Wednesday, November 29, 2006

சொர்ணம்மாள் விருதுகள்

மாஃபா எனும் மனிதவள நிறுவனத்தை நடத்தி வரும் பாண்டியராஜன், அவர் மனைவி லதா, உடன் பணியாற்றும் முஸ்தஃபா ஆகியோர் சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை எனும் தொண்டு நிறுவனத்தை நிறுவியுள்ளனர்.

இந்த அறக்கட்டளை சென்னையில் ஒரு பள்ளியை நடத்துகிறது. பல மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழிகாட்டுகிறது. ஆண்டுதோறும் சென்னையைச் சேர்ந்த சிறந்த பத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 'எழுச்சி விருது' என்ற விருதினைக் கொடுக்கிறார்கள். அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த பத்து மாணவர்களுக்கு 'இளம் சாதனையாளர் விருது' கொடுக்கிறார்கள்.

இளம் சாதனையாளர் விருதுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் நடுவராக நான் இருந்தேன். விருது வழங்கும் விழா 25 நவம்பர் 2006, சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்த விருதைப் பற்றி எந்த அளவுக்கு தமிழகம் முழுதும் தெரிந்திருந்தது என்று தெரியவில்லை. முந்நூறுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்தன. கல்வித்துறை (எழுத்து, அறிவியல், கணிதம், பிற பாடங்கள்), விளையாட்டு, கலை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் சாதனை செய்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது அதிகபட்சம் 11-வதில் படிக்கலாம் என்று நினைக்கிறேன்.

முதல் கட்டத்தில் விண்ணப்பங்களை சலித்து சுமார் 40 விண்ணப்பங்களை என்னிடம் கொடுத்திருந்தார்கள். அதிலிருந்து 10-ஐ நான் தேர்வு செய்ய வேண்டும்.

கல்வி, விளையாட்டு இரண்டு துறைகளிலும், துறைக்கு மூவர்; கலைத்துறையிலிருந்து நான்கு பேர் என்று தேர்ந்தெடுக்க முடிவு செய்தேன்.

சென்னையைச் சேர்ந்த பலருக்கு பல்வேறு துறைகளில் பரிமளிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் பிற மாவட்டங்களில் இருந்து வரும் சிறுவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. அதனால் பிற மாவட்ட மாணவர்களுக்கு எக்ஸ்ட்ரா வெயிட்டேஜ் கொடுப்பது என்று முடிவு செய்தேன். பெண்களுக்கு என்று தனி வெயிட்டேஜ் எதுவும் கொடுக்கவில்லை; ஆனால் கடைசித் தேர்வில் சொல்லிவைத்தாற்போல 5 ஆண், 5 பெண் என்று வந்தது.

உடல் குறைபாடு உள்ளோர்க்கு என்று தனியாகத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்யவில்லை. ஆனால் விண்ணப்பங்களையும் சாதனைப்பட்டியலையும் பார்த்தபோது ஒரே ஒருவர்தான் அப்படிப்பட்ட பின்னணியில் விண்ணப்பித்திருந்தார். அவர் தன் சாதனையின் அடிப்படையிலே தானாகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் 25 நவம்பர் அன்று நடந்த விழாவில் கவிஞர் கனிமொழியிடம் விருது பெற்றார்கள்.

-*-

ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் சொர்ணம்மாள் தினம் என்னும் இந்த விழாவில், நிறையக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பெரும்பாலும் சொர்ணம்மாள் அறக்கட்டளைப் பள்ளி மாணவர்களே கலை நிகழ்ச்சிகளைச் செய்தார்கள். ஆனால் ஒரு நிகழ்வு கூத்துப்பட்டறையின் ந.முத்துசாமி வடிவமைத்திருந்த 'துடும்பாட்டம்' ஆக இருந்தது.

துடும்பாட்டம் என்பது பலவித பறைகளைக் கொண்டு அடிக்கப்படும் ஒத்திசைவு ஆட்டம். மேட்டுப்பாளையத்துக்கு அருகே உள்ள ஓர் இடத்தில் தெலுங்கு பேசும் தலித் மக்களது பாரம்பரிய இசை ஆட்டம்.

சுமார் 8 பேர் என்று நினைக்கிறேன். அரை வட்டமாக நின்றுகொண்டு நான்கு விதமான வெவ்வேறு பறைகள், தப்பட்டைகளைக் கொண்டு அடித்தவாறும் அவ்வப்போது குதித்தவாறும் இருந்தனர். ஆட்டம் என்பது குறைவுதான். ஓசைதான் பிரதானம்.

-*-

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சுப்ரியா சாஹூ, ஐ.ஏ.எஸ் (இயக்குனர், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம்), வாசிமலை (தானம் அறக்கட்டளை), கவிஞர் கனிமொழி, டாக்டர் கலாநிதி ஆகியோர் வந்திருந்தனர். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது ஃபாதர் ஜெகத் காஸ்பர் ராஜ்.

நிகழ்ச்சி பற்றிய பத்திரிகைச் செய்திகள்:
Young Achiever awards presented
சொர்ணம்மாள் அறக்கட்டளை 6-ம் ஆண்டு விழா

Tuesday, November 28, 2006

மாஞ்சா நூலில் சிக்கிய கழுகு

நேற்று காலை என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் சுற்றியிருந்த பட்டம் விடும் நூலில் ஒரு கழுகு மாட்டிக்கொண்டது.

ஞாயிறு அன்றே சில சிறுவர்கள் தெருவில் பட்டம் விட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். பட்டம் அறுந்து விட்டது. அது சாதாரண நூல் இல்லை, சிறு சிறு கண்ணாடித் துகள்கள் போட்டு உருவாக்கியிருக்கும் மாஞ்சா நூல் என்று பிற்பாடுதான் தெரிந்தது. கழுகு நல்ல பெரிய கழுகு. அது எப்படி வேப்ப மரத்தில் வந்து உட்கார்ந்தது என்று தெரியவில்லை. அல்லது மேலிருந்தே நூலில் மாட்டிக்கொண்டு பறக்க முடியாமல் வேப்ப மரத்தில் வந்து உட்கார்ந்திருக்கலாம்.

சாதாரணமாக அந்த வேப்ப மரத்தில் இரண்டு காக்கைகள்தான் உட்கார்ந்திருக்கும். அந்த இரண்டு காக்கைகளும் அதே வேப்பமரத்தில் கட்டியிருந்த கூட்டில் பிறந்தவை. எப்பொழுதும் அருகருகே உட்கார்ந்திருக்கும். பிற காக்கைகளைப் போல ஊர் சுற்றாது. அந்த மரத்தில் ஓடும் அணில்களைத் துரத்தும். பக்கத்து வீடுகளில் கிடைக்கும் உணவைச் சாப்பிடும். மீண்டும் மரத்தில் வந்து உட்காரும்.

ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட சில மாதங்களில் - கோடையில் - நிறைய கிளிகள் வரும். இப்பொழுது கிளிகள் கிடையாது.

கழுகு ஒருவேளை அணில் எதையாவது பிடிக்க வந்திருக்கலாம். ஆனால் தானே மாஞ்சா நூலில் மாட்டிக்கொண்டது. நூல் அதன் ஒருபக்க இறக்கையைச் சுற்றி அறுக்க ஆரம்பித்துவிட்டது. நிறைய ரத்த சேதம். அரை மயக்க நிலையில் கிடந்தது கழுகு.

கழுகைக் கண்டு பயந்தோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ பல காக்கைகள் அந்த இடத்தில் குழுமி சத்தம் போடத் தொடங்கின. சாதாரணமாக வேறு ஏதாவது ஒரு காக்கைக்குப் பிரச்னை என்றால்தான் பிற காக்கைகள் வந்து ஓலமிடும். ஆனால் கழுகைக் கண்டு ஏன் காக்கைகள் கூட்டம் கூடிச் சத்தம் போட்டன என்று தெரியவில்லை.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர் பலரும் வந்து பார்த்தனர். எங்கள் வீட்டு பால்கனியிலிருந்து பார்த்தபோதுதான் மரத்தின் இலைகளுக்குப் பின்னே கழுகு ஒரு கிளையில் உட்கார்ந்திருந்தது தெரிய வந்தது.

தெருவில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் மரத்தில் ஏறி மயக்க நிலையில் இருந்த கழுகைக் கீழே கொண்டுவந்து ஒரு பெட்டியில் வைத்தனர். இன்னமும் உயிர் இருந்தது. ப்ளூ க்ராஸ் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டதில் அவர்கள் ப்ளூ க்ராஸ் வைல்ட்லைஃப் என்னும் பிரிவைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். (வீட்டு மிருகங்களுக்குத் தனிப்பிரிவு, சுதந்தர மிருகங்களுக்குத் தனிப்பிரிவு.) இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு ஓர் ஆம்புலன்ஸ் வந்து கழுகை எடுத்துச் சென்றது.

கழுகு பிழைத்து விடும் என்று நினைக்கிறேன். அதனால் மீண்டும் பறக்க முடியுமா என்று தெரியவில்லை. ஓர் இறக்கையை அது இழக்க நேரிட்டாலும் நேரிடலாம். மீண்டும் போன் செய்து கழுகு எப்படி இருக்கிறது என்று விசாரிக்க வேண்டும்!

நீங்கள் சென்னையில் இருந்தால், இதுபோன்று ஏதேனும் சுதந்தரமான பறவை/விலங்குக்குப் பிரச்னை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்:

Blue Cross Wildlife: 2220-0335

Friday, November 24, 2006

SC/ST கிரீமி லேயர் தொடர்பாக சட்டம் தேவையில்லை

நாகராஜ் வழக்கில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் கொடுத்த தீர்ப்பில் சொல்லப்பட்ட சில கருத்துகள் SC/ST பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிலும் கிரீமி லேயர் விலக்கு தேவைப்படும் என்று சொல்வதாகப் பலர் கருதினர். இதை அடுத்து பல அரசியல் கட்சிகளிடமிருந்தும் நீதிமன்றத்துக்கு எதிரான கண்டனங்களும் அவசரச் சட்டம் இயற்றவேண்டும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.

மத்திய அரசு அட்டர்னி ஜெனரல் மிலான் பானெர்ஜி, மேற்படி நாகராஜ் வழக்கின் தீர்ப்பில் SC/ST கிரீமி லேயர் பற்றி தீர்ப்பாக எதுவும் சொல்லவில்லை என்றும் ஏற்கெனவே ஒன்பது நீதிபதிகள் பெஞ்ச் கொடுத்த இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்பில் SC/ST-க்கு கிரீமி லேயர் தேவையில்லை என்று சொல்லியிருந்ததால், ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அதற்கு மாற்றாக ஏதாவது சொல்லியிருந்தாலும் அது பொருந்தாது, என்றும் சொல்லியிருக்கிறார்.

இத்துடன் இந்த விவகாரம் இப்பொழுதைக்கு முற்றுப் பெறுகிறது.

இதைப்பற்றிய என் முந்தைய இரு பதிவுகள்:

SC/ST கிரீமி லேயர்
இட ஒதுக்கீடு - கிரீமி லேயர்

Wednesday, November 22, 2006

உள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டம் ஒலித்துண்டுகள்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பாரதீய வித்யா பவனில் நடைபெற்ற கூட்டத்தின் ஒலித்துண்டுகளை சேர்த்துள்ளேன்.
  1. லட்சுமி கிருஷ்ணமூர்த்தி - ரெகார்ட் செய்யவில்லை
  2. மாலன், 13 MB, 28.28 min
  3. இரா.செழியன், 12 MB, 26.14 min (நிறைய எடிட் செய்துள்ளேன். நடுவில் நிறைய இடைவெளிகள். தண்ணீர் குடிப்பது, செய்தித்தாள் பக்கங்களைத் திருப்புவது, பேசியதையே திரும்பப் பேசுவது போன்றவற்றை வெட்டி விட்டேன்.)
  4. B.S.ராகவன், 8.15 MB, 17.48 min
  5. மாலன் தீர்மானம், 1.04 MB, 2.16 min

Monday, November 20, 2006

நுழைவுத் தேர்வின் எதிர்காலம்

தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு கடந்த ஆண்டு முயற்சி செய்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் தலையிட்டு அரசாணை அல்லது அவசரச் சட்டத்தை ரத்து செய்தது.

கருணாநிதி தலைமையில் புதிய அரசு பதவியேற்றதும் முனைவர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, அதனை விவாதித்த பின்னர், சென்ற வாரம் தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த அறிக்கையை முன்வைத்து நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யும் சட்டம் இயற்றப்படும் என்று தெரிகிறது.

ஆனந்தகிருஷ்ணன் குழு பொதுமக்களிடம் இருந்து கருத்துகளைக் கேட்டிருந்தது. அவர்களுக்கு நான் அனுப்பிய மின்னஞ்சலைக் கீழே தருகிறேன்.
Subject: Common Entrance Tests - Needed
Date: 10/August/2006

....

I believe the Common Entrance Tests (CET) must be continued for the sake of fairness and uniform evaluation of potential candidates. There are multiple educational boards and without a common test, it will be unfair to allocate seats to various students based only on their school marks.

However efforts should be undertaken to provide additional weightage for candidates from disadvantaged sections.

Tamil Nadu already follows reservation for SC/ST, BC and MBC categories. Across all these categories there still exist students who are disadvantaged such as rural - urban divide, economic background, social background etc.

For example, children supported by single mothers (widowed or destitute) should be given additional weightage. Girl children should be given additional weightage. Students from BPL families should be given additional weightage. Students from specific districts could be given additional weightage based on the prior performance of such districts. For example, districts such as Dharmapuri and Krishnagiri do not produce enough students who qualify for engineering or medical. So a push-up for them would help. Thus, a district index could be prepared and added to the weightage.

Similarly several such criteria could be selected and listed and public opinion sought. Based on the final findings additional points are allocated to students and added to their CET score and marks from the final examination.

In summary, I would suggest that CET be continued with, but additional points given to disadvantaged people based on criteria other than caste, and ensure that such reservations work within the existing quota for each category such as SC/ST/BC/MBC and open quota.

Badri Seshadri
Address

Thursday, November 16, 2006

தமிழக நூலகங்கள்

தேசிய நூலக வாரம் என்று ஏதோ ஒன்று கொண்டாடப்படுகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இது 39வது ஆண்டாம். தமிழகத்தில் சென்னை கன்னிமரா நூலகத்தில் இது நடக்கிறது போலும்.

இந்த வாரம் நடக்கும் இந்த விழாவில் தினம் ஒரு பேச்சாளர் பேசுகிறார் என்று அறிகிறேன். இன்று ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன்.

செவ்வாய் அன்று விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக கிராமப்புறங்களில் மேலும் 262 நூலகங்கள் உருவாக்கப்பட உள்ளன என்றார். பல நூலகக் கட்டடங்கள் புதுப்பிக்கப் படுகின்றனவாம்.

நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்க அமைக்கப்படும் குழு விரைவில் முதல்வரால் அமைக்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

(இதுபோன்ற சிறு விஷயங்களில் ஒரு முதல்வர் ஈடுபடவேண்டுமா என்று புரியவில்லை. அமைச்சர் தங்கம் தென்னரசே இதைச் செய்யலாமே?)

செயலர் கணேசன் பேசும்போது சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார் - ஆனால் அதை அவர் குறிப்பிடத் தகுந்த இடம் இதுவா என்று புரியவில்லை.

விஷயம் 1: "The statistics that showed 5.27 crore persons visit the 3751 libraries in the State needed to be taken with a pinch of salt. Since most of these were repeat visits, the total number of visitors is probably a fifth of the number."

நூலகத் துறை என்பது உயர்கல்வித் துறையுடன் கூடவே வருகிறது. எனவே இந்தத் துறையின் செயலர் என்ன செய்ய வேண்டும்? புள்ளிவிவரங்கள் நமக்கு மிகவும் தேவையானவை. நாம் செய்யும் செலவு சரியாக அனைவரையும் போய்ச்சேருகிறதா என்பதைக் கண்காணிக்க இவை உதவும். பொது நூலகங்களை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க, தேவையான கணக்கெடுத்தல் முறையை நூலகங்கள் கொண்டுவரவேண்டும். ஒவ்வொரு பயனருக்கும் அடையாள அட்டை (உள்ளே வந்து சும்மா புத்தகத்தைப் புரட்ட வேண்டுமென்றாலும் அடையாள அட்டை வேண்டும் என்று வைக்க வேண்டும்) கொடுத்தால் அதுவே போதும்.

இதை வைத்து எத்தனை 'unique' வாசகர்கள் பொது நூலகங்களுக்கு வருகின்றனர் என்பதைக் கண்டறிந்துவிடலாம். அதைவிடுத்து guesswork செய்வது அவரது பதவிக்கு இழுக்கு.

விஷயம் 2: "There were more than 50 vacancies of librarians in government colleges, he said and urged the Government to take steps to improve facilities in libraries."

இதை தன் அமைச்சரிடம் அவர் நேரடியாகப் பேசவேண்டும். வெளியே நடக்கும் விழாவில், ஒரு துறையின் அமைச்சரும் செயலரும் பங்கெடுக்கும்போதா பேசுவது? இவர் என்னவோ நிர்வாகத்தின் வெளியே இருக்கும் ஒருவரைப் போல அல்லவா பேசுகிறார்?

-*-

நூலகத் துறைக்கு நிறையப் பணம் வருகிறது - ரியல் எஸ்டேட் வளர்ச்சியால் - என்று முன்னர் நான் எழுதியிருந்தேன். அந்தப் பணம் சரியான முறையில் இன்னமும் நூலகங்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை. அதை அமைச்சர் தங்கம் தென்னரசு போக்குவார் என்று எதிர்பார்ப்போம்!

மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் - ராமதாஸ் விருப்பம்

உள்ளாட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் தேவை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதிகூட இதைப் பற்றிப் பேசியதாக இரண்டு நாள்கள் முன்னர் வெளியான ஏதோ ஒரு செய்தியில் படித்ததுபோல ஞாபகம். ஆனால் நான் செய்தியைக் குறித்து வைத்துக்கொள்ள மறந்துவிட்டேன்.

ராமதாஸ், வெற்றிபெற்ற பாமக உறுப்பினர்களுக்கு பயிலரங்கம் நடத்தியுள்ளார். அந்தப் பயிலரங்கத்தில் ராமதாஸ் கூறிய சில கருத்துகள் முக்கியமானவை.

* உள்ளாட்சித் தலைவர்களை நேரடியாகத் தேர்தெடுப்பதற்கான சட்டத் திருத்தம் வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட வேண்டும். (திமுக கொண்டுவந்த சட்டத்திருத்தத்தை ஏன் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தீர்கள், ராமதாஸ்? விவாதம் இல்லாது சில விஷயங்கள் நடைபெற்றால் விளைவுகள் மோசமாக ஆவது சகஜம்தானே?)

* அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் பெண்களையே முழுமையாக போட்டியிட வைக்க வேண்டும். (இது கொஞ்சம் ஓவர் சார். 50% பெண்களுக்கு என்று இட ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம். அது போதும்.)

* அரசுக்கு சொந்தமான ஒரு தூசியைக்கூட வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது. (வரவேற்கிறோம். பாமக உறுப்பினர்கள் இவ்வாறு நடந்துகொள்வது மட்டுமன்றி, தோழமைக் கட்சியோ, எதிர்க்கட்சியோ யாராவது இந்தத் தவறைச் செய்தால் அவர்களைக் காட்டிக்கொடுத்து சட்டப்படி நடவடிக்க எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.)

* உள்ளாட்சி மன்றங்களுக்கு கட்சி சார்பில் தேர்தல் நடத்தக் கூடாது. (ஏன் அய்யா அப்படிச் சொல்கிறீர்கள்? பல மிடில் கிளாஸ் 'படித்தவர்கள்' அப்படிச் சொல்கிறார்கள் ஏனோ ஆதங்கத்தால். கட்சிகள் நியாயமாகவும் ஒழுங்காகவும் இருந்தால் போதுமே. கட்சிச் சார்புடன் தேர்தல் நடப்பதில் தவறேதும் இல்லை.)

* தி ஹிந்துவில் இருந்து: "Disapproving of the way the local bodies' elections were held last month, Dr. Ramadoss said he had doubts whether the winners would serve the people, after having spent large sums of money." நேற்று B.S.ராகவன் பேசும்போது (அவரும் ராமதாஸ் கூட்டிய பயிலரங்கில் கலந்துகொண்டிருந்தார்) ராமதாஸ் "இப்பொழுது நடந்தது ஒரு தேர்தலா?" என்று ஆதங்கப்பட்டதாகச் சொன்னார். (சார், கொஞ்சம் சத்தமாக, வெளியே எல்லோரும் கேட்கும் வண்ணம் - முதல்வர் கருணாநிதி காதுபட - சொல்லுங்களேன்!)

ஆக, காங்கிரஸ் தவிர மீதி அனைவரும் இப்பொழுது உள்ளாட்சித் தேர்தலை முழுவதுமாக விமரிசித்து விட்டார்கள்.

தி ஹிந்து செய்தி | தினமணி செய்தி

Wednesday, November 15, 2006

உள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டம்

இது அவசரமான சுருக்கம். ஒலித்துண்டுகளை நாளை சேர்க்கிறேன்.

நான் சென்றபோது கூட்டம் தொடங்கியிருந்தது. லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பேசிக்கொண்டிருந்தார்; முடிக்கும் நேரம். "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ?" என்று முடித்தார். முழுவதுமாகக் கேட்கவில்லை. ஆனால் என்ன சொல்லியிருந்திருப்பார் என்பது புரிந்தது. பின் மெதுவாகக் கைத்தடியை ஊன்றிக்கொண்டு வெளியேறிவிட்டார்.

[லட்சுமி கிருஷ்ணமூர்த்தி - வாசகர் வட்டம் என்ற அமைப்பை நிறுவி தமிழ் புத்தகங்கள் பதிப்பித்தவர். காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் மகள். இப்பொழுது 80 வயதுக்கு மேல் ஆகிறது.]

மாலன் அடுத்து பேசினார். பஞ்சாயத் ராஜ் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் என்ன சாதிக்க நினைத்தது என்பதை விளக்கமாகப் பேசிவிட்டு (Democracy, Decentralization, elimination of Discrimination, Development - 4Ds), எந்தவித விவாதமும் இல்லாமல் நகராட்சி, மாநகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் கூடாது என்ற அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதிலிருந்தே பிரச்னை ஆரம்பமாகிவிட்டது என்றார்.

உள்ளாட்சித் தேர்தலில் பணம் தண்ணீராகச் செலவு செய்யப்பட்டது, தேர்தலின்போது நடந்த வன்முறை, முறைகேடுகள் ஆகியவற்றைச் சாடினார்.

இரா.செழியன், வயது முதிர்ந்த காலத்திலும் உட்கார்ந்தவாறு பேசினார். வெவ்வேறு செய்தித்தாள்களிலிருந்து தேர்தல் வன்முறை தொடர்பாக வந்திருந்த செய்திகளைப் படித்தார். பின் எதிர்க்கட்சித் தலைவர்களது அறிக்கைகளிலிருந்து சில துண்டுகளைப் படித்தார். பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் திமுகவின் வன்முறையைச் சாடியிருப்பதைப் படித்தார்.

அத்துடன் மாநிலத் தேர்தல் ஆணையாளர், மாநில DGP, மாநகராட்சி காவல்துறை ஆணையர் ஆகியோர் ஒரு பிரச்னையும் இல்லை என்று அறிக்கை விட்டதையும் படித்தார். காவல்துறையைக் கடுமையாகச் சாடினார்.

ராகவன் மீண்டும் வந்து சில கருத்துகளை முன்வைத்தார். அவை

1. உள்ளாட்சித் தேர்தலும் மத்திய தேர்தல் ஆணையத்தின் பார்வையில்தான் நடக்க வேண்டும்
2. எங்காவது முறைகேடுகள் நடப்பதாகத் தகவல் வந்தால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறு தேர்தல் நடத்தப்படவேண்டும்.
3. மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
4. வெளி மாநிலக் காவல்படை அல்லது பாராமிலிட்டரி படைகள் பயன்படுத்தப்பட வேண்டும். மாநிலக் காவல்படையை நம்புவதற்கில்லை.
5. வெளி மாநிலங்களிலிருந்து கண்காணிப்பாளர்கள் வரவேண்டும்.

மாலன் அடுத்து ஒரு தீர்மானத்தை முன்வைத்து, கூட்டம் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா என்று கேட்டார். தீர்மானம் பின்வருமாறு:
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நியாயமான முறையில் வாக்குப் பதிவு நடைபெறவில்லை, வன்முறை நடந்துள்ளது என்று பத்திரிகைகள் அனைத்தும் எழுதியுள்ளன. இந்தப் பத்திரிகைச் செய்திகளை முதன்நிலை அறிக்கையாக வைத்து தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க ஒரு விசாரணைக் கமிஷனை அமைக்கப்பட வேண்டும். இந்த விசாரணைக் கமிஷன் மக்களிடம் விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இதை, கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி ஆமோதித்தனர். அப்பொழுது பார்வையாளர் தரப்பில் முதல் வரிசையிலிருந்த இல.கணேசன் எழுந்து, விசாரணைக் கமிஷன் தீர்ப்பை முன்வைத்து தேர்தல் முறைகேடுகள் நடந்திருந்தால் சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் சேர்த்துக்கொள்ளச் சொன்னார்.

பார்வையாளர்கள் பலதரப்பட்டனராக இருந்தனர். "மிடில் கிளாஸ் மைலாப்பூர் மாமாக்கள் கூட்டம்" என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. மதிமுகவின் வைகோ, பாஜக இல.கணேசன் இருவரும் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தனர். வைகோவின் தொண்டர்கள் பெரிய அளவில் இருந்தனர். வேறு சில அரசியல் தலைவர்களும் வந்திருந்தனர் என்று நினைக்கிறேன்.

-*-

மாநிலம் முழுவதும் நடந்த தேர்தல் மோசமானதா என்று தெரியவில்லை. ஆனால் மாநகராட்சித் தேர்தல் முழுப் பித்தலாட்டம் என்றே கருதுகிறேன். தேர்தலை ரத்து செய்துவிட்டு நியாயமான முறையில் மறுதேர்தல் என்ற ஒன்று நடைபெறாது என்றே கருதுகிறேன்.

மாநில தேர்தல் கமிஷனர் ஆளுங்கட்சியின் அடியாளாகவும், போலீஸ்துறை காந்தியின் குரங்குகள்போலவும் செயல்பட்டுள்ள நிலையில் மற்றொரு தேர்தல் நடந்தாலும் அதன்மீதும் யாரும் நம்பிக்கை வைக்க முடியாது. அதே சமயம், மாநிலத் தேர்தல் கமிஷனைக் கலைத்துவிட்டு மத்திய தேர்தல் கமிஷனின் தலைமையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் முடியாது - மாலன் சொன்னதுபோல அது கூட்டாட்சி முறைக்கு எதிரானது. (பஞ்சாயத் ராஜ் சட்டத்தில் மாநிலத் தேர்தல் கமிஷன் என்ற அமைப்புகளை உருவாக்கச் சொன்ன சட்டத் திருத்தம் தவறானது என்பது என் கருத்து. ஆனால் இப்பொழுதைய சட்டத்தை வைத்துப் பார்த்தால் மற்றொரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவராமல் இதனைச் செய்ய முடியாது. மாநிலத் தேர்தல் கமிஷன்களை ரத்து செய்யுமாறு கொண்டுவரப்படும் எந்தச் சட்டத்தையும் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள கட்சிகள் ஆதரிக்க மாட்டா!)

தேர்தலில் பணம் பாய்வதை இப்பொழுதைக்கு எந்த வழியிலும் கட்டுப்படுத்த முடியாது. எனவே அதைப்பற்றியோ, அல்லது மாநிலத் தேர்தல் ஆணையத்தை ஒழிப்பதைப் பற்றியோ பேசிப் பிரயோசனமில்லை.

எனவே இப்பொழுதைக்கு யதார்த்தமாக என்ன செய்யலாம் என்பதைப் பார்த்தால்:

1. மின்னணு வாக்குப் பதிவு... இதை அவசியமாக்க வேண்டும். அடுத்த ஒரு தேர்தல் வாக்குச்சீட்டில் இருக்கக் கூடாது.
2. மாநிலத் தேர்தல் ஆணையரது நியமனத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரலாம். இது ஒரு constitutional post. எனவே அனைத்துக் கட்சிகளும் ஏக மனதாக யாரை ஏற்றுக்கொள்கிறார்களோ அவரைத்தான் நியமிப்பது எனலாம். குறைந்தது எதிர்க்கட்சித் தலைவரது விருப்பம், குடியரசுத் தலைவரது விருப்பம் இரண்டும் தேவை எனலாம். அத்துடன் அவரது பதவிக் காலம் 6 வருடங்கள், 65 வயது வரை இருக்கலாம் என்று மாற்ற வேண்டும். (தற்போது 2 வருடம், 62 வயது வரை என்று உள்ளது.)
3. தேர்தல் கமிஷனரை நீக்கும் முறை மத்தியில் இருப்பது போல கடினமானதாக மாற்றப்பட வேண்டும்.
4. தேர்தலின்போது மாநில தேர்தல் கமிஷனருக்கு - மத்திய தேர்தல் கமிஷனுக்கு இருப்பது போல - முழுமையான அதிகாரம் இருக்குமாறு செய்ய வேண்டும்.

5. திமுக கொண்டுவந்த 'நகராட்சி/மாநகராட்சித் தலைவர் - நேரடித் தேர்தல் சட்டம் ரத்து' - அதனை வாபஸ் பெற வேண்டும்.

மேலே குறிப்பிட்டவற்றைச் செய்தாலே ஓரளவுக்கு தேர்தல் ஊழலைக் கட்டுப்படுத்தலாம்.

இது திமுகவுக்கு எதிரான ஒரு நிலைப்பாடு என்று பார்க்கவேண்டாம். இன்று திமுக செய்ததை நாளை அஇஅதிமுக இன்னமும் அதிகமாகச் செய்வார்கள். சென்ற முறை அஇஅதிமுக செய்ததைத்தான் இன்று திமுக பெரிய அளவில் செய்தார்கள்.

நமது உள்ளாட்சி ஜனநாயகம் வலுப்பெற வேண்டுமானால் இவை அனைத்தையும் உடனடியாகச் செய்யவேண்டும்.

இன்று, உள்ளாட்சித் தேர்தல் பற்றிய பொதுக்கூட்டம்

சில வாரங்களுக்கு முன்னர் மியூசிக் அகாடெமியில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் பற்றி நடைபெறவிருந்த கூட்டம் நூதனமான முறையில் நடக்கவிடாமல் செய்யப்பட்டதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இன்று - 15 நவம்பர் 2006 - மாலை 6.30 மணி அளவில், சென்னை, மயிலாப்பூர், பாரதீய வித்யா பவனில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஒரு கூட்டம் நடைபெற உள்ளது. B.S.ராகவன், இரா.செழியன், லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, மாலன் ஆகியோர் பேசுகிறார்கள்.

நான் அவசியம் செல்கிறேன். இந்தக் கூட்டத்தில் பேசுவதை ரெகார்ட் செய்ய உள்ளேன்.

Tuesday, November 14, 2006

பழங்கதை - 1: மதுரை, திருச்சி புத்தகக் கண்காட்சிகள்

எழுத நினைத்து விட்டுப்போனவை சில. பிற்காலத்தில் உபயோகப்படும் என்பதால் சுருக்கமாக.

மதுரையில் செப்டம்பரில் நடந்த புத்தகக் கண்காட்சி வித்தியாசமான முயற்சி. இந்திய மாநிலங்களிலேயே தமிழகத்தைப் போல புத்தகக் கண்காட்சிகள் வேறெங்கும் நடைபெறுவதில்லை. கேரளாவில் அனைத்துப் பதிப்பாளர்களும் கலந்துகொள்வது போன்ற புத்தகக் கண்காட்சி ஏதும் கிடையாது. கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் ஆண்டுக்கு நான்கைந்து இடங்களில் கண்காட்சிகள் நடந்தால் பெரிய விஷயம். பிற மாநிலங்களிலும் அப்படியே.

பல மாநிலங்களிலும் தலைநகரில் குறிப்பிடப்படும்படியான ஒரு கண்காட்சி இருக்கும். கொல்காதா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், தில்லி... ஆனால் தலைநகருக்கு அடுத்த நிலையிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் பெரிதாக ஒன்றையும் நடத்தா. தமிழகத்திலோ பல நகரங்களில் உள்ளூர் ரோடரி, லயன்ஸ் கிளப், பிற சங்கங்கள் ஆகியவற்றின் முயற்சியால் புத்தகக் கண்காட்சி என்ற பெயரில் ஏதாவது ஒன்று நடைபெற்றுவிடும். நெய்வேலி, காரைக்குடி போன்ற இடங்களில் பெரிய தொழிற்சாலை, ஆராய்ச்சிச்சாலை ஆதரவில் புத்தகக் காட்சி நடைபெறும்.

தமிழகத்தில் சென்னையில் நடக்கும் கண்காட்சி மிக முக்கியமான ஒன்று. விற்பனையை வைத்துப் பார்த்தால் கொல்காதா, தில்லி ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது நிலையில் இருக்கும். (மும்பையில் பெரிதாக ஒன்றும் நடப்பதில்லை என்று அறிகிறேன்.) சென்னையில் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்கம் (பபாஸி) நடத்தும் மாபெரும் நிகழ்ச்சி இந்தப் புத்தகக் கண்காட்சி; வரும் ஜனவரியில் 30-ம் வருடமாக நடக்க உள்ளது. ஆனால் சென்னையை அடுத்து சரியான முறையில் மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் புத்தகக் காட்சிகள் நடப்பதில்லை.

மதுரையிலும் கோவையிலும் சென்ற ஆண்டு வரை புத்தகக் கண்காட்சி என்று ஒன்று நடந்ததே இல்லை. இந்த ஆண்டு கலெக்டர் உதயசந்திரன் தன் ஆர்வத்தால் மட்டுமே இந்தக் கண்காட்சி நடைபெறக் காரணமாக இருந்துள்ளார். பொதுவாக அதிக அளவு விலையுள்ள நுகர்பொருள்களை விற்கும் கண்காட்சியாக இருந்தால் Event Organization நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு களத்தில் இறங்கிவிடும். பார்க்கும் இடங்களிலெல்லாம் சாம்சுங், எல்ஜி, பெப்சி என்று போட்டி போட்டுக்கொண்டு ஸ்பான்சர்ஷிப் இருக்கும். கடைகளுக்கான வாடகை எக்கச்சக்கம். முழுவதும் குளிரூட்டப்பட்ட வளாகம். கூட்டமும் களைகட்டும்.

ஆனால் புத்தகக் கண்காட்சி நடத்துவது எளிதல்ல. பெரும்பான்மை பதிப்பாளர்கள் சின்னஞ்சிறு நிறுவனங்களை நடத்திவருகிறார்கள். செலவு செய்ய அஞ்சுபவர்கள். வருமானமும் குறைவு. ஆயிரக்கணக்கில் மக்கள் வந்தாலும் தமிழ்ப்புத்தகக் கடைகளில் சராசரியாகச் செய்யும் செலவு ரூ. 150 என்றுதான் இருக்கும். (ஆங்கிலத்தில் இந்தக் காசுக்கு ஒரு புத்தகம்கூடக் கிடைக்காது. தமிழில் தள்ளுபடி போக மூன்று புத்தகங்கள்வரை வாங்கலாம்!)

வாடகை குறைவாகத்தான் கிடைக்கும் என்பதால் Event Organizers-ஐ வைத்து நடத்தமுடியாது. தன்னார்வலர்களை வைத்துத்தான் நடத்த வேண்டும், அல்லது பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் சேர்ந்து நடத்தவேண்டும். மதுரை கலெக்டர், பபாஸியை வற்புறுத்தி மதுரை கண்காட்சியை நடத்த வைத்தார். கண்காட்சி வளாகத்தை வாங்கிக் கொடுப்பதிலிருந்து கண்காட்சிக்குத் தேவையான விளம்பரங்களை ஊர் முழுதும் செய்வது, கல்லூரிகளைத் திரட்டி கண்காட்சிக்கு வரவழைப்பது, கலை நிகழ்ச்சிகளை நடத்துவது, குறும்படங்கள் காண்பிப்பது போன்ர பலவற்றையும் ஏற்றுக்கொண்டார். பபாஸி தாற்காலிக கட்டடத்தை எழுப்பி, பதிப்பாளர்களை வரவழைத்து, வாடகை வசூலித்து செலவு போக மீதத்தை வைத்துக்கொள்ளலாம்.

மதுரையில் முதன்முதலாக நடந்துள்ள புத்தகக் கண்காட்சி மிகுந்த வரவேற்பைப் பெற்றது என்றுதான் சொல்வேன். தொடர்ச்சியாக அடுத்த சில வருடங்கள் நடந்தால் - அதுவும் இதே செப்டம்பர் மாதம் முதல் இரண்டு வாரங்களில் - பொதுமக்களின் ஈடுபாடும் அதிகரிக்கும். பபாஸி இப்பொழுதைக்கு வரும் ஆண்டுகளிலும் காட்சியைத் தொடர்ந்து நடத்தத் தீர்மானித்துள்ளது என்று நினைக்கிறேன். இப்பொழுதிருக்கும் கலெக்டர் தொடர்ந்தால் நிர்வாகத்தின் ஒத்துழைப்பும் அதிகமாக இருக்கும். வேறொருவர் பணிமாறினால் என்ன ஆகும் என்பதைச் சொல்ல முடியாது.

-*-

திருச்சியில் 20-வது வருடமாக, ரோட்டரி கிளப் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் உதவி ஏதும் கிடையாது. பபாஸியின் உதவியும் கிடையாது.
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையைப் போல ரோட்டரி கிளப்பிடம் அதிகமாகத் தன்னார்வலர்களும் கிடையாது. இந்தக் குறைபாடுகளால் திருச்சி கண்காட்சி - நிறைய பொடென்ஷியல் இருந்தாலும் - சோபிப்பதில்லை. இந்த வருடம் அக்டோபரில் நடந்த கண்காட்சியில் மிகச் சில பதிப்பாளர்களே பங்குகொண்டனர். முதல் முறையாக செயிண்ட் ஜோஸப் கல்லூரியில் அரங்கு அமைத்திருந்தனர். இதற்கு முந்தைய வருடங்களில் தில்லை நகர் மக்கள் மன்றம் என்ற சிறிய இடத்தில் நடந்து வந்தது.

20 வருடங்களாக நடந்து வருவதால் திருச்சியில் அடுத்த சில வருடங்களிலும் இந்தக் கண்காட்சி தொடர்ந்து நடக்கும். ஆனால் கலெக்டர், பபாஸி ஆகியோரையும் சேர்த்து இழுக்காவிட்டால், பலன் மிகக் குறைவாகத்தான் இருக்கும்.

பெங்களூரு புத்தகக் கண்காட்சி

நவம்பர் 18, 19 தேதிகளில் பெங்களூரில் இருக்கிறேன். சனி, ஞாயிறு இரண்டு நாள்களிலும் பெரும்பான்மை நேரம் புத்தகக் கண்காட்சி வளாகத்தில் கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் இருப்பேன். வலைப்பதிவு நண்பர்களைச் சந்திக்க வாய்ப்பிருந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

[பெங்களூரு புத்தகக் கண்காட்சி 10-19 நவம்பர் 2006, பேலஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.]

Monday, November 13, 2006

சொந்த செலவில் சூனியம்!

எனக்கு இல்லைங்க. காங்கிரஸ் கூட்டணிக்குதான்.

சமீபத்தில் ஒரு மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. பல தேர்தல் சாவடிகளில் மக்களை அனுமதிக்கவேயில்லை. சில இடங்களில் குண்டர்கள் துணையுடன் சக் சக்கென்று ஆளுங்கட்சிக் காரர்கள் வாக்குகளை ஒட்டுமொத்தமாகக் குத்திக் கலக்கினர். ஜனநாயக வாக்குரிமையை வேண்டிய வாக்காளர்கள் மிரட்டி அனுப்பப்பட்டனர்.

எதிர்க்கட்சிகள் அநியாயம், அக்கிரமம் என்று கதறின.

இப்பொழுது மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். மத்திய அரசு இதுபோன்ற அநியாயங்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்கிறார். அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமையின்படி மாநில அரசை டிஸ்மிஸ் செய்வோம் என்கிறார்.

இல்லைங்க. தமிழ்நாட்டைப் பத்தி இல்லையாம். உத்தர பிரதேசத்தைப் பத்தி சொல்றாராம். அங்கயும் சென்னைல நடந்ததேதான் நடந்திருக்கு. ஆனா அங்க உதை வாங்கினது காங்கிரஸ்காரங்க. அதனால் மினிஸ்டருக்கு கோபம். தமிழ்நாட்டுல நம்ம மினிஸ்டரோட நண்பர்களுக்குத்தான நல்லது நடந்திருக்கு. அதனால் இங்க 'ஆட்சிக் கலைப்பு' மிரட்டல் வராது.

For the record: இதெல்லாம் வெத்து மிரட்டல். உத்தர பிரதேச ஆட்சியையோ அல்லது தமிழக ஆட்சியையோ உள்ளாட்சித் தேர்தல் குழப்படிகளை வைத்துக் கலைக்க முடியாது. உச்ச நீதிமன்றம் (bless them!) இதுபோன்ற abuse-களைத் தடுக்கும். அதனால் இந்த மிரட்டலையெல்லாம் ஏறக்கட்டி வைத்துவிட்டு தைரியமிருந்தால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாறுதலைக் கொண்டுவரட்டும் - மாநில தேர்தல் கமிஷன்களைக் கலைத்து இந்திய தேர்தல் கமிஷனிடம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் பணியைக் கொடுக்கலாம். அல்லது மாநில தேர்தல் கமிஷனர்களுக்கு நல்ல அதிகாரங்களைக் கொடுத்து நியாயமான முறையில் தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்ளலாம். முக்கியமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டுவரவேண்டும்.

ஆதாரம்: தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்

Sunday, November 12, 2006

சட்டம் ஒழுங்கும் இந்தியர்களும்

இன்று தி ஹிந்து Open Page-ல் இந்தியர்களின் பொது இடங்களில் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. கட்டுரையாளருடன் முழுதாக ஒத்துப்போகிறேன். முக்கியமாக ஒரு மேற்கோள்:
We Indians revel in breaking laid down rules and get very caustic and frustrated when prevented from doing so. Bring in any rule and within a very short time, ways would have been found to circumvent it. The same attitude can be seen all around us, whether it is driving, one way streets, red signals, railway gates, hunting, paying taxes or appearing in courts.
இவர் குறிப்பிட்ட விஷயங்களைவிட மோசமானது இப்பொழுது தில்லி முதல் சென்னை வரை நடந்துகொண்டிருக்கும் கட்டட ஊழல்.

சென்னையில் CMDA அனுமதி பெறாமல், அல்லது கட்டளையை மீறி பல மாடிக் கட்டடங்களை எழுப்புவது வாடிக்கையாகிவிட்டது. இதில் முன்னணியில் இருப்பது பெரிய பிராண்ட்களாக அறியப்பட்ட தி சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், GRT தங்க மாளிகை, இப்படி எத்தனை எத்தனை எத்தனையோ.

இதைத்தவிர, சர்வசாதாரணமாக CMDA அனுமதி கொடுத்த அளவுக்கு மேல் குறைந்தது ஒரு மாடியையாவது கட்டுவதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்பதுபோலவே கட்டுமான நிறுவனங்கள் (புரோமோட்டர்கள்) நடந்துகொள்கிறார்கள்.

தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் சில மாடிகளை இடிப்பது இப்பொழுது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதையடுத்து பிற கட்டடங்களும் இடிக்கப்படும் என்று நம்புவோம். ஆனால் விதிகளை, சட்டத்தை மீறிய கட்டடங்கள் தமிழகம் முழுவதும் சில லட்சங்களாவது இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஓரிருவர் தவறு செய்தால் மாட்டிக்கொள்ளலாம் என்பதால், பெரும்பான்மையானவர்கள் ஒன்றுசேர்ந்து சட்டவிரோதத்தை மேற்கொள்கிறார்கள். போக்குவரத்து அதிகமாக இருக்கும் தெருவில் திடீரென்று நடுவில் சென்று கடக்க ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வந்ததும் மக்களுக்கு தைரியம் வந்துவிடுகிறதல்லவா? அதைப்போல. அரசியல்வாதிகள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் கூட்டம் கூட்டமாக சட்டம் ஒழுங்கைக் காற்றில் பறக்க விடுவது இப்பொழுது அதிகரித்துள்ளது.

இதுதான் புது தில்லியில் இப்பொழுது நடந்து வருகிறது.

தில்லியில் பல பகுதிகளில் மக்கள் வசிக்கும் இடங்கள் சட்டத்துக்குப் புறம்பாக வணிக வளாகங்களாக மாற்றப்பட்டன. தில்லி மாநகராட்சி சட்டங்கள், மாஸ்டர் பிளான், பல்வேறு சுற்றுச் சூழல் சட்டங்கள் ஆகியவற்றுக்குப் புறம்பாக இவை நடைபெற்றன. ஒரு சிலருக்கு இந்தச் சட்டங்கள் பற்றித் தெரியாவிட்டாலும் பெரும்பாலானோர், அதிக வாடகைக்காக இந்தக் காரியத்தைச் செய்தனர். மக்கள் வசிப்பதற்கென்று சொல்லி திட்டத்தைக் கொடுத்து, அனுமதி பெற்று, அதன்பின் அங்கு வணிக நிறுவனத்தை நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.

இந்தக் கட்டடங்களில் கார் ஷோரூம் முதல் உணவகங்கள்வரை, அரசு அலுவலகங்கள் முதல் பல்வேறு தனியார் வணிக நிறுவனங்களின் அலுவலகங்கள், கடைகள் போன்ற பல இயங்கி வந்தன.

இதனை எதிர்த்து அந்தப் பகுதி மக்கள் சிலர் தில்லி மாநகராட்சிக்கு பலமுறை புகார் கொடுத்தும் மாநகராட்சி புகார்களை அலட்சியப்படுத்தியது. லஞ்சப் பணம் பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என்று மாநகராட்சி ஊழியர்கள் விட்டிருக்கலாம். நிர்வாகச் சீர்குலைவுக்கு அடுத்த கட்டமாக மக்கள் நல அமைப்புகள் நீதிமன்றத்துக்குப் போகவேண்டி இருந்தது. தில்லி உயர் நீதிமன்றத்தை அடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

16 பிப்ரவரி 2006-ல் உச்ச நீதிமன்றம் இந்தப் பொதுநல வழக்கில் தீர்ப்பு ஒன்றைக் கொடுத்தது. அதன்படி, 30 நாள்களுக்குள் சட்டத்துக்குப் புறம்பாக வணிக நடவடிக்கைகளைச் செய்யும் நிறுவனங்கள் அந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும். அவ்வாறு தாமாகவே செய்யாவிட்டால் தில்லி நகராட்சி அந்த வணிக இடங்களுக்கு சீல் வைக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள 'வசிப்பவர் நலச் சங்கங்களின்' பிரதிநிதிகள் இந்த சீல் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பப்பட வேண்டும்.

நியாயமாக தில்லி அரசு என்ன செய்திருக்க வேண்டும்? மக்கள் பெருமளவில் தவறு செய்துள்ளனர்; அந்தத் தவறை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்கள் சட்டத்தை மதித்து நடக்குமாறு செய்யவேண்டியது நிர்வாகத்தின் பணி. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

எப்படி ஒரு மாதத்துக்குள் இந்த இடங்களில் உள்ள சட்டமீறிகளைத் துரத்துவது, இதனால் பலர் பாதிக்கப்படுவார்களே என்று தில்லி அரசு பயங்கொண்டது. இது நியாயமான பயம்தான் என்றாலும் இத்தனை வருடங்களாக சட்டத்தை மீறுபவர்களை ஊக்குவித்துவிட்டு இப்பொழுது என்ன செய்வது என்று தடுமாறுவது எந்த விதத்தில் நியாயம்?

29 மார்ச் 2006 முதல் சீல் வைப்பது தொடங்க வேண்டும். ஆனால் 24 மார்ச் 2006 அன்று வணிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உச்ச நீதிமன்றம் சீல் தொடங்கும் தினத்தை 30 ஜூன் 2006 வரை தள்ளி வைத்தது.

இந்த இடைவெளியை நியாயமான முறையில் பயன்படுத்திக்கொள்ள வணிகர்களும் தயாராக இல்லை; மக்கள் பிரதிநிதிகளும் தயாராக இல்லை. 28 மார்ச் 2006 அன்று தில்லி வளர்ச்சிக் குழுமம் (Delhi Development Authority - DDA) தில்லி மாஸ்டர் பிளானை மாற்றி அமைப்பதாக ஓர் ஆணையைக் கொண்டுவந்தது. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்கக் கேட்டுக்கொண்டது. உச்ச நீதிமன்றம் ஒரு மேற்பார்வைக் குழுவை நிறுவி மத்திய அரசை இந்த மேற்பார்வைக் குழுவிடம் முழு விவரங்களைச் சமர்பிக்கச் சொன்னது - 28 ஏப்ரல் 2006 அன்று.

மேற்பார்வைக் குழு அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டபின்னர் தன் அறிக்கையை 4 மே 2006 நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்தது. உச்ச நீதிமன்றம் அதைப் பற்றிய விவாதத்தைத் தொடங்குவதற்கு முன், 11 மே 2006 அன்று மத்திய அரசு தன் விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

ஏன்?

ஏனெனில், நீதிமன்றம் வழியாக இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு பதில் தனக்கு இருக்கும் சட்டம் உருவாக்கும் அதிகாரத்தைக் கொண்டு மோசமான ஒரு சட்டத்தை உருவாக்கி மக்கள் சில சட்டங்களுக்குப் புறம்பாக நடந்துகொள்ளலாம் என்ற உரிமையைக் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. 12 மே 2006 அன்று மக்களவையிலும் 15 மே 2006 அன்று மாநிலங்கள் அவையிலும் Delhi Laws (Special Provision) Bill, 2006 தாக்கல் செய்யப்பட்டு, 19 மே 2006 அன்று குடியரசுத் தலைவர் அதில் கையெழுத்திட, அன்றே இது சட்டமானது.

மேற்படி சட்டத்தை ஆதரவாகக் கொண்டு, 20 மே 2006 அன்று மத்திய அரசு பிறப்பித்த கட்டளைப்படி, 1 ஜனவரி 2006க்குப் பிறகு தில்லியில் எந்தக் கட்டடத்தையாவது சீல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் சொல்லியிருந்தால் அதை அடுத்த ஒரு வருடத்துக்குச் செயல்படுத்த வேண்டாம். ஏற்கெனவே ஏதேனும் கட்டடங்கள் சீல் செய்யப்பட்டிருந்தால் அதை நீக்கி மீண்டும் தன்னிஷ்டத்துக்கு மக்கள் நடந்து கொள்ளலாம். அடுத்த ஒரு வருடத்துக்கு!

அரசின் இந்தப் போக்கை எதிர்த்து 23 மே 2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.

29 செப்டம்பர் 2006 அன்று கிடைத்த தீர்ப்பில், Delhi Laws (Special Provision) Act, 2006 சட்டப்படி செல்லுபடியாகுமா என்று சந்தேகம் உள்ளது என்றும் அதைத் தீர்மானிப்பதற்கு முன்னால் அந்தச் சட்டத்தின்படி யாரும் தப்பிக்க முடியாது என்றும், சீல் வைப்பது தொடரும் என்றும் முடிவானது. ஆனால் சீல் வைப்பது 31 அக்டோபருக்குப் பிறகு தொடங்கும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதற்குப் பின்னும் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி சீல் வைப்பதிலிருந்து நழுவ தில்லி நகராட்சி முயற்சி செய்தது. வணிகர்களும் பெரும் கூட்டமாக தகராறு செய்தனர். அரசியல் கட்சிகள் - பாஜக, காங்கிரஸ் - இரண்டும் வணிகர்களுக்கு ஆதரவு கொடுத்தது. பத்திரிகைகளைப் படிக்கும்போது என்னவோ நீதிமன்றம் கொடூரமாக நடந்துகொள்வது போல ஒருவருக்குத் தோன்றிவிடும். அரசு, தில்லி சட்டமன்றம், தில்லி மாநகராட்சி, வணிகர்கள் என்று அனைவருக்கும் எதிராகத் தீர்ப்பு சொல்லிய நீதிமன்றம் யாருக்கு ஆதரவாக இந்தத் தீர்ப்பைச் சொல்லியுள்ளது என்றே அனைவரும் சந்தேகம் கொள்வார்கள்.

ஆனால் வசிப்பவர் நலச் சங்கங்கள் ஒன்று சேர்ந்து, தங்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கத்தான் இந்த வழக்கையே எழுப்பினர். அவர்களது உரிமைகளைத்தான் நீதிமன்றம் இப்பொழுது பாதுகாத்துள்ளது.

இங்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் வணிகர்கள் முதல் அரசு வரை அனைவருமே சட்டத்துக்குப் புறம்பாக பல விஷயங்கள் நடந்துள்ளன என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். குறிப்பிட்ட சட்டம் பழமையானது, தவறானது, மாற்றப்பட வேண்டியது என்றுகூட இவர்கள் சொல்லவில்லை. சட்டம் தன் பாட்டுக்கு இருக்கட்டும், நாங்கள் எங்கள் இஷ்டத்துக்கு நடந்து கொள்வோம் என்ற வணிகர்களின் நடைமுறையும், அதற்கு மக்கள் பிரதிநிதிகள் கொடுக்கும் ஆதரவும்தான் நம்மை திகிலடையச் செய்கிறது.

இந்த சீல் வைப்பில் சிறு வணிகர்கள் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் நீதிமன்றம் நடந்துகொண்டுள்ளது. 200 சதுர அடிக்குள் இருக்கும் மளிகைக் கடைகள், பிற அத்தியாவசிய சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. பெரும் பெரும் கடைகளைத்தான் இப்பொழுது சீல் வைக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

நவம்பர் 2006 சீல் வைப்பது துணை ராணுவ உதவியுடன் நடக்க ஆரம்பித்துள்ளது. இனியும் தப்பிக்க முடியாது என்ற நிலை வந்தபின்னர்தான் பலர் மீண்டும் தங்கள் இடங்களை வசிக்கும் இடங்களாக மாற்றும் வேலையில் இறங்கியுள்ளனர்.

-*-

சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் இன்ன பிறர் இன்னமும் தெருவில் இறங்கி போராடவில்லை. தாங்கள் செய்தது முழுக்க முழுக்க நியாயம்தான் என்று இதுவரை சொல்லவில்லை.

ஒருவேளை நாளை இது நடந்தாலும் நடக்கலாம்.

-*-

இதற்கிடையில் இப்பொழுது ஒன்பதாம் அட்டவணை (நீதிமன்றங்களின் பார்வையிலிருந்து தப்பிக்கும் குறுக்கு வழி) தொடர்பான வழக்கு ஒன்றும் உச்ச நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இதுவரையில் ஒன்பதாம் அட்டவணையில் Delhi Laws (Special Provision) Act, 2006-ஐ வைக்க முடிவு செய்யவில்லை என்று தெரிய வருகிறது. ஆனால் சொல்ல முடியாது... அடுத்து செய்தாலும் செய்யலாம்.

நாம்தான் சட்டத்தை மதிப்பவர்கள் கிடையாதே! மத்திய அரசு முதற்கொண்டு.

Tuesday, November 07, 2006

தமிழக நீதிமன்றங்களில் தமிழ்

தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக நீதிமன்றங்களில் தமிழிலேயே வழக்காடுதல் நடைபெற வேண்டும் என்று பேசியுள்ளாராம். இந்தப் பேச்சின் தமிழ் மேற்கோள் எனக்கு நேரடியாகக் கிடைக்கவில்லை. NDTV தளத்தில் கிடைத்த ஆங்கில ஆக்கம்:
"Let's strive to make Tamil the sole language in all court proceedings in Tamil Nadu," said Karunanidhi.
NDTV செய்தியில் கருணாநிதியின் கருத்தை பலரும் எதிர்ப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழகத்தில், முடிந்தவரை, எல்லாமே தமிழிலேயே நடைபெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம்தானே? கருணாநிதி உயர் நீதிமன்றத்தில் நடைமுறைகள் அத்தனையும் தமிழில் உடனடியாக வரவேண்டும் என்று சொன்னதாகத் தெரியவில்லை. பொதுவாக "நீதிமன்றங்களில்" என்றுதான் சொல்லியுள்ளார்.

NDTV செய்தியில் உள்ளபடி, இப்பொழுதைக்கு அரசியல் அமைப்புச் சட்ட மாறுதல் இல்லாமல் உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுதலைக் கொண்டுவரமுடியாது. எனக்கென்னவோ அது தேவையும் இல்லை என்று தோன்றுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தலைமை நீதிபதி எப்பொழுதுமே பிற மாநிலத்தவராகத்தான் இருப்பார். பிற மாநிலத்தில் பிறந்து வளர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தமிழகத்துக்கு வேலைக்கு வரும்போது ஓரளவுக்காவது உடைந்த தமிழில் பேசுகிறார்கள். ஆனால் நீதித்துறை என்றால் எந்த மொழியில் நீதி வழங்குகிறார்களோ அந்த மொழியில் மிகப்பெரும் ஆளுமை தேவைப்படும். எனவே பிற மாநில நீதிபதிகள் தமிழகம் வரும்போது தமிழைக் கற்று அதில் புலமை பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

அதைப்போல உயர் நீதிமன்ற அளவில் பிற மாநிலங்களில் இருக்கும் பிரபல வழக்கறிஞர்கள் வந்து வழக்கை நடத்துகின்றனர். அரசுத் தரப்புக்காக வாதாடக்கூட ஹரீஷ் சால்வே, ராம் ஜேத்மலானி, அந்த்யார்ஜுனா, சோலி சொராப்ஜி என்று பெரும் பெரும் ஆள்கள் வருகிறார்கள். இவர்கள் தமிழில்தான் வாதாட வேண்டும் என்று தமிழக அரசு கேட்காது.

எனவே முதல்வரின் கூற்றை சரியான வழியில் பார்த்தால் நமக்குத் தோன்றுவது இதுதான்:

* மாநிலத்தில் உயர் நீதிமன்றம் தவிர்த்து பிற நீதிமன்றங்கள் அனைத்திலும் முழுக்க முழுக்க தமிழிலேயே வழக்காடுதல், நீதி வழங்குதல் ஆகியவை நடைபெற வேண்டும். இது நியாயமான கோரிக்கை. ஏனெனில் பொதுமக்களுக்குப் புரியாமல் வழக்கு நடப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதிலும் நீதித்துறை மொழி என்பது கடினமானது. ஒப்பந்தங்கள், சட்டங்கள் போன்றவை எழுதப்பட்டுள்ள விதமே புரிந்துகொள்ளக் கடினமானது. அதற்கு மேலாக வழக்காடுதலும் தீர்ப்பும் புரியாத மொழியில் இருந்தால் அதனால் மக்கள் மன உளைச்சலுக்குத்தான் ஆளாவார்கள்.

இப்பொழுது செஷன்ஸ், மாஜிஸ்டிரேட், முன்சீஃப் நீதிமன்றங்களில் தமிழ், ஆங்கிலம் என இரண்டும் கலந்துதான் நடைமுறை உள்ளது. தீர்ப்புகளில் சிலதான் தமிழில் வருகின்றன என்று நினைக்கிறேன். இந்தத் தீர்ப்புகள் அனைத்தும் தமிழிலும், வழக்காடுதல் முடிந்தவரை தமிழுலும் இருக்கவேண்டும்.

* உயர் நீதிமன்ற வழக்காடுதல் ஆங்கிலத்திலும், தீர்ப்புகள் வரும்போது அவை ஆங்கிலத்திலும், கூடவே தேவைப்பட்டால் தமிழ் மொழிபெயர்ப்பிலும் வழங்கப்படலாம். "தேவைப்பட்டால்" என்பதை வேண்டுமானால் மாற்றி "அவசியமாக" என்றும்கூடச் சொல்லலாம்.

அத்துடன் தமிழக முதல்வருக்கு நாம் வேறு சில யோசனைகளை முன்வைப்போம்.

1. தமிழக அரசின் அனைத்து இணையத்தளங்களையும் உருப்படியாகத் தமிழில் இருக்குமாறு செய்யலாம். இன்றும் முக்கால்வாசிக்கும் மேலான தளங்கள் ஆங்கிலத்தில்தாம் உள்ளன.

2. தமிழக அரசின் பல்வேறு நிர்வாகத் துறைகளும் வருடா வருடம் எழுதும் Policy Notes ஆங்கிலத்தில்தான் உள்ளது. தமிழில் இருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழில் இல்லாவிட்டால் தமிழில் கட்டாயமாகக் கொண்டுவருவதற்கு வகை செய்யலாம்.

Monday, November 06, 2006

இந்தியாவில் அகதிகள்

இந்தியாவுக்கு வந்திருக்கும் நடிகையும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நல அமைப்பான UNHCR நல்லெண்ணத் தூதுவருமான ஏஞ்செலினா ஜோலீ இந்தியாவுக்குப் பாராட்டுப் பத்திரம் கொடுத்துள்ளார். [UNHCR Press Release | The Hindu News]

இந்தியா தன்னாட்டு மக்கள் நலனுக்கே நிறைய செய்யவேண்டிய நிலையிலும்கூட, வெளிநாட்டு அகதிகளை அரவணைத்து அவர்களுக்கு வேண்டிய அளவு செய்துள்ளதாக ஜோலீ கூறியுள்ளார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு நான்கு பெரும் இனக்குழுக்களாக அகதிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். ஒன்று சீன ஆக்ரமிப்பிலிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்த திபெத்தியர்கள். இந்தியா இன்றுவரை திபெத்திய அகதிகளுக்கு இடம் கொடுத்து வந்துள்ளது. எண்ணிக்கையில் இவர்கள் சில பத்தாயிரங்கள் இருப்பார்கள். பர்மா/மியான்மாரில் ராணுவம் ஆட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததும் பலர் இந்தியாவுக்குத் தப்பி வந்தனர். இவர்களும் கிட்டத்தட்ட 50,000க்கு மேல் இருப்பார்கள்.

1970-ல் வங்கதேச அகதிகள் லட்சக்கணக்கில் இந்தியாவுக்கு வந்தனர். இதுதான் இந்தியா சந்தித்த பெரும் நெருக்கடி என்று சொல்லலாம். அதையொட்டியே இந்தியா பாகிஸ்தானுடன் சண்டைக்குச் சென்றது. சண்டைக்குப் பிறகு வங்கதேசத்தவர் பலரும் புதிதாக உருவான வங்கதேசத்துக்குத் சென்றுவிட்டாலும் பலர் இந்தியாவில் தங்கிவிட்டனர். மேலும் பொதுவாகவே இன்றும்கூட வங்கதேசத்தவர் இந்தியாவுக்குள் ஊடுருவல் செய்வதாக இந்தியா புகார் செய்துவருகிறது. பாஜக, சிவசேனை போன்ற கட்சிகள் தில்லி, மும்பை போன்ற இடங்களில் வங்கதேச அகதிகள் இருப்பதாக பிரச்னை எழுப்பியுள்ளனர். இந்திய அரசு வங்கதேச அகதிகளை பிரச்னையாக மட்டுமே கருதுகிறது. அவர்கள் இன்றைய நிலையில் அரசியல் அகதிகள் அல்லர்; பொருளாதார அகதிகள் மட்டுமே. அசாம் பிரச்னை வலுத்ததற்கு வங்கதேச அகதிகள் பெரும் காரணம்.

நான்காவது பெரிய குழு என்றால் அது இலங்கையிலிருந்து தமிழகம் வந்த ஈழத்தமிழர்கள். தொடக்கத்தில் ஓரளவுக்கு இந்தியா இந்த அகதிகளுக்கு உதவிகள் செய்தாலும் இன்று தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள் கொடுமையான வாழ்வு வாழவேண்டியுள்ளது.

இவர்கள் தனி கேம்ப்பில் அடைக்கப்படுகிறார்கள். அந்தப்பக்கம் ஏதாவது பெரிய மனிதர் - அப்துல் கலாம், மன்மோகன் சிங் ஆகியோர் - வரவேண்டி இருந்தால் அகதிகள் பாடு படு திண்டாட்டம். அகதிகளை எப்படியாவது - அவர்களது விருப்பத்துக்கு மாற்றாக - மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைப்பது என்று தீர்மானத்தில்தான் தமிழக அரசும் இதுவரை நடந்துகொண்டுள்ளது.

1951-ம் ஆண்டில் பல உலக நாடுகள் UNHCR convention ஒன்றில் கையெழுத்திட்டார்கள். இதன்படி பல உலக நாடுகள் அரசியல் அகதிகளுக்கு எவ்வகையான புகலிடம் தரவேண்டும், யாரை அரசியல் அகதிகள் என்று ஏற்றுக்கொள்வது போன்ற சில விஷயங்கள் முடிவு செய்யப்பட்டன. ஆனால் இந்தியா இன்றுவரை இதில் கையெழுத்திடவில்லை.

இந்தியா அகதிகளுக்கு என்று விசேஷமாக ஒன்றும் செய்வதில்லை. இந்தியாவில் ஏழைகள் பலர் இருக்கிறார்களே, அவர்கள்தான் முக்கியம் என்று கதையடித்துத் தப்ப முடியாது. இந்தியாவில் ஏழைகள் முக்கியம் என்று சொல்லி, விமான நிலையங்கள், ஆறு லேன் சாலைகள் போன்றவை கட்டப்படாமல் இல்லை. அகதிகள் பராமரிப்பு என்பது நாகரிகமான நாடுகள் செய்யவேண்டிய அடிப்படையான விஷயம்.

பர்மா, ஆஃப்கன், வங்கதேச, திபெத் அகதிகள் இந்தியாவில் சந்தோஷமாக இல்லை. அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்கூடக் கிடையாது. ஆனால் இவர்கள் எல்லோரையும் விடப் பாவப்பட்டவர்கள் ஈழத்தமிழ் அகதிகள்.

உயிரைப் பணயம் வைத்து தோணியில் ஏறி வரும் மக்களுக்கு இந்தியா கொடுப்பது ஜெயில் தண்டனையைப் போன்ற ஒன்றுதான்.

ஏஞ்செலினா ஜோலி UNHCR அதிகாரிகளிடம் பேசி உண்மையைத் தெரிந்துகொள்ளட்டும். இந்திய மந்திரி ஆனந்த் ஷர்மாவும் வெட்கம் கெட்டு பாராட்டுகளைப் பெறுவதற்குப் பதில், தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள் நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளட்டும்.

===

அகதிகளுக்கு என்ன செய்யவேண்டும்?

1. அவர்கள் இந்தியா வந்த உடனேயே, அரசியல் காரணங்களுக்கான அகதி என்பதை உறுதி செய்துகொண்டு (பர்மா, இலங்கை அகதிகள் இன்றைய நிலையில் அரசியல் அகதிகள்தாம்!) அவர்கள் கண்ணியத்துடன் உயிர்வாழ சுகாதாரமான, வசதியான தாற்காலிக இடம் கொடுக்கப்பட வேண்டும். இந்த உதவித்தொகை, இடம் ஆகியவை 6 மாதங்கள் வரை கொடுக்கப்படலாம். அதற்குப்பின் அவர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ வழி காட்டவேண்டும்.

அப்படி அரசியல் அகதி இல்லை, பொருளாதார அகதி என்றால், மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிடலாம்.

2. அனுமதிக்கப்பட்ட அகதிகளுக்கு 'diplomatic papers' - ஏதாவதோர் அடையாள அட்டை கொடுத்து, அவர்களுக்கு இந்தியாவில் எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதி வழங்கி, எங்கு வேண்டுமானாலும் வேலை தேடிக்கொள்ள அனுமதி தர வேண்டும்.

3. எந்த மாநிலத்தில் அவர்கள் தங்கினாலும் ரேஷன் கார்டுகள் வழங்கி, குறைந்த விலையில் நியாய விலைக்கடைகளில் அவர்கள் பொருள்களைப் பெற அனுமதி வழங்க வேண்டும்.

4. இந்தியாவில் எந்த இடத்திலும் எந்தக் கல்விக்கூடத்திலும் அகதிக் குழந்தைகள் கல்வி பயில முழு உரிமை கொடுக்கவேண்டும்.

5. அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவ வசதிகள் எவ்வாறு இந்தியர்களுக்கு வழங்கப்படுகிறதோ, அதேபோன்ற வசதிகள் அகதிகளுக்கும் வழங்கப்படுதல் வேண்டும்.

6. எந்த இடத்திலும் வீடு வாங்க, சொத்துகள் வாங்க உரிமை கொடுக்கவேண்டும். அவர்கள் சொத்துக்களை விற்கும்போது அந்தப் பணத்தை வேறு கரன்சிகளில் மாற்றி எடுத்துச் செல்ல அனுமதி தரவேண்டும்.

7. பிற நாடுகளுக்குப் பயணம் செய்ய அவர்களுக்கு முழு உரிமை கொடுக்கப்படவேண்டும்.

8. முக்கியமாக "usual suspects" என்று சொல்லி எதற்கெடுத்தாலும் அவர்களை ஜெயிலுக்குக் கொண்டுபோய் விசாரணை செய்வது போன்ற அபத்தமான, அபாண்டமான செயல்களைச் செய்யாதிருக்க வேண்டும்.

9. 1951 ஐ.நா கன்வென்ஷனில் கையெழுத்திட வேண்டும்.

அதற்குப்பின் ஏஞ்செலினா ஜோலீயைக் கூப்பிட்டு விழா எடுக்கட்டும்.

Thursday, November 02, 2006

சென்னையில் கூட்டம் பற்றி இரா.செழியன்

சென்ற பதிவு ஒன்றில் கூட்டம் நடத்த எந்த மாதிரியான அனுமதி வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தேன். இன்று தினமணியில் வெளியான கருத்துப் பத்தியில் இரா.செழியன் சில விவரங்கள் தருகிறார். ஆனால் தகவல் முழுமையாக இல்லை. அவரது கட்டுரையிலிருந்து சில தகவல்கள் இங்கே.

* கூட்டங்கள் நடத்துவதை அனுமதிக்கவும் தடுப்பதற்குமான அதிகாரம் சென்னைப் போலீஸ் சட்டம் 1888-ன் கீழ் சென்னைப் போலீஸ் கமிஷனருக்குத் தரப்பட்டிருக்கிறது. அதன்படி கூட்டத்தை நடத்த முற்படுபவர் தருகிற மனுவை ஆராய்ந்து, கூட்டத்தை நடத்துவதற்கு சில கட்டுப்பாடுகளுடன் போலீஸ் ஆணையர் அனுமதி வழங்கலாம், அல்லது வழங்காமல் போகலாம்.

* அனுமதி வழங்காத நிலையில் ... கூட்டம் நடத்துபவருக்கு வாய்ப்பளித்து நேரிடையாக அவரோ அல்லது அவரது வழக்குரைஞரோ கூட்டம் நடத்துவதற்கு உள்ள தமது வாதங்களை முன்வைக்கலாம்.

* அதன்பிறகும் அனுமதி வழங்கமுடியாது என்று போலீஸ் கமிஷனர் முடிவெடுத்தால் அனுமதி வழங்காததற்கான காரணங்களை எழுத்து மூலம் காட்டி, அனுமதி வழங்க மறுக்கும் உத்தரவைத் தரலாம்.

* கூட்டம் நடத்துவதற்கான அனுமதி வரவில்லை என்றால் 'தடையில்லை' என்று நினைத்து கூட்டத்தை நடத்தக்கூடாது. போலீஸ் சட்டம் 6-வது விதிமுறையில் உள்ள எச்சரிக்கையின்படி, அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தினால் ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது ஒரு மாதம் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து - என்ற தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.