நாகபட்டினத்தில் நான் வசித்தது ஒரு ஓட்டு வீட்டில். அன்றைய காலத்தின் வீடுகளுக்கே உரிய வடிவம். நடுவில் திறந்த சதுர வடிவிலான முற்றம் (முத்தம் என்று அழைக்கப்படும்). நான்கு பக்கமும் சுற்றி தாழ்வாரம், அதற்கு அடுத்து கூடம். பல வீடுகளில் கூடமும் நான்கு பக்கங்கள் இருக்கும். ஆனால் எங்கள் வீட்டில் இரண்டு பக்கத்தில் மட்டும்தான் இருந்தது. வீடு வடக்கு தெற்கானது. தெற்கு பார்த்த வாசல், வடக்கில் கொல்லை. கூடம் கிழக்கிலும் மேற்கிலும்தான். கூடத்தின் இரு முனைகளிலும் அறைகள். வட எல்லைகளில் அச்சாக இரு பக்கமும் சமையலறை போன்ற பகுதி. அறை என்றால் இரட்டை அறையானது. சமையல் அறைக்கு முன்பகுதி அறைக்கு காமிரா அறை என்று பெயர். அங்குதான் அரிசி டின் இருக்கும். பெரிய இரும்பு டின். அங்குதான் ஆராதனைக்குரிய பெருமாள் விக்கிரகங்களும் சாளக்ராமங்களும் இருக்கும்.
வாசலின் இரு பக்கமும் திண்ணைகள் உண்டு. எங்கள் வீட்டில் ஒரு பக்கம் திண்ணை சற்று பெரிதாகவும், மற்றொரு பக்கம் திண்ணை சிறிதாகவும் ஆக்கப்பட்டிருந்தது. திண்ணை இழந்திருந்த பகுதி ஒரு அறையாக உருவெடுத்திருந்தது.
வாசலிலிருந்து பார்த்தால் முற்றமும், தொடர்ந்து தாழ்வாரப் பகுதியும், பிறகு ரேழி தாண்டி கொல்லையும், கொல்லையில் இருக்கும் கிணறும் நேராகத் தெரியும். கிணறைச் சுற்றி கொஞ்சமாக தரையில் சிமெண்டு போடப்பட்டிருக்கும். சுற்றி மண் தரையில் வாழை, தென்னை மரங்கள், சில பல செடிகள், அதில் முக்கியமாக செம்பருத்திச் செடி, பின் மதில் சுவர்கள். ஒரு கோடியில் கழிவறை இருக்கும். கழிவறைக்கு வந்து மலத்தை எடுத்துச் செல்ல துப்புறவுப் பணிப்பெண்கள் வர கொல்லைக் கதவு ஒன்றும் இருக்கும். எங்கள் வீடு தெருக்கோடி என்பதால் கொல்லைக் கதவு மேற்குச் சுவரில் இருந்தது.
ஆரம்பத்தில் திண்ணைப் பகுதியை உள்ளடக்கி வெளிக் கதவுகள் எவையும் கிடையாது. திண்ணை தாண்டிதான் கதவே. பின்னர்தான் திண்ணையை உடைத்து வெளியேயும் கேட் போட்டோம்.
கூடம், தாழ்வாரம், அறைகள் அனைத்தின்மேலும் ஓடுகள்தான். ஓடுகள் முற்றத்தில் வந்து சரியும். அதேபோல, வெளிச்சுவர்கள் மேலாகவும் சரியும். எனவே நடுவே சுமாராக, கூடமும் தாழ்வாரமும் பிரியும் இடத்தில்தான் மிக உயரமாக எழும்பி இருக்கும். நல்ல மழை பெய்யும்போது முற்றத்தில் நான்கு மூலைகளிலிருந்தும் நீர் ஒரு பரவளையப் பாதையில் வந்து கொட்டும். மழை மிகவும் கடுமையாக இருக்கும்போது மூலை விட்டத்தின் இரு பக்கங்களிலிருந்தும் கொட்டும் தாரைகள் ஒன்றை ஒன்று தொடும் அளவுக்குப் போய்விடும்.
வீட்டின் கூரை ஓடுகளால் ஆனது. கூரையைத் தாங்குவது மரத்தால் ஆன தூண்களும் உத்தரங்களும். உத்தரங்களுக்குக் குறுக்கே மர ரீப்பர்கள் அடிக்கப்பட்டு, அவற்றின்மீதுதான் ஓடுகள் உட்காரவைக்கப்படும். கடுமையான புயல் வீசும்போது ஓடுகள் அப்படியே பறந்துவிடும். நல்ல மழை பெய்தால், என்னதான் ஓடுகள் நெருக்கமாக இருந்தாலும் தண்ணீர் ஒழுக ஆரம்பித்துவிடும்.
சுவர்கள் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டவையே. செங்கற்களை காரையில்தான் பதிய வைப்பார்கள். மேல் பூச்சுக்கு மட்டும்தான் சிமெண்ட். ஆரம்பகாலத்தில் இவை அனைத்தும் களிமண்ணாலேயே பிணைக்கப்பட்டு, சுவரில் பூசுவதும் களிமண்ணாகவே இருந்திருக்கவேண்டும். பின்னர் காரை (சுண்ணாம்பு) பயன்பட்டிருக்கவேண்டும். பிறகு சிமெண்ட் கொஞ்சம் கொஞ்சமாக நுழைய ஆரம்பித்துள்ளது. நான் வசித்த வீட்டில் தரையும் சுவர் மேல்பூச்சும் சிமெண்ட்தான். தரை வழவழ என்று இருக்காது. சொரசொரப்பாகவே இருக்கும். கீழே விழுந்து முட்டியைப் பேர்த்துக்கொண்டால் அப்படியே வழட்டிவிடும். சில பகுதிகளில் சிமெண்ட் பால் ஊற்றி, அதில் சில வண்ணங்களைச் சேர்த்துக் குழைத்து பூசியிருப்பார்கள். அங்கே தண்ணீர் தரையில் சிந்தியிருந்தால் வழுக்கும்.
வாசல்கள் எல்லாமே மரத்தால் ஆனவை. சிக்கல் என்னவென்றால் முழுவதுமான ஃபிரேமும் மரத்தால் ஆனதால், தரையில் நிலப்படி இருக்கும். சிறுவர்கள் தடபுடவென்று ஓடமுடியாது. நன்கு தடுக்கிவிடும். நான் ஒருமுறை கீழே விழுந்து தாவாங்கட்டையைப் பேர்த்துக்கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு பல் அடிவாங்கியது, இன்றும் தனி வண்ணத்தில் தெரிகிறது. தாடையிலும் ஒரு பெரிய தழும்பு உண்டு.
அதேபோல வாசலை ஏதோ நாலடிக்காரர்கள் உள்ளே நுழைவதற்காக மட்டுமே வைத்திருப்பார்கள். குனிந்துதான் உள்ளே நுழையவேண்டும். அதிலும் நான் வளர்ந்தபின் மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாக, நான் வசிக்கும்போதே என் வீட்டில் பல மாற்றங்கள் நிகழந்தன. ஒட்டுமொத்தமாக இடித்துவிட்டு வேறு கட்டடத்தைக் கட்டவில்லை. அந்த அளவுக்கு என் தந்தை சம்பாதிக்கவில்லை. கொல்லைத் தோட்டத்தில் ஒரு பகுதி அழிக்கப்பட்டு, சமையல்கட்டுடன் சேர்க்கப்படு, என் தாய்க்குப் பிடித்தமான அளவுக்கு சமையலறை விரிவாக்கப்பட்டது. புதிதாக வாங்கப்பட்ட கேஸ் அடுப்பு, பின்னர் வந்துசேர்ந்த கிரைண்டர், மிக்ஸி (ஆனால் நாகபட்டினத்தில் நாங்கள் இருந்தவரை கடைசிவரை ரெஃப்ரிஜிரேட்டர் வரவேயில்லை) ஆகியவற்றுக்கும், அப்போதும் தேவைப்பட்ட அம்மி, கல்லுரல் ஆகியவையும் அந்தச் சமையல் அறையில் நுழைந்தன. அதற்குமுன் இருந்த சமையலறையில் தேள்கள் குடித்தனம் இருக்கும். ஓடுகள் விறகடுப்பின், கரி அடுப்பின் கரியால் அண்டக்காக்கை நிறத்தில் இருக்கும். ஆனால் சமையலறை விரிவாக்கத்தின்போது அந்த இடம் ‘ஒட்டப்பட்டது’.
ஒட்டு என்றால் நடுவில் உத்தரங்கள் போட்டு, குறுக்காக பல மரக்கட்டைகளை வைத்து, ஒரு ஓரத்திலிருந்து நன்கு சலித்த சுண்ணாம்பில் ஒட்டப்பட்ட பட்டையான சுட்ட ஓடுகளை ஒட்டிக்கொண்டே வருவார்கள். பிறகு மேலும் கீழும் சிமெண்ட் பூசப்படும். நாங்கள் இருந்தவரை நாகப்பட்டினம் வீட்டில் ரீஇன்ஃபோர்ஸ்ட் காங்கிரீட் வரவில்லை. இப்போதெல்லாம் தூண்களும் காங்கிரீட், உத்தரங்களும் காங்கிரீட். செங்கற்களுக்கு இடையில் சிமெண்ட், சுவரின் மேல்பூச்சு சிமெண்ட். தரையில் டைல்ஸ் அல்லது கிரானைட் அல்லது மார்பிள் அல்லவா? அப்போதெல்லாம் மொசாயிக் என்ற தொழில்நுட்பம் நுழைந்திருந்தது. தரையில் எதையோ பதித்து, வழவழ என்று இழைத்துக்கொட்டுவார்கள். பிறகுதான் அது அவுட் ஆஃப் ஃபேஷன் ஆனது.
வீட்டில் வேலை நடக்கும்போதெல்லாம், தலைமைக் கொத்தனார், தலைமைத் தச்சர், அவர்கள்கீழே வேலை செய்யும் பல வேலையாட்கள், சித்தாள்கள், இடை இடையே அவர்கள் வேலையை நிறுத்திவிட்டு, ஒருவரை அனுப்பி வாங்கிக்கொண்டுவந்து தின்னும் வடை, குடிக்கும் டீ, ஒதுங்கிச் சென்று அடித்துவிட்டுவரும் பீடி என்று ஜெயகாந்தன் கதைப் பின்னணியில் இருக்கும். தச்சர்கள் வேண்டிய உத்தரங்களை, ரீப்பர்களை, தூண்களை உருவாக்குவார்கள். நமக்கு வேண்டும் என்றால் உட்கார நாற்காலிகள், மேஜைகளையும் செய்துதருவார்கள். அலமாரிகளைச் செய்வார்கள், ஜன்னல்களுக்கான கதவுகளைச் செய்வார்கள். பிறகுதான் காங்கிரீட் ஸ்லாப்கள் அமைக்கப்பட்டு ராட்சச ஸ்டோரேஜ் இடங்கள் உருவாக ஆரம்பித்தன. தச்சர்கள் காணாமல் போக ஆரம்பித்தனர்.
நாகபட்டினத்தின் உப்புத் தண்ணீரைக் கொண்டு செய்த சுவர்களும் தரைகளும் மழைக்காலத்தில் ஊற ஆரம்பித்துவிடும். அப்போதெல்லாம் வீடு கட்ட நல்ல தண்ணீர் கொண்டுவர வழியே இல்லை. இப்போது ஒருவேளை சாத்தியமோ என்னவோ. மழைக்காலத்தில் தரையில் சாக்குகளை விரித்துவைப்பது ஒன்றுதான் வழி. மேலிருந்து ஒழுகும் நீரையும் எடுத்துக்கொள்ளும், கீழிருந்து ஊறும் நீரையும் எடுத்துக்கொள்ளும்.
மார்கழி மாதத்தில் என்னவோ பெரிய குளிர் என்று என் தந்தை சாக்குப் படுதா கொண்டு முற்றத்தின் திறந்த வெளியை எல்லாம் மறைப்பார்.
எந்தக் கோடையிலும் எங்களுக்கு மின்விசிறி தேவைப்பட்டதே கிடையாது. நாங்கள் பொதுவாக கூடத்திலோ தாழ்வாரத்திலோதான் படுத்திருப்போம். மிகக் கடுமையான கோடையில் விசிறி கொண்டு விசிறிக்கொண்டே தூங்கவேண்டும். ஆனால் தூக்கம் வந்தபின் விசிறிக்குத் தேவை கிடையாது. சிறு குழந்தைமுதல் கிழவர்கள்வரை அந்தக் கோடைக்குக் கஷ்டப்பட்டதாக நினைவில்லை. இப்போது ஏசி இல்லாமல் முடிவதில்லை.
***
ஏன் இந்தப் பெரிய நாஸ்டால்ஜிக் கட்டுரை? தொடர்கிறேன்.