Monday, December 31, 2012

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை என்பது பேரா. சுவாமிநாதனைத் தலைவராகக் கொண்டு நடந்துவருகிறது. அதன் ஐந்து அறங்காவலர்களில் நானும் ஒருவன். இந்த அறக்கட்டளை சார்பாக சில நிகழ்ச்சிகளை நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம். அவை பற்றிய சுருக்கமான பதிவு இது.

பேராசிரியர் பாலுசாமி மாமல்லபுரத்தின்
மகிஷாசுரமர்தினி சிற்பத்தை விளக்குகிறார்.
(1) மாதாந்திரக் கூட்டம். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை, சென்னை, வெங்கட்நாராயணா சாலை, தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில், வினோபா அரங்கில் மாலை 5.30 மணி முதல் 7.30 வரை ஒரு உரை நிகழ்த்தப்படும். ஒவ்வொரு மாதமும் இது நடந்துவருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இது நடந்துவருகிறது. இலக்கியம், சிற்பம், கோவில் கட்டுமானம், ஓவியம், நாட்டியம், இசை, நாட்டார் கலைகள், தனி நபர் அனுபவங்கள் என்று பலவற்றை நிபுணர்களும் ஆர்வலர்களும் பேசி வருகிறார்கள். இந்த நிகழ்வுகளின் ஒளிப்பதிவு இணையத்தில் யூட்யூப் வழியாக சேர்க்கப்படுகிறது.

மாமல்லபுரத்தின் புலிக்குகை முன் குழுமியுள்ள
ஒரு மாணவர் சுற்றுலாக் குழு எங்களை
வேடிக்கை பார்க்கும் காட்சி.
இந்நிகழ்வுகள் பற்றிய விவரங்களை நீங்கள் http://blog.tamilheritage.in/ என்ற இடத்தில் காணலாம்.

சுமார் 30-40 பேர் மட்டுமே இந்தக் கூட்டங்களுக்கு வருகிறார்கள் என்பது சோகம். எங்களோடு சேர்ந்து வேலை செய்ய ஆர்வலர்கள் தேவை. இந்தக் கூட்டங்கள் பற்றிய தகவல்களை மக்களிட்ம கொண்டுசேர்க்க, கூட்டம் நடக்கும்போது ஒலி/ஒளிப்பதிவு செய்ய, பதிவுகளை செம்மையாக்கி, சிறிய கோப்புகளாக்கி, அவற்றை இணையத்தில் சேர்க்க என்று ஆர்வலர்கள் தேவை. விருப்பமும் நேரமும் இருப்போர் மட்டும் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரவர்மனின் பகவதஜ்ஜுகம் நாடகத்தின்
ஒரு வடிவத்தை எங்கள் குழுவினர்
தெருக்கூத்து வடிவில் நிகழ்த்துகின்றனர்.
(2) Site Seminar: ஒவ்வோர் ஆண்டும் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அந்த இடம் பற்றி ஓரிரு மாதங்கள் முன்னதாகவே படித்து, நிபுணர்களை அழைத்து அவர்கள் கொடுக்கும் உரைகளைக் கேட்டு, ஒரு கையேட்டைத் தயாரித்து, வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்து, குறிப்பிட்ட அந்த இடத்தில் 4-6 நாட்கள் தங்கி, அங்கேயே நிபுணர்களை வரவழைத்து அவர்களிடமிருந்து பல விஷயங்களை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் ஒரு முயற்சி.

ஆவுடையார்கோவில் சிற்பங்களை
ஆச்சரியத்துடன் பார்க்கிறோம்.
2010-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் மூன்று நாட்கள் தங்கினோம். 2011-ல் அஜந்தா, எல்லோராவுக்கு 7 நாட்கள் பயணம். 2012-ல் புதுக்கோட்டையில் 4 நாட்கள். இப்போது 2013 ஜனவரியில் திருவரங்கத்தில் நான்கு நாட்கள். இதற்கான முன்னேற்பாடுகள் சென்ற மாதமே முடிந்துவிட்டன. சுமார் 30-35 பேர் செல்கிறோம்.

பேராசிரியர் வால்ட்டர் ஸ்பிங்குடன்
அஜந்தாவில் ஒரு எதிர்பாராத சந்திப்பு
திருவரங்கம் கோவில் என்பது வெறும் மற்றுமொரு கோவில் அல்ல. தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இடம். ஊரையும் மக்களையும் உள்ளடக்கிய ஒரே கோவில். நீண்ட, நெடிய பாரம்பரியம் கொண்டது. சிலப்பதிகாரம் முதல் பேசப்பட்டு வரும் இடம். சங்க இலக்கியங்களில் இந்தக் கோவிலும் அதன் திருவிழாவும் குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஹரி ராவ் போன்ற சான்றோர்கள். ஆதித்த, பராந்தக சோழன் காலம் தொட்டு (ஒன்பதாம் நூற்றாண்டு) கல்வெட்டுகள் இங்கு உள்ளன. சோழ, பாண்டிய ஆட்சியில் எண்ணற்ற கொடைகள். முஸ்லிம் படையெடுப்பில் அழிக்கப்பட்டு, மீண்டும் விஜயநகர காலத்தில் உச்சத்தைத் தொட்ட கோவில். ‘கோயில் ஒழுகு’ என்ற ஆவணத்தைக் கொண்டது. கல்வெட்டுகள், செப்பேடுகள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும் முதன்மைக் கோவில். வேறு எந்தக் கோவிலும் இத்தனை கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற ஆவணங்கள் கிடையாது. அனைத்து ஆழ்வார்களும் (மதுரகவி தவிர்த்து) பாடிய ஒரே கோவில். ஸ்ரீ வைணவம் என்ற மதம் (மதப்பிரிவு) இந்தக் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில்தான் பிறந்தது. ராமானுசர், தேசிகர், மணவாள மாமுனி என அனைத்து வைணவ முதன்மை ஆசாரியர்களும் இங்கிருந்துதான் மதத்தைப் பரப்பினர். கோவிலின் சிற்பங்கள், நாயக்கர் கால ஓவியங்கள் எனப் பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.

குடுமியான்மலையில் பேரா. சுவாமிநாதனுடன் நாங்கள்.
திருவரங்கத்தின் பாரம்பரியத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள, கல்வெட்டாளர்கள், ஓவிய, சிற்ப வல்லுநர்கள், மத அறிஞர்கள் எனப் பலரது உதவியுடன் செல்கிறோம்.

ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற ஒரு பயணத்தை ஜனவரி மாதம் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.

டான்கிராம் செய்யும் சிறுவர்கள்.
(3) பேச்சுக் கச்சேரி: 2011-ல் தொடங்கினோம். ஐந்து அல்லது ஆறு நாட்கள், டிசம்பர் மாதம் நடக்கும் தொடர் பேருரைகள். 2011-ல், ஜெயமோகன், ஸ்தபதி உமாபதி ஆசார்யா, பேரா. பாலுசாமி, முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், ஸ்வர்ணமால்யா ஆகியோர் சங்க இலக்கியம், கோவில் கட்டுமானக் கலை, பல்லவச் சிற்பம், சோழர் கோவில், நாயக்கர் நாட்டியம் எனப் பல துறைகளைத் தொட்டுச் சென்றனர். இம்முறை 2012-ல், ஓவியம் என்ற ஒற்றை விஷயத்தைச் சுற்றி ஆறு நாட்கள் பேருரைகள் நிகழ்ந்தன.

கிரிகாமி கலைமூலம் தோரணம் செய்யும் சிறுவர்கள்
சென்னையில் இசைக் கச்சேரி நடக்கும் டிசம்பரில் இசையுடன் பிற துறைகளைப் பற்றிய அறிவைப் பலருக்கும் கொண்டுசெல்லும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் அமையவேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

(4) கோடை முகாம்: சிறுவர்களுக்கான நிகழ்ச்சி இது. ஏப்ரல்/மே மாதங்களில் இரண்டு நாள்கள் நடைபெறும் நிகழ்ச்சி. கடந்த இரு வருடங்களாக நடத்திவருகிறோம். சுமார் 30-40 சிறுவர்கள் பங்கேற்கின்றனர். (கட்டணம் உண்டு.) 10-15 வயதுக்கான சிறுவர்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் நிகழ்ச்சி இது. (பெற்றோர்கள் கலந்துகொள்ளலாம், அவர்களுக்கு இலவசம்!)

***

நாகேசுவரராவ் பூங்காவில் மரங்கள் பற்றித்
தெரிந்துகொள்ளும் சிறுவர்களும் பெரியவர்களும்
இந்த ஆண்டு, கடந்த ஆறு தினங்கள் நடந்த ஓவியம் பற்றிய பேருரைகள் மிகப் பிரமாதமாக இருந்தன. ஓர் ஏற்பாட்டாளனாக இல்லாமல், பார்வையாளனாக நான் சமீபத்தில் மிகவும் ரசித்த உரைகள் இவை. இந்திய ஓவிய மரபு பற்றிய புரிதலை எனக்கு அளித்தது என்று மகிழ்ச்சியுடன் சொல்வேன்.

நீங்கள் சென்னையில் இருந்தால், தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் பல்வேறு செயல்பாடுகளில் கலந்துகொள்ள விரும்பினால் அல்லது நிதி அளிக்க விரும்பினால் என்னைத் தொடர்புகொள்ளுங்கள். மின்னஞ்சல்: bseshadri@gmail.com தொலைப்பேசி: 98840-66566

2012

(சொந்தக் கதை. விருப்பம் இல்லாதவர்கள் படிக்கவேண்டாம்.)

இந்த ஆண்டு, ஒரு ஐபேடும் ஒரு ஐஃபோனும் வாங்கினேன். முதலில் வந்தது ஐபேட். அதற்கு முன்பே மூன்று வெவ்வேறு ஆண்டிராய்ட் (குறைந்தவிலை) சிலேட்டுக் கணினிகளை வாங்கிப் பயன்படுத்திப் பார்த்தேன். எதுவும் தேறவில்லை. ஆனால் ஐபேட் (2) அப்படியல்ல. கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கத்தில் புகுந்துகொண்டது. இரண்டு மாதங்கள் பயன்படுத்தியபின் என் பழைய நோக்கியா E51 மொபைலைத் தூர வைத்துவிட்டு, ஒரு குறைந்த விலை ஐஃபோன் வாங்கினேன். ஏர்செல், ஒரு ஆஃபரில், ரூ. 10,000-க்கு ஐஃபோன் 3GS கொடுத்தார்கள். போதும் என்று தோன்றியது. ஃபோன் வாங்க என் பட்ஜெட் அதிகபட்சம் 10,000 ரூபாய் மட்டுமே.

ஐஃபோன் 3GS வேகம் சற்றே குறைவுதான். கேமரா சுமார்தான். ஆனாலும் என் தேவைக்குப் போதுமானதாகவே இருக்கிறது. ஐஃபோனின் 3ஜி சேவையைக் கொண்டு ஐபேடுக்கும், வேண்டிய நேரங்களில் மடிக்கணினிக்கும் இணைய இணைப்பு கொடுத்துக்கொள்ள முடிகிறது. எனவே டாடா ஃபோட்டான், ரிலையன்ஸ் போன்ற துக்கடா இணைய இணைப்புகளைத் தூர எறிந்துவிட்டேன்.

அவ்வப்போது ஐஃபோனில் ட்விட்டர், ஃபேஸ்புக் பார்க்கிறேனே தவிர அவற்றில் எழுதுவது எளிதாக இல்லை. ஆனால் படமெடுத்து Instagram மூலம் உடனேயே இணையத்துக்குத் தள்ளுவது மிக எளிதாக உள்ளது. இன்ஸ்டாகிராம் தொடர்பாக ஏதோ பிரைவசி பிரச்னைகள் இருப்பதாகச் சொன்னார்கள். சோஷியல் மீடியாவுக்கு வருவதே பிரைவசியை இழப்பதுதான். என் கிரெடிட் கார்டுகள், இணைய வங்கிக் கணக்கு ஆகியவை தொடர்பாக எந்தச் சிக்கலும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன். அதேபோல் மின்னஞ்சல் (கூகிள்) களவு போகாமல் இரட்டைத் தாழ்ப்பாள் போட்டு வைத்துள்ளேன். மற்றவை பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.

ஐபேடில்தான் இப்போது பெரும்பாலும் Powerpoint Presentations (Keynote) செய்கிறேன். முழுமையான production platform ஆக இல்லாவிட்டாலும் நல்ல, வசதியான consumption platform ஆக உள்ளது. நிச்சயமாக ஐஃபோன், ஐபேட் மூலம் productivity அதிகமாகியுள்ளதாக உணர்கிறேன்.

***

இந்த ஆண்டு காகிதப் புத்தகம் வாங்குவதைக் கடுமையாகக் குறைந்துக்கொண்டு கிண்டில் புத்தகங்களை வாங்கத் தொடங்கியுள்ளேன். படிப்பது பெரும்பாலும் ஐபேடில்தான். கிண்டிலில் கிடைக்காவிட்டால்தான் அச்சுப் புத்தகங்களை வாங்குகிறேன்.

***

நான் ஐபேடில் விளையாடும் ஒரே விளையாட்டு Solitaire. (செஸ் விளையாட்டில் அது என்னை அடித்துச் சாத்திவிடுகிறது.) உலகின் தலை சிறந்த விளையாட்டு சாலிடேர்தான் என்று நினைக்கிறேன். Angry Birds சுத்தமாகப் பிடிக்கவில்லை. எனவே அவை என் ஐஃபோன், ஐபேடில் இல்லை!

***

ஐபேடில் ஆடியோ ரெகார்டிங் செய்ய முடிகிறது. தரம் கொஞ்சம் சுமார்தான். நல்ல மேம்பட்ட ஒரு ஆப் கிடைத்தால் வாங்கத் தயார். WavePad என்ற இலவசச் செயலியைப் பயன்படுத்துகிறேன். ஆங்காங்கே தேவையற்ற ஒரு ‘டப்’ சத்தம் சேருகிறது.

***

ஐபேடில் ஸ்டைலஸ் கொண்டு எழுத, வரைய சில இலவச/இலவசமில்லா செயலிகளை இறக்கியுள்ளேன். விரைவில் இதன் விளைவுகளை நீங்கள் கண்டு களிக்கலாம்.

***

இந்த ஆண்டு Flip -க்கு ஒரு முழுக்கு போடவேண்டும். அதன் வீடியோ தரம் சுமார்தான். சிறந்த வீடியோ படம் எடுக்க, கைக்கு அடக்கமான நல்ல கருவியை யாராவது சிபாரிசு செய்ய முடியுமா? டிரைபாடில் இணைக்கக்கூடியதாக இருக்கவேண்டும். ஒலிப்பதிவும் ஒளிப்பதிவும் நன்றாக இருக்கவேண்டும்.

***

இந்த ஆண்டு, மேற்குத் தொடர்ச்சி மலையும் பின்னர் இமயமலையும் ஏறியது சுவாரசியமான அனுபவங்கள். ஆனால் தொடர்ந்து பயிற்சி செய்து உடல் எடையைக் குறைக்க நினைத்தது முழுமையாக நடக்கவில்லை. சைக்கிள் வாங்க நினைத்தது நடக்கவில்லை. பொதுவாக உடலைக் கவனிக்கவேண்டும் என்று நினைத்தது நடக்கவே இல்லை. 2013-லாவது...

***

நேரமின்மை காரணமாக நிறைய ஹெரிடேஜ் இடங்களுக்குப் போக முடியவில்லை. வரும் ஆண்டில் நிச்சயமாக கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் சில இடங்களுக்காவது போகவேண்டும். தமிழகத்திலும்தான்.

***

இந்த ஆண்டு படித்ததில் மிக முக்கியமான புத்தகமாக நினைப்பது The Cage - Gordon Weiss. இந்த ஆண்டு ஒரே வாரத்தில் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு (ஐபேடில்) படித்து முடித்தேன். வருமாண்டு சாண்டில்யனின் அனைத்துப் புத்தகங்களையும் முழுமையாக ஒரே முச்சில் - ஒரே மாதத்தில் - படித்து முடிக்கத் திட்டம். இந்த ஆண்டின் மற்றொரு முக்கியத் திட்டம் வில் தூராந்த் ‘நாகரிகங்களின் கதை’ (11 பாகங்கள்) அனைத்தையும் ஒரே மூச்சாகப் படிப்பது. முன்னது முடிந்துவிடும். பின்னது கஷ்டம் என்று தோன்றுகிறது.

***

எழுத/மொழிமாற்ற என்று இந்த ஆண்டில் ஆரம்பித்த சில, நிச்சயமாக வருமாண்டில் முடிந்துவிடும். வலைப்பதிவு எழுத அதிக நேரம் இல்லை.

***

இந்த ஆண்டு குடும்பத்துடன் சென்ற வெளிநாடு இங்கிலாந்து. ஏற்கெனவே பல முறை அங்கு சென்றிருக்கிறேன். ஆனால் மனைவி, மகளுக்குப் புதிய இடம். வருமாண்டு ஒரு வாரம் சீனா சென்று வரலாமா என்று யோசிக்கிறேன்.

***

தியேட்டர் சென்று சுமார் 10 சினிமாப் படங்கள் பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன். மிக விரும்பியது இங்கிலீஷ், விங்கிலீஷ் (இந்தி). தமிழில் மிகவும் ரசித்தது ‘நான் ஈ’, ஆங்கிலத்தில் 'Life of Pi', தெலுங்கில் ‘ரிபெல்’ (நிஜம்:-)

***

இந்த ஆண்டு கிரிக்கெட் பார்ப்பது மிகவும் குறைந்துபோயுள்ளது.

Tuesday, December 25, 2012

தமிழ் பாரம்பரியக் குழுமத்தின் ஓவியம் பற்றிய பேருரைகள்

இன்று (25 டிசம்பர் 2012) முதல் 30 டிசம்பர் 2012 வரை தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சென்னை, தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள தத்வாலோகா அரங்கில் காலை 10.00-12.00 மணிக்கு பேருரைகளை ஏற்பாடு செய்துள்ளது. (சில பேச்சுகள் தமிழிலும் சில ஆங்கிலத்திலும் இருக்கும்.)

25 டிசம்பர் 2012: தமிழகத்தின் பாறை ஓவியங்கள், காந்திராஜன்

காந்திராஜன் ஒரு கலை வரலாற்றாளரும் ஆராய்ச்சியாளரும் ஆவார். தமிழகத்தில், பழமையான பல பாறை ஓவியங்களைக் கண்டுபிடித்த பெருமை இவருடையது. பாறை ஓவியங்களையும் சுவரோவியங்களையும் ஆவணப்படுத்தியுள்ளார். வரலாறு, மானுடவியல் துறைகளில் ஆவணப்படங்கள் எடுத்துள்ளார்.

26 டிசம்பர் 2012: இந்தியா முழுதும் பரவியுள்ள ஓவியக் கலை - ஒரு பார்வை, அர்விந்த் வெங்கட்ராமன்

அர்விந்த் வெங்கட்ராமன் ஒரு மென்பொருளாளர். நூற்றுக்கணக்கான கோயில்களில் உள்ள சிற்பங்களைப் படம் எடுத்து ஆவணப்படுத்தியுள்ளார்.

27 டிசம்பர் 2012: அஜந்தா குகை ஓவியங்கள், பேராசிரியர் சுவாமிநாதன்

சுவாமிநாதன், ஐஐடி தில்லியிலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர். அஜந்தா குகை ஓவியங்கள் குறித்து கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பேசியும் எழுதியும் வருபவர். தனிச்சுற்றுக்காக அஜந்தா ஓவியங்கள் குறித்து ஒரு நூலை எழுதியுள்ளார். அஜந்தா ஓவியங்கள் குறித்து மல்ட்டிமீடியா சிடி ஒன்றை வெளியிட்டுள்ளார். மாமல்லபுரம் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் காஃபி டேபிள் புத்தககங்களை வெளியிட்டுள்ளார்.

28 டிசம்பர் 2012: காஞ்சி, பனமலை பல்லவ ஓவியங்கள், பேராசிரியர் சிவராமகிருஷ்ணன்

        சித்தன்னவாசல் ஜைன குகை ஓவியங்கள், ஓவியர் சந்ரு (சந்திரசேகரன்)

சிவராமகிருஷ்ணன், சென்னை நுண்கலைக் கல்லூரியில் ஓவியத்துறையில் பயிற்றுவிக்கிறார்.
ஓவியர் சந்ரு, சென்னை நுண்கலைக் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர்.

29 டிசம்பர் 2012: தஞ்சை பிருகதீசுவரம் கோயிலின் சோழர் கால ஓவியங்கள், விஜய குமார்

விஜய குமார் Poetry in Stone (http://poetryinstone.in/) என்ற தளத்தின் மூலம் ஆங்கிலத்திலும் தமிழிலும் இந்திய சிற்பக் கலை, ஓவியக் கலை ஆகியவை பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறார்.

30 டிசம்பர் 2012: விஜயநகர, நாயக்க கால ஓவியங்கள், பேராசிரியர் ச. பாலுசாமி

பாலுசாமி, சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக உள்ளார். விஜயநகர, நாயக்கர் கலைகள் பற்றிய ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றவர். விஜயநகர, நாயக்க ஓவியங்களை ஆவணப்படுத்தும் திட்டம் ஒன்றின் தலைவராக இருந்தார். மாமல்லபுரத்தின் அருச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், புலிக்குகை ஆகியவை பற்றி புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

Friday, December 14, 2012

பெங்களூரு புத்தகக் கண்காட்சி

பெங்களூரில் இன்று 14 டிசம்பர் முதல் 23 டிசம்பர் வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

இடம்: மேக்ரி சர்க்கிள் அருகே பேலஸ் கிரவுண்ட்ஸ், அதனுள் திரிபுரவாசவி மைதானப் பகுதி.

‘டயல் ஃபார் புக்ஸ்’ என்ற பெயரில் பெரிய ஸ்டால் ஒன்றை எடுத்துள்ளோம். அங்கே கிழக்கு பதிப்பகம் புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும். கூடவே தமிழின் முன்னணிப் பதிப்பாளர்கள் பலருடைய முக்கியமான புத்தகங்களும் கிடைக்கும்.

கடை எண் 103.

தொடர்புக்கு: விஜயகுமார் (தொலைப்பேசி எண்: 095000-45609)

Wednesday, December 12, 2012

அண்ணா ஹசாரே - கெஜ்ரிவால்

அண்ணா ஹசாரே, ஊழலுக்கு எதிரான சில போராட்டங்களை சென்ற ஆண்டு தொடர்ந்து நடத்தினார். அதன் பின்னணியில் இருந்து, கூட்டங்களை நிர்வகித்து, பணப் பரிமாற்றத்தைக் கவனித்துக்கொண்டதில் பெரும் பங்கு ஆற்றியவர் அர்விந்த் கெஜ்ரிவால்/மனீஷ் சிசோதியா ஆகியோர் என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம்.

ஜன் லோக்பால் என்ற சட்ட வரைவை முன்வைத்து ஹசாரேயும் கெஜ்ரிவாலும் போராடினர். பின்னர் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பைக் கலைத்துவிட்டு நான் என் வழி, நீ உன் வழி என்று இருவரும் பிரிந்துவிட்டனர்.

அர்விந்த் கெஜ்ரிவால், அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டார். அண்ணா ஹசாரே வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்.

கடந்த சில தினங்களில் ஹசாரே வாயைத் திறந்தாலே உளறலாகக் கொட்டுகிறது. அவர் பேசாமல் மௌன விரதத்தைக் கடைப்பிடித்தல் நலம் என்று எனக்குத் தோன்றுகிறது.

கெஜ்ரிவால் தன் பெயரையோ படங்களையோ பயன்படுத்தக்கூடாது என்றார் ஹசாரே. கெஜ்ரிவால் ஒப்புக்கொண்டார். கெஜ்ரிவாலுக்கு அரசியல் ஆசைகள் இருக்கக்கூடாது என்றோ தேர்தலில் நின்று ஊழலுக்கு எதிராகப் போராடக்கூடாது என்றோ ஏன் ஒருவர் எதிர்பார்க்கவேண்டும்? அவரவர்க்கு அவரவர் வழி.

ஹசாரே நேற்று உதிர்த்த முத்தில், ‘நான் பலவற்றையும் வெளியே பேசிவிட முடியாது. பேசினால் பிரச்னை ஆகிவிடும்’ என்று தெரு ஓரத்தில் நின்றுகொண்டு சினிமா கிசுகிசு பேசுபவர்போல் பேசுகிறார். ஊழலுக்கு எதிரானவர்; தைரியமானவர் என்ற பிம்பம் இருக்கும்போது, கெஜ்ரிவால் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் ஹசாரேயிடம் இருந்தால் அதனை வெளியிடுவதுதானே முறை?

எனக்கு கெஜ்ரிவால் கட்சிமேல் பெரும் நம்பிக்கை இல்லை. அரசியலில் அடித்துப் புரட்டி மாற்றம் கொண்டுவந்துவிடுவார்கள் என்று நான் நம்பவில்லை. அரசியல் மாற்றங்கள் நடக்கப் பல பத்தாண்டுகள் தேவை. ஆனால் கெஜ்ரிவால் அவருக்கே உரித்தான அதிரடி முறையில் மாற்றம் கொண்டுவர முடியும் என்று நம்புகிறார். அது அவர் இஷ்டம். ஆனால் அவருடைய நேர்மைமீது சந்தேகம் வருவதுபோல் ஆதாரம் இன்றி ஹசாரே பேசுவது அழகல்ல.

[கெஜ்ரிவாலின் “ஸ்வராஜ்” புத்தகம் படித்துவிட்டேன். மிக அருமையாக எழுதியுள்ளார். தன் கட்சியின் அடிப்படைக் கொள்கையை, தான் நம்பும் அரசியல் மாற்றத்தை இப்படிப் புத்தகமாக ஒருவர் கொண்டுவந்திருப்பது மிகவும் பாராட்டக்கூடியது. கிராமத் தன்னாட்சி என்பதை நான் பெருமளவு ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், கெஜ்ரிவாலின் இடதுசாரிச் சாயல் எனக்கு ஏற்புடையதல்ல. கெஜ்ரிவாலின் ஸ்வராஜ் புத்தகத்தின் தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம் பதிப்பிக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். மிக அருமையான தமிழாக்கம் - ஜவர்லால் செய்துள்ளார். புத்தக அட்டையை அடுத்த இரு வாரங்களில் வெளியிடுகிறேன்.]

Monday, December 03, 2012

மின்சாரப் பிரச்னை + சோலார்

தமிழகத்தில் சென்னைக்கு வெளியே உள்ள மக்கள் மின்சாரம் இன்றித் தவிக்கிறார்கள். அறிவிக்கப்பட்ட/படாத மின்வெட்டு 10 முதல் 18 மணி நேரம் கூட உள்ளது. சென்னையில் இருக்கும் என் போன்ற பலருக்கு தினசரி 2 மணி நேர மின்வெட்டு + மாதம் ஒரு நாள் 8 மணி நேர மின்வெட்டு. இதை இன்வெர்ட்டர் கொண்டு எளிதாகச் சமாளித்துவிடலாம்.

திடீர் என இவ்வளவு மின்வெட்டு எங்கிருந்து வந்தது என்பது பலருக்கும் புரியவில்லை. கூடங்குளம் அணு மின் நிலையத்தை மக்கள்மீது புகுத்தவே இந்தப் பிரச்னை மக்கள்மீது சுமத்தப்படுகிறது என்று ஒரு கான்ஸ்பிரசி தியரியும் மக்களிடையே பரவியுள்ளது. ஆனால் இதற்காகப் போய் ஒரு மாநிலத்தின் பெருமளவு மக்களை ஜெயலலிதா துன்புறுத்துவார் என்று நான் நினைக்கவில்லை.

தனியார் துறைமீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், இந்தப் பிரச்னைக்கான முழுமுதற் காரணமே, மின் உற்பத்தியைத் தனியார்மயமாக்கியதுதான் என்பார்கள். இதை நான் ஏற்கவில்லை. மாநில அரசு தன் எதிர்காலத் தேவையைச் சரியாகத் திட்டமிடாததே. மின்வாரியத்திலிருந்து ஓய்வுபெற்ற பொறியாளர் காந்தி என்பவர் எழுதிய “தமிழகத்தில் மின்வெட்டும், மின்கட்டண உயர்வும் – காரணமும் தீர்வும்” (ஆழி பதிப்பகம்) புத்தகத்தில் பல காரணங்கள் குறிக்கப்பட்டுள்ளதாக ஞாநி தன் கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் உள்ளதைப் படித்தாலே காந்தி தெளிவாக, தரவுகளுடன் எழுதியிருக்கிறார் என்பது புரிகிறது. (புத்தகத்தை நான் இன்னமும் படிக்கவில்லை.)

ஆனால் காந்தியின் அனாலிசிஸில் சில குறைபாடுகள் இருப்பதாக நான் பார்க்கிறேன். தனியார் உற்பத்திக்கு மாற்றாக அவர் அரசு உற்பத்தியை முன்வைக்கிறார். நிறுவுவதற்கான மூலதனச் செலவு அதிகமாக இருக்கும் என்னும் காரணத்தால்தான், அவ்வளவு பணம் கையில் இல்லை என்பதால்தான் தனியார் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவலாம் என்று மத்திய அரசு அனுமதித்தது. இந்த மூலதனச் செலவை நான்கு ஆண்டுகளில் திருப்பித் தருவதற்கே எதிர்ப்பைக் காண்பிக்கிறார்கள் காந்தியும் ஞாநியும்.

மூலதனச் செலவு, அதற்கான வட்டிச் செலவு, மின் நிலையத்தை ஆண்டாண்டு இயக்கும் செலவு, கரி அல்லது இயற்கை எரிவாயு அல்லது நாப்தா போன்ற எரிபொருளின் விலையில் ஏற்படும் மாற்றம், பொதுவான பணவீக்கம் என அனைத்தும் சேர்ந்து அரசு மற்றும் தனியார் மின் நிலையங்களைப் பாதிக்கின்றன. எனவே அவ்வப்போது நுகர்வோருக்கான விலையை ஏற்றிக்கொண்டேதான் இருக்கவேண்டும். நான்கைந்து வருடத்துக்கு ஒருமுறை விலை ஏற்றும்போது மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இது ஏற்கமுடியாத ஒன்று. தனியார் என்றால் வெளிப்படையாக விலை ஏறிவிட்டதைச் சொல்வார்கள். அரசு என்றால் கொஞ்ச நாளைக்கு நஷ்டத்தைச் சகித்துக்கொண்டு பிறகு விலையை ஏற்றுவார்கள். ஆனால் அந்த நஷ்டத்தையும் பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டுதான் சரிக்கட்டியாகவேண்டும். எனவே இந்தச் சிக்கல் ஏதும் இல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்சார விலையை ஏற்றுவது என்று முடிவெடுத்துவிடலாம்.

மாநில அரசுகள் மின் உற்பத்தி ஆலையை நிர்மாணிக்கக்கூடாது என்று மத்திய அரசு ஒருபோதும் சொல்லவில்லை. மாநில அரசுகள் செய்யத் தவறிவிட்டன என்பதுதான் உண்மை.

அடுத்து, காற்றாலை மின்சக்தி நம்மைக் காப்பாற்றிவிடும் என்பதுபோல ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இது உண்மையே அல்ல. காற்றாலை மின்சக்தி யூனிட் ஒன்றுக்கு மிக அதிக விலை கொடுக்கவேண்டும். மேலும் installed capacity அதிகம் என்பதால் மட்டுமே இதிலிருந்து முழு மின்சாரமும் எல்லா நாளும் எல்லா நேரமும் கிடைத்துவிடாது. விக்கிபீடியா பக்கம் போய்ப் பார்த்தால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகமாக 6,970 மெகாவாட் அளவுக்கு காற்றாலைகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன என்று போட்டிருக்கும். ஆனால் ஒரு ஆண்டுக்கு அதிலிருந்து எத்தனை யூனிட்டுகள் கிடைத்தன, ஒவ்வொரு யூனிட்டுக்கும் எத்தனை பணம் மின்வாரியத்தால் கொடுக்கப்பட்டது என்பதைப் பாருங்கள். மேலும் மின் தொகுப்புக்கு ஒரு காற்றாலை கொடுக்கும் மின்சாரத்தின் அதே அளவை அந்த நிறுவனம் அதே ஆண்டில் வேண்டுமென்றால் மின் தொகுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். இதனால் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றுகூட மின்சார வாரியம் குறை கூறியுள்ளது.

காற்றாலை மோசம் என்று நான் சொல்லவரவில்லை. மாற்று எரிசக்தி என்னும் வகையில் காற்றாலை மிக மிக முக்கியம். ஆனால், காற்றாலையால் நம் பிரச்னை எல்லாம் தீர்ந்துவிடும் என்று யாரேனும் சொன்னால் நம்பாதீர்கள். ஏப்ரல் தொடங்கி அக்டோபர் வரைதான் காற்றாலை நன்றாக இயங்கும். பிறகு படுத்துவிடும்.

நம் அடிப்படை மின் தேவையை இரண்டு வழிகளில் மட்டுமே நம்மால் தீர்க்க முடியும்.

(1) அரசு, தனியார் என அனைவரும் இணைந்து அனல் மின் நிலையங்களையும் அணு மின் நிலையங்களையும் அமைத்து, ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரிப்பது.
(2) நாம் ஒவ்வொருவரும் சூரிய ஒளி மின்சாரத்தை நேரடியாக வீடுகளில் அமைத்து மின் தொகுப்பின்மீதுள்ள நம் சார்பைக் குறைத்துக்கொள்வது.

காற்று, குப்பை, கடல் அலை, நீர் மின்சாரம், பிற அனைத்தும் அவ்வப்போது, கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு உதவலாம். ஆனால் அடிப்படைப் பிரச்னைகளை இவற்றால் சாதிக்க முடியாது. தினம் தினம் இத்தனை மெகாவாட் நம் அனைவருக்கும் வேண்டும்.

சூரிய ஒளி மின்சாரத்தைப் பொருத்தமட்டில் அரசோ தனியாரோ மாபெரும் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் எனக்குப் பெரும் நம்பிக்கை இல்லை. இங்கே 50, அங்கே 100 மெகாவாட் கிடைத்தால் பெரிய விஷயம். அரசும் தனியாரும், குறைந்தபட்சம் 1,000 மெகாவாட் மின்சாரம் இல்லாவிட்டால் அதில் அதிகக் கவனத்தைச் செலுத்தக்கூடாது.

மாறாக, தனித்தனியாக நாம் அனைவரும் நம் வீட்டின் சில பிரச்னைகளை சூரிய ஒளி மின்சாரம் கொண்டு தீர்க்கலாம்.

(அ) சூரிய ஒளியில் இயங்கும் தனிப்பட்ட விளக்கு யூனிட்டுகள். இவற்றில் சிலவற்றை நான் சோதனை முயற்சியில் பயன்படுத்த உள்ளேன். பிரகாசம் ஒருவேளை குறைவாக இருந்தாலும், ஒன்றுமே இல்லாமல் இருட்டில் இருப்பதற்கு, இவை எவ்வளவோ தேவலாம். நான் இதுவரையில் பார்த்தவற்றில் சில விளக்குகள் சூரிய ஒளியிலும் சார்ஜ் செய்யலாம். மின்சாரம் மூலவும் சார்ஜ் செய்யலாம்.

(ஆ) சூரிய ஒளி + பேட்டரி + சார்ஜிங் பிளக் (plug): என் வீட்டில் மூன்று செல்பேசிகள், இரண்டு லாப்டாப்கள், இரண்டு சிலேட்டுக் கணினிகள், ஒரு பாக்கெட் ரவுட்டர், ஒரு டி.எஸ்.எல் மாடம்/wi-fi ரவுட்டர் என அவ்வப்போது சார்ஜ் செய்யப்படவேண்டிய பல கருவிகள் உள்ளன. இவை உறிஞ்சும் மின் சக்தி மிகவும் குறைவுதான். இவற்றையெல்லாம் முழுமையாக சூரிய சக்திமூலமே சார்ஜ் செய்துகொள்ள முடியும். அதற்கெனத் தனியான ஒரு சோலார் பேனல் அமைத்து, தனி பேட்டரிமூலம் ஓரிடத்தில் சார்ஜிங் செய்ய வசதி செய்துவிட்டால் போதும்.

(இ) வீட்டில் உள்ள பிற விளக்குகள், மின்விசிறிகள் ஆகியவற்றை மட்டும் ஒரு தனிச் சுற்றில் வைத்து, அவை இயங்குவதற்கான இன்வெர்ட்டர் + பேட்டரி சிஸ்டம், அதனை சார்ஜ் செய்ய சோலார் பேனல்கள் என்று செய்யலாம். இதற்கான செலவு சற்று அதிகம் ஆகும்போலத் தெரிகிறது.

(ஈ) அதிக மின்சாரத்தை இழுக்கக்கூடிய ஏசி, பிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன், இண்டக்ஷன் அடுப்பு, டிவி ஆகியவற்றை ஒரேயடியாக விட்டுவிடவேண்டும். மெயின்ஸில் கரண்ட் வந்தால் இவை இயங்கும். இல்லாவிட்டால் கோவிந்தா!

நீங்கள் செய்யும் பரிசோதனை முயற்சிகளைப் பற்றியும் எனக்குத் தகவல் தெரிவியுங்கள்.

Sunday, December 02, 2012

இராமாயணத்துக்குக் கம்பனின் கொடை

நேற்று, தமிழ் பாரம்பரியக் குழுமம் நடத்தும் மாதாந்திரக் கூட்டத்தில் பேச வந்திருந்தார் பன்மொழி வல்லுநர், இலக்கிய ஆய்வாளர், பேராசிரியர் ஏ.ஏ.மணவாளன். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பட்டங்கள் பெற்றவர். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியராக, துறைத் தலைவராக இருந்தவர். கம்ப ராமாயணத்தில் அத்தாரிட்டி. அவருடைய பேச்சிலிருந்து கிடைத்த சில சுவாரசியமான தகவல்களை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். (முழு வீடியோவை ஒரு கட்டத்தில் இணையத்தில் சேர்ப்பேன்.)

வால்மிகி ராமாயண ஏட்டுச் சுவடிகள் இந்தியாவெங்கும் பல இடங்களில் கிடைத்துள்ளன. அவற்றைத் தொகுத்து, அவற்றுக்கிடையேயான வித்தியாசங்களைக் குறிக்கவேண்டும் என்ற முயற்சியை எடுத்த பரோடா பல்கலைக்கழகம், பல்வேறு வெர்ஷன்களை எடுத்துக்கொண்டு ஆராய்ந்தது. அதன்படி, நான்கு ‘ரிசன்ஷன்கள்’ இருப்பதைக் கண்டுபிடித்தது. அவை, வடமேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு. ஆக, ஒருவிதத்தில் நான்கு வால்மிகி ராமாயணங்கள் இந்தியாவில் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகின்றன; சில இடங்களைத் தவிர.

அவ்வாறு விலகிப்போகும் இடங்கள்தான் மிகவும் சுவாரசியமானவை. உதாரணமாக, தெற்கு வால்மிகி ராமாயணப் பிரதியில் மட்டும் சில புதிய விஷயங்கள் உள்ளன. இவை எவையுமே பிற மூன்று வால்மிகி ராமாயணப் பிரதிகளில் இல்லை. இது எப்படிச் சாத்தியம்?

மணவாளனின் கருத்து இது. இவை அனைத்தையும் முதலில் கம்பன் தன் இராமகாதையில்தான் எடுத்தாள்கிறான். இந்த இராமகாதையையும் வால்மிகி ராமாயணத்தையும் எடுத்துக்கொண்டு வைணவ உரையாசிரியர்கள் பொதுமக்களிடம் பிரசங்களில் ஈடுபடுகின்றனர். அப்போது இரண்டிலும் சில வித்தியாசங்கள் இருப்பதைப் பார்க்கின்றனர். கம்பனின் இராமகாதையில் இருக்கும் விஷயங்களை அவர்கள் அப்போது இயல்பாக, இடைச்செருகல் சுலோகங்கள்மூலம் தெற்குப் பிரதிக்குள் நுழைத்துவிடுகின்றனர். இதன் காரணமாக மட்டுமே தெற்குப் பிரதியில் மட்டும் இவை காணப்படுகின்றன; பிற மூன்று இடங்களில் கிடைக்கும் பிரதிகளில் இவை காணப்படுவதில்லை.

அவற்றிலிருந்து ஒருசிலவற்றை மட்டும் மணவாளன் எடுத்துக்காட்டினார்.

(1) இராமனின் பிறந்த தினம். இன்று ராம நவமி என்று அனைவரும் இராமனின் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் வடமேற்கு, வடக்கு, கிழக்குப் பிரதிகளில் இராமனின் பிறந்த நட்சத்திரம், ஜாதகம் என்று எந்தத் தகவலும் இல்லை. இவை முதலில் தமிழில் கம்பனிடம் மட்டுமே காணப்படுகின்றன. அதன்மூலம் அவை தெற்கு வால்மிகி ராமாயணப் பிரதியில் செருகப்படுகின்றன. பிற மூன்று பிரதிகளில் ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்கன பிறப்பு நட்சத்திரம் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இதில் ஆச்சரியம் என்னவென்றால், தசரதனின் பிறப்பு நட்சத்திரம் தொடர்பாக எல்லாத் தகவலும் அனைத்துப் பிரதிகளிலும் உள்ளன. தசரதனுக்குத் தகவல் கொடுத்துவிட்டு, முக்கியக் கதை மாந்தர்களுக்குக் கொடுக்கவில்லை என்றால் என்ன பொருள்?

கம்பன் எங்கிருந்தோ இந்தத் தகவலைப் பெற்றுள்ளான். இதற்கான சோர்ஸ் கம்பனுக்கு எங்கிருந்து கிடைத்துள்ளது என்று தெரியவில்லை. (வடமேற்கு இந்தியாமூலம், குஜராத் வழியாக, கர்நாடகப் பகுதிக்கும் பின்னர் அங்கிருந்து மலையாள, தமிழ் பகுதிக்கும் இந்த இராமன் பிறப்புத் தகவல் வாய்மொழியாக வந்து, மக்களிடையே பரவியிருந்தது என்கிறார் மணவாளன்.) இன்று இந்தியாவெங்கும் கொண்டாடப்படும் ஒரு விழாவுக்கான நாள், நட்சத்திரத்தைக் குறித்துக்கொடுத்தவன் கம்பன்.

(2) அகலிகை கதை. தெற்குப் பிரதியைத் தவிர பிற அனைத்திலும் அகலிகை கௌதமரால் சபிக்கப்படுகிறாள். ஆனால் கல்லாகப் போ என்று சபிக்கப்படவில்லை. காற்றைப் புசித்து, வேறு அன்ன ஆகாரம் இல்லாமல் கிடப்பாய் என்றுதான் பிற மூன்று பிரதிகளிலும் சொல்லப்படுகிறது. தெற்குப் பிரதியில் மட்டும்தான் ‘அன்ன ஆகாரம் இல்லாமல்’ என்பதற்குப் பதில் ‘கல்லாகக் கிடப்பாய்’ என்று வருகிறது. (“வாயுபக்ஷா நிராஹாரா தப்யந்தி” என்று பிற மூன்று பிரதிகளில் இருப்பது, தெற்குப் பிரதியில் “வாயுபக்ஷா ஷிலான்யாசா தப்யந்தி” என்று மாறிவருகிறது.) காரணம், கம்பன் மிக விரிவாக அகலிகை கல்லாகப் போவதைப் பற்றியும் அவளுடைய சாபவிமோசனம் பற்றியும் சொல்கிறான்.

அப்படியானால் கம்பனுடைய சோர்ஸ் யார்? அது பரிபாடல். பரிபாடலில் திருப்பரங்குன்றத்தைக் குறிக்கும் முருகன் பற்றிய பாடலில் “இந்திரன் பூசை இவள் அகலிகை இவன் சென்ற கவுதமன் சினன் உறக் கல் உரு” என்று வருகிறது. எனவே தனக்குமுன் தமிழகத்தில் இருந்த கதையைச் சேர்த்து கம்பன் படைத்திருக்கிறான்.

(3) இரணியன் வதைப்படலத்தை முழுவதுமாக இராமகாதைக்குள் புகுத்தியது கம்பனே. இதைப் பின்பற்றி, இந்தியாவின் பிற பகுதிகளில் எழுதப்பட்ட சில பிற்கால இராமாயணங்களிலும் இரணியன் கதை வருகிறது.

கோரக்பூர் பிரஸ்மூலம் இன்று வெளிவரும் வால்மிகி ராமாயணப் பதிவு, தெற்குப் பிரதி. (ஏன் அவர்கள் தெற்குப் பிரதியை எடுத்துப் பதிப்பித்துள்ளனர் என்பதற்கு விடை இல்லை.)

மணவாளன் பேசும்போது இராமசேது பற்றிச் சிலவற்றைச் சொன்னார். அவற்றையும் மிச்சத்தையும் வீடியோ வரும்போது பார்த்துத் தெரிந்துகொள்க.