நேற்று நானும்
பேராசிரியர் சுவாமிநாதனும் ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள அறிவியல்
ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவதற்காக.
தற்போதைய பள்ளிக் கல்வி
முறையின் பல்வேறு பிரச்னைகளில் ஒன்று, குழந்தைகளுக்குக் கண்ணில் எதையும்
காண்பிக்காமல் புத்தகங்களில் கொடுக்கப்பட்டிருப்பதை அப்படியே வகுப்பறையில் கேள்வி
பதிலாக மாற்றி, மனனம் செய்யவைப்பது. பொதுவாக, அறிவியல் புத்தகத்தில்
கொடுக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான விஷயங்களைக் குழந்தைகளுக்குச் செய்து
காட்டிவிடலாம். ஒருசில விஷயங்களைத்தான் செய்துகாட்டுவது கடினம்.
ஓர் அணுவின்
உட்கருவைக் காண்பி என்றால் காண்பிக்க முடியாது. ஆனால் ஒரு சாய்தளத்தில் பந்து
எப்படி உருண்டுசெல்லும் என்பதையோ, ஒரு தனி ஊசல் எப்படி ஆடும் என்பதையோ, ஒளிக்
கதிர்கள் லென்ஸ் வில்லைகளின் ஊடாக எப்படிச் செல்லும் என்பதையோ, ஒரு காந்தத்தின் காந்தப்
புலம் எப்படி இருக்கும் என்பதையோ, இன்னும் பலப்பல விஷயங்களையோ மிக எளிதாக
வகுப்பறையிலேயே செய்து காட்டிவிடலாம். அவ்வாறு செய்முறையாகச் செய்து காட்டும்போது
வகுப்பின் கடைக்கோடி மாணவனுக்கும் என்ன நடக்கிறது என்பது எளிதாகப் புரிந்துவிடும்.
சொந்தமாக எழுதும் திறன் இருந்தால் அனைத்து மாணவர்களாலும் பார்த்ததை நினைவில்
இருத்தி கேள்விக்கான விடைகளை எழுதிவிட முடியும். படங்களை வரைந்து காட்டிவிட முடியும்.
தேவையான கருவிகள் சில நூறு ரூபாய் அல்லது சில ஆயிரம் ரூபாய்க்குள் முடிந்துவிடும்.
நேற்று நான், ஓர்
ஒளிக்கதிர்ப் பெட்டியையும் (Ray box) சில லென்ஸ்
வில்லைகளையும் அந்தப் பள்ளிக்கு எடுத்துச் சென்றிருந்தேன். நான் பள்ளியில் படித்த
காலத்தில் இந்த மாதிரியான கருவிகள் பற்றி எனக்கோ என் ஆசிரியர்களுக்கோ
தெரிந்திருக்கவில்லை. லென்ஸ் வழியாக ஊடுருவிச் செல்லும் இணை கதிர்கள், சடாரென
வளைந்து அதன் குவிமையத்தில் புள்ளியாகக் குவிவதாகப் பாடப் புத்தகத்தில் இருக்கும்.
அது நிஜமாகவே அப்படி ஆகிறதா என்று எனக்கு ஒரு சந்தேகம் வெகுகாலமாக இருந்துவந்தது. சென்ற
ஆண்டு நானே ஓர் ஒளிக்கதிர்ப் பெட்டியை வாங்கி வீட்டில் செய்துபார்த்தபோதுதான்
நிம்மதி ஏற்பட்டது. ஆனால் தினம் தினம் நம் பள்ளிகளில் ஆசிரியர்கள் இது
இப்படித்தான் என்று சொல்லித்தருகிறார்கள். மாணவர்களும் எந்தச் சலனமும் இன்றி
ஏற்றுக்கொள்கிறார்கள். யாருமே, இதனைச் செய்துகாட்டுங்கள் என்று கேட்பதில்லை.
ஆசிரியர்களும் (பெரும்பாலும்) செய்துகாட்டுவதில்லை.
நான் நேற்று அப்பள்ளியின்
ஆசிரியர்களுக்கு இதனைச் செய்துகாட்டினேன். தொடர்ந்து ஆசிரியர்களிடமான உரையாடலில்,
பாடப் புத்தகத்தில் உள்ள அனைத்துப் பாடங்களுக்கும் முடிந்தவரையில் செய்துகாட்டல்
முறைகளை எவ்வாறு அறிமுகப்படுத்தலாம் என்பது குறித்துப் பேசினேன்.
இன்னொரு பள்ளியில் ஒரு
கோடை விடுமுறையின்போது இம்மாதிரியான பல சோதனைகளைச் செய்துகாட்டினேன். அதில் ஒன்று,
அறை வெப்பநிலையில் உள்ள நீரைச் சூடாக்கி, அதன் கொதிநிலையை அடையவைப்பது. அனைத்து
மாணவர்களும் நீரின் கொதிநிலை 100 டிகிரி செண்டிகிரேட் என்று பட்டென்று
சொன்னார்கள். ஆனால் நீர் கொதிக்க ஆரம்பித்தபோது வெப்பமானி 98.5 டிகிரியைத்தான்
காண்பித்துக்கொண்டிருந்தது. அதிலிருந்து சிறிதுகூட மேலே போகவேயில்லை. வகுப்பில்
பெரும் பதட்டம்.
நீரின் கொதிநிலை எப்போது
100 டிகிரி ஆக இருக்கும்? கடல் மட்டத்தில், தூய நீருக்குத்தான் அந்தக் கொதிநிலை.
நாம் இருக்கும் இடம் கடல் மட்டத்துக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளது? நாம் குழாயில்
பிடித்துக் கொண்டுவந்திருக்கும் நீரில் என்னென்ன உப்புகள் கலந்துள்ளன? அவை காரணமாக
நீரின் கொதிநிலை மாறத்தானே செய்யும்? இவற்றை விளக்கிச் சொல்ல இந்தப்
பரிசோதனை முக்கியமாகிறது.
இந்த ஆண்டு, ஒரு
பள்ளியிலாவது பெரும்பாலான வகுப்புகளில், பெரும்பாலான அறிவியல் பாடங்களை செயல்விளக்கமாகச்
செய்து காட்ட, ஆசிரியர்களைத் தூண்ட முடியுமா என்று பார்க்கப்போகிறேன். அவ்வாறு
நடப்பதை வலைப்பதிவில் எழுத முயற்சி செய்கிறேன்.