எனது முந்தைய பதிவில் நகுல் இவ்வாறு கேட்டிருந்தார்.
"Can you read this week's "O Pak-kangal" article by Gyani in Ananda Vikatan..
His doubts and thoughts also looks like 100% Valid!
Can u read it and share your thoughts?"
எனவே ஓ பக்கங்களைப் படித்து ஞாநி என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தேன். ஞாநி 123 ஒப்பந்தம், ஹைட் சட்டம் என்று எதையும் படிக்கவில்லை என்று நன்றாகத் தெரிகிறது. ஞாநி, இந்த ஒப்பந்தம் மோசமானது என்பதற்குச் சொல்லும் காரணங்களைப் பார்ப்போம்:
ஞாநி: அணு மின்சாரம் தயாரிக்கும் எல்லா உலைகளையும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் நேரடிக் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். இதன்படி இந்தியாவின் மொத்த 22 உலைகளில் 14-ஐ கண்காணிப்புக்கு உட்படுத்த இந்தியா சம்மதித்திருக்கிறது.
பத்ரி: இதில் தவறு எதுவுமே இல்லை. இந்தியா ஏகப்பட்ட யுரேனியத்தைத் தானே தயாரித்துத் தன் கையில் வைத்திருந்தால் அதனை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் யுரேனியம் இல்லை என்றுதானே அடுத்தவனிடம் அதைக் கேட்கப் போகிறோம்? அப்படிப் பெறும் யுரேனியத்தை மின்சாரம் தயாரிக்க மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொள்கிறது. அது ஓப்பந்தத்தின் ஒரு ஷரத்து. இந்த யுரேனியத்தை இந்தியா திருட்டுத்தனமாக வேறு காரியத்துக்கு எடுத்துக்கொள்ளாது என்பதை யார் கண்காணிப்பது? அங்குதான்
IAEA வருகிறது.
அவர்களது இணையத்தளத்தில் அவர்கள் என்னவிதமான வேலையைச் செய்கிறார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார்கள்: "[IAEA] Inspectors work to verify that safeguarded nuclear material and activities are not used for military purposes."
எனவே அமெரிக்கா இதை எதிர்பார்ப்பது தவறில்லை. இந்தியா ஏற்றுக்கொண்டதிலும் தவறில்லை.
ஞாநி: அணு மின்சார உலைகளில் பயன்படுத்திய எரிபொருளை மறுபயன்பாட்டுக்குச் சுத்திகரிப்பதற்கு அதி நவீன தனி உலை ஏற்படுத்தி, அதை அமெரிக்க, சர்வதேச அணுசக்தி அமைப்புகளின் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். இதற்கும் இந்தியா சம்மதித்துவிட்டது.
பத்ரி: ஞாநி சிறு விஷமத்தில் ஈடுபடுகிறார். ஒப்பந்தம் IAEA கட்டுப்பாடு என்றுதான் சொல்கிறது. ஞாநி அதை "அமெரிக்க, சர்வதேச அணுசக்தி அமைப்புகளின் கண்காணிப்புக்கு" என்று மாற்றுகிறார். ஒப்பந்தம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்: "India will establish a new national reprocessing facility dedicated to reprocessing safeguarded nuclear material under IAEA safeguards and the Parties will agree on arrangements and procedures under which such reprocessing or other alteration in form or content will take place in this new facility."
ஆக IAEA safeguards மட்டும்தான் தேவை. அதுவும் மேலே ஏற்கெனவே சொன்னதுதான்.
ஞாநி: அணு மின்சாரத் தயாரிப்புக்குப் பயன்படக்கூடிய இயந்திரங்கள் சில அணுகுண்டுத் தயாரிப்பிலும் பயன்படுமானால், அவற்றை அமெரிக்காவோ, இதர நாடுகளோ இந்தியாவுக்குத் தரக்கூடாது என்பது முக்கியமான ஷரத்து.
மறுபடியும் இந்தியா அணுகுண்டுச் சோதனை நடத்தினால், ஒப்பந்தம் ரத்தாகிவிடும். கொடுத்தவற்றையெல்லாம் அமெரிக்கா திரும்ப எடுத்துக்கொள்ளும். அதே சமயம், இந்தியா இந்த ஒப்பந்தத்தின்கீழ் தன் உலைகளைச் சர்வதேச அமைப்பின் கண்காணிப்புக்கு உட்படுத்தியது மட்டும் ரத்தாகாது. ஒப்பந்தம் ரத்தானும், கண்காணிப்பு என்றென்றும் தொடரும். இதற்கும் இந்தியா சார்பாக மன்மோகன் சிங் சம்மதித்திருக்கிறார்.
பத்ரி: இந்த ஒப்பந்தம் 'அமைதிப்பணி'களுக்கானது. எனவே இந்தியா அணுகுண்டு தயாரிக்க இந்த ஒப்பந்தத்தின்மூலம் பெறும் இயந்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று அமெரிக்கா கேட்டுக்கொள்வது நியாயமானது.
அடுத்து IAEA உடனான ஒப்பந்தம். முதலில் 123 வாசகங்களைப் பார்ப்போம்.
"... an India-specific safeguards agreement will be negotiated between India and the IAEA providing for safeguards to guard against withdrawal of safeguarded nuclear material from civilian use at any time as well as providing for corrective measures that India may take to ensure uninterrupted operation of its civilian nuclear reactors in the event of disruption of foreign fuel supplies. Taking this into account, India will place its civilian nuclear facilities under India-specific safeguards in perpetuity and negotiate an appropriate safeguards agreement to this end with the IAEA."
IAEA உடனான ஒப்பந்தம் "in perpetuity" - அதாவது எப்பொழுதும், காலம் காலத்துக்கும் இருக்கக்கூடியது, என்பது உண்மைதான். இது நல்லதா, கெட்டதா? உலகின் பல நாடுகள் தாங்களாகவே முன்வந்து IAEA உடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. அந்த ஒப்பந்தத்தின்படி, எந்தெந்த அணு உலைகளை IAEA பாதுகாக்கிறதோ அங்கு வரும் அணு எரிபொருள் மற்றும் பிற தொழில்நுட்பம் அமைதிப்பணிகளுக்காக அன்றி அணுகுண்டுகள் தயாரிக்க அனுப்பப்படாது.
123 ஒப்பந்தம் முறிவடைந்தாலும் இந்தியாவிடம் இப்பொழுது இருக்கும் 22 அணு உலைகளில் உள்ள 14 எப்பொழுதுமே IAEA கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
மீதமுள்ள அணு உலைகள் (8), இனி இந்தியா கட்ட இருக்கும் அணு உலைகள் ஆகியவை IAEA கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. இந்தியா உள்நாட்டில் உற்பத்தி செய்யும் யுரேனியம், பிற அணு எரிபொருள்களை வைத்துக்கொண்டு சந்தோஷமாக அணுகுண்டுகளைத் தயாரித்துக்கொள்ளலாம். அதையெல்லாம் IAEA கண்டுகொள்ளது.
இதிலும் பிரச்னை இருப்பதாகத் தெரியவில்லை. எப்படியும் அமெரிக்கா, இல்லாவிட்டால் ரஷ்யா, இல்லாவிட்டால் வேறு ஏதோ வெளிநாடுதான் யுரேனியத்துக்கு கதி என்றாகிவிட்டபிறகு IAEA கட்டுப்பாடு பற்றி ஏன் கூப்பாடு போடுகிறோம்? இதில் அமெரிக்காவிடம் நாம் சரணடையவில்லையே? IAEA என்பது ஐ.நா சபையின்கீழ் இயங்கும் ஓர் அமைப்புதானே?
ஞாநி: ஒப்பந்தம் ரத்தாவதற்கு என்ன காரணங்கள் இருக்கலாம்?
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் முதல் காரணம், இந்தியா மறுபடியும் அணுகுண்டு வெடிப்பு சோதனை செய்தால் ஒப்பந்தம் ரத்தாகும். ஆனால் இது 123 அக்ரிமெண்டில் சொல்லப்படவில்லை. இது நிறைவேறுவதற்கு முன்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர்கள் போட்ட ஹைட் சட்டத்தில் இருக்கிறது.
...
ஒப்பந்தப்படி அமெரிக்கா அணுசக்திக்கான எரிபொருள், தொழில்நுட்பம், இயந்திரங்கள் தருவதில் பிசகினால் இந்தியா ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியுமா? இந்திய நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யச் சொல்ல முடியுமா? முடியாது. ஒப்பந்தத்தில் இதற்கு இடம் இல்லை!
பத்ரி: ஞாநி சொல்வது முழுத்தவறு. இந்தியா விரும்பினால் எப்பொழுது வேண்டுமானாலும் ஒப்பந்தத்தை ரத்துசெய்யலாம். ஒப்பந்த்தத்தில் இந்த ஷரத்தைப் பாருங்கள்: (ARTICLE 14 - TERMINATION AND CESSATION OF COOPERATION)
"Either Party shall have the right to terminate this Agreement prior to its expiration on one year's written notice to the other Party. A Party giving notice of termination shall provide the reasons for seeking such termination. The Agreement shall terminate one year from the date of the written notice, unless the notice has been withdrawn by the providing Party in writing prior to the date of termination."
எப்பொழுது வேண்டுமானாலும் - யார் வேண்டுமானாலும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம். என்ன காரணம் என்று சொல்லவேண்டும். அந்தக் காரணம் - "அமெரிக்கா ஒப்பந்த ஷரத்துகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை" என்பதாகவும் இருக்கலாம்.
"If a Party seeking termination cites a violation of this Agreement as the reason for notice for seeking termination, the Parties shall consider whether the action was caused inadvertently or otherwise and whether the violation could be considered as material. No violation may be considered as being material unless corresponding to the definition of material violation or breach in the Vienna Convention on the Law of Treaties."
அப்படி இருக்கும் பட்சத்தில் அந்தப் பிசகு தெரியாமல் ஏற்பட்டதா, வேண்டுமென்றே ஏற்பட்டதா என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப அதைச் சரி செய்யமுடியுமா, முடியாதா என்று பார்த்து, சரிசெய்ய முடியாதென்றால் ஒப்பந்தத்தை ஒரு வருட காலத்தில் ரத்து செய்யமுடியும்.
ஞாநி சொல்வதுபோல இந்த ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானதல்ல.
ஆனால் ஒன்று... இந்தியா இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தால், அமெரிக்கா தான் கொடுத்த எரிபொருளைத் திரும்பக் கேட்கலாம். அதுவும் நியாயம்தானே? அப்படிக் கேட்டால் அதை இந்தியா உடனடியாகக் கொடுக்கவேண்டியதில்லை. தனது அணு உலைகள் நின்றுவிடாமல் இருக்க என்னென்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்துகொள்ள இந்தியாவுக்கும் உரிமை உள்ளது. அத்துடன் எரிபொருளைத் திரும்பக் கொடுத்தாலும் அதற்கென இந்தியா முன்னர் கொடுத்திருந்த பணத்தைத் திரும்பக் கேட்கலாம்.
எனவே எல்லாவித இக்கட்டுகளையும் எதிர்பார்த்தே இந்த ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது.
ஞாநி: அதுமட்டுமல்ல, அணு சக்தி பற்றிய இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையே அமெரிக்கக் கொள்கையுடன் இசைவாக இருக்கவேண்டும் என்பது 123 அக்ரிமெண்டின் இன்னொரு ஷரத்து. குறிப்பாக இரான் நாடு அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்க அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் இந்தியா ஆதரிக்க வேண்டும். இதற்கும் இந்தியா சம்மதித்திருக்கிறது.
பத்ரி: இது பெரும் புளுகு. முதலில் இதுபோன்ற ஒரு ஷரத்து 123 ஒப்பந்தத்தின் இல்லவே இல்லை. மேற்கண்ட விஷயம் கண்ணில் படுவது ஹைட் சட்டத்தில்தான். அப்படி இந்தியாவின் கையை முறுக்க முடியாது என்றும் தான் ஹைட் சட்டத்தின் இந்த ஷரத்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு (அதாவது குடியரசுத் தலைவருக்கு) அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி வெளியுறவுக் கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடிய முழு அதிகாரம் குடியரசுத்தலைவருக்கு மட்டுமே என்றும் அதனை செனட்டால் கட்டுப்படுத்த இயலாது என்று தான் நம்புவதாகவும் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். அது தொடர்பான சுட்டிகளை எனது முந்தைய பதிவுகளில் காட்டியுள்ளேன்.
அடுத்து இரான் தொடர்பானது. இந்தியா எந்தவிதத்திலும் அமெரிக்காவின் இரான் கொள்கைகளை ஆதரிக்கவேண்டியதில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு இந்தியா எந்தச் சம்மதமும் தெரிவிக்கவில்லை.
ஞாநி இதுபோன்ற பொய்களைப் பரப்பக்கூடாது.
ஞாநி: மேற்படி ஒப்பந்த விவரங்களைப் படிக்கும் எவருக்கும் இந்த ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானது என்பது தெளிவாகப் புரியும். அவை பற்றிக் கேள்வி கேட்டால், "அவற்றையெல்லாம் அமெரிக்க காங்கிரஸிடம் சொல்லித் தளர்த்தச் செய்ய, தன் செல்வாக்கைப் பயன்படுத்துவதாக புஷ் என்னிடம் சொல்லியிருக்கிறார்" என்கிறார் மன்மோகன் சிங்.
பத்ரி: ஞாநி கொடுத்திருக்கும் மேற்படி விவரங்களை என்னுடைய விளக்கங்களுடன் படித்தால் ஒப்பந்தம் மிகவும் கண்ணியமானது, இந்தியாவின் இறையாண்மைக்கு எந்தக் குந்தகத்தையும் விளைவிப்பதல்ல என்று புரியவரும். எனவே மன்மோகன் சிங் மீது அவதூறு வீசுவதை ஞாநி, கம்யூனிஸ்டுகள், பாஜக ஆகியோர் நிறுத்தவேண்டும்.