Thursday, January 28, 2010

மாமல்லை - 1

சென்ற வாரம் ஒரு மூன்று நாள்கள் மாமல்லபுரத்தில் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தோம். தேர்ந்த ஐந்து ஆசிரியர்கள். ஆர்வமுள்ள 18 மாணவர்கள்.

பேரா. சுவாமிநாதன் கடந்த சில ஆண்டுகளாகவே மாமல்லபுரம் பற்றி நிறையப் பேசி வந்திருக்கிறார். உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட இந்த இடத்தை இந்தியர்கள், முக்கியமாக தமிழர்கள் சிறிதும் புரிந்துகொள்வதில்லையே என்பது அவரது ஆதங்கம். ஏதோ போனோமா, வந்தோமா, நான்கு படங்களை எடுத்துக்கொண்டோமா என்பதிலேயே அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாழ்க்கை கழிந்துவிடுகிறது. வேறு சிலர் தனிமையை விரும்பி ஜோடிகளாக அங்கே சென்று மரத்துக்குப் பின்னும் புதருக்குள்ளேயும் மறைந்து கொஞ்சுகிறார்கள்.

இப்படி சும்மா அங்கலாய்த்துக்கொண்டிருந்தால் போதாது. நிஜமாகவே மாமல்லபுரத்தில் என்னதான் உள்ளது? ஏன் அதை நாம் புகழ்ந்து தள்ளவேண்டும்? இதற்கான பதில் எளிதாக ஒரு வரியில் சொல்லிவிட முடியாதது.

ஆர்வமுள்ள சிலருக்கு மாமல்லபுரத்தில் பொதிந்துகிடக்கும் கலை மேன்மைகளைக் காண்பிக்க விரும்பிய சுவாமிநாதனுடன் சேர்ந்துகொண்டவர்கள் சிலர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் பாலுசாமி. சென்னை ஓவியக் கல்லூரியின் பேரா. சிவராமகிருஷ்ணன். பாரம்பரிய ஸ்தபதிகளான கும்பகோணத்தைச் சேர்ந்த உமாபதி, அவரது அண்ணன் வேழிநாதன்.


பாலுசாமி சமீபத்தில் மாமல்லபுரத்தின் ‘பெருந்தவம்’ புடைப்புச் சிற்பம் பற்றி ஓர் அற்புதமான புத்தகத்தை எழுதியுள்ளார். ‘அர்ச்சுனன் தபசு’ என்ற பெயரில் இது காலச்சுவடு வெளியிட்ட புத்தகமாக வெளியாகியுள்ளது. தமிழில் மாமல்லபுரம் பற்றி எழுதப்பட்ட மிக முக்கியமான ஆராய்ச்சி நூல் இது. (இதைப்பற்றி பின்னர் எழுதுகிறேன்.) மாமல்லபுரத்தைப் பற்றி தீவிரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள பாலுசாமி ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம்.

சிவராமகிருஷ்ணன் ஓவிய ஆசிரியர். சிற்பங்களில் மறைந்துகிடக்கும் வடிவ அழகை அற்புதமாக விளக்கக்கூடியவர். அமைதியானவர். கையில் தாள், பென்சிலுடன் வந்த இவர் ஆங்காங்கே பல்லவர் காலச் சிற்பங்கள், மண்டபங்கள், ரதங்களை ஓரிரு கோடுகளால் வரைந்துகாட்டி அதன் நுட்பங்களை அற்புதமாக விளக்கினார்.

உமாபதியும் வேழிநாதனும் பாரம்பரியச் சிற்பிகள், கோயில் கட்டுபவர்கள். வேதம் முதற்கொண்டு சில்ப சாஸ்திரங்களைக் கரைகண்டவர்கள். இந்த நூல்களில் பல அவர்களது குடும்பத்துக்குள் சாதிக்குள் (விஸ்வகர்மா) மட்டுமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளவை. அவர்கள் பாரம்பரியப் பின்னணியில் சிற்பங்களின் சில ரகஸ்யங்களைப் பற்றிப் பேசினார்கள். ஆனால் முழுவதுமாக ரகஸ்யங்களை வெளிவிடவில்லை.

***

மகேந்திரவர்மனுக்கு அடுத்துவந்த நரசிம்மவர்மன் காலத்தில் தொடங்கப்பட்ட மாமல்லை, அடுத்து நரசிம்மனின் பேரம் பரமேஸ்வரன், அவனது மகன் ராஜசிம்மன் ஆகியோர் காலத்தில் தொடரப்பட்டு அத்தோடு நிறுத்தப்பட்டது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். மகேந்திரவர்மன் காலத்தில் தொடங்கப்பட்ட குடைவரைக் கோயில்களை நரசிம்மன் முன்னெடுத்துச் சென்றான்.

அரசர்கள் என்று நாம் சொன்னாலும் வேலையைச் செய்ததென்னவோ சிற்பிகள். அவர்களைப் பற்றி நமக்கு அதிகமாகத் தெரிவதில்லை.

மாமல்லையில் என்னவெல்லாம் உள்ளன?

1. மண்டபம் (Caves) எனப்படும் குன்றை (ஒற்றைப் பாறையை) முன்பக்கமிருந்து குடைந்து செய்யப்பட்ட கோவில்கள். இவற்றில் மேல் விமானம் ஆகியவை அவ்வளவு விரிவானவையாக இருக்கா.

2. ரதம் (Monoliths or Rathas) எனப்படும், ஒற்றைப் பாறையில் மேலிருந்து குடையப்பட்டு உருவாக்கப்படும் கோவில்கள். இவற்றில் மிக அருமையான விமானம் காணப்படும்.

3. கட்டுமானக் கோயில்கள் (Structural Temples). ஒற்றைப் பாறை என்னும் நிலையைத் தாண்டி, அடித்தளம் ஒரு பாறையிலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் வெட்டப்பட்டு மேலே நிறுத்தப்பட்ட சில பாறைகளாலும் உருவான கோயில்கள்.

4. புடைப்புச் சிற்பங்கள் (Open-air Bas Reliefs). பட்டையான பாறை முகப்பை எடுத்துக்கொண்டு அதில் மாபெரும் சிற்பக் காட்சியை உருவாக்குதல்.

இவற்றில் மண்டபங்கள் மகேந்திரவர்மன் காலத்திலேயே உருவாக்கப்பட்டன. பல்லாவரம், மண்டகப்பட்டு, தளவானூர், மாமண்டூர், சீயமங்கலம், குரங்கணில்முட்டம், திருச்சிராப்பள்ளி எனப் பல இடங்களில் மகேந்திரன் காலத்தில் குன்றைக் குடைந்து கோவில்கள் உருவாக்கப்பட்டன. இந்தக் கோவில்களில் கர்ப்பக்கிருகம், முன் மண்டபங்கள் (அர்த்த மண்டபம், மகா மண்டபம்), சாதாரண தூண்களில் தொடங்கி, வேலைப்பாடுள்ள அற்புதமான தூண்கள், துவாரபாலர் சிற்பங்கள், சுவற்றில் காணப்படும் அற்புதமான வேலைப்பாடுள்ள சிற்பங்கள் எனப் பலவும் உண்டு. ஒரு, மூன்று அல்லது ஐந்து கர்ப்பகிருகங்கள் ஒரே கோயிலில் இருக்கலாம்.

நரசிம்மனும் பல மண்டபங்களைக் கட்டுவித்துள்ளான். ஆனால் நரசிம்மன் காலத்தில்தான் ரதங்கள் உருவாக்கப்பட்டன. ராஜசிம்மன்தான் கட்டுமானக் கோயில்களைக் கட்டினான். புடைப்புச் சிற்பங்கள் நரசிம்மன் காலம் தொட்டே உருவாகியிருக்கக்கூடும். ராஜசிம்மன் காலம்வரை தொடர்ந்தது.

இவையெல்லாம் வெறும் புள்ளிவிவரங்கள். ஆனால் மாமல்லையின் அற்புதத்தை புள்ளிவிவரங்களால் காண்பித்துவிடமுடியாது.

ஒரு சிறு அற்புதத்தைக் கையில் எடுப்போம்.

மஹிஷாசுரமர்த்தினி மண்டபம். அதில் எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். இரு சுவர்களிலும் இரு அற்புதமான புடைப்புச் சிற்பங்கள். ஒன்று மஹிஷனை தேவி வதம் செய்ய எத்தனிக்கும் காட்சி. மற்றொன்று அனந்தசயனத்தில் விஷ்ணு படுத்திருக்க, மதுவும் கைடபனும் விஷ்ணுவைத் தாக்க முயற்சி செய்ய, ஆதிசேஷன் அவர்களை நோக்கி விஷம் கக்கும் அனலை வீச, அந்த அனல் தாங்காமல் அசுரர்கள் திரும்பி ஓட யத்தனிக்கும் காட்சி.

பாலுசாமி மஹிஷாசுரமர்த்தினி சிற்பத்தின்முன் நிற்கிறார். விளக்குகிறார்.


சிற்பக் காட்சியில் ஒருவித சமநிலை தென்படுகிறது. ஒரு பக்கம் மஹிஷன், மாபெரும் உருவமாக. மறுபக்கம் சுவற்றிலிருந்து வெளியே முப்பரிமாணத்தில் வருவதுபோன்ற சிங்கம், சிங்கத்தின் மேல் தேவி. எட்டு கைகளுடன். அனைத்துக் கைகளிலும் ஆயுதங்கள். ஒன்றில் வில் வளைத்து நாண் ஏற்றத் தயாராக. மற்றொன்று தோளில் அம்பறாத் தூணியிலிருந்து அம்பை உருவுகிறது. ஒரு கையில் வாள். ஒரு கையில் கேடயம். ஒரு கையில் பிரயோகச் சக்கரம். இப்படி. மஹிஷன் ஒரு காலைப் பின்னுக்குத் தள்ளி ஓடப் பார்க்கிறானோ? ஆனால் அவன் இன்னமும் தோற்கவில்லை. அவன் தலைமீது குடை இன்னமும் இருக்கிறது. அவன் தலையில் மகுடன் இன்னமும் இருக்கிறது. தேவியைச் சுற்றிலும் கணங்கள். ஒவ்வொன்றும் சற்றே வித்தியாசமாகக் காணப்படுகின்றன. அசுரனைச் சுற்றி அவனது படைகள். அனைவர் முகத்திலும் கலக்கம். தோல்வியின் பயம்.

சிற்பிக்கு என்ன தைரியம் இருந்தால் சிற்பத்தின் மையத்தில் தலைகீழாகத் தொங்கும் மொட்டைத் தலையை வரைந்திருப்பான்? தனது சிற்பத்தின்மீது அத்தனை நம்பிக்கை. முகத்தில் என்னென்னவோ உணர்ச்சிகளைக் காண்பிக்கலாம். ஆனால் மொட்டைத்தலையில்? இருந்தும் அதனை நடு மையத்தில் வைத்திருக்கிறான்.

தேவி மகாத்மியத்தில் இந்தக் காட்சி வருகிறது.

பாலுசாமி தொடர்கிறார். சிற்பத்தின் ஒவ்வொரு சிடுக்குகளும் புரிய ஆரம்பிக்கின்றன. சிவராமகிருஷ்ணன் வளைவுகளையும் கோடுகளையும் விளக்குகிறார். பார்ப்போர் அனைவரும் எப்படி தேவியிலிருந்து மஹிஷனுக்கும் மஹிஷனிலிருந்து தேவிக்குமாக மையத்தை நோக்கி மீண்டும் மீண்டும் பார்வையைத் திருப்பியபடியே இருப்பார்கள் என்று விளக்குகிறார். இந்தச் சிற்பத்தில் எந்தக் கோடியிலிருந்து தொடங்கினாலும் பார்வை மையத்தை நோக்கியே வருமாம்.

இப்படி மாறி மாறி ஒவ்வொரு சிற்பமாக, ஒவ்வொரு மண்டபமாக, ஒவ்வொரு ரதமாக, கடற்கரைக் கோயிலின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று பார்க்கிறோம்.

(தொடரும்)

Wednesday, January 27, 2010

ராமேஸ்வரம்

வளையல் கிரகணம் பார்க்கச் சென்றதைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருந்தேன். ராமேஸ்வரம் தென் தமிழகத்தின் கடலோர நகரம். ஒரு தீவு. ஒரு நீண்ட தரைவழிப் பாலமும் இருப்புப்பாதை பாலமும் இருப்பதால் தமிழகத்தோடு ஒட்டியுள்ளது.


ஊரில் ஒரு பெருமை வாய்ந்த சிவன் கோவில். ராமநாதர். இலங்கையில் ராமாயண யுத்தம் முடிந்து, ராவணனை மாய்த்தபின் சீதையுடன் திரும்பிவரும் வழியில் ராமன் இங்கு நின்றானாம். ராவணன் ஒரு பிராமணன் என்பதால் பிராமணனைக் கொன்ற தோஷம் - பிரம்மஹத்தி தோஷம் - போக ராமன் சிவனை வழிபடவேண்டி இருந்ததாம். அனுமனை அனுப்பி ஒரு லிங்கத்தைக் கொண்டுவரச் சொன்னானாம் ராமன். ஆனால் அனுமன் வர நேரம் ஆகவே சீதை அங்குள்ள மண்ணைப் பிடித்து லிங்கமாக்கித் தர அதற்கு பூஜை செய்தானாம் ராமன்.


அதற்குள் தானும் ஒரு லிங்கத்தை எடுத்துவந்த அனுமனுக்கு ஒரே வருத்தம். வெறும் மண் லிங்கம்தானே என்ற அலட்சியத்தில் தன் வாலால் அதனைக் கட்டி இழுத்து அப்புறப்படுத்த எத்தனித்தானாம் அனுமன். ஆனால் அவனது வால்தான் அறுந்ததாம். அப்போதுதான் சீதை பிடித்த மண்ணின் பலம் அனுமனுக்குப் புரிந்ததால். இரண்டு லிங்கங்களும் கோயிலில் அடுத்தடுத்து காணப்படுகின்றன.

தலபுராணங்கள் கதை சொல்லும் அழகே தனி.

கோயிலில் பல வட நாட்டவர்களைப் பார்த்தேன். குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் என்று வந்திருந்தார்கள். ஔரங்காபாத்திலிருந்து வந்த சிலரிடம் பேச்சு கொடுத்தேன். நேராக கன்யாகுமரி, அங்கிருந்து ராமேஸ்வரம், அங்கிருந்து திருப்பதி, அங்கிருந்து பூரி, அங்கிருந்து நேபாளில் பசுபதி நாத், அங்கிருந்து நேராக சொந்த ஊர் திரும்பிவிடுவார்களாம்.

இந்தியா என்ற வலுவான கட்டமைப்புக்கு எந்த அளவுக்கு இந்து மதத்தின் புனித யாத்திரைகள் காரணம் என்பதையும் நாம் அலசவேண்டும்.

கோயிலில் ஆங்காங்கு பலகைகள் வைத்து ஈரத்துணியுடன் உள்ளே வரவேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆனால் நம் மக்கள் அதைக் கேட்பதாக இல்லை. 22 புனிதக் கிணறுகளிலிருந்து அள்ளி முகர்ந்து நீரில் தீர்த்தமாடி அதே ஈரத்துணியுடன்தான் கோயிலுக்குள் செல்கிறார்கள். உப்புக் காற்று சுமந்துவரும் ஈரப்பசையுடன் இந்த ஈரமும் சேர்ந்து தரையெல்லாம் சொத சொதவென்று உள்ளது.

நாயக்கர் காலத்துக் கோயில். சிற்ப வேலைப்பாடுகள் பிரமாதம் என்று சொல்லமுடியாது. பக்தியுடன் வருபவர்கள் சிற்பங்களைப் பார்ப்பதில்லை.

சமுத்திரத்துப் பக்கம் சென்றால் வரிசையாக மக்கள் தர்ப்பணம் செய்கிறார்கள். பலர் தாங்கள் அணிந்திருக்கும் துணிகளை அப்படியே ஒரு பிளாஸ்டிக் பைய்ல் போட்டு கடலில் எறிகிறார்கள். அது அப்படியே மீண்டும் கரைக்கு வந்து அந்த இடத்தை ‘கலீஜ்’ ஆக்குகிறது. கரையோரம் பல புதிய முகப்புகள் தர்ப்பணம் செய்ய ஏதுவாக உருவாகிக்கொண்டிருக்கின்றன.


***

தனுஷ்கோடி செல்ல முயன்று முகுந்தராயன் சத்திரம் வரை சென்றோம். அதற்குமேல் செல்லவேண்டுமானால் நிறைய நேரம் ஆகும். பாதை ஏதும் இல்லை. 1967-ல்(?) அடித்த புயலில் தனுஷ்கோடி அழிக்கப்பட்டது. அங்குள்ள ரயில்வே நிலையம், சில வீடுகள் என அனைத்தும் இன்றும் 40 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் உடைந்து நொறுங்கிய நிலையில் அப்படியே உள்ளனவாம். அதை மற்றொரு நாள் பார்க்கவேண்டும்.

முகுந்தராயர் சத்திரத்தில் கடற்கரை மக்கள் பயன்படுத்தும் விதத்தில் உள்ளது. ஆனால் சுற்றிமுற்றி கடை கண்ணி என்று எதும் இல்லை.


***

ராமேஸ்வரத்தில் நிறைய மடங்கள் உள்ளன. சத்திரங்கள் உள்ளன. இந்தியாவின் அனைத்துப் பகுதியில் இருந்தும் மக்கள் வருகின்றனர். பாஷயைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அனைவராலும் தங்கள் வேலைகளைச் செவ்வனே செய்து, கடன்களை நிறைவேற்றி, அடுத்த புனிதத் தலத்தை நோக்கிச் செல்லமுடிகிறது.

ராமேஸ்வரத்தைப் பார்க்கும்போது அங்கே தமிழகத்தைவிட இந்தியாவே கண்ணில் படுகிறது.


***

சற்று தள்ளி மண்டபம் முகாம் உள்ளது. இலங்கை அகதிகள் இங்குதான் உள்ளனர். கிட்டத்தட்ட 1 லட்சம் இலங்கை தமிழ் அகதிகள் தமிழகத்தில் உள்ளனராம். அதில் 70,000 பேர் முகாமிலும், மீதம் 30,000 பேர் சொந்தக் காசில் வெளியில் இருப்பதாகவும் தகவல். முகாமுக்கு வெளியே உறுதியான காவல். உள்ளே என்ன நடக்கிறது என்று வெளியாருக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை.

இந்த மக்கள் அனைவருக்கும் இரட்டைக் குடியுரிமை (இந்திய கிரீன்கார்ட்?) மாதிரி ஏதேனும் கொடுத்து நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தங்கி எப்படி வேண்டுமானாலும் பிழைக்கலாம் என்று ஏனோ அரசுகள் சொல்லமாட்டேன் என்கின்றன.

***

ராமேஸ்வரத்தின் மீனவர்கள் பற்றி ஒரு தோழர் சில நாள்களுக்கு முன் பேசிக்கொண்டிருந்தார். சுனாமிக்குப் பிறகு ராமேஸ்வரம் பக்கத்தில் இருந்த மண் திட்டுகள் பலவும் இலங்கைப் பகுதிக்குச் சென்றுவிட்டனவாம். (அதாவது மணல் அரிக்கப்பட்டு இலங்கைக் கரைக்குச் சென்றுவிட்டது.) எனவே நண்டு, சில வகை மீன்கள் ஆகியவை ராமேஸ்வரம் கரையோரம் கிடைப்பதில்லையாம். இதனால் ராமேஸ்வர மீனவர்கள் வேறு வழியின்றி இலங்கைப் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றுதான் ஆகவேண்டும் என்றார்.

மீன் வளம், மீனவர் வாழ்வு ஆகியவை குறித்த புரிதல் எனக்குத் துளியும் இல்லை. ஆனால் இங்கு பல பிரச்னைகள் உள்ளன என்பது மட்டும் புரிகிறது. யாராவது இவை பற்றித் தெளிவாக எழுதினால் நன்றாக இருக்கும்.

Tuesday, January 26, 2010

வளையல் கிரகணம்

ஜனவரி 15 அன்று வளையல் சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் தென்படும் என்ற தகவலுடன் பேரா. அனந்தன் அழைத்தார். ‘கன்யாகுமரியில் தெரியும். அங்கே போகவேண்டும். அழைத்துக்கொண்டு போவாயா?’ என்று கேட்டார்.

மிகக் குறைந்த நேரமே இருந்தது. ரயிலில் சீட்டு கிடைக்குமா என்று தெரியாது. பிறகு கலந்தாலோசித்துவிட்டு ராமேஸ்வரம் போகலாம் என்று முடிவெடுத்தேன். கன்யாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய இரு இடங்களில் மட்டும்தான் இந்த வளையல் (அல்லது கங்கண) சூரிய கிரகணம் தெரியும். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் குறை கிரகணம் மட்டுமே தெரியும்.

வளையல் கிரகணம் ஏன் ஏற்படுகிறது?

சூரிய கிரகணம் என்பது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது ஏற்படுவது. சூரியன் என்பது மிகப்பெரிய கோளம். சூரியனுடன் ஒப்பிடும்போது சந்திரனின் விட்டம் மிக மிகச் சிறியது. ஆனாலும், சூரிய, சந்திர மையப்புள்ளிகளை நீட்டி ஒரு நேர் கோடாக்கி இழுத்து பூமியில் விட்டால் அது விழும் புள்ளிக்கு அருகில் இருப்பவர்களால் சூரியனை (பொதுவாக) முற்றிலும் பார்க்கமுடியாது. இந்தப் பகுதிக்கு umbra (கருநிழல்) என்று பெயர். இந்த மையப்பகுதிக்கு இரு புறமும் இருக்கும் பகுதிக்கு penumbra (புறநிழல்) என்று பெயர்.

ஆனால் சந்திரன் பூமியிலிருந்து சற்று அதிகத் தொலைவில் இருக்கும்போது சூரிய கிரகணம் ஏற்பட்டால், சந்திரனால் சூரியனை முற்றிலுமாக மறைக்கமுடியாது. அந்தக் கட்டத்தில் சூரியனின் வெளிப்புற வட்டம் மட்டும் பிரகாசமாகத் தெரியும். உள்ளுக்குள் இருக்கும் பகுதி சந்திரனால் முற்றிலுமாக மறைக்கப்படும். ஜனவரி 15 அன்று அதுதான் நடந்தது.

நாங்கள் ராமேஸ்வரம் செல்லலாம் என்று முடிவெடுத்த அதே நேரம், தமிழக ஆளுநர் சுர்ஜீத் சிங் பர்னாலாவும் ராமேஸ்வரம் செல்ல முடிவெடுத்தார். நிச்சயம் கிரகணம் என்னும் அபூர்வ அறிவியல் நிகழ்வைப் பார்க்க அல்ல என்றே நினைக்கிறேன். எதோ புண்ணியம் சம்பாதிக்க என்று சந்தேகம்... ஆனால் எங்கள் பாவத்தை நிச்சயம் சம்பாதித்தார். தங்க ஓர் இடமும் கிடைக்கவில்லை. கடைசியில் ராமநாதபுரத்தில் தங்கிக்கொண்டு ராமேஸ்வரம் சென்று பார்க்கலாம் என்று முடிவானது. ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்ல நல்ல தரமான சாலை. ஒரு மணி நேரம்தான் ஆகிறது.

14-ம் தேதி அன்றே வெள்ளோட்டம் விட ராமேஸ்வரம் சென்றோம். அன்றே ஆளுநருக்காக ஊரில் கெடுபிடி. ஓட்டல் தமிழ்நாடு உணவு விடுதியில் சாப்பிடும்போது தமிழ்நாடு வானியல் சங்கத்தின் உறுப்பினர்கள் பேரா. அனந்தனை அடையாளம் கண்டுகொண்டனர். கூட்டமாக வந்து அவருடன் பேச ஆரம்பித்தனர். சங்கத்தைச் சேர்ந்த விஜயகுமார், பல இளைஞர்கள் அங்கே இருந்தனர். அவர்கள் ஓலைக்குடா விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தனர். அங்கேயே வந்து அடுத்த நாள் நிகழ்வைப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அதுவும் நல்லதாகப் போயிற்று.

இந்தச் சங்கத்தினருடன் வட வங்காள வான் நோக்குனர் சங்கத்தைச் சேர்ந்த பலரும் அதே விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தனர். அவர்கள் பலரும் தரமான கருவிகளுடன் வந்திருந்தனர். பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பல ஃபில்டர்களையும் எடுத்து வந்திருந்தனர். தமிழ்நாடு வானியல் சங்கத்தின் விஜயகுமார் தானே தயாரித்திருந்த ஃபில்டர் பொருத்திய பைனாகுலருடன் கேமராவை வைத்துப் படம் பிடிக்கும் கருவியைக் கொண்டுவந்திருந்தார். பேரா. அனந்தன், சில வெல்டிங் ஃபில்டர் கண்ணாடிகளைக் கொண்டுவந்திருந்தார்.

14 அன்று தனுஷ்கோடி சென்று அங்கே இருந்து கிரகணத்தைக் காணமுடியுமா என்று பார்த்தோம். ஆனால் அங்கு வசதிகள் போதாது என்று தீர்மானித்து, ஓலைக்குடாவுக்கு வந்துவிடுவது என்று முடிவெடுத்து, அன்று இரவு ராமநாதபுரம் மீண்டோம்.

15 காலையில் சீக்கிரமாகக் கிளம்பி ராமேஸ்வரம் வந்து சேர்ந்தோம். ஆளுநர் கெடுபிடி தாங்கவில்லை. எல்லாவித முக்கியமான வழிகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இரு ஆட்டோக்களைப் பிடித்து கெஞ்சிக் கூத்தாடி, ஏதேதோ பின்வழிகள் வழியாக ஓலைக்குடா நோக்கிப் புறப்பட்டோம். ஒருவழியாக காலை 10.20-க்குள் அந்த இடத்துக்கு வந்துவிட்டோம். கடற்கரைக்கு நேர் எதிரே நூறடிக்குள் இருக்கும் கட்டடத்தின் மொட்டை மாடி.களைகட்டி இருந்தது. ஒருபக்கம் தமிழ்நாடு வீரர்கள்.மறுபக்கம் வங்காள வீரர்கள்.பைனாகுலர்கள், தொலைநோக்கிகள், மானிட்டர்கள், வெப்பமானிகள், வீடியோ கேமராக்கள், சாதா கேமராக்கள் (ஆனால் பீமபுஷ்டி லேகியம் சாப்பிட்டாற்போல குண்டு குண்டாக!), விதம் விதமான ஃபில்டர்கள். அனைவரிடமும் ஒருவித பதற்றம்.

ராக்கெட் விடும்போது கவுண்ட் டவுன் நடப்பதுபோல வங்காள அணியினர் அவ்வப்போது 50 மினிட்ஸ் டூ எக்லிப்ஸ் ஸ்டேஜ் 1, 30 மினிட்ஸ் டூ எக்லிப்ஸ் ஸ்டேஜ் 1 என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தனர். சிறு குழந்தைகள் சில (என் பெண்ணையும் சேர்த்து) அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தன. நான் ஒரு ஓரமாக உட்கார்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்தேன்.

கிரகணம் ஆரம்பித்தது. ஒரே ஆரவாரம். வானம் தெளிவாக இருந்தது. மேகங்கள் எதையும் மறைக்கவில்லை. எல்லோரும் ஃபில்டர்களைக் கொண்டு வானை நோக்க ஆரம்பித்தோம். லேசாக ஒரு விள்ளல் சூரியனைக் காணவில்லை.ஒரு இளைஞர், ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை வெப்பத்தை அளக்க ஆரம்பித்தார். ஒரு பக்கம் இரு இளைஞர்கள், புவி ஈர்ப்பில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதை அளக்க ஒரு சர்க்யூட்டை வைத்துக்கொண்டு எதையோ அளந்துகொண்டு எண்களைச் சத்தமாகச் சொல்லி கூச்சலிட்டனர்.

சிறு பின் ஹோல் கேமராவைக் கொண்டு சுவற்றில் கிரகணப் படம் காண்பிக்கப்பட்டது. வெறும் கையைக் குறுக்கு நெடுக்காக வைத்தாலே கிரகணத்தின் நிழல் வெளிச்சம் தரையில் விழுவதைக் காண குழந்தைகளிடம் ஒரே குதூகலம். இப்படியே இப்படியே விள்ளல் பெரிதாகி, அந்தக் கண்கொள்ளாக் காட்சி. அற்புதமான வளையல். இதற்குள் வெப்பம் சுமார் 8 டிகிரி கீழே இறங்கியிருந்தது. அதிகபட்சமான 34-லிருந்து 26 டிகிரி செண்டிகிரேடுக்கு வந்துவிட்டது!பதிவர் பிரபு ராஜதுரை குடும்பத்துடன் வந்திருந்தார். அவரை அங்கு சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவர் தனது புரொஃபஷனல் கேமராவைக் கொண்டு பல படங்களை எடுத்தார். நான் எனது டப்பா மொபைல் கேமராவைக் கொண்டு கிரகணத்தைப் படம் எடுக்கும் அபத்தத்தைச் செய்யவில்லை. (இங்கு காணப்படும் படங்கள் பலவும் விருபாக்ஷன் என்ற நண்பர் எடுத்துக்கொடுத்தது!)

முழு வளையல் கிரகணம் ஏற்பட்டபோது விஜயகுமார் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. வங்காள வீரர்கள் முகத்தில் ஆனந்தப் பெருமிதம். யாஹூ யாஹூ என்று கத்தினர். கிரிக்கெட் வீரர் தன் வாழ்க்கையின் முதல் டெஸ்ட் செஞ்சுரி அடிக்கும்போது பேட்டை உயர்த்திக் காண்பித்து ஒரு குதி குதிப்பாரே, அந்த அளவுக்குப் பெருமிதம்!

வானியல் ஆர்வலர்களின் ஆர்வம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. என்னளவில் இது ஒரு மாபெரும் நிகழ்ச்சி. ஆனால் பொதுவாக உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டி நடந்துகொள்வது என் பண்புக்கு மாறானது. அமைதியாகவே சுற்றிலும் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

பேரா. அனந்தனுக்குப் பெரும் மகிழ்ச்சி. அவர் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த நிகழ்வைப் பார்த்துவிட விரும்பியிருந்தார். அந்த நிறைவு முகத்தில் தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிரகணம் விடுபட ஆரம்பித்தது. அடுத்த கட்டம் ராட்சசன் கொம்பு. இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று அனைத்தும் விலகி முழுச் சூரியன்.

வங்காளிகளும் தமிழர்களும் சேர்ந்து ஒரு குரூப் ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம்.தெருவில் இறங்கி நடக்கும்போது இந்த நிகழ்வைப் பற்றிய பெருமிதமோ ஆச்சரியமோ ஏதும் இன்றி ஒரு பெருங்கூட்டம் கடற்கரை ஓரத்தில் கிரகண தர்ப்பணத்தில் ஈடுபட்டிருந்தது. இந்தியா நிஜமாகவே ஒரு வித்தியாசமான நாடு.

கொஞ்சம் கொஞ்சமாக பசியை உணர ஆரம்பித்தோம். மெதுவாக ஓட்டல் தமிழ்நாடு வந்து, கொஞ்சம் காத்திருந்து கிடைத்த உணவை உண்டோம். மெதுவாக ராமநாதபுரம் நோக்கித் திரும்பினோம்.

இது ஓர் அற்புதமான நாள். என்றுமே நினைவிலிருந்து நீங்காத ஒரு நாளாக இருக்கும்.

இந்திரா பார்த்தசாரதிக்கு பத்ம ஸ்ரீ விருது

தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு பத்ம ஸ்ரீ விருது அளிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் பத்ம விபூஷண், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளுடன் பாரத ரத்னா விருதையும் அளிப்பது வழக்கம். இந்த ஆண்டு யாருக்கும் பாரத ரத்னா விருது கிடையாது. பொதுவாக, அதிகம் அறியப்பட்ட விளையாட்டு வீரர்கள், சினிமாக் காரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோருடன் அவ்வப்போது சில நல்ல இசைக் கலைஞர்கள், இலக்கிய கர்த்தாக்கள், கல்வியாளர்கள் ஆகியோருக்கும் விருதுகள் தருவதுண்டு. சில அரசு அதிகாரிகளுக்கும் தருவார்கள். அவர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சிக்குக் கடும் சேவை ஆற்றியிருக்க வாய்ப்புண்டு.

விருதுப் பட்டியலைப் பார்த்தாலே தெரியும்.

இதில் குழந்தை விளையாட்டு வீரர்கள் (30-ஐத் தாண்டாதவர்கள்) பலர் இருப்பார்கள். இலக்கியம் என்றால் பொதுவாக 75 வயதைத் தாண்டியிருந்தால்தான் உண்டு! இம்முறை இலக்கியம்/கல்வி என்ற துறையில் 18 பேருக்கு பத்ம ஸ்ரீ, 6 பேருக்கு பத்ம பூஷண் விருது கொடுக்கப்பட்டுள்ளது:

பத்ம ஸ்ரீ விருது பெற்றோர் (கல்வி/இலக்கியம்):

Arun Sarma
Prof. Arvind Kumar
Bertha Gyndykes Dkhar
Prof. Govind Chandra Pande
Prof. Hamidi Kashmiri
Prof. (Dr.) Hermann Kulke
Janaki Ballav Shastri
Dr. Jitendra Udhampuri
Dr. Lal Bahadur Singh Chauhan
Lalzuia Colney
Maria Aurora Couto
Dr. (Smt.) Rajalakshmi Parthasarathy alias Y.G. Parthasarathy
Prof. Ramaranjan Mukherji
Dr. Ranganathan Parthasarathy
Fr. Romuald D’Souza
Prof. Sadiq-Ur-Rahman Kidwai
Sheldon Pollock
Dr. Surendra Dubey

பத்ம பூஷண் விருது பெற்றோர் (கல்வி/இலக்கியம்):

Anil Bordia
Prof. Bipan Chandra
G.P. Chopra
Prof. Mohammad Amin
Prof. Satya Vrat Shastri
Prof. Tan Chung

இதில் திருமதி ஒய்.ஜி.பி, இந்திரா பார்த்தசாரதி (ரங்கநாதன் பார்த்தசாரதி), பிபன் சந்திரா ஆகிய மூவரைப் பற்றி மட்டுமே எனக்குத் தெரியும். அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரியும். மற்ற 21 பேரைப் பற்றி ஒன்றுமே தெரியாது. எனவே கொஞ்சம் அது தொடர்பாக இணையத்தில் தோண்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும்.

அவர்களது வாழ்வைப் பற்றி, சாதனைகள் பற்றி சிறு குறிப்பு ஒன்றை அரசு கொடுத்திருந்தால் அதனால் உபயோகம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு சில வழிமுறைகள் அடிப்படையில்தான் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பர். அவற்றையும் சேர்த்து குறைந்தபட்சம் தங்கள் இணையத்தளத்தில்கூட வெளியிடாத உள்துறை அமைச்சகம் உபயோகமற்றது.

இந்திரா பார்த்தசாரதிக்கு வாழ்த்துகள்.

Thursday, January 21, 2010

என் கணித வலைப்பதிவு

kanakku.blogspot.com என்று ஒரு கணித வலைப்பதிவு ஆரம்பித்து கொஞ்ச நாள் போராடினேன். தமிழிலும் கணிதக் குறியீடுகளிலும் (MathML) எழுதுவது பெரும்பாடாக இருந்தது. அதுவும் இப்போது உடைந்து தொங்குகிறது.

எனவே அந்த வலைப்பதிவை டிலீட் செய்துவிடப்போகிறேன். மீண்டும் ஒரு நாள், தமிழும் MathML-ம் சேர்ந்து இயங்கும் ஒரு காலம் வரும்போது அந்தப் பதிவுக்கு மறு உயிரூட்டுவேன். அதுவரையில் அந்தப் பழைய கட்டுரைகள் தேவைப்படுவோர், PDF கோப்பு வடிவில் கீழிருந்து எடுத்துக்கொள்ளலாம்.

தமிழ் கணித வலைப்பதிவுக் கட்டுரைகள் (PDF)
.

Wednesday, January 13, 2010

தமிழ் பதிப்புத் தொழிலில் செட்டியார்களின் பங்கு

தமிழகத்தில் பதிப்புத் துறையில் கோலோச்சி வந்திருப்பது நகரத்தார் எனப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினர் என்பது அனைவரும் அறிந்ததே. வானதி, கண்ணதாசன், அருணோதயம், மணிமேகலை, தமிழ்ப் புத்தகாலயம், கலைஞன் என்று தொடங்கி கண்ணுக்குத் தென்படுவதெல்லாம் செட்டியார் பதிப்பகங்களே.

தமிழ் பதிப்புத் துறைக்கு நகரத்தார் சமூகம் செய்துள்ள பங்களிப்பைக் கொண்டாடும்விதமாக ரோஜா முத்தையா நூலகம் ஒரு வாரக் கண்காட்சி ஒன்றை நடத்த உள்ளது.

இந்த மாதம் (ஜனவரி) 23 முதல் 31 வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி தரமணியில் உள்ள ரோஜா முத்தையா நூலகத்தில் இருக்கும்.

26 ஜனவரி 2010 அன்று மாலை 5 மணிக்கு வரலாற்றாளர் எஸ்.முத்தையா, ரோஜா முத்தையா நூலகத்தில், செட்டியார் பாரம்பரியம் (Chettiyar Heritage) என்ற தலைப்பில் (ஆங்கிலத்தில்தான்!) பேசுகிறார்.

Tuesday, January 12, 2010

சென்னை சங்கமம் - திங்கள்

நேற்று மாலை சுமார் இரண்டு மணி நேரம் நாகேஸ்வர ராவ் பார்க் சங்கமம் நிகழ்ச்சியின் பார்வையாளனாக இருந்தேன். நான் உள்ளே நுழைந்தபோது பரதநாட்டியம். கலாக்ஷேத்ரா என்று நினைக்கிறேன். பல பாடல்களுக்குப் பிறகு கடைசியில் மீரா பஜனில் முடிந்தது. நல்ல அபிநயம். பார்வையாளர்கள் மைலாப்பூருக்கே உரித்தான மிக்ஸட் வகையினர்.

அடுத்ததாக கயிறு மேல் ஏறி யோகாசனங்கள் செய்யும் குழந்தைகள். மிக அற்புதமாகச் செய்துகாட்டினர்.

அடுத்து ஓவியா என்ற பெண் (மார்த்தாண்டத்தில் ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிப்பதாகச் சொன்னாள்) ஒரு பாடலைப் பாடினாள். கூட்டத்தினருக்கு ஒரே உற்சாகம். நல்ல, வித்தியாசமான குரல். அதற்கு அடுத்து பறை மேள நாட்டியம். அந்தக் குழுவினர் தயாராக இல்லாததால் ஓவியாவுக்கு மற்றுமொரு பாட்டு பாட வாய்ப்பு. (அந்தப் பாட்டுக்குப் பிறகு, தனியாக ஓரிடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ஓவியாவிடம் சென்று சில வார்த்தைகள் பேசினேன்.) இரண்டு பாடல்களின்போதும் கூட்டத்திலிருந்து விசில் சத்தமும் கைத்தட்டலும் ஏராளம்.


அடுத்து பறை நடனம். சுமார் 10 பேர் கையில் தப்பட்டைகள், (தப்பு என்று இதற்குப் பெயர்), பெரிய டிரம் ஒன்று, சில சிம்பால்கள் ஆகியவற்றுடன் அடித்துக்கொண்டே நடனமாடினர்.


நடன மாஸ்டர் நிறைய வித்தைகளைச் செய்தார். ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்றுகொண்டே தப்படிப்பது; தப்பை கால் இடுக்கில் வைத்துக்கொண்டு குட்டிக்கரணம் போட்டு எழுந்து நின்று பிடித்து அடிப்பது; தலைமுடியில் ஒரு நீண்ட கயிறைக் கட்டி அதன் ஒரு முனையில் துணியைக் கட்டி, அதில் நெருப்பு பற்றவைத்து அதனை ஒரு வட்டமாக விசிறவைத்து, சுழன்றுகொண்டே தப்படிப்பது, நெருப்பு வளையம் ஒன்றை உடலில் மோதவிட்டுக்கொண்டே தப்படிப்பது, இப்படி, இப்படி எத்தனையோ வித்தைகள். (ஒரு சிறு ஒளித்துண்டை இதில் சேர்க்கிறேன்; ஆனால் கேமரா தரம் மோசம்.)


இடையில் ஒருவர் நெருப்பை விழுங்கினார். எரியவைத்த சூடத்தை வாயில் போட்டு சர்வசாதாரணமாக விழுங்கினார். நடுநடுவே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் “அருமை, அருமை, அருமை, அருமை” என்று சொல்வதோடு கவிதை மாதிரி என்னத்தையோ படித்து கடுப்பேத்தினார். கயிற்றில் ஏறி ஆசன வித்தைகள் செய்துகாட்டிய குழுவின் ஆசான், அமைச்சர் பொன்முடிக்கு நிறைய பாராட்டுரைகளை வழங்கினார். மற்ற யாரும் அமைச்சர் பெருமக்களுக்கோ, முதல்வர், துணை முதல்வருக்கோ, கனிமொழிக்கோ பாராட்டுகளை அள்ளித் தெளிக்கவில்லை.

உணவு, நேற்று எல்லாவற்றையும் நோட்டம் விட்டு, கடைசியில் புலாவ் காம்போ மீல் சாப்பிட்டேன். கூடவே கேரள பாயசம் கொடுத்தார்கள். இன்று வித்தியாசமாக வேறு எதையாவது முயற்சி செய்யவேண்டும்.

நல்ல கூட்டம் இருந்தது. கொசுக்கள் அதற்கும் மேல். அதுதான் பயமாக உள்ளது.

சங்கமம் இந்த முறை சென்னையின் 17 இடங்களில் நடைபெறுகிறது. பொங்கல் சமயத்தில் ஊரையே திருவிழாக்கோலம் பூணவைப்பது பெரிய விஷயம். லாஜிஸ்டிக்ஸ் சாதாரணமல்ல. பல முக்கியமான, மறைந்துபோகும் நிலையில் உள்ள கலைகளை, திறமைகளை முன்னுக்குக் கொண்டுவரச் செய்வது பாராட்டத்தக்கது. இந்த நிகழ்ச்சி, கட்சி பேதம் இல்லாமல், ஆண்டாண்டு தொடர்ந்து நடக்க, இரு கட்சிகளும் ஒருசேரப் புகழும் அண்ணாவின் பெயரால் ஆசீர்வதிக்கிறேன்.

தமிழிலிருந்து ஹிந்தி மொழிமாற்ற ஆள்(கள்) தேவை

தமிழிலிருந்து நேரடியாக ஹிந்திக்கு மொழிமாற்றம் செய்யும் திறமை உள்ளவரா? அல்லது உங்களுக்குத் தெரிந்த யாராவது ஒருவர் அப்படிப்பட்ட திறன் கொண்டவரா?

அப்படியானால் என்னைத்தொடர்பு கொள்ளுங்கள். (சும்மா பிராதமிக், மத்யமா ஹிந்தி பிரசார் சபாவில் படித்துவிட்டு “தூய” ஹிந்தியில் மொழிபெயர்க்கும் ரகமாக இருப்பவர்கள் விட்டுவிடுங்கள். நானே பிரவீன் வரை படித்தவன்தான்! என் ஹிந்தி எவ்வளவு மோசம் என்று எனக்கே தெரியும்:-)

எனக்குத் தேவை, நன்கு சரளமான, 21-ம் நூற்றாண்டு ஹிந்தியில் மொழிபெயர்க்கும் திறன். கிழக்கின் புத்தகங்கள் எந்த அளவுக்கு தமிழில் சரளமாக உள்ளனவோ அதே அளவுக்கு ஹிந்தி மொழிமாற்றத்தில் படிக்கச் சரளமாக இருக்கவேண்டும்.

தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல்: badri@nhm.in

Monday, January 11, 2010

ராமேஸ்வரத்தில் சூரிய கிரகணம்

15-ம் தேதி, கங்கண சூரிய கிரகணத்தைக் காண நான் ராமேஸ்வரம் செல்கிறேன். குடும்பத்தினருடன் நண்பர்கள் சிலரும் கூட வருகிறார்கள் - முக்கியமாக பேரா. அனந்தன் வருகிறார்.

கங்கண சூரிய கிரகணம் என்பது அபூர்வமாகவே ஏற்படும் ஒரு நிகழ்வு. அதுவும் நாம் இருக்கும் பகுதியில் வருவது பெரிய விஷயம்.

கிரகணங்கள் மனிதர்களைப் பயமுறுத்திய ஒன்று. அதனால்தான் சூரியனையும் சந்திரனையும் பாம்பு விழுங்குகிறது, டிராகன் விழுங்குகிறது என்றெல்லாம் காரணங்கள் சொன்னார்கள். ஆனால் அறிவியல் வளர்ச்சி பெற்றுள்ள இன்றுகூட பலருக்கும் இதைப் பற்றிய தெளிவில்லை.

கன்யாகுமரியிலும் ராமேஸ்வரத்திலும் (தனுஷ்கோடி) இந்த கிரகணம் அழகாக, கங்கணம் போலத் தெரியும். கங்கணம் என்றால் கையில் போடும் வளையல் போன்ற ஓர் ஆபரணம். வெளிப்புறம் மட்டும் தகதகக்கும் தங்கம் போன்ற ஒரு வட்டம்.

தமிழகத்தில் பகுதிகளில் பாதி கிரகணம் தெரியும். வேண்டிய முன்னேற்பாடுகளுடன் கிரகணத்தைப் பாருங்கள்.

சென்னை சங்கமத்தில் கிழக்கு பதிப்பக அரங்கு

சென்னை சங்கமம் ஆண்டாண்டு பொங்கல் சமயத்தில் சென்னையில் நடக்கும் விழாவாக ஆகியுள்ளது. இந்த ஆண்டு சென்னை முழுவதும் 15 இடங்களில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதன் அடிப்படை, நாட்டார் கலைகளை முன்வைப்பது என்றாலும், கூடவே பாட்டு கூத்துடன், உணவு ஒரு பெரும் இடத்தைப் பிடித்துள்ளது.

நிகழ்ச்சி நடத்துனர்களிடம் பேசி அனைத்து இடங்களிலும் புத்தகங்களைக் காட்சிக்கு (விற்பனைக்கும்தான்!) வைக்க விரும்புவதாகச் சொல்லியிருந்தோம். அவர்கள் ஒரே ஓர் இடத்தில் மட்டும் புத்தகக் கடையை வைக்கலாம் என்று அனுமதி தந்துள்ளனர். இந்த வசதியை அனைத்து பதிப்பாளர்களுக்குமே தருகின்றனர் (எனவே பிரத்யேகமாக என்று எங்களுக்கு மட்டும் கிடையாது!). ஒவ்வொரு கடைக்கும் கட்டணம் உண்டு. நக்கீரன் பங்கேற்கும் என்று தெரிகிறது. வேறு யாரெல்லாம் வருவார்கள் என்று தெரியாது.

இன்று 11 ஜனவரி முதல் சங்கமம் நிகழ்ச்சி முடியும் 16 ஜனவரி வரையில் இந்த இடத்தில் கிழக்கு பதிப்பகத்தின் புத்தக விற்பனை நடக்கும்.

10x10 அளவிலான ஓர் இடத்தில், மெரீனா கடற்கரை, லேடி வில்லிங்டன் கல்வியியல் அமைப்பு வளாகத்தில் கடை இருக்கும். இடம் குறைவு என்பதால் புதிய புத்தகங்கள் ஒரு சில மட்டுமே கிடைக்கும் என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள். நேற்று முடிந்த புத்தகக் காட்சியில் புத்தகம் வாங்கத் தவறவிட்ட பலரும் இங்கு கட்டாயம் சென்று உணவை ருசித்துக்கொண்டே, தமிழர் கலைகளையும் ரசித்துக்கொண்டே புத்தகங்களையும் வாங்கலாம்.

தொடர்புக்கு: மஹாராஜன், 94443-55906
.

புத்தகக் காட்சி - சில கருத்துகள் - 2

சென்னை புத்தகக் காட்சிக்கான ஆங்கில விக்கிபீடியா பதிவில் இதுதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய புத்தகக் காட்சி என்ற எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
The Chennai Book Fair is the biggest book fairs in the country with almost all major publishers of India participating in it. Some of the regular participants include Oxford University Press, Cambridge University Press, Pustak Mahal, Higginbotham's, Orient Longman, Macmillan Publishers, Tata McGraw-Hill, S. Chand and Co., Sura Publishing House, India Book House, British Council, The Hindu and Asian Educational Services.
ஆனால் உண்மை அதுவல்ல. ஆண்டாண்டு நடக்கும் கொல்கத்தா புத்தகக் காட்சி, இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை டெல்லியில் நடக்கும் உலகப் புத்தகக் காட்சி ஆகியவையே இந்தியாவில் மிகப்பெரியவை என்று அடித்துச் சொல்லலாம். சென்னை நிச்சயம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

ஆனால் சென்னையால் முதல் இடத்தை அடைய முடியும்! சந்தேகமே இல்லை.

அதற்குமுன் சில பிரச்னைகளை அலசலாம்.

இந்த ஆண்டு (இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் சரி!) சென்னையில் நடந்து முடிந்துள்ள புத்தகக் காட்சியில் யார் இருந்தார்கள் என்று பார்ப்பதைவிட யார் இல்லை என்று பார்ப்போம்.

பெங்குவின் இல்லை.

ஹார்ப்பர் காலின்ஸ் இல்லை.

ராண்டம் ஹவுஸ் இல்லை.

பியர்சன் இல்லை.

மெக்ரா ஹில் இல்லை.

இன்னும் பல முக்கியமான ஆங்கிலப் பதிப்பாளர்கள் ஒன்று இல்லை, அல்லது துக்கினியூண்டு ஸ்டால் எடுத்திருந்தனர். ஒரு காலத்தில் ஆங்கிலப் பதிப்பாளர்கள் மட்டுமே இருந்த நிலை போய், இன்று ஆங்கிலப் பதிப்பாளர்கள் சென்னை புத்தகக் காட்சியில் சிரத்தையே காண்பிப்பதில்லை. இதனால் பொதுமக்களுக்குத்தான் இழப்பு.

ஏன் இந்த நிலை? முதலில் பபாஸியில் ஆங்கில எதிர்ப்பு மனோபாவம் நிலவுகிறது என்றே சொல்வேன். தமிழ் விரும்பிகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் பல விஷயங்களும் அதே நேரம் பபாஸியில் நடக்கிறது. உதாரணமாக, பபாஸி கூட்டம் நடைபெறும்போது தமிழில் பேசவேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் பேசவேண்டுமா என்பதில் ஒரு கூச்சல் குழப்பம் இருக்கும். ஆண்டிறுதி அறிக்கையில் முக்கியமாக கணக்கு வழக்குகளைக் கொடுக்கும் இடத்தில் எல்லாமே ஆங்கிலத்தில் மட்டும்தான் இருக்கும். (கடந்த ஆண்டு அப்படித்தான் இருந்தது.)

பபாஸியில் எழுத்துபூர்வமான அறிக்கைகள் அனைத்தும் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சம அளவில் இருக்கவேண்டும். எதுவும் ஆங்கிலத்தில் மட்டுமோ, தமிழில் மட்டுமோ இருக்கக்கூடாது. இதனைச் சரி செய்வது எளிது. அலுவலர்கள் மனம் வைத்தால் எளிதாகச் செய்துவிடலாம். எனவே இதனை நான் பெரிதுபடுத்திப் பேசப்போவதில்லை.

ஆனால் உள்ளூர ஒரு தேவையற்ற discrimination நிலவுவதைப் பற்றி நான் பேசியே ஆகவேண்டும். ஆங்கில உறுப்பினர்களுக்கு ஸ்டால் எடுக்க இரண்டு மடங்குக் கட்டணம்! இது சரியல்ல, முறையும் அல்ல. ஏன் இத்தனை நாள்கள் ஆங்கில உறுப்பினர்கள் இதனை விட்டுவைத்துள்ளனர் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு கட்டத்தில் தமிழ் பதிப்பாளர்கள் மிகவும் குறைவாக இருந்தபோது அவர்களை அதிகம் உள்ளே கொண்டுவரவேண்டும் என்பதற்காக தமிழ் பதிப்பாளர்களுக்கு அரை விலையில் கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றோ மொத்தம் கடை போடுபவர்களில் 75% தமிழ் பதிப்பாளர்கள். இனியும் ஆங்கிலப் பதிப்பாளர்களுக்கு இரட்டை கட்டணம் என்றால் அது நியாயமற்றதாகவே தோன்றுகிறது. இந்த discrimination நிச்சயமாக ஒழிக்கப்படவேண்டும். இதனை நான் ஒரு தீர்மானமாக அடுத்த ஆண்டுக்குள் பபாஸி கூட்டத்தில் கொண்டுவர உள்ளேன்.

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் டெல்லியிலோ, கொல்கத்தாவிலோ, பெங்களூருவிலோ புத்தகக் காட்சி நடக்கும்போது பெங்குவின் அரங்குக்குச் சென்றுவாருங்கள். என்னைப் போன்ற பதிப்பாளர்களுக்கு பெங்குவின்தான் ஆதர்சம். அவர்களைப் பார்த்தே என்ன செய்யவேண்டும் என்று கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அவர்கள் தரத்துக்கு என்றாவது ஒருநாள் தமிழில் புத்தகங்கள் கொண்டுவரக்கூடும் என்று நம்புகிறேன். ஆனால் அவர்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள சென்னை வாசகர்களுக்கு வாய்ப்பே கிடையாது.

அவர்கள் ஏன் சென்னைக்கு வரமாட்டார்கள் என்று பார்ப்போம். கொல்கத்தாவில் அவர்கள் எடுக்கும் இடம் 3000 சதுர அடிக்குக் குறையாது. டெல்லியில் நிச்சயம் 2000 சதுர அடிக்குக் குறையாமல் இருப்பார்கள். பெங்களூருவிலும் கிட்டத்தட்ட அப்படியே. சென்னையில் அவர்களுக்கு பபாஸி 400 சதுர அடிக்கு மேல் தரமாட்டார்கள்! கேட்டாலும் கிடைக்காது!

சதுர அடி அதிகம் இருந்தால் பணத்தை அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள் என்ற எண்ணமோ என்னவோ! இது பணம் சார்ந்ததே இல்லை. பெங்குவினிடம் இருக்கும் புத்தகங்களை வரிசைப்படுத்தி அழகாக அடுக்கிவைக்கவே இந்த அளவு இடம் தேவைப்படும். அந்த ரேஞ்சைப் பார்த்தால்தான் உங்களுக்கு இது புரிய வரும். புத்தகம் என்றால் என்ன, எதையெல்லாம் அற்புதமான புத்தகமாக ஆக்கலாம் என்று புரிந்துகொள்ள அவர்களை நாம்தான் கெஞ்சிக் கூத்தாடி சென்னைக்கு அழைத்துக்கொண்டு வரவேண்டும். கிணற்றுத் தவளைகள் போல நம் ஊருக்கு நாமே ராஜா என்று நினைத்து நாம் உட்கார்ந்திருந்தால் இதனால் பதிப்பாளர்களுக்கும் பயன் இல்லை, வாசகர்களுக்கும் பயன் இல்லை.

மற்றொன்று, இந்த ஆங்கிலப் பதிப்பாளர்கள் சென்னை வந்தால்தான் தமிழ்ப் பதிப்பாளர்கள் பலரும் அவர்களுடன் நெருங்கிப் பழகமுடியும். இதனால் தமிழாக்கல் உரிமை போன்ற பலவற்றை சாதாரண தமிழ்ப் பதிப்பாளரும் பெறமுடியும். இன்று தமிழாக்கல் உரிமையை அதிகம் பெறும் நிறுவனங்கள் என்று பார்த்தால் கண்ணதாசன், அடையாளம், கிழக்கு, விகடன், காலச்சுவடு ஆகியவற்றைத்தான் குறிப்பிட்டுச் சொல்லலாம். பாரதி புத்தகாலயம், அலைகள், என்.சி.பி.எச் போன்ற இடதுசாரி பதிப்பகங்கள் உள்ளூர இருக்கும் இடதுசாரித் தொடர்புகளால் இடதுசாரி ஆங்கிலப் புத்தகங்களின் மொழிமாற்றல் உரிமையைப் பெறக்கூடும். மற்றவர்கள் ஏதோ, இங்கொன்றும் அங்கொன்றுமாக, தெரிந்த நபர்களைத் தொடர்புகொண்டு பெற்றால்தான் உண்டு.

ஏற்கெனவே அரங்குகள் அதிகம், இதில் மேலும் பதிப்பாளர்களை அழைத்துக்கொண்டு வந்தால் உள்ளவர்களுக்கு வருமானம் போய்விடுமே என்று நினைக்கவே கூடாது. இப்போதே ஒரு சிலர் நல்ல வருமானம் பெற, பலர் காலியான கடைகளுக்கு முன் தொய்ந்த முகத்துடன்தான் உட்கார்ந்திருந்தனர். அதற்கான காரணம் அதிகமாகும் கடைகள் அல்ல என்பது வெளிப்படை.

கூட்டத்தை எதிர்கொள்வது எப்படி என்பதற்கு வேறு சில திட்டமிடுதல்கள் தேவை. இவற்றை அடுத்து பேசுகிறேன்.

(தொடரும்)

Sunday, January 10, 2010

புத்தகக் காட்சி - சில கருத்துகள் - 1

வருட முதல் நாள் புத்தகக் காட்சிக்குச் சென்றபின், இன்றுதான் மீண்டும் சென்றேன். சனிக்கிழமை (நேற்று) கடுமையான கூட்டம் என்றார்கள். இன்றும் கிட்டத்தட்ட அதே அளவு கூட்டம்தான்.

ஒருவிதத்தில் இந்தக் கூட்டத்தைப் பார்க்க மலைப்பாக இருக்கிறது. அந்த அளவு கூட்டம் அரங்குக்குள் நுழையும்போது அவர்களில் பெரும்பாலானோருக்கு மூச்சு விட சிரமமாகத்தான் இருந்திருக்கும். வெண்டிலேஷன் போதாது. ஒரியண்ட் பிளாக்ஸ்வானில் நானும் சத்யாவும் சில புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு இளம்பெண் அப்படியே மயங்கிச் சரிந்துவிட்டார். மூளைக்குச் செல்லவேண்டிய ஆக்சிஜன் போதாமையால் என்று நினைக்கிறேன். அப்படியே கைத்தாங்கலாக அவரை வெளியே அழைத்துச் சென்றனர் அவருடன் கூடவந்தவர்கள்.

சின்னஞ்சிறு குழந்தைகள் பலருடன் கூட வந்தவர்கள் மிகவும் திண்டாடிப்போய்விட்டனர். மேலே உள்ள ஃபேன்கள் அளிக்கும் காற்று போதாது. கடைசி வரிசையில் சில ராட்சச பெடஸ்டல் ஃபேன்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு அருகே பலர் உட்கார்ந்திருந்தனர். அதுதான் அவர்களுக்கு ஓரளவுக்கு ஆசுவாசம் அளித்தது.

கட்டுமானத்தின்போதே வெண்டிலேஷனை அடுத்தமுறை கவனமாகக் கையாளவேண்டும். பல இடங்களில் எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன்களை வைத்து உள்ளிருந்து காற்றை வெளியேற்றி, சுத்தமான காற்றை உள்ளே கொண்டுவருமாறு செய்யவேண்டும். சில இடங்களில் கடைகளில் எப்படி கடைக்காரர்கள் உட்கார்ந்திருந்தனர் என்றே ஆச்சரியமாக இருந்தது. சுற்றிச் சுற்றி வரும்போதே சில இடங்களில் வெக்கை தாங்க முடியவில்லை. இந்தக் குளிரடிக்கும் மார்கழி மாதத்தில்கூட அவ்வளவு கஷ்டம். டிசைனில் நிச்சயம் முன்னேற்றம் தேவை.

பெங்களூரு புத்தகக் காட்சியை நிச்சயம் சென்னைக்காரர்கள் ஒரு முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும். அங்கே இந்த அளவு கூட்டம் இல்லை, எனவே கூட்டம் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்; அந்த இடம் தாங்கியிருக்குமா என்ற கேள்வி எழலாம். இருந்தாலும் இங்கே சில முன்னேற்றங்களைக் கட்டாயம் செய்யவேண்டும்.

1. பெங்களூரு தரத்தில் தரையில் சீரான கார்ப்பெட். இங்கு தரையில் பல வண்ணங்களில் (பாராவின் பாஷையில் குடுகுடுப்பைக்காரன் உடையைப் போல!) பச்சை, நீலம், சிகப்பு என்று தராதரம் இல்லாமல் பேட்ச் போடப்பட்டிருந்தது. பெங்களூருவில் தரையில் கார்ப்பெட் பிய்ந்து, சுருண்டு, போவோர் வருவோரையெல்லாம் தடுக்கியதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள். ஆனால் சென்னையில் பல இடங்களில் மக்கள் தடுக்கியபடி சென்றுகொண்டிருந்தனர். யாரும் விழுந்துவிடக்கூடாதே என்று பயமாகவே இருந்தது.

2. எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன்கள்; நல்ல காற்றை உள்ளே நாலா பக்கங்களிலும் அனுப்பும்வகையில் டிசைன்.

3. டாய்லெட். இது வருடாவருடம் வாசகர்களின் எதிர்பார்ப்பு. இன்றுவரையில் விரும்பிய முன்னேற்றம் இல்லை. முக்கியமாக அரங்குக்கு வரும் பெண்கள் நிலை கஷ்டமே.

4. கேண்டீனில் கை கழுவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வசதிகள் படு மோசம். அடிப்படையில் மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் நீர் வசதி, கழிவுகளை வெளியேற்றும் வசதி மிக மிக முக்கியம். இல்லாவிட்டால் நோய்கள் பரவ வழி செய்யும்.

பலவித வசதிக் குறைவுகளுக்கு இடையிலும் கூட்டம் கூட்டமாக வந்து கொத்து கொத்தாகப் புத்தகங்களை வாங்கிச் செல்லும் மக்களுக்கு ஒரு மாபெரும் பூச்செண்டு! கடந்த சில ஆண்டுகளில் படிப்புப் பழக்கம் சென்னையில் மாபெரும் அளவு அதிகரித்திருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.

இந்த வார இறுதிக் கூட்டத்தைப் பார்க்கும்போது ஒன்று தோன்றுகிறது. நிச்சயம் சென்னையில் ஓர் ஆண்டில் இரண்டு புத்தகக் காட்சிகளை நடத்தலாம். ஜனவரியில் புனித ஜார்ஜ் பள்ளியில் பெரிய அளவில். ஜூன் மாதத்தில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தலாமா? நிச்சயம் பெரிய அளவு வரவேற்பு இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. (ஜூலையில் நெய்வேலி, ஆகஸ்டில் ஈரோடு. இம்முறை ஜூன் இறுதியில் கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுடன் சேர்ந்து கோவை புத்தகக் கண்காட்சியை நடத்தலாம் என்ற ஒரு திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் அறிகிறேன். அப்படியென்றால் சென்னையில் இந்த ஆண்டு மே கடைசியிலும் அடுத்த ஆண்டுமுதல் ஜூன் முதல் 15 நாள்களுக்குள்ளும் இருக்குமாறு செய்யலாம்.)

இந்த யோசனையை நான் பபாசிக்கு எழுத்துபூர்வமாக அனுப்பப்போகிறேன்.

(தொடரும்)

Thursday, January 07, 2010

ஜெயமோகன் புத்தகங்கள் கிழக்கில்

கிழக்கு பதிப்பகம் இந்த புத்தகக் கண்காட்சியின் ஜெயமோகனின் நான்கு நூல்களை வெளியிடுகிறது. மிகுந்த காலதாமதம் ஆனதற்கு வருந்துகிறோம். இன்று கண்காட்சியில் ஒரிரண்டு நூல்கள் கிடைக்கும். சனிக்கிழமை மீதமுள்ள இரண்டு நூல்களும் கிடைக்கும்.

இவை நான்கும், முன்னர் கவிதா பதிப்பகம் வெளியிட்டு, தற்சமயம் வரை அச்சில் இல்லாமல் இருந்தவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இப்போது கிடைக்கும் இரண்டு புத்தகங்கள்:
- வாழ்விலே ஒருமுறை (சிறுகதைகள்)
- இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள்

  

Sunday, January 03, 2010

பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும்

இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொல்ல மறந்தே போய்விட்டது. இரண்டு ஆண்டுகளுக்குமுன் பேரா. கனகசபாபதி (அப்போது பி.எஸ்.ஜி நிர்வாகவியல் கல்லூரியில் பணிபுரிந்துகொண்டிருந்தார்; இப்போது கோவையில் உள்ள தமிழக நகரவியல் கல்வியகத்தின் இயக்குனராக இருக்கிறார்) ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் குருமூர்த்தி, பண்டைய பாரதப் பொருளாதாரம் என்பது கேபிடலிசமும் கிடையாது; கம்யூனிசமும் கிடையாது என்ற பொருளில் பேசினார். கனகசபாபதியுடன் பேசும்போது அவர் பண்டைய இந்தியப் பொருளாதார முறைமைகள் பற்றி எழுதிய ஒரு புத்தகம் நிர்வாகவியல் கல்லூரிகளில் பாடப்புத்தகமாக இருக்கிறது என்ற தகவலைச் சொன்னார்.

அகடெமிக் ஆக இல்லாமல் பொதுமக்கள் படிக்கக்கூடிய வகையில் இதனை எளிதாக எழுதித்தர முடியுமா என்று அவரைக் கேட்டிருந்தேன். அடுத்த பல மாதங்கள் கழித்து அவர் ஒரு மேனுஸ்கிரிப்டை தைத்த நோட்டுப்புத்தகங்களில் எழுதி அனுப்பிவைத்தார். அதில் பல மாறுதல்களைச் செய்து அவருக்கு பி.டி.எஃப் கோப்பாக அனுப்பிவைத்தேன். மீண்டும் சில மாறுதல்கள். இறுதியாக புத்தக வடிவம் பெற்ற அது மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியானது.

இந்தியர்கள் பொதுவாக வரலாற்று ஆவணங்களை எழுதிவைப்பதில்லை. முகலாயர்கள் காலத்துக்குப் பிறகுதான் அழுத்தமான ஆவணங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இப்போதுதான் ஆங்கிலேயர் காலம் தொடர்பான ஒரு வரலாற்றுப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன் (The Men Who Ruled India, P. Mason). நன்கு எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், ஆங்கிலேயர்கள் ஏதோ பராபகாரிகள் என்றும், முகலாயர்கள் மற்றும் பிற முட்டாள் ராஜாக்களின் கையில் மாட்டித் தவிக்கும் இந்தியர்களைக் காக்க வந்த புண்ணியவான்கள் என்றுமே சித்திரிக்கப்படுகிறார்கள். அந்தச் சித்திரமும் அவசியம்தான். ஆனால் மறுபக்கம், இந்தியா என்ற ஒரு ‘நிலப்பரப்பு’ (ராஜ்ஜியம், தேசம் என்ற வரம்புகளுக்குள் அடைபடாத ஒரு பகுதி இது) உலகின் முதல் இரண்டு இடங்களுக்குள் இருந்தவந்த ஒரு பகுதி, திடீரென எப்படி பிச்சைக்கார நாடாக ஆனது என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

அந்தக் கேள்விக்கு ஒருவிதத்தில் பதில் சொல்கிறார் பேரா. கனகசபாபதி. அத்துடன் இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் என்ன என்பதைப் பற்றியும் அலசுகிறார்.

இந்துத்துவம், காலனியம், பின்காலனியம், கம்யூனிசம் போன்ற பல இசங்களின் பின்னணியில் இந்த நூலாசிரியர் சொல்வதை பலரும் ஆழ்ந்து விமர்சிக்கலாம். இதுவரையில் வலுவான விமர்சனங்கள் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. கனகசபாபதி தினமலர் பத்திரிகையில் இதே தொடர்பாக சில கட்டுரைகளை எழுதியுள்ளார். அதற்கும் அதிகமான எதிர்வினைகள் வந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட வேகமாகவே புத்தகம் விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட புத்தகம் என்பதால் இவ்வளவு ஆர்வம் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இது நிர்வாகவியல் மாணவர்களுக்காக மட்டுமல்ல, பொதுவான வாசகர்களுக்குமான புத்தகம். எளிமையான மொழியில் எழுதப்பட்ட புத்தகமும்கூட.

இதனைத் தொடர்ந்து, பேரா. கனகசபாபதி அடுத்து சில நூல்கள் எழுதுவதில் இறங்கியுள்ளார். ஆங்கிலத்தில் பாடப்புத்தகங்கள் எழுதுவதைவிட பொதுமக்களைச் சென்றடையும் தமிழ் நூல்களளை எழுதுவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது என்கிறார் இவர். இதேபோல பிற அகடெமிக் பேராசிரியர்களும் வெகுஜன நூல்களை தமிழில் எழுத ஆரம்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

[பின்குறிப்பு: இன்று ஒரு நாள் (ஞாயிறு) மட்டுமே, சென்னை புத்தகக் காட்சியில் இந்தப் புத்தகம் 100 பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது. அது ஒன்றே போதும், இதன் விற்பனை வேகத்தைச் சொல்ல!]

புத்தகத்தை வாங்க
.

மீன் தொட்டி

வெகு நாள்களாக என் மகளுக்கு ஒரு மீன் தொட்டியும் நிறைய மீன்களும் வாங்க ஆசை. ஆனால் அதை வைத்துப் பராமரிக்க முடியாது என்பதால் எனக்கு அதில் விருப்பமில்லை.

சென்ற வாரம் ஓர் இரவு நான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தபோது ஒரு சிறு கண்ணாடி ஜாடியைப் பார்த்தேன். முகத்தில் மலர்ச்சி பொங்க என் மகள் அந்த ஜாடியில் இருக்கும் இரண்டு மீன்களையும் ஒரு நத்தையையும் காட்டினாள்.


அன்று காலை 'fresh water ecosystem' என்பது பற்றியான ஒரு அறிவியல் ‘வகுப்பு’க்குச் சென்றிருந்தாள். அவர்கள் வெறும் பாடத்தோடு விடக்கூடாதோ? கையோடு ஒரு ஜாடியில் சில கூழாங்கற்கள், கொஞ்சம் புல், இரண்டு குட்டி மீன்கள், ஒரு நத்தை என்று கொடுத்து அனுப்பிவிட்டார்கள். குறுகிய வாய் உள்ள அந்த ஜாடியில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் மாற்றவேண்டும். அதற்குமுன் அந்த மீன்களையும் நத்தையையும் பத்திரமாகப் பிடித்து வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றவேண்டும். அந்தத் தண்ணீரும் நேராக மெட்ரோ வாட்டர் நீராக இருக்கக்கூடாதாம் (ஆம், பிறகென்ன, நேராக மெட்ரோ வாட்டர் நீர் என்றால் பரலோகம்தான்!). எனவே நீரைப் பிடித்து இரண்டு நாள்கள் தெளியவைத்து, பிறகுதான் அதைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டுமாம்.

தினம் தினம் அவற்றுக்குச் சோறு போடவேண்டும்! அதுவும் எப்படி? அதற்கென பிரத்யேகமான உணவு, கடுகு அளவுக்கு குட்டி குட்டி பெல்லட் வடிவில் உள்ளது. அதைச் ஒவ்வொரு நாள் மாலையும் சரியாக நான்கு மணிக்குப் போடவேண்டுமாம். அதுவும் எண்ணி சரியாக நான்கு தூள் - ஒரு மீனுக்கு இரண்டு. அப்படியானால் நத்தை எதைச் சாப்பிடும்? சரி, அது கொஞ்சம் குண்டாக இருப்பதால் நாலு உருண்டை அதற்கும் போடுவது என்று முடிவானது.

அந்தக் கண்ணாடி ஜாடி, நவீன நோவா கப்பலாக ஆகமுடியாமல், நத்தைக்கு ஒரு ஜோடி இல்லாமல் போனதில் எனக்கு வருத்தம்.

நத்தைக்கும் மீனுக்கும் குணத்தளவில் சிறிதுகூடத் தொடர்பு இல்லை. மீன்கள் துடிப்பானவை. ஓர் இடத்தில் நிற்பதே இல்லை. வேகமாக, விரைப்பாக விஷ்ஷென்று போய், கண்ணாடி ஜாடியின் சுவர்களை நெருங்கும்போது அநாயாசமாக திசையைச் சட்டென்று திருப்பி, அதே விஷ்க் வேகத்தில் சட் சட்டென்று திசைமாறிச் செல்லும் லாகவம் கொண்டவை. நத்தை ஓரிடத்தில் ஆடாமல் அசங்காமல் உடலை உள்ளே இழுத்துக்கொண்டு சுவரோடு சுவராக ஒட்டிக்கிடக்கிறது.

சரி, இதெல்லாம் எனக்கு எதற்கு என்றுதான் நான் விட்டேத்தியாக இருந்தேன். ஆனால் கடந்த மூன்று நாள்களாக அம்மாவும் பெண்ணும் பாட்டி வீட்டுக்குப் போய்விட்டனர். வீட்டில் உள்ள மீன்களைப் பார்த்துக்கொள்வது நான்தான்! முந்தைய தினம் புத்தகக் கண்காட்சி போகவேண்டும் என்றதால் காலையிலேயே 8 உணவு கடுகுகளைப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டேன். இரவு வீடு திரும்பியபோது அவை காணாமல் போயிருந்தன. யார் எதைச் சாப்பிட்டார்கள் என்று தெரியாது. நேற்று சரியாக நான்கு மணிக்கு சில துண்டுகளைப் போட்டேன். வேகமாகப் பாய்ந்து வந்த மீன்கள் தங்களுக்கெனச் சொல்லிவைத்த இரண்டு கடுகுகளை மட்டும் தின்றுவிட்டுச் சென்றுவிட்டன. நத்தை மெதுவாக எப்போதாவது வந்து தின்னும் போல. வெளியே சென்றுவிட்டு இரவு வந்து பார்த்தால் நத்தை அதற்குள் தின்று முடித்துவிட்டது.

மீன்களை இடம் மாற்ற வாங்கிய வலை ஜாடிக்குள் போக மறுக்கிறது. கடைசியாக வீட்டில் இருந்த சின்ன டீ வடிகட்டுவானை இதற்கெனப் பயன்படுத்திக்கொள்வது என்று முடிவாகியுள்ளது. மீனை இதன்மூலம் பிடிக்கும் என் பெண், கையாலேயே நத்தையை எடுத்துவிடுகிறாள். அதனால் நத்தைக்கு ஏதேனும் infection வந்துவிடலாம் என்று எச்சரித்தேன்! நத்தையை டீ வடிகட்டியில் பிடிப்பது முடிவதில்லை.

எனக்கென்னவோ, அடுத்து வீட்டில் சீக்கிரமே ஒரு பெரிய மீன் தொட்டி வந்துவிடும் என்று தோன்றுகிறது. எங்கே வைக்கப்போகிறோம் என்பதுதான் தெரியவில்லை.

அடுத்த பிரச்னை அடுத்த நாள் தாவரங்களைப் பற்றிய வகுப்பு முடிந்ததும் கையில் ஒரு மண் சட்டியில் கொஞ்சம் மண்ணைப் போட்டு, அதில் பிரண்டையை நட்டு, கூடவே சின்னச் சின்னதாக சில செடிகளையும் நட்டுக் கொடுத்துவிட்டார்கள். இப்போது மீன் தொட்டிக்குப் பக்கத்தில் பிரண்டையும் சேர்ந்துள்ளது.

நல்லவேளை... காட்டு விலங்குகள் பற்றிய வகுப்புக்கு அவளை அனுப்பவில்லை.

Saturday, January 02, 2010

2009-ன் இணைய டாப் 20 விற்பனை

நியூ ஹொரைஸன் மீடியா இணையத்தள விற்பனை மூலமாக 2009-ம் ஆண்டில் அதிகம் விற்பனையான நூல்கள் கீழே. இதில் “தேவி மகாத்மியம்” ஒருவர் கொத்தாக வாங்கியதால் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளது. “ராஜிவ் கொலை வழக்கு” புத்தகம் ஆண்டில் இறுதியில் வந்ததால் கடைசியில்தான் உள்ளது. “மாயவலை” இணையத்தில் முன்வெளியீட்டுத் திட்டம் கொண்டுவந்ததால் 2009 ஜனவரியில் அதிக விற்பனை ஆகியிருந்தது. கடந்த ஆண்டு பங்குச் சந்தை கொஞ்சமாக முன்னேற ஆரம்பித்துள்ளது. இல்லாவிட்டால் ஸ்டாக் மார்க்கெட் புத்தகங்கள் முன்னிலையில் இருக்கும்.
 1. பிரபாகரன்: ஒரு வாழ்க்கை
 2. பிரபாகரன்: வாழ்வும் மரணமும்
 3. தேவி மகாத்மியம்
 4. விடுதலைப் புலிகள்
 5. 1857 சிப்பாய் புரட்சி
 6. ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ்
 7. அள்ள அள்ளப் பணம் 2
 8. அள்ள அள்ளப் பணம் 4: போர்ட்ஃபோலியோ முதலீடுகள்
 9. இனிய தாம்பத்தியம்
 10. அள்ள அள்ளப் பணம் 1
 11. அள்ள அள்ளப் பணம் 3: ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்
 12. ஒபாமா, பராக்!
 13. ஆபிரஹாம் லிங்கன்: அடிமைகளின் சூரியன்
 14. மாயவலை
 15. ஹிட்லர்
 16. இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு
 17. குழந்தைகள் சைக்காலஜி
 18. கால இயந்திரம்
 19. நான்,வித்யா
 20. ராஜிவ் கொலை வழக்கு

ரகோத்தமன் கிழக்கு பதிப்பக அரங்கில் (P1) ஞாயிறு அன்று

கிழக்கு பதிப்பகம் இந்தப் புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டிருக்கும் ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம் நூல் மிகப்பெரிய வெற்றி கண்டிருக்கிறது. அரங்குக்குள் நுழையும் ஒவ்வொரு வாசகரும் திரும்பிச் செல்லும்போது இந்த நூலை வாங்கிச் செல்வதைக் காண முடிகிறது.

பத்திரிகைகள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் வட்டத்திலும் இந்நூல் மட்டுமே இன்றைக்குப் பேசப்படும் விஷயமாகி உள்ளது. பரபரப்பு அம்சம் தாண்டி, ஒரு நேர்மையான புலன் விசாரணை என்பது எவ்வாறு இருக்கும் என்பதை முதல் முறையாக இந்நூல் மிகையின்றி விவரித்திருப்பதும் இதன் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

நூலாசிரியரும் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரியுமான கே. ரகோத்தமன், பத்திரிகை, தொலைக்காட்சி பேட்டிகளில் கடந்த சில வாரங்களாக மிகவும் பிசி;-) ஒருவாறு மீடியா பேட்டிகளை முடித்துக்கொண்டு நாளைக்குப் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு அரங்குக்கு வருகை தர ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ராஜிவ் கொலை வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றிய கே. ரகோத்தமனை நேரில் சந்திக்க, என்ன வேண்டுமானாலும் கேள்விகள் கேட்க, உரையாட, புத்தகத்தில் அவரது கையெழுத்துப் பெற விரும்பும் வாசகர்கள், நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணி அளவில் கண்காட்சி வளாகத்தில் கிழக்கு அரங்குக்கு [P1] வரலாம்!

கிழக்கு அரங்கில் ரகோத்தமன் குறைந்தது ஒரு மணிநேரம் இருப்பார்.

====

அப்படி கிழக்கு அரங்குக்கு நாளை வரமுடியாதவர்கள் கட்டாயம் ஜீ தமிழ் தொலைக்காட்சியைப் பாருங்கள். இரவு 9.00-10.00. இது சென்ற வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம். ‘திடுக்’கிடும் தகவல்கள் இந்த இரண்டாம் பாகத்தில்தான் வெளியாக உள்ளன என்கிறார் சுதாங்கன்.

புத்தகக் கண்காட்சியில் நேற்று

காலை 11.45 சமயத்தில் கண்காட்சி சென்று சேர்ந்தேன். கடை வரிசைகளுக்கு இடையே நல்ல விசாலமான இடம். ஆனால் மற்றபடி அதே ஓரம் சுருண்டுகொள்ளும் கார்ப்பெட். ஆனால் சென்ற முறைகள் போல் இல்லாமல் பலர் சுறுசுறுப்பாக ஆணி அடித்து சுருண்டுகிடந்த விரிப்புகள் தடுக்கிவிடாமல் சரிசெய்துகொண்டிருந்தனர்.

நேராக P1 கிழக்கு ஸ்டால் சென்று என்ன நடக்கிறது என்று பார்த்தேன். இம்முறை ஆப்டிகல் ஸ்கேனர் கொண்டு பில்லிங் செய்கிறோம். லேண்ட்மார்க் போன்ற கடைகளில் பார்த்திருப்பீர்கள் அல்லவா, அதுபோல. எத்தனை புத்தகங்கள் என்றாலும் சட் சட்டென்று ஸ்கேன் செய்துவிடலாம். மற்றொன்று, இம்முறை நான்கைந்து இடங்களில் பில்லிங் நடந்தாலும் ஒரு புதுமையான சாஃப்ட்வேர் கொண்டு synchronised பில்லிங். நாளின் இறுதியில் ஒரு விநாடியில் எங்கு, என்ன விற்பனை, எந்தப் புத்தகங்கள் விற்பனை என்பதைப் பட்டென்று சொல்லிவிடலாம். ஸ்டாக் மேனேஜ்மெண்ட் தெளிவாக இருக்கும். எந்தப் புத்தகம் தீர்ந்துவிட்டது, எதை வேர்ஹவுஸிலிருந்து உடனடியாகக் கொண்டுவரவேண்டும் என்பதை கண்காணித்துக்கொண்டே இருக்கலாம். ரசீதுகளை அச்சிட மினி தெர்மல் பிரிண்டர். சட் சட்டென்று பிரிண்ட் செய்துகொடுக்கிறது. ஸ்டால்களில் பிராட்பேண்ட் இணைய இணைப்பு வைத்து அதன்மூலம் எல்லா பில்லிங் சிஸ்டம்களும் இணைக்கப்பட்டுள்ளன.

ப்ராடிஜி, மினிமேக்ஸ் புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கும் P32 ஸ்டாலில், ‘சுரண்டும் அட்டை’ முறையில் ஒரு புரோமோஷன்! இந்தக் கடையில் சமையல் புத்தகங்கள் கிடைப்பதால் பெண்கள் கூட்டம் நன்கு வருகிறது. எல்லாப் புத்தகங்களுமே 20, 25 ரூபாய் என்று இருப்பதால் (இங்கே அமர் சித்ர கதா புத்தகங்களும் கிடைக்கும். அவை 35) படுவேகமாக விற்பனை ஆகிறது. ஆறு புத்தகங்களுக்குமேல் வாங்கினால், ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டை வழங்கப்படும். அந்த அட்டையில் உள்ள வெள்ளித் தாளைச் சுரண்டினால், என்ன எண் வருகிறதோ, அந்த எண் அளவுக்கு இலவசப் புத்தகங்களை எடுத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் 2 புத்தகங்களாவது கிடைக்கும். அதிகபட்சம் 10 புத்தகங்கள்! குறைந்தது 50% பேர் இதனால் 6 புத்தகங்களுக்குமேல் கையில் எடுக்கிறார்கள்.

நேற்றுதான் முதல் ‘விடுமுறை நாள்’. காலை 11 மணிக்கே ஆரம்பமானது கண்காட்சி. கூட்டம் குறைவுதான் என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் கண்ணும் கருத்துமாக வந்த பலர் தாங்கள் குறித்துவைத்திருந்த புத்தகங்களை வாங்கிக்கொண்டு சென்றனர். இன்று சனியும் நாளை ஞாயிறும் கூட்டம் அதிகம் இருக்கலாம் என்று பேசிக்கொள்கிறார்கள்.

நிறைய நண்பர்களைச் சந்தித்தேன். சில கடைக்காரர்களுடன் பேசினேன். மதியம் பா.ராகவன், சோம.வள்ளியப்பனுடன் (வெளியிலிருந்து வாங்கிக் கொண்டுவரப்பட்ட) எலுமிச்சை சாதம், தயிர் சாதம் சாப்பிட்டேன். கேண்டீனில் உணவு சரியில்லை என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். மாலையில் லைட்டாக ஒரு பாவ் பாஜி சாப்பிட்டபோது தகவல் ஓரளவு உண்மைதான் என்று புலனானது. ஹரன் பிரசன்னாவுக்கு மட்டும் சூப் விற்பவர் ஒரே சூப் டோக்கனில், மேலும் மேலும் நிரப்பிக்கொண்டே இருக்கிறார். அதன் சூட்சுமம் என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும்.

சுற்றிக்கொண்டே இருந்தால் கால் வலிக்கிறது. ஆனால் அப்படியே தரையில் பல இடங்களிலும் உட்கார முடிகிறது. அந்த அளவுக்கு அகன்ற பாதைகள். இம்முறை உள்ளே ஜூஸ், தண்ணீர், காபி, டீ மட்டும்தான். பஜ்ஜி எல்லாம் இல்லை. அதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான்.

மாலை கேண்டீனில் நின்றுகொண்டிருந்தபோது புதிய தலைமுறை அரங்கில் யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். தூரத்திலிருந்து குரலில் ஏற்ற இறக்கங்களைக் கேட்கும்போது கிறிஸ்தவப் பிரசங்கம் போல இருந்தது. யார் பேசுகிறார்கள் என்று பார்க்கச் சென்றேன். வைகோ! இடிமுழக்கத்தில் ‘தம்பி அருணகிரி’ என்று தன் உதவியாளரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அருணகிரி எழுதிய புத்தகங்களை வெளியிட்டு ஆற்றும் உரைவீச்சு. ‘எனக்கு ஐ.நா சபையிலிருந்து அழைப்பு வந்தபோது தம்பி அருணகிரியை அழைத்துச்சென்றேன். அவனுக்கு உலக நாடுகளைப் பார்க்க ஆசை...’ இப்படி எதையோ சொல்லிக்கொண்டிருந்தார்.

வைகோவின் உடல்மொழி அபாரமானது. தோளில் கறுப்புத் துண்டு. அவர் அந்தத் துண்டை அவ்வப்போது சரி செய்துகொண்டே, கையை ஆட்டி ஆட்டி மைக் முன் பேசுவதைப் பார்க்கக் கண் கோடி வேண்டும். அப்படியே வாய் பிளந்து அவரைப் பார்த்துக்கொண்டே லேசாகப் பின்னோக்கி நகர்ந்ததில், அரங்கின் முன், இடது பக்கம் இருந்த மரத்தின் தடித்த வேர் தடுக்கிக் கீழே விழுந்துவிட்டேன். அருகில் இருந்த விகடன் பிரசுரத்தின் அப்பாஸும் பொன்.சீயும் பிடித்துத் தூக்கிவிட்டனர். காலில் சுளுக்கியிருக்குமோ என்று பயந்தேன். வீட்டுக்கு வந்து பார்த்ததில் பெரிய பிரச்னை இல்லை. இன்று காலை தேவலாம். இன்னும் லேசாக வலிக்கிறது; ஆனால் சில மணி நேரங்களில் சரியாகிவிடும்.

இன்று கண்காட்சிக்குச் செல்லமாட்டேன். இன்று மாலை தமிழ் பாரம்பரியக் குழுமம் நடத்தும் மாதாந்திரக் கூட்டம். இன்று பேரா. சுவாமிநாதன் அஜந்தா குகை ஓவியங்கள் பற்றிய அறிமுகம் ஒன்றைத் தருகிறார். இதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் (பிப்ரவரி 6) பூஷாவளி என்பவரும் சுவாமிநாதனும் சேர்ந்து அஜந்தா ஓவியங்களில் எந்தவிதமான துணி டிசைன்கள், பேட்டர்ன்கள் காணப்படுகின்றன, நவீன துணி மோஸ்தர்களுக்கு பண்டைய துணி டிசைன்களுக்கும் என்ன ஒற்றுமை என்பது பற்றிப் பேச உள்ளனர்.

மீண்டும் நாளை கண்காட்சி செல்வேன். (காலையில் மட்டும்.)

அள்ள அள்ளப் பணம் 5: டிரேடிங்

           

கடந்த நான்கு ஆண்டுகளாக, ஒவ்வொரு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு முன்னதாகவும் கடைசியாக நான் வேலை செய்யும் புத்தகம் அள்ள அள்ளப் பணம்தான்.

அள்ள அள்ளப் பண்ம் 1 (அப்போது அதற்கு ‘1’ என்ற ஒட்டு இல்லை) ஒரு ரயிலில் போகும்போது நடந்த விவாதத்தில் வந்தது. அதற்கு முன்னமேயே சோம.வள்ளியப்பன் இதைப் பற்றி யோசித்து வைத்திருந்தார். ஆம்பூரின் நாகூர் ரூமி கல்லூரிக்குச் சென்று மாணவர்களிடம் எழுத்து, இண்டெர்நெட் ஆகியவற்றை அறிமுக செய்யும் ‘திசைகள்’ நிகழ்ச்சி (2004 மார்ச்: பதிவு 1, 2, 3). ஆம்பூர் செல்லும் ரயிலில்தான் நானும் சோம.வள்ளியப்பனும் இந்த முதல் புத்தகத்தைப் பற்றி பேசினோம்.

ஆனால் இந்த எளிய அறிமுகப் புத்தகம் வருவதற்குள் உயிரை எடுத்துவிட்டது. அப்போது வள்ளியப்பன் மட்டுமல்ல, அனைவருமே கையெழுத்துப் பிரதிகளாக எழுதித் தருவார்கள். அது நேரடியாக பேஜ்மேக்கரில் ஸ்ரீலிபி எழுத்துருவில் அடிக்கப்படும். அதன்பின் அச்சான தாள்களை வைத்துக்கொண்டு எடிட் செய்யவேண்டும். முதலில் எடிடிங்கில் நான் கத்துக்குட்டி. அத்துடன் தாளில் எப்படி வேண்டாததை எடுத்துவிட்டு, புதிதாக எழுதிச் சேர்ப்பது? எனக்கு பேஜ்மேக்கரிலும் நேரடியாக எதையும் (அப்போது) செய்யத் தெரியாது.

அப்போது புழக்கத்தில் இருந்தது டிஸ்கி (TSCII) எழுத்துருக்கள் மட்டுமே. எ-கலப்பை அல்லது முரசு அஞ்சல் கொண்டு டிஸ்கியில் எழுதலாம். அல்லது ஸ்ரீலிபி மென்பொருள் இருந்தால் அந்த ‘என்கோடிங்’கில் எழுதலாம்.

ஏதோ ஒரு வழியில் ஸ்ரீலிபியில் அடிக்கப்பட்டிருந்த மொத்தப் புத்தகத்தையும் எப்படியோ ‘சுமாரான’ டிஸ்கிக்கு மாற்றி (நிறைய தவறுகள் புதிதாக முளைத்திருந்தன), மைக்ரோசாஃப்ட் வேர்டுக்குக் கொண்டுபோய், அங்கே டிராக் எடிடிங் போட்டு எடிட் செய்து, பிறகு மீண்டும் ஸ்ரீலிபிக்கு மாற்றி, பேஜ்மேக்கரில் சரி செய்து... இப்படி நிறைய வேலைகளுக்குப் பிறகு ஆகஸ்டில் ஒருமாதிரியாக முடிவடைந்த புத்தகம், கிட்டத்தட்ட அக்டோபர் அல்லது நவம்பரில்தான் அச்சானது.

அந்த சமயத்தில் எங்களுக்கு மாபெரும் விநியோக நெட்வொர்க்கும் கிடையாது. நிறுவனம் ஆரம்பித்து ஓராண்டு கூட முடியவில்லை. ஆனால் பங்குச்சந்தை ஏறுமுகத்தில் இருந்த காலம். இந்த அளவுக்கு எளிமையாக தமிழில் எந்தப் புத்தகமும் இல்லை. (உண்மையில் இன்றுவரை அதே நிலைதான்!) அதனால் மக்கள் கேட்டு வாங்கத் தொடங்கினர். வாய்மொழியாகப் பரவிய அதன் பெருமையால் முதல் ஆயிரம் பிரதிகளில், 200 அல்லது 300 மட்டுமே 2005 ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சியில் கையிருப்பாக இருந்தது. அதுவும் முதல் 3 நாள்களில் கண்காட்சியில் விற்றுப்போனது.

அவசர அவசரமாக சென்னை மைக்ரோபிரிண்டில் 2,000 பிரதிகள் அச்சடித்தோம். கடைசி வார இறுதிக்குள் சில பிரதிகள் கைக்குக் கிடைக்க, மேலும் நல்ல விற்பனை. பங்குச்சந்தையின் நுட்பங்களை மிக எளிமையாகச் சொல்லித்தரும் இந்தப் புத்தகம் அதன்பின் 1 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகியுள்ளது. இரண்டு முறை மேற்கொண்டு எடிட் செய்யப்பட்டு, மூன்று முறை அட்டை மாறி, இன்றும் விற்கிறது. சென்ற ஆண்டுதான் மிகக் குறைந்த விற்பனை. (மார்க்கெட் அதலபாதாளம் சென்றதல்லவா?)

2006 சென்னை கண்காட்சிக்கு புதிதாக ஏதும் வரவில்லை. ஆனால் 2006 முதல் சோம.வள்ளியப்பன் இதே டாபிக்கில் தொடர் புத்தகங்கள் எழுத ஆரம்பித்தார். அள்ள அள்ளப் பணம் 2, 2007 ஜனவரி புத்தகக் கண்காட்சியில் வெளியானது. 2008-ல் மூன்றாவது; 2009-ல் நான்காவது; 2010-ல் ஐந்தாவதும் கடைசியும். இனி அள்ள அள்ளப் பணம் என்ற பெயரில் புதிதாக வேறு எந்தப் புத்தகத்தையும் கொண்டுவரப்போவதில்லை. நேற்றுகூட சோம.வள்ளியப்பனிடம் ஸ்டாக் மார்க்கெட் பற்றிய சில புது ஐடியாக்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் அவை வேறு பெயர்களில்தான் வரும்.

கடைசியாக வந்துள்ளது ‘டிரேடிங்’ பற்றி. தினசரி வர்த்தகம். காலையில் வாங்கி, மாலைக்குள் விற்று, அல்லது காலையில் விற்று மாலைக்குள் வாங்கி நேர் செய்து, தினசரி லாபம் அல்லது நஷ்டம் பார்ப்பது. டெக்னிக்கல் சார்ட் பற்றி ஏற்கெனவே அள்ள அள்ளப் பணம் 2-ல் ஓரளவுக்கு சொல்லியிருந்தோம். இப்போது சற்று விஸ்தாரமாக.

ஆனாலும் இந்தத் தொடரில் உள்ள அனைத்துப் புத்தகங்களுமே அறிமுகப் புத்தகங்கள் மட்டுமே. இதைப் படித்து யாரும் நிபுணர்கள் ஆகிவிட முடியாது. அதற்கு அனுபவமும் மேலும் பல புத்தகங்களைப் படிப்பதும் தேவைப்படும். ஆனால் இந்தப் புத்தகங்களைப் படித்தே பலர் முதல்முறையாக பங்குச் சந்தைக்குள் காலடி எடுத்துவைத்துள்ளனர். படித்து பலன் பெற்ற பல ஆயிரம் பேர் அனுப்பும் மின்னஞ்சல்களைப் படித்தாலே இது தெரிய வரும். பலர் இந்தப் புத்தகங்களைப் படித்ததால்தான் தவறுகளைக் குறைத்து, நஷ்டத்தைத் தவிர்த்திருக்கிறார்கள்.

அடுத்து இந்தப் புத்தகங்கள் அனைத்தும் ஆங்கில வடிவத்தில் வரத் தொடங்கும். என் கையில் அள்ள அள்ளப் பணம் 1-ன் ஆங்கில மேனுஸ்கிரிப்ட் உள்ளது. எடிடிங் செய்துவருகிறேன்.

Friday, January 01, 2010

என் அறிவியல் கட்டுரைகள் - மின் புத்தகம்

சென்ற ஆண்டு நான் அம்ருதா இதழில் எழுதிய அனைத்து அறிவியல் கட்டுரைகளையும் ஒன்றாகச் சேர்த்து, ஒரு பி.டி.எஃப் கோப்பாக ஆக்கியுள்ளேன். இதனை யார் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

இதனால் உங்களுக்கு ஏதேனும் பயன் உண்டு என்றால் மகிழ்ச்சி அடைவேன். இவற்றில் சிலவாவது பின்னர் ப்ராடிஜி வழியாக முழுப் புத்தகங்களாக ஆகும்.

Download Link

.

புத்தாண்டு வாழ்த்துகள்

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு இன்று (வெள்ளி 1/1/2010) செல்வதாக உள்ளேன். நாள் முழுவதும் பெரும்பாலும் கண்காட்சியில்தான் இருப்பேன்.

சென்ற ஆண்டுகளைப் போல் அல்லாமல் இம்முறை நான் கண்காட்சியில் அதிக நாள்கள், அதிக நேரம் இருக்கப்போவதில்லை.

விற்பனை, கடைகள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் பொறுப்புடன் கவனித்துக்கொள்ள ஹரன்பிரசன்னா இருக்கிறார். மேற்பார்வை பார்க்க, ஆலோசனை வழங்க சத்யா இருக்கிறார். ஓடியாடி உழைக்க, திறம்பட கண்காட்சியை நடத்திட மணிகண்டன் தலைமையில் ஒரு சிறு அணி அற்புதமாக வேலை செய்கிறது.

எடிட்டோரியலைச் சேர்ந்த ராகவன், பார்த்தசாரதி, முகில், மருதன், கண்ணன், முத்துக்குமார், சுஜாதா ஆகியோர் ஏற்கெனவே கண்காட்சி அரங்கில் சுற்றிக்கொண்டே இருக்கின்றனர். அலுவலகத்தில் பாலு சத்யாவும் உமா சம்பத்தும் கடைசி நேரத்தில் மேலும் சில புத்தகங்களைக் கொண்டுவந்துவிடும் போராட்டத்தில் உள்ளனர். அசோகமித்திரன் குறுநாவல்கள் மூன்று தொகுப்புகளாக (அசோகமித்திரன் விருப்பத்துக்கு இணங்க ஒரு பெரும் ஹார்ட் பைண்டிங் புத்தகமாக இல்லாமல், சிறு சிறு புத்தகங்களாக) வெளியாகின்றன. நேற்றுதான் அச்சுக்குப் போனது. திங்கள் முதல் கிடைக்கும்; அல்லது நிச்சயம் செவ்வாயில் கிடைத்துவிடும்.

ஜெயமோகன் புத்தகங்கள் இரண்டையாவது கொண்டுவந்துவிடலாம் என்றால் அவருக்கு அனுப்பியிருந்த ‘ஃபைனல் புரூஃப்’ இன்னும் வந்துசேரவில்லை. வந்துவிட்டால் திங்கள்முதல் வேலை செய்து அடுத்த வார இறுதிக்குள் அவரது நான்கு புத்தகங்களில் இரண்டையாவது கண்காட்சியில் வைத்துவிடுவோம். இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதை ஆம்னிபஸ் கொஞ்சம் தாமதமாகிறது. சுமார் 1800 பக்கங்களுக்குமேல் வரும் அவரது மொத்தச் சிறுகதைகளின் தொகுப்பில் சில கதைகளைப் பிடிப்பதற்குள் நேரம் அதிகம் ஆகிவிட்டது. தட்டச்சில் நிறையப் பிழைகள் இருப்பதால் பாலு சத்யா அவற்றுடன் போராடிக்கொண்டிருக்கிறார். கண்காட்சியின் கடைசி நாளுக்குள் அவற்றைக் கொண்டுவந்துவிடவேண்டும்; இல்லாவிட்டால் நிச்சயம் பொங்கல் ரிலீஸ்.

சி. சரவணகார்த்திகேயனின் சந்திரயான் புத்தகம் செவ்வாய்க்கிழமைக்குள் வந்துவிடும்.

அலுவலகத்தில் கடைசி நிமிடம் வரை அட்டைகளை வடிவமைப்பதிலும் லே அவுட் செய்வதிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் குமரன், கதிரவன், முத்துகணேஷ், ஆனந்த் ஆகியோருக்கு கொஞ்சமாவது விடுமுறை தரவேண்டும். கடந்த 40 நாள்களில் அவ்வளவு வேலை! அவர்களையும் அடுத்த சில நாள்களில் கண்காட்சியில் நீங்கள் சந்திக்கலாம்.

சத்தமே இல்லாமல் பின்னணியில் உழைப்பவர்கள் இரண்டு குழுவினர். புரொடக்‌ஷன், வேர்ஹவுஸ். இன்னமும் புத்தகங்கள் அச்சில் உள்ளன. பிச்சையும் கிருஷ்ணகுமாரும் எப்படியோ அவற்றை வெளியே கொண்டுவந்துவிடும் வேலையில் இரவு பகல் பாராமல், விடுமுறை நாள் கவலையின்றி வேலை செய்கிறார்கள். தாளுக்குத்தான் திண்டாட்டம். அவ்வளவு ரீம்கள் தேவைப்படுகின்றன. கடைசி நேரத்தில் நிறைய காம்ப்ரமைஸ் செய்துள்ளோம். வெவ்வேறு பேப்பர்கள், வெவ்வேறு மில்களிலிருந்து! தடிமனில் வித்தியாசம். ஷேடில் வித்தியாசம். வருத்தமாக உள்ளது; ஆனால் வேறு வழியில்லை. தமிழகத்தில் கிடைக்கும் பேப்பர் அளவும் தரமும் என்று மாறுமோ அன்றுதான் வாசகர்களுக்கு இன்னமும் தரமான புத்தகங்களை எங்களால் தரமுடியும்.

கிடைத்தால், 70 gsm புக் பிரிண்ட் நேச்சுரல் ஷேட் சேஷசாயி பேப்பரையே எங்களது அனைத்து புத்தகங்களுக்கும் பயன்படுத்த விரும்புவேன். (ப்ராடிஜி, மினிமேக்ஸ் போன்ற புத்தகங்களுக்கு 60 gsm.) ஆனால் ஈரோட்டில் இருக்கும் அந்த மில், எங்களுக்குத் தேவையான குவாண்டிடி உற்பத்தி செய்வதில்லை. அதுவும் ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே எவ்வளவு வேண்டும் என்று சொன்னால்தான் வேண்டிய அளவு அடுத்த மாதம் கிடைக்கும். எங்கள் தொழிலில் இப்போதைக்கு அப்படி முன்கூட்டியே சொல்லமுடியாது. அந்த அளவு prediction systems இல்லை. மேலும் முன்கூட்டியே வாங்கிவைக்கவும் முடியாது. அதற்கான வொர்க்கிங் கேபிடல் அதிகம்; வைத்துப் பராமரிக்க இடமும் கிடையாது. எங்களது ஆங்கிலப் புத்தகங்கள் அனைத்துக்கும் இந்த பேப்பர்தான் பயன்படுத்துகிறோம். புத்தகம் தக்கை போல மிதக்கும்; தாள் கெட்டியாக இருக்கும். அச்சு நச்சென்று விழும்.

ஆனால், ஆனால்... பார்ப்போம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தாள் உற்பத்தியாளர்களுடன் ஏதேனும் ஒப்பந்தம் போட்டு சிலவற்றைச் சாதிக்க முடியுமா என்று பார்ப்போம்.

வேர்ஹவுஸில் பிச்சை, சதீஷ் தலைமையில் ஒரு மாபெரும் குழு நாள் ஒன்றுக்கு எத்தனை ஆயிரமோ புத்தகங்களை கட்டி கண்காட்சி நடக்கும் இடத்துக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது. தீரத் தீர பைகள், கேடலாக், புத்தகங்கள் என்று மாற்றி மாற்றி. இதற்கிடையில் புதிய புத்தகங்கள் உள்ளே வந்துகொண்டிருக்கும். அவற்றை எண்ணி, தரம் பார்த்து (நிஜமாகவே இந்தக் கட்டத்தில் முடியாத ஒரு காரியம்) சரியான இடத்தில் அடுக்கி, கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் மாற்றங்கள் செய்து...

புத்தகக் கண்காட்சி நடக்கும் நேரம் எங்களது மற்ற விற்பனை வேலைகள் எந்தவிதத்திலும் குறையாது. 25 விற்பனையாளர்கள் தமிழகம் முழுவதிலும் ஒவ்வொரு கடைக்கும் புத்தகங்களை தினம் தினம் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போடும் ஆர்டர்களையும் வேர்ஹவுஸ் அனுப்பியாகவேண்டும். புதிதாக 100-200 புத்தகங்கள் வந்திருக்கிறது என்றால் அந்த ஆர்டர்களும் பலமாக இருக்கும். அவற்றைக் கட்டி, டிரான்ஸ்போர்ட் அலுவலகங்களுக்கு எடுத்துச் சென்று அனுப்பவேண்டும்.

இதற்கிடையில் பள்ளிக்கூடங்களில் ப்ராடிஜி புக் கிளப் என்ற ஒரு திட்டம் செயலாகிக்கொண்டிருக்கிறது. சுமார் 200 பள்ளிகளில் இருக்கும் குழந்தைகள் தேர்ந்தெடுத்துள்ள புத்தகங்களைக் கட்டி, ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனி பார்சல் என்றாக்கி, ஒவ்வொரு பள்ளிக்கும் சரியாக அனுப்பவேண்டும். அங்கே தவறு என்றால் சரி செய்வது மிகவும் கடினம்.

இன்னும் பலரது பெயர்களைச் சொல்லவில்லை. சொல்ல இடம் இல்லை. இவர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். நியூ ஹொரைசன் மீடியாவின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் இந்த நூறு பேருக்கும் என் நன்றிகள்.

[பிகு: வரும் ஞாயிறு, மருதன், முகில் இருவரும் சித்ராவுடன் ஆஹா எஃப்.எம் 91.9 மெகாஹெர்ட்ஸில், 12 மணிக்கு கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இரண்டாம் உலகப்போர் பற்றிப் பேசுவார்கள். முகில் தயாரித்து அளிக்கும் இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.]

சுஜாதா புத்தகங்கள் கிழக்கில்

           

சுஜாதாவை நான் படிக்க ஆரம்பித்தது என் 7-வது வயதில். இரண்டாம் வகுப்பில் படிக்கும்போதே நான் தமிழின் அனைத்து வார இதழ்களையும் படிக்க ஆரம்பித்திருந்தேன். குங்குமம் இதழில் சற்று ரசாபாசமான கதையைப் படிக்கும்போது அம்மாவிடம் மாட்டிக்கொண்டு (இதழில் சுஜாதா கதை ஒன்றில் ஜெயராஜ் போட்டிருந்த ஓவியங்கள்தான் காரணம்!) அடி வாங்கியது ஞாபகம் இருக்கிறது.

சுஜாதாவின் புத்தகங்களை நாகப்பட்டினத்தில் இருந்த ஒரு பதிப்பாளர்தான் ஆரம்பத்தில் பதிப்பித்து வந்தார் (இமயம், குமரி). சுஜாதா ஒரு முறை நாகப்பட்டினம் வந்திருந்தார். டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு நாடகத்தை நடத்துவதற்கு. என் பள்ளிக்கூடத்துக்கு எதிரில் இருந்த குமரன் திருமண மண்டபத்தில்தான் நாடகம் நடைபெற்றது. எனக்கு அந்த நாடகம் பார்க்க டிக்கெட் கிடைக்கவில்லை.

1997-ல் நான் சுஜாதாவை நேரில் சந்தித்தேன். அப்போது கனகஸ்ரீ நகரில் நடத்தப்பட்ட சைபர் கஃபே ஒன்றில் தொழில்நுட்ப ஆலோசகராக நான் இருந்தேன். அந்த சைபர் கஃபேயில் பலமுறை சந்தித்துப் பேசியுள்ளோம். அப்போதெல்லாம் நான் அவருடன் கிரிக்கெட் பற்றி மட்டும்தான் பேசுவேன். ‘சார், உங்க கதைகள் எல்லாம் படிப்பேன், நானும் உங்க விசிறிதான்!’ என்று அவரிடம் நான் வழிந்ததில்லை. பின்னர் அதே ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் தமிழ் இணைய மாநாட்டில் சந்தித்தோம். தொடர்ந்து இங்கும் அங்கும் சந்திப்புகள் (ழ கணினி, டிஷ்நெட் அலுவலகத்தில்). அப்போது அரட்டைக்கு, கிரிக்கெட்டுடன் இணையத்தில் தமிழ் என்பதும் சேர்ந்துகொண்டது.

பின்னர் பதிப்பகம் ஆரம்பித்ததும் எங்களது ஃபோகஸ் நான்-ஃபிக்ஷன் என்பதாக மட்டுமே இருந்தது. சில அசோகமித்திரன் கதைகள், இந்திரா பார்த்தசாரதி கதைகள் பதிப்பித்திருந்தாலும், சுஜாதாவிடம் அவருடைய நூல்களைப் பதிப்பிப்பது பற்றிப் பேசியதே இல்லை.

இப்போது அவரது மறைவுக்குப் பிறகு, அவருடைய குடும்பத்தாருடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் வழியாக அவரது ஐந்து நாவல்களைப் பதிப்பிக்கிறோம். இவை அனைத்தும் முன்னர் திருமகள் நிலையம் (அல்லது விசா) வழியாகப் பதிப்பானவை. அதற்குமுன் இமயம்/குமரி வழியாகப் பதிப்பாகி இருக்கலாம். முழுமையான பதிப்பு வரலாறு எனக்குத் தெரியாது. ஆனந்த விகடன், இந்தியா டுடே, சாவி ஆகிய இதழ்களில் தொடர்கதையாக வந்தவையே இவை.

மிகவும் கடைசி நேரத்தில் ஏற்படுத்திய ஒப்பந்தம் என்பதால், சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருவதில் சிறு தாமதம். ஆனாலும் நாளை சனிக்கிழமைக்குள் புத்தகம் வந்துவிடும் என்கிறார்கள் ‘உற்பத்தித் துறை’யினர். இன்றே (1-1-2010) அன்றேகூட வந்துவிடலாம்.

முந்தைய பதிப்பிலிருந்து நிறைய அச்சுப் பிழைகள் களையப்பட்டிருக்கின்றன. மேலும் ஏதேனும் பிழைகள் தென்பட்டால் தயவுசெய்து சுட்டிக்காட்டவும். அவற்றையும் அடுத்த அச்சுகளில் களைந்துவிடுகிறோம்.

நீங்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் இந்தப் புத்தகங்கள் கிடைக்கவில்லை என்றால் எனக்குத் தகவல் சொல்லுங்கள். கிடைக்குமாறு செய்துவிடுகிறேன்.

ஆஸ்டின் இல்லம்: ரூ. 50
நில்லுங்கள் ராஜாவே: ரூ. 70
நிறமற்ற வானவில்: ரூ. 100
தீண்டும் இன்பம்: ரூ. 100
மீண்டும் ஜீனோ: ரூ. 150