Monday, March 31, 2014

வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் உ.வாசுகி

இன்று மதியம், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உ.வாசுகியைச் சந்தித்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். இவர் கம்யூனிஸ்ட் தலைவர்கள் உமாநாத் - பாப்பா உமாநாத் ஆகியோரின் மகள். உமாநாத், நான் நாகப்பட்டினத்தில் வசித்தபோது நாகை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்திருக்கிறார். அவர் எழுதியுள்ள சிறு பிரசுரங்கள் சிலவற்றை எனக்குத் தந்தார்.


ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். தேர்தல் பிரசாரங்களில் கண்ட கண்ட விஷயங்களையெல்லாம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஓர் உறுப்பினரால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாக்குறுதி அளிப்பார்கள். உண்மையில், மக்களின் பெரும்பாலான தேவைகளை மாநகராட்சி (அல்லது அந்தந்த உள்ளாட்சி) மற்றும் மாநில அரசுதான் பூர்த்தி செய்யவேண்டியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொந்தத் தொகுதி நிதியைக் கொண்டு ஒருசில விஷயங்களைச் செய்யலாம். அவ்வளவுதான்.

வங்கி ஊழியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த வாசுகி, விருப்ப ஓய்வு பெற்றபின் தற்போது முழுநேரக் கட்சிப் பணியாளராக உள்ளார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். பெண்ணுரிமை, சிறுவர்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார். தன் அனுபவங்களை ‘பெண் - வன்முறையற்ற வாழ்வை நோக்கி...: ஒரு களப்பணியாளரின் அனுபவங்களிலிருந்து’ என்ற சிறு நூலாக எழுதியுள்ளார் (பாரதி புத்தகாலயம்).

வட சென்னை தேர்தல் நிலவரம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். தொழிற்சங்கங்கள் அப்பகுதியில் எம்மாதிரியான பங்காற்றியுள்ளன என்பது குறித்தும் அப்பகுதியின் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களின் பணி, மாநகராட்சி வார்ட் உறுப்பினர்களின் பணி ஆகியவை குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். இந்த நல்லுணர்வு வாக்குகளாக மாறவேண்டும்.

வாசுகி போன்றவர்கள் தேர்தலில் ஆதரிக்கப்படவேண்டும். இடதுசாரிப் பொருளாதாரக் கருத்துகள் எனக்கு ஏற்புடையன அல்ல என்றாலும் பொதுவாகவே இடதுசாரி இயக்கங்களின் அர்ப்பணிப்பு உணர்வு, தன்னலம் கருதா உழைப்பு, அப்பழுக்கற்ற வாழ்க்கை முறை ஆகியவைமீது எனக்குப் பெருத்த மரியாதை உண்டு. வட சென்னைவாசிகள் வாசுகிக்கு வாக்களித்து ஆதரவு அளிக்கவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் நேர்காணல்கள்: ஆலந்தூர் சட்டமன்ற வேட்பாளர் ஞாநியுடன்

ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் பத்திரிகையாளர் ஞாநியிடம் சில தினங்களுக்குமுன் நான் பேசினேன். இது இட்லிவடை வலைப்பதிவுக்காகவென்று எடுக்கப்பட்ட நேர்முகம்.


Thursday, March 27, 2014

தேர்தல் நேர்காணல்கள் - பி.எஸ்.ராகவன்

பி.எஸ். ராகவன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. திரிபுரா, மேற்கு வங்கம் ஆகியவற்றின் தலைமைச் செயலராக இருந்தவர். மத்திய உள்துறை அமைச்சகத்தில் வெகு காலம் பணியாற்றியவர். அவருடன் தேர்தல் குறித்துப் பேசியதன் ஒளிப்பதிவு இது.


Thursday, March 20, 2014

தேர்தல் நேர்காணல்கள் - நலங்கிள்ளி

நலங்கிள்ளி, கிழக்கு பதிப்பகத்துக்காக ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இன்னமும் வெளியாகவில்லை. ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் A Brief History of Time என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழ் தேசிய ஆதரவாளர். நண்பர். நாங்கள் பல விஷயங்களில் கடுமையாக வேறுபடுகிறோம். நேற்று அலுவலகம் வந்திருந்தார். அப்போது அவரிடம் தேர்தல் குறித்து சுமார் 15 நிமிடங்கள் பேசி ஒளிப்பதிவு செய்யலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் பேசி முடிக்கும்போது 40 நிமிடங்கள் ஆகியிருந்தன. நேரம் இருப்பவர்கள் பொறுமையாகக் கேட்டுப் பார்க்கலாம்.

இந்திய தேசியம் என்பது தமிழர் நலனுக்கு எதிரானது என்ற கொள்கை இவருடையது. நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிக்கப்படவேண்டியது என்கிறார். ஆனால் தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கக்கூடாது என்கிறார். ஜனநாயகத்தின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாகச் சொல்கிறார். ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே பிரச்னைக்குரியது, அதுவே ஜனநாயகத் தன்மையற்றது என்கிறார். அம்பேத்கர் முதற்கொண்டு காந்தி, நேரு என்று அனைவரையும் மொழிவழி தேசியத்துக்கு எதிரானவர்கள் என்று பார்க்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், பாஜக ஆகிய அனைவருமே இந்திய தேசியம் குறித்த ஒரே பார்வையைக் கொண்டவர்கள் என்கிறார்.

ஒரு கட்டத்தில் தான் தீவிர ஆர்.எஸ்.எஸ் அபிமானியாக இருந்ததாகவும் பாபர் மசூதி இடிப்பின்போது கரசேவையில் கலந்துகொள்ள விரும்பியதாகவும் ஆனால் தந்தை தடுத்ததால் போக முடியாமல் போய்விட்டது என்றும் ஓரிடத்தில் சொல்கிறார்! ஆனால் பின்னர் எவ்வாறு அதிலிருந்து விலகினேன் என்பதையும் குறிப்பிடுகிறார்.

பார்ப்போர், உங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.


தேர்தல் நேர்காணல்கள் - மகாதேவன்

எங்கள் அலுவலகத்தில் எடிட்டராக இருக்கும் மகாதேவனுடன். இவர் சினிமா விமரிசனம் எழுதி நாட்டையே பயமுறுத்திவருபவர் என்பது கூடுதல் தகவல். நேரம் கிடைக்கும்போது கமல், மணி ரத்னம் ஆகியோருக்கு ஆலோசனை தருவார். அவர்கள் அந்த ஆலோசனைகளைப் படிக்கிறார்களா என்பது தெரியவில்லை.


தேர்தல் நேர்காணல்கள் - லோகேஷ்

எங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் திமுக கட்சி உறுப்பினர் லோகேஷிடம் பேசியது:


தேர்தல் நேர்காணல்கள் - தங்கவேல்

என் அலுவலக நண்பர்களிடம் தேர்தல் பற்றிப் பேசிவருவதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் சார்பு கொண்ட தங்கவேலிடம் பேசியது:

Sunday, March 16, 2014

ராணியின் படிக்கிணறு

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக இந்தியாவிலிருந்து இரண்டு இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றன என்ற செய்தியை இன்றைய தி ஹிந்துவில் பார்த்தேன். அதில் ஒன்று குஜராத்தில் பாடன் நகரில் இருக்கும் ‘ராணி கி வாவ்’ - ராணி (கட்டிய) படிக்கிணறு. இரண்டாவது இமாச்சலப் பிரதேசத்தின் பெரும் இமாலய தேசியப் பூங்கா.

ஜனவரி மாத இறுதியில் குஜராத் கலாசார யாத்திரை சென்றிருந்தபோது நாங்கள் ராணி கி வாவ் சென்றிருந்தோம். அப்போது எடுத்த சில புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் சேர்த்திருந்தேன்.

படிக்கிணறுகள் குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா, தில்லி போன்ற இடங்களில் விரவிக்கிடக்கின்றன. ஆனால் குஜராத்தில் அவை மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. நீர் இல்லாத மாநிலம் என்பதால் அப்பகுதியை ஆண்ட மன்னர்கள் நீர் நிலைகளுக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுத்து மிகச் சிறந்த கட்டுமானங்களை அவற்றைச் சுற்றி ஏற்படுத்தியிருந்தனர்.

இந்தக் குறிப்பிட்ட கட்டடமான ராணி கி வாவைக் கட்டுவித்தவர் மகாராணி உதயமதி. இவர் இந்தப் பகுதியை 12-ம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம் பீமதேவ சோலங்கியின் மனைவி ஆவார். பீமதேவ சோலங்கி இறந்தபின் அவருடைய நினைவாக இந்தப் படிக்கிணற்றை உதயமதி கட்டினார் என்று பின்னர் 14-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு நூல் குறிப்பிடுகிறது. இந்தக் கிணறு இருக்கும் இடத்தில் எந்தக் கல்வெட்டும் கிடைக்கவில்லை.

நாங்கள் ஒரு குழுவாக இங்கே சென்றிருந்தபோது பேராசிரியர் முகுந்த்பாய் பிரம்மசத்திரியா என்பவர் எங்களுக்கு இந்த இடம் குறித்து ஓர் அறிமுகம் கொடுத்தார். அதற்குமுன்பாகவே ரவி தியாகராஜன் (எழுத்தாளர் அசோகமித்திரனின் மகன்) படிக்கிணறுகள் குறித்த வெகு அற்புதமான உரையை அளித்திருந்தார். இந்த இடத்தைப் பார்ப்பதற்குமுன் நாங்கள் அடாலஜ் என்ற இடத்தில் இருந்த படிக்கிணற்றைப் பார்வையிட்டிருந்தோம். இருந்தாலும் ராணி கி வாவ் அருகில் வந்தபோதுதான் தெரிந்தது, நாங்கள் முற்றிலும் வித்தியாசமான ஓர் அனுபவத்தைப் பெறப்போகிறோம் என்பது.

குஜராத்தின் அனைத்துப் படிக்கிணறுகளை ஒரு தராசில் வைத்தாலும் அவற்றால் ராணி கி வாவை நெருங்கக்கூட முடியாது. சிற்ப வேலைப்பாடுகளின் மிகச் சிறந்த கலைக்கூடமாக இந்த இடம் விளங்குகிறது.

நீர்வளம் குன்றிய ஓரிடத்தில் தரையில் வெகு ஆழமாகத் தோண்டினால்தான் குடிநீர் கிடைக்கும். அப்படி ஆழமாகத் தோண்டும்போது கீழே சென்று நீர் எடுத்துவர ஒரு பாதை தேவை. அந்தப் பாதையை நன்கு பெரிதாக ஆக்கி, அடுக்கடுக்குகளாகக் கற்களைக் கொண்டு கட்டி, அந்தக் கற்களில் சிற்பக் கலைஞர்களைக் கொண்டு சிலைகளை வடித்துவிட்டால் எப்படி இருக்கும்? அதுதான் ராணி கி வாவ். சில படங்களைக் கீழே கொடுத்துள்ளேன். பெரும்பாலும் திருமாலின் சிலைகள் எங்கும் காணப்படும். விஷ்ணுவின் 24 வடிவங்களில் பெரும்பாலானவை இங்கே இருப்பதாக கிரித் மான்கொடி போன்ற வல்லுநர்கள் சொல்கிறார்கள். வட்டக் கிணற்றின் உட்புறம் பள்ளிகொண்ட விஷ்ணுவைக் காணலாம். தசாவதாரச் சிற்பங்கள் பல இடங்களில். ஆங்காங்கே அப்சரஸ்கள், துர்கை, என்று கணக்கே இல்லாத சிற்பங்கள்.

1980-கள் வரை இந்தக் கிணற்றில் நீர் இருந்ததாகச் சொல்கிறார் பிரம்மசத்திரியா. 1960-களில்தான் இந்தக் கிணறு இந்தியத் தொல்லியல் துறையால் முற்றிலுமாக அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதற்குமுன்புவரை கிணற்றில் மேல்பகுதியும் சில தூண்களும் மட்டுமே காணப்பட்டன. இந்தக் கிணற்றின் சில தூண்களை எடுத்து அருகில் ஓரிடத்தில் இன்னொரு படிக்கிணறு ஒன்று கட்டப்பட்டிருக்கிறதாம். அதனை இன்றும் காணலாம். தொல்லியல் துறை இந்தக் கிணற்றை மிக அழகாகப் பராமரித்துவந்திருக்கிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்டால், யுனெஸ்கோ பெருமைப்படக்கூடிய ஒரு கலாசாரச் சின்னமே இது.

கிணற்றை நோக்கிச் செல்லும்போது
பக்கவாட்டில் வேலைப்பாடுகள்

மண்டபத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள்
யார் இது?
பல தளங்களை ஒருசேரப் பார்க்கலாம்
ஓர் அங்குலம்கூட விடாமல் சிற்பங்கள், வேலைப்பாடுகள்
விஷ்ணுவின் 24 வடிவங்களில் ஒன்று
யார் இது?
உதட்டுக்குப் பூச்சிடும் தேவதை
கல்கி அவதாரம்
மகிஷாசுரமர்தினி
வராக அவதாரம்
வாமன அவதாரம்
விஷ்ணு
கிணற்றின் உட்சுவர், பள்ளிகொண்ட விஷ்ணு
கீர்த்திமுகங்கள், யானைகள், முனிவர்கள், தெய்வங்கள்
ஜாலி வேலைப்பாடுகள்
மேலிருந்து கீழ்நோக்கிய படம்
கிணறு, மேலிருந்துகீழ்
தொல்லியல் துறை அகழ்ந்தெடுக்கும்முன்பு

Saturday, March 15, 2014

ஹரன்பிரசன்னா - நேர்காணல்

ஹரன்பிரசன்னாவிடம் இந்துத்துவம், தேர்தல் ஆகியவை குறித்துப் பேசியதன் வீடியோ.

Thursday, March 13, 2014

மருதன் - நேர்காணல்

எங்கள் அலுவலகத்தில் உள்ள பல்வேறு நபர்களிடமும் தேர்தல் மற்றும் அரசியல் தொடர்பாக சில வீடியோ பதிவுகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளேன். அதில் முதலாவதாக, கிழக்கு பதிப்பகத்தில் எடிட்டராக வேலை செய்யும் மருதனுடனான நேர்காணல் இது.


Tuesday, March 11, 2014

Long form கட்டுரைகள்

தமிழ் வெகுஜன இதழ்களில், தினசரிகளில் 500-600 வார்த்தைகளுக்குமேல் எந்தக் கட்டுரையுமே இருக்காது. சிற்றிதழ்களில் 1000 முதல் 1200 வார்த்தைகளில் கட்டுரைகள் இருக்கும். ஏ4 அளவில் ஐந்தாறு பக்கங்கள் வரலாம். ஆனால் கேரவான் போன்ற ஆங்கில இதழில் முதன்மைக் கட்டுரை 7,000 முதல் 10,000 சொற்கள்கூட வருகிறது. இதைத்தான் லாங் ஃபார்ம் எழுத்து என்கிறோம்.

சில விஷயங்களை விலாவரியாக, விஸ்தாரமாக, விளக்கமாக, மெதுவாக எழுதவேண்டியிருக்கிறது. தமிழில் இதற்கான தேவையும் இருக்கிறது. ஆனால் இம்மாதிரியான கட்டுரைகள் வருவதற்கான வெளி இல்லை. இணையம்தான் இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் எத்தனை பேர் படிக்கப்போகிறார்கள் என்ற தெளிவு இல்லாததாலும் இதுபோன்ற விரிவான கட்டுரையை எழுத ஆகும் செலவு காரணத்தாலும் தீவிர இதழாளர்கள் இதைச் சோதித்துப்பார்க்கவில்லை.

லாங் ஃபார்ம் எழுத சுவாரசியமான எழுத்து நடை கட்டாயம் வேண்டும். இல்லாவிட்டால் ஒரு பக்கம்கூடத் தாண்டாமல் தூக்கி எறிந்துவிட்டுப் போய்விடுவார்கள். முக்கியமான விஷயமாகவும் இருக்கவேண்டும். நம்பகத்தன்மை மிகவும் அவசியம். கள உழைப்பு மிக மிக அவசியம். உட்கார்ந்த இடத்தில் கூகிளை அலசி இதையெல்லாம் எழுத முடியாது. பலரைப் பார்த்துப் பேசித் தரவுகளைச் சேர்க்கவேண்டும். அவர்கள் அனைவரையும் இணைக்கும் சரடு வேண்டும்.

லாங் ஃபார்ம் ஜர்னலிசத்துக்கு என்று தமிழில் ஓர் இதழ் வேண்டும் என்று நேற்று ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதற்கான மூலதனம் கையில் இருக்கும் சிலரால்தான் இது சாத்தியப்படும்.

எம்மாதிரியான கட்டுரைகள் லாங் ஃபார்மில் வரலாம் என்று யோசித்துப் பார்த்தேன். உடனடியாகத் தோன்றியவை இவை.

1) மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை. எனக்கு இதுகுறித்து நிறையக் குழப்பங்கள் உள்ளன. ஒரு விரிவான, முழுமையான கட்டுரை இந்தத் தலைப்பில் வந்தால் அருமையாக இருக்கும். வெற்றுப் பரபரப்புக்காக எழுதப்படுவதாக இருக்கக்கூடாது.

2) தேர்தலுக்கு முந்தைய அரசியல் பேரங்கள். சிறு கட்சிகள் எப்படிப் பெரும் கட்சிகளிடம் தங்கள் பேரங்களைத் தொடங்குகிறார்கள்; யார் யாரெல்லாம் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்கிறார்கள்; பேசப்படுவது வெறும் இடங்கள் மட்டுமா? பணப் பரிமாற்றம் உண்டு என்றால் எந்தத் திசையில், ஏன்? இவை அனைத்தையும் பற்றிய முழுமையான, உருப்படியான ஆய்வுக் கட்டுரை.

கேரவான் லாங் ஃபார்ம் கட்டுரைகளில் நிறைய, ஆசாமிகளைப் பற்றியவை. அதுமாதிரி யாரைப் பற்றியெல்லாம் எழுதப்படவேண்டும் என்று குறிப்பிட முடியுமா?

வேறு ஆலோசனைகள் இருந்தாலும் சொல்லுங்கள்.

Thursday, March 06, 2014

கிண்டில் மின்புத்தகங்கள் - ஆங்கிலம்

சில ஆண்டுகளுக்குமுன், தமிழின் முக்கியமான சில நாவல்களையும் சிறுகதைகளையும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து வெளியிடலாம் என்ற நோக்கில் Indian Writing என்ற பெயரில் ஒரு பதிப்பை NHM ஆரம்பித்தது. ஆனால் இந்தப் புத்தகங்களைச் சந்தைப்படுத்தத் தெரியாமல், விநியோகிக்கத் தெரியாமல், முயற்சிகளை நிறுத்திக்கொள்ள வேண்டிவந்தது.

ராம்நாராயணின் தலைமையில் இயங்கிய ஆசிரியர் குழு 3 ஆண்டுகளில் சுமார் 40-45 புத்தகங்களைக் கொண்டுவந்திருந்தனர். அவற்றை இப்போது மின்புத்தகங்களாக ஆக்கி, கிண்டில் மூலம் படிக்கும் வசதியைச் செய்துவருகிறோம். இப்போது 15 புத்தகங்கள் கிடைக்கின்றன. அவை கீழே, சுட்டிகளுடன். ஆங்கிலம் படிப்பவர்களுக்கு இவற்றை நீங்கள் பரிந்துரை செய்யலாம்.
  1. Lizzy's Legacy, Hephzibah Jesudasan
  2. Surrendered Dreams, Indumathi 
  3. Tyagu, Sivasankari 
  4. At the cusp of Ages, Vaasanthi 
  5. Star Crossed, Ashokamitran
  6. Once an Actress, D Jayakanthan
  7. Krishna Krishna, Indira Parthasarathy 
  8. High Noon and Other Stories, Indira Parthasarathy
  9. By the Sea, Vanna Nilavan 
  10. Sons of the Sun, Sa. Kandasamy
  11. Where the Lord Sleeps, Neela Padmanabhan
  12. Paper Flowers, Aadhavan 
  13. I, Ramaseshan, Aadhavan 
  14. The Forest, Jeyamohan 
  15. The Ghosts of Arasur, Era. Murukan

அமேசான் இந்தியாவில் கிழக்கு புத்தகங்கள்

கடந்த சில தினங்களாக அமேசான் இந்தியா மின்வணிகத் தளத்தில் கிழக்கு பதிப்பகத்தின் பெரும்பாலான புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இதனை அமேசானே நேரடியாக fulfill செய்வதால் வாங்குவோருக்குச் சில வசதிகள் உண்டு.
  1. ஒரேயொரு புத்தகம் (100 ரூபாய்க்குக் குறைவாக இருந்தாலும்கூட) வாங்கினாலும் இந்தியா முழுமைக்கும் கூரியர் கட்டணம் கிடையாது.
  2. COD (கேஷ் ஆன் டெலிவரி) வசதியை அளிக்கிறார்கள். கிரெடிட் கார்ட், நெட் பேங்கிங் வசதி இல்லாதவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  3. சில குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டும் சூப்பர் ஃபாஸ்ட் ஒரு நாள், இரண்டு நாள் ஷிப்பிங் வசதியை அளிக்கிறார்கள். (அதற்கெனத் தனிக் கட்டணம் உண்டு. நீங்களே தளத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.)
பரிசோதனை முயற்சியாக கிழக்கின் சில நூறு புத்தகங்களை மட்டுமே அமேசானின் பெங்களூரு வேர்ஹவுஸில் வைத்திருக்கிறோம். பயன்பாட்டைப் பொருத்து கிழக்கின் அனைத்துப் புத்தகங்களையும் இங்கே வைத்து விற்கலாம் என்றிருக்கிறோம். பயன்படுத்திவிட்டு, நிறை, குறைகளை எழுதுங்கள்.