Thursday, January 07, 2016

கிருஷ்ணகிரியின் (எச்.ஐ.வி) குழந்தைகள்

இன்று காலை, என் நண்பருடைய நண்பர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அபூர்வமாகத்தான் இப்படிப்பட்ட சந்திப்புகள் வாய்க்கும்.

அவர் பெயர் சுப்ரமணியம். முரளி என்று அழைக்கப்படுகிறார். பெங்களூரில் வசிக்கிறார். சொந்தமாகத் தொழில் செய்கிறார். நல்ல வருமானம் இருக்கும்.

சில ஆண்டுகளுக்குமுன் கிருஷ்ணகிரி பகுதியில் எச்,ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஆரம்பித்திருக்கிறார். அதுதான் இப்போது இவருடைய பெரும்பகுதி நேரத்தை எடுத்துக்கொள்கிறது.

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் கிட்டத்தட்ட நார்மலான வாழ்க்கையை வாழ முடியும், பிறரைவிட அதிக ஆண்டுகள்கூட உயிர்வாழ முடியும், திருமணம் செய்துகொள்ள முடியும், பாலுறவு வைத்துக்கொள்ள முடியும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார் முரளி. இன்றைய மருத்துவ வளர்ச்சியில் தாயிடமிருந்து பிள்ளைகளுக்கு எச்.ஐ.வி தொற்றாமல் இருக்க மருந்துகள் உள்ளன என்றார் அவர்.

எங்கேயோ பெங்களூரில் நிறுவனம் ஒன்றை நடத்திக்கொண்டிருப்பவரை கிருஷ்ணகிரியை நோக்கி இழுத்தது எது என்று கேட்டேன். அதிலும் குறிப்பாக பெற்றோரை இழந்த, எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவவேண்டும் என்று தோன்றியது ஏன் என்று கேட்டேன்.

ஒரு கதையைச் சொன்னார்.

ஸ்ரீதேவி என்று ஒரு பெண். அவளுக்கு ஒரு தம்பி. அவள் ஆறாம் வகுப்பு படிக்கும்போது அவளுடைய பெற்றோர்கள் இருவரும் எச்.ஐ.வியால் இறந்துவிட்டனர். குழந்தைகள் இருவருக்குமே எச்.ஐ.வி பரவியிருந்தது. பெற்றோர் கட்டிய சிறு வீட்டில் இருந்துகொண்டு தம்பியைப் பார்த்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று படித்துவந்தாள் அந்தப் பெண். சுற்றி உள்ளவர்கள் ஏதோ உதவி செய்துள்ளனர். ஒரு தொண்டு நிறுவனத்தின்மூலம் குறைந்தபட்சம் ரேஷன் பொருள்கள் இந்தச் சிறு பிள்ளைகளுக்குக் கிடைத்துள்ளன. இப்படி மூன்று ஆண்டுகள் அந்த வீட்டில் தன்னந்தனியாக இந்த இரு குழந்தைகளும் வசிந்துவந்துள்ளன. உறவினர்கள், அக்கம்பக்கத்தவர் யாரும் இந்தப் பிள்ளைகளைத் தங்கள் வீட்டில் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. நோய்க்கான மருந்து பற்றிய புரிதல் இல்லாததால் இந்தப் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்படத் தொடங்கியிருக்கிறது. பல்வேறு உடல் பாகங்களில் பிரச்னை. அப்படிப்பட்ட நிலையில்தான் முரளி இந்தப் பெண்ணையும் அவளுடைய தம்பியையும் பார்த்திருக்கிறார். வாழவேண்டும் என்ற விருப்பமும் தன் தம்பியைக் காப்பாற்றவேண்டும் என்ற விருப்பமும் இந்தச் சின்னப் பெண்ணிடம் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறார் முரளி.

ஸ்ரீதேவியை மருத்துவமனையில் சேர்த்தபின் உடல்நலம் ஓரளவுக்குத் தேறியுள்ளது. நல்ல சத்தான உணவும் சரியான மருந்துகளும் இருந்தாலே எச்.ஐ.,வியைக் கட்டுப்படுத்திவைக்கலாம். மருந்துகளைத் தமிழக அரசு இலவசமாகவே தருகிறது. உணவும் அன்பும் ஆதரவும்தான் இந்தப் பிள்ளைகளுக்குத் தேவை. இப்போது இந்தப் பெண் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதத் தயாராகிக்கொண்டிருக்கிறாள்.

இன்னொரு கதையையும் சொன்னார் முரளி. துர்கா என்றொரு பெண் குழந்தை, எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர். பெற்றோர்கள் இறந்துவிட்டனர். அருகில் ஒரு வீட்டில் இருந்த கணவன், மனைவிக்கு மூன்று பிள்ளைகள். மிகச் சொற்ப வருமானம். ஆனாலும் துர்காவையும் தங்கள் வீட்டில் வைத்து வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். முரளி அந்தக் குடும்பத் தலைவரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில், “அந்தப் பொண்ணுக்கு யாருமே இல்லைங்க, எப்படி தனியா விட முடியும்?”

இதுபோன்ற சம்பவங்கள்தாம் முரளியை ‘சில்ட்ரன் ஆஃப் கிருஷ்ணகிரி’ என்ற அமைப்பை ஆரம்பிக்கத் தூண்டின. எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சுமார் 300 பெண் குழந்தைகளுக்கு சத்தான உணவு, தொடர்ந்த மருத்துவக் கண்காணிப்பு, வாழ்வாதாரத்துக்குத் தேவையான படிப்பு, பயிற்சி, பிறகு ஏதேனும் ஒரு நல்ல வேலையை தேடித் தருவது - இதுதான் முரளியின் நோக்கம். இந்தப் பிள்ளைகள் பலரும் அவரவர் உறவினர்களிடமே வசித்துவருகிறார்கள். மருந்துகள், நான் முன்பே சொன்னபடி, தமிழக அரசிடமிருந்து இலவசமாகக் கிடைத்துவிடுகின்றன. சத்தான உணவை அவர்களிடம் கொண்டுசேர்க்கிறார் முரளி. பிள்ளைகள் அருகில் ஏதேனும் ஓர் அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்கிறார்கள். இப்போது கிருஷ்ணகிரியில் இந்தக் குழந்தைகள் படிப்பதற்காக ஒரு பள்ளியைத் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் முரளி.

எச்.ஐ.வி நோய் பரவுவது குறித்தும், பெற்றோர்களின் (பெரும்பாலான நேரங்களில் ஆண்களின்) தவறால் எவ்வாறு அப்பாவிக் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகின்றன என்பது குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். கிருஷ்ணகிரி பகுதியில் நெடுஞ்சாலைகளில் நடக்கும் பாலியல் தொழில் குறித்துக் கொஞ்சம் தகவல்களைத் தெரிந்துகொண்டேன்.

குழந்தைகள் வளரும் பருவத்தில், அவர்களுடைய பதின்ம வயதுகளில் பலவிதமான உடல், மன பாதிப்புகளுக்கு ஆட்படுகிறார்கள். மத்திய வர்க்கக் குடும்பங்களில் உள்ள ஆரோக்கியமான குழந்தைகளாலேயே இதை எதிர்கொள்வது மிகவும் எளிதல்ல. ஆனால் பெற்றோரை இழந்த, எச்.ஐ.வி போன்ற ஒரு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலையை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இத்தனையையும் மீறி இந்தக் குழந்தைகளிடம் ஒரு நம்பிக்கையை விதைக்க முடிகிறது, வாழ்க்கை குறித்த நேர்ச் சிந்தனையை உருவாக்க முடிகிறது என்கிறார் முரளி.

ஆனால் அதே நேரம், ஆண் குழந்தைகளைப் பராமரிப்பது மிகவும் கடினம் என்கிறார். இவருடைய அமைப்பில் பெண் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பெண்களுமே எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சமூக நலச் சேவகர்கள். ஆண் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளப் பொறுப்பான ஆண் சேவகர்கள் கிடைப்பதில் உள்ள சிக்கலைப் பற்றியும் முரளி பேசினார். இம்மாதிரியான பாதுகாப்பகங்களில் செக்ஸுவல் அப்யூஸ் என்பது பெரிய பிரச்னை. அம்மாதிரி இல்லாமல் பாதுகாப்பான ஓர் அமைப்பை உருவாக்குவது மிகவும் கடினமானது.

நம்மிடையே ஆயிரம் பிரச்னைகள் உள்ளன. தீர்க்கத்தான் பல்லாயிரம் பேர் வேண்டும்.