வெறும் 88 பக்கங்கள். 30-45 நிமிடங்களில் படித்துமுடித்துவிடக்கூடிய சிறிய புத்தகம்தான். ஆனால் கல்வியில் ஆர்வம் கொண்டிருக்கும் அனைவரையும் காலம் முழுதும் சிந்திக்க வைக்கும் சக்தி இப்புத்தகத்துக்கு உண்டு.
மாடசாமி நன்கு அறியப்பட்ட கல்வியாளர். இப்புத்தகத்தின் ஒரு குறை மாடசாமியைப் பற்றிய முறையான அறிமுகம் இல்லாமல் இருப்பதுதான். மாடசாமி 'புதிய தலைமுறை கல்வி' இதழில் 17 வாரங்களாக எழுதிவந்த கட்டுரைத் தொடரின் தொகுப்புதான் இந்நூல். சனிக்கிழமை அன்று திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியின் முதல்வர் துளசிதாசன் அன்புடன் கொடுத்தார். நேற்று இரவு பாதியும் இன்று அதிகாலை பாதியுமாகப் படித்து முடித்தேன்.
மாடசாமியிடம் இருக்கும் மாணவர்கள் மீதுள்ள பரிவும் கல்வித்துறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஆதங்கமும் புத்தகம் நெடுக விரிந்துகொண்டே இருப்பதைக் காணலாம். அவருக்கே உரித்தான மொழியில், போதனை இல்லாத குரலில் ஆங்காங்கே தொட்டுக் காட்டிச் செல்வது, அவரை நமக்கு அணுக்கமாக்குகிறது. அவருடைய சொந்த அனுபவங்களும் அவர் படித்த புத்தகங்களிலிருந்து பெற்ற புரிதல்களும் கட்டுரைகளுக்கு மிகுந்த வலு சேர்க்கின்றன. நாண் மேற்கொண்டு படிக்க குறைந்தது பத்து புத்தகங்களை இந்தக் கட்டுரைத் தொடரிலிருந்து பெற்றுள்ளேன். எல்லாமே கல்வி தொடர்பானவை. கூடவே அறிவொளி இயக்கத்தின்போது அவர் சந்தித்த மனிதர்களும் அவர்களுடைய எளிமையான நாட்டுப்புறக் கதைகளும் பழமொழிகளும் விடுகதைகளும் புத்தகத்துக்கு மண்ணின் மணத்தைக் கொடுக்கின்றன.
கணவன் இல்லாத அறிவொளித் தொண்டர் ரத்தினம்மாளின் ஒரே மகன் கெட்ட சகவாசம் கொண்டவனாக இருக்கிறான். மகன் தேறுவானா என்று கேட்கிறார் மாடசாமி. "புளிய மரத்துல ஏறினவன் பல் கூசுனதும் தானா எறங்குவான்" என்கிறார் தாய். வழிக்கு வராதவர்கள் என்போரைக் கழித்துக் கட்டவே ஆசிரியர்கள் விரும்புகிறோம்; அவர்கள் மாறுவார்கள் என்று காத்திருக்க விரும்புவதில்லை என்கிறார் மாடசாமி.
சமச்சீர்க் கல்வி பாடத்தில் "நோ (மாட்டேன், இல்லை, கூடாது)" என்ற சொல்லைச் சொல்வதற்கான பயிற்சிகளை இணைக்க மாடசாமி விரும்புகிறார். "நோ" சொல்வது அடங்காப்பிடாரிகளை உருவாக்கும் என்று எதிர்ப்பு கிளம்புகிறது. "மறுப்பது அடங்காமையா" என்ற கேள்வியை எழுப்புகிறார் மாடசாமி. "'கண்ட சாதிப் பயல்களோடு விளையாடாதே' என்று அப்பா போடும் உத்தரவுக்கு 'நோ' சொல்வது அடங்காமையா? பள்ளிக்கூடம் விட்டு நடந்துவரும் சிறுமியிடம் முன்பின் தெரியாத அயலான் வந்து 'பாப்பா! வா! உன்னை வீட்ல விடுறேன். சைக்கிள்ல ஏறு' என்று அழைக்கும்போது அவனுடைய அழைப்புக்கு 'நோ' சொல்வது அடங்காமையா?" என்று வினா எழுப்புகிறார் மாடசாமி. சிறிது வெற்றி. பாடத்திட்டத்தில் கொஞ்சமாக சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் சிறுமிகள் 'நோ' சொல்லவேண்டிய பயிற்சிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லையாம்!
ஐம்பத்தோராவது ராட்சதப் பூச்சி (Fity First Dragon) என்ற கதை, Evan Hunter எழுதிய The Blackboard Jungle என்ற நாவலில் வருகிறதாம். பொய்யான நம்பிக்கையையும் போலியான ஊன்றுகோலையும் மாணவர்களுக்குத் தரும்போது ஏற்படும் விளைவுகளைக் குறிக்கிறது கதை. இம்மாதிரியான கதைகளை நம் வகுப்பறைகளில் மாணவர்களுடன் சேர்ந்து விவாதிக்கவேண்டும் என்கிறார்.
ஆசிரியரையோ பள்ளியையோ மாணவர்களுக்குப் பிடிக்கவில்லை எனும்போது ஓராண்டு பள்ளியிலிருந்து விலகியிருந்தால் நன்மை கிடைக்கலாம் என்னும் தைரியமான கருத்தை முன்வைக்கிறார். நம் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் கருத்து இது. மாணவர்களின் தனித்திறமையை வளர்த்தெடுக்காமல் அனைவரும் அனைத்திலும் ஒரு தரத்தை எட்டவேண்டும் என்று போராடும் ஆசிரியர்களையும் பள்ளி முறையையும் எதிர்க்கிறார். இதன் விளைவு, வாத்துகள் பறக்க முயன்று அதிலும் தோல்வி, கால் ஜவ்வு கிழிந்து நீந்துவதும் போச்சு. அவரவர் திறமையைச் சடுதியில் கண்டுபிடித்து அந்தத் திறமைகளை அதிகம் வளர்த்தெடுப்பதுதான் கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டும். “இறுகிய பாடத்திட்டங்களுக்கு ஏற்றபடி குழந்தைகளை வளைக்காதீர்கள்; குழந்தைகளுக்கு ஏற்றபடி பாடத்திட்டத்தை வளையுங்கள்."
வசந்தி தேவி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது ‘என் கிராமத்தின் கதை’ என்ற போட்டியை மாணவர்களுக்காக அறிவித்தார். இதனையடுத்து மாணவர்களிடமிருந்து சுவையான பல கட்டுரைகள் பிறந்தன. அடுத்து துணைவேந்தராக வந்த அறவாணன், மாணவர்களுக்கிடையே போட்டி என்றால் பேச்சு, பாட்டு, நடனம் ஆகியவை மட்டும்தானா, பிரச்னைகளை ஆராய்ந்து அறியும் அறிவு திறமைகளில் பட்டியலில் இல்லையா என்று கேள்வி எழுப்பினாராம். அதன் விளைவாக ‘சமூகமும் கல்விக்கூடமும் சந்திக்கட்டும்’ என்ற கருத்தை மையமாக வைத்து இளைஞர் விழா ஒன்று நடத்தப்பட்டது. மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து கிராமங்களுக்குச் சென்று மக்கள் பிரச்னைகளை ஆய்ந்து அறிக்கை சமர்ப்பித்தனராம். அதில் கிடைத்த சில புரிதல்களை மாடசாமி விவரிக்கிறார்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் இவற்றை ஆவணப்படுத்தவேண்டும். அற்புதமான முயற்சிகள் ஏன் கண்காணாமல் போய்விடுகின்றன என்று புரியவில்லை. மதுரை சமூக அறிவியல் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் ரெங்கசாமியுடன் நான் இதுபற்றி நிறையப் பேசியிருக்கிறேன். ஓரிரு கிராமங்களில் நாங்கள் முயற்சிகளையும் மேற்கொண்டோம். பெரிய பலன் ஏதும் கிடைக்கவில்லை. வேறு வடிவில் வேறு இடங்களில் இவற்றை மீண்டும் செயல்படுத்த முனையவேண்டும்.
ஒரு கட்டுரையில் மாடசாமி சொல்லும் ஒரு விஷயம் எனக்கு மிகவும் பரிச்சயமானது. அதனை அப்படியே இங்கே தருகிறேன்:
தமிழகப் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் அமெரிக்கப் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றிய கல்வியாளர் ஒருவர், பின்வரும் கருத்தைப் பதிவுசெய்கிறார்.
"தமிழகத்து மாணவர்கள், இடையூறு செய்யாமல் நான் பேசியதைக் கேட்டார்கள். ஆனால், பேசி முடித்ததும் என் உரையின்மீது ஒரு வினாவும் எழுப்பவில்லை, பேசும்போதும் கப்சிப்! பேசிமுடித்ததும் கப்சிப்! அமெரிக்கப் பள்ளி மாணவர்கள், நான் பேசுகையில் பலவிதமான குறுக்கீடுகளை - இடையூறுகளைச் செய்தார்கள். அரங்கைவிட்டு இஷ்தப்படி வெளியேறினார்கள். ஆனால் பேசி முடித்ததும் சுயசிந்தனையுடன் பல கேள்விகளை எழுப்பினார்கள்."
சென்ற வாரம் வரை நான் சென்றுவந்துள்ள பள்ளி, கல்லூரிகளில் பெரும்பாலும் இதுதான் நிலைமை. ஓரோர் இடத்தில் சற்றே விலகல் இருக்கலாம். நான் மிகவும் தோண்டித் துருவினால் மட்டுமே ஒரு சிலர் பேசுவார்கள். ஆனால் பேச்சை முடித்து கீழே இறங்கியதும் சிலர் வந்து சூழ்ந்துகொள்வார்கள். நிறையக் கேள்விகளைக் கேட்பார்கள். சிலர் நின்றுகொண்டே இருப்பார்கள். அவர்கள் முகத்தில் கேள்விகள் தெரியும். ஆனால் கேட்கத் தயக்கம். கடைசிவரை கேட்காமலேயே போய்விடுவார்கள். பக்கத்து நபரிடம் தங்கள் கேள்விகளைச் சொல்லிக் கேட்கச் சொல்வார்கள். இதிலிருந்து மீண்டாலொழிய நம் மாணவர்களால் முன்னேற முடியாது.
அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவருவது, அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு அழிந்துவருவது ஆகியவை பற்றி மாடசாமி அங்கலாய்க்கிறார். ஆனால் அரசுப்பள்ளிகளில்தான் இன்னமும் ஆன்மா இருக்கிறது என்கிறார். அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் குறித்த கருத்து இவரிடம் மட்டுமல்ல, இன்னும் பலரிடமும் அப்படியே மாறாமல் இருக்கிறது. இரண்டிலும் தங்களுக்கு விருப்பமான வகைமாதிரிகளை எடுத்துக்கொள்கிறார்கள். தனியார் பள்ளி என்றால் அதற்கு உள்ளதிலேயே மோசமான ஒரு எடுத்துக்காட்டை எடுத்துக்கொள்வது. அரசுப் பள்ளி என்றால் அதற்கு நம் மனம் விரும்பிய எடுத்துக்காட்டு, பிறகு இரண்டையும் ஒப்பிடுவது. இந்தக் கட்டுரையில் நான் என் எதிர்வாதத்தை வைக்கப்போவதில்லை. ஆனால் மாடசாமியின் இந்தச் சிந்தனையை மட்டும் முன்வைப்பேன்:
அரசுப் பள்ளிகள் இன்று காணும் தளர்ச்சி, ஒரே நாள் இரவில் நடந்தது அல்ல. முப்பது ஆண்டுகளாக நடந்துவரும் மாற்றம் இது. மாற்றம் இன்று கொதிநிலையை அடைந்திருக்கிறது. இனியும் கவனிக்காமல் இருக்க முடியாது. … நாம் புது வடிவம் எடுக்காமல் இந்த மாற்றத்தை எதிர்கொள்ள முடியுமா? ஆசிரியர் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், பண்பாட்டு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஒன்றுகூடிப் பேசிச் சிந்தித்துச் செயலபடவேண்டாமா? அரசுப் பள்ளி வகுப்பறைகளில் புதிய வெளிச்சம் வேண்டாமா? அரசுப் பள்ளி ஆசிரியர்கள் புதிய ரூபங்கள் எடுக்கவேண்டாமா? புதிய முயற்சிகளுக்கு அரசு அதிகாரிகள் பக்கபலமாய் வரவேண்டாமா?
கேள்விகள் நியாயமானவை. என்னைப் பொருத்தமட்டில், கல்வியாளர்கள், அரசுப் பள்ளி, தனியார் பள்ளி இரண்டும் முன்னேற்றப் பாதையை நோக்கிப் பயணம் செய்வது எப்படி என்று சிந்திக்கவேண்டும். இரண்டும் மாணவர்களுக்குக் கல்வியைத் தரும் முக்கியமான பணியைச் செய்துகொண்டிருக்கின்றன. இரண்டிலும் கற்பித்தல் பிரச்னை ஒன்றுதான். கட்டுமானம், பணவசதி, இன்னபிறவற்றில்தான் வேற்றுமை.
பல விவாதங்களை முன்வைக்கும் இந்தப் புத்தகம் அவசியம் படிக்கப்படவேண்டியது.
தெருவிளக்கும் மரத்தடியும், சு. மாடசாமி, புதிய தலைமுறை வெளியீடு, பக் 88, விலை ரூ. 80