Tuesday, September 30, 2014

பொது நூலக ஆணையும் பொது ஊழலும்

குற்றமும் தண்டனையும் என்ற தலைப்பில் நான் எழுதிய வலைப்பதிவு குறித்து ஃபேஸ்புக்கில் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். பொது நூலகத்துறையில் புத்தகம் வாங்கும்போது எழும் ஊழல் குறித்தும்  கல்வித்துறையில் ஊழல் குறித்தும் நான் அந்தப் பதிவில் எழுதியிருந்தேன். இப்போது ஜெயலலிதா சிறைக்குச் சென்றபின் எழுதிய அதனை ஏன் அதற்கு முன் எழுதவில்லை என்பதுதான் சிலரது கேள்வி.

நான் என் வலைப்பதிவில் எழுதுகிறேன். பத்திரிகைகளில் எழுதுகிறேன். ஃபேஸ்புக்கில் எழுதுகிறேன். அனைவரும் அனைத்தையும் படிப்பார்கள் என்று சொல்ல முடியாது.

அலமாரி என்ற ஓர் அச்சு இதழை நாங்கள் நடத்திவருகிறோம். புத்தகங்களுக்காக என்று பிரத்யேகமாக வரும் மாதப் பத்திரிகை அது. டேப்லாய்ட் ஃபார்மட்டில் எட்டு பக்கங்கள் கொண்டது. தற்போது சுமார் 12,000 பிரதிகள் அச்சிடுகிறோம். ஒவ்வொரு இதழிலும் பதிப்பாசிரியராக நான் ஒரு கட்டுரை எழுதுகிறேன். ஜூலை 2013-ல் நான் எழுதிய கட்டுரையைக் கீழே தருகிறேன். பதிப்புத் துறையில் இருக்கும் அனைவரும், அந்தப் பத்திரிகையைப் பெற்ற வாசகர்களும் இந்தக் கட்டுரையைப் படித்திருப்பார்கள்.

****

பொது நூலக ஆணையும் பொது ஊழலும் - ஜூலை 2013

தமிழகத்தில் 4,000-க்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள் உள்ளன. இவற்றுக்கு ஆண்டுக்கு ஆண்டு புதிதாகப் பதிப்பிக்கப்படும் புத்தகங்களை வாங்குவது தமிழக அரசின் கடமை.

இதற்கெனத் தமிழக அரசு கையிலிருந்து தனியாகக் காசு செலவு செய்யவேண்டியதில்லை. சொத்து வரியில் நூலக மீவரி (லைப்ரரி செஸ்) என்ற வரி மக்களிடமிருந்தே வசூலிக்கப்படுகிறது. நகராட்சிகளும் மாநாராட்சிகளும் இந்த மீவரியை சொத்து வரி வசூலிக்கும்போது வசூலித்து, மாநில அரசிடம் கொடுக்கவேண்டும். மாநில அரசு இந்தத் தொகையைக் கொண்டு நூலகங்களைப் பராமரித்தல், புதிய புத்தகங்கள் வாங்குதல் ஆகியவற்றைச் செய்யவேண்டும்.

இதுதவிர, ராஜா ராம்மோகன் ராய் நூலக நிதி என்ற மத்திய அரசின் நிதி உதவியும் மாநில அரசுகளுக்குத் தரப்படுகிறது. இது இணை நிதி என்ற பெயரில் வழங்கப்படுவது. அதாவது ஒரு குறிப்பிட்ட தொகை (எடுத்துக்காட்டாக ரூ. 5 கோடி) ஒரு மாநிலத்துக்கு என ஒதுக்கப்படும். அதே அளவு அல்லது அதற்குமேல் மாநில அரசு செலவழித்தால்தான் இந்தத் தொகையை மத்திய அரசு மாநில அரசுக்குத் தரும். இதற்குக் கீழாகச் செலவழித்தால் (அதாவது ரூ. 4 கோடி மட்டும் தன் நிதியிலிருந்து செலவழித்தால்), அதற்கு இணையான தொகையை மட்டுமே மத்திய அரசு மாநில அரசுக்குத் தரும்.

இவ்வளவெல்லாம் இருந்தாலும் நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்குவது என்பது தமிழகத்தில் என்றுமே ஒழுங்காக நடந்ததில்லை. இந்த ஆண்டுப் புத்தகங்களை அடுத்த ஆண்டு தொடக்கத்திலாவது வாங்கினால் நூலகங்களைப் பயன்படுத்துவோருக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் ஆண்டுக் கணக்கில் தள்ளிப்போகிற அவலமே இப்போது நடைமுறையில் உள்ளது.

இப்போது நடப்பாண்டு 2013. இன்னும் 2010-11ம் ஆண்டுக்கான புத்தகங்களே வாங்கப்படவில்லை. அதன்பின் 2011-12, பின்னர் 2012-13 என்ற இரு ஆண்டுகளுக்கும் வாங்கவேண்டியிருக்கும். அதற்குள் 2013-14 நிதி ஆண்டே முடிந்துவிடும்.

இது ஒருபுறம் என்றால், புத்தகங்களை வாங்குவதில் எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லை. எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதைப் பொருத்து, ஒருசில பதிப்பகங்களுக்கு முன்னுரிமை, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஒருசில பதிப்பகங்களின் புத்தகங்கள் தடையில்லாமல் வாங்கப்படுதல் ஆகியவற்றைப் பார்க்கிறோம்.

கடைசியாகப் பொது நூலக ஆணை வெளியானபோது (2013-ன் தொடக்கத்தில்), ஏகப்பட்ட லஞ்சம் பெறப்பட்டு, அவற்றைக் கொடுத்த பதிப்பகங்களுக்கு மட்டுமே புத்தகங்கள் தரப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்கமான பபாசி ஒரு சந்திப்பை நடத்தியது. நியாயமான முறையில் அனைவரிடமிருந்தும் புத்தகங்கள் பெறப்படவில்லை என்பது அங்கே நிகழ்ந்த விவாதங்களின்போது தெரியவந்தது. மிகக் கடுமையான வாக்குவாதங்கள் நடந்தன. நூலகத் துறை எப்போதும் கல்வி அமைச்சரின்கீழ் வருவதாக இருக்கும். அப்போதுதான் புதிதாகக் கல்வி அமைச்சர் மாற்றப்பட்டிருகிறார் என்பதால் அவரிடம் சென்று முறையிட்டு, நூலக ஆணை கிடைக்காதவர்களுக்குச் சிறிதாவது பணம் ஒதுக்க முடியுமா என்று கேட்க இருப்பதாக பபாசி நிர்வாகிகள் சொன்னார்கள்.

ஆனால், அதனாலெல்லாம் பலன் எதும் இல்லை.

இனி வரும் ஆண்டுகளில் புத்தகங்களை வாங்கும்போது நூலக ஆணைகளை வெளியிடும் நூலகத் துறை நியாயமாக நடந்துகொள்ள வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை.

ஏனெனில், பதிப்பாளர்கள் சிலர் நியாயமாக, வெளிப்படையாக நூல்கள் வாங்கப்படுவதை விரும்புவதில்லை. அவரவர் புத்தகங்களை, ஏதோ ஒருவிதத்தில் நூலகங்களுக்குத் தள்ளிவிட்டு, அதன்மூலம் வருவாய் பெற்றிடலாம் என்பது அவர்கள் விருப்பம்.

வரும் விண்ணப்பங்களைச் சரி பார்த்து, அவற்றிலிருந்து வேண்டிய புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் குழு முதலில் வெளிப்படையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

நூலகங்களால் பயன் பெறுவோர் எனப்படும் மக்கள் இதைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் இருக்கிறார்கள்.

இந்த அளவுக்கு மூடுமந்திரமாக நடப்பது நிர்வாகத்தில் இருப்போருக்கும் வசதியானதுதான். அது லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் வழிவகுக்கிறது. அதனால் சிலருக்கு ஆதாயம் ஏற்படுகிறது.

*

பொத்தாம் பொதுவாக இவ்வாறு குற்றச்சாட்டு வைப்பது எனக்கே வருத்தம் அளிக்கிறது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் ஒரு பதிப்பகத்தை நியாயமான முறையில் நடத்திவருபவனாக நான் கேட்கும், அறியும் தகவல்கள் அவ்வளவு நல்லவையாக இல்லை. நாங்கள் நடத்துவது புலனாய்வு இதழ் அல்ல, அங்கும் இங்கும் தேடித் தரவுகளைச் சேகரித்து, இவர்தான் குற்றம் செய்துள்ளார், இவர் லஞ்சம் வாங்கினார் என்று வெளிப்படுத்த.

நூலகம் என்பதற்கு அதிக முக்கியம் இல்லாத நிலையில், நூலகத் துறைக்குப் பொறுப்பு வைக்கும் அமைச்சரோ, செயலரோ நல்லவராக இருந்து, இந்த ஆண்டு நியாயமான முறையில் புத்தகங்கள் பெறப்படும் என்று முடிவெடுத்தால் மட்டுமே இதற்கு விடிவு காலம் ஏற்படும். மற்றபடி இதைப் பற்றி எழுத, விவாதிக்கக்கூட ஊடகங்கள் நேரம் செலவிடப் போவதில்லை.

*** முடிவு ***

ஜெயலலிதா அரசில் மட்டுமல்ல, அதற்குமுன் கருணாநிதி ஆட்சியில் நடந்ததாகச் சொல்லப்படுவது பற்றியும் பதிவுகள் எழுதியிருக்கிறேன். ஒரு சாம்பிள் இங்கே:

சென்னையில் மாபெரும் நூலகம் - ஆகஸ்ட் 2008

அண்ணா மறுமலர்ச்சி திட்டம் புத்தக ஊழல்?- பிப்ரவரி 2009

 

Sunday, September 28, 2014

குற்றமும் தண்டனையும்

ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு நான்காண்டு சிறை + 100 கோடி ரூபாய் அபராதம் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் சில கேள்விகள் எழுகின்றன.

அவர் ஒருவர் மட்டும்தானா ஊழல் குற்றம் புரிந்தவர்? இல்லை. வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளவர்கள் என்று பார்த்தால் கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், அரசியல் இடைத்தரகர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் என்று ஒரு பெரும் கூட்டத்தைச் சொல்லலாம். இவர்கள் அரசு அல்லது அரசுசார் துறையில் இருந்துகொண்டு அல்லது அரசில் இருப்போருடன் உறவை ஏற்படுத்திக்கொண்டு தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, அரசு நிதியை அபகரித்து அல்லது பொதுமக்களிடமிருந்து பிடுங்கி அநியாயமாகப் பணம் சேர்த்தவர்கள். இப்படிச் சேர்த்த பணத்துக்கு நியாயமாக வரி கட்டினாலும் சரி, கட்டாவிட்டாலும் சரி, இவ்வாறு பணம் சேர்த்ததே சட்டத்துக்குப் புறம்பானது. இவர்கள்மீது புகார் இருந்தால், விசாரித்து, சாட்சியங்களைச் சேர்த்து, வழக்கு தொடர்ந்து, ஜெயலலிதாவுக்குத் தந்ததுபோல் தண்டனை பெற்றுத் தரலாம்.

ஆனால் பொதுவாக வெகு சிலர் தவிர மீதி பேருக்கு இம்மாதிரி வழக்கும் நடைபெறுவதில்லை, தண்டனையும் கிடைப்பதில்லை. அம்மாவுக்கு இப்போது கிடைத்துவரும் அனுதாபம் இதன் காரணமாகவே. எவ்வளவோ பொறுக்கிகள் தண்டனை பெறாமல் வெளியே சுதந்தரமாக உலாவ, இந்தம்மா மட்டும் பாவம், இப்படி ஆகிவிட்டதே என்ற பாமரத்தனமான அனுதாபம்.

ஏன் இந்த அம்மா மட்டும் மாட்டிக்கொண்டார்கள்? ஏனென்றால், இவர்கள் ஆடிய ஆட்டம் அப்படி. விட்டுவைத்த சாட்சியங்கள் அப்படி. கூடவே அரசியல் காரணத்தால் இவர்மீது உருப்படியான ஒரு வழக்கையாவது போட்டாகவேண்டும் என்று திமுக அரசு நடந்துகொண்டதும்கூட. அப்படிச் செய்யும்போது நல்லம்மா நாயுடு என்ற திறமையான ஒரு காவல்துறை அதிகாரியை விசாரணைக்குப் பொறுப்பாக நியமித்ததும் ஒரு காரணம். இறுதிக் காரணம் ஜான் மைக்கேல் டிகுன்ஹா என்ற சிறப்பு நீதிபதி. இப்படிப் பல காரணங்கள் ஒன்றுசேர்ந்துதான் ஜெயலலிதாவுக்குத் தண்டனை கிடைத்துள்ளது. இதில் ஒன்று சறுக்கியிருந்தாலும் ஜெயலலிதா தப்பியிருப்பார். இதைப்போல் 11 வழக்குகளிலிருந்து அவர் விடுவிக்கப்படவில்லையா?

முந்தைய ஆட்சியிலிருந்து தற்போதைய ஆட்சியில் ஜெயலலிதா மிகவும் திருந்திவிட்டார் என்று சொல்பவர்கள் அவருடைய ஒரு முகத்தை மட்டுமே பார்க்கிறார்கள். நான் பதிப்பாளனாக இருக்கிறேன். தற்போதைய அஇஅதிமுக ஆட்சியில் நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதில் உச்சபட்ச ஊழல் நடந்துவருகிறது. முன்னதாகவே லஞ்சம் கொடுத்தால்தான் ஆர்டரே கிடைக்கும். கொடுக்காதவர்களுக்குக் கிடைக்காமல் போகலாம் அல்லது கொஞ்சமாகக் கொடுக்கப்படலாம். இதற்கு முந்தைய திமுக ஆட்சியிலும் இதில் ஊழல் இருந்தது. ஆனால் இம்முறை நடக்கும் ஊழல் மிக மோசமானது என்று பதிப்பாளர்களிடம் பேசிப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும்.

அதேபோல சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடங்களை ஆரம்பிக்க மாநில அரசிடம் நோ அப்ஜெக்‌ஷன் சான்றிதழ் பெற நாற்பது லட்ச ரூபாய், சமச்சீர் பள்ளி தொடங்கி எட்டாம் வகுப்பு வரை அனுமதி பெற ஆறு லட்ச ரூபாய், அதன்பின் ஒன்பது/பத்து வகுப்புகளுக்கான அனுமதிக்கும் இன்னொரு ஐந்து லட்சம், 11/12 வகுப்புகளுக்கு மேலும் ஐந்து லட்சம் என்று ரேட் கார்ட் போட்டு ஊழல் நடக்கிறது இந்த ஆட்சியில்தான்.

இது நான் பலரிடம் பேசித் தெரிந்துகொண்ட தகவல். எனக்குச் சம்பந்தமில்லாத பல துறைகள் குறித்து எனக்கு விவரங்கள் அதிகம் தெரியாது. இதெல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியாமலா நடந்துகொண்டிருக்கின்றன? அரசு கேபிள் டிவி தொடர்பாக சிறு பிரசுரமே வெளியாகும் அளவுக்குப் பல கோடிகளில் ஊழல் நடந்துள்ளது.

சாதாரணப் பொதுமக்கள் அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர் போன்றவற்றை மட்டும்தான் பார்க்கிறார்கள். முந்தைய ஆட்சியில் ஊழலை இந்த ஆட்சியின் ஊழலோடு வரிக்கு வரி ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்கு நம்மிடம் தரவுகள் இல்லை. இந்த ஊழல்கள் நடைபெறாத, நியாயமான ஓர் அரசு சாத்தியமே இல்லை என்ற அளவுக்கு நாம் பழகிப் போய்விட்டோம்.

ஒவ்வோர் அரசு அலுவலகத்திலும் ஒரு தாளைத் தள்ளப் பணம் கேட்பார்கள், கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று அடித்துப் பேசுகிறார்கள் என் உறவினர்கள். இல்லை, கொடுக்காமலேயே நடந்திருக்கிறது, நடக்க வைக்க முடியும் என்று நான் சில உதாரணங்களைச் சொன்னாலும் யாரும் கேட்கத் தயாராக இல்லை. பேசாமல் கொடுத்துவிட்டு, சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு போய்க்கொண்டே இருப்போம் என்பதுதான் இவர்கள் கருத்தாக இருக்கிறது.

இந்த மாபெரும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் ஒரு சிறு சறுக்கலால், அதுவும் சுமார் இருபதாண்டுகளுக்குமுன் செய்துள்ள சறுக்கலால் மாட்டிக்கொண்டவருக்கு அனுதாபம் தரத் தேவையே இல்லை. மாட்டாதவர்களையெல்லாம் எப்படி மாட்டவைப்பது, எப்படி ஊழல் புதைகுழிக்குள் சிக்கியுள்ள நம் சமூகத்தை மீட்டெடுப்பது என்பது குறித்துத்தான் நாம் சிந்திக்கவேண்டும்.

Friday, September 26, 2014

மேக் இன் இந்தியா - விவாதம்

நேற்று புதிய தலைமுறை 'நேர்படப் பேசு' விவாதத்தில் கலந்துகொண்டு, பிரதமர் நரேந்திர மோதியின் 'மேக் இன் இந்தியா' குறித்துப் பேசினேன். ஜென்ராம் தொகுக்க, பத்திரிகையாளர் ஞாநி, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், தொழில் ஆலோசகர் வெங்கட்ராமன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முழு விவாதம் இணையத்தில் வீடியோவாகக் கிடைக்கும். (சுட்டியைப் பிறகு சேர்க்கிறேன்.)

என் கருத்துகள்:

1. மேக் இன் இந்தியா என்பது அவசியமா? 

அவசியமே. இப்போதைய இந்திய சூழலில் நிறைய வேலைகளை உருவாக்கவேண்டிய தேவை இருக்கிறது. நிறைய வேலைகள், பெருமுதலீட்டினால் மட்டுமே வரும். உற்பத்தித் துறையில் நாம் வேண்டிய வளர்ச்சியை அடையவில்லை. பெருமுதலீட்டினால்தான் சிறிய, நடுத்தர உற்பத்தி நிறுவனங்களும் வளர்ச்சி அடையும். 

மேக் இன் இந்தியாவில் முதலீடு, தொழில்நுட்பம் இரண்டும் வெளியிலிருந்து வரும். சந்தை இந்தியாவிலும் இருக்கலாம், வெளிநாட்டிலும் இருக்கலாம். தொழிலாளர்கள் இந்தியர்கள். எனவே வேலை வாய்ப்பும் அது சார்ந்த வளர்ச்சியும் வரி வருமானமும் இந்தியாவை உயர்த்தும். 

2. இதனால் இந்தியாவின் வளங்கள் சுரண்டப்படுமா?

இயற்கை வளங்களைப் பயன்படுத்தாமல் எவ்வித உற்பத்தியும் சாத்தியமே அல்ல. இரும்பு, அலுமினியம், கரி, நீர் என்று பலவற்றையும் பயன்படுத்தித்தான் நாம் நுகர்பொருட்களை உருவாக்குகிறோம். இயற்கை மாசடைவதை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ஆனால் மனிதர்கள் இந்தப் பூமியில் உருவான காலகட்டத்தில் பூமி எப்படி இருந்த்தோ அப்படிப்பட்ட நிலைக்கு நம்மால் ஒருபோதும் போக முடியாது.

நம் வாழ்க்கைக்காக நாம் நம்மைச் சுற்றியுள்ள வளங்களைச் சுரண்டிக்கொண்டுதான் இருப்போம். மனித மூளையும் விஞ்ஞானமும், இதனை எவ்வளவு குறைவாகச் சுரண்ட முடியுமோ அவ்வாறு செய்ய உதவினால் நலம்.

3. சுற்றுச் சூழல் பாதிக்கப்படுமா?

கட்டாயமாக. இத்தனை கோடி மக்களை நாம் கொண்டிருப்பதே சுற்றுச் சூழலைப் பாதித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இம்மக்கள் அனைவரும் வயிறார உண்டு, கல்வி கற்று, அதிகம் பெற்றுக்கொள்ளக்கூடாது என்பதைப் புரிந்துகொள்ளும் வரை அவர்கள் காப்பாற்றப்படவேண்டுமல்லவா? அதற்குத் தேவையான பொருளாதார வளர்ச்சியை நாம் இன்னும் அடையவில்லை. அந்நிலையை நாம் எட்டுவதற்கு தொழில் வளர்ச்சி மிக மிக அவசியம்.

4. விளை நிலங்கள் பாதிக்கப்படுமா?

நிச்சயமாக. முதலில் விளை நிலங்கள் என்பவையே காடுகளை அழித்துவிட்டு உருவானவை. இன்று மிக அதிகமாக நீரைப் பயன்படுத்தும் ஒரே தொழில் விவசாயம். ஆனால் அதன் தேவை நமக்குப் புரிகிறது. உணவு இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை. ஆனால் இன்று உணவு மட்டும் போதாது. மின்சாரம் முதல் கல்வி வரை நமக்குப் பல அடிப்படைத் தேவைகள் உள்ளன. விளைநிலம் என்பது அப்படி ஒன்றும் புனிதமானதல்ல, அதை நாம் தொடவே கூடாது என்பதற்கு. 

நம்மிடம் உள்ள நிலங்களின் உற்பத்தி அளவை அதிகரிக்கும்போது, நமக்கு இத்தனை ஏக்கர் விளைநிலங்கள் தேவையல்ல என்று புரியவரும். தேவை ஏற்பட்டால், மேலும் கொஞ்சம் காடுகளை அழித்து விளை நிலங்களை உருவாக்க வேண்டியிருக்கும். இப்படித்தான் மனித இனம் வளர்ந்துவந்துள்ளது. உலகின் பல நாடுகளில் மக்கள்தொகை குறைந்துவருவதையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலை இந்தியாவில் ஏற்படும்போது நமக்கும் நிலம் மற்றும் நீரின் தேவை குறையும். 

புதிய தொழிற்சாலைகள் கட்டப்படவேண்டும் என்றால் பயனில்லா நிலங்களை முதலிலும் தேவைப்பட்டால் விளை நிலங்களையும் பயன்படுத்துவதில் தவறே இல்லை. உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் போதும்.

5. தொழிலாளர் நலன்களில் பாதிப்பு ஏற்படுமா?

இன்று வேலையே கிடைக்காமல் ஏகப்பட்ட இளைஞர்கள் திண்டாடுகிறார்கள். அவர்களுடைய திறன் போதவில்லை. நல்ல சம்பளம் கிடைக்கக்கூடிய வேலைகள் இல்லை. 

ஆரம்பகட்டத்தில் குறைந்த சம்பளம் தரக்கூடிய அடிமட்ட வேலைகளைத்தான் நம்மால் உருவாக்க முடியும். அதிக சம்பளம் தரக்கூடிய வேலைகள் உருவானாலும் அவ்வேலைகளைச் செய்யக்கூடிய திறன்களைப் பெற்றவர்களாக நம் இளைஞர்கள் ஆகவேண்டும்.

ஒப்பந்த வேலைகள் என்பவை அவசியமாக இருக்கவேண்டியவை. ஒரு தொழிற்சாலை திடீரென உற்பத்தி விரிவாக்கத்திலும் குறைத்தலிலும் ஈடுபடவேண்டியிருக்கும். அப்போது தொகுப்பூதிய முறையில் வேலை செய்வோர் தேவைப்படுவார்கள்.

இன்று எல்லோரும் பெருமையுடன் பேசும் விவசாயத்தில் இருப்போர் தினக்கூலிகள் மட்டுமே. அதுவும் எத்தனை நாட்கள் வேலை இருக்கும் என்று தெரியாது. தினசரி நூறு ரூபாய் கூலிகூடக் கிடைக்காத நிலை. அத்துடன் ஒப்பிடும்போது தொழில்துறையில் கிடைக்கும் எந்த வேலையுமே உயர்வானதுதான்.

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படவேண்டும் என்பதை நான் ஏற்கிறேன். பணவீக்கத்துக்கு நிகராக அவ்வப்போது இந்த ஏற்றம் செய்யப்படவேண்டும். பி.எஃப், இ.எஸ்.ஐ, கிராஜுவிட்டி போன்றவை, மருத்துவக் காப்பீடு ஆகியவையும் தேவை. இவற்றைக் கட்டாயமாக்க, அரசு முயற்சி எடுக்கவேண்டும்.

6. மன்மோகன் சிங் எடுத்த முயற்சிகளுக்கும் இப்போது மோதி எடுக்கும் முயற்சிகளுக்கும் என்ன வித்தியாசம்?

முதல் வித்தியாசம் intent. இதனைச் செயல்படுத்தியே தீரவேண்டும், இதன்மூலம் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்கிற வெறி மோதியிடம் தெரிகிறது. அதற்கான திட்டம் தீட்டுதலில் ஒரு தெளிவு தெரிகிறது. ஆறு மாதம், ஒரு வருடம் கால அவகாசம் கொடுத்துப் பார்த்தால்தான் மாற்றம் வந்திருக்கிறதா இல்லையா என்பது தெரியும். 

7. உள்ளூர் தொழிலதிபர்களுக்கு இதனால் ஏதேனும் நஷ்டமா?

உள்ளூர் பெரும் தொழிலதிபர்களைப் பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வார்கள். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களை தொழில்நுட்பரீதியில் அப்டேட் செய்துகொண்டால், அவர்களும் கவலைப்படவேண்டிய தேவையில்லை. நிறைய வாய்ப்புகள் கிடைக்கப்போகின்றன. மாற்றத்துக்கு அவர்கள் தயாராகவேண்டும்.

8. கல்வியில் மாற்றம் வராதவரை பயனுண்டா?

உண்மையே. கல்வியில் பெருமளவு மாற்றம் வரத்தான் வேண்டும். இப்போதுள்ள கல்வி முறை மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஆனால் கல்வியில் மாற்றம் செய்துவிட்டு, பிறகு மற்ற மாற்றங்களைச் செய்துகொள்ளலாம் என்று சும்மா இருக்க முடியாதே? மாற்றம் எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் வேலையை ஆரம்பித்துவிடவேண்டும். கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. மத்திய அரசின் ஈடுபாடு அடிப்படைக் கல்வியில் குறைவுதான். ஒரு சில மாநிலங்களாவது கல்வி முறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

Thursday, September 25, 2014

இட ஒதுக்கீடு - விவாதம்

நேற்று இரவு இமயம் தொலைக்காட்சியில் இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் ஒன்றில் கலந்துகொண்டேன். பிராமின்ஸ் டுடே பத்திரிகை ஆசிரியர் வாசன், பேரா. சுப. வீரபாண்டியன், மதிமுக வழக்கறிஞர் அந்தரி தாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜீவ சகாப்தன் நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

என் கருத்துகளாக நான் முன்வைத்தவை: (அங்கே சொல்லமல் விட்ட சிலவற்றை இங்கே சேர்த்துள்ளேன்)

1. இட ஒதுக்கீடு என்பது உரிமையல்ல. சலுகைதான். அதற்கு அவசியம் இருக்கிறது. ஆனால் அதனை உரிமை என்று சொல்வதில் சிக்கல் இருக்கிறது.
2. இட ஒதுக்கீட்டுக்குக் குறிப்பிட்ட கால அளவு இருக்கவேண்டும். எத்தனை காலம் என்பதை இன்று நிர்ணயிக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் அது கால அளவு கொண்டது என்பதை ஏற்கவேண்டும். சில குறியீட்டு எண்களை உருவாக்குவதன்மூலம் இட ஒதுக்கீடு அது எதிர்பார்த்த நன்மைகளைத் தருகிறதா என்பதை அளவிட்டு இட ஒதுக்கீட்டின் அளவையும் காலத்தையும் மறு பரிசீலனை செய்துகொண்டே இருக்கவேண்டும்.
3. சாதிவாரி விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்பது பயன் தராது. சில சாதிகளின் விழுக்காடு மிகக் குறைவாக இருக்கும்போது, இடங்களும் குறைவாக இருக்கும்போது, ஒரு சாதிக்கு அரை நபர் என்று வந்துசேரும். எனவே சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து சில சாதிக் குழுக்களை ஒரு தொகுப்பாக உருவாக்கி, அந்தத் தொகுப்புக்கு இத்தனை விழுக்காடு என்று இட ஒதுக்கீடு தருவதுதான் சரியான வழி. ஆனால் இந்தத் தொகுப்புகள் இறுக்கமானதாக இருக்கக்கூடாது. ஒரு தொகுப்பிலிருந்து இன்னொரு தொகுப்புக்கு சாதிகள் நகர்த்தப்படவேண்டும். அதற்கும் குறியீட்டு எண் உபயோகமாக இருக்கும்.
4. சாதிகள் ஒழியவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சாதிகள் இருக்கும்வரை சாதித் தொகுப்புக்கான இட ஒதுக்கீடு இருப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் ஒரு சமூகத்தில் தொடர் இட ஒதுக்கீடு என்பது ஆதர்ச நிலையாக இருக்க முடியாது.

===

சுப.வீ, நான் சலுகை என்று குறிப்பிட்டது இட ஒதுக்கீடு பெறும் மக்களை இழிவுபடுத்துவதாகும் என்றார். நான் அதிலிருந்து வேறுபடுகிறேன். சாதியிலிருந்து நகர்ந்து பாலினத்துக்கு வருவோம். பெண்கள் படிப்பது மறுக்கப்பட்டிருந்தது. வாய்ப்புகள் தரப்படவில்லை. மறுப்பு சமூக மனமாற்றத்தால் விலக்கப்பட்டதுமே பெண்களுக்குச் சம உரிமை கிடைத்துவிட்டது. ஆனால் இந்த உரிமையினால் பலன் இல்லை, பல துறைகளிலும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பதனால் அவர்களுக்குத் தனி ஒதுக்கீடு தரலாம் என்று சொல்லும்போது நாம் தருவது சலுகைதான். உரிமைக்கு அடுத்த கட்டம்தான் சலுகை. உரிமை என்பது அனைவருக்கும் சமமானது. சலுகை என்பது அடுத்தவரின் உரிமைக்கு மேலாக இன்னொருவருக்கு வாய்ப்பு தருவது. இதில் தவறு ஒன்றும் இல்லை. இதனை இழிவாகப் பார்க்கவேண்டிய அவசியமும் இல்லை. இதனை justify செய்யமுடியும் என்னும்போது இதனைத் தவறாகப் பார்த்து, இதனை உரிமை என்னும் பெயரால் இறுக்கம் அடையச் செய்வதுதான் ஆபத்தானது.

உணவுக்கான உரிமை, கல்விக்கான உரிமை, வேலைக்கான உரிமை, மானியத்துக்கான உரிமை போன்றவற்றையும் நான் இதனுடன் சேர்த்துப் பார்க்கிறேன். இவை எவையுமே ஒரு மானிடன் தன் அரசிடம் உரிமையாகக் கேட்டுப் பெற முடியாது, ஓர் அரசும் இவற்றையெல்லாம் உரிமையாகத் தரவும் கூடாது என்று நான் நினைக்கிறேன். இவையெல்லாம் ஒரு சமூகம் தன் அமைப்பில் உள்ள ஒரு கிளைக் குழுவை உயரத் தூக்கிவிடுவதற்குத் தர சேர்ந்து ஒப்புக்கொள்ளும் ஓர் ஒப்பந்தம் மட்டுமே. Discrimination என்பது புகுந்துவிட்ட ஒரு சமூகத்தில் அதனை நீக்கும் காலம் வரை தொடரவேண்டிய நிலைப்பாடுகள். சம நிலைச் சமூகம்தான் ஐடியல் என்னும்போது அந்த ஐடியலை அடையும் காலம் வரை மட்டுமே இருக்கவேண்டிய ஒன்றை உரிமை என்று சொல்ல முடியாது. சமநிலை அடைந்தபின்னும் தொடரவேண்டியவைதான் உரிமைகள். எழுத்துரிமை, பேச்சுரிமை, விருப்பட்ட தொழிலைச் செய்யும் உரிமை போன்றவை. ஐடியல் சமநிலைச் சமுதாயத்திலும் அவ்வப்போது சிலர் கீழே வீழ்ந்தபடி இருப்பார்கள். அவர்களைக் கைதூக்கிவிட சலுகைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

===

சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்வதற்கு எதிர்ப்பு ஏதும் வராது என்ற நிலையில் இன்று இது ஏன் செய்யப்படவில்லை என்பது முக்கியமான கேள்வி. மத்திய அரசு முன்வராதபோது மாநில அரசு நேரடியாக இதில் ஈடுபடலாம். இட ஒதுக்கீடு தாண்டி, ஒரு குறிப்பிட்ட சாதிச் சமூகம் தன் சமூகம் எந்நிலையில் உள்ளது, எம்மாதிரியான மாற்றங்கள் தேவை என்பதை அறிந்துகொள்ளவும் இந்தக் கணக்கெடுப்பு உதவும். இதிலிருந்து கிடைக்கும் குறியீட்டு எண்கள் மிகவும் உபயோகமானவை என்று கருதுகிறேன். இன்று தரவுகள் இல்லாமலேயே விவாதங்களும் பண ஒதுக்கீடும் நடைபெறுகின்றன. அவற்றை மேற்படித் தரவுகள் மாற்றும்.

===

தனியார் துறையிலும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்றார் சுப.வீ. அதுகுறித்துப் பேச நேரம் கிடைக்கவில்லை. அதனை நான் மறுத்திருப்பேன். தனி விவாதம் என்பதால் வேறொரு பதிவாக அதனை எழுதுகிறேன்.

Wednesday, September 24, 2014

மங்கள்யான்

இன்று காலை இந்தியா அனுப்பிய விண்கலமான மங்கள்யான், செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடிக்குள் கொண்டுவரப்பட்டது. பல மாதங்களாக விண்வெளியில் பறந்துகொண்டிருந்த மங்கள்யான் கலத்தின் வேகம் மிக அதிகமாக இருந்தது. அந்த வேகத்தில் அது செவ்வாயைத் தாண்டிப் பறந்து சென்றுவிடும். செவ்வாயைச் சுற்றிவரவேண்டும் என்றால் அதன் வேகத்தைக் கடுமையாகக் குறைக்கவேண்டும்.

அந்தச் செயல் இன்று காலை செய்யப்பட்டது. LAM எனப்படும் லிக்விட் அபோஜீ மோட்டாரை இயக்கி, எரிபொருள் எரிக்கப்பட்டு, கலம் செல்லும் திசையில் ஜெட் துவாரம் வழியாக எரிவாயுக்கள் வெளியேற்றப்படும். இதனால் கலம் செல்லும் திசைக்கு எதிர்த் திசையில் விசை உருவாகும் (நியூட்டனின் மூன்றாம் விதி). இது கலத்தின் வேகத்தைக் குறைக்கும்.

இதில் முக்கியமானது, எத்தனை நிமிடத்துக்கு எரிபொருளை எரித்தால், நாம் விரும்பும் வேகக் குறைவு ஏற்படும் என்பதே. இதனை “லைவ்” முறையில் செய்யவும் முடியாது. விண்கலம் வெகு தொலைவில் இருப்பதால் அதற்கும் நமக்குமான உரையாடல் நேரமே கணிசமாக இருக்கும். மின்காந்த அலைகள் ஒளிவேகத்தில் சென்றாலுமே அவ்வளவு நிமிடங்கள் கழித்துத்தான் அந்த இடத்தைச் சென்றடையும்.

எனவே எரிபொருளை எரிப்பதற்கான ஆணைகளை முன்கூட்டியே அனுப்பிவிட்டார்கள். சரியான நேரத்தில் அது இயங்கவேண்டியதுதான் பாக்கி.

இன்னொரு சிக்கலும் இருந்தது. சரியாக வேலை நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க முடியாத நிலையும் இருந்தது. ஏனெனில் இந்த லாம் மோட்டாரை இயக்கும்போது அது செவ்வாயின் அண்மை நிலையில் இருக்கவேண்டும். அந்த நேரத்தில் விண்கலத்தை பூமியிலிருந்து பார்க்க முடியாதபடி செவ்வாய் கிரகமே மறைத்துவிடும். எனவே விண்கலத்திலிருந்து பூமிக்கு சிக்னல் வராது. அதனால் சுமார் இருபது நிமிடம் கழித்துதான் நாம் கொடுத்துள்ள ஆணைகள் நடந்தனவா, ஒழுங்காக பாதை மாறியதா என்பது தெரியவரும்.

காலை 7.35 மணிக்கு ஆணைகள் இயங்க ஆரம்பித்தாலும், 8.00 மணிக்குத்தான் அது கச்சிதமாக நடந்துமுடிந்துள்ளது என்பது தெரியவந்தது. அதன்பின் ஒரே கொண்டாட்டம்தான்.

மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம் இது. இந்திய விஞ்ஞானிகள் (என்பதைவிடப் பொறியாளர்கள் என்று சொல்லவேண்டும்) மிக அற்புதமான பணியாற்றியிருக்கிறார்கள். இந்தக் குழுவின் சராசரி வயது 27 என்று எங்கோ படித்தேன். மிக ஆச்சரியமாக இருந்தது. இளைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

நாம் போகவேண்டிய தூரம் மிக அதிகம். எனவே தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருக்கவேண்டும்.