Tuesday, July 24, 2007

பாகிஸ்தான், தாலிபான், அல் காயிதா

நேற்று எழுதிய பதிவு: பாவம் முஷரஃப்!


பாகிஸ்தானின் நான்கு பெரிய மாகாணங்கள் பஞ்சாப், சிந்த், பலூசிஸ்தான், வடமேற்கு எல்லை மாகாணம் ஆகியவை. இவை நான்கைத் தவிர ஆஸாத் காஷ்மீர் (பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்), வடக்குப் பிரதேசம் (Northern Territories) ஆகியவை பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள். ஆனால் இங்குள்ள மக்கள் பாகிஸ்தான் தேர்தலில் வாக்களிப்பதில்லை. இவைதவிர, பல பழங்குடியினர் வசிக்கும் பிரதேசங்கள் பாகிஸ்தானில் உள்ளன. இவற்றுக்கு 'நடுவண் அரசால் நிர்வகிக்கப்படும் பழங்குடிப் பிரதேசங்கள்' என்று பெயர். வடக்கு மற்றும் தெற்கு வாசிரிஸ்தான் இத்தகைய பிரதேசங்கள் ஆகும்.

வடமேற்கு எல்லை மாகாணம், பலூசிஸ்தான் இரண்டுமேகூட பழங்குடியினர் அதிகமாக வாழும் பிரதேசங்கள்தாம். வடமேற்கு எல்லை மாகாணத்தில்தான் எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் காஃபார் கான் என்னும் மிகப்பெரிய தலைவர் இருந்தார். இவர் வடமேற்கு எல்லை மாகாணம் பாகிஸ்தானுடன் சேர்வதை எதிர்த்தார். இந்தியாவுடன் சேர்ந்து இருக்க விரும்பினார். ஆனால் புவியியல் சதி செய்தது. வடமேற்கு எல்லை மாகாணத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் காஷ்மீர் இருந்தது. அந்த நேரத்தில் காஷ்மீர் எந்தப் பக்கம் போகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. காஷ்மீர் தனி நாடாகவே இருக்கக்கூடிய சாத்தியம் இருந்தது. அதனால் இந்தியா என்று வரையறுக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து வடமேற்கு எல்லை மாகாணத்துக்கு நேரடிப் பாதை கிடையாது. இதன் காரணமாக நேருவும் படேலும் காஃபார் கானைக் கைவிட்டனர்.

சுதந்தரத்துக்குப் பிறகு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் வடமேற்கு எல்லை மாகாணத்தை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டினார்கள். அடிப்படை வளர்ச்சிப் பணிகள் எதுவும் கிடையாது. பழங்குடியினர் பழமையிலேயே இருக்குமாறு பணிக்கப்பட்டார்கள். இந்த மாகாணத்தில் சட்டம், ஒழுங்கு ஆகியவற்றைப் பாதுகாக்க காவல்துறையெல்லாம் சரியாகக் கிடையாது, நீதிமன்றமும் கிடையாது. பழங்குடியினரின் பஞ்சாயத்துதான். ஆனால் ஓரளவுக்கு மத்திய, மாநில அரசுகளின் சிவில் நிர்வாகம் இந்த மாகாணத்தில் உண்டு. ஊருக்குத் தொலைவில் ஆங்காங்கே ராணுவ முகாம்கள் இருக்கும்.

வடக்கு, தெற்கு வாசிரிஸ்தான்களின் கதை வேறு. அந்தப் பக்கம் பாகிஸ்தானின் சிவில் நிர்வாகம் போகவே போகாது. ராணுவமும் போகாது. வளர்ச்சியும் கிடையாது.

இந்தப் பகுதிகள் அனைத்துமே ஆஃப்கனிஸ்தானை ஒட்டிய பகுதிகள். சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான ஆஃப்கனிஸ்தானின் 'புனிதப் போரில்' இந்தப் பகுதிகளிலிருந்து பல பழங்குடியினரும் பிற மாகாணங்களின் மசூதிகளிலிருந்து தாடிவைத்த மாணவர்களும் (தாலிபன்கள்) கூட்டம் கூட்டமாகச் சென்று கலந்துகொண்டனர். பின், 9/11-க்குப் பிறகு அமெரிக்காவும் நேச நாடுகளும் ஆஃப்கனிஸ்தான்மீது தாக்குதல் தொடுக்க, பாகிஸ்தான் மிகவும் கடினமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

பர்வேஸ் முஷரஃப் தான் ஏன் ஒசாமா பின் லேடனுக்கு எதிராக, அமெரிக்காவுக்கு ஆதரவாக இறங்க முடிவு செய்தார் என்பதைப் பற்றி தனது புத்தகத்தில் தீவிரமாக அலசுகிறார். தாலிபன்களை உருவாக்கியதே பாகிஸ்தான்தான். முல்லா முகமது ஒமருக்கு ஆதரவு கொடுத்ததும் பாகிஸ்தான்தான். இன உறவுமுறைப்படி தாலிபன்கள் பலருக்கும் நெருங்கிய உறவினர்கள் பாகிஸ்தானில் உள்ளனர். ஆனாலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்கா பக்கம் இருப்பதுதான் தனது நாட்டுக்கு நலனைத் தரும் (பணத்தைத் தரும்) என்று முஷரஃப் முடிவு செய்கிறார்.

ஆனால் அதே நேரம் தாலிபன்களும் ஒசாமாவும் தனக்கு எந்த அளவுக்குத் தலைவலியைத் தருவார்கள்; அந்தத் தருணத்தில் அமெரிக்கா தனக்கு எந்தவிதத்தில் உதவியைச் செய்யாது - சொல்லப்போனால் உபத்திரவத்தைத்தான் கொடுக்கும் - என்பதை முஷரஃப் யோசிக்கவில்லை.

ஒசாமா பாகிஸ்தானில்தான் ஒளிந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறது அமெரிக்க உளவுத்துறை. அதைக் கடுமையாக மறுக்கிறார் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குர்ஷீத் மஹ்மூத் கசூரி. "எங்கே இருக்கிறார் என்று சரியாகக் குறிப்பிட்டுச் சொல்லச் சொல்லுங்கள், நாங்களே பிடித்துத் தருகிறோம்" என்கிறார் அவர். இதற்கிடையில் அமெரிக்கா, தேவைப்பட்டால் நேரடித் தாக்குதலில் ஈடுபடுவோம் என்கின்றனர். அப்படி நடந்தால் 'விளைவு மிக மோசமாக இருக்கும்' என்கிறார் கசூரி. விளைவு யாருக்கு மோசமாக இருக்கும்? பாகிஸ்தானுக்குத்தான். முஷரஃபுக்குத்தான். அமெரிக்காவுக்கு அல்ல.

இந்த நிலைமை இன்று பாகிஸ்தானுக்கு ஏன் ஏற்பட்டுள்ளது?

ஒருமுறை கலாஷ்னிகோவ் ஏந்திய கை சும்மா இருக்காது. தாலிபன்களை உருவாக்கியது முதல் தவறு. சுதந்தரம் கிடைத்த 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் வடமேற்கு எல்லை மாகாணத்திலும் வாசிரிஸ்தானிலும் எந்தவிதமான சிவில் நிர்வாக அமைப்பையும் உருவாக்காமல் விட்டது இரண்டாவது தவறு. மக்களுக்குக் கல்வியறிவு கொடுக்காமல் விட்டுவைத்தது மூன்றாவது தவறு.

'புனிதப்போர்' என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை முஷரஃப் இப்பொழுது புரிந்துகொண்டிருப்பார்.

அரசியல் கட்சிகளிடமிருந்து இப்பொழுது வந்திருக்கும் எதிர்ப்பைவிட, வாசிரிஸ்தானிலிருந்து வந்திருக்கும் எதிர்ப்பு முஷரஃபை அழிக்கக்கூடும். இது ஒரு lose-lose நிலைமை.

வாசிரிஸ்தான் போக்கிரிகளை அடக்க ராணுவத்தை ஏவினால், அங்குள்ள பழங்குடியினர் கட்டாயமாக பாதிக்கப்படுவார்கள். பாகிஸ்தானுடன் போர் தொடுப்பார்கள். இதில் நிறைய உயிர்ச்சேதம் ஏற்படும். இந்தப் பழங்குடிகள் அதன்பிறகு பாகிஸ்தானுடன் சேர்ந்து இருக்க நிச்சயம் விரும்பமாட்டார்கள். ராணுவத்தை ஏவாவிட்டால் தாலிபன்கள் வாலாட்டிக்கொண்டே இருப்பார்கள். பின் லேடன் ஒளிந்துகொள்ள சவுகரியமான இடமாகிவிடும். இதனால் அமெரிக்கா கோபம்கொண்டு தன்னுடைய ஏவுகணைகளை அனுப்பும். இதன் விளைவும் முஷரஃபுக்கு எதிராகவே அமையும்.

முஷரஃப் 'போர் விளையாட்டு' (War Game) விளையாடி என்னதொரு உத்தியைக் கடைப்பிடித்து இந்த நிலைமையைச் சமாளிக்கப்போகிறார் என்று பார்ப்போம்.

[பாகிஸ்தான் வரைபடம் பாகிஸ்தான் அரசின் இணையத்தளத்திலிருந்து எடுத்தது. இந்திய தேசபக்தர்கள் தேவையின்றி உணர்ச்சிவசப்படவேண்டாம்!]

Monday, July 23, 2007

பாவம் முஷரஃப்!

உலகிலேயே மிகக் கடினமான காரியம் பாகிஸ்தானை ஆள்வதுதான்! - பர்வேஸ் முஷரஃப், In the Line of Fire (தமிழில்: உடல் மண்ணுக்கு) முன்னுரையில்.

பாகிஸ்தானில் குடியாட்சி முறையும் ராணுவ ஆட்சியும் மாறி மாறி வந்துள்ளன. அதனால் குடியாட்சி முறை வலுவடையவே இல்லை. ஒவ்வொரு முறை ராணுவ ஆட்சி வரும்போதும் முதலில் பலியாவது அரசியலமைப்புச் சட்டம். எனவே அரசியலமைப்புச் சட்டத்தின்மீது மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மரியாதையே இருந்தது கிடையாது. தேவையென்றால் அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு புதிதாக ஒன்றை உருவாக்கிக்கொள்ளலாம் என்றே ராணுவ ஆட்சியாளர்கள் நினைத்துவந்துள்ளனர்.

ராணுவ ஆட்சியைத் தொடர்ந்து வரும் குடியாட்சி அரசியல் கட்சியினரும் ஊழலில் மட்டும் கவனம் செலுத்தி, வளர்ச்சிப் பணிகளைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் இருந்துள்ளனர். இதனாலேயே குடியாட்சி முறையைத் தூக்கி எறிந்து ஒரு சர்வாதிகாரி வருவதை மக்கள் விரும்ப ஆரம்பிக்கின்றனர். அதை ஒரு ராணுவ அதிகாரி நிறைவேற்றி வைக்கிறார்.

பிற ராணுவத் தலைமை அதிகாரிகளைப் போலன்றி பர்வேஸ் முஷரஃப் குடியாட்சி முறைமீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது. இதை அவரது புத்தகத்திலும் பார்க்கலாம்; அவரது நடைமுறையிலும் பார்க்கலாம்.

இதனால்தான் திடீரென்று சில மாதங்களுக்கு முன்னர் முஷரஃப் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இஃப்திகார் சவுதுரியை பதவி நீக்கம் செய்தது ஆச்சரியத்தை வரவழைத்தது. ஊழல், பதவியைப் பயன்படுத்தி ஆதாயம் என்று ஜோடித்த (அல்லது சரியாக நிற்காத) குற்றச்சாட்டுகளைக் காட்டி, அவசர அவசரமாக சவுதுரி பதவிநீக்கம் செய்யப்பட்டது, காவலில் வைக்கப்பட்டது, அவரது ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டது, ஒரு ஆதரவாளர் மர்மமான முறையில் கொல்லப்பட்டது, எதிர்ப்பு வலுத்தபோது பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது போன்றவை முஷரஃப் கஷ்டப்பட்டு உருவாக்கி வந்த பிம்பத்தைக் கலைத்தன.

ஒரு ஜியா உல்-ஹக்கோ, அயூப் கானோ இந்த விஷயத்தை வேறு விதமாகக் கையாண்டிருப்பார்கள். சொல்லப்போனால் அவர்கள் இருவரும் முற்றுமுழுதான சர்வாதிகாரிகள். முஷரஃபோ தான் சர்வாதிகாரி இல்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று மக்களை நம்பவைக்க மிகவும் பாடுபட்டார். பாகிஸ்தான் மக்கள் சில காலம் அதை நம்பினாலும் சர்வதேச அளவில் யாரும் நம்பவில்லை.

ஜியா, அயூப் காலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதி வாயைப் பொத்திக்கொண்டு வீட்டுக்குப் போயிருப்பார். ஆனால் முஷரஃபின் குழம்பிய நிலை, இஃப்திகார் சவுதுரிக்கு சாதகமாக அமைந்தது. போராட்டத்தில் இறங்கினார். எதிர்க்கட்சித் தலைவர்களுகெல்லாம் இல்லாத தைரியமும் கிடைக்காத ஆதரவும் சவுதுரிக்குக் கிடைத்தது. இத்தனைக்கும் மேலாக இந்தப் பதவி நீக்கம் ஒரு வழக்காக உச்ச நீதிமன்றத்துக்கே சென்று அங்கு சவுதுரிக்கு ஆதரவாக தீர்ப்பும் வந்தது.

சவுதுரியைப் பாராட்டும் அதே நேரம், முஷரஃபையும் நாம் பாராட்டவேண்டும். கடந்த நான்கு மாதங்களில் எத்தனையோ முறை அவரது நலம் விரும்பும் கோர் கமாண்டர்கள் பலரும் 'ஆணையிடுங்கள், அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளிவிடுகிறோம்' என்று சொல்லியிருப்பார்கள். கஷ்டத்தில் இருக்கும் அத்தனை சர்வாதிகாரிகளும் அதனை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். முஷரஃப் அதனைச் செய்யவில்லை.

முந்தைய சர்வாதிகாரிகளைப் போலன்றி, முஷரஃப் நிஜமாகவே குடியாட்சி முறையை விரும்புகிறார். ஆனால் தான்தான் தலைமைப் பீடத்தில் இருக்கவேண்டும்; நாடு தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். அதுதான் பிரச்னையே. ராணுவ அதிகாரிக்கு தோல்வி என்பது மனத்தளவிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. (அதனால்தான் முஷரஃப் பாகிஸ்தானின் ராணுவத் தோல்விகளையும்கூட தன் புத்தகத்தில் வெற்றியாக மாற்றும் ரசவாதத்தைப் புரிந்துள்ளார்.) ஆனால் குடியாட்சி முறையில் தான் தோற்கவும் வாய்ப்புள்ளது என்பதை முஷரஃப் புரிந்துகொள்ளவேண்டும். தோல்வியைத் தொடர்ந்து மாபெரும் வெற்றி மீண்டும் கிட்டும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

இதற்கு மிகவும் அவசியம் ஒரு வலுவான, மாறாத அரசியலமைப்புச் சட்டம். இன்றுவரை பாகிஸ்தானின் மேல்மட்ட அறிவிஜீவிகள் அதற்கான தேவையை புரிந்துகொள்ளவில்லை. முஷரஃபும் இதை அறியாதவராக இருக்கிறார். அதைப்பற்றிய தீவிரமான விவாதம் அந்த நாட்டில் நடப்பதே இல்லை. அரசியலமைப்புச் சட்டம்தான் நிழல்போல நின்று இந்தியாவின் குடியாட்சி முறையை வலிமையுடையதாக்கியுள்ளது. அந்த வலுவின் பின்னால்தான் இந்தியாவின் இன்றைய நிலையான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. அதிலிருந்து கிடைத்ததுதான் இன்றைய பொருளாதார மறுமலர்ச்சி.

அமெரிக்க அரசியலமைப்பு முறையை உருவாக்கியவர்களைப் போலவே, வலுவான இந்திய அரசியலமைப்பு முறையை உருவாக்கியவர்களும் போற்றுதலுக்குரியவர்கள்.

வலுவான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க எதிர்க்கட்சியினர், நாட்டின் பல்வேறு குழுவினர் முழு ஒப்புதல் அளிக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் ஆட்சிக்கு வரும்போது அந்தச் சட்டத்தை மதித்து நடப்பார்கள். ஒரு ராணுவ ஆட்சியாளரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்துக்கு தன்னிச்சையாகக் கீழ்ப்படிய மக்கள் விரும்பமாட்டார்கள். ராணுவ பலம்தான் மக்களைக் கீழ்ப்படிய வைக்கிறது. ராணுவ பலம் குறையும்போது மக்கள் எதிர்க்கத் தொடங்குகிறார்கள்.

எனவே முஷரஃப் உடனடியாகச் செய்யவேண்டிய காரியம் இதுதான். எந்தவிதத் தலையீடும் இன்றி அரசியலமைப்புச் சட்ட மன்றத்தை (Constituent Assembly) கூட்டவேண்டும். அதில் நவாஸ் ஷெரீஃப், பேநசீர் புட்டோ முதலான அத்தனை எதிர்க்கட்சியினரும் இடம் பெற்றிருக்கவேண்டும். ராணுவம் முற்றிலுமாக வெளியே இருக்கவேண்டும். அவ்வாறு உருவாகும் அரசியலமைப்புச் சட்டத்தை ராணுவம் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இது நடந்து, அடுத்து ஐந்து ஆறு தேர்தல்களுக்கு (30 ஆண்டுகள்) பிறகுதான் பாகிஸ்தானில் முழுமையான குடியாட்சி முறை நிலவும். அதுவரையில் பாகிஸ்தானுக்குக் கஷ்டகாலம்தான்!

அனைத்து அரசியல் குழுக்களும் ஒன்றுசேர்ந்து, ராணுவக் கலப்பு இல்லாத ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்காவிட்டால், பாகிஸ்தானுக்கு இந்த நூற்றாண்டில் விடிமோட்சம் கிடையாது.

Friday, July 13, 2007

ஒலிப்பதிவு: பிரதீபா பாடில் பற்றி அருன் ஷோரி, சோ

இன்று இந்தியன் லிபரல் குரூப் சார்பில் மைலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப் பள்ளியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் இரா.செழியன், அருன் ஷோரி, சோ ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

அந்தக் கூட்டத்தை முழுமையாகப் பதிவு செய்தாலும் அருன் ஷோரி, சோ ஆகியோரது பேச்சை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.

கேட்க:
அருன் ஷோரி (32.16 நிமிடங்கள்)
சோ ராமசாமி (20.55 நிமிடங்கள்)

கீழிறக்க:
அருன் ஷோரி | சோ ராமசாமி

Monday, July 09, 2007

கணினி, செல்பேசிகளில் இந்திய மொழிகள்

இன்று தமிழ் வலைப்பதிவுகளில் இயங்கும் நம் பலருக்கும் யூனிகோட் எழுத்துருக்கள் கொண்டு கணினியில் இந்திய மொழிகளைக் கையாளத் தெரிந்துள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் அந்தந்த மொழி பேசும் மக்கள் இதனைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.

சில செல்பேசிகளில் யூனிகோட் எழுத்துரு கிடைக்கிறது. அதைக்கொண்டு தமிழ், ஹிந்தி ஆகியவற்றில் குறுஞ்செய்திகளை அனுப்ப முடிகிறது.

ஆனால் இன்றும்கூட பல விஷயங்கள் ஒரு புது கணினி, செல்பேசி பயனருக்கு எளிமையானதாக இருப்பதில்லை.

பொதுவாக ஓர் இந்திய மொழியைப் பயன்படுத்த விரும்பும் பயனருக்கு என்னென்ன தேவைகள் இருக்கும் என்று பட்டியலிடலாம்:

கணினியில்:
  1. மின்னஞ்சல், இணையப் பக்கம் ஆகியவற்றில் உள்ள செய்திகளை, தங்கு தடையின்றிப் படிக்கவேண்டும்.
  2. ரோமன் கீபோர்டை வைத்துக்கொண்டு எந்த மொழியில் எழுத ஆசைப்படுகிறோமோ அந்த மொழியில் எழுதக்கூடிய திறன் வேண்டும்.
  3. இந்தியர்கள் பலருக்கும் ஆங்கிலம் மற்றும் தம் மொழியைத் தவிர்த்து வேறு ஒரு (சில) இந்திய மொழி(கள்) புரியக்கூடும். ஆனால் அந்த மொழியின் வரி வடிவம் தெரியாமல் இருக்கும். பலருக்கு தமது தாய்மொழியின் வரிவடிவமே தெரியாமல் இருக்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வரிவடிவம் ஆங்கில (ரோமன்) எழுத்துகளாக இருக்கும். இதற்கு ஏற்ற வகையில் ஒரு வரிவடிவை இன்னொரு வரிவடிவாக, ஆனால் அதே ஒலிவடிவாக இருக்குமாறு மாற்றுதல் - அதாவது transliteration - வரிவடிவ மாற்றம் தேவைப்படுகிறது.
  4. பிழையின்றித் தம் மொழியில் எழுத ஒரு spellchecker (சொல் பிழைதிருத்தி) வேண்டும். தவறான சொற்களை அடிக்கோடிட்டு, சரியான பதங்களைக் காண்பித்து, நம்மைத் தேர்ந்தெடுக்க வைக்கும் செயலி.
  5. இலக்கணத் திருத்தி (Grammar checking): சொற்களில் உள்ள பிழையைப் போலவே வாக்கியங்களில், வாக்கிய அமைப்பில் உள்ள பிழைகள், சந்திப்பிழை போன்றவற்றைத் திருத்தும் செயலி.
  6. அகராதி: ஆங்கிலத்திலிருந்து இந்திய மொழிக்கு, இந்திய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு, ஓர் இந்திய மொழியிலிருந்து மற்றோர் இந்திய மொழிக்கு முழுமையான ஆன்லைன் அகராதி(கள்), உச்சரிப்புக்கான உதவிகள், ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள் (thesaurus), படங்கள்...
  7. எழுத்திலிருந்து ஒலிக்கு... (Text-to-Speech): ஒலிப்பான்களை (Phonemes) துணையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் ஒரு வாக்கியத்தை கணினியால் படித்துச் சொல்லுமாறு மாற்றுதல். ஆங்கிலத்துக்கும் வெறு சில மேற்கத்திய மொழிகளுக்கும் இந்த வசதி உண்டு. இந்திய மொழிகளுக்கு இதனைச் செய்வது எளிதான ஒரு காரியம்தான். ஆனால் அனைவரும் உபயோகிக்கக்கூடிய செயலிகள் இல்லை.
  8. ஒலியிலிருந்து எழுத்துக்கு... (Speech recognition): IVR Systems (Interactive Voice Response Systems) போன்றவை நாம் பேசுவதைக் கொண்டு நமக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நமக்குத் தேவையானதைத் தரும். ஆங்கிலத்தில் இது செயல்முறையில் உள்ளது. இந்திய மொழிகளுக்கும் தேவைப்படுகிறது.
  9. Understanding diglossia: இந்திய மொழிகள் அனைத்துமே எழுத்து மொழி, பேச்சு மொழி என்று இரண்டாகப் பிரிகின்றன. பேச்சு மொழியிலும் பல வட்டார வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்ட வட்டார வழக்குச் சொற்களை இனங்கண்டு, அவற்றுக்குச் சமமான அகராதி வழக்கைக் கொண்டுவருதல். அதேபோல இலக்கண வழக்கில் எழுதப்பட்டதை வட்டார வழக்குக்கு மாற்றுதல்.
  10. மொழிமாற்றம்: ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாக்கியத்தை இந்திய மொழிகளுக்கு மாற்றுதல்; இந்திய மொழிகளில் எழுதப்பட்ட வாக்கியத்தை ஆங்கிலத்தில் மாற்றுதல்; ஓர் இந்திய மொழியிலிருந்து மற்றோர் இந்திய மொழிக்கு மாற்றுதல்.

செல்பேசியில்:

மேலே சொன்னவற்றில் பல சேவைகள் செல்பேசிகளிலும் தேவைப்படுகின்றன.

*

தன்னார்வலர்கள், கணினித்துறை ஆராய்ச்சியாளர்கள், கணினி மென்பொருள் நிறுவனங்கள் என அனைவரும் சேர்ந்து வேலை செய்தால்தான் மேலே குறிப்பிட்ட பல விஷயங்கள் நடைபெறும்.

உதாரணத்துக்கு இன்றும்கூட பலருக்கு கணினியில் 'உடையா எழுத்துகளில்' தமிழைப் படிப்பது எப்படி என்பது தெரியவில்லை. தமிழெல்லாம்கூடக் கணினிகளில் வருமா என்று கேட்பவர் பலர் இருக்கிறார்கள்.

அதேபோல 100 மில்லியனுக்கும் மேற்பட்ட செல்பேசிகளில் 1 மில்லியன் செல்பேசிகளில்கூட (1%) இந்திய மொழிகளில் எழுதமுடியாத நிலை. ஆனால் சீனாவிலோ சீன மொழி இடைமுகம் இல்லாவிட்டால் அந்த செல்பேசிகளை விற்கவே முடியாது.

நம் நாட்டில் அதைப்போன்ற சட்டம் இயற்றப்படப்போவதில்லை. எனவே இருக்கும் செல்பேசிகளில் யூனிகோட் எழுத்துகளில் படிக்க, எழுத வகைசெய்யக்கூடிய மென்பொருளை எழுதவேண்டும்.

*

என் நிறுவனம் வழியாக, லாப நோக்குள்ள வகையில், மேலே குறிப்பிட்ட சிலவற்றில் மென்பொருள் அல்லது இணையம் வழிச் சேவைகளை உருவாக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளோம். இவைபற்றி மேற்கொண்டு தகவல் அறிய விரும்புவோர் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

பொறியியல்/மருத்துவக் கல்வியின் விலை

கடந்த சில தினங்களாக சுயநிதி பொறியியல்/மருத்துவக் கல்லூரிகள் பற்றிய விவாதம் பாமக-திமுக கட்சிகளிடையே நடந்து வருகிறது.

சுயநிதி பொறியியல்/மருத்துவக் கல்லூரிகள் விதிமுறைகளுக்கு மாறாக மாணவர்களிடமிருந்து எக்கச்சக்கமான பணத்தை வசூல் செய்கின்றன; அவ்வாறு பெறும் பணத்துக்கு ரசீது கொடுப்பதில்லை என்பது அனுபவபூர்வமாக நம்மில் பலருக்குத் தெரிந்துள்ளது. என் உறவினர்கள், நண்பர்கள் குடும்பங்களில் பல மாணவர்கள் இதுபோன்ற கல்லூரிகளில் சேர்ந்து படித்துள்ளனர். பொறியியல் படிப்புகளுக்கு டொனேஷன் என்ற பெயரில் 1 லட்சம் முதல் 8 லட்சம் வரை வாங்கப்படுகிறது. மருத்துவப் படிப்புகளுக்கு 50 லட்சம் என்று பேசுகிறார்கள்.

புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் பொன்முடி கூறுகிறார். ஆனால் இந்த மாணவர்கள் யாருமே புகார் செய்யப்போவதில்லை. பணம் கேட்கிறார்களே என்று புலம்பினாலும் பணம் கொடுக்க இவர்கள் யாருமே தயங்குவதில்லை. அதாவது, இது விரும்பிக் கொடுக்கும் லஞ்சம். ஏனெனில் இந்தப் படிப்பு முக்கியம், இதற்கு எத்தனை பணம் ஆனாலும் பரவாயில்லை என்று இந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கருதுகிறார்கள்.

அதிகபட்சமாக 'ஸ்டிங் ஆபரேஷன்' மூலம் இந்தக் குற்றங்களை வெளிக்கொணர முடியும். மக்கள் தொலைக்காட்சி இதில் ஈடுபடலாம்.

இந்தியாவின் கல்விக்கொள்கை கறுப்புப்பணத்தை வரவேற்கும் விதமாகவே அமைந்துள்ளது. பொதுமக்களிடையே உயர்கல்விக்குப் பெருத்த ஆதரவு உள்ளது. ஆனால் அரசுக் கல்லூரிகளால் தேவையான இடங்களை உருவாக்க முடிவதில்லை.

தனியார் கல்வி நிறுவனங்கள் லாபநோக்கில்லாத அறக்கட்டளைகளாக அமையவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் லாபநோக்கில்லாமல் கல்வியைத் தரும் தன்மை ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாகவே முடிவடைந்துவிட்டது. எனவே, பெரும்பாலும் சட்டத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாத பொறுக்கிகள் மட்டுமே இப்பொழுது கல்வி நிலையங்களைத் தொடங்குகிறார்கள். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்.

இந்தத் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்துமே லாபத்தை எதிர்பார்த்து ஆரம்பிக்கப்படுகின்றன. ஆனால் சட்டம் அதற்கு இடம் கொடுக்காது என்னும் காரணத்தால் கறுப்புப் பணமாக, கணக்கில் காட்டாமல், கல்விக்கு முன்னுரிமை கொடுக்காமல் லட்சம் லட்சமாக வாங்குகிறார்கள்.

இதனை சட்டம் கொண்டுவந்து தடுக்கவே முடியாது. கொடுக்க விரும்புபவர்களும் வாங்க விரும்புபவர்களும் இருக்கும்வரை இது நிற்காது.

ஆனால் வேறு ஒன்றைச் செய்யலாம். இன்றுள்ள சுயநிதி தொழிற்கல்வி நிலையங்களைப் பொருத்தமட்டில் என்ன பிரச்னை என்று ஆராயலாம்.

* சட்டப்படி லாபம் சம்பாதிக்கமுடியாது என்னும் நிலையில் லாபத்தை விரும்பும், ஆனால் நியாயமான கம்பெனிகள் இந்தத் துறையில் ஈடுபடமுடியாது.
* சட்டபூர்வமாக கல்வி நிறுவனங்களை விற்பது, வாங்குவது, லாபம் அடைவது எளிதல்ல.
* பங்குச்சந்தையை அணுகி வேண்டிய பணத்தை முதலீடாகப் பெற்று நிறுவனத்தை விரிவாக்க முடியாது. பணம் வேண்டுமென்றால் கடன்களை மட்டுமே பெற முடியும்.

இந்தக் காரணங்களால் சட்டத்துக்குப் புறம்பாகவே அனைத்து விஷயங்களும் நடைபெறுகின்றன.

எனவே சட்டங்களை முற்றிலுமாக மாற்றி கல்வியில் லாபநோக்குள்ள நிறுவனங்கள் ஈடுபடலாம் என்று சொல்லிவிடலாம்.

நம்முடைய அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் ஆகிய அனைத்துமே இன்று லாபநோக்குள்ள நிறுவனங்களால்தான் நடத்தப்படுகின்றன. தேவைப்படும்போது அரசு தனது பங்களிப்பைச் செய்கிறது. ஆனால் கல்வி என்று சொன்னால் உடனே அங்கு லாபநோக்கம் இருக்கக்கூடாது என்று பலரிடம் 'ஒருமித்த' கருத்து உள்ளது.

லாபநோக்கு நிறுவனங்கள் கல்வித்துறையில் ஈடுபடலாம் என்றால் என்ன ஆகும்?

1. Greater transparency. நிறைய முதலீட்டுடன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் கல்வியில் ஈடுபடும். இவை தகவல்களை வெளிப்படையாக அளிக்கவேண்டும். இன்றைய கல்வி நிறுவனங்கள் தகவல்களை வெளிப்படையாக அளிப்பதில்லை.

2. Regulated fee. அரசு கட்டணம் இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக மொபைல் ஃபோன் கட்டணங்கள் போன்று இதிலிருந்து இதற்குள் இருக்கலாம் என்று தீர்மானம் செய்யலாம். ஒவ்வொரு நிறுவனமும் தனது விருப்பத்துக்கு ஏற்ப கட்டணத்தைத் தீர்மானம் செய்து, அந்தக் கட்டணத்தை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். அப்பொழுது மாணவர்கள் தாம் எவ்வளவு கட்டணம் செலுத்தவேண்டும் என்பதை நன்கு அறிந்துகொண்டு அதற்கு ஏற்ப வேண்டிய நிறுவனத்தில் சேர்ந்துகொள்வர்.

3. Stiff penalties. மாணவர்களை ஏமாற்றுதல், அரசின் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தவறான தகவலை அளித்தல் போன்ற குற்றங்களுக்கு பல கோடி ரூபாய் அபராதமாக விதிக்கலாம்.

4. License fee & taxes. லாப நோக்குள்ள நிறுவனம் என்பதால் இவற்றிடமிருந்து உரிமக் கட்டணம் என்று பெரும் தொகையையும், ஆண்டு லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை வரியாகவும் வசூலிக்கலாம். இந்த வருமானத்தை அரசு அடிப்படைக் கல்விக்குச் செலவழிக்கலாம்.

5. Better loans. வெளிப்படையான கட்டணம் என்பதால் உண்மையாக கல்விக்கு எவ்வளவு செலவாகும் என்று கல்வி நிறுவனத்துக்கும் மாணவர்களுக்கும் தெரியும். எனவே கல்வி நிறுவனமே சில வங்குகளுடன் உறவு ஏற்படுத்தி தேவையான கல்விக்கட்டணத்தைக் கடனாகப் பெற்றுத்தரலாம். இப்பொழுது 8 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கவேண்டும் என்று கேட்டால் எந்த வங்கியும் கடன் கொடுக்காது!

6. Better companies. இப்பொழுதுள்ள அரசியல் தாதாக்களுக்கு பதிலாக நியாயவான்கள் பலர் கல்வித்துறைக்கு வரலாம். இது மிகவும் நல்லதாகப் பீக வாய்ப்புள்ளது.

7. Increased capacity. பங்குச்சந்தைமூலம் பணம் திரட்ட வாய்ப்புள்ளதால் மிகப்பெரிய அளவுக்கு இடங்களை அதிகரிக்க முடியும். இதனால் demand-supply கொள்கைப்படி, தானாகவே கட்டணம் குறையும். வேண்டியவர்கள் வேண்டிய படிப்பைப் பெறமுடியும். ஏழைகளுக்கும் எஞ்சினியரிங் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

எவ்வளவு விரைவில் கல்வியை லாபநோக்குள்ளதாக மாற்றமுடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாட்டுக்கு நல்லது நடக்கும். அதுவரை கறுப்புப் பணமுதலைகள் வாழ்வில் கொண்டாட்டம்தான்.