Friday, December 30, 2011

2011: மன்மோகன் சிங்

என்ன ஒரு வீழ்ச்சி! மெத்தப் படித்தவர். 1990-களில் இந்தியா அழிவின் விளிம்பில் இருந்தபோது பொருளாதாரச் சீர்திருத்தங்களால் காத்தவர். இடதுசாரிகளுக்கு மட்டும் இவர், சர்வதேச நிதியத்தின் கையாள், அமெரிக்க உளவாளி, இந்தியாவை விற்கும் கயவன்.

ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.

நியாயமானவர் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் முதுகெலும்பே இல்லாமல், நாளுக்கு நாள் அவமானப்பட்டுக்கொண்டு, ஏன் இன்னமும் சோனியாவைக் காக்க முற்படுகிறார்? ஊழலில் தோய்ந்த அமைச்சரவை, யாரும் இவரது அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில்லை, பெயரளவுக்கு ஒரு பிரதமர். உலகம் மதிக்கிறது, சொந்த நாட்டில் மட்டும் மதிப்பில்லை.

2ஜி, காமன்வெல்த், ஆதர்ஷ் விவகாரங்களுக்குப் பிறகு, இவர் பேசாமல் பஞ்சாபில் கோதுமை நடப் போயிருக்கலாம். தினம் தினம் அசிங்கப்படுகிறார். லோக்பால் சட்ட விவாதங்களின்போது பாஜகவினர் அசிங்க அசிங்கமாக இவரைப் பற்றிப் பேசுகிறார்கள். கோபமே கொள்ளாது உட்கார்ந்திருக்கிறார். கோபித்துத்தான் என்ன பயன்? ராகுல் காந்தியே பார்த்துக்கொள்ளட்டும் என்று போய்விடலாம்.

வேண்டாம் சார்! பேசாமல் வீட்டுக்குப் போய், நாலைந்து எகனாமிக்ஸ் பாடப் புத்தகம் எழுதுங்கள். இந்த பாலிடிக்ஸில் புகுந்து புறப்பட உங்களுக்குத் தெரியவில்லை. அதையெல்லாம் பிரணவ்டாவிடம் விட்டுவிடுங்கள்.

2011: சுப்ரமணியன் சுவாமி

தெஹெல்காவில் இவரைப் பற்றி நீண்ட ஒரு கட்டுரை வந்துள்ளது. வாசியுங்கள்.

2ஜி ஊழல் வழக்கில் தனியாளாக நின்று நீதிமன்றத்தில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் சர்ச்சையான மனிதர். ஏன், எதற்கு இவர் ஒரு வழக்கைக் கையில் எடுத்துக்கொள்கிறார் என்பதில் எனக்கு நிறையச் சந்தேகங்கள் உள்ளன. ஆனால் விடாக்கண்டர். அரசியல் உலகில் உள்ள அசிங்கங்கள் பெரும்பாலாம் பலருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும் அவற்றைப் பிடித்துக்கொண்டு நீதிமன்றம் வரை சென்று தொடர்ந்து வழக்காடுபவர்கள் இவரைப்போல யாருமே இல்லை. திமுகவை - ராசாவை, கனிமொழியை - மட்டுமின்றி, காங்கிரஸின் சிதம்பரத்தையும் அடுத்து ராபர்ட் வாத்ரா, சோனியா காந்தி இருவரையும் ஒரு கை பார்த்துவிடுகிறேன் என்று சூளுரைத்திருக்கும் இவரும் 2011-ல் இந்தியர்களின் மனம் கவர்ந்தவராகிறார்.

அண்ணா ஹசாரேவுக்கு எந்த அளவுக்கு எதிர்ப்பு இருக்கிறதோ அதைவிட அதிகமான எதிர்ப்பு இவர்மீது இருக்கிறது. அதுவும் தமிழ்நாட்டில் அதிகம். விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர், பார்ப்பனர் என்பதுவேறு சேர்த்தி.

2ஜி விவகாரத்தில் ஏதோ சரியில்லை என்று முதலில் கண்டுபிடித்தது சில பத்திரிகையாளர்கள்தாம். அதனை முக்கிய எதிர்க்கட்சியான பாஜக எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்று ரூம் போட்டு யோசிப்பதற்கு முன்னதாகவே களத்தில் குதித்து தனக்கான போராக மாற்றிக்கொண்டவர் சுவாமி. மாபெரும் சந்தர்ப்பவாதி. மாபெரும் போராளி.

இந்தியாவை ஊழலிலிருந்து காக்கவந்த மாமனிதர் என்பதாகத்தான் ட்விட்டரில் இவருடைய ஆர்வலர்கள் பேசிக்கொள்கிறார்கள். அதில் எனக்குச் சம்மதம் இல்லை. சுவாமியின் முதல் குறி அரசியல் ஆதாயம்தான். அதனால்தான் கருணாநிதி, ஜெயலலிதா இருவர்மீதும் ஊழல் வழக்குகள் போட்டுக்கொண்டே ஜெயலலிதாவுடன் சமரசம் பேசுகிறார். சோனியாவுடன் சேர்ந்துகொண்டு பாஜகவைக் குழிபறித்துத் தள்ளிவிட்டு, இப்போது சோனியாவை ஒழித்துக்கட்டிவிடுவதாகப் போராடுகிறார். ராஜிவ் காந்தி தன் உற்ற நண்பர் என்று சொல்லியவர், அப்போது கையில் எடுக்காத போஃபோர்ஸ் பணப் பட்டுவாடா + ஸ்விஸ் வங்கிக் கணக்குப் பிரச்னையை இப்போது பேசுகிறார்.

ஆனாலும், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இவரும் முக்கியக் கண்ணியே. பிறரால் செய்யமுடியாத பலவற்றை இவரால் செய்யமுடியும். பயமே இன்றி ஆட்சியில் இருப்போரை இவரால் தனியொரு மனிதனாக எதிர்கொள்ள முடியும். மாறி மாறி ஆளுனர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் கடிதங்கள் எழுதி, முதல்வர்கள், மந்திரிகள்மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்த முடியும். நீதிமன்றங்களில் தாமாகவே வழக்காடி நீதிபதிகளை ஏற்கவைக்க முடியும்.

அதுவரையில் இவர், இவருடைய எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமே.

Thursday, December 29, 2011

உடையும் இந்தியா?

இரு அறிவிப்புகள்.

முதலாவது, ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள ‘உடையும் இந்தியா: ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்’ என்ற புத்தகத்துக்கான அறிமுக விழா, ஜனவரி 3, 2012 அன்று தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. இதனை நடத்துபவர்கள் தமிழ் ஹிந்து அமைப்பினர். புத்தகத்தை நான் அறிமுகம் செய்கிறேன். பின்னர் பேரா. சாமி தியாகராஜன், எழுத்தாளர் ஜோ டி குரூஸ், கிருஷ்ண பறையனார், இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றிய தியாக. சத்தியமூர்த்தி, கல்வெட்டாளர் எஸ். இராமச்சந்திரன், பாஜகவின் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் பேசுகிறார்கள். அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்.


இரண்டாவது, திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருப்பது. ஃபேஸ்புக்கில் நான் பார்த்தது இது:
அண்மையில், ஆர்.எஸ்.எஸ்., இந்துத்வா மதவெறி சக்திகளின் ஆரிய- திராவிடப் புரட்டுகளும் - அந்நியத் தலையீடுகளும் என்ற தலைப்பில் உடையும் இந்தியா என்ற இரண்டு இந்து மத பார்ப்பனப் பிரச்சாரர்களால் எழுதப்பட்டு, வெளிவந்துள்ள நூலுக்கு மறுப்புரை அளிக்கும் புரட்டு என்ற புரட்டினை புட்டு வைக்க உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? என்ற தலைப்பில், ஓர் ஆய்வரங்கம் 2012 சனவரி 8.9 ஆகிய நாள்களில் நடைபெறவிருக்கிறது! பெரியார் திடலில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். - திராவிடர் கழகம்
புத்தகத்தை வாங்க

Wednesday, December 28, 2011

2011: அண்ணா ஹசாரே

சந்தேகத்துக்கு இடமே இல்லாமல், 2011-ல் அதிகம் பேசப்பட்ட இந்தியர், இந்தியாமீது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அண்ணா ஹசாரேதான்.

ஜன லோக்பால் என்ற மசோதா முன்வரைவை முன்வைத்து ஹசாரேவும் அவருடைய குழுவினரும் பெரும் போராட்டங்களைச் செய்தார்கள். அதன் காரணமாக அரசியல் கட்சிகள் லோக்பால் மசோதாவைக் கையில் எடுக்கவேண்டியதாயிற்று. லோக்பால் என்பது ஊழலை எதிர்க்க ஓர் அமைப்பு. அரசியல்வாதிகள் தாங்களாகவே இதனைச் செய்திருக்கா மாட்டார்கள். அண்ணா ஹசாரேவின் தொடர் உண்ணாவிரத மிரட்டல்களால்தான் இத்தனை வேகமாக அரசு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது. முதலில் அரசு கொண்டுவந்த டுபாக்கூர் மசோதா, பின் கொஞ்சம் அதிகமான பலத்துடன் நேற்று கொண்டுவரப்பட்டு, சாதாரணச் சட்டமாக (அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாக இல்லாமல்) மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலங்கள் அவையில் என்ன ஆகும் என்பது இன்று தெரிந்துவிடும்.

அண்ணா ஒரு காந்தியா? அண்ணா ஒரு ஏமாற்றுப் பேர்வழியா? அண்ணா வெறும் முகமூடியா? பின்னிருந்து இயக்குவது யார்? கேஜ்ரிவால், கிரண் பேடி, பிரஷாந்த் பூஷன்/ஷாந்தி பூஷன் ஆகியோர் எப்படிப்பட்டவர்கள்? இந்த இயக்கத்தின்பின் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு என்ன? இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள்.

வெறும் மத்தியவர்க்கப் பிரஜைகள்தான் அண்ணாவைப் போற்றுகிறார்கள், உழைக்கும் வர்க்கத்தவர் அல்லர்; பாருங்கள், மும்பையில் உண்ணாவிரத மைதானத்துக்கு யாருமே வரவில்லை என்கிறார்கள் சிலர். 74 வயதாகும் அண்ணாவின் உடல்நிலை தொடர் உண்ணாவிரதங்களாலும் ஊர் சுற்றுவதாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜன் லோக்பால் என்பது சர்வத்துக்குமான ஒரே அருமருந்து என்று ஊழலுக்கு எதிரான போராட்டத்தைக் குறுக்கிவிடுகிறார் இவர் என்பது ஒரு குற்றச்சாட்டு. அரசுக்கு மேலாக ஒரு சூப்பர் அரசமைப்பைக் கொண்டுவர முயற்சித்து அரசியலமைப்புச் சட்டத்தையே கேலிக்கு உள்ளாக்குகிறார் இவர் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட ஒரே அமைப்பான நாடாளுமன்றத்தைக் கேலி செய்கிறார், அவமதிக்கிறார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

இவர் வெறும் ஒரு பண்ணையார்தான்; ராலேகான் சித்தியில் கீழ்ச்சாதியினருக்கும் இன்னும் உரிமைகள் கிடையாது; குடிக்க முற்பட்டவர்களை தூணில் கட்டிவைத்து பெல்ட் எடுத்து விளாசியவர்தான் இவர்; இதோ நாங்கள் நேரடியாகவே அந்த ஊருக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிட்டோம்; அது ஒன்றும் பூலோக சொர்க்கம் இல்லை... என்பவர்கள் இருக்கிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டுகளையெல்லாம் கடந்து, அவருடைய சில திருவாய் மலர்தல்களையெல்லாம் தாண்டி, 2011-ல் பெருவாரியான இந்தியர்களின் மனத்தைத் தொட்ட மனிதர் அண்ணா ஹசாரேதான் என்பதை நான் உறுதியாகச் சொல்லமுடியும்.

ஏனென்றால், அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல் என்பதை நீக்கமுடியும் என்ற நம்பிக்கையை பெருவாரியான இந்தியர்கள் மனத்தில் கொண்டுவந்துள்ளார். உண்மையிலேயே இது முடியுமா, சாத்தியமா என்பது அடுத்த கேள்வி. ஆனால் இதுநாள்வரையில், ஊழல் என்பது நம்மோடே இருக்கும் ஒன்று, அதை அசைத்துக்கூடப் பார்க்கமுடியாது என்றுதான் நாம் நம்பிவந்திருக்கிறோம். அப்படி, காந்தி காலத்தில் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை என்பதை பெருவாரியான மக்களால் நம்பமுடியவில்லையோ, அப்படி. எப்படி காந்தி விடுதலை பற்றிய நம்பிக்கை கொடுத்தாரோ, அப்படி ஹசாரே ஊழலை ஒழிக்கமுடியும் என்று ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார். அவருடைய வழிமுறை எப்படி இருந்தாலும், நாம் நம் சொந்த வழிமுறை மூலமாவது ஊழலை எதிர்கொள்ளலாம். நாமே ஊழலில் ஈடுபட்டிருப்பவர்களாக இருந்தாலும்கூட.

Monday, December 26, 2011

ரகுநாதாப்யுதயமு - ஸ்வர்ணமால்யா (ஒலிப்பதிவு)

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011


27 டிசம்பர் 2011 அன்று நிறைவு நாளில், ஸ்வர்ணமால்யா, தஞ்சையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி நடத்திய நாயக்க மன்னரான ரகுநாத நாயக்கரின் வாழ்க்கையை விவரிக்கிறார். ரகுநாத நாயக்கரின் மகன் விஜயராகவ நாயக்கர் தெலுங்கில் யக்ஷகானமாக எழுதியதுதான் ரகுநாதப்யுதயமு.

முனைவர் பாலுசாமி, நாயக்கர் கலை பற்றி ஒரு முன்னுரை தருகிறார்.ஸ்வர்ணமால்யா இசை-நாட்டிய-நாடகமாகவும் பேச்சாகவும் ரகுநாதாப்யுதயுமு-வை வழங்குகிறார்.

Sunday, December 25, 2011

கங்கைகொண்ட சோழபுரம் - குடவாயில் பாலசுப்ரமணியன் (ஒலிப்பதிவு)

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011


சோழர் கலை பற்றிய அறிமுக உரை

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியனின் உரை:

Saturday, December 24, 2011

இந்திய புனிதக் கலை - உமாபதி (ஒலிப்பதிவு)

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011


ஸ்தபதி கே.பி. உமாபதி ஆசார்யா, கோயில் கட்டுதல், சிலை செதுக்குதல், உலோகத்தில் திருமேனி செய்தல் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர். கீழே அவர் உருவாக்கிய கஜசம்ஹாரமூர்த்தி உருவத்தைக் காணலாம்.


இந்திய புனிதக் கலை பாரம்பரியம் பற்றி ஜெயச்சந்திரனின் அறிமுக உரை.தொடர்ந்து, ஸ்தபதி உமாபதி ஆசார்யாவின் உரை.

Friday, December 23, 2011

அருச்சுனன் தபசு - பாலுசாமி (ஒலிப்பதிவு)


24 டிசம்பர் 2011, பேராசிரியர் சா. பாலுசாமி, ‘அருச்சுனன் தபசு: மாமல்லபுரம் சிற்பம் பற்றிய புதிய பார்வை’ என்ற தலைப்பில் பேசியதன் ஒலிப்பதிவு, இரண்டு பகுதிகளாக. முதல் பகுதியில் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் புடைப்புச் சிற்பங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிப் பேசுகிறார். அடுத்த பகுதியில் பேராசிரியர் பாலுசாமி அருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பத்தை முன்வைத்துத் தன் பேச்சைத் தருகிறார்.குறுந்தொகை - ஜெயமோகன் (ஒலிப்பதிவு)

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011


23 டிசம்பர் 2011 அன்று ஜெயமோகன் ஆற்றிய ‘குறுந்தொகை, தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்’ என்ற உரையின் ஒலிப்பதிவு.

கிழக்கு பாட்காஸ்ட்: திராவிட இயக்க வரலாறு (பாகம் 3)

அண்ணா பற்றி. புத்தகத்தை வாங்க ஒன்று | இரண்டு


Wednesday, December 21, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: முல்லைப் பெரியாறு விவாதம்

ஊரோடி வீரகுமார், தேனியில் விவசாயம் செய்பவர். கிழக்கு பதிப்பகத்துக்காக விவசாயம் பற்றி சில புத்தகங்களை எழுதியுள்ளார். முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது இன்றைய அப்டேட் சேர்த்து, அடுத்த வாரம் முதல் கிடைக்கும்.

அவருடன் பேசுவதை ஒளிப்பதிவு செய்ய அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பயம் ஏதும் இல்லை, ஆனால் தன் முகம் வெளியே தெரிவதை தான் விரும்புவதில்லை என்றார். ஒலிப்பதிவுக் கருவியின் தரம் + சுற்றுப்புறச் சத்தம் சேர்ந்து சுமாராகத்தான் வந்துள்ளது. புத்தகத்தை வாங்க.கிழக்கு பாட்காஸ்ட்: திராவிட இயக்க வரலாறு (பாகம் 1)

சென்ற ஆண்டு வெளியான ‘திராவிட இயக்க வரலாறு’ - இரு தொகுதிகளாக வெளியான புத்தகம் பற்றிய உரையாடல். முதல் தொகுதி பற்றிய உரையாடல் மூன்று பாகங்களாக வெளியாகிறது. முதல் பாகத்தில் நீதிக் கட்சி உருவாவது. இரண்டாவதில் பெரியார். மூன்றாவது அண்ணா; அவர் கட்சி ஜெயிப்பது, அண்ணாவின் இறப்பு ஆகியவை வரையில். புத்தகத்தை வாங்க ஒன்று | இரண்டு

கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா, இன்னபிறர் இனி மெதுவாக வருவார்கள்.Thursday, December 15, 2011

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011

‘தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை’ என்ற பதிவுசெய்யப்பட்ட ஒரு அறக்கட்டளையை நாங்கள் நடத்திவருகிறோம். நான் அதில் ஓர் அறங்காவலன். பேராசிரியர் சுவாமிநாதன் அறக்கட்டளையின் தலைவர். பாரம்பரியம் என்று நாங்கள் பார்ப்பது இலக்கியம், சிற்பம், ஓவியம், கோவில் கட்டுமானம், இசை, நாட்டியம் போன்றவை.

மாதாமாதம் முதல் சனிக்கிழமை அன்று பாரம்பரியம் தொடர்பாக ஓர் உரையை நடத்துவோம். இதுவரை நடத்தியுள்ள அனைத்து நிகழ்வுகள் பற்றியும் அதில் சுமார் 80%-க்கும் மேற்பட்டவற்றின் முழு ஒளிப்பதிவுகளையும் நீங்கள் இங்கே காணலாம்.

இதுதவிர, விருப்பம் உள்ள சுமார் 20-25 பேர் சேர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை பாரம்பரிய இடங்களுக்குப் போய் நான்கைந்து நாட்கள் தங்கியிருந்து தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்களைப் பற்றி ஆர்வமாகக் கற்போம். இங்கு போவதற்குமுன் ஓரிரு மாதங்கள் அந்த இடம் தொடர்பானவற்றைப் பற்றிப் படிப்போம். பேசுவோம். விவாதிப்போம். இவ்வாறு மகாபலிபுரம், அஜந்தா/எல்லோரா ஆகிய இடங்களுக்குக் கடந்த இரண்டாண்டுகளில் சென்றுவந்துள்ளோம். வரும் ஜனவரி மாதம், புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இடங்களைச் சுற்றிவரப்போகிறோம்.

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் சென்னையில் இசை கேட்பதற்காகக் கூடும் மாபெரும் மக்கள் திரளிடம் எப்படி இசை தவிர பிற பாரம்பரிய விஷயங்களை அறிமுகம் செய்வது என்று ஒருமுறை பேச்சு வந்தது. இசையை விரும்புவோர், பிறவற்றை விரும்பவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் முயற்சி செய்வதில் என்ன தவறு? அதில் ஆரம்பித்ததுதான் ‘பாரம்பரியக் கச்சேரி 2011’. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் இதனை நடத்த உள்ளோம்.

இந்த ஆண்டு நிகழ்வு கீழே:

23 டிசம்பர் 2011 - எழுத்தாளர் ஜெயமோகன் - குறுந்தொகை: தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்
24 டிசம்பர் 2011 - பேராசிரியர் சா. பாலுசாமி - அருச்சுனன் தபசு: மாமல்லபுரம் சிற்பம் பற்றிய புதிய பார்வை
25 டிசம்பர் 2011 - ஸ்தபதி கே.பி. உமாபதி ஆசார்யா - இந்திய புனிதக் கலைப் பாரம்பரியம்
26 டிசம்பர் 2011 - முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் - கங்கைகொண்ட சோழபுரம்: வரலாறும் கலையும்
27 டிசம்பர் 2011 - நடனக் கலைஞர் ஸ்வர்ணமால்யா கணேஷ் - ரகுநாத நாயக்கரின் வாழ்க்கை - யக்ஷகானம்

அனைத்து நிகழ்வுகளும் நடக்கும் இடம்: ராகசுதா அரங்கம், மைலாப்பூர் (நாகேஸ்வர ராவ் பூங்கா அருகில்). 150 பேர் வரைதான் உட்கார முடியும். தினமும் காலை 10.00 முதல் 12.00 மணி வரை. அனுமதி இலவசம்.

***

நிகழ்ச்சிகளை முடிவு செய்யும்போது, இரண்டு குறுக்குவெட்டுகளைப் பார்த்தோம். ஒன்று வரலாற்றில் ஒரு விரிந்த வெளி இருக்கவேண்டும். மற்றொன்று, பல கலைகளோடு தொடர்புடையதாக இருக்கவேண்டும்.

அப்படித்தான் இங்கே சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம் என்று காலம் நகர்ந்துவருவதை நீங்கள் பார்க்கலாம். அதேபோல, இலக்கியம், சிற்பம், ஓவியம், கோவில் கட்டுமானம், பாடல் இயற்றுதல், நடனம் என அனைத்து கலைகளையும் பார்க்கலாம். சுவாரசியமான பேச்சாளர்களாகவும் வேண்டும். வெகுஜனங்கள் ரசிக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.

ரகுநாத நாயக்கரை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் நாயக்க மன்னர்களில் மிக முக்கியமானவர். பாடல் இயற்றுவார். பாடுவார். வீணை வாசிப்பார். பல மொழிகளை அறிந்தவர். தஞ்சையிலிருந்து ஆட்சி செய்தார். தெலுங்கு பேசும் அரசர்கள். இவருடைய மகன், தன் தந்தையின் வாழ்க்கையை யக்ஷகானமாக தெலுங்கில் பாடியுள்ளார். அதிலிருந்து அக்காலத் தஞ்சையின் வரலாறு பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ள முடியும் என்று ஸ்வர்ணமால்யா தமிழில் பேசுவார், பாடுவார், அபிநயம் புரிவார்.

குறுந்தொகை, சங்க இலக்கியத்திலேயே மிகவும் சுவை வாய்ந்தது. அதுதான் பிற சங்க நூல்களையெல்லாம்விடப் பழமையானதும்கூட என்கிறார்கள். ஆனால் அதுதான் பிற சங்கத் தொகைகளையெல்லாம்விட மிகச் சிறப்பானதும். குறுந்தொகை பற்றியும் தமிழ்க் கவிமரபு பற்றியும் ஜெயமோகன் பேச உள்ளார்.

பேராசிரியர் பாலுசாமி, சென்னை கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறையில் இருப்பவர். ஆனால் வரலாறுதான் அவருக்கு விருப்பமான துறை என்று நினைக்கிறேன். நாயக்கர் கலை பற்றிதான் அவருடைய முனைவர் பட்ட ஆராய்ச்சியே. மாமல்லபுரத்தின் சிற்பங்கள் பற்றி அவர் விவரிப்பது தாளமுடியாத ஆச்சரியத்தைத் தரும். அந்தந்தச் சிற்பங்களுக்குமுன் அவர் நின்றுகொண்டு பேசினால், அங்கிருந்து நகரவே உங்களுக்கு மனம் வராது. அருச்சுனன் தபசு பற்றி அவர் ஏற்கெனவே தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டலை சார்பாகப் பேசியுள்ளார். பிற இடங்களிலும் பேசியுள்ளார். காலச்சுவடு வாயிலாகப் புத்தகமும் வெளியாகியுள்ளது. ஆனால் மேலும் விரிவான ஒரு கூட்டத்தின்முன் இதனைப் பேச மீண்டும் அவரை அழைத்திருக்கிறோம்.

குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் கியூரேட்டராக இருந்து ஓய்வு பெற்றவர். வரலாற்றாளர். கல்வெட்டாளர். ஏகப்பட்ட கல்வெட்டுகள், சிலைகள், காசுகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து அவை யாருடையவை, அவற்றில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கின்றன என்பதையெல்லாம் வரலாற்று நோக்கில் வெளியிட்டுள்ளவர். தஞ்சைப் பெரிய கோவில் பற்றிய இவருடைய புத்தகம் முக்கியமானது. இவர் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் வரலாறையும் கங்கைப் படையெடுப்பையும் ராஜேந்திர சோழனுடைய வாழ்க்கையையும் தொடுவதோடு, அந்தக் கோவிலில் உள்ள சிற்பங்கள், பிற கட்டுமானங்கள், அங்குள்ள கல்வெட்டுகள், பிற்காலக் கொடைகள் என பலவற்றைப் பற்றியும் விரிவாகப் பேசப்போகிறார்.

இன்னொரு பேச்சைத் தரப்போவது ஸ்தபதி உமாபதி ஆசார்யா. இவர் விஸ்வகர்மா குடும்பத்தைச் சேர்ந்தவர். பரம்பரை பரம்பரையாகக் கோவில் கட்டுதல், சிலை வடித்தல் ஆகியவைதான் இவர்களுடைய தொழில். இன்றைய எஞ்சினியர்கள் வியக்கும் வண்ணம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் சமைக்கப்பட்ட பல கோவில்கள் தமிழகம் முழுவதும் உள்ளன. இவற்றை இந்த ஸ்தபதிகள் எப்படிக் கட்ட ஆரம்பிப்பார்கள்? எம்மாதிரியான பயிற்சி பெற்றவர்கள் இவர்கள்? ஒரு சிலையை வடிப்பதற்குமுன் என்ன செய்வார்கள்? எந்த மாதிரியைக் கொண்டு இவற்றை உருவாக்குவார்கள்? இதுபோன்ற பல கேள்விகளுக்கெல்லாம் இந்தப் பேச்சில் விடை கிடைக்கலாம்.

***

ஒவ்வொரு பேச்சும் சுமார் 90 நிமிடங்கள். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், 15 நிமிடத்துக்கு ஒரு சிறு அறிமுக உரை இருக்கும். இதனை வேறு ஒருவர் வழங்குவார். பல்லவர் கலை, சோழர் கலை, சங்க இலக்கியம், நாட்டியம், இப்படி அன்றன்றைய டாபிக் சார்ந்து மிகச் சிறியதோர் அறிமுகமாக இது இருக்கும்.

இந்த நிகழ்ச்சி பற்றி உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள்.

இது தொடர்பாக தனிப்பட்ட நபர்களது நன்கொடைகளை வரவேற்கிறோம். நன்கொடை தர விரும்புபவர்கள் என்னைத் தொடர்புகொள்ளலாம். (மொபைல்: 98840-66566). ஏதேனும் நிறுவனம் இந்நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர்ஷிப் தர விரும்பினாலும் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்.

தொடர்புள்ள ஜெயமோகனின் பதிவு

Saturday, December 10, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா? (பாகம் 3)

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள உடையும் இந்தியா: ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்ற புத்தகத்தை முன்வைத்து, இந்தியா எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் எவையெவை என்று ஓர் அலசல். புத்தக ஆசிரியர் அரவிந்தன் நீலகண்டனுடன்.கருப்பாயி என்கிற நூர்ஜஹான்

அன்வர் பாலசிங்கம் எழுதி கலங்கைப் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தக் கதையை நேற்று இரவு படித்து முடித்தேன். சிறிய புத்தகம். தொண்ணூற்றி சொச்சம் பக்கங்கள்.

கதை எழுதும் வடிவம் அவருக்குச் சிக்கவில்லை. மொழிக்குழப்பம், நீண்ட, தேவையில்லாத வசனங்கள் பல இடங்களில். இந்தச் சின்னப் புத்தகத்திலுமே அலுப்பூட்டக்கூடியமாதிரி மீண்டும் மீண்டும் வரும் பேட்டர்ன்.

எனவே அதில் உள்ள கருத்தை மட்டும் எடுத்துப் பார்ப்போம். கதை ஒரு முக்கியமான சமூக நிகழ்வை முன்வைத்து அதற்குத் தீர்வு கிடைக்குமா என்ற கேள்வியை கேட்கிறது.

1981-ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டைக்கு அருகில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில், தேவர் சாதியினரின் அடக்குமுறையைத் தொடர்ந்து எதிர்கொண்டுவந்த பல பள்ளர் குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்துக்கு மாறின. அதைத்தான் கதைக்களனாக எடுத்துக்கொண்டுள்ளார் ஆசிரியர். அவருமே அப்படி மதம் மாறி அந்தச் சமூகத்தில் வாழும் ஒருவரோ என்று நினைக்கிறேன். அப்படித்தான் என்றோ, இல்லை என்றோ புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

கதையில் மீனாட்சிபுரம், காமாட்சிபுரம் என்ற பெயரில் வருகிறது.

இஸ்லாத்துக்கு மதம் மாறியபிறகும் சாதிப் பிரிவினை அப்படியே உள்ளது என்றும், “நவ் முஸ்லிம்கள்” என்ற பெயரில் அவர்கள் விலக்கிவைக்கப்படுகிறார்கள் என்றும் 40 வயதைக் கடந்தபின்னும் அவர்களுடைய பெண்களுக்குத் திருமணம் ஆவதில்லை, ஏனெனில் அவர்களைப் பெண்ணெடுக்க அருகில் உள்ள கிராமங்களிலிருந்து பிற ஆண் முஸ்லிம்கள் வருவதில்லை என்றும், இதன் காரணமாக ஏற்படும் நெருக்கடியில் சில வயதான, திருமணமாகாத பெண்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்றும் ஒரு பிரச்னையைக் கதை முன்வைக்கிறது.

மதம் மாற பள்ளர்கள் முடிவெடுத்ததும் ஓடிவந்து அவர்களை வரவேற்று உதவிய மைய நீரோட்ட முஸ்லிம் சமூகம், மற்றபடி அவர்களுடன் கொண்டுகொடுத்து உறவு வைத்துக்கொள்வதில்லை என்றும் இரட்டைக் குவளைமுறை அவர்களுக்கு எதிராக பிற முஸ்லிம்களாலேயே கைகொள்ளப்படுகிறது என்றும், அத்துட்ன ‘பிரியாணிக்காக மதம் மாறினார்கள்’ என்ற இழிச்சொல்லும் வேறு இந்துக்களிடமிருந்து வருகிறது என்றும் ஆசிரியர் சொல்கிறார். அப்படி இருக்கும்போது மதம் மாறுவதன் அர்த்தம் என்ன? Between a rock and a hard place என்பார்களே, அதுபோன்ற நிலைமை இவர்களுக்கு. கிராமச் சமூகத்தில் ஆதிக்க இந்துச் சாதிகளால் துன்பம். இதெல்லாம் போய்விடும் என்று மதம் மாறினாலோ, உள்ளதும் போச்சுடா என்ற நிலைமை. ஒரு பக்கம், பெற்றுவந்த இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளும் கிடையாது. கட்டிக்கொள்ளப் பையன்கள் கிடைக்கமாட்டார்கள். பிற “பாரம்பரிய” முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படாத சூழல். இழிசாதி என்ற பட்டப்பெயருடன், இப்போது பிரியாணிக்கு மதம் மாறினவன் என்ற இழிசொல்லும் சேர்ந்துகொள்கிறது. இத்துடன் ரகசிய போலீஸ் வேறு வந்து, சவூதி அரேபியா போனாயா, யார் உன்னை அங்கே அழைத்தது, யார் இந்த ட்ரிப்புக்கு ஃபைனான்ஸ், அங்கே என்ன செய்தாய் என்று ‘தீவிரவாதியோ?’ என்ற சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது.

40 வயதாகியும் மணம் ஆகவில்லையே என்பதைவிட அதனால் தன் தந்தை தினம் தினம் மனமுடைந்து சாகிறாரே என்ற வருத்தத்தால் உயிர் மாய்த்துக்கொண்ட கருப்பாயியாக இருந்து நூர்ஜஹானாக மாறிய பெண் எழுதிவைக்கும் நீண்ட தற்கொலைக் கடிதத்திலிருந்து தொடங்கும் கதை, இறுதி வரியில், அந்த மக்கள் தாம் மாறிய முஸ்லிம் சமுதாயத்திலேயே தொடர்ந்து இருப்பார்களா அல்லது மீண்டும் மதத்தை மாற்றிக்கொள்ளப்போகிறார்களா என்ற சந்தேகத்துடன் முடிக்கிறது.
“எ ...மம்முது பள்ளிக்கு வாரியாத்தா என்று சொன்னதும் மொத்த ஜமாத்தும் அவரைப் பின் தொடர்ந்ததா? இல்லை அங்கேயே நின்றுவிட்டதா?”
இந்தக் கதை கேட்கும் கேள்விகள் ஏராளம். தென் தமிழ்நாட்டின் கிராமங்களில் இன்றும் தொடரும் சாதிய அடக்குமுறை. முக்கியமாக தேவர் - பள்ளர் சிக்கல். அதிலிருந்து வெளியேற முடியாத இறுக்கமான சூழல். மதமாற்றம் ஒரு தீர்வாக முன்வைக்கப்படுதல். ஆனால் அது தீர்வே அல்ல என்பது முப்பதாண்டுகளுக்குப் பின்னர்தான் கண்டுபிடிக்கப்படுதல். இப்போது என்னதான் செய்வது?

என்னதான் செய்வது?

***

கருப்பாயி என்கிற நூர்ஜஹான்: நாவல், அன்வர் பாலசிங்கம், கலங்கைப் பதிப்பகம்-யாதுமாகிப் பதிப்பகம், செங்கோட்டை, திருநெல்வேலி.
புதுக் காலணித் தெரு, கலங்காத கண்டி, பூலான்குடியிருப்பு அஞ்சல், செங்கோட்டை தாலுகா, திருநெல்வேலி 627813, தொலைபேசி எண்கள் 94458-01247, 97914-98999, பக்கங்கள் 102, விலை ரூ. 100.

Friday, December 09, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா? (பாகம் 2)

கிறிஸ்தவ மதமாற்றம் குறித்து, உடையும் இந்தியா: ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்ற புத்தகத்தை முன்வைத்து அரவிந்தன் நீலகண்டனுடன் நான் உரையாடுகிறேன்.Thursday, December 08, 2011

முல்லைப் பெரியாறு பிரச்னை

இந்தியாவில் இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லாப் பிரச்னைகளும் இறுதியில் வன்முறையில்தான் போய் முடியும். ஏனெனில் மாநில அரசியலை மட்டும் முன்வைப்போர் மட்டுமல்ல, தேசியக் கட்சிகளின் உள்ளூர் கிளைகளும் அதே மாதிரியான ஸ்டேட்ஸ்மன்ஷிப் இல்லாத வாக்குவங்கி அரசியலை மட்டுமே முன்வைக்கக்கூடியவை.

எப்போது நீதிமன்றங்கள், ஆர்பிட்ரேஷன், பிரதமரின் தலையீடு ஆகியவை வேலை செய்யவில்லையோ, எப்போது மாநிலங்கள் தத்தம் சட்டமன்றங்களைக் கூட்டி உச்ச நீதிமன்ற ஆணையைச் செயல்படுத்தாத முறையில் சட்டங்களை இயற்றுகிறார்களோ, அப்போதே இதுபோன்ற பிரச்னைகளுக்கு நியாயமான தீர்ப்புகள் இல்லை என்பதாகிவிட்டது.

இது கர்நாடகம்-தமிழகம், தமிழகம்-கேரளம், பஞ்சாப்-ஹரியானா-ராஜஸ்தானம், மகாராஷ்டிரம்-ஆந்திரா-கர்நாடகம் என்று பல்வேறு இடங்களிலான நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னையை மட்டுமல்ல, மகாராஷ்டிரம்-கர்நாடகம், கர்நாடகம்-கேரளம், கேரளம்-தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகள் தொடர்பாகவும் மொழிப் பெரும்பான்மையினர்/சிறுபான்மையினர் தொடர்பாகவும் நிகழும் பிரச்னைகளையும் உள்ளடக்கியது.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரளா பக்கம் தவறு, தமிழகம் பக்கம்தான் நியாயம் என்று அதனை விரித்துப் பேசுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. மாறாக, நீங்கள் கேரளத்தவராக இருந்து (மலையாளியோ, இல்லை தமிழரோ அல்லது வட நாட்டவரோ), கேரளத் தரப்பு நியாயமற்றது என்று நினைத்தால் என்ன செய்வீர்கள் என்பது பற்றியதுதான் என் சிந்தனை. அதுவும் நீங்கள் சாதாரண ஆசாமியாக இல்லாமல் ஒரு கலைஞராக, எழுத்தாளராக, அரசியல்வாதியாக இருந்து, கேரளா முல்லை பெரியாறு பிரச்னையில் எங்கெல்லாம் தவறு இழைத்திருக்கிறது என்பதை அருகிலிருந்து பார்த்தவராக இருந்தால் என்ன செய்வீர்கள்? என்ன செய்துள்ளீர்கள்?

கேரளத்தில் மாற்றுக் கருத்துக்கான இடம் இன்று இல்லவே இல்லையா? கேரள இதழ்களைப் படிப்போர் இதுபற்றிக் கருத்து சொல்லமுடியுமா?

கிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா? (பாகம் 1)

இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் அபாயங்கள் எவையெவை? ராஜிவ் மல்ஹோத்ராவும் அரவிந்தன் நீலகண்டனும் எழுதியிருக்கும் உடையும் இந்தியா: ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்ற புத்தகத்தை முன்வைத்து அரவிந்தன் நீலகண்டன் என்னுடன் உரையாடுகிறார். மொத்தம் மூன்று பாகங்களாகச் செல்லும் நீண்ட உரையாடல் இது. முதல் பாகத்தில் ஆரிய, திராவிடம் ஆகியவை எவ்வாறு இனவாதச் சிந்தனைகளாக ஆகின, ஆரியப் படையெடுப்பு என்பது உண்மையா, திராவிடர்கள் யார், லெமூரியா கண்டம் இருந்ததா, விவிலியத் தொன்மங்களின் அடிப்படையில் காலனிய அறிஞர்கள் இந்தியாவை எப்படிப் பார்த்தனர், எல்லிஸ், கால்டுவெல், பர்ரோ, எமினோ, போப், தேவநேயப் பாவாணர், பெரியார், அண்ணா போன்ற பலரையும் இதில் ஒரு பார்வை பார்க்கிறோம்.

அந்நிய நேரடி முதலீடு - 3/n

எவ்விதத்தில் ஒரு தொழிலில் முதலீடு வருகிறது?
  1. சொந்தக் காசு.
  2. குடும்பத்தவரிடம் பங்குப் பணமாகப் பெறுவது. இதற்கு லாபத்தில் ஒரு கட்டத்தில் பங்கு தரவேண்டும்.
  3. வெளியாரிடமிருந்து கடன் வாங்குவது. இது தனி நபர்களாக இருக்கலாம், வங்கிகளாக இருக்கலாம். வாங்கிய பணத்துக்கேற்ப, தொழிலில் லாபம் வருகிறதோ, இல்லையோ, வட்டி கட்டிக்கொண்டே இருக்கவேண்டும்
  4. ரிஸ்க் முதலீடு. நம் தொழிலின் தன்மை அறிந்து, அதில் உள்ள சாதக பாதகங்களைப் புரிந்துகொண்டு, இதில் முதலீடு செய்யப்படும் பணம் திரும்பக் கிடைக்காமலேயே போகும் என்பதை முழுதும் உணர்ந்துகொண்டு தனி நபர்களோ, நிதி நிறுவனங்களோ அந்தத் தொழிலில் முதலீடு செய்யும் பங்குத் தொகை. ஈக்விட்டி என்ற பெயரால் அறியப்படுவது.
இந்தியாவில் ரிஸ்க் முதலீடுகள், அதுவும் நம் உறவினர் அல்லது சாதி இல்லாதோரின் தொழிலில் போடப்படும் ரிஸ்க் முதலீடுகள் ஜீரோ என்றே சொல்லிவிடலாம். நம்மிடம் வென்ச்சர் கேபிடல் பின்னணியே கிடையாது. ஒரு கட்டத்தில் பெரும் ஜோக்காக ஒவ்வொரு மாநில அரசும் ஒரு வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தை ஆரம்பித்தது. அதைக்கொண்டு அவை உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. எப்போது அவற்றை இழுத்து மூடினார்கள் என்றும் ஞாபகம் இல்லை. மத்திய அரசின் சில அமைப்புகள் இன்றும்கூட இதுபோல் வென்ச்சர் கேபிடல் வேலைகளைச் செய்கின்றன. உதாரணமாக NRDC என்ற அமைப்பு. NRDC முதலீடு செய்திருக்கும் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில், NRDC சார்பில் நான் இயக்குனராக உள்ளேன். ஆனால் தான் முதலீடு செய்திருக்கும் அந்த கம்பெனி பற்றி NRDC பெரிதாகக் கவலைப்படுவதே இல்லை. இந்த ஆட்டிட்யூடை வைத்துக்கொண்டு வென்ச்சர் கேபிடலில் என்ன சாதிக்க முடியும்?

அந்நிய வென்ச்சர் கேபிடல் கம்பெனிகள் இந்தியாவில் காலூன்றத் தொடங்கியதும்தான் இந்தத் துறை பற்றிய உண்மையான புரிதல் நம் நாட்டுக்கு வந்தது. இந்தியர்கள் பலர் அமெரிக்காவில் அந்நாட்டு வென்ச்சர் கேபிடல் கம்பெனிகளில் வேலை செய்தனர். அவர்கள் இந்தியா வந்து அப்படிப்பட்ட கம்பெனிகளைத் தொடங்கினர். கடந்த இருபதாண்டு காலத்தில் செல்வம் சேர்த்த இந்தியர்கள் சிலர் வென்ச்சர் கேபிடல்/பிரைவேட் ஈக்விடி அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் இவை போதா. இப்படி உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் அந்நிய முதலை அடிப்படையாகக் கொண்டிருந்தால், அவற்றால் சில துறைகளில் முதலீடு செய்யவே முடியாது. சில துறைகளில் ஓரளவுக்குத்தான் முதலீடு செய்யமுடியும்.

வெறும் ஐடியாக்களிலும் ஆட்கள்மீதும் முதலீடு செய்யும்போதுதான் புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில்துறைகள், புதிய சேவைகள் தோன்றுகின்றன. இந்த முதலீடு ரிஸ்க் முதலீடாக மட்டுமே இருக்கமுடியும். ஏனெனில் பத்துக்கு ஒன்பது அழிந்துதான் போகும். ஆனால் இத்தனை அழிவைத் தாண்டியும் மிச்சமுள்ள இந்த அமைப்புகள்தான் நவீன மனித சமுதாயத்தைப் பெருமளவு முன்னேற்றிச் செல்பவையாக இருக்கும். அது மின்சாரம், எலெக்ட்ரிக் பல்ப், கார், பைக், கம்ப்யூட்டர், கூகிள் என்று எதுவாக இருந்தாலும் சரி.

இப்போது உங்களுக்குத் தெரியும் ஏன் இவையெல்லாமே எங்கோ வெளி நாடுகளில் மட்டுமே உருவாகின்றன என்பது. ஏனெனில் இவற்றை இந்தியாவில் உருவாக்கத் தேவையான முதலீட்டு முறை கிடையாது. இந்தியர்கள் பின்தங்கிய நிலையில் இல்லை. இந்திய முதலீட்டு அமைப்புகள் மட்டும்தான் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. அந்த முதலீட்டு அமைப்பைத்தான் மாற்றவேண்டும். அதற்கு இந்திய கேபிடல், அந்நிய கேபிடல் இரண்டையும் லாபத்தையும் ரிஸ்க்கையும் நோக்கிச் செலுத்துவதற்கான அனைத்துத் தடைகளையும் உடைக்கவேண்டும்.

உண்மையான கேபிடலிசம் என்பது இதுதான். முதலீடு, கூரிய சிந்தனை, உழைப்பாளிகள் ஆகிய அனைவரையும் ஒன்று சேர்த்து நியாயமான லாபத்தை நோக்கிச் செலுத்தும் ஓர் அமைப்பு. அந்த அமைப்பில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அந்த அமைப்பு ஒன்றுதான் இன்றைய அனைத்து வளர்ச்சிக்குமே காரணம். இந்த கேபிடலிச அமைப்பு மட்டும் இல்லையென்றால் நமக்கு இன்று எந்த வசதி வாய்ப்புமே இருந்திருக்காது. சாலைகள் இருக்காது; கல்வி நிலையங்கள் இருக்காது; உணவுப் பற்றாக்குறை மட்டுமே இருக்கும்; வியாதிகளுக்கு விடிவு கிடையாது; கேளிக்கை கிடையாது; ஓய்வு கிடையாது; சுக வாழ்வு கிடையாது.

முதல், உழைப்பு, பொருள்கள், சேவை ஆகியவற்றை எவ்விதத் தடையுமின்றி பயணிக்க வைத்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்துவிடுவோம். நான் ஒட்டுமொத்தமான தடையற்ற நிலையைக் கோரவில்லை. அதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அடுத்து வரும் பகுதிகளில் இவற்றை அலசுவோம்.

Friday, December 02, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: ஐரோம் ஷர்மிளா, மணிப்பூரின் இரும்புப் பெண்மணி

கிழக்கு பாட்காஸ்ட்டில் இன்று, நானும் மருதனும் ஐரோம் ஷர்மிளா பற்றிப் பேசுகிறோம். தீப்தி பிரியா மெஹ்ரோத்ரா ஆங்கிலத்தில் எழுதி, ஜெ.ராம்கி தமிழில் மொழிபெயர்த்து, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஐரோம் ஷர்மிளா: மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்ற புத்தகத்தை இங்கே வாங்கலாம்.Thursday, December 01, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு (2)

நேற்று இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு பாகம் 1 பற்றி நானும் பிரசன்னாவும் பேசினோம். இன்று அதன் தொடர்ச்சியாக, பாகம் 2 பற்றிப் பேசியுள்ளோம். அதன் வீடியோ இங்கே: