Thursday, June 30, 2011

திருவண்ணாமலையில் இன்று

இன்று திருவண்ணாமலை SKP பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுடன் ஒரு பயிலரங்கு நிகழ்ச்சியில் இருக்கிறேன். கூட எங்கள் அலுவலகத்தின் நாகராஜனும் ராஜபாண்டியனும் இருக்கிறார்கள்.

Sunday, June 26, 2011

ஈழத்தமிழர் நினைவாக - சென்னை மரீனா

26 ஜூன் 2011 அன்று ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் சார்பில் சென்னை மரீனா கடற்கரையில் கண்ணகி சிலைக்குப் பின்புறம், இலங்கைத் தமிழர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது. சில படங்கள் இங்கே:
பெரும்பாலான கோஷங்கள் ‘பிரபாகரன் இறந்தார் என்பதை நம்பமாட்டோம்’ என்றன. ‘மறக்கமாட்டோம் மறக்கமாட்டோம், ஈழப் படுகொலையை மறக்கமாட்டோம்’ என்றன சில. ஐந்தாம் ஈழப்போர் நடக்கும், அதில் ஈழத்தைப் பெறுவோம் என்று சில கோஷங்கள். இந்தியாவையும் மன்மோகன் சிங்கையும் திட்டும் கோஷங்கள் சில. ராஜபக்ஷேவைத் தூக்கில் போடச் சொல்லி சில கோஷங்கள்.

ஓரிடத்தில் ஒருவர், சிங்களவர்கள் வெறும் 1.5 கோடி பேர்தான், தமிழ்நாட்டில் 7.5 கோடி தமிழர்கள் இருக்கின்றனர் என்றார். சிங்களப் பேரினவாதத்தை எதிர்க்கும்போதே மற்றொரு பேரினவாதத்தைத் தாண் பேசுவதை அவர் புரிந்துகொண்டாரா இல்லையா என்று தெரியவில்லை.

கண் பார்வை இல்லாத ஒருவர் கையில் தட்டி ஒன்றை ஏந்தி வந்திருந்தார். ஓரிருவர் ஊன்றுகோல் துணையுடன் வந்திருந்தனர்.

எங்கு பார்த்தாலும் ‘நாம் தமிழர்’ புலிக்கொடி பொறித்த வாகனங்கள் இருந்தன. காவலர்கள் அதிகம் இல்லை. அவர்கள் எந்தவிதப் பிரச்னையையும் எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்தது.

ஒரு கட்டத்துக்குப் பிறகு சிறு சிறு கூட்டமாக, வட்டமாகக் கூடி கோஷங்கள் சொல்லியபடி இருந்தனர். மழை அவர்களைக் கலைத்துவிட்டது.

நிறைய ஊடக நண்பர்களைப் பார்த்தேன். நாளை பத்திரிகைகளில் நிறையப் படங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம். தொலைக்காட்சியிலும்தான்.

Friday, June 24, 2011

நான் எம்.ஏ (வைணவம்) படிக்கப்போகிறேன்

வீட்டில், வரலாறு தொடர்பான நிறையப் புத்தகங்களை வைத்துப் படித்துக்கொண்டிருந்ததால், நான் ஏன் எம்.ஏ (வரலாறு) தொலைநிலைக் கல்வி வழியாகப் படிக்கக்கூடாது என்று மனைவி தூண்டினார். சரி, செய்துதான் பார்ப்போமே என்று போதாத ஆசை வந்துவிட்டது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் விண்ணப்பப் படிவம் அடங்கிய புத்தகம் ஒன்றை வாங்கிவரச்செய்தேன். ஆனால் அதில் அதிர்ச்சி காத்திருந்தது. எம்.ஏ (வரலாறு) படிக்கவேண்டும் என்றால் இளநிலையில் பி.ஏ, பி.காம், பி.எஸ்சி பட்டம் இருக்கவேண்டுமாம். பி.ஈ அல்லது பி.டெக் இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம். அதாவது சென்னைப் பல்கலைக்கழக விதிகளின்படி, பி.எஸ்சி இயல்பியல் படித்த ஒருவருக்கு எம்.ஏ வரலாறு படிக்கத் தகுதி உள்ளது; ஆனால் பி.டெக் மெக்கானிகல் எஞ்சினியரிங் படித்த ஒருவருக்கு அதற்கான தகுதி இல்லை.

இன்று சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, இது உண்மைதானா என்று கேட்க முடிவு செய்தேன். முதலில் பேராசிரியர் ஜெயதேவனைத் தொடர்புகொண்டேன். அவர் தொலைநிலைக் கல்வி இயக்குனர் ராஜ்மோகனுடைய எண்ணைக் கொடுத்தார். அவரிடம் பேசியபோது அவர் பி.ஆர்.ஓவிடம் பேசுங்கள் என்றார். பி.ஆர்.ஓ என்னை Eligibility Department-ஐத் தொடர்புகொள்ளச் சொன்னார். அங்கு போனை எடுத்தவர், தெளிவாக, முடியாது என்று சொல்லிவிட்டார். ‘நீங்கள் ஏன் எம்.பி.ஏ அல்லது எம்.ஏ பொலிடிகல் சயன்ஸ் படிக்கக்கூடாது?’ என்று பதிலுக்குக் கேட்டார்.

கொஞ்சம் தேடிப் பார்த்ததில், எம்.ஏ (வைணவம்) படிப்பதற்கு இளநிலையில் எந்த ஒரு டிகிரி இருந்தாலும் போதும் என்று இருந்தது. சரி, நம்முடைய வைணவ வேர்களைப் பற்றி ஆராயத்தான் எம்பெருமான் இந்தத் திருவிளையாடலைப் புரிந்திருக்கிறான் என்று நினைத்துக்கொண்டு அந்த நபரிடம் நான் எம்.ஏ வைணவம்-தான் படிக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டேன்.

ஆகவே, மக்களே, நான் எம்.ஏ வைணவம் படிக்கப்போகிறேன். அதற்கான புத்தகங்களைப் படிக்க ஆரம்பிக்கும்போது என் வலைப்பதிவிலும் நிறைய வைணவக் கட்டுரைகள் வரும். வரலாறு படித்து, அதனை வலைப்பதிவில் எழுதலாம் என்றுதான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். என்னை வேறு வழியில் திசை திருப்பி, உங்களை இக்கட்டில் மாட்டிவிட்ட பழி முழுதும் சென்னைப் பல்கலைக்கழகத்தையே சாரும்.

Wednesday, June 22, 2011

லோக்பால் மசோதா

அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நாட்டை முன்னேற்றுவதில் எந்த ஆர்வமும் இல்லை என்று சொல்வது எதிர்மறைவாதம். அதனால் நமக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பலரும் ஊழலால் பயன் அடைகிறார்கள். ஊழலாக இல்லாவிட்டாலும் அதிகார துஷ்பிரயோகத்தால் தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள இவர்களில் பலர் தயங்குவதில்லை. ஆனாலும் நமக்கு ஆட்சியாளர்கள் தேவையாக இருக்கிறார்கள். இருக்கும் சில கட்சிகளுக்குள்ளாக எதையாவது ஒன்றை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நாம் தேர்ந்தெடுத்துதான் ஆகவேண்டியுள்ளது.

அதிகாரவர்க்கமே உருவாக்கியுள்ள மாநில லஞ்ச ஒழிப்புத்துறை, மத்திய புலனாய்வுப் பிரிவு போன்றவையெல்லாம் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. மாநில அளவில், 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரைத்தான் இவர்களால் பொறி வைத்துப் பிடிக்கமுடிந்திருக்கிறது. மத்திய அளவில் அவ்வப்போது கேதன் தேசாய் போன்ற மருத்துவ கவுன்சில் தலைவர் மாட்டியுள்ளார். கடுமையான அரசியல் நெருக்கடி காரணமாக கல்மாடி, இராசா, கனிமொழி போன்றோர் சிக்கியுள்ளனர். ஆனால் பொதுவாக, ஊழல் என்பது இதையெல்லாம் தாண்டி பலமடங்கு நடந்துவருகிறது என்று நம் எல்லோருக்குமே ஓர் எண்ணம் உள்ளது. சாட்சிகளும் நிரூபணமும் தண்டனைகளும்தான் வேண்டிய அளவு நடைபெறுவதில்லை.

இந்நிலையில், அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று மக்களுக்குச் சரியாகத் தெரிவதில்லை. எதிர்க்கட்சிகள் தங்கள் ஆதாயத்துக்காக மட்டும்தான் ஊழல் புகார்களை முன்னெடுக்கின்றன. தாங்கள் ஆட்சியைப் பிடித்ததும் அதே ஊழலைத்தான் இவர்களும் செய்கிறார்கள். எனவே வலுவான எதிர்ப்பு என்பது சிவில் சொசைட்டி என்ற குடிமைச் சமூக அமைப்புகளிடம் இருந்துதான் வரவேண்டியிருக்கிறது.

இப்படித்தான் அண்ணா ஹஸாரேயும் பாபா ராம்தேவும் முன்னுக்கு வந்திருக்கிறார்கள்.

தனிப்பட்ட முறையில் அவர்களை நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் மக்களை வாட்டியிருக்கும் ஒரு பிரச்னையை அழகான முறையில் முன்னெடுத்து வைத்துள்ளனர். அதன் விளைவாக முன்வைக்கப்பட்டதே லோக்பால் மசோதாவுக்கான வரைவு.

மத்திய அரசும் ஓரளவுக்கு இறங்கிவந்து அண்ணா ஹஸாரேவையும் அவரது ஆதரவாளர்களையும் சட்ட வரைவை உருவாக்கும் குழுவில் சேர்த்துக்கொண்டது. ஆனால் ஹஸாரே அணி, இதற்குப்பின் நடந்துகொண்ட முறை சரியானதாகத் தோன்றவில்லை.

ஒரு சமரசம் ஏற்படவேண்டும் என்றால் இரு தரப்பும் கொஞ்சம் இறங்கிவரவேண்டும். ஹஸாரே அணிக்கு நாடு முழுவதும் முழுமையான ஆதரவு இல்லை. நாட்டில் பலருக்கு அவரும் அவர் பின் நிற்கும் பலரும் யார் என்றே தெரியாது. நாளையே அரசையோ அல்லது அரசியல்வாதிகளையோ (நாடாளுமன்றம்) எதிர்த்துப் போராடவேண்டுமென்றால் அதற்கான செயல்திட்டம் கிடையாது. போராட்டத்தை நடத்துவதற்கான அமைப்பும் கிடையாது.

முன்னேற்றம் என்பதே எதிர்-இருமை காரணமாக ஏற்படும் முரணியக்கம்தான். அரசு ஒரு தரப்பை முன்வைக்கிறது. அதை மறுத்து ஹஸாரே அணியினர் ஒரு தரப்பை முன்வைக்கிறார்கள். இந்த இரண்டு தரப்புகளும் மோதுகின்றன. முரண் இயக்கம் காரணமாக உந்தப்பட்டு ஏதோ ஓரிடத்தில் சென்று நிற்கின்றன. அப்படிப்பட்ட நிலை, எப்படியும் முந்தைய நிலைக்குச் சற்று மேலானதாகத்தான் இருக்கவேண்டும். அதை முதலில் அடைவதுதான் முக்கியம். அதன்பின், அடுத்த போராட்டத்துக்குத் தயாராகவேண்டும்.

ஆனால் அதை விடுத்து, நான் என் பிடியிலிருந்து விலகவே மாட்டேன் என்று சொல்வது எதிராளியை அவமதித்து, அவரது நிலையை இறுகச் செய்வதற்கான வழியாகும். அரசுடன் பேரம் பேசுவது என்றாலே ஊழல் செய்யும் பலரும் இருக்கும் ஓர் அமைப்புடன் பேரம் செய்வதற்கு இணையானதுதான். இது அரசியல்வாதிகளுக்கும் தெரியாததா என்ன? அப்படி இருக்கும்போது ஹஸாரே அண்ட் கோ கேட்கும் எல்லாவற்றையும் விட்டுத்தர அவர்கள் விரும்புவார்களா என்ன? எனவே அவர்கள் கொடுப்பதுவரை வாங்கிக்கொண்டு அதைக்கொண்டே அவர்களை நெருக்கும் அடுத்தகட்டப் போராட்டத்தில் இறங்கவேண்டும்.

இப்படிப்பட்ட அரசியல்வாதிகளின் ஆதரவுடன்தானே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நடைமுறைக்கு வந்தது? வலுவான, நடுநிலையான மத்திய தேர்தல் ஆணையம் செயல்பாட்டில் இருக்கிறது? மத்திய கணக்காயர் (Accountant General) என்பவர் நாளுக்கு நாள் அரசின், அமைச்சர்களின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளைப் பட்டியல் இட்டுக்கொண்டுதானே இருக்கிறார்? சிபிஐ என்னதான் அரசின் கைப்பாவையாக இருந்தாலும் ஏதோ சில செயல்களைச் செய்துகொண்டுதானே இருக்கிறது? அதேபோல சிறு சிறு காலடிகளை எடுத்துவைத்து நாம் முன்னேறிக்கொண்டுதான் போகப்போகிறோம்.

ஆனால் சிலருக்கு, தங்கள் வாழ்நாளுக்குள்ளாகவே மாற்றம் வந்துவிடவேண்டும் என்ற அவசரம் இருக்கிறது. ஜெயபிரகாஷ் நாராயணை அதிரடிப் போராட்டத்தில் இறக்கியது இந்த விரக்திதான். இந்த விரக்திதான் அண்ணா ஹஸாரே போன்றவர்களை உடனடி மாற்றம் வேண்டும் என்பதில் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இப்படிப் பிடித்து நெருக்கியதால்தான் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தாகவேண்டும் என்று இந்திரா காந்திக்கு சித்தார்த் சங்கர் ரே போன்ற தீய சக்திகள் ஆலோசனை அளித்தனர். இப்படிப் பிடித்து நெருக்குவதால் நாளை மன்மோகன் சிங்கோ சோனியா காந்தியோ அதே மாதிரியான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் செய்ய நினைக்கும் கொஞ்சநஞ்ச சீர்திருத்தங்களையும் செய்யாமல் போகலாம். பாஜக ஒன்றும் ஒழுங்கல்ல. அவர்களும் அண்ணா ஹஸாரே விரும்பியதைச் செயல்படுத்துவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவே முடியாது. ஆட்சி மாற்றத்தால் பயன் இருக்கும் என்றும் தோன்றவில்லை.

எனவே கிடைத்தவரை இப்போதைக்குப் போதும் என்று ஏற்றுக்கொண்டு சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர ஹஸாரே அண்ட் கோ உழைக்கவேண்டும். அது வந்தவுடனேயே அதனை நடைமுறைப்படுத்துவதில் தங்கள் உழைப்பைச் செலுத்தவேண்டும். அதற்கு அடுத்தகட்டமாக அதனை எப்படி மேலும் மெருகேற்றுவது என்று பாடுபடவேண்டும்.

*

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படியெல்லாம் நடக்கப்போவதில்லை என்று தோன்றுகிறது. மகளிருக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவைப் போலவே இதுவும் குப்பைக்கூடைக்குத்தான் போகப்போகிறது என்று தோன்றுகிறது. அப்படியானால் அண்ணா ஹஸாரே தன் வாழ்நாளில் இந்தியா முழுமைக்குமாக சில நன்மைகளைச் செய்வதிலிருந்து பின்தங்கிப்போவார். ஊழலுக்கு எதிரான போராட்டம் குறைந்தது பத்தாண்டுகளாவது பின்தங்கிப்போகும்.

Monday, June 20, 2011

மகாபாரதம்

[ஏழாவது படிக்கும் என் பெண்ணின் வகுப்பு அசைன்மெண்டுக்காக மகாபாரதத்தைச் சுருக்கி எழுதிக்கொடுத்தேன். இத்துடன் ‘இதிலிருந்து நாம் அறியும் நீதியாவது...’ என்ற பகுதியும் உண்டு. அதை மட்டும் வெட்டிவிட்டு கதையை மட்டும் உங்களுக்காக இங்கே...]

குரு வம்சத்தின் பங்காளிகளுக்கு இடையே நிலத்துக்காக நடைபெறும் மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். இதைக் களமாகக் கொண்டு ஆசிரியரான வியாசர் மாபெரும் காப்பியத்தைப் படைத்துள்ளார்.

சந்தனு மஹாராஜாவுக்கு முதல் மனைவி கங்கை மூலம் தேவவிரதன் என்றொரு மகன் பிறக்கிறான். மனைவி சந்தனுவை விட்டுப் பிரிந்து சென்றுவிடுகிறார். சந்தனு பின்னர் சத்யவதி என்ற பெண்மீது ஆவல்கொண்டு அவளை மணக்க விரும்புகிறார். ஆனால் தன் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்தான் நாட்டை ஆள்வார்கள் என்று அரசர் வாக்குறுதி அளித்தால்தான் பெண்ணை மணமுடித்துத் தரமுடியும் என்று சத்யவதியின் தந்தை சொல்கிறார். மூத்த பையன் தேவவிரதன் இருக்கும்போது இவ்வாறு செய்வது சரியல்ல என்பதால் சந்தனு மறுத்துவிடுகிறார்.

இந்த உண்மை தெரியவந்ததும், தேவவிரதன் தான் இனி அரசனாகப் போவதில்லை என்றும் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்றும் சூளுரைக்கிறார். வானில் இருந்து தேவர்கள் அவர்மீது பூமாரி பொழிகிறார்கள். அவர் அன்றிலிருந்து பீஷ்மர் என்று அழைக்கப்படுகிறார்.

சந்தனு சத்யவதியை மணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு சித்ராங்கதன், விசித்ரவீர்யன் என்று இரு ஆண் குழந்தைகள். சந்தனுவுக்குப் பிறகு சித்ராங்கதன் சில காலம் அரசாண்டு, மணம் செய்துகொள்ளாமலேயே இறந்துபோகிறான். விசித்ரவீர்யன் அடுத்து அரசனாகிறான். அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று அரச குமாரிகளுக்குச் சுயம்வரம் நடக்கும் இடத்திலிருந்து அவர்களை பீஷ்மர் தூக்கிக்கொண்டு வந்து விசித்ரவீர்யனுக்கு மணம் முடிக்க முற்படுகிறார்.

அம்பா விசித்ரவீர்யனை மணக்க விரும்பாமல் நெருப்பில் மூழ்கி இறந்துபோகிறாள். அம்பிகாவையும் அம்பாலிகாவையும் மணந்துகொண்டாலும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரேயே விசித்ரவீர்யன் இறந்துபோகிறான்.

இப்போது நாட்டை ஆள யாரும் இல்லை. பீஷ்மர் தான் செய்துகொடுத்த சத்தியத்தின் காரணமாக நாட்டை ஆள மறுக்கிறார். சத்யவதி வியாசரை வேண்டிக்கொள்ள, அவரது அருளால், ராணிகள் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்கள்தான் திருதராஷ்டிரனும் பாண்டுவும். கூடவே அருகில் இருக்கும் வேலைக்காரிக்கும் விதுரன் என்ற குழந்தை பிறக்கிறது.

திருதராஷ்டிரனுக்குக் கண் பார்வை கிடையாது. பாண்டுவுக்கு தோலில் நோய். திருதராஷ்டிரனுக்கு காந்தாரியையும் பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என்ற இருவரையும் மணம் செய்துவைக்கிறார் பீஷ்மர்.

திருதராஷ்டிரன்-காந்தாரி தம்பதிக்கு 100 குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களின் முதலாமவன் துரியோதனன். இவர்கள் 100 பேரும் கௌரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். குந்திக்கு மூன்று பையன்கள்: யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன். மாத்ரிக்கு இரு பையன்கள்: நகுலன், சகாதேவன். இந்த ஐவரும் சேர்ந்து பஞ்ச பாண்டவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

குந்திக்கு ஒரு முனிவர் சில மந்திரங்களைக் கற்றுத் தந்திருக்கிறார். அந்த மந்திரங்களை உச்சரித்தால் தேவர்கள் அருளால் அவளுக்குக் குழந்தை பிறக்கும். ஆனால் தனக்குத் திருமணம் ஆகும் முன்னரே அவள் இந்த மந்திரங்களை முயற்சித்துப் பார்க்கிறாள். அப்போது ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. பயந்துபோன குந்தி அந்தக் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டுவிடுகிறாள். அந்தக் குழந்தையை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தைதான் கர்ணன். குந்தியின் மகனாகப் பிறந்தாலும் கர்ணனுக்கு நெருங்கிய நண்பனாக இருப்பது துரியோதனன்தான்.

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே சண்டை. சிறுவர்களாக இருக்கும்போதே போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு துரோணர் என்ற குரு கலைகளைக் கற்றுக்கொடுக்கிறார்.

திருதராஷ்டிரன் கண் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்பதால் பாண்டுவே நாட்டை ஆள்கிறார். ஆனால் காட்டில் இருக்கும்போது பாண்டுவுக்கு மரணம் ஏற்படுகிறது. பாண்டுவுடன் கூடவே மனைவி மாத்ரி உடன்கட்டை ஏறி இறக்கிறார்.

பாண்டவர்களும் கௌரவர்களும் அரசாளும் வயதை அடையும்போது, பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து யுதிஷ்டிரனுக்கே முடி சூட்டுகின்றனர். இது கௌரவர்களுக்குக் கடும் கோபத்தை வரவழைக்கிறது. துரியோதனன் அரக்கால் ஆன மாளிகை ஒன்றைக் கட்டி, பாண்டவர்களை விருந்துக்கு அழைத்து, அவர்களை அங்கு தங்கவைக்கிறான். இரவில் மாளிகையை எரித்துவிடுகிறான். ஆனால் பாண்டவர்கள் இதனை முன்னமேயே ஊகித்து, தப்பி, காட்டுக்குள் சென்றுவிடுகின்றனர். காட்டில் இருக்கும்போது ஒரு சுயம்வரத்தில் அர்ஜுனன் திரௌபதியை வெல்கிறான். தாய் குந்தியின் ஆணைப்படி ஐந்து பாண்டவர்களும் திரௌபதியை மணக்கின்றனர்.

பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்து தங்களுக்கான நிலத்தைப் பங்குபோடுமாறு கேட்கின்றனர். அவர்களுக்குக் கிடைக்கும் காண்டவ வனம் என்ற பகுதியை அழித்து இந்திரப்பிரஸ்தம் என்ற நாடாக மாற்றுகின்றனர். அவர்களது அழகான நாட்டைப் பார்த்து ஆசைப்படும் துரியோதனனுக்கு அவன் மாமா சகுனி உதவி செய்ய வருகிறார்.

சூதாட்ட விருந்து ஒன்றை துரியோதனன் ஏற்படுத்தி, யுதிஷ்டிரனை அதில் கலந்துகொள்ள அழைக்கிறான். சூதாட்டத்தில் யுதிஷ்டிரன் வரிசையாகத் தோற்று தன் நாடு, சொத்து அனைத்தையும் இழக்கிறான். அத்துடன் நில்லாமல், தன் தம்பிகள், தான், தன் மனைவி திரௌபதி என அனைத்தையும் இழக்கிறான். முடிவில் பெரியவர்கள் தலைப்பட்டு அடிமை நிலையை மாற்றி, பாண்டவர்கள் 12 ஆண்டுகள் காட்டிலும் ஓராண்டு யாராலும் கண்டுபிடிக்கமுடியாமலும் இருக்கவேண்டும் என்று சொல்கின்றனர்.

இந்தக் காலம் முடிவுற்றதும் பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிவந்து தங்கள் சொத்துகளைத் திரும்பக் கேட்கின்றனர். கிருஷ்ணர் பாண்டவர்கள் தரப்பில் தூது செல்கிறார். ஆனால் துரியோதனன் ஊசி முனை அளவு நிலம் கூடத் தரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறான். இதன் விளைவாக மகாபாரதப் போர் குருட்சேத்திரத்தில் நடைபெறுகிறது.

போரில் பாண்டவர்கள் வெல்கின்றனர். ஆனால் பேரழிவு ஏற்படுகிறது. இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச் சேதம். பீஷ்மர், துரோணர் முதற்கொண்டு அனைவரும் கொல்லப்படுகின்றனர். கௌரவர்கள் 100 பேரும் கொல்லப்படுகின்றனர். கர்ணனும் கொல்லப்படுகிறான். பாண்டவர்கள் ஐவரும் பிழைத்திருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். இறுதியில் கிருஷ்ணன் அருளால் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றில் இருக்கும் கரு ஒன்று மட்டும் உயிர் பிழைக்கிறது. அந்தக் குழந்தைதான் பரீட்சித்து.

பரீட்சித்து வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, பாண்டவர்கள் அனைவரும் காட்டுக்குச் சென்று உயிர் விடுகின்றனர்.

(முற்றும்)

நவீன கணிதத்தின் ஆரம்பம்: கார்ல் பிரெடெரிக் கவுஸ் (1777-1855)

[அம்ருதா இதழில் சில மாதங்களுக்குமுன் வெளியான என் கட்டுரை. இரு பாகங்களாக வெளியானது. சேர்த்து, கொஞ்சம் எடிட் செய்துள்ளேன்.]

ஜெர்மனியில் அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர் கார்ல் பிரெடெரிக் கவுஸ். அவரை குருவாகக் கொண்ட பரம்பரையிலிருந்துதான் எண்ணற்ற கணித விற்பன்னர்களும் அறிவியல் விற்பன்னர்களும் வெளிவர ஆரம்பித்தனர்.

கவுஸுக்கு முன்னோடி என்று யாரையும் சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால் கவுஸ் கணிதத் துறைக்கு வந்ததே ஓர் ஆச்சரியம்தான்.

சில ஆண்டுகளுக்கு முன்னர்கூட நம் நாட்டில் பொதுவாக ஓர் எண்ணம் நிலவிவந்தது. படித்து என்ன சாதித்துவிட முடியும், கையில் ஒரு தொழில் இருந்தால் அதனால் ஒரு வேலையாவது கிடைக்கும், பணம் சம்பாதிக்கமுடியும் என்பதுதான் அது. ஆனால் இன்று நிலைமை வேறு. படித்தால்தான் நல்ல வேலை கிடைக்கும்; கிடைத்தால்தான் நல்ல சம்பளம் பெறலாம் என்பதை நம் மக்கள் உணர்ந்துள்ளனர்.

கவுஸின் தந்தை கெர்ஹார்ட் தீதரிச் ஒரு கொத்தனார். தன் மகன் பள்ளி சென்று படிப்பதில் அவருக்கு அதிக அக்கறை ஏதும் இருக்கவில்லை. மகனும் தன் கூடவே கொத்தனார் தொழிலில் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணினார். மேலும் அந்தக் காலத்தில் ஜெர்மனியில் பள்ளிக்கூடம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். சாதாரண திண்ணைப் பள்ளிக்கூடம் மாதிரிதான். கொஞ்சம் கணக்கு, கொஞ்சம் மொழி. அதற்குமேல் ஒன்றும் சொல்லித்தரப் போவதில்லை.

ஆனால் கவுஸின் தாயும் தாய்மாமனும் சற்று சிந்தனை வளம் மிக்க குடும்பத்திலிருந்த வந்தவர்கள். தாய்மாமன் பிரெடெரிக் பென்ஸ், உயர்வகைத் துணிகளை நெய்பவர். அவர் தன் பட்டறிவில் கிடைத்தவற்றைத் தன் மருமகனுக்குப் போதித்தார்.

கவுஸின் தாய் டோரதியா முயற்சி மேற்கொண்டதால் தந்தை தன் மகனைப் பள்ளிக்கூடம் அனுப்பச் சம்மதித்தார். அந்தப் பள்ளிக்கூடத்தில்தான் கவுஸின் மேதைமை வெளிப்பட ஆரம்பித்தது.

சிறு வயது கவுஸ் எப்படி தன் கணிதத் திறமையை வளர்த்துக்கொண்டார் என்பது சரியாகத் தெரியவில்லை. அவரது திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர் சரியான முரடர். பையன்கள் வகுப்பில் சத்தம் போட்டால் சமாளிக்கவேண்டுமே? அதனால் தினமும் காலையில் வகுப்புக்கு வந்ததும் ஒரு கடினமான கூட்டல் கணக்கைக் கொடுத்துவிடுவார். சிறு குழந்தைகளுக்கு மூன்று இலக்க எண்களைக் கொண்டு கூட்டல் செய்வது என்பதே கடினம். ஆனால் எட்டு இலக்க எண்கள் நூறைக் கொடுத்து, ‘கூட்டு’ என்று சொன்னால் என்ன செய்யும் அந்தக் குழந்தைகள், பாவம்!

வகுப்பு மாணவன் ஒவ்வொருவனிடமும் ஒரு சிலேட்டுப் பலகை இருக்கும். கணக்கைப் போட்டு முடித்ததும் மாணவர்கள் சிலேட்டை ஓரிடத்தில் வைக்கவேண்டும். முதலில் முடிக்கும் மாணவனுடைய சிலேட்டு அடியில் இருக்கும். அடுத்து முடிப்பவன் சிலேட்டு அடுத்து. கடைசியாக முடிப்பவன் சிலேட்டு மேலாக இருக்கும்.

ஆசிரியர் புட்னர் பெரிய கூட்டல் கணக்கைக் கொடுத்ததுதான் தாமதம். கவுஸ் தன் சிலேட்டில் பதிலை எழுதிக் கீழே வைத்துவிட்டார். ஆசிரியருக்கு நம்பிக்கையில்லை. கடைசியில் கூப்பிட்டு வெளுத்துக்கட்டிவிடலாம் என்று முடிவெடுத்தார். அடுத்த ஒரு மணி நேரம் ஆகியும் வேறு எந்த மாணவனும் விடையைக் கண்டுபிடிக்கவில்லை. பிறகு அனைவரது சிலேட்டுகளும் வைக்கப்பட்டன. எல்லாவற்றிலும் தப்பான விடை. கவுஸின் சிலேட்டைத் தவிர.

அந்த சிலேட்டில் வழிமுறை, செயல்முறை என எதுவும் கிடையாது. ஒரேயொரு வரியில் விடை மட்டும். ஆடிப்போய்விட்டார் ஆசிரியர்.
அந்த ஆசிரியர் கொடுத்த கணக்கு என்ன என்பது இங்கு முக்கியமில்லை. அதைப்போல, ஆனால் அதைவிட எளிதான கணக்கு ஒன்றை எடுத்துக்கொள்வோம்.

1+2+3+4+...+100 என்ற கூட்டல் கணக்கை எடுத்துக்கொள்வோம். அடுத்தடுத்து இருக்கும் 100 இயல் எண்களைக் கூட்டவேண்டும். கூட்டல் தெரிந்த சிறு குழந்தையிடம் கொடுத்தால் அது 30 நிமிடங்கள் எடுத்து, கூட்டல் விடையைச் சொல்லக்கூடும். சரியாகக் கூட்ட விட்டுவிட்டால் தவறான விடைதான் கிடைக்கும். இதே கணக்கை மிக எளிதாகவும் செய்யலாம்.

மேலே கொடுக்கப்பட்ட எண்களை மாற்று வரிசையில் எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு வரிசைகளையும் அடுத்தடுத்துப் போட்டு எழுதுங்கள்:

1  +  2  +  3  + ...  + 99 + 100
100 + 99 + 98 + ... + 2 + 1

இப்போது மேலும் கீழும் உள்ள எண்களை எல்லாம் கூட்டினால் கிடைப்பது இது:

101 + 101 + 101 + ... + 101 + 101

அதாவது 100 முறை 101 என்ற எண்ணைக் கூட்டுவதற்குச் சமம். அப்படியானால் விடை = 100 x 101 = 10100

ஆனால், கொடுக்கப்பட்டுள்ள எண்களை இரண்டு முறை கூட்டியுள்ளோம். எனவே சரியான விடை = 10100/2 = 5050.

இந்தக் கணக்கைச் செய்துமுடிக்க ஆகும் நேரம் அதிகபட்சம் 5 விநாடிகள் மட்டுமே. எவ்வளவு அதிக இலக்கமுள்ள எண்களாக இருந்தாலும் சரி, அடுத்தடுத்து வரும் ஏகப்பட்ட எண்களைக் கூட்ட எளிமையான ஃபார்முலா உள்ளது. கவுஸுக்கு 8 வயது ஆகும்போது அவர் இதைச் செய்தார் என்பதுதான் ஆச்சரியம். அதுவும் இன்றுபோல் அன்றி அப்போது இந்தக் கணக்கைச் செய்வது எப்படி என்று யாரும் அவருக்குப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுத்திருக்கமுடியாது.

கவுஸ் தன் கணிதத் திறமையைப் பற்றிப் பின்னாளில் சொல்லும்போது, தனக்குப் பேச்சு வருவதற்கு முன்னமேயே கணக்கு போடும் திறமை வந்துவிட்டது என்பாராம். அவரது தந்தை தன்கீழ் பணிசெய்யும் ஆட்களுக்கு சம்பளப் பட்டுவாடா செய்யும்போது போட்ட கணக்கில் இருந்த தவறை 3 வயதாக இருக்கும்போதே கவுஸ் சுட்டிக்காட்டியதாகவும் ஒரு கதை உண்டு.

கவுஸ் அவரது ஆசிரியரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதில் ஒரு நன்மை விளைந்தது. தன் மாணவன் அதிபுத்திசாலி என்பது புட்னருக்குத் தெரியவந்ததும், அவரது நடத்தையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தன் உதவியாளர் பார்டெல்ஸ் என்பவரைக் கொண்டு கையில் கிடைத்த கணிதப் புத்தகத்தையெல்லாம் கவுஸுக்குச் சொல்லித்தர வைத்தார். கவுஸும் அடுத்த சில ஆண்டுகளில் தன் கல்வியை வெகுவாகப் பெருக்கிக்கொண்டார்.

கவுஸுக்குக் கிடைத்த நல்லூழ், அருகில் பிரன்ஸ்விக் என்ற நகரின் ஆட்சியாளராக (டியூக்) இருந்த கார்ல் வில்ஹெல்ம் ஃபெர்டினாண்ட் என்பவர். பார்டெல்ஸ் கவுஸை அழைத்துச் சென்று டியூக் ஆஃப் பிரன்ஸ்விக்கிடம் அறிமுகம் செய்துவைத்தார். புலவர்களுக்கு எப்படிப் புரவலர்கள் தேவையோ அப்படித்தான் அக்காலக் கணிஞர்களுக்கும். கவுஸின் புரவலர் ஆனார் ஃபெர்டினாண்ட்.

அடுத்த சில ஆண்டுகள் கவுஸின் படிப்புக்குத் தேவையான பணத்தை அளித்ததோடு, அதற்குப் பின்னும் தொடர்ந்து கவுஸுக்குத் தேவையான பணத்தை டியூக் அளித்துவந்தார். தன் 18 வயதில் கவுஸ் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்துக்குப் படிக்கச் சென்றார். அந்தப் பல்கலைக்கழகத்தில் அவர் இருந்த மூன்றாண்டுகளில் கணிதத்தின் முகத்தையே கவுஸ் மாற்றிவிட்டார். 21 வயதில் கவுஸ் தான் அதுவரை செய்த ஆராய்ச்சிகளைக் கொண்டு ஒரு புத்தகம் எழுதினார்.

இன்றுபோல் அல்ல அந்நாளின் பதிப்புலகம். மிகுந்த கஷ்டத்துக்கு இடையில் அவரது பதிப்பாளர் 1801-ல் Disquisitiones Arithmeticae என்ற அந்தப் புத்தகத்தை (லத்தீன் மொழியில் எழுதப்பட்டது) வெளியிட்டார். பின்னர் அந்தப் பதிப்பாளர் திவால் ஆகிவிட்டார்! அதனால் புத்தகங்களின் பிரதிகள் கிடைப்பதே அரிதானது. இதற்கிடையில் கவுஸ் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைக்கு அவரது பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் அளித்தது.

கணிதத்தையே கவுஸ் புரட்டிப் போட்டிருக்கலாம். ஆனால் அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது வானில் உள்ள கோள்கள். இது ஏதோ ஜோதிஷ விஷயம் அல்ல.

படித்தாயிற்று. முனைவர் பட்டம் பெற்றாயிற்று. புத்தகம் ஒன்றும் எழுதியாயிற்று. (அதில் உள்ள விஷயங்கள் வெகு சிலருக்கு மட்டுமே புரிந்தது; அதுவும் முழுமையாக யாருக்கும் புரியவில்லை என்பது வேறு விஷயம்!) அடுத்து வயிற்றுப்பாட்டைக் கவனிக்கவேண்டுமே? ஒரு பக்கம் மகனது சாதனை என்ன என்று புரியாமலேயே மகனை மெச்சும் தாய். மறுபக்கம், தன் குலத்தொழிலைச் செய்யாமல் கணக்கு போடுகிறேன், பல்கலைக்கழகம் சென்று படிக்கிறேன் என்று உருப்படாமல் திரிகிறானே மகன் என்று புழுங்கும் தந்தை. எத்தனை நாளுக்குத்தான் டியூக் ஆஃப் பிரன்ஸ்விக் தரும் உதவித்தொகையில் காலத்தைக் கழிக்கமுடியும்? டியூக் கொடுத்த பணத்தில்தான் புத்தகமே அச்சிடப்பட்டது.

1781-ல் யுரேனஸ் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. ஹெகல் என்ற ஜெர்மானிய தத்துவ மேதை பிரபஞ்சத்தில் மொத்தம் ஏழு கோள்கள் மட்டும்தான் இருக்கமுடியும் என்று ‘நிறுவி’ ஒரு புத்தகத்தையே எழுதி வெளியிட்டார். ஆனால், செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் பல சிறு கிரகங்கள் இருக்கலாம் என்ற கொள்கை வெளியானது. 1801-ல் கியுசுப்பி பியாஸ்ஸி இப்படிப்பட்ட ஒரு குட்டி கிரகத்தைத் தன் தொலைநோக்கியில் பிடித்துவிட்டார். இதற்கு சீரஸ் என்று பின்னர் பெயரிடப்பட்டது.

உடனே ஐரோப்பா முழுவதும் இருந்த அறிஞர்கள் இந்த கிரகத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள முற்பட்டனர். அதன் பாதையை முழுவதுமாகக் கணக்கிடுபவர்களுக்குப் பெரும் பரிசு காத்திருந்தது. யார் கண்டார்கள், பணம் மட்டுமின்றி மிக முக்கியமான வேலையும் கிடைக்கலாம். நியூட்டனே தன் காலத்தில் இதைப் போன்ற வேலையெல்லாம் மிகவும் கடினம் என்று சொல்லியிருந்தார். அவருக்குப்பின் லாப்லாஸ் வானியல் பற்றிய தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

சீரஸ் பிரச்னையைத் தான் முடித்து வைத்தால் தன் வாழ்க்கை வளம் பெறும் என்று நினைத்த கவுஸ் அதில் முழுமூச்சாக இறங்கினார். அதன் விளைவாக அவரது கணித வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து வானியல் வாழ்க்கை ஆரம்பமானது. அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு கவுஸ் இதுபோன்ற குட்டி கிரகங்கள், இன்னபிற வான் கற்கள் என அனைத்தின் பாதைகளையும் முடிவாகக் கணக்கிட்டு தன் இரண்டாவது புத்தகத்தை 1809-ல் வெளியிட்டார்.

இதற்கிடையில் டியூக் தன் உதவித்தொகையை அதிகரிக்க, 1805-ல் கவுஸ் திருமணம் செய்துகொண்டார். அடுத்த ஆண்டிலேயே அவரது தந்தை மரணம் அடைந்தார். கவுஸுக்கு தன் தந்தைமீது பெரிய மரியாதை இல்லை. கவுஸின் தந்தை கடைசிவரை தன் மகன் பற்றி என்ன நினைத்தார் என்று தெரியவில்லை.

கவுஸுக்கு அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் பிறந்தன. மூன்றாவது குழந்தையின் பிறப்புக்குப் பின் மனைவி 1809-ல் இறந்துவிட்டார். குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்காக கவுஸ் மறுமணம் செய்துகொண்டார்.

*

தன் 21 வயதுக்குள்ளாக கணிதத்தின் முகத்தை மாற்றிய கவுஸ், மேலும் மேலும் கணிதக் கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்தால் என்ன செய்திருப்பாரோ! அப்படி நடக்கவிடாமல் செய்ததுதான் சீரஸ் குட்டிக் கிரகத்தின் கண்டுபிடிப்பு. அடுத்த பல வருடங்கள் கவுஸ், வான்வெளியில் உள்ள குட்டி கிரகங்கள், வால் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் பாதைகளைக் கணிக்கும் கம்ப்யூட்டராக மாறிப்போனார்.

அவரது வாழ்கையைப் பாதியிலேயே முடித்துவிடக்கூடிய ஆபத்து அடுத்து மாவீரன் நெப்போலியன் என்பவனது உருவில் வந்தது.
நெப்போலியன் ஐரோப்பாவை அதகளம் செய்துகொண்டிருந்தான். பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக மன்னராட்சி ஒழிந்துவிடும் என்று மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் சாதாரண வீரனாக இருந்த நெப்போலியன் தன்னைத் தானே மன்னனாக முடிசூட்டிக்கொண்டான். தொடர்ந்து, தன் அண்டை நாடுகளை எல்லாம் அடித்து நொறுக்கித் தனக்குக் கப்பம் கட்ட வைக்கப் புறப்பட்டான்.

1805-ல் நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள், பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் படைகளுடன் மோதின. இந்தப் போரில் நெப்போலியன் மாபெரும் வெற்றியை அடைந்தான். தொடர்ந்து அடுத்த ஆண்டில் புருஷ்யாமீது படையெடுப்பைத் தொடர்ந்தான். கவுஸின் புரவலரான பிரன்ஸ்விக்கின் டியூக் ஃபெர்டினாண்ட், புருஷ்யா சார்பில் நெப்போலியனை எதிர்கொள்ளவேண்டியதாயிற்று. கடுமையான சண்டையில் ஃபெர்டினாண்ட் படுகாயம் அடைந்தார். விரைவில் உயிரையும் விட்டார்.

பிரான்ஸின் பெண் கணித மேதையான சோஃபி ஜெர்மைன் கவுஸுடன் கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தார். அவருக்கோ, தன் நாட்டுப் படைகள் கவுஸைத் தாக்கிக் கொன்றுவிடக்கூடாதே என்று பயம். எனவே தனக்குத் தெரிந்த ராணுவ உயர் அதிகாரிகள்மூலம் கவுஸுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்று செய்தி அனுப்பினார்.

போர் முடிந்தது. அதுவரையில் உதவித்தொகை மாதாமாதம் டியூக்கின் புண்ணியத்தில் கவுஸுக்குக் கிடைத்துவந்தது. இனி என்ன ஆகும்? அத்தோடு போதாது என்று, ஜெர்மன் கிராமங்கள்மீது அபராதத் தொகை விதிக்கப்பட்டிருந்தது. கவுஸ் ஒரு மாபெரும் கணிதமேதை, அவரை விட்டுவிடுங்கள் என்று அந்த ஊர் மக்கள் கேட்டுக்கொண்டனர். ஓ, கணித மேதையா? பெரிய ஆளா, சரி, பணயத்தொகையை அதிகமாக்கிவிடுங்கள் என்றனர் பிரெஞ்சு அதிகாரிகள்! 2,000 பிராங்குகள்! கவுஸால் கட்டமுடியாத அளவுக்கு அதிகமான தொகை.

உடனே பலரும் கவுஸுடைய தொகையைத் தாங்கள் கட்ட முன்வந்தனர். கவுஸ் மறுத்துவிட்டார். ஆனால் பிரெஞ்சுக் கணிதமேதை லாப்லாஸ் பாரிஸிலேயே கவுஸுக்கான தொகையைக் கட்டி ரசீதை அனுப்பிவைத்தார். கவுஸின் தன்மானம் அதனை ஏற்கவில்லை. எப்படியோ பணத்தைப் புரட்டி லாப்லாஸுக்கு அனுப்பிவைத்துவிட்டார்!

1807-ல் கவுஸுக்கு கோட்டிங்கன் வான்வெளி மைய இயக்குனராகவும் வானியல் பேராசிரியராகவும் வேலை கிடைத்தது. அவர் பல ஆண்டுகளாக கிரகங்களின் பாதைகளைச் சரியாகக் கணித்தது இதற்கு உதவி செய்தது. தன் வாழ்நாளின் எஞ்சிய நாள்களில் கவுஸ் இந்தப் பதவியை விட்டு விலகவே இல்லை.

அந்த நாள்களில் ஐரோப்பாவில் வால் நட்சத்திரம் பற்றி நிறைய மூட நம்பிக்கைகள் இருந்தன. வால் நட்சத்திரம் தென்பட்டால் அரசன் இறப்பான், பேரழிவு ஏற்படும், வெள்ளம் வரும், நகரங்கள் எரியும், போர் மூளும், கொள்ளை நோய் பரவும் என்றெல்லாம் மக்கள் நினைத்தனர். ஆனால் கவுஸைப் பொருத்தமட்டில் வால் நட்சத்திரம் என்பது மற்றொரு வான்வெளிப் பொருள். அது எந்த இடத்தில் உள்ளது என்பதை சில நாள்களுக்கு ஆராய்ந்து குறித்துக்கொண்டால், அது அடுத்து எங்கு தென்படும், எத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் பூமியில் தென்படும் என்பதையெல்லாம் மிகச் சரியாகக் கணித்துவிடக்கூடிய திறமை பெற்றவர் கவுஸ்.

1811-ல் வானில் தோன்றிய வால் நட்சத்திரத்தைக் கண்ட கவுஸ் அதன் பாதையை மிகச் சரியாகக் கணித்தார். பொதுமக்கள் அஞ்சி நடுங்கினர். அடுத்த ஆண்டே நெப்போலியன் ரஷ்யாமீது படையெடுத்தான். அப்போது தொடங்கியது அவனது வீழ்ச்சி. ரஷ்யாவின் பல நகரங்கள் தீக்கிரையானாலும், நெப்போலியனின் படைகள் கடுமையாகத் தோற்கடிக்கப்பட்டன. அடுத்தடுத்த தோல்விகளுக்குப் பின் எல்பா தீவுக்குத் துரத்தப்பட்ட நெப்போலியன் மீண்டும் வந்து 1815-ல் வாட்டர்லூ சண்டையில் முடிவாகத் தோற்றுப்போனான். சிறையில் ஆறு ஆண்டுகள் கழித்து இறந்துபோனான்.

நல்லவேளையாக கவுஸின் வாழ்க்கைக்கு வேறு எந்தப் பிரச்னையும் வரவில்லை.

*

கவுஸுக்கு முன்பும் கணித வல்லுனர்கள் பலர் இருந்துள்ளனர். ஆனால் கவுஸ்தான் நிரூபணம் என்பதை எப்படிச் செய்யவேண்டும் என்று தெளிவாக முன்வைத்தார். கவுஸுக்குப் பிறகு வந்த பலர் இந்தத் துறையை மேலும் சிறப்பாக்கினர்.

கணிதத்தில் கலப்பு எண் என்ற ஒரு கருதுகோள் உண்டு. மெய் எண் (ரியல் நம்பர்) - அதாவது நாம் பயன்படுத்தும் அனைத்து எண்கள் -  கற்பனை எண் (இமேஜினரி நம்பர்) ஆகிய இரண்டையும் இணைத்து உருவாக்கும் எண்தான் கலப்பு எண் (காம்ப்ளெக்ஸ் நம்பர்). இது கவுஸின் காலத்துக்குமுன்பாகவே தெரிந்திருந்தது என்றாலும், கவுஸ்தான் இந்த எண்களுக்கான கணிதத்தைச் செம்மையாக்கிக் கொடுத்தார். இந்தக் கணிதம்தான் திரவங்களின் ஓட்டம், விமானங்கள் தொடர்பான வடிவமைப்பு, மின்சாரச் சுற்றுகள், மின்னணுவியல் ஆகிய பலவற்றில் பயன்படுகிறது.

கணிதம் மட்டுமின்றி, இயல்பியலில், முக்கியமாக காந்தம் தொடர்பாக கவுஸ் நிறையப் பங்களித்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த வெபர் என்பவருடன் சேர்ந்து அவர் இந்தத் துறையில் அதிகமாகச் சாதித்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் 1833-ல் ஒருவிதமான தந்தி அனுப்பும் கருவியை உருவாக்கி அதன்மூலம் செய்திகளைப் பரிமாறிக்கொண்டனர். அடுத்த சில பத்தாண்டுகளில் இந்தத் தந்தி அனுப்பும் கருவிதான் அமெரிக்காவின் முகத்தையே மாற்றியமைத்தது. ரயில்வே துறையில் தந்தியின் பங்கு இன்றியமையாதது. பின்னர் வந்த தொலைபேசி, இதன் வழியாகவே பிறந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கிரேக்க யூக்ளிடியன் ஜியாமெட்ரி (வடிவவியல்) கோலோச்சி வந்தது. சில அடிக்கோள்களை முன்வைத்துக் கட்டி எழுப்பப்பட்ட வடிவவியல் அது. அதன்படி, இரு இணைகோடுகள் எந்தக் கட்டத்திலும் சந்தித்துக்கொள்ளா. இதை யாரும் நிரூபிக்கமுடியாது. ஆனால் இது உண்மை என்றே கணக்கில் எடுத்துக்கொண்டு வந்துள்ளோம். ஆனால் இது தள வடிவவியலில்தான் சாத்தியம். அதாவது சமதளம் ஒன்றில் இணைகோடுகளை வரையும்போதுதான் அவை சந்தித்துக்கொள்ளாமல் செல்கின்றன. வளைந்த, குவிந்த தளங்களில் இது உண்மையல்ல. கவுஸ் பல்வேறு தளங்களில் வடிவவியல் ஆராய்ச்சிகளைச் செய்தார். ஆனால் இது தொடர்பாக எதையுமே அவர் பதிப்பிக்கவில்லை. சில கடிதங்களில் மட்டும் இவை பற்றிய குறிப்புகளை விட்டுச் சென்றுள்ளார்.

கவுஸின் மாணவரான பெர்ன்ஹார்ட் ரீமான் இந்த ஜியாமெட்ரியைக் கவனமாக அணுகி ஆராய்ந்தார். அதன் விளைவாக எழுந்ததுதான் ரீமானியன் ஜியாமெட்ரி. இந்த ஆராய்ச்சி நடைபெற்றிருந்திருக்காவிட்டால் ஐன்ஸ்டைன் தன் சார்பியல் கொள்கையை விவரித்திருந்திருக்க முடியாது!

*

கோட்டிங்கனில் வானியல் கழகத் தலைவராக இருந்த காலத்தில் கவுஸிடம் பல முக்கியமான மாணவர்கள் பயின்றனர். ஐசன்ஸ்டைன் என்ற அவருடைய மாணவர்தான் கவுஸின் புத்தகத்தை பிறர் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையான உரை ஒன்றை எழுதினார். எர்னஸ்ட் கும்மர், ரிச்சர்ட் டெடகைண்ட், யோஹான் டிரிச்லே ஆகியோர் நம்பர் தியரி எனப்படும் துறையை முன்னெடுத்துச் சென்றனர்.

குஸ்தாவ் கிர்க்காஃப் என்ற மாணவர் மின் சுற்றுகளில் நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். பின்னர் ஐன்ஸ்டைனுடைய ஆசிரியராக இருந்தார்.

நாம் ஏற்கெனவே பார்த்த பெர்ன்ஹார்ட் ரீமான், ஜியாமெட்ரியில் மாபெரும் கண்டுபிடிப்புகளைச் செய்து, கவுஸ் உருவாக்கிய கோட்பாடுகளைப் பெரிதும் முன்னெடுத்துச் சென்றார்.

அகஸ்ட் மோபியஸ் ஜியாமெட்ரியில் மேலும் பல ஆராய்ச்சிகளை முன்னெடுத்தார்.

மாரிட்ஸ் கேண்டார், எண் கணிதத்தில் முடிவிலி (இன்ஃபினிடி) என்பது பற்றிய முழுமையான கருதுகோளை முன்வைத்தார். அவருக்கு முன்புவரை முடிவிலி என்பது குழப்பமான, தெளிவற்ற ஒரு கருத்தாகவே இருந்தது.

கவுஸின் பல்வேறு கணிதக் கண்டுபிடிப்புகள், இயல்பியல் கருத்துகள் ஆகியவற்றைத் தாண்டி, அவர் உருவாக்கிய மாணவர்கள்தான் முக்கியமானவர்கள். இவர்கள்தான் அடுத்த நூற்றாண்டின் கணித, அறிவியல் சிந்தனைகளை முன்னெடுத்துச் சென்றனர். இந்தக் காரணத்தால்தான் ஜெர்மனி அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பாவின் மிக முக்கிய அறிவியல், கணிதக் கேந்திரமாக விளங்கியது.

இன்றைய நவீன கணித, அறிவியல் சிந்தனைகளுக்கு மிக மிக அடிப்படை கவுஸின் ஆராய்ச்சிகள். அவர் இல்லாவிட்டால் நவீன கணிதமே கிடையாது.

Friday, June 17, 2011

மாரிச்செல்வம் - துயரங்களுக்கு மத்தியில் ஒரு சாதனை

சென்ற மாதம், வேம்பார் என்ற இடத்தில் PAD என்ற தொண்டமைப்பின் பணியாளர்களுக்கு இணையம் பற்றி இரண்டு நாள் பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்தினேன். அவர்கள் தினம் தினம் சந்திக்கும் மக்களின் வாழ்க்கையைப் பற்றி எழுத சரியான களம் வலைப்பதிவுகள்தான் என்பதை எடுத்துச்சொன்னடதோடு, எப்படி எழுதுவது என்பதைப் பற்றியும் ஓரளவுக்கு விளக்கினேன். அதன் விளைவாக உருவானதுதான் மன்னார் வளைகுடா வாழ்க்கை என்ற வலைப்பதிவு. அதில் அவர்கள் நிறைய எழுதவேண்டும் என்பது என் ஆவல்.

இன்று வந்திருக்கும் ஒரு பதிவு நெஞ்சைத் தொடக்கூடியது.

மாரிச்செல்வம் என்ற பத்தாம் வகுப்புச் சிறுவனின் கதை இது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலாவதாக வந்திருக்கும் இந்த மாணவன் எந்த மாதிரியான சூழ்நிலையில் பரீட்சை எழுதவேண்டிவந்தது, அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவன் எத்தனை மதிப்பெண்கள் பெற்றுள்ளான் என்பதை நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த மாணவன் எதிர்காலத்தில் பெரிய சாதனைகளைச் செய்ய என் வாழ்த்துகள்.

Saturday, June 11, 2011

கிழக்கு ‘அதிரடி’ தள்ளுபடி, இப்போது இணையத்திலும்

கிழக்கு ‘அதிரடி’ தள்ளுபடி விற்பனை சென்னைக்கு மட்டும்தானா, பிற இடங்களில் இருக்கும் நாங்கள் எல்லாம் எப்படிப் பயன்பெறுவது என்று பலர் கேட்டிருந்தனர். பிற நகரங்களில் இதனை நடத்துவது எளிதான செயலல்ல. ஒரு நாளைக்குக் குறைந்தது இத்தனைக்காவது வர்த்தகம் நடந்தால்தான் அதனை நடத்துவதற்கான பலன் கிடைக்கும். அது இப்போதைக்கு சென்னைக்கு வெளியில் சாத்தியம் என்று தோன்றவில்லை.

ஆனால் இணையத்தில் ஏன் இதனைச் செயல்படுத்தக்கூடாது என்று சிலர் கேட்டிருந்தனர். அதனை இப்போது செயல்படுத்தியுள்ளோம். இணையத்தில் உள்ள விலைக்கும் நேரடியாக வந்து வாங்குவதற்கும் சில விலை வித்தியாசங்கள் இருக்கலாம். எனவே அங்கே ஏன் இந்த விலை, இங்கே ஏன் இந்த விலை என்று தயவுசெய்து கேட்காதீர்கள்.

இந்த டிஸ்கவுண்ட் விற்பனையைப் பயன்படுத்திக்கொள்ள, நீங்கள் செல்லவேண்டிய இடம்: அதிரடி இணைய விற்பனை

வாங்கிப் பலன் பெறுங்கள். நண்பர்களுக்கும் தகவல் தாருங்கள். இந்தச் சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே.

Friday, June 10, 2011

IIT JEE கவுன்செலிங்

உங்கள் உறவினர்கள் யாருக்கேனும் ஐஐடி நுழைவுத் தேர்வில் இடம் கிடைத்திருந்தால், அந்த மாணவர்கள் எங்கு சேர்வது, எந்தப் படிப்பில் சேர்வது என்று தடுமாறினால், கீழ்க்கண்ட சுட்டியைப் பரிந்துரைக்கிறேன்.

A Guide to JEE Counseling 2011

1987-ல் கவுன்செலிங்குக்குச் சென்றபோது நான் திக்குத் தெரியாமல்தான் இருந்தேன். முதலில் ஐஐடி என்றால் என்னவென்றே எனக்கும் தெரியாது, என் தந்தைக்கும் தெரியாது. ஏதோ ரிசல்ட் வந்து, ஏதோ ரேங்க் வந்திருந்தது. கவுன்செலிங்குக்கு குறிப்பிட்ட தினத்தன்று ஐஐடி மெட்ராஸ் வரவும் என்று கடிதம் வந்திருந்தது. கவுன்செலிங் என்ற வார்த்தையே புதுசு. டிக்‌ஷனரி பார்க்கும் வழக்கம் எல்லாம் கிடையாது.

என் தந்தை மஞ்சள் பை ஒன்றை எடுத்துக்கொண்டு என்னையும் அழைத்துக்கொண்டு சென்னை வந்தார். ஐஐடி கேம்பஸுக்கு உள்ளேயே தங்குவதற்கு இடம் கொடுத்திருந்தார்கள். காட்டு வாசலிலிருந்து ஹாஸ்டல் வரை செல்ல ஒரு பஸ் இருக்கிறது என்பதே ஆச்சரியமாக இருந்தது. பக்கத்து அறைக்கு ஆந்திரா பார்ட்டி ஒன்று வந்திருந்தது. காகிநாடா என்றாலும் விவரமான ஆசாமி. தான் மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் சேரப்போவதாக அந்தப் பையன் சொன்னான்.

கவுன்செலிங் நேரம் வந்ததும், வரிசையாக ஆளாளுக்கு ஏதோ ஒரு பேராசிரியர் முன் சென்று அமர்ந்தோம். எனக்கு ஸ்ரீனிவாச ராவ் என்ற மெக்கானிகல் எஞ்சினியரிங் பேராசிரியர் ஆலோசனை தந்தார். நான் அப்துல் கலாம் மாதிரி ஆர்வத்துடன் (அப்போது அப்துல் கலாம் யார் என்றே தெரியாது) ஏரோனாட்டிகல் எஞ்சினியரிங்தான் படிக்க விரும்புகிறேன் என்றேன். நாகப்பட்டினத்திலிருந்து வரும்போதே அதைத்தான் மனத்தில் நினைத்துக்கொண்டு வந்திருந்தேன்.

நாகப்பட்டினத்தில் வருடத்துக்கு எப்போதாவது ஒருமுறை வானில் ஏதோ விமானம் போவது தெரியும். உடனே தெருவில் பசங்கள் வானத்தைப் பார்த்தபடியே பின்னால் ஓடிச்செல்வோம். சில முறை ஹெலிகாப்டர்களும் வந்துள்ளன. ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது ஒருமுறை நாகூர் வந்தபோது மூன்று ஹெலிகாப்டர்கள் அடுத்தடுத்து வந்து இறங்கின. பள்ளிகளுக்கெல்லாம் விடுமுறை விட்டிருந்தார்கள். நாங்கள் எல்லாம் ஹெலிகாப்டர் வந்து இறங்கும் இடத்துக்குச் சென்றிருந்தோம். அதேபோல இந்திரா காந்தியும் ஹெலிகாப்டரில் வந்திருக்கிறார். ஒருமுறை இந்திரா காந்தியும் எம்.ஜி.ஆரும் அவுரித் திடலில் ஒரே கூட்டத்தில் பேசினார்கள் என்று ஞாபகம்.

வானில் எங்கோ தொலைதூரத்தில் சர்ரென்று பறக்கும் விமானங்கள்மீது எப்படியோ ஒரு ஈர்ப்பு வந்திருந்தது. அதையெல்லாம்கூடப் பாடமாகச் சொல்லிக்கொடுக்கப் போகிறார்கள் என்பது கிளர்ச்சியைத் தந்தது.

ஆனால் அந்த ஆர்வத்தில் ஒரு பக்கெட் தண்ணியை புஸ்ஸென்று ஊற்றினார் ராவ்.

‘நீ என்ன ரேங்கோ, அந்த ரேங்குக்கு என்ன கிடைக்குமோ, அதை எடுத்துக்கொள்’ என்றார். ‘12-ம் வகுப்பு படித்திருக்கும் உனக்கு மேற்கொண்டு எதைப் படிக்கவேண்டும் என்பதெல்லாம் தெரியாது. சும்மா, அடாலசண்ட் காதல் விவகாரம்போல ஏதோ ஒரு சப்ஜெக்டைப் படிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு உன் வாழ்க்கையை ‘வீணடித்துக்கொள்ளாதே’ என்பது அவரது வாதம்.

என் தந்தை திருதிருவென்று விழித்தார். அவருக்கு இதெல்லாம் புரியவில்லை. பள்ளி ஆசிரியரான அவர், தனது வழமைபோல, ‘அதான் அந்த ப்ரொபஸரே சொல்லிட்டாரே, அவர் சொன்னாச் சரியாத்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டார்.

என் முகத்தில் ஏமாற்றத்தைக் கண்ட ஸ்ரீனிவாச ராவ் கொஞ்சம் பரிவுடன் பேசினார். ‘இளநிலைப் படிப்பின்போது ஸ்பெஷலைசேஷன் கூடாது. ஏரோனாட்டிகல் என்பது மெக்கானிகல் எஞ்சினியரிங்கின் ஒரு பகுதிதான். எனவே வேண்டுமானால் முதுநிலைப் படிப்புக்கு அதை படிக்கலாம்’ என்றார்.

அப்படியென்றால் ஏன் அந்தப் படிப்புகளை இளநிலையில் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே, தட்டிக் கழித்துவிட்டார் ராவ்.

அதன்பின் வேறு வழியின்றி, அவர் சொன்னபடியே ஐஐடி மெட்ராஸில் மெக்கானிகல் எஞ்சினியரிங் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

ஸ்ரீனிவாச ராவ், நான் எந்த ஹாஸ்டலுக்குச் சென்றேனோ (கோதாவரி) அதே ஹாஸ்டலின் வார்டனாகவும் இருந்தது தற்செயல். என் நான்கு வருடப் படிப்பின்போது அவர் எனக்குப் பாடங்கள் எதையும் எடுக்கவில்லை. காகிநாடா பார்ட்டியும் என்னைப் போலவே அதே துறைக்கும் அதே ஹாஸ்டலுக்கும் வந்து சேர்ந்தான்.

பொதுவாக ஐஐடி கவுன்செலிங் மட்டுமல்ல, வேறு எந்த எஞ்சினியரிங் கவுன்செலிங்கிலும் இதே சிக்கல்தான். சென்ற ஆண்டு எந்த ரேங்கில் இருப்பவர்கள் எந்தக் கல்லூரியில் எந்தத் துறையை எடுத்திருக்கிறார்கள் என்ற மந்தைச் சூழ்நிலைதான் இந்த ஆண்டு யார் எதை எடுப்பார்கள் என்பதைத் தீர்மானிக்கும். வெகு சிலர் மட்டுமே இதிலிருந்து விலகி வேறு பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி விலகவேண்டும் என்றால் அவர்களுக்கு ஓரளவுக்கு விஷயம் தெரிந்திருக்கவேண்டும்; நிறைய தைரியம் வேண்டும்; பெற்றோரின் ஆதரவு வேண்டும்.

ஸ்ரீனிவாச ராவை நான் குறைசொல்ல மாட்டேன். கிராமத்திலிருந்து வந்திருக்கும் விவரம் தெரியாத சிறு பயல் என்று அவர் என்னைச் சரியாகவே எடைபோட்டிருந்தார். தன்னளவில் எனக்குச் சரியான வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்றுதான் அவர் நடந்துகொண்டார். அவர் இடத்தில் இருக்கும் வேறு யாருமே அப்படித்தான் நடந்துகொண்டிருப்பார்கள்.

இது ஒருவிதத்தில் நம் கல்வித் துறையின் கோளாறு. ஹையர் செகண்டரி அளவிலேயே நம் மாணவர்களுக்கு அடுத்த கட்டத்துக்கான தெளிவான பாதை காண்பிக்கப்படவேண்டும். சொல்லப்போனால் வாழ்க்கையில் அடுத்த கட்டம் என்பது ஒரு பாடமாகவே இருக்கவேண்டும். பொறியியல் என்றால் என்னவெல்லாம் அதில் செய்யலாம், என்னென்ன பாட வாய்ப்புகள் உள்ளன என்பது 12-ம் வகுப்பின் பாடத் திட்டத்திலேயே வந்திருக்கவேண்டும். (பொறியியல் மட்டுமல்ல, வேறு பல துறைகளும்தான்!)

இது தொடர்பான ஒரு மிக முக்கியமான புத்தகத்தை நியூ ஹொரைஸன் மீடியாவின் சக இயக்குனர் சத்யநாராயண் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறார். விரைவில் கிழக்கு பதிப்பக வெளியீடாக இந்தப் புத்தகம் வெளியாகும். 12-ம் வகுப்பில் உள்ள மாணவர்கள் அடுத்து என்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் அந்தத் துறைகள் ஒவ்வொன்றும் எவை பற்றியது என்பதையும் ஓரளவுக்கு விளக்கமாகக் கூறும் நூல் இது.

[இந்த விளம்பரத்துடன் இந்தப் பதிவை முடித்துக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.]

Wednesday, June 08, 2011

Right to Education சட்டத் திருத்தம் - 4

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3

கல்வியின் தரத்தை உயர்த்தவேண்டுமாம். எப்படி? பள்ளி நிர்வாகத்தை அடக்கி, லாபம் பெறாமல் ஒடுக்கி, தரமான கல்வி தரக்கூடியவர்களை பயமுறுத்தி கல்வியின் பக்கமே வராமல் செய்து, தனியார் பள்ளிகளின் காம்போசிஷனை அதிரடியாக மாற்றி, அதற்கான கட்டணத்தைக் குறைத்து, அவர்கள் மீதான நிதிச் சுமையை அதிகரித்து, கல்விச் சுமையையும் அதிகரித்து, தன் கையை நன்றாகக் கழுவிக்கொண்டு, எதைச் சாதிக்க முனைகிறது இந்த அரசு?

மாறாக என்ன செய்யலாம்?

நோக்கம் சரியானது. அதை மாற்றவேண்டும் என்று நான் சொல்லவில்லை. கீழ்க்கண்ட சிலவற்றைச் செய்யவேண்டும்.

1. முதலில் கல்வியை யார் வேண்டுமானாலும் தரலாம், அதிலிருந்து லாபம் பெறலாம் என்று மாற்றவேண்டும். ஆனால் வெளிப்படையாக, கருப்புப் பணம் இன்றி, வரி கட்டக்கூடிய முறையில் செய்யவேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம் பல நியாயமான அமைப்புகள் கல்வி வழங்குதலில் இறங்கும். பங்குச்சந்தை வழியாக முதலீடுகளைத் திரட்ட முடியும். இதன்மூலம் நாடு முழுவதும் எண்ணற்ற கல்வி நிலையங்களை அமைக்கமுடியும்.

2. அரசு கல்விக்கென ஒதுக்கும் நிதியை அதிகரித்து, அடுத்த ஐந்தாண்டுகளில் இத்தனை புதிய பள்ளிக்கூடங்களை - இலவசக் கல்வி தரும் அமைப்புகளை - ஏற்படுத்துவேன் என்று உறுதி கூறி அதைச் செயல்படுத்தவேண்டும்.

3. அரசுப் பள்ளிகளை லீஸ் முறையில் தனியார் வசம் ஒப்படைத்து நடத்தவேண்டும். இப்போது மையப்படுத்தப்பட்ட நடைமுறையில் அரசுப் பள்ளிகளில் மோசமான கல்விதான் தரப்படுகிறது. இப்போது அரசு நடத்தும் கல்விக்கூடம் ஒவ்வொன்றுக்கும் ஆண்டுக்கு என்ன செலவாகிறதோ அதனை தனியார் அமைப்புகளுக்குக் கொடுத்து, இப்போது தரப்படும் கல்வியின் தரத்தைவிடச் சிறப்பான கல்வியைத் தருமாறு அரசு பார்த்துக்கொள்ளவேண்டும். (குப்பை அள்ளும் காண்டிராக்ட் போல, ரோடு போடும் காண்டிராக்ட் போல.)

4. தனியார் பள்ளிகளில் என்ன கட்டணம் வேண்டுமானாலும் வசூலிக்க அரசு உரிமை தரவேண்டும். இதனால் கல்விக் கட்டணம் மிக அதிகமாகப் போக சாத்தியங்கள் இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்கும் மக்கள் எவ்வளவு பணம் தரமுடியும் என்பதை யூகித்துதான் பள்ளிகள் கட்டணங்களை நிர்ணயிக்கும். இதுபோன்ற பள்ளிகளில் கட்டணம் கட்டிப் படிக்க முடியாவிட்டால் அவர்களது சக்திக்கு உட்பட்ட கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகளுக்குப் போய்ப் படிக்கவேண்டும். இந்தப் பள்ளிகளில் 25% மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகளிலிருந்து வரும்போது அரசு முழுமையான கட்டணத்தை வழங்கவேண்டும். மாறாக தானாக ஒரு கணக்கை வைத்துக்கொண்டு அதைத்தான் தருவேன் என்று சொல்லக்கூடாது.

5. அல்லது இந்த மாதிரிச் செய்யலாம்... ஒரு மாணவனுக்கு இத்தனை ரூபாய் தருவேன் என்று அரசு அறிவித்தால், அதைக் கொண்டு அந்தக் கட்டணத்துக்கு உள்ளாக இருக்கும் கல்வி நிலையம் சென்று படித்துக்கொண்டு, மிச்சப்படுத்தும் பணத்தில் அந்த மாணவன் ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக்கொள்ளலாம் அல்லது புத்தகங்கள் வாங்கிக்கொள்ளலாம். அல்லது மேற்கொண்டு கையிலிருந்து கொஞ்சம் பணம் போட்டு அதிகக் கட்டணம் கேட்கும் பள்ளியில் சேர்ந்துகொள்ளலாம்.

6. எந்தெந்தத் தனியார் பள்ளிகளில் எல்லாம் அரசு 25% இட ஒதுக்கீடு கேட்கிறதோ, அந்தப் பள்ளிகளின் கட்டுமான மேம்பாட்டுக்கான செலவில் 75%-ஐ அரசுதான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

7. அதேபோல அந்தப் பள்ளிகளில் ஏற்கெனவே வேலையில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் பி.எட் படிக்க ஆகும் செலவில் 50% முதல் 75% வரை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலும் அவர்களுக்கு அஞ்சல் வழியில் படிக்க இடங்களைப் பெற்றுத்தரவேண்டும். இதனை ஏற்கெனவே இருக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் நடைமுறைப்படுத்திவிட்டு, புதிதாகச் சேர்க்கும் ஆசிரியர்கள் அனைவரும் பி.எட் படித்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று சொல்லலாம்.

(மேலே பி.எட் என்று போட்டிருக்கும் இடத்தில், பி.எட் அல்லது, கீழ் வகுப்புகளுக்கு டீச்சர் டிரெய்னிங் சான்றிதழ் என்று எடுத்துக்கொள்ளவும்.)

8. கல்வியின் தரத்தை உயர்த்தவேண்டும் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லாமல், அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை நாங்கள் உயர்த்துகிறோம், அதே அளவுக்கு தனியார் பள்ளிகளின் தரத்தை நீங்கள் உயர்த்துங்கள் என்று சில norms-ஐ அரசு கொண்டுவரட்டும். என் முதுகின் அழுக்கை நான் நீக்கமாட்டேன், நீ நான்கு முறை குளி என்று அரசு சொல்வது அபத்தமாக இருக்கிறது.

9. தமிழகத்துக்கு மட்டும் சாபக்கேடான அரசியல் காழ்ப்பு காரணமாக சமச்சீர் கல்வி அறிமுகம், சமச்சீர் கல்வி ரத்து போன்ற flip-flop இல்லாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளவும் மத்திய அரசு சட்டத்திருத்தத்தில் இடம் தரவேண்டும்.

10. அடிப்படையான இடதுசாரி மனநிலையிலிருந்து வெளியேறவேண்டும். லாபம் என்றாலே பாவம், எல்லாவற்றையும் அரசு செய்யவேண்டும், அல்லது தனியார் என்று ஒருவர் இருந்தால் அவரைத் தண்டிக்கும் அளவுக்குக் கொடுமைப்படுத்தவேண்டும் என்ற இந்த மனநிலை மிக மோசமானது. இன்று தனியார் அளிக்கும் உணவை உண்டு, தனியார் நெய்யும் சட்டையை அணிந்துகொண்டு, தனியார் நிறுவனத்தில் கல்வி கற்று, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து, தனியார் தொலைக்காட்சியின் கேளிக்கையில் மனம் மகிழ்ந்துகொண்டிருக்கும் நாம் இப்படி தனியாரையும் லாபத்தையும் ஏன் கரித்துக்கொட்டுகிறோம்? தனியாரால்தான் நம் சமூகம் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது. தனி நபர்களின் தொழில்முனையும் திறன்தான் நம் அனைவரையும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது.

தனியார்தான் கல்வித்துறையையும் வாழவைக்கப்போகிறார்கள். அரசு அனுமதித்தால். நியாயமாகக் கட்டுப்படுத்தினால்.

(முற்றும்)

Right to Education சட்டத் திருத்தம் - 3

பாகம் 1 | பாகம் 2

ஏழைகளின் கல்வி என்பது வேறு பிரச்னை. கையில் பணமே இல்லாதவர்கள் எப்படிக் கல்வி பெறுவது என்பதைத் தனியாகக் கவனிக்கவேண்டும். அவர்களுக்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று: அரசின் இலவச கல்வி நிலையங்களில் கல்வி பெறுதல். இரண்டாவது, அரசு கட்டணம் செலுத்த, அந்தக் கட்டணத்தின் அடிப்படையில் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி பெறுதல். ஆனால் அரசு தரும் இந்தக் கட்டணம் எப்படி இருக்கவேண்டும்? அந்தத் தனியார் நிறுவனம் எவ்வளவு வசூலிக்கிறதோ அதே அளவு இருக்கவேண்டும்.

ஏழைகளுக்கு நாளைமுதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உணவளிக்கவேண்டும் (25% பேருக்கு!), ஆனால் அதற்கு தட்டுக்கு 25 ரூபாய் என்ற கணக்கில் அரசு பணம் செலுத்திவிடும் என்று சொல்வது நியாயமாக இருக்குமா? 25% ஏழைகளுக்கு மளிகைக்கடைகள் பொருள்களை அளித்துவிடும், ஆனால் கடைக்காரர்களுக்கு நியாயவிலைக்கடை ரேட்டில் பணம் கொடுக்கப்படும் என்று அரசு சொல்லலாமா? அதை நாம் ஏற்றுக்கொள்வோமா? அதேபோலத்தான் தனியார் பள்ளிகளில் படிக்க வரும் ஏழைகளுக்கு குறைவான கட்டணம்தான் செலுத்தமுடியும் என்று அரசு சொல்வது.

இதனால் தனியார் பள்ளிகளின் நிதி நிலை கடுமையாக பாதிக்கப்படும். அவர்கள் வேறு வழியின்றி, பணம் கொடுத்துப் படிக்கும் மாணவர்களிடம் மேலும் அதிகக் கட்டணம் வசூலிக்க முற்படுவார்கள். அது பிற பெற்றோர்களைக் கடுமையாகப் பாதிக்கும். இந்நிலையில் கட்டணக் கட்டுப்பாட்டுக்கென சட்டம், குழு, ஓய்விபெற்ற நீதிபதி என்று அடுத்த மிரட்டலை விடுத்தால் கல்வி அளிப்போர் அனைவரும் துண்டைக் காணும் துணியைக் காணும் என்று ஓடுப்போய், தங்கள் பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துவிடுவார்கள். அதைத்தாண் நாம் விரும்புகிறோமா? அனைவருக்கும் கல்வி அளிக்கவேண்டும் என்று ஆரம்பித்த சட்டம் கல்வியாளர்களைத் துரத்துவதில்தான் போய் முடியவேண்டுமா?

அடுத்து ஆசிரியர்கள். இன்று தனியார் பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பி.எட் படிக்காதவர்களே. ஆனால் அரசுப் பள்ளிகளில் கை நிறையச் சம்பளம் வாங்கிக்கொண்டு வம்பு பேசி அல்லது பள்ளிக்கே போகாத ஆசிரிய மாணிக்கங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தப் பாவப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் மிகக் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு இடுப்பொடிய வேலை செய்கிறார்கள். அவர்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் பி.எட் படித்தாகவேண்டும் என்கிறது இந்தச் சட்டத் திருத்தம். எப்படி? எத்தனி பி.எட் கல்லூரிகள் இருக்கின்றன? அவர்கள் எந்த அளவுக்குக் கட்டணம் வசூலிக்கிறார்கள்? அஞ்சல் வழியில் பி.எட் படிக்க எத்தனை இடையூறுகள் உள்ளன? இதையெல்லாம் அரசு கண்டுகொள்ளவில்லை.

இப்போது தனியார் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தேவையான பி.எட் கல்வியை அரசு தன் செலவில் கொடுக்கும் என்று சொல்லலாம் அல்லவா? அதுவல்லவா சரியான முறையாக இருக்கும்? அதை விட்டுவிட்டு, அதை ஆசிரியர்கள் தலையில் கட்டிவிடுகிறது அரசு. நிறையச் செலவு செய்து பி.எட் படித்தபின், அவர்களுக்கு என்ன சம்பளம் கிடைக்கப்போகிறது? அதே மோசமான சம்பளம்தான். ஏன்? ஏனெனில் அவர்களுடைய கல்வி நிறுவனம் அதிகக் கட்டணத்தை வசூலிக்க முடியாது? ஏன்? ஏனெனில் அது ‘கல்விக் கொள்ளை’!

அடுத்து பள்ளியின் உள்கட்டுமானம். அரசு குறைந்த கட்டணம்தான் தருவேன் என்று ஒவ்வொரு தனியார் பள்ளியின் 25% இடத்தை அபகரித்துக்கொள்கிறது. ஆனால் பதிலுக்கு இந்தத் தனியார் பள்ளிகளுக்கு ஒன்றும் செய்துதராது. கட்டுமானத்தை அதிகரிக்கவேண்டியது தனியார் பள்ளியின் கடமை. அதற்கு ஆகும் செலவில் ஒரு பைசா தராது அரசு. ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள் கட்டுமானத்தை உயர்த்தாவிட்டால், உரிமம் ரத்தாகும். பள்ளிகளுக்கு கல்தா.

ஆனால் இந்தச் சட்டம் கொண்டுவருவதன் காரணமே பள்ளிகளை அதிகரிக்க வைப்பது! என்ன ஒரு முரண்?

மத்திய அரசும் மாநில அரசும் கல்விக்கான செலவுகளை அதிகரிக்கும்; பகிர்ந்துகொள்ளும். சொல்கிறது சட்டம். எந்த அளவுக்கு அதிக முதலீடுகளை இவர்கள் செய்யப்போகிறார்கள்? இவர்கள் சொல்லமாட்டார்கள். கட்டுப்பாடுகள் எல்லாம் பிறருக்குத்தான், தங்களுக்கல்ல.

மொத்தத்தில் நல்ல காரியம் செய்கிறேன் பேர்வழி என்று பிறர்மீது சுமையைத் தூக்கி வைத்துவிட்டு, தாங்கள் ஒய்யாரமாக, சுகமாக இருக்கின்றன அரசுகள்.

(தொடரும்)

Right to Education சட்டத் திருத்தம் - 2

பாகம் 1

இப்போது ‘கல்வி உரிமை’ சட்டத்தை எடுத்துக்கொள்வோம். அதன் முக்கியமான சில ஷரத்துகள் இவை:

1. தனியார் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்புக்கான (அல்லது எல்.கே.ஜிக்கான) 25% இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு என்று ஒதுக்கப்படும். இந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு வழங்கும். இந்த 25% இடங்களுக்கு லாட்டரி முறையில் மாணவர்கள் ஒதுக்கப்படுவர். அவர்களைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்று தனியார் கல்வி நிறுவனங்கள் மறுக்கமுடியாது.
2. எல்லா கல்வி நிறுவனங்களிலும் வேலை செய்யும் ஆசிரியர்கள் ஐந்தாண்டுகளுக்குள்ளாக பி.எட் (அல்லது அதற்கு இணையான) படிப்பை முடிக்கவேண்டும்.
3. மூன்று ஆண்டுகளுக்குள்ளாக அனைத்துப் பள்ளிகளும் தம்முடைய உள்கட்டுமானத் தரத்தை உயர்த்தவேண்டும். இல்லாவிட்டால் அவர்களுடைய உரிமம் ரத்து செய்யப்படும்.
4. கல்வியின் தரம் உயர்த்தப்படவேண்டும்.

அடிப்படையில் இவை ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கின்றன. தமிழகத்தை மட்டும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் 25% இடத்தை அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால் இதற்கு என்ன கட்டணத்தை அரசு தரப்போகிறது? அரசு தானாக ஒரு கட்டணத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதைத்தான் தரப்போகிறது. இதனை தில்லியில் உள்ள மாநில அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்திவிட்டது. ஒரு பள்ளி ஆண்டுக்கு 25,000 ரூபாய் அல்லது 50,000 ரூபாய் கட்டணம் வசூலித்தாலும், அரசு அவர்களுக்கு 10,000 ரூபாய்தான் தரும்.

மக்களிடையே பரவலாக ஓர் எண்ணம் உள்ளது: ‘தனியார் பள்ளிகள் எல்லாம் கொள்ளைக்காரர்கள். கல்விக் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.’ அதன் விளைவாகத்தான் தமிழக அரசு கட்டணக் கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டுவந்தபோது மக்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். தனியார் கல்வி அமைப்புகள் அனைத்திலும் அடிப்படையாக ஒரு முரண் உள்ளது. இந்தியாவில் நிலவும் சட்டதிட்டங்களின்படி எந்தக் கல்வியும் லாபநோக்கில் தரப்படக்கூடாது. அறக்கட்டளை ஒன்றை அமைத்து அதன்மூலம் மட்டும்தான் கல்வி தரலாம். மெட்ரிக், சி.பி.எஸ்.இ போன்ற பாடத்திட்டத்தை நீங்கள் வழங்கினால் அரசிடமிருந்து உங்களுக்கு எந்த நிதி உதவியும் கிடைக்காது. இடம், உள்கட்டுமானம், ஆசிரியர் சம்பளம் என அனைத்துக்கும் நீங்கள்தான் பொறுப்பு.

முன்னெல்லாம் நிறையப் பணம் சம்பாதித்த பெருவணிகர்கள் அறக்கட்டளை அமைத்து இலவச அல்லது குறைந்த கட்டண கல்வியை நிஜமாகவே பொதுச்சேவையாக அளித்தனர். ஆனால் கல்விக்கென மிகப்பெரும் சந்தை உருவாக ஆரம்பித்தபோது பல தனியார்கள் கல்வி வழங்கும் களத்தில் குதித்தனர். இவர்களில் சிலர் நல்லவர்களாகவும் நியாயவான்களாகவும் இருந்தாலும் பெரும்பாலானோர் கொள்ளைக்காரர்களாகவே இருந்தனர். மெட்ரிக் கல்விமுறை இவர்களுக்குச் சாதகமாக இருந்தது. அரசின் நேரடிக் கட்டுப்பாடு கிடையாது. ஆங்கிலக் கல்வியின் மோகம் அதிகரித்த நிலையில், இவர்கள் மக்களிடமிருந்து வேண்டிய கட்டணத்தை வசூலிக்க ஆரம்பித்தனர். லாபம் இருக்கக்கூடாது என்று அரசுச் சட்டங்கள் சொன்னாலும், பல வகைகளிலும் பள்ளிகளிலிருந்து பெறும் லாபத்தை வெளியில் எடுத்து சொந்தமாக கார், பங்களா, நிலம், நீச்சு என்று தங்கள் சொத்தை அதிகரித்துக்கொண்டனர்.

அதே சமயம் நியாயமாகக் கல்வி வழங்கி அதன்மூலம் நியாயமான லாபம் ஈட்ட விரும்பியவர்கள் யாரும் கல்வித் துறைக்குள் நுழைய முடியாமல் போயிற்று. ஏனெனில் லாபம் எடுக்க முடியாது என்று சட்டங்கள் சொல்கின்றன. லாபம் எடுக்க விரும்பினாலேயே நீங்கள் சட்டத்துக்குப் புறம்பாக நடக்க ஆரம்பித்துவிடுகிறீர்கள். ஆக, மோசமானவர்கள், அதாவது சட்டத்துக்குப் புறம்பானவர்கள் மட்டுமே இந்தத் துறைக்குள் நுழையமுடியும் என்று அரசு முடிவுசெய்துவிட்டது.

அதே நேரம், ஏற்கெனவே கல்வியை வழங்குபவர்கள் (அவர்கள் லாபத்தை வெளியில் எடுப்பது என்பது தவறாகவே இருந்தாலும்) பலவிதங்களில் சமூகத்துக்குப் பெரும் நன்மையைச் செய்துவருகிறார்கள் என்பதை நாம் மறுக்கவே முடியாது. அரசு கல்வியைக் கை கழுவிவிட்ட நிலையில், இந்தத் தனியார்கள் மட்டும் கல்வி நிலையங்களை ஆரம்பித்திருக்கவில்லை என்றால் இன்று நாம் சிங்கி அடித்துக்கொண்டிருந்திருப்போம். கல்வி மட்டுமல்ல, எந்த ஒரு நிறுவனத்தையும் கட்டி எழுப்பி, நடைபெற வைப்பது எளிதான செயலல்ல. வாய்ச்சொல் வீரர்களான நம் எத்தனை பேரால் நாம் செய்துகொண்டிருக்கும் அனைத்தையும் விட்டுவிட்டு, நாளைக்கே ஒரு கல்வி நிறுவனத்தை - நியாயமாக, சட்டத்துக்குப் புறம்பில்லாமல் - உருவாக்க முடியும்?

இவர்கள் வாங்கும் கட்டணம் நியாயமா இல்லையா, வெளிப்படையாக உள்ளதா இல்லையா என்றெல்லாம் பெற்றோர்கள் பரிசீலிப்பதில்லை. கொடுக்க முடிந்தவர்கள் வாயைப் பொத்திக்கொண்டு கொடுத்துவிடுகிறார்கள். கொடுக்க முடியாதவர்கள் கூட்டமாகச் சென்று பள்ளி வாசலில் கோஷம் போடுகிறார்கள். பதிலுக்கு பள்ளி நிர்வாகம் எதிர்த் தாக்குதலில் இறங்குகிறது. இதனால் சூழல் விஷத்தன்மை அடைகிறது. அரசு இதனைக் கருணையோடு பார்ப்பதில்லை.

அரசு கட்டண விவகாரத்தில் இறங்குவதை எந்தத் தனியார் பள்ளியும் விரும்பாது. ஏனெனில் பெரும்பாலானோர் கட்டணத்தை அதிகமாக வசூலிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதாவது கல்வி நிறுவனத்தை நடத்த எவ்வளவு தேவையோ அதற்கும் அதிகமாக வசூலிக்கிறார்கள். அந்த அதிகம்தான் அவர்களது லாபம். அது நியாயமான லாபமா, நியாயமற்ற லாபமா என்ற பேச்சுக்கே இடமில்லை; ஏனெனில் லாபம் என்பதே கூடாது என்கிறது சட்டம். ஆக பிரச்னை சட்டத்தில்தான்.

எந்தத் தனி மனிதனும் லாபம் இன்றிச் செயல்பட விரும்பமாட்டான். மருத்துவர்கள் லாபமின்றி ஊசி போடவேண்டும்; உணவகங்கள் லாபமின்றி உணவளிக்கவேண்டும் என்று நாம் கேட்கிறோமா? இவை எல்லாமும் சேவைகள்தானே? ஆனால் கல்வியை மட்டும் லாபமின்றி ஒருவர் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இது எந்த வகையில் நியாயம்?

(தொடரும்)

Right to Education சட்டத் திருத்தம் - 1

2009-ல் இயற்றப்பட்ட 86-வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் மூலம், இப்போது கல்வி, நம்முடைய அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கிறது. அதாவது பள்ளிக் கள்வி - 10-ம் வகுப்பு வரையிலான கல்வி. 6 வயது முதல் 14 வயதுவரையிலான மாணவர்களுக்கான கல்வி.

இந்தச் சட்டம் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது. அதில் முக்கியமான சிலவற்றை மட்டும்தான் இங்கு விவாதப் பொருள் ஆக்கப்போகிறேன்.

6-14 வயதுள்ள மாணவர்கள் யாருக்கும் கல்வி கிடைக்காமல் இருந்துவிடக்கூடாதே என்ற நல்ல எண்ணத்திலும் இந்தியாவில் படிக்காதவர்களே இருக்கக்கூடாது என்ற உயர்ந்த கொள்கையின் அடிப்படையிலும்தான் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இன்று ஏன் மாணவர்கள் கல்விக்கூடங்களுக்குப் போவதில்லை என்று பார்ப்போம்.

1. போதுமான அளவில் கல்வி நிலையங்கள் இல்லாமை.
2. கல்வி நிலையங்கள் இருந்தாலும் அதில் சேர்ந்து படிக்கும் அளவுக்குக் கையில் பணம் இல்லாமை.
3. குடும்பச் சூழ்நிலை காரணமாக, வறுமை காரணமாக, படிப்பதற்குபதில் வேலைக்குச் செல்லவேண்டிய நிலை.
4. கொத்தடிமைகளாக விற்கப்பட்ட சிறுவர்கள் சுரண்டப்படுதலால் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலை.
5. படிப்பு ஏறுவதில்லை என்பதால் படிக்கப் பிடிக்காமல் கெட்ட காரியங்களில் சிறுவர்கள் ஈடுபடுதல்.
6. கல்வி என்பது மதிக்கத்தக்கதாக, அவசியமானதாகக் கருதப்படாத பழங்குடிச் சமுதாயங்களின் சிறுவர்கள் பள்ளிகளுக்குச் செல்லாமை.
7. அனாதைகள், பிச்சை எடுப்போர், உடல்/மன நலமற்றோர், தெருக்குழந்தைகள் - இப்படி சமுதாயத்தின் மிக மிக விளிம்பு நிலையில் இருப்போர் பள்ளிகளுக்குச் செல்லாமை.
8. வேறு ஏதேனும்?

இது மாநிலத்துக்கு மாநிலம், ஒரு மாநிலத்திலேயே மாவட்டத்துக்கு மாவட்டம், கிராமத்துக்கு கிராமம் மாறுபடும்.

கடந்த 64 வருடங்களில் பள்ளிகளின் படிப்போர் எண்ணிக்கை எப்படி அதிகமானது? தமிழகத்தில் எண்ணற்ற அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க முடிவு செய்தது. 1980-களில் அரசு நிதியுதவி ஏதும் பெறாத, முற்றிலும் ஆங்கில மீடியத்தில் இயங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கான அனுமதியைத் தந்தது. அரசுப் பள்ளிகளிலும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் மதிய உணவு (பின்னர் சத்துணவு என்று பெயர் மாறியது) தந்தது. கடந்த பத்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளிலும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் உள்ள மாணவர்களுக்கு இலவசச் சீருடை, காலணிகள், இலவசப் புத்தகங்கள், உயர் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் என்று அளிக்கத் தொடங்கியது. இலவச பஸ் பாஸ், ஒரு பெரும் வசதியானது. இதனால் சிறு கிராமங்களில் இருக்கும் மாணவர்களும் அருகில் உள்ள நகரங்களுக்குச் சென்று படிக்க முடிந்தது. இதில் அஇஅதிமுக, திமுக என்று மாற்றம் இல்லாமல் இரு கட்சிகளும் மிகப் பெரும் சேவை செய்துள்ளன. அவர்களுக்குப் பாராட்டுகள்.

இந்தக் காரணங்களால், தமிழகத்தில் மிகக் குறைவான சிறுவர்கள்தான் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். என்னிடம் சரியான புள்ளிவிவரங்கள் கைவசம் இல்லை. மீதம் உள்ள மாணவர்களுக்கும் சரியான வழியைக் காட்டவேண்டியது அவசியம். அதே சமயம், பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல், தரமான கல்வியைத் தருதல், மேற்படிப்பை நோக்கிச் செல்ல மாணவர்களுக்கு வழிகாட்டுதல், திறன் மேம்பாடு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.

நல்ல கல்வியின் மூலமே ஏழைமையை ஒழிக்கமுடியும்.

(தொடரும்)

Monday, June 06, 2011

இலங்கைக்கு ஒரு கலாசாரப் பயணம்

சில மாதங்களுக்குமுன் அஜந்தா குகைகளுக்குச் சென்றதைப் பற்றி எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து, ஒரு மூன்று நாள் இலங்கையில் சில புத்த பாரம்பரிய இடங்களுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.

நான் தேர்ந்தெடுத்த இடங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னங்கள் உள்ள நகரங்கள்: அநுராதபுரம், பொலனறுவ, சிகிரியா, தம்புள்ள, கண்டி.

அநுராதபுரம்தான் சிங்கள அரசர்களின் தலைநகரமாக இருந்துவந்தது. அவர்களது பெரும்பாலான கட்டுமானங்கள் இங்கேதான் இருந்தன. இரு மாபெரும் செங்கல் ஸ்தூபிகள், பல விகாரைகள், இரட்டைத் தடாகம் என்று பார்க்க இங்கு பல விஷயங்கள் உள்ளன. மகா போதி மரம் இங்குதான் இருக்கிறது. புத்தர் ஆன்ம ஞானம் பெற்ற போதி மரத்தின் (அரச மரம்) சிறு கிளை ஒன்றை சுமார் கி.மு 300 வாக்கில் அசோகரின் மகள் சங்கமித்திரை இலங்கைக்குக் கொண்டுவந்து கொடுத்தார் என்பது இவர்களது நம்பிக்கை. அந்த மரம் அநுராதபுரத்தில் நடப்பட்டு அது இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று நம்புகிறார்கள்.

ஜேதவனரமய ஸ்தூபி, அநுராதபுரம்
மகா போதி, அநுராதபுரம்

சிகிரியா என்பது சிறு குன்று. காஷ்யபன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. இவன் தந்தை தாதுசேனன் அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். தாதுசேனனின் முதல் மகன்தான் காஷ்யபன் என்றாலும் அவனது தாய் பட்டத்து அரசி கிடையாது. இரண்டாவது மகன் முகிலன், பட்டத்து ராணிக்குப் பிறந்தவன். தந்தை தனக்கு ராஜ்ஜியத்தைத் தரப்போவதில்லை என்பதை உணர்ந்த காஷ்யபன், தந்தையைக் கொன்றுவிட்டு நாட்டை எடுத்துக்கொண்டான். முகிலன் இந்தியாவுக்கு ஒடிச் சென்று படை திரட்டுவதில் ஈடுபட்டான். தம்பி வந்து தன்னுடன் போர் புரிவான் என்பதால் காஷ்யபன் சிகிரியா என்ற குன்றைத் தன் கோட்டையாக ஆக்கிக்கொண்டான். இரண்டு அகழிகள், மூன்று சுற்றுச் சுவர்கள் என்று பலமான கோட்டை. உள்ளே பல தோட்டங்கள், குளங்கள் என்று கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான இடம். இங்குதான் சில சுவர் ஓவியங்கள் உள்ளன. அஜந்தா பாணியைப் பின்பற்றி வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்கள் வெறும் எச்சங்களே. ஒரு காலத்தில் இங்கு எண்ணற்ற பல ஓவியங்கள் இருந்திருக்கவேண்டும். இங்கு பழைமையான சில பிராமி கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

சிகிரியா குன்று
சுவர் ஓவியம், சிகிரியா
மலை உச்சியில் ஒரு நேர்த்தியான குளம்

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் இலங்கையின் பெரும்பகுதி சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போதே பொலனறுவ நகர்தான் சோழர்களின் தலைநகராக இருந்தது. பின்னர் சோழர்கள் ஆதிக்கம் குறைய, விஜயபாகு என்ற அரசன் ஆட்சியைக் கைப்பற்றினான். அவனும் அவனது சந்ததியரும் வெகு காலம் பொலனறுவவைத்தான் தலைநகராகக் கொண்டிருந்தனர். இங்கு இவர்கள் கட்டிய சில புத்தக் கோயில்களும் ராஜராஜன் கட்டிய சிவனுக்கான கோயில்களும் உள்ளன. கல் விகாரை எனப்படும் கல்லில் வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் நான்கு இங்குதான் உள்ளன. அடுத்தடுத்துக் காணப்படும் நான்கு புடைப்புச் சிற்பங்களில், முதலாவதில் புத்தர் தவ நிலையில் அமர்ந்திருக்கிறார்; இரண்டாவதில் தூஷித சொர்க்கத்தில் அவர் இருக்கிறார் (அப்போதுதான் மாயாவதிக்கு மகனாகப் பிறக்குமாறு அவரை தேவர்கள் வேண்டுகிறார்கள்); மூன்றாவதில் இந்த உலக மக்களின் துக்கத்தை நினைத்தபடி கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கிறார்; நான்காவதில் பரிநிர்வாணம் (உலகை விட்டு நீங்குகிறார்). இரண்டாவது புடைப்புச் சிற்பம் மட்டும் ஒரு மண்டபக் கட்டுமானத்துக்குள் உள்ளது. மற்ற மூன்றும் வெளிப்புறப் புடைப்புச் சிற்பங்கள்.

கல்வெட்டு - சுமார் 12-ம் நூற்றாண்டு, பொலனறுவ
ராஜராஜ சோழன் கட்டிய 11-ம் நூற்றாண்டு சிவன் கோயில், பொலனறுவ
மகா பரிநிர்வாணம், பொலனறுவ

தம்புள்ள மலையில் குடைந்து ஐந்து மண்டபங்கள் உள்ளன. காலத்தால் சில முற்பட்டிருந்தாலும் அவற்றின் உள்ளே சில சிற்பங்கள் கல்லிலும் சில சுதையிலும் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இவை பராமரிப்பில் இருந்துவருவதால் இங்குள்ள சிற்பங்கள் எவையுமே காலத்தால் முற்பட்டது என்று சொல்லமுடியாது. சுவரிலும் மேல் கூரையிலும் பல ஓவியங்கள் காணப்படுகின்றன. ஆனால் எல்லாமே தரத்தில் குறைவானவை. நாயக்கர் கால தமிழக ஓவியங்கள் போன்ற ஒற்றுமை காணப்படுகிறது. பெரும்பாலும் 17, 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கவேண்டும்.

ஐந்து குகைக் கோயில்கள், தம்புள்ள
மேற்கூரை ஓவியம், தம்புள்ள (நாயக்கர் பாணி)

கண்டியில்தான் புகழ்பெற்ற பல் கோயில் உள்ளது. புத்தரின் பல் என்று நம்பப்படுகிறது. இது அநுராதபுரத்தில் தொடங்கி, பொலனறுவ சென்று மேலும் பல இடங்களைத் தாண்டி இறுதியில் கண்டி வந்து இப்போதுள்ள கோயிலில் இருக்கிறது. வரலாற்றுப் பழமை என்று இந்தக் கோயிலில் எதையும் சொல்லவிடமுடியாது. இந்தப் பல் எப்படி இந்தியாவிலிருந்து இலங்கை வந்தது என்ற ஐதீகம் சுவாரசியமானது.

கண்டியின் பல் கோயில்
திரைக்குப் பின் பல்

மேலே உள்ள இடங்களும் கதைகளும் இலங்கையின் மத வரலாற்று நூலான மகாவம்சத்தில் உள்ளவை. இந்த நூலை முழுமையான வரலாறாகக் கொள்ளமுடியாது. ஏகப்பட்ட இடைச் செருகல்கள், வரலாற்றுக்கு முரணானவை என்று பல இதில் உள்ளன. ஆனாலும் பல இடங்களில் மகாவம்சத்தில் உள்ள கதைகளுக்கு தொல்லியல் சின்னங்கள் சான்றுகளாகவும் உள்ளன. மேலே சொன்ன இடங்களில் எல்லாம் பல முக்கியமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பொலனறுவ சிவன் கோயிலில்தான் ராஜராஜனின் தமிழ் கல்வெட்டும் காணக் கிடைக்கிறது.

விரிவான சில பதிவுகளையும், வீடியோக்களையும், படங்களையும் பின்னர் சேர்க்கிறேன். இது ஒரு டீசர் பதிவு மட்டுமே.

Wednesday, June 01, 2011

கிழக்கு பதிப்பகம் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு,  கிழக்கு பதிப்பகத்தின் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி தொடர்கிறது. இம்முறை தி. நகரில்.

ஏப்ரலில் நடந்த கண்காட்சியின்போது இல்லாத பல புத்தகங்கள் இப்போது மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். எனவே ஏற்கெனவே சென்றிருந்தாலும் இப்போதும் ஒருமுறை சென்று பார்த்துவிடுவது நல்லது.

இடம்: எல்.ஆர்.ஸ்வாமி ஹால், சிவா விஷ்ணு கோவில் எதிரில், சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில், தி. நகர்.
நாள்: 3 ஜூன் முதல்.
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை.