Monday, October 31, 2005

ஜெய்ப்பூரில் தீபாவளி பட்டாசு

முதலிரண்டு ஆட்டங்களையும் பார்க்க முடியவில்லை, ஆனால் இந்த ஆட்டத்தில் இரண்டாவது பாதியையாவது தொலைக்காட்சியில் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். டெண்டுல்கர் திரும்பி வந்து விளையாடும் நேரம் அவரது க்ரிப் எப்படி இருக்கிறது, மட்டை கனம் குறைந்துள்ளதா, கால்கள் நகர்த்துவதில் ஏதாவது மாறுதல் உள்ளதா, ஷாட் தேர்ந்தெடுப்பதில் ஏதாவது புதுமை உள்ளதா - இதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

காலையில் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது, எனவே காலையில் இலங்கை பேட்டிங் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அட்டப்பட்டு டாஸில் ஜெயிக்க நான் நினைத்தபடியே நடந்தது. இந்த ஆடுகளத்தில் 275 ரன்கள் நிச்சயம் உண்டு என்றுதான் ரேடியோ வர்ணனையாளர்களும் (ரவி சாஸ்திரியும்) சொன்னார்கள். ஆனால் முதல் முப்பது ஓவரில் இந்தியாவின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. விக்கெட்டுகளைப் பெறாவிட்டாலும் ரன்களை சிறிதும் கொடுக்கவில்லை. இலங்கை 10 ஓவரில் 51/1, 20 ஓவரில் 77/1, 30 ஓவரில் 117/2 என்ற கணக்கில் இருந்தது. 30வது ஓவரின் போது அணியின் ரன் ரேட் வெறும் 3.9!

பொதுவாக, அணிகள் தாம் முதல் 30 ஓவர்களில் எடுத்த எண்ணிக்கையையாவது அடுத்த 20 ஓவர்களில் எடுக்க முனைவார்கள். அப்படிப் பார்த்தால் இலங்கை 250ஐயே தொடாது. இன்றும் ஜெயசூரியா அதிக நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. அகர்கர் வீசிய அற்புதமான ஓவரில் அந்த விக்கெட் விழுந்தது. ஜெயசூரியா ஆக்ரோஷமான தனது ட்ரேட்மார்க் அடியின் மூலம் கவர் திசையில் நான்கு ரன்களைப் பெற்றார். அடுத்த இரண்டு பந்துகளும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து உள்நோக்கி ஸ்விங் ஆகி கால் காப்பில் பட்டது. இரண்டு முறையும் எல்.பி.டபிள்யூ அப்பீல், ஆனால் அவுட் கொடுக்கப்படவில்லை. அடுத்த பந்தும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்தது, ஆனால் அதிகமாக எழும்பவில்லை. ஜெயசூரியா வெட்டி ஆடப் போனார், ஆனால் பந்து உள்விளிம்பில் பட்டு அவர் பவுல்ட் ஆனார். மோசமான ஃபார்மில் இருந்த அட்டபட்டு ஜெய் பிரகாஷ் யாதவின் பந்தில் விக்கெட் கீப்பர் தோனியிடம் பிடிகொடுத்து அவுட்டானார்.

அதன்பிறகு விக்கெட் விழ வெகு நேரம் ஆனது. மிகவும் மெதுவாக, ஆனால் கவனமாக சங்கக்கார-ஜெயவர்தனே ஜோடி ரன்களைச் சேர்த்தது. சில கேட்ச்கள் ஆளரவமற்ற பகுதிகளில் விழுந்தன. திராவிட் ஒரு கேட்ச் விட்டார். ஹர்பஜன் தன் பந்தில் தானே ஒரு கேட்ச் விட்டார் என்று நினைக்கிறேன்.

சரியாக 30 ஓவர்கள் தாண்டியதும் ஜெயவர்தனேதான் முதலில் ஆக்ஸிலரேட்டரை அழுத்தினார். அடுத்த பத்து ஓவர்களில் இலங்கை பெற்ற ரன்கள் 8, 8, 9, 3, 9, 4, 11, 8, 7, 10 = 77! முக்கியமாக அடி வாங்கியவர் முரளி கார்த்திக். கார்த்திக்குக்கு பத்து ஓவர்களையும் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்த திராவிட், சேவாக், டெண்டுல்கர் இருவரையும் பந்து வீச அழைத்ததில் அவர்களும் எக்கச்சக்கமாக ரன்களைக் கொடுத்தனர். கடைசி பத்து ஓவர்களில் இலங்கை பெற்ற ரன்களோ 104! இர்ஃபான் பதான் இந்த நேரத்தில் வீசிய எல்லா ஓவர்களிலும் ரன் மழைதான். ஹர்பஜன் ஒருவருக்குத்தான் ஏற்றுக்கொள்ளக்கூடிய பவுலிங் புள்ளிவிவரம் - 10-0-30-0. ஜெயவர்தனே 71-ல் அவுட்டாக, சங்கக்கார கடைசிவரை அவுட்டாகாமல் இருந்து மஹரூஃபின் துணையுடன் அணியை 298க்குக் கொண்டு சென்றார்.

சங்கக்கார அற்புதமாக ஆடினார். ஆனால் பிரயோஜனமில்லாமல் போய்விட்டது.

இந்தியா மிகவும் மோசமான சேஸிங் அணி. 225 இலக்கு என்றால் கூட அதையும் சொதப்பும். அதுவும் டெண்டுல்கர் சேஸ் நேரத்தில் நின்றாடுவது கிடையாது. சேவாகும் அப்படியே. இன்று என்ன செய்யப்போகிறார்கள்? நான் வீட்டுக்குப் போய்ச்சேர்வதற்கு முன்னமேயே முதல் ஓவரிலேயே டெண்டுல்கர் ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியே சென்ற - விட்டிருந்தால் வைட் - பந்தைத் துரத்திச் சென்று கிட்டத்தட்ட இரண்டாம் ஸ்லிப் முன்னால் கேட்ச் கொடுத்தார். சங்கக்கார அற்புதமான கேட்ச் பிடித்தார். திராவிட் ஒவ்வோர் ஆட்டத்திலும் ஒரு புது 3-ம் எண் ஆட்டக்காரரை அனுப்புகிறார். இம்முறை மஹேந்திர சிங் தோனியை அனுப்பினார்.

காரணம் புரிந்தது. முதல் ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அதனால் இர்ஃபான் பதானை பிஞ்ச் ஹிட்டர் என்ற ரூபத்தில் அனுப்பினார்கள். இந்தியா மீது எந்த அழுத்தமும் இல்லை. அது ஒரு சர்ப்ரைஸ் மூவ். இரண்டாம் ஆட்டம் - யார் வேண்டுமானாலும் இறங்கியிருக்கலாம். ஜெய் பிரகாஷ் யாதவை அனுப்பினார்கள். அவர் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை, தேவையும் இருக்கவில்லை. இன்றோ மாபெரும் இலக்கை அடைய வேண்டுமானால் ரன்களும் வேகமாக வேண்டும், விக்கெட்டையும் இழக்கக் கூடாது. அதற்கு பதானை அனுப்புவதை விட தோனியை அனுப்புவது உசிதம். சேவாக், தோனி இருவருமே அடித்தாட வேண்டும் என்று எதிர்பார்த்தார்களோ என்னவோ...

ஆனால் தோனியின் ஆரம்பத்தைப் பார்த்த சேவாக் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். தோனியின் ஆட்டத் தொடக்கம் வித்தியாசமாக இருந்தது. ஒன்றிரண்டு பந்துகள் தடுத்தாடுவார், பின் ஒரு சிக்ஸர். சமிந்தா வாஸ் வீசிய இரண்டாவது, மூன்றாவது ஓவர்கள் ஒவ்வொன்றிலும் தோனி கவர் திசைக்கு மேல் சிக்ஸ் அடித்திருந்தார். மறு பக்கம் தில்ஹாரா ஃபெர்னாண்டோ நன்றாக வீசினார். அட்டபட்டு வாஸுக்கு பதில் மஹரூஃபைப் பந்து வீச அழைத்தார். தோனி அவரையும் பந்து வீச்சாளர் தலைக்கு மேலாக ஒரு சிக்ஸ் அடித்தார். அதே ஓவரில் சேவாகுக்கு ஒரு நான்கு, தோனிக்கு ஒரு நான்கு. அவ்வளவுதான். எட்டாவது ஓவரில் இந்தியாவின் 50. பத்தாவது ஓவரில் இந்தியா 75/1.

இந்த நிலையில் அட்டபட்டு பவர்பிளே-2ஐ எடுக்கவில்லை. பந்துத் தடுப்பு வியூகத்தைத் தளர்த்தி, முரளிதரனைப் பந்துவீச அழைத்தார். அவரது நோக்கம் என்னவென்றால் தோனி ஏதாவது தப்பு செய்து முரளியிடம் விக்கெட்டை இழப்பார், அப்பொழுது பவர்பிளே-2ஐக் கொண்டுவரலாம் என்பதே. ஆனால் தோனி, சேவாக் இருவருமே முரளிக்கு எதிராக எந்த ரிஸ்க்கையும் எடுக்கவில்லை. பந்துக்கு ஒரு ரன், இரண்டு ரன்கள் என்று தட்டித் தட்டி ரன்கள் பெற்றனர். ஆனால் நிகழ்வுக்கு மாறாக முரளியின் பந்துவீச்சில் சேவாக் எல்.பி.டபிள்யூ ஆனார். தொலைக்காட்சி ரீப்ளேயில் எனக்கு அவ்வளவு திருப்தியில்லை. சேவாகின் துரதிர்ஷ்டம். இந்தப் பந்து லெக் ஸ்டம்பில் விழுந்தது, ஒருவேளை அதற்கு வெளியே கூட விழுந்திருக்கலாம். 99/2, 14.5 ஓவரில். அப்பொழுது தோனி 50 பந்துகளில் 56 ரன்கள் பெற்றிருந்தார், 6x4, 3x6.

அடுத்து அணித்தலைவர் திராவிட் நடுவே வந்தார். தோனி தன் சிக்ஸ் தாகத்தை மறக்கவில்லை. உபுல் சந்தனாவின் அடுத்த ஓவரில் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸ் பறந்தது. என்ன செய்வதென்று தெரியாத நிலையில் அட்டபட்டு பவர்பிளே-2ஐத் தொடங்கினார். மீண்டும் தடுப்பு வியூகம் உள்வட்டத்துக்குள். இப்பொழுது தோனி இன்னமும் இலகுவாக ரன்கள் பெறத் தொடங்கினார். சந்தனாவைப் பின்னிப் பெடலெடுத்தார்... முரளியையும் விட்டுவைக்கவில்லை. சில டென்னிஸ் ஷாட்களும் உண்டு இதில். பல ஷாட்கள் பார்க்கக் கொடூரமாக, அசிங்கமாக இருந்தன. பல அற்புதமாக இருந்தன. ஒரு பந்தை கிட்டத்தட்ட புல் ஷாட் அடிப்பது போல அடித்து லாங் ஆஃப் திசையில் (ஆம்!) நான்கைப் பெற்றார்! பவர்பிளே-2 முடியும்போது - 21 ஓவரில் - இந்தியா 155/2 என்ற எண்ணிக்கையில் இருந்தது. ரன் ரேட் 7.38!

அட்டபட்டு இப்பொழுது பவர்பிளே-3ஐ எடுக்க விரும்பவில்லை. மீண்டும் வியூகத்தைத் தளர்த்தி எப்படியாவது தோனியை அவுட்டாக்கி விடலாம் என்று பார்த்தார். ஆனால் நடக்கவில்லை. 85 பந்துகளில் தனது சதத்தைப் பெற்றார் தோனி. (10x4, 5x6).

அட்டபட்டு, 28வது ஓவரில் மீண்டும் முரளியைப் பந்துவீச்சுக்குக் கொண்டுவந்தார். அத்துடன் பவர்பிளே-3ஐ எடுத்தார். இந்த ஓவரில் திராவிட் மிக மோசமான தவறைச் செய்தார். பந்தின் வேகத்தைக் கணிக்காமல் அதை ஃப்ளிக் செய்யப்போய், முரளிக்கே எளிதான கேட்சைக் கொடுத்தார். இந்தியா 185/3.

இது மோசமான கட்டம். தோனி சதம் அடித்துவிட்டதால் எந்நேரமும் அவுட்டாகி விடுவார் என்று நினைத்தேன். திராவிடும் அவுட்டானதால், இந்தியா நல்ல நிலைமையில் இருந்தாலும் இனிவரும் மாணிக்கங்கள் ஊத்தி மூடிவிடுவார்களோ என்று நினைத்தேன். யுவராஜ் வந்தது முதல் அவ்வளவு நன்றாக விளையாடவில்லை. ஆனால் தோனியோ தன் வேகத்தைக் குறைக்கவேயில்லை. மஹரூஃபை லாங் ஆன் மேல் அடித்து தன் ஆறாவது சிக்ஸரைப் பெற்றார். நான்குகள் எளிதாகவே கிடைத்தன. அடுத்து திலகரத்னே தில்ஷனை சைட் ஸ்க்ரீன் மேல் அடித்து தன் ஏழாவது சிக்ஸைப் பெற்றார். ஆனால் இந்த சிக்ஸ் அடிக்கும் முன்பாக தில்ஷனை இறங்கி வந்து அடிக்கப்போய் தன் கால்களை அதிகமாக அகட்டி வைத்தார். அதனால் கொஞ்சம் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஆனாலும் அடுத்த பந்தில் சிக்ஸ் அடிக்கத் தயங்கவில்லை. ஆனால் அதற்கடுத்து தனக்கு ரன்னர் தேவை என்று கேட்டுக்கொண்டார். சேவாக் ரன்னராக வந்தார். அந்த நிலையில் தோனி 130 ரன்கள் பெற்றிருந்தார். (13x4, 7x6). சரி, இவர் நிலைமை அவ்வளவுதான், சீக்கிரம் அவுட்டாகி விடுவார் என்று நினைத்தேன். இப்பொழுது அவ்வளவு மோசமான நிலைமை இல்லை. 86 ரன்கள்தான் தேவைப்பட்டது.

ஆனால் தோனி அவுட்டாக விரும்பவில்லை! அப்படியும் இப்படியும் நொண்டிக்கொண்டே ஒரு ரன், இரண்டு ரன்கள் எளிதாகப் பெற்றார். கடைசியாக யுவராஜ் மூன்று பவுண்டரிகள் பெற்றார், அதில் இரண்டு வாஸ் வீசிய ஓர் ஓவரில். தோனி சந்தனாவை இரண்டு நான்குகள் அடித்து, சீக்கிரமாக தன் 150ஐ எட்டினார். விரைவில் யுவராஜ் சிங் தில்ஷன் பந்துவீச்சில் அவுட்டானார்.

ஆனால் இப்பொழுது நிலைமை இந்தியாவுக்கு சாதகம். வெறும் 49 ரன்கள் தேவைப்பட்டன. ஏகப்பட்ட ஓவர்கள் பாக்கி. வேணுகோபால ராவ் பேட்டிங் செய்ய வந்தார். நிறையத் தடுமாறினார். தோனியும் மிகவும் அலுப்புற்றிருந்தார். அதனால் அடுத்த சில ஓவர்களில் ரன்கள் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. கடைசியாக வேணுகோபால் தில்ஷன் பந்து வீச்சில் ஒரு சிக்ஸ் அடித்து தான் மாட்டிக்கொண்டிருந்த வலையிலிருந்து மீண்டார். அதன்பின்னர் ரன்கள் கிடைப்பது அவருக்கு எளிதானது.

சந்தனா வீசிய 45வது ஓவரில் தோனி இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். அத்துடன் 175ஐத் தாண்டினார். ஒன்பது சிக்ஸர்கள் இந்திய ரெகார்ட். ஓர் ஓவர் கழித்து மீண்டும் தில்ஷன் பந்து வீச்சில் தன் பத்தாவது சிக்ஸர் மூலம் தோனி ஆட்டத்தை ஜெயித்துக் கொடுத்தார். கடைசி 53 ரன்களை கால்களை நொண்டிக்கொண்டே அடித்தார் என்பது முக்கியம். மொத்தத்தில் 145 பந்துகளில் 183 ரன்கள், 15x4, 10x6.

ஓரிரு முறைகள் தோனி அடித்த பந்துகள் சந்தனா, முரளி ஆகியோரில் கையில் பட்டு - ஆனால் கேட்ச் பிடிக்க வாய்ப்பே இல்லை - எல்லைக்கோட்டைக் கடந்தன. பலமுறை லாங் ஆன், லாங் ஆஃபில் தடுப்பாளர்கள் இருந்தும், அவர்கள் நகர்வதற்கு முன் பந்து எல்லைக்கோட்டைக் கடந்தது. 'காட்டடி' என்று சொல்வார்களே அதுதான். சேவாக் போல விளையாடுகிறார், டெண்டுல்கர் போல அல்ல. அழகான ஷாட் என்று எதையுமே என்னால் சொல்லமுடியவில்லை. எல்லாமே மடார் மடார் என்று பந்து கதறி அழுவதைப் போல அடித்ததுதான். அதனால் ஒன்றும் மோசமில்லை...

எனக்குப் பிடித்தது, தோனி சிறிதும் அவுட்டாக விரும்பாதது. கஷ்டமாக இருக்கும்போதெல்லாம் பந்துக்கு ஒரு ரன் எடுத்து அடுத்தவரை பேட்டிங் செய்ய விட்டார்.

நிச்சயமாக ஒருநாள் போட்டிகளில் தோனி இந்தியாவுக்கு மிகவும் உபயோகமாக இருப்பார். டெஸ்ட் போட்டிகளில்... இப்பொழுதைக்குக் கருத்து ஏதும் சொல்ல முடியாது.

விருதுகள் வழங்கும்போது திடீரென்று ராஜஸ்தான் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் லலித் மோடி தோனிக்கு ரூ. 10 லட்சம் சிறப்புப் பரிசு கொடுத்தார். தோனியின் இன்றைய இன்னிங்ஸுக்கு கோடி கொடுக்கலாம்.

ஸ்கோர்கார்ட்

ஈராக் உணவுக்காக எண்ணெய் ஊழல்

குவைத் மீதான ஆக்ரமிப்புக்குப் பிறகு, அமெரிக்கா, நேச நாடுகள் ஈராக் மீது படையெடுத்து சதாம் ஹுசேனைத் தோற்கடித்தன. அதையடுத்து ஐ.நா சபையால் ஈராக் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஈராக் வெளி நாடுகளுக்கு பெட்ரோல் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டது. பின்னர் ஈராக்கில் உள்ள மக்கள் கஷ்டப்படுவதனால், பெட்ரோலை விற்று, அந்தப் பணத்தை ஓர் எஸ்க்ரோ* கணக்கில் வைத்து அந்தப் பணத்தைக் கொண்டு அத்தியாவசியப் பொருள்களான உணவு, மருந்துகள் ஆகியவற்றை வாங்க ஐ.நா அனுமதி கொடுத்தது. இந்தத் திட்டத்துக்கு oil-for-food திட்டம் என்று பெயர்.

(* எஸ்க்ரோ வங்கிக் கணக்கு என்றால் இடைத்தரகராக ஒரு வங்கி இடம் பெற்றிருக்கும். பெட்ரோல் விற்பனை செய்த பணம் நேராக ஈராக் கைக்குப் போகாது. இந்த எஸ்க்ரோ வங்கிக் கணக்குக்குப் போகும். அதே போல அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கான பணம் இந்த எஸ்க்ரோ கணக்கிலிருந்து நேரடியாகக் கொடுக்கப்படும். அதாவது பணம் சதாம் ஹுசேன் கைக்குப் போனால் அவர் அதை வேறு எதற்காவது - ஆயுதங்கள் வாங்க - செலவு செய்துவிடுவார் என்ற பயம்.)

முதலில் யாருக்கு எண்ணெயை விற்பது, யாரிடமிருந்து உணவு, மருந்து, பிற அத்தியாவசியப் பொருள்களை வாங்குவது என்பதில் ஈராக்கின் ஒப்புதலும் தேவை என்று இருந்தது. இதை வைத்துக்கொண்டு தனக்கு வேண்டிய, பிடித்த நாடுகளின் நிறுவனங்களை எண்ணெய் விற்பதற்கும், பொருள்கள் வாங்குவதற்கும் ஈராக் தேர்ந்தெடுத்தது. அதில் தவறொன்றும் இல்லை.

ஆனால் இதிலும் ஊழல் செய்ய ஒரு வழியைக் கண்டுபிடித்தார் சதாம் ஹுசேன். எண்ணெய் எடுப்பதற்கான ஒப்பந்தம் வழங்க வேண்டுமானால் அதற்கு சதாம் ஹுசேனுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்... பொருள்கள் வழங்குவதில் அதிகப் பணம் கொடுக்கப்பட்டு, அதில் ஒரு சதவிகிதம் மீண்டும் லஞ்சமாக சதாம் ஹுசேனுக்கு வந்து சேரும். இந்த ஊழல்களில் உலகம் முழுவதிலும் உள்ள கிட்டத்தட்ட 2,200 நிறுவனங்கள் ஈடுபட்டிருந்ததாகவும் அவர்கள் சதாம் ஹுசேனுக்கு 1.8 பில்லியன் டாலர்கள் வரை லஞ்சமாகக் கொடுத்ததாகவும் ஐ.நா சபையின் விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.

இந்த ஊழலில் ஐ.நா செக்ரடரி ஜெனரல் கோஃபி அன்னானின் மகன் கோஜோ அன்னான் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் வந்தன. அதன் முடிவு இன்னமும் முழுதாகத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது இந்தியாவைப் பொருத்தவரை பிரச்னை என்னவென்றால் எண்ணெய் எடுக்க இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேர்களுக்கு சில பாரல்கள் ஒதுக்கப்பட்டிருந்ததுதான். இந்த நான்கு பேர்கள் யார்? ரிலையன்ஸ் பெட்ரோலியம், விட்டுவிடுவோம். மற்ற மூன்று பேர்? இந்தியாவின் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், காங்கிரஸ் கட்சி, பீம் சிங் என்பவர் (இவர் காஷ்மீரின் நேஷனல் பாந்தர்ஸ் கட்சியின் தலைவராக இருக்கலாம், ஐ.நா அறிக்கை இவரது பின்னணியை விவரமாகத் தெரிவிக்கவில்லை.)

நட்வர் சிங், காங்கிரஸ் கட்சி இரண்டுக்கும் ஏன் எண்ணெய் பாரல்கள் ஒதுக்கப்பட்டன? ஐ.நா விசாரணைக் குழுத் தலைவர் அமெரிக்காவின் வோல்க்கர் என்பவர் வேண்டுமென்றே இவர்களது பெயர்களைச் சேர்த்தாரா என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளது. வோல்க்கர் அறிக்கை, நட்வர் சிங், காங்கிரஸ் கட்சி இருவருக்கும் ஒதுக்கப்பட்டிருந்த எண்ணெயை ஸ்விட்சர்லாந்தின் மேஸ்ஃபீல்ட் AG என்னும் நிறுவனம் எடுத்ததாகக் குறிப்பிடுகிறது. நட்வர் சிங்குக்கு 4 மில்லியன் பாரல்கள் ஒதுக்கப்பட்டதாகவும், அதில் 1.936 மில்லியன் பாரல்களை மேஸ்ஃபீல்ட் எடுத்ததாகவும், காங்கிரஸ் கட்சிக்கு 4 மில்லியன் பாரல்கள் ஒதுக்கப்பட்டதாகவும், அதில் 1.001 மில்லியன் பாரல்களை மேஸ்ஃபீல்ட் எடுத்ததாகவும் இந்த அறிக்கையின் "Table 3: Oil Beneficiary Table" குறிப்பிடுகிறது.

பீம் சிங்குக்கு ஒதுக்கப்பட்ட எண்ணெயை யாருமே எடுக்கவில்லை என்றும் இந்தப் பட்டியலில் தகவல் உள்ளது.

நட்வர் சிங், காங்கிரஸ் இருவருமே இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

எதிர்பார்த்தது போலவே பாஜக, நட்வர் சிங் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று சொல்லியுள்ளது. ஆனால் இதுவரை வந்த அறிக்கையின் மூலம் நட்வர் சிங்கின் குற்றம் ருசுவாகவில்லை. அதனால் மேற்கொண்டு தகவல்கள் வரும் வரையில் நட்வர் சிங் பதவியைத் தொடரவேண்டும். மேஸ்ஃபீல்ட் AG உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும். இந்திய நாடாளுமன்றம் மேஸ்ஃபீல்ட் நிறுவனத்தின் தலைவரை சத்தியப் பிரமாணம் எடுக்கவைத்து விசாரிக்க வேண்டும். அதன்படிதான் நட்வர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் (தேவையென்றால்). அதே போல காங்கிரஸ் கட்சி... இது அபத்தமாகத் தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு என்று எண்ணெயை ஒதுக்கவேண்டியதன் காரணம் என்ன?

உடனடியாக, இது அமெரிக்க சி.ஐ.ஏ சதி என்றெல்லாம் பேச்சுகள் வரத் தொடங்கியுள்ளன. இது தொடக்கம்தான், நிறைய தகவல்கள் மேற்கொண்டு வெளிவர வேண்டும்.

வோல்க்கர் அறிக்கையின் முழு நகல் இந்தத் தளத்தில் கிடைக்கிறது, நிறைய பி.டி.எஃப் கோப்புகளாக... டேபிள் 3-இல்தான் (Table III - Summary of Oil Sales by Non-Contractual Beneficiary) நட்வர் சிங், காங்கிரஸ் கட்சி, பீம் சிங் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தி ஹிந்துவின் முதல் செய்தியறிக்கை
நட்வர் சிங் பதவி விலக வேண்டும் என்கிறது பாஜக, ஐக்கிய ஜனதா தளம்
நட்வர் சிங் மறுப்பு - ஃப்ராங்ஃபர்ட்டிலிருந்து
காங்கிரஸ் மறுப்பு
பீம் சிங்கின் மறுப்பு
தி ஹிந்துவில் நட்வர் சிங்கின் மறுப்பு, என்.ராமுடன் தொலைபேசி வழியாக

Saturday, October 29, 2005

மொஹாலி ஆட்டம்

மொஹாலியில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெகு சுலபமாக வெற்றி பெற்றுள்ளது.

திடீரென இலங்கையின் ஆட்டத்தில் ஒரு சுணக்கம். பேட்டிங், பவுலிங் இரண்டுமே சரியில்லை. அத்துடன் அதிர்ஷ்டமும் இல்லை. திராவிட் மீண்டும் டாஸில் ஜெயித்து, இம்முறை பந்து வீசத் தீர்மானித்தார். இது பகல்-இரவு ஆட்டம். மொஹாலி ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சற்றே ஆதரவானது. ஆனாலும் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாகப் பந்து வீசினால்தான் பிரயோஜனம். ஆனால் இந்திய அணித் தேர்வில் சிறிது குழப்பம். கேரளாவின் ஸ்ரீசந்த் இந்த ஆட்டத்தில் விளையாடுவார் என்றே எதிர்பார்த்தேன். அவர் சூப்பர்-சப் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஹர்பஜன், முரளி கார்த்திக் இருவரும் அணியில் இருந்தனர்.

ஸ்ரீசந்துக்கான தேவை ஏதும் இருக்கவில்லை. இர்ஃபான் பதான் அற்புதமாகப் பந்து வீசினார். முதல் ஓவரிலேயே ஆபத்தான ஜெயசூரியா ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்தை வெட்டி ஆட, பந்து வானில் பறந்து டீப் தர்ட்மேனில் நின்றுகொண்டிருந்த சேவாகிடம் கேட்ச் ஆனது. ஜெயசூரியா ரன்கள் ஏதும் பெறவில்லை. கேப்டன் அட்டபட்டு சிறிது தடுமாற்றத்துடன் விளையாடி, அகர்கரின் அவுட்ஸ்விங் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். ஜயவர்தனே-சங்கக்கார ஜோடி நிலைமையைச் சரி செய்திருக்கலாம். ஆனால் ஜயவர்தனே கால் திசையில் வந்த ஒரு பந்தை ஃப்ளிக் செய்யப் போய், ஸ்கொயர் லெக்கில் நின்ற வேணுகோபால ராவிடம் எளிதான கேட்ச் கொடுத்து அவுட்டானார். பதானுக்கு இரண்டாவது விக்கெட்.

சங்கக்கார தடையேதும் இன்றி சில நல்ல ஷாட்களை அடித்தார். ஆனால் பதானை அரங்கை விட்டுத் தூக்கி அடிக்கப் போய், மிட் ஆனுக்கு எளிமையான கேட்சைக் கொடுத்தார். டெண்டுல்கர் பிடித்தார். அடுத்த பந்திலேயே ஓர் இன்ஸ்விங்கிங் யார்க்கர் - புதிதாக உள்ளே வந்த திலகரத்னே தில்ஷனுக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படியாக 13வது ஓவரில் 54/5 என்ற நிலையில் இருந்தது இலங்கை.

பதான் நன்றாகவே பந்து வீசினார். முக்கியமாக அவர் எடுத்த நான்காவது விக்கெட். அவருக்குக் கிடைத்த மன்ற மூன்று விக்கெட்டுகளுமே ஓசி விக்கெட்டுகள் வகையைச் சார்ந்தவை. அகர்கர் எடுத்தது ஒரு நல்ல விக்கெட். ஆக ஐந்தில் இரண்டுதான் நல்ல பந்து வீச்சினால் கிடைத்தது. எனவே அணியின் மோசமான நிலைக்கு முன்னணி மட்டையாளர்களின் பொறுப்பற்ற ஆட்டமே காரணம். இந்நிலையிலிருந்து மீள்வது கடினம், வெகு சில அணிகளால் மட்டுமே அது முடியும்.

திராவிட் ஐந்தாவது பவுலரான ஜெய் பிரகாஷ் யாதவையும் ஹர்பஜன் சிங்கையும் பந்துவீச்சுக்குக் கொண்டுவந்தார். யாதவ் ரன்கள் ஏதும் தராமல் பந்து வீசினார். ஹர்பஜன் தன் இரண்டாவது ஓவரிலேயே ஆர்னால்டை அவுட் செய்தார். மிட்விக்கெட் திசையை நோக்கி பந்தின் ஸ்பின்னுக்கு எதிராக ஷாட் விளையாடினார் ஆர்னால்ட். பந்து விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப் திராவிட் கையில் கேட்ச் ஆனது. 71/6. தேவையே இல்லாத ஒரு ரன் அவுட் மூலம் வாஸ் ஆட்டத்தை இழந்தார். 80/7.

மிகவும் மெதுவாக ஊர்ந்து ரன்கள் பெற்ற இலங்கை யாதவின் ஓர் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை - மஹரூஃப், சோய்ஸா - இழந்தனர். முரளிதரன் வந்து கொஞ்சம் பேட்டைச் சுழற்றி மூன்று பவுண்டரிகள் அடித்தார். பின் அவரும் ஹர்பஜன் சிங்கின் ஓர் ஆஃப் பிரேக்கில் ஏமாந்து அவுட்டானார். 122 ஆல் அவுட்.

"ரோடு சரியில்ல, என்னோட கார் நாலு தடவ பம்ப்பர் மாத்த வேண்டியிருந்துச்சு, எங்கப் பாத்தாலும் ஏழைங்க, கரண்டு இல்ல, தண்ணிப் பிரச்னை... ஏன் இந்த அரசாங்கம் ஒண்ணுமே செய்ய மாட்டேங்கறாங்க..."

"அடச்சீ வாய மூடு, நீ ஒன்னோட வருமான வரிய ஒழுங்கா கட்டினியா?"

(பயப்படாதீங்க, ரேடியோல நடு நடுவுல வந்த விளம்பரம்... அதனால இன்னிங்ஸ் மாறரப்ப நம்ம பதிவுலயும் அந்த விளம்பரத்தப் போட்டேன்.)

123 ரன்கள் அடிப்பது மிகச்சாதாரண விஷயம். சேவாகும் டெண்டுல்கரும் ஒரு மார்க்கமாகத்தான் வந்தனர். சேவாக் நான்காவது ஓவரில், சோய்ஸாவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து 4 (புல், மிட்விக்கெட்), 6 (ஹூக், ஃபைன் லெக்), 4 (கட், பேக்வர்ட் பாயிண்ட்) என்று அடித்தார். அடுத்த வாஸ் ஓவரில் டெண்டுல்கர் 4 (ஆன் டிரைவ், மிட்விக்கெட்), 4 (கவர் டிரைவ்), 4 (பேடில் ஸ்வீப், ஃபைன் லெக்) என்று தன் திறமையைக் காட்டினார். முரளிதரன் பந்துவீச வந்ததும் முதலிரண்டு பந்துகளில் டெண்டுல்கர் அனாயாசமாக நான்குகளை அடித்தார். முதல் பந்து தூக்கி எறியப்பட்டது, இறங்கி வந்து மிட் ஆன் தலைக்கு மேலாக லாஃப்ட் செய்தார். அடுத்த பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து தூஸ்ரா - ஸ்பின் ஆகாமல் - நேராகச் சென்றது, அதை கவர் திசையில் அடித்தாடினார். மறு பக்கம் சேவாக் சோய்ஸாவைத் துவம்சம் செய்ய ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் குவிந்தன. பத்தாவது ஓவரில் இந்தியா 80 ரன்கள் இருக்கும் நிலையில் சேவாக் மஹரூஃப் பந்தில் பந்து வீச்சாளரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அத்துடன் உணவு இடைவேளை.

இடைவேளைக்குப் பிறகு இந்தியா ஜெய் பிரகாஷ் யாதவை அனுப்பியது. அவர் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் டெண்டுல்கர் - பழைய டெண்டுல்கர் - முரளி, மஹரூஃப் இருவரையும் நான்குகள் அடித்து தன் அரை சதத்தைப் பெற்றார். அதற்குப் பின்னும் தொடர்ந்து ரன்களைச் சேர்த்தார். யாதவ் முரளியின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனதும் திராவிட் பேட்டிங் செய்ய வந்தார். நான்கைந்து ஓவர்கள் அதிகமாயின, ஆனாலும் 21வது ஓவரில் இந்தியா வெற்றி இலக்கை அடைந்தது. உணவு இடைவேளைக்கு முந்தைய வேகத்தில் சென்றிருந்தால் 16 ஓவர்களில் முடித்திருக்க வேண்டியது.

டெண்டுல்கர் ஆட்டம் ஒன்றுதான் பார்வையாளர்களுக்கு காசுக்குத் தீனி போட்டது.

மூன்றாவது ஆட்டத்திலிருந்தாவது இலங்கை அணியின் தரம் உயரும் என்று எதிர்பார்ப்போம்.

மற்ற செய்தியில் அடுத்த மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் கங்குலி கிடையாது என்று முடிவாகி உள்ளது. நல்ல செய்தி.

ஸ்கோர்கார்ட்

ஷோயப் "Show Pony" அக்தர்

கடந்த நான்கைந்து நாள்களாக நடந்து வரும் விஷயம் இது. 'பொசுக்'கென்று போய்விடும் என்பதால் எழுதவில்லை. ஆனால் பெரிதாவது போலத்தான் தெரிகிறது.

ESPN-Star Sports சானலில் Sportscentre என்னும் விளையாட்டுச் செய்தி மடல் வருகிறது. அதில் ஷோயப் அக்தரைப் பற்றிக் குறிப்பிடும்போது "நாய் வாலை நிமிர்த்த முடியாது, அதைப்போல ஷோயப் அக்தரும் திருந்த மாட்டார்" என்பதாகச் செய்தி வாசிப்பவர் குறிப்பிட்டாராம்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் ஒழுங்கீனம் உலகறிந்தது. அவர், தான் ஓர் அணிக்கு ஆடுவதே, அந்த அணிக்குப் பெருமை சேர்ப்பது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் அணி ஏற்பாடு செய்திருக்கும் பயிற்சி முகாம்களுக்கு சரியான நேரத்தில் வருவதில்லை. சர்வதெச ஆட்டங்கள் நடக்கும்போதும் கூட சரியாக ஈடுபடமாட்டார். மனதிருந்தால் வந்து பந்துவீசி விக்கெட்டுகளை எடுப்பார். சில சமயம் கோபித்துக்கொண்டு காலில் நரம்பு இழுத்துக்கொண்டது என்று சொல்லிவிட்டு டிரெஸ்ஸிங் ரூம் போய் உட்கார்ந்து கொள்வார். இவர் இதுவரை போட்டிருக்கும் சண்டைகள் உலகறிந்தது. பிடிவாதமும் முரட்டுத்தனமும் நிரம்பிய இவர் ஓர் அணிக்கு லாபம் அல்ல, நஷ்டம். பாகிஸ்தான் அணி ஏன் இன்னமும் இவரைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.

மேற்படி ESPN சம்பவம் நடக்கக் காரணம் ஷோயப், பாகிஸ்தான் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமுக்கு சரியான நேரத்துக்கு வராமல் போனதே.

ஆனால், ஷோயப் இப்பொழுது திடீரென்று ESPN மீது வழக்கு தொடுப்பேன் என்கிறார். தன்னை 'நாய்' என்று அந்த சானல் சொன்னதாகவும், அது தன்னை அவமானப்படுத்தியது போலாகும் என்றும், இதனால் தான் மான நஷ்ட வழக்கு போடப்போவதாகவும் சொல்கிறார்.

மேலும் இதில் குட்டையைக் குழப்ப, இதனால் இந்தியா-பாகிஸ்தான் உறவுக்குக் குந்தகம் வரும் என்று வேறு முழக்கம். 'நாய்வாலை நிமிர்த்த முடியாது' என்னும் சொலவடை இந்தியா பகுதிகளில் பிரசித்தம். இதன்மூலம் எதிராளி 'நாய்' என்று யாரும் சொல்வதில்லை. எதிராளியின் குணத்தைப் பற்றி மட்டும்தான் கருத்து சொல்லப்படுகிறது. ஆங்கிலத்தில் 'incorrigible' என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். "இந்தாளு திருந்தவே மாட்டான்யா" என்று சொல்வோம் அல்லவா, அதுதான்.

ஒரு நியாயமான வக்கீல், அக்தரை பணத்தை வீணடிக்காமல் இருக்கச் சொல்வார்.

Friday, October 28, 2005

செம்மொழி பஜனை

தமிழை செம்மொழி என்று அறிவித்து ஒரு வருடத்துக்குப் பிறகு நேற்று நடந்த கேபினெட் கூட்டத்தில் சமஸ்கிருதத்தையும் செம்மொழி என்று 'அதிகாரபூர்வமாக' அறிவித்துள்ளனர் - என்று இன்று காலை செய்தித்தாளில் படித்தேன்.

இனிமேல் சமஸ்கிருதத்துக்கும் அதிகமான அளவு பணம் ஒதுக்கப்படுமாம்!

ஆனால் சென்ற வருடம் தமிழ் செம்மொழி கோரிக்கை முன்வைக்கப்படும்போது சமஸ்கிருதம் அளவுக்குப் பணம் தமிழுக்கும் ஒதுக்கப்படவேண்டும் என்றுதானே ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது? ஆனால் இப்பொழுது சமஸ்கிருதத்துக்கு இன்னமும் அதிகப்பணம் என்றால் என்ன அர்த்தம்?

மணவை முஸ்தபா, தமிழ் செம்மொழிப் பட்டியலில் எங்கேயோ தவறான இடத்தில் இடம் பெற்றுள்ளது என்பது போல தினமணியில் தொடர்ந்து கட்டுரை எழுதினார். அதற்கு பதில் சொல்லும் விதத்தில் திமுக அமைச்சர் ராஜா ஒரு கட்டுரை எழுதினார்.

முஸ்தபாவின் கருத்து என்னவென்றால் ஏற்கெனவே மத்திய அரசிடம் செம்மொழிப் பட்டியல் ஒன்று உள்ளது, அதில் சமஸ்கிருதம், பாரசீகம், அரபி என்னும் மூன்று மொழிகள் உள்ளன. ஆனால் சென்ற வருடம் தமிழைச் செம்மொழியாக்கியபோது தனியாக ஒரு பட்டியல் உருவாக்கப்பட்டு அதில் தமிழ் மட்டும் இருந்தது. அத்துடன் செம்மொழிக்கான தகுதிகளுள் ஒன்றாக அந்த நிலையில் ஏற்கப்பட்டது - ஒரு மொழி 1,000 வருடங்கள் புராதனமானது என்றாலே போதும் என்பது.

இதற்கு பதில் அளித்த ராஜா, 'இதுவரையில் மத்திய அரசு எந்தப் பட்டியலையும் வைத்திருக்கவில்லை. இப்பொழுதுதான் புதிதாக ஒரு பட்டியலை உருவாக்கி முதலில் தமிழை அங்கு வைத்தது. இனிதான் சமஸ்கிருதம் முதல் பிற மொழிகளும் இந்தச் செம்மொழிப் பட்டியலில் வரமுடியும்' என்றார்.

நேற்றைய செய்தியைப் பார்த்தால் அரசு அளவில் ராஜா சொன்னது சரிதான் என்று ஆகிறது. ஆனால் முஸ்தபா சொல்வதைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. அத்துடன் முஸ்தபா கேட்டுக்கொண்டதைப் போலவே கருணாநிதி தலையீட்டால் 1,000 வருடம் என்பது 1,500-2,000 வருடம் என்ற கணக்காக மாறியுள்ளது.

இதெல்லாம் கிடக்கட்டும். தமிழ் செம்மொழியானதும் அதன் வளர்ச்சிக்காக மைய அரசு எத்தனை ரூபாய்கள் ஒதுக்கியுள்ளது, அந்தப் பணம் எவ்வாறு செலவழிக்கப்பட்டிருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா?

செம்மொழி பற்றிய என் முந்தைய பதிவுகள் (காலவரிசைப்படுத்தப்பட்டது)

தமிழ் இனி வரும் நாட்களில் செம்மொழியாகும்
தமிழ் செம்மொழியானால்?
செம்மொழி தமிழ், அடுத்து செம்மொழி கன்னடம்,
மணவை முஸ்தஃபா நேர்காணல்

சென்னை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறது

காலையில் அலுவலகம் வந்தால் தெருவில் ஒரு மரம் சாய்ந்து விழுந்திருந்தது. அந்தச் சிறிய சாலை முழுவதுமாக அடைபட்டிருந்தது. ஆனால் வீடுகளுக்கு எந்தச் சேதமும் இல்லை.

விழுந்த மரம்...


இரவு விழுந்திருக்க வேண்டும். காலையில் இரண்டு காவல்துறையினர் வந்தனர். பின் கார்பொரேஷன் தொழிலாளி ஒருவர் கையில் அரிவாளுடன் வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக மரத்தை வெட்டத் தொடங்கியுள்ளார்.

வெட்டப்படுகிறது...


கார்பொரேஷனிடம் இருக்கும் power saw அனைத்தும் பிற இடங்களில் வேலையாக இருக்கும் போல. எங்காவது வாடகைக்கு 'பவர் சா' கிடைக்குமா என்று தேடுகிறோம் இப்பொழுது...

மழை ஓய்ந்தது? புயல் அடிக்கவில்லை?

இன்று காலை பார்க்கும்போது மழை சுத்தமாக நின்றிருந்தது. தெருவில் நேற்று இரவே தண்ணீர் வடிந்திருந்தது. மரங்கள் எல்லாம் பத்திரமாக உள்ளன. புயல் அடிக்கவில்லையா? அல்லது சென்னையில் அதனால் சேதம் எதுவுமில்லையா? தெரியவில்லை. வீட்டில் ஒரு phase மின்சாரம் இல்லை. தொலைக்காட்சி இல்லை.

வானம் நிர்மலமாக உள்ளது. இன்று மழை இருக்காது என்று தோன்றுகிறது.

இன்று சென்னை மீண்டும் வேலை செய்யத் தொடங்கும். பள்ளிகள் இருக்குமா என்று தெரியவில்லை. அலுவலகங்கள் இயங்கும். தெருக்களில் விழுந்த மரங்களை அகற்ற இன்று முழுவதும் ஆகலாம்.

Thursday, October 27, 2005

மழை, புயல் நிலவரம்

லாயிட்ஸ் ரோட் / அவ்வை சண்முகம் சாலை


நாளைக் காலை சென்னைக்கும் ஓங்கோலுக்கும் இடையே புயல் கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்ப்பு. சென்னையில் இன்று காலை மட்டும் 24 செ.மீ மழை பதிவானதாம்.

காலை காரை எடுத்துக்கொண்டு அலுவலகம் வரை சென்றதில் காருக்குள் தண்ணீர் புகுந்துகொண்டது. அந்த அளவுக்குத் தெருவில் தண்ணீர். எல்லா சுரங்கப் பாதைகளும் (sub-ways) தண்ணீரில் மூழ்கியுள்ளன. மதியம் தெருவில் தேங்கிய நீர் சற்றே வடிந்தது. ஆனால் இன்று பல இடங்களில் மின்சாரத்தை வெட்டியுள்ளனர். மின்கம்பிகள் தண்ணீரில் விழுந்ததால் மின்சாரம் தாக்கி சிலர் இறந்துபோனதாக SMS செய்திகள் வரத்தொடங்கின. கோபாலபுரத்தில் மதியம் 5 மணிநேரம் மின்சார வெட்டு. கடந்த சில மணிகளாக மின்சாரம் உண்டு. ஆனால் சென்னைப் புறநகர் பல இடங்களிலும் மின்சாரம் இல்லை என்று நண்பர்கள் சொன்னார்கள்.

சென்னை விமான நிலையம் இன்று வேலை செய்யவில்லை. சென்னை வரவேண்டிய சர்வதேச விமானங்கள் பெங்களூர் திருப்பிவிடப்பட்டன.

காலையின் சென்னை மாநகர கார்பொரேஷன் கமிஷனர் விஜயகுமார் ரேடியோவில் பேசும்போது உளறிக்கொட்டினார். எல்லா அரசு ஊழியர்களையும் பணிக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். இரண்டு மூன்று மணிநேரத்தில் தண்ணீர் தேங்கலை சரிசெய்து விடுவோம் என்றார். அப்பொழுது மழை கடுமையாகப் பெய்து கொண்டிருந்தது! (சென்னைக்கு மேயர் கிடையாது. துணை மேயர் ஆள் எங்கோ ஒளிந்துகொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் விண்ணப்பித்துள்ளார்! கார்பொரேஷன் ரிப்பன் கட்டடம் இருக்கும் இடத்தில் தண்ணீர்க்குளம்) எங்கும் ரயில், பஸ் ஓடவில்லை. சில பஸ்கள் மட்டும்தான் ஓடின. பல தெருக்களில் பெரும் மரங்கள் விழுந்து போக்குவரத்தைத் தடை செய்துள்ளன.

எங்கள் தெருவில் தண்ணீர் முழுவதுமாக வடிந்து இப்பொழுது மீண்டும் தேங்க ஆரம்பித்துள்ளது. காற்று அதிகமாக இல்லை, ஆனால் இரவு புயல் காற்று அடிக்கலாம்.

சென்னையில் கடும் மழை

லாயிட்ஸ் ரோட் / அவ்வை சண்முகம் சாலை


கடந்த சில நாள்களாகவே கடும் மழைதான். நேற்று இரவு முதல் மழை அதிகம். தெருக்கள் (கோபாலபுரம், ராயப்பேட்டை, மயிலாப்பூர்) முழங்கால் முதல் இடுப்பளவு தண்ணீரில். தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் எல்லாவற்றுக்கும் இன்று விடுமுறை.

நான் இருக்கும் இடத்தில் (கோபாலபுரம்) மின்சாரம், கம்பித் தொலைபேசி (ஏர்டெல்), இணையம் (டிஷ்நெட் டி.எஸ்.எல்), மொபைல் (ஹட்ச்) எல்லாமே நன்றாக வேலை செய்கின்றன.

இன்று பல நிறுவனங்களும் விடுமுறை அளித்துள்ளனர். இது மும்பை மழை அளவுக்கு இல்லை என்றாலும் இயல்பு வாழ்க்கை வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து நிறையவே பாதிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

Wednesday, October 26, 2005

நாகபுரி ஆட்டம்

தினமணி நாக்பூரை விடாமல் நாகபுரி என்றுதான் குறிப்பிடும். இனி நானும் அப்படியே.

வெகு நாள்களுக்குப் பிறகு உருப்படியான கிரிக்கெட் இந்தியாவிடமிருந்து. கங்குலியை அணியை விட்டுத் தூக்கியதுமே அணிக்கு சந்தோஷம் வந்தது போல. டெண்டுல்கர் மீண்டும் முழுமையாகத் திரும்பி வந்திருக்கிறார் என்று தெரிந்ததனாலா? இல்லை, திராவிட்/சாப்பல் கூட்டணியில் அணிக்கு ஏறுமுகம்தான் என்று தோன்றிய காரணமா? தெரியவில்லை.

அத்துடன் ஆடுகளம் முதலில் பேட்டிங்குக்கு சாதகமாகவும், பின் சுழல்பந்துக்கு சாதகமாக இருந்ததும், திராவிட் டாஸில் ஜெயித்ததும் ஒரு காரணம்.

டெண்டுல்கரை சேவாகுடன் பேட்டிங்கைத் தொடங்க அனுப்பியது ஒரு காரணம் (கங்குலி இதைச் செய்திருக்க மாட்டார்?). இர்ஃபான் பதானை மூன்றாவதாக அனுப்பியது ஒரு காரணம் என்று பலரும் சொல்கிறார்கள். அது அவ்வளவு பெரிய விஷயமா என்று தெரியவில்லை. சேலஞ்சர் கோப்பையின்போது பதானை தொடக்க ஆட்டக்காரராக அனுப்பினார் சாப்பல் என்கிறார்கள். பிஞ்ச் ஹிட்டர் என்று யாராவது ஒருவரை அனுப்புவது வழமையான விஷயம்தான். ஆனால் இப்பொழுது பவர்பிளே 1, 2, 3 என்று இருக்கும்போது இரண்டு பிஞ்ச் ஹிட்டர்களைக் கூட அனுப்பலாம்.

இந்த ஆட்டத்தைப் பார்க்கவில்லை. கேட்டேன். ஆல் இந்தியா ரேடியோ கமெண்டரிதான் என்றாலும் அவ்வளவு மோசமில்லை. 'ये बी.एस.एन.एल चौका ... Connecting India!' என்று கத்திக் கத்தி கழுத்தறுத்தார்கள். "The ball is in the air and a fielder is running towards it...." என்று கத்தி, இதயத் துடிப்பை சற்றே நிறுத்தி, பின் "And that's a six" என்றார்கள். காலையில் நிறையவே சிக்சர்கள் இருந்தன. டெண்டுல்கர் தில்ஹாரா ஃபெர்னாண்டோ பந்துவீச்சில் அனாயாசமாக அடித்து ஆரம்பித்து வைக்க, அடுத்து பதான் நான்கு சிக்சர்கள் அடித்தார். பதான் அடித்த முதல் ரன்களே வாஸ் பந்தில் ஒரு சிக்சர். பின் தில்ஷன் போட்ட ஆஃப் ஸ்பின் பந்தில் ஒன்று, உபுல் சந்தனாவின் லெக் ஸ்பின்னில் இரண்டு. டெண்டுல்கரும் சந்தனா பந்தில் இன்னுமொரு சிக்ஸ் அடித்தார். மஹேந்திர சிங் தோனி இரண்டு சிக்சர்கள். எப்பொழுதும் சாதுவாக விளையாடும் திராவிட் கூட வாஸ் பந்துவீச்சில் ஓர் இன்ஸைட் அவுட் ஷாட் சிக்சர் அடித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஆக ஒன்பது முறை ஆல் இந்தியா ரேடியோ பயமுறுத்தியது.

டெண்டுல்கரும் பதானும் மிகச் சுலபமாகவே ரன்கள் சேர்த்தனர். முதலில் ஓவருக்கு ஆறு ரன்களுக்கு மேல் வந்தாலும் ரன் ரேட் ஆறுக்குக் கீழே போகத்தொடங்கியது. ஆனால் ஸ்பின்னர்கள் வந்ததும் ரன் ரேட் எகிறி - பதான் முழுப்பொறுப்பு - 6.5 என்ற அளவிலேயே இருந்தது. முரளிதரன் லேசுப்பட்ட ஆசாமி அல்ல என்றாலும் நேற்றைய ஆட்டத்தில் டெண்டுல்கர் அவரை நன்றாகவே கவனித்துக்கொண்டார். 'பேடில் ஸ்வீப்' வசமாகக் கிடைத்தது. பதான் தில்ஷன், சந்தனா போன்றவர்களை அடித்து நிமிர்த்தி விட்டார். சந்தனாவின் முதலிரண்டு பந்துகள் 4, 6. இதுநாள் வரையில் முரளியும் கூட்டாளி ஸ்பின்னர்களும் எதிராளிகளை ரன்கள் எடுக்கவிடாமல் நெருக்குவதில் சமர்த்தர்களாக இருந்தார்கள். நேற்று கூட்டாளிகள் தடுமாறியதால் முரளியால் நெருக்க முடியவில்லை. ஜயசூரியா பந்து வீசவில்லை. அவர் பேட்டிங் பிடிப்பதே சந்தேகமாக இருந்து இந்த ஆட்டத்தை ஆட வந்திருந்தார்.

ஆனாலும் பதான்-டெண்டுல்கர் ஜோடி அவசரகதியில் ஆளுக்கொரு சதம் அடிக்க வாய்ப்பிருந்தும் விட்டுவிட்டனர். இரண்டுமே எளிதான, தேவையற்ற இழப்புகள். டெண்டுல்கரின் ஆட்டத்தில் பழைய துள்ளல், ஸ்டைல் எல்லாமே வந்துவிட்டதாக வர்ணனையாளர்கள் நினைத்தனர். உண்மையாகத்தான் இருக்கவேண்டும். கவர் திசையிலும் மிட்விக்கெட் திசையிலும் பந்துகள் பறக்கின்றன என்றால், உண்மையாகத்தான் இருக்கவேண்டும்.

யுவராஜ் சிங் ரன்கள் எடுக்கத் தடுமாறினார். ஆனால் திராவிட் வந்தது முதலே ரன்களை எளிதாகச் சேர்த்தார். மஹேந்திர சிங் தோனியின் காட்டடி, திராவிடின் நுட்பமான விளையாட்டு இரண்டும் சேர்ந்து 350 என்ற இலட்சியத்தை அடைய வைத்தது.

351ஐப் பெறுவது எளிதான விஷயமல்ல. அத்துடன் ஆடுகளம் கொஞ்சம் ஸ்லோவாக விளையாடத் தொடங்கியது. பின் ஸ்பின்னும் சேர்ந்தது. இலங்கை அணித்தலைவர் அட்டபட்டு சீக்கிரமாகவே பதானிடம் அவுட்டானார். ஆனால் சங்கக்கார, ஜயசூரியாவுடன் சேர்ந்து விளாசத் தொடங்கினார். கேரளாவின் புதுப்பையன் ஸ்ரீசந்த் தன் முதல் ஆட்டத்தில் கொஞ்சம் தடுமாற ரன்கள் இங்கும் அங்கும் பறந்தன. ஆனால் ஜெயசூரியா அளவுக்கு அதிகமாகவே ரிஸ்க் எடுத்து விளையாடினார். இரண்டு பந்துகள் ஃபீல்டர்களுக்கு வெகு அருகில் கேட்சாகப் பறந்தன. ஸ்ரீசந்த்துக்கு பதில் வந்த அகர்கரும் ரன்களை எளிதாகக் கொடுத்தார். பத்து ஓவர்கள் முடிந்தபோது இலங்கையின் எண்ணிக்கை 74/1 !

இந்த நிலையில் திராவிட் அவசரமாக ஏதாவது செய்தாக வேண்டியிருந்தது. ஆட்ட விதிமுறைகளில் சில மாற்றங்கள் வந்திருக்கின்றன. அந்த மாற்றங்கள் என்னைக் கவரவில்லை. ஆனால் அந்த மாற்றங்கள்தாம் திராவிடுக்கு உதவின என்று சொல்லவேண்டும். முந்தைய விதிமுறைகள்படி முதல் பதினைந்து ஓவர்கள் தடுப்பு வியூகம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும். ஆனால் இப்பொழுது 10, 5, 5 என்று மூன்று கட்டங்களாகப் பிரித்து பந்துவீசும் அணியின் தலைவர் எப்பொழுது கட்டுப்பாடுகள் இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கலாம். திராவிட் உடனடியாக பவர்பிளேயை - தடுப்பு வியூகக் கட்டுப்பாடுகளை - விலக்கிக்கொண்டு ஹர்பஜன் சிங்கைக் கொண்டுவந்தார். 11வது ஓவரில் முன்னெல்லாம் இப்படிச் செய்திருக்க முடியாது. ஹர்பஜன் வந்த கணத்திலேயே பந்தின் வேகத்தைச் சரியாகக் கணிக்காமல் ஜயசூரியா ஷார்ட் கவரில் நின்ற திராவிடுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அட்டப்பட்டுவும் சந்தனாவை பிஞ்ச் ஹிட்டராக அனுப்பினார். ஆனால் அவருமே ரன்கள் ஏதும் எடுக்காமல் ஹர்பஜன் பந்தில் அவுட்டாயிருக்க வேண்டியது - ஸ்டம்பிங்காக. மூன்றாவது நடுவருக்குப் போய், சந்தேகத்தின் காரணமாக, அவுட் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டார். திராவிட் உடனடியாக பவர்பிளே-2ஐ எடுக்கவில்லை. அடுத்த ஓவர் சேவாகுக்குக் கொடுத்தார். சங்கக்கார தூக்கி வீசப்பட்ட பந்தை பந்து வீச்சாளருக்கே கேட்சாகக் கொடுத்து ஆட்டமிழந்தார். இரண்டே ஓவர்களில் இரண்டு முக்கிய விக்கெட்டுகள் விழுந்த உடனேயே திராவிட் இரண்டு விஷயங்களை வேகமாகச் செய்தார். பவர்பிளே-2ஐக் கொண்டுவந்தார். இரண்டு புது மட்டையாளர்கள் தடுமாறுவார்கள், இந்நேரத்தில் ஓவர்களை வேகமாக வீசி மிச்சமுள்ள பவர்பிளே ஓவர்களை ஒழித்துவிடலாம்.

அத்துடன் சூப்பர் சப் முரளி கார்த்திக்கை உள்ளே கொண்டுவந்தார். சேவாக் பந்துக்கே விக்கெட் விழுகிறது, கார்த்திக் இன்னமும் நன்றாக வீசுவார் அல்லவா? ஒருமுனையில் ஹர்பஜன் அற்புதமாக வீசினார். மறுமுனையில் சேவாகுக்கு பதில் - விக்கெட் எடுத்த ஓவராக இருந்தாலும் சரி - கார்த்திக். ஹர்பஜன் சிங் பந்து வீச்சில் சந்தனா ரன்கள் அதிகம் எடுக்காமல் ஸ்டம்பிங் ஆக, உள்ளே வந்த ரஸ்ஸல் ஆர்னால்ட் மூன்றே பந்துகளில் பூஜ்யத்தில் அவுட்டாக, இந்திய அணியின் வெற்றி அப்பொழுதே நிச்சயமானது.

முதலில் கார்த்திக் நிறைய ரன்கள் கொடுத்தாலும் பின்னர் மிக அருமையாக வீசினார். அப்பொழுது ஆடுகளம் உடைய ஆரம்பித்திருந்தது. கார்த்திக் அடுத்தடுத்து ஜயவர்தனே, தில்ஷன், மஹரூஃப் ஆகியோரை அவுட்டாக்க, ஒன்பதாவது விக்கெட்டுக்காக சமிந்தா வாஸ் - லோகுஹெட்டிகே தில்ஹாரா (சூப்பர் சப்) ஆகியோர் நிறைய ரன்கள் பெற்றனர். அவர்கள் எத்தனை ரன்கள் பெற்றாலும் ஜெயிப்பது கடினம்தான். அந்த நேரத்தில் தேவையான ரன்ரேட் பத்துக்கும் மேல். திராவிட் புதுப்பையன் ஸ்ரீசந்தைக் கொண்டுவர அவரும் கடைசி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டத்தை முடித்து வைத்தார்.

ஆட்ட நாயகனாக பதான், டெண்டுல்கர், திராவிட், ஹர்பஜன் ஆகியோரில் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்திருக்கலாம். திராவிட்... அவரது அணித்தலைமைக்காகவுமாகச் சேர்த்து தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றே நினைக்கிறேன்.

இந்தியா டாஸில் ஜெயிக்காமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று சொல்வது கடினம். ஆனால் ஒரு குழுவாக விளையாடுவதே பெரிய விஷயம். மொஹம்மத் காயிஃப் மூன்றாவது ஆட்டத்துக்கு அணிக்குள் வர வாய்ப்பு உள்ளது. கங்குலி நடுவில் புகுந்து குட்டையைக் குழப்பாமல் இருக்கவேண்டும். கங்குலி, காயிஃப் இருவருக்கும் இடையில் - கங்குலி கேப்டன் இல்லை எனும்போது - யாரை உள்ளே எடுக்கவேண்டும் என்பதில் சந்தேகம் இருக்காது என்று நினைக்கிறேன். இரண்டாவது மேட்ச் சுவாரசியமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

ஸ்கோர்கார்ட்

காவிரி வெள்ளம்

கர்நாடகாவில் கடும் மழையினால் மேட்டூரில் தண்ணீர் நிரம்பி, மேற்கொண்டு வழிகிறது. இதனால் காவிரியில் வெள்ளம். காவிரியில் வெள்ளம் வந்தால்தான் கொள்ளிடத்துக்கு நீர் திறந்து விடுவார்கள். கொள்ளிடத்தின் நோக்கமே அதுதான். வெள்ள நீரைக் கொள்ளும் இடம். காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவில் மாட்டியிருப்பது திருவரங்கம். அங்குதான் என் பெற்றோர் வசிக்கிறார்கள். கடந்த இரு தினங்களாக வெள்ள அபாயம். ஆனால் இதுவரையில் அவர்கள் வசிக்கும் இடங்களில் ஒன்றும் ஆகவில்லை என்கிறார்கள். அம்மா மண்டபம் மேல்படி வரை தண்ணீர் நிரம்பி வழிகிறது. அரங்கத்தின் தாழ்வான பகுதிகள், தோப்புகளை அழித்துப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சில இடங்கள் ஏற்கெனவே தண்ணீரால் மூழ்கியுள்ளது.

திருச்சியை அடுத்த பல கிராமங்களில் தண்ணீர் இடுப்பளவு ஓடுகிறது. காவிரி, கொள்ளிடம் பாய்ந்து வரும் பல மாவட்டங்களிலும் இந்தப் பிரச்னை உள்ளது. பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளனர். ஆங்காங்கே மேடான பகுதிகளில் தங்கியுள்ளனர். சன் டிவி எப்பொழுதும் போல இதையும் அரசியலாக்கி, அரசு உதவி செய்வதில் மெத்தனம், தாமதம் என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஆனால் நான் கேள்விப்படுவது வரையில் அரசு இயந்திரம் அதால் முடிந்த அளவுக்கு வேகமாகத்தான் இயங்கியுள்ளது.

திருச்சி பகுதியில் இப்பொழுது மழை இல்லை. மழை பெய்தால் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும். ஆனால் கர்நாடகாவில் இன்னமும் இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும் என்பதால் என்பதால் வெள்ள அபாயம் இன்னமும் உள்ளது.

காவிரி பகுதியில் பயிரிட்டிருந்த பயிர்கள் அனைத்தும் நாசமாகி உள்ளது.

Monday, October 24, 2005

தமிழ் வலைப்பதிவர்களுக்கு சில ஆலோசனைகள்

இது தமிழ்மணம் பற்றிய பதிவல்ல:-)

Blogger வலைப்பதிவுகளுக்கான தேடுதல் வசதியினைச் சேர்த்துள்ளது உங்களுக்குத் தெரியும். http://search.blogger.com என்ற இடத்தின் மூலமாக இது கிடைக்கிறது. ஆனால் இதன்மூலம் பல புது வித்தைகளைச் செய்யமுடியும்.

உதாரணத்துக்கு, உங்கள் வலைப்பதிவில் நீங்கள் பல பதிவுகளை எழுதுகிறீர்கள் (blogger.com, உங்கள் சொந்த மூவபிள்டைப், லைவ்ஜர்னல், ந்யூக்ளியஸ் என்று எதுவானாலும் சரி). இந்தப் பதிவின் சுட்டியை யாராவது எடுத்துக் கையாளுகிறார்களா, உங்கள் பதிவின் மீதான விமரிசனத்தை வைக்கிறார்களா, உங்களை நாயே, பேயே என்று திட்டுகிறார்களா? எப்படிக் கண்டுபிடிப்பது? மேற்சொன்ன search.blogger.com சென்று உங்கள் வலைப்பதிவின் உரலை link: என்று போட்டுத் தேடவும். உதாரணத்துக்கு நான் link:thoughtsintamil.blogspot.com என்று தேடுவேன். சரி, இந்த உரல் சென்று ஒவ்வொரு முறையும் தேடிக்கொண்டிருக்கவேண்டுமா என்றால், இல்லை. ஒருமுறை தேடி, கீழே தெரியவரும் atom அல்லது rss செய்தியோடையைக் கவ்வி, உங்களுக்குப் பிரியமான செய்தியோடை படிப்பானில் படிக்கலாம். உதாரணத்துக்கு, எனக்குத் தேவையான Atom செய்தியோடை.

இதை நீங்கள் வெட்டியெடுத்து என் thoughtsintamil.blogspot.com க்கு பதில் உங்கள் பதிவின் உரலை இட்டு, num=100 என்பதற்கு பதில் num=20, 30, 40 என்று எதுவேண்டுமோ அதைப்போட்டுக்கொண்டு அவ்வப்போது செய்தியோடையில் உங்கள் பதிவை யார் இணைக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்கலாம்.

இதன் தொடர்ச்சியாகத்தான் blogger.com இல் பதிவுகள் வைத்திருப்பவர்கள் பின்தொடர்தல் வசதியினை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இது நிஜமான பின்தொடர்தல் வசதியல்ல. ஆனால் இப்போதைக்கு இது போதும். பின்தொடர்தல் பற்றிய முழு அறிமுகம் என் முந்தைய பதிவுகளில் இருக்கும். தேடிப்பிடித்து இங்கு பின்னர் இடுகிறேன்.

இதை எப்படிச் செயல்படுத்துவது என்று blogger.com பதிவு வைத்திருப்பவர்கள் இங்கு சென்று அறிந்துகொள்ளவும். Blogger.com இதனை Backlinks என்று அழைக்கிறார்கள். இதனை என் ஆங்கில வலைப்பதிவில் உட்புகுத்தினேன். நன்றாக வேலை செய்கிறது. ஆனால் தமிழில் இதுவரை சரியாக வேலை செய்யவில்லை. ஏன் என்று பார்க்கவேண்டும்.

Sunday, October 23, 2005

கங்குலியின் - இந்தியாவின் - எதிர்காலம்

இதுவரை நடந்த விஷயங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இல்லாவிட்டால், இங்கே சுருக்கமாக...

இந்திய அணித்தலைவராக இருந்த சவுரவ் கங்குலி சில மாதங்களாக மோசமாக விளையாடி வந்தார். அதையொட்டி அவர் அணியில் தொடர்வாரா என்ற கேள்வி இருந்துவந்தது. ஜான் ரைட் அணியின் பயிற்சியாளராக ஓய்வுபெற்ற பிறகு அணிப்பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆஸ்திரேலியாவின் கிரேக் சாப்பல். ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின்போது சாப்பலுக்கும் கங்குலிக்கும் இடையில் கருத்துமோதல். சாப்பல் கங்குலியின் மோசமான விளையாட்டை மனத்தில் வைத்து முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து தன்னிச்சையாக விலகி மொஹம்மத் காயிஃப், யுவ்ராஜ் சிங் ஆகிய இருவருக்கும் விளையாட வாய்ப்புகளைக் கொடுக்கலாமே என்று கங்குலியிடம் சொன்னதாகக் கேள்வி. இதை ஏற்க மறுத்த கங்குலி தான் விளையாடியதோடு மட்டுமில்லாமல், காயிஃபை விளையாடும் குழுவில் சேர்த்துக்கொள்ளவில்லை. பின் தான் ஒரு சதம் அடித்ததும், வெளிப்படையாக தனக்கும் சாப்பலுக்கும் இடையே உள்ள பிரச்னையைப் பற்றி இதழாளர்களிடம் பேசினார் கங்குலி.

தொடர்ந்து கங்குலிக்கும் சாப்பலுக்கும் இடையேயான பிளவு ஓரளவுக்கு ஒட்டு போடப்பட்டது. ஆனால் சாப்பல் கங்குலியிடம் உள்ள குறைகளை பக்கம் பக்கமாக எழுதி பிசிசிஐக்கு மின்னஞ்சல் செய்துள்ளார்! பிசிசிஐ ஒரு கூறுகெட்ட நிர்வாகம். அங்கு புரொஃபஷனல் என்று யாரும் கிடையாது. இப்பொழுதைய அலுவலகம் கொல்கொத்தாவில் உள்ளது. அங்கு வேலை செய்பவர்களுக்கு இந்திய கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தை விட தாதா கங்குலி மீதுதான் ஆர்வம். எனவே ஒரு கான்பிடென்ஷியல் மின்னஞ்சல் பகிரங்கப்படுத்தப்படுகிறது. புகைச்சல் பெரு நெருப்பாகிறது.

அணியிலும் பிளவு. ஹர்பஜன் கங்குலிக்கு ஆதரவாகப் பேசுகிறார். யுவ்ராஜ் சாப்பலுக்கு ஆதரவாக. கங்குலி, சாப்பல் இருவரையும் பிசிசிஐ வரவழைத்து, பேசி, ஒத்துப்போகச் சொல்கிறது. ஆனால் பிசிசிஐ - கூறுகெட்ட நிர்வாகம் - தனக்குள்ளே பெரும் பிரச்னையில் உள்ளது. சென்ற முறை தால்மியா இல்லாத தகிடுதத்தங்களைச் செய்து நிர்வாகத் தேர்தலில் ஷரத் பவாரைத் தோற்கடித்து தன் ஆசாமி ரன்பீர் சிங் மஹேந்திராவைக் கொண்டுவந்தார். இம்முறையும் ஏகப்பட்ட நீதிமன்றங்களில் வழக்குகள், சச்சரவுகள். இதைத்தவிர நடக்க இருக்கும் இந்தியா-இலங்கை ஆட்டங்களுக்கான தொலைக்காட்சி உரிமத்தை விற்றாகவில்லை. (பின் பிரசார் பாரதிக்கு விற்கப்பட்டது.)

திடீரென கங்குலி தனக்கும் டெண்டுல்கருக்கு நேர்ந்ததுபோல முட்டிக்கையில் வலி என்கிறார் ("டென்னிஸ் எல்போ"). தொடர்ந்து அடுத்த இரண்டு போட்டித்தொடர்களுக்கு திராவிட் அணித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். முதலிரண்டு ஆட்டங்களுக்கு கங்குலி தேர்ந்தெடுக்கப்படவில்லை. அணித்தேர்வு முடிந்ததும், கங்குலியின் டென்னிஸ் எல்போ காற்றில் கரைந்து மறைகிறது. துலீப் கோப்பை ஆட்டத்தில் கிழக்குப் பிராந்திய அணிக்காக விளையாடும் கங்குலி வடக்குப் பிராந்தியத்துக்கு எதிரான ஆட்டத்தில் நல்ல சதம் ஒன்றை அடிக்கிறார்.

----

இதுவே முன்கதைச் சுருக்கம். இனி? மூன்றாவது ஒருநாள் போட்டி முதல் கங்குலி தேர்ந்தெடுக்கப்படலாம். அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் இலங்கை, தென்ன்னாப்பிரிக்கா இரண்டுடனுமான போட்டித்தொடர்கள் முடிந்ததும் மீண்டும் அணித்தலைவர் தேர்வுக்கு போட்டி வரும். கங்குலியைப் பற்றி நாம் அறிந்த வகையில் அவர் வெற்றுக்காக்கவேனும் போராடும் குணமுடையவர். பிளிண்டாஃப் சட்டையைக் கழற்றினார் என்பதற்காக லண்டனில் சட்டையைக் கழற்றிக் கொண்டாடியவர். சாப்பல் தன்னை விலகச் சொன்னார் என்பதற்காக இதழாளர்களுக்குப் பேட்டி கொடுத்தவர். இப்பொழுது தன்னை அணித்தலைவர் பதவியிலிருந்து விலக்கியிருப்பதைக் கண்டு கொதித்துப் போயிருப்பவர். எனவே அணித்தலைமைக்குப் போட்டியிடுவார். அதற்காகக் காய் நகர்த்துவார். அதற்கு தால்மியாவின் துணையிருக்கும். சாப்பலின் துணையிருக்காது. திராவிடின் நிலைமை கஷ்டமானது. கங்குலி திராவிடைத் தன் எதிரியாகப் பார்ப்பார். வேறு வழியில்லை.

இதனால் திராவிடின் ஆட்டமும் பாதிக்கப்படும். கங்குலியை விட திராவிட் இந்தியாவுக்கு முக்கியமானவர்.

என்ன செய்யலாம்?

1. திராவிடை அடுத்த மூன்று வருடங்களுக்கு அணித்தலைவராக இப்பொழுதே அறிவிக்கலாம். அதற்குத் தகுதியானவர். அணிக்கு அதிக உபயோகமானவர்.

2. டெண்டுல்கர்! இவரை மீண்டும் அணித்தலைவராக்கலாம். இத்தனை நாள்கள் கழித்து மீண்டும் உள்ளே வரும் டெண்டுல்கர் முதிர்ச்சியடைந்திருப்பார். தன்னை விட நன்றாக ஆடும் சிலர் அணியில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்திருப்பார். இவரது முந்தைய அணித்தலைமையின்போது அணி முழுவதுமாக இவரது முதுகில் இருந்தது. ஒவ்வொரு முறை அணி தோற்கும்போதும் அதனால் டெண்டுல்கர் மீதான அழுத்தம் அதிகமானது. இப்பொழுது அப்படியல்ல. டெண்டுல்கர் அணித்தலைவராக ஆனால் கங்குலி முதல் திராவிட் வரை அனைவரும் அவர் சொல் கேட்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கங்குலி மீண்டும் அணித்தலைவராக வருவது இந்தியாவுக்கு நல்லதல்ல. அவரது கேப்டன்சி புள்ளிவிவரங்களை தயவுசெய்து யாரும் முன்வைக்க வேண்டாம். எனக்கு இந்தப் புள்ளிவிவரங்கள் நன்றாகவே தெரியும்.

கங்குலி இந்தியாவின் ஒருநாள் அணியில் பங்கேற்கலாம். இன்னமும் இரண்டு வருடங்கள் அவர் விளையாடலாம். அவரை டெஸ்ட் அணியில் சேர்க்கவேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது. யுவ்ராஜ், காயிஃப் என்று தொடங்கி இன்னமும் பலர் உள்ளனர்.

இதையெல்லாம் மீறி கங்குலி அணித்தலைவர் பதவிக்காகப் புகுந்து விளையாடினால் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் மோசமாக இருக்கும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அணி மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும்.

முக்கியமான ஒன்று பாக்கி இருக்கிறது. ஆனால் அது இப்பொழுதைக்கு நடக்காது. பிசிசிஐ நிர்வாகத்தை முற்றிலுமாகச் சீரமைக்க வேண்டும்.

[பி.கு: அருண்: போதுமா?]

தொலைக்காட்சி உரிமம் பற்றிய பதிவு

என் ஆங்கில வலைப்பதிவில், விளையாட்டு நிகழ்ச்சிகளின் தொலைக்காட்சி உரிமம் பற்றிய மைய அரசின் கொள்கை மீது ஒரு விமரிசனத்தை வைத்துள்ளேன்.

Friday, October 21, 2005

நாராயண மூர்த்தி Vs தேவே கவுடா

நான்கு நாள்கள் முன்னர் இதுபற்றி எனது ஆங்கிலப் பதிவில் எழுதியிருந்தேன். இன்றைய தலைப்புச் செய்தி இதுதான்.

இன்ஃபோசிஸ் சேர்மன் நாராயண மூர்த்தியும் ஜனாக்ரஹா என்னும் அமைப்பின் ரமேஷ் ராமநாதனும், போன சனிக்கிழமை கர்நாடகா முதல்வர் தரம் சிங், முன்னாள் பிரதமர் தேவே கவுடா ஆகியோரைச் சந்தித்து பெங்களூர் நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அதை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்று விளக்கியுள்ளனர். இந்தியாவின் எல்லா மாநிலத் தலைநகரங்களுமே நெருக்கடியில்தான் உள்ளன. தமிழகத்தில் மொத்த ஜனத்தொகை 6 கோடி. அதில் 1 கோடி சென்னையிலும் அடுத்துள்ள இடங்களிலும் மட்டும். இத்தனை பேருக்கும் குடிதண்ணீர் கொடுக்கவேண்டும். இத்தனை பேரும் தெருவில் போகவர வசதிகள் வேண்டும். பேருந்து, துரித ரயில் போக்குவரத்து வசதிகள் வேண்டும். சாலைகள் சரியாக இருக்கவேண்டும். போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படவேண்டும். குப்பைகள், கழிவுகள் அகற்றப்படவேண்டும். கொலை, கொள்ளை, பிற வன்முறைகளைத் தடுக்க வேண்டும். மனமகிழ் வசதிகள் வேண்டும். படிப்புக்கு கல்விநிலையங்கள் தேவை. இப்படி எத்தனையோ எத்தனையோ. இதைத்தான் Urban Infrastructure என்று சொல்வது.

இதில் பல தனியார்களால் கொடுக்கப்படுவது. ஆனால் பலவற்றை அரசுதான் கொடுத்தாக வேண்டும். மெத்தனமாக இருந்தால் படுநாசம். போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலைகள், குடியிருப்பு வசதிகளுக்கான நிலங்கள், குடிதண்ணீர், குப்பை/கழிவுகள் அகற்றப்படுதல், mass transit ஆகிய ஐந்தும் மிக மிக அவசியம். உருப்படியான விமான நிலையம் அடுத்த கட்டத்தில் வரும். பெங்களூரிலும் சென்னையிலும் தில்லியிலும் மும்பையிலும் அடிப்படை வசதிகள் குறைவுதான். பெங்களூரில் அதிக மோசம். அந்தந்த ஊரில் உள்ள தொழில் நிறுவனங்கள் சரியான வசதியின்மையால் பாதிக்கப்படுகின்றன. பலரும் வாயைப் பொத்திக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் புகார் செய்கிறார்கள். நாராயண மூர்த்தி மட்டும்தான் தீர்வு என்று ஒன்றை முன்வைத்துள்ளார். அதையும் எடுத்துக்கொண்டு சென்று முதல்வரிடமும் அவரது தோழமைக் கட்சியின் தலைவரிடமும் சென்று பேசியுள்ளார்.

சரி, அடுத்து என்ன செய்யலாம் என்பதை விட்டுவிட்டு மறுநாள் முதல் தேவே கவுடா நாராயண மூர்த்தியைக் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார். அரசியல்வாதிகளுக்குள்ளாக என்றால், இது அவ்வளவு கடுமையானது என்று சொல்லமுடியாது. ஆனால் அரசியல் சாக்கடைகளுக்கு அப்பால் இருக்கும்பட்சத்தில் இந்தச் சொற்களால் நாராயண மூர்த்திக்குக் கடும் வருத்தம் உண்டாவது இயற்கையே. கவுடா போகிற போக்கில் 'மூர்த்தி பெங்களூர் சர்வதேச விமான நிலைய நிறுவனத்தின் தலைவராக இருந்து என்ன கிழித்தார்' என்று ஒரு சைட் குத்து விட்டுச் சென்றார். அதனால் நேற்று மூர்த்தி அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பெங்களூர் சர்வதேச விமான நிலைய நிறுவனத்தின் தலைவராக இருப்பது என்பது இன்ஃபோசிஸ் தலைவராக இருப்பது போலல்ல. மாநில அரசு, மைய அரசு என்று இரண்டையும் தாஜா செய்யவேண்டும். மாநில அரசு மாறினால் முட்டாள் அரசியல்வாதிகள் மீண்டும் குழப்படி செய்வார்கள். அப்படித்தான் இங்கும் நடந்தது. இத்தனைக்கும் புதிதாக வந்ததும் காங்கிரஸ் (ஐ) அரசுதான் (ஜனதா தளம் (எஸ்) ஆதரவுடன்). பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் முழு வரலாறும் அதன் இலக்குகளும் அது எந்த அளவுக்கு இலக்கை நோக்கிச் சென்றுள்ளது என்பதும் எனக்கு இப்பொழுதைக்குத் தெரியாது. அதனால் அதைப்பற்றி நான் எதையும் சொல்லப்போவதில்லை.

ஆனால் கவுடா மூர்த்தியைத் தேவையின்றித் தாக்கியதன் மூலம் தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையையும் கெடுத்துக்கொண்டுள்ளார் என்றே தெரிகிறது.

Tuesday, October 18, 2005

உத்தரப் பிரதேசம் மாவ் கலவரம்

உத்தரப் பிரதேசத்தில் மாவ் (Mau) என்னும் இடத்தில் அக்டோபர் 14 அன்று நடந்த இந்து-முஸ்லிம் கலவரத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். யாருக்கும் யாருக்கும் இடையே சண்டை, என்ன நடந்தது போன்ற தகவல்கள் ஊடகங்கள் மூலம் நமக்குக் கிடைக்கவில்லை. "Communal clash", "இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல்" போன்றுதான் தகவல்கள் வந்தன.

இன்று காசிபூர் சுயேச்சை எம்.எல்.ஏ முக்தார் அன்சாரி என்பவர் மீது வன்முறையைத் தூண்டியதாக உ.பி அரசு வழக்கு தொடுத்துள்ளது. தடையுத்தரவு இருந்த நேரத்தில் திறந்த ஜீப்பில் தனது ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் பயணம் செய்து தனது பேச்சின் மூலம் வன்முறையைத் தூண்டினார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு.

இன்று என்.டி.டி.வியில் இவருடனான தொலைபேசிச் செவ்வி நடந்தது. பேசும்போது, தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றார். ஆனால் பின்னால் ஓடும் படத்தில் இவர் ஆக்ரோஷமாக ஜீப்பில் நின்றுகொண்டு கைகளை ஆட்டி ஆட்டிப் பேசுவது காண்பிக்கப்பட்டது. திடீரென என்.டி.டி.வியை தன் தொலைக்காட்சித் திரையில் பார்த்துவிட்டு, "என்ன, என்னென்னவோ காண்பிக்கிறீர்கள்?" என்று கேட்டார். சற்றே தடுமாறிய என்.டி.டி.வி செய்தி வாசிப்பவர் உடனடியாக காட்சிகளை மாற்றிவிட்டு வேறு சில கேள்விகளைக் கேட்டார். தடையுத்தரவு அமலில் இருக்கும்போது ஜீப்பில் போய் என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு, நான் காயம் பட்டிருந்த ஒருவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றுகொண்டிருந்தேன், நான் ஜீப்பில் செல்லும்போது தடையுத்தரவு அமலில் இல்லை, என்றார். ஆனால் காட்டப்பட்ட படத்துண்டில் காயம் பட்டவர் யாரும் ஜீப்பில் இருந்தது போலத் தெரியவில்லை.

மதக்கலவரம் நடந்தால், அது பற்றிய விவரங்களை ஆங்கிலப் பத்திரிகைகள்தான் வெளிப்படுத்துவதில்லை. உள்ளூர் உருது, ஹிந்திப் பத்திரிகைகள் சக்கைபோடு போட்டு, உள்ளதுடன் இல்லாததும் பொல்லாததும் சேர்த்து எழுதுவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். இணையத்தில் தேடி மேற்கொண்டு விவரங்களைச் சேகரிக்க வேண்டும்.

Monday, October 17, 2005

சுந்தர ராமசாமி பற்றி பத்திரிகைச் செய்திகள்

தி ஹிந்து, டெக்கான் க்ரோனிகிள், தினமணி, தினமலர் ஆகியவற்றைப் பார்த்தேன். சில பத்திரிகைகளின் இணைய எடிஷன்களைப் பார்வையிட்டேன்.

முதலில் சொன்ன நால்வரும் விரிவான செய்திகளைப் போட்டிருந்தனர். டெக்கான் க்ரோனிகிள் ஜெயமோகனிடமிருந்து ஒரு மேற்கோள் கொடுத்திருந்தது. டெக்கான் க்ரோனிகிள் "puzhiyamaraththin kathai' என்று அந்த மரத்தைப் புழிந்து விட்டார்கள். "ஒரு" புளியமரம் என்று சொல்ல மறந்தவர்கள் பலர். அனைவருக்கும் காலச்சுவடு வெளியிட்ட press release போய்ச் சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் இந்த கவனக்குறைவு? மலையாள மனோரமா ஆன்லைன் எடிஷனில் அவரது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்று சொல்லியிருந்தனர். ஆனால் மலையாளத்தில் மொழிபெயர்த்த விவரத்தைச் சொல்லவில்லை.

'ஒரு புளியமரத்தின் கதை' ஹீப்ரு மொழிபெயர்ப்பு பற்றி சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். இஸ்ரேல் பத்திரிகைகளில் சுந்தர ராமசாமியின் இரங்கல் பற்றி ஏதேனும் வந்திருக்குமா என்று தெரியாது.

சன் டிவி செய்திகளில் சுந்தர ராமசாமி மறைவு பற்றிய செய்து வந்ததாக வெங்கடேஷ் சொன்னார். (நான் பார்க்கவில்லை.)

தமிழ் முரசு பத்திரிகையில் என்ன வந்தது என்று யாருக்காவது தெரியுமா?

சுந்தர ராமசாமி எழுதி காலச்சுவடு பதிப்பாக வந்திருக்கும் அவரது புத்தகங்கள் இதோ.

பெங்குவின் இந்தியா வெளியிட்ட Tale of a Tamarind Tree இப்பொழுது அச்சில் இல்லை என்று தெரிய வருகிறது. காலச்சுவடே இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்யலாம். JJ: Some Jottings, கதா வெளியீடாக வந்தது என்று நினைக்கிறேன். ஆனால் Fabmall-ல் கிடைக்கவில்லை. That's it but கூட இப்பொழுது கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

10,000 ரூ கணினி?

From The Telegraph, Calcutta Low-cost PCs? Check fine print

இதைப் பற்றி நான் குமுதம் கேள்வி-பதில் பகுதியில் சென்ற மாதம் எழுதியிருந்தேன். 10,000 ரூபாய்க்கு குறைவான கணினி என்று சொன்னாலும் கையில் கிடைக்கும்போது விலை அதற்கு மேல்தான்.

முதலில் வயா சில்லுடன் ஆரம்பித்த எச்.சி.எல், இப்பொழுது ஏ.எம்.டி சில்லைப் பதித்துத் தரவும் எண்ணியுள்ளது. ஆனால் இந்தக் குறிப்பிட்ட ஏ.எம்.டி சில்லுடன் வரும் குறைந்த விலைக் கணினி கையில் கிடைக்க 2006-07 ஆகிவிடும்! ஆக அதுவரையில் வயா சில்லுதான் என்று நினைக்கிறேன்.

ஒரு மாற்றம் - மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பி ஸ்டார்டர் பேக் 1250 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் இந்த இயக்குதளம் ஒருவருக்குப் போதுமானாதா என்று தெரியாது. இனிதான் நான் இதனைப் பார்க்கவேண்டும்.

குமுதத்தில் நான் எழுதியது:

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அறிமுகம் செய்த குறைந்த விலை (ரூ. 10,000) கம்ப்யூட்டரின் தரம் என்ன? அது எங்கு கிடைக்கும்? சற்று விளக்கம் தேவை.

தயாநிதி மாறன் அறிமுகப்படுத்திய கணினியை உற்பத்தி செய்வது HCL என்ற நிறுவனம். இதுவரையில் கிடைத்த தகவல்கள்படி, இந்தக் கணினியின் விலை ரூ. 11,700 (வரிகளுடன் சேர்த்து). முதலில் இந்தப் பணத்தை டிராஃப்ட் எடுத்து HCL நிறுவனத்தின் விற்பனையாளர்களிடம் கொடுத்து, சில நாள்கள் காத்திருந்தால், கணினி வந்து சேரும். கணினியில் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளை கவனிக்க ஒரு வருடத்துக்கு ரூ. 500 மேற்கொண்டு கட்டவேண்டியிருக்கும். ஆகா, ரூ. 12,200 செலவாகும். அதைத்தவிர பிற செலவுகள் இருக்கலாம். (டேபிள், சேர், UPS...). இந்தக் கணினியுடன் லினக்ஸ் என்னும் ஆபரேடிங் சிஸ்டம்தான் வருகிறது. ஆங்கிலத்திலேயே எழுத, படிக்க இது போதும். ஆனால் தமிழில் எழுத, படிக்க, இணையத்தளங்களைப் பார்வையிட இந்த ஆபரேடிங் சிஸ்டம் இப்பொழுதைக்கு அவ்வளவு எளிதானதல்ல. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்பி ஆபரேட்டிங் சிஸ்டம் என்றால் தமிழில் எழுதப் படிக்க மிகவும் வசதியாக இருக்கும். அது தேவையென்றால் இன்னமும் ரூ. 4,000 செலவாகும். அத்துடன் anti-virus மென்பொருள் தேவைப்படும்... இப்படியாக செலவுகள் இழுத்துக்கொண்டே போகும்.

கணினியின் தரம்: இந்தக் கணினியை வைத்துக்கொண்டு இண்டெர்நெட் இணைப்பு பெற்று சரளமாக வேலைகளைச் செய்யலாம். சாதாரண ம்யூசிக் சிடிக்களைப் போட்டுக் கேட்கலாம். ஆனால் விசிடியில் சினிமா பார்க்கலாம் என்றால் கணினி மிகவும் சிரமப்படும். விடியோ கேம்கள் விளையாட கணினி கஷ்டப்படும். அதெல்லாம் செய்ய வேண்டுமென்றால் இதைவிட சற்றே உயர்ந்த தரமுள்ள கணினிகள் தேவை. நல்ல மல்டிமீடியா கணினி வேண்டுமென்றால் ரூ. 15,000 செலவாகும். அதற்கு மேல் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்பி வேண்டுமென்றால் (அதாவது சரளமாக தமிழிலும் எழுதி, படிக்க, இணையத்தில் உள்ள எல்லா தமிழ் வெப்சைட்களைப் பார்க்க வேண்டுமென்றால்) ரூ. 4,000 அதிகமாகச் செலவு செய்யவேண்டிவரும்.

இதுவரையில் HCL டீலர்களே கூட இந்தக் கணினியைக் கண்ணால் பார்க்கவில்லை. அதனால் இந்தக் கணினியில் என்னென்ன பாகங்கள் உள்ளன என்ற விளம்பரத் தகவல்களின் மூலம், அதைப்போன்ற ஒரு கணினியை வடிவமைத்து, அதிலிருந்து மேற்படித் தகவல்களை அளித்துள்ளேன்.

Saturday, October 15, 2005

சுந்தர ராமசாமி: 30 மே 1931 - 14 அக்டோபர் 2005

தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவரான சுந்தர ராமசாமி அமெரிக்காவில் இன்று அதிகாலை இந்திய நேரம் (நேற்றைய அமெரிக்க நாள் கணக்கு) காலமானார்.

காலை முதல் இதுபற்றிய குறுஞ்செய்திகள், தொலைபேசித் தகவல்கள் வந்தன. அப்பொழுது இந்தத் தகவலை பதிவில் எழுத நினைத்தேன். ஆனால் மனுஷ்யபுத்திரன் பதிவில் இந்தத் தகவல் இருந்தது, ஆனால் blogger தொழில்நுட்பக் கோளாறால் அந்தப் பதிவு அழிந்துவிட்டது என நினைக்கிறேன்.

விரைவில் முழுமையான பதிவு வரும்.

Thursday, October 13, 2005

கர்பா - Yes, கர்ப்பம் - No, கற்பு - No, No

கர்பா (गर्बा) என்பது குஜராத் மாநிலத்தின் ஒருவகை நடனம். நவராத்திரி நேரங்களில் ஒன்பது நாளும் இரவு நேரங்களில் இம்மாதிரியான நடன நிகழ்ச்சிகளை பல்வேறு நிறுவனங்களும் குஜராத் முழுக்க நடத்தும். இளம் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு கர்பா, தாண்டியா போன்ற ஆட்டங்களை ஆடுவார்கள். நம் ஊர் கும்மி, கோலாட்டம் போலத்தான். சில தமிழ் திரைப்படங்களிலும் "தாண்டியா" ஆட்டம் பற்றிய குறிப்புகள் வருகின்றன.

கடந்த சில வருடங்களில் நவராத்திரியை அடுத்து குஜராத்தில் நிறைய கருக்கலைப்பு நடக்கின்றது என்றும் அவ்வாறு செய்துகொள்பவர்கள் பெரும்பாலும் மணமாகாத இளம்பெண்கள் என்றும் சமூக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இந்த வருடம், எதிர்பார்க்காத கர்ப்பங்களைக் குறைக்க பல சமூக நல அமைப்புகள் கர்பா நாட்டியம் நடக்கும் மைதானங்களிலேயே கருத்தடை சாதனங்களை இலவசமாகக் கொடுக்க/விற்க அமைப்புகளை ஏற்படுத்தியிருந்தனவாம். மருந்துக் கடைகளிலும் ஆணுறை விற்பனை 50% மேலாகப் பெருகியுள்ளது என்று செய்தி.

இதுபற்றிய டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி.

Wednesday, October 12, 2005

மிட்ரோகின் ஆவணங்கள் II

தமிழ் வலைப்பதிவுகளில் விவாதிக்கப்படவில்லை. வாசிலி மிட்ரோகின் என்பவர் ரஷ்ய கேஜிபி புலனாய்வு நிறுவனத்தின் ஆவணக்காப்பாளராக வேலை செய்தவர். (ரஷ்யாவின் வரலாறை இராமநாதன் தன் வலைப்பதிவில் தொடராக எழுதுகிறார்.) 1992ல் மிட்ரோகின் ஒரு கத்தை பேப்பர்களை எடுத்துக்கொண்டு பிரிட்டன் தூதரகம் வழியாக லண்டன் வந்து சேர்கிறார். அவர் உயிருடன் இருந்தபோது அந்தத் தாள்களில் இருந்த சுவையான விஷயங்களை வைத்து The Sword and the Shield என்று ஒரு புத்தகம் வெளியானது. இப்பொழுது மிட்ரோகின் இறந்து விட்டார். ஆனால் அவரது கத்தைக் காகிதங்களை வைத்துக்கொண்டு The Mitrokhin Archive II: The KGB and the World என்ற இரண்டாவது புத்தகம், கிறிஸ்டோபர் ஆண்ட்ரூ தொகுக்க, வெளியாகி உள்ளது.

இதில் கேஜிபி எவ்வாறு இந்திய அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நிதி கொடுத்து அவர்களை தங்களுக்குச் சாதகமாக நடந்துகொள்ள வைத்தனர் என்று சில பக்கங்களில் வருகிறதாம். நானும் இரண்டு புத்தகங்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு உட்கார்ந்துகொண்டிருக்கிறேன். எப்பொழுது வந்துசேரும் என்று தெரியவில்லை. இப்படி பணம் வாங்கியவர்கள் இந்திரா காந்தி முதற்கொண்டு பல காங்கிரஸ் பெருந்தலைகள், டாங்கே போன்ற கம்யூனிஸ்ட் பெருந்தலைகள் என்பதாகத் தகவல்.

குல்தீப் நய்யார் டெக்கன் ஹெரால்ட் பத்திரிகையில் இன்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பல நாடுகள் இந்திய அரசியல் தலைவர்களுக்குப் பணம் கொடுத்துள்ளன என்றும் ரஷ்யாவும் அமெரிக்காவும்தான் தொடர்ச்சியாக, பல வருடங்களாக இந்த வேலையைச் செய்து வந்தன என்றும் எழுதுகிறார். மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் கம்யூனிஸ்டுகளைத் தோற்கடிக்க அமெரிக்கா இந்திரா காந்திக்குப் பணம் கொடுத்ததாக இந்தியாவின் முன்னாள் அமெரிக்க தூதர் பேட்ரிக் மொய்னிஹான் தன் புத்தகத்தில் எழுதியிருப்பதாக குல்தீப் நய்யார் மேற்கோள் காட்டுகிறார். மிட்ரோகின் புத்தகம் வெளியானதுமே பாஜக, இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று குரல் கொடுத்தது. கம்யூனிஸ்ட் CPI இந்தப் புத்தகத்தைத் தடை செய்யவேண்டும் என்று கேட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்கிறார்கள்.

ஆனால் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் மட்டுமல்ல, பாஜகவின் முந்தைய அவதாரம் ஜன சங்கத்தின் தலைவர்களும் இது போலப் பணம் வாங்கியுள்ளதாக சில வதந்திகள் உண்டு. ஜன சங்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான பால்ராஜ் மாதோக், அமெரிக்க CIA பணத்தை வாங்கியவர்களில் வாஜ்பாயும் உண்டு என்கிறார். ஆனால் பாஜக அதைக் கடுமையாக மறுக்கிறது.

காங்கிரஸ் தரப்பில் அவர்கள் மிட்ரோகின் செய்தியை நேரடியாக மறுக்கவில்லை. "கண்ட கண்ட நாய்களுக்கும் பதில் தர முடியாது" என்ற ரீதியில்தான் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பேசுகிறார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் ஒரு CIA உளவாளி என்று அமெரிக்காவின் சீமூர் ஹெர்ஷ் என்ற பத்திரிகையாளர் குற்றச்சாட்டை வைத்தார். மொரார்ஜி தேசாய் 1989ல் சிகாகோவில் ஒரு நீதிமன்றத்தில் ஹெர்ஷுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்தார். ஆனால் தேசாய் அந்த வழக்க்கில் தோற்றார். அதனால் மொரார்ஜி தேசாய் CIA உளவாளி என்பது நிரூபணமாகிவிடவில்லை! சுப்ரமணிய சுவாமி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கண்டவர்களையும் CIA உளவாளி என்று சொல்வார். ஒரு நேரத்தில் இந்திய அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும்போது CIA உளவாளி, KGB உளவாளி என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தனர்.

பின்னாள்களில் இதெல்லாம் மரத்துப்போனது. யாரும் இதைப்பற்றிப் பேசுவதில்லை - சுப்ரமணியம் சுவாமியைத் தவிர!

குல்தீப் நய்யார் கட்டுரையில் பாஜக மீது மற்றுமொரு குற்றச்சாட்டு வருகிறது. பங்களாதேஷ் தேர்தலின்போது வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு பேகம் காலீதா ஜியாவின் பி.என்.பி கட்சிக்கு தேர்தல் நிதி கொடுத்துள்ளனர் என்று பங்களாதேஷில் அவாமி லீக் கட்சியினர் பேசிக்கொள்கிறார்களாம்.

மிட்ரோகின் புத்தகம் கைக்கு வந்ததும் படித்து முடித்துவிட்டு அதில் என்ன எழுதியிருக்கிறது என்று சொல்கிறேன். ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி காலம் என்றால் இந்நேரத்தில் அந்தப் புத்தகத்தைத் தடை செய்திருப்பார்கள்! நல்ல வேளை, நாடு இப்பொழுது அவ்வளவு மோசமில்லை. தடைசெய்யப்போவதில்லை என்று சொல்கிறார்கள்.

நரேந்திர ஜாதவ், ரிசர்வ் வங்கி

இன்று கண்ணில் பட்ட சுவையான கட்டுரை - International Herald Tribune பத்திரிகையிலிருந்து:

An economist's rise defies caste system

Tuesday, October 11, 2005

அசாம் பழங்குடிச் சண்டைகள்

Army deployed after Assam riots

ஆகஸ்ட் மாதம் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட துப்பாக்கி மொழி என்னும் புத்தகத்தை எடிட் செய்யும்போதுதான் அசாமின் பல பழங்குடிகளின் பெயர்களையும் அவர்களுக்கு இடையேயான சண்டைகளையும் பற்றி ஓரளவுக்கு நான் அறிந்துகொண்டேன்.

வடகிழக்குப் பிராந்தியங்களில் உள்ள பழங்குடியினருக்கு இடையேயான சண்டைகளை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடிவதில்லை. பெரும்பான்மை அசாமியர்களுக்கும் பங்களாதேஷிலிருந்து குடியேறும் முஸ்லிம் வங்காளிகளுக்கும் இடையேயான பிரச்னை ஓரளவுக்கு எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியது.

ஆனால் கர்பி ஆங்க்லாங், திமாசா, ஹமார் பழங்குடியினர் காலம் காலமாக அசாமில் சில மாவட்டங்களில் வாழ்ந்து வருபவர்கள். அனைவரும் இன்னமும் தொடர்ச்சியாக தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வது குழப்பத்தை விளைவிக்கிறது. பழங்குடியினருக்கு இடையேயான சண்டைகள் பெரும்பாலும் பாரம்பரிய நிலங்களைப் பிறர் கையகப்படுத்த முயற்சி செய்யும்போதும் விளைச்சல் குறையும்போதும் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன். இந்தப் பழங்குடிகளின் மக்கள்தொகை ஓரளவுக்கு கட்டுக்குள்தான் இருக்கிறது. பெருமளவு அதிகரிக்கவில்லை. அவர்களது வாழ்க்கை முறையிலும் அதிக மாற்றங்கள் இல்லை. ஆனால் இந்தப் பழங்குடிகளுக்கு நிலையான தலைமை ஏதும் இருப்பது போலத் தெரியவில்லை. மாநில அரசாங்கமும் இந்தப் பழங்குடித் தலைவர்களுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதில்லை போலத் தெரிகிறது. இல்லாவிட்டால் பிரச்னை முற்றி ஆயுதத் தகராறு வருவதற்கு முன்னாலேயே பஞ்சாயத்து செய்து பிரச்னைகளைத் தீர்த்து வைக்கமுடியும்.

The Girl in the Cafe

(சினிமா விமரிசனம்!)

பிரிட்டன் நிதி அமைச்சரின் அலுவலகத்தில் பணிபுரியும் சிவில் சர்வண்ட் லாரன்ஸ், வயதானவர், ஆங்கிலேயர். தனி ஆள். மணமாகாதவர், கூட வசிக்கும் இணை-உறவாளர் யாரும் கிடையாது. குழந்தைகள் யாரும் இல்லை. காதல் என்று ஒன்று வாழ்வில் இருந்ததில்லை. வேலை, வேலை, வேலை.

G8 எனப்படும் உலகின் மிக வளர்ந்த நாடுகள் (அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான், ரஷ்யா - இதில் ரஷ்யாவைச் சேர்க்கவேண்டுமா என்ற கேள்வி எழலாம், ஆனால் வரலாற்றுக் காரணங்களால் ரஷ்யா இதில் உள்ளது. G7 என்று ஒரு குழு உள்ளது. அதில் ரஷ்யா இல்லாத பிற 7 நாடுகளும் உண்டு.) ஒன்று சேர்ந்து ஒரு குழுவை நடத்துகின்றன. ஒவ்வோர் ஆண்டும் உலகப் பொருளாதாரம் தொடர்பாக ஒரு மாநாட்டையும், அரசியல் விஷயங்களுக்காக மற்றுமொரு மாநாட்டையும் நடத்துவார்கள்.

இந்த G8 பொருளாதார மாநாடு நடக்கும் இடங்களிலெல்லாம் சமீப காலங்களில் உலகமயமாக்கல்-எதிர்ப்புக் குழுக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி G8-க்கும், உலகமயமாதல், தாராளமயமாதல் போன்றவற்றுக்கும் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன. G8 மாநாட்டின் ஒரு நோக்கம் - எவ்வாறு பணக்கார நாடுகள் (அதாவது G8 நாடுகள்) - உலகின் ஏழை நாடுகளில் உள்ள ஏழைமை, உணவுப்பஞ்சம், உயிர்ச்சாவு (எய்ட்ஸ், பட்டினிச் சாவுகள்) ஆகியவற்றைப் போக்க உதவி செய்யலாம் என்று கூடிப்பேசி ஏதாவது செய்ய முனைவது.

ஐ.நா சபை Millennium Development Goals - நடப்பு ஆயிரம் வருடங்களுக்கான கொள்கைகளாக சிலவற்றை முன்னுக்கு வைத்து, அதனை ஐ.நா சபையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டுள்ளன. 2015ம் வருடத்துக்குள்ளாக பட்டினிச் சாவை இப்பொழுதுள்ள எண்ணிக்கையிலிருந்து பாதியாகக் குறைப்பது, பட்டினியாக இருப்போரின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைப்பது, பிரசவச் சாவைப் பாதியாகக் குறைப்பது, எய்ட்ஸ் பாதிப்பைக் குறைப்பது போன்ர பல. இவை பற்றிய முழு விவரங்களை விகிபீடியாவில் பார்க்கவும்.

சரி, லாரன்ஸுக்கு வருவோம். லாரன்ஸ் பிரிடிஷ் நிதி அமைச்சகத்தில் மில்லேனியம் வளர்ச்சி இலக்கை நிர்வகிப்பவர். G8 நாடுகள் கூடிப் பேசும்போது மில்லேனியம் வளர்ச்சி இலக்குக்கு என தாம் அனைவரும் என்ன செய்யவேண்டும் என்பதையும் ஒருமனதாக முடிவெடுப்பார்கள். வரப்போகும் G8 உச்சி மாநாட்டில் அதுபற்றிய விவாதம் நடக்க உள்ளது, ஆனால் பிரிட்டன் நினைப்பதை (அதாவது தான் நினைப்பதை) எல்லாம் பிற நாடுகள் அங்கீகரிக்கப்போவதில்லை, உதவிகள் குறைவாகவே கிடைக்கப்போகின்றன என்று லாரன்ஸ் நினைக்கிறார்.

வேலைக்கு இடையே ஒரு மதியம் பக்கத்தில் உள்ள கஃபேயில் சர்க்கரை அதிகம் போட்ட தேநீரை அருந்தும்போது இடம் கிடைக்காமல், ஓர் இளம்பெண் அமர்ந்திருக்கும் மேசையில் தானும் அமர இடம் கேட்கிறார் லாரன்ஸ். அந்தப் பெண்ணின் பெயர் ஜினா. (அவர் பேச்சை வைத்து அவர் ஒரு ஸ்காட்டிஷ்காரர் என்று தெரிகிறது. முதலில் இத்தாலியனோ என்று நினைக்கத் தோன்றியது.) சில நிமிடங்கள் பேசியபிறகு வாசலுக்குச் செல்லும்போது லாரன்ஸ் ஏதோ உந்துதலில் அந்தப் பெண்ணை ஒருநாள் மதிய உணவுக்கு அழைக்கிறார். அவரது வாழ்வில் முதல்முறை ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஜினாவுடன் மதிய உணவு. அப்பொழுது நிதி அமைச்சர் அந்த உணவகத்துக்கு வருகிறார். ஜினாவுக்கு அப்பொழுதுதான் லாரன்ஸ் நிதி அமைச்சகத்தில் வேலை பார்க்கும் ஒரு "பவர்புல்" மனிதர் என்று தெரிய வருகிறது. அதே நாளில் லாரன்ஸ் மீண்டும் ஜினாவை இரவு உணவுக்கு அழைக்கிறார். பின் தொடர்ந்து தொலைபேசியில் பேசத் தொடங்குகிறார்கள். நிறைய சந்திக்கிறார்கள்.

லாரன்ஸின் தனிமை ஏக்கத்துக்கு ஒரு நல்ல மாற்று. சமூக உறவுகள் பற்றி அதிகம் தெரியாத, பிறரைச் சந்திக்கும்போது தடுமாறும் ஒருவராக லாரன்ஸ் சித்திரிக்கப்படுகிறார். ஜினாவின் பின்னணி பற்றி அவர் தெரிந்துகொள்வதில்லை. ஜினாவிடம் அவர் கேள்விகள் எதுவும் கேட்பதில்லை. இருவருக்குமே இந்த உறவின் மீதான முழுமையான எண்ணங்கள் பிறப்பதில்லை.

தான் G8 கூட்டத்துக்காக ரெய்க்காவிக் (ஐஸ்லாந்து தலைநகரம்) செல்ல இருப்பதாகச் சொல்கிறார் லாரன்ஸ். G8 என்றால் என்ன, மில்லேனியம் வளர்ச்சி இலக்குகள் என்னென்ன ஆகியவை பற்றி ஜினாவுக்கு லாரன்ஸ் சொல்கிறார். ஆப்பிரிக்காவில் பட்டினிச் சாவுகள், கொடிய வறுமை ஆகியவை பற்றியெல்லாம் விளக்குகிறார். ஆனால் அதே சமயம் G8 நாடுகள் அதிகம் ஒன்றும் செய்யப்போவதாகத் தான் நினைக்கவில்லை என்றும் சொல்கிறார். தான் எதிர்பார்ப்பதில் பாதி கிடைத்தால் கூடத் தான் சந்தோஷம் அடையக்கூடும் என்றும் சொல்கிறார். பின், தொலைபேசியில், விருப்பம் இருந்தால் தன்னுடன் ஜினா ரெய்க்காவிக் வரலாம் என்றும் சொல்கிறார். சிறிது தயக்கத்துக்குப் பிறகு ஜினா லாரன்ஸுடன் வர ஒப்புக்கொள்கிறார்.

விமான நிலையத்தில் ஜினா வருவதற்குத் தாமதமாகும்போது, வராமல் போய்விடுவாரோ என்று லாரன்ஸ் தவிக்கிறார். பின்னர் லாரன்ஸும் ஜினாவும் கடைசியாக விமானம் ஏறுகின்றனர். லாரன்ஸின் சக-ஊழியர்கள் ஏற்கெனவே ஜினாவை உணவகத்தில் பார்த்திருக்கின்றனர், ஆனாலும் ஜினா கூட வருவது அவர்களுக்கு ஆச்சரியத்தை வரவழைக்கிறது.

ரெய்க்காவிக் ஹோட்டலில் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டுள்ளது. லாரன்ஸ் ஜினாவுக்குத் தனியறை கிடைக்குமா என்று கேட்டு வரவேற்புத் தொழிலாளரைத் தொந்தரவு செய்கிறார். கிடைக்காமல் போகவே ஜினாவிடம், தான் வேண்டுமென்றே செக்ஸுக்காக இப்படியெல்லாம் திட்டமிடவில்லை என்று மன்னிப்புக் கேட்கிறார்.

முதல் இரண்டு நாள்கள் நடக்கும் கூட்டங்களில் இருந்து சோர்வுடன் திரும்பி வருகிறார் லாரன்ஸ். பொருளாதார பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கும் G8 நாடுகள் (முக்கியமாக அமெரிக்கா) ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பணம் கொடுக்க விரும்புவதில்லை. மான்யமா, கடனா, திறந்த வர்த்தகமா என்ற கேள்விகளைக் கேட்டு திறந்த வர்த்தகம் மூலம் ஏழை நாடுகள் அதிகப் பயன் அடைய முடியும், சீனாவைப் பாருங்கள் என்றெல்லாம் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பேசுவதாகக் காண்பிக்கப்படுகிறது.

அடுத்த நாள் ஜினா, லாரன்ஸ் இருவரும் காபி அருந்தும்போது அங்கு பிரிட்டன் நிதி அமைச்சர், கூட கெர்மன் சான்செலருடன் வருகிறார். பிரிட்டன் நிதி அமைச்சரை ஜினா யாரும் எதிர்பாராத வகையில் கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுக்கிறார். பிரிட்டன், பிற G8 நாடுகள் நிஜமாகவே ஏழை நாடுகளுக்கு உதவ விரும்புகின்றனரா, அமைச்சர் பேசுவது வெட்டிப்பேச்சா அல்லது நிஜமாகவே சாவுகளைக் குறைக்க விரும்புகிறாரா என்று வரும் தீர்க்கமான, ஆனால் மேலோட்டமான கேள்விகள். அமைச்சர் சற்றே ஆடிப்போகிறார். பின் தனது வலது கையைக் கூப்பிட்டு அந்தப் பெண் யார், வெளியே கூடாரமிட்டு பிரச்னை செய்ய வந்திருக்கும் ஆசாமிகளின் உள்கையா என்று விசாரித்து அவளைத் துரத்திவிடுமாறு சொல்கிறார். அவரும் லாரன்ஸைக் கூப்பிட்டு வறுத்தெடுத்து, அந்தப் பெண் யார் என்று கேட்க, லாரன்ஸ் தனக்கு அவரது பின்னணி தெரியாது, தான் அவரைச் சந்தித்தது ஒரு கஃபேயில், அவ்வளவுதான் என்கிறார்.

ஆனால் ஜினாவை லண்டனுக்கு அனுப்புவதில்லை. (இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாள் ஜினா லாரன்ஸ் எதிர்பார்க்காமலேயே அவருடன் உடலுறவு கொள்கிறார்.) ஜினாவின் பின்னணி என்ன என்று லாரன்ஸ் கேள்வி கேட்கும்பொழுது ஜினா சர்வ சாதாரணமாக தான் லாரன்ஸைச் சந்திக்கும் முன்புதான் ஜெயிலிருந்து வெளியே வந்ததாகச் சொல்கிறார்.

அடுத்த நாள் பிரிட்டன் பிரதமர் கொடுக்கும் டின்னர். தான் "நல்லபடியாக" நடந்து கொள்வதாகச் சொன்னாலும், பிரதமர் கொடுத்த பேச்சை அடுத்து, அவரை இடைமறிக்கிறார் ஜினா. டின்னர் ஹாலில் நிசப்தம். தொடர்ந்து ஒரு பிரமாதமான அரசியல் பேச்சு. ("உங்களால் முடியும் எனும்போது இத்தனை அநியாயச் சாவுகளைத் தடுக்கப் பாருங்கள். பத்து வருடங்கள் கழித்து இன்னொரு தலைமுறை அரசியல்வாதிகள் இதைப்பற்றிப் பேசும்போது, பத்து வருடங்களுக்கு முன்னர் சாவுகளைத் தடுக்கக்கூடிய வாய்ப்பு இருந்தும் தவறவிட்டவர்கள் என்று உங்களைச் சாடுவதற்கு விடாதீர்கள்.")

பேசி முடிந்ததும், ஜினா சத்தமின்றி வெளியேற்றப்பட்டு, விமானத்தில் ஏற்றப்பட்டு லண்டனுக்குக் கொண்டுசெல்லப்படுகிறார். நிதி அமைச்சர் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விடுகிறார். லாரன்ஸ் தான் பதவி விலகத் தீர்மானித்திருப்பதாகச் சொல்கிறார். ஆனால் அன்று இரவு பிரிட்டன் நிதி அமைச்சர், பிரதமர் நிலைகளில் மாற்றம். பிற நாடுகள் முன்வைக்கும் சமரசத்தை ஏற்றுக்கொள்ளாமல் கடுமையாக வாதாடி மில்லேனியம் இலக்குகளை நிறைவேற்ற G8 நாடுகளை சம்மதிக்க வைப்பதில் பெரும் முன்னேற்றம் அடைகிறார்கள்.

லாரன்ஸ் - ஜினா காதலுக்குக் கிடைத்த வெற்றி. படத்தின் tagline "Love can't change what's wrong in the world. But it's a start."

-*-

படத்தை நேர்த்தியாக எடுத்துள்ளனர். நடிப்பு நன்றாக உள்ளது. ஆனால் G8 பற்றியும் ஆப்பிரிக்க நாடுகளின் கஷ்டத்தைப் பற்றியும் விளக்கமாகத் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிகளை அமைத்திருக்கலாம். சாதாரணப் பார்வையாளர்களால் G8 பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியுமா என்று தெரியவில்லை.

ஆனால் படத்தின் கதை மோசம். ஒரு சாதாரணப் பெண்ணின் பேச்சுகளால் பழுத்த அரசியல்வாதிகள் திடீரென்று மனம் மாறுவதாகவும், ஒரு நாடு பிற ஏழு நாடுகளை முற்றிலுமாக தன் வழிக்குக் கொண்டுவருவதாகவும் சொல்வது மோசமான ரொமாண்டிசிசம். G8 குழுவின் வரலாற்றைப் பார்த்தால் அதனால் ஏழை நாடுகளுக்கு என்றுமே நன்மை இருந்ததில்லை என்று புரிந்து கொள்ளலாம். கடைசியாக ஸ்காட்லாந்து க்ளெனிகில்ஸில் G8 உச்சி மாநாடு நடந்த நேரத்தில்தான் லண்டனில் குண்டுகள் வெடித்தன. இந்தப் படம் அதற்கு முன்னால் உருவானது. க்ளெனிகில்ஸ் மாநாட்டின் போது உலகின் ஏழைமையைக் குறைக்க இத்தனை பில்லியன் டாலர்கள் கொடுத்துள்ளோம், அத்தனை பில்லியன் டாலர்கள் கடன்களை ரத்து செய்கிறோம் என்றெல்லாம் பொய் சொல்லி, புரட்டுக் கணக்குகளைத்தான் சொல்கின்றனர் என்பதை ஜார்ஜ் மோன்பியாட் போன்றோரின் கட்டுரைகளின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

முக்கியமாக அமெரிக்கா தடையற்ற வர்த்தகம் என்ற நிலையில்தான் மான்யம்/கடன் வழங்குவோம் என்று சொல்லியே அமெரிக்க நிறுவனங்களின் நலனையே முன்வைக்கிறது. பல ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தகத்துக்கான சந்தைகளாக்கப்படுகின்றன. ஆப்பிரிக்க நாடுகளுக்கு பதிலுக்கு அமெரிக்காவுக்குக் கொடுக்க ஒன்றும் இருப்பதில்லை. இருக்கும் சில கணிம வளங்களும் G8 நாடுகளில் உள்ள முதலாளிகளின் கைகளுக்குப் போய்விடுகிறது. அதனால் எந்த நன்மையும் ஆப்பிரிக்க ஏழைகளுக்கு, உணவால் வாடுபவர்களுக்குப் போவதில்லை.

G8 நாடுகளின் தலைமையில் இருப்பவர்களுக்கு தத்தம் நாடுகளின் பிரச்னைகள்தான் முக்கியமே தவிர ஆப்பிரிக்க ஏழைமை முக்கியமல்ல. மற்றபடி அவர்கள் பேசுவதெல்லாம் பசப்பு வார்த்தைகள்தான். ஏதாவது கடன் பற்றி பேச்சு வந்தால் உடனே அந்தந்த நாடுகளின் சர்வாதிகார ஆட்சிகள்தான் பிரச்னை, அங்கெல்லாம் குடியாட்சி வரவேண்டும் என்று ஒரு பேச்சு வரும். குடியாட்சி தேவைதான். ஆனால் இதே G8 நாடுகள்தான் தனக்கு வேண்டிய இடங்களில் எல்லாம் சர்வாதிகாரிகளை முன்னுக்குக் கொண்டுவந்தவர்கள். பாகிஸ்தானில் குடியாட்சியைப் பற்றியோ, சவுதி அரேபியாவில் குடியாட்சியைப் பற்றியோ பேச மாட்டார்கள்.

பட்டினியில் வாடுபவனுக்கு உடனடியாக உணவு கொடுப்பது மட்டுமல்ல, அவர்களை அவர்களது வழியில், பிரச்னையின்றி வாழ வைப்பதற்கு G8 நாடுகள் - முக்கியமாக அமெரிக்கா, பிரிட்டன் இரண்டும் - சண்டைக்காகச் செலவிடுவதில் ஒரு பகுதியைக் கொடுத்தால் கூடப்போதும். அப்படிக் கொடுக்க விருப்பமில்லை என்றால் கூடப் பரவாயில்லை, தாங்கள் நிறையச் செய்ய ஆசைப்படுவதாகப் பொய் சொல்லவேண்டியதில்லை.

இந்தப் படத்தின் தொழில்நுட்ப செய்நேர்த்தியைத் தவிர பிற அனைத்தும் எனக்கு ஏமாற்றத்தையே தந்தன. ஆனாலும் பார்க்கவேண்டிய படம் என்று சிபாரிசு செய்கிறேன். லாரன்ஸாக நடித்த Bill Nighy நிறைவாகச் செய்துள்ளார். ஜினாவாக நடித்த Kelly Macdonald தேவலாம். லாரன்ஸ் பாத்திரப் படைப்பு நன்றாக வந்துள்ளது. லாரன்ஸின் தடுமாற்றங்கள், subdued பாத்திரம், தன் கருத்துகளை அழுத்தமாக முன்வைக்கத் தெரியாத வலுவற்ற தன்மை ஆகியவை மிக நன்றாக வந்துள்ளன. தயங்கித் தயங்கிப் பேசுதல், தனது செயல்களை பிறார் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற ஆதங்கம் ஆகியவை நடிப்பில் நன்றாக வெளிப்படுகிறது.

ஜினாவின் பாத்திரப் படைப்பு இன்னமும் ஆழமாக இருந்திருக்கலாம். ஜினாவின் பின்னணி வருவதில்லை. யாரையோ கொலை செய்தார் என்பதற்காக அவர் ஜெயிலுக்குப் போயிருக்கிறார். ஏன், எதற்கு என்ற லாரன்ஸின் கேள்விகளுக்கு ஒற்றை வரியில் ஜினா பதில் தருகிறார். அவ்வளவுதான். தைரியமாக பல தலைவர்கள் இருக்கும் அவையில் ஆணித்தரமாகப் பேச எப்படி எவருக்குக் கூடியது என்பது சரியாக வரவில்லை. அவருடைய படிப்பு, பொருளாதார அறிவு குறைவு, அரசியல் ஈடுபாடுகள் என்று எதுவும் இல்லை என்றாலும் ஹாலிவுட் பாணியில் கடைசிப்பேச்சு எங்கிருந்து அவ்வளவு சரளமாக வருகிறது என்பதை டைரக்டர் விளக்குவதில்லை. ஒருவேளை ஜெயிலில் கற்றுக்கொண்டாரோ என்னவோ!

லாரன்ஸ் - ஜினா ஈர்ப்பு ஓரளவுக்கு நன்றாகவே கையாளப்பட்டிருக்கிறது. ஜினா நிச்சயம் லாரன்ஸை விரும்புகிறார் என்று தெரியவருகிறது. ஆனால் ரெய்க்காவிக் ஹோட்டலில் லாரன்ஸ் தூக்கம் வராமல் திண்டாடிக்கொண்டிருக்கும்போது தன் ஆடைகளைக் களைந்து அவருக்கு சிறிது "கேளிக்கை" அளித்து, அவரது டென்ஷனைக் குறைப்பது போல வருவது படு அபத்தம். பெண்களின் தலையாயக் கடமை என்ன என்று ஹாலிவுட் கொடுத்திருக்கும் ஃபார்முலா இந்தப் படத்திலும் புகுந்திருக்க வேண்டியதில்லை.

எல்லாவற்றையும் விடப் பெரிய குறை - ஒரு சாதாரணப் பேச்சு, உலகின் பெருந்தலைவர்களை உசுப்பி விட்டு உலகின் மிகக் கடுமையான பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வை ஒரே நாளில் கண்டுபிடிக்க வைக்கிறது - எனப்படும் அபத்தமான கற்பனாவாதம்.

If only wishes were horses...

1. IMDB Database
2. HBO Site

Wednesday, October 05, 2005

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்

நேற்று அலஹாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து கிடையாது என்று சொல்லியிருக்கிறது. இதுபற்றிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் நியூஸ் இங்கே.

அலிகார் பல்கலைக்கழகம் மைய அரசினால் சட்டமியற்றிக் கொண்டுவரப்பட்டதாலும், சிறுபான்மை முஸ்லிம்களால் உருவாக்கப்படாததாலும் அதற்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்கக் கூடாது என்று 1968-ல் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்திருந்ததாம். ஆனால் 1981-ல் இந்திரா காந்தி காலத்தில் மைய அரசு ஒரு சட்டத் திருத்தத்தின் மூலம் அந்தப் பல்கலைக்கழகத்தை மீண்டும் சிறுபான்மை அந்தஸ்து உடையது என்று மாற்றியுள்ளது. அதை இப்பொழுது அலஹாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். ஆனால் கடந்த சில உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைப் பார்க்கும்போது நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் எதிரானதாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

இங்கு மிகவும் அடிப்படையான ஒரு கேள்வி எழுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆர்ட்டிகிள் 30(1)-ன் கீழ் சிறுபான்மையினர் எவரும் தமக்கென கல்வி நிறுவனங்களைக் கட்டலாம். ஆனால் ஓர் அரசு இயந்திரம் பொதுப்பணத்தை வைத்துக்கொண்டு கட்டும் கல்வி நிறுவனத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தைத் தரமுடியுமா? அதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் இருக்கிறதா?

முடியாது என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறார் அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி.

ஆனால் என் கணிப்பில் மைய அரசுக்கோ, மாநில அரசுகளுக்கோ இம்மாதிரி செய்வதற்கு அதிகாரம் இருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். சிறுபான்மையினர் வளர்ச்சிக்கென நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதைப்போலவே சிறுபான்மையினர் நலனுக்கென சிறுபான்மையினர் இட ஒதுக்கீடுடன் சேர்த்து கல்வி நிறுவனங்களை அமைக்க அரசுகளுக்கு முழு உரிமை இருக்க வேண்டும்.

பிஹார் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி தனது தேர்தல் அறிக்கையில் அலிகார் முஸ்லிம் பல்கலை போலவே பிஹாரிலும் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் அங்கு முஸ்லிம்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால் அலஹாபாத் தீர்ப்பு மேற்படி வாக்குறுதியை நிறைவேற்றுவதில் முட்டுக்கட்டைகளைப் போடும்.

எதிர்பார்த்தது போலவே பாஜகவின் முஸ்லிம் முகமூடி நக்வி இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளார். அதற்கு அவர் சொல்லும் காரணம் சிரிப்பை வரவழைக்கிறது. அதாவது இட ஒதுக்கீடு வழியாக ஒரு முஸ்லிம் கல்வி பெற்று வந்தார் என்றால் அவருக்கு யாரும் வேலை கொடுக்க மாட்டார்களாம். அதனால் இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு எதிரானது என்கிறார். யாருடைய கல்விச் சான்றிதழிலும் "இவர் இட ஒதுக்கீட்டில் உள்ளே நுழைந்தவர்" என்று முத்திரை குத்தித் தருவதில்லை. மேலும், இட ஒதுக்கீட்டில் கல்வி நிலையங்களுக்கு உள்ளே வரும் மாணவர்கள் குறைந்த தகுதியுடன்தான் தேர்ச்சி பெறுகிறார்கள் என்ற கூற்று சரியானது என்று யாரும் நிரூபித்ததில்லை.

கல்வியைப் பொறுத்தமட்டில் கடந்த சில வருடங்களாகவே எதற்கெடுத்தாலும் வழக்குகளை நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்வது என்பது வாடிக்கையாகியுள்ளது. இது நல்லதல்ல.

இட ஒதுக்கீடு பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பான என் பதிவுகள்: ஒன்று | இரண்டு

Tuesday, October 04, 2005

சென்னை பார்க் ஹோட்டல் விவகாரம் + குஷ்பூ

"Let us get some things straight. As long as a person is an adult, and does not kill, maim, molest, rape, abuse, or spit on anyone, how he or she chooses to lead his or her life should be their business alone, strictly off-limits to anyone else. That includes the clothes they wear, the books they read, the music they listen to, the films they watch. It includes life choices such as finding a career, making friends, marrying, staying single, getting a divorce, having children or not. Some people are wise in what they do, some are foolish, some have good taste, some bad. But as long as it does not harm anyone else, no one can stop anyone from doing what they want. To argue that my children and I could be influenced adversely by someone else's conduct that I find distasteful, and therefore I must do everything to stamp it out, is only to expose what little faith I have in my own way of life, my values and conduct and in the way I have brought up my children." - நிருபமா சுப்ரமணியன், தி ஹிந்து கருத்துப் பத்தி

மேற்படி பத்தியை முழுமையாகப் படியுங்கள்.

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அணியவேண்டிய ஆடைகள் பற்றிய விதிமுறைகள் என்னைப் பொறுத்தமட்டில் அபத்தமானவை. ஆனால் மொபைல் போன்கள் பற்றிய விதிகள் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டியவை. ஆடைகளுக்கான விதிமுறைகள் பெண்களைக் கட்டுபடுத்தத்தான் என்பதும் திண்ணம்.

பார்க் ஹோட்டலில் இளம் பெண்கள் மது அருந்துவது பற்றி இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசக் கொழுந்துகள் கண்டறிந்து புகைப்படத்துடன் எழுத அதனால் சென்னைக் காவல்துறை ஆணையர் கடுப்புடன் பார்க் ஹோட்டலை இழுத்துமூட உத்தரவிட்டார். நீதிமன்றம் வரை சென்றுள்ளது இந்த வழக்கு.

பார்க் ஹோட்டல் பிழைத்துக்கொண்டுவிடும். ஆனால் பாவம் குஷ்பூ. அவர் சொன்னது அவர் கருத்து, அது எனக்கு ஏற்புடையதல்ல என்று சிலர் சொல்லிவிட்டுப் போகலாமே? இல்லையாம். தமிழ் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி விட்டாராம். அதனால் பாமக கட்சி அனுதாபிகள் ஊர் ஊராக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். இதை குஷ்பூ எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்று தெரியவில்லை. நீதிமன்றங்களும் அபத்தமாக இந்த வழக்குகளை எடுத்துக்கொண்டு குஷ்பூவை நேரில் ஆஜராகச் சொல்கின்றன. இதுபோன்ற frivolous வழக்குகளை ஒரேயடியாக டிஸ்மிஸ் செய்திருக்கவேண்டும்.

"தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசினார்" என்று ஒருவர் மீது குற்றம் சாட்ட முடியுமா? தமிழ்ப் பெண்களையோ, தமிழ் ஆண்களையோ, தமிழ் வக்கீல்களையோ, தமிழ் அரசியல்வாதிகளையோ - இழிவாகப் பேசக்கூடாதா? அதற்குக்கூட இந்த நாட்டில் உரிமையில்லையா? இப்பொழுது குஷ்பூ மீது போடப்படும் வழக்குகள் harassment வகையைச் சார்ந்தது. வழக்கில் என்ன தீர்ப்பு வந்தாலும் சரி, உன்னை அலைக்கழித்துவிட்டேன் பார்! என்ற திமிர், மமதை. தங்கர் பச்சானைப் பற்றி வாய்க்கொழுப்புடன் பேசினாயா, இப்பொழுது திண்டாடு, என்ற குரூரம்.

தனி மனிதனை ஆதாரமில்லாமல் இழிவாகப் பேசினால், வார்த்தைகளைத் திரித்து தவறான அர்த்தம் கற்பித்தால், ஒரு மனிதனது கண்ணியத்தைக் குலைக்குமாறு பேசினால் அது defamation. இதுவே libel, slander போன்ற வார்த்தைகளாலும் அறியப்படும். இதற்கு எதிராக பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடுக்க முடியும். இங்கும் இழிவாகப் பேசியவர் உள்ளர்த்தத்துடன், வேண்டுமென்றே எதிராளி மனரீதியாகவும், பணரீதியாகவும் பாதிக்கப்படவேண்டும் என்று பேசியிருந்தார் என்று நிரூபிக்கவேண்டும். ஆனால் போகிறபோக்கில் சொன்ன ஒரு சொல்லை - அது ஏற்புடையதோ, இல்லையோ - வைத்துக்கொண்டு அவரை அலைக்கழிக்க ஓர் அரசியல் கட்சி களத்தில் குதித்திருப்பது படு கேவலமான செய்கை.

இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். பாமக, விடுதலைச் சிறுத்தைகள் இரண்டு கட்சிகளும் இப்படிக் கேவலமான முறையில் நடந்து கொள்வது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது.

கலாசார போலீஸ்காரர்கள் வரும் தேர்தலில் மண்ணைக் கவ்வினால் எனக்கு சந்தோஷமே.

காணாமல் போன கராத்தே தியாகராஜன்

கராத்தே தியாகராஜன் என்று பெயரிலேயே அடிதடியைத் தாங்கி நிற்கும் சென்னை நகரத் துணை மேயர் (அதிமுக), கடந்த பத்து தினங்களாகத் தலைமறைவாக இருக்கிறார். இதைப்பற்றி தமிழ்ப் பத்திரிகைகளும் சன் டிவி சானலும்தான் கவலைப்படுவது போலத் தெரிகிறது. தி ஹிந்து கண்டுகொள்ளவில்லை. (அல்லது கண்டுகொண்டிருந்து என் கண்ணில்தான் படவில்லையோ என்னவோ!)

திமுகவின் ஸ்டாலின் மேயர் பதவி செல்லாது என நீதிமன்றத் தீர்ப்பு வந்ததும், மிஸ்டர் கராத்தே முன்னுக்கு வந்தார். இவருடைய வேலை எப்படியாவது நகரசபைக் கூட்டத்தை நடத்தவிடாமல் செய்வது என்று தோன்றியது. கூட்டம் தொடங்கியவுடனேயே கருணாநிதியைப் பற்றி ஏதாவது விஷமமான ஸ்டேட்மெண்ட். உடனே அதற்காகவே காத்திருந்தது போல திமுக உறுப்பினர்கள் சத்தம் போடுவார்கள். "குண்டுகட்டாக" (இப்படித்தான் சன் டிவி சொல்கிறது), திமுக உறுப்பினர்கள் தூக்கி எறியப்படுவார்கள். "இது ஜனநாயகப் படுகொலை" என்று அவர்களும் சன் டிவி கேமராவுக்குச் சொல்வார்கள். கூட்டம் காலவரையரை இன்றி ஒத்திப் போடப்படும். அல்லது எல்லா மசோதாக்களும் நிறைவேற்றப்படும்.

இப்படி தன் தலைவியின் சொல்படி நடந்துகொண்டவர் தனியாக - மேலிடத்துக்குத் தெரியாமல் - என்ன செய்தாரோ என்னவோ. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டாம். தன்மீது குற்றச்சாட்டை சுமத்த கார்பொரேஷன் கமிஷனருக்கு எந்தவித அனுமதியும் இல்லை என்கிறார். இந்தப் பதவிக்கெல்லாம் கவர்னரிடம் அனுமதி பெற்றுத்தான் குற்றம் சுமத்தவேண்டுமா என்ன?

இப்பொழுது தலைமறைவாக இருக்கும் காரணம், காவல்துறையிடம் மாட்டினால் "அம்மாவை மகிழ்விக்க", இவரைப் பின்னிப் பெடலெடுத்து விடுவார்கள் என்பதாலும் இருக்கலாம். இல்லாவிட்டால் வழக்கமான, "இவரிடம் கஞ்சா இருந்தது" என்ற அரிய கண்டுபிடிப்பை முன்வைத்து இவரை நார்கோடிக்ஸ் வழக்கில் உள்ளே தள்ளிவிட வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த முறை சென்னை நகரமன்றத் தேர்தலின்போதாவது நிறைய சுயேச்சைகளுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும். உள்ளாட்சித் தேர்தலிலாவது கட்சிகளை ஒழித்தால் நன்றாக இருக்கும்.