என் முந்தைய பதிவு:
காஷ்மீர் பிரச்னை - முஷாரப் திட்டம், பிப்ரவரி 05, 2006காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் தன் அதிகாரபூர்வ தரப்பை மாற்றிக்கொண்டுள்ளது. காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி என்று தன் நாடு ஒருபோதும் சொன்னதில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முஷாரஃப் NDTV-யில் காஷ்மீர் தொடர்பாக தான் நிறைய விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
இந்த நேரத்தில் இந்தியா உடனடியாக முஷாரஃப்புடன் தொடர்புகொண்டு, பேசி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லவேண்டும்.
முஷாரஃப் ஏற்கெனவே தன் திட்டத்தை விவரித்துள்ளார். பாகிஸ்தான் பக்கம் உள்ள நார்தர்ன் டெரிடரீஸ் பகுதியை இந்தியா மறந்துவிட வேண்டும். அதேபோல இந்தியா பகுதியில் உள்ள ஜம்மு, லடாக் பகுதியைத் தனி மாநிலமாகப் பிரித்து ஆர்டிகிள் 370 இல்லாத, பிற மாநிலங்களுக்கு ஒப்பான ஒரு பகுதியாக ஆக்கவேண்டும்.
மீதம் உள்ளது இந்திய காஷ்மீர், பாகிஸ்தான் காஷ்மீர், அக்ஸாய் சின் பகுதிகள்.
இதில் அக்ஸாய் சின், பாகிஸ்தான் ஏற்படுத்திய பிரச்னை என்றாலும்கூட, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்னை அல்ல.
இந்திய காஷ்மீர், பாகிஸ்தான் காஷ்மீர் இரண்டுக்கும் அதிகபட்ச தன்னாட்சி அதிகாரம் கொடுத்து இரண்டு பகுதிக்கும் இடையேயான போக்குவரத்தை அதிகப்படுத்தி ஒரு பத்தாண்டுக்குப் பிறகு என்ன நிலை என்று பார்க்கலாம்.
இரண்டு பக்கங்களிலும் என்னென்ன பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளது?
* பாகிஸ்தான் பகுதியில் முஷாரஃப்புக்கு நிறைய எதிர்ப்புகள் இருக்கும். அதை அவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்று தெரியவில்லை. ஆனால் தேர்தல்களை எதிர்கொள்ளவேண்டிய பிரச்னை குறைவாகவே இருப்பதால் அவர் ஓரளவுக்கு பிரச்னைகளை எதிர்கொண்டுவிடலாம். எல்லை தாண்டிய பயங்கரவாதம் நன்றாகக் குறைய வாய்ப்பு உள்ளது.
தி ஹிந்து கட்டுரை* இந்தியப் பகுதியில் பாஜக இதைக் கடுமையாக எதிர்க்கும். பாஜக, கம்யூனிஸ்டுகள் ஆதரவு இல்லாமல் எந்தவிதமான தீர்வும் வர முடியாது. மன்மோகன் சிங் உடனடியாக பாஜக, கம்யூனிஸ்ட் தலைமையுடன் உரையாடலைத் தொடங்க வேண்டும்.
* நேஷனல் கான்ஃபரன்ஸ், PDP இரண்டுமே இந்த முயற்சிக்கு கொஞ்சமாவது எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள். பின் வேறு வழியின்று ஏற்றுக்கொள்வார்கள்.
* ஹூரியத் அமைப்பு, பயங்கரவாதிகள் நிச்சயமாக எதிர்ப்பார்கள். பின்னவர்களை மிலிடரி வழியிலும் முன்னவர்களை ராஜரீக வழியிலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
* ஜம்மு & காஷ்மீர் பொதுமக்கள் இந்த முயற்சியை வரவேற்பார்கள் என்றே நினைக்கிறேன்.
----
கிழக்கு பதிப்பகம் முஷாரஃப் எழுதியுள்ள 'In The Line of Fire' புத்தகத்தின் தமிழாக்கத்தை ஜனவரி மாதம் கொண்டுவருகிறது.