வெங்கடேஷ் வாராவாரம் அனுப்பும் 'நேசமுடன்' மின்னஞ்சல் இதழ். எப்பொழுது வரும் என்று காத்திருப்பேன். வந்தவுடன் ஒருவரி விடாமல் படித்து முடித்துவிட்டுத்தான் மறுவேலை.
இந்த வாரம் தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்காலிக வேலைக்காக எடுத்துக்கொண்ட 15,000 பேரை நேற்று 'வீட்டுக்குப் போ' என்று அனுப்பியுள்ளதை முன்வைத்து
தவறு எங்கே என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இன்றைய செய்தி: அந்த 15,000த்தில் 11,000 பேரை முதல்வர் மீண்டும் திரும்ப வேலைக்கு எடுத்துக் கொண்டு விட்டார். எது எப்படியோ, இப்பொழுதைக்கு 4,000 பேருக்கு வேலை காலிதான்.
வெங்கடேஷின் கட்டுரைக்கு வருவோம். நாளுக்கு நாள் பட்டப் படிப்பு, உயர் படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஆனால் அரசு வேலைகள் குறைந்து கொண்டே வருகின்றன. இதனால் படிப்பு முடித்து வேலையில்லாமல் இருப்போர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. "தெரியவில்லை. எங்கோ தவறு நடந்துவிட்டது." என்கிறார்.
நாட்டின் ஜனத்தொகை அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த அதிகமாகும் தொகையெல்லாமே 20-60 வயதுக்குட்பட்டோர் தொகையில்தான் போய்ச்சேருகிறது. 12ஆவது தாண்டி பட்டப் படிப்புக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. அரசு வேலைகள் இனியும் அதிகமாகாது. இருக்கும் வேலைகளும் குறைவாகும். இப்பொழுதைய அரசு ஊழியர்களுக்கே மாநில அரசுகளினால் சரியாக சம்பளமும், ஓய்வூதியமும் கொடுக்க முடிவதில்லை. இன்னும் சில வருடங்களில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பிரச்சினை பூதாகாரமாக வெடிக்கும்.
பல மாநிலங்களில், முக்கியமாக தமிழகத்தில், கிராமப்புறங்களில் வறட்சி தலைவிரித்தாடுகிறது. இனியும் தண்ணீர் சரியாகக் கிடைக்கப் போவதுமில்லை. இதனால் பாரம்பரிய விவசாயத்தை நம்பி இருப்போர் நிலை கவலைக்கிடம்தான். நிலமற்ற விவசாயக் கூலிகளாக இருப்போர்க்கு சரியான வேலையோ, ஊதியமோ கிடைக்கப் போவதில்லை.
கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வந்து கட்டிடத்தொழிலில் கூலி வேலை செய்வோர்க்குக் கிடைக்கும் ஊதியம் நகர்ப்புற வாழ்க்கைக்குப் போதாது. இதனால் விளிம்பு நிலையில் வாழ்வதே அவர்கள் போக்கிடமாகி விடுகிறது.
இந்தப் பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்தமாக உலகமயம் (globalisation), தாராளமயத்தைக் (liberalisation) குறை சொல்கிறார்கள் பலர். அது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. மக்கள் தொகை அதிகரிப்பது உலகமயமாதல், தாராளமயமாதலினாலா? நீர் வளத்தை பாரம்பரிய விவசாயிகள் சரியாக உபயோகிக்காமல் இருப்பது உலகமயமாதல், தாராளமயமாதலினாலா? அரசிடம் வேலை வாய்ப்பு அதிகரிக்காததற்கு உலக வங்கி, சர்வதேச நிதியமைப்பு ஆகியவற்றை நோக்கி சிலர் கை நீட்டுகின்றனர். மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறை (fiscal deficit, revenue deficit) அதிகமான காரணத்தால் மாநில அரசுகள் உலக வங்கி, சர்வதேச நிதியமைப்பு ஆகியவற்றிடம் கையேந்திக் கொண்டு போக நேர்கையில், அரசுகள் தமது நிதிநிலையில் ஒழுங்கைக் கொண்டுவர வேண்டும் என்பதால் உலக வங்கி போன்றவை அரசின் செலவுகளை குறைக்கச் சொல்கின்றன. அதிலும் அத்தியாவசியச் செலவுகளான முதலீட்டைக் குறைக்க ஒருபோதும் சொன்னதில்லை.
மாநில, மத்திய அரசுகளின் பெரும்பான்மை முதலீடு இதுநாள் வரை விவசாயப் பாசனத்திலேயே இருந்து வந்தது. அப்படிப்பட்ட பாசன நீரும் இலவசமாக வழங்கப்பட்டிருந்தது. இப்பொழுது மேற்படி முதலீட்டால் உபயோகம் குறைவு என்றாகியுள்ளது. இன்றைய
தி பிசினஸ் லைன் கட்டுரைப்படி, ஒரு கன மீட்டர் தண்ணீரைக் கொண்டு அமெரிக்க விவசாயிகள் 1.3 கிலோ தானியத்தை உற்பத்தி செய்கையில், இந்திய விவசாயிகள் அதே தண்ணீரைக் கொண்டு வெறும் 0.3 கிலோ தானியம் மட்டுமே உற்பத்தி செய்கின்றனர். மேற்கொண்டு பாசன வசதிகளுக்காக முதலீடு செய்ய மாநில அரசுகளிடம் பணம் இல்லை. விவசாய வருவாய்க்கு நம் நாட்டில் வரிகள் ஏதும் இல்லாததால், அறுவடையிலிருந்து அரசுக்கென நேரடியாக பணம் ஏதும் வந்து சேர்வதில்லை. மொத்தமாக நம்மிடம் இருக்கும் தண்ணீரின் அளவு அதிகரிக்காத காரணத்தால் கர்நாடக அரசு ஆற்றுப் பாசனத்துக்கென அணைகளைக் கட்டி கால்வாய்களை வெட்டினால், தமிழகம் நேரடியாக பாதிக்கப்படுகிறது. பஞ்சாப் ஆற்றுப் பாசனத்துக்குச் செலவிட்டால், ஹரியானாவுக்குத் தொல்லை! அப்படியே ஆற்றுத் தண்ணீர் அதிக அளவில் கிடைக்கும் மாநிலத்திலும், செயல்திறன் குறைவாக இருப்பதால் ஒரு கன மீட்டருக்கு நாம் உற்பத்தி செய்வது வெறும் 0.3 கிலோ தானியமே!
கடந்த நாற்பது வருடங்களில் உழவின் மூலம் கிடைக்கும் வருவாய் மொத்த GDPஇல் 45%இலிருந்து 28% ஆகக் குறைந்து விட்டது. இனியும் குறைந்து கொண்டேதான் இருக்கும். கிராமப்புறங்களில் இதனால் வேலை வாய்ப்பு குறைந்து கொண்டேதான் இருக்கும். மற்ற துறைகளில், முக்கியமாக சேவைத்துறையில், வருமானம் பெருகிக் கொண்டிருக்கிறது. ஆனால் சேவைத்துறையில் சராசரி வருமானம் அதிகமாக இருப்பதால், மிகக் குறைவான வேலைகளே உருவாகியுள்ளன. அப்படி உருவான வேலைகளும் நகர்ப்புறங்களிலேதான் அதிகமாக உள்ளன. அதாவது கிராமப்புறங்களில் மாத வருவாய் ரூ. 2,000 இருக்கக்கூடிய 1000 வேலைகள் போய், நகர்ப்புறங்களில் மாத வருவாய் ரூ. 20,000 இருக்கக்கூடிய, 120 வேலைகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரம் 20% பெருகியுள்ளது. ஆனால் 880 வேலையற்றோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.
வேலை வாய்ப்பை அதிகரிக்க என்னதான் வழி?
1. கிராமப்புறங்களில் விவசாயம் சாராத வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். அதற்கு முதலாவதாக தொழில்சார்ந்த கல்வியினை உயர்நிலை (ஆறாவது வகுப்பு) முதற்கொண்டே தொடங்க வேண்டும். மாணவர்களுக்கு 50% நேரத்தில் உற்பத்தி சார்ந்த கலைகள் - லேத் பட்டறை, தச்சு வேலை, கொத்து வேலை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, தையல் வேலை, கணினித் தட்டெழுத்து, கணினியின் மற்ற உபயோகங்கள் போன்ற பலவற்றை - கற்றுத்தர வேண்டும். பத்து வருடங்கள் உருப்படியில்லாமல் பாடப்புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு ஒன்றையும் சாதிக்க முடியப்போவதில்லை.
2. கிராமங்களில் உழவு சாராத மீன்/இறால் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு (பால், இறைச்சி) போன்ற தொழில் பெருக குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதை வங்கிகள் பெருமளவில் செய்ய வேண்டும். மேற்படி வளர்ச்சிக்குத் தேவையான கால்நடை, மீன் உணவு/தீவன உற்பத்திக்கான தொழில்நுட்பங்களை கிராமங்களுக்குக் கொண்டுபோக வேண்டும். இதற்கான தண்ணீர் தேவையும் குறைவாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
மாற்று விவசாயம். ஏற்கனவே இது நடக்க ஆரம்பித்துள்ளது. பயோ டீசல் உருவாக்கத் தேவையான
Jatropha Curcas போன்ற செடிகளை வளர்ப்பது பலவகையில் நன்மை பயக்கக்கூடும். இதுபோன்ற பல மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்ய விவசாயிகளை ஊக்குவித்தல், குறைந்த வட்டியிலான கடன், வட்டியில்லாக் கடன், மான்யம் ஆகியவை தர வேண்டும்.
பயோ டீசல் மூலம் கிராமங்களே தங்களுக்குத் தேவையான எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றை உற்பத்தி செய்து கொள்ள முடியும் எனத் தோன்றுகிறது. ஆப்பிரிக்காவில் இருக்கும் பல பின்தங்கிய நாடுகள் இதை வெற்றிகரமாக செய்து வருகின்றன என்று அறிகிறேன்.
3. அவசர அவசரமாக நெடுஞ்சாலைகள் முதல் சிறு சாலைகள் வரை போட்டு கிராமப்புறங்களை பக்கத்தில் உள்ள சிறு நகரங்களுடன் இணைப்பது, கிராமப்புற வீடுகளுக்கு மின்சார வசதி அளிப்பது ஆகியவற்றின் மூலம் நகரங்கள் கிராமப்புறங்களிலிருந்து பல சேவைகளை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணம்: சலவை செய்தல், துணி தைத்துத் தருவது, செருப்பு உற்பத்தி போன்றவை.
4. கிராம, சிறு நகரப் பகுதிகளில் அதிக பட்ச அளவில் வேலை வாய்ப்பைக் கொடுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு இலவச நிலம், குறைந்த விலையில் நிலம், குறிப்பிட்ட காலம் வரையிலான வரி விலக்கு ஆகியவை கொடுக்கப்பட வேண்டும்.
5. பொறியியல் பாலிடெக்னிக்/கல்லூரிகளிலிருந்து படித்து வெளியே வரும் மாணவர்கள் சொந்தத் தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் அல்லது ஈக்விட்டி வழங்குவதற்கு அரசு வென்ச்சர் முதலீட்டு நிறுவனங்களை உருவாக்க வேண்டும்.
எனக்கு இப்பொழுதைக்குத் தோன்றியது இவ்வளவுதான்.