நேற்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தின் ஆண்டிறுதிப் பொதுக்கூட்டமும், அடுத்த இரு ஆண்டுகளுக்கான அலுவலர் பதவிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது.
தேர்தலில் செயற்குழு உறுப்பினர் (தமிழ்) பதவிக்காக நின்று நான் தோற்றுப்போனேன். மொத்த உறுப்பினர்கள் 383. வாக்களிக்க வந்தவர்கள் 316. வாக்குச்சீட்டுகளை வாங்கி வாக்களித்தவர்கள் 307. எனக்குக் கிடைத்த வாக்குகள் 91. (என்னைத் தவிர 90 பேர் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள்!)
கடந்த முறை செயலராக இருந்த ஆர்.எஸ்.சண்முகம் உருவாக்கிய அணி, இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளது. கடந்த முறை தலைவராக இருந்த காந்தி கண்ணதாசன் ஆதரித்த அணி முற்றிலுமாகத் தோற்றுள்ளது. சுயேச்சையாக நின்ற மூன்று பேர் (என்னையும் சேர்த்து) தோல்வியுற்றோம் என்பது தெளிவு.
ஜெயித்தவர்கள் விவரம் வருமாறு:
தலைவர்: சொக்கலிங்கம் (கவிதா பதிப்பகம்)
துணைத்தலைவர் (தமிழ்): சண்முகம் (செண்பகா)
துணைத்தலைவர் (ஆங்கிலம்): சுப்பிரமணியன் (டைகர் புக்ஸ்)
செயலர்: இராம.லட்சுமணன் (உமா பதிப்பகம்)
இணைச்செயலர்: சண்முகநாதன் (என்.சி.பி.எச்)
பொருளாளர்: ஷாஜஹான் (யுனிவெர்சல்)
செயற்குழு (தமிழ்): வைரவன், நாகராஜன், முருகன், வெங்கடாசலம்
செயற்குழு (ஆங்கிலம்): அஷோக்குமார், சிவராமன், ஜெயக்குமார், டி.எஸ்.சீனிவாசன்
நிரந்தரப் புத்தகக் கண்காட்சி உறுப்பினர்கள் (தமிழ்): சுரேஷ்குமார், பாலகிருஷ்ணன்
***
தேர்தல் நடைபெற்றதே தவிர, சென்ற ஆண்டு கணக்கறிக்கை, ஆண்டறிக்கை ஆகியவற்றில் பல குளறுபடிகள், எண்கள் தவறாக அச்சானது, தலைவர், செயலர் அறிக்கைகளில் பல இடங்கள் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்புடையதாக இல்லாதது ஆகிய காரணங்களால் அவை எவையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மாறாக, சென்ற இரு ஆண்டுகளில் இருந்த அலுவலர்களே, அவற்றை அடுத்த மாதத்துக்குள் சரி செய்து மீண்டும் பொதுக்குழுவில் வைக்குமாறு பணிக்கப்பட்டனர். அப்போதுதான் பொதுக்குழு அவற்றை அங்கீகரிக்கும்.
ஆண்டிறுதி அறிக்கைப் புத்தகம் உண்மையில் படு மோசமாகத் தயாரிக்கப்பட்ட ஒன்று. புத்தகப் பதிப்புத்துறையில் ஈடுபட்டிருக்கும் ஒரு சங்கம், இதுபோன்ற ஓர் அறிக்கையைத் தயாரித்திருப்பது வெட்கக்கேடான செயல் என்று சிலர் பொதுக்குழுவில் பேசினர். (உண்மைதான்!) அவ்வளவு மெய்ப்புப் பிழைகள், பெயர்களை, நிறுவனங்களை எழுதுவதில் பிழைகள், (இலக்கணப் பிழைகளை விட்டுவிடலாம்), பாதி விஷயங்கள் தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல், எண்கள் பலவற்றிலும் மெய்ப்புப் பிழைகள் என்று இருந்தன. அடுத்த மாதத்துக்குள் இவை அனைத்தும் களையப்பட்டு, சரியான, நேர்த்தியான அறிக்கை உறுப்பினர்கள் கைகளுக்குக் கிடைத்தால், அது மாபெரும் அதிசயமே.
பார்ப்போம்.
(இனி வரும் நாள்களில் பபாஸி அமைப்பு பற்றியும், அதில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் பற்றியும் எழுத உள்ளேன்.)
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
2 hours ago