(காலச்சுவடு செப்டெம்பர் 2005 இதழில் வெளியான என் கட்டுரை)
ஜூலை 2005-ல் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தொடர்ந்து ஜூலை 31க்குப் பின், அடுத்த பத்து மாதங்களில் விளையாடப்படும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்த மாறுதல்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜூலை 7, 10, 12 நாள்களில் இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடந்த நாட்வெஸ்ட் சேலஞ்ச் ஒருநாள் ஆட்டங்களில் இந்த விதி மாற்றங்கள் வெள்ளோட்டம் விடப்பட்டன.
-*-
கிரிக்கெட் ஆட்டத்தைப் பொறுத்தவரையில் அதற்கென அடிப்படையான சில விதிகள் இருக்கின்றன. இவற்றை Laws of Cricket என்று சொல்லுவர். இஷ்டத்துக்கு மாறும் சட்ட திட்டங்கள் அல்ல இவை. முடிந்தவரையில் மாறாமல், தேவை ஏற்படும்போது மட்டும் வெகு குறைந்த அளவு மட்டுமே மாறுவதால்தான் இவற்றை "Laws" என்ற பெயரில் அழைக்கின்றனர், "Rules", "Conditions" போன்ற ஆங்கிலச் சொற்கள் கொண்டு அழைப்பதில்லை. இயல்பியலில் நியூட்டனின் மூன்று விதிகள் என்று சொல்கிறோமல்லவா, அதைப்போல!
இந்த கிரிக்கெட் விதிகள் 1788-ம் ஆண்டு எம்.சி.சியால் (Marleybone Cricket Club - MCC) ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சில மாறுதல்களும் எம்.சி.சியால் செய்யப்பட்டது. இந்த மாற்றங்கள் பொதுவாக ஏற்கெனவே இருக்கும் விதிகளில் ஓட்டைகள் கண்டுபிடிக்கப்படும்போதுதான் செய்யப்படுகின்றன. சும்மா செய்துதான் பார்ப்போமே என்று செய்யப்படுவதில்லை. கடைசியான சில மாற்றங்களுக்குப் பிறகு இப்பொழுதிருக்கும் சட்டங்கள், The Laws of Cricket (2000 Code 2nd Edition - 2003) என்ற பெயரில் வழங்கி வருகிறது. ஏதோ கணினி மென்பொருளுக்கான பெயர் போல இருப்பதைக் கண்டு பயப்படவேண்டாம். சில மாற்றங்கள் 2000 வருடத்தில் மேற்கொள்ளப்பட்டு அக்டோ பர் 2000 முதற்கொண்டு புழக்கத்தில் இருந்து வருகிறது. அதிலும் சிற்சில மாற்றங்களை 2003-ம் வருடம் ஏற்படுத்தியதன் விளைவுதான் இப்பொழுதிருக்கும் விதிகள்.
இங்கு எம்.சி.சி என்பதே லண்டனில் இருக்கும் ஒரு சாதாரண கிரிக்கெட் கிளப். ஆனால் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை கிரிக்கெட் விதிகளைப் பராமரிப்பது, அதில் மாற்றங்களைக் கொண்டுவருவது ஆகியவை இவர்களின் கையில்தான் இருக்கிறது. இதை அனைவரும் ஏற்றுக்கொண்டும் உள்ளனர். ஒரு காலத்தில் எம்.சி.சிதான் இங்கிலாந்தின் சர்வதேச கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்தது. பின் நாளடைவில் டி.சி.சி.பி (TCCB) என்றோர் அமைப்பு அதற்கென உருவாகி, இன்று ஈ.சி.பி (ECB) என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ஐ.சி.சி (ICC) எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள், சர்வதேச ஒருநாள் போட்டிகளை நிர்வகிக்கத் தொடங்கியதும், அவ்வப்போது இந்தப் போட்டிகளுக்கான சட்டதிட்டங்களை மாற்றியமைத்துள்ளது. அப்பொழுதெல்லாம் மாற்றங்களை "ஆட்டக் கட்டுப்பாடுகள்" (Match Playing Conditions) என்ற பெயரிலேயே வழங்கி வந்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகளும் எம்.சி.சியின் கிரிக்கெட் விதிகளின் மீது செய்யப்பட்ட மாற்றங்களாகவே அமைந்துள்ளன. அதாவது ஐ.சி.சி தானாக கிரிக்கெட் ஆட்டங்களுக்கான முழு விதிகளை உருவாக்குவதில்லை. எம்.சி.சி வெளியிட்ட விதிகளை எடுத்துக்கொண்டு அதில் எங்கெல்லாம் மாறுதல்கள் உண்டு என்பதை மட்டும் கோடிட்டுக் காண்பிக்கும். அவ்வளவே.
இப்படி, விதிகள், சட்டங்கள், கட்டுப்பாடுகள் என்றெல்லாம் பிற விளையாட்டுகளில் இருப்பதில்லை என்பதை கவனிக்கவும். வேறெந்த விளையாட்டுக்கும் என்று குறிப்பாக "Laws" என்று எதுவும் வழங்கப்படுவதில்லை.
-*-
சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகள் ஆரம்பித்ததே விதிவசம்தான். யாரும் அப்படியோர் ஆட்டத்தை முன்கூட்டியே தீர்மானிக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஜனவரி 5, 1971 அன்று மெல்போர்ன் நகரில் நடந்த, அணிக்கு 40 எட்டு பந்து ஓவர்களுக்கான, ஆட்டமே முதல் சர்வதேச ஒருநாள் போட்டி. பலத்த மழையின் காரணமாக மெல்போர்ன் ஆடுகளத்தில் நடக்க இருந்த டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. ரசிகர்களின் ஆறுதலுக்காக ஓர் ஆட்டம் அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரே நாள், இரண்டு அணிகளும் ஆளுக்கு நாற்பது ஓவர்கள் விளையாடுவார்கள். (அப்பொழுதெல்லாம் ஆஸ்திரேலியாவில் மட்டும் ஓர் ஓவருக்கு எட்டு பந்துகள் வீதம் வீசுவார்கள்.) முதலில் பேட்டிங் செய்யும் அணி நாற்பது ஓவர்களில் எத்தனை எண்ணிக்கை எடுத்திருந்தாலும் அத்துடன் அதனது இன்னிங்ஸ் முடிவடையும். அடுத்து இரண்டாவது அணி பேட்டிங் செய்து முன்னர் விளையாடியிருந்த அணியின் எண்ணிக்கையைத் தாண்ட வேண்டும்
இதற்கு முன்னாலும் ஓர் இன்னிங்ஸ் ஆட்டங்கள் நடந்திருக்கின்றன. 1969-இலேயே இங்கிலாந்தில் முதல்-தர கிளப் அணிகளுக்கு இடையே குறிப்பிட்ட ஓவர்களை உடைய ஒருநாள் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. அதற்கும் முன்னாலேயே பல்வேறு இடங்களில் இதுபோன்ற ஆட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் 1971 ஜனவரியில்தான் இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒருநாள் ஆட்டம் - வரையறுக்கப்பட்டு ஓவர்களை உடைய ஆட்டம் - நடந்தது. அந்த ஆட்டத்தை 46,000 ரசிகர்கள் கண்டனர். A$ 33,000 பணம் கிடைத்தது. அன்றிலிருந்து படிப்படியாக சர்வதேச ஒருநாள் ஆட்டங்கள் தமது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் ஐந்து நாள்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளை ஓரங்கட்டவும் ஆரம்பித்தன.
சர்வதேச ஒருநாள் போட்டிகள் தொடங்கி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ஒருநாள் போட்டிகள் மீது பல விமரிசகர்களும் கடுமையான கருத்துக்களை வைத்திருக்கிறார்கள். "பைஜாமா ஆட்டம்" என்று கேவலமாகப் பேசியிருக்கிறார்கள். இதையெல்லாம் கிரிக்கெட் ஆட்டம் என்றே எடுத்துக்கொள்ளக்கூடாது, டெஸ்ட் கிரிக்கெட்தான் உண்மையான கிரிக்கெட் என்றும் பலர் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் இந்த பைஜாமா ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டை நிறைய வளப்படுத்தியது என்பதுதான் உண்மை. 1960கள், அதற்கு முந்தைய காலங்களில் விளையாடிய டெஸ்ட் ஆட்டங்களின் விடியோ துண்டுகளைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். மட்டையாளரின் மட்டையிலிருந்து புறப்படும் பந்து பந்துத் தடுப்பாளரைத் தாண்டிவிட்டால் அது அடுத்து எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்றுவிடும். பந்துத் தடுப்பாளர் மெதுவாக அசைந்து சென்று பந்தை மீட்டுக்கொண்டுவருவார். அவ்வளவே. ஆனால் இன்று பந்தைத் துரத்திச் சென்று எல்லைக்கோட்டுக்கு வெகு அருகே ஆனாலும் உடலால் பந்தைத் தடுத்துத் திருப்பி எறிவது என்பது முழுக்க முழுக்க ஒருநாள் போட்டிகளின் தாக்கத்தால் வந்தது. டெஸ்ட் ஆட்டம் என்றாலே யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை என்ற டிரா நிலையை 2000 வருடத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட முற்றிலுமாகப் போக்கியது ஒருநாள் போட்டிகளால்தான். ஆஸ்திரேலியா போன்ற சூப்பர் ஸ்டார் அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் படுவேகமாக ரன்களைக் குவிப்பதும் ஆட்டத்தை சுவாரசியமாக வைத்திருப்பதும் ஒருநாள் போட்டிகளால்தான்.
-*-
ஒருநாள் போட்டிகள் மக்கள் கவனத்தைப் பெறத் தொடங்கியதும், அந்தக் கவனத்தைத் தக்கவைத்துக்கொள்ள நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றத்தை விரும்பாதவர்கள்கூட மாற்றாந்தாய்ப் பிள்ளையான ஒருநாள் போட்டியில் என்ன மாற்றத்தைக் கொண்டுவந்தாலும் அதைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக, "பைஜாமா ஆட்டத்தில் வேறெதை எதிர்பார்க்க முடியும்" என்று கேலிதான் பேசினர்.
முதலில் ஒருநாள் போட்டிகள் மட்டையாளர்களுக்குப் புரிபடவில்லை. அதுவரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மெதுவாக ரன்கள் பெற்றுவந்த மட்டையாளர்கள் இங்கு வேகமாக ரன்கள் எடுக்கவேண்டி இருந்தது. வேகமாக ஓடி ஒன்று, இரண்டு என்று ரன்கள் பெறவேண்டி இருந்தது. குண்டுத் தொப்பையும் சோம்பல் புத்தியும் உடைய ஆட்டக்காரர்கள் தடுமாறினர். ஆனால் அவர்களுக்கான உதவி வேறு ரூபத்தில் வந்தது.
ஒருநாள் போட்டிகள் என்றாலே கொட்டும் ரன்மழை என்று நினைக்கும் மக்களைத் தக்கவைக்க கிரிக்கெட் வாரியங்கள் ஆடுகளங்களை பேட்டிங்குக்கு உதவி செய்யுமாறு மாற்றினர். வேகப்பந்து வீச்சும் எடுபடாது, சுழல்பந்து வீச்சும் எடுபடாது என்னும் தட்டையான ஆடுகளங்கள் மட்டையாளர்களுக்கு ரன்களை வாரிக்கொடுத்தது. மிகக்கடுமையான வைட் பந்துவீச்சு விதி கொண்டுவரப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிவேகப் பந்துவீச்சாளர்களைத் தடுக்க, ஓவருக்கு ஓர் உயரப்பந்து (பவுன்சர்) மட்டும்தான் வீசலாம் என்றனர்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைக்கும் விதமாக பந்துத் தடுப்பு வியூகத்திலும் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. அதன்படி முதல் பதினைந்து ஓவர்களில் பந்துத் தடுப்பாளர்கள் அத்தனை பேரும் - இருவரைத் தவிர - ஒரு குறிப்பிட்ட உள்வட்டத்துக்குள்தான் நிற்கவேண்டும். இதனால் முதல் பதினைந்து ஓவர்களில் தொடக்க ஆட்டக்காரர்கள் படுவேகமாக ரன்களைச் சேர்த்தனர். சமீப காலங்களில் முதல் பதினைந்து ஓவர்களில் ரன்கள் பெறும் வேகம் அதற்குப் பிறகு எட்டமுடியாத நிலைக்குப் போனது.
இந்நிலையில் ஒருநாள் ஆட்டம் மிகவும் எளிதாகக் கணிக்கக்கூடிய சூத்திரங்களுக்குள் அடங்கி விட்டது. முதல் பதினைந்து ஓவர்களில் விக்கெட்டுகளை அதிகம் இழக்காமல் அதிரடி ரன்கள் பெறுதல், அடுத்த 25 ஓவர்களில் ரன்கள் சற்றுக் குறைந்தாலும் விக்கெட் இழக்காமல் நிதானமாக ஆடுதல், கடைசி பத்து ஓவர்களில் விக்கெட்டை சற்றும் மதிக்காமல் அதிரடி ஆட்டத்தால் ரன்களை நிறையப் பெறுதல். இப்படி 250-300 ரன்கள் பெறாத அணி ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்று ஆனது. பல ஆடுகளங்களில் 300ஐத் தாண்டினாலும் ஜெயிக்க முடியுமா என்றதொரு சந்தேகம் இருந்தது.
-*-
சமீப காலங்களில் ஒருநாள் போட்டிகள் எக்கச்சக்கமாக வளர்ந்துவிட்டன. சென்ற வாரம் கூட இந்தியா மற்றுமொரு முத்தரப்பு சர்வதேச ஆட்டத்தில் ஈடுபட்டு, நன்றாக விளையாடாமல் தோற்றுவிட்டு வந்துள்ளனர். ஆனால் இந்த ஆட்டங்களுக்கான வாசகர் வட்டம் சுருங்கிவிடுமோ என்றதொரு பயம் கிரிக்கெட் வாரியங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிதான் பணம் கொழிக்கும் ஒரே உபாயம். அதை இழக்க யாருக்கும் மனம் இல்லை.
எனவே predictable ஆக இருக்கும் ஓர் ஆட்டத்தில் இன்னமும் பல மாற்றங்களை ஏற்படுத்தினால் அதனாலாவது ஆட்டத்தை சுவாரசியம் மிக்கதாக மாற்றமுடியுமோ என்று கிரிக்கெட் வாரியங்கள் எதிர்பார்க்கின்றன. புதிதாகக் கொண்டுவந்துள்ள மாற்றங்கள் முக்கியமாக இரண்டு:
1. Super Sub - பலம்பொருந்திய மாற்று ஆட்டக்காரர்: இதுவரையில் மாற்று ஆட்டக்காரர் ஒருவர் பந்துத் தடுப்பாளராகக் களம் இறங்கி வந்தார். ஆட்டத்தின் இடையில் தடுப்பாளர் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக பந்துத் தடுப்பில் ஈடுபடுவது மட்டுமே இவரது வேலையாக இருந்தது. இவரால் பேட்டிங் செய்யமுடியாது, பந்து வீசமுடியாது. விக்கெட் கீப்பிங் கூடச் செய்யக்கூடாது.
ஆனால் இப்பொழுது கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்களின்படி ஒவ்வோர் அணியும் ஆட்டம் தொடங்கும் முன்னரே 12வது ஆட்டக்காரராக ஒரு மாற்று ஆட்டக்காரரை நியமிக்கலாம். இவர் யாரை மாற்றுகிறாரோ அவருக்காக பேட்டிங் செய்யலாம், பந்து வீசலாம். உதாரணத்துக்கு இப்பொழுது களத்தில் மட்டையாடிக்கொண்டிருக்கும் ஒரு வீரர் 50 ரன்கள் அடித்துள்ளார். சற்று களைத்தமாதிரியாக இருக்கிறார். அவருக்கு பதிலாக ஓவர்களுக்கு இடையே 12வது வீரரை களமிறக்கலாம். அவரும் பேட்டிங் செய்யலாம். ஆனால் களத்தை விட்டு வெளியேறிய வீரர் மீண்டும் பேட்டிங்கோ, பந்துவீச்சோ செய்யமுடியாது. அதிகபட்சமாக பந்துத் தடுப்பு வேலையைச் செய்யலாம்.
மற்றொரு உதாரணம்: ஒருவர் நல்ல மட்டையாளர், ஆனால் பந்துவீச்சுக்கோ, பந்துத் தடுப்புக்கோ உதவாதவர். இந்தியாவின் வி.வி.எஸ் லக்ஷ்மணை உதாரணமாகச் சொல்லலாம். எனவே மற்றுமொரு நல்ல பந்துவீச்சாளரை - எல்.பாலாஜியை - அணியில் 12வது ஆட்டக்காரராக எடுத்துக்கொள்ளலாம். லக்ஷ்மண் காலையில் பேட்டிங் செய்து முடிக்கட்டும். மதியம் பந்துவீச பாலாஜியை அழைக்கலாம். ஆனால் இது அவ்வளவு எளிதானதல்ல. முன்னதாகவே பாலாஜியை 12வது ஆட்டக்காரர் என்று சொல்லிவிடவேண்டும். டாஸ் முடிந்தபின் நம் அணி முதலில் பந்துவீசுவதாக இருந்தால் பாலாஜியை முதலில் இறக்கி பந்துவீச வைத்துவிட்டு, அதன்பின் மதியம் லக்ஷ்மணை மட்டையாடச் சொல்லமுடியாது! ஒருமுறை இந்த மாற்றத்தை ஏற்படுத்தினால் அவ்வளவுதான்.
இரண்டாவதாக பேட்டிங் பிடிக்கப்போகும் அணி, முதல் 11 பேரில் ஒரு பந்துவீச்சாளரையும், 12வது ஆளாக ஒரு மட்டையாளரையும் வைத்திருக்கவேண்டும். அதாவது மேற்கண்ட உதாரணத்தில் அணியில் பாலாஜியும், 12வதாக லக்ஷ்மணும் இருக்கவேண்டும். முதலில் பாலாஜி பந்து வீசிவிட்டுச் சென்றுவிடுவார். பின் லக்ஷ்மண் வந்து பேட்டிங் செய்வார்.
ஆனால் டாஸ் போடுவதற்கு முன்னமேயே அணியையும் 12வது நபரையும் தீர்மானிக்க வேண்டும். அப்பொழுது யார் முதலில் பேட்டிங் செய்வார்கள் என்று தெரிந்திருக்காது. இப்பொழுது நடைபெறும் ஆட்டங்களில் மட்டையாளர்களின் கையே ஓங்கியிருப்பதாலும் பகுதிநேரப் பந்துவீச்சாளர்களை வைத்து பத்து ஓவர்கள் வீசப்படுவதாலும் எல்லா அணிகளுமே ஓர் அதிகப்படி மட்டையாளரையும் 12வதாக ஒரு பந்துவீச்சாளரையும் கொண்டுவர முனைவர். எனவே முதலில் மட்டையாடும் அணிக்கு மட்டுமே உபயோகம் உண்டு.
2. Powerplay five - இதைத் தமிழில் மொழிபெயர்க்கவேண்டிய அவசியமில்லை. வெற்று வாக்கியம். இதுவரையில் ஆட்டத் தொடக்கத்தில் செயல்படுத்திவந்த பதினைந்து ஓவர்கள் பந்துத் தடுப்பு வியூகக் கட்டுப்பாடு இப்பொழுது இருபது ஓவர்களுக்கு உண்டு. ஆனால் மூன்று பகுதிகளாக. முதல் பத்து ஓவர்கள் எப்பொழுதும் போலவே. அதாவது தடுப்பு வட்டத்துக்கு வெளியே இரண்டே இரண்டு தடுப்பாளர்கள் மட்டும்தான் இருக்கலாம். மட்டையாளருக்கு அருகில் இரண்டு கேட்ச் பிடிப்பவர்கள் கட்டாயமாக இருக்கவேண்டும். அதைத் தொடர்ந்து இரண்டு பகுதிகளாக ஐந்து, ஐந்து ஓவர்களில் பந்துத் தடுப்பு வியூகத்தின் மீது கட்டுப்பாடு உண்டு. இந்த இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை ஐந்து ஓவர்களின்போது நெருக்கத்தில் இரண்டு தடுப்பாளர்கள் இருக்கவேண்டும் என்பதில்லை. இந்த இரண்டாம், மூன்றாம் ஐந்து ஓவர்கள் கட்டுப்பாட்டை பந்துவீசும் அணியின் தலைவர் நடுவரிடம் சொல்லிவிட்டு எப்பொழுது வேண்டுமானாலும் செயல்படுத்தலாம். முதல் பத்து ஓவர்கள் முடிந்த உடனேயே செய்யலாம். ஆனால் எப்பொழுதுமே செய்ய மறந்துவிட்டால் கடைசி பத்து ஓவர்களில் இது தானாகவே அமலுக்கு வரும். அது பந்துவீசும் அணிக்கு பெருத்த நஷ்டத்தைக் கொடுக்கும்.
இந்த மாற்றத்தால் யாருக்கு லாபம்? மட்டையாளர்களுக்குத்தான். முன்னர் பதினைந்து ஓவர்கள் இருந்த தடுப்புக் கட்டுப்பாடு இப்பொழுது இருபது ஓவர்களுக்கு ஆகிறது.
-*-
இதுவரையில் மூன்று ஆட்டங்களில் இந்தப் புது மாறுதல்கள் செயல்படுத்தப்பட்டன என்று பார்த்தோம். அங்கு என்னதான் நடந்தது? முதல் ஆட்டம் 7 ஜூலை நடந்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இருவருக்குமே பவர்பிளேயை எப்படி உபயோகிப்பது என்ற சிந்தனை இல்லை. அதனால் முதல் இருபது ஓவர்களில் தடுப்புக் கட்டுப்பாட்டை வைத்துக்கொண்டனர். இருவருமே மாற்று ஆட்டக்காரரைப் பயன்படுத்தினர். அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மட்டையாளர் மாத்தியூ ஹெய்டனுக்கு பதிலாக பிராட் ஹாக் வந்தார். அவர் பந்துவீசினார். இங்கிலாந்தும் வசதியாக தொடக்கப் பந்துவீச்சாளர் ஜோன்ஸ் தொடர்ச்சியாகப் பந்தை வீசிமுடித்ததும் அவரை அனுப்பிவிட்டு விக்ரம் சோலங்கி என்பவரை உள்ளே கொண்டுவந்தனர்.
10 ஜூலை நடந்த இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து மாற்று ஆட்டக்காரரை உபயோகப்படுத்தவேயில்லை! ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியபோது தொடர்ச்சியாக முதல் இருபது ஓவர்களில் தடுப்புக் கட்டுப்பாட்டினை வைத்துக்கொண்டது. இங்கிலாந்து, முதல் பத்து ஓவர்களுக்குப் பிறகு, 16-20, 34-38 ஓவர்களின்போது தடுப்புக் கட்டுப்பாட்டினை மேற்கொண்டது. ஆஸ்திரேலியா டாஸில் வென்று பேட்டிங் செய்ய விரும்பியதால் எடுத்த எடுப்பிலேயே பந்துவீச்சாளர் மெக்ராத்துக்கு பதிலாக 12ம் ஆட்டக்காரர் பிராட் ஹாட்டின் என்னும் மட்டையாளரைக் கொண்டுவந்தனர். ஆனால் அவரது உதவியில்லாமலே ஆட்டத்தை ஜெயித்தனர். இதனால் மெக்ராத் பந்துவீசவும் இல்லை. ஹாட்டின் மட்டை பிடித்து விளையாடவும் இல்லை!
மூன்றாவது ஆட்டம் 12 ஜூலை நடந்தது. ஆஸ்திரேலியா இங்கு மாற்று ஆட்டக்காரரைப் பயன்படுத்தவில்லை. இங்கிலாந்து முதல் ஆட்டத்தைப் போலவே ஜோன்ஸுக்கு பதிலாக விக்ரம் சோலங்கியைக் கொண்டுவந்தது. ஆனால் இம்முறை இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்யவேண்டி இருந்ததால் ஜோன்ஸ் பந்துவீச முடியவில்லை. இங்கும் ஆஸ்திரேலிய அணித்தலைவர் பாண்டிங் முதல் இருபது ஓவர்களில் பவர்பிளேயை முடித்துக்கொண்டார். இங்கிலாந்தோ தனது முதல் பத்து ஓவர்களுக்குப் பிறகு பவர்பிளேயை உபயோகப்படுத்தவில்லை. ஆஸ்திரேலியா 35 ஓவர்களுக்குள்ளாகவே ஆட்டத்தை ஜெயித்துவிட்டது.
இப்படியாக ஐ.சி.சியின் இரண்டு புது மாற்றங்களுமே ஆட்டத்தின் போக்கை எந்தவிதத்திலும் மாற்றவில்லை.
-*-
முக்கியமாக பவர்பிளே கட்டுப்பாடுகள் மிகவும் அபத்தமாக இருக்கின்றன. இது பந்துவீசும் அணிக்கு சாதகமான ஒரு விஷயமல்ல - அதாவது பந்துத் தடுப்பு வியூகத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வது என்பது. அப்படியொரு பாதகமான விஷயத்தை அந்த அணித்தலைவரிடம் கொடுத்து எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள் என்று சொல்வது சிரிப்பை வரவழைக்கிறது. "இந்தா விஷம், ஆனால் ஒன்று இன்று மாலை 6.00 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும், உனக்குப் பிடித்த நேரத்தில் நீ இதை உட்கொள்ளலாம்... அப்படி நீயாகச் சாப்பிடவில்லை என்றால் சரியாக 6.00 அடிக்கும்போது நான் உனக்கு ஊட்டிவிடுவேன்" என்பதுதான் இந்தக் கட்டுப்பாடு. இது நாளடைவில் ஆடுபவர்களுக்கும், அணித்தலைவருக்கும் அலுப்பையே வரவழைக்கும். பார்வையாளர்களுக்கு இது ஒரு துக்ககரமான விஷயமும்கூட. ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி வர்ணனை நிபுணர்கள், இது ஏதோ முக்கியமான விஷயம் போலவும் இதை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும் போலவும் பேசிப்பேசியே நம்மைக் குதறிவிடுவார்கள்.
பலம்பொருந்திய மாற்று ஆட்டக்காரர் - முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு மட்டுமே சாதகமாக இருப்பார். ஏனெனில் ஆட்டமே மட்டையாளர்களுக்குச் சாதகமாக இருப்பதால் அணியில் அதிகப்படியாக ஒரு மட்டையாளரை எடுத்துக்கொண்டு 12-ம் ஆட்டக்காரராக ஒரு பந்துவீச்சாளரை எடுப்பதையே எல்லோரும் விரும்புவர். மாற்றாக அணியில் ஒரு கூடுதல் பந்துவீச்சாளரை எடுத்துக்கொண்டு, 12-ம் ஆட்டக்காரராக ஒரு மட்டையாளரை எடுப்பதை அவ்வளவாக விரும்பமாட்டார்கள். இதனால் டாஸில் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுக்க இன்னமும் ஆர்வம் கூடுதலாக இருக்கும். ஏற்கெனவே முதலில் பேட்டிங் செய்பவருக்கு என்று பல இடங்களிலும் சாதகம்தான். இது இன்னும் அவர்களுக்கு வலு சேர்க்கும். இதனால் ஆட்டம் இன்னமும் ஒருதலைப்பட்சமாகும்.
-*-
மொத்தத்தில் இந்த இரண்டு மாற்றங்களுமே தேவையற்ற, ஒருநாள் போட்டிகளுக்கு எந்தவிதத்திலும் நன்மை செய்யாத முடிவுகள்தான். அடுத்த பத்து மாதங்களில் இந்தச் சாயம் வெளுத்துவிடும் என்று உறுதியாகத் தோன்றுகிறது. குறுகிய காலத்தில் தொலைக்காட்சிகளுக்கு சில அதிகப் பார்வையாளர்கள் கிடைக்கலாம். கிரிக்கெட் சூதாட்டத்தில் சட்டபூர்வமாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் ஈடுபடுபவர்களுக்கு இன்னுமொரு விஷயம் கிடைத்துவிட்டது பெட் வைக்க - எப்பொழுது பவர்பிளே ஆட்டம் கொண்டுவரப்படும், எந்த விளையாட்டாளர் யாரால் மாற்றப்படுவார்? எத்தனையாவது ஓவரில்? மற்றபடி ஆட்டத்தின் முடிவு எவ்வகையிலும் பாதிக்கப்படாது என்றே தோன்றுகிறது.
ஒருநாள் போட்டிகள் predictableஆக இல்லாமல் இருக்கவேண்டும் என்று ஐ.சி.சி நினைத்தால் வேறு சிலவற்றைச் செய்யலாம். உதாரணமாக சில அறிவுரைகள்:
1. ஆடுகளத்தை பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாகவும் உருவாக்குவது
2. பந்துத் தடுப்பு வியூகக் கட்டுப்பாட்டை முற்றிலுமாக நிறுத்துவது. வேண்டுமானால் முதல் ஓவரிலிருந்தே ஓர் அணி எல்லைக்கோட்டிலேயே தனது தடுப்பு வீரர்களை வைக்கட்டுமே? பந்துக்கு ஒரு ரன் வீதம் மட்டையாடும் அணி 300க்கு மேல் சேர்க்கலாம்! பந்துத் தடுப்பு வியூகத்தின் மீது கட்டுப்பாடு என்பது தேவையே இல்லை.
3. ஒவ்வொரு பந்து வீச்சாளருக்கும் அதிகபட்ச ஓவர்கள் இவ்வளவு என்பதைத் தீர்மானிக்கவேண்டியதில்லை. யார் நன்றாக வீசுகிறார்களோ அவருக்கு எத்தனை ஓவர்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று மாற்றலாம். இது ஆட்டத்தை மிகவும் சுவாரசியமாக்கும்! மட்டையாளர்களுக்கு என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு மட்டும்தான் அதீதக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
அடடா... இப்படியே போனால் நாம் மீண்டும் கிரிக்கெட்டின் ஆரம்ப விதிகளுக்கு நெருக்கமாக வந்துவிட்டோ மே! ஆம். அணிக்கு ஓர் இன்னிங்ஸ், இன்னிங்ஸுக்கு 50 ஓவர்கள், ஓவருக்கு ஒரு பவுன்சர், வைட் என்பதைக் கறாராகத் தீர்மானிப்பது போன்ற நான்கே நான்கு விஷயங்களைத் தவிர டெஸ்ட் கிரிக்கெட் போன்றே ஒருநாள் கிரிக்கெட்டையும் மீட்டுக்கொண்டுவந்துவிட்டால் அதுதான் சுவாரசியமான ஆட்டங்களைத் தரும். புதுமையான கட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டாம். கிரிக்கெட் விதிகளை வலிந்து மீறும் கட்டுப்பாடுகளை நீக்குவதே சரியான வழி!