Thursday, October 31, 2019

தமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்

சொன்னால் விரோதம். ஆயினும் சொல்லுவேன்.

இன்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஐராவதம் மகாதேவனின் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் தொகுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இதைப்பற்றி பி.ஏ.கிருஷ்ணன் ஏற்கெனவே சில இடங்களில் சொல்லியிருக்கிறார்.

சங்க இலக்கியத்தின் தரம் எல்லாம் வேண்டாம், இன்றைய அரசியல் கட்சிகளின் பிழைகள் மலிந்த சுவரொட்டிகளைவிட மோசமான தமிழில்தான் அனைத்து தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் இருக்கின்றன. உருப்படியான, தேறக்கூடிய, பிழையற்ற, தெளிவான தகவலைத் தரக்கூடியதாக இந்த 96 கல்வெட்டுகளில் ஒன்றுகூட இல்லை. மேலும் இவை எவையும் இரண்டு வரிகள்கூடத் தாண்டுவதில்லை.

பானையோடுகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவற்றில் ஆள் பெயர் தாண்டி, தொழில்பெயர் தாண்டி ஒன்றுமே இல்லை.

அரசனின் காசுகளை எடுத்துக்கொண்டால்கூட கொஞ்சம் நீளமாக வரும் சாதவாகனக் காசில் உள்ள பிராகிருதம்கூட இலக்கணசுத்தமாக உள்ளது, தமிழ் தடவுகிறது.

ஏன் இப்படி?

மொழிரீதியாக, தமிழின் முதல் உருப்படியான கல்வெட்டு என்பதே பூலாங்குறிச்சி வட்டெழுத்துக் கல்வெட்டு(கள்)தாம். அவற்றில்தான் தமிழின் இலக்கணத் தன்மையுடனான வாக்கியங்கள், கிட்டத்தட்டப் பிழைகளின்றி அமைகின்றன. அவையோ, பொயு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

மாறாக, அசோகனின் நாடுமுழுதுமான கல்வெட்டுகளாக இருக்கட்டும், காரவேலனின் கண்டகிரி ஹாதிகும்ஃபா கல்வெட்டாக இருக்கட்டும், ருத்ரதாமனின் கிர்னார் கல்வெட்டாக இருக்கட்டும், சாதவாகனர்களின் கல்வெட்டுகளாக இருக்கட்டும், அவையெல்லாம் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளின் சமகாலத்தைச் சேர்ந்தவை, ஆனால் விரிவானவை, இலக்கண சுத்தமானவை, தகவல் செறிவு மிக்கவை.

உண்மையில், அசோகனின் நீண்ட நெடிய கல்வெட்டுகள் இருந்திராவிட்டால், எழுத்தமைதியில் அவற்றுக்கும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திராவிட்டால் நம்மால் தமிழ் பிராமியைப் புரிந்துகொண்டிருக்கவே முடியாது.

தமிழ் பிராமி - சில குறிப்புகள்

ஐராவதம் மகாதேவனின் "Early Tamil Epigraphy - From the Earliest Times to the Sixth Century CE" என்று விரிவாக்கப்பட்ட பதிப்பு (Central Institute of Classical Tamil, Chennai, 2014 வெளியீடு), ஒரு பொக்கிஷம். இப்புத்தகத்தைத் தோண்டத் தோண்ட புதையல்கள் வெளிவந்துகொண்டேயிருக்கின்றன. அதிலிருந்து சில தகவல்கள் மட்டும் இங்கே:
 1. தமிழ் பிராமி பொறித்த கல்வெட்டுகள் மட்டுமின்றி, பானை ஓடுகள், காசுகள், முத்திரைகள், மோதிரங்கள் ஆகியவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. [கீழடியில் தங்கக் கட்டிகளில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறித்தது தெரியவருவதற்குள் மகாதேவன் இறந்துவிடுகிறார்.]
 2. தமிழ் பிராமி பொறித்த பானை ஓடுகள் தமிழகத்துக்கு வெளியே ஆந்திரத்திலும் கேரளத்திலும் கிடைத்துள்ளன
 3. இந்தியாவுக்கு வெளியே இலங்கையில், வட இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் தென்னிலங்கையில் திஸ்ஸமஹரமாவிலும், எகிப்தில் இரண்டு இடங்களிலும், ஓமானிலும், தாய்லாந்திலும் கிடைத்துள்ளன.
 4. இன்னொரு பக்கம், தமிழகத்தில் கிடைத்துள்ள சில பானை ஓடுகளில் தென்னிந்தியாவில் புழங்கும் பிராகிருத மொழியும் இலங்கையில் வழங்கும் பிராகிருத மொழியும் கிடைத்துள்ளன. [இலங்கை வழக்கை மகாதேவன் சிங்கள-பிராமி என்று குறிப்பிடுகிறார். இதனை ராஜன் சரியாகவே மறுக்கிறார். ஏனெனில் சிங்களம் என்ற மொழி பிற்காலத்தில்தான் தோன்றுகிறது. பாலி-பிராமி என்றுவேண்டுமானால் அதனைக் குறிப்பிட்டிருக்கலாம்.]
 5. கல்வெட்டுகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, எத்தனை வார்த்தைகள் சொற்குவியலில் உள்ளன என்று மகாதேவன் அலசுகிறார். மொத்தம் 96 தமிழ் பிராமிக் கல்வெட்டுகள். அதில் 330 சொற்கள் (இரட்டிப்பு நீக்கப்பட்ட தனிச் சொற்கள்). அதில் 237 திராவிட மொழிக்குடும்பம், 81 இந்தோ-ஆரிய மொழிக்குடும்பம், 12 எதுவென்று சொல்லமுடியாதவை. 
 6. முக்கியமாக ஹளே கன்னடச் சொற்கள் இவற்றில் இருப்பதையும் பெரும்பாலான கல்வெட்டுகள் சமணம் சார்ந்து இருப்பதையும் வைத்து எழுத்துமுறை சமணர்கள் மூலம், கர்நாடகத்திலிருந்து தமிழகம் வந்திருக்கலாம் என்கிறார். இது வெகுவாக தமிழ்நாட்டவரால் மறுக்கப்படுகிறது. இது தனி விவாதமாக எடுத்துக்கொள்ளப்படவேண்டியது.
 7. மகாதேவன், மௌரியர் காலத்தைய எழுத்துக்குப் பொதுவாக பிராமி அல்லது அசோகன் பிராமி அல்லது மௌரியன் பிராமி என்று பெயர் வைக்கிறார். மௌரியர் காலத்துக்குப் பின் வட இந்தியாவில் மாற்றம் அடைந்த பிராமி எழுத்துகளை வட-பிராமி என்றும் தென்னிந்தியாவின் மாற்றம் அடைந்த எழுத்துகளுக்கு தென்-பிராமி என்றும் பெயரிடுகிறார். ஆந்திரத்தின் பட்டிப்ரோலு என்ற இடத்தில் கிடைக்கும் பிராமி எழுத்துக்கு அந்த இடத்தின் பெயரையே வைக்கிறார். அதற்கு அடுத்து, தமிழகத்தில் நிலவிய பிராமிக்கு தமிழ்-பிராமி என்று பெயர் சூட்டுகிறார். இலங்கையில் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கு சிங்கள்-பிராமி என்று பெயரிடுகிறார்.
 8. மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார், தமிழ் பிராமிக்கு முன்பே தமிழகத்தில் ஓர் எழுத்து முறை இருந்ததாகவும், அது, தமிழ் பிராமி வந்தபின் வழக்கொழிந்துபோய்விட்டதாகவும் குறிப்பிடுவதை மகாதேவன் மேற்கோள் காட்டுகிறார். [மயிலையார் எந்தச் சான்றுகளையும் கொடுப்பதில்லை என்பது வேறு விஷயம்.]
 9. காலத்தால் முற்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு (பூலாங்குறிச்சி), ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதுவரையில் தமிழ் பிராமி எழுத்துகள் மட்டும்தான் தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்துவருகிறது.
 10. ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் கிரந்த எழுத்துகளையும் தமிழ் எழுத்துகளையும் அறிமுகப்படுத்துகிறார்கள். சிறிது சிறிதாக இந்தத் தமிழ் எழுத்து முறை, வட்டெழுத்தைத் தமிழகத்திலிருந்து துரத்துகிறது. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்திலிருந்து வட்டெழுத்து காணாமல் போய்விடுகிறது. 
 11. கேரளத்தில் மட்டும் 19-ம் நூற்றாண்டுவரை வட்டெழுத்து புழக்கத்தில் இருக்கிறது.