2ஜியில் தொடங்கிய கூத்து ஓய்வதாகத் தெரியவில்லை. ஸ்பெக்ட்ரம் என்றாலே ஊழல்தான் என்று சி.ஏ.ஜி முதல் எதிர்க்கட்சிகள் வரை முடிவு செய்துவிட்டனர். கூடச் சேர்ந்து கும்மி அடிக்க ஊடகங்கள்.
முதலில் இந்த தேவாஸ் மல்ட்டிமீடியா என்ன செய்ய முயன்றது என்று புரிந்துகொள்ளப் பார்ப்போம்.
தொலைக்காட்சி சேவையை எடுத்துக்கொண்டால், முதன்முதலில் உருவானது தரை வழியாக தொலைக்காட்சி சிக்னல்களை அனுப்பும் தொழில்நுட்பம். அமெரிக்காவில் ஏ.பி.சி, என்.பி.சி, சி.பி.எஸ் என்னும் மூன்றும்தான் பிரதானமாக இந்தச் சேவையை தரைவழி டிரான்ஸ்மிட்டர்கள் மூலம் அளித்துவந்தன. (மூன்றுமே தனியார் சேவைகள்.)
ஓர் ஊரில் எஃப்.எம் வானொலி நிலையங்கள் உள்ளன என்றால் அதிகபட்சம் 25 நிலையங்கள்தான் இருக்கமுடியும். அவற்றின் சேவை சுமார் 50 கிலோமீட்டர் விஸ்தீரணத்துக்குத்தான் இருக்கும். அதையும் கொஞ்சம் தாண்டலாம்; ஆனால் சேவையின் தரம் பாதிக்கப்படும்.
தரைவழித் தொலைக்காட்சி இயங்கும் கேரியர் ஃப்ரீக்வன்ஸி ஸ்பெக்ட்ரத்தில் மிகக் குறைவான நிலையங்கள் மட்டுமே இருக்கமுடியும். பிரிட்டனில் மொத்தம் ஐந்து தரைவழித் தொலைகாட்சி நிலையங்கள் உள்ளன. பிபிசி-1, பிபிசி-2, ஐ.டி.வி, சானல் 4, சானல் 5. இதில் முதல் இரண்டும் விளம்பரம் இல்லாத, அரசு நிதியுதவி பெறும் ஸ்டேஷன்கள். மற்றவை தனியார் சேவைகள் - விளம்பரம் உண்டு.
இந்தியாவில் தரைவழித் தொலைக்காட்சிச் சேவை தூரதர்ஷன் நிலையத்துடன் தொடங்கி, அடுத்து சில மெட்ரோ மாநகரங்களில் மட்டும் தூரதர்ஷன்-2 என்பதாக இருந்தது. அதன்பிறகு அதிகரிக்கவில்லை. தனியார் யாருமே இந்தத் துறையில் அனுமதிக்கப்படவில்லை.
தரைவழித் தொலைக்காட்சியில், தொலைக்காட்சி நிலையங்கள் குறிப்பிட்ட அதிர்வெண்ணில் தங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும். வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் அந்த அதிர்வெண் சிக்னலைப் பெற்று, படங்களைக் காட்டும். வேண்டுமென்றால் பல அடி உயரத்துக்கு ஆண்டெனாக்களை உருவாக்கிப் பொருத்திக்கொள்ள வேண்டியிருக்கும். மேலும் குறிப்பிட்ட ஸ்டேஷனைப் பெற ஆண்டெனாவின் திசையைக்கூட மாற்றவேண்டியிருக்கும்.
தரைவழித் தொலைக்காட்சிக்குப் பெரிய எதிர்காலம் இருக்கவில்லை. வானில் செயற்கைக்கோள்களை அனுப்பும் தொழில்நுட்பம் முன்னேற முன்னேற, கேபிள் அண்ட் சாடிலைட் (C&S) தொலைக்காட்சி முன்னுக்கு வந்தது.
அமெரிக்காவில் கேபிள் பெரும் முன்னேற்றம் கண்டது. தொலைக்காட்சி அமைப்பையே மாற்றியது. இம்முறையில் கேபிள் ஹெட் எண்ட் எனப்படும் சில இடங்களில் செயற்கைக்கோள் சிக்னல்களை பெரிய டிஷ் ஆண்டெனா கொண்டு பெறுவார்கள். இந்த ஹெட் எண்டிலிருந்து அருகில் இருக்கும் வீடுகளுக்கு கேபிள் வடம் செல்லும். இந்த வடத்தின் வழியாக ஆரம்பத்தில் சிக்னல்கள் அனலாக் முறையில் அனுப்பப்பட்டன. இதன் தொழில்நுட்பத்துக்குள் நான் செல்லப்போவதில்லை. ஆரம்பத்தில் UHF, VHF அதிர்வெண்களில் 12 நிலையங்கள் என்று தொடங்கி, பின்னர் படிப்படியாக அனலாக் முறையிலேயே 90 நிலையங்கள் வரை கேபிள் வழியாகக் கொடுக்கமுடிந்தது.
அதன்பின் டிஜிட்டல் முறையில் கேபிள் வழியாக சிக்னல்கள் அனுப்பப்பட்டபோது பல நன்மைகள் கிடைத்தன. 200 நிலையங்களுக்குமேல் தரமுடிந்தது. வீடியோ தரம் அற்புதமாக இருந்தது. டிஜிட்டல் செட் டாப் பாக்ஸ், ஆக்சஸ் கார்ட் ஆகியவை இருக்கும் காரணத்தால், என்கிரிப்டட் வீடியோ முறைமூலம், பே பெர் வியூ போன்ற சேவைகளைத் தரமுடிந்தது. காசு கொடுத்தால்தான் பார்க்கமுடியும் போன்ற நிகழ்ச்சிகள்.
விரைவில் இதிலும் பெரும் மாற்றங்களைப் பார்க்கப்போகிறோம். செப்புக் கம்பியால் ஆன கோ-ஆக்ஸ் கேபிள்களுக்குப் பதில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் வரத்தொடங்கியுள்ளன. வீட்டுக்கு ஃபைபர் வந்தால் ஆயிரக்கணக்கான சேனல்களை அதன்வழியாக அனுப்பலாம்.
அதே நேரம் வீடியோக்கள் எல்லாமே டிஜிட்டல் கோப்புகளாக, இணையம் வழியாக வரும் நிலையும் ஏற்படத் தொடங்கியுள்ளது. எனவே ஏதோ ஒரு வகையில் வீட்டுக்கு 8 mbps இணைப்பு இருந்தால், விரும்பிய வீடியோ நிகழ்ச்சியை ஹை டெஃபினிஷன் டிவி தரத்தில் காணமுடியும்.
இதற்கிடையில் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இரண்டு சேவைகள் முன்னுக்கு வரத்தொடங்கின. ஒன்று டி.டி.எச் (DTH) எனப்படும் வீட்டுக்கு வரும் செயற்கைக்கோள் தொலைக்காட்சிச் சேவை. நியூஸ் கார்ப் நிறுவனத்தின் ரூப்பர்ட் மர்டாக் இதில் பெரிய ஆள். இவரது ஸ்கை தொலைக்காட்சிச் சேவை பிரிட்டனில் மாபெரும் டி.டி.எச் சேவை வழங்கு நிறுவனமாக உள்ளது. ஐரோப்பாவின் பல நாடுகளில் சேவைகளை அளித்துவருகிறார். அமெரிக்காவில் டைரெக்டிவி (DirecTV), டிஷ்நெட் (Dishnet) ஆகியவை இந்தச் சேவையை அளிக்க ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் மர்டாக் டைரெக்டிவியின் பங்குகளை வாங்கி அதனைத் தன் கைக்குள் கொண்டுவந்தார்; பின்னர் அதனை விற்றுவிட்டார்.
சி அண்ட் எஸ் முறையில் ஊரெங்கும் கேபிள் சர்வீஸ் தருவோர் வேண்டியிருந்தது. அவர்கள்தான் பணத்தை வசூலித்து, அதில் ஒரு பங்கை கேபிள் டிவி நிறுவனத்துக்குத் தரவேண்டியிருந்தது. இந்தியாவில் இப்போதும் சக்கைப்போடு போடும் இந்தத் துறையில் தமிழகத்தில் (சன் டிவியின்) சுமங்கலி கேபிள் விஷன் பற்றியும் அவர்களது போட்டியாளர்களுக்கு என்ன நடந்தது என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அரசியல் தொடர்புகள்மூலம் எப்படியெல்லாம் இந்தத் துறையை அடக்கி ஆளமுடியும் என்று உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.
டி.டி.எச் இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது. சி அண்ட் எஸ் ரிசீவர் டிஷ் ஆண்டெனா போல் அல்லாது, இந்த டி.டி.எச் ஆண்டெனாக்கள் மிகச் சிறியவை. வீட்டில் நேரடியாக மாட்டிக்கொள்ளலாம். தெருவில் குழி தோண்டி கேபிள் பதிக்கவேண்டியதில்லை. முழுவதும் டிஜிட்டல். தரமான வீடியோ. கட்டணத்தை வசூலிக்க இடைத்தரகர்கள் வேண்டியதில்லை. கிரெடிட் கார்டு வழியாக நேரடியாகக் கட்டணத்தைச் செலுத்தமுடியும். வீடு மாறினால் டிஷ் ஆண்டெனாவைக் கையோடு எடுத்துக்கொண்டு செல்லலாம். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் தெரியும்.
கேபிள் அண்ட் சாடிலைட்டும் சரி, டி.டி.எச்சும் சரி, இஸ்ரோ அனுப்பியுள்ள இன்சாட் செயற்கைக்கோள்களில் டிரான்ஸ்பாண்டர்களை லீஸ் செய்து அதன்மூலமாகவே நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன.
இன்று இந்தியாவில் ஆறு நிறுவனங்கள் டி.டி.எச் சேவையை தருகின்றன. தூரதர்ஷன், டிஷ் டிவி, சன் டைரெக்ட், டாடா ஸ்கை, ரிலையன்ஸ் பிக், ஏர்டெல்.
அமெரிக்காவில் டைரெக்டிவியும் டிஷ்நெட்டும் டி.டி.எச் சேவை வழியாக இண்டெர்நெட் இணைப்பும்கூடத் தருகிறார்கள். இந்தியாவில் யாரும் இன்னமும் இதனைச் செய்யவில்லை.
மற்றொரு சேவை வேர்ல்ட்ஸ்பேஸ் என்ற சாடிலைட் ரேடியோ சேவை. இந்த நிறுவனம் சிறு டிஷ் ஆண்டெனா மூலம், செயற்கைக்கோள் வழியாக நேரடியாக வீட்டுக்கு ரேடியோ சேவைகளைத் தந்தது. ஒரு கட்டத்தில் இலவசமாக இருந்த இந்தச் சேவை கட்டணச் சேவையாக ஆனபோது நான் இதனை நிறுத்திவிட்டேன். உலக அளவில் வேர்ல்ட்ஸ்பேஸ் நிறுவனம் திவால் ஆனது. அதன் இந்தியக் கிளை மட்டும் தொடர்ந்து இயங்கி வந்தது; இப்போது இருக்கிறதா இல்லையா என்று பார்க்கவேண்டும்.
அமெரிக்காவில் Xm, சிரியஸ் என்று இரு நிறுவனங்கள் இந்தச் சேவையை அளித்தன. பிறகு இரண்டும் தாக்குப் பிடிக்கமுடியாமல் இணைந்து ஒரே நிறுவனமாக ஆகின. இது தவிர இன்று அமெரிக்காவில் வேறு நிறுவனங்கள் இதுபோன்ற சேவையை அளிக்கலாம்; நான் முழுவதுமாக தேடிப் பார்க்கவில்லை. என் ஞாபகத்தில் இருப்பதை மட்டும் எழுதுகிறேன்.
சாடிலைட் டிஷ் ஆண்டெனா 1.5-2.0 மீட்டர் விட்டம் கொண்டது. டி.டி.எச் டிஷ் ஆண்டெனா 30-35 செண்டிமீட்டர் விட்டத்துக்கு உட்பட்டது. சாடிலைட் ரேடியோ ஆண்டெனா வெறும் 10-12 செண்டிமீட்டர் விட்டம் கொண்டது.
*
தேவாஸ் மல்ட்டிமீடியா என்ற நிறுவனம் இதே தொழில்நுட்ப வரிசையில் கைக்குள் அடங்கக்கூடிய ஒரு ஆண்டெனாவையும் ரிசீவரையும் உருவாக்கியதாகச் சொல்கிறது. இந்த ஆண்டெனாவை வெட்டவெளியில் கிழக்கு பார்த்தோ, மேற்கு பார்த்தோ வைக்கவேண்டிய அவசியம் எல்லாம் இல்லை என்கிறது.
இந்த ஆண்டெனா/ரிசீவரைக் கொண்டு பிராட்பேண்ட் சேவையை அளிக்க முடிவெடுத்த தேவாஸ், இதற்காக இஸ்ரோவை அணுகியது. இஸ்ரோவின் வணிக அமைப்பான அந்தரீக்ஷ் மூலமாக ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அதன்படி, இஸ்ரோ இரண்டு செயற்கைக்கோள்களை வானுக்கு அனுப்பும். அந்தச் செயற்கைக்கோள்களின் டிரான்ஸ்பாண்டர்களை இஸ்ரோ தேவாஸுக்கு லீஸுக்குத் தரும். அந்த டிரான்ஸ்பாண்டர்கள் மூலம் வீடுகளுக்கு தேவாஸ் இணைய இணைப்பு தரும்.
நிலம் - ரியல் எஸ்டேட் - என்பதற்கு ஒரே விலை எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. சென்னையில் போட் கிளப் பகுதியில் ஒரு சதுர அடி 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் இருக்கலாம். ஆனால் சென்னையில் பிற மையப் பகுதிகளில் சதுர அடிக்கு ரூ. 10,000 ஆகும். தாம்பரம், ஆவடி தாண்டிச் செல்லும்போது சதுர அடிக்கு 1,000 முதல் 3,000 ரூபாய்தான் ஆகும். கும்பகோணம் பக்கம் உள்ள கோடாலிக் கருப்பூர் கிராமத்தில் சதுர அடி 25 ரூபாய்?
சி.ஏ.ஜிக்கு யாராவது இதை எடுத்துச் சொன்னால் தேவலாம். 3ஜி ஸ்பெக்ட்ரம் மெகா ஹெர்ட்ஸுக்கு இன்ன விலை என்றால் 2ஜியும் அதே என்று ஒரு கணக்கை எடுத்து வைத்தார்கள். அரசு என்பது பணம் பண்ணும் இயந்திரம் என்ற கருத்தை முன்வைத்து எல்லோரும் கூச்சல் போட்டதால் நாளைக்கு சாதாரண மொபைல் போன் கட்டணம் கன்னாபின்னாவென்று எகிறப்போகிறது. 3ஜி என்பது இப்போதே மக்களுக்கு எட்டாக்கனியாகத்தான் உள்ளது.
டி.டி.எச் சேவையை இன்னமும் சி.ஏ.ஜி தோண்டிப்பார்க்கவில்லை. தோண்டும்போது அங்கும் 500,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகச் சொல்லும். உண்மையில் இந்தியாவில் ஐந்து வணிக நிறுவனங்கள் மட்டும்தான் இந்தச் சேவையைக் கொடுக்க இன்று முன்வந்துள்ளன. (ஆறாவது தூரதர்ஷன். இதில் தூரதர்ஷன் சுத்தமாக ஒரு பைசா சம்பாதிக்கவில்லை; எல்லாம் நஷ்டம்தான்.) இதில் டிஷ்நெட், சன் டைரெக்ட், டாடா ஸ்கை ஓரளவுக்கு முன்னணியில் உள்ளன. ஏகப்பட்ட பணம் கையில் இருக்கும் ஏர்டெல்லும், நிறையக் கடனில் இருக்கும் ரிலையன்ஸும் கொஞ்சம் தடுமாற்றத்துடன்தான் இந்தத் துறையில் வளர்கின்றன.
தேவாஸ் மல்ட்டிமீடியா இயங்க இருக்கும் துறையில் இரண்டாவதாக ஓர் ஆளையும் காணோம். இதற்குள் அந்த ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் விடு, 200,000 கோடி ரூபாய் ஏமாற்றல், லஞ்சம், ஊழல் என்று எல்லோரும் சத்தம் போட ஆரம்பித்தாயிற்று. இதில் ஊழல் இருப்பதாகவோ, ஏமாற்றல் இருப்பதாகவோ என் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் கூச்சலுக்கு பயந்து அரசு இப்போது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாகச் சொல்கிறது. தொடர்ந்து தேவாஸ் நிச்சயமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கமுடியும். அரசுகள் ஒப்பந்தங்களை நடத்தும் லட்சணம் படுமோசம்.
இப்போது என்ன செய்யலாம்? இந்த டிரான்ஸ்பாண்டரில் வேண்டிய அதிர்வெண் பரவலை தேவாஸ் மல்ட்டிமீடியாவுக்கு ஒப்பந்தப்படி தந்து, அதற்கான கட்டணத்தை ஒப்பந்தம் என்ன சொல்கிறதோ அதன்படி பெற்றுக்கொள்ளலாம். தேவாஸ் இணையச் சேவையை மக்களுக்குத் தரட்டும். அடுத்த சில ஆண்டுகளில் மேலும் ஓரிரு நிறுவனங்கள் இதே சாடிலைட் தொழில்நுட்பத்தின் மூலம் இணையச் சேவையைத் தர முயற்சி செய்யலாம். அவர்களுக்கும் அதே கட்டணத்தில் டிரான்ஸ்பாடர்களை அரசு தரட்டும். இவர்கள் அனைவருக்கும் திரும்பிய பக்கமெல்லாம் போட்டி இருக்கும் - வைமேக்ஸ், ஃபைபர், ஏடிஎஸ்எல் என லட்சம் வழிமுறைகள். இதில் தேவாஸுக்கு எந்தவிதத்திலும் பெரிய ஆதாயம் இருக்கப்போவதில்லை. ஆறு வருடங்களுக்குப்பின், ஏகப்பட்ட நிறுவனங்கள் இந்தத் துறையில் நுழைய முன்வந்தால் அப்போது ஏலம் விட்டால் போகிறது? (அப்போதுகூட நான் ஏலம் விடமாட்டேன்!)
அதற்குள் 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தொகையை வைத்து, அய்யோ போய்விட்டது 200,000 கோடி என்று சி.ஏ.ஜி சொல்ல, ஹிந்து பிசினஸ்லைன் அதை ஸ்கூப் என்று வெளியிட, அதன் விளைவால் பாதிக்கப்படப்போவது நாம் அனைவரும் என்பதை ஏன் நாம் பார்க்கத் தவறுகிறோம்? எதற்கெடுத்தாலும் அதிகக் கட்டணம் வசூலிக்கும் extortionist ஆகவா நாம் நம் அரசை மாற்றவேண்டும்?
தொழில்முனையும் தன்மையை ஊக்குவிக்க ஓர் அரசு பலவிதமான தொழில்நுட்பங்களை நாட்டில் புகுத்த ஆதரவு தரவேண்டும். அதன் விளைவாக தரமான புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு, நாட்டில் பல சேவைகள், குறைந்த கட்டணத்தில் பெருகும். அதன் விளைவாக பல நிறுவனங்களும் லாபம் சம்பாதிக்கும். அதுதான் ஓர் அரசுக்கு வேண்டியது. அந்த லாபத்தில் ஒரு பகுதி வரியாக அரசுக்கு வரும். ஆனால் அதற்கு பதில் தொழிலை ஆரம்பிக்கவே முடியாத அளவுக்குக் கட்டணம், வரி, உரிமத் தொகை, ஏலம் என்று பயமுறுத்தி தொழில்துறையை அழிக்கப் பார்க்கிறது அரசு. அப்படி அரசு செய்யாவிட்டால் அதனைச் செய்யத் தூண்டுகிறது சி.ஏ.ஜி. இதுதான் சாக்கு என்று தூபம் போடுகின்றன ஊடகங்கள். எதிர்க்கட்சிகளுக்கு இதனால் ஏகப்பட்ட சந்தோஷம்.
யாருக்கு நஷ்டம்?
[Customary disclaimer: ஊழல் எந்தவிதத்தில் நடந்தாலும் நான் அதனை ஆதரிக்கவில்லை. ஆ.இராசா வழக்கு உள்பட. தேவாஸ் விஷயத்தில் எங்கு ஊழல் நடந்துள்ளது என்று எனக்குப் புரியவில்லை. அரசுக்கு எந்தவிதத்திலும் நஷ்டம் இல்லை - 2ஜியிலும் சரி, இங்கும் சரி என்பதே இப்போதும் என் கருத்து.]