Sunday, October 31, 2010

சிலேட்டுக் கணினி - என் அனுபவம்

சென்ற வாரக் கடைசியில் நான் ஆர்டர் செய்திருந்த சிலேட்டுக் கணினி வந்துசேர்ந்தது. நான் ஆர்டர் செய்தது Ebay-யில், game_mastr என்ற வியாபாரியிடமிருந்து. முன்னர் பெயர் குறிப்பிடாததன் காரணம், பொருள் எப்படி இருக்கும், கைக்கு வந்து சேருமா என்று தெரியாததால். வந்து சேர்ந்ததனால், இப்போது சுட்டி... குறிப்பிட்ட காலத்துக்கு முன்னமேயே வந்து சேர்ந்தது. இது ஒரு சீனத் தயாரிப்பு. விலை ரூ. 6,990/- தபால் செலவு இலவசம்.

ஆண்டிராய்ட் புரிபட கொஞ்சம் காலமானது. சாம்சங் போன்றவர்கள் நேற்று 38,000 ரூபாயில் டேப்ளட் பிசி வெளியிட, இந்த 7,000 ரூபாய் சமாசாரத்தில் என்ன கிடைக்கும் என்று சிலர் நினைக்கலாம். என் கருத்தில் போட்ட பணத்துக்கு நன்றாகவே உழைக்கிறது.

wifi இணைய இணைப்பு உள்ளது. எனவே இதைக்கொண்டு வீட்டிலும் அலுவலகத்திலும் வேலை செய்யமுடிகிறது. ஈதர்நெட் இணைப்பும் உண்டு.

கருவியுடன் வந்த உலாவியில் இணையத்தளங்கள் அனைத்துக்கும் செல்ல முடிகிறது. ஆண்டிராய்ட் 1.6 தான் உள்ளது. அதனால் பிளாஷ் வேலை செய்வதில்லை. ஜாவா வேலை செய்யாது. ஆனாலும் பொதுவாக நான் போகும் அனைத்து ஆங்கிலத் தளங்களிலும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆபரா போன்ற உலாவியை இன்னும் இதில் நிறுவிப் பார்க்கவில்லை.

யூட்யூப் வேலை செய்ய தனியான ஒரு செயலியை நிறுவவேண்டும் - ஆப் ஸ்டோரில் youtube என்று தேடினால் கிடைக்கிறது. அதில் யூட்யூப் வீடியோ சிறப்பாகவே செயல்படுகிறது. அவ்வப்போது செயலி அப்பீட்டாகி வெளியேறிவிடுகிறது. அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் பொதுவாக பெர்ஃபார்மன்ஸ் மிகத் தேவலாம். ட்விட்டர், ஃபேஸ்புக் எல்லாம் பிரச்னையே இல்லை. கூகிளின் பொதுவான தேடல், விக்கிபீடியா எல்லாம் சுபம்.

தமிழ் - இப்போதைக்கு கட்டம் கட்டம்தான்.

3ஜி என்று சொன்னார்கள். ஆனால் அதை எப்படி இயங்கவைப்பது என்றெல்லாம் தெரியவில்லை. அதைப் பின்னர்தான் பார்க்கவேண்டும்.

சில படங்கள்:

அகலவாட்டில் படிப்பது சுலபம்.




ஆனால்,  சிலேட்டைத் திருப்பினால் தானாகவே திரை நேராகிக்கொள்கிறது. படங்கள் இல்லாத, எழுத்து அதிகம் இருக்கும் தளங்களைப் படிக்க இந்த வாட்டம் உதவியாக இருக்கும்.




கணினித் திரை...


 பின்பக்கம். எந்த நிறுவனம் என்ற பிராண்ட் பெயர் எதுவும் கிடையாது.



ஆஃப் செய்தபின்.



ஒரு  கிரவுன் 1/8 புத்தகத்தைவிடச் சற்றே அகலமும் உயரமும் அதிகம்.




யூட்யூப் வீடியோ.



காதுகளில் மாட்டிக்கொள்ள இயர் ஃபோன் ஜாக் உள்ளது. இயர் ஃபோன் நீங்கள்தான் தனியாக வாங்கிக்கொள்ளவேண்டும்.

பேட்டரி சுமார்தான். சீக்கிரமே போய்விடுகிறது. அவ்வப்போது சார்ஜ் செய்துகொண்டே இருக்கவேண்டும்.

இன்னும் நான் செய்யவேண்டியது ஒரு நல்ல பிடிஎஃப் ரீடரைத் தேடுவதுதான். அது கிடைத்துவிட்டால் பி.டி.எஃப் வடிவிலான தமிழ், ஆங்கில ‘மின் புத்தகங்கள்’ படிப்பதில் சிக்கல் இருக்காது. ஆனால் நல்ல ரீடர் ஏதும் கிடைக்கவில்லை. (ஆண்டிராய்ட் 1.6 என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனை 2.1 வெர்ஷனுக்கு மாற்றுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம். எனவே இப்போதைக்கு அதில் நான் இறங்கப்போவதில்லை.)

Friday, October 29, 2010

தேசியமும் பிளவும்

(அருந்ததி ராய்க்கு ஆதரவாக...)

இந்தியா என்ற நாட்டுக்கு இன்று ஒரு குறிப்பிட்ட பௌதீக எல்லை உள்ளது. ஆனால் இந்த எல்லைக்குள் இருக்கும் மக்கள் ஒரு சிலர் இந்திய தேசம் என்ற கட்டமைப்புக்குள் வர மறுக்கிறார்கள். உதாரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பலர், வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பலர், இப்படி. ஒரு காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சிலராவது இந்திய தேசியம் என்ற வரையறைக்கு வெளியே இருப்பதையே விரும்பினார்கள். ஆனால் பின்னர் தங்கள் கருத்துகளை மாற்றிக்கொண்டார்கள்.

இப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை எடுத்துக்கொள்வோம். ஜம்மு, லடாக், காஷ்மீர் பள்ளத்தாக்கு - இவை மட்டும்தான் இந்த மாநிலத்தில் இப்போது உள்ளன. முஸாஃபராபாத்தைத் தலைநகராகக் கொண்ட, பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் என்று நாமும் விடுதலையடைந்த காஷ்மீர் என்று பாகிஸ்தானிகளும் சொல்லும் பகுதி, பாகிஸ்தான் வசம் உள்ளது. இன்று பிரச்னையின் அடிநாதம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும்தான் உள்ளது. அங்குள்ள பலர் இந்தியாவை அந்நிய நாடாகவே கருதுகிறார்கள். இந்திய தேசியம் என்ற கருத்து அவர்களை இதுவரை எட்டவில்லை. ஒன்றுபட்ட இந்தியா என்ற நாட்டில் வசிப்பதால் தங்களுக்கு ஏதும் பெரிய நன்மை இருப்பதாக அவர்கள் நினைக்கவில்லை. மாறாக, ஒன்றுபட்ட இந்தியா என்பதைக் கட்டிக்காக்க, இந்தியா அனுப்பும் எண்ணற்ற ராணுவ வீரர்கள்தான் அவர்கள் கண்ணில் படுகிறார்கள். கல்லால் அடித்தால் திரும்ப புல்லட்டால் தாக்கும் வீரர்கள். வேறு பல அட்டூழியங்களில் ஈடுபடும் வீரர்கள். இந்திய வீரர்கள். எனவே ஆக்ரமிப்புப் படையினர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் முஸ்லிம்கள் இவ்வாறு தாங்கள் ஏதோவிதத்தில் முற்றுகை இடப்பட்டுள்ளதாக உணரும்போது அவர்களை இழுத்துவைத்து அவர்கள்மீது புகட்டும் தேசியம் தேவைதானா? அப்படிப்பட்ட வலுக்கட்டாய, பலாத்கார தேசியத்தால் நாம் எதனைச் சாதித்துவிடப் போகிறோம்? இந்தியா என்ற தேசத்துடன் கலாசாரத்தோடு ஒன்றாமல், பொருளாதாரத்தோடு ஒன்றாமல், தனியாகப் போகிறேன் என்று ஒருவர் சொன்னால், போ என்று ஏன் நம்மால் சொல்லமுடியவில்லை?

அப்படிச் சொல்வதால் நாம் எதை இழக்கப்போகிறோம்?

இதனை அகண்ட பாரதம், பாரத மாதாவை ‘விவிசெக்ட்’ பண்ணுகிறான் துரோகி... என்ற கோட்சேயிய வார்த்தைகளைக் கொண்டு விளக்காமல், இன்றைய 21-ம் நூற்றாண்டு பாஷையில் பேசினால் உபயோகமாக இருக்கும்.

சில கேள்விகளை முன்வைக்கலாம்.

(1) காஷ்மீர் என்றால் எந்தக் காஷ்மீர்? காஷ்மீர் பள்ளத்தாக்கு மட்டுமா? ஜம்மு, லடாக் சேராத பகுதிகள்தானே?
(2) காஷ்மீர் பள்ளத்தாக்கு என்றாலுமே, அங்குள்ள சிலர் தாங்கள் பிரிந்துசெல்ல விரும்பவில்லை என்றால் அப்போது என்ன செய்வது?
(3) காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்ந்து, பின்னர் அடித்து விரட்டப்பட்ட காஷ்மீர பண்டிட்டுகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம்?
(4) பாகிஸ்தான் நாளை இந்த ‘சுதந்தர’ காஷ்மீரை கபளீகரம் செய்தால் அதனால் நமக்குப் பிரச்னைகள்தானே?
(5) காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் இந்து வழிபாட்டுத் தலங்கள், அவற்றின் பாதுகாவல், அங்கு செல்லும் உரிமை ஆகியவை பற்றி என்ன செய்வது?

(தொடரும்)

Wednesday, October 27, 2010

தமிழ் பேப்பர்

தமிழ் பேப்பர் என்ற வரிவிலக்கு பெறக்கூடிய சிலாக்கியமான பெயரில் ஓர் இணைய இதழை நியூ ஹொரைஸன் மீடியா தொடங்கியுள்ளது. பா.ராகவன் அதன் எடிட்டர். தொடங்கி இன்னும் ஒரு மாதம்கூட நிறைவுபெறவில்லை.

அதனை ஒரு நடை எட்டிப்பார்த்து, உங்கள் கருத்துகளை அங்கேயே பின்னூட்டப் பெட்டியில் விட்டால் மகிழ்வேன்.

Tuesday, October 26, 2010

இந்தியா-ஜப்பான்

அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில் இந்தியா தன் நிலையை இந்த மூன்று தேசங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவேண்டும்: அமெரிக்கா, சீனா, ஜப்பான். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளின்படி, இந்த மூன்று தேசங்களுக்கு அடுத்தபடியாக இந்தியா மொத்த உற்பத்தியில் நான்காவதாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த மூவரில் யாரோடு இந்தியா நெருக்கமான உறவு கொள்ளமுடியும்; அதன்மூலம் பயன் பெறமுடியும்?

அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில், இந்த நான்கு தேசங்களுள் இந்தியாவில்தான் ஏழைமை அதிகமாக இருக்கும். படிப்பறிவற்ற நிலை அதிகமாக இருக்கும். உள்நாட்டுக் குழப்பங்கள் அதிகமாக இருக்கும். ஊழல் அதிகமாக இருக்கும். ஆனால் முன்னேற்றத்துக்கும் புதுமைக்கும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்.

சீனா, இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளாது. அதன் அரசியல் கொள்கையில் இந்தியாவுடனான நெருக்கமான உறவுக்கு வழி ஏற்படாதவண்ணம் திபெத், அருணாசலப் பிரதேசம், அக்சாய் சின், பாகிஸ்தான் உறவு, காஷ்மீர் பற்றிய சீனாவின் கருத்து போன்ற பல விஷயங்கள் உள்ளன. மேலும், சீனா, இந்தியாவை தன்னுடைய போட்டியாளராகவே பார்க்கும். கம்யூனிச அல்லது ஒற்றை ஆட்சி சீனா, ஜனநாயக இந்தியாவைத் தன் நெருக்கமான அரசியல் உறவாகப் பார்க்க எந்த வாய்ப்பும் இல்லை.

அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமான உறவுகொள்ள வாய்ப்புகள் உள்ளன; ஆனால் இது நடக்காது என்று தோன்றுகிறது. அடுத்த இருபது ஆண்டுகளில் அமெரிக்கா சீனாவை எப்படி எதிர்கொள்வது என்று சிந்திப்பதிலேயே காலத்தைச் செலுத்தும். ஆஃப்கனிஸ்தானில் கழுத்துவரை சிக்கியுள்ள அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தேவை. அதனாலேயே அடுத்த பத்தாண்டுகளுக்காவது இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவு ஏற்படாமல் எக்கச்சக்கமான சின்னஞ்சிறு சச்சரவுகள் ஏற்படும். இரு நாடுகளுக்கும் கலாசாரரீதியில் உறவுகள் குறைவு. இந்தியர்கள் பலர் அமெரிக்காவில் வசித்தாலும்கூட, வரும் இருபது ஆண்டுகளில் அமெரிக்காவில் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படப்போகும் காரணத்தால் ஏழை அமெரிக்கர்கள் இனவெறியுடன் நடந்துகொள்ளக் காரணங்கள் நிறைய உள்ளன. அமெரிக்காவில் வசிக்கும் வளமான இந்தியர்கள் இந்த ஏழைகளின் இன்வெறிக்கு ஆளாக நேரிடும் அபாயங்களும் உள்ளன. இந்திய அரசு அமெரிக்க உறவை விரும்பினாலும், கம்யூனிஸ்டுகள், இஸ்லாமிஸ்டுகள், சுதேச இந்துத்துவர்கள், பொதுவான அறிவுஜீவிகள் என அனைவருமே அமெரிக்காவை வெறுப்பவர்கள்! அமெரிக்காவுடனான எந்தவித நல்லுறவுக்கும் பொதுமக்களிடம் ஆதரவு ஏற்படாவண்ணம் இவர்கள் நடந்துகொள்வார்கள்.

ஆனால், இந்தவிதமான பிரச்னைகள் ஏதும் ஜப்பான் உறவில் இல்லை. ஜப்பான் 1950-கள், 1960-களில் அணுகுண்டுத் தாக்குதல், இரண்டாம் உலகப்போர் தோல்வி ஆகியவற்றிலிருந்து மீண்டு, 1970-களிலும் 1980-களிலும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறியது. எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், பிரிசிஷன் மெஷினிங் போன்ற பலதுறைகளில் உலகின் நம்பர் ஒன் நாடாகத் திகழ்ந்தது. விளைவாக ஏற்பட்ட டிரேட் சர்ப்ளஸ், அதன் விளைவாக கையில் எக்கச்சக்கமான பணம். இதன் காரணமாகவும் மக்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாறுதல் காரணமாகவும் கடந்த இருபது ஆண்டுகளில் ஜப்பானின் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறங்கியுள்ளது. டிஃப்ளேஷன் ஒரு பெரிய பிரச்னை. ரியல் எஸ்டேட் முதல் பங்குச்சந்தை வரை கடுமையான வீழ்ச்சி. வயதானோர் எண்ணிக்கை கடுமையாக அதிகமாதல். இதனால் ஏற்படப்போகும் பென்ஷன் பிரச்னைகள். வருங்கால ஜப்பானியத் தலைமுறை நம்பிக்கை இழத்தல்.

இவற்றுடன், ஜப்பானின் ஜனநாயகத்தில் பொதிந்துள்ள அரசியல் குழப்பம் காரணம். ஜப்பானின் இன்றைய பிரதமர் யார் என்று கேட்டால் பொதுவாகவே நீங்கள் தடுமாறுவீர்கள். அடுத்த மூன்று மாதத்தில் அவரே பிரதமராக இருப்பாரா என்பதும் தெரியாது.

ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையில் கடுமையான சச்சரவுகள் எழப்போகின்றன. இப்போதே ஆரம்பமாகிவிட்டது. இதற்கு வரலாற்றுக் காரணங்களும் உண்டு. இத்தனூண்டு ஜப்பான் சீனாவைக் காலனியாக்கி சீன மக்களைக் கடுமையாகத் துன்புறுத்தியுள்ளது. நடந்தது 20-ம் நூற்றாண்டில். இதனைச் சீனர்கள் மறக்கப்போவதில்லை. ஜப்பான் தன் மூலப் பொருள்களுக்கு சீனாவையோ ஆஸ்திரேலியாவையோதான் பெருமளவு நம்பியிருக்கவேண்டும். சீனா இப்போதே தன் கச்சாப்பொருள் ஏற்றுமதியைக் குறைக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டது. மறுபக்கம் ஆஸ்திரேலியா விரைவாக சீனாவின் சப்சிடியரி சுரங்கமாக மாறிக்கொண்டு வருகிறது.

அமெரிக்கா, ஜப்பானுக்கு எந்தவிதத்திலும் உதவப்போவதில்லை. அமெரிக்கா தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்வதிலேயே நேரத்தை செலவிடவேண்டும்.

இந்த நிலையில் ஜப்பான் இயல்பாகப் பார்க்கவேண்டிய நாடு இந்தியா. ஜப்பானிடம் இப்போதும் நிறையப் பணம் உள்ளது. அதனை மேலும் மேலும் அவர்கள் நாட்டிலேயே முதலீடு செய்வதில் பிரயோஜனம் இல்லை. அதை அவர்கள் இயல்பாக முதலீடு செய்யவேண்டியது இந்தியாவில்தான். அதையும் மிக அழகாக, தங்களுக்கும் இந்தியாவுக்கும் லாபம் வரும் வகையில் செய்யலாம்.

உதாரணமாக இந்தியாவில் படுவேக ரயில் போக்குவரத்து நெட்வொர்க் ஒன்றை அமைக்கும் ஒப்பந்தத்தை ஜப்பான் செய்துகொள்ளலாம். அதற்கு சுமார் 200-300 பில்லியன் டாலர் செலவாகும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இது ஒன்றும் கஷ்டமான தொகை அல்ல ஜப்பானுக்கு. அந்த முழுத்தொகையை ஜப்பான் இந்தியாவுக்குக் கடனாக வழங்கும். அந்த படுவேக மெக்லெவ் ரயில் சேவையை அமைத்துத்தர இந்தியா முழுவதும் ஜப்பானிய கட்டுமான நிறுவனங்களை மட்டுமே நாடவேண்டும் என்று கடன் ஒப்பந்தத்தின் ஷரத்தாக ஆக்கலாம். இதனால் ஜப்பானிய நிறுவனங்களுக்கு வளமான பணம் வருமானமாகப் போய்ச் சேரும். இந்தியாவுக்கு அதி அற்புதமான அதிவேக ரயில் சேவை கிடைக்கும். ஜப்பானிய நிறுவனங்கள் அமைக்கப்போகின்றன என்பதால் தரத்துக்குப் பிரச்னை இருக்காது. அதனை நிர்மாணிப்பதில் இந்திய நிறுவனங்கள் சப்-காண்டிராக்டர்களாக இருப்பதால் இந்தியர்களுக்கு இந்தத் துறையில் நல்ல நிபுணத்துவம் கிடைக்கும். இதனால் கிடைக்கும் அதிக வருவாயைக் கொண்டே இந்திய அரசு கடனைக் கட்டிவிட முடியும். இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

இந்திய, ஜப்பானிய உறவுக்குள் பிரச்னை ஏதும் இருக்க வாய்ப்பில்லை. ஜனநாயகரீதியாக, மதரீதியாக, ஏன் மொழிரீதியாகக்கூட. இந்தியர்கள் ஜப்பானிய மொழி கற்றுக்கொள்வது கஷ்டமான விஷயம் கிடையாது. (மேலும் பதிலாக நாம் அவர்களுக்கு ரஜினிகாந்த் படங்களையும் மீனாவின் கண்களையும் கொடுத்துவிடலாம்! இதுமட்டும் ஜோக்!)

இப்போது மன்மோகன் சிங் ஜப்பான் பிரதமருடன் கைகுலுக்கிக்கொண்டிருக்கிறார். இங்கே இந்தியாவிலோ, நாம் அடுத்து ஒபாமா இரண்டு நாள்கள் இங்கு வருவதைப் பற்றி அதிசயித்துக்கொண்டிருக்கிறோம். ஒபாமாவாலோ அமெரிக்காவாலோ இந்தியாவுக்கு அதிக உபயோகம் இல்லை. ஆனால் ஜப்பான் மனது வைத்தால், இந்தியா தன் தரப்பை அழகாக எடுத்துவைத்தால், இருவருக்குமே மிகப் பெரிய லாபம் காத்துள்ளது.

நன்கு வளர்ந்த இந்தியாவால், ஜப்பானுக்கு அரசியல்ரீதியிலும் லாபம் உண்டு. அப்போது சீனா வேறுவழியின்றி இந்தியாமீது அதிக கவனம் செலுத்தவேண்டிவரும். அதனால் ஜப்பான்மீது கொஞ்சம் கவனத்தை எடுக்கும். இன்னும் சிலாக்கியமானது அமெரிக்கா-இந்தியா-ஜப்பான் ஆக்ஸிஸ். ஆனால் இது நடக்க வாய்ப்புகள் குறைவு. குறைந்தது ஜப்பான்-இந்தியா உறவையாவது மேம்படுத்த நாம் முயற்சி செய்யவேண்டும்.

Monday, October 25, 2010

சிலேட்டு கம்ப்யூட்டர்


ipad
ஆப்பிள் ஐபேட்
Tablet PC என்ற பெயரில் விளையாட்டு சாமான்கள் சந்தையில் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. காசுள்ளவர்கள் ஆப்பிளின் ஐபேட் சிலேட்டை வாங்கலாம். மற்றவர்கள் பிற பிராண்டட் பொருள்களை வாங்கலாம். காசு குறைவாக உள்ளவர்கள் வாங்க எண்ணற்ற சீன, கொரிய, தாய்வானியப் பொருள்கள் சந்தையை ஆக்ரமிக்கப்போகின்றன. இந்த குறைந்தவிலைப் பொருள்கள் கூகிளின் ஆண்டிராய்ட் இயக்குதளத்தைக் கொண்டிருக்கும். தொடுதிரை வசதி உடையதாக இருக்கும். திரை, 7 இஞ்ச் அகலம் (அல்லது உயரம்) கொண்டதாக இருக்கும். கிரவுன் 1/8 புத்தகத்துக்கும் டெமி 1/8 புத்தகத்துக்கும் இடைப்பட்ட சைஸ். (இதற்கு அடுத்து 10 இஞ்ச் திரை.)



apad
சீனா பொருள்
இந்த சிலேட்டுகள் வைஃபை இணைய இணைப்பு கொண்டவையாக இருக்கும். சில வடிவங்களில் 3ஜி இணைப்புக்கும் வழி இருக்கும். சில ஈதர்நெட் இணைப்புக்கும் வழி கொடுக்கலாம். மினி யுஎஸ்பி போர்ட் இருக்கும். சிலவற்றில் ஒரு கேமரா (குறைந்தது 1.3 மெகாபிக்சல்) இருக்கலாம். இவற்றில் குரோம் உலாவியின் உதவியுடன் இணையத்தில் உலவலாம். ஆடியோ, வீடியோ கேட்க/பார்க்க வசதி உண்டு. நிச்சயமாக யூட்யூப் பார்க்கமுடியும். எம்பி3 பாடல்களைக் கேட்கமுடியும். கைக்கடக்கமாக இருக்கும் இதில் மின்புத்தகங்கள் படிக்கலாம். பல வண்ணத் திரை. 4-5 கிகாபைட் இடவசதி; 256 மெகாபைட் மெமரி. இதன் வேகம், தமிழ் படிக்கக்கூடிய திறன் ஆகியவற்றில் சந்தேகம். ஏனெனில் ஆண்டிராய்ட் இன்னமும் காம்ப்லெக்ஸ் யூனிகோட் வசதியைக் கொள்ளவில்லை. நிச்சயம் குறைவான விலை சிலேட்டு என்றால் அதன் வேகம் குறைவாகவே இருக்கும்.

ஆனாலும், இன்று இந்தியாவில் இது வெறும் ரூபாய் 7,000-க்குள் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அந்த ஒரு காரணத்துக்காகவே, கம்ப்யூட்டரைவிட இந்தப் பொருளுக்கு அதிக கிராக்கி இருக்கும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு கீழ்நடுத்தரக் குடும்பத்துக்கு இதுவே போதுமானது. ஒன்று ஆர்டர் செய்துள்ளேன். அடுத்த இரண்டு நாள்களில் கைக்குக் கிடைக்கும். சோதனை செய்துவிட்டு எழுதுகிறேன்.

அடுத்த இரண்டு, மூன்று வருடங்களில் இந்தியாவில் இந்தவகை கணினிகள்தான் மேசைக்கணினி, மடிக்கணினி ஆகியவற்றைவிட மிக அதிகமாக விற்கப்போகின்றன.

Thursday, October 14, 2010

கம்ப்யூட்டர் புத்தக மொழிபெயர்ப்பாளர்கள் தேவை

கிழக்கு பதிப்பகம் எளிமையான ஆறு கம்ப்யூட்டர் புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் வேலையில் இறங்கியுள்ளது.
  1. விண்டோஸ் 7
  2. வேர்ட் 2010
  3. எக்ஸல் 2010
  4. எச்.டி.எம்.எல் வகையறா
  5. அவுட்லுக் 2010
  6. ஆக்சஸ் 2010
ஆகியவையே அவை. (இவை கிட்டத்தட்ட டம்மீஸ் தொடர் போன்றவை. கணினி பற்றி அதிகம் தெரியாதவர்கள் பயன்படுத்தக்கூடிய மாதிரியில் உள்ளவை.)

மிக எளிமையான படங்கள் நிறைந்த புத்தகங்களே இவை. ஆனால் இந்த சப்ஜெக்ட் தெரிந்த மொழிபெயர்ப்பாளர்கள்தான் தேவை. மொழிபெயர்ப்புகள் முழுக்க முழுக்க தங்க்லீஷ் முறையில்தான் இருக்கவேண்டும். Copy this file என்பதை ‘இந்த ஃபைலை காப்பி செய்யவும்’ என்றுதான் மொழிபெயர்க்க விரும்புகிறோம். எனவே கருத்துரீதியாக இத்துடன் உடன்படாதவர்கள் தயவுசெய்து என்னை நாலு திட்டு திட்டிவிட்டு, ஒதுங்கிவிடவும். மற்றபடி, எனது மேற்படிக் கருத்துடன் ஒத்துப்போகும் நபர்கள், இந்தத் திட்டத்தில் இணைந்து பணியாற்ற விரும்பினால், vaidehi@nhm.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல் அனுப்பவும்.

ஒவ்வொரு புத்தகமும் சுமார் 260 பக்கங்கள் இருக்கும். ஆனால் ஒவ்வொரு பக்கத்திலும் பெரும்பாலானவை ஸ்க்ரீன் ஷாட் படங்கள்தான். அந்தப் படங்களின் கேப்ஷன் முதலிய சிலவற்றை மட்டுமே தமிழ்ப்படுத்தினால் போதும். மேல் விவரங்கள் உங்கள் மின்னஞ்சல்களைப் பார்த்து.

Friday, October 08, 2010

தஞ்சாவூர் vs கங்கைகொண்ட சோழபுரம் - 3

எது எப்படி இருந்தாலும், தஞ்சாவூரின் கல்வெட்டுகளுக்கு நிகர் அவையேதான். ஒரு இஞ்ச் விடாமல் எழுதித் தள்ளியிருக்கிறார்கள். கங்கை கொண்ட சோழபுரத்திலும் கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் அவற்றின் நேர்த்தி தஞ்சாவூருக்கு அருகில்கூட வருவதில்லை.

தஞ்சையில் காணப்படும் சுவர் கல்வெட்டின் ஒரு பகுதி கீழே - எப்படி நூல் வைத்துச் செய்தாற்போல ஒரு துளி அசங்கல் இல்லை என்று பாருங்கள். நேர்க்கோட்டில் தெளிவான எழுத்துகள்.


கங்கைகொண்ட சோழபுரத்தின் சிற்பங்கள் எல்லாம் பிரமாதம் என்றாலும் ஒரு கங்காதரர் அவ்வளவு அழகாக இல்லை. அதைக் கீழே பார்க்கலாம். கைகள் ஒட்டவைத்தாற்போலவும், முகம் அழகற்று இருப்பதுபோலவும், கையில் பிடித்திருக்கும் ஜடை அவ்வளவு இயல்பாக இல்லாததுபோலவும் உள்ளன. (மகேந்திரனின் திருச்சி கங்காதரரைப் பார்த்தபிறகு வேறு எந்த கங்காதரரும் அருகில்கூட நிற்கமுடியாது என்பது வேறு விஷயம்!)


(இப்போதைக்கு முற்றும்!)

Monday, October 04, 2010

தஞ்சாவூர் vs கங்கைகொண்ட சோழபுரம் - 2

தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள சில சிற்பங்கள், அப்படியே கங்கை கொண்ட சோழபுரத்திலும் காணப்படுகின்றன. இந்திய சிற்பக் கலையில் அடிப்படையிலேயே ஒன்றைப் போல அச்சு அசலாக மற்றொன்று இருக்காது. ஒரே சிற்பி செதுக்கினாலுமே இதுதான் நிலைமை. இந்தக் கோயில்களில் எத்தனை சிற்பிகள் வேலை செய்தனர், யார் எந்தச் சிற்பத்தைச் செதுக்கியது என்ற எந்தத் தகவலுமே நமக்குக் கிட்டவில்லை.

கீழே நீங்கள் பார்ப்பது, ரிஷபாந்திக அர்தநாரி. இடப்பக்கம் உள்ளது தஞ்சை, வலப்பக்கம் கங்கை கொண்ட சோழபுரம்.

     

அடுத்து, பல்லவர்கள் ஆரம்பித்துவைத்த நடராஜரை உலோகத்தால் செய்து உலகப்புகழ் பெற்ற சோழர்கள், அவற்றை எப்படி இந்தக் கோயில்களில் காட்டியுள்ளனர் என்று பார்ப்போம்.

     

தஞ்சையில் சரியாக படம் எடுக்கவிடாமல் ராஜராஜன் விழாக்குழுவினர் மேடை அமைத்துக் கெடுத்துவிட்டனர். (என்னதான் இருந்தாலும் என் படமெடுக்கும் திறனும் என்னிடம் உள்ள மொபைல் போன் கேமராவும் மோசம் என்பதையும் அறிக.)

அடுத்த ஹரிஹரன் வடிவம், இரண்டிலும் .

   

இரண்டிலும் லிங்கோத்பவர்கள் (லிங்கத்துக்குள்ளாக சிவனது உருவம் தோன்றுமாறு...)

   

இரண்டு இடங்களிலும் விஷ்ணு சிற்பங்கள்...

   

இன்னும் பல ஒப்பீடுகளைப் பார்க்கலாம். ஆனால் பொதுவாக கங்கை கொண்ட சோழபுரம் சிற்பங்களில் நேர்த்தி சற்று அதிகமாக இருப்பதுபோல என் பாமரக் கண்களுக்குத் தெரிகின்றன.

(தொடரும்)

Saturday, October 02, 2010

காந்தியின் சத்தியாக்கிரகத்தைப் புரிந்துகொள்ளல்

மற்றொரு காந்தி பிறந்தநாளை நெருங்குகிறோம். அன்றைய தினம் விடுமுறை என்பது பெரும்பாலும் மாணவர்களுக்குக் கொண்டாட்டம் தரும் நிகழ்வு. மற்றபடி அவர் நமக்குச் சுதந்தரம் வாங்கித் தந்தார் என்றும் அவர் நம் தேசத் தந்தை என்றும் அவரது படம் ரூபாய் நோட்டுகளில் உள்ளது என்றும் நாம் அறிவோம்.

காந்தி, சத்தியாக்கிரகம் என்றதோர் ஆயுதத்தைத் தந்தார் என்று படித்திருக்கிறோம். ஆயுதத்தைக் கையில் ஏந்திப் போராடாமல் சத்தியத்தைக் கையில் ஏந்திப் போராடுவதுதான் சத்தியாக்கிரகம்.

இன்று நம்மைச் சுற்றிலும் நடக்கும் பல போராட்டங்களைப் பார்க்கிறோம். கடை அடைப்பு, தடையை மீறி நடத்தப்படும் கூட்டங்கள் அல்லது கண்டன ஊர்வலங்கள், ஒத்துழையாமை, வேலைக்குச் செல்லாமல் இருத்தல் போன்ற பலவும் காந்திய வழியிலிருந்து பெறப்படும் போராட்ட வடிவங்களே. ஆனால் காந்திய வழியிலானவை அல்ல.

சமீபத்தில் நடந்த இரண்டு போராட்டங்கள் மனத்தை மிகவும் பாதித்தன. ராஜஸ்தானில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் சில உயிர்கள் பலியாகின. பின்னர் அரசுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. ஆனால் போன உயிர்கள்? தொடர்ந்து தில்லியிலும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர்; பின்னர் விலக்கிக்கொண்டனர். அங்கும் பல நோயாளிகள் பாதிக்கப்பட்டிருக்கவேண்டும். இவை நியாயமான போராட்ட வடிவங்களா?

காந்திய வழியில் முதலில் போராட்டத்துக்கு அடிப்படையில் சத்திய உணர்வு இருக்கவேண்டும். அடுத்து, பிற அனைத்து சட்டபூர்வமான முறைகளையும் பின்பற்ற வேண்டும். அதாவது கடிதங்கள் எழுதி, விண்ணப்பங்கள் போட்டு, பேச்சுவார்த்தை சாத்தியமா என்று பார்த்து, பேச்சுவார்த்தையில் தன் தரப்பு நியாயத்தை முன்வைத்து, எங்கும், எதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படாவிட்டால் கடைசியாக எடுத்துக்கொள்ளக்கூடிய போராட்டம்தான் சட்ட மறுப்பு, ஒத்துழையாமை, சிறை நிரப்பல் போன்றவை.

ஆனால் அங்கும் காந்தி மிக முக்கியமாக ஒரு கொள்கையைக் கொண்டிருந்தார். போராட்டம், அதில் ஈடுபடும் ஒருவனைப் பாதிக்கலாமே தவிர, அதற்கு வெளியில் உள்ள ஒருவரையும் பாதிக்கக்கூடாது. ஏன், சொல்லப்போனால், யாருக்கு எதிராகப் போராடுகிறோமோ, அந்த எதிரியைக்கூட உடல் அளவில் அல்லது வேறு வடிவில் நம் போராட்டம் பாதிக்கக்கூடாது. அந்த எதிரியின் மனத்தை நம் போராட்டம் அறுத்து, மாறவைக்கவேண்டும்.

இதுதான் காந்தியின் அறவியல். இதனை அவர் செய்தும் காட்டினார். எங்கே? அவரது சத்தியாக்கிரகப் போராட்ட வடிவம் அப்போதுதான் உருவாகிவந்த, இன்னமும் கனிந்திருக்காத தென் ஆப்பிரிக்கக் காலகட்டத்தில்.

அப்போதைய தென் ஆப்பிரிக்க ஆட்சியாளர்கள் இந்தியச் சிறுபான்மையினர்மீது எண்ணற்ற சிரமங்களைச் சட்டபூர்வமாகச் சுமத்தியிருந்தனர். இந்தச் சட்டங்கள் அனைத்துமே இந்தியர்மீதான இன வெறுப்பால் தோன்றியவை. உதாரணமாக இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு மனைவியை தென் ஆப்பிரிக்கா அழைத்துவந்தால் அந்த மணம் சட்டப்படி செல்லுபடியாகாது என்றது ஒரு சட்டம். இந்தியர்கள் அனைவரும் பதிவாளர் அலுவலகத்தில் கைரேகைகளுடன் பதிந்துகொண்டால்தான் அவர்கள் சட்டபூர்வமாக அந்த நாட்டில் வசிக்கலாம் என்றது இன்னொரு சட்டம். ஆனால் ஐரோப்பியர்களுக்கு இந்தத் தேவை இல்லை. நன்கு கற்ற இந்தியர்கள் ஒரு மாகாணத்துக்குள் நுழையவே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றது ஒரு சட்டம். இப்படி எல்லாமே மோசமான சட்டங்கள். இவற்றை விலக்கிக்கொள்ளவேண்டும் என்பதுதான் இந்தியர்களின், காந்தியின் அறவழிப் போராட்டம்.

பல பேச்சுவார்த்தைகள், சில சிறைசெல்லல்கள், பல ஏமாற்றங்கள். ஆனாலும் காந்தியின் தலைமையில் இந்தியர்கள் மனம் தளரவில்லை.

இந்தியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலர், கரும்புத் தோட்டத்தில் வேலை செய்யும் கொத்தடிமைகள். அப்போது கரும்பை வெட்டும் பருவம். வெட்டவில்லை என்றால் பயிரை நட்ட ‘எதிரிகள்’ நஷ்டப்படுவர். எனவே இந்தியத் தொழிலாளர்கள், கரும்பை வெட்டிக் கொடுத்துவிட்டு, வேலை நிறுத்தம் செய்யவந்தனர்.

மாபெரும் போராட்டத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் தென் ஆப்பிரிக்காவின் ஆங்கிலேய ரயில்வே தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி ஒரு வன்முறைப் போராட்டத்தில் இறங்கினர். உடனடியாக காந்தி தம் போராட்டத்தை ஒத்திப்போடுவதாக அறிவித்தார். இந்தியர்கள் போராட்டத்தில் இறங்கியிருந்தால் தென் ஆப்பிரிக்க அரசு கடுமையான சிக்கலைச் சந்தித்திருக்கும்.

இந்த ஒரு முடிவே இந்தியர்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. தென் ஆப்பிரிக்க ஆட்சியாளர் ஜெனரல் ஸ்மட்ஸின் உதவியாளர் ஒருவர் சொன்னாராம்: ‘எனக்கு இந்தியர்களைப் பிடிக்கவில்லை. அவர்களுக்குத் துளியும் உதவி செய்ய நான் விரும்பவில்லை. ஆனால் என்ன செய்வது? எங்களுக்குக் கஷ்டம் வந்திருக்கும் நேரம் நீங்கள் எங்களுக்கு உதவுகிறீர்கள். உங்களை என்ன செய்வது என்றே தெரியவில்லை. நீங்களும் ஆங்கிலேயர்களைப் போல வன்முறையில் இறங்கினால் நான் சந்தோஷப்படுவேன். அப்படியானால் உங்களை எப்படி எதிர்கொள்வது என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்களோ எதிரிக்கு எந்த விதத்திலும் காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று செயல்படுகிறீர்கள். சுயத்தைத் துன்புறுத்தி வெற்றியை அடைகிறீர்கள். அதனால் நாங்கள் செயலற்றுப் போய்விடுகிறோம்.’

இதுதான் காந்திய வழி. இந்திய மருத்துவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய வழி.