Friday, January 30, 2004

கோழிக்கு வந்தது ஜுரம், முட்டைக்கு வந்தது பயம்

இன்று National Egg Co-ordination Committee (NECC) பல செய்தித்தாள்களில் விளம்பரங்களைக் கொடுத்துள்ளது - 'தைரியமாக கோழிக்கறியை ஒரு வெட்டு வெட்டுங்கள்! இந்தியாவில் ஒரு பிரச்சினையும் இல்லை' - என்று. சீனாவிலும், தாய்லாந்திலும், கம்போடியாவிலும், வியட்னாமிலும், இந்தோனேசியாவிலும் பலர் இறந்துள்ளனர். ஆனால் NECC விளம்பரம் தைரியமாகப் பல "செய்திகளை" நமக்கு அளிக்கிறது. அவையாவன:

1. பாகிஸ்தானில் 1992 முதலே இந்தப் பிரச்சினை இருந்து வருகிறது, ஆனால் அதனால் இந்தியாவில் ஒரு தொல்லையும் ஏற்படவில்லை! (அதனால் இன்று பாகிஸ்தானில் பறவை-சுரம் வந்துள்ளது என்பதைப் பற்றி நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம், கோழிக்கறியை ஜமாயுங்கள் என்று சொல்வது கொஞ்சம் too much!)

2. வளர்ந்த நாடுகளில் யாரும் பறவை-சுரம் பற்றிக் கவலைப்படுவதில்லை, ஏனெனில், அங்கெல்லாம் பண்ணைகளிலேயே இந்த நோய்க்கான அறிகுறிகளைக் கண்டறிந்து வைத்தியம் செய்யுமளவிற்கு தொழில்நுட்பம் முன்னேறி விட்டது (அப்ப mad cow disease பத்தி யாருங்கண்ணா ரொம்ப கவலைப்பட்டாங்க?). அதுபோல் இந்தியாவிலும் தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்துள்ளதாம்! நேரடி மேற்கோள் "In India too we have such advanced technology and facilities for disease surveillance, diagnosis and monitoring - both in the private sector as well as the public sector." அதாவது நாமெல்லாம் வளர்ந்த நாடுகள் லெவலுக்குப் போய்விட்டோம். இந்தக் குப்பை நாடுகளான தாய்லாந்து, சீனா, இந்தோனேசியா, வியட்னாம், பாகிஸ்தான் இவர்கள்தான் பறவை-சுரம் பற்றிக் கவலைப்படவேண்டும்.

3. வியட்னாம் கோழிப்பண்ணைகள் கிட்டத்தட்ட 50 வருடங்கள் இந்தியாவைவிடப் பின்தங்கியுள்ளது. இதுதான் மற்ற ஆசிய நாடுகளிலும், நம் அண்டை நாடுகளிலும் நடப்பது. (நான் சொல்லலைங்க, முட்டைக்காரவுங்க சொல்றாங்க).

அவர்கள் கொடுத்திருக்கும் விளம்பரத்தை அப்படியே இங்கு வழங்குகிறேன். 24 ஜனவரி 2004இல் WHO அறிக்கை ஒன்றை வைத்துத் தயாரிக்கப்பட்ட இந்த விளம்பரம் (ஆங்கிலத்தை எங்கெல்லாம் கொலை செய்ய முடியுமோ, அங்கெல்லாம் செய்துள்ளனர்.) 27 ஜனவரி 2004இல் WHO இணையத்தளத்தில் உள்ள ஒரு செய்தியறிக்கையைப் பார்க்காமல் விட்டது என்ன நியாயம்? அதில் மிக விளக்கமாகச் சொல்லப்படுவது:
"This is a serious global threat to human health," said Dr. Lee Jong-wook.

இன்றைக்குக் குறிப்பிடப்பட வேண்டிய சில செய்திகள்

* வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இனி குடியரசுத் தலைவரால் மட்டும்தான் இவர்களைக் காப்பாற்ற முடியும். இந்த வழக்கு பற்றிய செய்திகள் திகிலூட்டக் கூடியனவாக இருக்கின்றன. சிறப்புத் தனி தடா நீதிமன்றம் இந்த நால்வருக்கும் (சிமோன், ஞானப்பிரகாஷ், மாதையா, பிலவேந்திரா) கண்ணி வெடி வைத்து காவலர்கள் செல்லும் வண்டியினைத் தகர்த்ததாகக் குற்றம் சாட்டி ஆயுள் தண்டனை அளித்தது. மேல்முறையீட்டுக்காக இந்த நால்வரும் உச்ச நீதிமன்றம் செல்ல, அங்கு கர்நாடகா வழக்கறிஞர் தண்டனையை அதிகப்படுத்தக் கோர, உச்ச நீதிமன்றமும் இதனை ஏற்றுக்கொண்டு, இந்த நால்வருக்கும் மரண தண்டனை அளித்துள்ளது.

இது கொடுமை. உச்ச நீதிமன்றத்துக்கு நிச்சயமாக தண்டனையை மாற்றும் அதிகாரம் உண்டு என்றாலும், மரண தண்டனையையே உலகெங்கும் உள்ள பல நாடுகள் செயல்படுத்தாத நிலையில் கீழ் நீதிமன்றம் கொடுத்த ஆயுள் தண்டனையை மாற்றி இந்திய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையாக்கியது வருத்தத்துக்குரியது.

* குஜராத்தில் வி.எச்.பி, பஜ்ரங் தள் பொறுக்கிகள் எம்.எஃப்.ஹுசைனின் ஓவியங்களைக் கிழித்தெறிந்துள்ளனர். இந்த ஓவியக் கண்காட்சியில் புபேன் கக்கரின் ஓவியங்களும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவைகளுக்கு எந்தக் கேடும் வரவில்லை (வரவேண்டுமென்பது என் விருப்பமல்ல!). இந்த முட்டாள்களுக்கு புபேன் கக்கர் ஒருபால் புணர்ச்சியாளர் என்று தெரிந்திருந்தால், "அட, போனதுதான் போனோம், இந்தாளோட ஓவியங்கள் கொஞ்சத்தையும் கிழித்துவிட்டு வந்திருக்கலாமோ" என்ற திருப்தி ஏற்பட்டிருக்கலாம். எவ்வளவு நாளைக்குத்தான் ஹுசேனின் ஓவியங்களை மட்டுமே குறிவைப்பது? கக்கரின் ஓவியங்களுக்கும் கொஞ்சம் 'குறி'வைக்கட்டுமே! (pun intended).

* டோனி பிளேர், பிபிசி, ஹட்டன் ரிப்போர்ட்

இதுவரை பிபிசியின் இரண்டு தலைகள் உருண்டுள்ளன. பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் தப்பிவிட்டார். இப்பொழுது மீண்டும் அலாஸ்டேர் கேம்ப்பெல் வந்துவிடுவாரா?

ஹட்டன் விசாரணை பிளேர் மீது எந்தத் தவறும் இல்லை என்று முடித்து விட்டது.

நீதிமன்ற ஊழல் பற்றி

நேற்றைய கதையின் நாயகன் மெட்ரோபாலிடன் மேஜிஸ்டிரேட் பெயர் பிரஹ்மபட். (தினமலர் இவர் பெயரை 'பிரகாம் பட்' என்று குதறுகிறது. குதறப்பட வேண்டியவர்தான்.) நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரவி ஸ்ரீனிவாஸ் பின்னூட்டத்தில் கூறியது போல், இந்தப் பொதுநல வழக்கினால் பெரிதாக ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை என்றுதான் தோன்றுகிறது. ஒருசில இடைக்காலப் பணிநீக்கங்கள்? ஆனால் நீதித்துறையின் ஊழலை கவனிக்கவென்றே ஆம்பட்ஸ்மேன் (Ombudsman) பதவிகளை உருவாக்கலாம். நீதித்துறையில் லஞ்சம் வாங்கினார் என்ற ஏதேனும் சாட்சி ஒருந்தால் லஞ்சம் வாங்கியவருக்கு உடனடிப் பதவி நீக்கம் என்றும் அவருக்கு ஓய்வூதியம் போன்றவைகள் முடக்கப்படும் என்றும் நிர்வாக விதிகளைக் கொண்டுவரலாம். அதாவது ஊழல் என்று வரும்போது, நீதித்துறை மற்றும் காவல்துறையின் ஊழல்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்படவேண்டும்.

நேற்றைய பதிவு

Thursday, January 29, 2004

நீதித்துறையின் கேவலம்: குடியரசுத் தலைவருக்கே வாரண்ட்

தினமலரில் விரிவான செய்தி வந்துள்ளது. ரூ. 40,000 காசு வாங்கிக் கொண்டு குஜராத்தில் ஒரு மாஜிஸ்டிரேட் காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டிருக்கிறாராம். எதில் கையெழுத்து? குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கரே முதலியோர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கும் தாள்களில் கையெழுத்திட்டார். ஏன், எதற்கு, யார் என்று எந்தக் கேள்வியுமில்லாமல் இந்த விஷயம் நடந்துள்ளது. இதனையெல்லாம் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிருபர் ரகசிய வீடியோ கேமராவில் பிடித்துள்ளார். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் ஹரீஷ் சால்வே மூலம் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.

ஆடிப்போய்விட்டனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். அந்த மாஜிஸ்டிரேட்டின் பெயர் இன்னமும் வெளியிடப்படவில்லை. அந்த நீதிமன்றத்தின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சில நாட்கள் முன்னர் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.பி.பரூச்சா கிட்டத்தட்ட 20% நீதிபதிகள் ஊழல் பேர்வழிகள் என்று சொல்லியுள்ளார். [நான் நேரிடையாக இதைச் சொல்லியிருந்தால் இது நீதிமன்ற அவதூறாகுமாம்... - அப்படித்தான் என்.விட்டல் சொல்கிறார். ஆனால் பரூச்சா இப்படிச் சொன்னார், அது உண்மையாக இருக்கலாம் என்று நான் நம்புகிறேன் என்று சொன்னால் அது நீதிமன்ற அவதூறாகாதாம்!]

இப்பொழுது தலைமை நீதிபதி கரே என்ன செய்யப்போகிறார் என்று பார்க்க வேண்டும்.

Wednesday, January 28, 2004

காந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 2

பகுதி ஒன்று

எதை வைத்து காந்தி இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த மனிதர் என்று சொல்வது?

சாதாரண மனிதர்கள் ஒரு துறையில் பங்களிக்கவே கஷ்டப்படும்போது காந்தி நான்கு துறைகளில் வெகு முக்கியப் பங்களித்திருக்கிறார். அவையாவன:
1. இந்திய விடுதலை இயக்கம்
2. தீண்டாமை ஒழிப்பு
3. மத நல்லிணக்கம் - இந்து/முஸ்லிம்/கிறித்துவ/சீக்கிய நல்லுறவு
4. பொருளாதாரம் (சுற்றுப்புறச் சூழல் சார்ந்த தொழில்நுட்பத் தேர்வு)

இப்படி மேற்சொன்ன நான்கு துறைகளிலும் கூட காந்தி ஏற்கனவே மற்றவர்கள் செய்ததை அடியொட்டிச் செய்யவில்லை. புதுமை ஒன்றைக் கொண்டு வந்தார்.

விடுதலை இயக்கம் == சத்தியாக்கிரஹம் (அமைதிவழிப் போராட்டம்)
தீண்டாமை ஒழிப்பு == கோவில் பிரவேசம்
மத நல்லிணக்கம் == கூட்டுப் பிரார்த்தனை
பொருளாதாரம் == கிராம ஸ்வராஜ்யம்

இப்படி ஒவ்வொரு துறையிலும் கொண்டுவந்த புதுமை அனைவருக்கும் ஏற்புடையதாக இல்லை. இடம், வலம் என்று இரு கோடியில் உள்ளவர்களும் காந்தியின் மேல் கடும் கோபம் கொண்டனர். விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டுவந்த தீவிரவாதிகளுக்கும் காந்தியின் மேல் கோபம் (அஹிம்சை என்று போரடிக்கிறார் என்று), இங்கிலாந்தின் அரசி/அரசர் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் எப்படியாவது நமக்கு விடுதலைப் பிச்சை போட்டு விடுவார்கள் என்று கருத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் கோபம் (தெருவில் போய்ப் போராடச் சொல்கிறார் என்று). தீண்டாமை ஒழிப்பில் காந்தியின் கொள்கைகள் மீதும் இரு பக்கத்திலிருந்தும் கோபம்: அம்பேத்கார் தலைமையில் தலித்துகளுக்கு காந்தி செய்வது போதாது என்று கோபம். சாதி இந்துக்களுக்கு காந்தி தீண்டாமையை ஒழிக்க விழைகிறார் என்று கோபம். 'கோவில் பிரவேசம்' என்னும் திட்டத்தை காந்தி முன்வைத்தபோது சங்கராச்சாரியார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இங்கிலாந்து அரசுக்கு ஒரு மனு அனுப்பினராம் - "காந்தி ஒரு ஹிந்துவே அல்ல" என்று. மத நல்லிணக்கம் பற்றி காந்தி பேசும்போது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அவர்மீது கோபம், மதத்தின் மீது நம்பிக்கை இல்லாத மதச்சார்பற்ற நேரு போன்றவர்கள் காந்தியின் கூட்டுப் பிரார்த்தனை மீது நம்பிக்கை வைக்கவில்லை. பொருளாதாரம் பற்றிய விஷயத்திலும் நேரு போன்றவர்கள் பெரிய தொழிற்சாலைகள், பெரிய நீர்த்தேக்கங்கள் என்று நாட்டை பெருந்தொழில் மயமாக்குதலையே விரும்பினர்.

இன்றுவரையிலும் காந்தியின் கொள்கைகள் பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது. காந்தியின் மீது இன்றும் வெறுப்பு தூவப்படுகிறது. நாட்டின் பிளவுக்கு காந்தி மட்டுமே காரணம் என்பதுபோல் பேசப்படுகிறது. காந்தி தீண்டாமையை ஒழிக்க அதிகமாக எதுவும் செய்யவில்லை என்கிறோம். அவருக்குப் பின் அடையாளம் காட்டக்கூடிய அளவில் வேறு யாராவது தீண்டாமை ஒழிப்பில் ஈடுபட்டுள்ளனரா? அம்பேத்கார் தலித் இனத்தின் உள்ளேயிருந்து தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டார். காந்தி சாதி ஹிந்துவாக இருந்து தீண்டாமை ஒழிப்பில் ஈடுபட்டார். இரண்டும் தேவையாக இருந்தது. மத நல்லிணக்கத்திலும் காந்தியின் கொள்கைகள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காந்தி ஒவ்வொரு மதத்தவரும் தன் மதத்திற்கு அடுத்தவரை மாறும்படிச் செய்வதை விரும்பவில்லை. அவர் மதமாற்றத்தை எதிர்த்தார். ஒரு ஹிந்து தன் கிறித்துவ நண்பனை நல்ல கிறித்துவனாக மாற்றுவதும், ஒரு கிறித்துவன் தன் ஹிந்து நண்பனை இன்னமும் நல்ல ஹிந்துவாக மாற்றுவதுமே சரியான முயற்சி என்று எண்ணினார். இன்றோ, ஆர்.எஸ்.எஸ்காரர்கள் காந்தியின் ஒருசில மேற்கோள்களை மதமாற்றத்துக்கு, அதன் மூலம், சிறுபான்மையினருக்கு எதிராகவும், அஹிம்சைக்கே எதிராகவும் பயன்படுத்துகின்றனர். இதனைக் கண்டிக்க வேண்டியது நம் கடமை. காந்தியின் நெருக்கமான நண்பர் CF ஆண்டிரூஸ் (CF Andrews), ஒரு தீவிர கிறித்துவர்.

முடிக்கும்போது குஹா "இந்தியாவின் தலைசிறந்த மனிதராக விளங்கியவர் புத்தர். அவருக்குப் பின்னர் என்றால் அது மஹாத்மா காந்தியே. நாம் புத்தரையும் அவரது கொள்கைகளையும் நாட்டைவிட்டே விரட்டிவிட்டோம். காந்தியையும் அப்படியே விரட்டிவிடுவோமா?" என்ற கேள்வியுடன் முடித்தார்.

நாம் என்ன செய்யப்போகிறோம்?

சுட்டிகள்:
* ராமச்சந்திர குஹாவின் "Savaging the Civilized; Verrier Elwin, His Tribals, and India" என்னும் புத்தகத்தைப் பற்றிய சுனில் ஜனாவின் விமரிசனம்
* Kumarappa Institute Of Gram Swaraj (KIGS), Making sustainable development happen
* Report appearing in The Hindu

காந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 1

ராமச்சந்திர குஹா
ராமச்சந்திர குஹா
© IIM Calcutta
நேற்று சென்னை மேத்தமேடிகல் இன்ஸ்டிட்யூட்டில் ராமச்சந்திர குஹா "Multiple Careers of Mahatma Gandhi" என்னும் தலைப்பில் பேசினார்.

ஆரம்பத்தில் 'careers' என்று சொல்லி, பின்னர் 'calling' என்று மாற்றிக் கொண்டார். "மஹாத்மா காந்தியின் பலதுறைப் பங்களிப்பு" என்று மொழிமாற்றலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

JC குமரப்பா
JC குமரப்பா
© The Hindu
குஹா வரலாற்றாளர், கிரிக்கெட் எழுத்தாளர், சூழலிய அறிஞர். காந்தியம் பற்றியும் வாசித்துக் கொண்டிருக்கிறார். காந்தியின் ஒருசில 'சீடர்கள்' மூலமாக காந்தியைப் பற்றித் தான் படிப்பதாகச் சொன்னார். காந்திக்குப் பல சீடர்கள் - அவர்களில் வெளியே அதிகமாகத் தெரியாத மூவர்: ஜே.சி.குமரப்பா (தமிழர்), வெர்ரியர் எல்வின், மீராபென் (இயற்பெயர் Madelene Slade). இந்த மூவர், நேரு, படேல், ஆசாத், ராஜாஜி மற்றும் பல சீடர்களின் மூலம் காந்தியின் பல்துறைப் பங்களிப்பை அறிந்து கொள்ள முடியும் என்றார்.

இருபதாம் நூற்றாண்டில் தலைசிறந்த மனிதர் காந்தியாகத்தான் இருக்க முடியும் என்றார் குஹா. டைம் இதழ் 1997இல் நடத்திய வாக்கெடுப்பில் ஐன்ஸ்டின் முதலாவதாகவும், காந்தி இரண்டாவதாகவும் வந்தனராம். ஆனால் ஐன்ஸ்டினே இதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார் என்றும், அவரே பலமுறை காந்தியே தலைசிறந்தவர் என்றும் சொல்லியுள்ளார் என்றார். ஐன்ஸ்டினுடைய அலுவலகத்தில் 1920களில் மூன்று படங்கள் மாட்டப்பட்டிருந்தனவாம். அவை முறையே ஃபாரடே, நியூடன், காந்தி ஆகியோருடையது. பின்னர் 1950களில் இரண்டு படங்களே இருந்தன - அவற்றில் ஒன்று காந்தியுடையது, மற்றொன்று ஒரு இசைக்கலைஞருடையது!

வெர்ரியர் எல்வின்
வெர்ரியர் எல்வின்
© Sunil Janah
காந்தியின் சீடர்கள் குமரப்பா, எல்வின், மீராபென் ஆகிய மூவருமே காந்தியிடன் பல வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். அதில் மீராபெனின் வழக்கு விசித்திரமானது. மீராபென் பியானோ இசைக்கலைஞர். பீத்தோவனின் இசை மீது அளவுகடந்த ஈடுபாடுடையவர். நோபல் பரிசு பெற்ற ஃபிரெஞ்சு எழுத்தாளர் ரோமெய்ன் ரோலண்ட், பீத்தோவனைப் பற்றி எழுதியதை அறிந்து மேராபென் ரோலண்டைச் சந்திக்க வந்துள்ளார். அப்பொழுது ரோலண்ட் காந்தியைப் பற்றித் தான் எழுதிக் கொண்டிருந்த பிரதியைக் காண்பிக்க, அதைப்படித்த மேராபென்னுக்கு காந்தியின் மீது அளவு கடந்த ஈடுபாடு. உடனடியாக இந்தியா வந்து, நாளடைவில் தன் மெடலின் ஸ்லேட் என்ற பெயரை மீராபென் என்று மாற்றிக் கொண்டு, காந்தியின் ஆஸ்ரமத்தில் வசிக்க ஆரம்பித்து விட்டார். பிரித்வி சிங் ஆசாத் என்னும் முன்னாள் தீவிரவாதி (பகத் சிங் போன்றோரின் நண்பர்), பிரிட்டிஷ் அரசால் கொலை தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அந்தமான் ஜெயிலில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து நாக்பூர் ஜெயிலுக்கு மாற்றப்படும்போது, தப்பி ஓடித் தலைமறைவாக இருந்தவர், காந்தியின் ஆஸ்ரமத்தில் அவரிடம் சரணடைந்தாராம். மீராபெனுக்கு பிரித்வி சிங் ஆசாத் மீது காதல் பிறந்துள்ளது. ஆனால் ஆசாத்திடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. காந்திக்கு மீராபென்னுடைய காதல் பிடிக்கவில்லை. இதனால் மனமுடைந்த மீராபென் இமயமலைக்குச் சென்று அங்கு சுற்றுப்புறச் சூழலியல் பற்றி பல நாட்கள் வேலை செய்து வந்தாராம். வெர்ரியர் எல்வினும், காந்தியால் நம் நாட்டின் பழங்குடியினருடன் அறிமுகம் செய்யப்பட்டு, பிற்காலத்தில் இந்தியாவின் பழங்குடியினர் பற்றிய தலைசிறந்த அறிஞராக விளங்கியவர். குமரப்பா மட்டும் கடைசிவரை காந்தியுடனே இருந்திருக்கிறார். [இதையெல்லாம் குஹா ஏன் சொன்னார் என்று புரியவில்லை, ஆனால் கேட்க சுவாரசியமாக இருந்தது. முக்கியமாக மீராபெனின் காதல் கதை, பிரித்வி சிங் ஆசாதின் கதை ஆகியவை.]

Tuesday, January 27, 2004

வாஜ்பாயி "பேரன்" கொலை

பிரதமர் வாஜ்பாயியின் தங்கையின் பேரன் மனீஷ் மிஸ்ரா ஓடும் இரயிலிருந்து ஒருசில பொறுக்கிகளால் தூக்கியெறியப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் பொறுக்கிகள் இரயில் வண்டியில் உள்ள சில பெண்களை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தனராம். மிஸ்ராவும் அவரது நண்பர்களும் இதைத் தடுக்க முனைந்துள்ளனர். இதனால் கோபம் கொண்ட, குடிவெறியில் இருந்த, பொறுக்கிகள் மிஸ்ராவையும், அவரது நண்பர்களையும் பிடித்திழுத்து இரயில் பெட்டியிலிருந்து வெளியே தூக்கி எறிந்துள்ளனர். அதில் மிஸ்ரா இறந்துபோயுள்ளார். அவரது நண்பர்கள் பிழைத்தனரா என்று தெரியவில்லை.

அதாவது, இன்றைய நிலையில், நாட்டில் அனைவர் மீதும் - உயர்வு தாழ்வின்றி - கொலைத்தாக்குதல் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று புரிய வருகிறது.

இது நடந்தது உத்திரப் பிரதேசத்தில்.

Monday, January 26, 2004

நடுங்க வைக்கும் சாலை விபத்துகள்

நேற்று சென்னையிலிருந்து நெய்வேலிக்கு எனது காரிலேயே போய்விட்டு வந்தோம். வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றது எனது ஓட்டுனர்; கார் ஓட்டுவதில் நல்ல தேர்ச்சி பெற்றவர். காலையில் போகும்போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்றோம். இரவு திரும்பும்போது திண்டிவனம் வழியாக வரத் தீர்மானித்திருந்தோம். ஆனால் திண்டிவனத்தைத் தாண்டி வருகையில் நெடுஞ்சாலையில் ஒரு விபத்தினால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் பின்னோக்கி திண்டிவனம் வந்து, அங்கிருந்து பாண்டிச்சேரி வந்து மீண்டும் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகவே வீடு வந்து சேர்ந்தோம். எங்களுக்குப் பின்னர் கிளம்பி வரவிருந்த நண்பர்களிடத்தில் திண்டிவனம் வழி வராமல் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியே வருமாறு தொலைபேசியில் தகவல் கொடுத்தோம்.

வழியில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நான்கு விபத்துகள் (ஏற்கனவே நிகழ்ந்திருந்தன) கண்ணில் பட்டது. இரண்டில் சிறு கார் (மாருதி) மீது சற்றே பெரிய வண்டி மோதி கார் அப்பளம் போல் நொறுங்கிக் கிடந்தது. தெருவெங்கும் கண்ணாடிச் சிதறல்கள். மற்றும் இரண்டு விபத்துகளில் இரண்டு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களின் அடியில் மாட்டிக் கொண்டிருந்தன.

இந்த ஐந்து விபத்துகளிலும் பலர் மரணமடைந்திருக்கக்கூடும். ஆனால் இன்று ராகவன் தொலைபேசியில் அழைத்து நேற்று திண்டிவனத்தில் சாலையில் நான் பார்த்த விபத்தில் மரணமடைந்தது ஐகாரஸ் பிரகாஷின் நெருங்கிய உறவினர்கள் என்றும், இன்றுதான் விஷயம் தெரிந்து பிரகாஷ் திண்டிவனம் சென்றுள்ளார் என்றும் சொன்னபோது மிகவும் வருத்தமாக இருந்தது. பிரகாஷும் மற்ற நண்பர்களும் அந்த வழியாகத்தான் நேற்றி இரவு சென்னைக்குப் போயிருக்கிறார்கள். அப்பொழுது பிரகாஷுக்குத் தெரிந்திருக்கவில்லை.

இப்பொழுது நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகள் அதிகமாயிருக்கின்றன. போகும் வழியெங்கும் எதிரே வரும் வண்டிகளின் முகப்பு விளக்குகள் high beam என்று கண்ணைக் கூசுமளவிற்கான பிரகாசத்திலேயே இருக்கின்றன. ஓட்டுனர்கள் high beamஇலிருந்து low beamக்கு மாற்றிக் கொள்வதில்லை. கிழக்குக் கடற்கரைச் சாலை போன்றவை நன்கு போடப்பட்டுள்ளதால் நான்கு சக்கர வண்டிகள் 100கிமி/மணி வேகத்திற்கு மேலும் செல்வதால் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வண்டிகளை வைத்துக் கொள்ள முடிவதில்லை. இந்தச் சாலைகளில் அதிகபட்ச வேக அளவு ஏதும் இருப்பதாகவும் தெரிவதில்லை. அப்படியிருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த வைக்க நெடுஞ்சாலைக் காவல்துறை ஏதும் இருப்பதாகவும் தெரிவதில்லை.

எனக்கு இந்தச் சாலைகளில் இரவு நேரங்களில் காரில் பயணம் செய்ய மிகவும் நடுக்கமாயிருக்கிறது.

இன்னமும் எத்தனை உயிர்கள் போக வேண்டுமோ?

நெய்வேலி இலக்கியச் சந்திப்பு - மேலும்

இதுபற்றிய முழுக் கட்டுரை ஒன்றை ராகவனின் வலைப்பதிவில் படிக்கவும்.

நெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 5

ஐந்தாம் அமர்வு 'படைத்ததில் பிடித்தது'. மாலன் விழாவுக்கு வந்திருந்த பல படைப்பாளிகளை மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். [நான் மேடையில் இருந்ததால் அத்தனை பேரையும் படமெடுக்க முடியவில்லை.]

அதன் பின்னர், நான்கு பேர்கள் தாங்கள் எழுதிய சிறுகதைகளையும், நான்கு பேர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளையும் வாசகர்களுக்குப் படித்துக் காண்பித்தனர்.

கவிதைப் படைப்பாளிகள்


அ.வெண்ணிலா

பா.சத்தியமோகன்

வைகைச்செல்வி

யுகபாரதி


சிறுகதைதைப் படைப்பாளிகள்


ஆர்.வெங்கடேஷ்

இரா.நடராசன்

ப.ஜீவகாருண்யன்

பாரதிபாலன்


இறுதியில் நாகூர் ரூமி நன்றி கூற, விழா முடிவடைந்தது.

நெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 4

நான்காம் அமர்வில் பா.சத்தியமோகனின் 'அப்பா வாசனை' என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. என்.எல்.சியின் முதன்மைப் பொதுமேலாளர் ஆர்.பாலசுப்ரமணியன் தலைமை தாங்க, ஜவஹர் அறிவியல் கல்லூரி, நெய்வேலியின் முதல்வர் மருதூர் அரங்கராசன் புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். [அப்படியே மன்மதராசா பாடலைக் கடுமையாகச் சாடினார். பாவம், அரங்கில் அமர்ந்திருந்த யுகபாரதி!]


சத்தியமோகன், ஆர்.பாலசுப்ரமணியன், அரங்கராசன், மாலன்

நெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 3

மூன்றாவது அமர்வு 'முயற்சியும் பயிற்சியும்' என்ற கணினியில் தமிழைப் பாவிப்பது பற்றிய செயல்முறை விளக்கம். இதில் நான் கணினி வழியாக ஒரு காட்சித் தொடரை அமைத்திருந்தேன். [PDF கோப்பாக அதனை நீங்கள் இங்கு பெறலாம். (533 kb)]


வெள்ளைச்சட்டையில் ஐகாரஸ் பிரகாஷும், நீலச்சட்டையில் நானும்.


பின்னர் மலேசியாவிலிருந்து வந்திருந்த முகுந்தராஜ் (எ-கலப்பை, தமிழா! உலாவி மற்றும் தமிழ் ஓப்பன் ஆஃபீஸ் புகழ்...) பரிச்செயலிகள் பற்றியும், தானும் உலகு-தழுவிய தன் நண்பர்களும் சேர்ந்து என்னென்ன பரிச்செயலிகளைத் தமிழ்ப்படுத்திக் கொண்டிருக்கிறோம், இதைச் செய்யத் தூண்டிய காரணங்கள் யாவை என்பது பற்றிப் பேசினார்.

கூட்டத்திற்கு வந்திருந்த எழுத்தாள, வாசகர்களுக்கு இருந்த சந்தேகங்களை நீக்குமாறு நான், பிரகாஷ், முகுந்த் மூவரும் கேள்விகள் அனைத்திற்கும் விடை சொன்னோம்.


ஐகாரஸ் பிரகாஷ், பா.ராகவன், மலேசியா முகுந்தராஜ்

நெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 2

சபாநாயகம்
இரண்டாவதாக 'படித்ததில் பிடித்தது' என்ற அமர்வு நிகழ்ந்தது. இந்த அமர்வில் எழுத்தாளர்கள் நளினி சாஸ்திரி, நாகூர் ரூமி, என்.சொக்கன், பா.ராகவன் ஆகியோர் தாங்கள் படித்த புத்தகங்களில் தங்களுக்குப் பிடித்தவைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். இந்த அமர்வுக்கு பெரியவர் வே.சபாநாயகம் தலைமை தாங்கி, பேசப்போகும் எழுத்தாளர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.


நளினி சாஸ்திரி
நளினி சாஸ்திரி, நாகூர் ரூமி எழுதிய 'அடுத்த விநாடி' என்னும் சுய முன்னேற்ற நூலைப் பற்றிப் பேசினார்.
நாகூர் ரூமி இரண்டு புத்தகங்களைப் பற்றிப் பேசினார். 'வானம் மட்டும் இருக்கிறது' என்னும் சத்தியமோகனின் கவிதைத்தொகுதி, ஜி.முருகனின் 'கறுப்பு நாய்' என்னும் சிறுகதைத் தொகுதி.
நாகூர் ரூமி

என். சொக்கன்
சொக்கன் குஷ்வந்த் சிங்கின் சுய சரிதையைப் பற்றிப் பேசினார்.
பா.ராகவன், வெங்கடேஷ் எழுதிய காப்ரியல் கார்சியா மார்க்குவேஸ் பற்றிய புத்தகத்தைப் பற்றிப் பேசினார்.
பா.ராகவன்

நெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 1

நேற்று நெய்வேலியில் திசைகள் மின்னிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சியும் இணைந்து நடத்திய இலக்கியச் சந்திப்புக்குப் போயிருந்தேன். அங்கிருந்தே நேரடியாக என் வலைப்பதிவில் நிகழ்ச்சியின் நடப்புகளைப் பதிவு செய்ய நினைத்திருந்தேன். அரங்கினுள் ரிலையன்ஸ் செல்பேசி வேலை செய்யவில்லை. அதனால் இன்றுதான் நேற்றைய நிகழ்ச்சிகளின் பதிவு.

இந்தச் சந்திப்பிற்கு தமிழ் எழுத்தாளர்கள், நெய்வேலி வாசகர்கள் என்று நல்ல கூட்டம்.



என்.எல்.சி பணியாண்மைத்துறை இயக்குநர் முனைவர் இரா.நரசிம்மன் குத்துவிளக்கேற்ற விழா தொடங்கியது. [இங்கேயும் குத்துவிளக்கா? மன்மதராசா இல்லையா?]

முதல் அமர்வு: "அறிய வேண்டியதும் களைய வேண்டியதும் - இலக்கியங்களிலிருந்த இன்று நாம் கற்க வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும் பற்றிய ஒரு உரத்த சிந்தனை".
மாலன்
இதில் மாலன் 'நம் மரபும் நவீனமும்' என்பது பற்றிப் பேசினார். முக்கிய சாரம்:
இன்று 'மறைமுகமாக, பூடகமாக' எழுதுவது சிறந்தது என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் பாரதி திருப்பித் திருப்பி சொல்வது "எளிய பதங்கள், எளிய சந்தம்". அந்த எளிமையை நோக்கிப் போக வேண்டியது இன்று கட்டாயம்.

- அறிதல் அவசியம், ஆனால் அறிதலைப் பகிர்தல் இன்னமும் அவசியம்
- மொழியில் எளிமை வேண்டும்
- பார்வையிலே நம்பிக்கை வேண்டும்

லத்தீன் அமெரிக்காவின் மொழி அழிந்து போய், ஐரோப்பிய மொழிகள் மேலே வரத் தொடங்கின. அதனால் அங்குள்ள இலக்கியவாதிகள் 'தம் மரபுக்குத்' திரும்பிப் போக வேண்டும் என்று மேஜிக்கல் ரியலிசம் போன்றவற்றைத் தொடங்கினார்கள். இன்றோ, தமிழில் பெருமையாக 'இருண்மை' பற்றிப் பேசுகிறார்கள். புரிந்து கொள்ள முடியாததை உயர்ந்த இலக்கியம் என்பது போலப் பேசுகிறார்கள்.

இன்று நமது முக்கியத் தேவை மொழியை மீட்டெடுப்பது. நாம் பாரதியின் வழியே உள்ளடக்கம், மொழி, பார்வை ஆகியவ்ற்றை எளிமைப்படுத்துவதன் மூலம் செய்ய வேண்டும்.


குறிஞ்சிவேலன்
தொடர்ந்து 'திசை எட்டும்' என்னும் மொழிபெயர்ப்பிற்கான காலாண்டிதழை நடத்திவருபவரும், சாஹித்ய அகாதெமி விருது பெற்றவருமான குறிஞ்சிவேலன் "அயல் இலக்கியங்களிலிருந்து அறிய..." என்பது பற்றிப் பேசினார்.

முதலில் கல்கியின் பொன்னியின் செல்வனில் ஆரம்பித்து பின்னர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன் (சுந்தர ராமசாமியின் தமிழாக்கம்), பின்னர் கன்னடம் கற்று கன்னட எழுத்தாளர்களான மாஸ்தி, பைரப்பா, மற்ற பலரின் படைப்புகளப் படித்தாராம். பின்னர் மலையாளம் கற்று தகழி, பஷீர், சேது, வாசுதேவன் நாயர், மற்ற பலரது படைப்புகளைப் படித்து, தமிழில் இதுமாதிரி இல்லையே என்ற எண்ணத்தில் இந்த எழுத்துகளை தமிழில் படிப்போர் எளிதாகப் புரிந்துகொள்ளுமாறு மொழிபெயர்க்கத் தொடங்கினாராம். இராமகிருஷ்ணன் என்பவர் மலையாளத்தில் 'சல்லிவேர்கள்' என்று எழுதியிருந்த கதையை (நனவோடை உத்தியில்) 1966இல் தமிழுக்கு மொழிபெயர்த்து தீபம் பத்திரிகைக்கு அனுப்ப, அவர்கள் இந்த மாதிரிக் கதைகள் தமிழில் யாரும் எழுதியதில்லை, அதனால் மக்களுக்குப் புரியாது என்று பிரசுரிக்கவில்லையாம். ஆனால் அதே பத்திரிகையே 1980இல், அதே மொழிபெயர்ப்பை வெளியிட்டதாம். கிட்டத்தட்ட 14 வருடங்கள் மலையாளத்துக்குப் பிந்திய நிலையில் இருக்கிறது தமிழ் என்கிறார் குறிஞ்சிவேலன்!

அதேபோல் ஒருமுறை கணையாழி வாசகர் வட்டக் கூட்டத்தில் கி.ராஜநாராயணன் எழுத்தில் கதை, கவிதை, நாடகம், நாவல் என்ற வெவ்வேறு உத்திகளைப் போல் புதிதாக ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டதற்கு குறிஞ்சிவேலன், தான் எஸ்.கே.பொத்தக்காட் (அப்படித்தான் என் காதில் விழுந்தது... சரியான பெயர் என்னவென்று தெரியவில்லை) எழுதியிருந்த நாவலும் நாடகமும் இணைந்த உத்தியில் ஒரு நாவலைப் படித்திருந்ததாகக் கூற, கஸ்தூரி ரங்கன், அந்த நாவலைத் தமிழ்ப்படுத்தித் தரச் சொல்லி கணையாழியில் வெளியிட்டாராம். 1970களில் சேது எழுதிய பாண்டவபுரம் என்ற மாய யதார்த்த மலையாள நாவலை தமிழ்ப்படுத்தி விழுதுகள் பதிப்பகம் மூலம் வெளியிட்டாராம்.

அதன்பின் அயல் மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட வேண்டியவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலைக் கொடுத்தார். வேகமாகச் சொன்னதால் என்னால் குறிப்பெடுத்துக் கொள்ள இயலவில்லை.

Sunday, January 25, 2004

நெய்வேலியில் திசைகள் இயக்கம்

திசைகள் மின்னிதழ், நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்தும் 'திசைகள் இயக்கம்' எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு இன்று நெய்வேலியில் தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி பற்றிய முழு விவரங்கள் அவ்வப்போது இங்கு வெளியாகும்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பா.ராகவனுக்கு இன்று பாரதீய பாஷா பரிஷதின் விருது கிடைத்துள்ளது என்பது இந்த நேரத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி.

Saturday, January 24, 2004

ராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 2

இந்தக் கட்டுரையின் முதல் பகுதி

இப்படியெல்லாம் பல கேள்விகளைக் கேட்டு விட்டு, இலங்கைப் பிரச்சினைக்கு சில தீர்வுகளை முன்வைக்கிறார் சுவாமி. அவையாவன:

1. இலங்கைக்கு இந்திய முறைக் கூட்டாட்சியைக் கொண்டு வருவது. [அதாவது தமிழர்கள் வாழும் பகுதியைத் தனி மாநிலமாக்கி, federal முறையை வலுப்படுத்துவது என்று நினைக்கிறேன்...]

2. இலங்கையை இரண்டாகப் பிரித்து ஈழம் என்ற புதுத் தனி நாட்டினை உருவாக்குவது.

3. இலங்கையை இந்தியாவுடன் இணைப்பது. [சிரிக்க வேண்டாம்! சுவாமி நிசமாகவே இந்த யோசனையை முன்வைக்கிறார்.]

இந்த மூன்று வழிகளில் இரண்டாவதைக் கடுமையாக எதிர்க்கிறார் சுவாமி. இது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும், இந்தியாவிலும் பிரிவினைவாதத்திற்கு வழிகோலும் என்பது அவர் கருத்து. முதலாவது தீர்வு இலங்கைத் தமிழர்களின் மிகக்குறைந்த பட்சக் கோரிக்கை என்றும், காலம் கடக்கக் கடக்க, இது நடைபெறுவதில் மிகக் குறைந்த சாத்தியங்களே உள்ளது என்றும் சொல்கிறார். மேலும் புலிகளை ஒழிக்காமல் முதலாவது தீர்வு நடைமுறைக்கு வந்தால் அது இரண்டாவதற்குத் தானே வழிவகுக்கும் என்பதும் சுவாமியின் கருத்து. மூன்றாவது தீர்வைத்தான் இந்தியர்கள் அதிகமாக விரும்புகிறார்கள் என்றும் சொல்கிறார்.

இந்தத் தீர்வுகளுக்கு அப்பால் ராஜீவ் காந்தியின் கொலைக்குக் காரணம் என்று இந்திய நீதிமன்றங்களால் தீர்மானிக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரை இந்தியாவிற்குக் கொண்டுவந்து அவர்களுக்கு உரிய தண்டனையைக் கொடுத்தே தீர வேண்டும், அப்படி இதுவரை நடக்காதது இந்திய நாட்டிற்கு உள்ள பெருத்த அவமானம் என்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதி மீது ஆழமான குற்றச்சாட்டு எதையும் வைக்கவில்லை சுவாமி. ஆனால் EPRLF தலைவர்கள் சென்னையில் கொலை செய்யப்பட்டதில் அப்பொழுதைய தமிழக அரசுக்கும் (கருணாநிதி தலைமையிலான திமுக அரசு) பெரும்பங்கு உண்டு என்று பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்டதைத் தானும் முன்மொழிகிறார். மதிமுக (வைகோ), திராவிடர் கழகம், நெடுமாறன் ஆகியோர் விடுதலைப் புலிகளிடம் காசு வாங்கியவர்கள் என்ற குற்றச்சாட்டும், விடுதலைப் புலிகள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் என்ற குற்றச்சாட்டும் புத்தகம் எங்கும் வருகிறது. பாஜக, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் புலிகள் ஆதரவாளர்கள், பால் தாக்கரே வெளிப்படையாகப் புலிகளை ஆதரித்து, அவர்கள் ராஜீவைக் கொலை செய்ததை வரவேற்றவர்; ராம் ஜேத்மலானி புலிகள் மற்றும் இலங்கைச் சாமியார் (செக்ஸ் சாமியார்) பிரேமானந்தாவுக்கு ஆதரவாக வழக்காடியவர் என்று இவர்கள் மீதெல்லாம் சாடல்.

மொத்தத்தில் சுவாமிக்குப் பிடிக்காதவர்கள் அனைவர் மேலும் சரமாரியாகக் குற்றச்சாட்டுகள்.

ராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 1

ராஜீவ் காந்தி கொலை, விடை கிடைக்காத வினாக்களும், கேட்கப்படாத கேள்விகளும், டாக்டர் சுப்ரமண்யன் சுவாமி, (தமிழாக்கம் சுதாங்கன்), அல்லயன்ஸ் கம்பெனி, பக்: 256, ரூ. 125. முதல் பதிப்பு ஏப்ரல் 2001.

சுவாமியின் புத்தகம் நேர்த்தியில் படு குறைவு. முதல் அத்தியாயத்தில் பாதி சுய-புராணம். என்னவோ ராஜீவ் காந்தி சு.சுவாமியின் மீது எக்கச்சக்க அன்பு வைத்திருந்ததாகவும், சுவாமியைக் காங்கிரஸுக்கு வந்துவிட வேண்டுமென்று மன்றாடிக் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் செத்தாலும் ஜனதா கட்சியை விட்டு விலகமாட்டேன் என்று ஜெயபிரகாஷ் நாராயணிடம் சத்தியம் செய்து கொடுத்திருந்ததால், மற்றவர்கள் அனைவரும் கட்சியை விட்டு ஓடிவிட்டாலும், தான் மட்டும் கட்சியை விட்டு இன்றுவரை மாறவில்லையென்றும்... ஒரே புலம்பல்.

தான் அமைச்சராகவிருந்த நேரத்தில் சந்திரசேகர் அமைச்சரவையில் தான் ஒருவர்தான் நியாயமான, நம்பிக்கையானவர்; யஷ்வந்த் சின்ஹா (இப்பொழுது பாஜக வெளியுறவுத் துறை அமைச்சர்), கமால் மொரார்கா இருவரும் பாஜக/ஆர்.எஸ்.எஸ் காரர்கள், ஜனதா தள/காங்கிரஸ் உறவைக் கெடுக்க வந்த கோடாலிகள் என்றும், அர்ஜுன் சிங் மீது பல கிலோக்கள் கூவம் சாக்கடை வண்டல் என்று ஒவ்வொருவர் மீதும் சாக்கடையை அள்ளி வீசியுள்ளார்.

மொத்தத்தில் இந்தப் புத்தகத்தின் சாரத்தை 5 பக்கங்களில் அழகாக எழுதியிருக்கலாம். அதை விட்டு 250 பக்கங்களை வீணாக்கியுள்ளார்.

சுவாமி கேட்கும் சில கேள்விகள்:
- ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது திருப்பெரும்புதூர் வந்தே தீர வேண்டும் என்று ஒருசிலர் முயன்றனர். அவர் அங்கு வருவதைத் தோழமைக் கட்சி ஜெயலலிதாவும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும் விரும்பவில்லை. அப்படியானால் ராஜீவ் காந்தியை திருப்பெரும்புதூருக்கு வரவழைத்தது யார்?

- திருப்பெரும்புதூரில் கூட்டம் நடத்திய கமிட்டியின் தலைவர் மரகதம் சந்திரசேகருக்கு (இன்னமும் உயிருடன் இருக்கிறாரா?) ஒருசில விஷயங்கள் தெரியும், ஆனால் மௌனமாக இருக்கிறார். ஏன்?

- மார்கரெட் ஆல்வாதான் ராஜீவ் திருப்பெரும்புதூர் செல்ல முக்கிய காரணம் என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆல்வா இதுபற்றி வாயைத் திறக்கவில்லை. ஏன்?

- ராஜீவைத் தமிழகம் வரவைக்க வற்புறுத்தியதில் மணிசங்கர் அய்யரும் முக்கியமானவர். கொலை நடந்த நாளிலிருந்து மணிசங்கர் அய்யர், வழக்கைத் திசை திருப்பும் வண்ணம், இந்தக் கொலையைச் செய்தது இஸ்ரேலின் மொஸாத் என்றே சொல்லி வருகிறார். இவரை விசாரிக்க வேண்டும்.

- போலீஸ் பாதுகாப்பின்றி தானு எப்படி முன்-பின் தெரியாத போதும் மாலையிட அனுமதிக்கப்பட்டார்? இவரை ஏற்கனவே பெண் காவலர்கள் மூன்று முறை துரத்தியிருந்தனராம்.

- அப்பொழுது சண்டே பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த வீர் சாங்வி புலிகள் ஆதரவாளர். இவர் எழுதியிருந்த ஒரு கட்டுரையின் மூலம்தான் புலிகளுக்கு ராஜீவ் மீண்டும் பதவிக்கு வந்தால் தங்களுக்கு ஆபத்து என்று உணர்ந்து ராஜீவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர். [இப்பொழுது வீர் சாங்வி ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர், தொலைக்காட்சிகளில் செவ்விகளையும் நடத்துகிறார்.]

- ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகளுடன், ஆர்.எஸ்.எஸ், காங்கிரஸின் அர்ஜுன் சிங் ஆகியோருக்கும் ஏதோ விதத்தில் தொடர்பு உள்ளது என்றும் குற்றம் சாட்டுகிறார். நேரிடையாகச் சொல்லாவிட்டாலும், மறைமுகமாக இதை வலியுறுத்துகிறார். ஏனெனில் இவர்களெல்லாரும் ராஜீவ் கொலையினால் ஒருவகையில் பலனடைந்துள்ளனராம். [ராஜீவ் காந்தி இருந்திருந்தால் அயோத்திப் பிரச்சினையை தீர்த்திருப்பாராம். அதனால் ஆர்.எஸ்.எஸ் இன் வீச்சு குறைந்திருக்குமாம். அர்ஜுன் சிங்குக்குத் தானே பிரதமராக ஆசையாம்.]

- நீதிபதி ஜெயின் உண்மையைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். நீதிபதி ஜெயின் வேண்டுமென்றே மொஸாத் மீது சந்தேகத்தைத் திசை திருப்ப முயன்றார் என்பது சுவாமியின் குற்றச்சாட்டு.

- ராம் ஜேத்மலானி மீது பல குற்றச்சாட்டுகள்.

- வேதாரணியம் மிராசுதார் சண்முகம் "தற்கொலை"யின் மர்மம் ஆராயப்பட வேண்டும்.

- 'ஒற்றைக்கண்' சிவராசன் STFஇனால் குண்டடி பட்டு இறந்தான். அவனது உடல் ஏன் உடனடியாக தகனம் செய்யப்பட்டது? தனுவின் உடல் மட்டும் சாட்சிக்காக சென்னையில் வைக்கப்பட்டிருந்ததே?

- ராஜீவ் கொலையை விசாரிக்க லண்டன் போன ஒரு காவல் அதிகாரியின் பெட்டி காணாமல் போனதாம், அந்தப் பெட்டியில் என்ன இருந்தது?

- திருப்பெரும்புதூர் உள்ளூர்க் காங்கிரஸ் தலைவர் லதா கண்ணனின் மகள் கோகிலாவை மேடையில் கவிதை படிக்க வைத்து நேரத்தை வளர்த்தனராம்.... இந்த கோகிலாவின் தந்தை ஒரு ரயில்வேத் தொழிலாளி, ஆனால் இன்று பெரும் பணக்காரர். இவர் எப்படிப் பெரும் பணக்காரரானார்?

Friday, January 23, 2004

நேற்றைய இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி

நேற்றே எழுத வேண்டுமென்று இருந்தது தள்ளிப்போய்விட்டது.

லக்ஷ்மண், யுவ்ராஜின் அபாரமான ஆட்டம், கில்கிறிஸ்டின் அதிரடித் தாக்குதல், மழை, இந்தியப் பந்து வீச்சாளர்களின் பிரமாதமான பந்து வீச்சு, பாலாஜியின் கடைசி ஓவரில் லீயின் அசுரத் தாக்குதல் சிக்ஸர். அருமையான ஆட்டம். ஒருநாள் பிரியர்கள் எதிர்பார்த்த விருந்து.

தொடக்கத்திலிருந்து தொடங்குவோம். டாஸ் வென்ற கங்குலி சொல்லிவைத்தாற்போல் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். லீ முதலில் ஒரு பந்தை விலாவில் குத்துமாறு வீசி, அடுத்த பந்தை ஆஃப் ஸ்டம்பிற்கு வெகு வெளியே வீச, கங்குலி அதை ஒத்தி கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். பார்த்திவ் படேல் அவ்வப்போது நன்றாகவும், மற்ற நேரங்களில் தடுமாறியும் விளையாடிக் கொண்டிருந்தார். கில்லஸ்பியின் அளவுக்கு அதிகமாக வீசப்பட்ட ஒரு பந்தை அருமையாகக் கவர் திசையில் நான்காக அடித்தார். மற்றுமொரு அளவு குறைந்து வந்த பந்தை, சிறிதும் பயமின்றி ஹூக் செய்தார். சரியாக மட்டையில் படாவிட்டாலும், பந்து விக்கெட் கீப்பருக்கு மேல் பறந்து சென்றது. இவ்வளவு குள்ளமாக இருக்கும் ஒருவர் பயமின்றி ஹூக் செய்வது பார்க்க அழகாக இருந்தது. எதிர்ப்பக்கத்தில் லக்ஷ்மண் சிறிதும் கவலையின்றி நிதானமாக ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தார். ஆனால் கில்லஸ்பியின் ஏழாவது ஓவரின் கடைசிப் பந்தில் (அத்துடன் அவரது ஸ்பெல் முடிந்திருக்கும்) தேவையின்றி ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே போனதைத் தட்டி கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்தார். அப்பொழுது அணியின் எண்ணிக்கை 63, 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு.

அடுத்து திராவிட் உள்ளே நுழைந்தபோது கூட்டத்தில் ஒரு பகுதியினர் "மஞ்சள் எச்சில்" விவகாரத்தினால் திராவிடை எதிர்த்து சப்தமெழுப்பினர். அதனலோ என்னவோ, திராவிட் ஏதோ வெறியுடன் ஆடுவது போல் இருந்தது. ஹார்வேயின் ஓவரில் கடைசி இரண்டு பந்துகளை அநாயாசமாகப் பாயிண்ட் திசையிலும், நேராக ஒரு ஸ்டெரெயிட் டிரைவாகவும் அடித்தார். அடுத்த பிக்கெல் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தைக் கவர் திசையில் அடித்து நான்கைப் பெற்றார். ஆறு பந்துகளில் மூன்று நான்குகள் சேர்த்து, பனிரெண்டு ரன்களுடன் நிதானமான விளையாட்டிற்கு மாறியிருக்கலாம். ஆனால் விதி - அடுத்த பந்தை கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுக்க வைத்தது. சாதாரணமாக இப்படிப்பட்ட பந்துகளை திராவிட் ஆட்ட ஆரம்பத்தில் வெளியே போகுமாறு விட்டிருப்பார். ஸ்கோர் 80/3.

அதன்பின் நடந்தது அற்புதமான ஆட்டம். யுவ்ராஜ் சிங் தன் வாழ்க்கையில் இதுவரை இப்படியொரு இன்னிங்ஸை விளையாடியதில்லை. தொடக்கத்தில் மெதுவாக விளையாடினாலும், விடாது அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒன்றுகளைப் பெற்றுக் கொண்டிருந்தார். சளைக்காமல் லக்ஷ்மணும் ஈடுகொடுத்தார். அவ்வப்போது யுவ்ராஜ் காத்திரமாக ஒரு நான்கைப் பெற்றுக் கொண்டிருந்தார். இவரது 'வேகன் வீல்' (ஓட்டங்கள் எடுத்துள்ளதை வரைந்த சக்கரம்) படத்தைப் பார்க்கையில் மைதானத்தின் ஒரு மூலையை விடாது ரன் எடுத்துள்ளது தெரிய வரும். 80களில் இருக்கும்போது லக்ஷ்மணின் எண்ணிக்கையைத் தாண்டிய யுவ்ராஜ் ஒருநாள் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை எட்டினார். (99இலிருந்து 103க்குப் போன அந்த ஒரு ஷாட் தான் அவரது இன்னிங்ஸிலியே அழுக்கான ஷாட்! 'ஃபிரெஞ்சு கட்', ஸ்டம்பிற்கு வெகு அருகாமையில் சென்று எல்லைக் கோட்டைக் கடந்தது.) சதத்தைத் தாண்டியபின் பேட்டை நழுவ விட்டு விட்டு, வானத்தை நோக்கி இருகைகளையும் உயரத் தூக்கி ஆட்டி, ஒரு சிறுபிள்ளைக்கே உரித்தான சந்தோஷத்தைக் காட்டிக் கொண்டார். 49ஆவது ஓவரில் 'கடைசி ஓவர் ஸ்பெஷலிஸ்ட்' ஹார்வேயை த்வம்சம் செய்து விட்டார். முதலிரண்டு பந்துகளில் ஆளுக்கொரு ரன் கிடைத்தது. மூன்றாவது பந்து மிட்விக்கெட் திசையில் ஆறு, நான்காவது பந்து டீப்-பேக்வார்ட்-ஸ்கொயர்-லெக் திசையில் நான்கு, ஐந்தாவது பந்து நேராக லாங்-ஆன் திசையில் ஆறு, ஆராவது பந்து கவர் திசையில் நான்கு என்று அந்த ஓவரில் 22 ரன்கள் கிடைத்தன.

இதற்கிடையில் லக்ஷ்மண் சிறிதே தடுமாறி தன் சதத்தை எட்டினார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தன் ஆளுமையை லக்ஷ்மண் மீண்டும் வெளிப்படுத்தினார். கடைசி ஓவரில் யுவ்ராஜ் தன் விக்கெட்டை இழந்தாலும், 296 ஓட்டங்களை இந்தியா எடுக்க அவரது இன்னிங்ஸே முக்கியக் காரணமாயிருந்தது.

இந்திய இன்னிங்ஸில் மழையினால் சிறிது ஆட்டம் தடைப்பட்டாலும், அதனால் அப்பொழுதைக்கு ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. ஆனால் முன்னிரவில் மழை வலுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகத் தெரிந்தது.

ஆஸ்திரேலியா கில்கிறிஸ்ட், காடிச் ஆகியோருடன் இன்னிங்ஸைத் துவக்கியது. அகர்கார் முதல் ஓவரிலிருந்தே தாறுமாறாகப் போட ஆரம்பித்தார். பதானும் துல்லியமாகப் பந்து வீசுவதை விட கில்கிறிஸ்ட் ஆக்ரோஷமாகத் தாக்கும் வண்ணம் அளவுக்கு அதிகமாகவோ, அல்லது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில், அடிக்கும் அளவிலோ பந்து வீசினார். கில்கிறிஸ்ட் ஏதோ அவசரமாக பஸ் பிடித்து வீட்டுக்குப் போக வேண்டியவர் போல அடிக்கத் தொடங்கினார். முதலிரண்டு ஓவர்களில் தலா ஆறு ரன்கள், அடுத்த இரண்டு ஓவர்களில் தலா பனிரெண்டு ரன்கள், ஏழாவது ஓவரில் 50 தாண்டப்பட்டது. இதற்கிடையில் காடிச் தானும் அடிக்கப்போய் பதானின் பந்தை மிட்-ஆனில் இருக்கும் கங்குலியிடம் சுளுவாகக் கேட்ச் கொடுத்தார். எண்ணிக்கை 24/1. கில்கிறிஸ்டும், பாண்டிங்கும் எளிதாக ரன்களைக் குமிக்க ஆரம்பித்தனர். அகர்காருக்குப் பதில் வந்த பாலாஜி நான்கு நல்ல பந்துகளுடன், ஒன்றைக் குப்பையாக வீச, கில்கிறிஸ்ட் அதனை கவர் திசையில் பறக்கடித்தார். பாலாஜி அணியின் பத்தாவது ஓவரை வீச ஆரம்பித்த போது மழை கொட்டத் தொடங்கியது.

மீண்டும் ஆட்டம் ஆரம்பித்த போது டக்வொர்த்-லூயிஸ் முறையில் ஆஸ்திரேலியாவின் இலக்கு 34 ஓவர்களில் 225 என்று தீர்மானிக்கப்பட்டது. கில்கிறிஸ்ட் சிறிதும் தன் முறையை மாற்றவில்லை. யார் வந்து பந்து வீசினாலும் பந்து எல்லைக்கோட்டுக்கே சென்றது. மீண்டும் மழை வரும்போல இருந்ததால் ஆஸ்திரேலியா எப்படியாவது 25 ஓவர்கள் வரையிலாவது ரன்களை வேகமாகக் குவிக்க வேண்டும் என்று செல்வது போல இருந்தது. [இரண்டு அணிகளும் 25 ஓவர்களாவது விளையாடியிருந்தால்தான் அந்த ஆட்டம் முடிந்ததாகக் கருதப்படும். இல்லாவிட்டால் ஆட்டம் வெற்றி-தோல்வியின்றி முடிந்ததாக அறிவிக்கப்படும்.] கங்குலியோ, ஆட்டத்தை முடிந்த அளவு மெதுவாகக் கொண்டுபோவதற்கான வழிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு ரன்-அவுட்டை முயற்சிக்கையில் யுவ்ராஜ் சிங் கீழே விழ, அதுதான் சாக்கு என்பது போல் யுவ்ராஜுக்கு மைதானத்தின் நடுவில் வைத்தியம் நடந்தது. கோபம் கொண்ட பாண்டிங் நடுவர்களிடம் முறையிட, நடுவர் பக்னார் கங்குலியிடம் கடுப்படிக்க, இப்படியாகக் கொஞ்ச நேரம் விரயமானது.

அடுத்த ஓவரை வீச இர்ஃபான் பதான் வந்தார். இதுதான் இவரது கடைசி ஓவர். சற்றே வேகம் குறைந்து வீசப்பட்ட, ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற இந்தப் பந்தை பாண்டிங் படேலிடம் தொட்டு கேட்ச் கொடுத்தார். ஸ்கோர் 150/2. கங்குலியின் முயற்சி ஒருவகையில் வெற்றியடைந்தது. அதற்கடுத்த பந்து பதானின் மிக அருமையான பந்து - வேகமாக வீசப்பட்டு ஆஃப் ஸ்டம்பில் விழுந்து, வீசப்பட்ட கோணத்தில் வெளியே சென்றது. புதிதாக உள்ளே வந்த ஆட்டக்காரர் மார்ட்டினால் அந்தப் பந்தை படேலிடம் கேட்ச் கொடுப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. எண்ணிக்கை 150/3. அடுத்து முரளி கார்த்திக் வீசிய ஓவரில், சற்றே காற்றில் தூக்கி எறியப்பட்ட பந்தினை கில்கிறிஸ்ட் பந்து வீச்சாளரிடமே அடித்து கேட்ச் கொடுக்க, திடீரென ஆஸ்திரேலிய அணி சரியத் தொடங்கியது. கில்கிறிஸ்ட் 92 ரன்களுடன் ஆட்டமிழந்தார். எண்ணிக்கை 154/4.

சைமாண்ட்ஸும், பெவானும் ஓரளவுக்கு நிலைமையை சீர்தூக்க முயன்றனர். கங்குலியின் ஒரு பந்தை மிட்-ஆஃப் திசையின் மீது தூக்கி ரன்களுக்கு அடித்த சைமாண்ட்ஸ், அடுத்த பந்தை மிட்-விக்கெட் திசையில் தூக்கி அடித்து அகர்காரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். எண்ணிக்கை 176/5. அதற்கடுத்து கார்த்திக் வீசிய ஓவரின் முதல் பந்தில் புதிதாக உள்ளே வந்த மைக்கேல் கிளார்க் இறங்கி அடிக்க வர, சுலபமான ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பை படேல் கோட்டை விட்டார். இதுவே இந்தியாவின் தோல்விக்கு அடித்தளமாக அமைந்தது எனலாம். இந்த விக்கெட் விழுந்திருந்தால் கிட்டத்தட்ட ஆட்டம் அப்பொழுதே முடிந்திருக்கும். நிறையத் தடுமாறிய பின்னர் பெவான் கங்குலியின் இன்-கட்டர் ஒன்றில் ஸ்டம்ப்களை இழந்தார். எண்ணிக்கை 195/6. ஹார்வே ரன்-அவுட் ஆனார். எண்ணிக்கை 202/7. கிளார்க் 21 ரன்களை எடுத்தார், கங்குலியின் பந்தில் பதானியால் மிட்-ஆன் எல்லைக்கோட்டில் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். எண்ணிக்கை 210/8. அந்த 21 ரன்கள் மிக முக்கியமானவை.

பிரெட் லீயும், ஆண்டி பிக்கெலும் சேர்ந்து கடைசி இரண்டு ஓவர்கள் இருந்த போது 15 ரன்கள் எடுக்க வேண்டும். அகர்கார் 33ஆவது ஓவரை வீசினார். இவரை ஒருவேளை 34ஆவது ஓவரை வீச வைத்திருக்கலாம். 33ஆவது ஓவரில் நான்கே ரன்களை மட்டும் கொடுத்தார். கடைசி ஓவரை வீச பாலாஜி வந்தார். வெற்றி பெற எடுக்க வேண்டியது 11 ரன்கள். முதல் பந்தில் லீக்கு ஒரு ரன். இரண்டாவது பந்தில் பிக்கெலுக்கு ஒரு ரன். மூன்றாவது பந்தை லீ ஸ்வீப்பர் கவருக்குத் தட்டிவிட்டு வேகமாக ஒரு ரன்னை எடுத்து, இரண்டாவது ரன்னையும் முடித்தார். ரோஹன் காவஸ்கர் சற்றே வேகமாக அந்தப் பந்தைத் தடுத்திருக்க வேண்டும். நான்காவது பந்து... அளவுக்கு சற்று அதிகமாக, ஆஃப் ஸ்டம்பில் வீசினார் பாலாஜி. லீ தன் மட்டையைச் சுழற்றினார். பந்து மிட்-ஆஃப் திசையில் எல்லைக்கோட்டுக்கு வெளியே பறந்தது. ஆறு ரன்கள். அத்துடன் ஆஸ்திரேலியா டக்வொர்த்-லூயிஸ் இலக்கை அடைந்தது. மீதமுள்ள இரண்டு பந்துகளில் வெற்றி பெற எடுக்க வேண்டியது ஒரு ரன்னே. கங்குலி அனைத்துத் தடுப்பாளர்களையும் உள்ளே கொண்டுவந்தார். லீ பந்தை கவருக்குத் தட்டி விட, அங்குள்ள தடுப்பாளர், சற்றே தடுமாற, லீயும், பிக்கெலும் வேகமாக ஓடி ஒரு ரன்னைப் பெற்றனர்.

ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

யுவ்ராஜ் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்த ஆட்டம் இதை விடப் பரபரப்பாக இருந்தால் எத்தனை பேருக்கு அதனைத் தாங்கும் இதயம் இருக்கும் என்று தெரியவில்லை!

ஸ்கோர்போர்டு
முந்தைய இந்தியா-ஸிம்பாப்வே ஆட்டம்

ஜெயலலிதா ஊழல் அலர்ட்: ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கு

ஸ்பிக் பங்குகள் வழக்கில் ஜெயலலிதா மீதான் குற்றச்சாட்டுகள் சரியான முறையில் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் மீதான ஊழல் வழக்கினை சிறப்புத் தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதற்கு முன் டான்ஸி நில வழக்கிலும் ஜெயலலிதா மீதான வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகள் பற்றிய முழுப் பட்டியல் இதோ.

சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கு கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. அது கர்நாடகத்தில் நடைபெறக் கூடாது, வேறெந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளுங்கள் என்று ஜெயலலிதா தரப்பில் வாதம் நடந்து கொண்டிருக்கிறது.

முந்தைய ஜெயலலிதா ஊழல் வழக்குகள் அலர்ட்

Wednesday, January 21, 2004

தமிழில் பின்னூட்டம் அடிக்க

பலருக்கு என் வலைப்பதிவைப் படிக்க முடியும் (இயங்கு எழுத்துரு இருப்பதனால், அல்லது Win XP போன்றவைகளில் லதா எழுத்துரு இருப்பதனால்). ஆனால் இயங்கு செயலிகள் (plugins) ஏதும் இல்லாமையால் விமரிசனம்/பின்னூட்டத்தில் தமிழில் எதையும் எழுத முடியாதிருக்கலாம்.

இதற்கு சுரதாவின் யூனிகோடு மாற்றியைப் பாவிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது:

1. மற்றொரு உலாவி சாளரத்தில் http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm செல்லவும்

2. மேல் கட்டத்தில் ஆங்கில எழுத்துகளில் அடித்தால், கீழே யூனிகோடு குறியீட்டில் தமிழ் எழுத்துகளில் தெரியும்.

3. அதனை வெட்டி, என்னுடைய விமரிசனப் பகுதியில் ஒட்டவும். அவ்வளவுதான்.

ராஹுல் திராவிட் மீது குற்றச்சாட்டு, அபராதம்

நேற்று நடந்த இந்தியா-ஸிம்பாப்வே ஒருநாள் போட்டியில் ராஹுல் திராவிட் பந்தின் நிலையை செயற்கைப்பொருட்களால் மாற்ற முயன்றார் என்ற குற்றச்சாட்டினை மூன்றாவது நடுவர் பீட்டர் பார்க்கர் வைத்தார். நேற்று தொலைக்காட்சியில் பார்க்கும்போது திராவிட் பந்தின் மேல் மஞ்சளான ஒரு பொருளால் தேய்ப்பது தெரிய வந்தது. தன் வாயில் மென்று கொண்டிருந்த ஏதோ ஒரு 'சூயிங் கம்' கலந்த எச்சிலால் பந்தைத் தேய்த்திருக்கிறார்.

ரெஃபெரீ கிளைவ் லாய்ட், திராவிடின் நேற்றைய ஆட்டத்துக்கான வருமானத்தில் 50%ஐ அபராதமாக விதித்திருக்கிறார். திராவிட் போன்ற ஆட்டக்காரர்கள் பல வருடங்களாக கிரிக்கெட் விளையாடுகின்றனர். எது சரி, தவறு என்றெல்லாம் இவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், இது வேண்டுமென்றே செய்தது; இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு, விதிகளுக்குப் புறம்பாக, வாய்ப்புகளை அதிகரிக்க வைக்கவேண்டும் என்று செய்யப்பட்டது என்று தோன்றவில்லை.

Tuesday, January 20, 2004

பெயரிலி வலைப்பதிவு

இன்று வலைப்பூ மூலம் பெயரிலி (anonymous) என்பவரது வலைப்பதிவைப் பார்த்தேன். மரத்தடி, ராயர்காபிகிளப் மற்றபல தமிழ் யாஹூ குழுமங்களில் உறுப்பினராக இருக்கும் ஒருவரது வலைப்பதிவு என்று புரிகிறது.

வேண்டுமென்றே மொழியைக் குழப்பி கொச்சைத் தமிழில் எழுதியிருந்தாலும் பல 'புனிதப் பசுக்களை' அங்கதம் செய்வதாக அமைந்திருக்கிறது (என் வலைப்பதிவுகளையும், யாஹூ குழும அஞ்சல்களையும் சேர்த்துத்தான்). நான் அ.மார்க்ஸ் பற்றி எழுதியிருந்ததைக் கண்டித்து "[மார்க்ஸ்] பத்ரியவிட தமிழ நெடுங்காலம் அறிஞ்சவருங்கிறத பத்ரி தெரிஞ்சுக்கிறது நல்லது" என்று சொல்லியிருக்கிறார். ஒத்துக் கொள்கிறேன். மார்க்ஸ் கடுமையான உழைப்பாளி. அவர் வெளியிட்டிருக்கும் புத்தகங்களும், ஒவ்வொரு வாரமும்/மாதமும் அவர் எழுதும் கட்டுரைகளும் அவரது தரப்பு நியாயத்தை வெகு அழகாக முன்வைக்கின்றன. அவர் கருத்துக்களோடு அனைவரும் ஒத்துப் போகாவிட்டாலும், மரியாதை தரவேண்டிய அறிஞர்.

மாலனின் திசைகள் முதல் தமிழ் யூனிகோடு மின்னிதழா? இல்லை மகேனின் எழில்நிலா முதல் மின்னிதழா? ஏன் சாரு நிவேதிதாவைக் கண்டித்தவர்கள் மாலனைக் கண்டிக்கவில்லை என்பது போல் எழுதியுள்ளார். மகேனின் தளம் உபயோகமானது, ஆனால் மின்னிதழ் என்ற வரையறைக்குள் அதைக் கொண்டுவர முடியாது என்பது என் எண்ணம்.

இந்தியா - ஸிம்பாப்வே ஒருநாள் போட்டி

இன்று நடந்த போட்டியில் இந்தியா எளிதாகவே வெற்றி பெற்றது. கடைசியில் ஸிம்பாப்வே எதிர்பாராத விதத்தில் போராட ஆரம்பித்ததால் அதை எதிர்பார்க்காத இந்திய அணி சற்றே தடுமாறியது. ஆனால் ஸிம்பாப்வே விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்து கொண்டே வந்ததால் இந்திய அணியின் வெற்றி உறுதியாகி விட்டது.

இன்றைய போட்டியில், டெண்டுல்கருக்குப் பதிலாக பார்த்திவ் படேல் விளையாடினார். கங்குலி மீண்டும் டாஸில் வென்று முதலில் பேட்டிங் என்று தீர்மானித்தார். கங்குலியும், படேலும் ஆட்டத்தைத் துவக்கினர். படேல் ஒருசில ஆக்ரோஷமான அடிகளை விளையாடிய பின்னர் ஹீத் ஸ்டிரீக்கின் பந்தை 'புல்' செய்யப் போய் ஸ்டம்பை இழந்தார். இவர் அடித்ததில் மிக அழகானது பிலிக்நாட்டின் பந்தில் ஸ்கொயர் லெக்கில் அடித்த ஒரு 'புல் ஷாட்'. பயமின்றி, ஆஃப் திசையில் எழுந்து வந்த பந்தை சுழற்றி, மடக்கி ஸ்கொயர் லெக் திசையில் அடித்தார். கங்குலி, ஷான் இர்வைனின் ஒரு அளவு குறைந்து வந்த பந்தை ஹூக் செய்யப் போய், பந்து மட்டையில் மேல் விளிம்பில் பட்டு ஷார்ட் ஃபைன் லெக் திசையில் போக, அங்கு ஹோண்டா மிக அருமையாக, பின்னால் சாய்ந்து, எம்பி, வில்லைப வளைத்தது போல் உடம்பைப் பின்னோக்கி வளைத்து, கையின் விளிம்பில் அருமையாகப் பிடித்தார். நிச்சயமாக இந்த கேட்ச் இந்தத் தொடரின் ஒரு அற்புதங்களில் ஒன்று என்று சொல்லலாம். அதன்பின், லக்ஷ்மண் அதிக நேரம் நிற்காமல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

திராவிட் மீண்டும் ஒருமுறை மிக அருமையாக விளையாடினார். யுவ்ராஜ் களமிறங்கியதால் திராவிட் பொறுமையாக அணிக்கு வலு சேர்ப்பதாக நின்று, நிதானித்து ஆட, யுவ்ராஜ் அடித்து, ஓட்டங்கள் சேர்க்கலானார். பந்து களத்தில் பட்டு மெதுவாகவே வந்ததனால் இந்திய மட்டையாளர்களால் எளிதாக ஓட்டங்களைக் குமிக்க முடியவில்லை. திராவிடும், யுவ்ராஜும் நான்காவது விக்கெட்டுக்கு 114 ரன்களை நேர்த்தபின்னர், ரே பிரைஸின் உள்நோக்கி வந்த சுழற்பந்தில் யுவ்ராஜ் ஆஃப் திசையில் அடிக்க முயன்று, தோற்று, பந்து ஸ்டம்பில் பட்டு அவுட்டானார். அதன் பின்னர் ரோஹன் காவஸ்கரும், திராவிடும் பந்துக்கு ஒரு ரன் வீதம் அடித்து 61 ரன்கள் சேர்த்தனர். கடைசியில் ஓட்டங்களை அதிகரிக்க முயன்று, காவஸ்கர் ஸ்டிரீக் பந்தில் 'பவுல்ட்' ஆனார்; திராவிட் புல்-டாஸ் ஒன்றை கவருக்கு அடித்து கேட்ச் கொடுத்தார். 50 ஓவர்களில் இந்திய அணி 255 ரன்களையே எடுக்க முடிந்திருந்தது. இது சற்றே குறைவாகத் தோன்றினாலும், ஆடுகளத்தில் பந்து மிகவும் வேகம் குறைந்து வருவதாலும், ஸிம்பாப்வே அணியில் அனுபவக் குறைவாலும் இதுவே போதும் என்று தோன்றியது.

ஹேமங் பதானியை காவஸ்கருக்கு பதில் அனுப்பியிருந்திருக்க வேண்டும்.

ஸிம்பாப்வே தன் இன்னிங்ஸை ஆரம்பித்த போது நேஹ்ராவும், பதானும் நன்கு பந்துகளை வீசினர். பதான் வீசிய ஒரு அளவு குறைந்து வந்த பந்து, மட்டையின் விளிம்பில் பட்டு ஹெல்மெட்டின் கம்பிக்கு மேல் புகுந்து மார்க் வெர்முலனின் வலது புருவத்துக்கு மேல் ஆழமாக வெட்டியது. அவர் பாதியில் களத்தை விட்டு வெளியேறி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பதான் வீசிய மற்றொரு பந்தில் டிராவிஸ் பிரெண்டின் கையிலும் அடிபட்டது. ஆனால் இன்ரைய ஆட்டத்தின் ஸ்டார் பௌலர் பாலாஜியே. இன்று நடுவருக்கு அருகாமையிலிருந்து பந்துகளை வீசினார். பந்துகளை ஆஃப் ஸ்டம்பிலிருந்து வெளியே நகருமாறு செய்தார். நல்ல வேகத்துடனும் வீசினார். இவரும், பதானும் வீசிய பந்துகளை அடிக்க முடியாமல், 'பின்ச் ஹிட்டர்' என்று வேகமாக ரன்களை அடிக்க வேண்டியவராக வந்த பிரெண்ட், அவசரமாக ஒரு ரன்னைத் திருடப் போய் கங்குலியால் ரன் அவுட் ஆனார். அதுவரை நிதானமாகவும், திரமையுடனும் ஆடி வந்த கிராண்ட் பிளவர் நேஹ்ராவின் பந்தை டீப் கவருக்குத் தூக்கி அடித்து லக்ஷ்மணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரன்கள் அதிகம் அடிக்காமல் ஆண்டி பிலிக்நாட்டும், பாலாஜியின் பந்து வீச்சில் யுவ்ராஜ் சிங்கிடம் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இன்று கங்குலி காவஸ்கரைப் பந்து வீச அழைக்காமல் தானே ஐந்தாவது பந்து வீச்சாளராகப் பந்து வீச ஆரம்பித்தார். எதிரணி கேப்டன் ஸ்டிரீக்கின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

சிறிது நேர மழை இடைவெளிக்குப் பின்னர், பெருமளவு பின்தங்கியிருந்த ஸிம்பாப்வே ததேந்திர தாய்புவின் விக்கெட்டை கங்குலியிடம் இழந்தது. மிகவும் பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த கார்லைல் கங்குலியின் பந்தை வெட்டியாட முயல, பந்து விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலின் கால் காப்பின் மேல் மடலின் இடுக்கில் பொதிந்தது. கேட்ச் பிடித்து விட்டேன் என்று படேல் அழும்பு பிடிக்க, நடுவர் அதை அவுட் என்று தீர்மானித்தார்! (அது அவுட்தான்! ஒருவர் கையால்தான் கேட்ச் பிடிக்க வேண்டும் என்றில்லை, உடலின் பாதுகாப்புக் கவசங்களுக்குள் பந்து மாட்டிக்கொண்டாலும் அது கேட்ச் என்றே தீர்மானிக்கப்படும்.) இப்படியாக கங்குலிக்கு மூன்று விக்கெட்டுகள் கிடைத்திருந்தன. ஆட்டம் இனி இந்தியா கையில் என்றிருக்கும்போது ஒரு மாற்றம் ஏற்பட்டது.

சாதாரணமாகத் துவக்க ஆட்டக்காரராக இருக்கும் டியான் இப்ராஹிம் ஒன்பதாவதாகக் களமிறங்கினார். ஏற்கனவே உள்ளே இருந்த ஷான் இர்வைனுடன் ஒன்று சேர்ந்து கும்ப்ளே, மற்றும் கங்குலியை இருவரும் பந்தாடத் துவங்கினர். ஓட்டங்கள் எங்கிருந்தெல்லாமோ வரத் துவங்கின. ஒரு ரன்னே கொடுக்க வேண்டிய இடங்களில் இந்தியத் தடுப்பாளர்கள் இரண்டு ரன்களை வழங்க ஆரம்பித்தனர். ஆட்டம் மிகவும் நெருக்கமாகப் போய் முடியும் என்ற எதிர்பார்ப்பு ஸிம்பாப்வே ரசிகர்களுக்கு வர ஆரம்பித்தது. ஆனால் இர்வைன், இப்ராஹிம் இருவருமே பந்தை உயரத் தூக்கி அடித்து கங்குலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்கள். கடைசியாக ரே பிரைஸ் ரன் எடுக்கப் போய் ஹோண்டாவை ரன் அவுட்டாக்கினார். அடிபட்டிருந்த வெர்முலன் விளையாட வரமுடியாததனால், ஸிம்பாப்வே இன்னிங்ஸ் முடிந்தது.

யுவ்ராஜ் சிங்கிற்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

இன்றைய சிறப்பான ஆட்டம்: ராஹுல் திராவிடின் நேர்த்தியான பேட்டிங், யுவ்ராஜ் சிங்கின் பேட்டிங், மற்றும் பாலாஜியின் மிக அருமையான பந்து வீச்சு. இரண்டு விக்கெட்டுகள்தான் இவருக்குக் கிடைத்தது என்றாலும் நேரிலோ, தொலைக்காட்சியிலோ பார்த்தவர்கள் இவரது பந்து வீச்சு எப்படி முந்தைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலிருந்து இன்றைக்கு வெகுவாக முன்னேறியுள்ளது என்பதை உணர்வார்கள். (ஒருவேளை இவர் என்னுடைய வலைப்பதிவைப் படிக்கிறாரோ என்று நினைக்கிறேன். நான் சொன்ன அறிவுரைகளை இன்று நன்கு பின்பற்றியிருந்தார்.)

ஸ்கோர்போர்டு

முந்தைய ஆட்டம்: இந்தியா v ஆஸ்திரேலியா ஒன்று | இரண்டு

பீஷ்மா டாங்குகளில் திரிசூலம் - கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு

கண்ணில் படாமல் மறைந்திருந்த செய்தி. இடதுசாரி கம்யூனிஸ்டுகள் இந்திய இராணுவத்தின் 'பீஷ்மா' டாங்குகளில் திரிசூலச் சின்னம் இருப்பதைக் கண்டித்திருக்கிறார்களாம்.

கம்யூனிஸ்டுக் கட்சியின் வரதராஜன் மதச்சின்னங்களை டாங்கில் பொறித்திருப்பது நாட்டின் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு எதிராக உள்ளது என்று புதிதாகக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார். நம் நாட்டில் அக்னி, த்ரிஷூல், பீஷ்மா, அர்ஜுன் என்று இந்துப் புராணங்களில் வரும் கடவுளர்கள், நாயகர்கள் பெயர்கள்தான் ஆயுதங்களுக்குப் பெயராகப் பயன்படுத்தப்படுகிறது. எதிர்ப்பதாயிருந்தால் இந்தப் பெயர்களையே எதிர்க்க வேண்டியிருக்கும். திரிசூலச் சின்னம் இருப்பதை எதிர்த்தால், த்ரிஷூல் என்று பெயர் வைத்திருப்பதற்கு என்ன சொல்ல? இதனால் பாஜகவுக்கு ஓட்டுகள் அதிகமாக விழுந்திடுமோ என்ற எண்ணமா? பொதுமக்கள் டாங்கில் என்ன சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது என்று தினமும் பார்த்துக் கொண்டா இருக்கிறார்கள்?

Monday, January 19, 2004

இர்ஃபான் பதான், பாலாஜி, ரோஹன் காவஸ்கர்

நேற்றைய ஆட்டம் பற்றிய குறிப்பில் பலவற்றைக் குறிப்பிட முடியவில்லை. அதனால் இந்தத் தனிப்பதிவு.

பாலாஜியிடம் என்ன குறை?

பாலாஜியின் பந்து வீச்சில் மிக முக்கியக் குறை அவர் பந்துகளை கிரீஸின் முனையிலிருந்து வீசுவதே. இதனால் இவர் வீசும் பந்துகள், வலது கை மட்டையாளரின் ஆஃப் ஸ்டம்பில் விழுந்தால், லெக் ஸ்டம்பிற்கு வெகு வெளியே போகிறது. எந்த நடுவரும் lbw கொடுக்க மாட்டார். இதனைக் கருத்தில் வைத்திருக்கும் மட்டையாளரும் தைரியமாக மட்டையைச் சுழற்றி அடிக்க முடியும். சில முறை slower ball எனப்படும் கையின் பின்புறமாகப் பந்தை மெதுவாக வீசும்போது இவரது பந்து நடு அல்லது லெக் ஸ்டும்பில் விழுந்தால், லெக் ஸ்டம்பிற்கு வெகு வெளியே போகிறது. நேற்று கூட இதனால் ஐந்து வைடுகள் கொடுத்தார். திராவிட் போன்ற அரைகுறை விக்கெட் கீப்பரால் இதுபோன்ற பந்துகளைத் தடுக்கவே முடியாது. இந்தத் தொடரில்தான் பாலாஜி வலதுகை மட்டையாளருக்கு வெளியே போகும் பந்துகளை வீசுகிறார். அதாவது ஆஃப் ஸ்டும்பிலோ, அதற்கு வெளியிலோ விழுந்து நேராக, அல்லது ஸ்லிப் திசையை நோக்கி நகரும் பந்து. இவர் கிரீஸின் முனையிலிருந்து வீசாமல், ஸ்டம்பின் அருகே வந்து வீசினால், உள்ளே வரும் பந்து, வெளியே செல்லும் பந்து இரண்டினாலும் விக்கெட் எடுக்க முடியும்.

அப்படியென்றால் நேற்று எப்படி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்ற கேள்வி எழும். பாண்டிங்கின் விக்கெட் வீசிய பந்தின் வேகத்தினால் விழுந்தது. பாண்டிங் 'புல் ஷாட்' அடிக்க முயன்றார், ஆனால் பந்தின் வேகத்தைக் கணிக்க முடியாததனால் முன்னதாகவே 'shuffle' செய்து (இது பாண்டிங் எப்பொழுதும் செய்யும் தவறு, டெஸ்டு போட்டிகளின் இரண்டு முறையாவது இப்படி அவுட் ஆகியுள்ளார்) அடிக்க, பந்து அடி விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. மார்ட்டின் ஆஃப் ஸ்டும்புக்கு வெகு வெளியே வீசிய பந்தை, கால்களை நகர்த்தாமல் பாயிண்டில் அடிக்க, யுவ்ராஜினால் அழகாகப் பிடிக்கப் பட்டது. ஆனாலும் இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் இதிலேதான் மிக அருமையாகப் பந்து வீசியுள்ளார் பாலாஜி. சில ஓவர்களில் முதல் நான்கு பந்துகளை மிக அருமையாக வீசுவார், கடைசி இரண்டு பந்துகளில் கோட்டை விட்டு, நான்குகளை வழங்கி விடுவார். இவர் இன்னமும் அதிகம் பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக, ஸ்டம்புக்கு அருகே வந்து பந்து வீசக் கற்க வேண்டும்; ஸ்ரீநாத் மாதிரி மிக அதிகமாக நடு ஸ்டம்பிலிருந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே போகும் பந்துகளை வீசாதிருக்க வேண்டும்; வலது கை ஆட்டக்காரருக்கு ஆஃபிலிருந்து வெளியே செல்லுமாறு பந்துகளை வீச வேண்டும். அப்படியெல்லாம் செய்தால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு.

பதானிடம் என்ன நிறை?

இர்ஃபான் பதான் - நம்பிக்கை நட்சத்திரம். இவரது பந்து வீச்சில் ஒரு வேகம் இருக்கிறது. ஹேய்டன், கில்கிறிஸ்ட் போன்ற பெரிய ஆசாமிகளிடம் பந்து வீசும்போது சிறிதும் பயம் இல்லை. நன்கு எழும்புமாறு பந்துகளை வீசுகிறார். டெஸ்டில் கில்கிறிஸ்டை வீழ்த்திய யார்க்கர் ஒன்றிற்கே லட்சம் தரலாம். நேற்று இவர் ஹேய்டனை வீழ்த்தியதே இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதற்கு இரண்டு பந்துகள் முன்னால்தான் ஹேய்டன் முன்னால் வந்து உயரத் தூக்கி அடித்த கேட்ச் பாலாஜியால் நழுவ விடப்பட்டது. மீண்டும் அதுபோல் முன்னேறி அடிக்க வந்தபோது பதான் வீசிய பந்து ஆஃப் ஸ்டும்பில் விழுந்து, நன்கு உயர்ந்து வந்து, சற்றே வெளியேறியது. இந்தப் பந்தை ஹேய்டனால் தொட்டு கேட்ச் மட்டுமே கொடுக்க முடிந்தது. அதேபோல் ஆரம்பத்தில் கில்கிறிஸ்ட் மட்டையைக் கோடாலி போல் சுழற்றிய போதும், விடாது இவர் வீசிய வேகப்பந்துகளினால்தான் சரியாக அடிக்க முடியாமல் பாலாஜியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கில்கிறிஸ்ட். ஒவ்வொரு முறை தொடக்க ஆட்டக்காரர்கள் முன்னேறி வந்து அடிக்க முற்பட்டபோதும், பதான் பந்து வீச்சின் வேகத்தாலும் (140 கிமீ/மணி), குறைந்த அளவில் பந்து வீசியதாலும், மட்டையாளர்களைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டே இருந்தார்.

இவர் செய்ய வேண்டியது: கடைசி ஓவர்களில் யார்க்கர் வீசப் பழக வேண்டும், இன்னமும் துல்லியமாக வீச முயல வேண்டும்; வேகத்தை சிறிதும் குறைக்கக் கூடாது.

ரோஹன் காவஸ்கர்

ஒன்றும் பெரிதாக நேற்று செய்து விடவில்லை. பந்து வீச்சு சாதாரணம். ஆனால் அவர் தன் பந்து வீச்சிலேயே பிடித்த கேட்ச் மிக அருமையானது. இந்த ஒருநாள் போட்டித் தொடரின் தலைசிறந்த கேட்ச் என்று சொல்லலாம். பக்கவாட்டில் படுத்தபடி பாய்ந்து non-striker முன்னால் விழுந்து விரலின் நுனியில் பிடித்தார். அதுவும் சைமாண்ட்ஸின் விக்கெட்.

இந்தியாவிற்கு ஆல்-ரவுண்டர்கள் தேவைப்படுவதால் இவரது பெயர் முன்னால் வந்துள்ளது. சஞ்சய் பங்காரை விடப் பொருத்தமானவர். தந்தையின் ஆதரவால்தான் வந்தார் என்றில்லை. இவர் விளையாடுவது மேற்கு வங்காளக் கிரிக்கெட் அணிக்கு. அதனால் கங்குலிக்கு இவரது விளையாட்டில் பரிச்சயம் அதிகம் உண்டு, அதுவும் ஒரு காரணமே.

Sunday, January 18, 2004

இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி

கிரிக்கெட் பற்றி எழுதக்கூடாது என்று நிலையிலிருந்து சிறிது மாற எண்ணம். இனி, இந்தியா விளையாடும் ஆட்டங்களை, நான் பார்க்க நேரிடும்போது, அவற்றைப் பற்றிய என் எண்ணங்களைப் பதிக்கவிருக்கிறேன்.

இன்று விபி தொடரின் ஐந்தாவது போட்டி, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடந்தது. இந்திய அணியில் சேவாக் இடம்பெறவில்லை. டாஸில் வென்ற கங்குலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். பகலிரவுப் போட்டிகளில் வேறு எந்த முடிவையும் எடுப்பது இந்நாட்களில் உசிதமல்ல.

கங்குலி-டெண்டுல்கர் ஜோடி, பல நாள்களுக்குப் பிறகு ஆட்டத்தைத் துவங்கியது. எழும்பி வந்த ஒரு பந்தை சமாளிக்க முடியாமல் கங்குலி வில்லியம்ஸின் பந்து வீச்சில், அவரிடமே பிடி கொடுத்து ஆட்டத்தை இழந்தார். அதற்கு முன்னரேயே, கங்குலியின் கேட்சை மார்ட்டின் ஸ்லிப்பில் கோட்டை விட்டிருந்தார். கங்குலியைத் தொடர்ந்து விளையாட வந்த லக்ஷ்மண், டெண்டுல்கருடன் இணைந்து 110 ஓட்டங்கள் எடுத்தார். கில்லஸ்பி, வில்லியம்ஸ் இருவரும் நன்கு பந்து வீசினர். ஆனால் தொடர்ந்து பந்து வீச வந்த பிரெட் லீயை டெண்டுல்கரும், லக்ஷ்மணும் கைமா செய்து விட்டனர். மூன்று ஓவர்களின் ஆறு நான்குகள் கொடுத்த லீயின் பந்து வீச்சு அந்த நேரத்தில் 3-0-30-0 என்று இருந்தது. டெண்டுல்கர் 40களில் இருக்கும்போது பந்தினைக் கால்திசையில் திருப்பி ஆடும்போது குதிகால் பிசகி விட்டது. வலியுடனேயே கடைசிவரை விளையாடிக் கொண்டிருந்தார். மாற்று ஓட்டக்காரராக கங்குலியை மட்டுமே பெறமுடியும் என்ற நிலையில் (ஒரு இன்னிங்க்ஸில் ஆட்டமிழந்த வீரர்களே ரன்னராக வரமுடியும்.) டெண்டுல்கர் அதற்கு கால்வலியுடன் ஓடுவதே விவேகமானது என்று எண்ணியிருக்கலாம்!

நொண்டிக்கால் டெண்டுல்கரும், சாதாரணமாகவே மெதுவாக ஓடும் லக்ஷ்மணும், எங்கெல்லாம் மூன்று ஓட்டங்கள் எடுக்க முடியுமோ, அங்கு இரண்டும், எங்கு இரண்டு கிடைக்குமோ, அங்கு ஒன்றும், ஒன்று எடுக்கக்கூடிய ஒருசில இடங்களில் ஒன்றுமில்லாமலும் ஓட்டம் எடுத்தனர். அப்படியும், ஆஸ்திரேலியப் பந்து வீச்சாளர்கள் வெகு சாதாரணமாகப் பந்து வீசி, ஓவருக்கு ஐந்திலிருந்து ஆறு ஓட்டங்களை சுலபமாக வழங்கி வந்தனர். ஒரு கட்டத்தில் ஓட்டங்கள் அனைத்தும் கால் திசையிலேயே வந்து கொண்டிருந்தன. கிட்டத்தட்ட ஐந்து ரன்-அவுட் வாய்ப்புகள் ஆஸ்திரேலிய வீரர்களால் நழுவ விடப்பட்டது. இந்திய அணி பந்து வீசிய போது யுவ்ராஜ் சிங்கும் பதிலுக்கு மரியாதை நிமித்தமாக நாலைந்து ரன்-அவுட் வாய்ப்புகளை நழுவ விட்டார். இப்படி சற்றே தூக்கம் வரவழைக்குமாறு விளையாட்டு போய்க்கொண்டிருந்தபோது ஆட்டத்தின் ஓட்டத்துக்குப் புறம்பாக, சதம் எளிதாகக் கிடைக்கும் வாய்ப்பிருந்தும், டெண்டுல்கர் சைமாண்ட்ஸின் பந்து வீச்சில் பந்துவீச்சாளருக்கே சுலபமாகக் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

உள்ளே வந்த ராஹுல் திராவிட் ஒரு காலத்தில் ஒருநாள் போட்டிக்கே லாயக்கில்லாதவர் என்று பெயரெடுத்தவர். இன்று வந்தது முதற்கொண்டே அருமையாக விளையாடினார். லக்ஷ்மண் தன் பாத்திரத்தைப் புரிந்து கொண்டு, ஒத்து ஊதுபவராகவே கடைசிவரை இருந்தார். இந்தக் கூட்டணி வெறும் 20 ஓவர்களில் 133 ஓட்டங்களைப் பெற்று, ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் திருப்பியது. 48ஆவது ஓவரில் ஓட்டங்களை அதிகரிக்க, திராவிட், ஹார்வேயின் பந்துகளைத் தூக்கி அடிக்க ஆரம்பித்தார். அந்த ஓவரின் மூன்றாவது, நான்காவது பந்துகள் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடிக்கப்பட்டு நான்கு ரன்களுக்குப் பறந்தன. அதற்கடுத்த பந்தினை மிட்-ஆன் திசையில் மேலே அடிக்க, அங்கு எல்லைக்கோட்டின் அருகே கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார் திராவிட். 50ஆவது ஓவரின் கடைசிப் பந்தை மிட்-ஆன் மேல் தூக்கி அடித்து நான்கு ஓட்டங்களைப் பெற்ற லக்ஷ்மண் தன் சதத்தையும், அணியின் முன்னூறையும் கொண்டு வந்தார்.

இதுதான் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி முதல்முறையாக 300 ஓட்டங்களைத் தாண்டுவது. பிரிஸ்பேனில் நடந்திருக்கும் ஒருநாள் போட்டிகளிலேயே இதுதான் ஒரு அணி பெறும் அதிக ஓட்டங்களாகும்.

ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்திலிருந்தே வெறி கொண்டவர்கள் போல ஆட ஆரம்பித்தனர். கில்கிறிஸ்டும், ஹேய்டனும் ஒவ்வொரு பந்துக்கும் மட்டையைச் சுழற்றினர். முதல் நான்கு ஓவர்களில் 8, 9, 12, 9 ஓட்டங்கள் முறையே வந்தன. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒவ்வொரு பந்துக்கும் இறங்கி வந்து மட்டையைச் சுழற்றி அடித்தனர். ஆனால் இர்பான் பதானும், ஆஷிஸ் நேஹ்ராவும் பயந்து நடுங்காமல் பந்து வீச்சை திறம்படவே செய்தனர். ஆறாவது ஓவரில் கில்கிறிஸ்ட் பதான் வீசிய பந்தை உயரத் தூக்கி அடிக்க, மிட்-ஆனில் பாலாஜி நன்கு கேட்ச் பிடித்தார். உள்ளே வந்த பாண்டிங் தயங்கித் தயங்கியே விளையாடினார். பின்னர், பாலாஜி வீசிய பந்தை மிட்விக்கெட் திசையில் அடிக்கப்போக, விளிம்பில் பட்ட பந்து வானளாவ சென்று ஸ்லிப்பில் லக்ஷ்மணிடம் கேட்சாகிப் போனது. ஆஃப் ஸ்டும்புக்கு வெகு வெளியே வீசப்பட்ட பாலாஜியின் பந்தை மட்டையால் வெட்டி அடித்த மார்ட்டின், அந்தப் பந்து பாயிண்டில் இருந்த யுவ்ராஜ் சிங்கின் கைக்குள் மாட்டியது. ரோஹன் காவஸ்கரின் முதல் ஓவரில் சைமாண்ட்ஸ் பந்துவீச்சாளருக்கே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 141/4 என்ற நிலையில் மைக்கேல் கிளார்க், மாத்தியூ ஹேய்டனுடன் சேர்ந்து விளையாட வந்தார். ஹேய்டனும் தன் ஆட்டத்தை சற்றே நிதானமாக்கி சதத்தைத் தாண்டினார்.

ஹேய்டன் இப்படியே போனால் தாங்காது என நினைத்த கங்குலி பதானைப் பந்து வீச்சிற்கு மீண்டும் அழைத்தார். முதல் பந்தை ஹேய்டன் உயரத் தூக்கி அடிக்க, பாலாஜி கையில் விழுந்த கேட்சை மிட்விக்கெட்டில் எல்லைக்கோட்டுக்கருகே நழுவ விட்டார். ஆனால் அதிகம் சேதமாகாமல், மூன்றாவது பந்தில் ஹேய்டன் விக்கெட் கீப்பர் திராவிடிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆஸ்திரேலியாவிடம் ஜெயிக்கப் போதுமான பலம் இல்லை. பாலாஜியும், பதானும் ஆட்டம் முழுமைக்குமே அருமையாகப் பந்து வீசினர். இதில் பதான் இந்தியாவிற்குக் கிடைத்திருக்கும் மிக முக்கியமான சொத்து.

ஆட்ட நாயகானாக லக்ஷ்மண் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் திராவிடுக்கே இந்த விருது போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.

ஸ்கோர்போர்டு

Saturday, January 17, 2004

பத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 5

பக்வான் சிங்
கடைசியாகப் பேசிய சென்னைப் பத்திரிகையாளர் யூனியனின் தலைவர் பக்வான் சிங் பல சுவாரசியமான தகவல்களை அளித்தார். இதுவரை நான் கேட்டேயிராதவை இவை. சட்டமன்றங்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் எப்படி உரிமைகள் கிடைத்துள்ளன, இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் உரிமைகள் ஆகியவை பற்றிப் பேசியபிறகு, உத்திரப் பிரதேசத்தில் (எந்த வருடம் என்று தெரியவில்லை) நடந்த கூத்து ஒன்றினைப் பற்றிச் சொன்னார். அந்த சட்டமன்றம் இரண்டு பத்திரிகை நிருபர்கள் மீது உரிமைப் பிரச்சினை என்னும் பெயரால் தண்டனை வழங்கியதாம். அதை எதிர்த்து அந்த இருவரும், ஒரு வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் பெயில் கேட்டுள்ளனர். உடனே சட்டமன்ரம் அந்த வழக்கறிஞர் மீதும் உரிமைப் பிரச்சினை எழுப்பி, தண்டனை அளித்ததாம். பெயில் வழங்கிய இரண்டு நீதிபதிகளையும் சிறையில் அடைக்கச் சொன்னதாம். நடுங்கிய நீதிபதிகள் இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்குப் போனதும், அந்த நீதிமன்றத்தின் 28 நீதிபதிகளும் ஒன்றாக ஒரு அமர்வில் உட்கார்ந்து இந்த வழக்கினை எடுத்துக் கொண்டனராம். இதற்கிடையில் குடியரசுத் தலைவர் ஈடுபட்டதும், உத்திரப் பிரதேச சட்டமன்றம் கீழிறங்கியதாம்! இதைப்பற்றிய முழு விவரங்கள் யாரிடமாவது உள்ளதா?

மகாராஷ்டிர நீதிமன்றம் ஒரு நீதிபதி அடங்கிய விசாரணைக் கமிஷனை நியமித்து ஒரு மருத்துவமனையில் நடந்த குளறுபடிகளை விசாரிக்க உத்தரவிட்டதாம். விசாரித்த நீதிபதி, அந்த விவகாரத்தில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும், சுகாதார அமைச்சர் ஆகியோர் மீது தவறு என்று தன் அறிக்கையை சமர்ப்பித்தாராம். உடனே சட்டமன்றம் அந்த நீதிபதி சட்டமன்ற அவதூறு செய்தார் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதாம்!! இதுவும் பின்னர் மேலிடத் தலையீட்டால் நின்றுபோனதாம்! இது பற்றியும் எனக்குத் தகவல்கள் தேவை. [இதையெல்லாம் பார்க்கும்போது தமிழக சட்டமன்றம் செய்தது வெறும் ஜுஜுபி என்றே தோன்றுகிறது!]

ஆஸ்திரேயாவில் நடைபெற்ற ஒரு உரிமைப் பிரச்சினை வழக்கைப் பற்றிப் பேசிய பக்வான் சிங், ஆஸ்திரேலியா ICCPR (International Covenant on Civil and Political Rights) என்னும் சர்வதேசச் சட்டத்துக்கு 1978இலிருந்து உடன்படுவதாகச் சொல்லியிருந்தனர். அங்கு பாராளுமன்றத்தில் இரண்டு பத்திரிகை நிருபர்கள் மீது ஒரு உரிமை மீறல் பிரச்சினை எழுந்துள்ளது. அதில் ஒரு கமிட்டி விசாரணை செய்து அவ்விருவருக்கும் தண்டனை வழங்கியதாம். உடனே அந்த இருவரும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்காடி, தங்களை விசாரணை செய்த கமிஷனில் உள்ள இரண்டு உறுப்பினர்கள் தங்கள் மீது பிரச்சினையை எழுப்பியவர்கள், ஆகவே அவர்களை உள்ளடக்கிய ஒரு கமிஷனிடமிருந்து தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று முறையிட, சர்வதேச நீதிமன்றமும் அதை ஒத்துக் கொண்டு, அவர்கள் மீதான தண்டனையை ரத்து செய்ததாம்.

ஆனால் தமிழக சட்டமன்றத்தில் எழுப்பப்படும் உரிமைப் பிரச்சினையில் முறையிடும் கட்சியின் உறுப்பினர்களே விசாரணை செய்து தண்டனை கொடுக்கும் குழுவிலும் உள்ளனர். இதனால் எப்படி நியாயம் கிடைக்கும் என்ற கேள்வியை எழுப்பினார். மேலும் முதலமைச்சரின் தோண்டர்கள் (அமைச்சர்கள் மற்றும் இதர அடிப்பொடியினர்) தன் தலைவருக்கு யார்மீது கோபம் உள்ளதோ, அவர்களை நிர்மூலம் செய்வதன் மூலமே தலைவரின் அன்பைப் பெறமுடியும் என்ர வகையில் செயல்படுகின்றனர் என்றார்.

இதன் பிறகு கேள்வி பதில்கள் தொடர்ந்தன. ஒரு கேள்விக்குப் பதில் சொல்லும்போது நீதிபதி தாமஸ், புகழ்பெற்ற Searchlight வழக்கு நடந்தபோது உத்திரப் பிரதேச சட்டமன்றத்தில் (மேல் சொன்னப்பட்ட) நிகழ்ந்த கூத்து நடந்திருக்கவில்லை. அப்போழுதைய பெரும்பான்மைத் தீர்ப்பில், சட்டமன்றங்களின் உரிமைகள் அதிகமானது என்ற தீர்ப்பே வெளியானது. அப்பொழுதே நீதிபதி சுப்பாராவ் அதனை எதிர்த்து சிறுபான்மைத் தீர்ப்பை வழங்கியிருந்தார். தற்போதைய வழக்கு Searchlight வழக்கின்போது இருந்த பெஞ்சை விடப் பெரிய பெஞ்சினால் விசாரிக்கப்பட்டு, இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கலாம் என்றார்.

இது மாதிரியான கூட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு உள்ள உரிமைகள், பத்திரிகைகளுக்குள்ள உரிமைகள், மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற அதிகார துஷ்பிரயோகங்கள் வெளியாகும். இதுபோன்ற அடுத்த கூட்டம் மும்பையில் நடக்கப்போகிறதாம்.

பத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 4

வீரேந்திர குமார்
INS தலைவர் வீரேந்திர குமார் பேசுகையில் சட்டமன்றங்கள் தண்டிக்கப்படுபவருக்கு மேல்முறையீடு உரிமை கூடத் தராதவகையில் நடந்து கொள்கின்றன என்று குற்றம் சாட்டினார். சட்டமன்றங்கள், பாராளுமன்றம் ஆகிய இடங்களில் என்ன பேசப்பட்டாலும், அதனை முழுதாக அச்சிட உரிமை வேண்டும் என்றார். (அதாவது அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுதல் என்னும் உரிமையே இருக்கக்கூடாது என்றார்.) மிகவும் ஆவேசமாக, உணர்வுபூர்வமாகப் பேசினார்.

அரசியல்வாதிகள் வாய்ப்பு கிடைத்தால் மிசா போன்ற எமர்ஜென்சி சமயத்தில் பயன்படுத்திய சட்டங்கள், ஒப்பொழுது நடைமுறையில் உள்ள போடா போன்ற சட்டங்கள் (பொடாவை ஆதரித்த வைகோ இன்று அதன்மூலமே சிறையில் இருப்பதைக் குத்திக்காட்டினார்) போல பத்திரிகைகளை அடக்க ஏதேனும் வழி கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றார். அரசியல்வாதிகள் பதவி கிடைத்ததும் தங்களைச் சுற்றி SPG வீரர்களை வைத்துக் கொண்டு, தங்களுக்கு பெருமதிப்பு வந்துவிட்டது போல நடந்துகொள்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால், பொதுச்சட்டத்தை எப்படி களங்கப்படுத்துவது என்பதே தங்கள் பணி என்பதுபோலச் செயல்படுகிறார்கள். ஒரு சாதாரணக் குடிமகன் நடுத்தெருவில் சிறுநீர் கழித்தால் அவார் உடனடியாகக் கைதுசெய்யப்படுவார். ஆனால் ஒரு சட்டமன்ற, பாராளுமன்ர உறுப்பினர் இதைச் செய்தால் அவரைக் கைது செய்யமுடியாது என்றார்.

சட்டமன்றங்களுக்கு தண்டனை தரும் அதிகாரமே இருக்கக்கூடாது என்றார். உரிமை மீறல் என்று குற்றம் சாட்டி, நாளை சட்டமன்றம் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கினால் என்ன் ஆவாது என்று கேள்வி எழுப்பினார். பின்னர் நீதிபதி தாமஸ் ஒரு கேள்விக்குப் பதில் தருகையில் இதனைக் குறிப்பிட்டு, இந்தக் கேள்வி தன்னை வெகுவாகப் பாதித்தது என்றும், இப்பொழுதுள்ள நிலைமையில் ஒரு சட்டமன்றம் வெளியாள் ஒருவருக்கு ஏதோ காரணம் காட்டி ஆயுள் தண்டனை கொடுத்தால் நீதிமன்றங்களால் எந்த சட்டத்தை முற்படுத்தி பாதிக்கப்பட்டவரின் வழக்கை ஏற்றுக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை என்றார். நீதிமன்றங்கள் இதுவரை சட்டமன்றங்கள் வரைந்துள்ள சட்டங்களின் உள்ளாகவே நீதியை வழங்க முடியும். சட்டமன்றங்களும், பாராளுமன்றமும் தங்கள் உரிமைகளை உடனடியாக வரைடறுக்காவிட்டால் குழப்பமே மிஞ்சும் என்றார்.

வீரேந்திர குமார் மேலும் பேசுகையில் தமிழக சட்டமன்றம் 'supremacy and majesticity" என்றெல்லாம் பேசுகிறதே? ஆனால் எப்பொழுது அந்த மன்றத்தின் அவைத்தலைவர் முதலமைச்சர் காலில் விழுந்து வணங்குகிறாரோ, அப்பொழுதே அந்த சட்டமன்றத்தின் supremacyக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது; majesticityக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது என்றார்.

INS சட்டமன்ற உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் ஆகிய பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு நாடு முழுவதும் செல்லும் என்றார்.

பத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 3

ஷேகர் குப்தா
சிறிது இடைவேளைக்குப் பின்னர், ஷேகர் குப்தா தன் பேச்சைத் துவக்கினார். 'தி ஹிந்து' போலவே தன் பத்திரிகை மீதும் குஜராத் சட்டமன்றம் இரண்டு உரிமைப் பிரச்சினைகளை எழுப்பியுள்ளது என்றார். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' குஜராத் சட்டமன்றத்தின் நடவடிக்கைகளைப் பற்றி எழுதும் போது "shouted", "committed a gaffe" போன்ற சொற்களைப் பயன்படுத்தியதற்காக இந்த உரிமை மீறல் எழுப்பப்பட்டிருக்கிறதாம். சாதாரணமாக இதுபோன்ற உரிமை மீறல் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் தூர ஒதுக்கிவிடுவதே தன் வழக்கம் என்றும், ஆனால் இப்பொழுது தமிழ்நாட்டில் நடந்திருப்பதைப் பார்க்கையில் தானும் கவனமாக இருக்கப் போவதாகச் சொன்னார். பாராளுமன்றத்தில் நடப்பவை நேரடியாக ஒளிபரப்பப்படுவதால் எம்பிக்கள் கவனமாக நடந்துகொள்வதாகவும், ஆனால் சட்டமன்றங்களில் தரம் வெகுவாகக் குறைந்து போய்விட்டது என்றும் வருந்தினார். சோவின் வாதத்தை எடுத்துக் கொண்டு பாராளுமன்ற விவகாரங்கள் நேரிடையாக ஒளிபரப்பப்படும்போது அவைத்தலைவர் ஏதேனும் விவாதத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினாலும், அந்த விவாதம் நேரடி ஒளிபரப்பில் வெளியே போய்விடுகிறது. அதற்காக பாராளுமன்றம் நேரடி ஒளிபரப்பைத் தடை செய்து, காலந்தாழ்த்திய நேரடி ஒளிபரப்பாக்க முயற்சிக்குமா? ஒளிபரப்பு செய்யுமிடத்தில் ஒருவரை அமர்த்தி expunge செய்யப்பட்ட பகுதிகள் வரும்போது ஒளிபரப்பின் மீது 'கொசுவர்த்திச் சுருள் வாங்கச் சொல்லி' விளம்பரமா செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

அவையின் உறுப்பினர்களுக்கு அவையில் வாய்க்கு வந்ததைப் பேசும் அதிகாரம் கொடுத்து, பின் அதனை வெளியே சொல்லிவிடாதவாறு அவைக்குறிப்பு நீக்கம், உரிமை மீறல் போன்ற உரிமைகளையும் கொடுப்பது நியாயமாகாது என்றார். ஊடகங்களின் வேலையே அவையில் என்ன நடக்கிறது என்று அப்படியே வெளியில் சொல்லுவதுதான் என்றார். உச்ச நீதிமன்றங்கள் விமரிசனங்களைத் தாங்கக்கூடிய அளவிற்கு முதிர்ச்சி பெற்றுள்ளது என்றும் நாட்டின் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கூட இப்படி முதிர்ச்சி பெற்றுள்ளார்கள் என்றும், மாநிலங்களின் முதலமைச்சர்கள்தான் வரவர இந்த முதிர்ச்சி இல்லாமல் எதற்கெடுத்தாலும் எரிச்ச அடைந்து கூத்தாடுகிறார்கள் என்றும் சொன்னார். 'தி ஹிந்து', தமிழக சட்டமன்ற விவகாரம் நடந்திராவிட்டால் நாட்டில் 90% சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்களது 'உரிமைகள்' என்னவென்றே தெரிந்திருக்காது என்றும், இப்பொழுது தங்களுக்கு 'வானளாவிய' அதிகாரம் உள்ளது என்று அதைத் தவறாகப் பயன்படுத்த ஆரம்பிக்கப் போகிறார்கள் என்றும், இதனை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவதே சரியானது என்றும், அதற்காக ஊடகங்கள் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பல மாநிலங்களில், சட்டமன்றத்தின் அவைத்தலைவர் என்பவர் முதலமைச்சரின் அடியாளாகத்தான் செயல்படுகிறார் என்றார்.

சோ 'ஊடகங்களுக்கென்று தனியுரிமை எதுவும் வேண்டாம்' என்று சொன்னதைத் தான் ஒத்துக்கொள்ள முடியாது என்றும், முக்கியமாக ஒரு செய்தியின் ஊற்றை ரகசியமாக வைத்துக் கொள்வது போன்ற உரிமைகள் ஊடகங்களுக்கு நிச்சயம் தேவை என்றும் சொன்னார். பத்திரிகைகாரர்கள் தீவிரவாதிகளிடம் பேசியிருந்தால், அரசு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டால், அந்தத் தீவிரவாதிகளைப் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது என்றார்.

பத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 2

என். ராம்
அடுத்ததாகப் பேசிய 'தி ஹிந்து' என்.ராம், சம்பவம் நடந்த அன்று நிகழ்ந்தவைகளைப் பற்றி சிறிது விளக்கி விட்டு, தம் செய்தித்தாள் பிரச்சினை தொடர்பானவைகளைப் பற்றித் தான் பேசப்போவதில்லை என்றும், இந்த வழக்கு நீதிமன்றத்திடம் உள்ளது என்றும் சொன்னார். முக்கியமாக உரிமைப் பிரச்சினை வழக்கிலிருந்து விடுபடுவது சிறிய நோக்கு என்றும் அதை விடுத்து, தாம் விரும்புவது இந்த சட்டமன்றங்களின் உரிமைப் பிரச்சினையை ஒட்டுமொத்தமாகப் புரிந்து கொண்டு உச்ச நீதிமன்றம் வழியாக பத்திரிகை சுதந்திரம் எதுவரையில் செல்லுபடியாகும், சட்டமன்றங்களின் எம்மாதிரி நிகழ்வுகளை பத்திரிகைகள் எழுத முடியும், எதிர்க்க முடியும், விமரிசிக்க முடியும் என்ற கேள்விகளுக்கு விடை காண்பதே முக்கியமான நோக்கு என்றார். தமிழக அரசு தன் வழக்கறிஞர் மூலம் 'தி ஹிந்து' ஊழியர்கள் சட்டமன்றத்தின் ஏகாதிபத்தியத்தையும், கம்பீரத்தையும் ("Supremacy and majescticity of the legislature") ஒத்துக்கொண்டால் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக சொன்னதை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார். இந்தியாவில் அரசியல் நிர்ணயச் சட்டமே தலையானது. அந்த அரசியல் நிர்ணயச் சட்டத்தை நிர்வகிப்பது நீதிமன்றங்களே. சட்டமன்றங்களும் அரசியல் நிர்ணயச் சட்டம், நீதிமன்றங்களின் தீர்ப்புகள் ஆகியவற்றுக்கு உடன்பட்டே ஆக வேண்டும் என்றார்.

தன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்திடம் தடையுத்தரவை வாங்கிய பின்னர், தமிழக முதல்வர் ஜெயலலிதா 'தமது அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உடன்படும்' என்று ஒத்துக் கொண்டதன் வழியே, தனது அரசும், சட்டமன்றமும் உச்ச நீதிமன்றத்துக்குக் கீழ்ப்படிகிறது என்பதை தெரிந்தோ, தெரியாமலோ ஒத்துக் கொண்டுவிட்டார் என்றார்.

சோ
அடுத்துப் பேசிய சோ, அரங்கையே குபீர் குபீர் என சிரிக்க வைத்தார். "என்.ராம் முதல்வரின் (கவனிக்கவும்... சட்டமன்றம் அல்ல) ஏகாதிபத்தியத்தையும், கம்பீரத்தையும் ஒத்துக் கொண்டிருந்தால் எந்தப் பிரச்சினையும் வந்திருக்காது' என்று ஆரம்பித்த சோ, சட்டமன்றங்கள், பாராளுமன்றம் ஆகியவற்றுக்கு எந்தத் தனி உரிமையும் இருக்கக் கூடாது என்பதே தன் கொள்கை என்றார். இவர்களுக்கென தனியாக உரிமை கொடுக்கும் சட்டம் இயற்றப்பட்டால், அதை நிச்சயமாக துஷ்பிரயோகம் செய்வார்கள், எனவே தனி உரிமைகள் எதுவும் இல்லாமல் இருப்பதே நியாயம் என்றார். தன் மீதும் இருமுறை உரிமை மீறல் பிரச்சினை எழுப்பப்பட்டது என்றும் இருமுறையும் தான் நேரில் ஆஜராகும் முன்னர் அந்த சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டன என்றும் இதனால் தற்போதைய முதல்வருக்கு செய்தி போய்ச் சேர்ந்துவிட்டது என்றும் இனியும் இவரை உரிமைமீறல் என்று அழைத்து தன்னாட்சிக்கு பங்கம் விளைவித்துக் கொள்ளக் கூடாது என்று தன் பக்க்கமே வருவதில்லை என்றும் விளையாட்டாகக் குறிப்பிட்டார். [முதல் முறையாக சோ மீது உரிமை மீறல் பிரச்சினை எழுந்தது துக்ளக்கில் ஒரு கேலிச்சித்திரத்தில் சட்டமன்றத்தில் எழுப்பப்படும் சத்தங்கள் கழுதைகள் கத்துவது போல் உள்ளது என்று வந்திருந்ததனால். மன்னிப்பு கேட்கச் சொல்லும் போது சோ, தான் மன்னிப்பு கேட்கவேண்டுமானால் அது அந்தக் கழுதைகளிடம்தான் என்று சொன்னாராம்.]

கேலியாக மற்றுமொரு ஆழமான விவாதத்தையும் முன்வைத்தார். "சட்டமன்றங்களின் அவைத்தலைவருக்கு, உறுப்பினர்கள் பேசியவை ஒருசிலவற்றை நீக்கும் அதிகாரம் (expunge) உண்டு. அப்படி நீக்கப்பட்டவைகளை ஊடகங்கள் வெளியிட முடியாது. அப்படி வெளியிட்டால், அந்த ஊடகம் சட்டமன்றத்தின் உரிமையை மீறியதாகும். ஆனால் எப்பொழுது ஒன்று அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறதோ, அப்பொழுதே அந்தச் சொற்கள்/செயல்கள் சட்டமன்றத்தில் நடக்கவில்லை என்றாகி விடுகிறது. அப்படியானால் அதை ஊடகங்கள் வெளிப்படுத்தும்போது ஒரு சட்டமன்றத்திற்கு அந்தச் சொல்லை/செயலை வெளிப்படுத்திய ஊடகத்தின் மீது நடவடிக்கை எடுக்க என்ன அதிகாரம் இருக்க முடியும்?"

பத்திரிகைகளுக்கு என்று தனியாக எந்த உரிமைகளும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஒரு தனிக் குடிமகனுக்கு இருக்கும் உரிமைகளே போதுமென்றும் தன் உரையை முடித்தார்.

பத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 1

The Indian Newspaper Society, Media Development Foundation, The Madras Union of Journalists ஆகியோர் இணைந்து நடத்திய "Freedom of Press and Legislative Privilege" என்னும் தலைப்பில் ஒரு கூட்டரங்கம் இன்று சென்னையில் நடந்தது. தமிழக சட்டமன்றத்தில் அரங்கேறிய 'தி ஹிந்து', 'முரசொலி' தொடர்பான உரிமைப் பிரச்சினை, அதைத் தொடர்ந்து தமிழக போலீஸ் நடத்திய கூத்து, இப்பொழுது உச்ச நீதிமன்றத்துக்கு முன் இருக்கும் வழக்கு ஆகியவை பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.

இதழியல் மாணவர்கள், கவலையுற்ற பொதுமக்கள் ஆகியோரிடம் தங்கள் கருத்துக்கள் போய்ச்சேருமாறு நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் தலைமையுரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து 'தி இந்து' ஆசிரியர் என்.ராம், துக்ளக் ஆசிரியர் சோ ராமஸ்வாமி, 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆசிரியர் ஷேகர் குப்தா, 'தி இந்தியன் நியூஸ்பேப்பர் சொஸைட்டி' தலைவர் வீரேந்திர குமார், சென்னைப் பத்திரிகையாளர்கள் யூனியனின் தலைவர் பக்வான் சிங் ஆகியோர் பேசினர்.

நீதிபதி கே.டி. தாமஸ்
நீதிபதி தாமஸ் அரசியல் நிர்ணயச் சட்டம் சட்டமன்றங்களின், பாராளுமன்றத்தின் உரிமைகள் பற்றி என்ன சொல்கிறது, ஊடகங்களின் சுதந்திரம் எந்த அளவிற்கு என்று சொல்கிறது ஆகியவை பற்றி விளக்கினார். அரசியல் நிர்ணயச் சட்டம் ஊடகங்களுக்கு என்று பிரத்தியேகமாக எந்த உரிமையையும் கொடுக்கவில்லை என்றாலும், தனிக் குடிமகனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளிலேயே ஊடகங்களுக்கான உரிமையும் வந்து விடுகிறது என்றார். இந்த உரிமைகளுக்கும் 'reasonable restrictions' என்று ஒருசில நியாயமான கட்டுப்பாடுகளை அரசியல் நிர்ணயச் சட்டம் விதித்திருக்கிறது என்றார். இவை எட்டு கட்டுப்பாடுகள். அவர் சொன்னதை நான் குறிப்பெடுத்துக் கொள்ளவில்லை. இந்த எட்டு விஷயங்களுக்கும் குந்தகம் விளைவிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டியது தனிக் குடிமகன், ஊடகங்கள் ஆகியவற்றின் கடமை. இந்த எட்டுக் கட்டுப்பாட்டில் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் கேடு விளைவிக்காமை, சட்டம் ஒழுங்கு, நீதி ஆகியவற்றுக்குக் கேடு விளைவிக்காமை, நீதிமன்றங்களை அவதூறு செய்யாமை ஆகியவை அடங்கும். ஆனால் முக்கியமாக இந்த எட்டில், சட்டமன்றங்கள், பாராளுமன்றம் ஆகியவற்றினை அவதூறு செய்யாமை ஆகியவை கொடுக்கப்படவில்லை என்றார் தாமஸ்.

மேலும், அரசியல் நிர்ணயச் சட்டம், பாராளுமன்றமும், சட்டமன்றங்களும் தங்களுக்குத் தேவையான உரிமைகளை சட்டங்கள் மூலம் இயற்றிக் கொள்ளலாம் என்றும் அவ்வாறு சட்டங்கள் இயற்றும் வரையிலும் தற்காலிகமாக இங்கிலாந்துப் பாராளுமன்றத்துக்கு இருக்கும் உரிமைகளை தாங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசியல் நிர்ணயச் சட்டம் கூறியுள்ளது. அப்படியிருந்தும், இதுநாள் வரையில், சட்டமன்றங்களும், பாராளுமன்றமும் தங்களுக்குத் தேவையான உரிமைகளை சட்டங்களாக இயற்றவில்லை. தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த இங்கிலாந்துப் பாராளுமன்ற உரிமைகளை நிரந்தரமாக ஆக்கிவிட்டனர். இதுவே சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்நோக்கை வெளிப்படுத்துகிறது என்றார் தாமஸ்.

எமர்ஜென்சி காலத்தில் நடந்த ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்தார் தாமஸ். இந்திரா காந்தி மொரார்ஜி தேசாயை சிறையில் அடைந்திருந்தார். 18 மாதமாக சிறையில் இருந்த மொரார்ஜி தேசாயின் மனைவிக்கு உடல்நிலை மோசமாகவே பரோலில் அவரை வெளியே விட்டார் இந்திரா காந்தி. மொரார்ஜி தேசாய் தன் வீட்டுக்கு போயிருந்த அதே சமயத்தில் இந்திரா காந்தியும் அவர் வீட்டுக்கு வந்து அவருடன் பேச விரும்பினாராம். அப்பொழுது அவருடன் பேச மறுத்த மொரார்ஜி, அவருடன் பேசுவதற்கு மூன்று நிபந்தனைகளை விதித்தாராம். (1) புதிதாக யாரைக் கைது செய்தாலும், அவர்களுக்கு மேல்முறையீடு செய்ய உரிமை (2) ஏற்கனவே அரசியல் கைதிகளாக இருப்பவர்கள் அனைவருக்கும் விடுதலை (3) பத்திரிகைகள் மீது அப்பொழுது விதிக்கப்பட்டிருந்த pre-censorship, அதாவது முன்-தணிக்கை நீக்கம்.

அப்பொழுதெல்லாம் பத்திரிகைகள் தாங்கள் என்ன செய்தி அச்சிடப்போகிறோம் என்பதை அரசின் தணிக்கையாளரிடம் காட்ட வேண்டும். அவர்கள் அனுமதித்த செய்தியை மட்டும்தான் அச்சிட வேண்டும்.

இந்திரா காந்தி முதலிரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டாலும் படுவேனே தவிர மூன்றாவது நிபந்தனைக்கு உட்பட மாட்டேன் என்று மொரார்ஜியை மீண்டும் உள்ளே தள்ளிவிட்டாராம்.

Thursday, January 15, 2004

மரத்தடி 'குளிர்காலக்' கதை, கவிதைப் போட்டி

மரத்தடி என்னும் யாஹூ! குழுமத்தில் குளிர்காலப் (ஜனவரி, ஃபெப்ரவரி, மார்ச் 2004) போட்டியாக கதைகள், கவிதைகள் வரவேற்கப்படுகின்றன. பரிசுகளும் உண்டு. இந்தப் போட்டிகள் ஒவ்வொரு காலாண்டிலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுகதை
முதல் பரிசு: ரூ. 5,000
இரண்டாம் பரிசு: ரூ. 2,500
புதுக்கவிதை
முதல் பரிசு: ரூ. 5,000
இரண்டாம் பரிசு: ரூ. 2,500


இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த யாஹூ! குழுமத்தில் உறுப்பினராகச் சேர வேண்டும். படைப்புகளை இந்தக் குழுமத்திற்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். இந்தப் படைப்புகள் வேறெங்கும் வெளிவந்திருக்கக் கூடாது. இந்தப் போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் மரத்தடி இணையத்தளத்தில் இடம்பெறும்.

சிறுகதைப் போட்டிக்கு நடுவர் திண்ணை இணைய இதழின் ஆசிரியர் குழுவின் உறுப்பினர் திரு. கோபால் ராஜாராம்.

புதுக்கவிதைப் போட்டிக்கு நடுவர் எழுத்தாளர் திருமதி காஞ்சனா தாமோதரன்.

போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் வளரும் எழுத்தாளர்கள் இணையக் குழுக்களில் எவ்வாறு கலந்து கொள்வது என்று அறிந்து கொள்ள விரும்பினால், தாராளமாக என்னை அணுகலாம்.

Wednesday, January 14, 2004

ஸ்வதேஷி என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல்

இன்று Economic and Political Weekly தளத்தை மேய்ந்து கொண்டிருக்கும்போது 'autarkic' என்னும் சொல் கண்ணில் பட்டது. அதுவும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் மற்றும் ஸ்வதேஷி ஜாகரண் மஞ்சுக்கு அடைமொழியாக இந்தச் சொல் கொடுக்கப்பட்டிருந்தது.

GRE எழுதிய காலத்தில் கூட இந்தச்சொல் என் கண்ணில் பட்டதில்லை. முதலில் ஏதோ கெட்ட வார்த்தை என்று நினைத்தேன் (fundamentalist என்பது போன்று). தேடியதில் இது 'ஸ்வதேஷி' என்னும் சொல்லுக்கு இணையானது என்பது புரிந்தது.

autarkic = of countries; not relying on imports

Tuesday, January 13, 2004

தமிழ் இலக்கியம் 2004 - 7

எஸ்.பொவின் புத்தக வெளியீடுகள்

விழாவின் முக்கியக் கட்டமாக ஞாயிறு அன்று காலையில் எஸ்.பொவின் நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அவை 'பூ', 'வரலாற்றில் வாழ்தல்', 'நனவிடை தோய்தல்' மற்றும் 'பார்வை'.



'பூ'வினை வெளியிட்டு தோப்பில் முகமது மீரான் பேசினார்.



'வரலாற்றில் வாழ்தல்' என்னும் 2000 பக்கத்துக்கு மேலான இரு தொகுதிகளை கோவை ஞானி வெளியிட, எஸ்.பொவின் பேத்தி பெற்றுக் கொண்டார். கோவை ஞானிக்கு மேடையில் உதவுவது ஆர்.வெங்கடேஷ். இரா.முருகனின் கோவை ஞானி பேச்சு பற்றிய கட்டுரை இங்கே.

மற்ற இரு புத்தகங்களை வெளியிட்டவர்கள் கவிஞர் காசி ஆனந்தனும், விட்டல் ராவும்.

காசி ஆனந்தன்
விட்டல்ராவ்

Monday, January 12, 2004

தமிழ் இலக்கியம் 2004 - 6

மற்றுமொரு புத்தக வெளியீடு

ப.சிவகாமி இ.ஆ.ப
முதலிரண்டு புத்தக வெளியீடுகளில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த என்னை மேடையில் உட்கார வைத்து விட்டனர். அதனால் என்னை நானே படம் எடுத்துக் கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை. இந்தப் புத்தக வெளியீடு இரவு 20.45க்கு ஆரம்பமாகவிருந்தது. ஆனால் நாள் முழுதும் நிகழ்ச்சிகள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததால் ஆரம்பிக்க 21.15க்கு மேல் ஆயிற்று. அதுவும் இலக்கிய உலகில் இல்லாத பெரும் பிரபலங்கள் பங்கு பெறும் மேடை (இல்லை, என்னைச் சொல்லவில்லை). இந்த வெளியீட்டில் சிவகாமி இ.ஆ.ப அவர்களின் 'கதைகள்' என்ற சிறுகதைத் தொகுதியும், ஆர்.வெங்கடேஷின் 'முதல் மழை' என்ற சிறுகதைத் தொகுதியும், தமிழ் சினிமாவில் அதிகத் தரம் வாய்ந்த பல நல்ல படங்களை வழங்கியுள்ள இயக்குனர் மகேந்திரனின் 'சினிமாவும் நானும்' என்னும் புத்தகமும் வெளியிடப்பட்டன.

இயக்குனர் மகேந்திரன்
ப.சிவகாமியின் புத்தகத்தை வெளியிட்டவர் கிறிஸ்துதாஸ் காந்தி இ.ஆ.ப, பெற்றுக் கொண்டவர் பிரதிபா ஜெயச்சந்திரன். இந்தப் புத்தகத்தை நான் இன்னமும் படிக்கவில்லை. சிறுகதைகள் அனைத்தும் ஜப்பானில் இடம்பெறுவது போல் அமைத்துள்ளார் சிவகாமி. இவர் தமிழக அரசுப்பணி காரணமாக ஜப்பானில் சிலவருடங்கள் இருந்துள்ளாராம். புதிய கோடாங்கி என்னும் சிற்றிதழை நடத்துபவர். புத்தகத்தை வெளியிட்டு பிரதிபா ஜெயச்சந்திரனும் பேசினார். கிறிஸ்துதாஸ் காந்தியும் பேசினார்.

அடுத்து ஆர்.வெங்கடேஷின் புத்தகம். வெளியிட்டவர் வையவன். வாங்கிக்கொண்டது அடியேன். என்னை பேசச் சொல்லக்கூடாது என்று முன்னமே உறுதிமொழி வாங்கிக் கொண்டேன். அரங்கு பிழைத்தது. வையவன் பேசும்போது இவ்வளவு நேரம் கடந்து இந்த வெளியீட்டு விழாவினை வைத்திருப்பது சரியல்ல என்றார். புத்தகம் முதல் நாள்தான் (வெள்ளிக்கிழமை) அச்சானதாம். அன்று இரவு 12.00 மணிக்குதான் வெங்கடேஷ் வையவனைத் தேடிக் கண்டுபிடித்து ஒரு பிரதியை அனுப்பி வைத்தாராம். இந்தக் கதைத்தொகுதியையும் நான் இன்ன்னமும் படிக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் வையவன் வார்த்தையில் இது மத்திய தட்டு மக்களைப் பற்றியது. அந்த மத்தியத் தட்டு மக்களிலும், உயர், இடை, கடை என்று மூன்றாகப் பிரித்தால், அதில் இடை-மத்தியத் தட்டு மக்களைப் பற்றியது. வாழ்க்கையின் அவலங்களை "மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்" தவிக்கும் மக்களைப் பற்றியது. கதைகள் திரும்பத் திரும்ப திருவல்லிக்கேணியையே சுற்றி வருகின்றனவாம். பார்த்தசாரதிப் பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில், ஆஞ்சநேயர் கோவிலில் இருக்கும் கரப்பான் பூச்சி - ஆதிகாலத்தில் ஆஞ்சநேயர் கோவிலில் வாழ்ந்த கரப்பான் பூச்சியின் மரபணுத் தொடர்ச்சியாக வரும் இன்றைய ஆஞ்சநேயர் கோவில் கரப்பான் பூச்சி மாதிரி திருவல்லிக்கேணியின் மரபணு இவரது கதைகளை விட்டு அகல்வதில்லையாம். கதைகளில் டைடல் பார்க்கும், இணையத்தளங்கள் அமைக்கும் மென்பொருளாளனும் வருகின்றனர். படித்து விட்டு எழுதுகிறேன். மேடையில் இருந்ததால் வையவனை கேமராவில் பிடிக்க முடியவில்லை.

இயக்குனர் பாரதிராஜா
கடைசியாக மகேந்திரனின் 'சினிமாவும் நானும்'. இயக்குனர் பாரதிராஜா புத்தகத்தை வெளியிட, இயக்குனர் பாக்யராஜ் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். கேமராக்கள் பளிச்சிட, 'என் இனிய இலக்கிய நண்பர்களே' என்று ஆரம்பித்து பாரதிராஜாவின் உரை தொடர்ந்தது. மகேந்திரன் சினிமாவைப் பற்றி எழுதத் தனக்கிருக்கும் தகுதியைப் பற்றி தயக்கத்துடன் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய பாரதிராஜா, "உனக்கில்லையென்றால் வேறு யாருக்கும் இல்லை" என்றார். மகேந்திரன் பற்றிய பல புதிய விஷயங்களை பாரதிராஜாவின் பேச்சின் வழியேதான் அறிந்து கொண்டேன். துக்ளக் பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டிருந்த மகேந்திரன் எதேச்சையாகத்தான் சினிமாவில் கதை-வசனம் (ஆடு புலியாட்டம்) எழுதப் போனாராம். அங்கிருந்து 'முள்ளும் மலரும்', 'உதிரிப் பூக்கள்' போன்ற அற்புதப் படங்களை உருவாக்கியுள்ளார். பாரதிராஜாவின் பேச்சைத் தொடர்ந்து பாக்யராஜும் பேச ஆரம்பித்தார். அதிகமாக ஒன்றும் அந்தப் பேச்சில் வெளிவரவில்லை.

மகேந்திரன் நன்றியுரையில், தான் செய்ததெல்லாம் சிறிதும் திட்டம் தீட்டாமல் செய்தது. அப்படி யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்றார். இலக்கிய கர்த்தாக்க்கள் சினிமாவை உதறித் தள்ளக்கூடாது, சினிமாவில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னதாகப் பேசிய பாரதிராஜாவும் இதையே வலியுறுத்தினார். இந்த அமர்வுக்குத் தலைவராக இருந்த சிற்பி பாலசுப்ரமணியனை சுட்டிக் காட்டி, சிற்பியை ஒரு படத்துக்கு (கிழக்கே போகும் இரயில்) இளையராஜாவுடன் சேர்ந்து தான் பாட்டெழுதக் கூட்டி வந்ததாகவும், அந்தப் பாடல் கடைசியாக படத்தில் இடம் பெறவில்லை என்றும் அதன்பிறகு சிற்பி, சினிமா பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை என்றும் சொன்னார் பாரதிராஜா. அத்துடன் இது சிற்பியின் நல்லகாலம். இல்லாவிட்டால் யாராவது அவரை 'கட்டிபுடி, கட்டிபுடி' என்று பாட்டெழுத வைத்திருப்பர் என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது.

தமிழ் இலக்கியம் 2004 - 5

ஒரு நாடகமும், ஒரு அமர்வும்

'நாடகமில்லாத ஒரு நாடகம்', 'நாடு-சக-அகம்' என்றெல்லாம் பெயரிட்டு ஒரு வித்தியாசமான நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. அளவெட்டி சிறீசுக்கந்தராசா, பேரா.சுமதி ஆகியோர் இருவர் மட்டுமே நடித்த இந்த நாடகத்தில் எனக்குப் புரிந்தது கொஞ்சமே.

"நான் யாழ்பாணத் தமிழில் பேசுவன், அது உங்களுக்குப் புரியாமல் போகலாம், புரியாததும் ஒரு வசதியே" என்று ஆரம்பித்தார் சிறீசுக்கந்தராசா. பின்னணி இசை அதிகமாக இரைந்து பேச்சைப் புரிந்துகொள்ள விடாது தடுத்தது. இது ஒரு பின்-நவீனத்துவ நாடக பாணியோ என்னவோ! மேடையில் விளக்குகளின் வண்ணங்கள் ஒவ்வொரு விநாடியும் மாறி மாறிக் கொண்டே இருந்தன.

மற்றவர்கள் யாரேனும் நாடகத்தைப் பார்த்திருந்தால், புரிந்திருந்தால், அதுபற்றி விளக்கமாக எழுத வேண்டுகிறேன்.


சிற்பி பாலசுப்ரமணியம்
நாடகத்தைத் தொடர்ந்து 'கவிதை, நாடகம், திறனாய்வு' ஆகியவற்றைப் பற்றிப் பேசும் ஒரு அமர்வு நடந்தது. தலைமை தாங்கியவர் சிற்பி பாலசுப்ரமணியம். பேசுகையில் திறனாய்வாளர்களை சற்றே சாடினார். கவிதை பற்றிப் பேசிய இந்திரன், இப்பொழுதுள்ள கவிதைகள் அனைத்தும் தமிழ்க் கவிதைகளாக இல்லை. வேறு மொழிகளின் வடிவத்தைப் பெற்று, தமிழ் சொற்களினால் அமைந்துள்ளது போல் உள்ளது.
இந்திரன்
அதனை விடுத்து தமிழ் உணர்வுகள், தமிழ் வடிவம் ஆகியவற்றுள் அடங்கியதாக தமிழ்க் கவிதை இருக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய பஞ்சாங்கம் மிக அழகாக திறனாய்வைப் பற்றி விளக்கினார். அபிப்ராயம், ஆராய்ச்சி, திறனாய்வு - இவை அனைத்தும் வேறு வேறு. ஒரு எழுத்து நன்றாக உள்ளது, நன்றாக இல்லை என்று சொல்வது அபிப்ராயம். ஏன் அது நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை அன்று கருத்துக்களை முன்வைப்பது வெறும் வறட்டு ஆராய்ச்சி. ஆனால் திறனாய்வு என்பது இதற்கும் ஒருபடி மேலே போய் அதுவே இலக்கியமாக, படைப்பாக முன்வருவது என்றார்.
க.பஞ்சாங்கம்
தான் சிலப்பதிகாரம் பற்றி எழுதப்பட்ட நூல்கள் நூற்றுக்கும் மேற்பட்டனவற்றை தன் முனைவர் பட்டத்திற்கு ஆராய்ந்ததில், வெறும் இரண்டே நூல்கள்தான் இந்தத் திறனாய்வு என்னும் ஆக்கத்தில் வருபவை என்றார். (அவர் சொன்ன நூல்களுடன் எனக்குப் பரிச்சயம் இல்லாததால் அந்த நூல்களின் பெயர்கள் இப்பொழுது ஞாபகத்தில் இல்லை.)

நாடகம் பற்றிப் பேச வருவதாக இருந்த செ.இராமானுஜம் வரவில்லை. தலைவர் சிற்பி இதுபற்றிப் பேசும்போது தமிழில் நாடகம் எந்த அளவிற்கு வளராத நிலையில் உள்ளது என்பதையே இதுகாட்டுகிறது என்று சொல்லியிருந்தார். சிற்பி மேலும் நாடகம் பற்றிப் பேசும்போது மனோன்மணீயம் எழுதிய சுந்தரம் பிள்ளை, தன் நாடகம் நடிப்பதற்காக அல்ல என்று சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, அதே புத்தகத்துக்கு இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் (விமரிசகர் பெயர் மறந்துவிட்டது...) விமரிசகர் "நடிப்பதற்காக இந்த நாடகம் இல்லை என்று சொல்வது பலகாரம் செய்துள்ளேன், ஆனால் சாப்பிட அல்ல என்று சொல்வதைப் போலுள்ளது என்று எழுதியிருந்தார்" என்றார்.

கடைசியாகப் பேசிய பா.இரவிக்குமார் தமிழ் நாடகம் வளர்ச்சியடையாததற்கு ஒரு காரணம் 'சிவாஜி கணேசன் என்னும் நாடகக் கலைஞனை தமிழகம் ஏற்றுக் கொள்ளாதது' என்றார். இது எனக்கு முழுதும் விளங்கவில்லை.

தமிழ் இலக்கியம் 2004 - 4

புத்தக வெளியீடு



என்.நடேசன் எழுதிய 'வண்ணாத்திகுளம்' புத்தகத்தை சா.கந்தசாமி வெளியிட, எம்.ஜி.சுரேஷ் பெற்றுக்கொண்டார். எஸ்.பொ புத்தகத்தைப் பற்றிப் பேசினார்.



நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் எழுதிய 'காற்று வெளியினிலே' புத்தகத்தை இதயதுல்லா வெளியிட, துக்ளக் பத்திரிக்கையில் எழுதும் சாவித்ரி கண்ணன் பெற்றுக்கொண்டார்.



'ஜெயந்தீசன் கதைகள்' என்னும் புத்தகத்தை பா.இரவிக்குமார் வெளியிட விழி.பா.இதயவேந்தன் பெற்றுக்கொண்டார்.

கொள்கைகளற்ற கூட்டணி

நேற்று வாஜ்பாய், திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கைகளற்ற, சந்தர்ப்பவாதக் கூட்டணி என்று பேசியுள்ளார். என்னவோ, பாஜக மட்டும் கொள்கைகளோடுதான் கூட்டணி அமைப்பது போல இருக்கிறது இந்த கேலிப்பேச்சு. அதாவது, ஒரு காலத்தில் காங்கிரஸ், 'திமுக ராஜீவ் கொலைக்குக் காரணம்' என்று சொன்னார்களாம். இப்பொழுது அதை மறந்து விட்டு, கூட்டணி அமைக்கிறார்கள் என்கிறார்.

திமுக ராஜீவ் கொலைக்குக் காரணமாயிருந்தால், பாஜகவும் அவர்களோடு கூட்டணி அமைத்திருக்கக் கூடாது அல்லவா? அப்படி திமுக, ராஜீவின் கொலைக்குக் காரணமில்லை என்றால், காங்கிரஸ் தன் கூற்றின் தவறை உணர்ந்து, பழசை மறந்துவிட்டு திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் தவறில்லைதானே?

அஜித் ஜோகி, திலிப் சிங் ஜுதேவ் ஊழல்கள் பற்றி கண்ணீர் மல்கப் பேசிய வாஜ்பாய் இப்பொழுது தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்?

Sunday, January 11, 2004

தமிழ் இலக்கியம் 2004 - 3

தமிழ் உரைநடை இலக்கியத்தின் எதிர்காலம்

நீல.பத்மநாபன்
நீல.பத்மநாபன் தலைமை தாங்க, தமிழில் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் பற்றிய ஒரு அமர்வு துவங்கியது. நீல.பத்மநாபன் மலையாளத் த்வனியோடு தமிழில் பேசினார். தான் ஒரு சிறு தளத்திலேயே இயங்கிக் கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் மொழி, நடை, உத்திகள் ஆகியவற்றில் நிறைய வளர்ச்சி வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ்.ராமகிருஷ்ணன் நாவல்கள் பற்றிப் பேச வந்தார். இரா.முருகன் இந்திரா பார்த்தசாரதியின் 'கிருஷ்ணா கிருஷ்ணா'வைப் பற்றிப் பேசுகையில் குந்தர் கிராஸின் (Gunther Grass) கிராப் வாக் (Crabwalk) நாவலின் நடையோடு ஒப்பிட்டு, இ.பா அந்த நடையை விட மேலேறிச் சென்றுள்ளார் தன் நாவலில் என்று குறிப்பிட்டார். ராமகிருஷ்ணன் இதைப் பிடித்துக் கொண்டு தமிழில் நாவல்களே சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை, அதிலும் குந்தர் கிராஸோடு தமிழ் எழுத்தாளர் ஒருவரை ஒப்பிடுவது மகா பாவம் என்ற முறையில் பேச ஆரம்பித்தார். குந்தர் கிராஸ் எப்படி 16 (??) நாவல்களை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் எழுதி, இந்தியாவைப் பற்றிக் கூட (ஷோ யுவர் டங் - Show your tongue) ஒரு நாவல் எழுதியுள்ளார் என்றார். அதன் பின்னர் பல வேற்றுமொழி நாவலாசிரியர்கள் பற்றி ஒருசில எடுத்துக்காட்டுகள் கொடுத்த பின்னர் இந்தியாவிலேயே வங்காளம், மராத்தி ஆகிய மொழிகளுக்கு ஈடாக தமிழில் நாவல்கள் இல்லை என்றார். தமிழில் சிறந்த நாவல்கள் என்றால் உடனடியாக மூன்று நாவல்களைக் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றும் கிடைக்காது என்றும், அந்த ஓரிரண்டு நாவல்களைச் சொல்வதற்கே அருகில் உள்ள இரண்டு பேருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் சொன்னார்.

தமிழன் தன் வாழ்க்கை முறையினைப் பற்றி தமிழ் நாவல்களில் அதிகம் விளக்கவில்லை; அரசியலைப் பின்னணியாகக் கொண்ட நாவல்கள் தமிழில் இல்லை; வாய்வழிக் கதைகள், புராணங்களை தமிழ் நாவலாசிரியர்கள் 'மீள்-பார்வையில்' மீண்டும் சொன்னதில்லை என்று குற்றச்சாட்டுக்களாக அடுக்கினார். நோபல் பரிசு பெற்ற போர்ச்சுகீசிய நாவலாசிரியர் ஹோசெ சரமாகோவின் (Jose Saramago) நாவலான "யேசு கிறிஸ்துவின் பார்வையில் வேதாகமம்" (The gospel according to Jesus Christ), கிரேக்க எழுத்தாளர் நிக்கோஸ் கசன்சாகிஸின் (Nikos Kazantzakis) "யேசு கிறிஸ்துவின் கடைசிச் சபலம்" (The last temptation of Christ) போன்ற நாவல்கள் தமிழில் இல்லை என்றார். துருக்கிய எழுத்தாளர் ஓர்ஹான் பாமுக்கின் (Orhan Pamuk) "என் பெயர் சிகப்பு" ('My name is red'. சில இடங்களில் 'Call me crimson' என்றும் வெளியாகியுள்ளது போல அறிகிறேன்) என்னும் நாவலைப் பற்றி சிலாகித்துப் பேசினார். (பேசும்போது எகிப்திய எழுத்தாளர் என்று தவறாகச் சொன்னார்.)

எஸ்.ராமகிருஷ்ணனின் பேச்சு எதிர்மறையாகவே இருந்தது. அரங்கில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளுமாறு தமிழ் நாவல்களில் என்ன குறைவு, உலக நாவல்களில் என்ன நிறைவு, எப்படி தமிழ் நாவலாசிரியர்கள் இந்த இடைவெளியை நிரப்ப முயற்சிக்கிறார்கள், அல்லது முயற்சிக்க வேண்டும் என்று பேசியிருந்திருக்கலாம். என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் பட்டியல் போடுவது தவறான முயற்சி. ராமகிருஷ்ணனின் பேச்சுக்கு இரா.முருகனின் எதிர்வினை ராயர்காபிகிளப்பில் வந்துள்ளது.

பா.ராகவன்
அடுத்துப் பேச வந்த ரெ.கார்த்திகேசு இப்படி சூடு வைக்கவில்லை. ஆனால் சிறுகதைகள் எங்கே போகப்போகின்றன என்பது பற்றி ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டார். தான் கி.ராஜநாராயணனிடம் பேசியபோது அவரிடம் 'சிறுகதைகள் எங்கே போகப்போகின்றன' என்று கேட்டதற்கு அவர் பதிலாக 'எப்படிச் சொல்லமுடியும்?' என்று சொன்னார் என்ற ரெ.கா, தைரியமாக கணிக்க ஆரம்பித்தார். ஒருசில கணிப்புகள் "தமிழில் வெகுஜன இதழ்கள் சிறுகதைகளை தொட்டுக்கொள்ள வைத்திருக்குமே தவிர, வளர்க்காது, ஆனால் ஒரேயடியாக வெட்டிவிடாது. அச்சுத்தொழில் வளர்ச்சியினால், சிற்றிதழ்கள் பெருகும்; புத்தகங்கள் வெளியாவதும் பெருகும்; அதனால் சிறுகதைகள் அவற்றின் மூலம் பெருகும். இணையம் மூலம் பல புதிய சிறுகதை எழுத்தாளர்கள் வருவர். சிறுகதைகளுக்கென்றே இதழ்கள் நிறைய வரும். "

கடைசியாகப் பேசிய ராகவன் கட்டுரை இலக்கியம் பற்றி தன் கருத்துகளைச் சொன்னார். அவற்றை அவரது வலைப்பதிவிலேயே காணலாம்.

தமிழ் இலக்கியம் 2004 - 2

பேரா.சுதந்திரமுத்து
முதலாவது அமர்வு பேராசிரியர்கள் இன்குலாப், சுதந்திரமுத்து, சுமதி ஆகியோர் பங்கேற்றது. தலைமைதாங்க வேண்டிய பேரா.சி.டி.இந்திரா பங்கேற்கவில்லை. ஒரே பேராசிரியர்களாகப் போய்விட்டதால் சுவாரசியம் குறைவாகவே இருந்தது. தலைப்பு 'புதிய திசைகள்' என்று சிறிது குழப்பமானது. எதைப்பற்றி என்று பார்வையாளர்களுக்கு அதிகம் புரிந்திருக்காது. முதலில் பேரா.சுதந்திரமுத்து பேசினார். தமிழ் இலக்கியத்தில் உள்ள பல்வேறு வகைகளைப் பற்றி ஒரு பட்டியல் போட்டது போல் நீண்டு இருந்தது அவரது பேச்சு. கடைசியில் தமிழ் புதுப்புது திசைகளில் செல்லும் என்பதுபோல முடிந்தது.
பேரா.சுமதி
அடுத்துப் பேசிய பேரா.சுமதி (இவர் ஆங்கிலப் பேராசிரியராம்), சுதந்திரமுத்து பேசியபின்னர், தான் அதிகமாக ஒன்றும் சொல்லிவிடப் போவதில்லை என்று சொல்லிவிட்டுப் பேசினார். அதிகமாக ஒன்றும் வித்தியாசமாகவும் இவர் சொல்லிவிடவில்லை. மொத்தத்தில் இந்த அமர்வில் வீட்டுக்கு எடுத்துப் போக ஒன்றுமில்லை.

பேரா.இன்குலாப்
இரு பேச்சுகளையும் இணைத்து முடிவுரை வழங்க வந்த இன்குலாப் பலரது படைப்புகள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்படுவதையும், மறைக்கப்படுவதையும் தொட்டுப் பேசினார். மொத்தத்தில் இந்த அமர்வு எனக்கு சோர்வு தருவதாக இருந்தது. புதிதாக ஒன்றும் மண்டையில் ஏறவில்லை. இன்குலாப் பேச்சு நன்றாக இருந்தது.

அதன்பிறகு புத்தக வெளியீட்டின்போது சிறிது சலசலப்பு இருந்தது. புத்தக வெளியீடுகளைப் பற்றி முன்னமே எழுதிவிட்டேன். வரிசையாக இந்திரா பார்த்தசாரதி, ரெ.கார்த்திகேசு, பழமலய், யுகபாரதி ஆகியோரின் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் பிந்தையதிலிருந்து முந்தையது வரை யுகபாரதியின் புத்தகத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்து கடைசியில் இந்திரா பார்த்தசாரதி புத்தகத்தில் முடித்தனர். ஈரோடு தமிழன்பன் மிகவும் நகைச்சுவையுடன் "மன்மத ராசா" புகழ் யுகபாரதியின் காதல் பிசாசு பற்றிப் பேசினார். பேரா.அ.மார்க்ஸ் ஏதோ தவறான கூட்டத்துக்கு வந்துவிட்டவர் போல நெளிந்தவாறே உட்கார்ந்திருந்தவர், தன் வாய்ப்பு வந்ததும் பலமலய் புத்தகத்தைப் அற்றிப் பேசும்போது தன் எரிச்சலை வெளிப்படுத்தினார். ஏற்றி வைத்திருந்த குத்துவிளக்கு அவருக்குப் பிடிக்கவில்லையாம். புத்தக வெளியீட்டின்போது பெண்கள் ஒரு தாம்பாளத்தில் எடுத்துக் கொண்டு வந்து கையில் புத்தகத்தைக் கொடுத்தது பிடிக்கவில்லையாம். வரவர எல்லா அரசு விழாக்களும் வேதகோஷம் முழங்க நடைபெறுவதாகச் சொன்னவர் (அப்படியா?), இந்த விழாவை யுகபாரதியின் 'மன்மத ராசா' பாடித் துவங்கியிருக்கலாம் என்று சொன்னார். 'இலக்கியம் என்பதே கலகம்' என்ற கொள்கை மார்க்ஸுடையது. கலகம் என்றால் சாராய வாசனையும், அடிதடியும், வாய் முழுதும் சென்னை வசவுகளும்தான் என்ற கொள்கை எப்பொழுது ஒழியுமோ? பழமலய்க்கும் கொஞ்சம் திட்டு கிடைத்தது. நல்ல கவிதையும் எழுதுவார், வகுப்புவாதிகளான பாட்டாளி மக்கள் கட்சி கேட்டால் அவர்களுக்கும் பாட்டெழுதித் தருவார் என்று ஒரு சாடல். மார்க்ஸை விழாவுக்குக் கூப்பிடுகிறவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 'பாம்புகள்' புத்தகத்தைப் பற்றி 'இது ஒரு குப்பை, தூக்கி உடைப்பில் போடு' என்றெல்லாம் சொல்லாமல் நல்லபடியாக விட்டதில் சந்தோஷமே.

இந்திரா பார்த்தசாரதி
அடுத்துப் பேச வந்த மாலன் மார்க்ஸின் 'மன்மத ராசா' பற்றிய கருத்தை விடுவதாக இல்லை. வீண் சச்சரவுகள் வேண்டாமென்று இருந்தாலும் சிலவற்றைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும் என்று சொன்ன மாலன், "யுகபாரதி 'மன்மத ராசா'வும் எழுதியுள்ளார், 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்'னும் எழுதியுள்ளார். யார் யார் எதைப் பற்றிப் பேசுகின்றனர் என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது என்றார்." பின்னர் ரெ.காவின் கல்கியில் பரிசுபெற்ற 'ஊசியிலைக் காடுகள்', கணையாழியில் வெளியான 'தீக்காற்று' (1 | 2 | 3) போன்ற ஒருசில கதைகளைக் கொண்ட தொகுப்பைப் பற்றிப் பேசினார். மாலன் பாதி பேசிக்கொண்டிருக்கும்போது மின்சாரம் போய்விட்டது. மாலன் அசராது ஒலிபெருக்கியின் தேவை இல்லாமலேயே அரங்கெங்கும் கேட்குமாறு தொடர்ந்து பேசினார். ரெ.கா மலேசியத் தமிழ் எழுத்தாளர். தமிழ் எழுத்துகள் என்று பார்க்கும்போது வெறும் தமிழ்நாட்டு எல்லைக்குள் பார்க்காது, தமிழ் பேசும் உலகம் அனைத்தையும் பார்க்க வேண்டும் என்றார். கடைசியாகப் பேசிய இரா.முருகன் தன் பேச்சினை ஏற்கனவே ராயர்காபிகிளப்பில் வெளியிட்டு விட்டார்.

முருகன் இந்திரா பார்த்தசாரதியின் கதை சொல்லும் விதம் குந்தர் கிராஸை (Crab Walk) விட உயர்ந்து விட்டது என்று சொல்லியது அடுத்த அமர்வில் மற்றுமொரு சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.