Tuesday, May 28, 2013

கல்லூரிகளில் தமிழ்/ஆங்கிலம்

சனிக்கிழமை அன்று தி ஹிந்துவில் வெளியான செய்தியில், இனி கலை/அறிவியல் கல்லூரிகளில் வகுப்புத் தேர்வுகளை மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுதவேண்டும் என்று இருந்தது. இந்தச் செய்தியில் சில தகவல்களை நான் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டேன். மேலும் பலரும் இதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. கருணாநிதி, வைகோ முதலாக, தமிழ் உணர்வாளர்கள் பலரும்கூடத் தவறாகப் புரிந்துகொண்டு, தமிழுக்குப் பெரும் ஆபத்து என்பதாக அறிக்கைகள் விடுத்துள்ளனர்.

மேலும் விசாரித்ததில் நான் தெரிந்துகொண்டவை இவை:

(1) இப்போது கலை/அறிவியல் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம் என்று இரு வழியங்கள் உள்ளன. ஆங்கில வழியத்தில் படிப்பவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பரீட்சைகள், வகுப்புத் தேர்வுகள் எழுதுவதில்லை. அவர்கள் தமிழிலும், தமிழ்/ஆங்கிலம் கலந்தும் எழுதலாம். எப்போதிலிருந்து இது நடைமுறையில் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் வழியத்தில் படிப்பவர்கள் அனைவரும் தமிழில்தான் பொதுவாக எழுதிவந்துள்ளனர்.

(2) வரும் ஆண்டில் வரப்போகும் மாற்றம் தமிழ் வழியத்தில் படிப்பவர்களை எவ்விதத்திலும் பாதிக்கப்போவதில்லை. பாதிப்பு, ஆங்கில வழியத்தில் படிப்பவர்களுக்குத்தான்.

(3) ஆங்கில வழியத்தில் படிப்பவர்கள், இனி வகுப்புத் தேர்வுகளையும் வீட்டுப் பாடங்களையும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுதவேண்டும். இறுதித் தேர்வை (பல்கலைக்கழகப் பரீட்சை) ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதலாம். ஆனால் மேலே சொன்ன மாற்றத்தை வைத்துப் பார்க்கும்போது இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் இறுதித் தேர்வையும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுதமுடியும் என்பதாக ஆக்கிவிடுவார்கள் என்று தோன்றுகிறது.

ஆங்கில வழியத்தில் படிப்பவர்களை மட்டும் எடுத்துக்கொண்டு இப்போது விவாதிப்போம்.

(அ) ஆங்கில வழியத்தில் சேர்ந்துள்ள ஒருவர் எதற்காகத் தமிழில் தேர்வு எழுதவேண்டும் என்று கோருகிறார்? இது சரியல்லதானே? ஆங்கிலத்தை அவர் எப்போது ஒழுங்காகக் கற்கப்போகிறார்? தமிழில்தான் எழுத முடியும் என்றால் அவரை யார் ஆங்கில வழியத்தில் சேரச் சொன்னது? ஏன் இல்லவா இல்லை தமிழ் வழியக் கல்வி நிறுவனங்கள்?

இப்படிக் கேட்கும் முன் நிதர்சனம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். இரண்டு உதாரணங்களைத் தருகிறேன்.

திருப்பூரில் உள்ளது சிக்கன்னா அரசினர் கலை அறிவியல் கல்லூரி. இரண்டு ஆண்டுகளுக்குமுன் அந்தக் கல்லூரியின் இயற்பியல் துறை மாணவர்களிடம் சென்று பேசினேன். அங்கு பி.எஸ்சி வகுப்புகள் தமிழ் வழியத்தில் நடக்கின்றன. சுமார் 125 மாணவர்கள் படிக்கிறார்கள். அந்தப் பகுதியிலேயே மிகவும் பெயர் பெற்ற கல்லூரி அது. தருமபுரி, கிருஷ்ணகிரி, ஏன் கோவையிலிருந்துகூட மாணவர்கள் வந்து அங்கு படிக்கிறார்கள். ஆனால் அதே கல்லூரியில் எம்.எஸ்சி பாடங்கள் ஆங்கில வழியத்தில்தான் உள்ளன. சுமார் 30 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்? இதே கல்லூரியில் தமிழ் வழியத்தில் அதுநாள்வரை பி.எஸ்சி படித்தவர்கள்தாம். எந்தக் காரணத்தால் இந்தக் கல்லூரி எம்.எஸ்சியை ஆங்கில வழியத்திலும் பி.எஸ்சியை தமிழ் வழியத்திலும் வைத்திருக்கிறது?

சென்னையில் மெஸ்டன் கல்வியியல் (தன்னாட்சி) கல்லூரியில் பி.எட் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியத்தில் படிக்கிறார்கள். ஒரே வகுப்புதான். ஆனால் மாணவர்கள் தாங்கள் தமிழ் வழியில் படிப்பதா, ஆங்கில வழியில் படிப்பதா என்று எழுதிக்கொடுத்துவிடலாம். (இங்கு பாடங்கள் எந்த மொழியில் பயிற்றுவிக்கப்படும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.) தேர்வுகளை எழுதும்போது அவரவர் தேர்ந்தெடுத்த மொழியில் எழுதலாம். சுமார் 130 மாணவர்கள் படிக்கிறார்கள். இதே கல்லூரியில் எம்.எட் பாடம், முழுவதும் ஆங்கில வழியத்தில்தான். இந்த மாணவர்களிடையே சென்ற மாதம் கலந்துரையாடினேன். மொத்தம் 35 மாணவர்களில் ஆங்கிலத்தில் எழுதக்கூடியவர்கள் 5 பேர் மட்டுமே. மீதமுள்ள அனைவரும் தமிழில்தான் எழுதுகிறார்கள். அடுத்த ஆண்டு முதல் இவ்வாறு செய்யமுடியாது.

இதுபோல்தான் பல கல்லூரிகளில் ஆங்கில வழியம், காரணம் ஏதுமின்றி நடைமுறையில் உள்ளது. அங்கு படிக்க வரும் மாணவர்களை வேறு ஓர் இடத்துக்குப் போ என்று சும்மா தள்ளிவிட முடியாது. ஆங்கில வழியம் மட்டும்தான் ஒரே வாய்ப்பு என்றால் திருப்பூர் மாணவர்களும் சென்னை மாணவர்களும், எங்கே தில்லி போயா தமிழில் படிக்க முடியும்?

(ஆ) இப்போதுள்ள status quo எவ்வாறு இப்படி உருவானது? அதனை இப்போது மாற்றவேண்டிய காரணம் என்ன?

தமிழகத்தில் உயர் கல்வி, மெக்காலே முறைப்படி, ஆங்கில வழியத்தில்தான் இருந்துவந்தது (பி.ஏ தமிழ் இலக்கியம் தவிர்த்து!). சுதந்தரத்துக்குப் பிறகு, ஏதோ ஒரு கட்டத்தில் தமிழ் வழியிலும் கல்லூரிக் கல்வி நடக்க ஆரம்பித்துள்ளது என்று ஊகிக்கிறேன். இதுபற்றிய தரவுகள் ஏதும் என்னிடம் இல்லை. கல்லூரிக் கல்வி அவசியம் என்பதை அனைத்து மக்களும் புரிந்துகொண்டனர். அதன் விளைவாக, கொஞ்சம் கொஞ்சமாகக் கல்வி பரவலாக ஆகத் தொடங்கியது. பெரும்பான்மை மக்கள் கல்லூரிக்கு வரத் தொடங்கியதும் தமிழ் வழியத்தின் அவசியம் புரிந்து, ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ் வழிக் கல்வி பரவியது.

இது, பள்ளிக் கல்வியிலிருந்து மாறுபட்டது. பள்ளிகளில் ஆரம்பம் முதலே தமிழ் வழிக் கல்வி மட்டும்தான் இருந்தது. 1980-களில்தான் ஆங்கில வழியம் புகுத்தப்பட்டது. பின்னர் மெட்ரிக் பள்ளிகளின் பரவல் காரணமாக ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழியாகக் கொண்ட (தமிழ் பயிற்றுமொழியாகச் சிறிதும் இல்லாத) பள்ளிகள் தமிழ்நாட்டில் தோன்றின. இந்த ஆண்டின் தமிழக அரசின் முடிவை அடுத்து, அடுத்த ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ், ஆங்கிலம் இரு வழியமும் இருக்கும். அதைத் தவிர, தமிழ் வழியமே இல்லாத, முற்றிலும் ஆங்கில வழியம் மட்டுமே இருக்கும் மெட்ரிக் பள்ளிகளும் இருக்கும். (சி.பி.எஸ்.ஈ, ஐ.சி.எஸ்.ஈ பள்ளிகளைக் கணக்கில் நான் எடுத்துக்கொள்ளவில்லை.)

மாறாக, உயர் கல்வி ஆரம்பம் முதலே ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது, தமிழைப் பின்னர் அனுமதித்தது. அதன்பின்னர், ஆங்கில வழியத்தில் படிக்கும் பல மாணவர்களால் ஆங்கிலத்தில் எழுத முடியவில்லை என்ற காரணத்தால், அவர்கள் எம்மொழியில் எழுதினாலும் பரவாயில்லை என்று அனுமதிக்கப்பட்டது.

இதைத்தான் மாற்றுவதற்கு TANSCHE அமைப்பு முடிவெடுக்கிறது. இதன் துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் (பி.எச்.பாண்டியனின் மனைவி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்), ஆசிரியர்களைக் குற்றம் சாட்டுகிறார். அதாவது ஆசிரியர்கள்தான் மாணவர்களுக்கு ஆங்கில மொழி கற்பிக்காமல் விட்டுவிடுகிறார்கள் என்றும், இப்போது கொண்டுவந்துள்ள மாற்றம் காரணமாக, ஆசிரியர்கள் இனி வேறு வழியின்றி மாணவர்களை ஆங்கிலத்தில் எழுதவைக்கவேண்டும் என்றும் அவர் கருதுகிறார். இந்த மாற்றத்துக்கு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்கிறார்.

துணைவேந்தர்கள் உண்மையில் இதுபற்றிச் சிந்தித்திருந்தால், அனைத்துக் கல்லூரிகளிலும் குறைந்தபட்சம் தமிழ் வழியத்தையும் கூடவே வைத்திருப்பார்கள். பள்ளிக்கூடமாக இல்லாமல் கல்லூரியாக இருக்கும்போது மாணவர்கள் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு அதிகமாக ஆளாக நேரிடாது. ஆங்கில வழியத்தில் நுழைந்தபிறகு, அது மிகவும் கஷ்டமாக இருந்தால் உடனடியாகத் தமிழ் வழியத்துக்கு மாறுவதில் பிரச்னை இருக்காது.

இவற்றைச் செய்தபிறகு, ஆங்கில வழியத்தில் படிப்பவர்கள் ஆங்கிலத்தில் மட்டும்தான் பரீட்சைகளையும் வீட்டுப் பாடங்களையும் எழுதவேண்டும் என்று சொன்னால் அது ஓரளவுக்கு நியாயமாக இருக்கும். அதனைச் செய்யாமல் இதனைக் கொண்டுவருவது, தமிழில் மட்டுமே படிக்கக்கூடியவர்களைக் கல்விக்கு வெளியே தள்ளும் முரட்டுச் செயலாக மட்டுமே முடியும்.

(இ) நந்தனம் கலைக் கல்லூரியின் முதல்வர் சொல்கிறார்: “தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 1.5 லட்சம் வேலைகள் மட்டும்தான் உள்ளன. ஆனால் ஆண்டுக்கு 7 லட்சம் பேர் கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வெளியேறுகிறார்கள். ஆங்கிலம் தெரிந்தால்தான், மீதி உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும்.” இந்தத் தரவுகள் எல்லாமே சரி என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தியாவில் மிக அதிகமாக வேலைகளை உருவாக்கும் மாநிலங்களில் தமிழகம் கட்டாயம் இருக்கும் என்பதே என் கணிப்பு. சத்தீஸ்கரிலும் ஜார்க்கண்டிலும் வேலை தேடிப் போகும் அளவுக்கா தமிழன் இன்று இருக்கிறான்? அங்கிருந்துதானே எல்லோரும் இங்கு வருகிறார்கள்?

தகவல் தொழில்நுட்ப வேலைகள் சில, அகில இந்திய அளவிலான வேலைகள் சில ஆகியவற்றைத் தாண்டி அனைத்து வேலைகளும் உள்ளூர் மொழியில்தான்.

(ஈ) தமிழ்வழிக் கல்விக்கு இன்று பெரும் பாரமாக இருப்பது தரமான பாடப் புத்தகங்கள் இல்லாதிருப்பதுவே. ஒரு காலத்தில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், உயர் கல்விக்கெனத் தரமான பல புத்தகங்களைத் தமிழில் கொண்டுவந்தது. மிகச் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு சில பாட நூல்களை அது தயாரித்திருந்தது. இன்று அதிலிருந்து முற்றிலுமாகக் கழன்றுகொண்டு, பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களோடு தன்னை முடக்கிக்கொண்டுவிட்டது.

மாறாக, இலங்கையில் அரசின் முயற்சியால், ஆங்கிலத்திலிருந்து தமிழ், சிங்களம் இரு மொழிகளுக்கும் பல்வேறு பாடப் புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் இந்துக் கல்லூரி வளாகத்தில், பால் சாமுவெல்சனின் பொருளாதாரம், ஏ.எல்.பஷாமின் இந்தியா பற்றிய புத்தகம் முதற்கொண்டு பல பாடப் புத்தகங்களைத் தமிழில் பார்த்தேன்.

தன் கடமைகளிலிருந்து நழுவிவிட்டு, உயர் கல்வியை ஆங்கிலமயமாக்கி, தமிழர்களின் தேவையைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் அரசுகளையும் (இரு கழகங்களையும் சேர்த்துதான்) அரசியல் கட்சிகளையும் நாம் கடுமையாக விமர்சிக்கவேண்டும்.

Monday, May 27, 2013

தமிழ் மின்புத்தகச் செயலிகள் உருவாக்கத்தில் உள்ள சவால்கள்



தமிழ் இணையக் கல்விக்கழகம்
மற்றும்
கணித்தமிழ்ச் சங்கம்
இணைந்து நடத்தும்
கணினித் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் மென்பொருள் உருவாக்கம்
தொடர்பான செயல் விளக்கக் கூட்டம் – 3

வணக்கம்,

கணினித் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் மென்பொருள் உருவாக்குதல் மற்றும் மேன்படுத்துதல் தொடர்பான செயல்விளக்கக் கூட்டங்களை தமிழ் இணையக் கல்விக்கழகமும், கணித்தமிழ்ச் சங்கமும் இணைந்து மாதந்தோறும் சிறப்பாக நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்த மாதக்கூட்டத்தில்

திரு. பத்ரி சேஷாத்திரி அவர்கள்
நிறுவனர், கிழக்குப் பதிப்பகம் மற்றும்
என். ஹெச்.எம் தமிழ் மென்பொருள்
தலைப்பு:
"E-Book app in mobile platform in Indian languages:
 Challenges to be overcome.
(This will be explained through their experience in building NHM Reader)
என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார்.
இடம்: தமிழ் இணையப் பல்கலைக் கழகம்
நாள்: 27–05–2013 திங்கள் கிழமை.
நேரம்: சரியாக மாலை 5.00 மணியளவில்
அனைவரும் வருக
நேரடி ஒளிபரப்பைக் காண
http://www.tamilvu.org/stream/tvademo_lec/index.htm

Friday, May 17, 2013

ஸ்பாட் ஃபிக்சிங்

சென்ற பதிவைப் படித்துவிடுங்கள்.

பெட்டிங்/கேம்ப்ளிங் (சூதாட்டம்) வேறு. மேட்ச் ஃபிக்சிங் வேறு.

பணத்துக்காக மேட்ச் ஃபிக்சிங் செய்ததாக முதலில் மாட்டிக்கொண்ட பெரிய கிரிக்கெட் வீரர், தென்னாப்பிரிக்க கேப்டனாக இருந்த ஹன்சி குரோன்யே. அவர்தான் முதன்முதலில் மேட்ச் ஃபிக்சிங் செய்தார் என்று நினைக்கக்கூடாது. அவர்தான் முதலில் மாட்டிக்கொண்டவர்.

ஆனால் அப்போதுதான் இது குறித்து பல தகவல்கள் வெளியே தெரிய ஆரம்பித்தன. அன்றிலிருந்து நேற்று மாட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்வரை தங்கள் திறமையை அதிகரித்துக்கொண்டே போயிருக்கிறார்கள்.

இந்தியா, பாகிஸ்தான் நாட்டு விளையாட்டு வீரர்கள் மேட்ச் ஃபிக்சிங்கில் அதிகமாகத் தொடர்பு உடையவர்களாகத் தெரிகிறார்கள். நம் நாட்டு விழுமியங்கள் மோசமாகிக்கொண்டே போவதன் அறிகுறிதான் இது. பாகிஸ்தானை விட்டுவிடுவோம். இந்தியாவில் கிரிக்கெட்டில் எக்கச்சக்கமான பணம் கிடைக்கிறது. ஆனாலும் ஈசியாக ஒரு பந்தை ஒரு குறிப்பிட்ட மாதிரி போட்டால், 60 லட்சம் ரூபாய் என்றால் கசக்கவா செய்யும் என்று விளையாட்டு வீரர்களுக்குத் தோன்ற, அவர்கள் கெட்ட காரியத்தில் ஈடுபடுகிறார்கள்.

பணத்தை வழிபாடு செய்யும் நாட்டில் அர்ச்சகர் முதல் அரசியல்வாதி வரை ஊழல் செய்யும்போது விளையாட்டு வீரனுக்கு மட்டும் என்ன குறை?

***

மேட்ச் ஃபிக்சிங்கில் ஆரம்பத்தில், ஆட்டத்தின் போக்கை மாற்றுவதன்மூலம் பணம் கை மாறியது. இதிலும் கொள்கையற்ற இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் அதிகமாக இடம் பெற்றனர். ஆனால் ஹன்ஸி குரோன்யே, ஆட்ட முடிவுகளில் தான் கைவைக்க விரும்பவில்லை, வேண்டுமென்றால் மேட்ச் ஃபிக்சிங்குக்கு பதில் ஸ்பாட் ஃபிக்சிங் செய்துகொள்ளலாம் என்று இந்தத் துறையின் முன்னோடியாக இருந்தார் என்று நினைக்க நிறையச் சான்றுகள் உள்ளன. (ஹன்சி குரோன்யே விஷயத்தை ஆராய, தென்னாப்பிரிக்கா கிங்ஸ் கமிஷன் என்ற ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தின் அறிக்கை எனக்குக் கிடைத்தது. அதனை நாங்கள் கிரிக்கின்ஃபோ மூலம் வெளியிடுவதாக இருந்தோம். பின்னர் அந்த ஆணை மறைக்கப்பட்டது. பின்னர் சில மாதங்கள் கழித்து ஒரு மாதிரியான ஆகாய விபத்தில் குரோன்யே மரணம் அடைந்தார்.)

மேட்ச் ஃபிக்சிங் செய்யவேண்டுமானால் நிச்சயமாக கேப்டன் அல்லது மிக முக்கியமான சீனியர் வீரர்கள் ஆதரவு தேவை. கேப்டனுக்கு எதிராக ஒரு கொத்து வீரர்கள் கலகம் செய்து மேட்ச் ஃபிக்ஸ் செய்வது கடினம். குரோன்யே, அசாருத்தீன், சலீம் மாலிக், சல்மான் பட் ஆகியோர்மீதான குற்றச்சாட்டுகளை இந்த அடிப்படையில் பாருங்கள். கிரிக்கெட் ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் பொதுவாக கேப்டன் சொன்னதைச் செய்வதற்குத்தான் இருக்கிறார்கள்.

மாறாக ஸ்பாட் ஃபிக்சிங் என்பதை எந்தக் கழுதையும் செய்யலாம். மன்னிக்கவும், பௌலிங் கழுதைகளுக்குத்தான் இது சாத்தியம். அவர்கள்தான் தங்கள் சில நிகழ்வுகளைத் தாங்களே தீர்மானிக்கிறார்கள். பேட்ஸ்மேன், பந்துவீச்சாளரின் பந்துக்கு ரியாக்ட் செய்கிறார். ஃபீல்டர், பேஸ்மேனின் அடிக்கு ரியாக்ட் செய்கிறார். பந்துவீச்சாளர் நினைத்தால் வைட் போடலாம், நோ பால் போடலாம். லாலிபாப் போட்டு சிக்ஸ் கொடுக்கலாம்.

குரோன்யே, சில இளம் விளையாட்டுவீரர்களை வைத்துக்கொண்டு இந்த சித்து விளையாட்டுகளை ஆரம்பித்தார். யார் முதல் ஓவர் போடுவார்கள் என்பதிலிருந்து, எந்த ஓவரில் எத்தனை வைட், நோ பால், ரன்கள் கொடுக்கப்படும் ஆகியவற்றை குரோன்யே தீர்மானித்தார். நிறையப் பணம் சம்பாதித்தார். கடைசியில் அவமானப்பட்டு செத்துப்போனார்.

அடுத்த கட்டமாக, கேப்டனைத் தொடுவதில் நிறையப் பிரச்னைகள் உள்ளன என்பதைப் புரிந்துகொண்ட ஃபிக்சர்கள், ஸ்ரீசாந்த் போன்ற குழந்தைகளைப் பிடித்துக்கொண்டனர்போலும். சென்ற ஐ.பி.எல்லில் அம்பயர்களை வைத்து சில காரியங்களைச் செய்ய ஃபிக்சர்கள் திட்டமிட்டதை இந்தியா டிவி அமப்லப்படுத்த, மூன்று அம்பயர்கள் தடை செய்யப்பட்டனர். இம்முறை மூன்று விளையாட்டு வீரர்கள்.

ஐ.பி.எல் போன்ற ஆடுகளத்தில், எக்கச்சக்க அர்த்தமில்லாத விளையாட்டுகள் நடைபெறும்போது சைடில் கொஞ்சம் பணம் பார்க்கலாம் என்று சில இளைஞர்களுக்குத் தோன்றுகிறது. இவர்கள் பொதுவாக யார் என்று பாருங்கள். இனி மீண்டும் சர்வதேச அணியில் விளையாடச் சாத்தியம் இல்லாதவர்கள் அல்லது எக்காலத்திலும் இந்திய அணிக்குள் நுழையச் சாத்தியம் இல்லாதவர்கள். மார்க்கெட் போன நடிகை, சகலவித பணம் சம்பாதிக்கும் வேலைகளிலும் இறங்குவதைப்போலத்தான் இது.

***

ஐ.பி.எல்லே ஒரு சூதாட்டம், இதில் சீனு மாமாவும் முகேஷ் பாயும் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானிக்கிறார்கள் என்பதாகச் சொல்லப்படுவதை நான் நம்பவில்லை. இங்கே பல சுழல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சீனு மாமாவோ முகேஷ் பாயோ உத்தமர்கள் இல்லை. ஆனால் இந்தச் சில்லறை விஷயத்தில் ஈடுபட்டு அசிங்கப்படுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள் விளையாடும் தொழில்துறை இன்னமும் பெரியது; மேட்ச் ஃபிக்சிங் பணத்தைப் போல பல ஆயிரம் மடங்கு பெரியது.

ஆனால் ஸ்ரீசாந்தோ இன்னபிறரோ, இப்படி தாங்கள் மாட்டிக்கொண்டு அசிங்கப்படுவோம் என்று நினைத்திருக்க மாட்டார்கள். குற்றம் செய்யும் அனைவருமே துரதிர்ஷ்டவசமாக இப்படியே நினைக்கிறார்கள் என்பதுதான் சோகம். (இப்போது இவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதே தவிர, இவர்கள் இன்னமும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு சொல்லப்படவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக்கொள்கிறேன்.)

இன்று ஹலோ எஃப்.எம் திருச்சி நிலையத்துக்குப் பேட்டி கொடுத்தபோது, கிரிக்கெட்டையே நிறுத்திவிடவேண்டும் என்பதாகச் சிலர் கோரிக்கை வைப்பதாக நிகழ்ச்சியை நடத்துபவர் சொன்னார். அது அபத்தம் என்று என் கருத்தைச் சொன்னேன். நான் பெரும்பாலும் ஐ.பி.எல் பார்ப்பதில்லை. கிரிக்கின்ஃபோ தளத்தில் பாயிண்ட்ஸ் டேபிள் பார்ப்பதோடு சரி. ஐ.பி.எல்மீது அவ்வளவு ஈர்ப்பு ஒன்றும் இல்லை. இதில் நடக்கும் சில்லறைத் தவறுகளுக்காக ஓர் ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக நிறுத்தச்சொல்வது நம் நாட்டில்தான் நடக்கும். அப்படியே உணர்ச்சிவசப்பட்டுக் கொட்டிவிடுவோம்.

இறுதியாக, உறுதியாக... ஐ.பி.எல் மாதிரி உள்ளூர் பஜனை ஆட்டங்கள் இருக்கும்வரை மேட்ச் ஃபிக்சிங் கட்டாயம் தொடரும். ஏனெனில் சட்டபூர்வம் அல்லாத சூதாட்டம் தொடரும். அதைச் செய்பவர்கள் சட்டத்துக்குப் புறம்பாகப் பணம் ஈட்ட முயற்சி செய்வார்கள். இதனை நிறுத்துவது கடினம். அதற்கு மிகவும் மெனக்கிடவேண்டும். பிசிசிஐக்கு அதற்கான விருப்பமும் ஆர்வமும் இல்லை.

பெட்டிங் - மேட்ச் ஃபிக்சிங் குறித்து

2004-ம் ஆண்டு, தமிழோவியம் இணையத்தளத்துக்காக இரண்டு கட்டுரைகளை இது தொடர்பாக எழுதியிருந்தேன். பெரும்பாலானோர் பெட்டிங், மேட்ச் ஃபிக்சிங் இரண்டையும் குழப்பிக்கொள்கிறார்கள். இந்த இரு கட்டுரைகளும் (சேர்த்து ஒன்றாகக் கீழே) இந்தக் குழப்பத்தை ஓரளவு நிவர்த்தி செய்யும். (கொஞ்சம் இலக்கண எடிட்டிங் செய்யப்பட்டது, சில தவறுகள் சரிசெய்யப்பட்டுள்ளன.) அடுத்த பதிவில் ஸ்பாட் ஃபிக்சிங் பற்றிக் கொஞ்சமாக எழுதுகிறேன்.

===

கிரிக்கெட் பெட்டிங் பற்றி
29 ஏப்ரல் 2004

உங்களைச் சூதாடிகளாக மாற்றுவதல்ல என் நோக்கம். கிரிக்கெட் பெட்டிங் - கிரிக்கெட் சூதாட்டம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். பலருக்கு அப்படியென்றால் என்ன என்ற முழு விவரமும் தெரியாது. ஆனாலும் ஏதோ கெட்டது, இதனால்தான் கிரிக்கெட் ஆட்டத்தில் எதையுமே நம்ப முடிவதில்லை என்றதொரு எண்ணம் உண்டு. பலர் கிரிக்கெட் சூதாட்டத்தையும் [தமிழில் சூது என்ற சொல்லுக்கே பாண்டவர்களால் மிகக் கெட்ட பெயர்!], கள்ளத்தனமாகக் காசு வாங்கிக் கொண்டு ஆட்டக்காரர்களே ஆட்டத்தின் முடிவுகளையோ, நிகழ்வுகளையோ மாற்றுவதையும் ஒன்று என்றுகூட நினைத்துவிடுகிறார்கள். முந்தையது 'betting' அல்லது 'gambling' ஆகும். பிந்தையது 'match fixing' எனப்படும் குற்றமாகும்.
 
உலகில் பல நாடுகளிலும், அங்கீகரிக்கப்பட்ட சூதாட்டக் கடைகளில் சூதாடுவது சட்டப்படி குற்றமல்ல. இந்தியாவில்கூட குதிரைப் பந்தயங்களின்மீது சூதாடலாம். குதிரைப் பந்தயங்களின் முடிவுகளின்மீது மட்டும்தான் சட்டப்படி இந்தியாவில் சூதாட அனுமதி உண்டு. மற்ற விளையாட்டுகள், பந்தயங்களின் முடிவுகள், நிகழ்வுகள் ஆகியவற்றின்மேல் எந்த நிறுவனமோ, தனியாரோ பிறர் சூதாட வகை செய்ய முடியாது. ஆனாலும் இந்தியாவில் தடை செய்ய முடியாத அளவுக்கு கிரிக்கெட்மீது சூதாட்டம் நடைபெறுகிறது.

இந்தியாவில்கூட (குதிரைப் பந்தயம் தவிர்த்த பிற நிகழ்ச்சிகள்மீது) சூதாட்டத்தை நடத்துபவர்கள்மீதுதான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நினைக்கிறேன். சூதாடுபவர்கள்மீது என்ன வகையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரியவில்லை. செய்தித்தாள்களில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது சூதாட்டத்தை நடத்துபவர்கள்தான் கைது செய்யப்படுகிறார்கள். இப்படிச் சூதாட்டத்தை நடத்துபவர்களின் பெயர் bookmakers அல்லது சுருக்கமாக புக்கி (bookie).
பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட பல சூதாட்ட நிறுவனங்கள் பல்வேறு விளையாட்டு மற்றும் அரசியல் நிகழ்வுகளின்மீது odds வழங்குகின்றன. இவையெல்லாம் தனியார் அல்லு அரநிறுவனங்கள். அரசினால் கட்டுப்படுத்தப்படுபவை. இந்த நாடுகளில்தான் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டே கிரிக்கெட் பந்தயங்களிலும் சூதாட்டம் நிகழ்கிறது. இணையத்தின் வீச்சு அதிகரிக்க ஆரம்பித்ததும் இந்த நாட்டில் உள்ள சூதாட்ட நிறுவனங்கள், இணையம் வழியாக உலகின் பல இடங்களில் உள்ளவர்களையும் சூதாட்ட உறுப்பினர்களாக்க முயல்கின்றன.
சூதாட்டம் சரியா, தவறா என்ற நீதிபோதனைகளில் நான் ஈடுபடப்போவதில்லை. ஆனால் கிரிக்கெட் பற்றிய (சட்டத்ுக்கு உட்பட்ட) சூதாட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிவுபூர்வமாக நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நிலையிலிருந்து எழுதப்பட்டதே இந்த வாரக் கட்டுரை. சூதாட்ட விதிகள் எல்லாப் போட்டிகளுக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி என்றாலும் இங்கு கிரிக்கெட்டிலிருந்தே எடுத்துக்காட்டுகளைக் கொடுத்ுள்ளன்.
இரண்டு வகையான சூதாட்டம் உண்டு: (1) fixed-odds சூதாட்டம் (2) spread betting.

உங்களில் பலர் 'நிகழ்தகவு' (Probability Theory) என்னும் கணிதப் பாடத்தைப் படித்திருக்கலாம். அதாவது ஒரு நிகழ்வு நடக்க என்ன நிகழ்தகவு (odds அல்லது probability)? ஒரு ரூபாய் நாணயத்தைத் தூக்கிப் போட்டுபூவா? தலையா?’ பார்த்தால் பூ விழ என்ன நிகழ்தகவு? 1/2. அதாவது நல்ல ஒரு ரூபாய் நாணயத்தை (ஒரு பக்கம் பூ, மறு பக்கம் தலை, எந்தப் பக்கமும் தேய்க்கப்படாமல் சாதாரணமாக இருக்கும் ஒரு நாணயம்) பல்லாயிரக்கணக்கான முறை தூக்கிப்போட்டு நிகழ்வுகளைக் குறித்துக்கண்டு, எத்தனை முறை பூ விழுந்துள்ளது என்று பார்த்தால் கிட்டத்தட்ட 1/2 என்று வந்திருக்கும். ஆனால் இரண்டு முறை தூக்கிப் போட்டால் அதில் ஒன்றாவது பூவாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. இரண்டு முறையுமே தலையாக இருக்கலாம். பலமுறை செய்தால்தான் இந்த நிகழ்தகவுக்கு அருகில் விடை இருக்கும்.

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒருநாள் போட்டி விளையாடப் போகிறது என்று வைத்துக்கொள்வோம். யார் ஜெயிப்பார்கள் என்று உறுதியாகக் கூற முடியுமா? இரு அணிகளிலும் உள்ள வீரர்களின் திறமையைக் கணிக்கவேண்டும், அவர்கள் விளையாடும் ஆடுகளத்தின் தன்மையைப் பார்க்கவேண்டும். அன்றைய தினத்தில் வீரர்களின் form எப்படியிருக்கிறது என்று பார்க்கவேண்டும். மழை வருமா, பந்து swing ஆகுமா, பார்வையாளர்கள் யாருக்கு அதிக ஆதரவு கொடுப்பார்கள், யார் டாஸில் ஜெயிப்பார்கள், டாஸில் ஜெயித்தவர் முதலில் என்ன செய்யப்போகிறார் என்றெல்லாம் பார்க்கவேண்டும்! அப்படிப் பார்த்தாலும் யாரிடமும் எந்தவொரு magic formula-வும் கிடையாது யார் ஜெயிப்பார்கள் என்று கண்டுபிடிக்க. ஆனாலும் ஓரளவுக்கு யூகிக்கலாம்.
புக்கி என்பவர் இப்படி ஒரு யூகத்தில்தான் யார் ஜெயிக்க அதிக வாய்ப்பு என்று முடிவு செய்வார். அவ்வாறு முடிவு செய்தவுடன் ஓர் அணிக்கான odds-ஐ வெளியிடுவார். உதாரணத்ுக்கு செப்டம்பரில் நடக்கவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையில் அதிகபட்ச ஜெயிக்கும் வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்கு என்று முடிவு செய்துள்ள bet365 நிறுவனம், ஆஸ்திரேலியா ஜெயிக்க odds 5/4 என்கிறது. அப்படியென்றால் என்ன? நீங்களும் ஆஸ்திரேலியா ஜெயிக்கும் என்று முடிவு செய்து ரூ. 20-ஐ ஆஸ்திரேலியா மீது கட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆஸ்திரேலியா ஜெயித்து விட்டால் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய பணம் ரூ. 20*(5/4) = ரூ. 25. அதாவது நீங்கள் வைத்த பணம் திரும்பிக் கிடைப்பதோடு, கூடூ. 5-ம் கிடைக்கிறு. ஆனால் இந்தியா ஜெயித்துவிட்டால் நீங்கள் கட்டிய பணம் போய்விடும்.

இதே போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் ஜெயிக்க இரண்டாவது இடத்தில் இருப்பதாக bet365 நினைக்கிறது. அதனால் அவர்களுக்கு odds ஆக 11/2 என்று கொடுத்துள்ளது. இந்தியாமேல் ரூ. 20 கட்டி, இந்தியா வென்றால் உங்களுக்குக் கிடைப்பது ரூ. 110. இப்படியாக யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்று புக்கி நினைக்கிறாரோ, அந்த அணிக்குக் குறைந்த odds கொடுப்பார். யாருக்கு வெற்றி வாய்ப்பே இல்லை என்று நினைக்கிறாரோ, அதற்கு மிக அதிக odds கொடுப்பார். எடுத்துக்காட்டாக இதே போட்டியில் ஜிம்பாப்வே ஜெயிக்க odds 100/1, கென்யாவுக்கு 250/1, பங்களாதேசத்துக்கு 1000/1, யு.எஸ்.ஏ வுக்கு 2500/1 ! நீங்கள் யு.எஸ்.ஏ அணியின் மேல் ரூ. 10 கட்டினால், தப்பித்தவறிப்போய் அந்த அணியும் வென்றுவிட்டால் உங்களுக்குக் கிடைப்பது ரூ. 25,000. இப்படியாக 1983 உலகக்கோப்பையில் இந்தியாமீது பணம் கட்டியிருந்தவர்கள் வாரிக் குமித்திருப்பார்கள்.

இம்மாதிரியான பெட்டிங்கைத்தான் fixed odds என்கிறோம். அதாவது ஆட்டம் தொடங்குமுன்னரே, போட்டி முடியுமுன்னரே odds கிடைக்கிறது. இந்த odds மாறுவதில்லை. இதன்மூலம் தோற்றால் எவ்வளவு தோற்போம், ஜெயித்தால் எவ்வளவு ஜெயிப்போம் என்பது பணம் கட்டும்போதே தெரிகிறது. ஓர் ஆட்டத்ுக்கான பெட்டிங் என்றால் பெட்டிங் நிறுவனம் ஆட்டம் ஆரம்பிக்குமுன்னரே பணம் பெற்றுக்கொள்வதை நிறுத்திவிடவேண்டும். ஓர் ஆட்டத்தொடருக்கான odds என்றால் அந்த ஆட்டத்தொடர் தொடங்குமுன்னரே நிறுத்திவிடும்.

சரி, நிச்சயம் ஆஸ்திரேலியாதான் ஜெயிக்கும் என்று நினைத்து எல்லோரும் ஆஸ்திரேலியாமேல் பணம் கட்டிக்கொண்டே இருந்தால் என்னாவது? புக்கிக்கு பயம் வந்துவிடும் அல்லவா? ஆஸ்திரேலியா ஜெயித்தால் பெட் வைத்தவர்களுக்கு எக்கச்சக்கமாகப் பணம் பட்டுவாடா செய்யவேண்டியிருக்குமே? புக்கி ஓரளவுக்குமேல் புது பெட்களை வேண்டாம் என்று சொல்லிவிடலாம். மேலும் மற்ற நாடுகளின் oddsஐ இன்னமும் கவர்ச்சியாக மாற்றலாம். எல்லோரும் ஆஸ்திரேலியாமீதே பணம் கட்டுகிறார்கள் என்றால் இந்தியாவின் oddsஐ 11/2 இலிருந்து 100/1 என்று ஆக்கலாம். அதைப்பார்த்துவிட்டு பலர், ‘ஆகா... இந்தியா வெல்லச் சிறிதாவது வாய்ப்பு இருக்குமே, அதில் பணம் போட்டால் அதிகமாகக் கிடைக்குமே!’ என்று இந்தியாமபணம் போட ஆரம்பிப்பார்கள்.

புக்கி என்பவர் எப்பதுமே பணத்தை தோற்கப்போவதில்லை. ஜெயிப்பதும் தோற்பதும் பொதுமக்கள்தான்!

பெட்டிங் இந்த இடத்தில்தான் பங்குச்சந்தையை (share market) விட்டு விலகுகிறது. பங்குச்சந்தையிலும் கிட்டத்தட்ட ஒருமாதிரி பெட்டிங்தான் நடக்கிறது. ஆனால் இது zero sum game கிடையாது. பெட்டிங்கை எடுத்துக்கொண்டால் ஒரு அணி வென்றால் மற்ற அணிகள் தோற்றுத்தான் ஆகவேண்டும். வெல்லும் அணியின்மேல் பணம் கட்டியவர்கள் தவிர மற்ற அனைவரும் பணத்தை இழக்கத்தான் வேண்டும். பங்குச்சந்தையிலோ, நாம் முதலீடு செய்யும் பணம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. நாம் பணம் போட்டிருந்த பங்குகள் நமக்கு டிவிடெண்ட் வருமானத்தையும் ஊக்கப் பங்குகளையும் கொடுக்கலாம்.

தீவிரமாக ஒரு விளையாட்டைப் பின்பற்றும் ரசிகர்கள் பலரும், பிரிட்டனில் விளையாட்டுகளின்மீது சூதாடுகிறார்கள். ஆனால் அளவோடு, இதை ஒருவித விளையாட்டாகவே எண்ணிச் செயல்படுகிறார்கள்.

அடுத்த வாரம் spread betting பற்றியும், மற்ற வித சூதாட்டங்கள் பற்றியும் பார்ப்போம்.
 
கிரிக்கெட் பெட்டிங் - தொடர்ச்சி
6 மே 2004
 
சென்ற வாரம் fixed odds betting பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் spread betting பற்றிப் பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட முடிவின்மீது சூதாடுவது என்று பார்த்தால் மிகக் குறைந்த வழிகளே உள்ளன. ஒரு குறிப்பிட்ட போட்டியில் யார் ஜெயிப்பார், போட்டித்தொடரை யார் வெல்வார், ஒரு போட்டித்தொடரில் யார் அதிக ஓட்டங்களை எடுப்பார், அதிக விக்கெட்டுகளை எடுப்பார் - இவ்வளவுதான் முடியும். ஆனால் கிரிக்கெட் போன்ற ஆட்டத்தில் ஆயிரக்கணக்கான மாறக்கூடிய எண்கள் உள்ளன. அவற்றின்மீது எப்படி சூதாடுவது?

உதாரணமாக ஓர் அணியின் டோட்டல் ஸ்கோர் எவ்வளவு இருக்கும் என்ற கேள்வி எழலாம். இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒருநாள் போட்டி ஒன்றில் விளையாடுகின்றன. அதில் முதலில் மட்டையெடுத்ு ஆடும் இந்தியா எத்தனை ரன்கள் எடுக்கும்? புக்கி ஒருவர் இந்தியா 250-260 ஓட்டங்களுக்குள் எடுக்கும் என்கிறார். நீங்கள் இந்தியா 300-ஐ சர்வசாதாரணமாக எடுக்கும் என்று நினைக்கிறீர்கள். உங்கள் நண்பர் இந்தியா 210-ஐத் தாண்டாது என்று எண்ணுகிறார். இப்படியாக ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் 20 பேரை எடுத்தால் ஆளுக்கு ஒரு எண்ணைச் சொல்லுவார்கள். இதற்காக வடிவமைக்கப்பட்டதுதான் spread betting. இதற்கு bet hilo என்று பெயர்.
ஒரு நிகழ்வின் வீச்சை புக்கி கொடுக்க, சூதாடுபவர் அந்த வீச்சு (spread) சரியல்ல என்று நினைத்தால், அந்த நிகழ்வின் எண்ணிக்கை அதிகமா, குறைவா என்று நினைத்து அதற்குத் தகுந்தாற்போல் 'வாங்கலாம்', 'விற்கலாம்'. அதாவது கொடுக்கப்பட்டுள்ள வீச்சு '250-260' என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் இந்தியா 260-ஐத் தாண்டும் என்று எண்ணுகிறீர்கள். அப்படியானால் ஒரு தொகையை (ரூ. 1 என்று வைத்துக்கொள்வோம்) வைத்து 'வாங்குவீர்கள்' (buy). 260-க்குமேல் எத்தனை ரன்கள் அடித்தாலும் உங்களுக்கு லாபாக ரூ. (X-260)*1 கிடைக்கும். ஆனால் 260-ஐத் தொடாமல் கீழே இருந்தால் நங்கள் கட்டிய தொகையை இழந்துவிடுவர்கள். அதேபோல் உங்கள் நண்பர் (210ஐத் தாண்டாது என்று நினைப்பவர்) ரூ. 1 ஐ வைத்து 'விற்பார்' (sell). இந்தியா 220 ஓட்டங்கள் எடுத்தால், நீங்கள் 1*(260-220) = ரூ. 40ஐ இழந்திருப்பீர்கள். உங்கள் நண்பர் 1*(250-220) = ரூ. 30-ஐ ஜெயித்திருப்பார்.

இந்தியா 250 ஓட்டங்களுக்குக் கீழாக எடுக்கும் என்று நங்கள் நினைத்தால் ஒரு குறிப்பிட்ட தொகையை 'விற்பீர்கள்' (sell). ஒருவரே ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கான வீச்சுக்கு வாங்கவும் விற்கவும் செய்யலாம். ஓர் ஆட்டம் நடந்துகொண்டே இருக்கும்போது உங்களுக்கே வெவ்வேறு எண்ணங்கள் தோன்றும். டெண்டுல்கரும், சேவாகும் அடித்து நொறுக்கும்போது 340 வரும் என்று தோன்றும். அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் விழுந்ததும் 230-ஐத் தொடுமோ என்று பயம் வரும். யுவராஜும் திராவிடும் ஒவ்வொரு ரன்னகச் சேர்க்கும்போது நிச்சயம் 270 வந்துவிடும் என்று தோன்றும். ஒரு ரன் அவுட், உடனே நிலைமை மாறும். இப்படியாகத்தான் அவ்வப்பொழுது புக்கியிடமிருந்து கிடைக்கும் spread-உம் மாறுபடும். அதற்குத் தகுந்தாற்போல சூதாடுபவர் ஒருவர் அவ்வப்போது கிடைக்கும் spread-ஐ விற்றோ, வாங்கிக்கொண்டோ இருப்பார்.

சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் சூதாட்டங்கள் எல்லாம் அதிகபட்சம் இந்த spread betting முறையில்தான் நடக்கின்றன என்று அறிகிறேன். இதில்தான் ஆட்டத்தை 'fix' செய்வதற்கும் அதிக வாய்ப்புகள். ஹன்சி குரோன்யே தன் வாக்குமூலத்தில் இதுமாதிரியான fixing-இல்தான் தான் ஈடுபட்டதாகச் சொன்னார்.
ஆனால் பிரிட்டன் போன்ற நாடுகளில் இப்படிப்பட்ட spread betting நிறுவனங்கள் அரசினால் கட்டுப்படுத்தப்பட்டு இயங்குகின்றன. பிரிட்டனின் FSA எனப்படும் Financial Services Authority (இந்தியாவில் SEBI, அமெரிக்காவில் SEC போன்ற) பங்குச்சந்தை மற்றும் இதர பண சம்பந்தப்பட்ட தரகர்கள், நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் வாரியம்தான் spread betting நிறுவனங்களையும் கட்டுப்படுத்துகிறது.

கிரிக்கெட்டில், ஓர் அணியில் எண்ணிக்கையைத் தவிர பல்லாயிரக்கணக்கான நிகழ்வுகளுக்கு spread தரலாம். ஒரு போட்டித்தொடரில் டெண்டுல்கர் மொத்தமாக எத்தனை ரன்கள் அடிப்பார், ஓர் அணி எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் ஒரு போட்டியை ஜெயிக்கும், இர அணி விக்கெட்கீப்பர்களும் சேர்ந்து எத்தனை ரன்கள் எடுப்பர்... என்று என்ன எண்ணிக்கையை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு ஒரு புக்கி அதற்கு ஒர spread கொடுக்கலாம்.

இதைப்பார்க்கும்போது, அடடா, புக்கி என்று ஒருவர் எதற்கு, நானும், என் பக்கத்து சீட் நண்பனும் எங்களுக்குள்ளேயே பெட் வைத்துக்கொள்வோமே என்று தோன்றும். நான் ஜெயித்தால் அவன் எனக்கு லன்ச் வாங்கிக் கொடுக்கவேண்டும், தோற்றால் நான் அவனுக்கு. இதையே P2P பெட்டிங் சந்தைகள் இணையம் வழியாக நடத்த வகை செய்கின்றன. இது கிட்டத்தட்ட Ebay-யில் நடப்பதைப் போன்றது. கண்ணுக்குத் தெரியாத இரண்டு பேர் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தின் ஒரு குறிப்பிட்ட நிகழ்வின்மீது பெட்டிங் வைத்துக் கொள்ளலாம்.




 பெட்டிங் பற்றி ஓரளவுக்கு பார்த்தோம். சில முக்கியமான தகவல்கள் இப்பது.

  1. இந்தக் கட்டுரைகளில் மூலம் நான் யாரையும் கிரிக்கெட்டில் சூதாடுங்கள் என்று சொல்வதாக நினைக்கக்கூடாது.
  2. நான் வேலை பார்க்கும் நிறுவனம் - Wisden Cricinfo அனுமதிக்கப்பட்ட ஒருசில பெட்டிங் நிறுவனங்களிடமிருந்து விளம்பரங்களைப் பெறுவதன்மூலம் பொருள் ஈட்டுகிறது.
  3. இணையம் வழியாகச் சூதாடுவதை உங்கள் நாட்டின் அரசாங்கம் நேரடிச் சட்டம் அல்லது வெளிப்படையான directives மூலமாகத் தடை செய்திருக்கலாம். உதாரணத்துக்கு இந்தியாவில் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இணையச் சூதாட்டக் கடைகளில் பணம் போட முயன்றால் உங்கள் கிரெடிட் கார்டு வங்கி அதனை அனுமதிக்காது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி, ஒவ்வொரு கிரெடிட் கார்டு நிறுவனத்திடமும் அன்னியச் செலாவணி தருவதைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் இதை நிலைநாட்டுகிறது.
  4. சூதாடுவது சில மதங்களின் கோட்பாடுகளுக்கும் விழுமியங்களுக்கும் எதிரானதாக இருக்கலாம்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம். 

Monday, May 13, 2013

பள்ளிக் கல்வி – தமிழ் வழியிலா, ஆங்கில வழியிலா?

[தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று அஇஅதிமுக அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக எனக்குச் சில கருத்துகள் உள்ளன.

சென்ற மாதம், ஒரு கல்வியியல் கல்லூரியில் எம்.எட் படித்ததுக்கொண்டிருக்கும் மாணவர்களிடையே பேசினேன். அந்தப் பேச்சைக் கீழே தந்துள்ளேன். இது சற்றே எடிட் செய்யப்பட்ட வடிவம்.] 

***

நண்பர்களே,


நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டில் மிகப் பெருமைவாய்ந்த ஒரு கல்வியியல் கல்லூரியில் பட்டம் பெறப் போகின்றீர்கள். விரைவில் வெவ்வேறு பள்ளிக்கூடங்களில் ஆசிரியப் பணியைத் தொடங்கப்போகிறீர்கள். உங்களில் பலர் ஏற்கெனவே பல ஆண்டுகள் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள். நீங்கள் பெற்றிருக்கும் பட்டத்தின் காரணமாக உங்களில் பலரும் எதிர்காலத்தில் உங்கள் பள்ளிகளின் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு ஏற்கப்போகிறீர்கள். இந்தப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இருக்கலாம், அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருக்கலாம் அல்லது சுயநிதி தனியார் பள்ளிகளாக இருக்கலாம். எதிர்காலத்தில் தமிழகத்தின் கல்விக்கொள்கையை வடிவமைத்து, செயல்படுத்தும் பணி உங்கள் கைகளில் இருக்கும்.

இன்று நான் உங்களிடம் பேச வந்திருப்பது நடைமுறைக்கு மாறான, சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தைப் பற்றியது.

ஜெர்மன் மொழியில் ஸெய்ட்கீஸ்ட் (Zeitgeist) என்ற வார்த்தை ஒன்று உண்டு. ஆங்கிலத்தில் அதனை spirit of the time என்று மொழிபெயர்க்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் ஆன்மா என்று இதனை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஆன்மாதான் அந்தக் காலகட்ட்த்தின் பல நிகழ்வுகளை வழிநடத்தும். ஒரு சமூகமே ஒரு குறிப்பிட்ட திசை நோக்கிச் செல்லும். சமூகத்தின் அனைத்துவிதமான விசைகளும் இந்தக் கருத்தியக்கத்துக்குக் கடுமையான வலு சேர்க்கும்விதமாக நடந்துகொள்ளும். அதற்கு எதிரான கருத்து கொண்ட தனி நபர்கள் இந்த அலையில் அடித்துச் செல்லப்படுவார்கள். அவர்களது மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்கான களம்கூட இருக்காது.

இன்று இந்தியாவில் ஆங்கில மொழி அப்படிப்பட்ட ஒரு கருத்தாக்கமாக உள்ளது. ஆங்கில மொழியைப் படித்துப் புரிந்துகொண்டு அதிலேயே பேசவேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆங்கிலத்தை ஒரு பாடமாக மட்டுமல்ல, அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலம் வழியாக மட்டுமே கற்றாகவேண்டும் என்று இன்று மக்கள் அனைவரும் நினைக்கிறார்கள். அதன் காரணமாகவே தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வி நிலையங்களில் சேர்க்கவேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். எத்தனை பணம் செலவானாலும் பரவாயில்லை என்கிறார்கள் பெற்றோர்கள்.

அவர்களுடைய ஆசையைப் புரிந்துகொள்ளும் தனியார் கல்விநிலையங்கள் பலவும் ஆங்கில வழிக் கல்வியை அளிக்க முன்வருகின்றன. அந்தக் கல்வியின் தரம் குறித்தோ, அதில் படிக்கும் பிள்ளைகளின் விருப்பம் குறித்தோ யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

நாட்டின் மிகச் சிறந்த அறிவுஜீவிகள் அனைவரும் இந்தியாவின் கல்வி ஆங்கில வழியிலேயே இருக்கவேண்டும் என்கிறார்கள். இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியாக இருக்கட்டும், அல்லது பிரதாப் பானு மேத்தாவாக இருக்கட்டும். இந்தியப் பிரதமர், திட்டக் குழுவின் துணைத் தலைவர் என்று தொடங்கி தொழில்துறைத் தலைவர்கள் பலரும் இந்தியாவின் படித்த ஆங்கில வர்க்கத்தை வெகுவாகப் பாராட்டுகிறார்கள். முக்கியமாக தகவல் தொடர்புத் துறையின் அடிமட்ட வேலைகளான கால் செண்டர், டேட்டா எண்ட்ரி போன்ற வேலைகளை இந்தியா பெறுவதற்கு இந்திய மாணவர்களின் ஆங்கிலக் கல்வி உதாரணமாகச் சுட்டிக் காட்டப்படுகிறது.

படித்தவர்கள் என்றாலே ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்ற எண்ணம் காரணமாக, அவர்களால் தமிழில் நன்றாகப் பேசமுடியும் என்றாலும் அவர்கள் ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்ள முற்படுகிறார்கள். அது மிக மோசமான ஆங்கிலம் என்றாலும்கூட. பெரும்பாலான இடங்களில் வேலைக்கான நேர்முகத்தின்போது ஆங்கிலத்திலேயே கேள்விகள் கேட்கப்பட்டு அரைகுறை ஆங்கிலத்திலேயே பதிலும் அளிக்கப்படுகிறது.
சரி, இதனால் யாருக்கு என்ன நஷ்டம்? அவரவர் விருப்பம் என்னவோ, அதனை அவரவர் பின்பற்றிவிட்டுப் போகட்டுமே?

உண்மைதான். ஆங்கிலம் படிக்கவேண்டும் என்று விரும்பும் பலரை நீ ஆங்கிலம் படிக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஆங்கிலத்தின் தேவையே இல்லாத நிலையிலும் ஆங்கிலத்தை வற்புறுத்திப் புகுத்தும் நிலை நம் மாநிலத்துக்கு, நம் நாட்டுக்குச் சரிதானா என்ற கேள்வியை, விவாதத்தை உங்கள்முன் வைப்பதே என் நோக்கம். இதைப் பற்றி நீங்கள் சிந்தித்தால் மட்டும் போதும்.

உதாரணமாக, பள்ளிக் கல்வியை எடுத்துக்கொள்ளுங்கள். நமக்கு இரண்டு மொழிப் பாடங்கள் உள்ளன. ஒன்று தமிழ், இன்னொன்று ஆங்கிலம். இது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்தே இருந்துவரும் ஒன்று. இன்றுவரை மாறவில்லை. சொல்லப்போனால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக மட்டுமே இருந்தது. அதுவும் ஹைஸ்கூல் எனப்படும் ஆறாம் வகுப்பிலிருந்துதான் மொழிப்பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் கல்லூரிக் கல்வி முழுதும் ஆங்கில வழியில்தான் இருந்தது. ஆனால் இன்றோ, ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், ஆங்கில வழிக் கல்வியே வந்துவிட்டது.

இப்படியெல்லாம் இருந்தும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மிக அதிகமான பேர் எந்தப் பாடத்தில் தோல்வி அடைகிறார்கள்? ஆங்கிலப் பாடத்தில்தான். அதோடு அவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக் கல்வியிலிருந்து விலகிவிடுகிறார்கள். அவர்கள் பள்ளியில் படிக்கும்போதே பெரும்பாலானோருக்கு மிகவும் கடினமான பாடமாக இருப்பது ஆங்கிலம்தான்.

இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இன்றைய காலத்தில், உலகில் வெகு சில நாடுகளில்தான் ஓர் அந்நிய மொழியையும் கட்டாயம் படித்துப் பாஸ் செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள். பெரும்பாலும் காலனிய நாடுகளில்தான் இந்த நிலைமை. பிரிட்டனில் இந்தப் பிரச்னை இல்லை. பிரான்ஸில் இந்தப் பிரச்னை இல்லை. அமெரிக்காவில் இந்தப் பிரச்னை இல்லை. ஜெர்மனியில் இந்தப் பிரச்னை இல்லை. ஜப்பானில், சீனாவில் என்று எங்கு பார்த்தாலும் இந்தப் பிரச்னை இல்லை. அங்கெல்லாம் மக்கள் அவரவர் மொழியில் படிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் அனைவரும் தமிழில்தான் படிக்கவேண்டும் என்பதல்ல என் கருத்து. ஆங்கிலம் அவர்கள்மீது திணிக்கப்படக்கூடாது என்பதுதான் என் கருத்து.

ஆங்கிலம் படித்தால்தான் வேலை என்பது உண்மையல்ல. ஆங்கிலம் படித்தால்தான் மேற்கொண்டு கல்லூரியில் நன்றாகப் படிக்கமுடியும் என்பதும் உண்மையல்ல.

நம்முடைய நோக்கம் என்ன? நாட்டில் உள்ள அனைவரும் நல்ல கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கவேண்டும். அப்போதுதான் நம்மால் வளமான ஒரு நாட்டை, வளர்ந்த ஒரு நாட்டை உருவாக்க முடியும். இந்தக் கல்வியில் ஆங்கிலத்தின் பங்கு ஒருசிறிதும் இல்லை என்பதுதான் என் கருத்து.

ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகப் படிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் தனியாக, கல்விக்கூடத்துக்கு வெளியே எடுத்துப் படித்துக்கொள்ளலாம். ஆங்கில வழியில், அல்லது ஏன், பிரெஞ்சு வழியில்கூடக் கல்வி பயில விரும்புபவர்கள் அவ்வாறு செய்வதற்கு ஏதேனும் கல்விக்கூடங்கள் இருந்தால் அதில் சேர்ந்து படித்துக்கொள்ளலாம். அவர்களை அரசு எக்காரணம் கொண்டும் தடுக்கக்கூடாது. ஆனால் பிற அனைவரும் ஆங்கிலத்தையும் ஒரு பாடமாக எடுத்துப் படிக்கவேண்டும் என்று வற்புறுத்துதல் கூடாது என்றே நான் நினைக்கிறேன்.

ஆங்கிலம் தேவையே இல்லை, சீனாவைப் பார், ஜப்பானைப் பார் என்று சிலர் சொல்லும்போது அதற்கு மாற்றாகச் சிலர் கருத்துகளை முன்வைக்கவும் செய்கிறார்கள். என் நண்பர் ஒருவர் சொல்கிறார், ‘ஆங்கிலம் தெரியாததால்தான் ஜப்பான் இப்போது நாசமாகப் போய்க்கொண்டிருக்கிறது; சீனாவில் இப்போதே ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்’ என்று!

ஆனால் அது உண்மையல்ல. ஜப்பான் இந்தியாவைவிட மிக மிக உயர்ந்த நிலையில்தான் உள்ளது. சீனாவில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளச் சொல்வது பள்ளிக்கு வெளியேதான். அடிப்படைப் பள்ளிக் கல்வியைக் கற்க சீன மொழி (மாண்டரின் அல்லது காண்டனீஸ்) தெரிந்திருந்தால் போதும்.

உலகை வெல்ல ஆங்கில அறிவு நிச்சயம் அவசியம். அது தேவை என்று நினைப்பவர்களால் அதனை எந்நேரத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். தகவல் தொழில்நுட்பத் தொழிலில் கால் செண்டரை நிர்வகிக்க சில லட்சம் பேர் தேவை என்பதால் பல கோடிப் பேர்மீது ஆங்கில மொழி திணிக்கப்படவேண்டும் என்று வேண்டுவது எந்தவிதத்தில் நியாயம்?

ஆங்கிலம் ஓர் அந்நிய மொழி. அதனை இந்தியாவில் ஒரு சிலரால் மட்டுமே திறம்படப் பேச முடியும்.

நான் சுமார் ஆறு ஆண்டுகள் அமெரிக்காவிலும் இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்திலும் வசித்திருக்கிறேன். ஓரளவுக்கு ஆங்கிலம் பேசுவேன் (என்று நினைக்கிறேன்). ஆனால் நான் ஆங்கிலத்தில் எழுதுவது இலக்கண சுத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கை இன்றுவரை எனக்கு இல்லை. பேச்சிலும் நிறைய இலக்கணப் பிழைகள் இருக்கும். சரி, நாம் ஒன்றும் இல்லை. ஆனால், பி..கிருஷ்ணன் என்ற ஓர் எழுத்தாளர் இருக்கிறார். ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் நன்றாக எழுதக்கூடியவர். அவர் ஆங்கிலத்தில் எழுதி இரு நாவல்கள் வெளியாகியுள்ளன: The Tiger Claw Tree (Penguin), The Muddy River (Westland). அவை ஆங்கிலத்தில் வெளியான பின்னரே அவற்றைத் தமிழில் எழுதுகிறார். அவரும் இவ்வாறே சொல்கிறார். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதில் எங்கேனும் ஏதேனும் தவறு இருக்கலாமோ என்று அவர் எப்போதும் நினைப்பதாக. ஆனால் தமிழில் அவருக்கு அம்மாதிரி எந்தக் கவலையும் இல்லை. எனக்கும்கூட அப்படியேதான். தமிழில் எழுதும்போது ஒருவித assurance உள்ளது. அப்படியே தவறு இருந்தாலும் அதனை யாரேனும் திருத்தினால் உடனே அதனைப் புரிந்து உள்வாங்கி, மீண்டும் தவறே ஏற்படாத வகையில் எழுதமுடியும் என்று.

ஒரு மொழியின்மீதான ஆளுமையும் நம்பிக்கையும்தான், தெளிவாகவும், திடமாகவும், பயமின்றியும் அம்மொழியைப் பேச, எழுத, நம் கருத்துகளை, சிந்தனைகளை வெளிப்படுத்த உதவுகின்றன. அதுதானே நாம் விரும்புவது? இன்று நம் மாணவர்களிடையே காணப்படும் அச்சம் எதன் காரணமாக வருகிறது? நான் எண்ணற்ற கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசுகிறேன். அவர்களால் தமிழிலும் சரியாகப் பேச முடிவதில்லை, ஆங்கிலத்திலும் சரியாகப் பேச முடிவதில்லை. எனவே அவர்கள் வாயே திறப்பதில்லை. வாய் திறந்தால் உளறிவிடுவோமோ என்று பயம். பிறகு soft skills எங்கிருந்து வரும்?

மொழித்திறன் இல்லை என்பதால் மென்திறன் இல்லை, எனவே தன்னம்பிக்கை இல்லை. எனவே உளவியல்ரீதியாக ஒருவர் அழுத்தத்துக்கு உள்ளாகிறார். இதன் காரணமாக ஒரு மாணவர் தன்னுடைய உண்மையான சாதனைகளை ஒருபோதும் செய்வதில்லை. அதன்விளைவாக அவர் குறை-வாழ்க்கையையே வாழ்கிறார். இதனால் அவருடைய குடும்பமும் நாடும் பொருளாதாரரீதியாக பாதிக்கப்படுகிறது.

ஆங்கிலம் தெரியாவிட்டால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்று ஒரு பெரும் பட்டியலையே ஒருவர் அளிக்கலாம். முக்கியமாக கல்லூரியில் படிக்கும்போது, அல்லது ஆராய்ச்சி செய்யும்போது, அல்லது வெளிநாடுகளுக்குப் போகும்போது அல்லது ஐடியில் வேலை தேடும்போது என்று இப்படியாக.

ஆனால் ஒன்றாம் வகுப்பில் பள்ளியில் சேரும் 100 பேரில் எத்தனை பேர் இன்று கல்லூரிக்குப் போகிறார்கள் தெரியுமா? இந்திய அளவில் 13.8 பேர்தான். தமிழகத்தில் சுமார் 19 பேர். அதில் எத்தனை பேர் ஆங்கிலம் வழியாகக் கல்வி கற்கிறார்கள் என்று பார்த்தால் மிகக் குறைவுதான். அதில் எத்தனை பேர் ஆராய்ச்சிக் கல்வியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளட்டுமே? நான்கூட என் ஆராய்ச்சிப் படிப்பின்போது சில பிரெஞ்சு ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்துப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக பிரெஞ்சு மொழி கற்றுக்கொண்டேன். (இப்போது அது தேவையில்லை என்பதால் மறந்துவிட்டேன்.)

உலக அறிவு அனைத்தும் தமிழில் இருக்காது என்று கவலைப்படுவோர் பலர் இருக்கிறார்கள். உண்மைதான். தரமான மொழிபெயர்ப்புகள்மூலமாக மட்டுமே அவற்றையெல்லாம் தமிழுக்குக் கொண்டுவரவேண்டும். அப்படி மொழிபெயர்ப்பவர்களுக்குப் பன்மொழி அறிவு கட்டாயம் வேண்டும். ஆனால் அனைவருக்கும் அல்ல.

இறுதியாக ஆங்கில வழிக் கல்விக்கு வருவோம். இன்று தேசமே ஒரு திசை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த அலையில் அடித்துச் செல்லப்படுவோர் அனைவரும் தனக்கு மேலானவர்கள் என்று யாரைக் கருதுகிறார்களோ, அவர்கள் என்ன செய்கிறார்களோ அதனைத் தாங்களும் நகல் எடுக்கவேண்டும் என்று முயன்றே இதனைச் செய்கிறார்கள். அவர்களிடம் சென்று, ‘வேண்டாம் வேண்டாம் நீங்கள் தமிழிலேயே கற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னால் அவர்கள் கட்டாயம் கேட்கமாட்டார்கள். என்னைத்தான் திரும்பக் கேட்பார்கள். ‘நீ மட்டும் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறாய். உன் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வி பயில வைக்கிறாய். நீயும் உன் குடும்பமும் மட்டும் உயரவேண்டும், நாங்கள் மட்டும் தாழவேண்டுமா?’ என்பார்கள். இதற்கான பதில் என்னிடம் இல்லை. இதன் காரணமாக நான் ஆங்கிலம் படிப்பதை நிறுத்தப்போவதில்லை. அல்லது என் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வி கற்பதிலிருந்து தடுக்கப்போவதில்லை.

நீ நம்புவதை நீயே செய்யாவிட்டால்? அப்போது உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா?

நான் ஆரம்பத்தில் சொன்னதை ஞாபகத்தில் வையுங்கள். நான் முன்வைப்பது ஒரு சிந்தனை மட்டுமே. இப்போது நாம் ஒரு திசையில் வெகு தூரம் வந்துவிட்டோம். இதிலிருந்து சட்டென்று திரும்பி, வேறு திசையில் சென்றுவிட முடியாது. ஆனால் நாம் செல்லும் திசை மிக மோசமானது, இது எண்ணற்ற மக்களைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியது என்பதை உணர்கிறேன்.

உதாரணமாக மூன்று விஷயங்களை மட்டும் சொல்கிறேன். கடந்த இருபது ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளின் தரத்தைப் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மத்திய வர்க்கம், தம் பிள்ளைகளை அப்பள்ளிகளுக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டது. காரணமாக மிக ஏழைக் குழந்தைகள் மட்டுமே அப்பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். அப்பள்ளிகளின் கல்வித் தரம் மட்டுமல்ல, அங்குள்ள வசதிகளும் குறைந்துகொண்டே போகின்றன.

இன்னொரு பக்கம், புற்றீசல்போலப் பெருகும் தரம் குறைந்த தனியார் ஆங்கிலப் பள்ளிகள். இங்கு ஆங்கில வழியில் கற்றுத் தருவதாகச் சொல்கிறார்களே தவிர அங்கு பணிபுரிவோருக்கோ அல்லது அங்கு படிப்போருக்கோ ஆங்கிலத்தைச் சரியாகப் பேசக்கூடத் தெரியாது.

மூன்றாவதாக, எலீட் பள்ளிகள்மேட்டுக்குடிப் பள்ளிகள். இங்கே தமிழ் என்பது மருந்துக்குக்கூடச் சொல்லித்தரப்படுவதில்லை. இப்பள்ளிகளில் தமிழில் பேசினாலே அது குற்றமாகக் கருதப்படுகிறது. தமிழ் என்றால் அசிங்கம், ஆங்கிலம் என்றால் உசத்தி என்ற கருத்தாக்கம் கொண்ட பள்ளிகள் இவை. இங்கு படிப்போர் வெளியே வரும்போது தமிழ் பேசுவோர்மீது கொண்டிருக்கும் மரியாதை எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

இவை மூன்றும் சமூகத்தைக் கடுமையாகப் பாதிக்கும் தன்மை கொண்டவை. ஆனால் இன்று இவை மூன்றும்தான் வெகுவேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கருத்துகள்.

இவற்றை மாற்றவேண்டும் என்று நீங்கள் கருதினால், என் கருத்தைச் சற்றே யோசித்துப் பாருங்கள்.

பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி, ஆறாம் வகுப்பு முதல் ஒருவர் விரும்பினால் மட்டுமே ஆங்கிலமும் ஒரு மொழிப்பாடம், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது அவசியம் இல்லை, கல்லூரியில் ஒருவர் விரும்பினால் ஆங்கில வழிக் கல்வி... இவற்றைக் கொண்டுவருவதால் நாம் எதையுமே இழக்கப்போவதில்லை. இதன்மூலம் நம் நாட்டின் கல்வித்தரத்தை வெகுவாக உயர்த்தமுடியும் என்று நம்புகிறேன். நம் மாணவர்களின் தன்னம்பிக்கையையும் வெகுவாக உயர்த்தமுடியும் என்று நம்புகிறேன்.

நன்றி.