இட ஒதுக்கீடு தொடர்பாக என்னை நானே கேட்டுக்கொண்ட சில கேள்விகளும் எனக்குத் தோன்றிய சில பதில்களும். இந்தக் கேள்விகளுக்கான சில பதில்கள் நிச்சயமாக முழுமையாக இல்லை. என் நிலை வேறுபடும்போது, அல்லது புரிதல் அதிகமாகும்போது அவற்றைப் பற்றி எழுதுகிறேன்.
1. அரசினால் நடத்தப்படும் உயர் கல்விக்கூடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அவசியமா?பதில்: ஆம். சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்ய இட ஒதுக்கீடு அவசியம். அரசினால் ஏற்படுத்தப்பட்டு, கல்வியிலும் ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்குவதாக அறியப்படும் கல்விச்சாலைகளில் அனைத்து சமூக மக்களும் படிப்பதற்கான வழிகளை ஏற்படுத்தித் தருவது மிக அவசியம். இதன்மூலம் மட்டும்தான் social capital வளர்ச்சி அடையும். இந்த social capital இந்தியாவைப் பொருத்தவரை மக்கள் தொகைக்கு நிகரான அளவு இல்லை. இதற்குக் காரணம் பல சமூக மக்களுக்கு உயர் கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றில் இடங்கள் கிடைப்பதில்லை. இதனால் தனிப்பட்ட சில சமூகங்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே கெடுதல். நாம் நினைத்த அளவு வேகமாக நம்மால் முன்னேற முடியாது. பிறபடுத்தப்பட்டோரின் நலம் என்பது அவரவர்களுடைய கவலை மட்டுமல்ல, நாட்டின் மொத்தக் கவலை.
2. மெரிட் மூலம் ஒரு கல்விக்கூடத்துக்கு மாணவர்களைச் சேர்க்காமல் இட ஒதுக்கீட்டினால் மாணவர்களைச் சேர்ப்பது சரியா?பதில்: ஒரு கல்விக்கூடத்தில் குறிப்பிட்ட இடங்கள்தான் (2000 என்று வைத்துக்கொள்வோம்) உள்ளன என்ற நிலையில் அந்த இடங்களை ஒரு நுழைவுத்தேர்வின்மூலம் தீர்மானித்து அந்தத் தேர்வில் முதல் 2000 இடங்களில் இருப்போர் மட்டுமே அந்தக் கல்விக்கூடத்துக்குள் நுழைய முடியும் என்று தீர்மானிப்பதே சரியான செயல் என்று சிலர் வாதிக்கிறார்கள். இதனால் 2001 முதல் 10,000 வரையிலான இடத்தில் இருப்பவர்கள் தகுதியற்றவர்கள் என்று ஆகிவிடாது. தேர்வு நடந்த நாளன்று இருக்கும் மனநிலை, தேர்வுச்சூழல் உருவாக்கும் பதற்றம் ஆகிய பல காரணங்களால் சிலர் ஓரிரு தவறுகளை அதிகமாகச் செய்வதும், சிலர் குருட்டாம்போக்கில் சில கேள்விகளுக்கு பதில் கொடுக்க அதனால் அதிக மதிப்பெண்களைப் பெறுவதும் நிகழ்வதுதான். இந்த "மெரிட்" எனப்படும் முறை மட்டும்தான் ஒரு கல்விக்கூடத்தில் மாணவர்களைச் சேர்க்க சரியான முறையா?
இல்லை. ஒரு படிப்பைப் படிக்க விரும்பும் aptitude, அந்தப் படிப்பைத் திறம்படப் படித்து முடிக்கத் தேவையான குறைந்தபட்சத் திறமை - இந்த இரண்டே போதும். அப்படிப்பட்ட நிலையில் மேலிருந்து கீழாகத்தான் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு கல்வி நிலையம் நினைக்கவேண்டியதில்லை. பிற காரணங்கள் இருக்கலாம்; இருக்க வேண்டும். சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சமன்படுத்துவது மிக முக்கியமான ஒரு காரணம். வெறும் படிப்பை மட்டும் கருத்தில் கொள்ளாது, விளையாட்டுத் திறன், செயலாற்றும் திறன் கொண்ட மாணவர்களைச் சேர்ப்பது, (ஆண்-பெண்) பால் சமன்பாடு , சமூகச் சமன்பாடு, கிராம-நகரச் சமன்பாடு, பொருளாதாரப் பின்னணிச் சமன்பாடு, மதச் சமன்பாடு போன்ற பலவற்றை ஒரு கல்வி நிலையம் விரும்பி வரவேற்றுச் செயல்படுத்தவேண்டும். இதன்மூலமாகத்தான் பல கருத்துகள் ஒரே இடத்தில் பரவி, socially well rounded மாணவர்களை உருவாக்க முடியும்.
அனைத்து மக்களும் எல்லா நலன்களையும் பெறவேண்டும் என்ற கருத்து அரசுக்கு இருக்கவேண்டும்.
3. இட ஒதுக்கீட்டினால் தரம் குறையாதா?பதில்: இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் வரும்போதெல்லாம் தரம் குறையும் என்றொரு சாக்கு சொல்லப்படுகிறது. தரம் என்பதை ஒரு பாடத்திட்டத்தின் மீதான தேர்வு நிர்ணயிக்கும் என்று எடுத்துக்கொண்டாலும்கூட இட ஒதுக்கீட்டினால் உள்ளே வந்த மாணவர்களும் அதே தேர்வை எழுதித்தான் வெற்றி பெறுகின்றனர். இட ஒதுக்கீடு என்பது தேர்வு முறையிலோ கற்பித்தல் முறையிலோ மாற்றத்தைக் கொண்டுவருவதில்லை. கொண்டுவரக்கூடாது.
இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசும்போது பலரும் மருத்துவர்களை உதாரணம் காட்டிப் பேசுகிறார்கள். "உனக்கு உடம்புக்கு வந்தால் நீ இட ஒதுக்கீட்டில் வந்த டாக்டரிடம் போவாயா, அல்லது மிகச்சிறந்த மருத்துவரிடம் போவாயா" என்று கேட்கிறார்கள். யாருக்கு உடம்புக்கு வந்தாலும் உடனே ஏதோ ஒரு டாக்டரிடம் போகிறார்கள். அந்த டாக்டரைத் தேர்வு செய்யும்போது அவர் அகில இந்தியாவிலும் சிறந்த டாக்டரா என்று யாரும் பார்ப்பதில்லை. அந்த டாக்டர் நம் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறாரா? எவ்வளவு கட்டணம் வசூலிப்பார் - நம்மால் தாக்குப் பிடிக்க முடியுமா? நாம் போகும் நேரத்தில் அவர் மருத்துவமனையில் இருப்பாரா? இவற்றை மட்டும்தான் நாம் பார்க்கிறோம். மருத்துவர்களை அழைத்து அவர்கள் எத்தனை மார்க்குகள் வாங்கினர், நுழைவுத்தேர்வில் எந்த இடத்தில் இருந்தனர் என்றெல்லாம் பார்ப்பதில்லை.
இட ஒதுக்கீட்டு முறையில் டாக்டரானவர் மோசமான டாக்டர் என்றும், சிறந்த டாக்டர் நிச்சயமாக பொதுப்போட்டியில் வந்தவரென்றும் ஒருவர் நினைக்கிறார் என்றால் அது அவரது மோசமான மனநிலையைக் காண்பிக்கிறது. இட ஒதுக்கீட்டின் நோக்கம் குறைந்த தகுதியில் ஒருவரை நாட்டில் கட்டவிழ்த்துவிடுவது அல்ல. 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றிபெறும் ஏழு லட்சம் மாணவர்களின் ஒரு லட்சம் மாணவர்களை மருத்துவப் படிப்பு படிக்க வைக்க முடியும். ஆனால் 2,000 இடங்கள்தான் உள்ளன என்றால் இந்த ஒரு லட்சத்தில் எந்த 2,000 பேரையும் மருத்துவர்களாக்கலாம். அதனால் எந்தக் குறையும் ஏற்படாது.
4. இட ஒதுக்கீடு சலுகையா அல்லது உரிமையா?பதில்: மிலிடண்ட் சமூக நீதிக்காரர்கள் இட ஒதுக்கீட்டை உரிமை என்கிறார்கள். இது எனக்கு ஏற்புடையதல்ல. இட ஒதுக்கீடு என்பது சலுகைதான். ஆனால் இந்தச் சலுகை இப்பொழுதைக்கு அவசியம். நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனி மனிதர்களுக்கு என்று சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. தனி மனிதர்கள் அனைவருக்கும் பொதுவாக வழங்கப்படுபவனதான் உரிமைகள். ஒரு குறிப்பிட்ட சமுதாயம், தொழில்துறை, நிலப்பகுதி ஆகியோருக்கு மட்டும் வழங்கப்படுவது சலுகைதான். உரிமை அல்ல.
ஆனால் சலுகை என்பதாலேயே அது இருக்கக்கூடாது என்று யாரும் சொல்லமுடியாது. விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள் என்பதால் அவர்களுக்குக் கொடுத்த கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. சலுகையாக. அதையே அவர்கள் உரிமை கொண்டாடினால் என்ன ஆகும்? சலுகை என்பது தாற்காலிகமானது. அது எவ்வளவு வருடங்கள், எவ்வளவு தலைமுறைகள் என்பதை வெவ்வேறு காலகட்டத்தில் முடிவு செய்யவேண்டும்.
சலுகைகள் கொடுக்கப்படும்போதே எந்நிலையில் சலுகைகள் கொடுப்பது நிறுத்தப்படும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்பது அவசியமல்ல. ஆனால் ஒரு காலத்தில் சலுகைகள் கொடுப்பது நிறுத்தப்படவேண்டும் என்ற எண்ணம் இருக்கவேண்டியது அவசியம்.
5. இட ஒதுக்கீடு என்பது தனி மனிதர்களின் உரிமையை பாதிக்கிறதா?பதில்: இட ஒதுக்கீடு தனி மனிதர்களின் உரிமையை பாதிப்பதில்லை. ஆனால் சிலரது விருப்பங்களை பாதிக்கிறது. அவர்களது கனவுகளை பாதிக்கிறது. ஆனால் ஓர் அரசால் எல்லாத் தனி மனிதர்களின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யமுடியாது. எனவே தத்தம் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்ள தனி மனிதர்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளவேண்டும். இன்று பல முற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க ரஷ்யா, சீனா போன்ற பல நாடுகளுக்குச் செல்கிறார்கள்.
அரசின்மீது ஒரு குற்றத்தை இந்த மாணவர்கள் நியாயமாகச் சுமத்தலாம். சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் பெருத்த மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும் வேண்டிய அளவுக்கு மருத்துவக் கல்லூரிகளையும் பிற கல்லூரிகளையும் கட்டியுள்ளன. இந்தியா அவ்வாறு செய்யவில்லை. தனியாரையும் ஊக்கப்படுத்துவதில்லை. ஆனால் இந்தக் குறைகளை மட்டுமே காரணம் காட்டி இட ஒதுக்கீட்டின் நியாயத்தை மறுக்க முடியாது.
இந்திய அரசு தானும் உயர்கல்விக்கூடங்களை அதிகமாக ஏற்படுத்தவேண்டும்; தனியாரையும் தரமான உயர்கல்விக்கூடங்களைக் கட்ட ஊக்குவிக்கவேண்டும்.
6. அரசு உதவிபெறாத தனியார் கல்விக்கூடங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவேண்டுமா?பதில்: செய்யவேண்டும். தவறில்லை. இத்தகைய இட ஒதுக்கீட்டினால் இந்தத் தனியார் கல்விக்கூடங்கள் தம் வருமானத்தை இழக்கப்போவதில்லை. யாரை மாணவர்களாகச் சேர்த்தாலும் குறிப்பிட்ட கட்டணத்தை அவர்கள் கட்டினால் கல்விக்கூடத்துக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் இட ஒதுக்கீட்டில் இடங்கள் நிரப்பப்படவில்லை என்றால் அந்த இடங்களை பிற மாணவர்களைக்கொண்டு நிரப்பலாம் என்ற உரிமையை இந்தக் கல்விக்கூடங்களுக்குத் தரவேண்டும்.
7. தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவேண்டுமா?பதில்: இதற்கு 'unconditional ஆம்' என்ற பதிலைச் சொல்லமுடியாது. கல்விக்கூடங்களில் அல்லது அரசு நிறுவனங்களில் செய்வது போலல்லாமல் தனியார் நிறுவனங்கள் வேலை தடைபடுவதுபோல எதையும் சட்டமாகக் கொண்டுவரக்கூடாது. அவ்வாறு செய்வது தனியார் நிறுவனங்களின் உரிமையை மீறுவதாகும். தனியார் நிறுவனங்கள் discrimination செய்யக்கூடாது என்பதைச் சட்டமாக்கலாம். அதாவது தகுதி படைத்த பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை கொடுக்கமாட்டேன் என்று சொல்வது குற்றமாக்கப்படவேண்டும். ஆனால் வேலைக்குச் சேர்பவர்களில் இத்தனை சதவிகிதம் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்று திணிக்கக் கூடாது.
இட ஒதுக்கீடு என்பது தகுதிக்குறைவை ஏற்படுத்தும், அதனால் தனியார் நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்படும் என்ற எண்ணத்தால் நான் இதனைச் சொல்லவில்லை. ஆனால் அசீம் பிரேம்ஜி, கபில் சிபால் ஆகியோர் பேச்சுகளில் இந்தத் தொனிதான் உள்ளது.
லாப நோக்குள்ள நிறுவனங்கள் அனைத்துமே தமது லாபத்தை அதிகப்படுத்த, (சட்டத்தின் வழியில்) என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்வார்கள். இன்றைய சந்தைப்பொருளாதாரச் சூழ்நிலையில் நிறுவனங்களுக்கு வேகம் முக்கியம். கண்ணில்படும் தகுதியான முதல் ஆளை வேலைக்கு எடுத்துக்கொண்டு வேலையை உடனடியாகச் செய்துமுடிக்கவே அவர்கள் விரும்புவார்கள். நான் இதற்குமுன் வேலைசெய்த நிறுவனத்திலும் சரி, இப்பொழுது வேலை செய்யும் நிறுவனத்திலும் சரி, வேலைக்கு ஆள் வேண்டுமென்றால் அலுவலகத்தில் உள்ள பிறரிடம் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று கேட்போம். அதற்கடுத்து ஏதாவது மனிதவள நிறுவனத்திடம் தகுதிபடைத்தவர்களை அனுப்பச் சொல்லிக் கேட்போம். இந்த இரண்டு முறையிலுமே சாதி, மதம் என்று எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை. நமது எதிர்பார்ப்புக்கு அருகில் வரும் முதல் ஆளைத் தேர்ந்தெடுப்போம். அவ்வளவே.
எல்லா சமூகத்தினருக்கும் தேவையான படிப்புப் பின்னணி இருக்கும்போது வேலை பார்க்கும் இடத்திலும் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பலாம். அவ்வாறு நடக்காமல் சிலரை வேண்டுமென்றே ஒதுக்குகிறார்கள் என்று தெரியவந்தால் அதனைச் சட்டபூர்வமாக எதிர்கொள்ளத் தகுந்தவாறு சட்டங்கள் கொண்டுவரலாம்.
அத்துடன் சமூக நீதிக்கு என்று அதிகமாகத் துணைபுரிய தனியார் நிறுவனங்கள் வந்தால் அவற்றை ஊக்குவிக்க அரசு முனையலாம்.
தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை சட்டபூர்வமாகத் திணிக்க முயல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
8. பிற்படுத்தப்பட்டோருள் Creamy layer என்று முடிவுசெய்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது எனலாமா?பதில்: சமூகத்தின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட சலுகையை தமக்குள்ளாக எவ்வாறு பிரித்துக்கொள்வது என்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே முடிவு செய்ய வேண்டும். முற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இதனை வேண்டுவதை பிற்படுத்தப்பட்டோர் தவறாக எடுத்துக்கொள்ள நேரிடலாம்.
ஒருமுறை இட ஒதுக்கீட்டைப் பெற்றால் போதுமா, அல்லது இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள்வரை அது தொடர்ந்தபின்னர் அந்தக் குடும்பம் creamy layer என்ற வரையறைக்குள் வருமா? Creamy layer-இல் ஒருவர் உள்ளார் என்பதைக் கண்காணிக்க National database ஒன்றை உருவாக்க வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கான பதில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களிடமிருந்து வந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் creamy layer என்று இல்லாவிட்டால் அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது பிற பிற்படுத்தப்பட்டோர்தான்.
9. இட ஒதுக்கீடு 50%க்கு உட்பட்டுதான் இருக்கவேண்டுமா? அதற்கு மேலே ஏன் செல்லக்கூடாது?பதில்: இட ஒதுக்கீடு என்பதை ஏற்றுக்கொண்டபிறகு ஏன் 50%-ல் நிற்கவேண்டும்? 60%? 70%?
ஒரு சிலர் ஒவ்வொரு சமூகத்தினரும் மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்று பார்த்து அதற்கேற்றவாறு அவரவர்களுக்கு இத்தனை என்று ஒதுக்கிவிடலாமே என்கிறார்கள். இது ஏற்கத்தக்கதல்ல. இது BC, MBC, SC, ST என்று மட்டும் நிற்காமல் மேற்கொண்டு பிரிவுகளை ஏற்படுத்திக்கொண்டே போக வழி செய்யும். ஏனெனில் ஒவ்வொரு சமூகத்திலும் அதிலுள்ள உட்பிரிவுகள் தங்களுக்கான இடங்கள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று நினைப்பார்கள். அதன் வெளிப்பாடுதான் தமிழகத்தில் MBC உருவானது.
50% என்பது ஓர் arbitrary position. இது 60% ஆக இருந்திருக்கலாம், அல்லது 45% ஆகவும் இருந்திருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவாக வைத்திருப்பதன் நோக்கம் பொதுப்போட்டிக்கான களம் எப்பொழுதும் இருக்கும், அது முடிவில் 100% ஆகும் என்பதை முன்வைக்கவே. 50%க்கு மேலாக இட ஒதுக்கீடு என்றால் கண்ணில் இட ஒதுக்கீடு மட்டும்தான் தெரியும். அது இட ஒதுக்கீட்டை முழுமையான ஒரு தீர்வாகவும் எப்பொழுதும் நிரந்தரமாக இருக்கும் ஒரு தீர்வாகவும் காட்டும்.
அது அப்படிப்பட்ட தீர்வு என்று எனக்குத் தோன்றவில்லை.
10. முற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு என்று தனி இட ஒதுக்கீடு வேண்டுமா?பதில்: தேவையில்லை. இட ஒதுக்கீடு என்பது பொருளாதார நிலை சார்ந்ததல்ல. இன்றைய சந்தைப் பொருளாதாரச் சூழ்நிலையில் படிப்புக்குக் கடன் கொடுக்க பல வங்கிகள் முன்வருகின்றன. நல்ல கல்விக்கூடத்தில் இடம் கிடைக்கும் என்றால் அதற்கு ஆகும் செலவை இன்று ஒருவரால் கடனாகப் பெற முடியும்.
இட ஒதுக்கீட்டின் நோக்கம் ஜாதிகளுக்கு இடையேயான சமன்பாட்டைக் கொண்டுவருவதுதானே ஒழிய, பொருளாதார நிலையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்வதல்ல. புதிதாக ஏற்படும் வேலை வாய்ப்புகளும் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழ்நிலையும் ஏழைகளின் நிலையை நிச்சயமாக மேலே தூக்கும்.
======
பிற பதிவுகள்:
சுந்தரமூர்த்தி:
முதல் தலைமுறையில் படித்து வந்த OBC நண்பர்கள் கவனத்திற்குஅருள் செல்வன்:
இட ஒதுக்கீடு - இன்றுரவி ஸ்ரீனிவாஸ்:
இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் சரியானதுதானா? |
இட ஒதுக்கீடு - 2