Friday, June 27, 2014

கணிதம் பற்றிய வலைப்பதிவு

சில ஆண்டுகளுக்குமுன் கணிதம் தொடர்பாக ஒரு பதிவு ஆரம்பித்தேன். அதில் நான் எழுத விரும்பியது வேறு. எளிதாக தமிழில் கணிதத்தைச் சொல்லித் தருவதற்காக என்று ஆரம்பித்தேன். ஆனால் அதனை எப்படி முன்னெடுத்துச் செல்வதென்று தெரியவில்லை. வேறு திசைகளில் ஆர்வம் சென்றதால் சில பதிவுகளோடு விட்டுவிட்டேன். முதலில் கணிதக் குறியீடுகளைப் பதிவில் எழுதுவதற்கே சிரமப்படவேண்டியிருந்தது. MathML என்ற மொழியைப் பயன்படுத்தியிருந்தேன். பிறகு வேர்ட்பிரஸ் பதிவுகளில் இதற்கான வசதி இருந்ததால் என் பதிவுகளை அங்கு மாற்றினேன்.

இப்போது ஒரு தெளிவு ஏற்பட்டுள்ளது. என் மகள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு வந்திருக்கிறாள். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கிறாள். அவளுக்குக் கணிதம் கற்பிக்கும்போது தோன்றக்கூடிய சில விஷயங்களைப் பற்றி இப்போதைக்கு எழுதப்போகிறேன். அதன்பின் எப்படியும் மாறலாம். பார்ப்போம்.

முதல் பதிவு - முக்கோணவியல் குறித்தது. இங்கே கிடைக்கும்.


Tuesday, June 17, 2014

“எங்களுக்கு இந்திதான் வேண்டும்!” - தமிழர்கள் ஆர்வம்

என்.டி.டி.வியில் இப்படி ஒரு “சிறப்பு” செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் பேசும் சிலர் எப்படியாவது தமிழ் படிப்பதிலிருந்து தப்பித்துக்கொள்ளவேண்டும் என்று பேசுகிறார்களே ஒழிய, இந்தி கற்றுக்கொள்வதால் உண்மையிலேயே ஏதேனும் நன்மை இருக்கிறது என்று உணர்ந்து பேசுவதுபோல் தெரியவில்லை. ஓரிரு திறமைசாலிகள், “லோக்கல் லாங்குவேஜும்” முக்கியம் என்கிறார்கள். ஆனால் அதை வீட்டிலேயே தெரிந்துகொண்டுவிடலாமாம். அதற்கு எதற்குப் பள்ளிக்கூடம் என்று கேட்கிறார்கள்.

தமிழ் மீடியம் படிப்பு என்பதை இன்று தமிழர்களுக்கு விற்பது மிக மிகக் கடினம். தாய்மொழியில் படித்தால்தான் நன்றாகப் புரியும் என்றெல்லாம் மக்களிடம் பேசப்போனால் உடனே ‘உன் மகன்/ள் எந்த வழியில் படிக்கிறான்/ள்?’ என்று கேள்வி கேட்பார்கள். என் மகள் சி.பி.எஸ்.இ பள்ளி ஒன்றில் ஆங்கில வழியில் படிக்கிறாள். ஆனால் தமிழ்தான் இரண்டாவது மொழி. அந்தப் பள்ளியில் சமஸ்கிருதம், இந்தி போன்ற பல ஆப்ஷன்கள் உள்ளன. மூன்றாவது மொழியாக (எட்டாம் வகுப்புவரை) இந்தி படித்தாள்.

குறைந்தபட்சம் தமிழை ஒரு பாடமாகவாவது படித்தாகவேண்டும் என்ற எண்ணம் இன்று நகரங்களில் வசிக்கும் உயர்மட்டத்தவர்களிடையே இல்லாமல் போய்விட்டது. வீடுகளில் ஆங்கிலம்தான் பேச்சு மொழி.

அப்படி இவர்கள் படிக்கும் இரண்டாம் மொழியான இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்றவற்றில் இந்த மாணவர்கள் எப்படிப்பட்ட உயர் நிலையை அடைந்திருக்கிறார்கள் என்றால் பெரும்பாலும் குப்பையாகத்தான் இருக்கும். உலகமயச் சூழலில் உலகை வெல்ல இன்னொரு மொழியைக் கற்பது மிக முக்கியமானது என்பதுபோல் இவர்கள் பேசினாலும், 12-ம் வகுப்புக்குப் பிறகு அதற்கான எந்தச் சிறப்பு முயற்சியையும் இவர்கள் எடுப்பதில்லை என்பதிலிருந்தே இவர்களுடைய குட்டு வெளிப்பட்டுவிடுகிறது. நீங்கள் படிக்கப்போவது பெரும்பாலும் பொறியியல். அங்கே உங்களுக்கு ஆங்கிலம்கூட அதிகம் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை! ஆக, சும்மா எதையாவது சொல்லி, தமிழ்ப் படிப்பிலிருந்து ஓடிவிடுவதுதான் நோக்கம்.

இதற்குத் தமிழாசிரியர் பெருந்தகைகளும் ஒரு காரணம் என்பதை இங்கு நாம் குறிப்பிடவேண்டும். சமஸ்கிருதம் தொடங்கி பிரெஞ்சுவரை எளிமையான பாடங்கள் இருக்க, சமச்சீர் கல்வியின் தமிழ்ப் பாடம் மட்டும் வறண்டுபோன மொழியில் இருக்கிறது. அதன் தரமும் பிற மொழிப் பாடங்களைவிட அதிகம். தமிழின் தொன்மையான இலக்கியங்கள்கூட இருந்துவிட்டுப் போகலாம்; அவற்றைச் சுவையாகச் சொல்லித்தர முடியும். ஆனால் மிகக் கொடூரமான இலக்கணப் பாடங்கள்! எட்டுவிதமான பொருள்கோள்கள் யாவை, தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக! இவையெல்லாம் தேவையே இல்லை. அடிப்படையான திறன்களைப் பயிற்றுவிக்கும் பாடமுறையாக இல்லை.

இப்போதிருக்கும் பாடத்திட்டத்தைத் தொடருங்கள்... தமிழ்நாட்டில் ஒருவர்கூடத் தமிழ்ப் பாடத்தை விருப்பத்துடன் ஒரு பாடமாக எடுத்துப் படிக்க மாட்டார். சட்டம் இயற்றி மிரட்டித்தான் அவரைப் படிக்க வைக்க முடியும். ஒரு கட்டத்தில் நீதிமன்றம்கூட அவருக்கு ஆதரவாகப் போவதற்கு வாய்ப்பு உண்டு.

***

தமிழைக் கட்டாயமாக ஒரு பாடமாகப் படிக்கவேண்டும் என்ற தமிழக அரசின் சட்டத்தை நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன். ஆனால் அத்துடன் தமிழ்ப் பாடத்திட்டத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கிறேன்.

மேலும் ஆங்கிலம், தமிழ் இரண்டுக்கும் ஒவ்வொரு வகுப்புக்கும் இரண்டிரண்டு பாடத்திட்டங்கள் தேவை. ஆங்கில வழியில் படிப்பவருக்கான ஆங்கிலப் பாடம் சற்றே உயர் நிலையிலும் தமிழ் வழியில் படிப்பவருக்கான ஆங்கிலப் பாடம் சற்றே தாழ் நிலையிலும் இருக்கவேண்டும். அதேபோலத்தான் தமிழ்ப் பாடமும். எனவே எட்டாம் வகுப்பு என்றால், ஆங்கிலம்-உயர், ஆங்கிலம்-தாழ், தமிழ்-உயர், தமிழ்-தாழ் என்று நான்கு வெவ்வேறு பாடத்திட்டங்கள் வேண்டும். பரீட்சையின் கடுமையும் அவ்வாறே மாறவேண்டும்.

இவற்றுடன்கூட மும்மொழித் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவேண்டும். மூன்றாவது மொழியாக, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, சமஸ்கிருதம், சீனம், ஜப்பானியம், ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் படிக்கவேண்டும் என்று சொல்லலாம். மூன்றாம் வகுப்பில் தொடங்கி பத்தாம் வகுப்பு வரை இந்த மூன்றாவது மொழியும் இருக்கவேண்டும். இதன் தரம் மேலே சொல்லப்பட்ட தமிழ், ஆங்கிலம் இரண்டையும்விடக் குறைவானதாக இருக்கவேண்டும்.

***

தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் என்ன செய்வது?

தமிழ் படிக்கப் பிடிக்கவில்லை அல்லது விருப்பமில்லை என்றால் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சேர்ந்துகொள்ளுங்கள்.

உருது படிக்க விரும்பினால் அல்லது சமஸ்கிருதம் படிக்க விரும்பினால் என்ன செய்வது? அதனை மூன்றாவது மொழியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்தி, சமஸ்கிருதம் இரண்டையும் படிக்க விரும்பினால்? ஒன்றைப் பள்ளியிலும் மற்றொன்றை இந்தி பிரசார் சபா, சமஸ்கிருத பாரதி போன்றவற்றில் சேர்ந்தும் படித்துக்கொள்ளுங்கள்.

***

தமிழை ஒரு பாடமாகவாவது கட்டாயமாகப் படிக்கவேண்டும் என்று சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? தனி நபர் உரிமையில் தலையிடுவதாக ஆகாதா?

நீதிமன்றம்தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்தவரை, தமிழக அரசுக்கு இப்படிப்பட்ட சட்டத்தை இயற்றுவதற்கு அதிகாரம் உள்ளது. தமிழ் நாட்டில் பலருக்கு ஆங்கிலம் படிக்கப் பிடிப்பதில்லை. மாறாக மலையாளம் படித்தால் அதில் எளிதாகத் தேர்ச்சி பெறலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்களை விட்டுவிடுகிறோமா? கிடையாதே? அவர்கள் ஆங்கிலத்தைக் கட்டாயமாகப் படித்துத் தேர்ச்சி பெற்றே ஆகவேண்டும் என்கிறோம் அல்லவா? அதேபோலத்தான் தமிழும் மற்றொரு கட்டாயப் பாடம்.

ஒருவர், தான் ஆங்கில வழியில் படிக்க விரும்பவில்லை, ஃபிரெஞ்சு வழியில் படிக்கிறேன் என்று சொல்வார். இன்னொருவர் முழுக்க முழுக்க சீன மொழிவாயிலாகவே படிப்பேன் என்பார். இவற்றை நாம் அனுமதிக்கிறோமா? இல்லையே?  தன்கீழ், தமிழ் வழியாக அல்லது ஆங்கில வழியாக மட்டுமே படிக்க முடியும் என்கிறது தமிழக அரசு. அதே அதிகாரத்தின்கீழ், தமிழையும் ஆங்கிலத்தையும் கட்டாயப் பாடங்களாகப் படித்தே தீரவேண்டும் என்று சொல்லவும் அரசுக்கு உரிமை உள்ளது.

தமிழே படிக்காமல் 12-ம் வகுப்பைத் தாண்ட, சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ போன்ற பிற போர்டுகள் இருக்கவே இருக்கின்றன.

Sunday, June 15, 2014

சோலார் விளக்கு + மொபைல் சார்ஜர்

நான் சுமார் ஓராண்டுக்குமுன் சூரிய ஒளி மின்சாரத்துக்கான அமைப்பை என் வீட்டில் ஏற்படுத்தியிருந்தேன். சென்ற ஆண்டு முழுதும் அதனால் என்ன சேமிப்பு என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தேன்.

சூரிய ஒளி மின் அமைப்பை ஏற்படுத்துவதற்குமுன் ஓராண்டில் நான் செலவழித்த மின் கட்டணம் சுமார் ரூ. 43,000 37,000. சூரிய ஒளி மின் அமைப்பை நிறுவியதன்பின் ஓராண்டில் செலவழித்த தொகை சுமார் ரூ. 20,000. ஓராண்டில் சேமிப்பு சுமார் ரூ. 23,000 17,000/- [கூட்டல் பிழை காரணமாக முதலாம் ஆண்டு செலவழித்த தொகையைச் சற்றே அதிகமாகக் குறிப்பிட்டுவிட்டேன்.]

***

நான் வசித்துவந்த வீட்டை வாடகைக்குத் தர எண்ணியுள்ளேன். என் பெண்ணின் பள்ளிக்கூடத்துக்கு அருகில் ஓரிடத்துக்கு நான் குடி பெயர்ந்துள்ளேன். புது இடம் வாடகை வீடு என்பதால் இங்கு சூரிய ஒளி மின்னமைப்பை ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால் வேறு சில காரணங்களுக்காகத் தேடியபோது சோலார் விளக்கும் மொபைல் சார்ஜரும் சேர்ந்த ஒரு பொருள் கிடைத்தது. சென்ற வாரத்திலிருந்து இதனைப் பயன்படுத்திவருகிறேன்.

கிரீன்லைட் பிளானெட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பு இது. மிக அழகாகத் தயாரிக்கப்பட்டுள்ள பொருள்.


இதன் முதல் பலம், இதன் எளிமை. சோலார் பேனலை வெயிலில் வைத்து அதிலிருந்து நீளும் ஒயரை விளக்கின் பின் செருகினால் போதும். தானாகவே பேட்டரி சார்ஜ் ஆக ஆரம்பித்துவிடும். சூரிய ஒளி எவ்வளவு வலுவாக உள்ளது என்பதை ஒளிரும் பட்டை ஒன்று காட்டிக்கொடுத்துவிடும்.


விளக்கின் பின்பகுதியில் இரண்டு USB slots உள்ளன. யு.எஸ்.பி மூலம் சார்ஜ் செய்யப்படும் கருவிகளை இதில் சார்ஜ் செய்துகொள்ளலாம். இந்தக் கருவியுடன் USB->Nokia சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைக்கொண்டு நோக்கியா ஃபோன்களை சார்ஜ் செய்துகொள்ளலாம். கிட்டத்தட்ட அனைத்துவித ஃபோன்களையும் சார்ஜ் செய்வதற்கான இணைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் வீட்டில் இருக்கும் இரண்டுவிதமான அடிமட்ட நோக்கியா ஃபோன்கள், ஐஃபோன், கிண்டில் ரீடர், நெக்சஸ் 7 இஞ்ச் டாப் ஆகியவற்றை இதன்மூலம் சார்ஜ் செய்துகொள்ள முடிகிறது. ஐபேடை சார்ஜ் செய்ய முடியவில்லை.


முதலில் சார்ஜ் செய்வதைப் பார்ப்போம். சென்னை போன்ற இடங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் நெருக்கமாகக் கட்டப்பட்டிருப்பதாலும் மொட்டைமாடி உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதிருப்பதாலும் எங்கே வெயில் நேரடியாகக் கிடைக்கும் என்று நீங்கள் தேடவேண்டியிருக்கும். ஆனால் எப்படியும் கட்டாயம் பால்கனியில் அல்லது ஜன்னல் திட்டுகளில் என்று கிடைத்துவிடும். என் வீட்டில் காலை தொடங்கி பின்மதியம் வரை ஒரு ஜன்னல் திட்டிலும் அதன்பின் மாலைவரை ஒரு பால்கனியிலும் நேராக வெயில் படுகிறது. வெயில் படும் இடத்தில் சோலார் பேனல் படுமாறு வைத்துவிட்டால், அது பேட்டரியை சார்ஜ் செய்துவிடும். இந்தமாதிரி சுமாராகக் கிடைக்கும் வெயிலில் நாள் முழுவதும் எடுத்துக்கொண்டாலும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடிவதில்லை. ஆனால் சுமார் 80% சார்ஜ் ஆகிறது.

பயன்பாட்டில், மேசை விளக்கு, என் மகள் படிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என்னதான் குழல் விளக்கு இருந்தாலும், மேசை விளக்குக்கு ஓர் அவசியம் இருக்கத்தான் செய்கிறது. விளக்கைப் பயன்படுத்தும்போது பேட்டரி அதிகமாக டிஸ்சார்ஜ் ஆவதில்லை. அதேபோல நோக்கியா ஃபோன்களை சார்ஜ் செய்யவும் அதிகம் பேட்டரி சக்தி தேவைப்படுவதில்லை. அதற்கு அடுத்து கிண்டில் ரீடர். ஆனால் ஐஃபோன், நெக்சஸ் டாப் ஆகியவை பேட்டரியை அப்படியே உறிஞ்சிவிடுகின்றன.

இந்தக் கருவியின் விலை ரூ. 2,300/-. Sun King Pro 2 என்பது இதன் பெயர். Flipkart தளத்தில் இதனை வாங்கும் வசதி இருக்கிறது.

இந்த விளக்கை கையில் டார்ச் லைட் போல எடுத்துச் செல்லலாம். மேசை விளக்காகப் பயன்படுத்தலாம். மேலே தொங்கவிடலாம். முக்கியமாக செல்பேசிகளை சார்ஜ் செய்யலாம்.

எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பயனுள்ளதாக இருக்கிறது.

Monday, June 09, 2014

சைக்கிள் க்ரானிக்கிள்ஸ்


ஹெர்குலிஸ் த்ரில்லர்

சைக்கிள் புராணத்தை எழுதவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். இன்று நேரம் வந்துவிட்டது.

இரண்டு மாதங்களுக்குமுன் வாங்கிய சைக்கிள். முதலில் எதையோ வாங்கவேண்டும் என்று நினைத்து, அந்த எண்ணத்தை ஃபேஸ்புக்கில் தெரிவிக்க, சமூகம் ஒன்றுசேர்ந்து என்னை அந்த சைக்கிளை வாங்கவேண்டாம் என்று தடுத்தாட்கொண்டது. அதன்பின், உள்ளதிலேயே மிகச் சாதாரணமான, ஆனால் அதே சமயம் பழைய மாடல் இல்லாத ஒரு சைக்கிளை வாங்கினேன். ஹெர்குலிஸ் த்ரில்லர் என்ற பிராண்ட். பி.எஸ்.ஏ கம்பெனியுடையது.

ஒரிஜினல் சைக்கிளில் ரேஸ் சைக்கிளுக்கு இருப்பதுபோன்ற வளைந்து நெளிந்த கைப்பிடிகளைக் கழட்டிக் கடாசிவிட்டேன். உட்காருவதற்கு என்று ஜெல் வைத்த மெத்து மெத்தென்ற சிறப்பு இருக்கையைப் போட்டுக்கொண்டேன். உண்மையிலேயே வசதியாக இருக்கிறது. ஒரு மணி. இருள் சூழந்த நேரத்துக்காக பேட்டரியால் இயங்கும் ஒரு விளக்கு. ஒரு நல்ல ஹெல்மெட். காற்று அடித்துக்கொள்ள ஒரு பம்ப்.

ஓட்டி வரும் தூரம் வெறும் மூன்று கிலோமீட்டர்கள்தான். ஒரு நாளைக்கு ஆறு கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுவதையெல்லாம் உடல் பயிற்சி என்று பொய் சொல்லக்கூடாது. இதனால் எல்லாம் உடல் குறையப் போவதில்லை. ஆனால் fossil fuels பயன்பாட்டைக் குறைத்துள்ளேன் என்ற அளவுக்கு சந்தோஷம்.

(1) சென்னையின் அற்புதமான வானிலை. காற்றின் ஈரப்பதம் கன்னாபின்னாவென்று இருக்கும். மூன்று கிலோமீட்டர் ஓட்டிவருவதற்குள் இடல் மேலிருந்து கீழ்வரை வியர்த்துக் கொட்டிவிடுகிறது. தலையிலும் அப்படியே. வியர்வை வழிந்து கண்ணை மறைக்கும் அளவுக்கு உள்ளது! எனவே தலையில் ஹெல்மெட்டுக்கு அடியில் கைக்குட்டை, மாற்று சட்டை, உடலைத் துடைத்துக்கொள்ள துணி ஆகியவற்றையும் சேர்த்து எடுத்துக்கொண்டு வருகிறேன்.

(2) மழை பெய்தாலும் சைக்கிளில்தான் வருவது என்று முடிவெடுத்துள்ளேன். சில வாரங்களுக்குமுன் ஒருநாள் பாதி வழியில் வரும்போது திடீரென ஒரு பேய் மழை. மைலாப்பூரில் கிளம்பும்போது இல்லை. ராயப்பேட்டைக்கு வந்துசேரும்போது இல்லை. நடுவில் மட்டும் பெய்து கொட்டிவிட்டது. நேற்று இரவு மழையை அடுத்து, இன்று முன்னேற்பாடாக ரெயின் கோட் அணிந்துவந்தால் மிகக் கொடுமை, வியர்வைதான். வெளியே லேசான மழைத் தூறல். உள்ளே வியர்வை மழை.  ஆண்டு முழுதுமே சைக்கிள் பயணம் இப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

(3) சாலைகள்: குண்டு குழியான சாலைகளால் ஸ்கூட்டர், பைக், கார் ஆசாமிகளுக்கு என்றுமே பிரச்னை கிடையாது. ஆனால் சைக்கிள் ஓட்டுபவர்களுக்குத்தான் சிக்கலே. [பெரும்பாலான சைக்கிள்களில் சஸ்பென்ஷன் கிடையாது.] நல்ல சாலைகள் மிக மிக அவசியம். நடுநடுவே தன்னிஷ்டத்துக்கு வெட்டி ஒரு கேபிள் நடுவதற்காக இந்த மடையர்கள் செய்யும் கூத்து இப்போது அதிகக் கோபத்தை வரவழைக்கிறது.

(4) சக பயணிகள். ஒருசில கார் ஓட்டுனர்களைத் தவிர பிற மோட்டார் வாகனப் பயணிகள், சைக்கிள் ஓட்டுபவரை மதிப்பதே கிடையாது. மிக அருகில் வண்டியை ஓட்டிச் செல்வது, சடாரென கட் செய்து நம்மை பிரேக் போடவைப்பது போன்றவை சர்வசாதாரணம். பிரேக் பிடித்தபின் மீண்டும் சைக்கிளை ஆரம்பிக்கக் கொடுக்கும் பிரயத்னம் அதிகம். பைக் அல்லது கார் என்றால் கொஞ்சம் ஆக்சிலரேட்டரை முறுக்கினால் போதும். இதைப்பற்றியெல்லாம் சக சாலைப் பயனாளிகள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

(5) சக சைக்கிள் பயணிகள். இவர்கள் பெரும்பாலும் மாணவர்கள் அல்லது பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் அல்லது நிறுவனங்களில் கீழ்மட்டப் பணிகளைப் புரிபவர்கள். மாணவர்களை அவ்வளவு நெருக்கமாக நான் இன்னமும் கவனிக்கவில்லை. ஆனால் பிறர் பொதுவாக சாலை விதிகளை மதிப்பதில்லை. சைக்கிள்களுக்கு இண்டிகேட்டர் இருப்பதில்லைதான். ஆனால் இவர்கள் கைகளாலும் சிக்னல் காட்டுவதில்லை. போக்குவரத்து நிறுத்தங்களில் விளக்குகளைப் பெரும்பாலும் மதிப்பதில்லை. நட்ட நடு செண்டருக்கு சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டுவந்து நிற்கிறார்கள். நிச்சயமாக ஒருவழிப் பாதையைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை. நான் பார்த்தவரை மாணவர்களையும் சேர்த்து, யாருமே ஹெல்மெட் போட்டுக்கொள்வதில்லை. என் வட்டாரத்தில் நான் ஒருவன்தான் சைக்கிள் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து செல்கிறேன்.

(6) போக்குவரத்தைத் திட்டமிடுவோர்: சைக்கிள் லேன் என்றெல்லாம் இவர்கள் இதுவரையில் யோசித்ததே கிடையாது. சைக்கிள் என்பது ஏழைகள் வண்டி. எனவே அதைப் பற்றிக் கவலைப்படுவானேன் என்ற எண்ணம்தான். இருக்கும் வழித்தடங்களில் கார், லாரி, பஸ், டூ வீலர் ஆகியவை போவதற்கே வழி இல்லை என்னும்போது சைக்கிள்களுக்குத் தனி லேனா? இது என்ன உளறல்? என்பதுதான் இவர்கள் கருத்து. இந்தியாவின் பிற நகரங்களில் இதுகுறித்து ஏதோ பேச்சுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் கணிசமான அளவு மத்தியவர்க்க, புரஃபஷனல் மக்கள் சைக்கிள்களைப் பயன்படுத்தும்போதுதான் சைக்கிள் லேன் குறித்தெல்லாம் மாநகராட்சி யோசிக்கப்போகிறது.

என் தற்போதைய கருத்துகள்:

1. எங்கெல்லாம் நடந்துபோக முடியுமோ, அதற்குத் தேவையான நேரம் கையில் இருக்கிறதோ, அங்கெல்லாம் நடந்துபோவதே சாலச் சிறந்தது.
2. அதேபோலத்தான் சைக்கிளில் பயணம் செய்வதும். ஆனால் பலரும் என்னிடம் சொன்னதுபோல இன்று மாநகரத்தில் இது கொஞ்சம் கவனமாக, பாதுகாப்பாகச் செய்யவேண்டிய ஒன்று.
3. முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது. சென்னையில் மெட்ரோ ரயில் வருவதையும் அது விரிவாக்கப்படுவதையும் மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
4. சொந்த மோட்டார் வண்டியில்தான் பயணம் என்றால்,  இரு சக்கர வாகனங்களில், அதுவும் fuel-efficient வண்டிகளில் பயணம் செய்வது சிறந்தது. முடிந்தால் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனமாக இருத்தல் மிகவும் நல்லது.
5. வேறு வழி இல்லை என்றால் நான்கு சக்கர மோட்டார் வாகனத்தில் பயணிக்கவும். (மூன்று, நான்கு+ பேர் பயணம் செய்யவேண்டும் என்றால்.)

Wednesday, June 04, 2014

பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி பாடப்பிரிவு நீக்கம்

இன்றைய செய்தித்தாளில் படித்தது... தமிழகத்தின் பல பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி என்ற பாடப்பிரிவை நீக்கியிருக்கிறார்கள் என்பது.

ஐடி வேலைகள் அதிகமாகக் கிடைக்க ஆரம்பித்ததும் பொறியியல் கல்லூரிகள் பி.ஈ/பி.டெக் ஐடி என்ற பட்டத்தையும் வழங்க ஆரம்பித்தன. ஏற்கெனவே இருக்கும் கம்ப்யூட்டர் சயன்ஸ் படிப்புக்கு அதிகபட்சமாக இத்தனை பேரைத்தான் சேர்க்கலாம் என்று AICTE கட்டுப்பாடு இருப்பதுதான் காரணம். ஆனால் ஐடி மோகம் காரணமாகப் படிக்க வருவோரையெல்லாம் என்ன செய்வது? சரி, ஐடி என்று புதிதாக ஒரு படிப்பை ஆரம்பிப்போம், அதில் கம்ப்யூட்டர் சயன்ஸில் இருக்கும் சில பாடங்களையெல்லாம் நீக்கிவிட்டு மேலும் சில புரோகிராமிங் லாங்வேஜ் பாடங்களைச் சேர்ப்போம் என்று உருவானதுதான் ஐடி. இப்போது ஏதோ காரணமாக கம்பெனிகள் எல்லாம் பி.டெக்/பி./ஈ ஐடி டிகிரியை மதிப்பதில்லை போலும். அதனால் மாணவர்கள் அந்தப் படிப்பை எடுத்துக்கொள்ள விரும்புவதில்லை. உடனே வெட்டிவிட்டார்கள்.

பி.டெக்/பி.ஈ படிப்பைப் பொருத்தமட்டில் கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், சிவில், கெமிக்கல், பயோடெக்னாலஜி என்ற ஏழே துறைகள் மட்டும்தான் இருக்கவேண்டும். மிகச் சில இடங்களில் பிரிண்டிங், லெதர், டெய்ரி என்று சில சிறப்புப் படிப்புகள் இருக்கும். எல்லாக் கல்லூரிகளும் இவை குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. ஏரோனாட்டிகல் போன்றவற்றை நான் தனிப் படிப்பாக ஏற்கவில்லை. அதற்குபதில் மெக்கானிகல் படித்துவிட்டு சில சிறப்புப் பாடங்களைப் படித்தால் போதும். சில பொறியியல் கல்லூரிகளில் கெமிக்கல், பயோடெக்னாலஜி ஆகியவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் பிற ஐந்து துறைகள் கட்டாயம் இருக்கவேண்டும். இவை தவிரப் பிற அனைத்தும் ஊரை ஏமாற்றும் வேலை.

Monday, June 02, 2014

இரண்டு கூட்டங்கள்

கடந்த மூன்று நாள்களில் இரண்டு கூட்டங்களுக்குப் போயிருந்தேன். முதலாவது, 30 மே 2014 அன்று ஷ்யாம் சேகர், அவருடைய ithought முதலீட்டு நிறுவனத்தின் சார்பாக நடத்தியது. ஐசிஐசிஐ புருடென்ஷியல் அஸெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திலிருந்து வெங்கடேஷ் சஞ்சீவி என்பவர் வந்திருந்தார். வங்கித் துறையில் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிதியை (ICICI Prudential Banking & Financial Services Fund) நிர்வகிக்கும் .

ஆட்சி மாற்றம், வங்கித் துறையில் அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், அவர் எந்த அடிப்படையில் முதலீடு செய்கிறார் போன்றவை குறித்துப் பேசினார். இவர் பேசுவதற்குமுன் ஷ்யாம் சேகர் பேசியதும் முக்கியமானது. தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகளைவிட மியூச்சுவல் ஃபண்ட், ஸ்டாக் மார்க்கெட் முதலீடுகள் நீண்டகால நோக்கில் பலன் தரக்கூடியவை. ஆனால் எவ்வளவுதான் எண்களோடு விளக்கினாலும் இன்னொரு வீட்டின்மீது முதலீடு செய்பவர்களைத்தான் நாம் பார்க்கிறோம்; அல்லது செய்கூலி, சேதாரத்தோடு தங்க நகைகளை வாங்குபவர்களைத்தான் நாம் பார்க்கிறோம்.

எக்கச்சக்கமான உள்கட்டுமானத் திட்டங்கள் சென்ற அரசின் செயலற்ற தன்மையால் முடங்கிக்கிடந்தன. அவற்றுக்குப் பல்வேறு வங்கிகள் கடன் அளித்துள்ளன. இந்தத் திட்டங்கள் முன்னேறவில்லை என்றால் வங்கிகளின் NPA (பலனளிக்கா சொத்துகள்) அதிகமாகிவிடும். இது எச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்ற ரீடெய்ல் வங்கிகளைத் தவிர பிற அனைத்து வங்கிகளையும் பாதிக்கும். ஏனெனில் ஏதோ ஒருவிதத்தில் பிற வங்கிகள் அனைத்தும் இம்மாதிரியான திட்டங்களுக்குக் கடன் கொடுத்துள்ளன.

மற்றொரு பக்கம், புதிய அரசு கட்டுமானத் திட்டங்களை ஊக்குவிக்கும் என்றால், அதன் காரணமாக ஒட்டுமொத்த நிதித் துறையும் வளர்ச்சி காணும். வங்கிகள் மட்டுமல்ல, வங்கியல்லா நிதி நிறுவனங்களும் (Non-banking Finance Corporations) வளர்ச்சி அடையும். வீட்டுக்கடன் நிறுவனங்கள், வண்டிக்கடன் நிறுவனங்கள் போன்றவை.

புதிய அரசின் கொள்கைகள் காரணமாக, வங்கித் துறையிலும் உள்கட்டுமானத் துறையிலும் நிச்சயமாகப் பெரும் வளர்ச்சி ஏற்படும் என்பதுதான் பெரும்பாலானோர் கருத்தாக இருக்கிறது.

***


1 ஜூன் 2014 அன்று Associated Chamber of Capital Markets சார்பில் எம்.ஆர்.வெங்கடேஷ் பேசும் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன, இப்போது பெரும் ஆதரவுடன் வந்திருக்கும் அரசு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது குறித்துப் பேச்சு இருந்தது. வெங்கடேஷின் பேச்சு நான் எதிர்பார்த்ததைவிட அதிகப் பரப்பைத் தொட்டுச் சென்றது. உணவு உற்பத்தியில் தொடங்கி மனித வளக் குறியீட்டு எண், கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதைச் சில புள்ளிவிவரங்களுடன் தொட்டுச் சென்ற வெங்கடேஷ், இத்துறைகளில் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கும் என்ற தன் கருத்தை முன்வைத்தார். பிறகு வருமான வரி, கடன்பத்திரச் சந்தை, கம்மாடிட்டி சந்தையில் உணவுப்பொருள்கள் மீதான ஃபியூச்சர்ஸ் டிரேடிங் போன்றவை குறித்தும் புதிய நகரங்கள், ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்துதல் (அதிவேக புல்லட் ரயில்கள் அல்ல, இப்போதிருக்கும் ரயில்களின் வேகத்தை இரட்டிப்பாக்குதல்), சரக்குப் பாதை, தூத்துக்குடி-ஹம்பண்டோட்டா துறைமுக இணைப்பு போன்ற சில உள்கட்டுமான விஷயங்கள் குறித்துப் பேசினார்.

எதில் மாற்றம் வேண்டும் என்பது குறித்து அவருடைய கருத்துகளில் எனக்கு ஒப்புதல் உண்டு. எப்படி அந்த மாற்றங்களைச் செய்யவேண்டும் என்பதில் பல இடங்களில் மாறுபடுகிறேன். ஆனால் வந்திருந்தோரின் கவனத்தை முழுமையாகக் கவர்ந்த மிக நல்ல பேச்சு.