Thursday, June 30, 2005

இந்தி எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனம்

Known Turf வலைப்பதிவிலிருந்து Lit, a critic view and half a question

சுதீஷ் பச்சவுரி சொல்வது:
இன்றைய எழுத்தாளர்கள் எந்தப் புதிய உண்மையையும் சொல்லிவிடவில்லை. அவர்கள் இளைய சமுதாயத்தைக் பற்றியோ, புதிய கருத்துகளையோ எழுதுவதில்லை. இப்பொழுது எழுதுபவர்கள் தாம் ஓர் எழுத்தாளர் என்ற பட்டத்தை விரும்புகிறார்கள். அவர்கள் விருதுகளைப் பெற விரும்புகிறார்கள். பெரும் எழுத்தாளர்கள், விமர்சகர்கள் ஆகியோரைத் தெரிந்து வைத்திருப்பதாலும், அவர்களுக்கு வேண்டியதைச் செய்வது, சாராயம் வாங்கிக்கொடுப்பது போன்றவற்றாலும் விருதுகளைப் பெறுகிறார்கள்.

இவர்கள் சுயவிரும்பிகள், தலைகனம் கொண்டவர்கள், இரட்டை நாக்கினர். இதுதான் பிரச்னையே. இவர்களுக்கு மீடியாவில் தோன்றிக்கொண்டே இருப்பதில் விருப்பம். ஆனால் வெகுஜன ஊடகங்களை வெறுப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள். சந்தைக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டு உலகமயமாக்கலின் நன்மைகளை உறிஞ்சிக்கொண்டே, தான் ஒரு கலகவாதி என்பதாகக் காட்டிக்கொள்வதற்காக சந்தைக்கு எதிரானவர்களாகத் தங்களைக் காட்டுகிறார்கள். தங்கள் பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டு தாங்கள் அமெரிக்காவுக்கு எதிரானவர்கள் என்று சொல்கிறார்கள்.

கடைசியாக மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகம் (இந்தியில்) எப்பொழுது எழுதப்பட்டது தெரியுமா? 1949-ல் தர்மவீர் பாரதி என்பவர் எழுதிய குனாஹோன் கா தேவதா என்ற நாவல்தான் அது. இது அலஹாபாத் கல்லூரி அரசியல்களுக்கிடையே அமைக்கப்பட்ட காதல் கதை. இன்றளவும் கூடத் தொடர்ந்து விற்பனையாகி 49 பதிப்புகளைத் தொட்டிருக்கிறது. சினிமாவாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய எழுத்தாளர் எவரும் இந்த நிலையை அடையவில்லை! அவர்கள் யாருக்கும் இன்றைய இளைய சமுதாயம் என்ன விரும்புகிறது என்று தெரியாது.

புஸ்தக் மஹால் பதிப்பாளர்களுக்கு அதிக லாபம் பெற்றுத்தந்த புத்தகம் எது தெரியுமா? அதுதான் "ரேபிடெக்ஸ் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்". ஓர் அச்சு இயந்திரம் இந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்கென்றே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. பதினெட்டு மொழிகளில் மாற்றப்பட்டு, கோடிக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ளது.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? இந்நாட்டு இளைஞர்கள் ஆங்கிலத்தில் பேச விரும்புகிறார்கள், ஆங்கிலம் தெரிந்தால்தான் பிழைக்க முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் எந்த எழுத்தாளராவது இதைப்பற்றி எழுதியிருக்கிறாரா?

வாசகர்களின் உலகம் மாறிவிட்டது. எழுத்தாளர் இதைக் கவனிக்க மறந்துவிட்டார்...

இலக்கியம் என்பது ஒரேமாதிரியாக இருப்பதல்ல. மாறிக்கொண்டே இருப்பது. பொதுமக்களின் விருப்பங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. தொடர்ச்சியாக இந்த விருப்பங்கள் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்படுகின்றன. நாம் மக்களின் விருப்பங்களை மாற்றியமைக்க வேண்டும், அதே நேரத்தில் இப்பொழுதைய விருப்பங்களுக்குத் தீனி போடவும் வேண்டும். செய்தித்தாள்கள் இப்பொழுது இதைச் செய்வதில்லை. ஆனால் நாம் இதனைச் செய்யவேண்டும், ஆனால் சரியான ஊடக வசதியில்லாமல் இதனைச் செய்யமுடியாது. இது மற்றுமொரு பிரச்னை.

முந்தைய எழுத்தாளர்கள் தங்களுடைய பாத்திரங்களுக்கு இடையே வசித்தார்கள். சதாத் ஹஸன் மாண்டோ மும்பையில் வசித்தார். தொழிலாளர்களுடனும் பாலியல் பெண்களுடனும் பேசினார். இன்றைய எழுத்தாளர்கள் வசதியில் வாழ்கிறவர்கள். அவர்களுக்கு ஏழைமை பற்றி என்ன தெரியும்? நாட்டில் மிகப்பெரிய சுனாமி வந்தது; எத்தனை எழுத்தாளர்கள் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தனர்?

இந்தி எழுத்தாளர்களுக்கு சாதாரணப் பொதுமக்களுடனான தொடர்பு சிறிதும் இல்லை என்பதுதான் பிரச்னை. அதனால்தான் பொதுமக்களைப் பொறுத்தவரை மிகச்சில பெரிய பெயர்களே - கவிதையாகட்டும், கதைகளாகட்டும் - இருக்கின்றன. அவர்களிடம் சென்றால்தான் தங்களுடைய தேவைகளும் அபிலாஷகளும் பூர்த்தியாகும் என்று மக்கள் அறிந்துகொண்டுள்ளனர். எழுத்தாளர்கள் நம்மை எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளைப் பற்றி எதுவும் எழுதுவதில்லை. அந்தப் பிரச்னைகள் என்னவென்றே அவர்களுக்குத் தெரிவதில்லை!
தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி நாம் என்ன சொல்லலாம் என்று நினைக்கிறீர்கள்?

தினமணி கருத்துப் பத்திகள்

இன்றைய தினமணி நடுப்பக்கத்தில் இரண்டு கட்டுரைகள்:

பாவண்ணன்: வாசிப்பும் வாழ்க்கையும்

அசோகமித்திரன்: அகாதெமி விருதுகள்

[சங்கீத் நாடக் அகாதெமி பிரச்னை பற்றிய என் பதிவு]

Wednesday, June 29, 2005

என் பள்ளியின் நூற்றாண்டு விழா

From The Hindu: Centenary celebration of National Higher Secondary School, Nagapattinam

நாகையில் நான் படித்த, என் தந்தையார் வேலை செய்த தேசிய மேநிலைப் பள்ளியின் நூறாவது ஆண்டுவிழா கொண்டாடப்பட இருக்கிறது. நாளை நடக்கும் இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வருகிறார்.

1904-ல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிக்கூடம் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் நான்கைந்து பள்ளிக்கூடத்தில் ஒன்றாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

2004-ல் நடக்கவிருந்த நூற்றாண்டு விழா, ஜெயேந்திர சரசுவதியின் கைது நிகழ்ச்சியால்தான் தள்ளிப்போடப்பட்டது என்று கேள்வி. அதாவது அந்த நேரத்தில் அப்துல் கலாம் தமிழகம் வர விரும்பவில்லை என்று ஒரு தகவல். வந்தால் அவரிடம் ஏதாவது எடக்கு மடக்காக கேள்விகள் கேட்கப்படுமோ என்று அவர் அஞ்சியிருக்கலாம். ஆனால் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களுக்கு உள்ளாக நாகையில் சுனாமியால் மாபெரும் அழிவு ஏற்பட்டது. அதனால் ஒட்டுமொத்தமாக இந்த நூற்றாண்டு விழாவையே தள்ளிவைத்துவிட்டார்கள். இப்பொழுது மீண்டும் குடியரசுத் தலைவரின் தமிழகம் வரும் நேரம் விழாவை நடத்துகிறார்கள்.

---

நாகையில் ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய இந்தப் பள்ளி இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை. என்னுடைய 10வது, 12வது வகுப்பு வருடங்களைத் தவிர்த்து, பிற வருடங்களில் (முன்னும், பின்னும்) நாகையின் தென்னிந்தியத் திருச்சபை மேநிலைப் பள்ளிதான் பொதுவாக முதலிடத்தில் இருந்து வந்திருக்கிறது. இப்பொழுதும் அதில் அதிக மாற்றம் இருக்கும் என்று தோன்றவில்லை.

நாகை/நாகூரில் மொத்தமாக ஐந்து பள்ளிகள் இருந்தன : தேசிய மேநிலைப் பள்ளி நாகையிலும், நாகூரிலுமாக (இரண்டு கட்டடங்களிலிருந்து), தென்னிந்தியத் திருச்சபை மேநிலைப் பள்ளி, புனித அந்தோணியார் மேநிலைப் பள்ளி, நகராட்சி மகளிர் மேநிலைப் பள்ளி (மகளிர் மட்டும்), நடராஜன் தமயந்தி மேநிலைப் பள்ளி. ஆனால் இவற்றுக்குப் பிறகு புதிதாகக் கட்டப்பட்ட பள்ளிகள் அனைத்துமே தனியாருடைய மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான். புதிய பள்ளிக்கூடங்கள் எதிலும் சரியான வசதிகள் உள்ளனவா என்று சொல்லமுடியவில்லை. ஆசிரியர்கள் கூட, தரமானவர்களா, தகுதியுடையவர்களா என்று தெரியாது. படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக, அரசுத் தரப்பிலிருந்து புதிய பள்ளிகள் உருவாகவில்லை. வணிக நோக்குடைய தனியார்கள் மட்டும்தான் கல்வி விற்பனையில் இறங்கியுள்ளார்கள் என்று தோன்றுகிறது.

Tuesday, June 28, 2005

இணையத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள்

ரவி ஸ்ரீநிவாஸ் தன்னுடைய பதிவில் பல முக்கிய விஷயங்களைத் தொட்டுப்பேசியிருக்கிறார்.

சந்தர்ப்பவசமாக நேற்று மாலை ஓர் இடதுசாரி நண்பருடன் இதுபற்றி நானும் பேசிக்கொண்டிருந்தேன். தமிழகத்தில் நூலகம் சார்ந்த ஓர் இயக்கம் சரியான முறையில் வரவேண்டும். வாசகர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் உபயோகமாக, இணையத்தைப் பயன்படுத்திப் பல காரியங்களைச் செய்யமுடியும் என்றெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ரவியின் கருத்துகள்:
  1. தமிழில் இப்போது ஏராளமான நூல்கள் வெளியாகின்றன. இவை குறித்த தகவல்கள் இணையத்தில் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைக்க யாராவது ஏற்பாடு செய்தால் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.
  2. அது போல் இணையத்தில் தமிழ் புத்தகங்களுக்கான ஒரு மதிப்புரை இதழுக்குத் தேவை இருக்கிறது என்று தோன்றுகிறது. அல்லது குறைந்தபட்சம் புத்தகங்கள் குறித்த தகவல்கள், மதிப்புரைகளைக் கொண்ட ஒரு வலைப்பதிவாவது இருக்க வேண்டும்.
  3. மேலும் இப்போது வெளியாகும் நூல்களை மின் நூல்களாகவும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் ஆராய வேண்டும்.
அத்தனையும் முக்கியமான, செய்யவேண்டிய விஷயங்கள். எப்படிச் செய்வது, யார் செய்யலாம் என்பது பற்றி நேற்று மாலை நாங்கள் பேசியதை, கீழே சுருக்கமாகத் தருகிறேன்.

தமிழில் சுமார் 500 பதிப்பகங்கள் உள்ளன. இதில் சுமார் 50தான் வருடம் முழுவதும் புத்தகங்கள் வெளியிடுகின்றன. மற்றவை ஜனவரி புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு 10-15 புத்தகங்கள் தயார் செய்தால் பெரிய விஷயம். இந்த ஐநூறில் சொந்தமாகப் புத்தகங்கள் பதிப்பிக்கும் எழுத்தாளர்களும் அடங்குவர். பாடப்புத்தகங்கள், கோனார்/வெற்றி போன்ற கையேடுகள் தயாரிப்போரை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

எனவே இந்த முக்கியமான ஐம்பது பதிப்பாளர்கள் மாதாமாதம் தாம் வெளியிடும் புத்தகங்கள் பற்றிய முழுத்தகவலைக் கொடுத்தால், பிற சிறு பதிப்பாளர்கள் தாமாகவே வந்து இணைந்துகொண்டு தமது தகவல்களை அளிக்க முன்வருவர். ஆனால் இந்த ஐம்பது பெரிய ஆசாமிகளிடம் தகவல் வாங்குவது என்பது மிகுந்த சிரமமானது. சிலர் பேசவே மாட்டார்கள். பபாஸி என்றொரு #$^%%^*&^ பதிப்பாளர் சங்கம் உள்ளது. அது இதுபோன்ற நல்ல காரியங்களில் ஈடுபட விரும்புவதில்லை.

இந்த விஷயத்தை ஒரு பதிப்பாளர் தொடங்கினால் என்னவோ ஏதோ என்று சந்தேகத்துடன் பிற பதிப்பாளர்கள் பார்க்க நேரிடும். எனவே இது ஒரு வாசகர் இயக்கமாகத்தான் ஆரம்பிக்கப்படவேண்டும். அதற்காக சில தன்னார்வத் தொண்டர்களைத் திரட்டுவதாகச் சொல்லியிருக்கிறார் நண்பர். ஒவ்வொரு மாதமும் பதிப்பாளர்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து அவர்களிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பது இவர்கள் வேலையாக இருக்கும். என்னென்ன தகவல்களைச் சேகரிப்பார்கள்?
  • புத்தகத்தின் பெயர்
  • ஆசிரியர் பெயர்
  • பதிப்பின் பெயர்
  • பக்கங்கள்
  • விலை
  • அட்டைப்படம் (ஸ்கேன் செய்யப்பட்டது, குறிப்பிட்ட அகலம், உயரம் பிக்செல்களில்)
  • பின்னட்டைச் சுருக்கம் (பதிப்பாளரே வெளியிடுவது)
  • ISBN எண் (இருந்தால்)
சேமித்த தகவல்களை இணையத்தில் ஒரு தளத்தில் சேர்த்ததும், அங்கு இன்னமும் சில தகவல்களைச் சேர்க்கவேண்டும் (எந்தத் துறையைச் சேர்ந்தது). பின் இந்தத் தளத்தில் பல்வேறு RSS ஓடைகளை உருவாக்கலாம். வேண்டுபவர்கள் இந்த ஓடைகளைப் பின்பற்றி புதிதாக வந்திருக்கும் புத்தகங்கள் பற்றி முதல் தகவல் அறிந்து கொள்ளலாம்.

இணையம் பற்றிய புரிதல் இருக்கும் பதிப்பகங்கள் (அதாவது இரண்டு அல்லது மூன்று பேர்) நேரடியாகவே இந்தத் தகவல்களை இணையம் மூலமாகவே சேர்த்துவிடலாம். அதை ஒரு தள நிர்வாகி பார்த்து, அனுமதி தந்தவுடன் தரவுத்தளத்தில் தகவல்கள் சேர்ந்துவிடும். சிறு பதிப்பாளர்கள், தனியார் ஆகியோரும் இந்த வழியாக புத்தகங்களைச் சேர்க்கமுடியும்.

பதிப்பில் இல்லாத புத்தகங்களை, அப்புத்தகங்களை வைத்திருக்கும் வாசகர்கள் தாங்களே சேர்க்கலாம் - இந்தப் புத்தகம் பதிப்பில் இல்லை என்ற தகவலுடன்.

இந்த முதல்படிக்கு அடுத்தபடியாக, புத்தகங்களுக்கான அறிமுகவுரை எழுதுவது. இதற்கு புத்தகங்களை இலவசமாக வழங்க பதிப்பாளர்கள் முன்வரவேண்டும். அது உடனடியாக நடக்காது என்று தோன்றுகிறது. அதனால் முதலில் தனி ஆர்வலர்கள் தாம் காசு கொடுத்து வாங்கும் புத்தகங்களை அறிமுகப்படுத்தி சிறு பதிவுகள் எழுதினால், அதையும் மேற்படி தரவுத்தளத்தில் சேர்த்து வைக்க முடியும். IMDB போன்றோ, கிரிக்கின்ஃபோ போன்றோ நாளடைவில் தானாகவே ஒரு தளம் பிறக்கும்.

இந்த முயற்சியில் தன்னார்வலர்களாக ஈடுபட விரும்புவோர் என்னிடம் தொடர்பு கொள்ளலாம். இது எந்தப் பதிப்பகமும் நேரடியாக ஈடுபடாத ஒரு தன்னார்வல இணையம் சார்ந்த அமைப்பாக இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

மூன்றாவது விஷயம் - மின் நூல். நான் கிழக்கு பதிப்பகம் ஆரம்பித்தது முதற்கொண்டே மின் நூல்கள் பற்றி யோசித்து வருகிறேன். சரியான, எளிதான தொழில்நுட்ப மாதிரியும், கருவிகளும் எனக்குக் கிடைக்கவில்லை. விவரம் தெரிந்தவர்கள் சரியான வழியைக் காட்டினால் சவுகரியமாக இருக்கும். தமிழோவியம் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த சில மின் நூல்கள் எனக்கு முழு நிறைவைத் தரவில்லை. அங்கு செயல்பட்ட DRM முறை திருப்திகரமாக எனக்குத் தோன்றவில்லை. (இது தமிழோவியம் மீதான குற்றச்சாட்டு அல்ல. நண்பர் கணேஷ் சந்திரா தனக்கு சாத்தியமான நுட்பத்தை மேற்கொண்டிருந்தார். ஆனால் நான் எதிர்பார்ப்பது இன்னமும் திண்ணமான, உயர்வான முறை.) சரியான நுட்பம் கிடைத்தால் நாளையே எங்களது அத்தனை புத்தகங்களையும் மின் நூல்களாக்கி வெளியிடத் தயாராக இருக்கிறேன்.

அதைப்போலவே, இந்த முறை சரியாக இயங்கினால், பல பழைய புத்தகங்களையும் - அதாவது பலரும் பதிப்பிக்கத் தயங்கும் புத்தகங்களையும் - மின் நூல் வடிவில் விற்க முயற்சி செய்யலாம்.

====

ரவி எழுப்பியுள்ள பிற விவாதங்கள் பற்றியும் எழுத வேண்டும் (பாரதி புத்தகாலயம், இடதுசாரிகள் etc.) - விரைவில்...

Sunday, June 26, 2005

கிரிக்கெட் சூதாட்டம், ஆட்டத்தின் போக்கை மாற்றுதல்

இன்று (ஜூன் 26, 2005) இரவு இந்திய நேரம் 9.00 மணிக்கு சன் நியூஸ் சானலில் இந்தியாவில் சட்ட விரோதமாக நடக்கும் கிரிக்கெட் சூதாட்டம் பற்றியும், சமீபத்தில் கைதான ஷோபன் மேஹ்தா, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹன்சி குரோன்யே, அசாருத்தீன், ஜாடெஜா, நயன் மாங்கியா, கிரிக்கெட் ஆட்டங்களில் ஊழல் நடக்கிறதா, ஊழலைத் தடுக்க மேற்கொண்டு என்ன செய்யலாம் ஆகியவை பற்றி மாலனுடன் நான் உரையாடுகிறேன். விரும்புவோர் பார்க்கலாம்.

Friday, June 24, 2005

Mini-manual of the Urban Guerrilla

சில குறிப்புகளைப் பின்தொடர்ந்து கார்லோஸ் மரிகெல்லா (Carlos Marighella) என்பவர் பெயரைத் தேடியதில் அவர் எழுதிய "நகர (ஆயுதப்) போராளிகளுக்கான சிறு கையேடு" என்ற ஒரு மோனோகிராப் கிடைத்தது. பிரேசில் நாட்டுப் போராளி.

மூலப்பிரதி ஸ்பானிய மொழியில் இருந்திருக்க வேண்டும். மேற்படிப் பிரதி ஆங்கிலத்தில் உள்ளது. இந்தக் கையேடு பல்வேறு மொழிகளிலும் மாற்றப்பட்டு தீவிரவாத இயக்கங்களிடையே புழங்கப்படுகிறதாம்.

மும்பை பார் நடனம் மீதான தடை

ஆளுனர் அவசரச் சட்டத்தில் கையெழுத்திடவில்லை...

அவ்வளவாக முக்கியமில்லாத விஷயத்தில் முக்கியமான ஒரு விஷயம் நடந்தேறியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், திடீரென, தமது மாநிலத்தை நல்லொழுக்கம் மிக்கதாக மாற்ற விரும்பிய மஹாராஷ்டிர அரசு ஓர் அவசரச் சட்டத்தை இயற்றியது. அதன்படி மஹாராஷ்டிரா மாநிலத்தில், மும்பை மாநகரம் தவிரப் பிற இடங்களில் நாட்டியமாடும் வசதியுடன் கூடிய மதுபான பார்கள் இழுத்து மூடப்படும் என்று அறிவித்தது. விரைவில் மும்பையிலும் இந்தத் தடையை அமல்படுத்த இருப்பதாகவும் அறிவித்தது.

இந்த மதுபான பார்களில் நாட்டிய மங்கைகள் வேலை செய்கிறார்கள். இங்கு குடிக்கச் செல்லும் ஆண்களுக்குத் துணையாக நாட்டியமாடுவது இவர்கள் வேலை. அதன்மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். இந்தத் தடையை ஆதரித்துச் சிலரும், எதிர்த்துச் சிலரும் பேசி வருகிறார்கள்.

இந்தப் பதிவின் நோக்கம் அதை அலசுவதல்ல.

எதற்கெடுத்தாலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் மாநில மத்திய அரசுகள் அவசரச் சட்டத்தை இயற்றுவதைப் பற்றியும், அதற்கு ஆளுனர்களும் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிப்பதைப் பற்றியும்தான் இந்தப் பதிவு. மேற்படி மஹாராஷ்டிர அரசின் அவசரச் சட்டத்தில் கையெழுத்திட மறுத்த ஆளுநர் (கர்நாடகா முந்நாள் முதல்வர்) எஸ்.எம்.கிருஷ்ணா, "இது அவ்வளவு அவசரமான விஷயம் இல்லை. ஜூலை 11ல் கூடும் சட்டமன்றம் இதை விவாதித்து, விரும்பினால் சட்டமாக்கலாம்." என்று சொல்லியுள்ளார். இத்தனைக்கும் கிருஷ்ணா காங்கிரஸ்காரர், மஹாராஷ்டிராவில் நடப்பது காங்கிரஸ் அரசு.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒரு வாரத்துக்கு முன்னர் ஆளுநர்களுடன் உரையாடும்போது சொன்ன அறிவுரை:
You have to decide whether you rise to be a first citizen or remain caged in the confines of your political or any other ancestry.
அதை உடனே செய்து காட்டியுள்ளார் எஸ்.எம்.கிருஷ்ணா.

இப்படி அறிவுரை சொன்ன அப்துல் கலாம், தாமே ஓர் உதாரணத்தைச் செய்து காட்டியிருக்கலாம். சில வாரங்களுக்கு முன் இரவோடு இரவாக மத்திய கேபினட் கூடி பிஹார் சட்டமன்றத்தைக் கலைக்கச் சொல்லி, குடியரசுத் தலைவரின் உத்தரவைக் கேட்டது. அப்பொழுது அவர் ரஷ்யாவில் இருந்தார். இரவு முழுதும் விழித்திருந்து ஃபேக்ஸ் அனுப்பி அதில் கையெழுத்திட்டார். இந்த அவசரம் தேவையற்றது. 'நான் இந்தியா திரும்பி வரும் வரையில் காத்திருங்கள்' என்று அவர் சொல்லியிருக்கலாம். பிஹார் சட்டமன்றக் கலைப்பு முழுக்க முழுக்க அரசியல் காரணங்களால் செய்யப்பட்டது. அதுபற்றிய விவாதம் எங்கும் நடக்கவில்லை.

அதே போல மத்திய அரசு இயற்றும் பட்ஜெட்டிலிருந்து, பல்வேறு சட்டங்கள், அவசரச் சட்டங்கள் அனைத்தையும் - தேவைப்பட்டால் - குடியரசுத் தலைவர் கேள்விக்குள்ளாக்க வேண்டும். முக்கியமாக, அவசரச் சட்டம் தேவையில்லை; நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ விவாதம் தேவை என்ற நிலையில் ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் அவசரச் சட்டத்தில் கையெழுத்திடவே கூடாது. எஸ்.எம்.கிருஷ்ணாவைப் பின்பற்றி பிற ஆளுநர்களும் - ஏன் அப்துல் கலாமும் கூட - நடந்தால் நல்லது.

Thursday, June 23, 2005

கேரளா மாநில அரசின் விபரீத புத்தி

கேரளா அரசு திடீரென இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு குறைந்த விலை விமானச் சேவையைத் தரும் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கலாமா என்று ஆராயப் புறப்பட்டுள்ளது.

இது எந்த மாநில அரசுக்கும் இதுவரை வராத புது யோசனை!

இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து மிகவும் சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. தனியார் விமானச் சேவை நிறுவனங்கள் நாளுக்கு ஒன்றாக நுழைந்துகொண்டிருக்கின்றன. 1990களில் இதே நிலை இருந்தது. அப்பொழுது புதிதாகச் சேவையை ஆரம்பிக்கும் பல நிறுவனங்களுக்கு நிர்வாக சூட்சுமங்கள் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. 1996-ல் ஒருமுறை NEPC விமானச்சேவையைப் பயன்படுத்தியிருக்கிறேன். படு கேவலம். ஜெட் ஏர்வேஸ் தவிர பிற சேவைகள் முற்றிலுமாக ஒழிந்தன. பின்னர் சஹாரா தொடங்கியது.

ஜெட், இந்தியன் ஏர்லைன்ஸை எளிதாகவே பின்னுக்குத் தள்ளியது. சந்தையை ஜெட், இந்தியன் ஏர்லைன்ஸ், சஹாரா மூன்றும் தமக்குள் பங்குபோட்டுக்கொண்டபோது ஏர் டெக்கான் எனப்படும் குறைந்தவிலை விமானச்சேவை வந்தது. கடந்த ஒரு வருடத்தில் ஏர் டெக்கான் சக்கைப்போடு போட்டதைப் பார்த்து பல்வேறு போட்டியாளர்களும் குறைந்தவிலை விமானச்சேவையை அளிக்க முன்வந்துள்ளனர்.

இதற்கிடையே வெளிநாடுகளுக்கான பாதைகள் ஏர் இந்தியாவின் கையில் ஏகபோகமாக இருந்ததும் மாற்றியமைக்கப்பட, அங்கும் ஜெட் ஏர்வேஸ் படு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. போட்டியை எதிர்கொள்ள, ஏர் இந்தியாவும் வளைகுடா நாடுகளுக்காகவெனவே குறைந்தவிலை விமானச்சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ஆனால் இந்தியன் ஏர்வேய்ஸ், ஏர் இந்தியா இரண்டும் தரத்தில் படு குறைவு. அரசு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் மூஞ்சியை சிடுசிடுவென வைத்திருக்க வேண்டும் என்று யாரோ எழுதிவைத்திருக்கிறார்கள் போல. சொன்ன நேரத்தில் விமானம் கிளம்பும் என்று எதிர்பார்க்கவே முடியாது. கஸ்டமர் சாடிஸ்ஃபேக்ஷன் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். கடந்த இரண்டு நாள்களாக இந்தியன் ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர்கள் லட்சத்தீவுகளில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமான ஓட்டுனர் பதவி விலகிவிட்டாராம்! ஏன் இன்னொரு விமானியைக் கொண்டுவரமுடியாதா இந்தியன் ஏர்லைன்ஸால்? பதிலாக பயணிகளை, ஏதேதோ வழியாக மூக்கைச் சுற்றி கொச்சிக்கு கப்பல் மூலமாகக் கொண்டுவரப்போகிறார்களாம்!

இந்த இரு அரசு நிறுவனங்களும் தமது தரத்தை உயர்த்த சிறிதும் முயற்சி செய்வதாக இல்லை. இந்த நிறுவனங்கள் லாபம் ஈட்டுவது போலவும் தெரியவில்லை. இதே நிலை நீடித்தால், இன்னமும் சில வருடங்களில் ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் இரண்டும் தனியார் சேவைகளுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் கடையை மூடிவிடவேண்டியிருக்கலாம்.

இப்படிப்பட்ட நிலையில் என்ன தைரியத்தில் கேரள மாநில அரசு ஒரு விமானச் சேவையைத் தொடங்க நினைத்திருக்கிறார்கள்? அதுவும் வேலை நிறுத்தத்துக்குப் பேர் போன கேரளாவில்?

ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் வேண்டும்...

அபினந்தனின் ஆங்கில வலைப்பதிவிலிருந்து The Hindu செய்தி: Introduce English from first standard itself, Govt. urged

சில கன்னட அமைப்புகள் ஒன்று சேர்ந்து, கர்நாடக அரசு பள்ளிக்கூடங்களில் ஒன்றாம் வகுப்பு முதலே ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்று கேட்கிறார்களாம். இதற்கு உதாரணமாக தமிழகத்தைக் காட்டியிருக்கிறார்கள். கன்னடப் பள்ளிக்கூடங்களில் ஐந்தாவது வகுப்பில்தான் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக நடத்தத் தொடங்குகிறார்களாம்.

மாநிலத்தில் 30 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கன்னட மீடியத்தில் படிப்பதாகவும், 25 லட்சம் பேர் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதற்கொண்டே ஆங்கிலம் கற்றுக்கொள்வதாகவும், அதனால் கன்னட மீடியத்தில் படிக்கும் 30 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும் இந்த அமைப்பினர் சொல்கின்றனர். உடனடியாக முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தைப் பாடமாக வைக்காவிட்டால் போராடுவோம் என்றும் சொல்கிறார்கள்.
The federation made it clear that they are for Kannada as the medium of instruction, but the Government must respond to the needs of present-day employment.

Wednesday, June 22, 2005

இந்தியா டுடே தமிழில் வலைப்பதிவுகள் பற்றி

தமிழ் வலைப்பதிவர்கள் யாரும் இந்தியா டுடே தமிழ்ப்பதிப்பு வாங்குவதில்லை போலத் தெரிகிறது:-) இந்த வாரம் தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய நான்கு பக்கக் கட்டுரை வந்துள்ளது.

பக்கங்கள் ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு

பல தகவல் பிழைகள். இலக்கணப் பிழைகளும் உண்டு. மனுஷ்யபுத்திரன், பத்ரி சேஷாத்ரி, பி.கே.சிவகுமார், ரஜினி ராம்கி ஆகியோரின் புகைப்படங்களும் மேற்கோள்களும், மாலன், தேசிகன், அருணா ஸ்ரீநிவாசன் ஆகியோரிடமிருந்து மேற்கோள்களும் உள்ளன. தமிழ்மணம் சுட்டி உள்ளது.

===

தமிழ் வலைப்பதிவுகள் பற்றி பிற plugs

பா.ராகவன் கதை, வசனத்தில் வரும் கெட்டிமேளம் தொலைக்காட்சித் தொடரில், தமிழ் வலைப்பதிவுகள் பற்றி அவ்வப்போது வந்துகொண்டே இருக்கிறது. இணைய மையம் தொடர்பான காட்சிகளில் வலைப்பதிவுகள் பற்றி, தமிழ்மணம் பற்றி, தமிழ் ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்கள் பற்றி சில வார்த்தைகள் என்று அவ்வப்போது வந்துகொண்டிருக்கிறன. இதைத் தொடர்ந்து தொலைக்காட்சி அலுவலகத்துக்கு சில தொலைபேசி அழைப்புகள் வருகின்றனவாம் (எப்படி வலைப்பதிவுகளைத் தமிழில் செய்வது என்பது பற்றிய கேள்விகளுடன்).

Tuesday, June 21, 2005

கண்டதேவி தேர்த் திருவிழா

இன்று சிவகங்கைக்கு அருகில் உள்ள கண்டதேவி ஸ்வர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேர் திருவிழா. பொதுவாக தேர் திருவிழாவில் நடப்பதுபோல பொதுமக்கள் வந்து தேரை இழுத்துவிட்டுப் போவது இந்த ஊர் வழக்கமல்ல.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரை தலித் இனத்தவரை விலக்கிவைத்தே இந்தத் தேர் இழுத்தல் நடைபெற்றது. சென்ற வருடம் எக்கச்சக்கமான போலீஸ் பாதுகாப்புடன் பெயருக்கு இரண்டு தலித் இனத்தவரைக் கொண்டுவந்து வடத்தைத் தொடவைத்து தேர் இழுக்கப்பட்டது - என்று நினைக்கிறேன்.

திமுக, அதிமுக, பாமக, பாஜக, காங்கிரஸ் என்று யாரும் இந்தப் பிரச்னையில் நேரடியாகத் தலையிடுவதில்லை. கம்யூனிஸ்டுகள் மாத்திரம்தான் தலித்கள் பக்கம். புதிய தமிழகம் கிருஷ்ணசாமிதான் போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டது போலத் தெரியவில்லை. பாமகவும் குரல் ஏதும் எழுப்பவில்லை.

இன்று மதியம் செய்தியின்படி, கிருஷ்ணசாமியும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முந்தி என நினைக்கிறேன் - இப்பொழுது ஞாபகமில்லை - காவல்துறையும், அதிகாரிகளும் சேர்ந்து, பிரச்னை வரும் என்று பயந்து, இந்தத் தேர்த் திருவிழாவையே தடை செய்துவிட்டனர்.

இம்முறை சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி ஒப்புக்காக இரண்டு தலித்கள் தேர் இழுப்பார்கள் என்று இல்லாமல் தேர் இழுக்கக் கூடும் தலித்கள் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்று மாலைதான் தேர் இழுப்பில் என்ன நடந்தது என்று தகவல் வரும்.

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தேர்தல்களைப் போன்றே கண்டதேவி தேர்த் திருவிழாவும் தமிழகத்தில் தலித்களின் நிலையை வெளிச்சமிட்டுக் காட்டும் வருடாந்திர நிகழ்வு.

கணித வாத்தியார் பி.கே.ஸ்ரீநிவாசன்

நேற்று மாலை நானும் சத்யாவும் உரையாடிக்கொண்டிருக்கும்போது ஏதோ காரணங்களுக்காக பி.கே.ஸ்ரீநிவாசனைப் பற்றி பேச்சு வந்தது. பல வருடங்களுக்கு முன் அவரைச் சந்தித்தது. இப்பொழுது உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை என நினைத்துக்கொண்டேன். நேற்று காலைதான் மாரடைப்பால் உயிர் போனதாம்!

தி ஹிந்து செய்தி

1998 என்று நினைக்கிறேன். நானும் சத்யாவும் கல்வி தொடர்பாக என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தோம். கணினியில் சின்னச்சின்ன விளையாட்டு மென்பொருள்கள் எழுதி அதைப் பள்ளிக்கூடங்களுக்கு விற்கலாம் என்று திட்டமிட்டோம். மேட்சயின்ஸ் நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள் பி.கே.ஸ்ரீனிவாசனைப் பற்றிச் சொன்னார்கள். அவரைச் சந்திக்கும் முன்னால், தெரிந்த சில நண்பர்கள் மூலம், சென்னைப் பல்கலைக்கழக கணிதத்துறைத் தலைவர் ரங்காச்சாரியை அவரது திருவல்லிக்கேணி இல்லத்தில் போய்ப் பார்த்தோம். கட்டுக்குடுமியுடனும் பஞ்சக்கச்சத்துடனும் கல்லூரிக்குச் செல்லும் ஆசாரசீலர். அவர் ஸ்ரீனிவாசனைப் பற்றியும் அவரது முயற்சியால் ஏற்படும் கணிதமையங்களைப் பற்றியும் ஸ்ரீனிவாசன் உருவாக்கும் சின்னச்சின்ன கணித விளையாட்டுகள் பற்றியும் சொன்னார்.

திருவல்லிக்கேணியிலேயே இருந்த ஒரு கணிதமையத்துக்குச் சென்றோம். பூட்டித்தான் இருந்தது. அப்பொழுது அங்கு பள்ளிச்சிறுவர்கள் யாரும் இல்லை. மையத்தை நடத்தும் நண்பர் வந்தார். பேசிக்கொண்டிருந்தார். பி.கே.ஸ்ரீனிவாசனைப் பற்றி, அவர் குழந்தைகளுடன் விளையாடுவது பற்றி, கணிதம் என்றால் கசக்கும் வேப்பங்காய் என்று நினைக்கும் சிறுவர்கள் கூட மகுடியால் கட்டப்பட்ட பெட்டிப்பாம்பு போல அவரது பேச்சில் மெய்மறந்து உட்கார்ந்திருப்பது பற்றி என்று நிறையப் பேசினார்.

ஸ்ரீனிவாசன் ஃபார்மல் முறைப்படி கணிதம் சொல்லிக்கொடுப்பதைவிட உள்ளுணர்வால் உந்தப்பட்டு கணிதத்தைப் புரிந்துகொள்வதை, ரசிப்பதை விரும்பினார். பள்ளிக்கூடத்தில் வாழ்நாள் முழுவதும் கணிதம் கற்றுக்கொடுத்தபின், ஓய்வு வாழ்க்கையில் அவருக்கு இரண்டு விஷயங்களில் பெரும் ஈடுபாடு ஏற்பட்டது. ஒன்று கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்தைப் பற்றிய அரிய செய்திகளைச் சேர்த்து அவருக்கென ஒரு நினைவுமண்டபம் கட்டுவது. இரண்டாவது கணித ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு கணிதத்தை ஒரு விளையாட்டு போலக் கற்பித்து அவர்கள் மூலம் மாணவர்களுக்கு கணிதத்தின் மேல் ஆர்வத்தை வரவழைப்பது.

ஸ்ரீனிவாச ராமானுஜம் எழுதி ஆங்காங்கு சிதறியிருந்த கடிதங்களை ஒன்றிதிரட்டிச் சேர்த்தார். பின் ராயபுரத்தில் ஓரிடத்தில் ராமானுஜன் அருங்காட்சியகத்தை உருவாக்கினார்.

நானும் சத்யாவும் அவரை அவரது நங்கநல்லூர் இல்லத்தில் சந்தித்தோம். கணினியில் சில மென்பொருள்கள் செய்வது பற்றிப் பேசினோம். விளையாட்டுகள் மூலம் கணக்கு சொல்லித்தருவதைப் பற்றிய அவரது வழிமுறைகளைக் கேட்டோம். ஏதோ காரணங்களால் அவருக்கு எங்கள் மீது உடனடியாக நம்பிக்கை ஏற்படவில்லை. அன்று ஏதும் முடிவாகவில்லை. பின்னர் ராயபுரம் ராமானுஜம் அருங்காட்சியகம் சென்று பார்வையிட்டோம்.

ஒரு மென்பொருள் எழுதுபவரை வேலைக்கு அமர்த்தி நாங்களாகவே சில விளையாட்டுகளை உருவாக்கி அதைக் கொண்டுபோய் அவரிடம் காண்பிக்கலாம், ஒருவேளை அப்பொழுதாவது அவருக்கு நம்பிக்கை பிறக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் வேலைக்கு அமர்த்தியவர் சில நாள்களிலேயே பிய்த்துக்கொண்டு கிளம்பிவிட்டார். அத்துடன் எங்கள் மென்பொருள் ஆசையும் கழன்று கொண்டது.

சில மாதங்கள் கழித்து ஸ்ரீனிவாசன் ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் பயிற்சிப் பட்டறைக்குச் சென்றிருந்தோம். பள்ளிக்கூடக் கணித ஆசிரியர்கள் சிலர் தமது கோடை விடுமுறை நேரத்தில் ராயபுரம் ராமானுஜம் அருங்காட்சியகத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அந்த ஆசிரியர்களுக்கு கணிதத்தில் அவ்வளவு ஈடுபாடு இருந்ததுபோலத் தெரியவில்லை. சிறுவர்களைக் கட்டிப்போடுகிற திறமை பெரியவ்ர்களிடம் பலிக்கவில்லை என்பது தெரிந்தது. பி.கே.ஸ்ரீனிவாசன் எந்த அளவுக்கு கணிதத்தின் மீதான பற்றை வளர்க்க உதவினார் என்று தெரியவில்லை. அவர் ஏற்படுத்திய கணித மையங்கள் என்ன நிலையில் உள்ளன என்றும் தெரியவில்லை. அவரது மறைவுக்குப் பின்னர் பள்ளி மாணவர்களிடையே - அதுவும் விளிம்புநிலை மக்களிடையே - கணிதத்தை எடுத்துச்செல்ல யாருக்காவது ஆர்வம் உள்ளதா என்று தெரியவில்லை.

ஸ்ரீனிவாசன் தீவிர காந்தியவாதி. கதர் ஆடை மட்டும்தான் அணிவார். நெற்றியில் ஸ்ரீசூர்ணம். தலையில் காங்கிரஸ் குல்லாய். ஸ்ரீனிவாச ராமானுஜம் மீது ஆழ்ந்த பக்தி. ஏழைக் குழந்தைகளிடம் ஏகப்பட்ட அன்பு.

ராபர்ட் கனீகெல்லின் The Man Who Knew Infinity படித்திருக்கிறீர்களா? அந்தப் புத்தகத்தில் ராபர்ட், ஸ்ரீனிவாசனைச் சந்தித்தது பற்றி எழுதியிருப்பார். ஸ்ரீனிவாசன் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்த சில துண்டுகள், துணுக்குகள்தான் ராமானுஜத்தைப் பற்றி எழுத மிகவும் உதவி செய்திருக்கிறது.

இந்த வாரக்கடைசியிலாவது ஒருமுறை ராயபுரம் சென்று அருங்காட்சியகத்தைப் பார்க்கவேண்டும். பி.கே.ஸ்ரீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும்.

Saturday, June 18, 2005

மீடியா சாம்ராஜ்ஜியங்கள் உருவாவதை அரசு தடுக்குமா? - 1

ContentSutra வழியாக Business Standard கட்டுரை.

கடந்த ஒரு வருடமாகவே இந்திய மீடியா பரப்பில் பல தீவிர மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஊடக நிறுவனங்கள் பல்வேறு ஊடகங்கள் வழியான தமது சொத்துக்களை ஒருங்கிணைத்து, குவித்து, அதன்மூலம் தாம் பெறும் பலனை அதிகரிக்க முனைந்து வருகிறார்கள். முக்கியமாகக் கவனிக்க வேண்டிய நான்கு நிறுவனங்கள்
  1. ரூப்பர்ட் மர்டாக்கின் ஸ்டார்
  2. சுபாஷ் சந்திராவின் ஸீ (Zee)
  3. ஜெயின் சகோதரர்களின் (சமீர், வினீத்) டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் (பென்னட் அண்ட் கோல்மன்)
  4. கலாநிதி மாறனின் சன் குழுமம்
இதில் முதலாவது ஆசாமி வெளிநாட்டவர். ஆஸ்திரேலியராகப் பிறந்து, இப்பொழுது அமெரிக்கக் குடிமகனாகி (இல்லாவிட்டால் அமெரிக்காவில் தொலைக்காட்சி சானல் நடத்த அனுமதிக்கமாட்டோம் என்றனர் அமெரிக்கர்கள்), சீனர் ஒருவரை இரண்டாவது மனைவியாக மணம்புரிந்தவர். உலகின் மிகப்பெரிய மீடியா முதலை. இப்பொழுது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு நடக்கும் இவரது நியூஸ் கார்ப் நிறுவனத்தின் மீடியா சொத்துக்கள் உலகளாவி உள்ளன. ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பாவின் பல தேசங்கள், இந்தியா சேர்ந்த ஆசியாக் கண்டத்தின் பல நாடுகள், தென்னமெரிக்கா என்று இவரது மீடியா சொத்து இல்லாத கண்டமே இல்லை எனலாம். சீனாவில் கூட நுழைந்துள்ளார். எக்கச்சக்கமான செய்திப் பத்திரிகைகள், இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, ஹாலிவுட்டில் சினிமா எடுக்கும் ஸ்டுடியோக்கள், புத்தகப் பதிப்பகங்கள் என்று மீடியாவின் அனைத்துத் துறைகளிலும் உள்ளார். தொலைக்காட்சி சானல்களை செயற்கைக்கோள் வழியாக விநியோகிக்கும் துறையில் பல நாடுகளிலும் மிகவும் பலமாகக் கால் ஊன்றியவர்.

இவருடைய இரண்டு மகன்களும், சீன நிகழ்கால மனைவியும் இவருக்கு உறுதுணையாக உள்ளனர். 75 வயதுக்கு மேலான இவருக்கு புற்றுநோய் வந்து அதிலிருந்து மீண்டிருக்கிறார்.

இவரது முக்கியமான பிராண்ட்கள்: ஆஸ்திரேலியாவில் சானல் 7, பல செய்தித்தாள்கள், செயற்கைக்கோள் விநியோகமான ஃபாக்ஸ்டெல். பிரிட்டனில் செயற்கைக்கோள் விநியோகமான ஸ்கை, தி டைம்ஸ், சன் போன்ற செய்தித்தாள்கள், கூடியவிரைவில் தரைவழி சானலான சானல் 5, ஐரோப்பாவின் பல நாடுகளில் செயற்கைக் கோள்வழி விநியோகம், அமெரிக்காவில் செயற்கைக்கோள் விநியோகமான டிரெக்டிவி, தொலைக்காட்சி ஃபாக்ஸ் நெட்வொர்க், ட்வெண்டியத் செஞ்சுரி பாக்ஸ் ஸ்டுடியோ, ஆசியா முழுமையிலும் ஸ்டார் டிவி நெட்வொர்க் (இந்தியா, சீனா).

இரண்டாவது ஆசாமி அரிசி வியாபாரத்திலிருந்து இப்பொழுது தண்ணீர் தீம் பார்க், பேக்கேஜிங் அட்டைகள் என்று என்னன்னவோ செய்கிறவர். ஒரு காலத்தில் இந்தியில் கொடிகட்டிப் பறந்த இவரது தொலைக்காட்சி சானல் இப்பொழுது பின்னடைவில். ஆனாலும் பல மொழிகளிலும் சானல்கள் நடத்தும் இவர் மிக முக்கியமானவர். இவரது ஸீ தொலைக்காட்சி நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம்.

இந்தியாவின் பல மொழிகளிலும் (கிட்டத்தட்ட 10க்கு மேற்பட்ட மொழிகளில்) தொலைக்காட்சிச்சேவை. இதுவரை வானொலியில் இல்லை. இப்பொழுது தைனிக் பாஸ்கர் என்னும் இந்திச் செய்தித்தாள் நிறுவனத்துடன் இணைந்து மும்பையில் DNA என்னும் ஆங்கில தினசரியை நடத்தப் போகிறார்கள்.

அத்துடன் சுபாஷ் சந்திராவின் மற்றுமொரு நிறுவனம் டிஷ் டிவி என்ற பெயரில் செயற்கைக்கோள் வழியாக தொலைக்காட்சி சானல்களை விநியோகிக்கும் நிறுவனத்தை நடத்திவருகிறது. சிடிகேபிள் என்னும் கேபிள் வழியாக தொலைக்காட்சி சானல்களைக் கொடுக்கும் சேவையைப் பல நகரங்களில் செய்து வருகிறது. ஸீ டெலிஃபில்ம்ஸ் இந்தியில் திரைப்படங்களை எடுக்கிறது.

மூன்றாவது ஆசாமி(கள்) சகோதரர்கள் சமீர் ஜெயின், வினோத் ஜெயின். இந்தியாவின் மிகப்பெரிய ஆங்கில செய்தித்தாளான டைம்ஸ் ஆஃப் இந்தியாவை நடத்துபவர்கள். பிற மொழிகளில் சில தினசரிகள். மிகப்பெரிய தொழில்துறை செய்திப் பத்திரிகையான எகனாமிக் டைம்ஸ். ஆங்கிலத்தில் வெளியாகும் பல பளபளப்பான இதழ்கள் (அதில் சில இப்பொழுது பிபிசியுடன் இணைந்து). ரேடியோ மிர்ச்சி என்னும் பல நகரங்களில் செயல்படும் பண்பலை வானொலிச் சேவை. சமீபத்தில் வந்துள்ள ஜூம் என்னும் தொலைக்காட்சிச் சேவை. ராய்ட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செய்தி, வணிகம் போன்றவற்றுக்கான தொலைக்காட்சிச் சேவையை அளிக்க இருக்கிறார்கள். டைம்ஸ் இண்டெர்நெட் மூலம் சுமாரான அளவிளான இணையச்சேவை, மிகப்பெரிய மொபைல் சேவை. முழுக்க முழுக்க தனியார் கைகளில் இருக்கும் நிறுவனங்கள்.

நான்காவது ஆசாமி நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான கலாநிதி மாறன். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நம்பர் ஒன் தொலைக்காட்சிச் சேவை. தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் பண்பலை வானொலி. கோதுமை மாவு கொடுக்கும் குங்குமம் என்னும் வார இதழ். இப்பொழுதுதான் தினகரன் குழுமத்தை முழுக்க வாங்கியுள்ளதாகச் செய்தி. சில-பல எதிர்ப்புகளை மீறி கலாநிதி மாறன்+மனைவி பெயரில் நாடுமுழுதும் செயற்கைக்கோள் மூலம் தொலைக்காட்சிச் சேவைகளை வழங்கும் உரிமம் பெற்றுள்ளார். சுமங்கலி கேபிள் விஷன் என்று கேபிள் மூலம் தமிழகத்தின் பல இடங்களிலும் கேபிள் சேவை.

இவ்வளவு இருந்தாலும் இந்தியாவை முழுமையாகப் பார்க்கும்போது மேற்படி நால்வரில் கலாநிதி மாறன் நான்காவது நிலையில்தான் உள்ளார் (மொத்த விற்பனையில், மொத்த லாபத்தில், எத்தனை மக்களைச் சென்றடைகிறார் என்பதில்).

ரூப்பர்ட் மர்டாக்குக்கு இந்தியாவில் பல காரியங்களைச் செய்ய முடியாது. இப்பொழுதுள்ள சட்டங்கள் வெளிநாட்டவருக்குப் பாதகமாக உள்ளன. ஆனால் அவர் முடிந்தவரை சட்டங்களை வளைத்து ஏதோ செய்துவருகிறார். நியூஸ் தொலைக்காட்சிகளை நடத்த வெளிநாட்டாருக்கு உரிமை கிடையாது. இந்திய நிறுவனத்தில் அதிகபட்சம் 26% பங்குகளை மட்டுமே வெளிநாட்டினர் வைத்திருக்கலாம். அதனால் ஆனந்த பஜார் பத்ரிகா குழுமத்தின் அவீக் சர்க்காருடன் இணைந்து ஸ்டார் நியூஸ் சானலை நடத்துகிறார். வானொலி நிலையங்களை இதுநாள் வரை வெளிநாட்டு நிறுவனம் நடத்த முடியாது. (இப்பொழுது 26% வரை பங்கு தரலாம் என்று முடிவு செய்துள்ளார்கள்.) எனவே மிட்டல் நிறுவனத்துடன் இணைந்து அவர்களை ரேடியோ சிட்டி என்னும் பெயரில் வானொலி நிலையங்களைத் தோற்றுவிக்கச் செய்து அதற்கு புரோகிராம்கள் வழங்குகிறோம் பேர்வழி என்று அதனை முழுமையாக நடத்துபவர் மர்டாக். செயற்கைக்கோள் வழியான வீட்டுக்கே வரும் தொலைக்காட்சி விநியோகம் செய்ய டாட்டா குழுமத்துடன் ஒரு ஜாயிண்ட்-வென்ச்சர். அதிலும் மர்டாக் பெயரளவில் 26% வைத்திருந்தாலும் நடத்தப்போவது அவர்தான். இப்படியே இருந்துகொண்டே கொஞ்சம் கொஞ்சமாக விதிகள் தளர்த்தப்படும்போது தனது அதிகாரத்தை விரிவுபடுத்த அவர் எண்ணுகிறார்.

அடுத்து கலாநிதி மாறன் பற்றிப் பார்ப்போம்.

[தகவல் பிழைகள் சில சரி செய்யப்பட்டுள்ளன.]

Friday, June 17, 2005

திருப்பூர் தமிழ்ச் சங்க விருதுகள்

திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் "இலக்கிய விருதுகள் 2004" போட்டியில் கிழக்கு பதிப்பகத்தின் மூன்று புத்தகங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. மொத்தமாக எத்தனை விருதுகள், என்னென்ன விருதுகள், எத்தனையாவது பரிசு போன்ற எந்த விவரங்களும் இப்பொழுது என்னிடம் இல்லை. வேறு யார் யாருக்கு இந்த விருதுகள் இந்த வருடம் கிடைத்துள்ளன என்றும் தெரியவில்லை.

விருது பெற்ற புத்தகங்கள்:

1. மெல்லினம், நாவல், பா.ராகவன்
2. அரசூர் வம்சம், நாவல், இரா.முருகன்
3. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம், அ-புதினம், நாகூர் ரூமி

Wednesday, June 15, 2005

எம்.ஆர்.ராதாவின் கடைசி நாள்கள்

சுதாங்கன் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட சுட்டாச்சு சுட்டாச்சு என்னும் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்ட பின்னிணைப்பு.

-*-

எம்.ஆர்.ராதா கவர்ச்சிகரமான மனிதர். அவரது வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. இன்றைக்கு, எம்.ஜி.ஆரைச் சுட்டவர் என்று மட்டுமே வெளி உலகுக்குத் தெரியும் ராதா நடிப்புக்கலையில் கைதேர்ந்தவராக இருந்திருக்கிறார். புரட்சிகரமான நாடகங்களை நடத்தியிருக்கிறார். அதற்காக அப்பொழுதைய காங்கிரஸின் அடக்குமுறைகளைப் பலவிதமாக எதிர்கொண்டிருக்கிறார். இவரது முழுமையான வாழ்க்கை வரலாறு இன்னமும் சரியாக எழுதப்படவில்லை...

12 ஜனவரி 1967 அன்று எம்.ஜி.ஆர் வீட்டில் நடைபெற்ற வாக்குவாதம், தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் யார் யாரைச் சுட்டார்கள் என்பதில் பிரச்னை. எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா தவிர வாசு என்ற திரைப்படத் தயாரிப்பாளரும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தார். இவர்கள் மூவரையும் தவிர சுட்டதை நேரில் பார்த்தவர் வேறு எவரும் இல்லை. அரசுத் தரப்பு வாதம் - லைசென்ஸ் காலாவதியான துப்பாக்கியால் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரைச் சுட்டார், பின் தன்னையும் சுட்டுக்கொண்டார் என்பது. எம்.ஜி.ஆர், வாசு இருவரும் இதைத்தான் சொன்னார்கள். எம்.ஆர்.ராதா தரப்பு வாதம் - எம்.ஜி.ஆர் முதலில் எம்.ஆர்.ராதாவைச் சுட்டார், தொடர்ந்து நடந்த கைகலப்பில் எம்.ஆர்.ராதா அந்தத் துப்பாக்கியைப் பிடுங்கி எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்பது.

முதலில் சைதாப்பேட்டை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடந்த வழக்கு, பின் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் சென்றது. அங்கு எம்.ஆர்.ராதா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

-*-

தீர்ப்புக்குப் பின்...
சுதாங்கன்

ராதாவின் மகளான ரஷ்யா என்கிற ராணிக்கும் டாக்டர் சீனிவாசன் என்பவருக்கும் ராதா சிறையில் இருக்கும்போதுதான் திருமணம் நடந்தது. ராதாவால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. 1968-ம் வருடம் ஆகஸ்ட் 26-ம் தேதி நடந்த திருமணத்துக்கு தந்தை பெரியார்தான் தலைமை தாங்கினார். முதலில் காமராஜர்தான் தலைமை தாங்குவதாக இருந்தது. ராதா வேண்டாமென்று மறுத்துவிட்டார். காமராஜர் சொல்லித்தான் ராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்கிற வதந்தி பரவிக் கிடந்தது. அதனால் காமராஜர் திருமணத்தில் கலந்து கொண்டார்; தலைமை தாங்கவில்லை.

திருமணத்தைத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் புறக்கணித்தனர். ராதாவின் நாடக மன்றத்தில் நடித்து வளர்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் திருமணத்துக்கு வரவில்லை. வந்த ஒரே நட்சத்திர தம்பதிகள் ஜெமினி கணேசனும், சாவித்திரியும்தான். இதன் பிறகு 1968 இறுதியில் ராதாவுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் அவர் திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனை.

இதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியாது, நீதிமன்ற வரலாற்றிலேயே ஆபூர்வமாக ஒரு விஷயம் நடந்து. வழக்கமாக ஒரு வழக்கு விசாரணைக்கோ, தீர்ப்புக்கோ எடுத்துக் கொள்ளப்பட்டால், அதைப் பற்றிய ஓர் அறிவிப்பு வெளிவரும். இதை லிஸ்ட் என்பார்கள். இப்படி ஒரு லிஸ்ட் வராமலேயே உயர் நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு செஷன்ஸ் கோர்ட்டில் வழங்கிய ஏழு ஆண்டுச் சிறைத் தண்டனையை உறுதி செய்தது. ராதாவின் ஜாமீனையும் நிராகரித்தது. ராதா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. வழக்கமாக இது போன்ற வழக்குகளில் கீழ் நீதிமன்றங்களில் சரியான முறையில் விசாரணை நடந்திருக்கிறதா என்றுதான் உச்ச நீதிமன்றம் பார்க்கும். ராதா வழக்கில் இன்னொரு அசாதாரணமான விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. உயர் நீதிமன்ற சாட்சிகளையும் அழைத்து விசாரித்தது உச்ச நீதிமன்றம். இந்த விசாரணையின்போதுதான், ராதாவின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது. ஏற்கெனவே அனுபவித்த சிறைத் தண்டனையை மனத்தில் கொண்டு, மூன்றரையாண்டு சிறை வாசத்துக்குப்பின் ராதா விடுதலையானார்.

விடுதலையானதற்குப் பிறகு ராதாவால் வெகுநாட்கள் வேலை ஏதும் செய்யாமல் சும்மா இருக்க முடியவில்லை. நாடகம் போடத் தீர்மானித்தார். புதிய நாடகத்தின் தலைப்பு கதம்பம். அவர் ஏற்கெனவே மேடையேற்றி நடித்த தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய மூன்று நாடகங்களின் தொகுப்பு. அவருடன் முன்னர் நடித்த பழைய ஆள்கள் பலர் அப்போது இல்லை. இருந்த சிலரும் அவருடன் நடிக்க பயந்தார்கள். ஆனாலும் வேறு சிலரைத் தயார் செய்து நடிக்க வைத்தார்.

அப்போது திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி சபா அரங்கம் மிகவும் பிரபலம். அங்கேதான் நாடக அரங்கேற்றம். யாரைத் தலைமை தாங்க அழைக்கலாம் என்கிற யோசனை எழுந்தது. உடனே ராதா எம்.ஜி.ஆரை அழைக்கலாம் என்றார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி தலைமை தாங்க அழைத்தார். எம்.ஜி.ஆரும் ஒப்புக்கொண்டார். ஆனால் கடைசி நிமிடத்தில் வரவில்லை. நாடகத்தில் ஒரு காட்சியில் லட்சுமிகாந்தனைத் துப்பாக்கியால் ராதா பாத்திரம் சுடுவதுபோல் வரும். பழைய பகையை மனத்தில் வைத்துக்கொண்டு நிஜமாகவே உண்மையான துப்பாக்கியால் எதிரே பார்வையாளர் பகுதியிலுள்ள எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டால் என்னாவது என்று யாரோ எம்.ஜி.ஆரிடம் சொல்லியதால்தான் அவர் கலந்து கொள்ளவில்லை என்று பேசப்பட்டது. அப்போது ராதாவுக்கு அறுபத்தைந்து வயது.

வெளியூர்களில் ராதாவின் நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. கீமாயணம்-1 என்கிற பெயரில் 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' நடக்கும். கீமாயணம்-2 என்கிற பெயரில் 'தூக்கு மேடை' நாடகம். கீமாயணம்-3 என்கிற பெயரில் 'ரத்தக்கண்ணீர்'. உடல் தளர்ந்தபோதும் நாடகம் போடுவதை நிறுத்தவில்லை. நாடகம் போட்டுத்தான் ஆக வேண்டுமா என்று குடும்பத்தினர் ராதாவிடம் கேட்டார்கள். அதற்கு அவர், "கடைசி காலத்தில் தொழில் இல்லாமல்தான் கலைவாணர் இறந்தார். தியாகராஜ பாகவதருக்கும் அந்த நிலைதான் ஏற்பட்டது. எனக்கு அந்த நிலை ஏற்படக்கூடாது" என்றாராம்.

சில மாதங்கள் கழித்து 'சமையல்காரன்' என்கிற படத்தில் நடிக்க ராதாவுக்கு வாய்ப்பு வந்தது. அன்றைய தமிழக முதல்வரான கருணாநிதியின் மகன் மு.க.முத்துதான் படத்தின் கதாநாயகன். மைசூரில்தான் படப்பிடிப்பு. படப்பிடிப்புக்காக ராதா காரில் மைசூர் சென்றார். அதிகாலை நேரம், பெங்களூரில் காரைவிட்டு வெளியே இறங்கிய ராதா, "பெட்டி படுக்கையெல்லாம் காரிலேயே இருக்கட்டும். பெரியார் இறந்துடுவார்னு தோணுது. அநேகமாக நாம மறுபடியும் திரும்ப வேண்டியிருக்கும்" என்றாராம். ராதாவும் மற்றவர்களும் ஹோட்டல் அறையில் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள். காலை ஏழரை மணிக்கு பெரியார் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது.

காரில் சென்னை திரும்பிய ராதா, நேராகப் பெரியாரின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலுக்குத்தான் போனார். அவர் உடல் மீது விழந்து புலம்பினார். "போச்சு, எல்லாம் போச்சு. இனிமேல் தமிழ்நாட்டுக்குத் தலைவனே கிடையாது" என்றாராம். அந்த இடத்தில்தான் எம்.ஜி.ஆர் - ராதா சந்திப்பு பல வருடங்களுக்குப்பின் நடந்தது. அப்போது ராதா எம்.ஜி.ஆரிடம், "உன் கூட இருக்கிற யாரையும் நம்பாதே, கழுத்தறுத்துடுவாங்க" என்றாராம்.

'சமையல்காரன்' படத்தில் வில்லனுக்கு அப்பா வேடம் ராதாவுக்கு. அவருக்கு அந்த வயதான பாத்திரம் பிடிக்கவில்லை. கருணாநிதியிடம் சொல்லிப்பார்த்தார். பாத்திரத்தை எப்படி வேண்டுமானலும் மாற்றிக்கொள்ளுங்கள் என்று கருணாநிதி ராதாவுக்கு அனுமதி கொடுத்தாராம். அதற்கு பிறகே ராதா நடித்தார். அந்தப் படத்தில் ராதாவை அறிமுகம் செய்கிற காட்சியில் அவர் ஜெயிலிலிருந்து வெளியே வருவார். "ஜெயில்லதான் காபி கொடுக்கிறான். வெளியே கடைசி எழுத்தத்தான் கொடுக்கிறான்" என்றுதான் அறிமுகமாவார்.

தொடர்ந்து ராதா ஜெய்சங்கருடன் 'ஆடுபாம்பே', 'தர்மங்கள் சிரிக்கின்றன', 'பஞ்சபூதம்', 'கந்தரலங்காரம்' ஆகிய படங்களில் நடித்தார்.

அதற்குப் பிறகு அரசியல் மாறியது. இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975-ல் இந்தியா முழுவதும் "எமர்ஜென்ஸி' கொண்டு வந்தார். பலர் இந்தியா முழவதும் கைது செய்யப்பட்டனர். ராதாவையும் மிசாவில் கைது செய்தார்கள். ராதா கைதானவுடனேயே, "உங்களுக்கும் தந்தை பெரியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எழுதிக் கொடுங்கள். உங்களை விடுதலை செய்கிறோம்" என்றனர். ராதா மறுத்துவிட்டார். பிறகு ராதாவின் மகன் ராதா ரவி டெல்லி சென்று அன்றைய மத்திய மந்திரியாக இருந்த ஒம் மேத்தாவையும், இந்திரா காந்தியையும் சந்திந்து ராதாவின் உடல்நிலையை விளக்கி ராதாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தார்.

பதினோரு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டுத் திரும்பியவுடன் மலேசியா, சிங்கப்பூரில் நாடகம் போட ராதாவுக்கு அழைப்பு வந்தது. மூன்று மாதங்கள் இரண்டு நாடுகளிலும் நாடகம் நடத்தினார். சில கூட்டங்களில் பேசினார். அந்தப் பேச்சுக்கள் ஒலிநாடாவாக்கப்பட்டு பல ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர்த்தது. பல ஆபூர்வமான சுயசிந்தனைக் கருத்துக்கள் அந்தப் பேச்சுக்களில் நிறைந்து இருந்தது. அங்கிருந்தபோதே ராதாவை மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. இந்தியா திரும்பி நேரே திருச்சி சென்று தங்கினார் ராதா.

ராதா 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். எம்.ஜி.ஆர் அப்போது தமிழக முதல்வர். அவர் ராதாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கிளம்பினார். ராதாவுக்கு திருச்சியில் செல்வாக்கு அதிகம், பிரச்னை வரக்கூடாது என்பதற்காக ராதா குடும்பத்தினர் எம்.ஜி.ஆரை வரவேண்டாம் என்று தடுத்துவிட்டனர். எம்.ஜி.ஆர் ராதாவின் இறுதிச் சடங்குக்காக ஓர் அரசாங்க வண்டிக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் ராதா குடும்பத்தினர் அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற தகவலும் உண்டு.

ராதா இறந்த அன்று தந்தை பெரியாருக்கு 101வது பிறந்த நாள் விழா.

Tuesday, June 14, 2005

பத்மநாப ஐயரின் புத்தகப் பிரியம்

பத்மநாப ஐயர்எனக்கு பத்மநாப ஐயரை அவ்வளவாகத் தெரியாது. என் நண்பர், எழுத்தாளர் இரா.முருகன் சிலமுறை பத்மநாப ஐயர் பெயரை என்னிடம் சொல்லியிருக்கிறார். ராயர் காபி கிளப் எனப்படும் யாஹூ! குழுமத்தில் முருகன் சிலமுறை ஐயரைப் பற்றி எழுதியிருக்கிறார்.

நான் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் லண்டனில் வசித்தேன். கிரிக்கெட் தொடர்பான ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவந்தேன். அப்பொழுது எனக்குத் தமிழின் மீது அவ்வளவு ஈடுபாடில்லை. அதனால் ஐயரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை. கேள்விப்பட்டிருந்தால் பலமுறை அவருடன் அளவளாவியிருப்பேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், பெப்ரவரி 2003-ல் நான் திடீரென தமிழில் எழுதத் தொடங்கினேன். தமிழ்ப் புத்தகங்களைக் கூடை கூடையாக வாங்கிச் சேர்க்கத் தொடங்கினேன். ஓரளவுக்குப் படிக்கவும் செய்தேன். ஒரே வருடத்தில்... பெப்ரவரி 2004-ல், தமிழில் புத்தகங்கள் பதிப்பிக்கும் நிறுவனம் (கிழக்கு பதிப்பகம்) ஒன்றையும் தொடங்கி விட்டேன்.

அதற்குப் பின்னர் ஜூலை 2004-ல் லண்டன் செல்லவேண்டி இருந்தது. அப்பொழுதுதான் பத்மநாப ஐயரைச் சந்தித்தேன்.

ஐயருக்கு இலக்கியத்தில் ஈடுபாடு உண்டு என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் யோசித்துப் பார்க்கும்போது இலக்கியங்களையும் மீறி, அவரது ஆர்வம் உண்மையில் புத்தகம் என்னும் ஸ்தூல உருவத்தின் மீதுதான் இருக்கிறது என நினைக்கிறேன். இலக்கியம், எழுத்து, படைப்பு, கவிதை, கதை என்று சொல்லும்போது அவை அச்சில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இன்று இணையத்திலேயே பிட்களாகவும் பைட்களாகவும் இலக்கியம் வெளிவருகிறது. ஆனால் அச்சிட்ட புத்தகங்கள் - அவை வெறும் குப்பைகளை உள்ளடக்கியிருந்தாலும் - ஆர்வத்தைத் தூண்டுவன.

நான் லண்டனில் இருந்தபோது இரண்டு நாள்கள் ஐயரைச் சந்தித்தேன். முதல் நாள் நித்தியானந்தத்தின் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தார். அங்கு ஐயரது நண்பர்கள் பலரும் இருந்தனர். இடியாப்பமும் சொதியும் தேங்காய்த் துவையலும் உருளைக்கிழங்கு கறியுடன் இரவு உணவு. அதன்பின்னர் இரவு வீடு திரும்பும் முன்னர் ஐயருடன் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அதுதான் ஐயரை முதன்முதலாகச் சந்திப்பது என்பதால் அவரது சிறுவயது இலங்கை வாழ்க்கை, அவர் புத்தகங்கள், இதழ்கள் ஆகியவற்றை நோக்கித் தன் கவனத்தைத் திருப்பியது, அவரது மனைவி, குழந்தைகள் போன்று பலவற்றையும் பற்றிப் பேசினோம்.

யாழ்ப்பாணத்திலிருந்து அவர் இந்தியாவுக்கு தோணி மூலம் வந்து சென்னையில் சில புத்தகங்களை அச்சிட்டு, மீண்டும் அவற்றை எடுத்துக்கொண்டு ஊர் திரும்பியதைப் பற்றிச் சொன்னார். தரமான புத்தகங்கள் அச்சிடுவது, வித்தியாசமான முறையில் புத்தகங்களை அச்சிடுவது ஆகியவற்றைப் பற்றி நிறையப் பேசினார்.

அடுத்த நாள் ஒரு பெட்டி நிறைய எக்கச்சக்கமான புத்தகங்களையும், சஞ்சிகைகளையும் கொண்டுவந்து கொடுத்தார். அதிலிருந்து சில புத்தகங்களையும் எடுத்துக்காட்டி, அவற்றைப் பற்றிப் பேசினார். ஒன்று குழந்தைகளுக்கான புத்தகம். தீவிர இலக்கியவாதிகள் இந்தப் புத்தகத்தை சட்டை செய்யமாட்டார்கள். குழந்தைக்கான கதை. ஒவ்வொரு பக்கமும் எழுத்துக்களுடன் படங்கள் உண்டு. அதற்கும் மேலாக ஒவ்வொரு பக்கத்திலும் சில பகுதிகள் வெவ்வேறு வடிவங்களில் வெட்டப்பட்டிருக்கும். அதனால் அடுத்த பக்கத்தில் இருக்கும் சில படங்களும் எழுத்துக்களும் முதல் பக்கத்திலிருந்து பார்க்கும்போதே தெரியும்.

இந்தப் புத்தகம் மிக அழகான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்ததையும், நேர்த்தியோடு ஒரு பெட்டி மாதிரியான மேலட்டைக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற புத்தகங்கள் தமிழில் வரவேண்டும் என்று தனக்கு இருக்கும் ஆசையைச் சொன்னார்.

சிறுவர்களுக்கான புத்தகங்களை நான் பதிப்பிக்கும்போது நிச்சயம் ஐயரது ஆசையை மனத்தில் வைத்திருப்பேன்.

'ஐயரின் சூட்கேஸ்' என்று என் வீட்டில் அழைக்கப்படும் பெட்டியில் ஐயர் கொடுத்தனுப்பியிருந்த புத்தகங்களை ஒன்றன் பின் ஒன்றாக நான் மெதுவாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதைப் படித்து முடிக்க எனக்கு பல வருடங்கள் ஆகும்! ஆனால் ஐயர் கொடுத்த ஒரு புத்தகத்தை மட்டும் நான் உடனடியாகப் படித்துவிட்டேன். அது அண்டன் பாலசிங்கம் எழுதியிருந்த 'விடுதலை' என்ற புத்தகம். அதைப்பற்றி நான் எனது வலைப்பதிவில் ஓர் அறிமுகப் பதிவை எழுதியிருந்தேன் (ஒன்று | இரண்டு | மூன்று). யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று அந்தப் பதிவை வெளியிட விரும்புவதாகவும், அதற்கு அனுமதி தருமாறும் கேட்டு ஐயர் எனக்கு எழுதியிருந்தார். கடல் கடந்து வரும் பத்திரிகையில் என் எழுத்து வெளிவருவது எனக்கு சந்தோஷம்தான்!

ஐயரை நான் சந்திப்பதற்கு ஒரு மாதம் முன்னரே - ஜூன் 2004-ல் - நான் கொழும்பு செல்லவேண்டியிருந்தது. இந்தப் பயணத்தைப் பற்றி ஐயரிடம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தேன். ஐயர் உடனேயே தனது நண்பர்கள் சிலருக்குத் தகவல் தெரிவித்து என்னைச் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். இதனால் எனக்கு சு.வில்வரத்தினம், தெளிவத்தை ஜோசப், மு.பொன்னம்பலம், ரமனேஷன் போன்றவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. [ஒன்று | இரண்டு]

இத்தனைக்கும் என்னைச் சந்திக்கும் ஒரே காரணத்துக்காக வில்வரத்தினம் திருகோணமலையிலிருந்து கொழும்பு வந்திருந்தார்! அப்படி ஐயர் அவர்களிடம் என்னைப்பற்றி என்னதான் சொல்லியிருந்தாரோ? அவர்களும் ஒருவேளை சாகித்ய அகாதெமி விருது வாங்கிய பெரும் தமிழ் எழுத்தாளர் யாரோ வருவதாக எண்ணியிருந்திருக்கலாம்! அதன்பின்னர் அவர்களிடம் பேசும்போது, நான் ஒரு சாதாரண வாசகன்தான்; எழுத்தென்று சொல்லிக்கொள்ளுமாறு நான் ஒன்றும் செய்தது கிடையாது; ஒரு பதிப்பகம் தொடங்கி நான்கு மாதங்கள்தான் ஆகின்றன என்று விளக்கவேண்டியிருந்தது.

ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் பரவலாக அறியப்படுவதில்லை என்று ஐயர் வருத்தப்படுவதாக எனக்குத் தோன்றியது. ஐயர் தன் சொந்தச் செலவில் தமிழகத்தில் கிடைக்கும் புத்தகங்கள், இதழ்களை வாங்கி ஈழத்தில் தன் நண்பர்களுக்கெல்லாம் அறிமுகம் செய்து வந்தார் என்று அறிகிறேன். ஆனால் அதேபோல ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகள் பரவலாக தமிழகத்தில் கிடைக்குமாறு யாரும் முயற்சிகள் செய்யவில்லை.

இப்பொழுது ஓரளவுக்கு ஈழ எழுத்தாளர்களின் புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் இது தொடர்ச்சியாக, இன்னமும் பெரும் அளவில் நடக்க வேண்டும். அதற்கென பலரும் சேர்ந்து உழைக்க வேண்டியிருக்கும்.

புத்தகங்களைத் தவிர்த்துப் பார்க்கையில் ஐயர் தான் பெரும் சோம்பேறி என்று தன்னைச் சொல்லிக்கொள்கிறார். சில நாள்கள் சமையல் செய்ய சோம்பலாக இருப்பதால் சமைக்காமல், தேநீர் அருந்த வெந்நீர் கூடப் போட விரும்பாமல், ஒன்றையுமே சாப்பிடாமல் தன் புத்தகங்களோடு தனித்து வாழ்க்கை நடத்தி வருகிறார் ஐயர்.

ஐயர் புத்தகங்கள் மீது கொண்ட காதலால் புத்தகங்களைப் பற்றிப் பேசும்போது அவரது முகம் சாக்லேட்டைப் பற்றிப் பேசும் குழந்தையின் முகம் போலத்தான் தோற்றமளிக்கும்.

கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டமும், டோராண்டோ பல்கலைக்கழக தெற்காசியக் மையமும் இணைந்து வழங்கும் 2005-ஆம் ஆண்டுக்கான 'இயல் விருது' ஐயருக்கு வழங்கப்படுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவருக்குக் கிடைக்கும் C$1,500 ஒரே நாளில் காணாமல் போய்விடும் என்பதையும் நான் அறிவேன். கையில் உள்ள காசைப் பிறருக்கெனப் புத்தகம் வாங்கச் செலவிடுவதில் அவர் சமர்த்தர் ஆயிற்றே!

விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாராட்டு விழா

ஞாயிறு மாலை 6.00 மணிக்குத் தொடங்கி மெல்லிசை மன்னர்கள் M.S.விஸ்வநாதன், T.K.ராமமூர்த்தி ஆகியோருக்கு சென்னை காமராஜர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. கணேஷ் க்ருபா இசைக்குழுவினரின் ஆர்கெஸ்டிராவில் பல திரையிசைக் கலைஞர்களும் பங்கேற்றுப் பாடினர். பாராட்டி விழாவுக்குத் தலைமை பாலமுரளிகிருஷ்ணா. முன்னிலை இளையராஜா. பழம்பெரும் பின்னணி இசைக் கலைஞர் T.K.தக்ஷ்ணாமூர்த்தி சுவாமிகள் வந்திருந்து கலந்துகொண்டார். தன் யூஷுவல் தொப்பிக்கு பதில் அற்புதமான தலைப்பாகையை அணிந்து கொண்டு வந்திருந்தார் பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ்.

அதைத்தவிர A.R.ரஹ்மான், கங்கை அமரன் போன்றோரும், பின்னணிப் பாடகர்கள் டி.எம்.சவுந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியன், சுசீலா, சித்ரா, எஸ்.பி.ஷைலஜா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இசைக்குழுவினரின் பாடகர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கும்போது முதலில் மேடை ஏறிய பிரபலம் கங்கை அமரன். வந்தவுடனேயே மேடையை டாமினேட் செய்ய ஆரம்பித்துவிட்டார். கையில் எடுத்த மைக்கை கீழே வைக்கவேயில்லை. நிறைய அபத்த உளறல்கள், சில நல்ல சங்கதிகள். அவரைப் பாடக் கேட்டுக்கொண்டார் இசைக்குழுத் தலைவர். "அன்பு மனம் கனிந்தபின்னே அச்சம் தேவையா" என்ற பாடலை கங்கை அமரன் பாடினார். அற்புதமான பாடல், கங்கை அமரன் குரலுக்கு ஒத்துவரவில்லை என்று சொல்லலாம்.

அடுத்து மேடைக்கு வந்த பிரபலம் எல்.ஆர்.ஈஸ்வரி. பெருந்திருடன் ஆதிகேசவலு போட்டிருக்கும் நகையைப் போன்று கழுத்து முழுக்க நிறைந்து வயிறு வரை தொங்கும் சங்கிலி. பாவம், இவரது குரல் முழுவதுமாகப் போயே போய்விட்டது. ஆனாலும் ஒரு பாடலை கஷ்டப்பட்டு பாடி முடித்தார். வருத்தமாக இருந்தது. என்ன குரல், இப்படி ஆகி விட்டதே என்று.

பின் உள்ளே நுழைந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியன். இதே அரங்கில சில வாரங்களுக்கு முன் இவரது பாடல்களைக் கேட்டிருந்தேன். மொத்தமாக மூன்று பாடல்களைப் பாடினார். இரண்டு சோலோ. ஒன்று எஸ்.பி.ஷைலஜாவுடன். கம்பன் ஏமாந்தான், சிப்பி இருக்குது முத்தும் இருக்குது. நினைத்தது போலவே கூட்டத்தில் இருந்த கோமாளிகள் "தேவுடா" பாடு என்று ஆணையிட்டனர். அமைதியாக மறுத்த எஸ்.பி.பி, இந்த விழா எங்கள் தேவுடுவான விஸ்வநாதன்-ராமமூர்த்திக்காக. எனவே அவர்கள் இசையமைத்த பாடல்களை மட்டும்தான் பாடப்போகிறேன் என்றார்.

'கம்பன் ஏமாந்தான்' பாடும்போதுதான் இளையராஜா உள்ளே நுழைந்தார். அப்பொழுது எஸ்.பி.பி இளையராஜா, பாவலர் வரதராசன் ஆகியோருடன் ஓர் இசைக்குழு அமைத்து அதில் பாடியதையும், அதில் இளையராஜா ஹார்மோனியம் வாசித்ததையும் நினைவுகூர்ந்து அதை இப்பொழுது இளையராஜா "ரிவைண்ட்" செய்து இப்பொழுதெல்லாம் பார்க்கிறாரா என்று தெரியவில்லை என்றார். அதற்கு இளையராஜா "ரிவைண்ட்" செய்யத் தேவையில்லை. "It always remains" என்றார்.

சுசீலா அம்மாவைப் பேசச்சொல்லி வற்புறுத்தியும், அவர் "எனக்குப் பெசத்தெரியாது, பாட மட்டும்தான் தெரியும்" என்றார். பின் முன்னால் அமர்ந்திருந்த தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளைப் பார்த்து "எனக்கு முதன்முதலில் மலையாளப் படம் ஒன்றில் பாட வாய்ப்புக் கொடுத்தவர்" என்று நினைந்தார். பின் இரண்டு பாடல்களுக்கு இடையில் இளையராஜா (அப்பொழுதுதான் எழுந்து வெளியே போனார்), தன்னையும் லதா மங்கேஷ்கரையும் ஒப்பிட்டுச் சொன்னதாகச் சொன்னார்.

சித்ரா ஒரு பாட்டு, பின் சிப்பி இருக்குது முத்தும் இருக்குது டூயட், பின் இசைக்குழுவின் சொந்தக் கலைஞர்கள் பாட்டு (பல டி.எம்.எஸ் குரல் பாட்டுகள், ஆனால் டி.எம்.எஸ் மெதுவாகத்தான் வந்தார், பாடல்கள் எதையும் பாடவில்லை).

அதன்பின் கிட்டத்தட்ட 8.15 ஆனபோது திடீர்க் கூத்துகள் ஆரம்பமாயின. இசை வாத்தியங்களை பின்னுக்குத் தள்ளிவைத்து மேடையில் நான்கைந்து நாற்காலிகளைப் போட்டனர். அதற்குள் கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்த விஸ்வநாதன், ராமமுர்த்திக்கு "வேத" முறையில் ஏதோ சடங்குகள் செய்யப்பட்டன. எப்பொழுதும் சினிமாவில் பார்ப்பனப் புரோகிதராகத் தலைகாட்டும் ஒருவர் மற்றும் ஒருவருடன் கையில் பூர்ணகும்பங்களை எடுத்து வந்தார். தவில், நாயனம் ஒலித்தது. விஸ்வநாதன், ராமமூர்த்திக்கு பரிவட்டங்கள் கட்டி கையிலே கும்பத்தைக் கொடுத்து அதில் அங்கேயே பூஜை செய்யத் தொடங்கினார். திடீரென கூட்டத்துக்கும் வெறி பிடித்துவிட்டது. ஏதோ கோவில் கும்பாபிஷேகத்தைப் பார்ப்பதைப் போல அடித்துப் பிடித்துக்கொண்டு முன்வரிசையை நோக்கி ஓடினர். அரங்கில் கிட்டத்தட்ட 5,000 பேர் என்று நினைக்கிறேன். இதனால் அரங்கில் பின்னால் உட்கார்ந்திருந்த யாராலும் எதையும் பார்க்கமுடியவில்லை.

பின் ஒருவழியாக ஏதோ சமஸ்கிருத மந்திர உச்சாடனங்களுக்குப் பிறகு மேடையேறினார்கள் அனைவரும். அங்கும் மந்திரங்கள் தொடர்ந்தன. இரவு 8.30க்கு நான் கிளம்பிவிட்டேன். அதன்பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் வந்திருக்கவேண்டும்.

பின் பலரும் பாராட்டிப் பேசியிருப்பார்கள்.

இதுபற்றிய சுருக்கமான செய்தி தினமணியில் வெளியானது. தி ஹிந்துவில் எந்தச் செய்தியும் இல்லை.

Sunday, June 12, 2005

Being Indian

இன்று பிபிசி வேர்ல்ட் சானலில் கரன் தாபர், பவன் வர்மா என்பவருடன் விவாதம் நடத்தினார். ஜெயலலிதா விவாதம் போல காரசாரமாக இல்லை! பவன் வர்மா Being Indian என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார். தாபர் வர்மாவின் புத்தகத்தின் மொத்தமாக மயங்கிப் போயிருந்தார். அதனால் விவாதத்தில் வர்மாவின் புகழ் பாடுதல் மட்டும்தான் இருந்தது. ஆனாலும் விவாதம் சுவையாக இருந்தது. உடனே இந்தப் புத்தகத்தை ஆர்டர் செய்துள்ளேன்.

புத்தகம் பற்றிய ஒரு மதிப்புரை.

உலகம் தட்டையானது

நேற்று தாமஸ் ஃப்ரீட்மேன், ஷேகர் குப்தாவுடன் NDTV-ன் Walk The Talk நிகழ்ச்சியில் வந்தார்.

தாமஸ் (டாம்) ஃப்ரீட்மேன் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் பத்தி எழுதுபவர். இப்பொழுதுதான் தி ஹிந்து சகட்டுமேனிக்கு நியூ யார்க் டைம்ஸ், கார்டியன் செய்தித்தாள்களிலிருந்து உருவி எடுத்து தனது நடுப்பக்கங்களை நிரப்புகிறதே... அதனால் நீங்கள் அனைவரும் ஃப்ரீட்மேனைப் படிக்காமல் இருந்திருக்க முடியாது. ஷேகர் குப்தா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (மும்பை) பத்திரிகையின் ஆசிரியர். NDTV தொலைக்காட்சிக்காக மேற்படி நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியின் எழுத்துவடிவம் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியாகும்.

தாமஸ் ஃப்ரீட்மேன் சமீபத்தில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் - The World Is Flat - உலகம் தட்டையானது. ஆஹா ஊஹோ என்று இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பலரும் புகழ்கிறார்கள். ஆனால் எனக்குப் பிடித்தது Matt Taibbi என்பவர் ஃப்ரீட்மேன் புத்தகத்தைக் குத்திக் குதறிக் கிழித்ததுதான். நான் ஃப்ரீட்மேன் புத்தகத்தை இன்னமும் படிக்கவில்லை. அவருடைய முந்தைய புத்தகமான The Lexus and the Olive Tree-ஐயும் படிக்கவில்லை. அதற்கு முந்தி அவர் எழுதிய வேறு எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லை. அவர் எழுதும் பத்திகளை அவ்வப்போது படித்திருக்கிறேன்.

ஃப்ரீட்மேன் பெங்களூர் வந்திருக்கிறார். இன்போசிஸ் நந்தன் நீலகனியுடன் பேசியிருக்கிறார். பேச்சுவாக்கில் நீலகனி நிறுவனங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகள் குறைந்து "சமதளமாகிறது" என்று பொருள்படும்படி "Tom, the playing field is being leveled." என்று சொல்லியிருக்கிறார். உடனே ஃப்ரீட்மேன் ஆடிப்போய்விட்டாராம். "ஆஹா... இத்தனை நாள் ஜார்ஜ் புஷ் ஈராக் மீது தொடுத்த போரை அங்கு போய் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டு எழுதித் தள்ளிக்கொண்டிருக்கும் வேளையில் உலகின் மற்றொரு மூலையில் என்னென்னவோ (ஆஃப்ஷோரிங், அவுட்சோர்சிங்) நடந்து விட்டதே, எதுவுமே தெரியவில்லையே தனக்கு" என்று அதிர்ந்துபோய்விட்டாராம். அத்துடன் நீலகனி சொன்னதை "உலகம் தட்டையானது" என்று பிடித்துக்கொண்டு அலைந்து அந்தப் பெயர் வைத்து ஒரு புத்தகத்தை எழுதிவிட முடிவு செய்துவிட்டார்!

சரி, நான் புத்தகத்தைப் பற்றி, ஒன்றும் படிக்காமல், இங்கு விமர்சனம் செய்யப்போவதில்லை. மற்றபடி டாமும், ஷேகரும் என்ன அளவளாவினர் என்று சில குறிப்புகள்.

* கி.பி 1400-1850 வரை நடந்தது உலகமயமாதல் 1.0. நாடுகளுக்கிடையேயான உலகமயமாதல் அது. ஒவ்வொரு நாடும் - முக்கியமாக ஐரோப்பிய நாடுகள் - தன் அதிகாரத்தை தன் நாட்டுக்கு வெளியேயும் நிலைநாட்ட முயற்சி செய்தது. ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம், இத்யாதி. 1850-2000 வரையிலாக நடந்தது பெரு நிறுவனங்கள் நிகழ்த்திய உலகமயமாதல். உலக்கமயமாதல் 2.0. பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம். 2000க்குப் பிறகு நடப்பது உலகமயமாதல் 3.0. இங்கு தனியார், சிறு நிறுவனங்கள் கூட உலகமயமாகிறார்கள்.

* அவர் சிறுவனாக இருக்கும்போது வீட்டில் பெற்றோர்கள் சொல்வார்களாம்: "சாப்பாட்டை ஒழுங்காகச் சாப்பிடு, மிச்சம் வைக்காதே. சீனா, இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள்." இவர் இப்பொழுது தன் குழந்தைகளிடம் சொல்கிறாராம்: "வீட்டுப்பாடத்தை ஒழுங்காகப் போடு, மிச்சம் வைக்காதே! சீனா, இந்தியாவில் பலர் பசியுடன், உன் வேலையைப் பிடுங்கத் தயாராக இருக்கிறார்கள்!"

* ஃப்ரீட்மேன் 1990களில் அளித்த மெக்டானல்ட்ஸ் தேற்றம்: "எந்த இரு நாடுகளில் மெக்டானல்ட்ஸ் சாப்பாட்டுக் கடைகள் இருக்கின்றதோ அவை தமக்குள் (ஆயுதச்) சண்டை போடுவதில்லை." இப்பொழுது கொடுத்திருக்கும் புது டெல் தேற்றம்: "எந்த இரு நாடுகள், (பெரு நிறுவனங்களுக்கான) ஒரே பொருள் வழங்கு சங்கிலியில் (Supply Chain) இணைந்துள்ளதோ அவை இரண்டுக்கும் இடையில் (ஆயுதச்) சண்டைகள் வருவதில்லை." எனக்கென்னவோ இந்தத் தேற்றங்களின் மாற்றே (converse) சரியான கூற்று என்று தோன்றுகிறது.

* டெல் கணினி நிறுவனத்துக்குச் சென்று பேசினாராம் ஃப்ரீட்மேன். பேச்சுக்கு காசு வாங்கக் கூடாது என்பது நியூ யார்க் டைம்ஸ் நிறுவன ஊழியர்களுக்கான கட்டுப்பாடாம். அதனால் அதற்கு பதிலாக தன்னுடைய டெல் கணினியில் பாகங்கள் எங்கெங்கிருந்தெல்லாம் வந்தது என்று கண்டுபிடிக்கச் சொன்னாராம். 400க்கும் மேற்பட்ட பாகங்கள், 30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து. மலேசியாவில் இருக்கும் சீன நிறுவனம், தாய்லாந்தில் இருக்கும் சீன-ஜப்பானிய நிறுவனம், சீனாவில் இருக்கும் சீன நிறுவனம், இப்படி, அப்படி என்று. (அதில் ஏதாவது பிரச்னை என்றால் நீங்கள் தொலைபேசியில் அழைப்பு விடுத்தால் அதை எடுப்பவர் பெங்களூரில் இருக்கும் இந்தியராக இருக்கலாம், அல்லது அமெரிக்காவிலேயே இருக்கும் அமெரிக்கராகவும் இருக்கலாம்!)

* பரிவுடனான உலகமயமாதல், புஷ், பிளேர் என்று பலதரப்பட்ட விஷயங்கள். ஃப்ரீட்மேன் பிளேர் ரசிகர் என்று சொன்னார். பிளேர்தான் சரியான கிச்சடியைக் கிண்டியிருக்கிறாராம். சோஷலிசம், சந்தையிசம் என்று சரியான பதத்தில் வந்துள்ளதாம். இந்தியாவின் மன்மோகன் சிங்குக்கும் இந்த கிச்சடிக்கான பதம் தெரிந்துள்ளதாம். அவரும் சரியான பாதையில்தான் செல்கிறாராம். புஷ்ஷுக்குத் தெரியவில்லையாம். ஒரே தீயல் வாசனை.

ஃப்ரீட்மேன் புஷ் கொள்கைகளை எதிர்ப்பவர். ஈராக் போரைத் தவிர.

புத்தகத்தைப் படித்தவர்கள் புத்தகத்தின் மீதான கருத்துகளைச் சொன்னால் நன்று.

பிற சுட்டிகள்:

ஃப்ரீட்மேன் - ஹார்ட் டாக் செவ்வி

Saturday, June 11, 2005

புறநகரும் மெட்ரிக் ஆங்கில மீடியம் பள்ளிகளும்

இன்று கொட்டிவாக்கத்தில் சில குழந்தைகளுக்கு(ம் பெரியவர்களுக்கும்...) கணினிப் பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்தோம்.

குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் ஆர்வம் சந்தோஷத்தைத் தருகிறது. பெரியவர்களைவிட வேகமாகக் கற்றுக்கொள்கிறார்கள்.

இன்னும் சில நாள்களில் இந்தக் குழந்தைகளின் கைவண்ணத்தை இணையத்திலே நீங்கள் பார்ப்பீர்கள்.

சும்மா அமர்ந்திருக்கும்போது இந்தக் குழந்தைகளிடத்தில் பேச்சுக்கொடுக்கும்போது பல திடுக்கிடும் விஷயங்கள் கிடைத்தன. இவர்கள் வசிக்கும் இடங்களைச் சுற்றிலும் இருப்பது அத்தனையுமே ஆங்கில மீடியத்தில் நடக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள். எல்லாமே தனியார் பள்ளிகள். நல்லவேளை, தமிழ் ஒரு பாடமாகவாவது உள்ளது.

நான் "உன் பெயர் என்ன?" என்று கேட்டாலுமே "My name is" என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் யாருக்குமே சரளமாக ஆங்கிலம் பேசத்தெரியவில்லை. ஏழாவது, எட்டாவது படிக்கும் மாணவர்களுக்கும் கூட. ஆனால் தமிழே சரியாகக் கற்றுக்கொள்ளாததால் தமிழில் சரியாக எழுதவும் தெரியாது என்று புரிந்துகொண்டேன். "தமிழ்தான் கஷ்டமான பாடம்" என்று சொல்கிறார்கள்!

பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு வரியையும் ஆங்கிலத்தில் படித்து, அதனை ஒருமுறை தமிழில் மொழிபெயர்த்துதான் சொல்லிக்கொடுக்கிறார்களாம். பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் உள்ளூர எதுவுமே புரிவதில்லை. மனனம் செய்துதான் பரீட்சை எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில் என்னுடன் பேசுவார்களா என்று சிலரைக் கேட்டேன். அனைவரும் மறுத்துவிட்டனர். தமிழில்தான் பேசுகிறார்கள், ஆனால் தமிழில் சொல் ஆளுமை குறைவாக - வெகு குறைவாக - உள்ளது.

ஆங்கிலத்திலும் சில அடிப்படையான விஷயங்களின் புரிதல் குறைவாக உள்ளது. ஆங்கிலத்தின் மிகப்பெரிய தொல்லையான spelling இந்தக் குழந்தைகளை வாட்டியெடுக்கிறது. பல சொற்களைச் சொல்லி ஸ்பெல்லிங் கேட்டேன். நிறையவே திண்டாடினார்கள்.

நகரத்தில் வசிக்கும் மேட்டுக்குடிப் பிள்ளைகள் கான்வெண்டில் படித்து ஆங்கிலத்திலேயே வாழ்க்கை நடத்தலாம். அவர்களை விட்டுவிடுவோம். ஆனால் இந்தப் புறநகரின் ஆங்கில மோகம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாழடித்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. ஆங்கில மீடியம் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் தமிழையும் சரியாகக் கற்காமல் ஆங்கிலத்தையும் சரியாகக் கற்காமல் அரைகுறையாக உருவாக்கப்படும் மாணவர்கள் பிற்காலத்தில் நிறையவே திண்டாடப் போகிறார்கள்.

இந்தக் குழந்தைகள் அனைவரும் - 100% - முதல் தலைமுறையாக இப்படி ஆங்கிலக் கல்வி பயில்கிறார்கள். வீட்டில் பெற்றோர்களால் இவர்களுக்குத் துளியளவும் பாடங்களில் உதவி செய்யமுடியாது என்பதையும் கவனத்தில் வைத்திருக்கவேண்டும்.

ராமய்யாவின் குடிசை

இந்த மாதம் பல சிற்றிதழ்களிலும் வந்திருக்கும் விளம்பரம் இது. பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.


The Roots
4/17, நாவலர் தெரு (முதல் மாடி)
தேவராஜன் தெரு, தசரதபுரம், சாலிகிராமம்
சென்னை 600 093

வழங்கும்

ராமய்யாவின் குடிசை

கீழவெண்மணி குறித்த ஆவணப்படம்

36 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு மீண்டும் உயிர்பெறுகிறது

64 சாட்சியங்கள், 51 ஆவணங்கள்
இதுவரை வெளிவராத தகவல்கள், புகைப்படங்கள்

இயக்கம்: பாரதி கிருஷ்ணகுமார்

முன் வெளியீட்டுத் திட்டம்
DVD Rs. 350 Rs. 300
VCD Rs. 300 Rs. 200

தபாலில் பெற விரும்புவோர் கூடுதலாக ரூ. 30 செலுத்த வேண்டும்.
M.O, D.D 'THE ROOTS' என்ற பெயருக்கு Payable at Chennai என்று அனுப்ப வேண்டும்.

Friday, June 10, 2005

வாக்காளர் பெயர்ப்பட்டியல் ஊழல்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வருகிறது. புதிய பெயர்களைச் சேர்க்கும் கடைசி நாளன்று பல ஊர்களில் சில கட்சிப் பிரமுகர்கள் கொத்து கொத்தாக விண்ணப்பங்களைக் கொடுத்திருக்கின்றனர். திமுக கூட்டணிக் கட்சியினர் இதைத்தொடர்ந்து அதிமுக ஊழல் செய்துள்ளது என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்ய, தேர்தல் ஆணையம் உடனே சில கண்காணிப்பாளர்களை அனுப்பி சோதனை செய்ய, கொத்தாகக் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பங்கள் பலவும் குழப்பங்கள் நிறைந்ததாகவும் பொய்யான தகவல்களுடனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மீது வழக்குப் போட முடிவு செய்தது. உடனே "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்றவாறு அதிமுக ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று வழக்கு தொடுத்துள்ளார். அதாவது தேர்தல் ஆணையம், வேண்டுமென்றால் தவறான தகவல்களைக் கொடுத்த நபர்கள் மீது வழக்கு போடட்டும், ஆனால் அந்த விண்ணப்பங்களையெல்லாம் சேர்த்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு போடக்கூடாது என்று.

இதிலிருந்து நன்றாகவே தெரிந்துள்ளது யார் வாக்காளர் பட்டியலில் திருட்டுத்தனம் செய்துள்ளனர் என்று. இதுமட்டும் சரியாக நிரூபிக்கப்பட்டால் இந்தப் புரட்டில் ஈடுபட்ட பல அதிமுக நிர்வாகிகளை எந்தத் தேர்தலிலும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு நிற்கக்கூடாது என்று தடை விதிக்கவேண்டும். முடிந்தால் அதிமுக மீது கடுமையான அபராதத் தொகை (100 கோடி ரூபாய்? :-) விதிக்க வேண்டும்!

இன்று கிடைத்த தகவல்படி தமிழக வாக்காளர் பட்டியல் http://eroll.tn.nic.in/ என்ற தளத்தில் கிடைக்கிறது. (இண்டெர்நெட் எக்ஸ்புளோரரில்தான் ஒழுங்காக வேலை செய்கிறது.) இப்பொழுதைக்கு மாநகராட்சிகள் (சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற), ஓசூர் தொகுதி் பெயர்ப்பட்டியல் தவிர மற்றவை கிடைக்கின்றன. மீதமுள்ளவை 11 ஜூலை அன்றுதான் கிடைக்குமாம்.

எனக்குத் தெரிந்த சிலரது பெயர்களை (அறுசுவை பாபு) நாகப்பட்டினம் பெயர்ப்பட்டியலில் தேடிப்பார்த்தேன்!

தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிடம் வாக்காளர் பட்டியலைக் கொடுத்து பெயர்களைச் சரிபார்க்கச் சொல்லியுள்ளது. ஆனால் அதனைவிடச் சரியான வழியாக எனக்குத் தோன்றுவது ஒவ்வொரு தெருவிலும் உள்ள ஒருவராவது பக்கத்தில் உள்ள இணைய மையத்துக்குச் சென்று தத்தம் தெருவில் நிஜமாகவே வசிப்பவர்களின் பெயர்கள் மட்டும்தான் பட்டியலில் இருக்கின்றதா என்று சரிபார்க்க வேண்டும். சிறிது காசு செலவழித்தாலும் பரவாயில்லை. அரசியல் திருடர்களை நம்பிப் பயனில்லை.

Wednesday, June 08, 2005

சங்கீத் நாடக் அகாடெமி குழப்பங்கள்

சங்கீத் நாடக் அகாடெமி தலைவராக இருந்த ஒடிஸ்ஸி நாட்டியக் கலைஞர் சோனால் மான்சிங் பதவியிலிருந்து தூக்கப்பட்டு காங்கிரஸ் அரசியல்வாதி ராம் நிவாஸ் மிர்தா அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சங்கீத் நாடக் அகாடெமி என்பது தில்லியில் இந்தியாவின் நாட்டிய, இசை, நாடகக் கலைகளை வளர்க்கும் நிறுவனமாக அமைக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் இருந்த சமயம் சோனால் மான்சிங் இதன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இவருக்கும் துணைத்தலைவராக இருந்த கே.என்.பணிக்கருக்கும் இடையே நடந்த சச்சரவில் பணிக்கர் பதவி விலகினார். தொடர்ந்து பணிக்கருக்கு ஆதரவாக பாலமுரளிகிருஷ்ணா விலகினார். இன்னமும் சிலர் சோனால் மான்சிங் பதவியில் தொடர வேண்டும் என்றனர். இதுபற்றிய விஷயங்கள் முன்னணி செய்திப் பத்திரிகைகளில் இடம் பெறாவிட்டாலும் அவ்வப்போது தெஹெல்காவில் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

இதற்கிடையில் சென்ற ஆண்டுக்கான சங்கீத் நாடக் அகாடெமி விருதுகள் அறிவிக்கப்பட்டன. விருது பெற்றவர்களில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி. இந்த விருது வழங்கும் விழா மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. விருது பெற்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விருது வழங்குவதாக இருந்தது. ஆனால் சோனால் எதிரி கோஷ்டியினர் அந்த விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு (குடியரசுத் தலைவருக்கும் சேர்த்து!) கறுப்புக்கொடி காட்டுவோம் என்று பயமுறுத்தியிருக்கின்றனர். இதனால் குடியரசுத் தலைவர் மாளிகை விழாவை காலவரையின்றி தள்ளிப்போட அறிவுரைத்தது.

சோனால் மான்சிங்கின் நாள்கள் மிகவும் குறைவு என்பது அப்பொழுதே தெரிந்துவிட்டது. நேற்று ராம் நிவாஸ் மிர்தா அந்த இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். கலை இலக்கிய அமைப்புகளில் அரசுத் தலையீடு கூடாது, அரசியல்வாதிகள் கூடாது என்று ஒருசாரார் சொன்னாலும், கலைஞர்கள் தாமே பொறுப்பேற்று நடத்தும் அமைப்புகளில் அரசியல்வாதிகளை விட மோசமாக நடந்துகொள்கிறார்கள்.

Monday, June 06, 2005

கொட்டிவாக்கத்தில் கணினிப் பயிற்சி

தேவை: கணினி, இணையம் கற்றுக்கொடுக்க, சில தன்னார்வலர்கள்

நண்பர்களே! கொட்டிவாக்கம் என்பது சென்னையை அடுத்துள்ள சிறு கிராமம். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது. அங்குள்ள மீனவர்களுக்கு, சமீபத்தைய சுனாமியை அடுத்து, ஒரு கணினி கொடையாகக் கிடைத்துள்ளது. அரசு ஆதரவில் கணினியை வைக்க ஓர் இடமும், மின்சார வசதியும் கிடைத்துள்ளது.

இந்தக் கணினியின் மூலம் இங்குள்ள சிறுவர்கள், பெரியவர்களுக்கு கணினியிலிருந்து உபயோகமான விஷயங்களைக் கற்றுக்கொடுக்க தமிழும், கணினியும் தெரிந்த ஆர்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.

முதல் கட்டமாக கணினி கற்றுக்கொள்ள வருபவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்துள்ளோம்.
1. ஆறு வயதிலிருந்து பனிரெண்டு வயது வரையிலான சிறுவர்கள்
2. பதினேழு வயதிலிருந்து இருபத்தி இரண்டு வயதிலான மாணவர்கள்
3. இருபத்தி ஐந்து வயதுக்கு மேற்பட்ட பெண்கள்

முதல் குழுவுக்கு கணினியில் விளையாட்டுகளை விளையாட, பாடங்கள் கற்றுக்கொள்ள, படம் வரைய, டிஜிட்டல் கேமரா மூலம் படங்களை எடுக்க, படங்களை வைத்துக் கதை சொல்ல கற்றுக்கொடுப்போம்.

இரண்டாவது குழுவுக்கு இணையத்தளங்களை வடிவமைக்க (HTML, CSS, Graphics, Database), ஏதோ ஒரு மொழியில் கணினியில் நிரல்கள் எழுத (Visual Basic?) ஆகியவற்றைச் சொல்லிக்கொடுப்போம்.

மூன்றாவது குழுவினர் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர்கள். சணலில் கைவினைப் பொருள்கள் செய்து விற்பனை செய்ய உள்ளார்கள். அவர்களது பொருள்களுக்கு சற்றே விரிவான சந்தையை உருவாக்க ஒரு மின்-வணிகத் தளம் ஒன்றை உருவாக்கித் தரப்போகிறோம். அத்துடன் இந்தப் பெண்களுக்கு கணினியையும், இணையத்தையும் பயன்படுத்தவும் சொல்லித்தருவோம்.

வரும் 11 ஜூன் 2005, சனிக்கிழமை முதல் வகுப்புகள் தொடங்க இருக்கின்றன.

இந்த முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவித சம்பளமும் கிடையாது. உங்கள் செலவிலேயேதான் கற்றுக்கொடுக்கும் இடத்துக்கு வந்துவிட்டுப் போகவேண்டும். வார நாளாக இருந்தால் மாலை 5.00 - 7.00 மணிக்கு. வார இறுதியாக இருந்தால் காலையில் 10.00 - 1.00 மணிவரை. உங்கள் விருப்பத்தை எனக்கோ (bseshadri _at_ gmail _dot_ com) க்ருபா ஷங்கருக்கோ (shankarkrupa _at_ yahoo _dot_ com) மின்னஞ்சலில் தெரிவிக்கவும். இந்த பயிற்சி வகுப்புகளை க்ருபா ஷங்கர் ஒருங்கிணைப்பார்.

ஜெயகாந்தன் கோவை விழாவில் தகராறு

கோவையில் ஜெயகாந்தனுக்காக ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் அங்குள்ள சட்டக் கல்லூரி மாணவர்களும், திராவிடர் கழக உறுப்பினர்களும் ஜெயகாந்தன் தமிழில் பேசக்கூடாது; சமஸ்கிருதத்தில்தான் பேசவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். காவலர்கள் அழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்பவர்களை வெளியேற்றியபின்னர் கூட்டம் தொடர்ந்துள்ளது.

தினமணி செய்தி

ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அமைதியாக விழா வாசலில் செய்திருக்கவேண்டும். உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்து, மேடையின் முன் வந்து தகாத வார்த்தைகளால் பேசி, கூட்டத்தினை நடத்த விடாமல் செய்தது கண்டிக்கப்படவேண்டியது. சென்னையில் ராணி சீதை அரங்கின் வாசலில் கண்டனத்தைத் தெரிவித்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் அமைதியாக, கைகளில் தட்டிகளை வைத்துக்கொண்டும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் எதிர்ப்பைக் காட்டினர். ஜனநாயக சமுதாயத்தில் அதுதான் சரியான வழிமுறை.

Sunday, June 05, 2005

அத்வானியின் பாகிஸ்தான் யாத்ரா

அத்வானி யாத்திரை கிளம்பினாலே கலவரம் வெடிக்கும் போல இருக்கிறது. பாகிஸ்தான் சென்ற அத்வானி வரிசையாக இரண்டு அணுகுண்டுகளைப் போட்டுவிட்டார்.

எஸ்.வி.ராஜதுரை தனது பசு, பதி, பாகிஸ்தான் கட்டுரையில் வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளைப் பிணைக்கும் மூன்று விஷயங்கள் பசு (வதைத் தடுப்பு), (கண)பதி (ஊர்வலங்கள்), பாகிஸ்தான் (மீதான வெறுப்பு) என்பார். இந்த மூன்றிலும் ஆதாரமான விஷயங்கள் முஸ்லிம் எதிர்ப்பு. முதலாவதில் தலித் எதிர்ப்பும் உள்ளது. இந்தியாவில் தலித்கள் காலம் காலமாக மாட்டிறைச்சி சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் இந்துத்துவ அமைப்புகளின் கூக்குரலான பசு வதை தடுத்தல் (பிற மிருகங்களைச் சாப்பிடுவது பிரச்னைக்குரிய விஷயம் அல்ல போலிருக்கிறது) முஸ்லிம், தலித்களுக்கு எதிராக பிற இந்துக்களை ஒன்று திரட்ட வழிவகுக்கிறது.

கணபதி ஊர்வலங்களும் இந்துக்களை ஒன்றுதிரட்டி எப்படியாவது முஸ்லிம் தெருக்கள் வழியாகச் சென்று ஏதாவது வம்பு வழக்கு வராதா, அதைச் சாக்கிட்டு கல்லடி முதல் கத்திக்குத்து வரை சென்று உணர்ச்சிகளைத் தூண்டிவிடலாமா என்று ரத்த ஆற்றில் மீன்பிடிப்பது. கணபதி என்பது ஒரு குறியீடுதான். ராமர் ஊர்வலங்களும் நடக்கும், அதுதான் அந்த சமயத்துக்கு ஏற்றது என்றால்.

கடைசியாக எதையெடுத்தாலும் பாகிஸ்தான் மீது பழியைப் போடுவது. நக்சலைட் பிரச்னையா, ஐஎஸ்ஐ உதவி செய்துள்ளது. அசாம் பிரச்னையா, ஐஎஸ்ஐ. இந்த ஐஎஸ்ஐ என்னும் அமைப்பு ஒன்றும் மதர் தெரசா இல்லை. அடுத்த நாட்டின் குழப்பத்தைப் பெரிதுபண்ணத்தான் இந்த அமைப்பு உள்ளது. ஆனால் பிரச்னையை ஆரம்பித்து வைப்பது இந்தியாவின் உள்-முரண்பாடுகளே. அதைக் காற்றடித்துப் பெரிது பண்ண பகை நாட்டின் உளவு அமைப்புகள் தயாராகத்தான் உள்ளன. ஆனால் எல்லாப் பழியையும் பாகிஸ்தான் மீது எடுத்த எடுப்பிலேயே போட்டுவிட முடியாது. மேலும் வலதுசாரி இந்துத்துவவாதிகள் பாகிஸ்தான் என்னும் அமைப்பையே ஏற்றுக்கொள்ளாதவர்கள். அகண்ட பாரதம் என்னும் கருத்துருவாக்கத்தில் ஊறியவர்கள். ஜின்னா ஒரு கொடூரன். முஸ்லிம் லீக் வெறுக்கத்தக்கது. செகுலரிஸம் (மதச்சார்பின்மை) என்பது பொய்யான வாதம். (எனவேதான் சூடோ-செகுலரிஸம் என்னும் வார்த்தை உருவாக்கப்பட்டது.)

ஆனால் இந்த அத்வானி என்ன காரணத்துக்காகவோ பாகிஸ்தான் போய் இரண்டு விஷயங்களைச் சொல்லிவிட்டார்.

1. பாபர் மசூதி இடிக்கப்பட்டது வெட்கக்கேடானது. (சரி, அதற்குப் போய் ஏன் பாகிஸ்தான் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கிறார்? இந்திய முஸ்லிம்களிடம் அல்லவா மன்னிப்பு கேட்க வேண்டும்?)

2. ஜின்னா ஒரு சிறந்த தேசபக்தர். (எந்த தேசம்?) இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாடுபட்டவர். பாகிஸ்தானை ஒரு செகுலர் தேசமாகக் கட்டமைக்க விரும்பினார்.

கொதித்துப் போயுள்ளனர் சுவயம்சேவக்குகள், விஸ்வ இந்து பரிஷத்காரர்கள். அத்வானி ஊர் திரும்பும்போது அவரது உயிருக்குப் பாதுகாப்பு தேவைப்படலாம். கட்சியிலும் சில மாறுதல்கள் ஏற்படலாம்.

சில நாள்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ் சரசங்கசாலக் 70 வயசுக் கிழவர் சுதர்சன், பாஜகவின் கிழத் தலைவர்கள் வாஜ்பாயி, அத்வானி ஆகியோர் இடத்தைக் காலி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இப்பொழுது ஏற்பட்டிருக்கும் அத்வானியின் மனமாற்றம் அதையொட்டி நடந்ததாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

இன்னும் கொஞ்ச நாள் கழித்து அத்வானி ஐஎஸ்ஐ உளவாளி என்று தோகாடியா சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

சந்திரமுகி திரைக்கதை, படமாக்கல் குறித்து ஓர் அலசல்

கடைசியாக சந்திரமுகி பார்த்துவிட்டேன். "இதெல்லாம் ஒரு கதையா" என்று சொல்லப்போவதில்லை. எந்தக் கதையாக இருந்தாலும் அதை சுவையான முறையில் திரைக்கதையாக்கி, காட்சிப்படுத்தி, நல்ல வசனங்கள் சேர்த்தால் ரஜினி படத்தைக் கூட சந்தோஷமாகப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

சமீபத்தில் படித்த கடவுள்களின் பள்ளத்தாக்கு கட்டுரைத் தொகுப்பில் சுஜாதா நம்மூர் கதை, திரைக்கதை சொல்லிகளின் கேவலமான திரைக்கதை அமைப்பைச் சாடியிருப்பார். அனந்து என்ற பாலசந்தரின் உதவியாளரை தமிழின் முதலாவது உருப்படியான திரைக்கதை அமைப்பவர் என்றும் சொல்லியிருப்பார்.

ஏதோ எனக்குத் தெரிந்ததை வைத்து சில சந்திரமுகி திரைக்கதை அமைப்பை எப்படி மாற்றியிருக்கலாம் என்று சொல்கிறேன்.

1. முதலில் சரவணன் ஒரு பெரிய உளவியல் மருத்துவர், அமெரிக்காவில் சக்கைபோடும் ஆசாமி என்பதை இந்தப் படம் எவ்வாறு காண்பிக்கிறது என்று பார்ப்போம். நம் படங்களில் யாரையாவது பணக்காரர் என்று காண்பிக்க வேண்டுமானால் அதைக் காட்சிப்படுத்துதல் மூலமாக மட்டும் செய்துவிட மாட்டார்கள். பார்ப்பவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்ற நினைப்பு திரைக்கதாசிரியர், இயக்குனர் ஆகியோருக்கு. உண்மையில் அவர்கள்தான் முட்டாள்கள். பணக்கார, நல்ல மனித கதாபாத்திரம் நின்றுகொண்டிருக்கும்போது இரண்டு கோயிந்தசாமிகள் சத்தமாகப் பேசுவார்கள். "இவரு எவ்ளோ பெரிய பணக்காரரு, ஆனா பாருங்க கொஞ்சம் கூட கர்வமே கிடையாது." "ஆமாமா, இவருக்கு இருக்குற சொத்துல இந்த ஒலகத்தையே வாங்கிப்போடலாம்". இப்படித்தான் ஒருவரது பணக்காரத்தன்மை திரைக்கதையாக, காட்சிகளாக, வசனங்களாக மாறுகிறது.

நல்ல ஹாலிவுட் படங்களைப் பாருங்கள். இப்படி யாரோ இரண்டு கோயிந்தசாமிகள் காட்சிக்குத் தேவையில்லாமல் வந்து வெட்டிப்பேச்சு பேசமாட்டார்கள். திரைக்கதை, காட்சியமைப்புகளின்படி உங்களுக்கே தெரியும் பாத்திரம் எத்தனை பணக்காரர் என்பது.

ரஜினி பெரிய உளவியல் நிபுணர் என்பதை இங்கு பிரபு வந்து கே.ஆர்.விஜயாவிடம் நாலைந்து ஆங்கில வார்த்தைகள் மூலம் தெரிவிக்கின்றார். இங்கு திரைக்கதை அமைப்பு நீர்த்துப் போகிறது. இந்த மாதிரி ஒருவரது பண்புகளை, திறமைகளை அடுத்தவர் வாயிலாக சொல்லும்போது திரைக்கதையாசிரியரின் திறமையின்மை மட்டும்தான் வெளிப்படுகிறது. உதாரணத்துக்கு ஒரு மருத்துவ கான்ஃபரன்ஸ் நடப்பதுபோல இருக்கலாம். அது சென்னையில் தாஜ் கொரமாண்டலில் நடப்பதாக வைக்கலாம். அதில் உலகெங்கிலும் இருந்து உளவியல் மருத்துவர்கள் கலந்துகொள்கிறார்கள். அதில் கீநோட் பேச்சு கொடுப்பவர் சரவணன். அதைத்தொடர்ந்து நான்கைந்து கேள்விகள். அதற்கு பிரமாதமாக பதிலளித்து கலக்குகிறார் சரவணன். அப்பொழுது, தான் அமெரிக்காவில் குணமாக்கிய ஒன்றிரண்டு split personility கேஸ்களைப் பற்றி விளக்குவதாக காட்சிகளை அமைக்கலாம்.

ஐந்து நிமிடங்களில் இதை அழகான காட்சியாக்கி உலகின் தலைசிறந்த உளவியல் மருத்துவர்களில் இவர் ஒருவர் என்று காட்டலாம்.

ஆனால் வாசு சற்றும் புத்தியின்றி இந்தக் காட்சியை அமைத்துள்ளார்.

2. படத்துக்கு முக்கியம் ரஜினியின் பாத்திரத்தை விளக்குவது. ரஜினி ரசிகர்களுக்கு ரஜினி புகுந்து விளையாடும் சண்டை முக்கியம்தான். ஆனால் அதைப் போய் படத்தின் முதல் காட்சியாக வைக்கவேண்டியது அவசியமில்லை. இரண்டாவது காட்சியாக வைத்திருக்கலாம். முதல் காட்சியை மேற்படி மருத்துவ மாநாடாகவும், அதைத் தொடர்ந்த காட்சியை அடிதடிக் காட்சியாகவும் வைத்திருக்கலாம்.

3. செந்தில்/பிரபு பாத்திரம் சொதப்பல் பாத்திரம். அவர் NHAI ஒப்பந்தம் பெறுவது பற்றிய இடத்தில் திரைக்கதை, காட்சியமைப்பு படு கேவலம். நூறு கார்களில் வந்து NHAI-இடமிருந்து நாங்கள் ஒப்பந்தத்தைப் பெற்றுவிட்டோம் என்று பெருமைப்படுவது, தொடர்ந்து வில்லன் கோஷ்டி, "டேய் அவனை வெட்டுங்கடா, எப்படியாவது ஒப்பந்தத்தை நம்ம கைக்கு எழுதி வாங்குங்கடா" என்பது அபத்தம். சண்டைக் காட்சி வேண்டும் எனும்போது அதையும் லாஜிக்கலாகவே நுழைத்து இருக்கலாம். அரசு ஒப்பந்தம் பெற்றவர் தான் நினைத்தால் அதை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி மாற்றிக் கொடுக்க முடியாது. NHAI ஆசாமிகள் என்ன வெட்டிகளா?

4. கதை முழுவதும் கூடவே வளர்ந்த ரஜினியை பிரபு வாங்க/போங்க என்று மரியாதையுடன் கூப்பிடுகிறார். ஆனால் ரஜினி பதிலுக்கு பிரபுவை "வா/போ" தான். ஏன் என்று சொல்வதில்லை. மொழி உபயோகத்தைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி எடுத்துள்ளார்கள்.

5. பயங்கரமான மாளிகையை யாரிடமிருந்து வாங்கினார்கள்? விற்றவர்களைக் காணவேயில்லை. மேலும் அத்தனை சின்ன கிராமத்தில் மாளிகையை விற்றால் அந்தத் தகவல் எப்படி யாருக்குமே தெரியாமல் இருக்கிறது, செந்திலின் நண்பன் சரவணன் வந்து சொல்லும் வரை? இந்த இடத்தில் திரைக்கதையை மாற்றியமைத்து செந்தில் அந்த மாளிகையை வாங்க வருவதாகவும், வாங்குவதற்கு முன்னமேயே அவரது உறவினர்கள் வேண்டாமென்று தடுப்பதாகவும், அதையும் மீறி அவர் வாங்குவதாகவும் மாற்றி அமைத்திருக்கலாம்.

ஒரு NHAI ஒப்பந்தம் கிடைத்துவிட்டது, அங்கு சில நாள்கள் வேலை இருக்கிறது என்பதனால் மட்டும் ஒரு கேனத்தனமான கிராமத்தில் ரூ. ஐந்து கோடிக்கு மாளிகை வாங்குகிற மாங்கா மடையனை என்ன செய்வது? சும்மா சந்தடி சாக்கில் "ரூ. ஐம்பது கோடி மாளிகையை ஐந்து கோடிக்கு அவர்கள் தருகிறார்கள்" என்று அபத்தமான நம்பர்களைச் சொல்லாமல் விட்டிருக்கலாம். கதையை எந்த விதத்திலும் பாதித்திருக்காது.

6. அந்த வெட்டி கிராமத்தில் டாடா இண்டிகாம் "வாக்கி" போன் ஒரு காட்சியில் மட்டும் வருகிறது. மற்ற நேரமெல்லாம் வயர் உள்ள நம்மூர் பி.எஸ்.என்.எல் போன். யோவ்! டாடா இண்டிகாமிடம் காசு வாங்கிக்கொண்டு இதைக்கூடவா உருப்படியாகச் செய்யமுடியவில்லை வாசுவால்?

7. ஒரு மடிக்கணினியைக் காண்பித்து "Mail for Saravanan" என்று சொல்லி, அவர் அவசர அவசரமாக அமெரிக்கா போய் ஒரு பேஷண்டைக் கவனிக்க வேண்டும் என்று சொல்லிக் கிளம்பிவிட்டு, கோக்கு மாக்காக சபரி மலை போனேன் என்று திரும்பி வருகிறார்.

ஓர் இடத்தில் கூட கதையை பேப்பரில் எழுதிவைக்கவில்லையா வாசு?

ஏன் திரைக்கதையில் தலைவர் அமெரிக்கா வரை போய் அங்கு ஒரு பேஷண்டை சொஸ்தப்படுத்திவிட்டு டாடா இண்டிகாம் போனில் ஒரு கூப்பாடு போட்டதும் அலறியடித்துக்கொண்டு அடுத்த பிளேனிலேயே கிளம்பி வருமாறு அமைத்திருக்கக் கூடாது? விஷயத்தின் விபரீதத்தையும், சரவணனுக்கு செந்தில் மேல் உள்ள பாசத்தையும் காட்டுமாறு இருந்திருக்குமே?

இவை சில சாம்பிள்கள்தான். சந்திரமுகி டான்ஸ் நன்றாக வந்துள்ளது. வேட்டையன் காட்சிகள் திரைக்கதையில் நன்றாக உள்ளன. ரஜினிக்கான மசாலா படத்தையும் நல்ல நுட்பத்தோடு திரைக்கதை அமைப்பதன் மூலம் தமிழ் சினிமாவின் மானத்தைக் காக்கலாம்.

இதைப்பற்றி பிரகாஷ் போன்ற ரஜினி/சினிமா ரசிகர்களிடம் பேசினால் கூட அவர்கள் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள்.

கலைப்படங்களின் வணிகர்

பதினேழு வயதுவரை நான் வளர்ந்த நாகையில் ஆங்கிலத் திரைப்படங்கள் என்றாலே பலான படங்கள் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். இதில் ஹாங்-காங்கிலிருந்து வரும் சீன-ஆங்கில மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்களும் அடக்கம். 'காந்தி' ஒன்றுதான் இந்தக் கருத்திலிருந்து தப்பித்த படம் என்று நினைக்கிறேன். 'ஓமர் முக்தார்' கூட பலான சீன் உள்ள படம் என்றுதான் பார்க்கப் போனோம்;-) மேற்படி இரண்டு படங்களைத் தவிர உருப்படியான எந்த ஆங்கிலப்படமும் அந்த ஊருக்கு அப்பொழுது வந்ததில்லை என்று நினைக்கிறேன். அவ்வப்போது "ஏப், சூப்பர் ஏப்" போன்ற படங்கள் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் போட்டுக் காண்பிக்கப்படும். அந்தப் படத்தில் ஜோடி ஜோடியாக மிருகங்களும், கடைசி ஒரு காட்சியில் மனித ஜோடியும் கலவி புரிவதைக் காண்பிக்க, வெகுண்டெழுந்த ஆசிரியர்கள் "போதும் பார்த்தது" என்று எங்களைத் துரத்திவிட்டார்கள்.

ஐஐடி சென்னை வந்ததும் வாரம் ஒன்றாக ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். ஓ.ஏ.டி என்றழைக்கப்படும் திறந்த வெளி அரங்கில் சில சமயம் கொட்டும் மழையிலும்கூட உட்கார்ந்து பெரிய திரையில் காண்பிக்கப்படும் ஹாலிவுட் படங்களைப் பார்த்து அதிசயித்து இருக்கிறேன். ஆனால் 21 வயதுக்குப் பிறகுதான் நல்ல ஆங்கிலப் படங்கள் பார்க்கக் கிடைத்தன.

அப்பொழுது நான் இதாகாவில் கார்னல் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தேன். பல்கலைக்கு உள்ளேயே வில்லார்ட் ஸ்டிரெயிட் தியேட்டர் என்ற அரங்கு உண்டு. அதைத் தவிர அந்த கிராமத்தில் நான்கைந்து பலதிரை அரங்குகள் உண்டு. பொதுவாகவே ஒரு படத்துக்கு பத்து பேருக்கு மேல் இருப்பது அதிசயம். ஆனாலும் படங்கள் சில நாள்களுக்கு ஓடும்.

நல்ல சினிமாவை எனக்கு அறிமுகப்படுத்தியது கூட வசித்த மாணவர்கள்தான். முதலில் பார்த்தது A Room with a View தான் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தில்தான் முதன்முதலாக டேனியல் டே-லூயிஸ் நடிப்பைப் பார்த்ததும். நடிகர்கள் அனைவருமே ஆரவாரமில்லாத, அமைதியான நடிப்பை வெளிக்காட்டியிருப்பார்கள். அழகான படப்பிடிப்பு. எளிமையான கதையை மிக அழகான திரைக்கதையாக்கி இருப்பார்கள். பாத்திரங்கள் ஒவ்வொன்றுக்குமான நடிகர்கள் பொருத்தமாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பார்கள். சின்னச் சின்ன பாத்திரங்கள் கூட நம் மனதில் நிற்கும்.

நண்பர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்ததும் இந்தப் படத்தைத் தயாரித்தவர் ஓர் இந்தியர் என்றார்கள். மெர்ச்சண்ட் என்ற பெயர் எந்தவிதத்திலும் இந்தியப் பெயராக எனக்கு அப்போது தோன்றவில்லை. (விஜய் மெர்ச்சண்ட் ஏனோ ஞாபகத்துக்கு வரவில்லை.) பின்னர்தான் அவரது முழுப்பெயர் இஸ்மாயில் மெர்ச்சண்ட் என்றும், பல பார்சி குடும்பப் பெயர்களும் ஆங்கிலப் பெயர்களாக இருக்கும் என்றும் தெரிந்தது.

தொடர்ந்து இதாகாவில் வெளியாகும் மெர்ச்சண்ட் படங்கள் அனைத்துக்கும் போனோம். Howards End, The Remains of the Day ஆகியவற்றைப் பலமுறை பார்த்தோம். முன்னரேயே ஆந்தனி ஹாப்கின்ஸ் பற்றித் தெரிந்திருந்தாலும் இந்தப் படங்களில்தான் எம்மா தாம்சன் என்னும் நடிகரைப் பற்றித்தெரிந்துகொண்டதும். ஹாப்கின்ஸை ஹானிபால் லெக்டராக Silence of the Lambs படத்தில் பார்த்திருப்பீர்கள்.

இதாகாவில் இருக்கும்போதுதான் மெர்ச்சண்ட் இயக்கிய In Custody என்ற படமும் பார்க்கக் கிடைத்தது. கடல் கடந்து எங்கேயோ வந்து போபால் நகரையும் அங்கு அழிந்துகொண்டிருக்கும் முஸ்லிம் உருதுக் கவிஞனையும், அவனது வாழ்வையும் குரலையும் பிடிக்க நினைக்கும் ஓர் இந்து பள்ளிக்கூட வாத்தியாரையும் காண முடிந்தது. சென்னைக்கு இந்தப் படம் வந்திருக்குமா, வந்து ஒரு நாளாவது தாங்கியிருக்குமா என்று தெரியவில்லை.

மெர்ச்சண்ட் படங்களைத் தொடர்ந்துதான் E.M. Forster என்னும் நாவலாசிரியர் அறிமுகமானது. நூலகங்களிலிருந்து அவரது புத்தகங்களைத் தேடி எடுத்துவந்து படித்தார்கள் சக தோழர்கள். அவர்களிடமிருந்து வாங்கி சில புத்தகங்களைப் படித்தேன்.

1996-ல் இந்தியா திரும்பிவிட்டதால் மீண்டும் தியேட்டருக்குச் சென்று நல்ல படங்கள் பார்ப்பது தடைப்பட்டுப்போனது. இப்பொழுது சமீபத்தில்தான் அபூர்வமான படங்கள் கிடைக்கும் டிவிடி கடை ஒன்று கண்ணில் பட்டுள்ளது. ஆனால் அங்கு வாங்கும் படங்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் விற்கப்படுவதா அல்லது பைரேடட் டிவிடிக்களா என்று தெரியவில்லை!

மெர்ச்சண்ட், ஐவரி ஆகியோர் நினைவிலிருந்து மறந்துபோனார்கள்.

பின் 2000-ல் பிரிட்டனில் வில்ட்ஷயர் கவுண்டியில் ஒரு வருடம் வசித்தேன். அப்பொழுது அங்கு வசிக்கும் நண்பர், Howards End போன்ற மெர்ச்சண்ட்-ஐவரி படங்கள் படமாக்கப்பட்ட வீடுகளையும் தெருக்களையும் காண்பிக்கிறேன், வா என்று அழைத்துப் போனார்.

பிறகும் மெர்ச்சண்ட் நினைவிலிருந்து மறந்துபோனார்.

இரண்டு வாரங்களுக்கு முன் அவர் இறந்துபோனார்.

Friday, June 03, 2005

அசோகமித்திரன் அவுட்லுக் செவ்வி குறித்து

நான் வாரம் ஒருமுறைதான் ராயர் காபி கிளப் படிப்பது வழக்கம். இப்பொழுது அங்கு அசோகமித்திரன் அவுட்லுக்கில் கொடுத்த பேட்டி தொடர்பான அசோகமித்திரனின் விளக்கம் பற்றி சில உரையாடல்கள் நடந்து வருகின்றன. இன்று சுந்தரமூர்த்தியின் எஸ்.வி.ஆர் பற்றிய பதிவு வழியாக கிளப்பில் நடப்பது பற்றித் தெரிந்துகொண்டேன். அதில் என் பெயரும் அடிபட்டிருப்பதால் இங்கு விளக்கம்.

அசோகமித்திரன் அவுட்லுக் செவ்வி வெளியானபோது அதில் உள்ள கருத்துகளைக் கண்டித்து அருள் பதிவில் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேன். அசோகமித்திரனிடமே உண்மையை விசாரித்து எழுதுகிறேன் என்று அந்தப் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன். அதன்பின்னர் ஒருமுறை எதிர்பாராத இடத்தில் அசோகமித்திரனைச் சந்தித்தேன். அங்கு இதைப்பற்றிப் பேச முடியவில்லை. அடுத்து, நாங்கள் நடத்திய எழுத்துப் பயிற்சி முகாமில் அவரைச் சந்தித்தபோது இந்த விஷயத்தைப் பற்றி விரிவாகப் பேசினேன்.

அவுட்லுக் செவ்வி அச்சில் ஒன்றும், இணையத்தில் சற்று அதிகமாகவும் வெளியானது. இணையத்தில்தான் முக்கியமாக இந்த ஒரு விஷயம் இருந்தது.
If a nonbrahmin has a windfall he just spends it on meat and drink. The Brahmin always saves for the rainy day.
ஆனால் இந்த ஒரு விஷயம் அச்சில் இல்லை. இதை அசோகமித்திரனிடம் சொன்னேன். "அய்யய்யோ, நான் அப்பிடிச் சொல்லவே இல்லையேப்பா" என்றார். செவ்வி வெளியான சில நாள்களில், அசோகமித்திரனின் நெருங்கிய உறவினர் (பார்ப்பனரல்லாதவர்) அவரிடம் வந்து "என் அலுவலகத்தில் வேலை செய்யும் பல பார்ப்பனர்களும் குடிக்கிறார்கள், மாமிசம் சாப்பிடுகிறார்கள். அவர்கள்தான் இதைச் செய்வதில் முதலில் நிற்கிறார்கள்" என்றாராம். அசோகமித்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லையாம். "ஏன் இவர் இதையெல்லாம் வந்து என்னிடம் சொல்கிறார்" என்று யோசித்துக் கொண்டிருந்தாராம். இப்பொழுது என்னிடம் முழு விவரம் கேட்டதும்தான் தன்னை ஏன் பலரும் கொலைகாரன் போலப் பார்க்கிறார்கள் என்று புரிகிறது என்றும் சொன்னார்.

நான் அந்த செவ்வி பற்றி முழுமையான விளக்கம் கேட்டேன். அவரும் அதைப் பற்றிய தன் கருத்தைச் சொன்னார். இணையத்தில் வந்திருப்பது பற்றி இதுநாள் வரை தனக்கு எதுவும் தெரியாது என்றார். அவர் என்னிடம் பேசியதை நான் இங்கு எழுதும்போது வேறு தவறுகள் எதுவும் வந்துவிடாமலிருக்க அவரையே தன் விளக்கத்தை எழுதித் தருமாறு கேட்டேன். அவரும் எழுதித் தருவதாகச் சொன்னார். அது வந்ததும் அதை அப்படியே என் பதிவில் வெளியிடலாம் என்று இருந்தேன்.

வந்ததும் அப்படியே செய்கிறேன்.

காபி கிளப் விவாதம்
பதிவுகள் கடிதம்

Thursday, June 02, 2005

கட்டுரைத் தொகுப்புகள்

புனைவு, அ-புனைவு ஆகிய இரண்டு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்தது அ-புனைவுதான். அதிலும் எனக்கு அதிகமாகப் பிடித்தவை பொதுவாகவே கட்டுரைத் தொகுப்புகள்தான். கடந்த இரு வருடங்களில் நான் வாங்கும் புத்தகங்களில் அதிகமாக இருப்பது காலச்சுவடு, உயிர்மை, தமிழினி வெளியிடும் கட்டுரைத் தொகுப்புகள்தான். சில அடையாளம் வெளியீடுகளும் உண்டு. கிழக்கு பதிப்பகம் சார்பாக நான் பதிப்புக்கும் புத்தகங்களிலும் நான் அதிகம் விரும்பி ரசித்தவை கட்டுரைத் தொகுப்புகளே.

ஆ.இரா.வேங்கடாசலபதியின் அந்தக் காலத்தில் காபி இல்லை, தொ.பரமசிவத்தின் பண்பாட்டு அசைவுகள், எஸ்.வி. ராஜதுரையின் பதி பசு பாகிஸ்தான், மா.கிருஷ்ணனின் மழைக்காலமும் குயிலோசையும், ராஜ் கவுதமனின் தலித்திய விமர்சனக் கட்டுரைகள், பா.ராகவனின் 154 கிலோபைட், சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள், சுஜாதாவின் கடவுள்களின் பள்ளத்தாக்கு, ஞானியின் கண்டதைச் சொல்லுகிறேன், கனிமொழியின் கறுக்கும் மருதாணி, சுந்தர ராமசாமியின் இவை என் உரைகள், தொல்.திருமாவளவனின் அடங்க மறு போன்றவை நான் ரசித்துப் படித்த சில தொகுப்புகள்.

இதையும் தவிர இன்னமும் பல கட்டுரைத் தொகுப்புகள் வாங்கிப் பிரிக்காமல் உள்ளன. பல கட்டுரையாளர்களின் கட்டுரைகளைச் சேர்த்துப் பதித்த புத்தகங்களை நான் கணக்கில் எடுக்கவில்லை. முக்கியமாக இனி படிக்க வேண்டியது அ.முத்துலிங்கத்தின் "அங்க இப்ப என்ன நேரம்?"

இதுவரையில் கிழக்கு பதிப்பகம் சார்பாக நான் பதிப்பித்திருக்கும் கட்டுரைகள்: இரா.முருகனின் ராயர் காபி கிளப், மாலனின் சொல்லாத சொல், ஆர்.வெங்கடேஷின் நேசமுடன், அசோகமித்திரனின் கட்டுரைத் தொகுப்புகள் ஒன்று, இரண்டு, ரா.கி.ரங்கராஜனின் நாலு மூலை, ஜே.எஸ்.ராகவனின் வரி வரியாகச் சிரி. ஒவ்வொன்றையும் நான் மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன்.

புனைவுகளை விட, பாசாங்குகளற்று நேரடியாக நம்மோடு உறவாடும் கட்டுரைகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. புனைவுகளின் இல்லாத ஒன்று - கட்டுரையாளர் நம் அருகிலேயே இருப்பதைப் போன்ற உறவு. சொல்லப்போனால் புனைவுகளில் புனைவாசிரியரின் நேரடித் தலையீடு பிரதிக்கும் வாசகனுக்குமான உறவுக்கு இடையூறாகத்தான் இருக்கும். ஆனால் கட்டுரைகளில் இந்தப் பிரச்னையே இல்லை. இங்கு கட்டுரையாசிரியன் தன் கருத்தை, அதைத்தான் பிரபஞ்ச உண்மையென்று வாதிடாமல், தன் கருத்தாக மட்டுமே முன்வைக்கும்போது வாசகனுக்கு மிகவும் நெருங்கி வருகிறான் என்று நினைக்கிறேன்.

பொதுவாக அரசியல், சமூகம், இலக்கியம், கலாசாரம் ஆகிய துறைகளில் பல கட்டுரைத் தொகுப்புகள் வரும்போது, குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது வெங்கட்டின் குவாண்டம் கணினி. சமீபத்தில் அறிவியல், கணினி தொடர்புடையதாக வந்த ஒரே தொகுப்பு இதுமட்டும்தான். இதுவே ஒருவிதத்தில் பிரச்னையானதும் கூட. அறிவியலைப் பொறுத்தவரை கட்டுரைத் தொகுப்புகள் வருவதற்கு முன்னர் குறிப்பிட்ட துறைகளில் முழுமையான, அதே சமயம் எளிமையான பல சிறு புத்தகங்கள் வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இப்படி இருபது, முப்பது புத்தகங்கள் வந்தபின்னர் பல கட்டுரைத் தொகுப்புகள் வருவது சரியாக இருக்கும். இல்லாவிட்டால் இந்தக் கட்டுரைகளைப் படிக்கக்கூடிய அடிப்படை வாசகர்களின் எண்ணிக்கை வளராது. கட்டுரைகளின் தரத்தை வெகுவாக முன்னெடுத்துச் செல்லவும் முடியாது.

இப்பொழுது காலச்சுவடில் வெளியாகும் வெங்கட்டின் அறிவியல் கட்டுரைகளுக்கு எந்த மாதிரியான வரவேற்பு இருக்கிறது என்று தெரியவில்லை. வாசகர் கடிதத்தில் எதுவும் காணப்படுவதில்லை.

வலைப்பதிவுகளில் தொடர்ச்சியாக எழுதும் பல அயலகத் தமிழர்களும் அறிவியல் துறைகளில் சிறு புத்தகங்களையும், கட்டுரைத் தொகுப்புகளையும் கொண்டுவரலாம். அதற்கான தகுதியும் திறமையும் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் உழைப்பும் முனைப்பும்தான் காணக்கிடைப்பதில்லை.

Wednesday, June 01, 2005

வரப்பெற்றேன்

C-DAC குறுந்தட்டு திங்கள் கிழமையே அஞ்சல் மூலம் எனக்கு வந்து சேர்ந்துவிட்டது. அனுராக் தன் பதிவில் தனக்கும் குறுந்தட்டு வந்ததைக் குறிப்பிட்டுள்ளார். இந்த வாரக் கடைசி வரையில் இதைப் பரிசோதனை செய்யமுடியாது. ஏப்ரல் 15 வெளியான குறுந்தட்டிலிருந்து இதில் சில மாறுதல்கள் உள்ளன என்று தெரிகிறது. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

அமுதசுரபி உயர்கல்விச் சிறப்பிதழ்

ஜூன் 2005 அமுதசுரபி இதழ் உயர்கல்விச் சிறப்பிதழாக வந்துள்ளது. இணையத்தில் ஏற்ற நாளாகலாம். அதனால் முடிந்தவர்கள் கடையில் காசு கொடுத்து வாங்கிப்படிக்கவும்!

இந்த இதழில் இரண்டு நேர்காணல்கள்: முன்னாள் அண்ணா பல்கலை துணைவேந்தரும், தற்போது சென்னை வளர்ச்சிக் கல்வி ஆய்வு நிறுவனத்தின் தலைவருமான முனைவர் மு.ஆனந்தகிருஷ்ணனுடன் 'தீம்தரிகிட' ஞானி உரையாடுகிறார். உயர்கல்வியின் தரம், தேர்வுமுறை, கல்விச்சூழல் போன்ற பல விஷயங்களைப் பற்றி விவாதம் உள்ளது. தில்லி, புதுவை, வார்சா பல்கலைகளில் பணி செய்த முனைவர் இந்திரா பார்த்தசாரதியுடன் விரிவுரையாளர் ஆரூர் புதியவன் உரையாடுகிறார். இதுவும் கல்வித்துறை சம்பந்தப்பட்ட உரையாடல்தான்.

'உயர்கல்வியில் மொழிச்சிக்கல்' என்ற தலைப்பில் மணவை முஸ்தபா உயர் கல்வியில் தமிழ் வழியாகக் கல்வி கற்பிக்க வேண்டிய அவசியத்தினைப் பற்றிப் பேசுகிறார். 'இந்தியாவில் ஆராய்ச்சிக் கல்வி' என்ற தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அதில் ஆராய்ச்சிக் கல்வி என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் தரமற்ற கூத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். இந்தியக் கல்வி முறையை அமெரிக்க வழிக்கு மாற்றி நான்கு வருட இளநிலைப் படிப்பைக் கொண்டுவரவேண்டும், முதுநிலைப் படிப்பு சில விதிவிலக்குகளுடன், முழுக்க முழுக்க ஆராய்ச்சி சார்ந்ததாக இருக்க வேண்டும் (MBA, M.Eng போன்ற சிலவற்றைத் தவிர்த்து), பிஎச்.டி தரத்தை உயர்த்தவேண்டிய அவசியம், எம்.பில் படிப்பை அறவே ஒழிக்க வேண்டும், அஞ்சல் வழியாக நடக்கும் ஆராய்ச்சிப் படிப்பை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், பிஎச்.டி படிப்பவர்களுக்கு அதிக அளவில் உதவித்தொகை - எல்லாப் படிப்புகளுக்கும், எல்லாப் பல்கலையிலும் சமமாக - வழங்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிய சிலவற்றை எழுதியுள்ளேன்.

'தனியார் பல்கலைக் கழகங்கள்' பற்றி என் நண்பர் சத்யநாராயண் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். சத்தீஸ்கார் தனியார் பல்கலைக் கழகச் சட்டம் 2002 பற்றியும், அதைத் தொடர்ந்து பேரா.யஷ்பால் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு பற்றியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றியும், எந்தவகையில் இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டலாம் என்றும் எழுதியுள்ளார். 'பண்டித' படைப்பாளிகள் பற்றிய திருப்பூர் கிருஷ்ணன் கட்டுரை, சமீபத்தில் காலமான ராமகிருஷ்ண மடத்தின் தலைமைக் குரு ரங்கநாதானந்தா எழுதிய நான்கு புத்தகங்களைப் பற்றி வெங்கட் சாமிநாதன் கட்டுரை ஆகியவையும் இந்த இதழில்.