Friday, October 31, 2008

கம்ப்யூட்டர் புத்தகங்கள் எழுத ஆசையா?

கிழக்கு பதிப்பகம் வாயிலாக, மென்பொருள், கம்ப்யூட்டர் துறைகளில் புத்தகங்கள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

சென்னையில் இருக்கும் கம்ப்யூட்டர் துறை (ஹார்ட்வேர், நெட்வொர்க்கிங், மென்பொருள்) விற்பன்னர்கள், புரோகிராமர்கள், இந்தப் புத்தகங்களை (தமிழிலும் ஆங்கிலத்திலும்) எழுதவிரும்புபவர்கள், மின்னஞ்சல் மூலம் என்னைத் தொடர்புகொள்ளவும்.

எனது முதல் சாய்ஸ், சென்னையில் இருப்பவர்களுடன் சேர்ந்து பணிபுரிவதே. ஏனெனில் நேருக்கு நேர் சந்தித்து, பலமுறை உரையாடவேண்டியிருக்கும். கம்ப்யூட்டர் இருக்கிறதே, இண்டெர்னெட் மூலம் தொடர்புகொள்ளலாமே என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். முதல் முறையாக நான் இந்தப் பணியில் இறங்கப்போவதால் நேருக்கு நேர் உரையாடுவதன்மூலம் பல சிக்கல்களைத் தவிர்க்கலாம் என்பது என் கருத்து. இதற்கு ஒரே காரணம் எனது நேரப் பற்றாக்குறைதான்.

ஓரிரு புத்தகங்கள் வெளியானதும், பிற நகர/நாடுகளில் இருப்பவர்களுடன் கலந்துரையாடி, பிற கணினித் துறைகளில் புத்தகங்களைக் கொண்டுவருவது எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு விஷயம் தெரிந்திருப்பது முக்கியம். எழுதக் கற்றுக்கொள்ளலாம், பிரச்னையில்லை:-)

விஸ்வநாதன் ஆனந்த்

ஏழெட்டு மாதங்கள் இருக்கலாம். என் பெண் சென்னை மயிலாப்பூர் கிளப்பில் சதுரங்கம் கற்றுக்கொள்ள ஆரம்பித்து சில மாதங்கள் ஆகியிருந்தன. உலக செஸ் சாம்பியனாக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை அங்கே அழைத்திருந்தனர். செஸ் கற்றுக்கொள்ளும் அனைவருமே சின்னக் குழந்தைகள். 8-13 வயதுக்குட்பட்டவர்கள்.

நான் என் பெண்ணுடன் போயிருந்தேன். எல்லாக் குழந்தைகளும் கோலாகலமாக ஆடைகளை உடுத்துவந்திருந்தனர். அனைவரும் தனித்தனியாக ஆனந்துடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்ளலாம்.

என் பெண்ணைப் பொருத்தமட்டில் நான்தான் உலகிலேயே சிறந்த செஸ் ஆட்டக்காரர். ஏனெனில் என்னிடம் அவள் எப்போதுமே தோற்றுவிடுவாள். மேலும் நான் அந்த செஸ் கிளப்பில் கற்றுக்கொள்ள வரும் சில சிறுவர்களுடன் அவ்வப்போது விளையாடி, அவர்களைத் தோற்கடிப்பதையும் அவள் பார்த்திருக்கிறாள். எனவே என்னால் ஆனந்தைத் தோற்கடிக்க முடியுமா என்று கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனந்த் என்னைப்போல ஆயிரம் பேருடன் ஒரே நேரத்தில் ஆடினாலும், எங்கள் அனைவரையுமே எளிதாகத் தோற்கடித்துவிடுவார் என்று பதில் அளித்தேன். அதை அவளால் ஜீரணிக்கமுடியவில்லை.

ஆனந்த், அவரது மனைவி அருணா, ஆனந்தின் பெற்றோர் ஆகியோர் வந்தனர். கூட்டத்தில் பலருடனும் மிகவும் இயல்பாக ஆனந்த் பழகினார். குழந்தைகளுக்கு செஸ் கற்றுக்கொடுக்கும் ஓர் ஆசிரியர், மிகவும் நெர்வஸாக, மைக்கை எடுத்துப் பேசி, ஆனந்தை வரவேற்றார். பிறகு ஆனந்த், குழந்தைகளிடம் பேசினார். குழந்தைகளுக்கு என்ன புரிந்தது என்று தெரியாது. ஆனால் “நான் எப்போதும் எதிராளியைவிட ஒரு மூவ் அதிகமாக யோசிப்பேன்” என்று ஒரு வாக்கியம் சொன்னதை என் மகள் ஞாபகம் வைத்திருக்கிறாள். அவ்வப்போது என்னிடம் அப்படியென்றால் என்ன என்று கேட்பாள். நான் விளக்குவேன்.

***

இப்போது ஆனந்த் மீ்ண்டும் உலக சாம்பியன். இம்முறை match play-off முறையில் கிராம்னிக்கை வென்றுள்ளார்.

அடுத்த சில மாதங்களில் ஆனந்த் சென்னையில் இருக்கும்போது, மைலாப்பூர் செஸ் கிளப்பில் மீண்டும் ஒரு வாழ்த்து விழா நடக்கும். அதற்கு ஆனந்த் நிச்சயம் வருவார். இந்த முறையும் குழந்தைகள் அவருடன் சிறிது நேரத்தைக் கழிப்பார்கள்.

அப்போதும் அவர்கள் ஆனந்திடமிருந்து ஓரிரு வாக்கியங்களைக் கேட்டு மனத்தில் வைத்திருப்பார்கள்.

சதுரங்க ஆட்டம் தோன்றிய இந்தியாவில், ரஷ்யாவுக்குச் சவால் விடக்கூடிய அளவுக்கு மேலும் சில செஸ் வீரர்கள் தோன்ற அது வழிவகுக்கும்.

Wednesday, October 29, 2008

சந்திரயான் அப்டேட்

இன்று காலை 7.38 மணிக்கு, சந்திரயான், அடுத்த வட்டப்பாதைக்குச் செலுத்தப்பட்டது.

இப்போது இருக்கும் வட்டப்பாதை 465-2,67,000 கி.மீ. என்பது. இந்தப் பாதையில் சுற்றிவர 145 மணி நேரம் (6 நாள்கள்). எனவே அடுத்து 4 நவம்பர் 2008 அன்று மீண்டும் அண்மை நிலைக்கு வரும்போது, அடுத்த நகர்வு இருக்கும். அப்போது தொலைவு நிலை 3,84,000 கி.மீ. என்று இருக்குமாறு பாதை மாறும்.

இலங்கைப் பிரச்னை - பாகம் 2

தமிழகம் ஆடி அடங்கிவிட்டது.

அனைத்துக் கட்சிக் கூட்டம். ஒருமித்த தீர்மானம். ராஜினாமா. மனிதச் சங்கிலி. கூட்டங்கள். பேச்சுகள். கைதுகள். பேசில் ராஜபக்க்ஷ - பிரணாப் முகர்ஜி கூட்டறிக்கை. கருணாநிதி மகிழ்ச்சி. சுபம்.

உணர்ச்சிபூர்வமாகக் கொந்தளித்து இங்கே எதையும் சாதிக்கமுடியாது.

***

வைகோ, கண்ணப்பன் கைது. இருவரையும் கைது செய்தது எனக்கு ஏற்புடையதல்ல. இவர்களைக் கைது செய்திருக்கவே கூடாது.

ஆனால் இருவரும் செய்தது முட்டாள்தனம். பொதுவாழ்வுக்கு வரும் எவரும், என்ன பேசுகிறோம் என்பதைக் கவனமாகப் பேசவேண்டும். அதுவும் எதிரி ஆட்சியில் இருக்கிறார், ஜனநாயக நடைமுறைகள் குறைவு என்றால், மேலும் கவனமாக இருக்கவேண்டும்.

பிரிவினைவாதம் பேசுபவர்களையும்கூடக் கைது செய்யக்கூடாது என்பது என் வாதம். ஆனால் கருணாநிதி எவ்வளவு அவசரமாக வைகோவையும் கண்ணப்பனையும் கைது செய்துள்ளார் என்பதைப் பார்க்கும்போது, வைகோவைப் பழிவாங்க எவ்வளவு ஆர்வமாக இருந்துள்ளார் என்பது தெரிகிறது.

இம்முறை, வைகோ, கண்ணப்பனுக்கு பலத்த நேரடி ஆதரவுக்குரல் ஏதும் தென்படவில்லை. நெடுமாறன், சுப.வீரபாண்டியன், வீரமணி, ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் என்ன சொல்கிறார்கள்? ஜெயலலிதா சுண்டுவிரலைக்கூட அசைக்கமாட்டார்.

***

ராஜீவ் காந்தி சிலையைச் சேதம் செய்யும் தமிழ்த் தேசிய வெறியர்கள், முழு முட்டாள்கள். அடிப்படை அறிவு சிறிதும் அற்றவர்கள். இதனால் காங்கிரஸ் கட்சியை மேலும் அந்நியப்படுத்துவார்கள். விடுதலைப் புலிகள் “அன்னை சோனியா”விடம், தங்கள் குழுவின்மீதான தடையை விலக்க உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் என்று ஒரு செய்தியைப் படித்தேன். பிரபாகரன், தமிழக முதல்வர் கருணாநிதி எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சிகளைப் பாராட்டினார் என்ற ஒரு செய்தி, சன் நியூஸில் கீழே ஓடியது.

விடுதலைப் புலிகளுக்கே, தமிழ்த் தேசிய முரடர்கள் செய்வது கிலியைக் கொடுத்திருக்கும். உள்ளூர் முரடர்கள் கொஞ்சம் அடக்கி வாசித்தால், அது விடுதலைப் புலிகளுக்கு உபயோகமாக இருக்கும்.

***

இயக்குனர் சிகரங்கள் சீமான், அமீர் அதிகம் உணர்ச்சிவசப்பட்டிருக்க வேண்டாம். தலைவர் கருணாநிதியே களத்தில் இறங்கிவிட்டார். இனி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துவிட்டனர் போலும்.

விடுதலைப் புலிகளையோ அல்லது வேறு எந்த பிரிவினைச் சக்திகளையோ ஆதரித்துப் பேசுவது எந்தவிதத்திலும் குற்றம் அல்ல என்று கருதுபவன் நான். ஆனால் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளவர்கள், காவல்துறையினர் ஆகியோர் அந்தக் கருத்தைக் கொண்டவர்கள் அல்லர்.

இந்தக் கருத்தைப் பொதுக்கருத்தாக ஆக்காமல், அதற்கான விவாதங்களைச் செய்யாமல், ஏதோ ராமேஸ்வரத்தில் களம் கிடைத்துவிட்டது என்பதற்காக, சூழ்நிலையை முற்றிலும் புரிந்துகொள்ளாமல் பேசியுள்ளனர். இத்தனைக்கும் மேடையில் சிலர் அவர்களை எச்சரித்துள்ளனர். அதைப் புறந்தள்ளிவிட்டு இவர்கள் இப்படிப் பேசியுள்ளனர்.

சீமான் இதுபோலப் பேசுபவர்தான். பருத்திவீரர் கொஞ்சம் அதிகமே உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். மேடை புதுசு அல்லவா.

***

இப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு உதவிப் பொருள்கள் அனுப்பவேண்டும் என்பதாகத் தமிழகப் போராட்டம் மாற்றப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் காசோலை எழுதித் தள்ளுகிறார்கள். இன்று செய்தித்தாள்களில் தமிழக அரசின் சார்பில் கால் பக்க விளம்பரங்கள் காணப்பட்டன.

என்ன உதவிப் பொருள்கள்? யாருக்குப் போகும்? யார் எடுத்துக்கொண்டு போகப்போகிறார்கள்? யார் விநியோகிக்கப் போகிறார்கள்?

இலங்கை அரசே இந்தப் பொருள்களை ‘திருடிக்கொள்ள’ வாய்ப்பு உள்ளது. எனக்கு இதில் சொந்த அனுபவம் உண்டு. சுனாமி நேரத்தில் மருந்துப் பொருள்களைச் சேகரித்து கொழும்பு TRO-வுக்கு அனுப்பினேன். ஸ்ரீலங்கன் விமானச் சேவை மூலம் அனுப்பப்பட்டது. போய்ச் சேர்வதற்குமுன்னரே கொழும்பில் இருந்த TRO பிரதிநிதி ஒருவருக்கு அது தொடர்பான தகவலை அனுப்பினேன். அவரால் கடைசிவரை அந்தப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அவை எங்கே போயின என்றே தெரியாது. அரசே எடுத்துக்கொண்டிருக்கும் என்று அவர் தகவல் அனுப்பினார். அவ்வளவுதான்!

மற்றொருபக்கம், விடுதலைப் புலிகள் அந்தப் பொருள்களைத் தங்களுக்கென எடுத்துக்கொண்டுவிடுவர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பொருள்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச்சேர என்ன வழிகள் மேற்கொள்ளப்படும் என்பதை தமிழக அரசும் இந்திய அரசும் உடனடியாகத் தெரிவிக்கவேண்டும். இல்லாவிட்டால், நிதி சேகரிப்பதில் தயக்கம் இருக்கும்.

இந்திய அரசு வழியாக அனுப்பாமல், தமிழக அரசே நேரடியாக உதவிப் பொருள்களை ஈழப் பகுதிக்கு அனுப்பவேண்டும் என்கிறார் ராமதாஸ். இது சாத்தியமா என்று எனக்குத் தெரியவில்லை.

முதலில் இந்தச் செயலை ஒருங்கிணைக்கப்போவது யார்?

ஆனால், அதற்குமுன், போரை நிறுத்தும் முயற்சிகளை எடுக்கவேண்டுமே? அதைப்பற்றி பிரணாப் முகர்ஜி ஒன்றுமே சொல்லவில்லையே? போர் தொடர்ந்தால், மக்கள் நிச்சயம் மேற்கொண்டு பாதிப்படைவார்கள். உதவிப் பொருள்களை அனுப்புவதால் பிரயோசனம் குறைவாகவே இருக்கும். வேண்டியவர்களுக்குப் போய்ச் சேராது.

எனவே முதல் நோக்கம் போரை நிறுத்துவது.

***

தமிழக அரசியல்வாதிகள் என்ன செய்யவேண்டும்?

* வெளிப்படையாகப் போர் நிறுத்தம் பற்றிப் பேசுவது உபயோகமாக இருக்காது. அந்நிய நாட்டின் இறையாண்மையில் இந்தியா தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டு வரும். போர் நிறுத்தத்தால் அதிகம் லாபமடைவது விடுதலைப் புலிகள்தான்; எனவே அதற்காகத்தான் போர் நிறுத்தம் முன்வைக்கப்படுகிறது என்று கூக்குரல் எழும்.

(தி ஹிந்து இதை முன்னின்று நடத்த ஆரம்பித்துவிட்டது. தினம் தினம் ராஜபக்ஷ தி ஹிந்துவுக்கு எக்ஸ்க்ளூசிவ் பேட்டிகளாகக் கொடுத்துத் தள்ளுகிறார். ராம் காலையில் எழுந்து, பல் தேய்த்த உடனேயே, நேரே கொழும்பு போய், ஒரு பேட்டி எடுத்துவிட்டு, மதியம்தான் மவுண்ட் ரோட் ஆஃபீஸுக்கு வருவார் போலிருக்கிறது!)

* எனவே பின்னணியில் இதனைச் செய்யவேண்டும். இலங்கை அரசைப் போர் நிறுத்தத்தை நோக்கிச் செலுத்தவேண்டும். அதே நேரம், விடுதலைப் புலிகளுடனும் தொடர்புகொண்டு, போர் நிறுத்தத்தை வலியுறுத்தவேண்டும்.

* அட்டைக்கத்தி வீரர்களான வைகோ, அமீர் போன்றவர்கள், கையில் ஆயுதம் ஏந்திப் போராடுவோம் என்றெல்லாம் பேசுவதைத் தவிர்க்கவேண்டும். தேவை போரை நிறுத்துதல். மேலும் எண்ணெயை ஊற்றிப் பற்றவைப்பது அல்ல.

* அதன்பின், அமைதிப் பேச்சுவார்த்தையை நோக்கி விடுதலைப் புலிகளைச் செலுத்துதல். இதுதான் கஷ்டமான பகுதி. விடுதலைப் புலிகள் ராணுவரீதியில் முன்னேற்றத்தில் இருந்தபோதே, அதிகம் சலுகைகள் கிடைக்கவில்லை. இப்போது, நிச்சயம் கிடைக்காது. இருந்தாலும் முயற்சி செய்யவேண்டும்.

* விடுதலைப் புலிகள், முகம் சுளிக்காமல், பிற தமிழ் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஒருமித்த கருத்தை எட்ட முனையவேண்டும். பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழம் அமையவேண்டும் என்பதைவிட, தமிழர் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

“இல்லை, அப்படியெல்லாம் நடக்காது. சிங்களர்கள் எந்தக் காலத்திலும் தமிழர்களுக்குக் கண்ணியமான வாழ்க்கையைத் தரமாட்டார்கள். தனி தமிழ் ஈழம் அமைந்தால் மட்டுமே, தமிழர் நலன் காக்கப்படும். அதுவும் ஆயுதம் ஏந்திப் போராடி, சிங்களர்களை வென்று, இலங்கையைப் பிளந்து, தமிழ் ஈழத்தை உருவாக்கியே தீர்வோம்.” என்பதுதான் விடுதலைப் புலிகளின் கருத்து என்றால், பிரச்னை இப்போது இருப்பது போலவே அல்லது இதைவிட மோசமாகத் தொடரும்.

Tuesday, October 28, 2008

சந்திரயான் - இப்போது

சந்திரயான் விண்கலத்தை வானுக்கு அனுப்பியதிலிருந்து இதுவரை மூன்றுமுறை அதன் வட்டப்பாதையை மாற்றியுள்ளனர்.

சந்திரயான், முதலில், 255 - 22,860 கி.மீ. வட்டப்பாதைக்குள் பி.எஸ்.எல்.வியால் செலுத்தப்பட்டது. இந்தப் பாதையில் ஒரு முறை சுற்றிவர, 6.64 மணி நேரம் ஆகும்.

இங்கிருந்து, அடுத்து, 305 - 37,902 கி.மீ. என்ற வட்டப்பாதைக்கு சந்திரயான் மாற்றப்பட்டது. இந்தப் பாதையில் ஒருமுறை முழுதாகச் சுற்றிவர ஆகும் நேரம் 11.24 மணி நேரம்.

அடுத்து, 336 - 74,715 கி.மீ. என்ற வட்டப்பாதைக்கு சந்திரயான் அனுப்பப்பட்டது. இதில் ஒருமுறை சுற்றி முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம், 25.43 மணி. அதாவது ஒரு நாளைக்கு சற்று அதிகம்.

அடுத்து, கடைசியாக, 348 - 1,64,000 கி.மீ. என்ற பாதைக்கு இரண்டு நாள்களுக்குமுன் அனுப்பப்பட்டது. இந்தப் பாதையில் ஒரு சுற்றுக்கு ஆகும் நேரம், 72.85 மணி. அதாவது, கிட்டத்தட்ட 3 நாள்கள்.

நாளைக் காலை (29 அக்டோபர் 2008), மீண்டும் இந்தப் பாதையில் அண்மை நிலைக்கு வரும்போது, அடுத்த பாதை மாற்றம் நடக்கும்.

தொலைவு நிலை வெகு தூரம் ஆகிக்கொண்டிருந்தாலும், அண்மை நிலை, கிட்டத்தட்ட 350 கி.மீ. என்றே இருப்பதைப் பாருங்கள்.

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 3,84,000 கி.மீ. எனவே அடுத்த இரண்டு நகர்த்துதலில், தொலைவு நிலை 3,84,000 கி.மீ.க்கு நெருக்கமாக இருக்குமாறு உள்ள வட்டப்பாதைக்குச் செல்லவேண்டும்.

29 அக்டோபர், 3 நவம்பர், 8 நவம்பர் ஆகிய நாள்களில் இந்த மாற்றங்கள் நடக்கும் என்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். அதன்பின்14, 15 நவம்பரில் என்றேனும் ஒரு நாள் சந்திரனை 100 கி.மீ. உயரத்தில் சந்திரயான் சுற்ற ஆரம்பிக்கலாம்.

Friday, October 24, 2008

கலீஃபா உமர் இப்ன் அல்-கத்தாப் (581-644)

மலையாளத்தில் நூறநாடு ஹனீஃப் எழுதி, தமிழில் நிர்மால்யாவால் மொழிமாற்றப்பட்டு, “செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல்” என்ற புத்தகம் விரைவில் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக வெளிவர உள்ளது. இன்றுதான் அதனை எடிட் செய்துமுடித்தேன்.

முகமது நபியின் சமகாலத்தவரான உமர் என்பவரின் விதந்தோதப்பட்ட வாழ்க்கை வரலாறு (hagiography), நாவல் வடிவில்.

ஹேஜியோகிராபி என்றால் “திவ்ய சரித்திரம்” என்று சொல்லலாம். அதில் ஓரளவுக்கு உண்மை இருக்கும். மீதியெல்லாம் புகழ் மாலைகள். இந்த நாயகருக்கு எதிராக வேறு பல குழுக்கள் இருப்பார்கள். அவர்களது சரித்திரங்கள் முற்றிலும் வேறாக இருக்கும்.

ராமானுஜர், சங்கரர், வேதாந்த தேசிகர் ஆகியோரது “திவ்ய சரித்திரங்களும்” இதுபோன்றவைதான். அவர்களுக்கு எல்லாவிதமான கஷ்டங்களும் வரும். இறைவன் அருளால் அவர்கள் எல்லாக் கஷ்டங்களையும் முறியடிப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் தவறே செய்யம்மாட்டார்கள். இவர்களது வாழ்க்கையைப் படிக்கும் பக்தர்கள் கண்களிலிருந்து நீர் பெருகும். அவர்களது மதிநுட்பம், இறைவனிடம் கொண்டுள்ள மாறாத பக்தி, துன்பங்களை எதிர்கொள்ளும் திடத்தன்மை, நா வன்மை எதற்கும் ஈடு இணையே இருக்காது.

கலீஃபா உமரின் வாழ்க்கையை ஹனீஃப் சொல்லும் விதத்தில் படித்தால், அதேபோல, கண்ணீர் பெருக்கெடுத்தோடும். ஆரம்பகாலத்தில், முகமதுவைக் கடுமையாக எதிர்த்தவர் உமர். பல தெய்வ வழிபாட்டைப் பின்பற்றியவர். முகமதுவை வெட்டிக் கொல்லும் நோக்கத்தோடு, அவரைப் பார்க்கச் செல்பவர், அங்கே முகமதுவின் பாதையில் சேர்ந்துவிடுகிறார்.

அதன்பிறகு முகமதுவின் பக்கம் நின்று, பல்வேறு சண்டைகளில் ஈடுபடுகிறார். முகமதுவின் மறைவுக்குப் பிறகு, அபுபக்கர் முதல் கலீஃபா ஆவதற்கு உமர் துணைநிற்கிறார். இரண்டே வருடங்களில் அபுபக்கர், உமரை இரண்டாவது கலீஃபா ஆக்கிவிட்டு, இறக்கிறார்.

இந்தக் கட்டம் முழுவதிலும் முகமதுவின் முதல் மனைவி கதீஜாவின் மகள் ஃபாத்திமாவின் கணவர் அலி ஆட்சிக்கும் மதத் தலைமைக்கும் போட்டியாக இருக்கிறார். உமர் கொலை செய்யப்பட்டபின், உத்மான் கலீஃபா ஆகி, அவர் கொலை செய்யப்பட்டபின், அலி நான்காவது கலீஃபா ஆகிறார்.

உமர், உத்மான், அலி - மூவருமே கொல்லப்படுகின்றனர். உமர் பள்ளிவாசலில் தொழுகையில் இருக்கும்போது ஒருவனால் குத்திக் கொல்லப்படுகிறார். உத்மான் இரவில் படுக்கையறையில் எதிரிகளால் வெட்டிக் கொல்லப்படுகிறார். அலியும் பள்ளிவாசலில் தொழும்போது, விஷ வாளால் குத்திக் கொல்லப்படுகிறார்.

***

“செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல்” கதையில் அலி, அதிகம் காணப்படுவதில்லை. ஓரிரு இடங்களில் உமருக்கு அறிவுரை சொல்கிறார். அவ்வளவே.

இந்தக் கதையில், உமரின் வாழ்க்கை, அவர் எப்படி கலீஃபாவாக இருந்தும், கஜானாவிலிருந்து ஒரு காசு எடுக்காமல், கடனாளியாக வாழ்ந்து மடிந்தார் என்றும், அவர் எப்படி தொடர்ந்து போர் புரிந்து, மக்களுக்கு ரோம, பாரசீக அரசர்களிடமிருந்து விடுதலை வாங்கித் தந்தார் என்றும், எப்படி பேரரசை உருவாக்கினார் என்றும், பஞ்சத்திலும் கொள்ளை நோயிலும் மக்களைக் காத்தார் என்றும், எப்படி நீதி பரிபாலனம் செய்தார், மக்கள் கஷ்டங்களைப் போக்கினார், ஏழைகளுக்கு உதவித்தொகை வழங்கினார் என்றும் வருகிறது.

வரலாற்றை இத்துடன் குழப்பாமல் படித்தால், ஆராய்ச்சிகள் ஏதும் செய்யாமல் படித்தால், ஷியா-சுன்னி விவாதங்களுக்குள் செல்லாமல் படித்தால், மிகவும் சுவாரசியமாக இருக்கும். உமர், அலியை ஏமாற்றினாரா? அலியை மிரட்டி, பணியவைத்து, அபுபக்கரை கலீஃபா ஆக்கினாரா? ஃபாத்திமாவை அடித்துத் தள்ளி, கருச்சிதைவு உண்டாக்கினாரா போன்ற கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் விடை இருக்காது.

ஆனால் ஒருவிதத்தில், ராம ராஜ்யம் என்பதற்கு சமானமானது உமர் ராஜ்யம் என்று ஹனீஃப் நிறுவுகிறார்.

***

புத்தகத்திலிருந்து சில சுவாரசியமான மேற்கோள்கள்:

1. கலீஃபா உமர், ஜெருசலேம் போகிறார். அங்கே கிறிஸ்துவ தேவாலயத்தில் இருக்கும்போது தொழுகை நேரம் வந்துவிடுகிறது. சர்ச் உள்ளேயே உமருக்கு தொழுகைக்கான வசதிகளைச் செய்துதர கிறிஸ்துவர்கள் முற்படும்போது, உமர் மறுத்து, இப்படிச் சொல்கிறார்:

‘இவ்விடத்தில் தொழுகை நடத்துவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நீங்கள் இங்கே சிறுபான்மையினராக இருக்கிறீர்கள். இப்போது நான் இவ்விடத்தில் தொழுகை நடத்தினால் எதிர்காலத்தில் இஸ்லாமியர்கள் அது அவர்களின் உரிமை என்று வாதிட்டு இந்தத் திருத்தலத்தின் இயல்பை மாற்றி உங்களை இவ்விடத்தைவிட்டு வெளியேற்றிவிடலாம். அதனால்தான் மறுத்தேன்.’

2. ராணுவத் தலைமைப் பதவியிலிருந்து அவரது நண்பர் சுஹரபி என்பவரை உமர் நீக்கி, அங்கு வேறு ஒருவரை நியமித்திருப்பார். மக்கள் என்ன காரணமோ என்று தெரியாமல் குழம்புவார்கள். சுஹரபியுமே, தான் என்ன தவறு செய்தேன் என்று கேட்பார். அதற்கு உமர், நட்பு முக்கியமல்ல, பதவிக்குப் பொருத்தமான ஆள்தான் வேண்டும் என்று பதில் சொல்வார்:

‘நான் வெறுப்பின் காரணமாக சுஹரபியை மாற்றவில்லை. தவறு இழைத்ததற்காகவும் அல்ல. சுஹரபி எனக்குப் பிடித்தமான நண்பர். சுஹரபிமீது அன்றும் இன்றும் அதே நிலைப்பாடுதான். அது ஓர் ஆட்சியாளனை பலவீனப்படுத்திவிடக்கூடாது. நமது நாடு இன்று எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியைப் பற்றி நீங்கள் அறிவீர்கள்தானே? பலம் பொருந்திய எதிரி ஓங்கி அறைய நேரம் பார்த்திருக்கிறான். ஆகவே, அவரது பதவிக்கு மேலும் வலிமை சேர்க்கும் ஒருவர் நமக்கு மிக அவசியம். யாராவது மாற்றுக்கருத்தைத் தெரிவிக்க விரும்பினால் கூறுங்கள்.’

3. ஓர் ஆளுநர் பதவிக்குத் தன்னை நியமிக்குமாறு ஒரு நண்பர் சிபாரிசு கேட்டு வருவார். அப்போது நடக்கும் விவாதம்:

இன்னொரு நண்பர் வந்தார். காலியாகக் கிடக்கும் ஆளுநர் பதவிக்குத் தன்னைப் பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட கலீபா கூறினார்: ‘அந்தப் பதவிக்குத் தங்களை நியமிக்கலாம் எனக் கருதியிருந்தேன்!’

அதைக் கேட்ட அந்த நபர் உற்சாகமடைந்தார்.

கலீபா தொடர்ந்து பேசினார்: ‘அப்பதவிக்குப் பேராசைப்பட்டதாலும் சிபாரிசுடன் வந்ததாலும் தாங்கள் தகுதியற்றவர். தாங்கள் போகலாம்.’

4. கலீஃபாவின் மகன் எகிப்தில் இருக்கும்போது மது அருந்தியிருப்பார். விஷயம் தெரிந்ததும், எகிப்தின் ஆளுநர், காதும் காதும் வைத்தாற்போல, மிதமான தண்டனையை, ரகசியமாக அவருக்கு வழங்கியிருப்பார். விஷயம் வெளியில் தெரிந்ததும், உமர், தன் மகனையும் ஆளுநரையும் கூட்டிவந்து விசாரிப்பார். பிறகு சொல்வார்:

‘என் மகன் என்ற காரணத்துக்காக இங்கு எந்தச் சலுகையும் இல்லை. சட்டத்தின் முன்னால் எனக்கும் உங்களுக்கும் என் மகனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்களோ, அவர்களின் உறவினர்களோ குற்றமிழைத்தால் சாதாரணமாக வழங்கப்படும் தண்டனையிலிருந்து இரட்டிப்புத் தண்டனை வழங்கப்படும் என்பதுதானே நமது கொள்கை. என் மகன் செய்த குற்றத்தை அம்பலப்படுத்தாமல் தண்டிக்கப்பட்டதாக ஒரு ரகசிய நாடகம் அரங்கேற்றப்பட்டது.

‘அதற்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும். ஆகவே, ஆளுநர் தண்டனைக்குரியவர். அவரது குற்றம் ஓர் எச்சரிக்கை மூலமாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது. என் மகன் இழைத்த குற்றத்துக்கு, ஒரு சாதாரணக் குடிமகன் செய்திருந்தால் என்ன தண்டனை தரப்படுமோ அதில் இரட்டிப்பு தண்டனை, ரகசியமாக அல்ல, பகிரங்கமாக அவனுக்குத் தரப்படவேண்டும். ஆகவே, என் மகனுக்கு இரட்டிப்பு தண்டனை வழங்கத் தீர்ப்பளிக்கிறேன்.’

(தொடரும்)

சந்திரயான் இப்போது

சந்திரயான் கலத்தை இரண்டு நாள்களுக்குமுன், பி.எஸ்.எல்.வி ராக்கெட், 255-22,860 நீள்வட்டப் பாதையில் செலுத்தியது. நேற்று, இந்தப் பாதையிலிருந்து, 305-37,900 என்ற பாதைக்கு அனுப்பியுள்ளனர்.

அடுத்த மாற்றம் நாளை நடக்கலாம்.

Wednesday, October 22, 2008

சுற்றுப்பாதைகள், பாதை மாற்றம்

செயற்கைக்கோள்கள் அல்லது விண்கலங்கள் எப்படி ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்கு மாறும்?

நேற்று சந்திரயான் பற்றி எழுதிய பதிவில், முதலில் 240-36,000 என்ற சுற்றுப்பாதையிலிருந்து 240-100,000 என்ற பாதைக்கு சந்திரயான் மாறும் என்று குறிப்பிட்டிருந்தேன்.

கொஞ்சம் கணக்கு போட்டுப் பார்த்தால், என்ன செய்தால் ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்குச் செல்லமுடியும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

கீழே நாம் கொடுப்பது எல்லாமே எளிமைப்படுத்தப்பட்ட இயல்பியல் மாதிரிகளைக் கொண்டு. நிஜமான பூமி, முழுமையான கோளவடிவில் இல்லை. அதனால் இடத்துக்கு தகுந்தாற்போல ஈர்ப்பு விசை மாறும். இங்கே நான் எழுதும் சமன்பாடுகளை blogspot-ல் MathML இல்லாததால் படங்களாக மாற்றித் தருகிறேன்.

நியூட்டன், இரு பொருள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை எப்படி இருக்கும் என்பதைக் கீழ்க்கண்ட சமன்பாட்டின்மூலம் குறிப்பிட்டார்.
இங்கே G என்பது ஈர்ப்பு மாறிலி. M என்பது பெரிய பொருளின் எடை. m என்பது சிறிய பொருளின் எடை. r என்பது இரண்டு பொருள்களின் நிறை மையத்துக்கும் இடையே உள்ள தூரம்.

r என்ற ஆரம் கொண்ட வட்டமான சுற்றுப்பாதையில், பூமியை ஒரு பொருள் சுற்றும்போது, அதன் வேகம் எப்படி இருக்கும்?

(இதனை பின்னர் MathML சரியானபிறகு, எப்படி நிறுவுவது என்று வேறொரு பதிவில் எழுதுகிறேன். பள்ளிக்கூடப் பாடத்தில் இதனை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.)

சரி, இதுவே, அண்மை நிலை b, தொலைவு நிலை a என்று இருக்கும் ஒரு நீள் வட்டத்தில் சுற்றும்போது, வேகம் எப்படி இருக்கும்?
(இதை பள்ளிக்கூடப் பாடத்தில் பார்த்திருக்கமுடியாது. கல்லூரிப் பாடத்தில் இருக்கலாம்.)

சந்திரயான் 250-23,000 என்ற பாதையில் செலுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாதையில், அதன் தொலைவு நிலையில் (அதாவது 23,000 கி.மீ) இருக்கும்போது, சந்திரயானின் வேகம் விநாடிக்கு சுமார் 2.2 கி.மீ என்று இருக்கும். அண்மை நிலையில் (250 கி.மீ) இருக்கும்போது, இதே வேகம், விநாடிக்கு சுமார் 9.9 கி.மீ என்று இருக்கும்.

சந்திரயான் படிப்படியாக எந்தெந்தப் பாதைகள் வழியாக சந்திரனை அடையும் என்ற விளக்கமான படம் இப்போதுதான் கிடைத்தது. இஸ்ரோ தளத்தில் இருந்தது.

இதன்படி, சந்திரயான் கீழ்க்கண்ட பாதைகள் வழியாகச் செல்லும்:
(1) 250-23,000
(2) 300-37,000
(3) 300-73,000
(4) 300-387,000
(5) 2000-384,000

250-23,000 பாதையிலிருந்து அடுத்தடுத்த பாதைகளுக்குச் செல்ல என்ன செய்யவேண்டும்? 300-37,000 பாதையில், அண்மை நிலையில், சந்திரயானின் வேகம் விநாடிக்கு 10.15 கி.மீ ஆக இருக்கவேண்டும். எனவே 250-23,000 பாதையில் அண்மை நிலையில் இருக்கும்போது, ஆன்-போர்ட் மோட்டாரைக் கொண்டு, விநாடிக்கு 9.9 கி.மீ என்ற வேகத்தை விநாடிக்கு 10.15 கி.மீ என்று அதிகமாக்குவார்கள்.

அடுத்து, 300-73,000 பாதைக்குச் செல்ல, அண்மை நிலையில், விநாடிக்கு 10.15 கி.மீ என்பதை விநாடிக்கு 10.47 கி.மீ என்றாக்குவார்கள். இங்கிருந்து 300-387,000 பாதைக்குச் செல்ல, வேகத்தை விநாடிக்கு 10.82 கி.மீ என்று அதிகமாக்கவேண்டும்.

எந்த வேகத்தில் ஒரு பொருள் கிளம்பினால், அது பூமியின் ஈர்ப்புப் பரப்பிலிருந்து விடுதலையாகும்? அந்த வேகத்துக்கு “விடுபடும் வேகம்” (escape velocity) என்று சொல்வார்கள். இதற்கான சமன்பாடு:
பூமியின் மேல்பரப்பு என்றால் இந்த வேகம், விநாடிக்கு 11.2 கி.மீ என்று இருக்கும். ஆனால், பூமியின் பரப்பிலிருந்து 300 கி.மீ உயரத்தில், இந்த வேகம், விநாடிக்கு 10.9 கி.மீ என்று இருக்கும். நாம் இப்போது சென்றுகொண்டிருக்கும் வேகமான விநாடிக்கு 10.82 கி.மீ என்பது இதற்கு வெகு நெருக்கமாக இருப்பதைக் கவனியுங்கள்.

அடுத்து, 300-387,000 என்ற சுற்றுப்பாதையிலிருந்து, 2,000-384,000 என்ற சுற்றுப்பாதைக்கு மாற்றம் நடக்கிறது. இந்தச் சுற்றில் இருக்கும்போது, சந்திரயான், சந்திரனுக்கு வெகு அருகில் வரும்.

அந்த சமயத்தில், சந்திரயானின் வேகத்தை வெகுவாகக் குறைத்து, சந்திரனைச் சுற்றி கீழ்க்கண்ட சுற்றுப்பாதைகளில் செலுத்தப்போவதாகச் சொல்கிறார்கள்.
(1) 500-5,000
(2) 100-5,000
(3) 100-100

இந்தப் பாதை ஒவ்வொன்றிலும் என்ன வேகம் இருக்கவேண்டும் என்பதை சந்திரனின் எடையைக் கொண்டு கணிக்கலாம்.

இதெல்லாம் நடந்து முடிக்க இன்னும் மூன்று வாரங்கள் ஆகிவிடும்.

***

தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் சந்திரயான் பற்றிய கவரேஜ் மிக மோசமாக இருக்கிறது. அறிவியல் தொடர்பாக உருப்படியாக ஒன்றுகூட சொல்லப்படவில்லை. தொழில்நுட்பத்தைப் பற்றியும் அதிகமாக ஒன்றும் காணக்கிடைக்கவில்லை.

Tuesday, October 21, 2008

சந்திரனுக்குப் போகும் விண்கலம்

ஒரு கனமான ஈர்ப்பு மண்டலத்தைத் தாண்டி மற்றோர் ஈர்ப்பு மண்டலத்துக்குள் போவது எளிதான விஷயம் அல்ல. சோவியத் யூனியனும் அமெரிக்காவும் பல பத்தாண்டுகளுக்கு முன்னரே செய்திருந்தாலும், இந்தியாவுக்கு இது பெரும் சாதனையாகவே இருக்கும்.

சந்திரயான் (சந்திராயணம் அல்ல) என்பது “சந்திரனுக்குப் போகும் விண்கலம்”.

புவிமீதுள்ள ஈர்ப்பு விசை காரணமாக, மேலே எறியப்பட்ட பொருள்கள் புவிப் பரப்பின்மீது விழுவதும், பூமியைச் சுற்றி சந்திரன் சுற்றிவருவதும் ஒரே அடிப்படையில் இயங்குவதே என்று நியூட்டன் சரியாகப் புரிந்துகொண்டார். சந்திரனும், பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, பூமியின்மீது விழுகிறது. ஆனால் அதற்கு பக்கவாட்டிலும் வேகம் இருப்பதால், சுற்றிச் சுற்றி வருகிறது.

பூமிக்கு மேல் சற்று உயரத்திலிருந்து ஒரு கல்லைக் கீழே போடுங்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கல்லின் பக்கவாட்டு வேகத்தை அதிகரியுங்கள். கல், தள்ளிப் போய் விழும்.

இப்போது, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரியுங்கள். அதே நேரம் கல்லின் உயரத்தையும் அதிகரியுங்கள். இப்போது, கல் வெகு தொலைவில் தள்ளி விழும். ஆனால் அது, பூமியின் வளைவைத் தாண்டிப்போய் விழும். அப்படி விழுவது ஒரேயடியாக எங்கோ “கீழே” போய் விழாது. ஏனெனில், பூமி, அந்தக் கல்லை வளைத்துத் தன் பக்கம் இழுக்கும். எனவே அது பூமியை நோக்கித் திரும்பும். ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் பூமியின்மீது விழாமல், சுற்றிச் சுற்றி வந்தபடியே இருக்கும்.

இப்படிச் சுற்றி வரும் பாதை, ஒரு நீள் வட்டம். இதை நியூட்டனுக்குமுன், கெப்ளர் கண்டுபிடித்திருந்தார். அதற்குமுன்கூடச் சிலருக்கு இது தெரிந்திருக்கலாம். ஆனால் தெளிவாக இதனைக் குறிப்பிட்டவர் கெப்ளர்தான்.

டைகோ பிராஹி (1546-1601) என்ற டென்மார்க் நாட்டு வானவியல் அறிஞர் கோள்களின் சுற்றுப்பாதையை கவனமாக ஆராய்ந்து குறிப்பெடுத்து வைத்திருந்தார். இவரிடம் மாணவராக இருந்தவர்தான் ஜோஹானஸ் கெப்ளர் (1571-1630) என்ற ஜெர்மானியர். தனது ஆசிரியர் பிராஹி விட்டுச்சென்ற குறிப்புகளைக் கொண்டு, கோள்களின் சுற்றுப்பாதை நீள்வட்டமே என்பதை கெப்ளர் கண்டுபிடித்தார்.

ஐசக் நியூட்டன் (1643-1727), இதற்கான கோட்பாட்டுச் சட்டகத்தை உருவாக்கினார். நியூட்டன் செய்த முதல் காரியம், சந்திரனும் பூமியின்மீது விழும் ஒரு கல் என்றால், அந்தக் கல் பூமியைச் சுற்றிவர எவ்வளவு நேரமாகும் என்பதை தனது கணிதமுறை மூலம் கண்டுபிடிப்பது. அவரது விடை சுமார் 27 நாள்கள் என்று வந்தது. இதுதான் நாம் பார்ப்பதும்கூட.

சந்திரன், பூமியைச் சுற்றும் நீள்வட்டப் பாதை, முழுவட்டப் பாதைக்கு மிக நெருக்கமான நீள்வட்டம். அதாவது கிட்டத்தட்ட ஒரு வட்டப்பாதை.

நீள்வட்டப் பாதைகளில் இரு குவியங்கள் (foci) உண்டு. இதில் ஒரு குவியத்தில்தான் கனமான பொருள் இருக்கும். இந்தப் பொருளைச் சுற்றித்தான் நீள்வட்டப்பாதையில் மற்றொரு கனம் குறைந்த பொருள் சுற்றிவரும். இந்த நீள்வட்டப் பாதையில், அண்மை நிலை (Perigee), தொலைவு நிலை (Apogee) என்று இரண்டு நிலைகள் இருக்கும். முதற்கோளுக்கு மிக அருகில் துணைக்கோள் இருக்கும் நிலைதான் அண்மை நிலை. மிகத் தொலைவில் இருக்கும் நிலைதான் தொலைவு நிலை.

பூமிக்கு மேல் அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் அனைத்தும் இதேபோன்ற நீள்வட்டப் பாதையில்தான் சுற்றுகின்றன. ஒருசில சிறப்புச் செயற்கைக்கோள்கள், நிலநடுக்கோட்டுக்கு நேர் மேலே, வட்டப்பாதையில் சுற்றுகின்றன. இவற்றுக்கு இணைச்சுற்று செயற்கைக்கோள்கள் (geo-statinory satellites) என்று பெயர். இவைமூலம்தான் நமக்கு செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவையும், தொலைபேசி இணைப்புகளும் கிடைக்கின்றன.

பூமிக்கு மேல் சுற்றும் செயற்கைக்கோள்கள், எந்த உயரத்தில் இருக்கின்றன என்பதைப் பொருத்து, அவை பூமியைச் சுற்றிவரும் வேகம் இருக்கும். பூமிக்கு அருகில் இருந்தால், வேகம் அதிகமாக இருக்கும். பூமியிலிருந்து விலகிப் போகப்போக, சுற்றுவேகம் குறையும். இதை அடிப்படையாக வைத்துத்தான் இணைச்சுற்று செயற்கைக்கோளின் உயரம் கணக்கிடப்படுகிறது.

இந்த உயரம், பூமிக்குமேல் சுமார் 36,000 கி.மீ உள்ளது.

செயற்கைக்கோள்களை பூமிக்கு மேல் எப்படிச் செலுத்துவது? இதற்கு லாஞ்ச் வெஹிகிள் - ஏவும் வாகனம் - ஒன்று தேவை. துருவங்களுக்கு மேல் கோள்களைச் செலுத்துவது சற்றே எளிது. ஆனால், நிலநடுக்கோட்டுக்கு மேல் செலுத்துவது கடினம். அதிக வலுவுள்ள வாகனம் தேவை. இந்தியாவின் PSLV (Polar Satellite Launch Vehicle) இந்தத் திறனை உடையது. ஆரம்பத்தில் துருவத்தின்மேல் செயற்கைக்கோளை ஏவ உருவாக்கப்பட்ட இந்த வாகனம் இன்று நிலநடுக்கோட்டுக்குமேல் இணைச்சுற்று செயற்கைக்கோளை ஏவினாலும், பழைய பெயரான ‘துருவப்பாதை செயற்கைக்கோள் ஏவு வாகனம்’ என்பதே நிலைத்துள்ளது.

இந்தியாவின் வானியல் சாதனைகளில், இணைச்சுற்று செயற்கைக்கோள்களை அனுப்பக்கூடிய வாகனங்களை உருவாக்கியதை மிக முக்கியமானது என்று சொல்லலாம். அதற்கு அடுத்த கட்டம், இப்போது உருவாக்கியிருக்கும் சந்திரனுக்குச் செல்லும் வாகனம் (சந்திரயான்).

பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டிச் செல்லவேண்டும் என்றால், ஒரு வாகனத்துக்கு அதிகமான வேகம் இருக்கவேண்டும். பூமியின் மேல்பரப்பிலிருந்து ஒரேயடியாக இதனைச் செய்யவேண்டும் என்றால், விநாடிக்கு 11.2 கி.மீ வேகத்தில் பூமியின் மேல்பரப்பிலிருந்து கிளம்பவேண்டும். அந்த வேகத்தில் கிளம்பினால், பூமியின் காற்றுமண்டலம், கடுமையான உராய்வை ஏற்படுத்தி, பிரச்னையைக் கிளப்பும். வாகனம் எரிந்துவிடலாம்.


இதனால், ஆரம்பத்தில் வேகத்தைக் குறைத்து, முதலில் ஒரு சுற்றுப்பாதைக்குச் செல்வார்கள். சந்திரயான் முதலில் செல்லவிருக்கும் சுற்றுப்பாதைக்கு GTO (Geosynchronous Transfer Orbit - பூமியின் இணைச்சுற்று மாற்றல் பாதை) என்று பெயர். இந்தச் சுற்றுப்பாதையில் அண்மை நிலை பூமிக்கு மேல் 240 கி.மீ. தொலைவு நிலை 36,000 கி.மீ. என்று இருக்கும். ஆகா! 36,000 கி.மீ. என்பதை மேலே பார்த்தோமே? ஆம். இணைச்சுற்றுப் பாதையின் உயரம்தான் அது. ஆனால் ஓர் இணைச்சுற்று செயற்கைக்கோள், அதே உயரத்தில், வட்டப்பாதையில் சுற்றிவரும். இந்த GTO ஒரு புள்ளியில்தான் 36,000 கி.மீ.-ஐ அடையும். மற்றொரு பக்கம், அண்மை நிலையில் பூமிக்கு வெகு அருகில், 240 கி.மீ. தொலைவில் இருக்கும். இதுபோன்ற பாதையைத் தேர்ந்தெடுத்துதான் ஓர் இணைச்சுற்று செயற்கைக்கோளை விடுவிப்பார்கள். பிறகு சிறிது சிறிதாக, பாதையை மாற்றி, முழுவட்ட இணைச்சுற்று செயற்கைக்கோள் பாதைக்கு அந்தக் கோளைக் கொண்டுவருவார்கள்.

தரையிலிருந்து, GTO-வுக்கு சந்திரயானை எடுத்துச் செல்லத்தான் PSLV ஏவு வாகனம் பயன்படுகிறது. எரிபொருள், சந்திரயானில் இருக்கும் மோட்டார், கருவிகள் எல்லாம் சேர்த்து, சுமார் 1050 கிலோகிராம் எடையை, PSLV தூக்கிக்கொண்டுபோய் GTO-வில் விட்டுவிடும்.

சந்திரயான், இந்த GTO-விலிருந்து, மேலும் நீண்ட ஒரு நீள்வட்டப் பாதைக்குச் செல்லும். இதற்கு ETO (Earth Transfer Orbit - பூமியிலிருந்து வெளியே செல்வதற்கான மாற்றல் பாதை) என்று பெயர். இந்தப் பாதையின் அண்மை நிலை அதே 240 கி.மீ. ஆனால் தொலைவு நிலை 100,000 கி.மீ. GTO-விலிருந்து ETO-வுக்கு சந்திரயான் கலம், தானாகவே மாறிக்கொள்ளும்.

ஒரு வட்டப்பாதையில் இருந்து மற்றொரு வட்டப்பாதைக்கு எப்படிச் செல்வது? விண்கலத்தில் உள்ள ஆன் - போர்ட் மோட்டார்கள்மூலம் வேகத்தை ஒரு குறிப்பிட்ட திசையில் கூட்டுவதன்மூலம் அல்லது குறைப்பதன்மூலம் வட்டப்பாதைகளை மாற்றலாம். எவ்வளவு கூட்டினால், குறைத்தால், நீள்வட்டப்பாதையின் அண்மை நிலை, தொலைவு நிலை எப்படி மாறும் என்பதற்குச் சமன்பாடுகள் உள்ளன.

ETO-வில் இருக்கும்போது, விண்கலத்தின் திசையை சற்றே மாற்றி, சந்திரனை நோக்கி, LTT (Lunar Transfer Trajectory - சந்திரனுக்கான மாற்றல் பாதை) என்ற பாதையில் செலுத்துவார்கள். இதையும் சந்திரயானின் ஆன்-போர்ட் மோட்டார்கள்மூலமே செயல்படுத்துவார்கள்.

இதற்கிடையே, ஏவு வாகனம் கிளம்பிய நேரத்திலிருந்து இப்போதைக்குள் சந்திரன் ஒரு குறிப்பிட்ட தொலைவு நகர்ந்திருக்கும் (ஐ.எஸ்.ஆர்.ஓ கொடுத்துள்ள படத்தில் காணவும்). அதைக் கணக்கில் எடுத்து, சந்திரயான், சரியான வழியில் நகர்ந்து, சந்திரனின் சுழற்சி மண்டலத்துக்குள் வரும். இந்தச் செயல்பாட்டுக்கு LOI (Lunar Orbit Insertion - சந்திரனைச் சுற்றும் பாதைக்குள் செலுத்துதல்) என்று பெயர்.

இங்கு, ஆரம்பத்தில், 1000 கி.மீ. உயரத்தில் உள்ள ஒரு நீள்வட்டத்துக்குள் சுற்றும் சந்திரயான், சிறிது சிறிதாக வேகத்தை மாற்றி, 100 கி.மீ. உயரத்துக்குள் வந்துசேரும். சந்திரனின் துருவங்களுக்கு மேலாகச் சுற்றிவரும். இந்த இடத்தில் சுற்ற ஆரம்பிக்கும்போது சந்திரயானின் எடை 523 கிலோகிராமாக இருக்கும். அதில் 83 கிலோகிராம் எரிபொருள். இரண்டு வருடங்களில் இந்த திரவ எரிபொருள் முற்றிலுமாகத் தீர்ந்துபோகும். அதன்பிறகு, இந்தக் கலம், கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, வான்வெளியில் உடைந்து நொறுங்கிப் போகலாம். அதற்குமேல் அதனைக் கட்டுப்படுத்துவது முடியாததாகிவிடும்.

இந்த உயரத்தில், சுமார் இரண்டு வருடங்கள் சந்திரனைச் சுற்றப்போகும் இந்த வாகனம், பல செயல்களைச் செய்யும். சந்திரனில் என்னென்ன உலோகங்கள் உள்ளன, எந்த அளவுக்கு உள்ளன என்பதைக் கண்டறிய முற்படும். என்ன தாதுக்கள் உள்ளன என்று பார்க்கும். சந்திரனின் மேல்பரப்பு எப்படி ஏறி இறங்கியிருக்கிறது, மலைகளா, முகடுகளா, பள்ளங்களா என்று ஆராய்ந்து படம் பிடிக்கும்.

நாளை தொடங்க உள்ள இந்தப் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Sunday, October 19, 2008

ஈழம் தொடர்பாக தமிழகத்தில் நடக்கும் கேலிக்கூத்து

மாவிலாறு தொடங்கி, இன்று வரை, விடுதலைப் புலிகள் தரப்புக்குக் கடும் சேதம். இதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுப்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே. இந்தக் காலகட்டத்தில் புலிகள் டாக்டிக்ஸில் கடுமையாக அடிவாங்கியுள்ளனர் என்பது தெளிவு. ஆனால் ஈழ யுத்தங்களில் ஒரு கை ஓங்குவதும், பின் இறங்குவதும் கடந்த இருபதாண்டுகளாகவே நடந்துவருவதே. மீண்டும் புலிகளின் கை ஓங்கலாம்.

கடந்த இரண்டு வருடங்களில் இலங்கைத் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு இலங்கையில் போர் நடந்து புலிகள் தோற்கடிக்கப்பட்டபோதும் சரி, இப்போது கிளிநொச்சியை நோக்கி இலங்கை ராணுவம் முன்னேறும்போதும் சரி, பெரும் பாதிப்பு தமிழ் மக்களுக்குத்தான். அதைத்தவிர வங்காலை, செஞ்சோலை என்று பல பாராமிலிட்டரி, மிலிட்டரி பாதிப்புகள். குண்டுவீச்சுகள், பாலியல் வன்கொடுமைகள்.

அப்போதெல்லாம் தமிழகத்தில் குரல் கொடுத்தது வைகோ, நெடுமாறன், திருமாவளவன், ஓரளவுக்கு ராமதாஸ், பிற பெரியாரிய, தமிழ் தேசியக் கட்சிகள்.

திராவிட முன்னேற்றக் கழகமும், முதல்வர் கருணாநிதியும் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. தமிழ்ச்செல்வன் கொலைக்குப்பிறகு முரசொலியில் ஒரு கவிதை எழுதினார். அம்மா அறிக்கை ஒன்றை விடுத்து, ‘புலி வருது, கருணாநிதியை நீக்குங்க’ என்றதும், பின்பு கருணாநிதி ஆஃப் ஆகிவிட்டார்.

ரேடார் கருவிகள் விஷயத்தில், கூட்டு ரோந்து விஷயத்தில் என்று பலவற்றிலும் முதலில் நின்று குரல் கொடுத்தது வைகோதான். இதில் என்ன ஆச்சரியம் என்றால், அந்த நேரத்தில் அவர் ஜெயலலிதாவுடன் வைத்திருந்த கூட்டு. இதெப்படி சாத்தியம்? ஆனால் தமிழகத்தில் இது நடக்கும்.

கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் திமுகவும் கருணாநிதியும் ஈழத்தமிழர்களுக்கு எவ்வளவோ செய்திருக்கமுடியும். உதாரணத்துக்கு, வெளியுறவு அமைச்சகத்தில் ஒரு இணை அமைச்சர் பதவியாவது தங்கள் கட்சிக்கு வேண்டும் என்று கேட்டுவாங்கியிருக்கலாம். திமுகவின் கேபினட் அமைச்சர்கள், பிரணாப் முகர்ஜியுடனும் வெளியுறவுச் செயலர்களுடனும் தினந்தோறும் பேசக்கூடிய நிலையில் உள்ளவர்கள். இலங்கையில் என்ன நடக்கிறது என்று பேசி, ஒரு குறிப்பிட்ட திசையில் கொள்கைகள் செல்லுமாறு பார்த்துக்கொள்ளலாம்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், உள்துறை அமைச்சக, பாதுகாப்பு அமைச்சக, அயலுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் - இவர்கள்தான் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கைகளை வகுக்கிறார்கள். இதில் திமுக நிச்சயமாகத் தலையிட்ட ஒருமித்த கருத்து உருவாக வழிவகுத்திருக்கலாம்.

அதேபோல, இலங்கைக்கான இந்தியத் தூதர் யாராக இருந்தால், தமிழர் நலனுக்கு ஆதரவாக இருக்கும் என்று அறிந்து, அவர்களுக்கு அந்தப் பதவி கிடைக்குமாறு செய்ய திமுக முனைந்திருக்கலாம். பிற கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் லாபி செய்திருக்கலாம். மன்மோகன் சிங்கை வற்புறுத்தியிருக்கலாம். அப்படி எதையுமே செய்ததாகத் தெரியவில்லை.

மற்றொன்று: திமுக வெளிப்படையாக, தங்களது நிலை என்ன என்றே இதுவரையிலும் சொல்லவில்லை. புலிகளுக்கு ஆதரவான நிலையா, அல்லது எதிரான நிலையா என்பதைப் பற்றிய தெளிவு இல்லை. எதையாவது சொல்லப்போக, அது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக முடிந்துவிடும் அபாயம் உள்ளதே என்ற பயம்.

வைகோ, நெடுமாறன், திருமாவளவன் ஆகியோருக்கு இந்தப் பயம் கிடையாது. அவர்களுக்கு மட்டும்தான் இந்தப் பயம் கிடையாது. ராமதாஸும் தெளிவாக எதையும் வெளியே சொல்லாவிட்டாலும் புலிகளுக்கு ஆதரவு என்ற நிலையை எடுப்பவர்தான்.

இடதுசாரிகளை எடுத்துக்கொள்வோம். அவர்கள் இலங்கைப் பிரச்னையில் உருப்படியாக ஒன்றையுமே முன்வைத்ததில்லை. இப்போது மத்திய அரசுக்குக் கொடுத்த ஆதரவை விலக்கிக்கொண்டு, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான விஷயத்தில் தோல்வியடைந்தபிறகு, திடீரென தமிழ்நாட்டில் இலங்கைப் பிரச்னையைக் கையில் எடுத்துள்ளனர்.

வைகோ, ராமதாஸ், திருமாவளவன் மட்டும் இலங்கைப் பிரச்னையைப் பற்றி பேசிவந்திருந்தால், கருணாநிதி முன்போலவே ஒன்றும் செய்யாமல் ஒரு கவிதை எழுதி, கண்ணைத் துடைத்துக்கொண்டிருப்பார்.

ஆனால் இப்போது தேர்தல் வரப்போகிறது. ஜெயலலிதாதவிர அனைத்துக் கட்சியினரும் இலங்கை விஷயத்தைக் கையில் எடுக்க, தானும் ஏதாவது செய்தாகவேண்டும் என்று கடும் நெருக்கடி. உடனே ஏவு அஸ்திரத்தை. ராஜினாமா செய்வோம். பட்டினிப் போராட்டம். மனித சங்கிலிப் போராட்டம்.

ஏதோ இவையெல்லாம் நடந்தால் இலங்கை அரசு தமிழ் மக்கள்மீதான அடக்குமுறையை நிறுத்திவிடும்; அல்லது இந்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்தி இவற்றைச் சாதித்துவிடும் என்பது போல பாவ்லா.

**

பிரச்னையை வேறுவிதமாக அலசவேண்டும்.

1. இலங்கையில் புலிகள் என்ற குழு இருக்கும்வரை, அவர்களும் போரை ஆதரிக்கும்வரை, இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நடந்தபடிதான் இருக்கும்.
2. போர் என்று நடந்தால், சாதாரணமாகவே அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவர். அத்துடன் சிங்கள் வெறியாட்டமும் சேர்ந்துகொண்டால், அதிகம் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவர்.

எனவே புலிகள் பற்றிப் பேசாமல், தமிழர்கள் மீதான தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள், உணவு-உடை கிடைக்காமை, அகதிகள் பிரச்னை போன்ற எதைப் பற்றியும் தனியாகப் பேசமுடியாது.

மேலே சொன்ன சில தலைவர்களின் கீழ் இருக்கும் தமிழகக் கட்சிகள், நேரடியாகப் புலிகளை ஆதரிக்கக்கூடியவை. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக புலிகளை எதிர்க்கும் கட்சி. தமிழக காங்கிரஸ் தவிர பிற மாநில காங்கிரஸ் கட்சியினர் புலிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. தமிழக காங்கிரஸுக்கு சோனியா என்ன சொல்வாரோ என்று இன்றுவரை தெரியவில்லை.

திமுக, தெளிவாக புலிகளைப் பற்றிய கருத்தை முன்வைக்கவில்லை. நேற்று முளைத்த தேமுதிகவும் தெளிவாக எதையும் சொல்லவில்லை.

இதனால்தான் விடுதலைப் புலிகளுக்கு முழுமையான ஆதரவு தமிழகத்தில் இல்லை. தமிழகத்திலேயே முழுமையான ஆதரவு இல்லாதபோது, இந்திய அரசின் கருத்தை ஒரு பக்கம் செலுத்துவது எளிதல்ல.

**

1. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போரில், இந்திய அரசு எந்தத் தரப்பை ஆதரிக்கவேண்டும்?

2. போர் நிறுத்தத்தை வற்புறுத்த இந்தியாவால் முடியுமா? போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதும், இரு தரப்பினரும் அவற்றை மீறி, தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர். விடுதலைப் புலிகளை வற்புறுத்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்துவரச் செய்ய, இந்திய அரசுத் தரப்பிடம் எந்த நெம்புகோலும் இல்லை. இரு தரப்புக்கும் ஒட்டோ, உறவோ இல்லை.

3. தமிழகத்தில் பல சிறு கட்சிகள் சொல்லும் ‘சுய நிர்ணய உரிமை’, ‘தனித் தமிழ் ஈழம்’ போன்ற கொள்கைகளுக்கு இந்தியாவில் ஒருமித்த ஆதரவு ஏற்படப்போவதில்லை. உலகின் அனைத்து அரசுகளுமே, தம் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையை இப்போதைக்கு வழங்கப்போவதில்லை. இலங்கை அரசு தமிழ் ஈழம் அமைவதைக் கடுமையாக எதிர்க்கும். இந்தியா, தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டு, விடுதலைப் புலிகளை ஆதரித்தாலும், தனித் தமிழ் ஈழம் என்ற நாடு உருவாவதற்குத் தேவையானவற்றை அதனால் செய்ய இயலாது.

4. இணைந்த இலங்கையில், கூட்டாட்சி முறையில், தன்னாட்சி அதிகாரம் பெற்ற தமிழர் மாகாணங்கள் வருவதற்கு விடுதலைப் புலிகள் ஒப்புதல் தருவார்களா என்று தெரியவில்லை. அப்படி ஏதேனும் ஏற்பட்டாலும், சிங்கள வலதுசாரிகள், இந்த முறை செயல்படாமல் இருக்க, வேண்டிய அனைத்தையும் செய்வார்கள். எனவே இப்படி ஒரு இடைக்கால அரசியலமைப்புச் சட்ட மாறுதல் ஏற்பட்டாலும், அதனால் உருப்படியாக இயங்கமுடியாது.

5. முன்னர் விடுதலைப் புலிகள் கை ஓங்கிய நிலையில் இருந்தபோதே, இலங்கை அரசிடம் பல சலுகைகளைப் பெறமுடியவில்லை. இப்போது கை தாழ்ந்த நிலையில் இருக்கும் புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தாலும் அதிகம் பெற்றுத் திரும்ப முடியாது.

6. புலிகளை எடுத்துவிட்டு (அதாவது அழித்துவிட்டு), பிற தமிழர் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியைக் கொண்டுவரலாம் என்று இலங்கை அரசோ, பிறரோ நினைத்தால் அதுவும் நடக்கப்போவதில்லை. அமெரிக்கா தனது முழு பலத்தைக் கொண்டும், அல் காயிதாவை அழிக்கமுடியவில்லை.

**

இந்தியாவும் தமிழகமும் என்ன செய்யலாம்?

1. முதலில் தமிழ் அகதிகள் மறுவாழ்வு. இந்தியாவுக்கு வரும் தமிழ் அகதிகளுக்கு முழுமையான மறுவாழ்வு அளித்தல். அவர்களுக்கு உடனடியாக இந்தியக் குடியுரிமை வழங்கி, பிற இந்தியர்களைப் போல கண்ணியமான வாழ்க்கையை வாழ அனுமதி அளித்தல். அவர்கள் விரும்பும்போது இலங்கை செல்லலாம். இந்தியக் குடியுரிமையைத் துறக்கலாம்.

இதைச் செய்வது மிக எளிது. இதற்கான ஆண்டுச் செலவு சில நூறு கோடி ரூபாய்களுக்கு மேல் ஆகாது. இலவச கலர் டிவிக்கு ஆகும் செலவை விடக் குறைவாகத்தான் இருக்கும் என்பது எனது கணிப்பு.

அவர்களை கேம்ப் என்ற பெயரில் மட்டமான வாழ்விடங்களில் வாழவைத்து, மோசமான உணவைக் கொடுத்து, தேவையான மருத்துவ வசதிகளைச் செய்துதராமல், யாராவது பெரிய தலைவர்கள் தமிழகம் வரும்போதெல்லாம் இவர்களை முகாமை விட்டு வெளியே வராமல் தடுத்து... என்று அவமானப்படுத்துகிறோம்.

தமிழகம் வரும் ஒவ்வொரு அகதிக் குடும்பத்துக்கும் கையோடு குடியுரிமை, ரேஷன் கார்ட், உதவித் தொகை, பள்ளிக்கூடத்தில் அல்லது கல்லுரியில் எந்த வகுப்பிலும் சேர்ந்து படிக்கும் அனுமதி, முடிந்தால் அவரவர் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ப வேலை. இது போதும். அதற்குமேல் அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்வார்கள். இதற்கு மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து சில சட்டங்களை இயற்றவேண்டும்.

கருணாநிதி, ராஜினாமா நாடகத்துக்கு பதில், இதனைச் செய்யலாம்.

2. இலங்கை தொடர்பான ஒருமித்த கருத்து.

ஆயுதப் போராட்டம் நடக்கிறது. இதை இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியா குறைந்தபட்சம் ஒரு நடுநிலை வகிக்கும் நாடாகவாவது இருக்கும் என்ற கொள்கையை எடுக்க வற்புறுத்தலாம். அதற்கு, முதலாவதாக, விடுதலைப் புலிகளால் இந்திய நலனுக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தல் இருக்காது என்பதை முடிவுசெய்துகொள்ளவேண்டும். புலிகளிடமும் இதனை எடுத்துச் சொல்லவேண்டும். ஏதேனும் அச்சுறுத்தல் நிஜமாகவே ஏற்படும் பட்சத்தில், இந்தியா எந்தமாதிரி தனது முடிவை மாற்றிக்கொள்ளும் என்பதையும் தெளிவாக, முன்னதாகவே எடுத்துச் சொல்லவேண்டும்.

இலங்கை அரசுக்கு எந்தவிதமான ராணுவ உதவியையும் இந்தியா வழங்கக்கூடாது. இலங்கையில் இந்தியா எந்தவிதமான முதலீட்டையும் செய்யக்கூடாது. இந்திய தனியார் துறை நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதையும் அரசு ஊக்குவிக்கக்கூடாது.

அதேபோல, இந்திய உளவுத்துறை, பிற துறை அதிகாரிகள், முக்கியமாக அயலுறவுத் துறை அதிகாரிகள், இந்திய அரசு வெளியிட்ட கொள்கைகளை மட்டுமே செயலில் காண்பிக்கவேண்டும். தன்னிச்சையாக, கொள்கைக்கு மாறாக அவர்கள் ஏதேனும் செய்தால், அவர்களை வேலையில் இருந்து உடனடியாக விலக்கவேண்டும்.

இந்த ஒருமித்த கருத்து தமிழகக் கட்சிகள், இந்தியாவின் பிற அரசியல்வாதிகள் ஆகியோரைச் சென்றடைய, தமிழக அரசியல்வாதிகள் - முக்கியமாக திமுக, பிற கட்சிகளைச் சந்தித்துப் பேசவேண்டும். தங்களது நிலையை விளக்கி, அதற்கான ஆதரவை, இந்த வேற்று மாநிலக் கட்சிகளிடம் பெறவேண்டும்.

இந்தியாவின் பிற மாநிலக் கட்சிகளுக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. அதைப்பற்றி அவர்கள் கவலைகொள்ளப் போவதில்லை. ஆனால் அவர்களையும் சேர்த்து இழுத்தால்தான், மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் கொண்டுவரமுடியும். சென்னையில் உண்ணாவிரதம், மனிதச் சங்கிலிப் போராட்டம் போன்றவை எந்தவிதத்திலும் உபயோகமற்ற, அபத்தமான நாடகங்கள். ஊரை ஏமாற்றும் வித்தைகள்.

மாற்றுக் கருத்துகள் எப்போதும் இருக்கும். அதுதான் குடியாட்சி முறை. எனவே தன் கருத்தை முன்வைத்து மாற்றுக்கருத்துகள் கொண்டவர்களது மனத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

3. வன்முறையை முற்றிலுமாக எதிர்ப்பது நல்லது. புலிகள் வன்முறையைப் பற்றி ஒன்றுமே பேசாமல், எதிர்ப்பக்கத்தை மட்டும் குறை கூறுவது நியாயமல்ல. அமைதி ஒப்பந்தம் அமலில் இருந்த கட்டத்தில்தான் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாமீது கொலைத் தாக்குதல் நடந்தது. அதிலிருந்து தப்பித்த அந்த மனிதர், வெறியுடன், புலிகளை அழிக்காமல் விடமாட்டேன் என்று நடந்துகொள்கிறார். அந்தக்கட்டத்தில்தான் மற்றொரு ராணுவத் தளபதி பரமி குலதுங்கா கொல்லப்பட்டார். இந்த ஒவ்வொரு கொலைக்கும் பதிலாக, ராணுவம், பொதுமக்கள்மீது குண்டெறிந்து தாக்கியது.

போர்க்களத்தில் சண்டைபோடுவது ஒன்று. தற்கொலைப்படை கொண்டு தாக்குவது இந்த நியாயத்தில் சேராது. அதில் தெருவில் செல்லும் அப்பாவி மனிதர்களும் சேர்ந்து கொல்லப்படுவதை மன்னிக்கமுடியாது. இல்லை, இதுவும் நியாயமே என்று புலி ஆதரவாளர்கள் கருதினால், சிங்கள ராணுவம் சகட்டுமேனிக்கு குண்டுவீசுவதை எந்தவித அறவுணர்ச்சியுடனும் கண்டிக்கமுடியாது.

Friday, October 17, 2008

நேரடி துணைக்கோள் வழித் தொலைக்காட்சி (DTH)

Direct to Home Satellite Television என்பதுதான் DTH சேவை என்று அழகாக ஆங்கில எழுத்துகளில் சுருக்கப்பட்டுள்ளது. தமிழில் இதனை ‘நேரடி துணைக்கோள் வழித் தொலைக்காட்சி’ என்று சொல்லவேண்டும்.

இதற்கு முந்தைய கேபிள் (வடம்) வழித் தொலைக்காட்சிச் சேவையில், நமக்கு சேவை வழங்குபவர், பெரிய குவி ஆண்டெனாக்கள்மூலம் சிக்னல்களைப் பெற்று, பல சானல்களை சேர்த்து, கேபிள்மூலம் நம் வீடுகளுக்கு அனுப்பினார். நேரடி துணைக்கோள் சேவையில் நம் வீட்டிலேயே சிறிய குவி ஆண்டெனா இருக்கும். இதன் விட்டம் ஒரு மீட்டருக்குக் குறைவானதாகவே இருக்கும்.

இந்தச் சேவையை வழங்கும் நிறுவனம் ஓர் இணைச்சுற்று செயற்கைக்கோள் (Geo-stationary Satellite) வழியாக சிக்னல்களை அனுப்பும். இந்த சிக்னல்களை நம் வீட்டில் உள்ள சிறிய ஆண்டெனா பெற்று, தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைக்கப்பட்டுள்ள செட்-டாப் பாக்ஸ் என்று சொல்லப்படும் கருவிக்கு அனுப்பும்.

இந்த செட்-டாப் பாக்ஸ் கருவி, சிக்னல்களைப் பிய்த்து எடுத்து, என்கிரிப்ட் செய்து வருபவற்றை (அதற்கான அனுமதி இருந்தால்) டி-கிரிப்ட் செய்து, நசுக்கி அனுப்பப்படும் சிக்னல்களை விரிவாக்கி (Mpeg uncompression), தொலைக்காட்சிப் பெட்டிக்கு அனுப்பும்.

இந்த நேரடித் துணைக்கோள் சேவையில் பல வசதி வாய்ப்புகள் விரைவில் கிடைக்கும். (இவற்றில் பல, பிற நாடுகளில் ஏற்கெனவே கிடைக்ககூடியவைதான்.)

1. நேரடித் துணைக்கோள் சேவை வழியாக பிராட்பேண்ட் இணைய இணைப்பைத் தரலாம்.

2. நல்ல இருவழிப் பாதை கிடைப்பதால், வீட்டில் இருந்தபடியே பொருள்களை வாங்குதல், டிக்கெட் பதிவுசெய்தல் போன்றவற்றை கம்ப்யூட்டர் உதவி நாடாமல், தொலைக்காட்சி கொண்டே செய்யமுடியும்.

3. மழை பெய்து, கேபிள் அறுந்து படம் தெரியாமல் கழுத்தை அறுக்காது. நமக்கு கேபிள் சேவை அளிப்பவரது அலுவலகத்தில் மின்சாரம் போய் நம்மை பாதிப்பது நடக்காது. வீடு மாற்றும்போது இந்தியா முழுமைக்கும் கையோடு கொண்டுபோகலாம்.

4. Narrow-casting, Personal-casting போன்றவற்றை அறிமுகப்படுத்தலாம். மிகச்சில வீடுகள் மட்டுமே பெற விரும்பும் சில சானல்களை இந்த மேடையின்வழியாக அறிமுகப்படுத்தமுடியும். இதனைக் கொண்டு பல புதுமையான சேவைகளைப் புகுத்தமுடியும்.
(அ) உதாரணத்துக்கு pay-per-view என்ற வழியில், புது சினிமாப் படங்களை, படம் வந்த ஓரிரு மாதங்களுக்குள்ளாக, ரூ. 100 அல்லது அதற்கு அதிகம் என்ற கட்டணத்தில் காண்பிக்கமுடியும்.
(ஆ) பிரீமியம் கட்டணத்தில் ஒரு சானலில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐஐடி கோச்சிங் போன்றவற்றைச் சொல்லித்தரமுடியும்.

5. பிராட்பேண்ட் சானலுக்கு அதிக அகலத்தை எடுத்துக்கொண்டால், முழுக்க முழுக்க ஸ்ட்ரீமிங் வழியிலான ஒளியோடைகளைத் தரமுடியும்.

6. மேலே சொன்ன அனைத்துக்குமான கட்டணங்களை செட்-டாப் பாக்ஸில் உள்ள ஒரு கடனட்டை வருடியின் வழியாகவே கட்டிவிடலாம்.

7. ஒரு சானலில் ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது அந்த நிகழ்ச்சி தொடர்பான அனைத்து விவரங்களையும் எழுத்து வடிவில் படிக்க, சேவை வழங்குனர்கள் வசதிகளை ஏற்படுத்தித்தரமுடியும். ஒரு கிரிக்கெட் மேட்சின்போது, ஸ்கோர்கார்டை நாம் விரும்பும்போதெல்லாம் பார்க்கமுடியும். வீடியோ சாளரத்தைச் சிறிதாக்கி எழுத்துகளைப் படித்துவிட்டு, மீண்டும் வீடியோவைப் பெரிதாக்கிக்கொள்ளலாம். இதேபோல சினிமாப் பாடல் ஒன்று ஓடும்போது, அதன் வரிகளை கீழே நாமே பார்க்குமாறு செய்துகொள்ளலாம். இவை அனைத்துக்கும் தேவையான ‘கண்டெண்ட்’ சேவை வழங்குனரால் கொடுக்கப்படவேண்டும்.

8. Personal Digital Recorder எனப்படும் சேவையை இரண்டு இந்திய சேவை வழங்கு நிறுவனங்கள் தரப்போவதாகச் சொல்கிறார்கள். கிரிக்கெட் ஆட்டம் நடக்கும்போது ஒரு நல்ல திரைப்படமும் காட்டப்பட்டால், ஒன்றைப் பார்த்துக்கொண்டு, மற்றதை ரெகார்ட் செய்துகொள்ளலாம். பிரகு மெதுவாக, விளம்பரங்களைத் தள்ளிவிட்டு, விரும்பியதை மட்டும் பார்க்கலாம். நாம் வீட்டில் இல்லாதபோது வரும் ஒரு நிகழ்ச்சியை ரெகார்ட் செய்யுமாறு முன்கூட்டியே செட்-டாப் பாக்ஸிடம் சொல்லிவிட்டுச் செல்லலாம்.

**

இப்போது இந்தியாவில் கீழ்க்கண்டவர்கள் இந்த சேவையை அளிக்கிறார்கள்.

1. தூரதர்ஷன் (அனைத்துமே இலவச சானல்கள். மாதக்கட்டணம் கிடையாது.)
2. ஜீ நிறுவனத்தின் டிஷ்
3. டாடா ஸ்கை
4. சன் டி.டி.எச்
5. புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஏர்டெல் டி.டி.எச்
6. விரைவில் தொடங்க உள்ள அனில் அம்பானியின் பிக் டி.டி.எச் சேவை

**

இந்தத் துறையில் உலக அள்வில் முன்னோடியாக இருப்பது ரூப்பர்ட் மர்டாக்கின் நியூஸ் கார்ப், அதன் பல்வேறு நாடுகளில் தரும் சேவை. மர்டாக்கின் பி-ஸ்கை-பி என்ற பிரிட்டன் நாட்டுச் சேவை உலகில் முன்னோடி என்று சொல்லலாம். அமெரிக்காவில் டிரெக்-டிவி, எக்கோஸ்டார் ஆகிய இரு நிறுவனங்கள் இந்தச் சேவையை அளிக்கின்றன. மர்டாக் மிகவும் விரும்பினாலும் டிரெக்-டிவியை கையகப்படுத்த முடியவில்லை. அவரது கைக்கு வந்த நிறுவனம், மீண்டும் கையை விட்டு நழுவியுள்ளது. இந்தியாவின் டாடா-ஸ்கை அவருடையதே.

**

இப்போது என் வீட்டில் SCV-யின் கேபிள் வழி செட்-டாப் பாக்ஸ் சேவை உள்ளது. இந்த வருடத்துக்குள் ஏர்டெல் சேவையை, வேண்டிய சானல்களைக் கொண்டிருந்தால், வாங்கலாம் என்று முடிவுசெய்துள்ளேன்.

Sunday, October 12, 2008

ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?

நேற்று, மக்கள் தொலைக்காட்சியிலிருந்து “ஸ்பெக்ட்ரம்னா என்ன, 2G, 3Gனா என்ன” என்று எளிதாக விளக்குங்கள் என்று கேட்டார்கள். பேசியதை ரெகார்ட் செய்துகொண்டு போனார்கள். அதை நேற்றோ, இன்றோ ஒளிபரப்பினார்களா என்று தெரியவில்லை.

தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜாமீது சில குற்றச்சாட்டுகள். அதற்கு அவர் கொடுத்த தன்னிலை விளக்கம். தினமணியில் வெளியான சில கடிதங்கள். பொதுவாக நில ஊழல், கோட்டா/பெர்மிட் ஊழல் என்றால் என்ன என்று நம் மக்களுக்குத் தெளிவாகப் புரியும். ஆனால் ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என்று தெரியாததால் தயாநிதி மாறன் என்ன சொல்கிறார், ராஜா என்ன சொல்கிறார் என்று குழப்பம். முடிந்தவரை இங்கே விளக்குகிறேன்.

மின்சாரம் உருவாக்கும் மின்புலம் (electric field), காந்தம் உருவாக்கும் காந்தப் புலம் (magnetic field) ஆகியவற்றுக்கு இடையேயான உறவைக் கவனித்து, அவற்றை கோட்பாடு ரீதியாக ஒருங்கிணைத்து மின்காந்தப் புலம் (electromagnetic field) என்பதை முன்வைத்தார் பிரிட்டிஷ் விஞ்ஞானி, ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல். அதிலிருந்து மின்காந்த அலைகள் என்று ஏதேனும் இருக்கவேண்டும் என்று மேக்ஸ்வெல் சொன்னார். பின்னர் மேக்ஸ்வெல், ஒளி அலைகளும் மின்காந்த அலைகள்தான் என்ற கருத்தை வெளியிட்டார்.

நம் கண்ணில் படும் பல்வேறு நிறங்களைக் கொண்ட ஒளி அலைகள் யாவுமே மின்காந்த அலைகள்தாம். சூரிய ஒளி (வெள்ளை), ஒரு முக்கோணப் படிகம் வழியாகச் செலுத்தப்படும்போது 7 வெவ்வேறு வண்ணங்களாகப் பிரியும். அதே வண்ணங்கள் வானவில்லில் காணப்படும். இந்த ஒவ்வொரு வண்ண ஒளி அலையும் மின்காந்த அலைதான். இவை அனைத்தும் ஒன்றாகச் சேரும்போது வண்னங்கள் மறைந்து, வெளிர் ஒளி தென்படுகிறது.

ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாத பல மின்காந்த அலைகள் உள்ளன. எலும்பு முறிவைக் காண படம் எடுக்கப் பயன்படும் எக்ஸ் கதிர்கள், நீரில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லப் பயன்படும் புற ஊதாக் கதிர்கள், இரவில் பொருள்களைக் காணப் பயன்படுத்தும் அகச் சிவப்புக் கதிர்களை வெளியிடும் சிறப்புக் கண்ணாடி, நம் வீட்டில் மைக்ரோவேவ் அடுப்பில் வெளிப்படும் கதிர்கள். இவை அனைத்தும் மின்காந்த அலைகளே.

இவைதவிர, நாம் கேட்கும் வானொலி ஒலிபரப்பு மிதந்துவரும் அலைகள், தூரதர்ஷன் படங்கள் மிதந்து வரும் அலைகள், செல்பேசிச் சேவை அலைகள் என்று அனைத்தும் மின்காந்த அலைகள்தாம்.

இப்படி எல்லாமே மின்காந்த அலைகள் என்கிறோம். அதே நேரம் அவை வெவ்வேறானவை என்றும் சொல்கிறோம். இவற்றுக்கு இடையேயான ஒற்றுமை, வேற்றுமை யாவை?

இவை அனைத்துக்குமான ஒற்றுமை, இவை பரவும் வேகம். அவை அனைத்துமே ஒளியின் வேகமான c = 3 x 108 m/s என்ற வேகத்தில் செல்லக்கூடியவை.

இந்த அலைகள் ஒவ்வொன்றுக்கும் பிரத்யேகமாக இரண்டு பண்புகள் உள்ளன. அவை அதிர்வெண் எனப்படும் frequency (f); அலை நீளம் எனப்படும் wavelength (l). இந்த இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டவையும்கூட. ஒரு மின்காந்த அலையின் அதிர்வெண்ணையும் அலை நீளத்தையும் பெருக்கினால், மின்காந்த அலைகளின் வேகமான c = 3 x 108 m/s கிடைத்துவிடும்.

எனவே மின்காந்த அலையின் அதிர்வெண் அதிகரித்தால், அதன் அலை நீலம் குறையும். அலை நீளம் அதிகரித்தால் அதிர்வெண் குறைவாக இருக்கும்.

சரி, இந்த அதிர்வெண் என்றால் என்ன?

நம் வீட்டில் உள்ள தாத்தா காலத்து சுவர்க் கடிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள பெண்டுலம் விநாடிக்கு ஒரு முறை இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் போய்விட்டு வரும். கடிகாரம் சரியாக இயங்குகிறது என்றால் சரியாக ஒரு விநாடிக்கு ஒருமுறை மட்டும்தான் இது இப்படி ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்குச் சென்று வரும். பெண்டுலம் விநாடிக்கு ஒருமுறை அதிர்கிறது என்று சொல்லலாம். அப்படியானால் இதன் அதிர்வெண் = 1. இதற்கு அலகாக ஹெர்ட்ஸ் என்பதைச் சொல்கிறோம். ஹெய்ன்ரிச் ஹெர்ட்ஸ் என்ற ஜெர்மன் விஞ்ஞானிதான், மேக்ஸ்வெல் சுட்டிக்காட்டிய மின்காந்த அலைகள் இருப்பதைச் சோதனை ரீதியாகக் கண்டுபிடிக்க ஒரு கருவியை உருவாக்கினார்.

இப்போது தாத்தா காலத்து கடிகாரத்தை எடுத்து அதில் உள்ள ஸ்பிரிங், பிற பாகங்களை உல்ட்டா செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது ஒரு விநாடிக்கு பெண்டுலம் இருமுறை ஆடுகிறது. இப்போது அதன் அதிர்வெண் = 2 ஹெர்ட்ஸ். இதே, விநாடிக்கு நூறு முறை ஆடினால், அதிர்வெண் = 100 ஹெர்ட்ஸ்.

கிராம், கிலோ கிராம் என்பதைப் போல, பைட், கிலோ பைட், மெகா பைட், கிகா பைட் போல, இங்கும் உண்டு.

1000 ஹெர்ட்ஸ் = 1 கிலோ ஹெர்ட்ஸ்,
1,000,000 ஹெர்ட்ஸ் = 1000 கிலோ ஹெர்ட்ஸ் = 1 மெகா ஹெர்ட்ஸ்
1000 மெகா ஹெர்ட்ஸ் = 1 கிகா ஹெர்ட்ஸ்
1000 கிகா ஹெர்ட்ஸ் = 1 டெரா ஹெர்ட்ஸ்.

நாம் கண்ணால் காணும் ஒளிக்கதிர்களுக்கு, அதிர்வெண் 430 - 750 டெரா ஹெர்ட்ஸ் என்பதற்குள் இருக்கும். இதில் 750 டெரா ஹெர்ட்ஸ் என்பது ஊதா நிற ஒளி. 430 டெரா ஹெர்ட்ஸ் என்பது சிவப்பு நிறம். புற ஊதாக் கதிர்கள் என்றால், 750 டெரா ஹெர்ட்ஸை விட அதிகம் அதிர்வெண் கொண்ட அலைகள். அகச் சிவப்புக் கதிர்கள் என்றால் 430 டெரா ஹெர்ட்ஸை விடக் குறைந்த அதிர்வெண் கொண்ட அலைகள்.

நாம் அதிகம் அறிந்த அலைகள், கிலோ ஹெர்ட்ஸ், மெகா ஹெர்ட்ஸ் என்பதில் இருக்கும். வானொலி இயங்கும் அலைவரிசை இங்குதான் உள்ளது.

பண்பலை வானொலி (FM) பிரபலமாவதற்கு முன்பிருந்தே, AM வானொலி இயங்கிவருகிறது. AM என்றால் Amplitude Modulation. அதாவது ஒரு குறிப்பிட்ட மின்காந்த அலையை எடுத்துக்கொண்டு (Carrier Frequency - ஊர்தி அதிர்வெண்), அதன்மீது நாம் பேசுவது, பாடுவது போன்ற ஒலி அலைகளின் வீச்சை ஏற்றி, கிடைக்கும் புதிய அலையை அனுப்பும் கருவி மூலம் அனுப்புவது. Frequency Modulation என்றால், அலை வீச்சுக்கு பதிலாக, ஒலி அலையின் அதிர்வெண் மாற்றத்தை, ஊர்தி அதிர்வெண்ணுடன் சேர்த்து அனுப்புவது. (இதைப்பற்றி பின்னர் தனியாக எழுதவேண்டும்.)

இங்கே கவனத்தில் கொள்ளவேண்டியது, AM வானொலி என்றால் அதில் மீடியம் வேவ் என்று சொல்லப்படுவது இயங்குவது 520 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 1610 கிலோ ஹெர்ட்ஸ் வரையிலானது. இந்தப் பகுதியை மீடியம் வேவ் ஸ்பெக்ட்ரம் என்று சொல்லலாம். அதாவது ஏம்.எம் வானொலியின் மீடியம் வேவ் அலைகளின் அலைப் பரவல்.

இதே பண்பலை வானொலி என்றால் 87.5 மெகா ஹெர்ட்ஸ் தொடங்கி 108 மெகா ஹெர்ட்ஸ் வரையிலானவை.

ஏ.எம் வானொலி என்றால் அடுத்தடுத்த நிலையங்களுக்கு இடையில் 9 கிலோ ஹெர்ட்ஸ் அல்லது 10 கிலோ ஹெர்ட்ஸ் இடைவெளி வேண்டும். அப்போதுதான் ஒரு நிலையத்தின் நிகழ்ச்சிகளை, பிற நிலையங்களின் குறுக்கீடு இல்லாமல் கேட்கமுடியும். பண்பலை வானொலி என்றால், அடுத்தடுத்த நிலையங்களுக்கு இடையில் குறைந்தது 0.8 மெகா ஹெர்ட்ஸ் இடைவெளி இருக்கவேண்டும். சென்னையில் அடுத்தடுத்துள்ள வானொலிகளின் அலைவரிசையை கவனியுங்கள். 0.8 என்ற வித்தியாசம் இருக்கும்.

சரி, ஒரு வானொலி நிலையம் எவ்வளவு தொலைவுக்கு ஒலிபரப்பமுடியும்? மீடியம் வேவ் ஏ.எம் என்றால் 100-200 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். இதிலேயே ஷார்ட் வேவ் என்ற முறை மூலம் சில ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை செல்லலாம். அப்படித்தான் அமெரிக்க, ஆஸ்திரேலிய, பிரிட்டிஷ் வானொலிகளை இந்தியாவில் கேட்கமுடியும்.

பண்பலை என்றால், அவை ஒரே ஊருக்குள் அடங்கிவிடுபவை. அதிகபட்சம் 20-30 கிலோமீட்டர் தூரத்துக்குள் நின்றுவிடும். ஆனால், ஏ.எம் வானொலியைவிடத் துல்லியமாக, ஸ்டீரியோ திறனுடன், கொரமுர சத்தம் இல்லாமல் தெளிவாகக் கேட்கும்.

அப்படியானால் 87.5-ல் ஆரம்பித்து 108-க்குள் எத்தனை பண்பலை நிலையங்கள் இருக்கமுடியும்? 25 நிலையங்கள்தான். உடனேயே போட்டி ஆரம்பித்துவிடுகிறது அல்லவா?

யாருக்கு இந்த நிலையங்களை அளிப்பது? அதற்குத்தான் ஏலம் போடுகிறார்கள். யார் அதிக ஏலத்துக்கு எடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் கொடுக்கப்படும்.

*

சரி, இதை மனத்தில் வைத்துக்கொண்டு, இப்பொது செல்பேசிச் சேவைக்கு வருவோம். இந்தச் சேவைகள், 800, 900, 1800, 1900 மெகா ஹெர்ட்சில் ஏதோ ஒன்றில் இயங்கும். பல்வேறு நாடுகளில் வெவ்வேறு அதிர்வெண்ணில் இருக்கும். இந்தியாவில் 900, 1800 என்ற இரண்டு அதிர்வெண்களில் செல்பேசிச் சேவைகள் இயங்குகின்றன.

1800 மெகா ஹெர்ட்ஸில் செல்பேசிச் சேவை இயங்குகிறது என்றால் என்ன பொருள்? உண்மையில், இந்த ஊர்தி அதிர்வெண்ணை அடிப்படையாகக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட அலைப் பரவலை (spectrum) இந்தச் சேவைக்காக ஒதுக்குவார்கள். வானொலி போல இல்லாமல், செல்பேசிச் சேவைக்கு, ஒவ்வொரு நிறுவனத்துக்கு இரண்டு பரவல் தேவை. ஒன்று, செல்பேசிச் சேவையின் மையம், செல்பேசி கோபுரங்களோடு தொடர்பு கொள்ள. மற்றொன்று, கோபுரங்கள் தனிப்பட்ட செல்பேசிகளுடன் தொடர்பு கொள்ள. அதாவது,

1710 - 1785 MHz அப்லிங்க் (75 மெகா ஹெர்ட்ஸ் பரவல்)
1805 - 1880 MHz டவுன்லிங்க் (75 மெகா ஹெர்ட்ஸ் பரவல்)

இதற்குள், எத்தனை செல்பேசி நிறுவனங்களை அனுமதிக்கமுடியும்? தகவல் தொடர்பு அமைச்சகம், ஒரு GSM நிறுவனத்துக்கு 10 மெகா ஹெர்ட்ஸ் பரவலும், ஒரு CDMA நிறுவனத்துக்கு 5 மெகா ஹெர்ட்ஸ் பரவலும் தரலாம் என்று அதற்குமேல் தரப்படாது என்றும் சொல்கிறது. ஆக, சுமார் 10 நிறுவனங்கள்தான் அதிகபட்சம் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் இருக்கமுடியும்.

900, 1800 ஆகிய இரண்டையும் சேர்த்தால், இதைப்போல இரண்டு மடங்கு இருக்கமுடியும்.

இங்கும், போட்டிகள் அதிகமாக இருந்தால், ஏல முறையில் கொடுத்தால்தான் அரசுக்கு அதிகமாகப் பணம் கிடைக்கும்.

*

சரி, இந்த 2G, 3G என்றால் என்ன?

முதலில் செல்பேசி அனலாக் என்ற முறையில் இயங்கியது. இதனை முதலாம் தலைமுறை - 1st Generation - எனலாம். இதைத்தான் 1G என்கிறோம். அடுத்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இயங்கும் இப்போதைய செல்பேசிச் சேவை - GSM (TDMA), CDMA என்ற இரு வழிகளிலும் இயங்குவது. இது இரண்டாம் தலைமுறை - 2G. இதில் குரலை அனுப்புவது எளிது. ஆனால் மக்களது விருப்பம், படங்கள், ஒலி, ஒளித் துண்டுகளை அனுப்புவது என்று இருப்பதால், அடுத்தக்கட்ட நுட்பம் உள்ளே வந்தது. இதுதான் 3G எனப்படும் மூன்றாம் தலைமுறை.

3G எந்த அதிர்வெண்ணில் இயங்கும்? இது 2100 மெகா ஹெர்ட்ஸ் என்ற ஊர்தி அதிர்வெண்ணில் இயங்கும் என்று வரையறுத்துள்ளாகள்.

அப்லிங்க்: 1920-1980 (60 மெகா ஹெர்ட்ஸ் பரவல்)
டவுன்லிங்க்: 2110-2170 (60 மெகா ஹெர்ட்ஸ் பரவல்)

அடுத்து, இந்தச் சேவையை வழங்க விரும்பும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் எவ்வளவு மெகா ஹெர்ட்ஸ் பரவலைத் தருவது; எனவே எவ்வளவு நிறுவனங்களை அனுமதிப்பது என்ற கேள்வி எழுகிறது. மேலும் பல கேள்விகளும் எழுகின்றன.

1. ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களுக்கு, இந்த அதிர்வெண் பரவலை சமமாகப் பிரித்துக் கொடுத்துவிடலாமா?
2. இலவசமாகவா? ஆண்டுக்கு இத்தனை என்ற கட்டணமாகவா? அல்லது வருமானப் பங்கு (revenue sharing) என்ற முறையிலா?
3. புது ஏலத்துக்கு விட்டு, புதிதாக யார் வேண்டுமானாலும் ஏலத்தில் போட்டியிடலாம் என்று சொல்வதா?
4. அப்படி ஏலம் விடுவதால் அரசுக்குப் பணம் நிறையக் கிடைத்தாலும், இதனால், இப்படி ஏலம் எடுத்த நிறுவனங்கள் போண்டியாகும் அபாயமும் உள்ளது. அப்போது என்ன செய்வது?
5. அரசின் நிறுவனமான BSNL-ஐ எப்படி எடுத்துக்கொள்வது? அவர்களைப் பணம் கட்டச் சொல்லப்போகிறோமோ? அப்படியானால் அவர்களும் ஏலத்தில் போட்டியிடுவதா? அல்லது ஏலத்தில் ஒர் இடத்தைக் குறைவாக வைத்து, ஏலம் எடுத்தவர்களில் குறைவான தொகை என்னவோ அதையே BSNL-ம் கொடுக்கும் என்று வைத்துக்கொள்ளலாமா? அல்லது தினமணியில் சொல்வதைப் போல, அதிகபட்ச தொகை என்னவோ அதை BSNL செலுத்தவேண்டும் என்று சொல்வதா?

மேலும் பல கேள்விகளும் உண்டு. இதில் நாட்டு மக்களுக்கு எது நன்மை, எது தீமை என்று ஒரு பக்கம் இருப்பதுபோல, பதவியில் இருக்கும் அரசியல்வாதிக்கு எது நன்மை, எது தீமை என்பதும் உண்டு.

ஸ்பெக்ட்ரம் (அலைப் பரவல்) என்பது மிக முக்கியமான வளம். கனிம வளங்களைப் போல, நிலத்தைப் போல, இதுவும் மிக முக்கியமானது. இதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் எப்பொதுமே கொள்கைக் குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும்.

எனவேதான் கொள்கை முடிவுகளை மிகவும் வெளிப்படையாகச் செய்யவேண்டும்.

அதில்தான் நமது அரசு தோல்வியுறுகிறது. மிகவும் ரகசியமாகப் பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கேபினெட்டில் உள்ள பல அமைச்சர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் எதுவுமே கிடையாது. அங்கேயே அப்படி என்றால், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாடு சுத்தம்! அதற்கு மேலாக, நமக்கோ நமது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் எல்லாம் பொதுவாகவே திருடர்கள் என்று நாம் நம்புகிறோம். அதற்கு ஏற்றார்போல அவர்களது சொத்துக்களின் விவரம் (அதாவது வெளியே தெரிந்தவை) நம்மை பிரமிக்கவைக்கிறது.

இப்போது, ஸ்பெக்ட்ரம் பற்றி வெகுஜனப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பேசப்படுவதே ஆரோக்கியமான விஷயம்.

Saturday, October 04, 2008

தலப்பாவு (തലപ്പാവ്)

சென்ற வாரம் திருவனந்தபுரத்தில் நல்ல படம் ஒன்றைப் பார்க்கத் தேடி அலைந்தபோது மேற்கண்ட படத்துக்கு அகஸ்மாத்தாகப் போனோம். இந்த பத்மநாபா தியேட்டர்தான் ‘தசாவதாரம்’ படத்தை மலையாளிகளுக்குக் காண்பித்துப் புண்ணியம் தேடிக்கொண்டது. சுற்றி அங்கும் இங்கும் சக்கரக்கட்டி cho chweet முதல் இன்னபிற தமிழக அபத்த இறக்குமதிகள்.

மலையாளிகள் தமிழை வளர்த்தால் நாம் பதிலுக்கு மலையாளத்தை வளர்க்கவேண்டும் அல்லவா? என்ன படம் என்று தெரியாமலேயே தலப்பாவு பார்க்க வந்து உட்கார்ந்தோம். பிரமிக்க வைத்தது.

முதலில் கதை. கதை என்பதைவிட நிஜம், ஒரு சில ஒட்டுவேலைகளுடன் படமாக வந்துள்ளது என்று சொல்லவேண்டும்.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கன்னட ஜமீந்தார்களிடம் மாட்டிக்கொண்டு ஏழை மக்களும் பழங்குடியினரும் திண்டாடுகிறார்கள். ஆட்சியாளர்கள், காவல் அதிகாரிகளின் உதவியோடு, பழங்குடியினர் நிலத்தை அபகரிப்பது, ஏழைப் பெண்களை அனுபவித்துவிட்டு அவர்களது கணவர்களை ‘பொய்யாக’ தூக்கில் தொங்கவிடுவது என்று ஜமீந்தார்களின் கொட்டம். அதிகாரிகளுக்கு விருந்து, பெண்கள் என்று உபசாரம் வேறு.

இதனால் நக்சலைட்டுகள் உருவாகிறார்கள். அதில் ஒருவர் ஜமீந்தார் ஒருவரைக் கொலை செய்கிறார். அந்த நக்சலைட் கைது செய்யப்பட்டு போலி என்கவுண்டரில் மரத்தில் கட்டிப் போடப்பட்டு, ஒரு காவலரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் காவலர், அந்த நக்சலைட்டைத் தான்தான் கொன்றேன் என்று வாக்குமூலம் கொடுக்கிறார்.

இது நிஜமாக நடந்த சம்பவம். ராமச்சந்திரன் நாயர் என்ற போலிஸ் கான்ஸ்டபிள் “ஞான் ஜீவிச்சு அந்திண்டே தெளிவு” என்ற புத்தகத்தில் முட்டத்து வர்கீஸ் என்ற நக்சலைட்டை 1970களில் சுட்டுக் கொன்றதை எழுதியுள்ளார். அந்தப் பின்னணியில் இந்தப் படம் வருகிறது. (இந்தப் புத்தகம் “நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம்” என்ற பெயரில் தமிழல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)

***

ஆலப்புழை, வயநாடு என்று இரண்டே லொகேஷன். கான்ஸ்டபிளின் வாழ்க்கை எளிமையானது. மனைவி, மகன், மகள். கான்ஸ்டபிள் சிறு வயதில் காதல் செய்கிறார். பள்ளிப் பருவத்துக் காதல், காதலி சாரா வேறு ஊர் செல்வதால் தடைபடுகிறது.

வயநாட்டுக்கு மாற்றலாகும் கான்ஸ்டபிள், ஜமீந்தார் வீட்டில் சாராவைச் சந்திக்கிறார். நெற்றியில் ஒற்றைத் திருமண் இட்டிருக்கும் கன்னட பிராமண ஜமீந்தார், சாராமீது ஆசைகொண்டு, அவளை வன்புணர்ந்து, அவளது கணவனை ஒற்றைப் பனைமரத்தின் உச்சியில் தூக்கில் மாட்டிக் கொன்றுவிடுகிறார். வேறு வழியில்லாத சாரா, அதே ஜமீந்தார் வீட்டில் வேலைக்காரியாக, ஜமீந்தாருக்கு வேண்டும்போதெல்லாம் இன்பம் தருபவளாக ஆகிறாள்.

கான்ஸ்டபிள், நக்சலைட் ஜோசஃபையும் எதிர்கொள்கிறார். கான்ஸ்டபிள் எந்த அளவுக்கு பூச்சியோ, ஜோசஃப் அந்த அளவுக்கு கொதித்து எழுபவர். மீன்காரக் கிழவியை ஏற்றிக்கொள்ளாத பஸ் கண்டக்டராகட்டும், தங்களது நிலங்கள் அபகரிக்கப்படும் பழங்குடியினர் சார்பாகப் போராடும்போதாகட்டும், பிரித்வி ராஜின் நடிப்பு அபாரமாக இருக்கிறது.

ஜோசஃபும் தோழர்களும் ஒருமுறை காவல் நிலையத்தைச் சூறையாடி, அங்குள்ள காவலர்களை அடித்துத் தாக்கி, துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு செல்கின்றனர். அங்கே நம் கான்ஸ்டபிள் பயந்து நடுங்கி ஒரு மூலையில் பதுங்கியிருக்கிறார். ஜோசஃப் அவரை மட்டும் பார்த்து நட்போடு சிரித்தபடி செல்கிறார்.

ஒரு நாள், ஜமீந்தார் வீட்டில் உள்ள நிலப் பதிவு ஆவணங்களைத் திருட வந்த நக்சலைட்டுகள், ஜமீந்தாரோடு சண்டைபோட, இறுதியில் ஜோசஃப் ஜமீந்தாரை வெட்டிக் கொல்கிறார். இதனால் காவல்துறை மேலதிகாரிகள் முதலில் சாராவைத் துன்புறுத்தி, பின்னர் அவள்மூலம் ஜோசஃப் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவனைப் பிடித்து இழுத்துவந்து, துன்புறுத்தி, கடைசியில் நம் கான்ஸ்டபிளைக் கொண்டே அவனைச் சுடவைக்கின்றனர். கான்ஸ்டபிளுக்கும் ஜோசஃபுக்கும் இருக்கும் நட்பான உறவின் காரணமாகவே இந்தத் திட்டம்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, கான்ஸ்டபிள் ஆலப்புழை வந்து, குடியில் விழுகிறார். ஒரு மாதிரியான மனப்பிறழ்வுக்கு ஆளாகிறார். ஆனால் உண்மையை வெளியே சொல்வதில்லை. என்னவென்று தெரியாத நிலையில், மனைவி (ரோஹிணி) விவாகரத்து பெற்றுக்கொண்டு தன் குழந்தைகளுடன் தன் தந்தை வீட்டுக்குச் சென்றுவிடுகிறார். வயதான காலகட்டத்தில், கிழ கான்ஸ்டபிளுக்கு நிம்மதி மட்டும் இல்லை. சோக ரசம் ததும்புமாறு, அவரது மனைவி பாம்பு கடித்துச் சாகிறார். கணவரை அருகில் நெருங்கவிடாமல், மாமனார் அடித்துத் துரத்துகிறார். கான்ஸ்டபிளின் மகன் பணத்துக்காக தந்தையை மிரட்டிப் பொறுக்கித்தனம் செய்கிறான். மகள் சில நாள் அன்போடு தந்தையிடம் வசிக்கிறாள். ஆனால் அவள் பாலியல் தொழில் புரிபவள் என்பது தெரிந்து அக்கம்பக்கத்தார் அவளை விரட்டுகின்றனர்.

கான்ஸ்டபிள் தன் ஓய்வு பெற்ற வாழ்க்கைக்குப் பிறகு, தான்தான் ஜோசஃபைக் கொன்றவன் என்பதற்கான வாக்குமூலத்தை ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் வெளிப்படுத்துகிறார்.

கடைசியில் கான்ஸ்டபிள் செத்துப்போகிறார்.

***

படத்தில் ஃபிளாஷ்பேக் என்ற பாணியில் அல்லாமல், பழைய சரடடையும் புதுச்சரடையும் அடுத்தடுத்துக் கொடுத்து கதையை நகர்த்திச் செல்கிறார் இயக்குனர். காலம் மாறுவதை பார்வையாளரால் முதலில் எளிதாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், விரைவிலேயே புரிபடுகிறது. பல இடங்களில் மாய யதார்த்தப் பின்னணியில் இறந்துபோன ஜோசஃப், கான்ஸ்டபிளுக்கு முன் மட்டும் தோன்றி அவரை வழிநடத்துகிறார். இறுதியில், ‘போதும், வா, போகலாம்’ என்று சொல்லும்போதுதான் கான்ஸ்டபிள் இறந்துபோகிறார். அப்போது ஜோசஃப் கையோடு கொண்டுவந்த ஒரு விளக்கு, சாவுக்குப் பிறகு அந்த இடத்தில் கீழே கிடக்கிறது.

நான் TV5Monde-ல் பார்த்த கறுப்பு இரவு படத்துக்குச் சற்றும் குறையாத தரத்தில் உள்ளது இந்தப் படம்.

Friday, October 03, 2008

ஓர் அல்ஜீரிய அகதியின் கதை

நேற்று TV5Monde-ல் அழகான ஒரு படத்தைப் பார்த்தேன். அதன் தலைப்பு இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. நான் பார்க்க ஆரம்பித்தபோது படம் தொடங்கியிருந்தது. SCV-யின் எலெக்ட்ரானிக் டைரெக்டரியின்படி படத்தின் பெயர் “Les Petites mains” என்று போட்டிருந்தது. இது சரியில்லாமலும் இருக்கக்கூடும்.

நான் TV5Monde சானலுக்குப் போனால் அங்கு அல்ஜீரியா பற்றித்தான் படம் போடுவார்கள் போல.

அல்ஜீரியாவிலிருந்து பிரான்சுக்கு வந்து வாழ்க்கையைத் தேடும் அகதி ஒருவரின் கதை. படம் ஆரம்பிக்கும்போது அவருக்கு நல்ல வயதாகிவிட்டது. மனைவி இறந்துவிட்டார். நான்கு குழந்தைகள். அதில் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள். ஒரு பையன் சிறையில் இருக்கிறான். ஆனால் மற்ற பிள்ளைகள், அவன் எங்கேயோ வெளி நாட்டில் இருப்பதாகப் பொய் சொல்லி அவ்வப்போது கிரீட்டிங் கார்டுகளை அனுப்பி வருகிறார்கள். முதல் பெண்ணை, 17 வயதாகும்போதே அல்ஜீரியன் ஒருவனுக்கு மணம் முடித்துக் கொடுக்கிறார்கள். அவளுக்கு நான்கு குழந்தைகள். வெளியே இருக்கும் மகன், டாக்ஸி டிரைவராக இருக்கிறான். கடைசி மகள் (சொஹேலா) டாக்டருக்குப் படித்தவள். இன்னும் மணமாகவில்லை. அவளை பிரெஞ்சு டாக்டர் (கிறித்துவன்) ஒருவன் காதலிக்கிறான்.

சொஹேலாவின் தந்தை சிகரெட் பிடிப்பவர். புற்றுநோய் வந்து இறக்கப்போகிறார். உடனே தாய் நாடு ஞாபகம் வந்து அல்ஜீரியா செல்ல முடிவு செய்கிறார். டிக்கெட் எல்லாம் எடுத்த பிற்பாடு, முதலில் சொஹேலாவிடம் பேசுகிறார். அவளுக்கு மணமாகவில்லை என்பதுதான் அவரது கவலை.

தந்தை அல்ஜீரியா திரும்புவதாகச் சொல்வது சொஹேலாவை பாதிக்கிறது. கடைசியில் கப்பல் ஏறச் செல்லும் தந்தையை ரயிலில் அனுப்பாமல் தானே காரில் அழைத்துக்கொண்டு செல்வதாகச் சொல்கிறாள்.

கதை பெரும்பாலும் அவர்களது கார்ப் பயணத்தில்தான் நகர்கிறது. இளம் அல்ஜீரிய அகதி, எப்படி பிரான்ஸில் வந்து கஷ்டப்பட்டு, ஏழைமையில் தோய்ந்து, அதிலிருந்து மீண்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து, ஓரளவுக்கு வசதிகளைப் பெருக்கிக்கொள்கிறான் என்று தந்தை-மகள் பேச்சில் தெரிய வருகிறது. தனது மகளின் காதலனைப் பார்க்கும் தந்தையால், தன் மகள் அல்ஜீரியனல்லாத ஒருவனைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறாள் என்பதை ஏற்க முடிவதில்லை. ஆனால் அவரே பின்னர் மனம் மாறி, மகளது விருப்பத்தை ஏற்றுக்கொள்கிறார்.

மகளிடம், தன் மனைவிக்குத் தான் பரிசாகக் கொடுத்திருந்த நகைகளை எடுத்துக் கொடுக்கிறார். “உன் மனம் விரும்பியவனுடன் உனக்கு மணம் நடக்கும். உனக்கு நிறைய குழந்தைகள் பிறக்கும். ஆனால் அவர்களுக்கு ‘முகமது’ என்று பெயர் வைப்பது சற்றே அபத்தமாக இருக்கலாம்” என்று கூறிச் சிரிக்கிறார். தனது மகளது வேர்கள் தன்னுடைய வேர்களிலிருந்து வேறுபட்டவை என்பதை நெகிழ்ச்சியுடன் அவர் ஏற்றுக்கொள்வதை இதைவிட அழகாகக் காண்பிக்கமுடியுமா என்று தெரியவில்லை.

தனது மகளிடம் தன் சிறுவயதுக் காதலைப் பற்றிச் சொல்லி, அந்த இடத்துக்கு அழைத்துச் செல்லச் சொல்வதும் நெகிழ்ச்சியானது. காதலியா என்று மகள் கேட்கிறாள். இல்லை, நட்புதான், கல்யாணம் என்றால் அது ஓர் அல்ஜீரியப் பெண்ணுடன்தான் என்று அழுத்தமாக வலியுறுத்துகிறார் தந்தை. அந்தப் பெண்ணும் வியட்நாமிலிருந்து வந்த ஓர் அகதி. ஹோட்டலில் பணியாற்றுபவள். மிச்சம் மீதி உணவுகளை எடுத்துவைத்து, இந்த அல்ஜீரியனுக்குக் கொடுத்தவள்.

***

மூப்பு, அதனால் விளையும் தனிமை, உடல் அவஸ்தை, தன் தாய் நாட்டுக்குச் சென்று உயிரைவிடத் துடிக்கும் முரட்டுத்தனம், பிள்ளைகள்மீது பாசம், ஆனால் அந்தப் பாசத்தாலும் சில முரட்டுத்தனமான பழக்கவழக்கங்களாலும் சிறு வயதில் அவர்களுக்கே பாதகங்களை ஏற்படுத்துதல், ஆனால் வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளுக்காக முற்றிலுமாகத் தங்கள் உணர்வுகளை விட்டுக்கொடுத்தல்... இப்படி எல்லாவிதத்திலும் பார்க்கும்போது அந்தப் படத்தின் தந்தை என் தந்தையை நினைவுபடுத்துகிறார். நம் எல்லோரின் தந்தையாகவும் அவர் இருக்கக்கூடும்.

இதுதான் நல்ல சினிமாவின் சாதனையோ?

***

கடைசி நாளன்று, தன் மகள் படுத்துத் தூங்கும்போது அவசர அவசரமாக அவளது படுக்கையில் ஒரு கடிதத்தை விட்டுவிட்டு, தன் தம்பியைக் கூட்டிக்கொண்டு, கப்பல் இருக்கும் துறைமுகத்துக்கு வருகிறார். தூங்கி எழுந்திருக்கும் மகள், அவசர அவசரமாக உடையை அள்ளி வாரிக் கட்டிக்கொண்டு, தந்தை கிளம்புவதைப் பார்க்க ஓடிவருவதற்குள், கப்பல் புறப்பட்டிருக்கிறது. பெண்ணின் கண்களில் சோகமும் கண்ணீரும். அங்கேயே ஃப்ரீஸ் செய்து ஒரு மெல்லிய சோகம் கலந்த பாடல் பின்னணியில் இசைக்க, கிரெடிட்ஸ்.

படத்தில் பின்னணி இசை என்று ஒன்றுமே கிடையாது. ஆனால் அதற்கான தேவையும் இல்லை. நடுவில் ஒரு பாடலும் ஆடலும் - முழுவதும் “கனவு சீனாக”. கிழவராக நடித்தவர் அப்படியே வாழ்கிறார். அவரது கை நடுங்குதலும், அவரது முக பாவங்களும், அவரது பேச்சும் அமர்க்களம்.

எப்படி இவர்களால் சாதாரணமான சின்னஞ்சிறு நிகழ்ச்சிகளைக் கோர்த்து மனத்தில் உட்காரும்படி சினிமாவாக மாற்ற முடிகிறது?

முகமது அலி ஜின்னா

ஸ்டேன்லி வோல்பெர்டின் (STANLEY A WOLPERT) “ஜின்னா ஆஃப் பாகிஸ்தான்” என்ற புத்தகத்தை மறுபடியும் இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். முதல்முறை படித்தபோது பல விஷயங்கள் மனத்தில் நிற்கவே இல்லை. இப்போது காந்தி பற்றி மீண்டும் மீண்டும் படிப்பதால், ஜின்னாவை மற்றுமொருமுறை படிக்கலாம் என்று எடுத்திருக்கிறேன்.

வோல்பெர்ட், நவீன இந்தியா பற்றிய முக்கியமான வரலாற்றாளர். அவரது பிற புத்தகங்களையும் நான் வாங்கி (அல்லது தேடி) படிக்கவேண்டும்.

சில இடங்களில் ஜின்னாவின் காந்தி எதிர்ப்பு, புத்தக ஆசிரியர் வோல்பெர்ட்டையும் பீடித்துவிடுகிறதோ என்று தோன்றுகிறது. விரிவான புத்தக அறிமுகத்தைப் பின்னர் எழுதுகிறேன்.

ஆனால், எனக்கு காந்தி பிறந்தநாளின் போது முக்கியமாகத் தோன்றுவது, ஏன் ஜின்னா என்ற மதச் சார்பற்ற, தீவிர இந்திய தேசியவாதிக்கு காந்தியை ஆரம்பம் முதலே பிடிக்கவில்லை என்ற கேள்விதான். கோகலே முதற்கொண்டு பல தேசியவாதிகள் காந்திதான் இந்தியாவைக் காப்பாற்றப் போகிறார்; தேசியப் போராட்டத்தை வழிநடத்திச் செல்லப்போகிறார் என்று முடிவுசெய்தனர். காந்தி புதிதாகப் பல சீடர்களை உருவாக்கினார். மோதிலால் நேரு, காந்திக்கு வழிவிட்டார்.

1920-களில் ஜின்னா, காங்கிரஸின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவரை காந்தி வேண்டுமென்றே ஓரம் கட்டினாரா? இதில் ஜின்னாவின் முஸ்லிம் மதம் ஒரு காரணமாக இருந்ததா?

ஜின்னாவுக்கு சட்டங்களுக்கு உட்பட்டு பிரிட்டிஷ்காரர்களுடன் போராடவேண்டும் என்ற எண்ணமே இருந்தது. எனவே காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தைக் கடுமையாக எதிர்த்தார். காந்தியின் ‘ஆன்மிக’ நோக்கமும் ஜின்னாவுக்கு ஏற்புடையதாக இல்லை. கிலாஃபத் இயக்கத்தையும் ஜின்னா கடுமையாக எதிர்த்தார். கிலாஃபத்துக்கு காந்தியிடமிருந்து ஆதரவு வந்ததையும் ஜின்னாவால் ஏற்கமுடியவில்லை.

ஜின்னா ஆரம்பத்தில் முஸ்லிம் லீகில் தீவிர உறுப்பினராக இல்லை. பின்னர்தான் அதில் அதிக ஈடுபாட்டைக் காட்ட ஆரம்பித்தார். ஆனாலும் ஆரம்பம் முதற்கொண்டே, இந்து-முஸ்லிம் பிரச்னையைத் தீர்க்காமல் பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து விடுதலை பெறுவது பிரச்னையானது என்ற கொள்கையைக் கொண்டிருந்தார். சிறுபான்மையினருக்கு சிறப்புச் சலுகைகளைக் கொடுக்கவேண்டும் என்பது அவரது கருத்து. பெரும்பான்மையினர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்; எனவே பெரும்பான்மையினர் வேண்டுமென்றே சிறுபான்மையினருக்கு அதிகம் விட்டுத்தரவேண்டும் என்பது அவரது கருத்து.

இதனை சரியான முறையில் இந்தியத் தலைவர்கள் அன்றே செய்திருந்தால், பல பிரச்னைகள் பின்னர் ஏற்படாமல் இருந்திருக்கலாம். பாகிஸ்தான் என்ற கருத்துருவாக்கம் ஏற்படாமல் இருந்திருக்கலாம். அல்லது பின்னர் ஏற்பட்டிருக்கவும் கூடும். வரலாற்றின் பழைய பக்கங்களைப் புரட்டி இப்படி ஆகியிருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம் என்று சொல்வது அபத்தமானதாகத் தோன்றினாலும், இப்படி ஆகியிருந்தால் வரலாறு எப்படி மாறியிருக்கும் என்று யோசிப்பது தவிர்க்கமுடியாததாக உள்ளது.

1930களில் இறுதியில் ஜின்னாவின் கருத்துகளில் ஏற்பட்ட மாற்றத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இந்தியர்கள் அவரை எடைபோடக் கூடாது. ஜின்னாவின் வாழ்க்கையில் நாம் அறிந்துகொள்ளவேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஆனால், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர்கள்கூட (ராஜ்மோகன் காந்தி போன்றவர்கள்) ஜின்னாவுக்கு வேண்டிய இடத்தை ஒதுக்குவதில்லை.

பின்னாள்களில் ஜின்னாவுக்கு, காங்கிரஸில் இருந்த முஸ்லிம்கள்மீதும் கடுமையான வெறுப்பு இருந்தது. உதாரணமாக அபுல் கலாம் ஆசாத்மீது. அதேபோல, ஆரம்ப நாள்களில் ஜின்னாவின் உதவியாளராக இருந்து, பின்னர் மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், மத்திய அரசில் கல்வி, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த முகமதலி கரீம் சாக்லாமீது ஜின்னா அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் சாக்லா இணைந்த இந்தியாமீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று தெரிந்ததும் அந்த உறவு முறிந்துபோனது.

காந்தியைச் சுற்றி மக்கள் - மனைவி, பிள்ளைகள், ஆஸ்ரமவாசிகள், சீடர்கள், பொதுமக்கள் - என்று பலர் இருந்தனர். ஆனால் ஜின்னா தனியராகவே வாழ்ந்தார். அவரது காதல் மனைவி (பார்சி பெண்மணி) வெகு நாள்கள் ஜின்னாவுடன் சேர்ந்து வாழவில்லை. ஜின்னாவின் ஒரே மகள், வெளியிடங்களில் படித்து வளர்ந்தார். அவரும் தந்தையுடன் அதிகம் சேர்ந்து இருக்கவில்லை. ஜின்னாவின் சகோதரி ஃபாத்திமா ஜின்னாவுடன் அதிகம் இருந்தவர். ஆனால் இவர் அதிகம் பேசவே மாட்டாராம். ஜின்னாவுக்கு நெருங்கிய தோழர்கள் என்று யாருமே இல்லை. அனைவருமே அரசியல்ரீதியில் அவருடன் இயங்கியவர்கள் மட்டுமே.

காந்தி, மதத்தை, ஆன்மிகத்தை தனது போராட்டங்களின் அடிநாதமாக எடுத்துக்கொண்டவர். ஆனால் செகுலரிசத்தை - மதச்சார்பின்மையை - வற்புறுத்தியவர். ஜின்னா, முஸ்லிம் நாடு வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தவர். ஆனால் தனி வாழ்வில் அவர் மதச் சடங்குகளில் சிறிதும் நம்பிக்கை வைத்திருக்கவில்லை. பன்றிக்கறி சாப்பிடுவது அவருக்குப் பிடித்தமாக இருந்திருக்கிறது.

ஜின்னாவும் காந்தியும் எந்த அளவுக்கு இரு துருவங்களாக இருந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியத்தைத் தருகிறது.