குத்தம்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் இளங்கோ தான் கடந்து வந்திருக்கும் பாதையைப் பற்றியும் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தான் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றியும் நேற்று பேசினார்.
(அதன் ஒலித்துண்டு என்னிடம் உள்ளது. அதனை 'சுத்திகரித்து' பின் வலையேற்றுகிறேன்.)இளங்கோவின் பேச்சு (23 MB)
இளங்கோவைப் பற்றி நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கலாம். அண்ணா பல்கலைக்கழகத்தில் வேதிப்பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றவர். CSIR-இல் வேலை செய்து வந்தவர். தன் வேலையை உதறிவிட்டு கிராம முன்னேற்றத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முன்வந்த social entrepreneur. 1996-ல் தமிழகத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் நடந்தபோது சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் குத்தம்பாக்கம் பஞ்சாயத்துக்கான தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பின் மீண்டும் அடுத்தமுறையும் வென்று இப்பொழுது கிட்டத்தட்ட பத்தாண்டுகாலம் அந்தப் பஞ்சாயத்தின் தலைவராக இருந்துள்ளார்.
தான் கடந்து வந்த பாதையைப் பற்றியும் தன் பரிசோதனைகளைப் பற்றியும் நேற்று பேசினார். முதலில் கிராம நலத்திட்டங்கள் பலவற்றைச் செய்ய முற்பட்டுள்ளார். சாலைகள் அமைப்பது, கழிவுநீர் அகற்ற சாக்கடைகள் அமைப்பது, உள்ளூர் பள்ளிக்கூடத்தைச் சீரமைப்பது, வீடுகளுக்கு குழாய்மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அளிப்பது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் வசிக்க, கண்ணியமான நல்ல வீடுகள் கட்டிக்கொள்ள உதவுவது - இப்படியாகத்தான் அவரது முதன்மைகள் (priorities) இருந்தன.
ஆனால் இவை போதா என்பதை சீக்கிரமே அவர் உணர்ந்தார். கிராம மக்கள் பிரிட்டன் ஆட்சிக் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தமது சிந்திக்கும், செயலாற்றும் திறன்களை இழந்து 'எல்லாவற்றையும் அரசு செய்யும்' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கவனித்தார். விவசாயம் ஒரு வளம் கொழிக்கும் தொழிலாக இல்லாமல் போயிருப்பதையும் கவனித்தார். கிராம மக்களிடையே தொழில்முனையும் திறன் (entrepreneurial ability) இல்லாதிருப்பதைக் கண்டார். எந்தவித மதிப்புக்கூட்டுதலையும் செய்யாது விளைபொருளை நகரங்களுக்கு விற்று பின் மீண்டும் மதிப்புக்கூட்டிய பொருள்களை நகரங்களிலிருந்து வாங்குவதால் கிராமங்களிலிருந்து 'மூலதனம்' நகரங்களுக்குச் செல்வதை அறிந்துகொண்டார்.
கிராம மக்கள் ஏழைகளாகவே, அன்றாடங்காய்ச்சிகளாகவே இருந்தனர். என்னதான் நலத்திட்டங்கள் செய்தாலும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே அதிமுக்கியத் தேவை மக்களுக்கு நிலையான வருமானம் என்பதை அறிந்துகொண்டார். அதாவது 'ஏழைமையைக் குறை' என்று சொல்வதைவிட 'செல்வத்தைப் பெருக்கு', 'வருமானத்தை அதிகரி' என்பதுதான் தாரக மந்திரம் என்று புரிந்துகொண்டார்.
'கிராமப் பொருளாதரப் பின்னல்' ஒன்றை உருவாக்குவதன்மூலமும் கிராமங்களில் மதிப்புக்கூட்டும் தொழில்களை உருவாக்குவதன்மூலமும் கிராமக் கூட்டங்களுக்குத் தேவையான 80% பொருள்களை அந்தப் பின்னலிலிருந்தே பெறமுடியும் என்றும் மிகுதிக்கும் தொழில்நுட்பங்களுக்கும் மட்டும் நகரங்களைச் சார்ந்திருக்கலாம் என்றும் கணித்து அதைச் செயல்படுத்தத் தொடங்கினார். அதே நேரம் கிராம மக்களுக்கு அதிக வருமானமும் கிடைக்கும், வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
குத்தம்பாக்கத்தைச் சுற்றியுள்ள 20 கிராமங்களை இணைத்து வலைப்பின்னல் ஒன்றை உருவாக்கினார். இந்த 20 கிராமங்கள் இணைந்த கூட்டமைப்பில் சுமார் 50,000 முதல் 60,000 மக்கள் வசிக்கின்றனர். இந்தக் கூட்டமைப்பின் மாதப் பொருளாதாரம் கிட்டத்தட்ட ரூ. 5.5 - 6.0 கோடி ஆகும். அதாவது ஒரு மாதத்துக்கு அந்த அளவுக்கு இந்த மக்கள் பொருள்களை வாங்குகின்றனர். பொருள்கள் என்றால் அரிசி, பருப்பு, எண்ணெய், மாவு, பால், பால் பொருள்கள், உப்பு, சோப்பு, ஷாம்பூ, பற்பசை, செங்கற்கள், ஓடுகள், பிளாஸ்டிக் பொருள்கள், பெயிண்ட், தைத்த துணிகள், ஊதுபத்தி, மெழுகுவத்தி, நோட்டுப்புத்தகங்கள், இத்யாதி. பின் சேவைகள்.
எப்படி புதுப் பொருளாதாரத்தை இந்தப் பின்னலில் உருவாக்குவது? 'Priming the pump' என்று சொல்வார்கள். நிலத்தடி நீரை அடிகுழாய் மூலம் எடுக்க முதலில் தண்ணீர் கொஞ்சத்தை மேலே ஊற்றவேண்டும். அதன்பிறகு தொடர்ந்து அடிக்கும்போது நிலத்தடிநீர் மேலே வரத்தொடங்கும். எனவே முதலில் கொஞ்சம் மூலதனம் தேவை. அந்த மூலதனம் மான்யங்கள் மூலம் அவருக்குக் கிடைத்துள்ளது - அரசு மான்யம், தனியார் தொண்டு நிறுவனங்கள் தரும் grant.
இந்தப் பணத்தை வைத்து அரிசி மில் ஒன்றைக் கொண்டுவந்தார். நெல்லை அப்படியே விற்பதற்குபதில் அரிசியாக்கி விற்பனை செய். அதையும் வெளிச்சந்தைக்கு விற்பதற்குமுன் உள்சந்தையில் - வலைப்பின்னலுக்கு உள்ளே - விற்பனை செய். மீதி இருப்பதை வெளியே கொண்டுபோ. கடலையை ஆட்டி நெய் ஆக்கு. சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெயைத் தயாரி. உள்ளூரிலேயே சோப்பு உருவாக்கு. துவரம்பருப்பை உடைத்து சுத்திகரித்து உள்ளூரிலேயே விற்பனை செய்.
நெல்லை அரிசியாக்கும்போது கிடைக்கும் உமியை எரித்து அதன்மூலம் மின்சாரம் தயாரித்து அதிலிருந்து ஊர் விளக்குகளை எரியவைத்தல், சுட்ட செங்கற்களுக்கு பதில் அழுத்தி உருவாக்கிய களிமண் கட்டிகளைத் தயாரித்தல், ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறை - உள்ளூரிலேயே தயாரான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பேசினால் ஆனது.
ஒரு கிராமக்கூட்டத்தில் 35% விவசாயம், 15% கைத்தொழில் வினைஞர்கள், மீதி 50% எந்தத் திறனும் இல்லாத - unskilled தொழிலாளர்கள் என்ற நிலை போய், இந்த 50% மக்களை - 35% உள்ளூர் உற்பத்தியாளர்களாகவும் 15% திறனுள்ள தொழிலாளர்களாகவும் மாற்றியுள்ளார்.
இது ஓர் உடோபிய கனவா? இல்லை. இன்று குத்தம்பாக்கம் சென்று நேரிலேயே பார்க்கலாம். உலக வங்கியிலிருந்து வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். ரிசர்வ் வங்கி கவர்னர் வந்து பார்த்துவிட்டுப் போகிறார்.
இதனால் பிற கிராமங்களுக்கு ஏதேனும் நன்மையா? இதை ஒரு தனிமனிதன் ஏதோ மான்யத்தின்மூலம் உருவாக்கியிருக்கிறான், பெருமளவில் இதனைச் செய்ய சாத்தியப்படுமா என்று பலர் சந்தேகிக்கலாம்.
இல்லை, நிச்சயம் சாத்தியம் என்கிறார். ஒரு கிராமக் கூட்டமைப்பை தன்னிறைவடைந்ததாக மாற்ற ரூ. 5 கோடி pump primer தேவைப்படும் என்கிறார். அந்தப் பணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வட்டியோடு திரும்பக் கொடுத்துவிடக்கூடியதாக இருக்கும். ரிசர்வ் வங்கி கவர்னர் வந்தாராம். பார்த்தாராம். மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். "இது, இது, இதுதான் நமக்குத் தேவை" என்றுள்ளார். ஆனால் உடனேயே "நான் அந்நியச் செலாவணி பிரச்னையில் நேரத்தை செலவழிக்கவேண்டியுள்ளது. மேலும் நான் போய் காந்தியப் பொருளாதாரம், கிராம முன்னேற்றம் என்று சொன்னால் எல்லோரும் அதிர்ச்சி அடைவார்கள். என்னால் நேரடியாக ஒன்றும் செய்ய முடியாது" என்று சொல்லிவிட்டு பேங்க் ஆஃப் இந்தியா சேர்மனை இளங்கோவுக்கு அறிமுகம் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.
பேங்க் ஆஃப் இந்தியா இப்பொழுது முதல் கட்டமாக ரூ. 24.5 கோடி தருவதாகச் சொல்லியிருக்கிறது. இதன்மூலம் ஐந்து கிராமக் கூட்டமைப்புகளை வலுவான பொருளாதார மையங்களாக மாற்றமுடியும். அது வெற்றிபெற்றால் மேலும் 100 கூட்டமைப்புகளை உருவாக்கத் தேவையான பணத்தைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம்.
இனி பிற வங்கிகளும் இதைப் பின்பற்றலாம்.
என்? கையில் பணம் வைத்திருக்கும் தனியார்கூட இதில் பங்குபெறலாம். வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் பங்குபெறலாம்.
ஐயோ, எல்லாம் போயிற்றே என்று புலம்பி அழாமல், சாதித்துக் காட்டியிருக்கிறார் இளங்கோ. அடுத்தமுறை பஞ்சாயத்துத் தேர்தல் முறையில் ஏற்படும் மாற்றங்களால் (சில பஞ்சாயத்துகள் பெண்களுக்கு அல்லது ஷெட்யூல்ட் சாதியினருக்கு என்று மாற்றி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. அது நடந்தால் குத்தம்பாக்கம் இப்படிப்பட்ட ஒதுக்கீட்டுக்குள் செல்லலாம்.) இளங்கோ மீண்டும் குத்தம்பாக்கத்தில் நிற்கமுடியாமல் போகலாம். அதுவும்கூட ஒருவகையில் நல்லதுதான்.
இளங்கோவின் சேவை குத்தம்பாக்கத்துக்கு வெளியேயும் தேவை.
இந்தச் செயல்பாடுகளின்போது இளங்கோவுக்கு அரசு அதிகாரிகளின் உதவி கிட்டியுள்ளதா? இல்லை என்கிறார். சொல்லப்போனால் உபத்திரவம்தான் அதிகம் என்கிறார். இவர் செய்த பலவற்றில் குற்றம் காண்பது, இவர் பணத்தைத் தவறாகச் செலவழித்தார் என்பது, இவரது சொத்துக்களை முடக்கப்பார்ப்பது என்று பிரச்னைகள்தாம். ஆனால் அதற்கெல்லாம் இவர் கவலைப்படுபவர் போலத் தெரியவில்லை. நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதன்மூலம் பிரச்னைகளை சமாளிப்பதாகச் சொல்கிறார்.
இளங்கோ நேற்று கொண்டுவந்த powerpoint presentation-ஐ உங்களுக்காக வாங்கிவந்துள்ளேன். இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Prosperity generation and poverty reduction through Network Growth Economy, Kuthambakkam Model:
Powerpoint File (6 MB) |
Low resolution PDF File (698 KB)(கூத்தம்பாக்கம் என்று எழுதியிருந்ததை குத்தம்பாக்கம் என்று மாற்றியுள்ளேன்.)