Wednesday, April 11, 2018

சிலை அரசியல்

தமிழகத்தில் பெரியார், அண்ணா சிலைகள். இந்தியா முழுதும் அம்பேத்கர், காந்தி, நேரு, இந்திரா காந்தி சிலைகள். இவற்றில் பெரியார், அம்பேத்கர், காந்தி சிலைகள் சில கருத்தாக்கங்களுக்கான குறியீடாகவும் பார்க்கப்படுகின்றன. எனவே இச்சிலைகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் பரவலாக இருப்பதையும் பார்க்கமுடிகிறது.

அம்பேத்கர் சிலை, தலித் முன்னேற்றத்தின், தலித் போராட்டத்தின் குறியீடாக இருக்கிறது. பெரியார் சிலை, திராவிட இயக்கத்தின் குறியீடாக உள்ளது. காந்தி, இந்திய சுதந்தரப் போராட்டத்தின் குறியீடாகவும் இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் குறியீடாகவும் உள்ளார். சிலைகளை அவமதிப்பதன்மூலம், குறிப்பிட்ட கருத்தாக்கத்தையும் அந்தக் கருத்தாக்கத்தைப் பின்பற்றுபவர்களையும் அவமதிப்பதாக சிலர் நினைத்துக்கொள்கிறார்கள். அதனைச் செயலிலும் செய்துகாட்டுகிறார்கள். ஆனால் இச்செயலின் விளைவுகள் மிக மோசமானவையாக இருக்கின்றன. போராட்டம், கலவரம், உயிரிழப்பு என்று முடிகிறது. சமூகங்களுக்கிடையே தேவையற்ற கசப்பு உருவாக்கப்பட்டு, நிலைநிறுத்தப்படுகிறது.

அமெரிக்காவில் கடந்த மூன்று வருடங்களில் சிலைகள் சார்ந்து சில போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. 2015-ல், சார்ல்ஸ்டன் என்ற இடத்தில் வெள்ளை இன வெறியன் ஒருவன் கறுப்பர்கள் வழிபாடு செய்யும் கிறிஸ்தவ தேவாலயத்தில் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் பலர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் தென் மாகாணங்கள் அடிமை முறையை ஆதரித்தவை என்பதை நீங்கள் படித்திருக்கலாம். ஆபிரகாம் லிங்கன் காலத்தில் அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் இயற்றப்பட்டது. அப்படியானால் நாங்களெல்லாம் அமெரிக்காவை விட்டுப் பிரிந்து தனி நாடாக இருப்போம் என்று அடிமை முறையை ஆதரிக்கும் தெற்கு மாகாணங்கள் முடிவெடுத்தன. இம்மாகாணங்கள் பிரிவதை அனுமதிக்க மாட்டோம் என்று லிங்கன் இந்த மாகாணங்கள்மீது போர் தொடுத்தார். உள்நாட்டுப் போர் நிகழ்ந்து, அதன் முடிவில் தெற்கு மாகாணங்கள் தோற்றன. ஒருங்கிணைந்த அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

ஆனால் அப்போது தொடங்கி கடந்த 150 வருடங்களாக கறுப்பர்கள் வெள்ளை இனவெறிக்கு ஆட்படுத்தப்பட்டிருக்கின்றனர். கறுப்பர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. கறுப்பர்களும் வெள்ளையர்களும் திருமணம் செய்வதற்குத் தடை இருந்தது. கறுப்பர்களும் வெள்ளையர்களும் தனித்தனிப் பள்ளிகளில் படிக்கவேண்டியிருந்தது. பொது இடங்களில் அவர்கள் நீர் அருந்துவதற்குத் தனித்தனி இடங்கள். இருவரும் பயன்படுத்தத் தனித்தனிக் கழிப்பிடங்கள்.

பல்வேறு போராட்டங்கள் வாயிலாக மேலே சொல்லப்பட்ட இழிவுகள் அனைத்தும் வெள்ளையர்களின் முழு ஆதரவோடு நீக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் சில வெள்ளையர்களிடையே இனவெறுப்பு இன்னமும் கனன்றுகொண்டிருக்கிறது. அவர்களைப் பொருத்தமட்டில் தென் மாகாணப் படைகளின் தளபதியாக இருந்த ராபர்ட் லீ என்பவர் ஓர் உன்னதத் தலைவர். அவருக்கு அமெரிக்காவில் பொது இடங்களில் ஏகப்பட்ட சிலைகள் உள்ளன. எண்ணற்ற பள்ளிக்கூடங்கள், சாலைகள், பூங்காக்கள், கட்டடங்கள் ஆகியவற்றுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வெள்ளை இனவெறியைப் பலர் முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களில் லீதான் முதன்மையானவர் என்றெல்லாம் சொல்ல முடியாது. அமெரிக்காவின் ஆரம்பத் தந்தைகள் அனைவருமே கறுப்பர்களை அடிமைகளாக வைத்திருந்தவர்கள்தாம். ஆனால் இன்று லீ வெள்ளை இனவெறியர்களால் முன்வைக்கப்படுவதாலேயே அவருடைய சிலைகளை அகற்றவேண்டும், அவருடைய பெயரை பொது இடங்களிலிருந்து நீக்கவேண்டும் என்ற எதிர்க்குரல் எழும்பியது. சார்ல்ஸ்டன் தேவாலயத்தில் நிகழ்ந்த கறுப்பர் படுகொலையைத் தொடர்ந்து இந்தக் குரல்கள் வலுக்கத் தொடங்கின. பல்வேறு இடங்களில் சட்டபூர்வமாக, நகரசபைத் தீர்மானங்கள் வாயிலாக லீயின் சிலைகள் அகற்றப்பட்டன.

சார்லட்ஸ்வில் என்ற நகரில் உள்ள ராபர்ட் லீ சிலையை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு மாபெரும் ஊர்வலத்தை 11 ஆகஸ்ட் 2017 அன்று நடத்த சில குழுக்கள் முடிவுசெய்தன. இல்லை, அந்தச் சிலையை அகற்றக்கூடாது என்று எதிர் ஊர்வலம் நடத்த வெள்ளை இனவெறிக் குழுக்கள் பலவும் அதே நகரில் ஒன்றுகூடத் தொடங்கின. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் - அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம். இந்த இரண்டு எதிரெதிர் குழுக்களும் கையில் துப்பாக்கிகளுடன் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். இறுதியில் அன்று ஓர் அசம்பாவிதம் மட்டும்தான் நிகழ்ந்தது. வெள்ளை இனவெறியன் ஒருவன் தான் ஓட்டிவந்த காரை கூட்டத்தின் நடுவில் விட்டதில் சிலையை அகற்ற விரும்பும் கூட்டத்தில் இருந்த ஒரு வெள்ளைப் பெண்மணி கொல்லப்பட்டார்.

தொடர்ந்து நகரசபை, ராபர்ட் லீ சிலையை கருப்புத் துணி கொண்டு மூடிவைத்தது. அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மூடிவைத்த துணியை எடுத்துவிடவேண்டும் என்று பிப்ரவரி 2018-ல் தீர்ப்பு வந்தது. துணியும் நீக்கப்பட்டது.

இந்தியாவில் சமீபத்திய சிலைப் பிரச்னை ஆரம்பித்தது, திரிபுராவில். மார்ச் 2018-ல், பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவந்த கம்யூனிஸ்ட் கட்சி தோற்று, பாரதிய ஜனதா தேர்தலில் ஜெயித்தது. ஓரிரு நாட்களுக்குள்ளாகவே, அம்மாநிலத்தின் இரு நகரங்களில் தெருவில் வைக்கப்பட்டிருந்த லெனின் சிலைகள் பாஜக ஆதரவாளர்களால் அகற்றப்பட்டன. இதனைக் கொண்டாடிய பாஜகவின் சிலர் அடுத்து தமிழகத்தில் பெரியாரின் சிலையைத் தூக்குவோம் என்றார்கள். அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் இரு இடங்களில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கரின் சிலை ஒன்று உடைக்கப்பட்டது. பாஜகவின் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி சிலை தாக்கப்பட்டது. பெரியார் சிலை உடைக்கப்பட்டதன் எதிரொலியாக இந்த விவகாரங்களில் எவ்விதத்திலும் தொடர்பில்லாத பார்ப்பனர்கள் பலரின் பூணூல் சென்னையில் அறுக்கப்பட்டது. சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலையை மீண்டும் சரிசெய்த உத்தரப் பிரதேச பாஜக அரசு, அதன்மீது காவி வண்ணத்தை அடித்தது! இதனால் வெகுண்ட பகுஜன் சமாஜ் கட்சியினர், அந்தச் சிலைமீது முன்னரே இருந்த நீல வண்ணத்தை அடித்தனர்.

அமெரிக்கச் சிலை விவகாரத்துக்கும் இந்தியச் சிலைத் தாக்குதல்களுக்கும் இடையேயான வித்தியாசங்கள் என்னென்ன?

என்னதான் இருந்தாலும் அமெரிக்கா சட்டதிட்டங்களைப் பின்பற்றும் நாடு. இந்தியர்களுக்கோ, சட்டத்தின்மீது எந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது கிடையாது. சிலையை வைக்கவேண்டும் என்றாலும் எடுக்கவேண்டும் என்றாலும் அமெரிக்கர்கள் நகரசபைக் கூட்டங்கள், அரசாணை ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படுவார்கள். உணர்ச்சிப் பெருக்கு இருந்தாலும் சட்டம் என்பதை மதிப்பார்கள். ஆனால் இந்தியர்களோ நடு இரவில் சிலைகளை உடைத்துவிட்டு ஓடிவிடுவார்கள். அல்லது பெரும் கும்பலாகச் சென்று அராஜக முறையில் சிலைகளை நீக்குவார்கள். ஏனெனில் கும்பல் எதற்கும் இந்தியாவில் தண்டனை வழங்கப்பட்டதே கிடையாது.

மொத்தத்தில் இந்தியர்கள் கோழைகள். இந்தியர்களுடையது கும்பல் கலாசாரம். நம்முடைய போராட்ட வடிவங்கள் அனைத்துமே அடிப்படையில் அராஜகத்தை மையமாகக் கொண்டவை. ஆனால் பொய்யாக காந்தியைத் துணைக்கு அழைத்துக்கொள்வோம். வன்முறையில்லா அறவழிப் போராட்டங்கள் வேண்டிய பலனைத் தரவில்லை என்பதால் வன்முறையை நோக்கிச் செலுத்தப்பட்டோம் என்று பொய்ச்சாக்கு சொல்வோம். நமக்கு சட்டம் ஒழுங்கின்மீது எள்ளளவும் நம்பிக்கை இருந்ததில்லை. நீ ஒரு வன்முறையில் இறங்கினால், நான் பதில் வன்முறையில் இறங்குவேன் என்பதுதான் நம்முடைய ஆதார குணம்.

பெரியாரோ, லெனினோ, அம்பேத்கரோ, காந்தியோ, அவர்களை நாட்டு மக்கள் யாருமே முழுமையாக ஆதரிக்கப்போவதில்லை. இந்த ஆளுமைகளை எதிர்ப்போரும் உண்டு, ஆதரிப்போரும் உண்டு. கருத்தளவில் அல்லது உணர்வளவில் இந்த எதிர்ப்பு இருக்கும்வரை சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் ஒரு சிலையாக வடிக்கப்பட்டு, ஓரிடத்தில் சட்டபூர்வமாக நிறுவப்படும்போது அச்சிலை ஒரு பொதுச்சொத்தாக மாறிவிடுகிறது. மனிதர்களால் நிறுவப்பட்ட சிலைகளை மனிதர்கள் எப்போதுவேண்டுமானாலும் நீக்கலாம். ஆனால், அதனையும் சட்டத்தின்பாற்பட்டே செய்யவேண்டும்.


ஒரு சிலையை உடைத்ததன்மூலம் அல்லது அகற்றியதன்மூலம் ஒரு தனி நபர் தான் பெரியதொரு சாதனையைச் செய்துவிட்டதாக நினைத்தால் அதனைவிடப் பெரிய மடமை ஏதும் இருக்கமுடியாது.

Saturday, April 07, 2018

எதற்கும் போராடுவோம், எதையும் எதிர்ப்போம்

தமிழர்களுக்குப் போராட்ட குணம் அதிகம். நியாயமான காரணங்களுக்காகப் போராடுவோம். அப்படிப்பட்ட காரணங்கள் கிடைக்காவிட்டால், புதிதாகக் காரணங்களைக் கற்பித்துக்கொண்டு, அவற்றுக்காகவும் போராடுவோம். அப்படிப் போராடும்போது, வெகு ஆவேசமாக, இந்த உலகமே நமக்கு எதிராகக் களம் அமைத்து நம்மை வஞ்சிப்பதாக நினைத்துக்கொண்டு, துக்கம் தொண்டையை அடைக்கப் போராடுவோம்.

உச்ச நீதிமன்றம் காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்துத் தன் இறுதித் தீர்ப்பை அறிவித்தபின்பும், காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்படாமல் இருப்பதற்கு எதிராகப் போராடுவது உண்மையிலேயே நியாயமான போராட்டம். அந்தப் போராட்டத்தையும் ஆளுக்கு ஒரு திசையில் இழுத்துச் செல்வது என்பது தமிழகத்தின் உள்ளார்ந்த சிக்கல் சார்ந்தது. ஆனால் குறைந்தபட்சம் இந்தப் போராட்டத்தின் நியாயத்தை யாரும் குறை சொல்ல முடியாது.

ஜல்லிக்கட்டு மிகப்பெரிய போராட்டமாக மாறியது. மாநிலமே கொந்தளித்தது. அதற்கான தேவை உண்மையிலேயே இல்லை என்றாலும், என்னவோ அது ஒன்றுதான் தமிழனின் தனிப்பெரும் அடையாளம் என்பதாகக் கட்டமைக்கப்பட்டு சினிமாக்காரர்கள் முதல் சின்னஞ்சிறுவர்கள் வரை மெரீனாவில் கூடினார்கள். பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி, மத்திய அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் பீட்டா என்ற விலங்குநல அமைப்பையும் குற்றம் சாட்டினார்கள். கடைசியில் நிலைமை கைமீறிப்போய் மாநில அரசு காவல்துறை உதவியுடன் போராடிய அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவைத்தது. ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெறத் தொடங்கியிருக்கிறது. மக்கள் வெற்றி அடைந்துவிட்டார்கள். மாடுகள் முட்டி ஆண்டுக்குச் சிலர் இறப்பது தொடர்கிறது.

நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற இடங்களில் ஓஎன்ஜிசி அல்லது சில தனியார்கள் ஹைட்ரோகார்பன் வளம் இருக்கிறதா என்பதற்கான தேடுதலில் இறங்குவதை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். காவிரிப் படுகை மண்டலத்தில் எண்ணெய் தேடுவதோ அல்லது தோண்டி எடுப்பதோ அப்பகுதியை சுடுகாடாக்கிவிடும் என்று எச்சரிக்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான விஷயம் இது. ஒரு பகுதி மக்களின் ஆதரவு இல்லாமல் அங்கு எண்ணெய் அல்லது கனிம வளங்களைத் தோண்டுவது சரியல்ல. இந்தப் பிரச்னையும் தமிழர்களின் வாழ்வைப் பாழ் செய்ய மத்திய பாஜக அரசு கொண்டுவந்தது என்று மாற்றப்பட்டு, தமிழ்நாடு vs இந்தியா என்று ஆக்கப்படுகிறது. உண்மையில் இந்திய மாநிலங்கள் அனைத்திலுமே கனிம வளம் தோண்டுதல் தொடர்பான பிரச்னைகள் உள்ளூர் மக்களுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கும் இடையே இருந்தபடித்தான் இருக்கிறது. ஆனால் என்னவோ தமிழ்நாட்டில் மட்டும் உலகமே திரண்டுவந்து தமிழக மக்களை வஞ்சிப்பதுபோன்ற பெருங்கதையாடல் புகுத்தப்படுகிறது.

இந்தப் பிரச்னை போராடுவதற்கு உகந்ததா என்றால் நிச்சயமாக என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இந்தப் போராட்டத்துக்குக் கொடுக்கப்படும் திருகல்தான் இங்கு கண்டிக்கப்படவேண்டியது.

இதற்கு இணையான இன்னொரு லோக்கல் பிரச்னைதான் ஸ்டெர்லைட் செப்பாலை. தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஆண்டுகளாகவே செப்பு தயாரிக்கும் ஆலை ஒன்று இருந்துவந்துள்ளது. தமிழகம் தொழில்வளர்ச்சியில் முன்னேறிய ஒரு மாநிலம். இங்கு ரசாயனம், மருந்து, பெயிண்ட், சிமெண்ட், சர்க்கரை, சாராயம், துணிமணி, இரு சக்கர, நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள், கனரக டிராக்டர்கள் என்று எக்கச்சக்க உற்பத்தி ஆலைகள் உள்ளன. கரியைப் பயன்படுத்தும் மின்னுற்பத்தி ஆலைகள் பல உள்ளன. இந்தத் தொழிற்சாலைகளால் காற்று, நிலத்தடி நீர், ஆற்று நீர் ஆகியவை நிச்சயம் பாதிப்படைந்துள்ளன. இதற்காகத்தான் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்ற அரசு அமைப்பே உள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி இந்தத் தொழிற்சாலைகள் மாசுகளை வெளியேற்றக்கூடாது என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு இவர்களுடையது. தவறு செய்யும் ஆலைகளைத் தண்டிப்பது, கடுமையான அபராதங்களை விதிப்பது, மாற்றங்களைச் செய்யுமாறு வற்புறுத்துவது ஆகியவை இவர்களுடைய வேலை.

ஆனால் கடந்த சில வாரங்களில் தமிழ்நாட்டில் நீங்கள் வசித்துவந்தால், மாநிலத்தின் அனைத்து ஆலைகளையும்விட மிக மிக மோசமானது தூத்துக்குடி ஸ்டெர்லைட் செப்பாலை மட்டும்தான் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கும். தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

அணு மின் நிலையம் என்றாலே கூடங்குளம் மட்டும்தான் நமக்கு ஞாபகத்தில் வரும் என்ற அளவுக்கு அந்த அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் அத்துணை முக்கியத்துவம் வாய்ந்தவை. அணு உலைகளே ஆபத்தானவை என்பதில் தொடங்கி, கூடங்குளம் ரஷ்ய உலைகள் தரமற்றவை என்று மாறி, உண்மையில் அங்கு அணு உலை இயங்குவதே இல்லை, அங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் உண்மையில் டீசலில் இயங்குவது என்றவரை பல கதைகள் சொல்லப்பட்டாயிற்று. சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அப்பகுதி மீனவர்களும் செய்யும் போராட்டங்களுக்குப் பல அரசியல் கட்சிகள் துணையாக உள்ளனர். ஆனால் ஆளும் கட்சியும் முக்கிய எதிர்க்கட்சியும் அவர்களுக்கு ஆதரவாக இல்லை. எனவே இப்போதைக்கு தமிழின் தனிப்பெரும் எதிரி கூடங்குளம்தான் என்ற நிலை இப்போதைக்கு இல்லை.

ஆனால் அந்தப் பட்டம் தேனி பொட்டிபுரத்தில் அமையவுள்ள நியூட்ரினோ கண்காணிப்பு மையத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண அறிவியல் ஆராய்ச்சி. உலகின் பல நாடுகளில் லார்ஜ் ஹேட்ரான் கொல்லைடர் போன்ற மாபெரும் நுண்துகள் முடுக்கக் கட்டுமானங்களை அமைத்து புதுப்புதுக் கண்டுபிடிப்புகளைச் செய்கிறார்கள். ஆளரவம் அற்ற தேனிக் காட்டுப்பகுதியில் நியூட்ரினோ என்ற மீச்சிறு அணு நுண்துகளை ஆராய விரும்பும் இந்திய அறிவியலாளர்களைக் கொலைகாரக் கொடூரர்களாகச் சித்திரிப்பதில் தமிழகம் வெற்றிகண்டுள்ளது. அந்த இடத்தில் அணுக் கழிவுகளைக் கொட்டப்போகிறார்கள் என்பதில் தொடங்கி, வெடிவைத்துத் தகர்ப்பார்கள் எனவே அருகில் உள்ள முல்லைப்பெரியார் அணை உடைந்து மக்களை வெள்ளத்தில் ஆழ்த்திவிடும் என்று நகர்ந்து, இது ஒரு ரகசிய அமெரிக்க-இந்திய அணு ஆயுத கூட்டுச் சதி என்று விரிவாகி, ஹாலிவுட் படங்களைத் தோற்கடிக்கக்கூடிய அளவில் சதிக் கோட்பாடுகள் பரப்பிவிடப்பட்டு, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் எதிர்க்கும் ஒரு போராட்டமாக இது மாற்றிவிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டம், இவற்றையெல்லாம் ஒன்றிணைத்து இன்னமும் பெரிய சதித்திட்டமாகக் காண்பிப்பது. ஸ்டெர்லைட், கதிராமங்கலம், நெடுவாசல், கெயில் குழாய், கூடங்குளம், தேனி நியூட்ரினோ போன்ற நச்சுத் திட்டங்களையெல்லாம் மத்திய அரசு கொண்டுவந்து தமிழர்களைத் தாக்குகிறது. காவிரி நீர் தருவதில்லை. இனி தமிழன் தனி நாடு கேட்டே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறான். டோல்கேட்டை உடைப்போம். மத்திய அரசுக்கு வரி தருவதை நிறுத்துவோம். ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்க்க மாட்டோம். தினமும் ஏதேனும் ஒரு பிரச்னையைக் கையில் எடுத்துப் போராடுவோம். அதில் ஏதேனும் நியாயம் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க மாட்டோம். அடிப்படையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யமாட்டோம். ‘வார்டன்னா அடிப்போம்’. இந்த சீரிய முயற்சி மிகவும் வெற்றி அடைந்துள்ளது என்பதை நம்மால் கவனிக்க முடிகிறது.

-->
தமிழகம் ஒருவிதத்தில் தனித்துவமான மாநிலம்தான்.

Sunday, April 01, 2018

எதிரொலி அறையில் அமர்ந்திருக்கும் மனிதர்கள்!

[மின்னம்பலம் இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை]

ஃபேஸ்புக் தகவல்களை வைத்துத் தேர்தல் முடிவுகளை மாற்றிவிட முடியுமா?

கடந்த சில வாரங்களாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற பிரித்தானிய நிறுவனம் பற்றி நிறைய பேச்சுகள் அடிபட்டன. ஃபேஸ்புக் வழியாக அமெரிக்க நாட்டின் பல தனிநபர்களின் தகவல்களையும் அவர்களுடைய நண்பர்களின் தகவல்களையும் கல்விப்புல ஆராய்ச்சி என்ற பெயரால் ஒரு பேராசிரியர் திரட்டி, ஃபேஸ்புக் விதிகளுக்கு மாறாக இத்தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்கு விற்றிருக்கிறார். இந்த நிறுவனமும் இந்தத் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் நின்றபோது அவருக்கு ஆதரவான சமூக வலைதள விளம்பரத் திட்டத்தை வடிவமைத்துச் செயல்படுத்தியிருக்கிறது.
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சி நடத்திய ரகசியப் படப்பிடிப்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிறுவனம், ஒருவித மெர்சினரி கூலிப்படை நிறுவனம். கூலிப்படையினர் என்போர் ஒரு நாட்டின் படையினராக இல்லாமல், யார் காசு கொடுத்தாலும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு அவருடைய எதிரிகளைக் கொன்று குவிப்பர். தர்ம நியாயங்கள் குறித்து அவர்களுக்குக் கவலையில்லை. யார் அதிக காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்குப் பணி புரிவர். எதிர்த்தரப்பு மேலும் அதிக காசு கொடுப்பதாக இருந்தால் அணி மாறத் தயங்க மாட்டார்கள்.

காசுக்காக வெறுப்பும் விதைக்கப்படும்

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவும் அப்படிப்பட்ட மெர்சினரி நிறுவனம்தான் என்பது சானல் 4 ஸ்டிங்கில் தெளிவாகத் தெரியவந்துள்ளது. ஒரு பஞ்சாயத்துத் தேர்தலாக இருந்தாலும் சரி, நாட்டின் அதிபர் தேர்தலாக இருந்தாலும் சரி, இவர்கள் களம் இறங்கத் தயாராக இருக்கிறார்கள். வெறுப்பை விதைத்துத்தான் தங்கள் கட்சி ஆட்களை வெற்றிகொள்ளச் செய்ய முடியும் என்றால் அதை விதைக்கத் தயங்காதவர்கள். கென்யாவில் 2013 தேர்தலின்போது வெறுப்பு விதைத்தல், பொய்ச் செய்தி தயாரித்தல், அவற்றை வைரலாகப் பரவ வைத்தல் போன்றவை மூலமாக தங்கள் வாடிக்கையாளரைத் தேர்தலில் ஜெயிக்க வைக்க கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா முயன்றது தெரியவந்துள்ளது. அந்தத் தேர்தலின்போது நடந்த கலவரங்களில் கிட்டத்தட்ட 1,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டிருந்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல், பிரிட்டனின் பிரெக்சிட் தேர்தல் ஆகியவற்றிலும் பொய்ச் செய்தி பரப்புதல், வெறுப்புப் பிரசாரம் செய்தல் முதற்கொண்டு பலவற்றிலும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா ஈடுபட்டதாகத் தெரிகிறது. அதேபோல இந்தியாவிலும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவின் கைவேலை இருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், பாஜகவும் காங்கிரஸும் ஒருவர் மற்றவரைக் குற்றம்சாட்டுவதில் ஈடுபட்டுள்ளனர். சரியானதொரு மெர்சினரியாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா டபுள் ஏஜெண்ட் கேம் விளையாடி இரு கட்சிகளுக்கும் ஆலோசனை கொடுத்து இருவரையுமே ஏமாற்றியிருக்கலாம். இதுகுறித்து முழுத் தகவல்கள் விரைவில் வெளியாகலாம்.

இப்போது விவாதத்துக்கு வருவோம்.
  1. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உள்ள தகவல்களை ஏமாற்றிப் பெற்று, குறிப்பான அரசியல் விளம்பரங்களைச் செய்வது சரியா?
  2. ஃபேஸ்புக் பயனர்களை ஏமாற்றி அவர்களுடையதும் அவர்களுடைய நண்பர்களுடையதுமான தகவல்களைப் பெற்று அவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசியல் விளம்பரங்களைச் செய்யலாமா?
  3. பொய்ச் செய்திகளைப் பரப்புவதன் மூலம் கட்சிகள் லாபம் பெறலாமா?
  4. வெறுப்பைப் பரப்புவதன் மூலம் லாபம் பெறலாமா?
  5. பொய்ச் செய்திகளை விதைத்து அதன்மூலம் வெறுப்பைப் பரப்பி, அதன்மூலம் உயிர்க் கொலைகள் நடந்தாலும் பரவாயில்லை என்று கவலைப்படாமல், அரசியல் லாபம் பெறலாமா?
  6. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற ஊடகங்கள் மூலம் மக்களின் கருத்துகளை எளிதில் மாற்றிவிட முடியுமா? இதனால் வாக்களிக்கும் போக்கில் மாறுதல் ஏற்பட்டு, ஒருவர் வெற்றி பெற முடியுமா?
  7. இதுவரையில் நடந்திராத எது ஒன்று இப்போது நடந்துவிட்டது என்று அனைவரும் பதறுகிறார்கள்?

பொய்யும் வெறுப்பும் பரவும் வேகம்

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் இல்லாத காலகட்டத்திலேயே பொய்யும் வெறுப்பும் நன்கு பரவின. ஆனால், சமூக வலைதளங்கள்மூலம் இவற்றை மின்னல் வேகத்தில் மாநிலம் முழுதும் பரப்ப முடிகிறது. இதனால் பெரும் வன்முறையைச் செயல்படுத்த முடிகிறது. கென்யா போன்ற நாடுகளில் மட்டுமல்ல; நம் நாட்டிலும் இலங்கையிலும் இது நடப்பதை நம்மால் காண முடிகிறது. அதனால்தான் காஷ்மீரிலோ அல்லது கண்டியிலோ, பெரும் வன்முறை வெடிக்க ஆரம்பித்துவிட்டது என்றால் முதலில் தடை செய்யப்படுவது சமூக வலைதளங்கள்தாம்.

பொய்ச் செய்தி தயாரித்து மக்களைப் பொங்கவைக்க இன்று மிக எளிதாக முடியும். ஸ்டாலினோ, மோடியோ இப்படித்தான் சொன்னார் என்று ஒரு பொய் ட்விட்டர் செய்தியை ஸ்க்ரீன் ஷாட் செய்து அதைப் பகிர்ந்துகொள்ள முடியும். உடனே எல்லோரும் தங்கள் முன்முடிவுகளுடன் சம்பந்தப்பட்ட நபர்களை அர்ச்சனை செய்யத் தொடங்கிவிடுவர். எதற்கு மோடி, ஸ்டாலின் என்றெல்லாம் செல்ல வேண்டும். பாபர் மசூதி தொடர்பான என்னுடைய ட்வீட் ஒன்றை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, அதன் பின்புலத்தைத் தெரிவிக்காமல் இன்றும் பலரும் சுற்றுக்கு விட்டுக்கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இம்மாதிரி செய்யும் நபர்களில் சமூக அறிவுஜீவிகளும் உண்டு, சாதா சில்லுண்டிகளும் உண்டு. ஆக, சமூக வலைதளங்கள்மூலம் ஒருவரை எளிதில் ஏமாற்றிவிட முடியும் என்பது மட்டுமல்ல; உங்களுடைய பிரசாரத்தால் அவர்களையும் உள்ளிழுத்துக் கொண்டு உங்கள் வேலையை அவர்களைக் கொண்டு மேலும் திறம்படச் செய்ய வைக்க முடியும்.

இதெல்லாம் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் தெரியாத விஷயங்கள் அல்ல. அவர்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா போன்ற மெர்சினரிகளைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. உள்நாட்டிலேயே இந்தத் தொழில்நுட்பம் தெரிந்த ஆட்கள் இருக்கின்றனர்.

பொய்ச் செய்திகளுக்கும் நம்பகத்தன்மை வேண்டும்

ஆனால், இம்மாதிரியான அரசியல் விளம்பரப் பிரசார இயக்கங்களினால் மட்டுமே ஒருவருடைய உட்கருத்தை மாற்றிவிட முடியும் என்று நான் நம்பவில்லை. இந்த விளம்பரங்கள் ஏற்கெனவே மக்கள் மனத்தில் படிந்துள்ள விகாரங்களை வெளியே காண்பிக்கும். ரஜினி பற்றி, கமல் பற்றி, ஸ்டாலின் பற்றி, திருமாவளவன் பற்றி, ராமதாஸ் பற்றி நம் மக்கள் அனைவருக்கும் சில கருத்துகள் உள்ளன.

“பார்ப்பனர்களை நாட்டை விட்டே விரட்டுவோம்” என்று ஸ்டாலின் சொல்வதாக ஒரு ட்வீட்டைக் காண்பித்தால் உடனே ஒரு கோஷ்டியினர் அதை நிச்சயமாக நம்புவர். அதே ட்வீட்டை ரஜினிகாந்த் சொல்வதாக யாராவது ஸ்க்ரீன் ஷாட் போட்டால் படிப்பவர் நம்ப மாட்டார். “மோடியை அடுத்த பிரதமர் ஆக்குவோம்” என்று ரஜினிகாந்த் ஒரு ட்வீட் போட்டதாக யாரேனும் வாட்ஸ்அப்பில் பகிர்ந்துகொண்டால் உடனே அதைப் பலரும் நம்பிவிடுவார்கள். “சூரிய பகவானின் கதிர்களை சோலார் பேனல்கள் உறிஞ்சுகின்றன என்பதால் பாஜகவினர் அவற்றை உடைக்கிறார்கள்” என்று ஒரு படத்தை எடுத்துப்போட்டால் உடனே நம்ப பலர் இருக்கிறார்கள். அதேபோல, “இந்துக் கோயில்களை இடிப்போம்; அவற்றை இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டு இடங்களாக மாற்றுவோம்” என்று திருமாவளவன் சொன்னதாகச் செய்தி பரப்பப்பட்டால், அவர் உண்மையிலேயே அப்படிச் சொல்லியிருப்பாரா என்றெல்லாம் பலர் யோசிக்க மாட்டார்கள்.
இந்த மாதிரியான அடிப்படையில்தான் பொய்ச் செய்திகள் உருவாக்கப்பட்டுப் பரப்பப்படுகின்றன. அதாவது பொய்ச் செய்திகளிலும் ஓரளவு நம்பகத்தன்மை இருக்க வேண்டும்.

பொதுத்தளத்தில் இவையெல்லாம் ஏற்கெனவே புழங்கிவரும் கருத்துகள். உண்மையான நடுநிலையாளர்கள், ஒரு நிமிடமாவது இந்தச் செய்தியின் மூலம் என்ன, இது உண்மையா அல்லது உண்மைபோல உருவாக்கப்பட்டிருக்கும் பொய்யா என்று கொஞ்சம் விசாரிப்பார்கள். ஆனால், இவற்றை ஏற்கெனவே உண்மை என்று நம்புவோர், முதலில் ஃபேஸ்புக்கில் இந்தச் செய்தியைப் பகிர்ந்துவிட்டு, வாட்ஸ்அப்பில் தான் இருக்கும் நாற்பது குழுக்களிலும் வெட்டி ஒட்டிவிட்டு, கூடவே “இவனுகளே இப்படித்தான்” என்று எழுதிவிட்டு, அதன் பிறகு யாரேனும் அந்தக் குறிப்பிட்ட செய்தி உண்மை இல்லை என்று சொன்னாலும் அதற்கு எதிராக விவாதித்துக் கொண்டிருப்பார்கள். எல்லாம் இல்லுமினாட்டி சதி என்பார்கள்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா போன்ற நிறுவனங்களின் பங்கு இங்கு, எங்கு வருகிறது? 

இவர்களுடைய ஒரே வேலை, இந்த வெட்டிக் கூட்டத்துக்குத் தொடர்ந்து தீனி அளிப்பதில் இருக்கிறது. விசுவாசிகளின் விசுவாசத்தைத் தக்கவைக்கத் தீனி வேண்டும். வாக்களிக்கும் வரை பொங்கிப் பொங்கி மன அரிப்பைத் தீர்த்துக் கொள்ள வழி வேண்டும். ஆனால், உண்மையான ‘நடுநிலை’ வாக்காளர்களை வழிமாற்றிட முடியுமா?

முடியாது என்பதுதான் என் தாழ்மையான கருத்து.

காங்கிரஸ் கட்சி, கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவைப் பயன்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. அது எவ்வாறு அக்கட்சிக்கு உதவியுள்ளது? மாறாக, திரினாமுல் காங்கிரஸோ, அதிமுகவோ இம்மாதிரியான நிறுவனங்களைப் பயன்படுத்தியுள்ளதாக எந்தத் தகவலும் இல்லை. ஆனால், அவர்களெல்லாம் ஜெயிக்கவில்லையா?

நாளை அனைத்து முக்கியக் கட்சிகளுமே சமூக வலைதளத்தில் உண்மைச் செய்திகளையும் பொய்ச் செய்திகளையும் பரப்பப் போகின்றனர். அதே அளவுக்கு அமைப்பு சாரா தனி மனிதர்களும் அரசு சாரா நிறுவனங்களும்கூட தங்களிடம் இருக்கும் பணத்தின் அளவுக்கேற்ப உண்மை, பொய்ச் செய்திகளைப் பரப்பிக்கொண்டே இருக்கலாம். ‘போஸ்ட் டுரூத்’ எனப்படும் நிலையில் நாம் தற்போது இருக்கிறோம். நமக்கான ‘உண்மை’யை நமக்கு நாமே உருவாக்கிக்கொண்டு அவற்றை நம்பிக்கொண்டு, அவ்வாறு நம்புபவர்களை மட்டுமே நம்மைச் சுற்றி வைத்துக்கொண்டு, எதிரொலி அறை ஒன்றில் மீண்டும் மீண்டும் நாம் விரும்பும் உண்மைகள் மட்டுமே எதிரொலிக்குமாறு செய்து அவ்வறையின் மையத்தில் நாம் அமர்ந்து கொண்டிருக்கிறோம். இதற்கு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவைக் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை.

நாம் உருவாக்கியுள்ள போஸ்ட் டுரூத் உலகில் பலனடைய உருவாகியிருக்கும் ஒரு நிறுவனம்தான் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவே தவிர, அவர்கள் நம்மைச் சுற்றிப் பின்னியிருக்கும் வலையில் மாட்டிக்கொண்டிருப்பவர்கள் அல்ல நாம்.