தொழில்புரட்சியை அடுத்து உருவான கம்யூனிசச் சிந்தனை, தொழிலாளர் என்பவர் பொதுவாக ஒரு தொழிற்சாலையில் (Factory) வேலை செய்பவர் என்றும் கச்சாப் பொருளுக்கும் உற்பத்தியாகும் இறுதிப் பொருளுக்கும் இடைப்பட்ட மதிப்புக் கூடுதலைக் கொடுப்பது அந்தத் தொழிலாளரின் உழைப்பு மட்டுமே என்றும் இந்த உழைப்பை உறிஞ்சிக் கொழுப்பது மூலதனத்தைக் கொண்டுவந்த முதலாளி(கள்) என்றும் சொன்னது.
தொழில்புரட்சிதான் இயந்திரமயமாக்கலைக் கொண்டுவந்தது. எந்த ஒரு பிரச்னை அல்லது தேவைக்கும் ஓர் இயந்திரம் அல்லது ஒரு நுகர்பொருள் தீர்வாகும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டது. அழுக்கான துணிகளைக் கைவலிக்கத் தோய்ப்பது பிரச்னை. அதைத் தீர்க்க உருவாக்கப்படுவது தோய்க்கும் இயந்திரம் (Washing Mechine). நாவிதர் துணையின்றி சவரம் செய்துகொள்வது தேவை. அந்தத் தேவையைத் தீர்த்துவைப்பது தூக்கியெறியக்கூடிய சவரக்கத்தி (Disposable Razor). காலையில் சமைக்காமல் சாப்பிட ஏதுவான பலகாரம் - தேவை. பாக்கெட்டில் அடைத்த தானிய உணவு (Cereals), தீர்வு.
பிரச்னைக்குத் தீர்வு என்ன என்று தோன்றியதுமே அடுத்து அதனைப் பெருமளவு உற்பத்தி செய்ய (Mass Production), தொழிற்சாலை வேண்டியிருந்தது. உற்பத்தி செய்த பொருள்களை மக்களுக்குக் கொண்டுசெல்ல விநியோக முறை, விளம்பர உத்திகள் ஆகியவை தேவைப்பட்டன. பெரு நிறுவனங்கள் (Corporations) உருவாயின. இவற்றை நடத்தத் தேவையான மூலதனத்தை - பங்கு மூலதனமாகவும் கடன்களாகவும் - வழங்க நிதி நிறுவனங்கள் உருவாயின.
இந்தச் சூழ்நிலையில், உற்பத்தியின் முக்கியமான அங்கமான தொழிலாளர்கள், எண்ணிக்கையில் அதிகமாக இருந்தபோதிலும்கூட, முக்கியத்துவத்தில் பெரிதும் கீழே சென்றனர். அதிகமான வேலை நேரம் (நாளுக்கு 8 மணிநேரத்துக்கு மேல்), மோசமான பணியிடச் சூழல், உயிருக்கே ஆபத்தான வேலைகள், விடுமுறை என்பதே இல்லாத சூழல், காப்பீடு இல்லாத நிலை, எப்பொழுது வேண்டுமானாலும், எந்த இழப்பீடும் தரப்படாமல் வேலை போகலாம் என்ற நிலை, சம்பளம் குறைக்கப்படலாம் என்ற சூழல், தொழிலாளர் நலச் சட்டதிட்டங்கள் என்று ஏதும் இல்லாமை, அரசும் காவலர்களும் முதலாளிகளுக்கு ஆதரவாக மட்டுமே இருத்தல் - போன்றவற்றால் தொழிலாளர் நிலை மோசமாக பாதிக்கப்பட்டது.
1860களுக்குப் பிறகு அமெரிக்காவில் தடவண்டிப் பாதைகளை அமைத்தவர்கள், கச்சா எண்ணெய் தோண்டியவர்கள், இரும்பு-எஃகு நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் என்று அனைவருமே இப்படியான சூழலில்தான் வேலைசெய்தனர். ஒருநாள் கூட ஓய்வு இன்றி, (ஞாயிறு கூட ஓய்வு கிடையாது!) நாளுக்கு 12-14 மணிநேரமெல்லாம் வேலை செய்துள்ளனர். கார்னெகியின் இரும்புக் கம்பெனிகளில் லாபம் கொழிக்கும்போதுகூட தொழிலாளர்களின் சம்பளம் குறைந்துகொண்டே வந்துள்ளது.
இரும்பு, சிமெண்ட், ரசாயனத் தொழிற்சாலைகளில் பல வேதிப் பொருள்களும் உடலில் படுவதால், சுவாசிக்கப்படுவதால் உடல்நலம் குன்றி இறந்த தொழிலாளர்கள் எத்தனையோ பேர்.
தொழிலாளர்கள் சங்கம் (Union) அமைத்து, ஒன்றுகூடி, பல விஷயங்களுக்காகப் போராடவேண்டியிருந்தது.
- எட்டு மணிநேர வேலை நாள்
- வார விடுமுறை
- உடல்நலக் குறைவு விடுமுறை, பண்டிகை விடுமுறைகள், பிற விடுமுறை
- விடுமுறை நாள்களுக்கும் சம்பளம்
- குறைந்தபட்ச சம்பளம்
- தொழிலாளர் சங்கம் அமைக்கும் உரிமை
- பணியிடங்களில் வசதிகளை ஏற்படுத்தித் தருதல்
- தொழிலாளர் சங்கம் மூலம் சம்பளப் பேச்சுவார்த்தை (Collective negotiation)
- லாபத்தில் பங்கு (Bonus)
- வேலைக்கான இலக்கு (Target)
- பணியிடத்தில் நிர்வாகத்தால் கண்ணியத்துடன் நடத்தப்படுதல்
- ஓவர்டைம் நேரத்தில் அதிகச் சம்பளம்
- ஓய்வூதியம்
- தம் எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டால் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை
- பிற வசதிகள்
இவை அனைத்தும் ஒரே நாளில் கேட்கப்படவில்லை. ஒரே நாளில் கிடைக்கவுமில்லை. போராடிப் போராடித்தான் இதில் பல விஷயங்கள் இன்று சர்வதேச, இந்தியத் தொழிலாளர்களுக்குக் கிடைத்துள்ளன. இதற்குமேலும் தேவைகள் உள்ளன. ஆனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பலவுமே இன்று தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை.
இன்று தொழிற்சாலை என்பதைத் தாண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் என்பதிலிருந்து பணியாளர் என்ற நிலை. அரசு அலுவலகங்களில், தனியார் சேவை அலுவலகங்களில், கடைகளில், உணவகங்களில் என்று எங்கு பார்த்தாலும் பணியாளர்கள்.
இதில் அரசு நடத்தும் பொதுத்துறை நிறுவனங்களைத் தவிர்த்த பிற அரசு அலுவலகங்களுக்கு லாபம் என்ற நோக்கு கிடையாது. பொதுத்துறை நிறுவனங்கள் முற்றிலும் லாப நோக்கு உடையன அல்ல. ஆனால் அனைத்து தனியார் நிறுவனங்களும் லாப நோக்குடன் மட்டுமே நடத்தப்படுகின்றன.
தனியார் நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் நான்கு தனிப்பட்ட பங்காளிகள் உள்ளனர். முதலீட்டாளர்கள், மேல்மட்ட நிர்வாகிகள், பிற பணியாளர்கள், வாடிக்கையாளர்கள். இவர்கள் அனைவரது நோக்கங்களும் ஒரே கோணத்தில் இருப்பதில்லை. வாடிக்கையாளர் குறைந்த விலையில் சிறந்த சேவையை/பொருளை நாடுகிறார். ஆனால் இது முதலீட்டாளர்களது லாபத்தைப் பாதிக்கும். நிர்வாகிகள் முடிந்தவரை தங்களுக்கு நல்ல சம்பளமும் நிறுவனத்தை மேம்படுத்த நிறையப் பணமும் தேவை என்று எதிர்பார்ப்பார்கள். இதுவும் முதலீட்டாளர்களின் லாபத்தைப் பாதிக்கும். லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு பணியாளர்களுக்குக் குறைந்த சம்பளத்தையும் மோசமான பணியிடத்தையும் தந்தால் அது பொருளை/சேவையைப் பாதிக்கும். வாடிக்கையாளர் மனம் கோணுவார். வருமானம் குறையும்.
ஆனால் இந்த நான்கு பங்காளிகளுக்குள் எப்பொழுதுமே அதிகம் பாதிக்கப்படுவது பணியாளர்கள்தாம். தங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் வாடிக்கையாளர்கள் வேறு பொருளை/சேவையை நாடிப் போய்விடுவார்கள். மேல்மட்ட நிர்வாகிகள் பொதுவாகவே அதிகச் சம்பளம் வாங்குபவர்கள். இரண்டு மாதங்கள் விடுப்பில் போய் வேறு வேலைக்குச் சேர்ந்துவிடுவார்கள். சில தொழில்முனைவோரை விடுத்து, பொதுவாக முதலீட்டாளர்கள் கையில் நிறைய பசையுள்ளவர்கள்தாம். அதனால் நிறுவனத்தை இழுத்துமூடிவிட்டு வேறு வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள்.
ஊடகங்கள் - கம்யூனிச சார்பு ஊடகங்கள் தவிர்த்து - பொதுவாகவே பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதை மோசமான முறையில் காட்டுவார்கள்.
ஒரு நிறுவனம் இழுத்துமூடப்படுகிறது என்றால் அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது பணியாளர்கள் மட்டுமே. எனவே அதை உணர்ந்து வேலை நிறுத்தம்வரை பணியாளர்கள் செல்கிறார்கள் என்றால் அதற்கான காரணம் வலுவாகத்தான் இருக்கும்.
மொத்தத்தில் பணியாளர் நிலை உயரவேண்டும் என்றால் அவர்கள் முதலாளிகளாக ஆனால் மட்டுமே இது ஏற்படும். அதற்கு ஒவ்வொரு லாப நோக்குள்ள நிறுவனத்திலும் கீழ்நிலைப் பணியாளர்கள் ஒன்றுசேர்ந்து 10% பங்குகளையாவது வைத்திருக்கவேண்டும். ஸ்டாக் ஆப்ஷன் முறை எல்லா நிறுவனங்களிலும் கட்டாயமாக்கப்படவேண்டும். மேலும் பணியாளர் பிரதிநிதி ஒருவராவது நிறுவனத்தின் போர்டில் (Board Of Directors) இயக்குனராக இருக்கவேண்டும்.
அப்பொழுதுதான் நிறுவனத்தின் லாபம், டிவிடெண்ட், மேல்மட்ட நிர்வாகிகளின் சம்பளம், அடிமட்டத் தொழிலாளியின் சம்பளம், பணியிட வசதிகள், வேலை நேரம், விடுமுறை, போனஸ் போன்ற பலவற்றிலும் பணியாளர்களது கருத்தும் கேட்கப்படும்.
கம்பெனியாக நிர்வகிக்கப்படும் நிறுவனங்களில் இது சாத்தியமானது. ஆனால் சிறு நிறுவனங்கள், கம்பெனியாக நிறுவப்படாத நிறுவனங்கள், புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள் ஆகியவற்றில் இதனைச் செய்வது கடினமாக இருக்கலாம்.
இருந்தும், பெரும் நிறுவனங்களிலாவது 10% பங்குகள் பணியாளர்களுக்கான அறக்கட்டளையில் இருப்பது அவசியம் என்றே நினைக்கிறேன்.
தொழிலாளர் நலச்சட்டங்கள் வலுவூட்டப்படவேண்டுமே அன்றி, நீர்த்துபோகச் செய்தல் கூடாது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் செல்லுபடியாகாது என்ற நிலை இதனாலேயே முற்றிலுமாக எதிர்க்கப்படவேண்டும். இந்த ஒரு காரணத்தாலேயே சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்க்க வேண்டும்.