Monday, December 25, 2017

பாஜக எவ்வாறு ஜெயிக்கிறது?

குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் தேர்தல் முடிந்து, இரண்டிலும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இதுவரையில் இல்லாத அளவு நாட்டில் 16 மாநிலங்களில் பாஜக நேரடியாக அல்லது கூட்டணியாக ஆட்சி நடத்துகிறது. 3 மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோழமைக் கட்சிகள் ஆட்சி நடத்துகின்றன. மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக 2014-ல் ஆட்சியைப் பிடித்தது. இவை அனைத்தும் வெறும் மூன்றே ஆண்டுகளில் சாத்தியம் ஆகியிருக்கிறது.

இதோ, பாஜக காலி, இந்தத் தேர்தலோடு கதை முடிந்தது என்று எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் எக்காளமிட்டுக்கொண்டிருக்க, பாஜகவோ மேலும் ஒரு மாநிலத்தைக் கைப்பற்றுகிறது. சில இடங்களில் பாஜகவால் ஜெயிக்க முடிவதில்லைதான். ஆனால் வெகு சில இடங்களில் மட்டுமே.

எனில், இந்த வெற்றிகள் எப்படிச் சாத்தியமாகின்றன? 2014 மக்களவைத் தேர்தல் தொடங்கி, மஹாராஷ்டிரம், ஹரியானா, ஜம்மு & காஷ்மிர், ஜார்க்கண்ட், அசாம், உத்தரப் பிரதேஷ், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர், குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெற்றி எப்படிச் சாத்தியமானது? அதே நேரம் தில்லி, பிகார், பஞ்சாப் ஆகிய இடங்களில் தோல்வியையும் கண்டுள்ளது பாஜக. (பிகாரில் பின்னர் கூட்டணி மாறி இன்று பாஜக கூட்டணிதான் ஆட்சியில் உள்ளது.) இதற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்?

இவற்றை ஆராயும் இரண்டு புத்தகங்களைக் கடந்த வாரம் படித்து முடித்தேன். ஒன்று: How the BJP wins: Inside India’s Greatest Election Machine. இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையாளர் பிரஷாந்த் ஜா எழுதி ஜக்கர்நாட் பதிப்பகம் வெளியிட்ட புத்தகம். இரண்டாவது: The Last Battle of Saraighat: The Story of the BJP’s Rise in the North-East. பாஜக அனுதாபிகளும் தேர்தல் களத்தில் பாஜகவின் செயல்திட்டங்களை வடிவமைப்போருமான ரஜத் சேத்தி, ஷுப்ரஸ்தா ஆகியோர் எழுதிய புத்தகம். பெங்குவின் வெளியீடு.

முதலாவது புத்தகம், எளிமையாகப் படிக்கக்கூடியது. நல்ல எடிட்டிங். இரண்டாவது மிகச் சுமாராக எழுதப்பட்டது. வளவளவென்று செல்கிறது. மோசமான எடிட்டிங். ஆனால் சில உள்விஷயங்களை நுணுக்கமாக அளிப்பதால், முக்கியமானதாகிறது.

முக்கியமான கருத்துகளை இப்படிச் சொல்லிவிடலாம்:

1.     அமித் ஷா தலைமையில் பாஜக வலுவான தேர்தல் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு இல்லாத மாநிலங்களிலும்கூட பாஜகவால் வெகு விரைவில் இந்த இயந்திரத்தைக் கொண்டு வேலை செய்ய முடிந்திருக்கிறது.
2.     ஆர்.எஸ்.எஸ்ஸின் உழைப்பும் ஆள் பலமும் பாஜகவுக்கு மிக மிக முக்கியம்.
3.     ஒவ்வொரு மாநிலத்திலும், விரிவானதொரு சாதிக் கூட்டமைப்பை பாஜகவால் உருவாக்க முடிந்திருக்கிறது. இதுநாள்வரையில் தேர்தல் அரசியலால் பலன் அடையாத பிற்படுத்தப்பட்ட, தலித் சாதியினரை ஒருங்கிணைத்து அவர்களுக்குச் சரியான இடங்களைக் கொடுப்பதன்மூலம் இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெறுவதோடு, உயர் சாதியினரின் வாக்குகளையும் தக்கவைத்துக்கொள்வதில் பாஜக பெரும் வெற்றி அடைந்திருக்கிறது.
4.     முஸ்லிம்களுக்கு எதிரான  (நிஜ மற்றும் பொய்) பிரசாரங்களின்மூலம் போலரைசேஷனை ஏற்படுத்தி, இந்து வாக்குகளை ஒருமுகப்படுத்துவதில் பாஜக வெற்றி அடைந்துள்ளது.
5.     ஜம்மு காஷ்மிர், அசாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களைப் பொருத்தமட்டில் ராம் மாதவின் தலைமையில் பெரும் வெற்றிகள் குவிந்துள்ளன. (நரேந்திர மோதி, அமித் ஷா பெயர்களுக்கு அடுத்து இரு புத்தகங்களும் முக்கியமாகக் குறிப்பிடும் பெயர் ராம் மாதவ்.)
6.     பணம் திரட்டுவதிலிருந்து, சரியாகச் செலவழிப்பதிலிருந்து, மையப்படுத்தப்பட்ட முறையில் தேர்தலை நடத்துவதுவரை, அமித் ஷாவின் தலைமையில் பாஜக, தேர்தல் நிர்வாகத்தில் புதிய சகாப்தத்தைப் படைத்துள்ளனர்.
7.     ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு நோக்கங்கள் கொண்ட குழுக்களை ஓரணியில் திரட்டுவது, எளிமையான கோஷங்களை மக்கள்முன் கொண்டுசெல்வது, எதிர்க்கட்சிகளை உடைப்பது அல்லது அவர்கள் ஓரணியில் திரளாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வது என்று சகலவிதமான செயல்திட்டங்களையும் பாஜக செயல்படுத்துகிறது. வெற்றி ஒன்றுமட்டுமே நோக்கம்.
8.     எல்லாவற்றுக்கும் மேலாக, நரேந்திர மோதி என்ற ஒற்றை நபரின் செல்வாக்கு, அவருடைய பிரசார பலம், மக்கள் அவர்மீது கொண்டிருக்கும் மாபெரும் நம்பிக்கை. இதற்கு இணையாக தற்போதைக்கு இந்தியாவில் யாருமே கிடையாது.

இப்படி இருந்தும் தில்லி, பிகார் தோல்விகள் எப்படி நிகழ்ந்தன. பிரஷாந்த் ஜா அவற்றை ஓரளவுக்கு ஆய்வு செய்கிறார். லாலு யாதவ், நிதீஷ் குமார் ஜோடி எவ்வாறு பாஜகவை அதன் ஆட்டத்தை வைத்தே தோற்கடித்தது என்ற அத்தியாயம் மிக முக்கியமானது. இந்த இரு புத்தகங்களும் எழுதப்பட்டபிறகுதான் குஜராத், இமாச்சலப் பிரதேசத் தேர்தல்கள் நடைபெற்றன.

***

கட்சிகள் தேர்தல்களை அணுகும் முறையில் பாஜக பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதனைப் புரிந்துகொள்ளாமல் பாஜகவை வீழ்த்துவது கடினம். ‘என்னதான் இருந்தாலும் ஆர்.கே.நகரில் 1500+ வாக்குகள்தானே பாஜக பெற்றது’ என்று பேசுவோர் தவறிழைக்கின்றனர்.

என் கணிப்பில் நான்கு மாநிலங்களில்தான் பாஜக அடுத்து வரும் பத்தாண்டுகளில் ஆட்சியைப் பிடிக்க மிகவும் கஷ்டப்படும். அவை கேரளம், தமிழகம், வங்கம் மற்றும் தெலங்கானா. இந்த மாநிலங்களிலும்கூட சிறிது சிறிதாக பாஜக வளர்ந்துகொண்டுதான் இருக்கும். மற்ற மாநிலங்களில், ஒன்று பாஜக ஆளும் கட்சியாக இருக்கும் அல்லது முதன்மை எதிர்க்கட்சியாக இருக்கும் அல்லது அதன் தோழமைக் கட்சி ஆட்சியில் இருக்கும்.

அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால் பாஜக பின்பற்றும் உத்திகள் சில ஏற்க முடியாதவையாக இருக்கும். மிக முக்கியமாகச் சொல்வதானால் மதத்தின் பெயராலான போலரைசேஷன். ஆனால் அவர்கள் பார்வையில் இது ஒன்றுதான் அசாம் போன்ற 30% முஸ்லிம்கள் உள்ள மாநிலத்திலோ அல்லது உத்தரப் பிரதேசம் போன்ற 20%+ முஸ்லிம்கள் உள்ள மாநிலத்திலோ வெற்றி தரக்கூடிய ஒரே வழிமுறை. இவற்றைச் செய்யும் அதே நேரம், பாஜகவால் ஜம்மு காஷ்மிரில் பிடிபி போன்ற கட்சியுடன் கூட்டணி ஆட்சியை நடத்த முடிகிறது. வடகிழக்கில் கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கும் சிறு மாநிலங்களில் ‘பாரதிய ஜீசஸ் பார்ட்டி’ என்றுகூட பாஜக அறிமுகப்படுத்தப்பட்டு இடங்களைப் பிடிக்கிறது!

ஒவ்வொரு முறை ஒரு மாநிலத்துக்குத் தேர்தல் நடக்கும்போதும் ஊடகங்கள் பாஜகவின் தோல்வியை எதிர்பார்த்துத் தீர்ப்புகளை முன்னதாகவே எழுதுகின்றன. அத்துடன் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அப்படிச் செய்துவிடும், இப்படிச் செய்துவிடும், மோதி இத்தோடு காலி என்றும் ஆரூடம் எழுதுகின்றன. கேட்டால் வாஜ்பாயின் ‘இந்தியா ஒளிர்கிறது’ பிரசாரத்தை உதாரணமாகச் சொல்கிறார்கள். அப்போதைய பாஜகவுக்கும் இப்போதைய பாஜகவுக்கும் என்ன வித்தியாசம், களத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒருசில ஊடகவியலாளர்களாவது புரிந்துவைத்திருக்கிறார்கள். புத்தகமாக எழுதவும் செய்கிறார்கள். இத்தனைக்கும் பிரஷாந்த் ஜா, பாஜகவுக்கு எதிரான மனநிலை கொண்டவர் என்பது புத்தகத்தைப் படிக்கும்போதே தெரிகிறது.

-->
பாஜக நிச்சயமாக அடுத்துவரும் பல தேர்தல்களில் தோற்கத்தான் செய்யும். குஜராத்போலத் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. ஆனால் மிகவும் நெகிழ்வுடன் தன்னை மாற்றியமைத்து, புதிய கூட்டணிகளை ஏற்படுத்திக்கொண்டு, பிரசாரத் தொனியை மாற்றிக்கொண்டு, கடுமையான களப்பணியின்மூலம் பாஜக தோல்விகளைவிட அதிக விகிதத்தில் வெற்றிகளைப் பெறும் என்பது புலனாகிறது. குறைந்தபட்சம் அடுத்த பத்தாண்டுகளில்.

Tuesday, December 12, 2017

பாபர் மசூதி இடிப்பும் இந்திய அரசியல் மாற்றமும்!

நான் எழுதிய கட்டுரை, மின்னம்பலம் இணைய இதழில் வெளியானது.

===

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு அதற்கு நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துவந்தது. ஆங்கிலேய ஆட்சியின்போது தீர்க்க முடியாத வழக்கு இன்றுவரை தீர்க்க முடியாததாகவே இருக்கிறது.

1886இல் ஃபைஸாபாத் மாவட்ட நீதிபதி கர்னல் சேமியர் என்பவர், “இந்துக்களுக்குப் புனிதமான ஓர் இடத்தில் மசூதி ஒன்று கட்டப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. ஆனால், நிகழ்வு 356 ஆண்டுகளுக்கு முன் நடந்திருப்பதால் காலம் கடந்துவிட்டது. இன்று கோரிக்கைகளுக்குச் செவி சாய்ப்பது கடினம்” என்று தீர்ப்பு எழுதினார். 2010இல் அலகாபாத் உயர் நீதிமன்றம், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்து இரண்டு பகுதிகளை இந்துக்களுக்கும் மீதிப் பகுதியை சன்னி வக்ப் வாரியத்துக்கும் தருவதாகத் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் அது இந்துக்களையும் திருப்திப்படுத்தப் போவதில்லை, முஸ்லிம்களையும் திருப்திப்படுத்தப்போவதில்லை.

இதற்குக் காரணம், விஸ்வ இந்து பரிஷத், பாரதிய ஜனதா அமைப்பினர் ஒரு பெரும் இயக்கமாக மசூதி அமைந்திருந்த இடத்துக்குச் சென்று, 1992 டிசம்பர் 6 அன்று அதைச் சட்டத்துக்குப் புறம்பாக இடித்துத் தள்ளியதே. வெறும் சட்டப் போராட்டமாக இருந்த சிக்கல், நாடு தழுவிய மதப் போராட்டமாக மாறியது இந்தப் புள்ளியில்தான்.

வழிபாட்டுத் தலங்களும் வரலாறும்

எட்டாம் நூற்றாண்டிலிருந்து இந்தியாமீது இஸ்லாமியப் படையெடுப்புகள் பல நிகழ்ந்திருக்கின்றன. அந்தப் படையெடுப்புகளின்போதும், தொடர்ந்த இஸ்லாமிய ஆட்சிகளின் கீழும் எண்ணற்ற இந்துக் கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன. இந்துக் கோயில்களின் இடிமானங்களைக் கொண்டு மசூதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. இவற்றை டெல்லி முதற்கொண்டு இந்தியா முழுமையிலும் காணலாம். காசி, மதுரா போன்ற இந்துக்களின் முக்கியமான சில வழிபாட்டிடங்களில் கோயிலின் பகுதிகளிலேயே மசூதிகளை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வலுக்கட்டாயமாக அமைத்தனர். இவை வடஇந்தியாவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் இருப்பதைக் காணலாம். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பல்லாவரம் குடைவரைக்கோயில் இன்றும் ஓர் இஸ்லாமிய வழிபாட்டிடமாக உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி வருவதற்குமுன், நியாயமான சட்டத்தின் ஆட்சி என்ற கருதுகோள் நம்மிடம் இல்லை. வலுவான அரசன் முடிவு செய்வதுதான் சட்டம். அதன் விளைவாகத்தான் பிறருடைய வழிபாட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. ஆங்கிலேயர்கள் சட்டத்தின் ஆட்சி என்பதை முன்வைத்த பின்னர்கூட அயோத்தி ராமர் கோயில் பிரச்னை தீர்க்க முடியாததாக இருந்தது. 

பேச்சுவார்த்தைகள்மூலம் இரு மதத்தாரும் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளுதல் மட்டுமே ஒரே தீர்வு. ஆனால், விஸ்வ இந்து பரிஷத்தும் பாரதிய ஜனதாவும் அயோத்தி விஷயத்தில் இது நடக்காமல் பார்த்துக்கொண்டனர்.

இது நிச்சயமாக பாரதிய ஜனதாவுக்கு நன்மை அளித்தது. இன்று தனிப் பெரும்பான்மையில் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்கும் பல மாநிலங்களில் அவர்கள் ஆட்சியில் இருப்பதற்குமான அடித்தளம் ‘இந்துப் புத்தெழுச்சி’ என்பதாகும். இந்துப் புத்தெழுச்சி, அயோத்தி ராமஜன்ம பூமி இயக்கத்தின்மீது கட்டமைக்கப்பட்டது. அதற்கு பாபர் மசூதியை இடிப்பது அவசியமானது.

மசூதி முதல் மாட்டிறைச்சி வரை

பாரதிய ஜனதா கட்சிக்கு நன்மை அளித்த இந்த நிகழ்வு இந்திய நாட்டுக்கு என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம். சாதிப் பிரச்னைகள் பெரும்பாலும் ஒரு கிராமம் என்பதிலிருந்து அதிகபட்சம் ஒரு மாவட்டம் என்ற அளவைத் தாண்டாது அடங்கிவிடும். ஆனால் இந்து -முஸ்லிம் பிரச்னை என்பது நாடு தழுவிய அளவில் பரவக்கூடியது.

அயோத்தி மசூதி இடிப்பு இந்தியா முழுவதும் மதக் கலவரங்களை ஏற்படுத்தியது. முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் பாபர் மசூதி என்பது குறிப்பிடத்தகுந்த புனிதத் தலம் ஒன்றும் கிடையாது. ஆனால், ஒரு வன்முறைக் கும்பல், சட்டத்தைப் பற்றியோ நீதிமன்றங்களைப் பற்றியோ கவலைப்படாது ஒரு கட்டடத்தை அடித்து நொறுக்கும் என்றால் முஸ்லிம்களாகிய தங்களுக்கு இந்த நாட்டில் சட்டத்தால் எந்தப் பாதுகாப்பும் கிடையாது என்பதை முஸ்லிம்கள் அன்று உணர்ந்தார்கள். அது அவர்களைப் பெரும் கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.
பல நகரங்களில் அவர்கள் தன்னிச்சையாகத் தெருவில் குழுமினார்கள். அவ்வாறு குழுமியவர்களுக்கு எதிராக இந்துப் புத்தெழுச்சிக்காரர்களும் குழுமினார்கள். விளைவு, கடுமையான எதிரெதிர் தாக்குதல்கள், வணிக நிறுவனங்கள் எரிக்கப்படுதல், கல்வீச்சு, காவல்துறைத் தாக்குதல், கொலை, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்.

தேசப் பிரிவினைக்குப்பிறகு நிகழ்ந்த மிகப் பெரிய இந்து - முஸ்லிம் வன்முறை இதுதான். இதன் அடுத்த கட்ட நிகழ்வுகள் யாராலுமே தடுக்க முடியாதவையாக அமைந்தன. மும்பை குண்டுவெடிப்புகள், தொடர்ந்து மும்பையில் நிகழ்ந்த இந்து - முஸ்லிம் வன்முறைகள், சிமி போன்ற இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகள் உருவாகி நாட்டில் பல பகுதிகளிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது, குஜராத்தில் கரசேவகர்கள் ரயில் எரிப்பு, தொடர்ந்து குஜராத் முழுவதும் நிகழ்ந்த இந்து - முஸ்லிம் வன்முறை என்று தொடர்ச் சங்கிலிப் பிரச்னைகளாக நிகழ்ந்தன. இன்று வடமாநிலங்களில் நடக்கும் பசு இறைச்சி தொடர்பான தாக்குதல்கள், லவ் ஜிகாத் என்ற பெயரிலான இந்து - முஸ்லிம் காதல் திருமணங்கள்மீதான தாக்குதல்கள் போன்றவற்றையும் பாபர் மசூதி இடிப்பின் அடிப்படையிலேயே பார்க்க வேண்டும்.

இந்தியச் சுதந்திரம்தொட்டே காஷ்மீர் பிரச்னை கனன்றுகொண்டிருக்கிறது. காஷ்மீர் பகுதி எரிமலையாக இருப்பதற்குத் தேவையான அனைத்தையும் பாகிஸ்தானும் செய்துகொண்டிருக்கிறது. காஷ்மீரின் அரசியல் கட்சிகளும் மக்களை மதிக்காமல் தேர்தலில் ஊழல்களைச் செய்ததன்மூலம் அந்நியப்பட்டுப் போனார்கள். ஆஃப்கனிஸ்தானத்தின் ஜிஹாதி போராளிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ இவை அனைத்தும் காரணமாக இருந்தன. கூடவே பாபர் மசூதி இடிப்பும் சேர்ந்துகொண்டது. இந்தியாவுடன் இருந்தால் முஸ்லிம்களாகிய நமக்கு நியாயம் கிடைக்காது என்பதற்கான பல காரணங்களில் பாபர் மசூதி இடிப்பும் ஒன்றாகியது.

மதம் அரசியலின் மையமாகும் அபாயம்

பாபர் மசூதி இடிப்புக்கு முன்பு இந்திய அரசியலில் மதம் ஒரு பெரிய இடத்தை வகிக்கவில்லை. பெரும் அரசியல் கட்சிகள் எவையுமே இந்துக்களைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும், உள்ளூரப் பல கருத்துகளைக் கொண்டிருந்தாலும், வெளிப்படையாக மேடையில் எதையும் பேச மாட்டார்கள். ஆனால், பாபர் மசூதி இடிப்பினால் மிகப் பெரும் அரசியல் லாபங்களைப் பெற்ற பாரதிய ஜனதா, தொடர்ந்து இந்துக்களை ஒருமுகப்படுத்துவதன் மூலமும், அவர்களுக்கு முஸ்லிம்கள் எதிரிகள் என்பதைக் கட்டமைப்பதன் மூலமும் தம்முடைய செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளலாம் என்றே இயங்குகிறது. இதன் விளைவு என்னவாக இருக்கும்? பிற பெரிய கட்சிகளும் இந்துமைய அரசியலை நோக்கி நகரக்கூடும். இதன் விளைவாக மதச்சார்பற்ற இந்திய அரசியல், மதமைய அரசியலாகும் வாய்ப்பு உள்ளது. இது இந்தியாவின் அமைதிக்குப் பெரும் ஊறு விளைவிக்கும்.

இன்றைய தலைமுறையினர் பலருக்கும் பாபர் மசூதி இடிப்பு நினைவில் இருக்காது அல்லது மிகவும் மங்கலாக இருக்கும். நாளடைவில் இது வெறும் ஒரு வரலாற்றுச் செய்தியாக மட்டுமே இருக்கும். ஆனால், என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்மீது இந்த நிகழ்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் அப்போது அமெரிக்காவின் ஒரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவனாக இருந்தேன். பாபர் மசூதி இடிப்பு சரியானதே என்பதே என் உடனடி எண்ணமாக இருந்தது. சட்டம் இந்துக்களுக்கு நியாயம் வழங்காதபோது, வலுக்கட்டாயமாக நியாயத்தை எடுத்துக்கொள்வது தவறல்ல என்று நினைத்தேன். முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பிலிருந்து இந்து வழிபாட்டிடங்கள் அனைத்தும் சட்டபூர்வமாகவோ, அப்படி முடியாவிட்டால் முரட்டுத்தனமாகவோ திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கருதினேன்.

இன்று என் கருத்து மாறியுள்ளது. வலுக்கட்டாயமோ, வன்முறையோ எந்த விதத்திலும் தீர்வாகாது என்றே கருதுகிறேன். இவை தொடர் சங்கிலி வன்முறையாகச் சுழன்றபடி, சூறாவளிபோலத் தன் சக்தியை அதிகரித்தபடி, தன் பாதையில் தென்படும் எண்ணற்ற அப்பாவிகளைச் சூறையாடிவிடும். இதற்கான சான்று பாபர் மசூதி இடிப்பும் தொடர்ந்த, இன்றும் தொடரும், வன்முறைகளும். குறுங்குழு மனப்பான்மையிலிருந்து விசாலமானதொரு பார்வையை நோக்கிச் செல்வதற்கு நமக்குப் பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கிறது. ஆனால், மதப் பிளவுகளோ மிக விரைவில் நம்மை வன்முறை நிறைந்த, அமைதியற்ற பழைய குறுங்குழு வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றுவிடும். அந்த வகையில் பாபர் மசூதி இடிப்பு நமக்குப் பெரும் பாடமாக அமைகிறது.