பால் கெட்டி என்றால் ஏதோ மாட்டுப் பால் தண்ணீர் கலக்காமல் இருக்கிறது என்று நினைக்கவேண்டாம்.
சென்ற வாரம் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது கிரிக்கின்ஃபோ, விஸ்டன் ஆகியவை பற்றி பேச்சு எழுந்தது. அப்போது அதில் ஈடுபட்ட பலரைப் பற்றிப் பேசவேண்டி இருந்தது. அப்படிப்பட்ட ஒருவர்தான் பால் கெட்டி.
இவரை நான் கடைசிவரை சந்திக்கவேயில்லை.
அமெரிக்காவில் பெட்ரோல் வியாபாரம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் கெட்டி ஆயில் என்ற நிறுவனத்தை உருவாக்கியவர் ஜே.பால் கெட்டி. அவரது மகனாகப் பிறந்தவர்தான் யூஜீன் பால் கெட்டி, பின்னர் தனது பெயரை ஜான் பால் கெட்டி என்று மாற்றிக்கொண்டார்.
ஜே.பால் கெட்டியின் பெட்ரோல் தொழில் படுவேகமாக வளர்ந்து அவர் மில்லியன்களுக்கு அதிபதியானார். அவரது மகன் ஜான் பால் கெட்டியோ, வேலையில் அவ்வளவு சமர்த்து கிடையாது. 1960களின் அமெரிக்க ஹிப்பி கலாசாரத்தில் வளர்ந்த ஜான் பால் கெட்டி, கஞ்சாவில் மிதந்தார்.
இத்தாலி நாட்டின் கெட்டி ஆயில் கிளைக்குத் தலைமை நிர்வாகியாக அனுப்பப்பட்ட ஜான் பால் கெட்டியின் வாழ்வில் மாஃபியா குறுக்கிட்டது. அவரது பையன் ஜான் பால் கெட்டி-3 இத்தாலிய மாஃபியாவால் கடத்தப்பட்டான். பையன் வேண்டுமானால் எடுத்து வை 17 மில்லியன் டாலரை என்றது மாஃபியா. அவ்வளவு பணத்துக்கு எங்கே போவேன் என்றார் கெட்டி. பில்லியனுக்கு அதிபதியான தன் தந்தையிடம் கேட்டார். அவரோ, தனக்கு மேலும் பல பேரப் பிள்ளைகள் இருப்பதாகவும், ஒருவருக்குப் பணயப் பணம் கொடுத்தால் மேலும் மேலும் கொடுக்கவேண்டியிருக்கும் என்றும் சொல்லிவிட்டார்.
மாஃபியா, சிறு பிள்ளையில் காதை அறுத்து தபாலில் அனுப்பிவைத்தார்கள். வேறு வழியின்றி, தாத்தா பணம் கொடுத்தார்.
ஜான் பால் கெட்டியின் வாழ்வில் போதை மருந்துகள் பெரும் அங்கம் வகிக்க ஆரம்பித்தன. நடிகை ஒருவரை மணம் புரிந்துகொண்டு போதையில் மிதக்க ஆரம்பித்தார். ஒரு நாள் அந்த நடிகை அதீதமாக போதை மருந்தை உட்கொண்டதில் இத்தாலியில் உயிரிழந்தார். காவலர்கள் ஜான் பால் கெட்டியை விசாரணை செய்ய விரும்பினர்.
தான் கைது செய்யப்பட்டுவிடுவோமோ என்று பயந்த கெட்டி ஓடினார். அப்போது (1970-கள்) பிரிட்டன் மட்டும்தான் இத்தாலியுடன் extradition ஒப்பந்தம் இல்லாத நாடாக இருந்தது என்று நினைக்கிறேன். அதனால் பிரிட்டன் ஓடிவந்த கெட்டி depression-இல் விழுந்தார்.
அவரது தந்தையோ, பையன் உதவாக்கரை என்று அவருக்குப் பணம் எதையும் தராமல் உயில் எழுதிவிட்டு உயிரை விட்டார். மருத்துவமனையில் சேர்ந்த பால் கெட்டி உயிர் வாழ உதவியது கிரிக்கெட்.
பால் கெட்டியுடன் கூட கஞ்சா அடித்த ராக் ஸ்டார் மிக் ஜாக்கர், மருத்துவமனையில் போதைப் பழக்கத்தைக் கைவிடப் பாடுபடும் நண்பருக்கு உதவ நிறைய கிரிக்கெட் வீடியோ கேஸட்களைக் கொடுத்து உதவினார். (மிக் ஜாக்கர் கிரிக்கின்ஃபோவுடன் சேர்ந்து லைவ் வெப் ஸ்ட்ரீமிங் செய்த கதை மற்றொரு சமயம்.)
போதை மருந்து, குடி, பெண்கள் என்று வீணாகிப்போன கெட்டி, கிரிக்கெட்டின் உதவியால் உயிர் பிழைத்து மனிதரானார்.
இதற்குள் அவரது பாட்டி இறந்து, எக்கச்சக்க மில்லியன் டாலர்களை பேரனுக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பணத்தைச் செலவு செய்ததுதான் பால் கெட்டி உருப்படியாகச் செய்த ஒரே வேலை. நல்ல காரியங்களுக்கு பணத்தை வாரிவிட்டார். அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்து பிரிட்டிஷ் குடிமகன் ஆனார். மார்கரெட் தாட்சரை எதிர்த்து நியூ காசில் கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது அவர்களுக்கு உதவ நிறையப் பணம் அளித்தார். கிரிக்கெட்டுக்கும் நிறையப் பணம் கொடுத்தார்.
ஜான் விஸ்டன் என்பவரால் 1864-ல் தொடங்கப்பட்ட விஸ்டன் கிரிக்கெட் அல்மனாக் நிறுவனம் நஷ்டத்தில் திண்டாடியபோது 1980களில் அந்த நிறுவனத்தை கெட்டி வாங்கி, நஷ்டத்தை தன் பணத்திலிருந்து கொடுத்துவந்தார். பின்னர் விஸ்டன் கிரிக்கெட்டர் என்ற மாத இதழ் தொடங்கி நடந்தபோது அதில் இருந்த நஷ்டத்தையும் ஈடுகட்டினார்.
கிரிக்கின்ஃபோ ஆரம்பித்து வளர்ந்த காலத்தில் குவிண்டஸ் என்ற நிறுவனத்தின் சில ஆசாமிகள், பால் கெட்டியை வளைத்து விஸ்டன்.காம் என்ற இணையத்தளத்தை ஆரம்பித்து மில்லியன் மில்லியனாகக் குவிக்கலாம் என்று திட்டம் கொடுத்தனர். அந்த முயற்சிக்குத் தேவையான சில மில்லியன்களை அள்ளிக் கொடுத்தவரும் பால் கெட்டிதான்.
ஆனால் விஸ்டன்.காம் செலவு செய்த அளவுக்கு அதைப் பார்க்க ஆள்களும் கிடைக்கவில்லை, வருமானமும் வரவில்லை. ஆனால் கெட்டியின் கைகளில் நிறையப் பணம் இருந்தது. மறுபக்கம் கிரிக்கின்ஃபோவிடம் வாடிக்கையாளர்கள் இருந்தனர்; வருமானம் ஓரளவுக்கு இருந்தது; ஆனால் கையில் நிறையக் கடன்கள். எனவே விஸ்டன்.காம், கிரிக்கின்ஃபோவை வாங்கியது. அப்போது கிரிக்கின்ஃபோவின் முக்கியமான பொறுப்பில் நான் இருந்தேன்.
கிரிக்கின்ஃபோ வாங்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள்ளாக பால் கெட்டி இறந்துவிட்டார். அவரது மகன் (காது அறுபடாத) மார்க் கெட்டியின் கைக்கு கிரிக்கின்ஃபோ வந்தது. மார்க் கெட்டி பிரிட்டனில் இருந்தாலும் ஒரு முழு அமெரிக்கன். அவரை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன்.
மார்க், தந்தையைப் போன்றவர் அல்லர். வேலை செய்து, சம்பாதித்து, பெரிய ஆளாகவேண்டும் என்று நினைத்தவர். அதனால் கெட்டி இமேஜஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். மார்க் கெட்டி கிரிக்கெட்டில் அவ்வளவாக ஈடுபாடு கொண்டவர் அல்ல. எனவே நல்ல விலை வந்ததும் கிரிக்கின்ஃபோவை ஈ.எஸ்.பி.என் நிறுவனத்துக்கு விற்றுவிட்டார். ஆனால் விஸ்டன் அல்மனாக்கை மட்டும் இன்னமும் கையில் வைத்துள்ளார். தந்தையின் ஞாபகார்த்தமாக இருக்கலாம்.