நேற்று திருச்சியில் ஒரு கூட்டத்தில் பேசினேன். இந்தியாவின் வளர்ச்சிக்கான பொருளாதார மாதிரிகள் - என்பதுதான் தலைப்பு. சுமார் 25 பேர்தான் இருந்தார்கள். (என்ன பேசினேன் என்பது பற்றிப் பின்னர் பதிவிடுகிறேன்.) பேச்சு சற்று தாமதமாகத் தொடங்கியது. அந்த நேரத்தில் சிலர் என்னிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
என் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் என்னிடம் "நீங்கள் ஏன் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். "ஏனெனில் இந்தியாவின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட்டுகள் மிக முக்கியம் என்று நான் நினைக்கிறேன்" என்றேன். அவர் பூம்புகாரில் இறால் பண்ணை குறித்து தன் அனுபவத்தைச் சொல்லத் தொடங்கினார். அதன் இறுதியில் கார்ப்பரேட்டுகள் என்றாலே தீயவர்கள் என்றார். நான் அதனை மறுத்துப் பேச ஆரம்பித்தேன். கார்ப்பரேட் என்றாலே தீயவர்கள் என்ற எண்ணம் தவறானது என்றேன். நானே ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைத்தான் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன் என்றேன்.
அவர் உடனே "நீங்கள் நல்லவர் இல்லை" என்றார்.
நான் அதிர்ச்சியுடன் "எப்படிச் சொல்கிறீர்கள்? உங்களுக்கு என்னைத் தெரியவே தெரியாதே?" என்றேன்.
"நரேந்திர மோடியை ஆதரிப்பவர் நல்லவனாக இருக்க முடியாது" என்றார். தொடர்ந்து, என் எழுத்துகள் எல்லாம் ஏழைகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானவை, கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் எல்லாமே திட்டமிட்டு ஏழைகளுக்கு எதிரானவையாக உருவாக்கப்படுகின்றன என்று பேசத் தொடங்கினார்.
இந்தத் தர்க்கத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. வாயடைத்துப் போய்விட்டேன் என்பதுதான் உண்மை.
அதன்பின் மேடைக்குச் சென்று என் பேச்சை முடித்துவிட்டு, கேள்விகள் இருக்கின்றனவா என்று கேட்டேன். அந்த நண்பர் என் உரை முழுதையும் கேட்டுக்கொண்டிருந்தார், ஆனால் கேள்வி எதையும் கேட்கவில்லை. அவர் அருகில் அமர்ந்திருந்த இன்னொருவர், "நீங்கள் (ஜகதீஷ்) பகவதியின் பொருளாதாரக் கொள்கையை ஆதரிக்கிறீர்கள். அவர் மோடியை ஆதரிக்கிறார். அப்படியானால் நீங்கள் பாஜகவை ஆதரிக்கிறீர்களா?" என்றார்.
பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகள் எனக்குப் பிடித்தமான அளவு வலப்பக்கத்தில் இல்லை; சொல்லப்போனால் ஆர்.எஸ்.எஸ், சுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஆகியோரின் கருத்துகள் எனக்கு ஏற்புடையவை அல்ல; ஆனால் பகவதியின் கருத்துகளை ஆதரிக்கிறேன், மோதி பிரதமர் ஆவதை ஆதரிக்கிறேன் என்றேன்.
இது பாஜகவின் இன்னொரு முகம் என்று சொல்லிவிட்டு அவர் எழுந்துசென்றுவிட்டார்.
லிபரல் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து, கட்சி சார்பின்றி தமிழகம் முழுக்கச் சென்று மக்களிடம் உரையாட நல்ல உந்துசக்தி ஏற்பட்டுள்ளது.