி, தொலைபேசி எண் எங்களிடம் இருந்தாலும், புத்தகம் கேட்டு எழுதும்போது மறக்காமல் உங்கள் முகவரியையும் மொபைல் எண்ணையும் மீண்டும் குறிப்பிடவும்.

மின்னஞ்சல் அனுப்பவேண்டிய முகவரி: haranprasanna@nhm.in

சுவரொட்டிகள், வாசகங்கள்

சில சுவாரசியமான சுவரொட்டிகள் கடந்த இரண்டு நாள்களில் காணக்கிடைத்தன.

“சீமானை தூக்கில் போடு!” என்கிறது ‘பறையர் பேரவை’ என்ற அமைப்பு ஒட்டியிருக்கும் போஸ்டர். ஏன் என்று சில காரணங்களை அடுக்கியுள்ளனர். ஆனால் அந்தக் காரணங்களுக்காக யாரையும் தூக்கில் போடமுடியாது என்பது வேறு விஷயம்.

“ஈழப்போராட்டத்தைத் திசைதிருப்ப வக்கீல்கள்மீது தடியடி நடத்திய தமிழக அரசைக் கண்டிக்கிறோம்” என்கிறது விவேகானந்தா கல்லூரி வாசலில் காணப்படும் போஸ்டர். இன்று காலை அந்த போஸ்டரைக் கிழித்து சுத்தமாக்கியிருந்தனர். தேனிக்கு அருகே ஓர் உணவகத்தில் உணவுடன் சேர்த்து தாங்கள் கையோடு கொண்டுவந்திருந்த சோமபானத்தையும் அருந்தியே தீருவோம் என்று சென்னை ‘வெற்றிப் பேரணிக்கு’ வந்துகொண்டிருந்த வழக்கறிஞர்கள் அறிவித்ததாகவும் அதன் விளைவாக உணவக ஊழியர்களுடன் அடிதடி நடந்ததாகவும் இன்று செய்தித்தாளில் செய்தி அறிவிப்பு. வாழ்க வக்கீல்கள்! வாழ்க அவர்கள் முன்னெடுத்திருக்கும் ஈழப்போராட்டம்!

“தமிழே, இலக்கியமே” என்று பாஜக தமிழகத் தலைவர் இல.கணேசனை வாழ்த்துகிறது ஒரு போஸ்டர். “தொல்காப்பியமே, திருவள்ளுவமே” என்று திமுக தலைவரை வாழ்த்தி அடிக்கும் அபத்த போஸ்டர்களுக்கு இணையாக தமிழக பாஜக ஆதரவாளர்கள் களத்தில் குதித்திருப்பது நல்ல வேடிக்கை. ஆனால் பாஜகவின் இணைய ஆர்வத்தைப் பார்க்கும்போது, “வலைப்பதிவே, ஆர்க்குட்டே, ட்விட்டரே, கூகிளே” என்று இல.கணேசனைப் பாராட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்.

“ரப்பீஸ் அள்ளப்படும்” என்று லாரி ஒன்றில் காணப்பட்ட வாசகம். மிகவும் குழப்பத்தைக் கொடுத்தது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பது “rubbish” என்ற தூய தமிழ்ச் சொல் என்று பின்னர்தான் புரியவந்தது.

Thursday, March 19, 2009

காணாமல் போகுமா பணவீக்கம்?

இன்று வெளியான தகவல், இந்தியாவில் பணவீக்கம் 0.44% என்கிறது. இதை ஏனோ என்னால் நம்பமுடியவில்லை.

20 ஆண்டுகளில் இதுவே குறைவான பணவீக்கம் என்கிறார்கள். ஆனால் உண்மையில் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட பெட்ரோல்/டீசலின் விலை குறைந்தது இரண்டு மடங்கு ஆகியுள்ளது. இன்று ஆந்திரா அரிசி ஒரு கிலோ கிட்டத்தட்ட ரூ. 35 என்று உள்ளது. 20 ஆண்டுகளுக்குமுன் ரூ. 15-க்கும் குறைவாகவே இருந்தது. இப்படி எந்தப் பொருளை எடுத்தாலும் இரண்டு மடங்கு விலையில் இருக்கும்போது எப்படி கடந்த 20 ஆண்டுகளில் இதுவே மிகக்குறைந்த பணவீக்கம் என்று சொல்கிறார்கள்?

சேவையை எடுத்துக்கொள்வோம். முடிவெட்ட ரூ. 70 ஆகிறது இன்று. கிட்டத்தட்ட அதே தரமுள்ள கடையில் 20 ஆண்டுகளுக்குமுன் ரூ. 20-ஐத் தாண்டி இருக்காது.

மின்சாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இன்று இருப்பதைவிட நான்கில் ஒரு பங்குதான் 20 ஆண்டுகளுக்குமுன் இருந்திருக்கும்.

பணவீக்கம் கணக்கீட்டில் எதோ ஃப்ராட் நடக்கிறது. நாமும் தலையைத் தலையை ஆட்டி, அரசு என்ன நம்பரைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறோம்.

அடுத்து, பணவீக்கம் என்பது போய், பணம் மெலியத்தொடங்குமாம். அதாவது பணத்தின் மதிப்பு அதிகரிக்கத் தொடங்குமாம். எனது இரண்டு காதிலும் பக்கத்துக்கு ஒன்றாக, இரண்டு முழம் பூ தொங்குகிறது!

காவல்துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம்

நேற்று சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச், காவலர்கள்-வழக்கறிஞர்கள் அடிதடி பிரச்னையில் இடைக்காலத் தீர்ப்பாக இரு காவல்துறை உயரதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளனர்.

காவலர்கள் வழக்கறிஞர்கள்மீது தாக்குதல் நடத்தியதில், அதற்குக் காரணமான அதிகாரிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை.

ஆனால், இந்த வழக்கில் முழுமையான தீர்ப்பு ஏதும் இன்னும் வரவில்லை. வழக்கறிஞர்கள்மீது எனக்குத் தெரிந்து கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகள் உள்ளன:

1. வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, திறந்திருந்த கடை ஒன்றைக் கடுமையாகத் தாக்கி அங்குள்ள பொருள்களுக்குச் சேதம் விளைவித்தது. இதைத் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

2. வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அந்தப் பக்கமாக வண்டியில் சென்ற ஒருவரை அடித்து நொறுக்கியது.

3. சுப்ரமணியம் சுவாமியை நீதிமன்றத்துக்குள் நுழைந்து நீதிபதிகள் முன்னிலையிலேயே தாக்கியது.

4. நீதிமன்ற வளாகத்தை தங்களது போராட்டங்களுக்காக abuse செய்தது. இதற்கான அனுமதியை எந்தக் கட்டத்திலும் தலைமை நீதிபதியிடம் பெறவில்லை.

5. சம்பவம் நடந்த அன்று, காவலர்களைக் கல்லால் அடித்துத் தாக்கியது.

6. நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல் நிலையத்துக்குத் தீ வைத்தது; அங்குள்ள ஆவணங்களை எரித்தது.

7. அடிதடிப் பிரச்னைகளுக்குப் பின்னாலும், இந்த வாரம், டிராஃபிக் ராமசாமியைத் தாக்கியது.

8. நீதிமன்றத்துக்குப் பிறரைச் செல்லவிடாமல் தடுப்பது.

9. நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தைப் படம் பிடிக்க வந்த புகைப்பட நிருபர்களைத் தாக்கியது.

10. இன்றுவரை வேலைக்குச் செல்லாமல், தமிழக அரசு, நீதிமன்றம் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் ஏதும் நடத்தாது, அடாவடியாக, தங்களுக்குத் தாங்களே சட்டம் என்றவகையில் சண்டியர்தனமாக நடந்துகொள்வது.

இதற்கு எதிராக, காவல்துறைமீதான குற்றச்சாட்டுகள்:

1. தலைமை நீதிபதி அனுமதி இல்லாமல் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தது.

2. வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டபிறகு, அவர்கள்மீது mild ஆன தாக்குதல் நடத்தாமல் கடுமையான தாக்குதல் நடத்தியது.

3. கலவரத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை மட்டும் கட்டுப்படுத்தாது, நீதிமன்ற வளாகத்தில் நுழைந்து அங்குள்ள பல அமைதியான வழக்கறிஞர்களைத் தாக்கி, வழக்கறிஞர்களின் உடைமைகளையும் சேதப்படுத்தியது.

ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை விளக்கமாக வழக்கறிஞர்களின் குற்றங்களை எடுத்துவைத்துள்ளது. அதன்மீது எந்த கவனத்தையும் செலுத்தாத சென்னை உயர்நீதிமன்றம், அதிரடியாக காவல்துறை உயரதிகாரிகள் இருவர்மீது மட்டும் பாய்ந்திருப்பது ஏனோ? வழக்கறிஞர்களிடம் என்ன பயம்? வழக்கறிஞர்கள்மீது ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா அல்லது அவர்கள் காலில் விழுந்து வணங்கி அவர்கள் கேட்பதை நீதிபதிகள் செய்துகொடுக்கப்போகிறார்களா?

மேலும் பணிநீக்க தண்டனை பெற்றுள்ள இரண்டு அதிகாரிகள்தான் இந்த அடிதடிக்குக் காரணமா அல்லது தங்களுக்கு மேலுள்ள அதிகாரிகளுக்காக இவர்களது பதவிகள் தியாகம் செய்யப்படுகின்றனவா? இந்த அடிதடியை காவல்துறை உயரதிகாரிகள் முன்னின்று செய்தனரா அல்லது அமைச்சர்கள்/முதலமைச்சர்/அமைச்சகச் செயலர்கள் அனுமதியுடன் அடிதடி நிகழ்த்தப்பட்டதா?

தமிழக (இந்திய) காவலர்கள், மக்களை நடத்தும்விதத்தில் மாறுதல் வரவேண்டும் என்று நம்புபவன் நான். காவல்துறையினர், மக்களிடம் பணிவாக, அன்பாக நடந்துகொள்ளவேண்டும். ஆனால் அடிதடி, கலவரத்தில் ஈடுபடுவோரிடம் கனிவாக எப்படி நடந்துகொள்வது? கலவரத்தில் ஈடுபடும் வக்கீல்களிடம் காவலர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்? தங்கள்மீது கல் எறியும் வக்கீல்களை எப்படி நடத்தவேண்டும்? காவல் நிலையத்தைக் கொளுத்தும் வக்கீல்களை என்ன செய்யலாம்?

இதைப்பற்றியும் சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் கருத்து சொன்னால் நன்றாக இருக்கும்!

Wednesday, March 18, 2009

பசி போக்குபவர்கள்

சென்ற வாரம் ட்விட்டரில், நியூ யார்க் டைம்ஸ் செய்தி ஒன்றைப் பற்றி பேச்சு வந்தபோது, பசி போக்குதல் பற்றிய சிறு விவாதம் நடைபெற்றது. சென்னையில் எந்தத் தொண்டு நிறுவனங்கள் பசியை மையமாக வைத்து இயங்குகின்றன என்ற தகவலை CIOSA-வில் இருக்கும் நண்பர் பிரசன்னாவிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். அவர் கீழ்க்கண்ட தகவலை அனுப்பினார். உங்களுக்கு உபயோகமாக இருக்கலாம். இதற்கு மேலும் பல அமைப்புகள் பசியைப் போக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கலாம். தகவல் தெரிந்தால் எனக்கு அனுப்புங்கள்.

பெயர்தொடர்புக்குமுகவரி
நவஜோதி சேவா சமிதிடி.கே.ஜோசஃப், ஜான் தாமஸ் tkjoseph@navjyothi.org 98403 13591, 2241 3809, 99401 754213, செயிண்ட் பால்ஸ் காம்ப்ளக்ஸ், துர்கா நகர் மெயின் ரோடு, தாம்பரம் சானடோரியம், சென்னை 600 047
தி பிரிட்ஜ்contact@bridgenetwork.org9-A, 12வது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை 600 020
கிறிஸ்டியன் மிஷன் சாரிடபிள் டிரஸ்ட்கோலீன் ரெடிட் cmredit.cmct@gems.vsnl.net.in 2827 879172/59, ஸ்பர்டாங்க் ரோடு, சென்னை 600 031
 ஷங்கர், சாவித்ரி 2255 0472, 94442 90000 12/16, பச்சையம்மன் கோயில் தெரு, G-5, பாரீஸ் சவுத் அபார்ட்மெண்ட், கிண்டி, சென்னை 600 032
நியூ வேர்ல்ட் யூத் கிளப்முரளி, சாம் எபனேசர், ஆறுமுகம் 94441 16643, 98407 1341625, அந்தோணி பிள்ளை தெரு, காந்தி நகர், சென்னை 600 059
சென்னை ஃபுட் பேங்க்சாயி பிரியா 2431 2096ஸ்ரீ பாதல்சந்த் சுகன் கன்வர் கார்டியா பவன், 12, சரவணா தெரு, தி.நகர், சென்னை 600 017
சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரம்98410 77298G S T சாலை, காட்டாங்குளத்தூர், சென்னை 603 203
பிடியரிசிபிரசன்னா நாகராஜன் 99406 5890556, போஸ்டல் டிரெய்னிங் முதல் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 600 033
அருள் ஜோதி அன்ன ஆலயம்தனலக்ஷ்மி 94449 9033017, பேராதனா சாலை, கண்ணாடி சதுக்கம், திருவிக நகர், பெரம்பூர், சென்னை 600 011
ரியா மெட்ராஸ் மெட்ரோ டிரஸ்ட்நஹார் 98400 1495112, சரவண முதலி தெரு, தெற்கு போக் சாலை வழியாக, தி.நகர், சென்னை 600 017

Sunday, March 15, 2009

மாணவர் சங்கங்கள்

சார்லஸ் டார்வின் பற்றிய முழுமையான, விரிவான, ஆழமான, இரண்டு தொகுதிகள் அடங்கிய வாழ்க்கை வரலாற்றைப் படித்து வருகிறேன். ஜேனட் பிரவுன் (Janet Browne) என்பவர் எழுதியது.

சார்லஸ் டார்வினும் அவரது அண்ணன் எராஸ்மஸ் டார்வினும் மருத்துவம் படிப்பதற்காக எடின்பரோவுக்குச் செல்கின்றனர். எடின்பரோவில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தங்களுக்குள்ளாக ஒரு professional society ஒன்றை உருவாக்குகிறார்கள். பிரிட்டனின் பிற கல்வி நகரங்களிலும் 19-ம் நூற்றாண்டில் மாணவர்கள் இதுபோன்ற அறிவு சார்ந்த சங்கங்களை உருவாக்குவது வாடிக்கையாக இருந்திருக்கிறது. இந்தச் சங்கங்களில் ஆசிரியர்கள் பெரிதாகக் கலந்துகொண்டதாகத் தெரியவில்லை.

இந்தச் சங்கங்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஆய்வறிக்கைகளைப் படிக்கிறார்கள். கட்டுரைகள் எழுதி வாசிக்கிறார்கள். அவற்றைத் துண்டுப் பிரசுரங்களாக வெளியிடுவதும் நடக்கிறது.

ஐஐடியில் படித்தபோது நாங்கள் இதுபோன்ற அறிவுசார் சங்கங்கள் எதையும் உருவாக்கவில்லை. அறிவியல், பொறியியல் விஷயங்களைப் பற்றித் தீவிரமாக விவாதிக்கவில்லை. IEEE, SME போன்ற அமைப்புகள் இருந்தன. ஆனால் இதில் மாணவர்களின் ஈடுபாடு பெரிய அளவுக்கு இருக்கவில்லை. நாங்கள் ஏதும் உருப்படியாகச் செய்யவில்லை. எனக்குத் தெரிந்தவரை தமிழகக் கல்லூரிகளில் மாணவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை.

19-ம் நூற்றாண்டு பிரிட்டன் மாணவர்களிடையே இருந்த அறிவை நோக்கி விழையும் ஆர்வம் 21-ம் நூற்றாண்டில் இந்திய மாணவர்களிடம் ஏன் இல்லை? இது அறிவியல் அல்லது கணிதம் பற்றியதாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. சமூக அறிவியல், சூழலியல், பொருளாதாரம், தொழில் முனைதல், சட்டம், மொழி என்று இதுவென்றுதான் இருக்கவேண்டும் என்பதில்லை. எதுவாகவும் இருக்கலாம்.

கல்லூரிக்கு வரும் மாணவர்களில் அடிதடிகளில் ஈடுபடும் ரவுடிகள் போக, அறிவு வேட்கையில் ஆர்வம் உள்ள ஒரு சிலராவது ஏன் இதைப்போன்ற காரியங்களில் ஈடுபடுவதில்லை. இந்த ஆர்வத்தைத் தூண்ட என்ன செய்யவேண்டும்? எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும்?

உங்களுக்கு ஏதேனும் சிந்தனைகள் உள்ளனவா?

***

டார்வின் வாழ்க்கையில் ஆர்வம் உள்ளவர்களுக்காக:

1. Charles Darwin: Voyaging, Janet Browne, Princeton University Press, Pages 624, Year 1995
2. Charles Darwin: The Power of Place, Janet Browne, Princeton University Press, Pages 600, Year 2002

தி.நகர் கிழக்கு புத்தகக் கண்காட்சி நீட்டிப்பு

பெரும் வரவேற்பு இருக்கும் காரணத்தால் தி.நகர் எல்.ஆர்.சுவாமி அரங்கில் (உஸ்மான் ரோட்டில் சிவா விஷ்ணு கோயிலுக்கு எதிராக, தி.நகர் பஸ் ஸ்டாண்டுக்கு எதிராக, சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸுக்குப் பக்கத்தில்) நடைபெறும் கிழக்கு புத்தகக் கண்காட்சி மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது.

இந்த வாரம் முழுமைக்கும் (16-22 மார்ச் 2009) கிழக்கு புத்தக விற்பனை தொடரும்.

***

நாளை வேலூரில் கிழக்கு பிரத்யேக ஷோரூம் திறக்கப்படும்.

Thursday, March 12, 2009

மொழி vs அறிவியல்/கணிதம்

கடந்த சில பத்தாண்டுகளாக நம் பள்ளிகளில் மொழி கற்றுக்கொடுப்பதில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பொதுவாக மாணவர்களுக்கு இரு வகையான திறன்களை நாம் அளிக்க முற்படுகிறோம். இதில் முதலாவது மொழித்திறன். இன்று இரு மொழிகளைக் கற்பிப்பது முக்கியம் என்று அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். இரண்டாவது அறிவியல், கணிதம். அறிவியல் எனும்போது இயல்பியல், வேதியியல், உயிரியல் தாண்டி, சமூக அறிவியல், பொருளாதாரம், சூழலியல் போன்ற பலவும் அடங்கும். அறிவியல் என்பதன் வேர்ச்சொல்லான அறிவு என்பதாக இதனை நாம் எடுத்துக்கொள்ளலாம். கணிதத்தை தனியான ஒரு திறனாகவே மதிப்பிடவேண்டும்.

மொழியறிவைப் பொருத்தமட்டில், சமீப காலங்களில் நடந்துள்ள சில மாற்றங்கள் மாணவர்களுக்குச் சரியான திறன்களைத் தருவதில்லை. அவை:

1. தாய்மொழியை உதாசீனப்படுத்துவது. விளைவாக, எந்த மொழியில் நல்ல சிந்தனை அறிவைப் பெற்றுள்ளார்களோ அந்த மொழியில் எழுதத் தெரியாமை. அந்த மொழியில் சரியான சொற்குவியல் இல்லாமை. ஓரளவு தாய்மொழியில் பேசத் தெரிந்தாலும், சிந்தனையைத் தெளிவாக வெளியிட முடியாத குழப்பமான நிலை.

2. ஆங்கிலம் மேலான காதலில் தவறில்லை. ஆனால் ஆங்கிலத்தைச் சரிவரச் சொல்லித் தராத நிலையே பெரும்பாலான பள்ளிகளில் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் சரியான ஆங்கில ஆசிரியர்கள் இல்லாத நிலை, இன்றைய நம் மக்கள் சூழலைப் படம் பிடிக்காத ஏதோ ஓர் குப்பையைப் பற்றிச் சொல்லும் ஆங்கிலப் பாடப் புத்தகங்கள். 3-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான ஆங்கிலப் புத்தகங்கள், non-detail ஆகியவற்றை எடுத்துப் பாருங்கள். இன்னமும் எதோ ஓர் ஆங்கிலேயன் பூவையும் புண்ணாக்கையும் பார்த்து எழுதின அபத்தக் கவிதைகள், வேறு நாட்டவருடைய அனுபவங்கள் ஆகியவையே அதிகம் காணப்படுகின்றன.

என் பெண்ணின் 4-ம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் (CBSE) ஏதோ அமெரிக்கத் தெருவில் நடக்கும் ஒரு காட்சி இரண்டு பக்கங்களுக்கு வருகிறது. பெயர்கள் முதற்கொண்டு அவர்கள் காப்பி அருந்தப் போகும் இடம் முதற்கொண்டு எல்லாமே அந்நியம். அவர்கள் பேசிக்கொள்வது அந்நியம். அந்த பாப் இசைப் பாடகியின் கைப்பையைத் திருடும் திருடன் அந்நியம். அந்தக் கைப்பையை மீட்டு பாடகியிடம் கொடுக்கும் பையன் அந்நியம்.

இன்னொரு பாடமாக, நாய் பற்றி ஒரு ஆங்கிலக் கவிஞர் எழுதிய பாடல். நம் தெருவில் காணும் நாய்க்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நம் திருவிழாக்கள், நம் சந்தோஷங்கள், நம் துக்கங்கள், நம் சடங்குகள், நம் நம்பிக்கைகள், நம் கோபங்கள் என்று எதையும் ஆங்கிலத்தில் வெளிப்படுத்த நம் குழந்தைகளுக்கு இந்தப் புத்தகங்கள் சொல்லித்தருவதில்லை.

முன்னராவது ஆங்கிலம் என்பது ஒரு வேற்று மொழி என்ற அளவில் படித்தோம். ஆனால் இன்றோ அதுதான் மீடியம் என்ற அளவில் அதன்மூலம்தான் அனைத்தையும் படிக்கவேண்டும் என்றாகிறது. ஆனால் சரியான சொற்குவியல், சரியான எண்ணங்கள், சரியான வாக்கியங்கள் என்று எதுவும் சொல்லிக்கொடுக்கப் படுவதில்லை.

ஆனால், ஆங்கிலத்தில் சிறு சிறு சொற்களை வைத்து, தமிழைவிட நன்றாக எழுதக் கற்றுக்கொண்டுவிடுகிறார்கள் மாணவர்கள்.

பிரச்னை எங்கே? தமிழில் நன்கு சிந்திக்கமுடிகிறது. ஆனால் எழுதத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் சிந்திப்பதிலேயே தகராறு. அதைத் தாண்டிவிட்டால் எழுதமுடிகிறது. ஆனால் எப்போது சிந்தித்து முடித்து எப்போது எழுதி முடிப்பது?

என் பெண்ணின் வகுப்பில், திடீரென ஒரு கதை எழுது என்று சொல்லியிருக்கிறார்கள் (ஆங்கிலத்தில்தான்). அந்தக் கதையைப் படித்துப் பார்த்தேன். நன்றாக இருந்தது. என்ன சொல்லவேண்டும் என்று அவள் முயற்சி செய்துள்ளாள் என்று தெரிகிறது. ஆனால் வார்த்தைகளுக்கான தடுமாற்றம். இத்தனைக்கும் அதற்குத் தேவையான ஆங்கில வார்த்தைகள் சிக்கலானவை அல்ல. சரியான பாடப் புத்தகங்களும் non-detail-உம் இருந்திருந்தால் அவளால் அந்தக் கதையை நன்கு எழுதியிருக்கமுடியும். (அவளது வகுப்பில் பல ஆண் பிள்ளைகள் ஏ.கே.47, தீவிரவாதிகள், குண்டுவைத்தல் என்று கதைகளை எழுதியிருக்கும் கொடுமை வேறு! அதைப்பற்றி தனியாகப் பேசி அழவேண்டும்!)

அதே கதையை தமிழில் எழுதச் முயற்சித்தால் அங்கும் தகராறு. எழுத்துப் பிழைகள். Diglossia பிரச்னைகள்.

3. இதற்கிடையில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றைப் பயிற்றுவித்தலை வீடுகளிலும் பெற்றோர்கள் ஒழுங்காகச் செய்வதில்லை. அறிவியல், கணிதப் புத்தகத்தை அடித்துத் தட்டி தன் மகன்/மகள் எஞ்சினியர் (சாஃப்ட்வேர்!) ஆகவேண்டும் என்பதிலேயே பெற்றோர்கள் கவனமாக இருக்கிறார்கள்.

விளைவு? பட்டம் வாங்கியபிறகு வாய் திறந்து ரெண்டு வார்த்தை பேச வக்கற்றவர்களாக, பிழையின்றி ஒரு பத்தி எழுத திராணியற்றவர்களாக (ஆங்கிலம், தமிழ் எதிலுமே!), மொத்தத்தில் உருப்படாதவர்களாக இந்த மாணவர்கள் ஆகிவிடுகிறார்கள்.

சாஃப்ட் ஸ்கில், அது இது என்று பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் கண்ணீர் விடுகிறார்கள். மொழியை ஒழுங்காகப் பேச, எழுதக் கற்றுக்கொடுத்தால் போதும். அதுதான் சாஃப்ட் ஸ்கில்லில் முக்கியமானது. எதிராளி பேசுவதை சரியாகப் புரிந்துகொள்வது, அதற்கான பதிலை எளிமையான மொழியில் எதிராளி புரிந்துகொள்வது போலச் சொல்வது. இதையே எழுத்திலும் செய்வது. இவ்வளவுதான்.

வலைப்பதிவுகளையே பாருங்களேன்? எத்தனை பேர் திராபையாக எழுதுகிறார்கள்? என்ன எழுதுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள நாம் திண்டாடவேண்டியுள்ளது. இதற்கான அடிப்படைக் காரணம் மொழியறிவு இல்லாததே.

***

என் கணிப்பில், பள்ளிகள் உடனடியாக அறிவியல், கணிதத்தைவிட அதிகமாக ஆங்கிலம், தமிழ் சொல்லிக்கொடுப்பதில் நேரத்தைச் செலவிடவில்லை என்றால், அறிவியல் கற்பதில் பயனே இல்லை என்றாகிவிடும். கற்ற அறிவியலை திரும்பச் சொல்லித்தரக்கூட மொழி அறிவு இல்லாதவரால் முடியாது.

மொழி அறிவு இல்லாதவர்கள் எந்த நிறுவனத்திலும் தலைமைப் பதவியை அடையவே முடியாது. (அரசு நிறுவனங்கள் விதிவிலக்கு!)

வேலூரில் கிழக்கு பிரத்யேக ஷோரூம்

வேலூர் நகரில் கிழக்கு பதிப்பகத்தின் பிரத்யேக புத்தக விற்பனை ஷோரூம் திங்கள், 16 மார்ச் 2009 அன்று திறக்கப்பட உள்ளது.

வேலூரில் சில இடங்களில் NHM புத்தகங்கள் கிடைத்தாலும், ஒரே இடத்தில் அனைத்து NHM புத்தகங்களும் கிடைப்பதற்கு இது உதவும். இந்தக் கடையில் (100 சதுர அடி), NHM புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும். பிற பதிப்பாளர்களின் புத்தகங்கள் இங்கே விற்பனைக்கு இருக்காது.

முகவரி: புதிய எண் 17, ரெட்டியப்பா முதலி தெரு, ரங்கா கல்யாண மண்டபம் எதிரில், கொசப்பேட்டை, வேலூர் 632 001

VIT பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் கடையைத் திறந்து வாழ்த்திப் பேசுகிறார். வேலூர் சன்பீம் பள்ளிகளின் தாளாளர் டி.ஹரிகோபாலன் வாழ்த்துகிறார். திங்கள் அன்று காலை 9.00 மணிக்கு சிறு நிகழ்ச்சி (எதிரே உள்ள ரங்கா கல்யாண மண்டபத்தில்) நடக்கும். சிறப்பு விருந்தினர்கள் பேசுவார்கள். தொடர்ந்து ரிப்பன் வெட்டி கடை திறக்கப்பட்டவுடன், புத்தக விற்பனை ஆரம்பமாகும்.

இனி வரும் மாதங்களில் தமிழகத்தின் பிற நகரங்களில் இதேபோல் பிரத்யேக கிழக்கு ஷோரூம்கள் திறக்கப்படும்.

Tuesday, March 10, 2009

கிழக்கு தி.நகர் புத்தகக் கண்காட்சி

மார்ச் 12 முதல் 15 வரை, கிழக்கு பதிப்பகத்தின் சென்னையைச் சுற்றி நடக்கும் புத்தகக் கண்காட்சியின் மூன்றாவது பதிப்பு தி.நகரில் நடைபெறுகிறது. இதற்குமுன், மைலாப்பூர், நங்கநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இடம்: எல்.ஆர்.சுவாமி ஹால் - தியாகராய நகர் சிவா விஷ்ணு கோவிலுக்கு எதிரே, சங்கரபாண்டியன் ஸ்டோருக்கு அருகில்
நேரம்: காலை 10.00 முதல் இரவு 8.30 வரை

Monday, March 09, 2009

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு

விவேகானந்தா எஜுகேஷனல் சொசைட்டி என்ற அமைப்பு, சென்னையைச் சுற்றி 20 பள்ளிகளை நடத்துகிறது.

இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்தப் பள்ளிகளில் உள்ள சுமார் 8,000 மாணவிகளைத் தேர்தெடுத்து நியூ ஹொரைசன் மீடியா நிறுவனம், அவர்கள் அனைவருக்கும் ஓர் இலவசப் புத்தகத்தை வழங்குகிறது.

படிப்பு ஆர்வத்தை வளர்த்துக்கொள்வதன்மூலம், மாணவிகள் வாழ்க்கையில் அதிகம் சாதிக்கமுடியும் என்பதை வலியுறுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இதற்கென, அறிவியல் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வகையிலான புத்தகங்கள், சுய முன்னேற்றத்துக்கு உதவும் புத்தகங்கள் என்று தேர்ந்தெடுத்துள்ளோம்.

இன்று தொடங்கி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுவிடும்.

இதன்மூலமாக பல ஆயிரம் புதிய பெண் வாசகர்கள் உருவானால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்.

ஆபாசம்

இன்று ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார். தெருவெங்கும் போஸ்டர்கள்.

இன்னும் பாக்கி, டில்லி ஜந்தர் மந்தரில் சோனியா காந்தி இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கவேண்டியது மட்டுமே. அது முடிந்ததும் கொழும்பில் மஹிந்தா, கொத்தபாயா, பேசில் மூவரும் தமிழர்களின் நலனுக்காக உண்ணாவிரதம் இருப்பார்கள்.

பிறகு அனைவரும் சேர்ந்து, இதுவரை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்காத ஒரே ஒருவர் பிரபாகரன் மட்டுமே என்றும் அதற்கான காரணத்தைத் தமிழர்களே புரிந்துகொள்வார்கள் என்றும் சொல்லி முடித்துவிடுவார்கள்.

Saturday, March 07, 2009

சென்னை உயர்நீதிமன்றத் தாக்குதல்

நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா இடைக்கால அறிக்கை வெளியாகியுள்ளது. [pdf கோப்பு] அதிலிருந்து தெளிவாக கீழ்க்கண்ட விஷயங்கள் தெரிந்துள்ளன.

1. சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் உயர்நீதிமன்ற வளாகத்தை தங்கள் அரசியல் காரணங்களுக்காக - புலி ஆதரவு, ஈழ ஆதரவு - பயன்படுத்தியது.

2. உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு), இதனைக் கண்டிக்காதது; இதனால் வக்கீல்களுக்குத் துளிர் விட்டது; தாங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது.

3. தொடர்ச்சியாக ஈழ ஆதரவுப் போராட்டம் என்ற பெயரில் காவலர்களைச் சீண்டியது. காவலர்கள் வழக்கறிஞர்கள்மேல் பல வழக்குகளைப் பதிவு செய்தது.

4. நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையிலேயே சுப்ரமணியம் சுவாமி மீதான வக்கீல்களின் தாக்குதல். அதன் அடியில் மண்டியிருக்கும் பார்ப்பன எதிர்ப்பு ஒரு பக்கம். அதைவிட மோசம் நீதிமன்றம் என்ற இடத்தின் புனிதம்மீதான எல்லை மீறலும் அதை வழக்கறிஞர்களே செய்துகாட்டியிருப்பதும். தமிழகத்தின், வலைப்பதிவுலகின் தலைசிறந்த அறிவுஜீவிகள்கூட சுப்ரமணியம் சுவாமி என்ற தனிமனிதன் மீதுள்ள காழ்ப்பால் இந்த அடிப்படையை ஜீரணிக்க மறந்துவிடுகிறார்கள்.

5. இதற்குப்பிறகு நிச்சயமாக நடப்பு அரசின் முழு ஆசீர்வாதத்துடன் காவலர்கள் வக்கீல்களை நையப் புடைத்துள்ளனர். இதுவும் மிகத் தவறான அணுகுமுறை. இது பிரச்னையைப் பெரிதாக்கும் ஒரு விஷயம்தான்.

***

இப்போது தீர்வு.

1. முதலில் அரசு நேரடியாக வக்கீல்கள் தலைமையிடம் தெளிவாகப் பேசவேண்டும். தனியாக சென்னை உயர்நீதிமன்றத்துக்குப் பொறுப்பேற்க இருக்கும் தலைமை நீதிபதி பேசவேண்டும்.

2. அரசு நிச்சயம் வழக்கறிஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். என்னதான் ஒரு குழுவினருள் சிறு குழு தெரிந்தே தவறு செய்தாலும் காவல்துறை காட்டிய நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. காவல்துறை அரசின் அனுமதியின்பேரில்தான் இதைச் செய்திருக்கிறது என்ற அனுமானம் தவறாகத் தோன்றவில்லை. எனவே அரசுச் செயலர், முடிந்தால் முதல்வரே பகிரங்கமாக நடந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும். நாசமான பொருள்களுக்கு உடனடியாக இழப்பீடு தரவேண்டும்.

3. காவல்துறைத் தலைவர்களுக்கு தண்டனை என்று பெரிதாகத் தரவேண்டியதில்லை. இன்றைய காவல்துறை அரசியலின் கைப்பாவை என்ற அநியாயத்தை மாற்றவேண்டிய நீண்டகாலச் செயல்பாடு ஒன்று உள்ளது. சில காவலர்களை இடமாற்றம் செய்யலாம். பணி நீக்கம் தேவையில்லை. காவல்துறையும் அளவுக்கு மீறித் தாக்கியதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும்.

4. வழக்கறிஞர்கள் தாங்கள் உயர்நீதிமன்ற வளாகத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும். அதை அவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் வைத்துக்கொள்ளலாம்.

5. ரவுடித்தனம் செய்த அனைத்து வழக்கறிஞர்கள்மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்கள்மீது நியாயமான முறையில் வழக்குகள் நடைபெறவேண்டும். இதை வழக்கறிஞர்கள் சங்கம் தடுக்கக்கூடாது. அதிகபட்சமாக வேண்டுமானால் ஒரு plea bargain-மூலம் தண்டனைகளைக் குறைத்து வெறும் அபராதங்களாக மாற்றி சீக்கிரமாக முடித்துக்கொள்ளலாம்.

6. உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடியாக வக்கீல்களைக் கூப்பிட்டுப் பேசி, சிலவற்றைத் தெளிவாக்கவேண்டும்.
(அ) வழக்கறிஞர்கள் அரசியல் கோஷங்கள், போராட்டங்களை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே மட்டுமே நடத்தவேண்டும்.
(ஆ) நீதிமன்றத்துக்குள் வந்து குழப்பம், அடிதடி செய்யும் அனைத்து வக்கீல்களும் உடனடியாக வழக்காடும் உரிமையை குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்காவது இழப்பார்கள்.
(இ) வழக்காட வரும் எந்த வழக்கறிஞரையும் தடுக்கும் வக்கீல்கள், சாதாரண கிரிமினல் குற்றங்களுக்காக காவலர்களால் பிடிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்படலாம்.

***

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வரவுள்ள எச்.எல்.கோகலே வலுவாக நடந்துகொள்வார் என்று நம்புவோம். கூடவே தமிழக அரசும் தேவையான மென்மையுடனும் சாதுர்யத்துடனும் நடந்துகொள்ளவேண்டும். அடுத்து, வக்கீல்கள் தங்கள் சங்கத்துக்குத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது போராட்ட குணம் கொண்டவர்களை மட்டும் தேர்ந்தெடுக்காமல் தெளிவான சிந்தனை கொண்டவர்களையும், பிரச்னைகளை சுமுகமாகத் தீர்க்கும் திறன் படைத்தவர்களையும் தேர்ந்தெடுத்தால் நல்லது.

நேருக்கு நேர் - நிகழ்ச்சி அறிவிப்பு

இன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில், வீரபாண்டியனுடன் நானும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலரும் தமிழக வக்ஃப் வாரியத் தலைவருமான ஹைதர் அலியும் கலந்துகொண்டு உரையாடிய நேருக்கு நேர் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை, 7 மார்ச் 2009) ஒளிபரப்பாகிறது. இரவு மணி 9.00. மறு ஒளிபரப்பு திங்கள் கிழமை மாலை 5.30 என்று சொன்னார்கள்.

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பற்றியது.

கொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கடை உரிமையாளர் கைது

நேற்று படித்த ஒரு செய்தி அதிர்ச்சியைத் தந்தது.

இலங்கையில் விகடன் விற்பனையாளர் கைது!

கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ்ப் புத்தகக் கடை நடத்தி வருபவர் ஸ்ரீதர் சிங். தமிழ்ப் பதிப்பாளர்கள் பலருக்கும் இவரைத் தெரியும். நான் இவரைச் சந்தித்திருக்கிறேன். என் தோழன் சத்யா கடைசியாக (இரண்டு வருடங்கள் முன்?) கொழும்பு சென்றிருந்தபோது இவருடன் நிறையப் பேசியிருக்கிறான். கொழும்பில் தமிழ்ப் புத்தகக் கடை நடத்துவதன் பயங்கள், அநிச்சயமான நிலை, எப்போது வேண்டுமானாலும் காவல்துறையினர் வந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை ஆகியவை பற்றி பேசியுள்ளனர்.

ஆனந்தவிகடன் இதழ்களை இலங்கையில் காசு கொடுத்து வாங்கும் சில நூறு (ஆயிரம்?) பேர்களுக்கு விநியோகம் செய்கிறார் ஸ்ரீதர் சிங். அதில் கடைசி இதழில் கொழும்பு நகரின்மீது சமீபத்தில் நடந்த வான் தாக்குதல் படங்களும் செய்தியும் இருந்த காரணத்தால் ஸ்ரீதர் சிங் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.

அது ஒருவிதத்தில் தடை செய்யப்படவேண்டும் என்றால் இலங்கைக் காவல், அனைத்துப் பிரதிகளையும் பறிமுதல் செய்துவிட்டுப் போய்விடலாம். இதில் ஸ்ரீதர் சிங் தெரிந்து எந்தத் தவறையும் செய்யவில்லை. ஆனால் இலங்கை போன்ற இடத்தில் இருக்கும் சீரழிந்த மனித உரிமை நிலையில், அவரை ராணுவம் சுட்டுக் கொல்லாமல் ஏதோ இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்ற அளவில் அதுவே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது. வரும் சில நாள்களுக்குள் அவர் விடுவிக்கப்படுபாறு வேண்டுவோம்.

காட்டாட்சிகள் ஒரு நாள் அழிவுபடும்.

காந்தி ஏலம்

இதை இவ்வளவு பெரிய விஷயமாக்க அவசியமே இல்லை. இந்தச் சரத்தின் அனைத்துக் கண்ணிகளுமே அபத்தமாகத் தெரிகின்றன. காந்தியின் பொருள்கள் ஏலத்துக்கு வந்ததில் அவரது உறவினர்கள் முதற்கொண்டு பிற இந்தியர்கள் வரை பதறவேண்டிய அவசியமே இல்லை. அடுத்தது அப்படியே அந்தப் பொருள்களை யாரோ வேறு ஒருவர் எக்கச்சக்க விலை கொடுத்து வாங்கிக்கொண்டு போய் வைத்துக்கொண்டால் அதனால் இந்தியாவுக்கு யாதொரு நஷ்டமும் இல்லை.

நவஜீவன் டிரஸ்ட், காந்தியுடைய இந்தப் பொருள்கள் எல்லாம் தங்களுடையது என்றும் யாரோ திருடித்தான் இவை எலம் விட்டவரிடம் சென்றிருக்கவேண்டும் என்று சொல்லியிருப்பதும் அபத்தம். காந்தி தன் கையிலிருந்த பலவற்றை பலவேறு தருணங்களில் பலருக்குக் கொடுத்திருக்கலாம். அன்பின் வெளிப்பாட்டால் அதைச் செய்திருக்கலாம். நமக்குத் தெரிந்த ஒன்று அவர் ஜெனரல் ஸ்மட்ஸுக்கு தானே தைத்துக்கொடுத்த ஒரு செருப்பு. வேறொரு தருணத்தில் யாரிடமாவது தனது பயன்படுத்தாத ஒரு கண்ணாடியைக் கொடுத்திருக்கலாம். அது பல கை மாறி, கடைசி ஆசாமி, அதனைப் பணமாக மாற்ற முயற்சி செய்தால் அதை யாரும் தடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

விஜய் மல்லையா இந்த முயற்சியை அற்புதமான ஒரு மார்க்கெட்டிங்காக மாற்றியதற்கு அவருக்கு ஒரு ஷொட்டு. காந்தியர்கள் வாயால் பாராட்டு வாங்கிய சாராய வியாபாரி என்பது சாதாரண விஷயமல்ல. Brilliant strategy. அவ்வளவே. காங்கிரஸ் இதிலும் கை போட்டு தன்னால்தான் உலகமே இயங்குகிறது என்று சொல்லி கால் ஓட்டு அரை ஓட்டு வாங்க வழி இருக்குமா என்று பிச்சை தேடுவது அசிங்கம். மல்லையா பதிலுக்கு மூக்கை உடைத்தாலும் அதைப்பற்றி அம்பிகா சோனிகளுக்குக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

மற்றபடி பல கார்ட்டூன்களிலும் வந்ததுபோல, காந்தியையே மறந்துவிட்டு, காந்தி தின்ன தட்டு, போட்டுகிட்ட கண்ணாடி இருந்தா என்ன, இல்லாட்டி என்ன?

ஜெய் ஹோ!

Wednesday, March 04, 2009

பாகிஸ்தான் புதைகுழி

மும்பைமீது பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து பாகிஸ்தானைப் பற்றி எழுத ஆரம்பித்து, தொடரமுடியவில்லை. ஆனால் அன்றுமுதல் இன்றுவரை பாகிஸ்தானின் நிலை மேலும் புதைகுழிக்குள் போயுள்ளது. மீளவே முடியாத இஸ்லாமிய அடிப்படைவாதச் சுழலுக்குள் சிக்கிச் சீரழிந்துபோகத் தொடங்கியுள்ளது அந்த நாடு. அதன் தாக்கம் இந்தியாமீது கடுமையாக இருக்கும். ஆனால் எப்படி இந்தியாவுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுத்து நிறுத்துவது என்பதற்கும் நம்மிடம் தெளிவான உபாயம் இல்லை.

பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுப்பதல்ல அது என்றுமட்டும் எனக்குத் தோன்றுகிறது. எல்லைப் பாதுகாப்பை அதிகரிப்பது என்ற தட்டையான ஓர் உபாயத்தை மட்டும்தான் என்னால் யோசிக்கமுடிகிறது. ஆனால் அது எவ்வளவு கடினம், கடல்வழி, தரைவழி என எத்தனை ஆயிரம் கிலோமீட்டர்களை நாம் கண்காணிக்கவேண்டும் என்று நினைக்கும்போது பகீரென்கிறது.

பாகிஸ்தான் உருவான முதல் சில ஆண்டுகளுக்குள்ளாகவே அது ஒரு செயல்படும் குடியாட்சி என்ற நிலையிலிருந்து நழிவிவிட்டது. பிறகு, செயல்படும் தேசம், செயல்படும் இறையாண்மை என்பதிலிருந்தும் இப்போது முற்றிலுமாக வழுவிவிட்டது. யார் யாருக்கு அடிபணிகிறார்கள்? அரசியலமைப்பு முறையில் யார் தலைவர்? யார் நாட்டுக்குப் பொறுப்பு? பாகிஸ்தானிகளுக்கே தெரியாது. கண்ணெதிரே ஒரு நாடு நாசமாகிறது. இதற்கு அவர்களிடம் உள்ளூர இருந்த இந்திய வெறுப்பும் இஸ்லாமிய அடிப்படைவாதமும் காரணம்.

ஒரு பாசிடிவ் அஜெண்டா இல்லாத நாட்டால் முன்னுக்கு வரமுடியாது. பாகிஸ்தானிடம் எந்த பாசிடிவ் திட்டமும் இதுவரையில் இருந்ததில்லை. இந்தியாவிடம் ஏவுகணையா? நமக்கும் வேண்டும் ஒன்று. இந்தியா கோதுமை சப்பாத்தி சாப்பிடுகிறார்களா, சரி, நாமும் அதையே சாப்பிடுவோம், இன்னும் கொஞ்சம் அதிகமாகச் சாப்பிடுவோம். அணுகுண்டு ஒன்று செய்தார்களா, நாம் இரண்டு செய்வோம்.

ஆனால் இந்தியாவின் பிற எந்த உள்நாட்டு தொழில்முனையும் முயற்சியைப் போன்றும் பாகிஸ்தானில் எதுவுமே நடக்கவில்லை. பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தபோது எனக்குக் கிடைத்த பெரும் அதிர்ச்சி, அவர்களது மிகப்பெரிய மாநிலமான பஞ்சாபில் நிலவிய கடுமையான நிலப்பிரபுத்துவ நிலை. நிலப்பங்கீடு என்ற ஒன்று பாகிஸ்தானில் நடைபெறவே இல்லை. இந்தியாவிலும் பல மாநிலங்களின் இது இன்றும் ஒழுங்காக நடைபெறவில்லை என்றாலும் பல மாநிலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றவண்ணம் உள்ளது.

என் பாகிஸ்தானிய நண்பருடன் நாங்கள் காரில் பல இடங்களுக்குச் சென்று வந்தபோது ஆங்காங்கு காங்கிரீட்டால் செய்து இறக்கப்பட்டிருந்த மசூதிகள் முளைத்தபடி இருந்தன. எல்லாம் 1990களின் உருவாக்கம். இந்தியாவில் தாராளமயம் நுழையும் நிலையில் பாகிஸ்தானில் வஹாபியிசம் சவுதி அரேபியப் பணம், சவுதி அரேபிய காங்கிரீட் மசூதிகள் மூலமாக இறங்கின. இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுமே கல்வியில் வெகுவாகப் பின்தங்கியிருந்தாலும் இந்தியா தட்டித் தடுமாறி ஏகப்பட்ட பணத்தை ஒருவழியாக அடிப்படைக் கல்வியில் போடத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானில் அரசு, இதைப் பற்றி கவலைப்படவேயில்லை.

அதனால் பெரும்பாலான ஏழைகள் பிள்ளைகளை மதரஸாக்களுக்கு அனுப்பிவைத்தனர். அங்குள்ள கல்வி நிலை மோசமானது என்பதைத் தவிர வேறெதையும் சொல்லமுடியாது. வெறுப்பைச் சொல்லித்தருவது என்பது பாகிஸ்தானின் அரசுப் பள்ளிகளிலேயே நடக்கும்போது, மதரஸாக்களைப் பற்றி நாம் என்ன சொல்லமுடியும்? அடுத்த கட்டம் தாலிபன்களின் உருவாக்கம். இன்று அதே தாலிபன்கள் பாகிஸ்தானின் ஒரு பகுதியைத் தங்கள் வசம் கொண்டுவந்துவிட்டனர்.

மற்றொரு பக்கம் எதிராளியை அழிக்க எந்த மாதிரியான அறமற்ற முயற்சியையும் கையாளலாம் என்ற எண்ணம். இதுவும் தீவிர மதநம்பிக்கையாளர்களிடமிருந்தே வருகிறது. இந்தியாவை அழிக்க என்று பாகிஸ்தான் உருவாக்கிய லஷ்கர்-ஈ-தோய்பா என்ற வளர்த்த கடா இன்று பாகிஸ்தானின் மார்பிலும் முகத்திலும் பாய்கிறது.

சர்தாரி-ஷெரீஃப் அரசியல் பிரச்னைகள், சர்தாரி-கியானி உறவு, ராணுவம்-ஐ.எஸ்.ஐ உறவு, ஐ.எஸ்.ஐ-தீவிரவாதிகள் உறவு, தீவிரவாதிகள்-மத அடிப்படைவாதிகள் உறவு என்று பாகிஸ்தான் முழுக்க கெட்ட சக்திகள், பிரச்னைகள் நிரம்பியுள்ளன. இன்றைய பாகிஸ்தான் இருக்கும் வலுவிழந்த நிலையில் எந்தப் பிரச்னையையும் அதால் தீர்க்கமுடியாது.

இதன் தர்க்கபூர்வமான முடிவு பாகிஸ்தான் இரண்டு அல்லது மூன்றாக உடைபடலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படி நடைபெறும் பட்சத்தில் உள்நாட்டுப் போர் நடக்கும். வடமேற்குப் பிராந்தியம் பிரிந்து ஆஃப்கன் பழங்குடிக் குழுவினர் அடங்கிய ஒரு நாடாக மாற விரும்பும். பலூசிஸ்தான் பிரியத் துடிக்கும் ஒரு பகுதி. இவை நடந்தால், பஞ்சாபையும் சிந்தையும் சேர்த்து வைப்பது என்பது எளிதல்ல. முதலாமது ஷெரீஃப் நாடாகவும், இரண்டாவது சர்தாரி நாடாகவும் போகும். அப்போது ராணுவம் என்ன நிலையை எடுக்கும்? அமெரிக்கா என்ன நிலையை எடுக்கும்? காஷ்மீரப் போராளிக் குழுக்கள் என்ன நிலையை எடுப்பார்கள்? இந்திய எதிர்ப்பு ஜிஹாதிக் குழுக்கள் என்ன நிலையை எடுப்பார்கள்?

எனவே இந்தியா என்ன நிலையை எடுக்கவேண்டும்?

இதற்கு இந்தியா நிறைய Game Theory மாதிரிகளைச் செய்து பார்க்கவேண்டும். அதற்கு ஏற்றார்போல, இந்தியா தனது பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.

***

பாகிஸ்தானில் இருக்கும் புத்தியுள்ளவர்கள் பெரும்பாலும் நாட்டைவிட்டு ஓடப் பார்ப்பார்கள். அங்கே இருந்தால் ஒன்று பைத்தியம் பிடிக்கும் அல்லது உயிர் போகும் என்பது இன்று சத்தியமாகிவிட்டது. அங்கே வசிக்கும் என் பல நண்பர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

Tuesday, March 03, 2009

எழுத்துரிமை, பேச்சுரிமை, எரிப்புரிமை

நமது அடிப்படை உரிமைகளைப் பற்றி மீள்விவாதம் செய்ய இது மிகச் சரியான தருணம். தடை செய்யப்பட்ட இயக்கத்தை (விடுதலைப் புலிகள்) ஆதரித்ததாக அல்லது இந்தியத் தலைவர்களை (உயிருடன் இருப்பவர்களை அல்லது இறந்தவர்களை) அவமரியாதை செய்ததாக அல்லது அவர்களது உருவ பொம்மைகளை எரித்ததாகக் குற்றம் சாட்டி சிலர் கடுமையான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

இது மிகவும் அபாயகரமானது. எமெர்ஜென்சி காலத்தைய நிலையைப் போன்றது. கொளத்தூர் மணி, சீமான் ஆகியோர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டு, மீண்டும் வெளியே வந்து, பேசி, மீண்டும் அடைக்கப்பட்டு... இதைப் பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது. அதுபோல கறுப்புக்கொடி காட்டப்படுவதை அனுமதிக்காதது; தேசியக்கொடி/அரசியல் அமைப்புச் சட்டம் எரிக்கப்படுவது போன்றவற்றை அனுமதிக்காதது போன்றவையும்.

நாள்கள் கடக்கக் கடக்க, நமது குடியாட்சி முறை வலுப்பெற்றுக்கொண்டே வருகிறது. இதுபோன்ற கட்டுப்பெட்டித் தனங்கள் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும்போதுதான் மக்கள் கலகம் செய்ய முற்படுகிறார்கள். கறுப்புக்கொடி காண்பித்தல், உருவ பொம்மையை எரித்தல் ஆகியவை ஒருவருக்கு எதிராக தங்களது கோபத்தைக் காண்பித்தல். இதனால் யாருடைய உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தில்லை. குறிப்பிட்ட இடத்தை இதற்கென ஒதுக்கி, அங்கே மட்டும் இதனைச் செய்துவிட்டுப் போகுமாறு அனுமதி அளித்துவிட்டுப் போய்விடலாம் காவல்துறை.

ஆனால், ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கேற்ப சில போராட்டங்களுக்கு அனுமதியும் பல போராட்டங்களுக்கு அனுமதி மறுத்தலும் நடக்கின்றன. இதன் விளைவுதான் மக்கள் மேலும் கடுமையான ‘பொதுச் சொத்துகளை நாசமாக்கும்’ கல்லெறிதல், தீவைத்தல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் கல் எறிதல், தீவைத்தல் ஆகியவற்றைச் செய்வதை நான் ஏற்கவில்லை. ஆனால் legitimate protest என்பதற்கான இடத்தைக் குறுக்கக் குறுக்க, illegitimate protest ஏற்படுகிறது. எழுத அனுமதியில்லை, பேச அனுமதியில்லை, தான் கொண்டுவந்த பொருளை எரிக்க அனுமதியில்லை எனும்போது, வெறி தாண்டவாடுகிறது. விளைவுகள் விபரீதமாகின்றன.

சிவில் சமூகம் பரந்துபட்ட அளவில் இந்த விவாதத்தை முன்னெடுக்கவேண்டும். இந்தியா இரண்டாக உடைய நான் விரும்புகிறேன் என்று ஒருவர் சொல்வதனாலேயே அந்த நிமிடத்தில் அவர் தேசத் துரோகி என்று ஆகி, ஜெயிலுக்குத் தள்ளப்படுவார் என்றால், என்ன கொடுமை இது? மனிதனுக்கு frustration என்பது ஏற்படுவது இல்லையா? இந்த அரசாங்க மெஷினரியால் எத்தனை முறை சாதாரண மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்? கோபத்தில் வெகுண்டு, ஒருவர் “ஒனக்கெல்லாம் நல்ல சாவே வராது!” என்று சபிக்கும்போது அரசாங்க அதிகாரியைத் திட்டிய குற்றத்துக்காக சிறையில் போடுவேன் என்று சொல்லலாமா?

நம் பிரதிநிதியான நம் அரசாங்கம் நாம் நினைத்தமாதிரிச் செயல்படவில்லையே என்ற ஆதங்கம் கொளத்தூர் மணிக்கும் சீமானுக்கும் ஏற்பட்டு அதனால் அவர்கள் வெகுண்டு, முன்னாள் அரசியல் தலைவர்களையும் இன்னாள் அரசாங்கத்தையும் வைதால், சபித்தால், என்ன பெரிதாகக் கெட்டுப்போய்விட்டது? அதற்குச் சிறையா?

எதிர்ப்பை அனுமதிக்காத குடியாட்சி, குடியாட்சியே அல்ல.

காட்டுமிராண்டிச் சமூகமாக இருக்கிறோம் நாம். இது மாறவேண்டும்.

Sunday, March 01, 2009

நான் கடவுள்

சுவாரசியமான படம். நிறைய உழைப்பு. இந்தப் படத்தை சராசரி கேளிக்கை என்று ஒதுக்கமுடியாது. ஆனால் பலரது விமரிசனங்களை ஒட்டியும் வெட்டியும் எனக்கு சில கருத்துகள் தோன்றுகின்றன. இணையத்தில் பலரும் எழுதிய விமரிசனங்களைப் படித்தேன். ஆனால் குறிப்பெல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. நான் கீழே எழுதுவது விமரிசனமல்ல. படம் எனக்குள் ஏற்படுத்திய சில்லறைச் சிந்தனைகள்.

இசை பற்றி மிகவும் நுணுக்கமாகவெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், நான் கேட்டமட்டில் ஒரிஜினல் பாடல்களுக்கு இளையராஜாவின் இசை நன்றாகவே இருந்தது. குருட்டுப் பிச்சைக்காரி அம்சவல்லி பாடும்போது குரல் இயற்கையாக இல்லாமல் இருந்ததை நன்றாக இல்லை என்று சொல்லலாம் அல்லது பின்நவீனத்துவ அமர்க்களம் என்று சொல்லலாம். அவரவர்க்கு அவரவர் பார்வை.

திராவிடக் கருத்தாக்கத்தின் பின்புலத்தில் பார்க்கும்போது பலருக்கு இந்தப் படத்தின்மீது கோபம் வரும். நுணுக்கமான சில அரசியல், சமூகக் கருத்துகள் புகுத்தப்பட்டுள்ளனவோ என்று. உடனே பாலா, ஜெயமோகன் ஜாதிகள் பார்க்கப்படலாம். உதாரணத்துக்கு உடல் ஊனமுற்றவர்கள் தங்களுக்குள் ஒருவரையே - உடல் ஊனமில்லாதவரையே - சாமி என்று விழுந்து வேண்டுவார்கள். ஆனால் அந்த ‘சாமி’யே ஒரு கட்டத்தில், அம்சவல்லி வந்து கதறும்போது, ‘நான் சாமி இல்ல, அவந்தான் சாமி’ என்று வடநாட்டிலிருந்து வரும் ருத்ரனை (ஆர்யா - என்ன நகைமுரண்!:-) காண்பிப்பார். நாட்டார் தெய்வங்கள் காணாமல் போய், நாடு முழுமைக்குமான ஒற்றைக் கடவுள் வருவதைக் காண்பிப்பதாக ஆகுமல்லவா இது?

பலரும் சொல்வதைப் போல, இதை விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் ஒரு கதை என்று என்னால் பார்க்கமுடியவில்லை. பிச்சைக்காரர்கள் இந்தப் படத்தைப் பொருத்தமட்டில் ஒரு prop. இதே இடத்தில் சராசரி தமிழ்ப் படம்/ ஹிந்திப் படத்தில் கிட்னி திருடுபவர்கள் (தி கிரேட் கஜினி), கஞ்சா கடத்துபவர்கள், நாட்டைக் காட்டிக் கொடுக்கும் தீவிரவாத (பெரும்பாலும் முஸ்லிமாக இருக்கவேண்டும்) பதர்கள் என்று இருக்கலாம். என்ன, கடைசியில் அவர்களை வதம் செய்யவேண்டும். அது போதும்.

ஆனால், இதனால் இந்தப் பிரச்னைக்கு எந்த விடிவும் கொடுக்கப்படவில்லை. இவர்கள் வாழும் ஊரில் இந்தக் கூத்து நடந்துகொண்டே இருக்கிறது. அந்த ஊரில் அரசியல்வாதிகள் யாருமே காணப்படவில்லையே? ஒன்று, அந்த ஊரில் அரசியல்வாதிகள் இருந்து அவர்களும் இதற்குக் கையாக இருக்கவேண்டும். அல்லது இதற்கு எதிராக இருக்கவேண்டும். அரசாங்கம் என்ற அமைப்பை இல்லாமல் காட்டும் சராசரித் தமிழ்ப் படமாகத்தான் இதுவும் இருக்கிறது.

காவலர்கள் யாரை எந்தப் பிரிவின்கீழ் கைது செய்து எந்த நீதிமன்றத்தின்முன் ஆஜர் செய்யலாம்? யார் அந்த வழக்குக்காக வாதாடவேண்டும்? நீதிமன்றக் காவல் (Judicial Custody) என்றால் என்ன? போலீஸ் கஸ்டடி என்றால் என்ன? போலீஸ் இன்ஸ்பெக்டர் கோர்ட் வந்து, பார்க்க செஷன்ஸ் நீதிபதி போலக்கூடத் தோற்றமளிக்காத ஒருவரிடம், “ஐயா, பாடி கிடைக்கலை, அதனால இந்தக் குத்தமே நடக்கலை” என்று சொல்லி குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கலாமா? ஏன் விவாதங்களெல்லாம் நீதிபதிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் நடைபெறுகிறது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் என்பவர் டம்மியாகக் கூடக் கண்ணில் தென்படுவதில்லையே?

ஏதோ ஒரு நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவரை சும்மா போலீஸ் கையில் தூக்கிக்கொடுக்கிறார். போலீஸ் துணையோடு அந்த ஆசாமி ஜாலியாக தீர்த்தாடனம் போய், தலைகீழாக தவம் செய்து, தூள் கிளப்புகிறார். இந்தியாவில் எந்த ஊரில் இதெல்லாம் நடக்கும். பீகாரில்கூட கஷ்டம்.

பல நேரங்களில் இதுபோன்ற அபத்தக் காட்சி அமைப்புகள் ஒரு சீரியசான படத்தின்மீதான நம்பிக்கையைக் குலைத்துவிடுகின்றன. அந்த ஊரில் அந்தப் பத்து நாள்களில் என்னென்னவோ நடக்கிறது. ஆனால் எந்த செய்தித்தாளின் நிருபரும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து தினத்தந்தி நிருபர்கள் செய்தி சேகரிக்காத ஊரே கிடையாது. அதுவும் கொலை என்றால் அவர்களுக்கு அல்வா. படம் நடந்த காலகட்டத்தைச் சரியாக நான் கவனிக்கவில்லை. ஆனால் சிவாஜி கணேசன் இறப்புக்குப் பின் என்று புரிகிறது. அவர்கள் போட்ட ஆண்டுகளை சரியாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவில்லை. அதனால் எப்படியும் 2001-க்குப் பிறகு. கேபிள் டிவி ஆசாமிகளே களத்தில் இறங்கி, “ஊரில் பயங்கரம். இமயமலைச் சாமியார் பிச்சைக்கார மாஃபியா ஆசாமிகளைக் கொன்று தண்டனை” என்று தலைப்புச் செய்தி சொல்லியிருப்பார்களே?

எனக்கு இவையெல்லாம்தான் எரிச்சல் தருகின்றன. என்னவோ “இவையெல்லாம் தமிழ் தெண்டப் பசங்களுக்குத் தேவையில்லை; நான் என் ‘கலை/வணிக’ காரணங்களுக்காக படம் எடுக்கிறேன். இஷ்டமிருந்தால் பார். லாஜிக்கெல்லாம் எதிர்பார்க்காதே. அந்த ஷாட் எப்படியிருந்தது. அதைப் பார்த்து அதிசயித்துவிட்டுப் போ. ஆஸ்கார் கொடு” என்ற ரேஞ்சுக்குத்தான் இவர்கள் நினைப்பார்கள் போல.

படத்தில் வசனங்கள் நிஜமாகவே நன்றாக இருந்தன. ஜெயமோகனுக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரப் பிரார்த்திக்கிறேன்.

டைரக்டர்கள், ஸ்லம்டாக் மில்லியனர் டேனி பாயிலைப் போல, தத்தம் திறமைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். நம்மூரில் ஒரு ஃபேஷன். இது எந்தக் கலைப்பிதா சொல்லிக்கொடுத்துவிட்டுப் போய்ச்சேர்ந்தார் என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் கதை/திரைக்கதை/இயக்கம் என்றாவது ஓர் இயக்குனர் போட்டுக்கொள்ளவில்லை என்றால் அவர் பூஜ்யம் என்று தமிழர்கள் நினைத்துவிடுவார்கள் எனும் எண்ணம்.

வேறு யாராவது தேர்ந்த ஆளின் திரைக்கதையில் ஓட்டைகளை அடைத்து (என்ன அரசியல் இருந்தாலும் சரி), மேலும் நல்ல படமாக இதனை பாலா எடுத்திருக்கலாம்.

பொதுவாக, பகுத்தறிவுக்கு உட்படாத விஷயங்களைப் பற்றிச் சொல்லும் படங்களை அனைவரும் கவனத்துடனே அணுகவேண்டும். பிணத்தைப் புசிக்கும் அகோரிகள் எனக்கு அறுவருப்பை மட்டுமே உண்டுபண்ணுகிறார்கள். இதுபோன்றவை இன்னும் தொடர்ந்தால் அதை உடனடியாகத் தடுக்கவேண்டியது அரசின் கடமை. இறந்த உடலை இப்படி யாராவது தின்னப் போகிறார்கள் என்றால் அது இறந்தவரின் நினைவுக்குச் செய்யும் அவமரியாதை. பார்ஸிக்கள் உடல்களை பறவைகள் தின்ன என்று விட்டுவிடுகிறார்கள். ஆனால் இது சுற்றுப்புறத்தைக் கேடு செய்வது. அந்தப் பழக்கத்தையும் நிறுத்தவேண்டும். இந்தியாபோன்ற இடவசதி குறைந்த நாடுகளுக்கு மின்சார எரிகாடுதான் சரி. ஒரு பிடி சாம்பல்.

காசி போன்ற திறந்தவெளிச் சுடுகாடு எனக்கு அசிங்கத்தை மட்டும்தான் நினைவூட்டுகிறது. இந்தியா எங்கிலும் உள்ள மக்கள் பாவம், புண்ணியம், மோட்சம், நரகம் என்ற சில கட்டுக் கதைகளை நம்பி காசியில் போய்ச் சேர்ந்து புண்ணியம் தேடிக்கொள்வதாக நினைத்து, அந்த நகரத்தை ஒரு வசிக்கமுடியாத கேவலமான இடமாக மாற்றியுள்ளனர். என்றாவது ஒரு நாள், ஏதாவது ஓர் அரசு இந்தப் பழக்கத்தை ஒட்டுமொத்தமாகத் தடை செய்யும் தைரியத்தைப் பெறும் என்று நம்புவோம். காசிக்குச் சென்று ‘காரியம்’ செய்து முன்னோர்களை சொர்க்கத்துக்கு அனுப்பும் அப்பாவிகளையும் அந்த தட்சணை கிடைத்தாலும் வாழ்வில் அதிகம் முன்னேறாத தரகர்களையும் பற்றி இங்கே பேசிப் பிரயோசனமில்லை.

கங்கை போன்ற நீர் ஆதாரத்தை - வாழ்வாதாரத்தை - அசிங்கமாக்கும் எந்தச் செயலையும் நாம் நிறுத்தவேண்டும்.