Thursday, November 25, 2010

நிதீஷ் குமாருக்கு மீண்டும் வாழ்த்துகள்

கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் மிக அதிகமான அளவில் வளர்ச்சி நடந்திருந்தது என்றால் அது பிகார்தான்.

அதன் காரணமாகவே, மைக்கைப் பிடித்து அடித்து அசத்திப் பேசத் தெரியாத நிதீஷ் குமார் + பாஜக கூட்டணி அபார அளவில் வெற்றிபெற்று பிகாரில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

வெற்றிக்குக் காரணமாக அனைவரும் சொல்வது: சட்டம் ஒழுங்கை நேர்ப்படுத்தினார்; சாலைகளைப் போட்டார்; ஊழலை முடிந்தவரை கட்டுப்படுத்தினார்; கல்விக்கான வாய்ப்புகள் அதிகப்படுத்தப்பட்டது.

சரியாக, ஐந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுதிய பதிவு

இரண்டு தேர்தல்களுக்குமுன் நடந்த தேர்தலில் லாலு பிரசாத்தின் கூட்டணிக்கு சரியாக மேண்டேட் கிடைக்கவில்லை. நிதீஷ் ஒரு கூட்டணியை உருவாக்கிக்கொண்டு ஆட்சியை அமைத்தார். ஆனால் காங்கிரஸ் தன் டகால்டி வேலைகளைச் செய்து மாஸ்கோவில் இருக்கும் அன்றைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் கையெழுத்து வாங்கி அந்த ஆட்சியைக் கலைத்தது. தொடர்ந்து நடந்த தேர்தலில் நிதீஷ் குமார் + பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கமுடிந்தது.

நிதீஷுக்கும் பாஜகவினருக்கும் உரசல்கள் இருந்தாலும், ஆட்சி நடத்துவதில் சிக்கல் ஏதும் இல்லை.

ஆனால் ஒன்றுமே இல்லாத இடத்தில் சில முன்னேற்றங்களைக் காட்டுவது எளிது. வரும் ஐந்தாண்டுகளில் நிதீஷ் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் சவாலே. இந்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட தென் மாநிலங்கள் அளவுக்கு வளர்ச்சியைக் காண்பிக்கவேண்டி இருக்கும். அதற்குத் தேவையான மனித வளம் அவர்களிடம் இல்லை. இந்தியாவில் பல மாநிலங்களில் பரவியிருக்கும் பிகாரிகள் அனைவரும் அந்த மாநிலத்துக்குச் சென்றால்கூட இது மிகவும் கடினமானது.

பார்ப்போம், என்ன செய்கிறார்கள் என்று.

***

காங்கிரஸ் படுபயங்கரமாக அடிவாங்கியதும் ஒருவிதத்தில் நல்லதே. நிதீஷ் குமாரின் யோசனையைக் கேட்டு ராகுல் காந்தி ஒன்று செய்யவேண்டும். பேசாமல் உத்தரப் பிரதேசத்துக்குச் சென்று, அடுத்த மாநிலத் தேர்தலில் தன்னை முதலமைச்சர் பதவிக்கு முன்வைத்து பிரசாரத்தை ஆரம்பிக்கவேண்டும். ஒருவேளை அவரும் காங்கிரஸும் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து ஐந்தாண்டுகள் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலத்தை ஆட்சி செய்து, பிரச்னைகளைச் சமாளித்து, வளர்ச்சியைக் கொண்டுவந்தால், இந்தியப் பிரதமராக அவரை நினைத்துப்பார்ப்பதில் பெரும்பாலானோருக்கு சிக்கல் இருக்காது.

***

ஆந்திராவுக்கு அற்புதமான முதல்வர் கிடைத்துள்ளார். இன்று தொலைக்காட்சியைப் பார்க்கும்போது எல்லாக் கேள்விகளுக்கும் ‘மேலிடத்துடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பேன்’ என்று காங்கிரஸ் முதல்வர்களிடம் எதிர்பார்க்கப்படும் பதிலை அழகாகச் சொன்னார்.

அவரது பெயர் - மற்றுமொரு ரெட்டி. கிரன் குமார் ரெட்டி. துணை முதல்வராக கீதா ரெட்டி என்று ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிறார்கள். ராயலசீமா ரெட்டி முதல்வர், தெலுங்கானா ரெட்டி துணை முதல்வர். பழைய ரெட்டியின் கோபம்கொண்ட மகன் ரெட்டி, பிரதான வில்லன். இதுதாண்டா ரத்த சரித்திரம்!

***

யெட்டியூரப்பா நகரில் இன்று ஒருநாள் இருக்கிறேன். அவருக்கு வெட்கம் சுத்தமாக இல்லை என்பது மட்டுமல்ல; நிறைய chutzpah-வும் உள்ளது. (தமிழில் என்ன சொல்லலாம்? தில்லு?!) ஊழலை எதிர்க்கட்சிகள்மீதே திருப்பிவிடுகிறேன் என்கிறார். அப்படியென்றால் என்ன என்று புரியவில்லை. இப்போது நடந்துகொண்டிருப்பது, கர்நாடகத்துக்கு நல்லதல்ல.

***

அடுத்த உ.பி தேர்தல்(கள்) இரண்டுமே ருசிகரமானவை. ஒன்று உத்தரப் பிரதேசத் தேர்தல். மற்றொன்று உடன் பிறப்பு(கள்) தேர்தல். தமிழக உடன் பிறப்புகள், உடன் பிறவாச் சகோதரிகள் என இன்னும் நான்கு மாதத்தில் படு குழப்பமான நிலையை தமிழகம் அடையப்போகிறது. திமுக விரைவாக உள்கட்சிப் பிரச்னையை முடித்தாகவேண்டும். ஆனால், மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்தச் சிக்கலுக்குத் தீர்வே இல்லை என்று தோன்றுகிறது. ஸ்டாலின் - அழகிரி - கனிமொழி - மாறன்(சன் டிவி) - கருணாநிதி என்ற இந்த ஈக்வேஷன் எப்படி செட்டில் ஆகும்? யார் யாரைத் துரத்தப் போகிறார்கள்?

யாதவர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள்.

Saturday, November 20, 2010

காங்கிரஸ் - திமுக கூட்டணி

நீரா ராடியா “ஒலிப்பதிவுகள்” மூலம் கிடைக்கும் காங்கிரஸ்-திமுக கூட்டணி dynamics, தெரிந்துகொள்ள சுவாரஸ்யமாக உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் துறைகளைப் பிரித்துக்கொள்வதில் பெரிதாக சீன் போட்டு அடித்துப் பிடித்து இடங்களை வாங்கியது திமுக. சரத் பவாரோ மமதா பானர்ஜியோ இந்த அளவுக்குச் சண்டை போடவில்லை.

திமுக இடங்கள் வாங்கியதில் என்னவெல்லாம் குழப்படிகள் இருந்தன என்பது அப்போதே யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், இப்போது சம்பந்தப்பட்டவர்களின் பேச்சுகள் இதனை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன.

1. டி.ஆர். பாலுவுக்கு எந்த அமைச்சர் பதவியையும் தருவதில் காங்கிரஸ் கட்சிக்கு விருப்பம் இல்லை. (ஏன் என்ற கேள்வி எழுகிறது.)

2. தயாநிதி மாறன், தான்தான் திமுகவின் முக்கியமான ஆள் என்று காங்கிரஸிடம் தன்னை அற்புதமாக புரமோட் செய்துள்ளார் என்றும் அதனை காங்கிரஸ் தலைமை (சோனியா, ராகுல், அகமத் படேல், பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத், மன்மோகன் சிங்?) ஆரம்பத்தில் நம்பியிருக்கிறது என்றும் தெரிகிறது.

3. கனிமொழிதான் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய ஒரே interlocutor என்று புரிகிறது. ஆனால் கனிமொழி ஏதோ காரணத்தால் தன்னை முழுவதுமாக assert செய்யவில்லை என்றும் புரிகிறது. கனிமொழியின் negotiation skills மீது கருணாநிதிக்கோ கட்சிக்கோ நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம்.

4. ஆ.இராசாவுக்கு நிச்சயம் ஏதோ மந்திரி பதவி (ஏனெனில் தலித்...) என்பது முடிவாகியுள்ளது. ஆனால் தொலைத்தொடர்பு கொடுக்கப்படவேண்டுமா, கூடாதா என்பதில் அரசியல்வாதிகளுக்கு மட்டுமின்றி, சுனில் பார்த்தி மிட்டல், ரத்தன் டாடா, அனில் அம்பானி முதல் பலருக்கு முக்கியமான கருத்துகள் இருந்துள்ளன. சிலருக்கு இராசா வேண்டும்; அப்போதுதான் தாங்கள் விரும்பியதைச் சாதிக்கலாம். சிலருக்கு இராசா கூடாது!

5. மாறனுக்கு கேபினட் என்றால் தனக்கும் கேபினட் அந்தஸ்து என்று அழகிரி அழும்பு பிடித்துள்ளார்.

6. அழகிரி ஒரு ரவுடி, ஆங்கிலம் பேசத் தெரியாதவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்று தயாநிதி மாறன் காங்கிரஸ் மேலிடத்தில் சொல்லியுள்ளார்.

7. கருணாநிதிக்குப் பிறகு கட்சி ஸ்டாலின் கைக்கு வரும்; ஸ்டாலினை நான்தான் கண்ட்ரோல் செய்வேன் என்று தயாநிதி மாறன் தில்லியில் பலரையும் நம்ப வைத்துள்ளார் என்றும் புரிகிறது.

8. அமைச்சர் பதவிகள் கேட்டு அதில் தன் உறவினர்கள் மூன்று பேரை உள்ளே நுழைப்பது அறச் செயலாக இருக்காது என்று கருணாநிதி உணர்ந்து, கடைசியில் கனிமொழிக்கு வேண்டாம் என்று முடிவாகியுள்ளது.

9. தயாநிதி மாறன் கருணாநிதியிடம், தான் கட்டாயமாக கேபினட் மினிஸ்டர் ஆக்கப்படவேண்டும் என்று அகமது படேலே (சோனியா காந்தியே) விரும்புகிறார் என்பதாகக் கதை கட்டி இருக்கிறார் என்றும் தெரிகிறது.

10. கருணாநிதி நேரடியாக காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தால், இந்தப் பிரச்னைகள் பல இருந்திரா என்று தோன்றுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு, வேறு யாரையும் அழைத்துக்கொள்ளாமல், கருணாநிதி தன் மகள் கனிமொழியுடன் மட்டும் சென்றிருக்கலாம்.

11. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை மத்திய மந்திரி போனில் கூப்பிட்டு மிரட்டினார் என்ற செய்தி வெளியானபோது, அவசர அவசரமாக, அந்த மிரட்டல் மந்திரி இராசாதான் என்று பலரையும் நம்ப வைத்து வதந்தி பரப்பியவர் தயாநிதி மாறன் என்று தெரியவருகிறது. (ஜெயலலிதாவும் அதையேதான் சொன்னார் என்பது வேறு விஷயம்.)

***

இந்தத் தகவல்கள் எல்லாம் நமக்கு இப்போதுதான் தெரிய வருகின்றன. ஆனால் நிச்சயம் இவையெல்லாம் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் கனிமொழிக்கும் தெரியாமல் இருந்திருக்காது. இப்போது உலகுக்கே தெரிந்துவிட்டதால், ஏதேனும் புது மாற்றங்கள் நிகழுமா?

Monday, November 15, 2010

நட்புலகம்

நண்பர் அன்புச் செழியனை சில ஆண்டுகளாகவே அறிவேன். சிங்கப்பூரில் வேலை பார்த்துவந்தார். சிறுவர்களுக்காக ஒரு நூலகம் அமைக்கவேண்டும் என்பது பற்றி அவரது திட்டங்களை அவ்வப்போது எனக்கு மின்னஞ்சலில் எழுதுவார். விரைவில் இந்தியாவில் தன் வீட்டைக் கட்டும்போது அதில் ஒரு பகுதி சிறுவர்கள் பயன்பாட்டுக்கென நூலகமாக இருக்கும் என்று சொல்லியிருந்தார். சிங்கப்பூரில் வசித்துவந்த காரணத்தால், அங்கு பல இடங்களைப் பார்த்துப் பழகிய காரணத்தால், என்ன மாதிரியான இடமாக அது இருக்கவேண்டும் என்பது பற்றி அவருக்கு பல உயர்ந்த அபிப்ராயங்கள் இருந்தன.

அது வெறும் புத்தகங்கள் மட்டும் இருந்த நூலகமாக இருந்துவிடக்கூடாது என்பது அவர் விருப்பம். படிக்கப் புத்தகங்கள், பார்க்க சிறுவர் படங்கள், வீடியோக்கள், விளையாடப் பொம்மைகள், இணைய வசதிகொண்ட கணினிகள், புதிர்கள், சிக்கல்கள், கூடி விளையாட ஓரிடம், ஒருவேளை கதைகள் கேட்க, தரையில் உட்கார்ந்து தாளில் கிறுக்க... என முழுமையாக குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருக்க ஓரிடமாக அது இருக்கவேண்டும் என்று விரும்பினார்.

அப்படி அவர் உருவாக்கியிருப்பதுதான் மேடவாக்கத்தில் அவரது வீட்டின் தரைத்தளத்திலும் இரண்டாம் மாடியிலும் உள்ள நட்புலகம் (ஆங்கிலத்தில் BuddiesWorld). அனைத்து அறைகளுக்கும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. மினி தியேட்டர் உள்ள அறையில் சுமார் 20 குழந்தைகள் உட்கார குஷன் வைத்த படிகள் உள்ளன. எல்லா அறைகளுக்கும் இதமான வண்ணம் பூசப்பட்டு, குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நேற்று அதன் திறப்பு விழாவுக்காக நான் சென்றிருந்தேன். அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி கணினித்துறை உதவிப் பேராசிரியர் மதன் கார்க்கி, அவரது மனைவி, குழந்தையுடன் வந்து, ரிப்பன் கத்திரித்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் மேடவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ப.ரவி, திமுக மாணவர் அணி மாநிலச் செயலாளர் இள.புகழேந்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சம்பிரதாயமான பேச்சுகள் இருந்தன. நான் பேசும்போது, குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்லி (பாட்டி - வடை - காக்கா), கதை கேட்பதை (அல்லது பார்ப்பதை)விட, கதை படிப்பதில் மேலதிகச் சாத்தியக்கூறுகள் என்னென்ன உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினேன். குழந்தைகள் ஆர்வமாகக் கேட்டாற்போல எனக்குத் தோன்றியது.

அந்தப் பகுதியில் உள்ள பல குழந்தைகளும் தங்கள் வீட்டில் இதுபோன்ற வசதிகளைச் செய்துகொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள் என்று நான் யூகிக்கிறேன். மத்திய வகுப்பினர் பலராலேயே இது சாத்தியப்படாதது. அந்நிலையில் இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்த பல பேற்றோர்களும் கொஞ்சம் பணம் செலவழிக்க முன்வரவேண்டும். இணையம், புத்தகங்கள் ஆகியவை உயர் நடுத்தர வகுப்பினருக்கு மட்டுமே என்ற நிலை இருக்கக்கூடாது.

அன்பு உருவாக்கியுள்ள இந்தத் திட்டம் அவருக்கு லாபகரமானதாக இருக்கவும் சுற்றுப்புற குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பை அளிப்பதாக இருக்கவும் வாழ்த்துகிறேன். குழந்தைகள் தினத்தன்று தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சி பெரும் வெற்றியை எட்டட்டும்.






முகவரி:

நட்புலகம், கம்பர் தெரு, இரண்டாவது பிரதான சாலை, விஜயநகரம், மேடவாக்கம், சென்னை 600100
போன்: 91764-04391
மின்னஞ்சல்: bwchennai@gmail.com
இணையம்: http://www.buddiesworld.net/

Saturday, November 13, 2010

இராசா நல்ல உரோசா

தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.இராசா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் இவை.

1. விலை மதிப்பற்ற 2ஜி அலைக்கற்றையை, ஸ்பெக்ட்ரத்தை, ஏல முறை இல்லாமல் வரிசையில் வந்து, மெகாஹெர்ட்ஸுக்கு இத்தனை காசு என்று கொடுத்து வாங்கிச் செல்லலாம் என்று சொன்னார். இதனை நிதி அமைச்சகமும் சட்ட அமைச்சகமும் எதிர்த்தன. ஆனாலும் இப்படித்தான் செய்வேன் என்று திட்டவட்டமாகச் செய்தார். (இப்போது துறைச் செயலர் ஒருவரும் இதனை ஏற்க மறுத்ததாகச் செய்தி வந்துள்ளது.)

2. அத்துடன், இறுதி தினம் எதுவோ அதற்குச் சில நாள்கள் முன்னதாகவே ஸ்பெக்ட்ரம் விற்பனையை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.

3. (1)-ல் சொல்லப்பட்ட காரணத்தால் கணக்கர்கள் கணிப்பில், இந்தியாவுக்கு ஏற்பட்ட நஷ்டம் 1,75,000 கோடி ரூபாய். (2)-ல் சொல்லப்பட்டதை வைத்துப் பார்க்கும்போது, வேண்டுமென்றே சிலருக்குச் சாதகம் செய்ய, பிறருக்குப் பாதகம் செய்ய, முன்கூட்டியே தகவலைச் சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு, தேதியையும் முன்தள்ளி வைத்துவிட்டார்.

4. இதன்படி, ஒருசில கம்பெனிகள் சட்டுப்புட்டென்று காசு கொடுத்து ஸ்பெக்ட்ரம் வாங்கிவிட, அதே நிறுவனங்களில் அந்நிய நிறுவனங்கள் ஏகப்பட்ட பணத்தைச் செலுத்தி பங்குகளை வாங்கியுள்ளன. இதிலிருந்தே ஊழல் நடந்துள்ளது என்று தெரியவில்லையா?

அடுத்து என் நண்பர்களான சில அனானிமஸ்களும் மற்ற நான்-அனானிமஸ்களும் விளையாட்டாகவும் விளையாடாமலும், நான் ஆ.இராசாவுக்கு ‘ஜிஞ்சா’ அடிப்பது, என் பதிப்பக நிறுவனம் நூலக ஆணைகளைப் பெறுவதற்கே என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இதை ஒரு பொருட்டாக மதித்து பதில் சொல்வதே அபத்தம். என்றாலும், நீங்கள் என் வலைப்பதிவை மிக அதிகமாக மதிப்பீடு செய்கிறீர்கள் என்றே சொல்வேன். என்னவோ இதில் வருவதைப் பார்த்துத்தான் தமிழக அமைச்சர்கள் தங்கள் கொள்கை முடிவுகளை எடுப்பார்கள் என்பதாக நீங்கள் நினைப்பது ஆச்சரியம்தான். ஒவ்வொருமுறை நான் கருணாநிதியைத் திட்டும்போதும் கிழக்கு பதிப்பக நூலக ஆர்டர் அடிவாங்குகிறது; புகழும்போதும் நூலக ஆணை தூக்கலாக உள்ளது. சபாஷ்! உள்நோக்கம் கற்பிப்பதுதான் என்றால் ஏன் இன்னமும் கற்பனை கலந்து அடிக்கக்கூடாது? ஆ.இராசா எனக்கு 10 கோடி ரூபாய் கொடுத்து, என் சார்பில் நீ பி.ஆர்.ஓ வேலைகளைச் செய் என்று சொல்லியிருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோமே?

அடுத்து, விஷயத்துக்கு வருவோம்.

ஆ.இராசா ஊழல் செய்யவில்லை என்று நான் அடித்துச் சொல்லவில்லை. ஆனால் அவர் ஊழல் செய்துள்ளார் என்பதற்கு எந்தவிதத்திலும் தெளிவான சாட்சியம் இப்போதைக்கு இல்லை என்றுதான் சொல்கிறேன். நம் மக்கள் எப்படி அபத்தமாக இதைப் புரிந்துகொள்கின்றனர் என்பதற்கு சில மாதிரிகளைப் பார்ப்போம்.

இந்திய அரசுக்கு 1,75,000 கோடி ரூபாய் இழப்பு என்று கணக்கீட்டாளர் சொல்கிறார். இதையே உண்மையா என்று நாம் கேள்வி கேட்கவேண்டும். அதற்குள்ளாக, அது, ஆ.இராசா 1,75,000 கோடி ரூபாயை அமுக்கிவிட்டார் என்று மாறுகிறது! இரண்டும் ஒன்றா? இந்த ‘மாயப்பணம்’ இருப்பதுபோலவும் அது அரசின் கஜானாவிலிருந்து மந்திரமாக ஆ.இராசாவின் பைக்குள் (அல்லது திமுக பைக்குள்) போனதுபோலவும் சொல்லப்படுகிறது. ஒருவர் எழுதுகிறார்: அதில் ஒரு சிறு சதவிகிதத்தை மக்கள் நலத்துக்குப் பயன்படுத்தினாலும் போதுமே... ஆக, இல்லாத பணம் இருப்பதாக ஆகி, அதை எப்படிச் செலவழிப்பது என்றுகூட மக்கள் யோசித்துவிட்டனர். ஆ.இராசா மட்டுமல்ல, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் சொத்தும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதிகரித்துக்கொண்டே போகிறது. இது எனக்கும் கவலையையும் பயத்தையும் தருகிறது. கட்டாயம் இன்வெஸ்டிகேட் செய்யப்படவேண்டிய விஷயம்தான் இது. ஆனால் இந்தக் கொள்கை முடிவால் இராசா நிதிரீதியில் எப்படி லாபம் அடைந்துள்ளார் என்பதைக் காண்பிக்காவிட்டால் ஊழல் குற்றச்சாட்டு ருசுவாகாது.

ஆனால் அரசுக்கு வரவேண்டிய பணத்தை இல்லாமல் பண்ணிவிட்டார் என்று இராசாமீது திறமைக்குறைவு என்ற குற்றச்சாட்டைக் கொண்டுவரலாம். அதை கேபினெட்டும் பிரதமரும் ஏற்றுக்கொண்டால், இராசாவைப் பதவிநீக்கம் செய்யலாம் அல்லது வேறு துறைக்கு மாற்றலாம். (கூட்டணிக் கட்சி அழும்பு பிடித்தால், அதை எப்படிச் சமாளிப்பது என்பது சோனியாவின், மன்மோகனின் பிரச்னை. நமக்குக் கவலை இல்லை.)

ஏன் நான் கணக்கீட்டாளர் கணக்கை ஏற்க மறுப்பேன்? 3ஜி ஏலம் நடந்தது. அப்போது இந்திய அரசுக்குக் கிடைத்த தொகை ரூ. 70,000 கோடி. 3ஜி என்பதைக் கொண்டு பல வித்தைகளைச் செய்யலாம். எனவே இவ்வளவு பணமாவது வந்தது. இருக்கும் ஸ்பெக்ட்ரத்தை ஒரு மெகாஹெர்ட்ஸுக்கு இத்தனை என்று பெருக்கி ஒரு கணக்கைக் கொடுப்பது அபத்தம். அதே ஸ்பெக்ட்ரத்தை 2ஜி ஏலம் என்று விட்டிருந்தால், அதிகபட்சம் 10,000 கோடி ரூபாய்க்கு மேல் கிடைப்பது கடினம். ஏனெனில் ஏற்கெனவே ஏகப்பட்ட கம்பெனிகள் இந்தச் சேவையை அளித்துவந்தன. நிறையப் பணம் கொடுத்து லைசென்ஸ் வாங்கி, ஸ்பெக்டரம் வாங்கி இந்தத் துறைக்குள் நுழைந்தால் ஆரம்பத்திலேயே அந்த நிறுவனம் போண்டி ஆகவேண்டியதுதான்.

தேதியை முன்னுக்குத் தள்ளிப்போட்டதில் ஏதேனும் கிரிமினல் நோக்கம் உள்ளதா, பணம் கைமாறினதா என்பதை சிபிஐதான் தீவிரமாகக் கண்டுபிடிக்கவேண்டும். ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இது சாத்தியம்தானா என்பது சந்தேகமே. அந்த ஒரு காரணத்தாலேயே இராசா பணம் வாங்கியிருக்கிறார் என்று ஹேஷ்யமாகச் சொல்வது நியாயமற்றது. Where is the evidence?

கடைசியாக, ஸ்பெக்ட்ரம் பெற்ற நிறுவனங்கள் அனைத்துக்கும் வேல்யுவேஷன் அதிகமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டு...

இதில் என்ன பிரச்னை? வாங்கிய ஸ்பெக்ட்ரத்தை மற்றொருவருக்கு விற்று இந்த ‘இடைத்தரகர்கள்’ ஏகப்பட்ட பணம் பார்த்துவிட்டதுபோல, புரிதல் அற்ற மக்கள் எழுதுகின்றனர். இந்த மதிப்புகள் எல்லாம் பேப்பர் மதிப்புகள். புரமோட்டர்களுக்கு இன்னும் கைக்குப் பணம் வரவில்லை. நான் 1 லட்ச ரூபாய் போட்டு ஒரு நிறுவனம் தொடங்குகிறேன். ஒரு பங்கு ரூபாய் 10 என்று, 10,000 பங்குகள். 100 சதவிகிதப் பங்குகளும் என்னிடம். எனக்கு 1 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் கிடைக்கிறது. அதை வாங்க 20 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதை என் நிறுவனம், வங்கி ஒன்றிடம் கடனாக வாங்கித் தருகிறது என்று வைத்துக்கொள்வோம். ஸ்பெக்ட்ரம் கிடைத்தவுடன் ஒரு அந்நிய நிறுவனம், என் நிறுவனம் புதிதாக வெளியிடும் 10,000 பங்குகளை, பங்கு ஒன்றுக்கு 1,00,000 ரூபாய் என்று கொடுத்து (அதாவது மொத்தம் 100 கோடி ரூபாய் கொடுத்து) வாங்குகிறது. இப்போது இருவரிடமும் ஆளுக்கு 50% பங்குகள் உள்ளன. என்னிடம் இருக்கும் பங்குகளின் மதிப்பு இப்போது 100 கோடி ரூபாய். ஆனால் நான் முதலீடு செய்ததோ ஒரு லட்சம் ரூபாய். ஆனால் என் பங்கை உடனே யாரிடமாவது விற்று 100 கோடியைத் தள்ளிக்கொண்டு நான் ஓடிவிடமுடியுமா?

நிச்சயம் முடியாது. என் கம்பெனிக்குள் வந்திருக்கும் 100 கோடியைக் கொண்டு நான் டவர்கள் அமைத்து, சிம் கார்டுகள் விற்று, லாபம் சம்பாதித்து, கடனை அடைத்து, என்றாவது ஒரு நாள் என் பங்குகளை யாரிடமாவது விற்று, அல்லது நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட வைத்து, பொதுமக்களிடம் விற்று... என்று ஒரு பெரிய நீண்ட கதை.

யூனிநாரும் வீடியோகானும் இன்று எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கவேண்டும் தெரியுமா லாபம் பெற? பெருமுதலைகளான ஏர்டெல்லும் வோடஃபோனும் டாடாவும் ஐடியாவும் ரிலையன்ஸும் இருக்கும் துறையில் நிறையவே கஷ்டப்படவேண்டும், லாபம் செய்ய.

நம் மக்கள் கார்பரேட் ஃபினான்ஸ் பற்றி ஓரளவுக்காவது தெரிந்துகொண்டு இதைப்பற்றியெல்லாம் பேசினால் நன்றாக இருக்கும்.

ஸ்பெக்ட்ரம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், என் பழைய பதிவு ஒன்றைப் படிக்கலாம்.

Friday, November 12, 2010

சொல்லாமல் விட்டவை

கோவை குழந்தைகள் கடத்தல், கொலைச் செய்தியைக் கேட்டதும் என் மகள் கொஞ்சம் பயத்தில் இருந்தாள். நியாயமே. பள்ளிக்கூடப் பிள்ளைகள் இதைப்பற்றி நிறைய விவாதிக்கிறார்கள் என்று தெரிகிறது. என்கவுண்டர் கொலை பற்றி அவளது கருத்து என்ன என்று இன்னமும் கேட்கவில்லை.

என்கவுண்டர் நியாயமற்றது - இப்போது மட்டுமல்ல, எப்போதுமே. Due process of law தாமதமாகிறது, ஓட்டைகள் உள்ளன என்றால் ஓட்டைகளை அடைப்பதுதான் முக்கியம். கொலைகள் ஏற்கப்படா.

***

ஒபாமாவின் உப்புச் சப்பில்லா பயணம் முடிவுற்றது. இந்தியர்களுக்குத் தர அவரிடம் ஒன்றுமே இல்லையா? அமெரிக்காவின் நிலைமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் இடையில் அவர் இந்தியாவில் ரீடெய்ல், விவசாயம் ஆகியவற்றிலும் அந்நிய முதலீட்டைக் கொண்டுவருவது பற்றியெல்லாம் யோசிக்கிறார் என்றால், ஐயோ, பாவம் என்றுதான் தோன்றுகிறது. தன் நாட்டு மக்களை மனத்தில் நினைப்பதோடு தான் யாருடன் உறவு கொள்ள விரும்புகிறோமோ அந்த நாட்டு மக்களுக்கு தன்னால் என்ன நன்மை செய்யமுடியும், அதைச் செய்தால் தனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்றுதான் ஒரு நல்ல சேல்ஸ்மேன் யோசிப்பான். ஒபாமா இந்தியாவுக்கு எதை விற்கலாம் என்று துளியும் யோசித்துப் பார்த்தாரா?

ஹெட்லி மேட்டர், பாகிஸ்தான், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர சீட் எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். நியூக்ளியர் லயபிலிட்டி பில்லில் மாற்றங்கள் செய்யுமாறு கேட்க ஓர் ஆசாமிக்கு எப்படிப்பட்ட தார்மீக நியாயங்கள் இருக்கமுடியும். புஷ் என்றால் ஓகே; ஆனால் ஒபாமா அப்படிப் பேசினால் அசிங்கமாக உள்ளது. அவுட்சோர்சிங் வேலைகளைத் தடை செய்ய அவர் முயற்சி செய்தால் அதனை நான் ஆதரிப்பேன். ஓரளவுக்கு புரொடெக்‌ஷனிசத்தை நான் ஆதரிப்பவன். முற்றிலுமான தடையற்ற வர்த்தகம் உதவாது. அதனால்தான் என் விவசாயத்தை நான் பாதுகாப்பேன்; அவரது சாஃப்ட்வேர் வேலைகளை அவர் பாதுகாத்துக்கொள்ளட்டும். பிரச்னை இல்லை. ஆனால் அதைச் செய்வேன், இதை நீ செய்யக்கூடாது என்று ஒருவர் பேசுவது முட்டாள்தனம். இனியும் இதுபோன்ற ராவடி வேலைகளைச் செய்யும் அளவுக்கு அமெரிக்கா தாதா அல்ல...

ராணுவத் தளவாடங்களை மட்டும் ஏற்றுமதி செய்தால் போதாது. இந்தியாவுக்கு வேறு என்னவெல்லாம் வேண்டும், அவற்றை எப்படி இந்தியாவுக்கு அனுப்பி காசு பார்க்கலாம் என்று கொஞ்சம் ரிசர்ச் செய்துவிட்டு ஒபாமா வந்திருக்கலாம்.

***

இன்னும் எந்திரன் பார்க்கவில்லை. அய்யா, சத்யத்திலிருந்து படத்தைத் தூக்கிராதீங்கய்யா! இன்னும் ஒரு ரெண்டு வாரமாவது வெச்சிருங்க. பாத்துடறேன்.

***

ஆபரேஷன் ப்ளூஸ்டார் - சீக்கியர்களின் தங்கக் கோவிலின்மீதான இந்திய ராணுவத்தின் தாக்குதல் பற்றி ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அவ்வளவு ஆச்சரியமான தகவல்கள். சம்பவம் நடந்து இரு மாதங்களில் வெளியான இந்தப் புத்தகத்தில் சேகர் குப்தா, தவ்லீன் சிங் கட்டுரைகள் அபாரம். மிகச் சிறப்பான ஜர்னலிஸ்டுகள் இவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ரோலி புக்ஸ் வெளியீடு.

***

ஸ்டீபன் ஹாக்கிங்கின் The Grand Design புத்தகம் வந்துவிட்டது. அடுத்து அந்தப் புத்தகம்தான். ஆர்ட் பேப்பரில் அடித்துள்ளனர். வெறும் 190 சொச்சம் பக்கங்களுக்கு கனம் ஜாஸ்தி. அழகாக புக் பிரிண்ட் பேப்பரில் அடித்தால் போதாதா? கலர் படங்கள் வேண்டும் என்றால் நடுவில் இணைத்தால் போதுமே?

***

நான் வாங்கிய ஆண்ட்ராய்ட் டேப்லட், பேட்டரி தவிர ஓகே. இப்போது அதில் பிடிஎஃப் கோப்புகளைப் படிக்க முடிகிறது - ஆனால் ஸ்லோ. fring உதவியுடன் ஸ்கைப், கூகிள் டாக் எல்லாம் செய்யமுடிகிறது. தேவலாம். டொக்கு டொக்கு என்று ட்விட்டரிலோ மெஸஞ்சரிலோ தட்டுவது உபயோகமாகத் தெரியவில்லை. ஆனால் யு.எஸ்.பி கீபோர்டை இணைக்க முடிகிறது. அதை யார் கையில் தூக்கிக்கொண்டு அலைவது? முன்னர் பாம் பைலட்டுடன் வேலை செய்த அழகான, மடிக்கக்கூடிய கீபோர்ட் இருந்தால் வசதி.

***

3ஜி சேவையை வோடஃபோன் அளிக்கும்வரை நான் காத்திருப்பதாக முடிவு செய்துள்ளேன். போன் நம்பரை மாற்ற விருப்பம் இல்லை. போன் நம்பரை மாற்றுகிறேனோ இல்லையோ, போனை மாற்றியாகவேண்டும்... ஆங்காங்கே பிய்ந்து, பேட்டரி சொங்கிப்போய் பாவமாக இருக்கிறது, அதைப் பார்க்க.

***

கிரந்த எழுத்துகள் தொடர்பான விவாதம் எதிர்பார்த்ததுபோலவே ‘பார்ப்பானை, தமிழ் எதிரியை’ அடி என்ற ரீதியில் செல்வது மனத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுவும் விடுதலை, உண்மை கட்டுரைகள் பிரமாதமாக உள்ளன. இதற்கிடையில் தினமணி அபத்தமாக உளறி, முதுகில் நெளியுது பூணூலு என்று பேச வைத்து, புண்ணியம் கட்டிக்கொண்டது. பார்ப்பான்தான் தமிழனின் நிஜமான பிரச்னையா என்று கொஞ்சம் தீவிரமாகவே யோசிக்கவேண்டும்.

***

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஆ.இராசா மீது அநியாயமான தாக்குதல்கள்! ஆனாலும் நம் பார்வைக்கு இன்னும் வலுவான கேஸ் ஒன்று கட்டி எழுப்பப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன். சும்மாவாவது அடி அடி என்று ஒருவரைப் போட்டு அடிப்பது நியாயமல்ல. இதைப்பற்றி நான் முன்னமேயே எழுதியுள்ளேன். இராசா தவறே செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. செய்தாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் செய்தார் என்பதற்கு வலுவான சாட்சியங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையே? இப்படிச் செய்ததால் இத்தனை கோடி இழப்பு என்றுதான் bean counter அக்கவுண்டண்டுகள் பேசுவார்கள். ஆனால் கொள்கை முடிவு எடுக்கும்போது இழப்பைப் பற்றிப் பேசவேண்டியதில்லை. தினம் தினம் பெட்ரோல் மானியத்திலும், உர மானியத்திலும் பல கோடிகள் ‘இழக்கிறது’ அரசு. அது விரும்பி இழக்கப்படும் தொகை.

செல்ஃபோன் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு ஏலம் இல்லாமல், குறிப்பிட்ட கட்டணத்துக்கு ஸ்பெக்ட்ரம் அளிக்கப்படும் என்று அரசு முடிவெடுத்தால் அதனால் ஏற்படுவதை இழப்பு என்று சொல்லக்கூடாது. அதனால்தான் இன்று இந்தியாவில் செல்ஃபோன் கட்டணம் இவ்வளவு குறைவாக உள்ளது. எண்ணற்ற ஏழை மக்கள் பயன் அடைகிறார்கள். (பணக்காரர்கள் பெரிதாக ஒன்றும் பயன்பெறுவதில்லை!) டாரிஃப் குறைந்தால் அதன் பயன் ஏழைகளுக்கே அதிகம் சென்றடையும். இத்தனை ஸ்பெக்ட்ரத்தையும் ஏலத்தில் விட்டால் 1,75,000 கோடி ரூபாய் அரசுக்குக் கிடைக்கும் என்று கேனையன் ஒருவன் கணக்கிட்டால், அதையும் அனைவரும் நம்புகிறீர்களே!

நாம் சுவாசிக்கும் காற்றை நாள் ஒன்றுக்கு தலைக்கு ஒரு ரூபாய் என்று வரிவிதித்தால், அரசு சம்பாதிக்கும் தொகை நாள் ஒன்றுக்கு நூறு கோடி. ஆண்டுக்கு 36,500 கோடி ரூபாய். அதை இலவசமாகக் கொடுத்து அத்தனை கோடியை இழந்த பிரதமர் மன்மோகன் சிங் ஊழல்காரர் என்றும் அடுத்து சொல்வார்கள்!

ஆ.இராசா குற்றவாளி என்று என்னை கன்வின்ஸ் செய்ய என்ன செய்யவேண்டும்? அவர் யாரிடம் எவ்வளவு லஞ்சம் பெற்றார் என்பதற்கான ஆதாரங்களைக் காட்டவேண்டும். இல்லை என்றால், இது விட்ச் ஹண்ட்.

***

தமிழ் பேப்பரில் நான் எழுதிவந்த தொடர் ‘யாழ் மண்ணே வணக்கம்’ முடிவுற்றது. ஏழு பாகங்கள். மேலும் எழுதியிருக்கலாம். ஆனால் சோர்வு. படிக்க விரும்புபவர்கள், இதுவரை படித்திராதவர்கள், இங்கே செல்க.

***

Friday, November 05, 2010

தமிழ்பேப்பர் தீபாவளி மலர்

ஆழி பெரிது! அரவிந்தன் நீலகண்டன் எழுதும் புதிய தொடர்
தோழர் மருதன் எழுதும் புதிய தொடர், ஃபிரெடெரிக் எங்கல்ஸின் வாழ்க்கை வரலாறு
முகம் காட்டாத முதலாளி ஆஸ்கார் ரவிச்சந்திரன் பற்றி ஆர்.எஸ்.அந்தணன்
வந்துவிட்டது, தமிழிலும்! அருள்செல்வன். அறிவியலா, ஓவியமா எதைத் தேர்ந்தெடுத்தார், ஏன்?
‘கீதையின் வழியே மறுபடி பிறந்தேன்’ ஜெயமோகன் பேட்டி, இலக்கியம், சினிமா என்று அனைத்தைப் பற்றியும் விரிவான பேட்டி
‘கலகம் இனி இல்லை’ ரோசா வசந்த் விரிவான பேட்டி
பதற்றம் அ. முத்துலிங்கம், கட்டுரையா, சிறுகதையா? அசத்தலான எழுத்து.
தாய்மை யாதெனில்… யுவன் சந்திரசேகர் கதை
108 வடைகள் பா.ராகவன் சிறுகதை
மகா டிராமா! ஜே.எஸ்.ராகவன் நகைச்சுவை
வசீகர சௌந்தர்ய ஸாரி தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனின் கவிதை-கிவிதை
ரிலீஸ் குறிப்புகள் சங்கர் நாராயண் (என்னும்) கேபிள் சங்கரின் தீபாவளி ரிலீஸ் தமிழ் சினிமாப் படங்கள் பற்றிய குறிப்பு

இவற்றுடன் ரெகுலர் தொடர்கள்

கடவுளைக் காட்டுதல் ஜென் கதை
யாழ் மண்ணே வணக்கம் பத்ரி சேஷாத்ரி