Monday, April 30, 2007

'திரும்ப அழைத்தல்' பற்றி சோம்நாத் சாட்டர்ஜி

இரு தினங்களுக்கு முன் நான் எழுதிய கட்டுரை.

மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி நேற்று பெங்களூரில் இதை வலியுறுத்திப் பேசியுள்ளார். அதிலிருந்து சில மேற்கோள்கள்:
The people's right to recall a representative who fails to live up to their expectations is an important democratic tool, and "I have been a strong votary of it," Lok Sabha Speaker Somnath Chatterjee said here on Sunday.

"Parliament is still the noblest of institutions, and every one there is not undesirable. But there is a need for a mechanism such as the right to recall, to help infuse a sense of accountability among elected representatives and I have also argued in favour of it," Mr. Chatterjee said.

In Parliament, every one is condemning this "abominable behaviour and I have forbidden him (Mr. Katara) from entering the House until he is cleared of all allegations." Right now, it is difficult to expel him as in the case of MPs who were involved in the cash-for-query incident, Mr. Chatterjee said.
எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் 'திரும்ப அழைக்கும்' சட்டத்தை இயற்ற நாம் முயற்சி செய்யவேண்டும்.

Sunday, April 29, 2007

வங்கதேசம் பற்றிய கட்டுரை

பாகிஸ்தான், வங்கதேசம் இரண்டையும் ஒப்பிட்டு, இப்பொழுது வங்கதேசத்தில் நிலவும் அரசியல் நிலைமையை ஆராயும் அருமையான கட்டுரை.

எனது முந்தைய பதிவுகளையும் படிக்கலாம்.
வங்கதேசத்தில் நொறுங்கும் குடியாட்சிமுறை
வங்கதேச அரசியல் குழப்பம்

சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிலாளர்கள் நிலையும்

நேற்று ஆஸ்திரேலியா தொலைக்காட்சியில் ஓர் ஆவணப்படம் காண்பித்தார்கள். (இரவு 10.00-11.00 இந்திய நேரம். ஒவ்வொரு நாளும் ஓர் ஆவண நிகழ்ச்சி வருகிறது. கட்டாயம் பார்க்கவேண்டியவை.) ஷென்சென் SEZ-ல் நோக்கியா நிறுவனத்துக்கு பாகங்களைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதுதான் நிகழ்ச்சி.

ஷென்சென் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இருக்கும் இந்தத் தொழிற்சாலை ஐரோப்பியர்களுக்குச் சொந்தமானது. ஆனால் அங்கு மொத்தமாக இரண்டு ஐரோப்பியர்கள்தான் உள்ளனர். மீதம் உள்ள அனைவரும் சீனர்களே. வேலை செய்வது 90%க்கும் மேல் பெண்கள்.

அதிகாரபூர்வ குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணிக்கு 2.75 ரென்மின்பி. ஒரு நாளைக்கு ஓர் ஊழியர் 8 மணிநேரம் வேலை செய்யவேண்டும். ஒரு நாள் ஊதியம் 22 ரென்மின்பி. அதிகபட்சம் 2 மணிநேரம் ஓவர்டைம். ஆனால் ஊழியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தையும்விடக் குறைவுதான் ஊதியம். மாத ஊதியம் என்று கிடையாது. ஒரு நாளைக்கு 10 மணிநேரம், 12 மணிநேரம் என்ற கணக்கில் 26 நாள்களுக்கு என்ன ஊதியம் என்று கணக்கிட்டுக் கொடுக்கும் தின ஊதிய முறைதான். ஞாயிறு மட்டும்தான் விடுமுறை.

வேலையாள்கள் அனைவரும் அங்கேயே டார்மிட்டரியில் வசிக்கிறார்கள். ஓர் அறைக்கு எட்டு பேர். பெண்கள் தனியாக. ஆண்கள் தனியாக. அங்கேயே, கேண்டீனில் அவர்கள் கொடுக்கும் சாப்பாடுதான். மாதத்துக்கு, தங்குவதற்கு 120 ரென்மின்பி, சாப்பாட்டுக்கு 30 ரென்மின்பி என்று அவர்களே பிடித்துக்கொள்வார்கள். ஆக நியாயமாக ஊதியம் கொடுத்தாலே - மாதம் 25 நாள், நாளுக்கு 8 மணிநேரம் வேலை செய்வோர்க்கு - 550-150 = 400 ரென்மின்பிதான் கையில் கிடைக்கும்.

ஆனால் கொடுக்கப்படும் ஊதியம் அதைவிடக் குறைவு. வேலை நேரமும் அதிகம். மாதத்துக்கு கையில் 200 ரென்மின்பிதான் மிஞ்சும் என்கிறார்கள் பல பெண்கள். சாப்பாடு மோசம். ஆனால் பக்கத்தில் உணவகங்கள் கிடையாது. தொலைதூரம் சென்று உணவு வாங்கப்போனால் விலையோ வெகு அதிகம். (பல ஏக்கர்கள் கொண்ட SEZ-ல் தொழிலகங்களைத் தவிர வேறு ஏதும் இருக்காது.)

முதல் மூன்று மாதங்கள் probationary period என்று சொல்லி, முழுநேர வேலைக்காகும் ஊதியத்தைவிடக் குறைவாகவே கொடுக்கிறார்கள்.

ஊழியர்களுடன் எந்த ஒப்பந்தமும் கிடையாது. ஒப்பந்தம் இருந்தால் அதை மீறவேண்டிவரும் என்பதால் ஒப்பந்தமே செய்துகொள்ளவில்லை என்று 'வெளிப்படையாகச்' சொல்கிறார் ஊழியர்களின் நிர்வாகி.

வேலைக்கு தாமதமாக வந்தால் அபராதம். 5 நிமிடம் தாமதமாக வந்தால் அரைமணிநேர ஊதியம் கட்!

90% பேர் பெண்கள். அவர்களுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள அரசின் பெர்மிட் இருந்தால் முதல் பிரசவத்துக்கு மூன்று மாதம் லீவ் கொடுக்கிறார்கள். இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வது சட்டத்துக்குப் புறம்பானது! அப்படி ஆகும் பட்சத்தில் வேலையைவிட்டு நீக்கிவிடுவார்கள்!

டார்மிட்டரியில் தண்ணீர், டாய்லெட் வசதிகள் மோசம்தான். (இந்தியத் தரத்தில்தான் உள்ளன...)

எந்தத் தொழிலாளரையும் கேள்விகள் ஏதும் கேட்காமல், பதில்கள் ஏதும் சொல்லாமல் வேலையை விட்டு நீக்கமுடியும்.

-*-

ஏன் இந்த ஊழியர்களுக்கு சரியான ஊதியம் கொடுக்கப்படவில்லை, சரியான வசதிகள் செய்துதரப்படவில்லை என்ற கேள்விக்கு அதற்கெல்லாம் யார் பணம் கொடுப்பார்கள் என்ற பதில்தான் வருகிறது. லாபத்தைப் பெருக்க, ஊழியர்களுக்குச் செய்துதரவேண்டிய நியாயமான வசதிகளையும் குறைந்தபட்ச ஊதியத்தையும் கொடுக்காமல் இருக்கிறது SEZ-களில் நடத்தப்படும் தொழிற்சாலைகள்.

இது தனிப்பட்ட ஒரு தொழிற்சாலையின் நடத்தை மட்டுமல்ல. சீனாவின் சி.பொ.மண்டலங்களில் இருக்கும் பல/அனைத்துமே இப்படித்தான்.

இதே நிலைதான் இந்தியாவின் சி.பொ.மண்டலங்களிலும் நடக்கும் என்று நாம் கருதவேண்டிவருகிறது. அதுவும் இந்திய அரசு கவனமாக இந்த சி.பொ.மண்டலங்களில் தொழிலாளர் நலச் சட்டங்கள் ஏதும் நடைமுறையில் இருக்காது என்று சொல்கிறது. இதை நாம் எதிர்க்கவேண்டும். SEZ, அதன்மூலம் நாட்டுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் என அனைத்தும் நமக்குத் தேவை என்றாலும் அவை எவற்றிலும் தொழிலாளர் விரோதப் போக்கு இருக்கவே கூடாது. அடிப்படையில் SEZ அனைத்துமே வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக எனும்போது எம்மாதிரியான வேலை வாய்ப்புகள் என்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.

[ஒரு ரென்மின்பி = 10 யூரோ ஒரு யூரோ = 10 ரென்மின்பி; ஒரு ரென்மின்பி = சுமார் ரூ. 5.30. அதிகபட்ச மாதச் சேமிப்பு இந்தப் பெண்களுக்கு ரூ. 1,000 தான் இருக்கும்.]

உலகக்கோப்பை: Cricket is dead, Long live Australia

அடுத்தடுத்து மூன்றாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றுகிறது ஆஸ்திரேலியா. 1999-ல் பாகிஸ்தான். 2003-ல் இந்தியா. 2007-ல் இலங்கையின் முறை. ஒவ்வோர் எதிரணியும் அவமானப்பட்டு, சரியான பதிலடி கொடுக்கமுடியாமல், ஆஸ்திரேலியாவை நெருங்ககூடமுடியாமல் தோற்றுள்ளன. நெருக்கமான ஓர் ஆட்டத்தில், கடைசிக் கட்டத்தில் ஆஸ்திரேலியா வென்றால் மனத்துக்கு திருப்தி இருக்கும்.

1999-ல் பாகிஸ்தான் களமிறங்கி விளையாடி 39 ஓவர்களில் 132-க்கு ஆல் அவுட். ஆட்டம் அங்கேயே முடிந்துவிட்டது. 2003-ல் முதலில் கில்கிறிஸ்டும், அடுத்து பாண்டிங்கும் இந்தியப் பந்துவீச்சை துவம்சம் செய்ய ஆரம்பித்ததுமே, ஆட்டம் முடிந்துவிட்டது.

நேற்றும் அதே கதிதான். அதோகதிதான். சமிந்தா வாஸ் திடீரென ஸ்விங் போடுவதை மறந்துவிட்டாரா? புலி போல ஃபீல்டிங் செய்யும் இலங்கை வீரர்கள் கையில் படாமல் கேட்ச்கள் தள்ளித் தள்ளியே விழுந்தன. சில கேட்ச்கள் கையிலிருந்து நழுவின. முரளிதரனால்கூட அதிகமாக ஒன்றும் செய்யமுடியவில்லை. மலிங்கா, வழக்கத்துக்கு மாறாக, துல்லியமாகப் பந்துவீசினார். ஆனால் ஒரேயொரு பந்துவீச்சாளரை வைத்துக்கொண்டு என்ன செய்வது.

மழையின் காரணமாக ஓவர்கள் குறைக்கப்படுவது இலங்கைக்குச் சாதகமாக இருக்கும் என்றே எண்ணினேன். ஆனால் கில்கிறிஸ்ட் வேறு மாதிரியாக நினைத்தார்.

ஓவருக்கு 7 ரன்னுக்கு மேல் என்பது எளிதான விஷயமல்ல. ஜெயசூரியாவும் சங்கக்காரவும் சேர்ந்து நன்கு விளையாடினாலும் அவர்கள் இருவரும் அவுட் ஆனால் அத்துடன் இலங்கை தோல்வி நிச்சயம் என்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது. கடைசியில் அதுதான் நடந்தது. கடைசிவரை பார்க்கவில்லை. காலையில் எழுந்து முடிவை மட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று தூங்கிவிட்டேன். கடைசியில் குறைந்த வெளிச்சத்தில் ஏதோ குழப்பம் நிகழ்ந்துள்ளது; ஆனால் ஆஸ்திரேலியாதான் வெற்றிபெறப்போகிறது என்பதில் குழப்பம் ஏதும் இருக்கவில்லை.

இந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடிக்ககூடியவர்கள் உள்ளனர் என்றே பலரும் நினைத்தார்கள். நியூசிலாந்து செய்திருக்கும். இலங்கைகூடச் செய்திருக்கலாம். ஆனால் யாரும் அருகேகூட நெருங்கவில்லை.

கிரிக்கெட் உலகம் மிகவும் கஷ்டப்பட்டுதான் ஆஸ்திரேலியாவுக்கு மாற்றை உருவாக்கவேண்டியிருக்கும்.

Saturday, April 28, 2007

இன்றைய ஐ.டி வேலைகள் - தகுதி

1990-களின் இறுதியில் கணினி சார்ந்த வேலைகளுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு இருந்தது. கல்லூரிப் படிப்பில், பி.டெக்/பி.ஈ டிகிரியில் ஐ.டி என்ற துறை (கணினியியல் தவிர்த்து) உருவாக்கப்பட்டது. இதைத்தவிர பி.சி.ஏ, எம்.சி.ஏ, பி.எஸ்சி, எம்.எஸ்சி (கணினியியல்) ஆகியவை சக்கைப்போடு போட்டன. கணினி அடிப்படை, புரோகிராமிங் ஆகியவற்றைக் கற்றுத்தர ஏகப்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் தோன்றின. இவை தாமாகவே சில பட்டயங்களை (Diploma) தந்தன. டேட்டாபேஸ், மல்ட்டிமீடியா, SAP என்று பலவற்றையும் பல லட்சம் ரூபாய் கொடுத்து மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.

2000-த்தில் டாட்காம் குமிழ் உடைந்ததும் சிறிதுகாலத்துக்கு பெற்றோர்கள், மாணவர்கள் ஐ.டியிலிருந்து விலகியே இருந்தனர். 2002-லிருந்து மெதுவாக, மீண்டும் ஐ.டி துறையில் வேலைகள், படிப்புகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன.

இப்பொழுது 12-ம் வகுப்பு முடித்துவிட்டு பல மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எங்கு சேரலாம், மாலை நேரங்களில் கணினி தொடர்பாக என்ன கற்றுக்கொள்ளலாம் என்று யோசிக்கவேண்டிய நேரம் வந்துள்ளது. இது தொடர்பாக ஐ.டி துறையில் வேலை செய்வோர் தங்களது கருத்துகளை எழுதமுடியுமா?

ஐ.டியில் வேலை செய்யாத என்னுடைய சில குறிப்புகள் இங்கே:

1. மேசைக்கணினியில் இயங்கக்கூடிய செயலிகளை (Applications) உருவாக்க: இன்று மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் மேசைக்கணினிகள் மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்தைக் கொண்டிருப்பவையே. எனவே இவற்றில் வேலை செய்யக்கூடிய செயலிகளை வடிவமைக்கத் தெரிந்திருக்கவேண்டிய மொழிகள்: Visual Basic .NET, Visual C++ .NET, C, C++, C# (இவற்றுள் ஏதோ ஒன்று, அல்லது மேற்கொண்டு)

2. இணையத்தில் தளங்களை (Web Sites) உருவாக்க, சேவை வழங்கிகளை (Application Servers) உருவாக்க: மைக்ரோசாஃப்ட் அல்லது யூனிக்ஸ் (லினக்ஸ்) தொழில்நுட்பம் இரண்டையும்கொண்டு இதனைச் செய்யலாம். தேவையான மொழிகள்: HTML, Javascript, Ajax, XML, ASP .NET, Perl, PHP, Java (J2EE).

3. தரவுத்தள வடிவமைப்பு (Database Servers): இன்று இணையத்தில் உள்ள பல சேவைகளுக்கும் பின்னணியில் தரவுத்தளங்கள் உள்ளன. இவை SQL என்னும் மொழியில் இயங்கும் செயலிகள். இவற்றில் இலவசமாகக் கிடைக்கும் MySQL, PostgreSQL, விலைக்குக் கிடைக்கும் Oracle, DB2, Microsoft SQL ஆகியவை அடங்கும். இவை அனைத்துக்கும் அடிப்படை SQL மொழி என்றாலும் ஒவ்வொரு தரவுத்தளச் செயலியும் தனக்கே உரித்தான சில மாறுதல்களைக் கொண்டவை. எனவே அவற்றைத் தனியாகக் கற்கவேண்டிவரும்.

4. இணைய (வழங்கி) நிர்வாகம் (System/Network Administration): இணையச் சேவைகளை வழங்கும் கணினிகள், இணைப்புகள், கணினிகளில் உள்ள செயலிகள் ஆகியவற்றை நிர்வகிப்பது, வைரஸ், எரிதங்கள் வராமல் பாதுகாப்பது போன்ற செயல்கள். இது ஒரு கணினி மொழியைக் கற்பதைப் போன்றதல்ல. பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும். மைக்ரோசாஃப்ட், லினக்ஸ் போன்ற இயங்குதளங்களைப் பற்றியும் அவற்றை எப்படி கணினியில் நிர்மாணிப்பது என்றும் தெரிந்துகொள்ளவேண்டும். புதிய செயலிகளைக் ஒவ்வொரு இயங்குதளத்திலும் நிர்மாணிப்பது என்றும் அறியவேண்டும்.

5. செல்பேசி: நம் கையில் இருக்கும் செல்பேசியும் கணினியைப் போன்றதுதான். அதற்கென ஓர் இயங்குதளம் உண்டு. நோக்கியா போன்றவை சிம்பயான் (Symbian) என்ற இயங்குதளத்தைக் கொண்டுள்ளன. முக்கால்வாசி செல்பேசிகளுமே இன்று ஜாவாவில் (J2ME) உருவாக்கிய செயலிகளை இயக்கக்கூடியவையாக உள்ளன. குவால்காம், ப்ரூ (BREW) என்ற மேடையை உருவாக்கியுள்ளது. சில செல்பேசிகள் இதற்கு ஆதரவு தருகின்றன. கைக்கணினிகள் பல PalmOS என்ற இயங்குதளத்தைக் கொண்டுள்ளன. இந்தச் சூழல்களில் நிரலிகளை எழுதுவதையும் ஒருவர் கற்றுக்கொள்ளலாம்.

6. மல்ட்டிமீடியா: டைப்செட்டிங், கிராஃபிக்ஸ், அனிமேஷன், ஒலி, ஒளி. இவற்றுக்கு பல செயலிகள் உள்ளன. ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்ளவேண்டும். Adobe Photoshop, CorelDraw, Pagemaker, InDesign, Flash, Maya, SoundForge, மேற்கொண்டு பல இருக்கலாம்.

இதில் எந்தத் துறையாக இருந்தாலும் அடிப்படையை முதலில் நன்றாகக் கற்றுக்கொண்டு, ஒரு மொழியையோ, செயலியையோ முழுவதுமாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். பிறகு அத்துடன் நெருங்கிய தொடர்புகொண்ட பிறவற்றைக் கற்றுக்கொள்வது நலம்தரும்.

[மேலே ஏதேனும் பெரிய அளவில் விடுபட்டிருந்தால், எழுதுங்கள். சேர்த்துவிடுகிறேன்.]

நுழைவுத்தேர்வு ரத்து செல்லும்

நேற்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தமிழக அரசு தொழிற்கல்விகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்து கொண்டுவந்த சட்டம் செல்லுபடியாகும் என்று குறிப்பிட்டுள்ளனர். பல ஆண்டிறுதித் தேர்வுகளின் மதிப்பெண்களை normalise செய்து அதன்மூலம் தேர்வு நடப்பதால் சமத்துவத்துக்கு எந்தக் குந்தகமும் இல்லை என்று நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆனந்தகிருஷ்ணன் குழு அமைக்கப்பட்டு நுழைவுத்தேர்வுக்கு தேவையா, வேண்டாமா என்று கருத்து கேட்டிருந்தபோது, நுழைவுத்தேர்வு இருப்பதே நல்லது என்று நான் குழுவுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு முன்னர் ஒருமுறை சில மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, நுழைவுத்தேர்வு முறை எந்த அளவுக்கு பலரைப் பாதிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

Normalisation முறையைப் பற்றிக் குறிப்பிடும்போது நீதிபதிகள்
...the normalisation of marks, which forms the basis of the new admission policy of the State Government was not so arbitrary as to warrant the court's intervention on the ground of violation of the Fundamental Right to Equality.
என்று சொல்லியுள்ளனர். பெஞ்சின் ஒரு நீதிபதி சம்பத்குமார், மேற்கொண்டு, எந்தத் தேர்வு முறையும் நியாயமானதாக, வெளிப்படையானதாக, (எந்த வகையினரையும்) சுரண்டாததாக இருக்கவேண்டும் என்றும் மேற்கண்ட நார்மலைசேஷன் முறை இந்த மூன்று அடிப்படையிலும் தேறுகிறது என்றும் சொல்லியுள்ளார்.

அடுத்த மூன்று வருடங்களில் இந்த முறை எவ்வாறு இயங்குகிறது என்று பார்த்துவிட்டுத்தான் மேற்கொண்டு கருத்து சொல்லமுடியும்.

Friday, April 27, 2007

கோதாவரி, பாலாறு

இரண்டும் ஆறுகள். இரண்டும் ஆந்திரம் வழியாக ஓடுகின்றன. முன்னது மஹாராஷ்டிரா வழியாக வந்து ஆந்திரத்தில் நுழைகிறது. பின்னது ஆந்திரம் வழியாகத் தமிழகத்துக்கு வருகிறது.

மஹாராஷ்டிர மாநிலம் பப்ளி என்ற இடத்தில், கோதாவரிக்குக் குறுக்கே தடுப்பணை (Check Dam) கட்ட அந்த மாநில அரசு விரும்புகிறது. ஆனால் இந்த அணையைக் கட்டினால் ஆந்திராவின் வறண்ட தெலுங்கானா மாவட்டங்களுக்குத் தண்ணீர் கிடைப்பது நின்றுபோய்விடும் என்று ஆந்திரா போராடுகிறது. இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் அமைச்சரவைகள்தான்.

இதற்கிடையில் பாலாறில் குப்பத்துக்கு அருகில் அணை கட்ட ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது. அங்கு அணை கட்டினால் தமிழக வட மாவட்டங்கள் தண்ணீர் கிடைக்காமல் திண்டாடுவார்கள் என்கிறது தமிழக அரசு. ஆந்திரா அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

ஒருபுறம் தனக்கு மேல் உள்ள (Upper Riparian) மாநிலம் அணை கட்டக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தான் மேலாக உள்ள இடத்தில் அதையே செய்யத் தீர்மானிக்கிறது ஆந்திரம்.

மஹாராஷ்டிரத்தின் செயலை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று சில தடைகளை வாங்கியுள்ளனது ஆந்திரம். இப்பொழுது அதே ஆந்திரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லப்போகிறது தமிழகம்.

தண்ணீரைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும் மிகவும் குறுகிய நோக்கில் மட்டுமே செயல்படுகின்றன.

இவ்வாறு தினம் தினம் இவைபோன்ற கேலிக்கூத்துகளைப் பார்க்கையில், நதிகளை தேசியமயமாக்கி, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது இன்றியமையாதது என்று தோன்றுகிறது.

Thursday, April 26, 2007

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்தல்

சில குடியாட்சி முறை நாடுகளில் Referendum, Recall போன்ற உரிமைகள் மக்களுக்கு உள்ளன. Recall என்றால் 'திரும்ப அழைத்தல்' என்று சொல்லலாம். Referendum என்பது மக்களிடம் பெறும் நேரடிக் கருத்து. இதற்கு ஆங்கிலத்தில் புழங்கும் மற்றொரு சொல் Plebiscite - அதாவது நேரடி மக்கள் வாக்கு.

'திரும்ப அழைத்தல்' உரிமை வெகுசில நாடுகளில் மட்டும்தான் உள்ளது. கனடாவில் ஒரு மாநிலத்தில்; அமெரிக்காவில் சில மாநிலங்களில், சில பதவிகளுக்கு மட்டும்; வெனிசுவேலாவில். வேறு சில நாடுகளிலும் இருக்கக்கூடும். நான் முற்றிலுமாகத் தேடிப் பார்க்கவில்லை. 'நேரடிக் கருத்து' முறை பல நாடுகளில் உள்ளது. பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃப்கூட இதைப் பயன்படுத்தித்தான் தன் பதவியை முதலில் ஸ்திரமாக்கிக்கொண்டார்.

இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற முறையில் நமது பிரதிநிதிகளாகச் சிலரை நாம் இந்த அவைகளுக்கு அனுப்புகிறோம். இவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களாகிய நமக்கு மட்டுமே உண்டு. இவர்களது தேர்தல் சில சமயங்களில் செல்லாது என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 (அதன் பிற சட்டத்திருத்தங்கள் சேர்ந்து) சொல்கிறது. அதற்கு ஏற்ப தேர்தல் ஆணையமோ, நீதிமன்றங்களோ ஒருவரது பிரதிநிதித்துவத்தைச் செல்லாததாக ஆக்கமுடியும்.

ஆனால் சென்ற ஆண்டு முதல்முறையாக சில நாடாளுமன்ற உறுப்பினர்களது பதவியை நாடாளுமன்றமே வாக்கெடுப்பின்மூலம் செல்லாததாக ஆக்கியது. இந்த உறுப்பினர்கள் அனைவரும் அவையில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியது விடியோவில் பிடிக்கப்பட்டு நாடெங்கும் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.

அவையின் முடிவை எதிர்த்து பதவி இழந்தவர்கள் நீதிமன்றங்களுக்குச் சென்றனர். இதை விசாரிக்கக்கூட நீதிமன்றங்களுக்குத் துப்பில்லை என்று நாடாளுமன்ற அவைத்தலைவர் கருத்து தெரிவித்தார். ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாமல் நீதிமன்றம் வழக்கை விசாரித்து அவைக்கு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு வழங்கியது.

எனக்கு மாற்றுக் கருத்து உண்டு.

பிற உறுப்பினர்களுக்கு ஓர் உறுப்பினரது பதவியை நீக்கும் அதிகாரம் இருக்கக்கூடாது. அவைத்தலைவருக்கு ஓர் உறுப்பினரை அவையிலிருந்து வெளியே நிறுத்திவைக்கும் அதிகாரம் உண்டு. அந்த உறுப்பினரது சம்பளத்தை, படிகளை நிறுத்திவைக்கும் அதிகாரம் இருக்கலாம். ஆனால் அந்த உறுப்பினர் கொலையே செய்தாலும் அவரது பதவியை நீக்கும் அதிகாரம் அவைத்தலைவருக்கோ, வாக்கெடுப்பின்மூலம் பிற உறுப்பினர்களுக்கோ இருக்கக்கூடாது. அந்தத் தொகுதியின் மக்களுக்கு மட்டும்தான் இதற்கான அதிகாரம் வழங்கப்படவேண்டும். இதற்கு நம் அனைவருக்கும் 'திரும்ப அழைத்தல்' (Recall) அதிகாரம் தேவை.

'திரும்ப அழைத்தல்' முறை செலவு பிடிக்கக்கூடியது. ஆனாலும் குடியாட்சி முறையில் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மட்டுமே தேர்ந்தெடுத்தவரை நீக்கக்கூடிய அதிகாரம் இருக்கவேண்டும். இது லஞ்சம் வாங்கிய உறுப்பினராக இருந்தாலும் சரி, அதிகார துஷ்பிரயோகம் செய்த பாபுபாய் கட்டாரா போன்ற கிரிமினல்களாக இருந்தாலும் சரி, பிற ஊழல் கறைபடிந்தவர்களாக இருந்தாலும் சரி.

பணம் படைத்தவர்கள் மக்களை மீண்டும் ஏமாற்றிவிடுவார்கள் என்ற குற்றச்சாட்டு வரலாம். ஆனால் பொதுவான தேர்தலிலேயே நடப்பதுதானே? அரசியல் கட்சிகளே கிரிமினல்களை தேர்தலில் நிற்க வைப்பதைக் கண்டு வெட்கவேண்டும். லஞ்சம், கிரிமினல் குற்றம், கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பொதுச்சொத்தை நாசம் செய்தல் போன்ற பலவற்றில் ஈடுபட்டுள்ளவர்களை ஒரு தொகுதி மக்கள் 'திரும்ப அழைக்காமல்' (நியாயமான முறையில் அத்தகைய Recall தேர்தல் நடந்திருந்தபோதிலும்) அவரையே மீண்டும் பதவியில் இருத்த விரும்பினால் அந்த மக்கள் திண்டாடட்டும்.

நாடாளுமன்றம் ஒன்றுகூடி ஒருவரைப் பதவியில் இருந்து தூக்குவது பெரும்பான்மை வாக்குகள் சார்ந்தது. அங்கு அரசியல் மட்டும்தான் நடக்கும்; நியாயம் நடக்காது. அதுவும் இன்றைய இந்திய அரசியலில்.

அதைப்போல பல முக்கியமான நிகழ்வுகளை மக்களின் பிரதிநிதிகள் மட்டும் தீர்மானிப்பது சரியாக இருக்காது. மக்களிடம் உள்ள பொதுக்கருத்து என்ன என்பதை வாக்குரிமை மூலமே தீர்மானிக்கமுடியும். இதற்கும் அமெரிக்காபோல ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் நடக்கும் பொதுத்தேர்தலில் வரிசையாகப் பல தீர்மானங்களை முன்னிறுத்தி செய்துகொள்ளலாம்.

திரும்ப அழைத்தல், நேரடிக் கருத்து ஆகிய இரண்டும் இந்தியக் குடியாட்சி முறையை வலுப்படுத்தும்.

Monday, April 23, 2007

வங்கதேசத்தில் நொறுங்கும் குடியாட்சிமுறை

'யானை தன் தலையில் மண் அள்ளிப்போடுவதைப் போல' என்பார்கள். யானை அவ்வாறு செய்வது தனக்குத் தானே தீங்கிழைக்கவா என்று தெரியவில்லை. ஆனால் வங்கதேச அரசியல்வாதிகள் தங்கள் தலையில் தகதகக்கும் தணலை அள்ளிக் கொட்டியுள்ளனர்.

இந்த விவகாரத்தின் பின்னணியைப் புரிந்துகொள்ள நான் சில மாதங்களுக்குமுன் எழுதிய பதிவைப் படித்துவிடுங்கள்.

வெட்டுப்பழி, குத்துப்பழியுடன் ஒருவரை ஒருவர் நாசமாக்க விரும்பிய காலீதா ஜியாவும் ஷேக் ஹசீனாவும் இன்று நட்டாற்றில்.

முதலில், இருவருமே ஊழலில் உழல்பவர்கள்தாம். ஊழல், குடும்ப அரசியல், எதிர்க்கட்சியினர்மீது கடுந்தாக்குதல் - மொத்தத்தில் தமிழக அரசியலைப் போன்றுதான். இந்தப் போட்டியின் விளைவாக நாட்டில் constitutional crisis ஒன்றை உருவாக்கினார்கள். அடுத்த காபந்து பிரதமர்/ஆலோசகர் யார் என்று புரியாத நிலையில் நாட்டின் குடியரசுத் தலைவர் இயாஜுதீன் அஹமத் அந்தப் பதவியைத் தனதாக்கிக்கொண்டார். இவர் காலீதா ஜியாவின் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் ஷேக் ஹசீனா இவரைக் கடுமையாக எதிர்த்தார். தன்னால் இனியும் இயங்கமுடியாது என்ற நிலையில் ஜனவரியில் அவசர நிலையைப் பிரகடனம் செய்துவிட்டு இயாஜுதீன் பதவி விலகினார்.

தொடர்ந்து முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுனர் பக்ருதீன் அஹமத் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு கட்சிகளும் அவரை வரவேற்றன.

சீக்கிரம் தேர்தலை முடிப்பார்; நாம் ஜெயித்துவிடுவோம்; பின் மீண்டும் கொண்டாட்டம்தான் என்று இருவருமே நினைத்தனர். பக்ருதீன் முதலில் புது தேர்தல் ஆணையரை நியமித்தார். பின் ஊழலை ஒடுக்கக் கிளம்பிவிட்டார். தேர்தல் ஆணையரோ இன்னமும் ஒரு வருடத்துக்குத் தேர்தல் கிடையாது என்று சொல்லிவிட்டார். ராணுவம் பக்ருதீனுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டது.

கொஞ்சம் அமைதிக்குப் பிறகு, இரண்டு முன்னாள் பிரதமர்கள்மீதும் ராணுவம், காவல்துறை ஏவப்பட்டது. இவர்கள்தாம் உத்தமர்கள் இல்லையே! காலீதா ஜியாவின் மகன்கள் இருவரும் செய்த ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேற்கொண்டு நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல் இருக்க, காலீதா ஜியா, சவுதி அரேபியாவுக்கு குடும்பத்தோடு காணாமல் போய்விடவேண்டும் என்று 'டீல்' செய்துகொண்டுள்ளதாகத் தகவல். [பாகிஸ்தானிலும் முஷரஃப் செய்த டீல் - நவாஸ் ஷரீஃப் குடும்பத்தோடு சவுதிக்கு சென்றுவிடவேண்டும்; பாகிஸ்தான் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பது. ஊழல்வாதிகளின் புகலிடம் சவுதியா?]

ஹசீனாமீதோ கொலைக்குற்றச்சாட்டு. வெளிநாடு சென்றிருந்த அவரை நாட்டுக்கே திரும்பிவரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது காபந்து அரசு.

இதற்கிடையில் அந்த நாட்டின் நீதித்துறை தனியாக இயங்குவதைப்போல் சில வழக்குகளை விசாரிக்கிறது. இது எவ்வளவு நாள்களுக்கு நீடிக்கும் என்பது ராணுவத்தின் கையில்.

பொதுமக்கள் இப்பொழுதைக்கு காபந்து அரசு செய்வதை எதிர்க்கவில்லை. ஏனெனில் இரண்டு கட்சிகளும் அந்த அளவுக்கு ஊழல் செய்துள்ளனர். ஆனால் இப்பொழுது நடப்பது சரியான தீர்வல்ல. பல சட்டங்களில் கையை வைத்து யார் தேர்தலில் போட்டியிடலாம், யார் கூடாது, யார் நாட்டைவிட்டு வெளியேறவேண்டும், யார் நாட்டுக்குள் நுழையக்கூடாது என்றெல்லாம் தீர்மானம் செய்ய எந்த இடைக்கால அரசுக்கும் அதிகாரம் இருக்கக்கூடாது. இந்த இடைக்கால அரசிடம் அது உள்ளது.

இதன் விளைவாக என்னதான் ஊழல் செய்தவர்களாக இருந்தாலும் காலீதாவும் ஹசீனாவும் நியாயமான முறையில் தேர்தலில் போட்டியிடுவது தடுக்கப்பட்டுள்ளது. இது குடியாட்சி முறைக்கு முற்றிலும் எதிரானது.

நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், இதற்கிடையில் ஒரு கட்சியைத் தொடங்கியிருக்கிறார். காலீதா ஜியா, ஷேக் ஹசீனா சிக்கலில் மாட்டியிருப்பது இவரது வெற்றிவாய்ப்பைப் பிரகாசமாக்கியிருக்கிறது.

எனக்கு யூனுஸை மிகவும் பிடிக்கும் என்றாலும், இவ்வாறு குடியாட்சி முறையை கேலிக்கூத்தாக்கி ஆட்சியைப் பிடிப்பது அவருக்கும் அழகல்ல.

இதில் ராணுவம் என்ன நினைக்கிறது என்பது அனைத்தையும்விட மிகவும் முக்கியம். திரைமறைவில் இருந்து பக்ருதீனை இயக்குவது யார்? அவர் என்ன நினைக்கிறார்? இதுவே முக்கியமான கேள்வி.

Sunday, April 22, 2007

ஐடி நிறுவனங்களின் வருமானம் - ஒப்பீடு

சென்ற நிதியாண்டுக்கான (2006-07) நிதி அறிக்கைகளை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிவிக்க ஆரம்பித்துள்ளன. நான்கு பெரும் நிறுவனங்கள் - டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஆகியவை - அறிவித்துவிட்டன. பிறவும் தொடரும்.

ஒவ்வொரு செய்தியிலும் அவை எவ்வாறு தங்கள் முந்தைய ஆண்டின் வருமானத்தைவிட அதிகம் பெற்றுள்ளன என்று சொல்கிறார்கள். அவை நான்கையும் ஒப்பிட்டால் எவ்வாறு செயல்பட்டுள்ளன என்று பார்க்க விரும்பினேன். அந்த முயற்சி கீழே:

2006-07டி.சி.எஸ்இன்ஃபோசிஸ்விப்ரோசத்யம்
மொத்த வருமானம் (ரூ. கோடி)18,914.2613,893.0013,679.606,668.36
EPIDTA (ரூ. கோடி)5,358.454,391.003,270.101,705.07
லாபம் (ரூ. கோடி)4,212.633,856.002,842.101,404.74
லாப சதவிகிதம்22%28%21%21%
EPS (ரூ)43.0567.7019.7220.98
30-03-2007 பங்கு விலை (ரூ)1,233.852,018.65559.40470.35
P/E28.6629.8228.3722.42


[EBIDTA என்றால் Earning before interest, depreciation, taxes and amortisation - அதாவது வரி, தேய்மானம், வாங்கிய கடனுக்கான வட்டி ஆகியவற்றைக் கழிக்காமல் கிடைக்கும் லாபம்.]

விப்ரோ நிறுவனத்துக்கு ஐடி தவிர பிற தொழில்களும் உண்டு. அவற்றைப் பிரித்து தகவல் தொழில்நுட்பம் பகுதிக்கு மட்டும் என்ன வருமானம், EBIDTA என்றெல்லாம் பார்த்திருக்க முடியும். ஆனால் அதற்குமேல் சென்றிருக்க முடியாது. பங்கு விலை என்பது அனைத்துத் தொழில்களையும் உள்ளடக்கிய நிறுவனத்துக்கானது.

டி.சி.எஸ்தான் இந்த நான்கிலும் பெரியது என்றாலும் அதன் லாப சதவிகிதம் குறைவாக உள்ளது. விப்ரோவுக்கு லாப சதவிகிதம் குறைவாக இருப்பதற்குக் காரணம் அதன் பிற பிரிவுகள் - மின்விளக்குகள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவை. நிச்சயமாக இன்ஃபோசிஸ்தான் இந்தத் துறையின் ஸ்டார் - அதன் லாப சதவிகிதத்தைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால். அதனால்தான் அதன் P/E மற்ற அனைத்தையும்விட அதிகமாக உள்ளது.

படிக்கவேண்டிய செய்தி: IT quartet`s turnover crosses $10 bn mark

லாராவும் டெண்டுல்கரும்

லாரா நேற்று இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஆட்டத்தோடு ஓய்வுபெற்றுள்ளார். முதலில் ஒருநாள் போட்டிகளிலிருந்து மட்டும் ஓய்வுபெறுவதாக இருந்தது. பின்னர் ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக ஓய்வு.

லாராவும் டெண்டுல்கரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் விளையாட வந்தனர். லாரா 1990-லும், டெண்டுல்கர் சில மாதங்கள் முன்பாக 1989-லும்.

இந்த இரண்டு ஆட்டக்காரர்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதே வர்ணனையாளர்களின் வேலையாக இருந்தது. யார் யாரைவிடச் சிறந்தவர் என்பதில் பலருக்கும் பல்வேறு கருத்துகள் இருந்தன. ஆனால் இருவரும் சமகாலத்தைய பேட்ஸ்மேன்கள் அனைவரையும்விடச் சிறந்தவர்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.

பெரும் இன்னிங்ஸ் விளையாடுவதில் லாரா சிறந்து விளங்கினார். லாராவின் முதல் டெஸ்ட் சதமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடித்த 277. பின் இங்கிலாந்துக்கு எதிராக அவர் கேரி சோபர்ஸின் சாதனையை முறியடித்து எடுத்த 375. மீண்டும் அதே களத்தில் அதே இங்கிலாந்துக்கு எதிராக அடித்த 400*. மொத்தம் ஏழு முறை 200க்கு மேல், ஒருமுறை 300க்கு மேல், ஒருமுறை 400. இதைத்தவிர இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் வார்விக்ஷயர் அணிக்காக டர்ஹாமுக்கு எதிராக அடித்த 500* என்று லாரா செய்திருக்கும் பல சாதனைகள் முறியடிக்கக் கஷ்டமானவை.

மாறாக டெண்டுல்கர் அதிரடியான ஆட்டத்தோடும் சாதாரண சதங்களோடும் நிறுத்திவிடுவார். பல வருடங்கள் கழித்தே அவரது முதல் இரட்டை சதம் வந்தது. மொத்தம் நான்கு இரட்டை சதங்கள். ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் டெண்டுல்கர் விளையாடியது குறைவுதான். கவுண்டி கிரிக்கெட்டில் கிடைத்த வாய்ப்புகளின்போதும் டெண்டுல்கர் அதியற்புதமாக ஒன்றும் செய்யவில்லை.

டெஸ்ட் போட்டிகளில் லாராவுக்கு டெண்டுல்கரைவிட அதிக ரன்கள். ஆனால் டெண்டுல்கருக்கு 35 - ஒரு சதம் அதிகம், சராசரியும் லாராவைவிட அதிகம்.

ஒருநாள் போட்டிகளில் டெண்டுல்கர் லாராவைவிட மிகச்சிறப்பாகவே விளையாடியுள்ளார். லாராவைவிடச் சதங்களும் அதிகம், சராசரியும் அதிகம், மொத்த ரன்களும் அதிகம் - விளையாடியதும் அதிகமே. அதேபோல ஆட்டங்களை வெற்றிபெற்றுத் தந்ததும் அதிகம்.

இருவரது ஆட்டங்களும் வெகு வித்தியாசமானவை. லாரா ஆஃப் திசையில் மிகவும் வலுவாக விளையாடக்கூடியவர் - எல்லா இடதுகை ஆட்டக்காரர்களையும் போலவே. டெண்டுல்கர் நாலா பக்கமும் நன்றாக அடித்து விளையாடக்கூடியவர். லாரா, டெண்டுல்கரைவிடச் சிறப்பாக வேகப்பந்து வீச்சை சந்திக்கக்கூடியவர். டெண்டுல்கர் சுழல்பந்தை விளையாடுவதில் லாராவைவிடச் சிறப்பானவர்.

லாரா, டெண்டுல்கர் இருவருமே அணித்தலைமையில் படுதோல்வியைச் சந்தித்தவர்கள். டெண்டுல்கர்மீது அணியின் பிற வீரர்கள் பெருமதிப்பு வைத்திருந்தாலும் டெண்டுல்கரால் அவர்களை ஒன்று சேர்த்து மிக வலுவான அணியாக மாற்ற முடியவில்லை. லாரா நொறுங்கிப்போய்க்கொண்டிருக்கும் ஒரு மேற்கிந்திய அணிக்குத் தலைவராக வேண்டியிருந்தது. அணியை மீண்டும் தூக்கி நிறுத்தவே முடியவில்லை.

புகழ் உச்சிக்குப் போனபோது லாராவின் வாழ்க்கையில், விளையாட்டில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. அதனால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். அதிலிருந்து மீண்டுவர சில மாதங்கள் ஆனது. டெண்டுல்கருக்கு அம்மாதிரி நிகழ்ந்ததே கிடையாது.

இருவருமே ஃபார்ம் குறைவு, உடல் காயங்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சூப்பர்மேன் படிமத்திலிருந்து சிலமுறை இருவருமே கீழே விழுந்துள்ளனர். இவர்கள் இருவரும் தத்தம் அணியை எப்படியாவது காப்பாற்றி மேலே கொண்டுவந்துவிடுவார்கள் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை இருவருமே பலமுறை பொய்ப்பித்திருக்கிறார்கள்.

இனியும் முடியாது என்ற நிலையில் லாரா ஓய்வு பெற்றுள்ளார். அது தெரியும்போதிலும் ஓய்வு பெறாமலிருக்கிறார் டெண்டுல்கர்.

Legends should know when to quit. Lara himself was a bit late.

Friday, April 20, 2007

வானில் பறக்கும் சன் டிவி?

சில நாள்களுக்கு முன்னர் சன் டிவியினர் இரண்டு சிறு விமானங்களை வாங்குவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது சில வலைஞர்களின் கோபத்தைச் சம்பாதித்திருந்தது.

இப்பொழுது சன் டிவி தங்களது நிறுவனத்தின் Memorandum & Article of Association-ல் கீழ்க்கண்ட வாசகங்களை சேர்ப்பதற்கு பங்குதாரர்களின் அனுமதியைக் கேட்டிருக்கிறார்கள்:
...to purchase, take on lease and/hire or otherwise, own, employ, maintain, work, manage, control, let on hire, charter, lease all forms of aerial conveyance for the purpose of transporting or carrying passengers, baggage, mail and freight and merchandise of all and every kind and description whether as principals, agents or otherwise on national and international routes and to maintain, operate and provide chartered domestic and international aviation services, scheduled domestic and international aviation services both for commercial and non commercial purposes in India and outside India.
இதனால் உடனடியாக அவர்கள் ஒரு குறைந்த கட்டண விமானச் சேவையைத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் அடுத்து இந்தப் பக்கமும் கலாநிதி மாறன் பார்வையைக் காட்டியுள்ளார்.

சன் ஏர்லைன்ஸ்?

ஸ்டார் மாநில மொழி சானல்கள்

ஸ்டார் தன்னுடைய ஒரே மாநில மொழி சானலான ஸ்டார் விஜயை தனியாக்கி அதில் பாலாஜி டெலிஃபில்ம்ஸ் நிறுவனத்தோடு கூட்டு சேருகிறது. இந்தக் கூட்டு நிறுவனத்தில் ஸ்டாருக்கு 51% பங்கும் பாலாஜிக்கு 49% பங்கும் இருக்கும். பாலாஜி இதற்கு சுமார் ரூ. 60 கோடி கொண்டுவரும். (அப்படியானால் ஸ்டார் விஜயை சுமார் ரூ. 120 கோடி மதிப்பு இருக்கும் என்று கணிக்கிறார்கள்.)

இந்தக் கூட்டு நிறுவனம் தமிழ் சானலை நடத்துவதோடு, தெலுங்கிலும் ஒரு சானலை ஆரம்பிக்க இருக்கிறார்கள். தொடர்ந்து பிற தென்னிந்திய மொழிகளிலும் சானலைத் தொடங்குவார்கள்.

மாநில மொழிகளில் சானல்கள் நடத்துவதற்கும், ஹிந்தி/ஆங்கில மொழிகளில் சானல்களை நடத்துவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒவ்வொரு மாநிலத்திலும் கேளிக்கைகள் வெவ்வேறு வகையைச் சார்ந்தவை. அதேபோலத்தான் செய்திகளைத் தருவதும். ஸ்டார் விஜய் ஓரளவுக்குப் புதிய நிகழ்ச்சிகளை நடத்திவந்தாலும் முழுமையான சானலாக இருந்ததில்லை. சன் டிவிக்கு, ஜெயா/ராஜ் போன்றவர்களால் வலுவான போட்டி இல்லை என்ற நிலையில் ஸ்டாரின் இந்த முடிவு நல்லதாக இருக்கும் என்று தோன்றுகிறது.

தென்னிந்திய மொழிகளில் சானல்களைத் தொடங்க விரும்பிய ஜீ/ஏசியாநெட் முயற்சி, தோல்வியில் முடிந்தது. தென்னிந்தியா என்பதை ஒரே எண்ணம் கொண்ட, ஒரே சுவையை எதிர்பார்க்கும் மக்கள் கூட்டமாக நினைத்து நடத்தினால் ஸ்டாரின் முயற்சியும் தோல்வியிலேயே முடியும். ஆனால் அப்படிச் செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

செய்தி

Thursday, April 19, 2007

குறுங்கடன் - இந்தியாவில் ஏழ்மையைப் போக்குமா?

[சுதேசி செய்திகள் ஏப்ரல் 2007-க்காக எழுதியது.]

சென்ற ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பங்களாதேசத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. இவர் ஒரு பொருளாதார நிபுணர். இவருக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும்? போரில் ஈடுபட்ட இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட உழைத்தாரா? தன் நாட்டில் புரட்சியில் ஈடுபட்ட இளைஞர்களைச் சமாதானப்படுத்தி நல்வழிக்குக் கொண்டுவந்தாரா?

அப்படி ஏதும் இல்லை. கடுமையான வறுமையில் உழலும் பல கோடி மக்களுக்குக் கடன் கொடுத்து அவர்களில் பெரும்பாலானோரை ஏழ்மையிலிருந்து சற்றே மேலே தூக்கி விட்டுள்ளார். பங்களாதேச அரசியல் குழப்பம் மிகுந்தது. கடந்த இருபதாண்டுகளில்தான் குடியாட்சி முறை என்பதையே அந்த நாடு கண்டுள்ளது. ஆனாலும் பெரிய இரண்டு கட்சிகளுக்குள்ளாக வெட்டுப்பழி, குத்துப்பழி. அரசுத்துறை எங்கும் லஞ்ச லாவண்யம். (ஆமாம்! இந்தியாவைவிட மோசம்!) வேலை வாய்ப்பு இல்லாமை, வறுமை, உற்பத்திக் குறைவு. இப்படிப் பலப்பல.

இந்நிலையில் வறுமைக்கு அடிப்படைக் காரணம், பல மக்களுக்கும் தங்களை வறுமையிலிருந்து வெளியே எடுக்கத் தேவையான முதலீடு கிடைக்காமையே என்று யூனுஸ் நினைத்தார். தன் கைக்காசை கிராம மக்கள் சிலருக்கு, வட்டி ஏதும் கேட்காமல், பிணை ஏதும் கேட்காமல் கொடுத்தார். அதன்மூலம் கிராம மக்கள் குறுந்தொழில்கள் பலவற்றைச் செய்து இருவேளை உணவை வாங்கும் அளவுக்காவது சம்பாதிக்க முடியும் என்று கண்டுகொண்டார். ஆயினும் வங்கிகள் பணமற்ற ஏழைகளுக்கு கடன்கள் கொடுப்பதை விரும்பவில்லை. எனவே ஏழைகளுக்கு என்று தனியாக வங்கி ஒன்று இருப்பது அவசியம் என்று உணர்ந்து கிராமீன் வங்கி என்ற வங்கியை உருவாக்கினார்.

இன்று கிராமீன் வங்கியில் கடன் பெறும் உறுப்பினர்களாக 70 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர். அதில் 67.7 லட்சம் பேர் பெண்கள்!

-*-

மைக்ரோ கிரெடிட் என்ப்படும் குறுங்கடன் முறை என்பது பல நாடுகளில் இன்று பரவியுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வளரும் நாடுகளும், சில வளர்ந்த நாடுகளும்கூட இந்த வழியிலாவது தன் நாட்டின் ஏழைகளின் வாழ்க்கையை உயர்த்த முடியுமா என்று பார்க்கிறார்கள்.

இரண்டு விதமான குறுங்கடன் முறைகள் உலகில் பரவியுள்ளன. ஒன்று கிராமீன் வங்கியின் முறை. மற்றொன்று இந்தியாவில் பரவலாகக் காணப்படும் சுய உதவிக் குழுக்கள் (Self Help Groups - SHGs) முறை.

கிராமீன் வங்கி பெரும்பான்மையாக, பெண்களுக்கு மட்டுமே கடன்களைக் கொடுக்கிறது. பெண்கள்தாம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் முன்னணியில் இருக்கிறார்கள் என்பது ஒன்று; பெண்களுக்குக் கொடுக்கும் கடன் அந்தக் குடும்பத்துக்கே போய்ச்சேருகிறது என்பது மற்றொன்று. கடன் பெற விருப்பம் இருக்கும் பெண்கள், ஐந்து பேர் இருக்கும் குழுவை உருவாக்க வேண்டும். இந்தக் குழுவில் ஒரு தலைவர் இருப்பார். ஆனால் அந்தத் தலைவருக்குக் கடைசியில்தான் கடன் கிடைக்கும். முதலில் இருவருக்குக் கடன் கொடுத்து அவர்கள் ஒழுங்காகக் கடனைத் திருப்பிச் செலுத்துகிறார்களா என்று பார்ப்பார்கள். அதன்பின் அடுத்த இரண்டு பேருக்கும் கடன் கொடுத்து அவர்களும் சரியாகத் திருப்பிச் செலுத்துகிறார்கள் என்றால் கடைசியாக அந்தக் குழுவின் தலைவருக்கும் கடன் கிடைக்கும்.

வங்கி கொடுக்கும் கடனை 'செலவழிப்பதற்கு' பயன்படுத்தக்கூடாது. மாறாக, பணம் கிடைக்கும் தொழில் ஒன்றில் முதலீடு செய்யவேண்டும். மாடு, ஆடுகளை வாங்கி வளர்ப்பது, மளிகை சாமான்களை மொத்தமாக வாங்கி வீடு வீடாக விற்பது, கைவினைப் பொருள்களைத் தயாரித்து விற்பது என்று ஏதாவது ஒரு தொழில் செய்தாக வேண்டும். கடன் பெற்ற ஒரு மாதத்துக்குள்ளாக மாதத் தவணையாகப் பணத்தைத் திருப்பிச் செலுத்தத் தொடங்க வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மையம் இருக்கும். இந்த மையத்தில் கடன் உதவி பெறும் சில குழுக்கள் இருக்கும். ஒரு குழுவில் உள்ள ஓர் உறுப்பினர் ஏதாவது தவணையைக் கட்ட முடியாவிட்டால் அந்தக் குழுவின் பிற உறுப்பினர்கள் சேர்ந்து கடனை அடைக்க வேண்டும். அந்தக் குழுவின் உறுப்பினர்களால் முடியாவிட்டால் அந்த மையமே சேர்ந்து தவணையைக் கட்டவேண்டும். இப்படியாக கடனை 'சமூக அழுத்தம்' (Social Pressure) மூலம் பெறுகிறது வங்கி.

கடன் கொடுப்பதுடன், சேமிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்துதல், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தல், குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவித்தல் (கருத்தடை முறைகளைப் பயிற்றுவித்தல்), புதிய குறுந்தொழில்களைக் கற்றுத்தருதல், சுகாதாரத்தைக் கற்றுத்தருதல் போன்ற பலவற்றிலும் கிராமீன் வங்கி ஈடுபடுகிறது.

பெரும்பாலும் கடன்கள் சில ஆயிரம் ரூபாய்களுக்குள்ளாக இருக்கும். இப்பொழுது வீடு கட்டுவதற்கு என்று சில பத்தாயிரம் ரூபாய் அளவிலும் கடன்கள் தருகிறார்கள். ஆனால் வீடுகள் கடன் பெறும் பெண்கள் பெயரில்தான் இருக்க வேண்டும்.

இந்தியாவிலும் கிராமீன் வங்கியைப் போன்ற நகல்கள் (Replicators) உள்ளன.

ஆனால் இந்தியாவிலேயே தயாரான மற்றொரு முறையும் உள்ளது. இவைதான் மகளிர் சுய உதவிக் குழுக்கள். இங்கு ஒரு வங்கி நேரடியாக உறுப்பினர்களைச் சேர்ப்பதில் ஈடுபடுவதில்லை. மூன்று தனியான படிநிலைகள் உள்ளன. மாநில அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் சுய உதவிக் குழுக்களை உருவாக்குகிறது. இந்த சுய உதவிக் குழுக்கள், கிராமீன் குழுக்களைப் போல் அல்லாது, 15 முதல் 20 உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம்.

சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு முதலில் சேமிப்புப் பழக்கம் கற்றுத் தரப்படுகிறது. கிராமீன் முறையிலும்கூட ஒவ்வோர் உறுப்பினரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். ஆனால் இந்திய சுய உதவிக் குழுக்கள் முறையில் முதலில் சேமிப்பில்தான் ஆரம்பமே. அவ்வாறு சேமித்த பணம் ஒரு வங்கியில் கணக்கில் வைக்கப்படுகிறது. ஒவ்வொரு குழுவும் தாம் சேமித்த பணத்திலிருந்து குழு உறுப்பினர்களுக்குக் கடன் கொடுக்கலாம். அதற்கு மேலாக ஒவ்வொரு குழுவும் சேமித்திருக்கும் தொகையின் அளவைப் பொருத்தும், அவர்களது கடன் வரலாற்றைப் பொருத்தும் வங்கி அந்தக் குழு உறுப்பினர்களுக்கு மேற்கொண்டு கடன்களைத் தருகிறது.

இந்த முறையில் ஓர் அரசு வங்கி சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களை நேரடியாக மதிப்பிடுவதில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நம்பி உள்ளனர். தொண்டு நிறுவனம், தனது மதிப்பை நிலைநாட்டவும், மேற்கொண்டு குழுக்களை உருவாக்கவும் வசதியாக, கடன்களை அடைக்க ஆவண செய்கின்றனர்.

-*-

சுய உதவிக் குழுக்கள் முறையில் பல வங்கிகள், பல நூறு தொண்டு நிறுவனங்கள், பல்லாயிரம் சுய உதவிக் குழுக்கள், பல லட்சம் உறுப்பினர்கள் என்று வேகமாகப் பரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் கிராமீன் முறையில் உள்ளதுபோன்ற கட்டுக்கோப்பு இருக்காது. ஒவ்வொரு தொண்டு நிறுவனமும் அதிகபட்சம் ஓரிரு லட்சம் உறுப்பினர்களை மட்டுமே நிர்வகிக்க முடியும். ஸ்கேலிங் - பெரிதாகச் செய்வது என்பது முடியாது.

ஆனால் அதே நேரம் ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட வங்கி வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

இரண்டு முறைகளிலுமே சில குறைபாடுகள் உள்ளன, சில ஆதாயங்கள் உள்ளன. இந்தியாவில் இரண்டு முறையுமே செயல்பாட்டில் உள்ளது. ஆனால் கிராமீன் வங்கி போன்ற ஓர் அமைப்பு இந்தியாவில் 'வங்கி' என்ற வரையறைக்குள் வராது. அது ஒரு Non Banking Finance Corporation - வங்கியல்லாத நிதி நிறுவனம் என்ற வரையறையில்தான் வரும். இதனால் வைப்புத் தொகைகளைப் பெறுவது, சேமிப்புக் கணக்குகளை வைத்திருப்பது, குறைந்த வட்டியில் கடன் பெறுவது போன்ற பலவற்றில் பிரச்னைகள் உண்டு. வரும் காலங்களில் இதில் மாற்றம் ஏற்படலாம்.

-*-

குறுங்கடன் எந்த வகையில் நாட்டில் ஏழ்மையைப் போக்க முடியும்? அடிப்படையில் கிரெடிட் - கடன் என்பது கிடைத்துவிட்டால் ஏழ்மை போய்விடும் என்றால் குறுங்கடனால் ஏழ்மையைப் போக்குவது எளிது. ஆனால் பல நேரங்களில் மிகவும் ஏழையாக இருப்பவர்கள் குறுங்கடன் பெறுவது எளிதாக இல்லை. பணத்தைச் செலவழித்துவிட்டு தவணைகளைக் கட்ட முடியாதவர்கள் என்று நினைப்போரை சுய உதவிக் குழுக்களிலோ கிராமீன் குழுக்களிலோ சேர்க்க பிறர் விரும்புவதில்லை.

பலருக்குக் கடன் கிடைத்தாலும் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரிவதில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தலையிட்டு எப்படிப்பட்ட புதுமையான வழிகளில் தொழில்புரிவதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று கற்றுத்தரவேண்டும். எனவே தொண்டு நிறுவனத்தின் திறனைப் பொருத்தே கடன்களின் பயன் தெரிய வரும். குறுங்கடன்கள்மூலம் தயாராகும் பொருள்கள் நாட்டின் பெரிய சந்தையை, முக்கியமாக மத்தியதர வர்க்கத்தினரைச் சென்று அடையுமா என்பது இன்றைய காலகட்டத்தில் சந்தேகமே. கிராமப்புறங்களில் மட்டுமே தாங்கள் தயாரித்த பொருள்களை (அல்லது சேவைகளை) விற்பதன்மூலம் இந்தச் சுய உதவிக் குழுக்கள் தங்களது வாழ்க்கைத்தரத்தை வெகுவாக உயர்த்திக்கொள்ள முடியும் என்று நிரூபித்தால்தான் குறுங்கடன் எந்த அளவுக்கு ஏழ்மையைப் போக்கும் என்று புரியும்.

குறுங்கடனால் நகர்ப்புற ஏழைகளுக்கு நல்ல வாழ்கையை அமைத்துத் தரமுடியும் என்றே தோன்றுகிறது. ஓர் அயர்ன்பாக்ஸும் தள்ளுவண்டியும், ஓர் எலெக்ட்ரிஷியனுக்குத் தேவையான உபகரணங்கள், ஒரு தையல் மெஷின், பொருள்களைத் தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று விற்க உதவியாக தள்ளுவண்டி மற்றும் வொர்க்கிங் கேபிடலாகக் கொஞ்சம் பணம் என்று பலவகைகளில் குறுங்கடனைப் பயன்படுத்தலாம். பெரிய நகரங்களில் பெரிய சந்தையும் உள்ளது. அதைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்தால் தனி மனிதர்களால் வருமானம் பெறமுடியும்.

ஆனால் கிராமப்புறங்களில் நேரடி விவசாயம் அல்லாத பிற தொழில்களைச் செய்வோருக்கு சரியான சந்தை கிடையாது. இந்தச் சந்தையைத் தயார்செய்வது கிராமப்புற வருமானத்தை வளர்த்த மிகவும் அவசியமாகிறது.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் இதனைச் செய்யமுடியுமா என்பது சந்தேகமே.

-*-

முகமது யூனுஸுக்குக் கிடைத்திருக்கும் நோபல் பரிசு, குறுங்கடன் மீது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலர், குறுங்கடன் வங்கிகள் முதலாளித்துவத்தின் கைக்கூலிகள், இதனால் ஏழைகளுக்கு நன்மை கிடையாது, அவர்களைக் கடனில் ஆழ்த்தும் திருகுதாளமே குறுங்கடன் என்கிறார்கள். பங்களாதேசத்தில் குறுங்கடன் பெற்றவர்களில் 50%க்கும் மேலானவர்கள் ஏழ்மையிலிருந்து மீண்டிருக்கிறார்கள் என்றால் மீதம் உள்ளோர் மீளவில்லையே என்கிறார்கள். (டம்ளரில் பாதி தண்ணீரா, பாதி வெற்றிடமா என்பதுபோல!) வேறு சிலரோ குறுங்கடன் நிறுவனங்கள் அதிகமாக வட்டி வசூலிக்கின்றன என்று குற்றம் சாட்டுகிறார்கள். கிராமப்புறங்களில் வட்டிக்கடைகள் எந்த அளவுக்கு வட்டி வசூலிக்கின்றன என்பதைப் பார்த்தால் குறுங்கடன் வட்டி அவ்வளவு மோசமில்லை.

எந்த முயற்சியையுமே எதிர்மறையாக விமரிசிக்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். ஆனால் நேர்மறையாக, எப்படி இப்பொழுது புழக்கத்தில் இருக்கும் ஒரு முறையில் உள்ள குறைகளைக் களைந்து அதன்மூலம் ஏழைகளின் வாழ்வை உய்விக்க முடியும் என்பதில் நாம் கவனம் செலுத்தவேண்டும்.

Wednesday, April 18, 2007

முனைந்து தொழில் செய்!

[கும்பகோணம் டவுன் ஹையர் செகண்டரி ஸ்கூல் ஆண்டுவிழா மலருக்காக ஜனவரி 2007-ல் எழுதிய கட்டுரை.]

நான் பள்ளியில் படிக்கும்போது 'டாக்டராக வேண்டும்', 'இஞ்சினியராக வேண்டும்' போன்ற கனவுகள்தான் விதைக்கப்பட்டன.

நன்றாகப் படிக்கவேண்டும், நல்ல பொறியியல்/மருத்துவக் கல்லூரியில் இடம் பெறவேண்டும். அது போதும்.

1970, 1980களில் இதுபோன்ற எண்ணம் மாதச்சம்பள மத்தியதர வகுப்பினரிடையே இருந்ததில் ஆச்சரியமில்லை. அவர்களது கனவுகள் குறுகியவை. மாதச்சம்பளம் மட்டும்தான் அந்தக் கனவுகளில் முதன்மையாக இருந்தது. பொறியியல் படித்தால் உயர்ந்த வேலை கிடைக்கும். மருத்துவம் படித்தால் அரசு மருத்துவமனையில் வேலை கிடைக்கும். அல்லது, மாதச்சம்பளமாக இல்லாவிட்டாலும், சொந்தத் தொழிலில் தினசரி வருவாய் இருக்கும். மனிதர்கள் உள்ளவரை வியாதிகளும் உண்டுதானே?

தொழில் தொடங்குவது என்பது இவர்களது கனவின் ஓர் அங்கமாக இருந்ததில்லை. தொழில் தொடங்க முதல் வேண்டும். வசதியான பின்னணி இல்லாத நிலையில் அதைப்பற்றி ஏன் கனவு காண்பானேன்?

தொழில் தொடங்க மனோதிடம் வேண்டும். லாபம் இருக்கலாம், ஆனால் நஷ்டமும் இருக்குமே? கைக்காசை இழந்தால் நாளை என்ன செய்வது? கடனை உடனை வாங்கித் தொழில் தொடங்கி நஷ்டப்பட்டால், கடன் கொடுத்தவருக்கு என்ன பதில் சொல்வது? கடன் வாங்குவதே தவறு என்ற பின்னணியில் வந்தவர்களாயிற்றே இவர்கள்?

தொழில் செய்வதானால் அரசாங்கக் கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். அதில் ஏதேனும் தில்லுமுல்லுகள் செய்ய வேண்டியிருக்கும். யாரோ ஒரு கவர்ன்மெண்ட் ஆஃபீசரிடம் கைகட்டி, வெட்கி, தலைகுனிந்து நிற்பதற்குபதில் நாமே அந்த ஆஃபீசராக ஏன் இருக்கக்கூடாது?

தொழில் செய்வதென்றால் நிறைய பேரை வேலைக்கு வைத்து மேய்க்க வேண்டும். அவர்கள் பிரச்னை செய்யும் ரகமாக இருப்பார்கள். கொடி தூக்குவார்கள். விசுவாசம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று என்ன நிச்சயம்? நம் காசைத் தூக்கிக்கொண்டு ஓடிவிடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

இப்படி எதை எடுத்தாலும் சமாதானம் சொல்லி, பிரச்னைகளை மட்டுமே முன்னுக்கு நிறுத்தி, நத்தை கூட்டுக்குள் உடலைச் சுருக்கிக்கொள்வதைப்போல தானுண்டு, தன் வேலையுண்டு, மாதச்சம்பளமுண்டு என்று இருக்க, வாழப் பழகிக்கொண்ட மக்கள்.

இவர்களிடத்தில் இருந்துதான் புதிய தொழில்முனைவோர் முளைக்கப்போகிறார்கள் என்று இவர்கள் அன்று அறிந்திருக்க மாட்டார்கள்.

*

தொழில்முனைவோர் என்ற சொல் ஆங்கிலச் சொல்லான 'entrepreneur' என்பதற்கு இணையாகத் தமிழில் புழங்கப்படுகிறது. இந்தச் சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து வந்தது. எந்தக் கலாசாரத்திலும் முனைந்து தொழில் செய்வோர் இருந்து வந்துள்ளனர். எனவே மொழியைப் பற்றியோ கலாசாரத்தைப் பற்றியோ கவலைப்படவேண்டாம். இந்தச் சொல்லின் தமிழ் வேரை ஆராய்வதற்குபதில் ஆங்கிலச் சொல்லுக்கு இன்று கொடுக்கப்படும் பொருளை ஆராய்வது உபயோகமானது.

ஒரு தொழில்முனைவர், தொழிலில் உள்ள அபாயத்தைக் கண்டு (ரிஸ்கைக் கண்டு) பயப்பட மாட்டார். சொல்லப்போனால், தொழில் அபாயம் அவருக்குப் பிடிக்கும். மலையேற்றம், பஞ்சீ ஜம்ப்பிங் (எலாஸ்டிக் கயிறைக் காலில் கட்டிகொண்டு மலையிலிருந்து தலைகீழாகக் குதிப்பது), கடல் அலைகள்மீது சர்ஃப் போர்டில் மிதந்து செல்வது, ஜல்லிக்கட்டு போன்ற வீரவிளையாட்டுகள், அந்த விளையாட்டுகளில் ஈடுபடும்போது உடலில் ஜிவ்வென்று பரவும் அட்ரினலின் ஹார்மோன் கொடுக்கும் விறுவிறுப்பு ஆகியவற்றை ரசிப்பவர்கள் இருக்கிறார்களோ அதேபோன்று தொழில் அபாயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் புதியபுதிய தொழில்களில் இறங்கி 'ஒரு கை' பார்ப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு தொழில்முனைவர் புதுமையாக ஒன்றைச் செய்வார். யாரும் எதிர்பார்க்காத வாய்ப்பை இவர் மட்டும் கவனிப்பார். அந்த வாய்ப்பை ஒரு கருவியாக, ஒரு சேவையாக, ஒரு முழுதான தொழிலாக மாற்ற முனைவார். ஹென்றி ஃபோர்ட் வருங்காலத்தில் கார்களுக்குப் பெரும் தேவை இருக்கும் என்பதைக் கண்டறிந்து மிக அதிகமான எண்ணிக்கையில், தரமான, மக்கள் விரும்பும் கார்களை எப்படி உருவாக்குவது என்ற செயல்முறையைக் கண்டுபிடித்தார் அல்லவா? அவர் ஒரு தொழில்முனைவர். அவருக்கு முன்னும், அவர் காலத்திலும் பலரும் கார்களைச் செய்தனர். ஆனால் யாருக்கும் ஃபோர்டுக்குத் தோன்றிய தொழில்முறை (அசெம்ப்ளி லைன்) தோன்றவில்லை.

ஒரு தொழில்முனைவர் 'முதலாளி' என்ற பெயர் குறிப்பிடுவதுபோல நடந்துகொள்ள மாட்டார். அதாவது அலுவலகம் வந்து, பிறரை அதிகாரம் செய்து, மாலை ஆனதும் கிளப்புக்கு சீட்டாடச் செல்லும் சீமான் அல்லர் இவர். அடிமட்டத் தொண்டன் செய்வதைச் செய்யக்கூடியவர். அலுவலகத்தில், தொழிற்சாலையில் உள்ள அனைவரையும் தனது தலைமைப் பண்பால் ஈர்த்து அவர்களிடத்தில் மாறாத விசுவாசத்தை உருவாக்குபவர். தன்மீது மதிப்பை உருவாக்குபவர்.

ஒரு தொழில்முனைவர் பணத்தில் புரளவேண்டும் என்பதில்லை. சொல்லப்போனால் மிக உயரத்தை எட்டிய தொழில்முனைவர்கள் யாருமே பணக்காரர்களாகப் பிறந்ததில்லை. நடுத்தரவர்க்கத்தினர்தான். அம்பானி, நாராயண மூர்த்தி, பில் கேட்ஸ், ஹென்றி ஃபோர்ட் என்று யாராக இருந்தாலும் சரி. எனவே தொழிலைத் தொடங்க பெரும்பணம் என்பது தேவையே இல்லை. ஆனால் தொழில்முனைவோர் பணத்தைப் பிறரிடமிருந்து எப்படிப் பெறுவது என்பதை அறிந்திருப்பார்கள்.

ஒரு தொழில்முனைவர் தன் வாழ்க்கையில் எப்பொழுதுமே தொடர்ச்சியாக வெற்றியைப் பெற வேண்டும் என்பதில்லை. சொல்லப்போனால் பலமுறை இவர் தோல்வி அடைந்திருப்பார். ஆனால் தோல்வியைக் கண்டு துவண்டிருக்க மாட்டார். மனத்தளவில் எந்தவிதத்திலும் பாதிப்பு அடைந்திருக்க மாட்டார்.

*

மேற்கு உலகம் தொழில்மயமான ஆரம்பகாலத்தில் நிலச்சுவான்தார்கள்தாம் தொழிற்சாலைகளையும் தொடங்கினார்கள். பின்னர் தொழிற்சாலையில் பொருள்கள் உற்பத்தி செய்யும் முதலாளிகள் என்ற தனிவர்க்கம் உருவானது. நிலச்சுவான்தார்களைவிட இவர்கள் வலுவான நிலையை அடைந்தார்கள். எப்படி நிலச்சுவான்தார்கள் தங்களிடம் வேலை செய்யும் பண்ணையாள்களை நசுக்கிச் சுரண்டினார்களோ, அதேபோல ஆரம்பகாலத்தில் தொழில் முதலாளிகள் தொழிலாளர்களைச் சுரண்டினார்கள். ஆனால் நாளடைவில் அரசுகள் இயற்றும் சட்டங்களாலும் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு உருவாக்கிய தொழிற்சங்கங்களாலும் தொழிலாளர் நிலைமை முன்னெறியுள்ளது.

ஆனால் தொழில்முனைவோர் தொடங்கும் தொழில்கள் அனைத்துமே தொழிலாளர்களையும் முதலாளிகளாகக் கருதும் தன்மை வாய்ந்தது. இந்தத் தொழில்கள் பலவும், ஸ்டாக் ஆப்ஷன்ஸ் எனப்படும் முறைமூலம் வேலை செய்யும் அலுவலர்கள் அனைவரையும் (அல்லது பலரையும்) நிறுவனத்தின் பங்குதாரர்களாகச் செய்கிறது. முதலாளி, தொழிலாளர் பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றுசேர்ந்து உழைக்கும் நிறுவனங்கள் மட்டுமே நாளடைவில் நிலைத்துநிற்கும்.

*

இந்தத் தொழில்முனைவோர் என்ன மாதிரியான தொழிலைச் செய்கின்றனர்? இதற்கு எத வரைமுறையும் கிடையாது. சோப்புத்தூள் செய்யலாம். எலெக்டிரானிக் கருவிகளைச் செய்து விற்கலாம். பொம்மை செய்யலாம். சாக்லேட் செய்யலாம். தலைமுடி வெட்டும் சலூன்களை நாடெங்கும் நிர்மாணிக்கலாம். நாடெங்கும் சுகாதாரமான மொபைல் கழிப்பிடங்களைக் கட்டி கட்டண முறையில் செயல்படுத்திப் பணம் செய்யலாம்.

அட, இதில் என்ன புதுமை உள்ளது? நாட்டில் சோப்புத்தூளே இல்லையா? சாக்லேட் இல்லையா? இதென்ன என்னைப்போய் அம்பட்டன், தோட்டி வேலை செய்யச் சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஒவ்வொன்றையும் தனித்தனியாக கவனிப்போம்.

புதுமை என்பது புதிய கருவியைச் செய்வதில்தான் உள்ளது என்று நினைக்காதீர்கள். ராக்கெட் செய்தாலும் ரப்பர் பேண்ட் செய்தாலும், செய்வதில் ஏதேனும் புதுமை, அதனை விற்பனை செய்வதில் ஏதேனும் புதுமை, அதன்மூலம் மக்களுக்கு அதிகப்படி நன்மை - இதுதான் தொழில்முனைவோருக்கு அவசியம். நம் நாட்டில் பத்துப் பாத்திரம் தேய்க்க தேங்காய் நார், சாம்பல், கரித்தூள் என்று இதுநாள்வரை பயன்படுத்தி பாத்திரங்களை வீணடித்தனர். இப்பொழுது ஸ்காட்ச் பேட், திரவ சோப் என்று வந்துள்ளன அல்லவா? ஒரு சொட்டு சோப் திரவத்தை விட்டு, சின்த்தெடிக் பட்டையால் தேய்த்தால் அழுக்கு சுலபமாகப் போகிறதல்லவா? அது புதுமை. இந்த முறையைக் கண்டுபிடித்து விற்பனை செய்து பணம் சம்பாதிப்பது தொழில்முனைவரின் திறமை.

அடுத்து, ஒரு தொழில்முனைவர் தான் செய்யும் தொழிலில் உயர்வு தாழ்வு பார்க்க மாட்டார். இது அவசியமா, தேவை உள்ளதா, ஒரு குறிப்பிட்ட முறையில் இந்தச் சேவையைத் தருவதன்மூலம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து அதன்மூலம் பணம் சம்பாதிக்கமுடியுமா? அவ்வளவுதான்.

*

இந்தத் தொழில்முனைவோர் எங்கிருந்து உருவாகின்றனர்? எப்படி உருவாகின்றனர்? இதற்கு என்று தனியான படிப்பு ஏதெனும் உள்ளதா?

இந்தியா சுதந்தரம் பெறுவதற்கு முன், புதிதாகத் தொழில் தொடங்கியவர்கள் பெரும்பாலும் பணம் படைத்தவர்களாகவே இருந்தனர். தொழில்களிலும் பெருமளவு புதுமையோ திறமையோ இருக்கவில்லை. வாய்ப்புகள் இருந்தன. அந்த வாய்ப்புகளைப் பெற மூலதனம் தேவைப்பட்டது. வங்கிகள், வென்ச்சர் கேபிடல் ஆகியவை இல்லாத நிலையில் பணம் படைத்தவர்கள் மட்டுமே இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. சுதந்தரத்துக்குப் பிறகும் இதே நிலைதான் தொடர்ந்தது.

நடுநடுவே ஓரிரு கீழ்மட்ட, நடுத்தரப் பொருளாதார நிலையில் இருந்து வந்தவர்களும் தங்களது விடாமுயற்சியின்மூலம் தொழில்முனைவோராக மிளிர முடிந்தது.

ஆனால் 1990களுக்குப் பிறகு தொழிமுனைவோராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இப்பொழுது அதிகத்தேவை நல்ல படிப்பு, உலக ஞானம், கம்யூனிகேஷன் திறன், ஆர்வம், விடாமுயற்சி ஆகியவையே. கொஞ்சம் பணம் இருந்தால் போதும். கொஞ்சம் என்றால் எவ்வளவு? ஓரிரு லட்சங்கள் இருந்தால்கூடப் போதும். அதனைவிடக் குறைந்த பணத்தைக் கொண்டும் தொழில் தொடங்கமுடியும்.

எந்தப் பின்னணியிலிருந்து வந்திருக்க வேண்டும்? எந்தப் பின்னணியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பொதுவாகவே பெரு நகரங்களில் அதிக வாய்ப்புகள் உள்ளன. சிறு கிராமங்களில் மிகக்குறைந்த வாய்ப்புகள். இது இன்றைய நிலை. இந்த நிலை அடுத்த சில வருடங்களில் மாற்றம் அடையலாம்.

இதற்கென படிப்புகள் ஏதும் உள்ளனவா? சில கல்வி நிறுவனங்கள் Entrprenuership துறையில் பாடங்களை நடத்துகின்றன. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் அதுபோன்ற பாடங்கள் அபத்தமானவை என்றே நினைக்கிறேன். சொல்லிக்கொடுப்பதால் தொழில்முனையும் திறன் வந்துவிடாது. பிற தொழில்முனைவோரின் வாழ்க்கையைக் கூர்ந்து படிப்பதாலும், அனுபவஸ்தர்களிடமிருந்து கற்றுக்கொள்வதாலும், தண்ணீரில் குதித்து தானே நீந்தக் கற்றுக்கொள்வதாலுமே இது கிடைக்கிறது.

*

மாணவர்கள் பள்ளியில் படிக்கும்போதே, கல்லூரிக்குப் போவதற்கு முன்னமேயே தங்கள் எதிர்காலக் கனவுகளைக் காணத் தொடங்குகிறார்கள். தொழில்முனையும் கனவு அந்த நேரத்திலேயே வந்துவிடவேண்டும். டாக்டராகுபவர்கள் டாக்டராகட்டும். இஞ்சினியர் ஆகவிரும்புவோர் இஞ்சினியராகட்டும். ஆனால் இவர்களுக்கு வேலை கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் தொழில்முனைவோர் ஆக ஒரு வகுப்பின் 5 சதவிகிதம் மாணவர்களாவது முயற்சி செய்யவேண்டும்.

வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரம் நம் இளைஞர்களுக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகளைத் தரப்போகிறது. இதை முழுமையாகப் பயன்படுத்தி முனைந்து தொழில் செய்யுங்கள்.

தொலைக்காட்சி விளம்பரங்களின் எதிர்காலம்

சமீபத்தில் கூகிள் (Google), டபுள்கிளிக் (Doubleclick) என்னும் நிறுவனத்தை $3.1 பில்லியன் டாலருக்கு வாங்கியது பற்றி படித்திருப்பிர்கள்.

நீங்கள் பெரும்பாலும் சுற்றும் இணையத்தளங்கள் பலவற்றில் பார்க்கும் பேனர் விளம்பரங்களை அளிக்கும் நிறுவனம் டபுள்கிளிக்காகத்தான் இருக்கும்.

இணைய விளம்பரங்கள், தொலைக்காட்சி, ரேடியோ, செய்தித்தாள் விளம்பரங்களைவிட மாறுபட்டவை. தொலைக்காட்சியிலோ, ரேடியோவிலோ நீங்கள் பார்க்கும்/கேட்கும் விளம்பரங்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்கும்/கேட்கும் அனைத்து நேயர்களுக்கும் பொதுவானவை. உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் ஒன்றும் அடுத்தவர் வீட்டில் அதே நேரத்தில் வேறு ஒன்றுமாக இருப்பதில்லை. செய்தித்தாளின் ஒரு குறிப்பிட்ட பக்கத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் விளம்பரம் அந்த எடிஷனில் அனைவருக்கும் பொதுவானது. அந்தத் தாளை அச்சிடும்போது முன்னமேயே அடித்து வைத்திருப்பது.

ஆனால் இணையத்தில், ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தின் குறிப்பிட்ட பக்கத்தை உங்களது உலாவி பெறும்போது கடைசி நேரத்தில் விளம்பரத்துக்கான பெட்டியில் உங்களுக்கு என்றே பிரத்யேகமாக ஒரு விளம்பரம் வருகிறது. அதே நேரம், அதே பக்கத்தைக் கேட்கும் வேறு ஓர் அன்பருக்கு வேறு ஒரு விளம்பரம் போய்ச்சேரும்.

இந்தக் காரியத்தைச் செய்வதுதான் ஆட் சர்வர் எனப்படும் விளம்பர வழங்கி. இந்த மென்பொருளை பல நிறுவனங்கள் உருவாக்கிவந்தனர். பின்னர், இதனை மென்பொருளாக விற்காமல் சேவையாக அளிக்கத் தொடங்கினர் (Software as a Service). அப்படிப்பட்ட ஒரு நிறுவனம்தான் டபுள்கிளிக். நெட்கிராவிட்டி என்று ஒரு நிறுவனம் இருந்தது; அது இந்தச் சேவையை வழங்கியதோடு தன் மென்பொருளையும் விற்றுவந்தது. பின்னர் டபுள்கிளிக் சுமார் $530 மில்லியன் டாலருக்கு நெட்கிராவிட்டியை வாங்கிவிட்டது. டபுள்கிளிக்குக்குப் போட்டியாக ஐரோப்பாவில் சேவையை அளித்துவந்த ஃபால்க் ஏ.ஜி (Falk AG) என்ற நிறுவனத்தையும் சமீபத்தில் டபுள்கிளிக் வாங்கியிருந்தது.

இந்த (இணைய) விளம்பர வழங்கிகள் நம்முடைய உலாவியின்மூலமாக நம்மைப் பற்றிய பல விஷயங்களைச் சேகரிக்கும். அதற்கு 'குக்கி'களைப் பயன்படுத்தும். நாம் எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதை நமது ஐ.பி.எண்ணின்மூலம் கண்டுபிடிக்கும். (இது நம் தமிழ் இணைய உஸ்தாதுகள் பலருக்கும் கைவந்த கலை.) நம் நாட்டில் அந்த நேரம் பகலா, இரவா; நாம் எந்த இணைய உலாவியை வைத்துள்ளோம்; நாம் இதற்குமுன் அதே தளத்தில் வேறு எந்தப் பக்கங்களைப் பார்வையிட்டோம்; நமக்கு இதுவரையில் என்னென்ன விளம்பரங்களைக் காண்பித்துள்ளனர் போன்ற பலவற்றையும் கணக்கிலெடுத்து நமக்கு இப்பொழுது தரவேண்டிய விளம்பரத்தைச் சரியாகத் தரும்.

ஒரு குறிப்பிட்ட விளம்பரம் பிரபலமாக உள்ளது - அதாவது அதனைப் பலரும் சொடுக்குகின்றனர் - என்பதை வழங்கி தெரிந்துகொண்டு அதையே அதிகமாகக் காண்பிக்கும். அலுத்துப்போய்விடும் - அதாவது நமக்கே 7-8 தடவை காண்பித்தாகிவிட்டது - என்றால் உடனே அதை மாற்றி வேறொரு விளம்பரத்தைத் தரும்.

மொத்தத்தில் இந்த விளம்பர வழங்கி படா கில்லாடி.

ஆனால் நாளடைவில் இணையத்தளங்கள் பேராசையால் பக்கம் முழுவதையும் விளம்பரங்களாலேயே முழுகடித்தனர். பேனர், ஸ்கைஸ்க்ரேப்பர், பக்கத்தையே முழுகவைக்கும் விளம்பரம், பாப்-அப், டிரான்ஸிஷன் என்று கழுத்தறுத்தனர். அந்த நேரத்தில் கூகிள் வந்தது. படம் காட்டவேண்டியது அவசியமே இல்லை; குறிச்சொல் கொண்டு வெறும் வார்த்தைகளால் ஆன கச்சிதமான விளம்பரங்கள் போதும்; அதுவும்கூட அந்த விளம்பரத்தை ஒருவர் சொடுக்கினால் மட்டும் நீங்கள் காசுகொடுத்தால் போதும் என்று விளம்பரதாரர்களிடம் சொல்ல, அவர்களுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. சிறிது காலம் பேனர் விளம்பரங்கள் திண்டாடத் தொடங்கின.

ஆனால் பேனர் விளம்பரங்கள் - சரியாக உபயோகித்தால் - நிறையப் பலன் தரக்கூடியவை. ஒரு படம், ஆயிரம் சொற்களுக்கு நிகரானது அல்லவா? சிறிது நாள்களாகவே கூகிளேகூட பட விளம்பரங்கள், விடியோ விளம்பரங்கள் என்று போக்கை மாற்றிக்கொண்டது. இப்பொழுது டபுள்கிளிக்குடன் சேர்ந்ததும் கூகிள் இணைய விளம்பர சூப்பர் ஸ்டாராகவும் மாறிவிடும்.

---

ஆனால் இணையம் கிடக்கட்டும், நமது தொலைக்காட்சியிலும்கூட விளம்பரங்கள் மாறக்கூடும். கூகிள், அமெரிக்காவின் எகோஸ்டார் என்னும் DTH நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அதன்படி அவர்களது டி.டி.எச் மேடையில் உள்ள சில சானல்களில், சில விளம்பரங்களை கூகிள் தனது விளம்பர வழங்கி மூலமாக வழங்கும். அமெரிக்காவில் வாடிக்கையாளரின் தகவல்களை ரகசியமாக, பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டியது அவசியம் (Privacy). ஆனால் இந்தியாவில் இதெல்லாம் அவ்வளவாகக் கிடையாது.

நாளையே ஜீ குழுமத்துடன் கூகிள் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஜீயின் டி.டி.எச் மேடைதான் டிஷ் டிவி. இது வழியாகத் தெரியும் ஜீயின் சில சானல்களின் மட்டும் கூகிள் விளம்பரங்களைக் காண்பிக்கக்கூடும்.

உதாரணத்துக்கு சில ஆயிரம் விளம்பரங்களை ஒரு சானல் மூலம் தனியாக அனுப்பி அவற்றை செட் டாப் பாக்ஸில் சேர்த்து வைக்க முடியும். அடுத்து ஒரு சானலில் ஒரு நிகழ்ச்சியின் ஒரு விளம்பர இடைவேளையின்போது உங்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரத்தையும் என் வீட்டில் வேறொரு விளம்பரத்தையும் காண்பிக்கலாம்.

ஜீயின் டிஷ் டிவியை வாங்கும்போது நீங்கள் எந்தப் பகுதியில் இருக்கிறீர்கள் என்று கூறிப் பதிவு செய்துகொள்வதாக வைத்துக்கொள்வோம். ரிலையன்ஸ் ஃபிரெஷ் விளம்பரம் வரவேண்டும். நான் கோபாலபுரத்தில் இருந்தால் என் தொலைக்காட்சியில் அந்த விளம்பரத்தின் கடைசியில் ராயப்பேட்டையில் புதிதாகத் தொடங்க இருக்கும் கடையில் முகவரியைக் காண்பிப்பார்கள். தேனாம்பேட்டையில் உங்கள் வீட்டில் எல்டாம்ஸ் ரோட் ரிலையன்ஸ் ஃபிரெஷ் முகவரியைக் காண்பிக்கலாம்.

அல்லது, சென்னையில் எங்களுக்கு போத்தீஸ் விளம்பரம் காண்பிக்கும்போது திருச்சியில் உங்களுக்கு வேறு ஏதோ ஜவுளிக்கடை விளம்பரத்தைக் காண்பிக்கலாம். பிற நகரங்களுக்கு ஐ.டி.சி பிஸ்கட் விளம்பரம்.

ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் ஒரே நேரத்தில் சில மேட்டுக்குடி வீடுகளுக்கு லக்ஸ் சோப், நடுத்தர வர்க்கத்தவருக்கு ஹமாம் என்று விளம்பரம் செய்யலாம். (ஐயா, ஒரு பேச்சுக்குத்தான், இதற்காக என்னைத் தாக்கவேண்டாம்!)

இப்படி வாடிக்கையாளரை நுணுக்கமான கூறுகளாக்கி ஒவ்வொரு குழுவுக்கும் இன்னின்ன விளம்பரம்தான் என்று முடிவு செய்து அதை மட்டும் காட்டினால் அதன்மூலம் கிடைக்கும் வருமானம் ஜாஸ்தி. சானல்களுக்கும் சந்தோஷம்; விளம்பரதாரருக்கும் மகிழ்ச்சி.

கூகிள் விரைவில் இதனைச் செய்யக்கூடும்.

Sunday, April 15, 2007

சுட்டி டிவி

சன் குழுமம் தமிழில் மூன்று புதிய சானல்களை அறிமுகப்படுத்துகிறது என்று சில நாள்களுக்கு முன் எழுதியிருந்தேன். இப்பொழுது 'சுட்டி டிவி' என்னும் குழந்தைகளுக்கான சானலை சன் விளம்பரப்படுத்த ஆரம்பித்துள்ளது. அதற்கான விளம்பரம் பார்க்க சகிக்கவில்லை என்பது வேறு விஷயம்...

ஸ்டார் விஜய் சானலுக்கு கமல் ரசிகர்கள் எச்சரிக்கை

Warning to Star Vijay?


என்ன ஆச்சு? யாருக்காவது தெரியுமா?

கிரிக்கெட் விரும்பிகளுக்கு

உலகக்கோப்பையும் கிரிக்கின்ஃபோவும்

ஜெட் - சஹாரா: இறுதியாக இணையும்...?

சென்ற ஆண்டின் தொடக்கத்தில் ஜெட் ஏர்வேய்ஸ், ஏர் சஹாரா இரண்டு நிறுவனங்களும் இணைய முயற்சி செய்தன. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த முயற்சி சிக்கலில் மாட்டிக்கொண்டது. பங்குச்சந்தை சரியத்தொடங்க, ஜெட், தான் சஹாராவுக்கு அதிக விலை (ரூ. 2,200 கோடி) கொடுக்க ஒப்புக்கொண்டோமோ என்று தோன்ற, பின்வாங்கியது. சஹாரா இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. பின் ஆர்பிட்ரேஷனுக்குச் சென்றது இந்த வழக்கு. இப்பொழுது ஆர்பிட்ரேட்டர்கள் முன்னிலையில், ஜெட் ரூ. 1,450 கோடிக்கு சஹாராவை வாங்கிக்கொள்ளும் என்று முடிவாகியுள்ளது.

ஆனால் இங்கும் குழப்பம் இருக்கும் என்று தோன்றுகிறது. முந்தைய ஒப்பந்தத்தில் சுமார் ரூ. 550 கோடி அளவுக்கு சஹாராவுக்கு இருந்த கடனை ஜெட் அடைக்கவேண்டாம் என்று இருந்தது. ஆனால் இப்பொழுது அது என்ன ஆகும் என்ற விளக்கம் இல்லை என்கிறார்கள். இந்தக் குழப்பத்தை தற்போதைய ஒப்பந்தத்தின்போது தெளிவாகத் தீர்த்திருக்கலாம். மீண்டும் காலம் கடத்தப்பட்டால் அது இரண்டு நிறுவனங்களுக்குமே கெடுதலாகத்தான் இருக்கும்.

செல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்?

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு துறை தொலைத்தொடர்புத் துறை. இந்தத் துறையில் வருமானம் அடிப்படையில் பெரிய நிறுவனங்கள் - பார்தி, ஹட்ச், ரிலையன்ஸ், பி.எஸ்.என்.எல்/எம்.டி.என்.எல், ஐடியா, டாடா இண்டிகாம். பிறகு ஸ்பைஸ், ஏர்செல் ஆகியவையும் உண்டு. இவற்றில் பார்தி, ரிலையன்ஸ், ஐடியா ஆகியவை பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள். அதனால் அவை பற்றிய தகவல்கள் வெளியே தெரியும். எம்.டி.என்.எல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனம். இதன் தகவல்களும் தெரியும். பி.எஸ்.என்.எல் பங்குச்சந்தையில் இல்லாத ஆனால் அரசு நிறுவனம். எனவே இதன் தகவல்களும் ஒவ்வொரு காலாண்டும் தெரியாவிட்டாலும் ஆண்டிறுதியில் தெரிந்துகொள்ள முடியும்.

ஆனால் ஹட்ச், டாடா, பிற சிறு நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் வெளியே தெரிவது கஷ்டம். தகவல்கள் என்றால்?

அவர்களது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, அவர்களது முழு வருமானம், நிகர லாபம், ஒவ்வொரு வாடிக்கையாளரும் அவர்களுக்கு ஈட்டித்தரும் வருமானம், பங்கு ஒன்றுக்கு அவர்கள் பெரும் லாபம் (ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட்) ஆகியவை.

இதில் GSM வழியாக செல்பேசிச் சேவை அளிக்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, செல்பேசிச் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு COAI மூலமாக வெளியே கிடைக்கிறது. இப்பொழுது TRAI மூலம் இந்த நிறுவனங்களின் வருமானம் பற்றிய தகவலும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் இவர்கள் அரசுக்குச் செலுத்தும் உரிமத் தொகை இவர்களது வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம். எனவே அரசுக்கு இவர்கள் தங்கள் வருமானத்தைச் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

எகனாமிக் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியான இந்தச் செய்தியைப் பாருங்கள். கடந்த காலாண்டில் (Q3 2006) இவர்களது வருமானம்:

நிறுவனம்வருமானம் (கோடி ரூபாய்)
பார்தி ஏர்டெல்5,361.62
ரிலையன்ஸ் இன்ஃபோகாம்3,621.26
ஹட்ச்2,800.53
டாடா இண்டிகாம்1,642.26
ஐடியா1,187.59
ஏர்செல்344.20


அடுத்த சில வருடங்களில் இந்த வரிசை எப்படி மாறும் என்பது சுவாரசியமானது.

Wednesday, April 11, 2007

எழுத்தாளர்கள் தேவை

நண்பர்களே: கிழக்கு பதிப்பகம் வெளியிட இருக்கும் தொழில்நுட்ப விஷயங்கள்மீதான புத்தகங்களை எழுத எழுத்தாளர்கள் தேவைப்படுகின்றனர்.

கீழ்க்கண்ட துறைகளில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்:

1. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, எண்ணெய் சுத்திகரிப்பு
2. குளிர்பதன, குளிர்சாதனக் கருவிகள் (Refrigerator, Air Conditioner)
3. மின்னணுவியல்
4. கட்டுமானத் துறை
5. பயோ-டெக்னாலஜி
6. நானோ-டெக்னாலஜி
7. இரும்பு
8. சிமெண்ட்

இவைதவிர மேலும் பல தொழில்நுட்பங்கள், துறைகள் பற்றியும் புத்தகங்களை வெளியிட உள்ளோம். எனவே மின்னஞ்சல் மூலம் என்னைத் தொடர்புகொண்டு பேசுங்கள். "விஷயம் தெரியும், ஆனால் எழுதுவதுதான்... கொஞ்சம் ஒருமாதிரி" என்றாலும் பயப்படாதீர்கள்! நாங்கள் உதவி செய்கிறோம்.

Saturday, April 07, 2007

SEZ - கொஞ்சம் முன்னேற்றம்

நந்திகிராமக் கலவரத்துக்குப் பிறகு [1, 2, 3], சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடர்பாக சில மாற்றங்கள் வந்துள்ளன.

* மிக முக்கியமானது - அரசு எமினெண்ட் டொமைன் (Eminent Domain) அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலங்களைக் கையகப்படுத்தி அவற்றை தனியார் நிறுவனங்களுக்கு வழங்காது. தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றால் மக்களிடம் நேரடியாகச் சென்று நிலங்களை, அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் இங்கு கவனிக்கப்படவேண்டியது - கம்பெனிகள் நிலம் வைத்துள்ள மக்களை மிரட்டித் துன்புறுத்தாமல் இருக்கவேண்டும். அதற்கு சட்டபூர்வமான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ளவேண்டும்.

* ஏற்கெனவே அரசு தனியாருக்குக் கொடுக்கவென்று கையகப்படுத்தியிருக்கும் நிலங்கள் செல்லாது. SEZ நிறுவனங்கள் மீண்டும் மக்களிடம் நேரடியாகச் சென்று நிலங்களை வாங்கவேண்டியிருக்கும்.

* SEZ பகுதியின் பரப்பளவு 5,000 ஹெக்டேரைவிட அதிகமாக இருக்க முடியாது. (1 ஹெக்டேர் = 2.47 ஏக்கர்.) கலவரத்துக்கு முன்னர் ரிலையன்ஸ் மும்பையில் கட்டவிருந்த SEZ-இன் அளவு 12,000 ஹெக்டேர்! இந்த 5,000 ஹெக்டேர் பரப்பளவே தேவையா அல்லது இன்னமும் குறைக்கவேண்டுமா என்ற கேள்வி எழலாம். அதற்கான அதிகாரத்தை மாநில அரசுகளின் கையில் கொடுத்துள்ளது மத்திய அரசு.

* நிலம் கையகப்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று இயற்றப்படும். ("eGoM has requested the Ministry of Rural Development to reformulate a comprehensive land acquisition Act to address all relevant issues.")

* நிலத்தை விற்போரின் குடும்பத்திலிருந்து ஒருவருக்கு SEZ நிறுவனம் கட்டாயமாக வேலை தரவேண்டும்.

-*-

நிலத்தை விற்க விரும்புபவர்களுக்கு
- பணம்
- வேலை
- அந்த SEZ நிறுவனத்தில் சில பங்குகள்
- மாற்று இடம்
- கல்வி/பயிற்சி
என ஒரு பேக்கேஜாகத் தருமாறு சொல்ல அரசுக்கு அதிகாரம் உள்ளது. நிலத்தை வாங்கும் கம்பெனிகளும் இவை அனைத்தையும் செய்யவேண்டும்.

[SEZ என்பது தேவையா? அது இந்திய மக்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தி, அந்த நிலத்தை அந்நிய நாடாக அறிவிக்கும் ஒரு மறுகாலனியாதிக்கத் திட்டமா? SEZ ஏதாவது ஒரு வகையில் நம் நாட்டுக்கு உதவுமா? SEZ மூலம் எக்கச்சக்கமான வரி ஏய்ப்பு நடக்குமா? ஆகியவை பற்றிய தீவிரமான விவாதம் தேவை.]

சன் குழுமம் கொண்டுவரும் புதுச் சேவைகள்

சன் தொலைக்காட்சிக் குழுமம் வணிகத்துறையில் கூர்ந்து கவனிக்கவேண்டிய ஒரு குழுமம். தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள், வார இதழ், கேபிள் சேவை, சீக்கிரத்தில் செயற்கைக்கோள் மூலமான வீட்டுத் தொலைக்காட்சி சேவை (DTH) என்று மீடியா துறையில் முழுமையாக இருக்கிறார்கள். இவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க இரண்டே இரண்டு குழுமங்கள்தான் இந்திய அளவில் உள்ளன. சுபாஷ் சந்திராவின் ஸீ (Zee), ரூபர்ட் மர்டாக்கின் ஸ்டார். டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் ஓரளவுக்கு இந்தத் திசையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. மேலும் பலரும் ஆசைப்படுகிறார்கள்.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சன் டிவி லிமிடெட் இப்பொழுது உதயா, ஜெமினி ஆகியவையும் அடங்கியது. (இதைப்பற்றிய என் முந்தைய பதிவு.)

தென்னிந்திய மொழிகள் நான்கில் ஒவ்வொன்றிலும் நான்கு சானல்களை நடத்துகிறார்கள்:- ஒன்று செய்திக்காக, ஒன்று பலதுறை கேளிக்கை, ஒன்று திரைப்படங்கள் தூக்கலான கேளிக்கை, ஒன்று இண்டெராக்டிவ் சினிமா பாடல்கள் + வாசகர்களிடம் மொக்கை போடுவது.

இப்பொழுது தமிழில் மூன்று புது சானல்களை ஆரம்பிக்கப்போவதாக செய்தி வந்துள்ளது. தமிழைத் தொடர்ந்து பிற தென்னிந்திய மொழிகளுக்கும் செல்லுமாம். ஒன்று: குழந்தைகளுக்கு என்று பிரத்யேக சானல். இரண்டு: விளையாட்டுக்கு என்று, மூன்று: டாகுமெண்டரி - ஆவணப்படங்கள் + அறிவுசார்ந்த விஷயங்கள்.

ஆனால் இந்த மூன்றுமே எளிதானவையல்ல. சன் குழுமம் அடிப்படையில் content உருவாக்குவதில் கவனம் செலுத்தியதில்லை. யாரோ உருவாக்கி வைத்திருப்பதை விலைக்கு வாங்கி அவற்றைக் காண்பித்து விளம்பர வருமானம் பெறுவதில்தான் அவர்களது தனித்துவம் உள்ளது. திரைப்படங்கள் அனைத்தும் அந்த வகையைச் சார்ந்தவையே. அதேபோலத்தான் தொலைக்காட்சித் தொடர்களும். செய்தி என்பது தானே உருவாவது.

ஆனால் குழந்தைகளுக்கான சானலுக்குத் தேவையான கண்டெண்ட் இப்பொழுது தமிழில் இல்லை. கார்ட்டூன் நெட்வொர்க் போன்றவை தங்களது பல நிகழ்ச்சிகளுக்கு தமிழில் குரல் கொடுக்கின்றன. கா.நெ அளவுக்குத் தரமான குழந்தைகள் நிகழ்ச்சியை சன் குழுமம் தானே தயாரிக்கவேண்டும். ஆனால் இந்தியாவில் அதிகம் செலவுசெய்து இந்தியச் சந்தைக்கென அனிமேஷன் படங்களை யாரும் தயார் செய்வதில்லை. இதுவரை செய்ததில்லை. ஹிந்தி/ஆங்கில மொழிக்கே இதுவரை 'ஸீ' அல்லது ஸ்டார் இதனைச் செய்ததில்லை.

இந்தக் குழந்தைகள் சானல் ஒருவேளை போகோ போன்று இருக்கலாம். நிறைய சீரியல்கள் குழந்தைகளுக்கு விருப்பமானதாகவும், சில லைவ் நிகழ்ச்சிகள் குழந்தைகள் பங்கேற்பதுபோலவும், சில வெளிநாட்டு அனிமேஷன் படங்கள் தமிழில் 'டப்' செய்யப்பட்டும், குழந்தைகளுக்கான கல்வியும் விளையாட்டும் கலந்த சில நிகழ்ச்சிகளும் இருக்கலாம். இதைச் செயல்படுத்துவது அவ்வளவு கடினமாக இருக்காது என்று நினைக்கிறேன்.

விளையாட்டு சானல்... வாய்ப்பே இல்லை. கிரிக்கெட் இல்லாத விளையாட்டு சானல் இந்தியாவில் இதுவரை எடுபட்டதே இல்லை. கலாநிதி மாறன் என்ன செய்கிறார் என்று பார்க்கவேண்டும்.

டாகுமெண்டரி... நன்றாகச் செய்யலாம். ஆனால் அதிகச் செலவும் குறைந்த வருமானமும் வரக்கூடிய சானல் இது. இதைச் செய்ய கருத்தளவில் விருப்பம் வேண்டும். சன் குழுமத்தின் EBIDTA 50%க்கும் மேல்! ஆனால் விளையாட்டு, ஆவணப்படங்கள் போன்று வந்தால் நிச்சயம் EBIDTA குறையும். அதற்கு விருப்பம் இருந்தால் மட்டுமே இதில் இறங்கலாம்.

-*-

DTH துறையில் வேறு நிறையச் சண்டைகள் போடவேண்டியுள்ளன. அதனால் எவ்வளவு திறமையாகச் செயலாற்றப்போகிறார்கள் என்று அடுத்த இரண்டு காலாண்டுகளில் பார்ப்போம்.

Friday, April 06, 2007

சென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்

மக்கள் நெருக்கம் அதிகமான பெருநகரங்களில் வீடு, நிலம் விலைகள் கிடுகிடுவென ஏறிக்கொண்டிருக்கின்றன. இதன் விளைவாகப் பொதுமக்கள் பெரும் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

நான் ரியல் எஸ்டேட் விலைகளை அதிகமாக கவனித்து வருபவன் அல்லன். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவனும் அல்லன். கடந்த சில தினங்களாக மேலோட்டமாகப் பார்ப்பதிலிருந்து எழுதுகிறேன்.

சென்னையில் வாழ்விட நெருக்கடியை ஏற்படுத்துவதில் பிரதானமானது இங்கு தமிழக மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்து சேரும் மக்கள்தான் என்று நினைத்திருந்தேன். இதே பிரச்னைதான் பெங்களூரு, மும்பை, தில்லி போன்ற பிற நகரங்களிலும் என்றும் நினைத்திருந்தேன். ஆனால் அது உண்மையான காரணம் அல்ல என்று நினைக்கிறேன்.

1. திடீரென, பெரும் வணிக நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஃபண்ட்கள் ஆகியவை அதிகமான அளவில் நிலத்தை வாங்க முற்படுகின்றன. மும்பை இந்தியாவின் நிதி அதிகார மையமாக இருந்ததால் அங்கு நடந்தது. பெங்களூரு தகவல் தொழில்நுட்ப நகரமாக ஆனபோது நடந்தது. இப்பொழுது சென்னையில் நடக்கிறது.

பல புதிய நிறுவனங்களுக்கு பல லட்சம் சதுர அடி அளவில் அலுவலகங்கள் தேவைப்படுகின்றன. இந்த அலுவலகம் சேர்ந்தாற்போல் இருக்கவேண்டும். எனவே விலை சற்று அதிகமானாலும் காசு கொடுத்த வாங்க இவர்கள் தயங்குவதில்லை. நிறுவனத்தின் மொத்தச் செலவு, வருமானம், லாபம் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்தச் செலவு, கவலையைத் தருவதாக இல்லை. எனவே எத்தனை கோடி ஆனாலும் ஆகட்டும் என்று வாங்குகிறார்கள். இது சமச்சீராக இருக்கும் டிமாண்ட் - சப்ளையைக் கலைக்கிறது. உடனடியாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலங்களின் சந்தை விலை ஏறுகிறது.

ஏற்கெனவே இருக்கும் வணிகப் பகுதிகளில் (தி. நகர் பாண்டி பஜார் போன்ற பகுதிகளில்) நெருக்கடி அதிகமாக இருப்பதால் புதிய வணிகப் பகுதிகள் திடீரென்று உருவாகின்றன. கதீட்ரல் சாலை அப்படித்தான்... கடந்த ஐந்து வருடங்களில் கதீட்ரல் சாலையின் இருமருங்கிலும் கொஞ்சம் கொஞ்சமாக வணிக நிறுவனங்கள் ஆக்ரமித்து வருகின்றன. இதனால் இதற்கு அருகில் உள்ள பகுதிகளில் மக்கள் வசிப்பிடங்களும் விலையில் வெகுவாக ஏறிவிடுகின்றன.

2. நகரின் நடுவில் இருக்கும் பெரு நிறுவனங்களில் வேலை செய்வோர், தமது வசிப்பிடங்கள் நகருக்கு நடுவிலேயே இருக்குமாறு தேடுகிறார்கள். ஏனெனில் சென்னையில் மெட்ரோ போக்குவரத்து மோசமாக உள்ளது. இந்த எக்சிகியூடிவ்கள் பஸ்ஸில் பயணம் செய்யப்போவதில்லை. நல்ல மெட்ரோ ரயில் இருந்தால் செய்யலாம். ஆனால் இல்லை என்பதால் கார், பைக் பயணம்தான். சாலையின் மோசமான போக்குவரத்து நெருக்கடியால் தொலை தூரத்தில் வீடுகளை வைத்துக்கொள்ள இவர்கள் விரும்புவதில்லை. அதனால் சபர்பன் - புறநகர் வாசத்தை விடுத்து ஊருக்குள் வசிக்க விரும்புகிறார்கள். அவர்களது வருமானம் அதிகமாக இருப்பதால் விலை ஏற ஏற, சிக்கலாக இருந்தாலும் பரவாயில்லை என்று பெரும் கடனில் வீட்டை வாங்குகிறார்கள், அல்லது அதிக வாடகையில் வசிக்கிறார்கள்.

3. அடுத்து ஸ்பெகுலேட்டர்கள். கடந்த ஐந்து வருடங்களில் சென்னையில் வீட்டு/நில விலைகள் ஜுரம் போல ஏறுவதைக் கவனிக்கிறார்கள். சரி, எதிலோ முதலீடு செய்வதற்கு பதில் இதில் செய்வோம் என்று நம்பிக்கை கொள்கிறார்கள். என்.ஆர்.ஐக்கள் தங்களது டாலர்களை இந்திய ரியல் எஸ்டேட்டில் போடுகிறார்கள். அவர்கள் இந்த வீடுகளில் வசிக்கப் போவதில்லை. பலர் தமது வீடுகளில் யாரையும் குடிவைப்பதும் இல்லை. இதனால் நகரின் நடுவில் பல வீடுகள் சும்மா பூட்டியே கிடக்கின்றன. இதுவும் நில, வீடு விலைகள் மிக அதிகமாக ஏற வகை செய்கின்றன.

இவ்வாறு விலை ஏறுவதால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். எப்படி என்று பார்ப்போம்:

1. குறைந்த வருமானம் உடையவர்களின் குடியிருப்புகள் கலைக்கப்பட்டு அவர்கள் ஊரின் மையத்தைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். நான் சொல்வது lower middle class, middle class வகையைச் சேர்ந்தவர்களை. மாத வருமானம் உண்டு. ஆனால் அது குடும்பத்துக்கு மாதம் ரூ. 7,000 முதல் ரூ. 25,000 வரை மட்டுமே இருக்கும். வேறு பூர்விகச் சொத்து ஏதும் இல்லாத நிலையில், இவர்களால் இப்போதைக்கு சென்னையின் நடுவில் எந்த வீட்டையும் வாங்க முடியாது. வாடகையும் எக்கச்சக்கமாக ஏறிவிடுகிறது.

எனவே, இவர்கள் புறநகரில் மட்டுமே வசிக்க வேண்டியுள்ளது. அங்கும் இவர்கள் போவதால் விலை ஏற்றம் அதிகமாகி, பக்கத்து கிராமங்களில் வாழும் உள்ளூர் மக்கள் கஷ்டப்படவேண்டியிருக்கும்.

2. அடுத்ததாக, மிகக் குறைந்த வருமானம் பெறும் ஏழை மக்கள். இவர்கள் பெரும்பாலும் நகருக்கு நடுவில் மிகக்குறுகிய குடிசை வீடுகளில் வசிக்கின்றனர். இதில் பலர் பட்டா இல்லாத அரசு நிலங்களில் வசிக்கலாம். இந்த நிலங்களைக் காலி செய்து இவர்களை ஊருக்கு வெளியே துரத்த நில மாஃபியாக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் முயற்சி செய்கிறார்கள். ஏனெனில் நிலத்தில் அவ்வளவு பணம் உள்ளது. ஆனால் இந்த மக்களது வாழ்வாதாரமே நகருக்கு மையத்தில் இருந்து சிறு வேலைகளைச் செய்வது. இதில் பலர் மாத வருமானம் ரூ. 3,000க்கு ஏதேனும் நிறுவனத்தில் வேலையில் இருக்கலாம். வேறு சிலர் காய்கறி விற்கலாம். தெருவோரம் டீக்கடை நடத்தலாம். சிலர் அண்டை வீடுகளில் வீட்டுவேலை (பெருக்கி, மெழுகி, பாத்திரம் தேய்த்து...) செய்யலாம். இவர்கள் அனைவரும் ஊருக்கு மையத்தில் இருந்தால்தான் சம்பாதிக்க முடியும்.

மீனவர்கள் கடலை ஒட்டி இருந்தால்தான் கடலுக்குப் போய் மீன் பிடிக்க முடியும். இவர்களை எப்படியாவது தொலைவில் தள்ளிவிட்டு அந்த நிலங்களைக் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தி, வளர்த்தெடுத்து நல்ல விலைக்குத் தள்ளிவிட மாஃபியாக்கள் முயற்சி செய்வர். இதெல்லாம் நியூ யார்க் நகரத்திலிருந்து பல்வேறு நகரங்களில் நடந்ததுதான்.

3. Upper middle class-ஐச் சேர்ந்தவர்களும்கூட மிக அதிகமாகக் கடன் வாங்கி வீடுகளை வாங்கவேண்டிவரும். உதாரணத்துக்கு நான் வசிக்கும் கோபாலபுரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். 2001-ல் அபார்ட்மெண்ட் வாங்க, சதுர அடிக்கு ரூ. 2,000 - 2,500 இருந்தது. சுமார் 1,000 சதுர அடி கொண்ட அபார்ட்மெண்ட் வாங்க ரூ. 25 லட்சம் ஆகும். இதில் சுமார் ரூ. 20 லட்சம் கடன் என்று வைத்துக்கொள்வோம் சுமார் 10% வீட்டுக்கடன் விகிதம், கடன் 15 வருடங்களுக்கு என்றால், மாதம் கட்டவேண்டியது ரூ. 21,500.

மாதம் சுமார் ரூ. 50,000 வாங்குபவர் வரி போக, வீட்டுக்கடன் போக வீட்டுக்கு ரூ. 10,000 - 15,000 எடுத்துக்கொண்டு போகலாம். பிற சேமிப்புகள் செய்வது கஷ்டம்.

ஆனால் இன்றோ சதுர அடி ரூ. 5,000க்கு மேல் என்கிறார்கள். அப்ப்டியானால் 1,000 சதுர அடி கொண்ட அபார்ட்மெண்டின் விலை ரூ. 50 லட்சம்!

ஐந்து வருடத்துக்கு முன்னர் ரூ. 25 லட்சத்துக்குமேல் வீட்டுக்கடன் கொடுக்க வங்கிகள் யோசித்தன. இப்பொழுது நிறைய மாறிவிட்டது போலும்! ரூ. 50 லட்சம் உள்ள வீட்டை வாங்க ஒருவர் எவ்வளவு கடன் வாங்கவேண்டியிருக்கும்?

மாதம் ரூ. 75,000 சம்பளம் பெறும் சாஃப்ட்வேர் நிறுவன உயர்மட்ட ஊழியர் ஒருவரை எடுத்துக்கொள்வோம். வரி போக, அவருக்கு டேக் ஹோம் மாதம் ரூ. 60,000 கிடைக்கும். அவர் ரூ. 50 லட்சம் வீட்டை வாங்க, குறைந்தது ரூ. 40 லட்சமாவது கடன் வாங்கவேண்டும். 20 வருடக் கடனாக இருந்தாலும், இதற்குக் கட்டவேண்டிய மாதத்தொகை ரூ. 38,600. கடன் போக அவருக்குக் கையில் கிடைக்கும் பணம் வெறும் ரூ. 21,400 மட்டுமே. இதில் பெட்ரோல் செலவு, சாப்பாட்டுச் செலவு என்று போனால் சேமிப்பு குறைவுதான்.

-*-

மொத்தத்தில் கடுமையாக ஏறும் ரியல் எஸ்டேட் விலைகள் மக்கள் அனைவரையும் பாதிக்கின்றன. இதைத் தடுக்க அரசு பல முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

1. இந்தியவாசி ஒருவர் அதிகபட்சம் இரண்டு வீடுகளுக்குமேல் வாங்கக்கூடாது என்று தடை விதிக்கவேண்டும்.

2. முதல் வீட்டை வாங்குபவருக்கு 4% முத்திரைத்தாள் வரி என்றும் முதல் வீட்டை விற்காமல் இரண்டாம் வீட்டை வாங்குபவருக்கு 15% முத்திரைத்தாள் வரி என்றும் செய்யலாம். ஆனால் இரண்டாம் வீட்டை வாங்கியபின் முதல் வீட்டை விற்கிறார் என்றால் அப்பொழுது 11% ஸ்டாம்ப் டியூட்டியைத் திரும்பப் பெறுமாறு செய்யலாம்.

3. நிலத்தில் ஸ்பெகுலேட் செய்யும் என்.ஆர்.ஐகளை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம். இந்தியாவில் ஒரு வீட்டுக்குமேல் அவர்கள் முதலீடு செய்ய முடியாது என்று சட்டம் கொண்டுவரலாம்.

4. ரியல் எஸ்டேட் ஃபண்ட்கள் போன்றவை இயங்குவதைத் தடை செய்யலாம்.

5. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளதுபோல நிலத்தை வாங்கி சும்மா போட்டிருப்பவர்களுக்கு (அது விலை ஏறியதும் விற்கலாம்... என்றிருப்பவர்கள்) தனியாக வரி விதிக்கலாம்.

6. Zoning regulations-ஐக் கடுமையாக்க வேண்டும். எந்தெந்த இடங்களில் வணிகக் கட்டடங்கள் வரக்கூடாது, எங்கு மட்டும்தான் அவை இருக்கவேண்டும் என்று மிகக் கடுமையான சட்ட திட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்தவேண்டும்.

7. சென்னை மெட்ரோ திட்டத்தை உடனடியாகக் கொண்டுவந்து சென்னையின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்குமாறு செய்யவேண்டும். இதற்கு எப்படியும் 6-8 வருடங்கள் ஆகும். ஆனால் நாம் இன்னமும் செயல்படுத்தவே ஆரம்பிக்கவில்லை. இது ஏற்பட்டால் சென்னையின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் 30-45 நிமிடத்தில் வந்துவிட்டுப் போகமுடியும். அதனால் தெருக்களில் போக்குவரத்து நெரிசல் பெரும்பாலும் குறையும். கொஞ்சம் கொஞ்சமாக பஸ்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். தெருக்களில் கார்கள், பைக்கள் குறையும். சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் வெகுவாகக் குறைக்கலாம்.

அப்பொழுது பெரும்பான்மை மக்கள் ஊருக்கு வெளியிலேயே இருக்க விரும்புவார்கள். அதனால் தானாகவே நகரின் நெருக்கடி குறைந்துவிடும், விலையும் வெகுவாகக் குறைந்துவிடும்.

Wednesday, April 04, 2007

உலகக்கோப்பை - 3

கிரிக்கெட்டில் தோற்றால் உயிரே போனதுபோல அத்தனை தொலைக்காட்சி நிலையங்களும் செய்தித்தாள்களும் நெஞ்சில் அடித்துக்கொள்கின்றன.

இயான் சாப்பல் டெண்டுல்கர் ஓய்வுபெறவேண்டும் என்கிறார். கும்ப்ளே இயான் சாப்பல் வாயை மூடிக்கொள்ளவேண்டும் என்கிறார். கிரேக் சாப்பல் கிரிக்கெட் வாரியத்துக்கு எழுதி அனுப்பியதாக ஏகப்பட்ட விஷயங்கள் வெளியாகியுள்ளன. அதில் டெண்டுல்கர் முதலான சீனியர் வீரர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக வதந்திகள் தெரிவிக்கின்றன. உடனே டெண்டுல்கர் சோகக்கண்ணீர் வடிக்கிறார். என் வாழ்நாளில் இதுவரை என்னை யாரும் இப்படிச் சொன்னதில்லை என்கிறார்.

சரி, நாமும் நமக்குத் தோன்றியதை எழுதிவிட்டுப் போவோமே!

1. டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகவேண்டும். இனி டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடினால் போதும். (அதற்கும் காலக்கெடு வைத்து நகரவேண்டும்...)

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குமுன், ஜூலை 2004-ல் டெண்டுல்கரின் ஆட்டத்தில் அழகு குறைந்துவிட்டது, ஆனால் ரன் எடுக்கும் திறன் குறையவில்லை என்று எழுதியிருந்தேன். இப்பொழுது ஒருநாள் போட்டிகளில் ரன் எடுக்கும் திறனும் குறைந்துவிட்டது. இனியும் தொடர்ந்து இருந்தால் அவமானம்தான்.

ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அடுத்த ஒரு வருடமாவது தொடர்ந்து விளையாடலாம். விளைவைப் பொருத்து, தொடரலாமா, வேண்டாமா என்று அவரே முடிவுசெய்துகொள்ளலாம்.

2. கிரெக் சாப்பல் தானாகவே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகவேண்டும். இது இந்தியாவின் தோல்வியைக் காரணமாக வைத்து அல்ல. அவருக்கு இருக்கும் ஆதரவு பலவேறு திசைகளிலும் குறைந்துவிட்டது. எனவே எந்தச் சின்னத் தவறுக்கும் அவரது கழுத்தை வெட்ட எதிரிகள் முனைவார்கள். இது தேவையற்ற டென்ஷன். இதற்குபதில் கொஞ்சம் புரொஃபஷனலான கிரிக்கெட் வாரியத்துக்கு வேலை செய்யப்போகலாம்.

3. ராஹுல் திராவிட் - தொடரவேண்டும். இளைஞர்களை வழிநடத்த திராவிட் இன்னமும் மூன்று ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக இருக்கவேண்டும்.

4. கங்குலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவேண்டும். ஒருநாள் போட்டியில் அவருக்கான நேரம் இன்னமும் ஒரு வருடம் மட்டுமே என்று நினைக்கிறேன்.

5. கும்ப்ளே அடுத்த ஒரு வருடத்துடன் டெஸ்ட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறவேண்டும்.

இவை அனைத்தையும் செய்தாலும் இந்திய அணி அடுத்த சில வருடங்கள் மேல் நிலைக்கு (முதல் அல்லது இரண்டாம் இடம்) வரமுடியாது. இந்திய கிரிக்கெட்டில் எக்கச்சக்கமான பணம் இருக்கிறது. அது கொஞ்சம் குறையவேண்டும். கிரிக்கெட் வாரியம் மிக மோசமான அரசியல் நடத்தும் களமாக இருக்கிறது. அது மாறவேண்டும். அதற்கெல்லாம் பத்தாண்டுகள் அல்லது அதற்கும் மேல் ஆகும். அதுவரையில் பிரச்னைகள் இருந்துகொண்டுதான் இருக்கும்.

ரஞ்சி அணி அளவில் விளையாட்டு வீரர்கள் தேர்வில் எக்கச்சக்கமான குழப்பங்கள், தில்லுமுல்லுகள் உள்ளன. ரஞ்சி அணித் தேர்வாளர்கள், முன்னுக்கு வரும் இளைஞர்களை பழிவாங்குவது, காசு வாங்கிக்கொண்டு திறமையில்லாதவர்களைத் தேர்ந்தெடுப்பது, சில வீரர்களைத் துரத்தி துரத்தி அடித்து வேறு மாநிலங்களுக்கு அனுப்பி ஆட்டத்திலிருந்தே ஒழித்துக்கட்டுவது, ஜூனியர் கிரிக்கெட்டில் (U-19, U-16, U-14) ஊழல் என்று அடிப்படையிலேயே ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன.

இவற்றை ஒரேயடியாகத் தீர்க்க முடியாது. ஆனால் கீழ்க்கண்ட வழிகளைச் செய்யவேண்டும்.

1. பிசிசிஐ ஆண்டாண்டுக்குத் தேர்தல்களை நடத்தி தால்மியாவும் ஷரத் பவாரும் கத்திச் சண்டை போட்டுவிட்டுப் போகட்டும். ஆனால் கிரிக்கெட் வாரியத்துக்கு என்று தலைமைச் செயல் அலுவலர் (CEO), பிற முழுநேரப் பணியாளர்கள் ஆகியோரை புரொஃபஷனல்களாகத் தேர்வு செய்யவேண்டும்.

2. இதே பாணியைப் பின்பற்றி ஒவ்வொரு ரஞ்சி அணியும் தொழில்முறை நிர்வாகிகளைப் பணியில் அமர்த்தவேண்டும்.

3. கிரிக்கெட் வாரியம் தான் சம்பாதிக்கும் கணக்கற்ற பணத்தைவைத்து என்ன செய்கிறது என்பதை பொதுத் தணிக்கை மூலம் மக்களுக்குச் சொல்லவேண்டும். தேவைப்படும்பொதெல்லாம் கிரிக்கெட் வாரியம் தன்னை ஒரு தனியார் அமைப்பு என்றும், பிற நேரங்களில் தான்தான் இந்திய நாட்டின் கிரிக்கெட் விளையாட்டின் ஏகபோகப் பிரதிநிதி என்றும் மாற்றி மாற்றிச் சொல்கிறது. இந்தியக் கிரிக்கெட் வாரியம், தன்னாட்சி பெற்ற ஆனால் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அமைப்பு என்றும், அதன் வரவு செலவுக் கணக்குகள் கட்டாயத் தணிக்கைக்கு உட்பட்டது என்றும் சட்டம் இயற்ற வேண்டும்.

4. கிரிக்கெட் வாரியத்தின் உபயோகப்படாத உபரிப் பணத்தை அரசு கையகப்படுத்தி பிற விளையாட்டுகளின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தவேண்டும்.

5. கிரிக்கெட் அணித் தேர்வில் நிறைய முன்னேற்றங்களைக் கொண்டுவரலாம். ஆனால் ஒழுங்கான நிர்வாகிகளைக் கொண்டுவந்தால் இது தானாகவே நடக்கும்.