இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நடக்கும் விவாதத்தில் ஞாநி விகடன் இதழில் இரண்டாம் பாகமாக சிலவற்றை எழுதியுள்ளார். முதல் பாகத்தில் ஒப்பந்தம் பற்றி அவர் எழுதியிருந்ததை விமரிசித்து
நான் ஏற்கெனவே எழுதியது இங்கே.அணு மின்சாரம் தேவையா என்ற கேள்வி நியாயமானது. உலகில் அதிக அளவு (மெகாவாட் அளவில்) அணு மின்சாரம் தயாரிக்கும் நாடு அமெரிக்கா. தனது மொத்தத் தயாரிப்பில் அதிக விழுக்காடு அணு மின்சாரமாகத் தயாரிக்கும் நாடு ஃபிரான்ஸ். இரண்டு நாடுகளிலும் அணு மின்சாரம் தயாரிப்புக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
அணுப் பிளவு என்பதே அபயாகரமானது என்பதில் எனக்குத் துளிக்கூட சந்தேகம் இல்லை. அணுக்கழிவுகளை எவ்வளவு கவனமாகக் கையாள்வது, எங்கு கொண்டுபோய் கொட்டுவது, கதிர்வீச்சு எந்த வகையில் மக்களை, பிற உயிர்களை, பயிர்களைப் பாதிக்காது இருக்கும் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது அவசியம்.
இதற்கான பதில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அணு விஞ்ஞானிகளிடமிருந்து வரவேண்டும்.
ஞாநி எழுப்பியிருக்கும் சில கேள்விகளை இங்கு எதிர்கொள்கிறேன்.
1. முறைசாரா மின்சக்தி - சூரிய ஒளி, காற்றாலை - போன்றவை இருக்க, அதுவும் செலவு குறைவாக இருக்க, ஏன் பணத்தை அணு மின்சாரத்திலே போடுகிறீர்கள்?
காற்றாலை மின்சாரம் தயாரித்தல் இன்று இந்தியாவில் முற்றிலுமாக தனியார்மயமாக்கப்பட்டு நடந்துவருகிறது. காற்றாலைகளை நிர்மாணிக்க இந்திய அரசு மான்யம் கொடுக்கிறது. ஆனாலும் ஒரு காற்றாலை டர்பைனிலிருந்து உருவாகும் மின்சாரம் அதிகபட்சம் 5 மெகாவாட்டைத்தான் நெருங்கமுடியும். பொதுவாக இவை 1.5 மெகாவாட் உற்பத்தி செய்யும் டர்பைன்களாக இருக்கும். பல டர்பைன்களைக் கொண்ட ஒரு மின் நிலையத்தில் 200-300 மெகாவாட் உற்பத்தி செய்தால் அதிகம். அதற்குத் தேவையான நிலப்பரப்பு மிக அதிகம். மேலும் நாள் முழுதும் ஆண்டு முழுதும் இந்த அளவு மின்சாரம் கட்டாயமாகக் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. காற்று வீசுவதைப் பொறுத்து நாளுக்கு நாள் மின்சாரம் மாறுபடும்.
சூரிய ஒளி மின்சாரம் இன்னமும் ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது. அதை உருவாக்க ஆகும் செலவு அதிகம். ஆனால் வீடுகள் ஒவ்வொன்றும் சூரிய ஒளி மின்சாரத்தில் முதலீடு செய்து தங்களுக்கான மின் செலவைக் குறைக்கலாம். இதுவரையில் உலகில் எங்குமே சூரிய ஒளியைப் பயன்படுத்தி பல நூறு மெகாவாட் அளவில் மின்சாரம் எடுக்கும் உற்பத்திச் சாலைகள் கிடையாது.
நீர் மின்சாரம் எடுக்க வேண்டுமானால் பெரிய அணைகளைக் கட்டவேண்டும். அணைகள் கட்டுவதால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இடம் பெயர வேண்டியிருக்கும். பெரிய அணை கட்டாமல் சில நூறு மெகாவாட் மின்சாரம் தயாரிப்பது சாத்தியமே இல்லை. தடுப்பணை சிலவற்றைக் கட்டுவதன்மூலம் சில பத்து மெகாவாட்கள் பெறுவதே கஷ்டம்.
இன்றைய நிலையில் அனல் மின்சாரம் மட்டுமே ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் சில ஆயிரம் மெகாவாட் தயாரிக்கக்கூடிய திறனைப் பெற்றுள்ளது. அதுவும் ஒவ்வொரு நாளும் வேண்டிய அளவு தயாரிக்கக்கூடிய திறனுடன். அதற்கு அடுத்த நிலையில் இருப்பது அணு மின்சாரம் மட்டுமே.
அனல் மின்சாரம் தயாரிப்பதிலும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருமளவு அனல் மின்சாரம் தயாரிப்பதால் வருபவையே. எங்கெல்லாம் ஃபாசில் எரிபொருள்களைப் பயன்படுத்தினாலும் அங்கு கார்பன் டயாக்ஸைட் வருவதைத் தடுக்கவே முடியாது.
* மின்சாரம் அதிக அளவு இல்லாவிட்டால் வளர்ச்சி கிடையாது.
* மின்சாரம் அதிக அளவு தயாரிக்கவேண்டும் என்றால் அது காற்றாலை, சூரிய ஒளியால் முடியாது.
* அனல், அணு மின்சாரம் இரண்டால் மட்டுமே முடியும். ஓரளவுக்கு, சில இடங்களில் மட்டும் நீர் மின்சாரத்தால் முடியும்.
* நீர் மின்சாரம் என்றால் அணை, அதனால் மக்கள் இடப்பெயர்வு இருக்கும். (நர்மதா அணை). அனல் மின்சாரம் என்றால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு, கிரீன்ஹவுஸ் வாயுக்கள், ஓஸோன் லேயர் பாதிப்பு. அணு மின்சாரம் என்றால் கதிர்வீச்சு அபாயம், அணுக்கழிவை நீக்கும் அபாயம் ஆகியவை உண்டு.
இந்த நிலையில் நாம் எதையாவது செய்தாகவேண்டியுள்ளதே?
அணு மின்சாரத்தின் சில பயன்களைப் பார்ப்போம். இப்பொழுதைய தொழில்நுட்பத்தில் ஓர் அணு உலை 1000 மெகாவாட் மின்சாரத்தைக் கொடுக்கிறது. ஒரு சிறிய நிலப்பரப்பில் நான்கு அணு உலைகளை வைத்து எளிதாக 4000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். அதே அளவு மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும் கரியைக் கணக்கில் எடுத்தால் கரி அனல் மின்சார நிலையத்துக்கு மாபெரும் இடம் தேவைப்படும். (சாசன் - மத்தியப் பிரதேசம் - Ultra Mega Power Project.) அணு மின்சாரம் தயாரிப்பில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளியேறாது.
அணு மின்சாரம் தயாரிப்பில் என்ன பிரச்னைகள் ஏற்படலாம் என்பதை ஏற்கெனவே பார்த்துவிட்டோம்.
எதைச் செய்தாலும் பிரச்னைகள் சில இருக்கும் என்ற நிலையில் பிரச்னைகளைக் குறைத்து, பாதிப்புகளை வெகுவாகக் கட்டுப்படுத்தவேண்டும் என்றால் அணு மின்சாரம் மிக அவசியம். நமக்குத் தேவையான கரியும் பெட்ரோலியப் பொருள்களும் (நாஃப்தா) வேண்டிய அளவு கிடைத்துக்கொண்டே இருக்கப்போவதில்லை.
2. செலவு. அணு மின்சாரம் உருவாக்கத் தேவையான செலவு அதிகம்.
இன்றைய நிலையில் இது உண்மையே. ஆனால் சரியான தொழில்நுட்பத்தை வெளிநாடுகளிலிருந்து பெறுவதன்மூலம் அணு மின்சாரத்தின் யூனிட் செலவைக் குறைக்கமுடியும். அதே நேரம் பிற வழிகளிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தில் விலை அதிகமாகிக்கொண்டே வரும் - முக்கியமாக அனல் மின்சாரம்.
இதற்கான செலவை அரசு முற்றிலுமாகச் செய்யவேண்டியதில்லை. இன்று அணுத் தொழில்நுட்பத்தை அரசே கையகப்படுத்தி வைத்துள்ளது.
தனியாரைக் கொண்டுவருவதன்மூலம் அரசு செய்யும் செலவைக் குறைக்கலாம்.
Nuclear Power Corporation என்பது மத்திய அரசின் நிறுவனம். இதன்மூலமாக மத்திய அரசு சில அணு உலைகளை நிர்மாணிக்கலாம்.
அடுத்து டாடா பவர், ரிலையன்ஸ் எனெர்ஜி ஆகியவற்றை அணு மின்சாரத் துறையில் முதலீடு செய்ய அனுமதிக்கலாம்.
மூன்றாவதாக அமெரிக்க, ஃபிரான்ஸ் நிறுவனங்களை நேரடியாக இந்தியாவில் அணு மின்சாரம் தயாரிக்க அனுமதித்து சரியான (கவனிக்க: சரியான) Power Purchase ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம். (உடனே என்ரான் என்று யாரும் சொல்லாதீர்கள். அந்தப் பிரச்னையே வேறு.)
நமது இறுதித் தேவை மின்சாரம். அதற்கு அரசே முதலீடு செய்யவேண்டும் என்பதில்லை.
3. இவ்வளவு பெரிய ஒப்பந்தம் போட்டாலும் அணு மின்சாரத்தின் அளவு 3%த்திலிருந்து 6%க்குப் போகும். இது தேவையா?
அடுத்த பத்தாண்டுகளிலேயே அணு மின்சாரத்தில் அளவு இதற்குமேலும் அதிகரிக்கலாம். ஆனால் அதற்குப் பலவிதங்களிலும் இடையூறுகள் இருக்கும் என்று அரசு அனுமாணிக்கிறது. ஆனால் மின்சாரம் என்று வரும்போது அடுத்த பத்தாண்டுகளை மட்டும் பார்த்தால் போதாது. அடுத்த ஐம்பதாண்டுகளைப் பார்க்கவேண்டும்.
2020 - 6%
2030 - 10%
2040 - 15%
2050 - 25%
2060 - 35%
என்ற கணக்கில் செல்லவேண்டியிருக்கலாம். மூன்றிலிருந்து ஆறுக்குப் போகாமல் நாற்பதுக்கு வரமுடியாது. அடுத்த முப்பது ஆண்டுகளில் வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் அணு மின்சாரம் 25-40% இருக்கும் என்றே நினைக்கிறேன்.
4. ஞாநி சொல்கிறார்: "தொழில்நுட்பம், அணு உலைக்கான எரிபொருள், தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிப்பதற்கான சுதந்திரம் இவற்றுக்காக அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தம் போட்டாக வேண்டியிருக்கிறது என்று இவர்கள் நம்புகிறார்கள். இந்த இரண்டும் நம்மிடமே உள்ளன. அமெரிக்காவிடம் கையேந்தத் தேவை இல்லை என்பதுதான் உண்மை."
இது ஏற்றுக்கொள்ளமுடியாதது. தன்னிடம் எரிபொருளும் தொழில்நுட்பமும் இருந்தும் அமெரிக்காவுடன் யாராவது ஒப்பந்தம் செய்வார்களா?
இந்தக் குழப்பத்துக்குக் காரணம் யுரேனியம் என்ற சொல் ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்தப்படுவதுதான்.
(அ) யுரேனியம் தாது - யுரேனியம் டயாக்ஸைட் என்ற உருவத்தில் கிடைப்பது.
(ஆ) யுரேனியம் தனிமம் - மேற்கண்ட தாதுவிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட யுரேனியம் தனிமம்
(இ) அணு உலையில் பயன்படுத்தக்கூடிய யுரேனியம் ஐசோடோப் - U 235 எனப்படுவது. இது ஒரு கிலோ யுரேனியம் தனிமத்தில் வெறும் 7 கிராம் மட்டுமே. மீதியெல்லாம் யுரேனியம் 238தான். இந்த யுரேனியம் 235ஐப் பிரித்தெடுக்கத்தான் செண்ட்ரிஃப்யூஜ் எனப்படும் கருவி தேவை. இந்தியாகூட இந்தக் கருவியை வெளிநாட்டு டிசைனிலிருந்து திருடியதாகச் சொல்லப்படுகிறது.
யுரேனியம் 235-ஐப் பிரித்தெடுப்பது அவ்வளவு எளிதான செயலல்ல.
உலகில் யுரேனிய தாதுவை அதிக அளவில் வெட்டியெடுக்கும் தலை பத்து நாடுகளில் இந்தியா காணவே காணோம்.
அடுத்து fast breeder reactor - வேக ஈனுலை. யுரேனியம் 238ஐப் போட்டு புளுட்டோனியம் 239ஐப் பெறும் விஷயம். இதில் இந்தியா ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளதே தவிர இன்றுவரை தைரியமாக இந்த FBR-களை வைத்துக்கொண்டு இதோ 1000 மெகாவாட் மின்சாரம் என்று சொல்லத்தக்க வகையில் ஒன்றுமே நடைபெறவில்லை. அப்படி நடக்கிறது என்றால் அந்நிய நாட்டிடம் போய் 'எனக்கு ஒரு கிலோ யுரேனியம் தாங்க' என்று நாம் ஏன் நிற்கிறோம்?
அதேபோலத்தான் தோரியமும். தோரியத்தை வைத்து லட்சம் மெகாவாட் மின்சாரம் என்றெல்லாம் இன்று யாராவது சொன்னால் அதைவிடப் பெரிய ஜோக் ஏதும் கிடையாது. இந்த ஆராய்ச்சிகள் முடிவடையப் பல காலம் பிடிக்கும். அதற்கும் ஏகப்பட்ட பணம் தேவை. அந்தப் பணத்தையும் முதலிட அரசைத் தடுக்கும் பல கட்சிகள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
நமது FBR மற்றும் தோரிய ஆராய்ச்சிகள் இன்றுவரை உருப்படியாக மின்சாரத்தைத் தயாரிக்கும் எந்த உலையையும் நமக்குத் தரவில்லை என்பதை இந்திய அணு விஞ்ஞானிகளே ஒப்புக்கொள்வர்.
அதனால் இது நாளை நடக்கவே நடக்காது என்பதில்லை. நடந்தால் நமக்கு நல்லது.
-*-
முதலில் ஞாநி சில விஷயங்களைத் தெளிவாகச் சொல்லவேண்டும்.
1. இந்தியா அணுசக்தியில் மின்சாரம் உருவாக்கவேண்டுமா, வேண்டாமா? வேண்டாம் என்றால் FBR, தோரியம், நம்மிடம் யுரேனியம் கொட்டிக்கிடக்கிறது என்பதெல்லாம் தேவையே இல்லாத விஷயங்கள்.
என் பதில்: அணு மின்சாரத்தை விட்டால் வேறு கதியில்லை நமக்கு.
2. அணு மின்சாரம் தேவை என்றாகிவிட்டால், அதை நம்மாலேயே தயாரித்துக்கொள்ள முடியாதா?
என் பதில்: இன்றைய நிலையில் - முடியாது. நமக்கு எரிபொருளும் வேண்டும். தொழில்நுட்பமும் வேண்டும். முதலீடும் வேண்டும். நிறைய வெளியிலிருந்து வரவேண்டும்.
3. அமெரிக்காவுடன் இந்த ஒப்பந்தம் தேவையா?
என் பதில்: இரண்டு வழிகள் உள்ளன.
(அ) இந்தியா அணுகுண்டு தயாரிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்து, தன்னிடம் உள்ள குண்டுகளை எல்லாம் அழித்து, IAEA-வுடன் ஜப்பான், தென் கொரியா போன்று ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளலாம். (பாகிஸ்தான், சீனா குண்டு வைத்திருக்குமே என்று கவலைப்படக்கூடாது.) அது நடந்தால் அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தமெல்லாம் தேவையில்லை. NSG-யுடன் நேரடியாக ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு, தொடர்ந்து கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக்கொண்டு, அணு உலைகளை வைத்துக்கொண்டு மின்சாரம் மட்டும்தான் தயாரிப்போம் என்று நியாயமாக நடந்துகொள்ளலாம்.
(ஆ) ஆனால் நாம் ஜப்பான், தென்கொரியா போல நடந்துகொள்ள விரும்பவில்லை. அடிப்படையில் அணுகுண்டை வைத்திருக்க விரும்புகிறோம். சீனாவும் பாகிஸ்தானும் அணுகுண்டை வைத்துக்கொண்டு நமக்குத் தொல்லைதரும் என்று நம்புகிறோம். எனவே NPT-யில் கையெழுத்திட நாம் விரும்பவில்லை. அதே சமயம் நமக்கு யுரேனியம், தொழில்நுட்பம் ஆகியவை வேண்டும் என்று விரும்புகிறோம். எனவே அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தம் செய்துகொள்வது அவசியமாகிறது.
இந்த ஒப்பந்தத்தை உலக நாடுகள் பார்வையில் பார்த்தோமானால் பலருக்கும் அமெரிக்காமீது கோபம்தான்.
இன்று தி ஹிந்துவில் வில்லியம் பாட்டர், ஜயந்த தர்மபாலா எழுதியுள்ள கட்டுரையைப் பாருங்கள்.-*-
என் முடிவான கருத்து, இப்பொழுது போடப்பட்டிருக்கும் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் எந்தவகையிலும் இந்தியாவின் நலனுக்கு எதிரானதல்ல என்பதே.