Monday, January 31, 2005

கே.வி.ராஜா - கோமதி திருமண வரவேற்பு

இன்று, சக வலைப்பதிவுலகவாசி கே.வி.ராஜா (எ) கொஸப்பேட்டை குப்ஸாமி - கோமதி திருமண வரவேற்பு சென்னை வளசரவாக்கம் {(அ) பக்கத்து ஊர்} இந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கே.வி.ராஜா-கோமதி


சக தமிழ் இணைய வாசிகள் பலரும் ஒருசேரக் கண்ணில் பட்டனர். பெங்களூரில் இருந்து ஐயப்பன், ஷக்திபிரபா, என்றும் அன்பகலா மரவண்டு, கொல்கொத்தாவிலிருந்து நிர்மலா அவரது பெண்ணுடன், பாலராஜன் கீதா தம்பதியினர், சென்னையிலிருந்து ஹரி கிருஷ்ணன் தம்பதியினர், வெங்கடேஷ், பா.ராகவன், நான், சித்ரன், இகாரஸ் பிரகாஷ், பிட்சைப்பாத்திரம்-ஸ்வஸ்திக் அட்வர்டைசிங்-சுரேஷ் கண்ணன், சாகரன் மனைவியுடன், எஸ்.கே எனப்படும் சைபர் பிரம்மா, ஆசாதின் மனைவி, மகள், கல்கி அட்டை புகழ் கவிஞர் மதுமிதா, நெல்லையிலிருந்து விமர்சகர் பிரசன்னா, ஆசீஃப் சார்பாக அவரது தந்தை சாத்தாள்குளம் அப்துல் ஜப்பார், புதுவையிலிருந்து இராஜ.தியாகராஜன், புஜைராவிலிருந்து உஷா என்று பலரும் வந்திருந்தனர்.

எலிஜிபிள் பேச்சிலர்கள் ரஜினி ராம்கி, ஷங்கர் (எப்பொழுதும் போல இங்கும் லேட்) இருவரும் வந்திருந்தனர்.

பலரையும் இதுதான் வாய்ப்பென்று படம் பிடித்தேன். நாளை யாருக்காவது சாகித்ய அகாதெமி பரிசு கிடைக்கும்போது பட்டென்று வலைப்பதிவில் படத்தைப் போட்டுவிடலாம் அல்லவா?

கல்யாண மாப்பிள்ளை ராஜா அங்கும் இங்குமாக சரளமாக அனைவரிடமும் பேசி அளவளாவிக் கொண்டிருந்தார். சிறிதுநேரம் கழித்து அவரைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய் பந்தலில் நிறுத்திவிட்டனர். அதைத் தொடர்ந்து கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் மணமக்களைச் சூழ்ந்துகொள்ள videocapture, photocapture நிகழ்ச்சிகள் படு விமரிசையாக நடந்தேறின.

கல்யாண வரவேற்புகளில் இப்பொழுதெல்லாம் பிரசித்தமான ஆர்கெஸ்டிரா - மிகச்சத்தமாக மணடபமே அதிர அதிர நடந்துகொண்டிருந்தது.

விமர்சகர் பிரசன்னா மேற்படி ஆர்கெஸ்டிராவின் பேனரில் இரண்டு தவறுகளைக் கண்டுபிடித்தார். என்னெவென்று கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு எதுவும் கிடையாது.

ஆர்கெஸ்டிரா

Sunday, January 30, 2005

பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு தேவையா?

சில நாள்களுக்கு முன்னர் கிறித்துவ சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டுப்பேரவை ஒன்று தி ஹிந்து(வில் என நினைக்கிறேன்) செய்தித்தாளில் ஒரு முழுப்பக்க விளம்பரம் ஒன்றை எடுத்திருந்தது.

அதில் பொறியியல் கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வு தேவைதானா என்ற கேள்வியை எழுப்பியிருந்தது.

ஆண்டுக்கு இந்தியா முழுமையிலும் 70,000 பொறியியல் கல்லூரி இடங்கள் வீணாகப் போகின்றன (அதாவது படிக்க ஆள் கிடையாது) என்றும், அதில் 20,000 இடங்கள் தமிழகத்தில் என்றும் விவரங்கள் இருந்தன. அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம் இரண்டும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என்று அறிவித்துள்ளன என்றும் இந்த விளம்பரம் சொல்லியது. (உண்மையா? எனக்குத் தெரிந்தவரை கர்நாடகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.)

சென்ற வருடம் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கும் தமிழக அரசுக்கும் பெரும் போராட்டம் நடந்தது. தமிழக அரசு சுயநிதி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவது, அங்கு வசூலிக்கப்படும் கட்டணம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முனைந்தது.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளிலும் பாதி இடங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள்தான் தேர்வு பெறுவார்கள். அதைத்தவிர மீதிப் பாதி இடங்கள் management quota என்று சொல்லப்படுவது. இந்த இடங்களுக்கும் அண்ணா பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு வழியாகத்தான் மாணவர்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றது தமிழக அரசு. சுயநிதி கல்லூரிகள் இதனை எதிர்த்தன. நீதிமன்றங்கள் வரை சென்று போராடின. அதையடுத்து நீதிமன்றங்கள் இந்தக் கல்லூரிகள் தாங்களாகவே சேர்ந்து ஒரு நுழைவுத்தேர்வு நடத்தலாம் என்று அறிவித்தன.

இரண்டு வருடங்கள் முன்னால் வரை எந்த எதிர்ப்பும் காட்டாத சுயநிதி கல்லூரிகள், ஏன் இப்பொழுது அரசு நடத்தும் நுழைவுத் தேர்வை எதிர்க்க வேண்டும்? காரணம் எளிது. நான்கு வருடங்களுக்கு முன்புவரையில் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை, இருக்கும் இடங்களை விட அதிகமாக இருந்தது. கூரைக் கொட்டகையில் நடத்தும் மாட்டுத்தொழுவக் கல்லூரிகளுக்கும் போய் படிக்க மாணவர்கள் ஆசைப்பட்டனர். ரசீது வாங்காது, ஆயிரக்கணக்கில் காசும் கொடுத்தனர். (நல்ல பிரிவு - கணினித்துறை, மின்னணுவியல் - என்றால் capitation fee ரூ. 2 லட்சம் வரை போகலாம்.) ஆனால் கடந்த சில வருடங்களில் ஏகப்பட்ட கல்லூரிகள், இடங்கள், ஆனால் படிக்க மாணவர்கள்தான் இல்லை.

பலர் இந்த "டுபாக்கூர்" கல்லூரிகளில் படிக்காமல், காசு அதிகமானாலும் தேவலாம் என்று வெளிநாடுகளில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளின் பொறியியல் கல்லூரிகள் இந்தியாவில் தீவிரமாக ஆள் பிடிக்கின்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இப்பொழுது கேட்கும் கேள்வியும் நியாயமானதுதான். நுழைவுத்தேர்வு எப்பொழுது தேவைப்படும்? Demand இல்லாத நிலையில், supply அதிகமாக இருக்கும் நிலையில் வடிகட்டல் தேவைதானா? தேவையில்லை என்றே நானும் நினைக்கிறேன்.

அரசு தன் கல்லூரிகளில் தகுதியுடையவர்கள்தான் படிக்க வரவேண்டும் என்று நினைத்தால் அதற்கென நுழைவுத்தேர்வு நடத்தலாம். ஆனால் எல்லாக் கல்லூரிகளும் நுழைவுத்தேர்வில் தகுதிபெறுபவர்களுக்குத்தான் கல்லூரிகளில் இடம் என்று சொல்வது அவசியமற்றது.

அதேபோலவே சுயநிதி கல்லூரிகளில் சிலவும் தமக்கென தகுதி அடிபப்டையில் எந்த மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்ய சில நுழைவுத் தேர்வுகளை நடத்தலாம். அல்லது அமெரிக்காவில் நடப்பது போல ஒரே நுழைவுத் தேர்வில் (யாரோ ஒருவரை வைத்து நடத்தி) எடுக்கும் மதிப்பெண்களை முன்வைத்துத் தேர்ந்தெடுக்கலாம்.

Saturday, January 29, 2005

நதிநீர் இணைப்பை வலியுறுத்தி உண்ணாவிரதம்

நாளை (ஞாயிறு, 30 ஜனவரி 2005, தியாகிகள் தினம்), காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில், நதிநீர் இணைப்பை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரதம் நடக்க இருக்கிறது. டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் மக்கள் சக்தி இயக்கம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

மக்கள் சக்தி இயக்கத்தைத் தொடர்பு கொள்ள முகவரி:

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி
மக்கள் சக்தி இயக்கம்
17-A தெற்கு அவென்யூ
காமராஜ் நகர்
திருவான்மியூர்
சென்னை 600 041
தொலைபேசி: 2442-1810
மொபைல்: 98405-15927, 98402-47517

இதுபற்றி மக்கள் சக்தி இயக்கத்திலிருந்து எனக்குக் கிடைத்த கோப்பு ஒன்றை (PDF) இணைத்துள்ளேன். (எழுத்துருவில் சில மாற்றங்கள் மட்டும் செய்துள்ளேன்.)

Friday, January 28, 2005

புத்தகக் கண்காட்சியின் விடியோத் துண்டு

இரண்டு நிமிடக் குறும்படம். இன்னமும் சில துண்டுகளை வரும் நாள்களில் சேர்க்கிறேன். கிட்டத்தட்ட நான்கு MB சமாசாரம். அதனால் நேரம் அதிகம் எடுக்கலாம். நேரடியாக திரையில் தெரியவில்லையென்றால் இங்கிருந்து எடுத்து தனியாகப் பார்த்துக் கொள்ளவும்.பி.கு: அனைவரது வேண்டுகோளையும் ஏற்று, தானாகவே ஓடும் படம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலே உள்ள சுட்டியிலிருந்து விடியோவைத் தருவித்துப் பார்த்துக்கொள்ளவும்.

லினக்ஸ் + தமிழ்

பல நாள்களாக என் மடிக்கணினியில் லினக்ஸ் பகுதிக்கு நான் செல்லவேயில்லை.

என் மடிக்கணினியின் ஒரு பகுதியில் மாண்டிரேக் தொகுப்பை ஏற்றியிருந்தேன். ஆனால் ஏதோ ஓர் உத்வேகத்தில் தமிழில் இடைமுகம் இருக்கவேண்டும் என்று மாண்டிரேக்கை நிறுவும்போது சொல்லிவிட்டேன்.

தமிழாக்கம் படு சுமார், மேலும் யுனிகோட் தமிழ் மாண்டிரேக்கில் சரியாக வேலை செய்யாத நேரம் அது. பாங்கோ, அது, இது என்று நிறையப் போராட வேண்டி இருந்தது. ஒரேயடியாக என்னை சோர்வடையச் செய்துவிட்டது. அதன்பின்னர் மாண்டிரேக் தமிழாக்கத்தில் சிறிது கவனம் செலுத்தினேன். ஆனால் அதற்கு சரியான வகையில் பங்களிப்புக் கொடுக்க முடியாது போயிற்று. இப்பொழுது அடுத்த மாண்டிரேக் தொகுப்பு 10.2 வெளிவர இருக்கிறது. நிறைய பதங்களுக்குத் தமிழாக்கம் தேவை. நண்பர்கள் பலர் ஒத்துழைத்தால் நன்றாகச் செய்யலாம். விரும்புபவர்கள் என்னை மின்னஞ்சலில் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.

இதற்கிடையில் எனது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பகுதியில் சில வைரஸ்கள் புகுந்து விளையாட, கணினியை முழுவதுமாக தொடக்கத்திலிருந்து நிறுவ வேண்டியிருந்தது. அப்பொழுது மடிக்கணினியில் மாண்டிரேக்குக்கு பதில் ரெட்ஹாட் 9.0 நிறுவலாம் என்று தோன்றியது. (இனி மாண்டிரேக் வீட்டில் உள்ள மேசைக்கணினியில்தான்.) ரெட்ஹாட் 9.0-வை நிறுவும்போது தமிழ் இடைமுகம் எதையும் நான் அவசரப்பட்டு நிறுவவில்லை. ஆங்கிலமே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இனிதான் தமிழில் எழுத, படிக்க வேண்டிய சின்னஞ்சிறு விஷயங்களை நிறுவ வேண்டும். இதற்கு step-by-step உதவிப் பக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை. முதலில் ஆரம்பகட்ட விஷயங்களான ஃபயர்ஃபாக்ஸ், தண்டர்பர்ட், ntfs file system படிக்கும் வசதி (இது மாண்டிரேக்கில் default ஆகவே உண்டு. ஆனால் ரெட்ஹாட் 9.0-ல் தனியாக கெர்னல் மாட்யூல் ஒன்றை நிறுவுவதன் மூலம்தான் இந்த வசதி கிடைக்கிறது.) ஆகியவற்றை இப்பொழுதுதான் நிறுவி முடித்துள்ளேன்.

தமிழ்லினக்ஸ் இணையத்தளத்தில் நிறையப் பக்கங்களை ஏற்ற வேண்டும். அப்பொழுதுதான் புதிதாக லினக்ஸ் பக்கம் வருபவர்களுக்கு வசதியாக இருக்கும். என் கணினியை ஒருவழியாக்கிய பின்னர் நானே இந்த உதவிப் பக்கங்களை எழுதிவிடலாமென்று இருக்கிறேன்.

Indibloggies best indic blog (Tamil) award

என் வலைப்பதிவு சிறந்த தமிழ் வலைப்பதிவாக Indibloggies நடத்திய வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து சித்தார்த் சிவசைலம் அனுப்பிய US$25 மதிப்புள்ள அமேசான்.காம் பரிசு கூப்பனும் கிடைத்தது.

Thursday, January 27, 2005

கடத்தப்படும் பிஹார் பள்ளிச் சிறார்கள்

இந்தியாவிலேயே மோசமான மாநிலம் என்று அனைவராலும் அறியப்படும் பிஹாரில் பள்ளிச் சிறார்கள் சகட்டுமேனிக்குக் கடத்தப்படுகிறார்கள். ஒன்று, இரண்டு, இன்று மூன்று.

சக மாணவர்கள் இதை எதிர்த்து போராடுகிறார்கள். இன்றிலிருந்து பிள்ளைகளின் தாயார்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

லாலு பிரசாத் யாதவ் இது எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி என்கிறார்.

சில நேரங்களில் பிஹாரை நினைத்தால் பயமாக உள்ளது. அங்கு உள்ளவர்களுக்கு விடிவே இல்லையா?

மாஃபியா கூட்டங்கள், கொலை, கொள்ளை, கடத்தல், இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பெரிய மாநிலம் என்ற பெருமை, மோசமான குடியாட்சி.

நியாயமான அதிகாரிகள் (சத்யேந்திர துபே போன்றவர்கள்) இருந்தால் அவர்கள் கொல்லப்படுவார்கள்.

பப்பு யாதவ் போன்றவர்கள் சிறையிலிருந்தபடியே தங்களது ராஜ்ஜியத்தை நடத்துவார்கள்.

உச்ச நீதிமன்ற ஆணையினால் வேட்பாளராகப் பதிவு செய்ய வரும் நேரம் பார்த்து சில ரவுடி அரசியல்வாதிகள் கைது செய்யப்படும் அவலம். (மற்ற நேரங்களில் அவர்களைப் பிடிக்க காவல்துறை முயற்சி செய்வதில்லை.)

பிஹாரை சுத்தம் செய்ய மக்கள் இயக்கம் ஒன்று உருவாக இந்தக் கடத்தல்கள் துணை நிற்குமா?

Wednesday, January 26, 2005

'பத்ம' விருதுகளை பெயருடன் சேர்த்துக்கொள்ளக் கூடாது

இன்றைய தினமணி செய்தியில் (இணையத்தில் தேடினால் சுட்டி கிடைக்கவில்லை) 'பத்ம' விருதுகளை பெயருடன் சேர்த்துச் சொல்லக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவு பற்றி சிறு பெட்டிச்செய்தி வந்துள்ளது.
பத்ம விருதுகளின் சட்டபூர்வ அந்தஸ்து குறித்து நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பாக டிசம்பர் 1995-ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த விருதுகளுக்குச் சட்டபூர்வ அந்தஸ்து உள்ளதாகக் கூறியது. அதே நேரத்தில், இந்த விருதுகளைப் பெயருக்கு முன்போ, பின்போ பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. இதைப் பட்டமாகப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோர், அந்தப் பட்டங்களைத் திருப்பித்தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

எனவே, பத்ம விருதுகளை லெட்டர்பேடு, அழைப்பிதழ், சுவரொட்டி, புத்தகங்கள் உள்பட எதிலும் பெயருடன் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவைக் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டும் என்று விருதுபெற்றவர்களுக்குக் [உள்துறை அமைச்சகத்தால்] கடிதம் அனுப்பப்பட்டது.
நம் சினிமா நட்சத்திரங்கள், பிற கலைஞர்கள், அரசியல் திலகங்கள் ஆகியோர் இதைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். யாராவது பொதுநல வழக்கு கொண்டுவரப்போக, 'உள்ளதும் போச்சுடா' என்று ஆகிவிடக் கூடாது பாருங்கள்!

கிராம வருமானத்தை ஏன் அதிகரிக்க வேண்டும்? - 2

கிராம வருமானத்தை எப்படி அதிகரிப்பது என்று பேச்வதற்கு முன்னால், கிராம வருமானத்தை ஏன் அதிகரிக்க வேண்டும் என்று பார்ப்போம். யாருக்கும் இதில் சந்தேகம் இருக்காது என்று முன்னர் சொல்லியிருந்தேன். ஆனால் சிலருக்காவது சந்தேகங்கள் இருப்பது போலத் தெரிகிறது.

இன்றைக்கு பொருளாதார வளர்ச்சி என்று சொல்லும்போது உற்பத்தி அதிகரிப்பு, GDP அதிகரிப்பு ஆகிய இரண்டையும் கருத்தில் வைக்கிறோம். வருமானம் அல்லது பணம் என்பது ஒரு குறியீடுதான். அதன் பின்னணியில், அடிப்படையில் இருப்பது பொருள் உற்பத்தி. அடிப்படைப் பொருள் இல்லாமல் அதிகமாகப் பணத்தை அச்சடித்து, "நாளை முதல் ஒரு பழைய ரூபாய் என்பது பத்து புது ரூபாய்கள்" என்று சொல்வதால் யாருக்கும் எந்த உபயோகமும் இருக்கப் போவதில்லை.

எனவே ஒருவகையில் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று சொல்லும்போதே உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பதுதான் உட்பொருள். சில நேரங்களில் வருமானத்தை இரட்டிப்பாக்க, பொருள் உற்பத்தியை இரண்டு மடங்குக்கு மேலாகவும் பெருக்க வேண்டிய அவசியம் இருக்கும்! ஏனெனில் சந்தையில் - மாறுகடையில் - பொருள் அதிகமாகக் கிடைக்கும்போது - supply அதிகமாகும்போது - விலை குறையும்.

ஆனால் அதே சமயம் உலகத்தின் வேறொரு பகுதியில் புதிய மாறுகடையில் நமது உற்பத்திப் பொருளுக்கு அதிக விலை கிடைக்கலாம். அப்பொழுது உற்பத்தியைப் பெருக்காமலேயே அதிகம் சம்பாதிக்க முடியும். ஆனால் பிற நாட்டின் மாறுகடைகளுக்குச் செல்லவேண்டுமானால், அதைப்பற்றிய புரிதல் அவசியமாகிறது. சில மாறுகடைகள் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படும் பொருள்கள் மீது மேலதிக வரிகளை (anti dumping duties) விதிப்பார்கள். அமெரிக்க இறால் உற்பத்தியாளர்களின் முறையீட்டால் இந்திய இறால் இறக்குமதியின் மீது அமெரிக்க அரசு அதிக வரி விதித்திருந்தது. [இப்பொழுது சுனாமியால் இந்தியா பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த வரி தாற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.] பிற மாறுகடைகளை அடைய வேண்டுமானால் உற்பத்தித் தரத்தைப் பெருக்க வேண்டியது அவசியமாகிறது. மாறுகடை நுட்பங்களை அறிய வேண்டியதாகிறது. தொழில்நுட்பம் மூலம் பதப்படுத்துதல், பலநாள்கள் பாதுகாத்து வைத்தல் ஆகியவை பற்றி யோசிக்க வேண்டியதாகிறது. நிறைய மூலதனம் தேவைப்படுகிறது.

இப்பொழுது கிராமப்புற சராசரி வருமானத்தை வைத்துக்கொண்டு அடிப்படை வசதிகளைச் செய்வதே பெரும் பாடாக உள்ளது. எந்த முன்னேற்றமாக இருந்தாலும் அரசு இயந்திரங்களின் மூலமே அவை உருவாகும் என்று அதற்காகக் காத்திருக்க வேண்டியதாகிறது. தனியார் நிறுவனங்கள் தங்களின் முதல் மாறுகடையாக மாநகரங்கள், அதன் பின்னர் சிறு நகரங்கள், கடைசியாக (தேவைப்பட்டால்) கிராமங்கள் என்றுதான் பார்க்கின்றனர்.

காலனியாதிக்கத்தில் எப்படி இந்தியா போன்ற நாடுகளின் சொத்து பிற நாடுகளுக்குச் சென்றதோ, அதைப்போலவே இப்பொழுது கிராமங்களின் சொத்தும் நகரங்களை நோக்கியே செல்கிறது. கிராமங்களின் உற்பத்திப் பொருளான உணவுப்பொருள்களின் விலை வெகுவாகக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆனால் இந்த உணவுப்பொருளை உற்பத்தி செய்யவே கிராமங்கள், நகரங்களில் முகாமிட்டிருக்கும் உரக் கம்பெனிகளை நாட வேண்டியுள்ளது. டீசல் முதல், சோப்பு, நகச்சாயம் வரையிலான அனைத்துப் பொருள்களையும் வாங்கும்போது கிராம வருமானம் நகரத்தை நோக்கிச் செல்கிறது. இதில் இந்திய நிறுவனம், MNC நிறுவனம் என்றெல்லாம் பேசி எந்தப் பயனும் இல்லை. மொத்தத்தில் கிராமங்களால் இப்பொழுதைக்கு நகரங்களுக்குத் தருவதற்கு ஒன்றே ஒன்றுதான் உள்ளது. உணவுப் பொருள். ஆனால் அதற்காக அவர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தை விட, கிராமங்கள் நகரப் பொருள்களை வாங்கச் செலவிடும் தொகை அதிகமாகிறது.

இந்திய கிராமங்களுக்கும், நகரங்களுக்குமான வர்த்தக வித்தியாசம், இந்திய சுதந்தரத்துக்குப் பிறகு அதிகரித்துக்கொண்டுதான் வந்துள்ளது. விளைவாக கிராம-நகர வருமான வித்தியாசமும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இதன் விளைவாக கிராமங்கள் தங்கள் உடைமைகளை சிறிது சிறிதாக பணம் உள்ள நகரத்தாருக்கு விற்று, அடிமைகளாக மட்டுமே இருக்க வேண்டிய நிலை வந்து சேரும். நகர வங்கிகளிலிருந்து கடன் வாங்கி - அதென்ன நகர வங்கிகள் என்று கேட்கிறீர்களா? வங்கிகளின் தலைமை அலுவலகங்கள் எங்குள்ளன? அங்குதான் உபரி வருமானம், நிகர லாபம் போய்ச்சேருகிறது. வங்கிகளின் பங்குதாரர்கள் எங்கு வசிக்கிறார்கள்? முக்கால்வாசிப் பேர் நகரங்களில். ஈவுத்தொகையும், முதல் பெருக்கமும் அவர்கள் கைக்குத்தான் போய்ச்சேருகிறது - அந்தக் கடனிலும் கிராம மக்கள் முழுகிப் போகின்றனர். வானம் பொய்க்கும்போதோ, சுனாமிப் பேரலைகளுக்குப் பிறகோ, தற்கொலை செய்து கொள்வது மட்டும்தான் ஒரே வழி.

ஒரு நாட்டின் அரசுதான் இந்த ஏற்றத்தாழ்வுகளை சமப்படுத்தி, பணம் பெருகியுள்ள இடங்களிலிருந்து வரிகள் மூலம் அவற்றைப் பெற்று பணம் இல்லாத இடங்களுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இதன் விளைவாக ஏற்றத்தாழ்வுகள் ஓரளவுக்குத்தான் குறையுமே ஒழிய கிராமங்கள் உற்பத்தி ஸ்தனங்களாக மாறாவிட்டால் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும்.

இதிலிருந்து மீள வேண்டுமானால், இந்திய கிராமங்கள் தங்களைத் தனி நாடாக உருவகம் செய்து கொள்ள வேண்டும். எந்த விதத்தில் புது உற்பத்திப் பொருள்களையும், சேவைகளையும் உருவாக்கி அவற்றை நகர மக்களிடம் விற்க முடியும், பிற நாடுகளில் விற்க முடியும் என்பதை கிராமங்கள் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். அதே நேரத்தில், ஒவ்வொரு கிராமமும் பக்கத்தில் உள்ள கிராமங்களின் தேவையை நகரங்களை விட வேகமாக, உயர்வாக எப்படி திருப்திப்படுத்த முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

நாடுகளாகப் பிரிந்திருந்தால் வர்த்தகத் தடைகள் மூலம் ஒரு நாடு பிற நாடுகளிடமிருந்து தன் மக்களைக் காப்பாற்ற முடியும். ஆனால் ஒரே நாடாக இருக்கும் பட்சத்தில் கிராமங்கள் நகரங்களின் பொருள்கள், சேவைகள் மீது எந்த அதிக வரியையும் விதிக்க முடியாது. எனவே (பொருள்/சேவை) உற்பத்திப் பெருக்குதல், தன்னளவில் அல்லது சுற்றியுள்ள கிராமங்கள் சேர்ந்து தனது தேவையை கவனித்துக் கொள்வது, கிராம உற்பத்திப் பெருக்கத்துக்குத் தேவையான முதல், நுட்பம், கல்வி, மனிதவளம் ஆகியவற்றைக் கொண்டுவந்து சேர்ப்பது என்பதில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

[பகுதி 1: கிராம வருமானத்தை இரட்டிப்பாக்க என்ன செய்யவேண்டும்? - 1]

Monday, January 24, 2005

முதலைகளுடன் ஒரு நாள்

சென்னையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப் பண்ணை உள்ளது. இந்தியாவில் முதலைகள் அழிந்துபோய்க்கொண்டிருந்த நிலையில் 1976-ல் உருவாக்கப்பட்ட இந்தப் பண்ணையில் இந்தியாவின் மூன்று முதலை இனங்களான நன்னீர் முதலை (கரியால், நீண்ட ஊசி போன்ற மூக்கு உடையவை), சதுப்பு நில முதலை (மகர்), உப்பு நீர் முதலை ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. இனப்பெருக்கத்துக்குப் பின்னர் பல முதலைகள் காடுகளில் விடப்பட்டுள்ளன. இந்தப் பண்ணையைப் பராமரிப்பது Madras Crocodile Bank Trust ஆகும்.

வெளிநாட்டு முதலைகள் - (தென்/வட) அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவை - சிலவும் உள்ளன. மொத்தமாக உலகில் உள்ள 23 வகை (species) முதலைகளில் 14 வகை முதலைகள் சென்னை முதலைப் பண்ணையில் உள்ளன. முதலைகளுடன், பல ஆமை வகைகள், பாம்புகள், பல்லி வகைகள் (இகுவானா) ஆகியவையும் இங்குள்ளன. பல்வேறு பறவையினங்கள் தாங்களாகவே இங்கு வந்து வசிக்கின்றன.

கரியால்
கரியால் - நன்னீர் முதலைகள்


அனிமல் பிளாநெட், டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிரபிக் போன்ற தொலைக்காட்சி சானல்களில் மட்டும் இல்லாமல், அவ்வப்போது எங்கள் குழந்தையுடன் நேரடியாகவே முதலைப் பண்ணை சென்று அங்குள்ள முதலைகளைப் பார்த்துவிட்டு வருவது வழக்கம். நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 20, சிறுவர்களுக்கு ரூ. 10.

மகர்
மகர் - சதுப்புநில முதலை


சென்னையில், கிண்டியில் உள்ள மிருகக் காட்சி சாலை, வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகியவை பார்க்கவே படு மோசமாகவும், சகிக்க முடியாததாகவும் இருப்பது போல இந்த முதலைப் பண்ணை இருக்காது. நன்கு பராமரிக்கப்படுகிறது.

முதலைகளுக்கு வாரத்துக்கு ஒருமுறை முழுதாக சாப்பாடு போடுகிறார்கள். ஒவ்வொன்றும் இரண்டிலிருந்து ஐந்து கிலோ மாமிசம் சாப்பிடுகிறது. இங்கு கிட்டத்தட்ட 1,000க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன.

உப்பு நீர் முதலை
உப்பு நீர் முதலை


ஒரு கிலோ மாமிசம் நாற்பது ரூபாய் என்ற கணக்கில் முதலைகளுக்கு உணவு வாங்கிப்போடுகிறோம். இது நடுவே கிடைக்கும் டிஃபன். முன்னமே சொன்னது போல வாரம் ஒருமுறை முழுச்சாப்பாடு உண்டு. ஒரு கிலோ மாமிசத்துடன் ஊழியர் ஒருவர் அலுமினிய டப்பாவைத் தட்டுகிறார். பாவ்லோவ் உள்ளுணர்ச்சியில் பல சதுப்புநில முதலைகள் ஓடிவந்து வாயைப் பிளக்கின்றன. தூக்கி எறியும் துண்டுகள், சில முதலைகளின் வாயில் நேராகப் போய் விழுகின்றன. முதலைகள் அப்படியே அவற்றை விழுங்குகின்றன. கடிக்கவே கடிக்காதா?

முதலைகளுக்குக் கண்பார்வை பக்கவாட்டில் சற்று மேல்நோக்கி உள்ளதால், கீழே தரையில் விழுந்துள்ள உணவைக் கண்களால் சரியாகப் பார்க்க முடிவதில்லை. ஆனால் முகர்ந்து பார்த்து உணவை நோக்கி முன்னேறுகின்றன. ஒரு குழியில் உள்ள கிட்டத்தட்ட எழுபது முதலைகளில் பத்து முதலைகளுக்குத்தான் உணவுத் துண்டுகள் கிடைக்கின்றன. அங்கிருந்து நகர்கிறோம்.

Jaws என்று பெயரிடப்பட்ட மிக நீளமான உப்பு நீர் முதலை - தன்னந்தனியனாக உள்ளது. கிட்டத்தட்ட ஆறு மீட்டருக்கு மேல் நீளம். எப்பொழுதும் தண்ணீருக்கு அடியிலேயே இருப்பது. என் மகள், தான் கூப்பிடுவதால்தான் அது எங்களை நோக்கி வருகிறது என்று நினைக்கிறாள். ஆனால் தரைக்கு வெகு அருகில் வந்து முகத்தை சற்றே மேல்நோக்கிக் காண்பித்து பின் மீண்டும் திரும்பிச் சென்றுவிடுகிறது. பிரம்மாண்டமான முதலை அது. உப்பு நீர் முதலைகள், சதுப்பு நிற முதலைகளைப் போன்றுதான் காணப்படுகின்றன. உடலமைப்பில் எனக்கு பெரிய வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. சற்றே உடல் வண்ணத்தில் கருமை அதிகமாக உள்ளது. சதுப்பு நில முதலை மண்ணில்தான் பெரும்பாலும் உள்ளது. எப்பொழுதாவதுதான் தண்ணீருக்குள் செல்கிறது. கரியாலும், உப்புநீர் முதலையும் பெரும்பாலும் தண்ணீருக்கடியிலும், எப்பொழுதுதாவதுதான் தண்ணீருக்கு வெளியிலும் உள்ளன.

குட்டி முதலைஊழியர் ஒருவர் குஞ்சு பொறித்திருக்கும் ஆமை ஒன்றை என் பெண் கையில் கொடுக்கிறார். குறுகுறுவென ஓடுகிறது ஆமை. பொறிக்காத முதலையின் முட்டை ஒன்றைக் கையில் எடுத்துப் பார்க்கிறாள் மகள். அதன்பின் இரண்டடி நீளம் உள்ள சிறிய முதலை ஒன்றைக் கையில் தூக்கிவைத்து தொட்டுப் பார்க்கச் சொல்கிறார் அந்த ஊழியர். அதைக் கையிலும் வாங்கித் தூக்கிப் பிடிக்கிறாள் மகள். கிட்டத்தட்ட மூன்று கிலோக்கள் இருக்கும் அந்த முதலைக் குஞ்சு.

முதலை முட்டைமறைவான இடத்தில், முதலைப் பண்ணைக்கு அருகில் உள்ள கிராமக் குழந்தைகள் சிலர் பொம்மலாட்டம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்திக் காட்டுவார்களாம். நாங்கள் வருவதைப் பார்த்ததும் கம்பிக் கதவுக்கு அப்பால் உள்ள குழந்தைகள் வெட்கப் படுகிறார்கள். அந்த இடத்தை விட்டு நகர்கிறோம்.

-*-

முதலைப் பண்ணையில் Herpetology மையம் ஒன்று உள்ளது.

இரண்டு நாள்களுக்கு முன் சென்றிருந்தபோது இந்த மையத்தில் பாம்புகளிடமிருந்து விஷம் எடுப்பதையும் பார்த்தோம். இந்தியாவில் நான்கு பாம்பு இனங்களில்தான் விஷம் இருக்கிறதாம். அவை நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சுருள்விரியன் என்றார் பராமரிப்பு ஊழியர். இந்த நான்கில், கட்டுவிரியனின் விஷம்தான் மிக அதிகமானதாம். நாகப்பாம்பின் விஷத்தைவிடப் பத்துமடங்கு அதிகமானது, கடித்தவுடன் மிகவேகமாக மரணம் ஏற்படுத்துவது என்றார்.

நாகப்பாம்பு, கோபம் வந்தால் தலையை மேலே உயர்த்தி, பட்டையாக அகட்டி, பட்டென்று கீழே அடித்து, ஹிஸ்ஸ்ஸ் என்று சத்தம் போடுகிறது. கட்டுவிரியன் சத்தம் ஏதும் போடுவதில்லை. ஏதாவது அசைந்தால், அல்லது யாராவது அருகே வந்தால், கண்ணாடிவிரியன் உடலைச் சுருட்டிக்கொண்டு தலையை அந்தச் சுருட்டலின் நடுவே வைத்து, உடல் முழுவதையும் அதிரவைத்து ஓயாது உஷ்-உஷ் என்று சத்தம் இடுகிறது. (கோபம்/பயம் வரும்போது வட அமெரிக்க ராட்டில் ஸ்னேக் தன் வாலில் உள்ள கிலுகிலுப்பையை ஆட்டிச் சத்தம் போடுவதைப் போல, ஒவ்வொரு பாம்புக்கும் ஒருவித பிரத்யேக சத்தம் உண்டு.) சுருள்விரியன் மிகச்சிறியதாக உள்ளது. இதுவும் சத்தம் ஏதும் போடுவதில்லை.

கட்டுவிரியனை வளைந்த சுளுக்கியால் இழுத்து, கழுத்தைக் கையால் லாகவமாகப் பிடித்து, வாயைப் பிளந்து பற்கள் ஒரு மெம்ப்ரேனில் பதியுமாறு அழுத்தி வாய்க்குள் இருக்கும் பையிலிருந்து விஷத்தைக் கக்க வைக்கிறார் பாம்புப் பண்ணை ஊழியர். பின் அந்தப் பாம்பின் தோலில், வயிற்றுப் பகுதியில் சிறு கத்தியால் கீறி, எத்தனையாவது முறையாக விஷம் எடுக்கப்பட்டுள்ளது என்று குறித்து வைக்கிறார். அந்தப் பாம்பை எடுத்து ஒரு பானையில் இட்டு, மேலே மெல்லிய துணியால் மூடி, இறுக்கமான ரப்பர் பாண்ட் வைத்துக் கட்டுகிறார். "அப்பப்ப [அரசு] எந்த விஷம் கேக்கறாங்களோ அதை எறக்குவோம்" என்கிறார். இங்குள்ள பாம்புகள் அவ்வப்போது காடுகளுக்குள் விடப்படுகின்றன. புதிதாகப் பிடித்து வரப்பட்ட பாம்புகள் விஷமிறக்கப் பயன்படுகின்றன.

இங்கு பாம்புகள் இனப்பெருக்கம் செய்யப்படுவதில்லை. முதலைகளுக்கும், ஆமைகளுக்கும் மட்டும்தான் இவ்விடத்தில் இனப்பெருக்கம். பாம்புகள் எதையும் நான் படம் பிடிக்கவில்லை.

கடலுக்கு அருகில் இருந்தாலும் சென்ற மாத சுனாமி பிரச்னையில் முதலைப்பண்ணைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இடத்தைத் தேர்வு செய்யும்போதே உயரமான இடமாகப் பார்த்துத் தேர்வு செய்தார்களாம்.

-*-

அடுத்தமுறை சென்னை வந்தால் முதலைப் பண்ணையைப் பார்க்கத் தவறாதீர்கள். வெளியே வரும்போது பத்து ரூபாய்க்கு அரைக்கிலோ வெள்ளரிப் பிஞ்சுகளும் தின்னக் கிடைக்கும்.

Sunday, January 23, 2005

அமெரிக்க பிசினஸ் தாதாக்கள்

Giants of Enterprise. (Seven business innovators and the empires they built), Richard S.Tedlow, HarperBusiness (Harper Collins Publishers), 2003 (Hardbound Edition 2001). ISBN 0-06-662036-8

அமெரிக்காவின் ஏழு பெரும் தொழில் தலைவர்கள், அவர்கள் தத்தம் தொழிலில் கொண்டுவந்த புதுமைகள், எதிர்கொண்ட போட்டிகள், சாதனைகள், அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு அவர்களது பங்களிப்பு ஆகியவற்றைப் பற்றிய கதைகள்.

ஆண்ட்ரூ கார்னெகி (இரும்பு எஃகு), ஜார்ஜ் ஈஸ்ட்மேன் (கேமரா, ஃபில்ம்), ஹென்றி ஃபோர்ட் (கார்), தாமஸ் ஜே. வாட்சன் சீனியர் (கணினி), சார்லஸ் ரெவ்சன் (நகப்பூச்சு, உதட்டுச்சாயம் ...), சாமுவேல் வால்டன் (டிஸ்கவுண்ட் பெருங்கடைகள்), ராபர்ட் நாய்ஸ் (சிலிகான் சில்லுப் புரட்சி!) ஆகியோர்தான் அந்த ஏழு பேர்.

இவர்களைப் பற்றிப் பேசும்போது வெறும் வாழ்க்கைக் கதைகளாக சொல்லிப் போவதில்லை. இவர்களது தனி வாழ்க்கை பற்றி வந்தாலும் அதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இவர்கள் ஈடுபட்ட தொழில்துறைகள், இவர்கள் உள்ளே வருமுன் இந்தத் துறை எப்படி இருந்தது, இவர்கள் ஒவ்வொருவரும் அந்தத் துறைகளை எப்படி மாற்றினார்கள் ஆகியவற்றை அற்புதமாக விளக்குகிறார் டெட்லோ.

தனி வாழ்க்கையில், அல்லது பொது வாழ்க்கையில் பிறருடன் நடந்து கொள்வதில் மேலே சொன்னவர்களில் நான்கு பேர் படு மோசமானவர்கள். அனைவருமே ஏழைகளாகவே பிறந்து வளர்ந்தவர்கள். அனைவருமே ஏகப்பட்ட பணம் சம்பாதித்தார்கள். ராபர்ட் நாய்ஸ் தவிர பிறருக்கு படிப்பு படு சுமார். ஆனால் அனைவருமே street smart. யாராலும் பார்க்கமுடியாத எதிர்காலத்தை இவர்களால் பார்க்க முடிந்தது. ரெவ்சன் தவிர பிறர் உருவாக்கிய நிறுவனங்கள் இன்றும் உள்ளன (கார்னெகி உருவாக்கிய ஸ்டீல் நிறுவனம் இப்பொழுது யுனைடெட் ஸ்டேட்ஸ் ஸ்டீல்), ஆனால் அனைத்துமே தமது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை.

தொழில்முனைவோர் கூர்ந்து படிக்கவேண்டிய முக்கியமான புத்தகம்.

அவ்வப்போது இவர்களைப் பற்றிய சிறுகுறிப்புகளை இங்கே எழுதுகிறேன்.

Saturday, January 22, 2005

அசோகமித்திரன் 50

வரும் பிப்ரவரி மாதம் 12-ம் தேதி மாலை 6.00 மணிக்கு அசோகமித்திரனை - அவரது 50 ஆண்டு கால எழுத்துப் பணிக்காக - கவுரவிக்கும் விதமாக, சென்னையில் ஒரு விழா நடக்க உள்ளது.

இடம் - tentatively - ஃபில்ம் சாம்பர் ஆடிடோரியம். அண்ணா சாலை. முழு விவரங்களை, எல்லாவற்றையும் உறுதிப்படுத்திக்கொண்டு பின்னர் எழுதுகிறேன்.

கடவு இலக்கிய அமைப்பு, கிழக்கு பதிப்பகம் இணைந்து பிறரது ஆதரவுடன் இந்த விழாவை நடத்துகிறது. முன்னின்று நடத்துபவர், தலைமை தாங்குபவர் எழுத்தாளர் பிரபஞ்சன். விழாவுக்கு வந்து பேச இருப்பவர்கள் சுந்தர ராமசாமி (அசோகமித்திரன் சிறுகதைகள் பற்றி), ஞானக்கூத்தன் (கட்டுரைகள் பற்றி), ஆ.இரா.வேங்கடாசலபதி (நாவல்கள் பற்றி), பால் சக்காரியா (சிறப்புப் பேச்சாளர்). வரவேற்புரை எஸ்.வைதீஸ்வரன், நன்றியுரை விருட்சம் அழகியசிங்கர். அம்ஷன் குமாரின் அசோகமித்திரன் பற்றிய குறும்படம் 6.00 மணிக்குத் திரையிடப்படும்.

அனைவரும் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Wednesday, January 19, 2005

கிராம வருமானத்தை இரட்டிப்பாக்க என்ன செய்யவேண்டும்? - 1

இந்திய கிராமங்களில் தற்போதைய சராசரி வருமானம் ஒரு தலைக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 என்று வைத்துக்கொள்வோம் (Per capita income). [சில மாநிலங்களில் இது ரூ. 4,000-7,000 வரை கூட உள்ளது.]

இது மிகவும் குறைவானது; அதிகரிக்கப்பட வேண்டியது என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது.

இந்த வருமானத்தை ரூ. 10,000-இலிருந்து ரூ. 20,000 ஆக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

இந்தக் கேள்விக்கு நேரடியான, எளிதான பதில் கிடையாது.

கிராமங்கள் என்றால் 500-லிருந்து 5,000 வரையிலான மக்கள்தொகை உடைய இடம் என வைத்துக்கொள்வோம். இந்தியாவில் கிட்டத்தட்ட 600,000 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கிட்டத்தட்ட 60 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இங்கு விவசாயம், மீன்பிடித்தல் போன்றவைதான் பிரதான தொழில்.

கிராமங்களில் இப்பொழுதைய குறை என்ன?

1. வருமானப் பற்றாக்குறை
2. அதனால் தேவையான வசதிகள் இல்லாமை

இதை சற்றே விரிவாகப் பார்த்தால்:

* வருமானக் குறைவினால் சிறு பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் சரியான போஷாக்கில்லாமை - malnutrition.
* சிறு கிராமங்களில் போதிய அளவு கல்வியறிவு இல்லாமை; கல்விக்கூடங்கள், நல்ல ஆசிரியர்கள் இல்லாமை (அ) குறைவு
* ஆரம்பச் சுகாதார வசதியின்மை. பிள்ளைப்பேறின்போது தாய் இறப்பது, சிறுகுழந்தைகள் சாவு (infant mortality)
* இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாப்பின்மை (மழை, வெள்ளம், வறட்சி)
* தொழில்கள் யாவும் (விவசாயம், கால்நடைகள் வளர்த்தல், மீன்பிடித்தல்) இயற்கையை நம்பி இருப்பதால், தொடர்ச்சியான, நம்பிக்கை தரக்கூடிய வருமானம் இல்லாதிருத்தல். காப்பீடு செய்யாததனால் இழப்பைச் சரிக்கட்ட முடியாத நிலை. அரசை நம்பி, அரசு தரும் மான்யத்தை நம்பி இருக்கவேண்டிய நிலை.
* முறையான கடன்வசதி பெறக்கூடிய நிலை இல்லாதிருத்தலினால், முறைசாராக் கடன், அதுதொடர்பான கடன் தொல்லை, வறட்சியின் போது கடனைத் திருப்பிக்கொடுக்க முடியாத நிலையில் தற்கொலைகள்.

* இதைத்தவிர பல்வேறு சமூகக் குறைபாடுகள் - சாதி, மதம், தீண்டாமை, ஆண்-பெண் பிரச்னை, நிலவுடைமை/பெருந்தனக்காரர் கையில் சிக்கிய ஏழைகள் நிலை, அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படுதல், சுரண்டப்படுதல் என்ற பிற தொல்லைகள்.

-*-

இந்நிலையில் கிராம வருமானத்தை எப்படி இரட்டிப்பாக்குவது?

தகவல் தொழில்நுட்பம் மூலம் கிராம வருமானத்தைப் பெருக்க முடியுமா? அதன்வழியாக கிராமப் பொருளாதாரத்தில் வளர்ச்சியைக் காண முடியுமா?

Monday, January 17, 2005

புத்தகக் கண்காட்சி முடிவு

திங்கள்கிழமை என்றாலும் மிகவும் விருவிருப்பாக இன்றைய கடைசி நாள் அமைந்திருந்தது. பலர் கையில் கொண்டுவந்திருந்த காசெல்லாவற்றையும் செலவு செய்து விட்டு, நல்ல புத்தகங்களைப் பார்த்தபோது "அடடா, காசு தீர்ந்துவிட்டதே" என்று வருத்தப்பட்டனர். கிரெடிட் கார்டுகள் அதிகமானால், புத்தக விற்பனையும் அதிகமாகும் என்று தோன்றுகிறது.

சுரேஷ் கண்ணன், அருள் (மீண்டும்) கண்ணில் பட்டனர். இகாரஸ் பிரகாஷ் அவசர அவசரமாக வந்து ஜெயமோகன் புத்தகத்தை வாங்கிக்கொண்டு சென்றார். தன்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அவ்வளவு ஆவல்!

ஆங்காங்கே குறைகள் இருந்தாலும், கண்காட்சி அமைப்பு சிறப்பாகவே இருந்தது. ஆனால் இன்னமும் முன்னேற்றம் தேவை. உதாரணமாக கிரெடிட் கார்ட் வசதிகள் இரண்டே இரண்டு இடங்களில்தான் அமைக்கப்பட்டிருந்தன. பல கடைக்காரர்கள் கிரெடிட் கார்டு வசதிகளைப் பயன்படுத்த மறுக்கும் பத்தாம்பசலிகளாக இருந்தனர். "அதெல்லாம் வேணாங்க... அப்புறம் காசு வாங்க அவங்ககிட்ட தொங்கிகிட்டு இருக்கணும்" என்றனர். ஆக, வாசகர் எந்தப் புத்தகத்தையும் வாங்காவிட்டாலும் பரவாயில்லை என்பதுதான் இவர்கள் எண்ணம் போலும்...

பபாசி (BAPASI) தலைவர் சொன்னதாக ரூ. 5.40 கோடி விற்பனை என்று சில செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படிப்பட்ட செய்திகள் வெளிவருவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இன்று நாளின் கடைசியில்தான் பபாசியிடமிருந்து சில கேள்விகள் கேட்டு ஒரு படிவம் வந்தது. அதில்தான் எவ்வளவு புத்தகங்கள் விற்றீர்கள், எத்தனை வருமானம் வந்தது போன்ற கேள்விகளைக் கேட்டிருந்தனர். அதில் நாங்கள் தோராயமான விற்பனை அளவைச் சொல்லியிருந்தோம். (அதற்குப் பின்னும் ஒரு மணிநேரத்துக்கு மேல் விற்பனை நடந்தது.) எல்லோரும் உண்மையான எண்ணைச் சொல்ல மாட்டார்கள் என்றே பரவலாகப் பேசிக்கொண்டார்கள். ஆனால் நான் சில பதிப்பாளர்களிடம் மேலோட்டமாகப் பேசியதில் அனைவரும் விற்பனை நன்றாக இருந்ததாகவே சொன்னார்கள். சிலர் விற்பனை படுமோசம் என்று சொன்னதாகவும் தகவல்.

எங்களுக்கு நல்ல விற்பனை.

டீம் கிழக்கு பதிப்பகம் உங்கள் பார்வைக்கு. (பா.ராகவன், இன்னும் மூவர் இந்தப் படத்தில் இல்லை.)

கிழக்கு பதிப்பகம் உழைப்பாளிகள்

புத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று

மற்றுமொரு கூட்டம் அதிகமான நாள்.

பலர் ஏற்கெனவே முடிவுசெய்திருந்த நூல்களை வந்து வாங்கிச்சென்ற நாள். பலரும் பொறுமையாக ஒவ்வொரு பதிப்பாளரிடமிருந்தும் நூல் பட்டியலை வாங்கிக்கொண்டு வீடு சென்று விடுகின்றனர். பின் தமக்கு வேண்டிய நூல்களை அதில் குறித்துக்கொண்டு, நேரம் செலவு செய்யாமல் நேராக அந்தந்தக் கடைக்குச் சென்று குறிப்பிட்டுள்ள நூல்களை மட்டும் வாங்கிக்கொண்டு வீடு திரும்புகின்றனர்.

காலையில் எங்கள் சிறப்பு விருந்தினர் ஹரி கிருஷ்ணன். இணைய நண்பர்கள் யாரும் அதிகமாகத் தென்படவில்லை. அருள் (மீண்டும்) வந்திருந்தார். (வெங்கட் கேட்ட புத்தகத்தை வாங்கிவிட்டீர்களா?) சாகரன் வந்திருந்தார். (ஞாயிறு அன்றா இல்லை சனியா? மறந்துவிட்டது.)

காலையில் காலச்சுவடு கண்ணன், அய்யனார் இருவருடனும் பெருமாள் முருகன் வந்தார். முதன்முறையாக பெருமாள் முருகனைப் பார்க்கிறேன். அவரது சிறுகதைகள் எனக்குப் பிடிக்கும். இரண்டு வார்த்தைகள் அவருடன் பேச முடிந்தது.

ஜெயமோகன் மரத்தடி (யாஹூ குழுமம்) வாசகர்களுடன் உறவாடிய கேள்வி-பதில்களைப் புத்தகமாகக் கொண்டுவந்துள்ளார். தமிழினி வெளியீடு. இன்னமும் நான் பார்க்கவில்லை. அதில் முன்னுரையில் இகாரஸ் பிரகாஷ், மாலன், பா.ராகவன், சாரு நிவேதிதா, ஆர்.வெங்கடேஷ் போன்று இணையத்தில் எழுதுபவர்கள் பற்றி ஏதோ எழுதியிருப்பதாகக் கேள்வி. பார்த்ததும் எழுதுகிறேன்.

இரவு சிறப்பு விருந்தினராக பிரபஞ்சன் வந்திருந்தார். அவரைப் பார்க்க கவிதா சொக்கலிங்கம் வந்திருந்தார். கவிதா சொக்கலிங்கத்தை முதன்முறையாகப் பார்க்கிறேன். பிரபஞ்சனின் முழு சிறுகதைகள் தொகுப்பாக கவிதா வெளியீடாக வந்துள்ளன.

நூற்றாண்டு கண்ட பதிப்பகம் அல்லயன்ஸ் ஸ்டாலுக்கு நடிகர் சிவக்குமார் விருந்தினராக வந்திருந்தார். சிவக்குமாரின் "இது ராஜபாட்டை அல்ல" எனும் சுயசரிதை அல்லயன்ஸ் வெளியீடாக வந்துள்ளது. அல்லயன்ஸ் ஸ்டாலில் இருந்துவிட்டு, நேராக கிழக்கு பதிப்பகம் ஸ்டாலுக்கு வந்து முன்னதாகவே முடிவு செய்தது போல இரா.முருகனின் "ராயர் காப்பி கிளப்" கட்டுரைத் தொகுதியையும் "அசோகமித்திரன் கட்டுரைகள்" இரண்டு தொகுதிகளையும் வாங்கிக்கொண்டு வேகமாகச் சென்று விட்டார். புகைப்படத்தில் பிடிக்கவோ, சற்று பேசவோ கூட நேரம் இல்லை. சிவக்குமாருடன் கூட அல்லயன்ஸ் சீனிவாசனும் வந்திருந்தார்.

===

இன்று (திங்கள்) கடைசி நாள். அதன்பிறகு சிறிது ஓய்வு கிடைக்கும். நாளை முழுவதும் ஐஐடி சென்னையில் ஒரு கான்பரன்ஸ் நடைபெற உள்ளது, அதில் இருப்பேன். புதனுக்குப் பிறகு புத்தகக் கண்காட்சி அல்லாத பிற விஷயங்கள் பற்றிய பதிவு இருக்கும்.

இன்று முடிந்தவரை சில புத்தகங்கள் வாங்க வேண்டும்.

Saturday, January 15, 2005

புத்தகக் கண்காட்சி சனியன்று

அசோகமித்திரன் இன்று மீண்டும் கண்காட்சி அரங்குக்கு வந்திருந்தார். கட்டுரைத் தொகுதி இரண்டையும் முழுவதுமாகப் பார்த்திருக்கிறார். நன்றாக வந்திருக்கிறது என்று மிகவும் சந்தோஷப்பட்டார். அடிக்குறிப்புகள், கட்டுரை வடிவில் செய்திருந்த மாற்றங்கள், பின்னால் சேர்க்கப்பட்டுள்ள பெயரகராதி (index) ஆகியவை பற்றிய தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

சந்தோஷமாக இருந்தது.

இரா.முருகன் இன்று கையில் விடியோ கேம்கார்டரும், மலையாளப் புத்தகமுமாக வந்திருந்தார். இன்றைய சிறப்பு விருந்தினர். மலையாளம்தான் படிக்கப்போகிறார்போலும் இனி.

ஒரு பக்கம் மூன்று மொழிகளில் (அல்லது அதற்கு மேலாக) சரளமாகப் படிப்பவர்களைக் கண்டால் பொறாமையாக இருக்கிறது. மற்றொரு பக்கம் இரண்டு மொழிகளில் கூட படிக்க முடியாதவர்களை - அதுவும் ஆங்கிலம் மட்டும் படிக்கத் தெரிந்த இந்தியர்களை - நினைத்தால் வருத்தமாகவும் உள்ளது. அதுபோல பலரை புத்தகக் கண்காட்சியில் சந்திக்க முடிந்தது.

ஆங்கிலத்தில் படிக்கத் தெரிந்திருப்பது மிகவும் அவசியமானது. ஆனால் அதற்காக சொந்த மொழியில் சிறிது கூட ப் படிக்கத் தெரியாமலே வளர்ந்திருக்கின்றனர் பலரும்.

ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிடி பிரெஸ்-இலிருந்து சிலர் எங்கள் கடைக்கு வந்திருந்தனர். எளிமையான குறுக்கெழுத்துக் கட்டங்கள் நிரம்பிய புத்தகம் ஒன்றைப் போட்டிருக்கிறோம். புதிர்ப் பூங்கா என்று. தமிழில் குறுக்கெழுத்து பிரபலமானதா என்று கேட்டனர். நான் பார்த்த வரையில் தமிழ் செய்தித்தாள்கள் குறுக்கெழுத்துப் பகுதிகளைக் கொண்டவை கிடையாது. ஆனால் தினமலர் வாரமலரில் பார்த்திருக்கிறேன். ஆங்கிலச் செய்தித்தாள்களிலோ இது மிகவும் பிரபலமானது. தம் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்காக இந்தப் பிரதியினை வாங்கிச் சென்றனர்.

தமிழில் அருமையான - சற்றே கடினமான - குறுக்கெழுத்துகளை உருவாக்குபவர் வாஞ்சிநாதன். தென்றல் - அமெரிக்க தமிழ் மாத - இதழில் இவரது குறுக்கெழுத்துகள் பிரபலமானவை. ஒரு மாதத்துக்கு முன்பு கிழக்கு அலுவலகத்தில் வாஞ்சியுடன் அவர் தயாரித்திருந்த சில (மிகக்) கடினமான குறுக்கெழுத்துகளை நிரப்ப முயற்சி செய்தோம். என்னால் உள்ளே நுழையவே முடியவில்லை. மற்றொரு முறை இந்தக் குறுக்கெழுத்தில் அதிக நேரம் செலவிட வேண்டும்.

-*-

இகாரஸ் பிரகாஷ் இன்றும் பல பழைய புத்தகங்களைத் தள்ளிக்கொண்டு வந்தார். எங்கிருந்துதான் இவருக்கு மட்டும் கிடைக்கிறதோ!

-*-

நேற்று கண்ணில் பட்டதில் ஒருவர் அருள். போகர் (சித்தர்) பாடல்கள், தமிழகத்தில் ஆசீவகர்கள் போன்ற சில குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கி வைத்திருந்தார்.

தேடத் தேட, அபூர்வமான பல விஷயங்கள் கிடைக்கின்றன.

-*-

நாள் முடியும் தருவாயில் mafoi பாண்டியராஜன் வந்தார். நிறையப் புத்தகங்களை வாங்கினார்.

பழ.நெடுமாறன், குடும்பத்துடன் வந்திருந்து புத்தகங்களை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றார்.

சபாநாயகர் காளிமுத்து வீட்டிலிருந்து ஆளை அனுப்பி அசோகமித்திரன் கட்டுரைகள் இரண்டு தொகுதிகளையும் வாங்கிவரச் சொல்லியிருந்தார்.

-*-

இதுவரையில் புத்தகங்களை வாங்குபவனாக மட்டுமே இருந்த எனக்கு, விற்பவனாக மாறியிருப்பது புது அனுபவம்.

இன்னமும் ஒரு முழு நாள், ஓர் அரை நாள். இந்த முறை எனது வருத்தமே புத்தகம் வாங்குபவனாக, நிம்மதியாக சுற்ற முடியாமல் கடையோடு அடைந்திருக்க வேண்டியதாகிப் போனதுதான்:-( முடிந்தால் திங்கள் அன்றாவது எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒவ்வொரு கடையாக நுழைந்து வாங்கா விட்டாலும், புத்தகங்களைப் பார்வையிட வேண்டும்.

-*-

சென்ற முறை அப்துல் கலாமின் 'அக்கினிச் சிறகுகள்' புத்தகம் (ஆங்கிலத்தில் Orient Longman, தமிழில் கண்ணதாசன் பதிப்பகம்) சக்கைப்போடு போட்டது. இம்முறை அதே புத்தகம் குரல் புத்தகமாக (Audio book), வைரமுத்துவின் குரலில் சக்கைப்போடு போடுகிறது.

நாங்களும் பல குரல் புத்தகங்கள் கொண்டுவர முடிவு செய்திருந்தோம். அக்கினிச் சிறகுகள் குரல் புத்தகம் விற்பது சந்தோஷத்தைத் தருகிறது.

படிக்க நேரமில்லாதவர்கள், வேகமாகப் படிக்க சக்தியற்றவர்கள், கண்பார்வை குறைந்தவர்கள் (வயதானவர்கள்) அல்லது இல்லாதவர்கள், தமிழ் பேச, புரிந்துகொள்ளக் கூடிய ஆனால் படிக்க இயலாதவர்கள் எனப் பலரையும் சென்றடையலாம். தமிழ்ப் பதிப்பாளர்கள் கவனிக்க வேண்டிய பகுதி இது.

புத்தகக் கண்காட்சியில் வியாழன், வெள்ளி

பெங்களூரிலிருந்து தேசிகன் வந்திருந்தார். மார்கழி முழுவதும் எளிமையான திருப்பாவை உரைகள், படங்கள், கோலங்கள் என்று வலைப்பதிவில் கலக்கியவர். ராகவன் அவரிடம் "நீங்க சுஜாதா புத்தகங்களுக்கு மட்டும்தான் ஓவியம் வரைவீர்களா?" என்று கேட்டார். "இல்லை" என்றார் தேசிகன். பிறர் பயன்படுத்திக்கொள்ளாதது அவர்களுடைய தவறு... சில மணிநேரம் சுற்றிவிட்டு கையில் பல கிலோக்கள் அடங்கிய புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்தார். மொத்தமாகத் தூக்கிப் பார்த்தேன்! முடியவில்லை. எப்படியாவது புத்தகங்களை வீடு சேர்த்திருப்பார் என்று நினைக்கிறேன். ரயிலில் பெங்களூர் போகும்போது தனியாக சார்ஜ் செய்வார்கள் என்றே நினைக்கிறேன்.

ஆங்கில வலைப்பதிவர் சக்ரா கண்ணில் பட்டார்.

வியாழன் சிறப்பு விருந்தினர் இயக்குனர் வஸந்த். (கேளடி கண்மணி முதல் தக்கையின் மீது நான்கு கண்கள் குறும்படம் வரை எடுத்தவர்.) இப்பொழுது சில இலக்கியத்தரம் வாய்ந்த சிறுகதைகளை குறும்படங்களாக எடுக்க முயற்சி செய்கிறாராம். திண்ணையில் வெளியான, பிறகு நாங்கள் புத்தமாகக் கொண்டு வந்த இரா.முருகனின் அரசூர் வம்சம் நாவலை எடுத்துக் கொடுத்தேன். "இதைப் படித்துப் பாருங்கள், படமாக எடுக்கவேண்டுமென்றால் எப்படிச் செய்வீர்கள்" என்றேன். தயாரிப்பாளரைக் கொண்டுவாருங்கள் என்றார்!

எழுத்தாளன் எப்படி கூட்டம் சேருமிடங்களிலெல்லாம் நடப்பதைக் கவனித்து அங்கு நடப்பவற்றை தன் கதையில் விவரங்களாக இணைக்க முயற்சி செய்வானோ, அதைப்போலவே தானும் கூட்டங்களில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து அதை எவ்வாறு காட்சிகளாக மாற்றுவது என்று கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

வீர்-ஸரா முதல் ஸ்வதேஷ் வரையிலான சில ஹிந்திப் படங்கள் பற்றிய அவரது கருத்து என்ன என்று கேட்டுக் கொண்டிருந்தோம். பட இயக்குனர் என்ற முறையில் அவர் சொன்னது பல புதிய விஷயங்களைக் காட்டியது.

வியாழன் அன்று உயிர்மை கடையில் ஜெயமோகன். உயிர்மை மூலம் அவரது சிறு கதைகளும், குறுநாவல்களும் முழுமையாக தொகுப்பாக வெளிவந்துள்ளன. வேலை அதிகமிருந்த காரணத்தால் ஜெயமோகன் உயிர்மையில் இருக்கும்போது போகமுடியவில்லை. மெதுவாக வாங்க வேண்டும்.

வெங்கட் சாமிநாதன் சிறிது நேரம் வந்து அமர்ந்திருந்தார். அவரிடம் "வணக்கம்" சொலவதைத் தவிர அதிகம் பேசமுடியாத நிலை. பொறுமையாக அவரது விமர்சன வாழ்க்கையைப் பற்றிப் பேசித் தெரிந்து கொள்ள வேண்டும். பல புதிய எழுத்தாளர்களின் எழுத்துகளையும் பொறுமையாகப் படித்து, தமிழ் எழுத்துகளைப் பற்றி ஓயாது எழுதிக்கொண்டிருக்கும் வெங்கட் சாமிநாதன், க.நா.சுவுக்குப் பிறகு தமிழில் பங்காற்றும் முக்கிய விமர்சகர். அடுத்த தலைமுறைகளில் இதுபோன்ற விமர்சகர்கள் இல்லாதிருப்பது தமிழுக்கு நல்லதல்ல. வெங்கட் சாமிநாதன் மேல் பலருக்கும் மனத்தாங்கல்கள் இருக்கலாம். ஆனால் அவரது பங்களிப்பை மறுக்க முடியாது.

-*-

பொங்கல் அன்று காலை முதலே கண்காட்சி ஆரம்பம். 11 மணிக்குத் தொடங்கினாலும் கூட்டம் வர சற்று தாமதமானது. இன்று முதலில் சந்தித்த வலைப்பதிவர் வெட்டிப்பேச்சு சந்தோஷ் குரு. இப்பொழுது பெங்களூரில் இருக்கிறாராம்.

மாலை 5.00 மணிக்கு வந்த சிறப்பு விருந்தினர் திருப்பூர் கிருஷ்ணன். அவரைத் தொடர்ந்து இலக்கியச் சிந்தனை பாரதி வந்தார். இவரும் பல மணிநேரங்கள் அருகேயே அமர்ந்திருந்தார். வேலைகளிக்கிடையே பலவற்றைப் பற்றியும் பேச முடிந்தது. திருப்பூர் கிருஷ்ணனைப் பார்க்க பலர் வந்தனர். அதில் முக்கியமான ஒருவர் சைதாப்பேட்டையில் நூலகம் ஒன்றை நடத்தும் தையல்காரர் ஒருவர். இதுவரையில் 17,000க்கும் மேற்பட்ட நூல்கள் இவரது நூலகத்தில் உள்ளது என்றார். முகவரி வாங்கி வைத்துள்ளேன். போய்ப் பார்த்துவிட்டு இவரைப் பற்றி, புகைப்படங்களுடன், விளக்கமாக எழுதுகிறேன். காமராஜர் முதற்கொண்டு இவரது நூலகத்துக்கு வந்து சென்றுள்ளனராம்.

எழுத்தாளர், பட இயக்குனர் அம்ஷன் குமார் வந்திருந்தார். அவருடன் பெருந்தேவி என்பவரும் (இப்பொழுது வாஷிங்டனில் இருக்கிறார்) வந்திருந்தார். இவர் கவிதைகள், கதைகள் எழுதுபவர், நாடகக் கலைஞர்.

பொங்கல், உயிர்மையில் சுஜாதா வந்திருந்த நாள். 5.00 மணி அளவில் சற்றே நேரம் வாங்கிக்கொண்டு நான் அந்தப்பக்கம் சென்றபொழுது சுஜாதா வரவில்லை. மீண்டும் என் வேலையைத் தொடர வந்துவிட்டேன். அவரைப் பார்க்க முடியவில்லை. வெள்ளி அன்றும் கூட்டம் அலைமோத ஆரம்பித்துவிட்டது. சனியும், ஞாயிறும் கூட்டம் தாங்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.

ஆர்.வெங்கடேஷ் கண்காட்சி முழுவதும் சுற்றி கடந்த நான்கு வருடங்களில் வெளியான நாவல்கள் அனைத்தையும் பட்டியல் இட்டிருக்கிறார். அதில் பலவற்றை நாம் கேள்விப்பட்டதே இல்லை. "குழு"க்கள் தமது எழுத்தாளர்களையே முன்தள்ள, சத்தமே இல்லாமல் பலர் சாதனை படைத்து வருகின்றனர். ஆனால் அவர்களது பெயர்கள் வெளியே தெரிவதேயில்லை என்று சொன்னார். தான் கண்டறிந்த நாவல்களைப் பற்றி விளக்கமாக தனது பதிவில் எழுதுவதாகச் சொன்னார். அதனால் அவரது பதிவில் பதிவு செய்யும் வரை நான் அதைப்பற்றி ஒன்றும் சொல்லப்போவதில்லை.

முடிந்தால் நாளையும் சந்திப்போம்.

Thursday, January 13, 2005

புத்தகக் கண்காட்சியில் செவ்வாய், புதன்

செவ்வாய் சிறிதுநேரம்தான் உள்ளே இருந்தேன். உயிர்மை கடைக்குச் சென்று "கடவுள்களின் பள்ளத்தாக்கு" என்ற சுஜாதாவின் கட்டுரைத் தொகுப்பு ஒன்று வாங்கினேன் (விலை ரூ. 120). தேசிகன் தொகுத்தது என்றதாலும், சற்றே காத்திரமாக இருந்ததாலும். மற்றுமொரு தொகுப்பில் கட்டுரைகள் படு சுமார். அம்பலத்தில் வந்தது என்று நினைக்கிறேன்.

சுஜாதாவின் எழுத்துகளை சரியான முறையில் தொகுப்பது மட்டுமல்ல, அதைச் சரியாக, ஒழுங்காக புத்தகமாகக் கொண்டுவரவேண்டும். துண்டு துண்டாக வரும்போது வாங்குவதற்குக் கஷ்டமாக உள்ளது. மனுஷ்யபுத்திரனிடம் இதுபற்றிப் பிறகு பேச வேண்டும். விலையிலும் சற்று அதிகப்படியாகவே உள்ளது.

மனுஷ்யபுத்திரனிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு தீம்தரிகிட ஸ்டாலில் மீண்டும் நுழைந்து செவ்வாய்க்கிழமைக்கான கேள்விக்கு வாக்களித்துவிட்டு, அவருடைய இரண்டு புத்தகங்களை வாங்கிக்கொண்டேன். ஒன்று அவர் தொலைக்காட்சித் தொடராக உருவாக்கிய "அய்யா"வின் கதை வசனம். இம்முறை பெரியார் தொடர்பாக நான் வாங்கிய புத்தகங்களில் இது இன்னொன்று. மற்றொன்று ஞாநியின் இந்தியா டுடே கட்டுரைகள் தொகுப்பு. (விலை ரூ. 50). முந்தையதற்கு விலை ரூ. 80 என்று வைத்துவிட்டு அதற்குக் கீழே "விலை கொஞ்சம் அதிகம்தான். உள்ளே படித்தால் காரணத்தை அறிந்துகொள்வீர்கள்" என்று போட்டுள்ளார். உள்ளே இன்னமும் படிக்கவில்லை. எதுவானாலும் ஞாநி போன்ற தனி மனிதருக்கு ஆதரவாக இன்னமும் மேலே காசு கொடுத்தே புத்தகம் வாங்கலாம்!

ஜெயமோகன் வருவாரென்று சொல்லித்தான் ராம்கி என்னை உயிர்மை ஸ்டாலுக்கு இழுத்துச் சென்றார். ஆனால் அன்று ஜெயமோகன் வரவில்லை. [Correction: ஜெயமோகன் இல்லை, சாரு நிவேதிதா. ஆனால் சாரு உயிர்மை கடையில் அப்பொழுது இல்லை!]

செவ்வாய் அன்று கவிஞர் யுகபாரதி (இவர் மனப்பத்தாயம், தெப்பக்கட்டை போன்ற கவிதை நூல்களை எழுதியவர். மன்மதராசா எனும் மிகச்சிறந்த திரைப்படப் பாடலையும் இவர் எழுதியதாகக் கேள்வி) கிழக்கு பதிப்பக சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். ஆனால் கடையில் உட்காராமல் ஊர் சுற்றி விட்டு, கடைசியில் நாகூர் ரூமியுடன் ஸ்பெஷல் பிரியாணி சாப்பிடக் கிளம்பி விட்டார்!

மிச்சம் மீதி இருந்த "அள்ள அள்ளப் பணம்" முழுவதுமாக விற்றுத் தீர்த்தது. தீர்ந்ததும் விடாமல் தமது பிரதிகளுக்காக முன்பணம் கட்டிக்கொண்டிருந்தார்கள் சிலர். இரவோடு இரவாக அதிகப் பிரதிகளைத் தயார் செய்து புதன் கிழமை கொண்டுசென்றோம்.

மாலன்'தி ஹிந்து'வில் மாலன் சிறுகதைகளுக்கு வந்திருந்த விமர்சனத்தை துண்டுத் தாளின் நறுக்கிக் கொண்டுவந்திருந்தார் ஓர் அமெரிக்கர். இந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு தனக்குத் தெரிந்த ஒரு தமிழருக்குப் பரிசளிக்கப்போவதாகச் சொன்னார். மிகவும் கூட்டமாக இருந்ததால் அவர் யார், பெயர் என்ன, அவரது நண்பர் யார் என்பதைக் கேட்க முடியவில்லை.

செவ்வாய் அன்று பார்த்த பிறர் ஓவியர் நாகராஜன், எழுத்தாளர் கிருஷாங்கினி ஆகியோரும், சுரேஷ் கண்ணன் ஆகியோர்.

-*-

புதன், கிழக்கு பதிப்பகம் சிறப்பு விருந்தினர் மாலன்.

டோண்டு ராகவன் வந்திருந்து நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தார். பல புத்தகங்களை அள்ளிக்கொண்டு சென்றார்.

ஐந்து மணிக்கு மாலன் வந்தபிறகு, பல வாசகர்கள் மாலனது புத்தகங்களை வாங்கி, அதில் கையெழுத்து பெற்றுக்கொண்டிருந்தனர்.

ஜெயமோகன், ராகவனுடனஜெயமோகனும், நாஞ்சில் நாடனும் வந்தனர். ராகவனுடம் அளவளாவிக் கொண்டிருந்த நேரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அந்தப் பக்கம் வந்தார். ஏகப்பட்ட heavyweights ஒரே நேரத்தில் ஒரேயிடத்தில் இருக்கமுடியாது என்ற காரணத்தால் ஜெயமோகன் 'பிறகு வருகிறேன்' என்று கிளம்பிவிட்டார். கவனமாக மாலன் இருப்பதையே கவனிக்காமல், அவரிடம் பேசாமல் சென்றுவிட்டார்!

திலகவதி ஐ.பி.எஸ் (மயிரிழையில் தமிழன்பனிடம் சாகித்ய அகாதெமி பரிசை நழுவ விட்டவர்? :-) சிறிது நேரம் கழித்து வந்து மாலனின் 'சொல்லாத சொல்' கட்டுரைத் தொகுப்பை வாங்கிக்கொண்டு சென்றார்.

நாஞ்சில்நாடன்குழந்தை முகத்துடன் ஒரு சிறுவன் வந்திருந்தான். கேட்டதற்கு லலிதாராம் என்று சொன்னார்கள். அட, இவ்வளவு பிரமாதமாக கர்நாடக இசைக்கச்சேரிகள் பற்றி விமர்சனம் எழுதுவது இவன்தானா என்று ஆச்சரியப்பட வைத்தான்!

ஜனவரி கடைசியில் தஞ்சாவூரில் வரலாறு.com தொடர்பாக ஒரு நிகழ்ச்சி என்று தகவல் கொடுத்துவிட்டுச் சென்றான்.

புதன் அன்று எழுந்து பிற கடைகளுக்குச் செல்ல நேரம் கிடைக்கவில்லை.

[படங்கள் இன்று இரவு]

Wednesday, January 12, 2005

மைலாப்பூர் திருவிழா படங்கள்

சென்னைப் புத்தகக் காட்சியினால் சற்று தாமதமானாலும் இதோ, உங்களுக்காக... மைலாப்பூர் திருவிழா 2005இன் சில படங்கள்.


சிறுமண்பாண்டம்
குயவர் சக்கரத்தில் சிறு மண்பாண்டங்கள்

வண்ணக்களஞ்சியம்
பல வண்ணங்களிலும், எண்ணங்களிலும் குட்டிப் பானைகள்

முகம் வரைதல்
முகத்தை ஆடாது அசையாது வைத்திருந்தால், தாளிலும் அப்படியே வரும்

மருதாணி
இப்பொழுது யார்தான் மருதாணி இலைகளைப் பறித்து அரைத்து கைக்கு இட்டுக்கொள்கிறார்கள்?

முறுக்கு
ஒரு கையால் மட்டுமல்ல; இரு கைகளாலும் படுவேகமாகச் சுற்றப்படும் முறுக்குகள்

ஜாங்கிரி
ஒரு நிமிடத்தில் பத்து மினி ஜாங்கிரிகள் ரெடி!


மண் சிலைகள்இதைத்தவிர புத்தகக் கடைகள் (நாங்கள் நடத்தியது)... ஏற்கெனவே புத்தகக் கண்காட்சி பற்றி நிறையவே எழுதிக்கொண்டிருப்பதனால் மேற்கொண்டு அதைப்பற்றி இங்கு எதையும் எழுதப்போவதில்லை.

தினமும் கோவிலுக்கு வரும் கூட்டம், மைலாப்பூர் டைம்ஸ் பத்திரிகையை பார்த்து வந்த கூட்டம் என்று மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு.

சென்னை என்பது பல சிறு நகரங்கள் ஒன்றுசேர்ந்த இடம். திருவல்லிக்கேணிக்கும் மைலாப்பூருக்கும் பல்வேறு வித்தியாசங்கள். மைலாப்பூருக்கும், கோபாலபுரத்துக்கும் எக்கச்சக்க வித்தியாசங்கள். இப்படி ஒவ்வொரு இடமும் தத்தம் மக்களுக்காகக் கொண்டாட, ஒரு திருவிழாவை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அமெரிக்காவில் சிறு சிறு கிராமங்களிலும் இதுபோன்று நடக்கும். இதாகாவில் வருடா வருடம் இதாகா ஃபெஸ்டிவல் என்று நடக்கும். அதைப்போல சென்னையில் ஒவ்வொரு திக்கிலும் திருவிழாக்கள் கொண்டாட வேண்டும்.

Tuesday, January 11, 2005

புத்தகக் கண்காட்சியில் திங்கள்கிழமை

வாரயிறுதிக்குப் பின்னர் வந்த முதல் வேலை நாள். ஞாயிறு நெருக்கியடித்த கூட்டத்துக்குப் பிறகு திங்கள் அமைதி.

கிழக்கு பதிப்பகம் கடைக்கு சிறப்பு விருந்தினராக சன் டிவியில் 'நேருக்கு நேர்' நிகழ்ச்சி நடத்தும் திரு.வீரபாண்டியன் வந்திருந்தார். அவர் எழுதி, தானாகவே பதிப்பித்த 'ஆகட்டும் பார்க்கலாம்' என்னும் காமராஜர் வாழ்க்கை வரலாறு புத்தகமும் எங்கள் கடையில் விற்பனைக்கு உள்ளது.

நடிகர் ராஜேஷ் வீரபாண்டியனைச் சந்திக்க வந்தார். வந்தவரை உடனடியாகக் கவர்ந்தது எம்.ஜி.ஆர்-எம்.ஆர்.ராதா 'சுட்டாச்சு சுட்டாச்சு' புத்தகம். உடனே அதை வாங்கிக்கொண்டார். அப்படியே ராஜேஷும், வீரபாண்டியனும் பேசிக்கொண்டிருக்கும்போது சிவாஜியையும், எம்.ஜி.ஆரையும் ஒப்பிட்டுப் பேசினர். சிவாஜியை ராஜேஷ் வாழ்க்கை வரலாறு எழுதச் சொல்ல, அப்பொழுது நடந்த உரையாடல்...

"சார், நீங்க உங்க வாழ்க்கை வரலாறை, நடிப்புக்கலையைப் பத்தி எழுதி..."

"எழுதி...?" (சிவாஜியின் சிம்மக்குரலைக் கற்பனை செய்து கொள்ளவும்)

"புத்தகமாப் போடலாமே..."

"போட்டு...?"

"எல்லோரும் படிப்பாங்களே..."

"படிச்சு...?"

"அதைப் படிச்சு நடிப்பைக் கத்துப்பாங்களே..."

"அட போடா! நீ படிப்ப... உன்னை மாதிரி இன்னும் நாலு பேர் படிப்பான். அவ்வளவுதான்! இதையெல்லாம் படிச்சு நடிப்பைக் கத்துக்க முடியுமா? போய் வேலையைப் பாருடா!"

சிவாஜி நடிப்பு என்பது படிப்பதால் வராது. உள்ளார்ந்தே இருக்கும் ஒரு குணம் என்று நினைத்திருந்தாராம். ஆனால் எம்.ஜி.ஆர் பிறரைப் பார்ப்பதன் மூலம், படிப்பதன் மூலம் கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தாராம். "இப்பல்லாம் இருக்கற நடிகர்கள் யாராவது எம்.ஜி.ஆர் மாதிரி ராஜா வேஷம் போட முடியுமா?" என்று சொல்லிவிட்டு தொடர்ந்து கண்காட்சியில் பிற கடைகளுக்குச் சென்றுவிட்டார் ராஜேஷ்.

இகாரஸ் பிரகாஷ் வந்தார். தெருவோரத்தில் அள்ளிச்சேர்த்த சில அருமையான புத்தகங்களைக் காட்டினார். உள்ளேயும் சில புத்தகங்களை வாங்கியுள்ளார். தெருவோரக் கடைகளுக்கு நாளையாவது செல்லவேண்டும் என்று முடிவு கட்டினேன்.

1994-ல் அடித்து இன்னமும் மிச்சமிருக்கும் சுஜாதாவின் "டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு" நாடகம் -- இகாரஸ் ஒன்று வாங்கிவிட்டு இன்னமும் நான்குதான் இருக்கிறது; உடனே போய் வாங்கவும் என்று சொன்னார். (நாகை குமரிப் பதிப்பகம் வெளியீடு!) உடனே ஒன்று வாங்கினேன். (வெறும் ரூ. 19 மைனஸ் ரூ. 2 = ரூ. 17)

மீதி நாளை.

Monday, January 10, 2005

புத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று

கூட்டம் மிகுந்த, நெரிசலான நாள். கடை எண் 67-ல் காலையில் சிறப்பு விருந்தினர் சோம.வள்ளியப்பன். சிறப்புப் புத்தகம் "அள்ள அள்ளப் பணம்" - பங்குச்சந்தை பற்றிய அறிமுகம். பக்கத்தில் விற்றுக்கொண்டிருந்த பாப்கார்ன் பொட்டலங்களைப் போலவே, இந்தப் புத்தகமும் படுவேகமாக விற்பனை ஆகிக்கொண்டிருந்தது. உடனடியாக மேற்கொண்டு பல பிரதிகள் அச்சிட வேண்டிய நிலை.

பலரும் வள்ளியப்பனின் பிற நூல்களையும் சேர்த்தே வாங்கினர் - தொட்டதெல்லாம் பொன்னாகும், காலம் உங்கள் காலடியில். இந்த மாதிரி பெயர்களைக் கண்டு முகம் சுளிப்பவர்களும் உண்டு. ஆனால் இது எங்களைப் பொறுத்தவரை வியாபார உத்தி. கையில் புத்தகத்தை எடுக்கத்தான் இந்த ஏற்பாடு. எடுத்தவுடன் உள்ளே சரக்கிருக்கிறதா என்று பார்த்து விட்டு வாங்கினால் போதும்.

தொட்டதெல்லாம் பொன்னாகும் - சிறு வியாபாரிகள், தொடக்க நிலை விற்பனைப் பிரதிநிதிகள் ஆகியோரை முன்வைத்து எழுதப்பட்ட புத்தகம். சரியான MBA படிப்பு ஏதும் இல்லாமல் விற்பனைக்கு வருபவர்களுக்கான ஆலோசனைப் புத்தகமாக இதைக் கருதலாம்.

காலம் உங்கள் காலடியில் - Time Management பற்றிய புத்தகம்.

மாலை, புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு heavyweights வந்திருந்தனர். காலச்சுவடு ஸ்டாலில் சுந்தர ராமசாமி. கிழக்கு பதிப்பகம் கடைக்கு அசோகமித்திரன்.

அசோகமித்திரன் கடந்த நாற்பதாண்டுகளில் எழுதியிருந்த கட்டுரைகள் அனைத்தையும் பொருள் வாரியாகவும், அதற்குள்ளாக காலவாரியாகவும் பிரித்து, அடுக்கி இரண்டு தொகுதிகளாகக் கொண்டுவந்துள்ளோம் (ஒன்று | இரண்டு). இந்த வேலைதான் கடந்த இரண்டு மாதங்களாக எங்களை அலைக்கழித்தது.

அசோகமித்திரனை வெறும் இலக்கியவாதியாக மட்டும் பார்ப்பது தவறு என்று எனக்குத் தோன்றுகிறது. வெறுமே பல சிறுகதைகளையும், சில நாவல்களையும் எழுதி, அத்துடன் தன்னைக் குறுக்கிக் கொள்ளவில்லை. அவரது அ-புனைவுகளை (non-fiction) மட்டும் வைத்துப் பார்க்கும்போது அவரது முழு வீச்சு புலப்படும். இத்தனைக்கும் இப்பொழுதைக்கு நாங்கள் தொகுத்திருப்பது அவர் தமிழில் எழுதியது மட்டும். எங்கள் கடைக்கு வந்திருந்த கவிஞர் ஞானக்கூத்தன் சொன்னது போல அவரது ஆங்கிலக் கட்டுரைகளையும் தொகுக்க வேண்டும்; தொகுத்துப் பார்த்தால் அசோகமித்திரன் என்னும் சிந்தனையாளரின் முழுப் பரிமாணமும் நமக்குப் புரியவரும்.

தமிழில் தெரிந்ததை விட அசோகமித்திரன் ஆங்கிலத்தில் இன்னமும் பலரைச் சென்றடைந்துள்ளார் என்பது தமிழ் மட்டும் படிக்கத் தெரிந்தவர்களின் துரதிர்ஷ்டம்தான். ஒருசில சிறுபத்திரிகைகளில் மட்டுமே அசோகமித்திரனின் கட்டுரைகள் வந்துகொண்டிருந்தன. அது போய்ச்சேர்ந்த ஆள்களின் எண்ணிக்கையும் சில ஆயிரங்களில் மட்டுமே இருக்கும்.

அசோகமித்திரன் கட்டுரைத் தொகுப்புகளின் உள்ளடக்கத்தைப் பற்றித் தனியாக எழுத வேண்டும். சினிமா என்றால் தமிழ் சினிமா, இந்தி சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா. அதில் படங்கள், கலைஞர்கள். இலக்கியம் என்றால் தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம். அதில் புத்தகங்கள் - சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், படைப்பாளிகள். நாடகங்கள் பற்றி அங்கும் இங்கும். அரசியல் பற்றி (இலக்கியம், நுண்கலைகள் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு அரசியல் பற்றி). அரசியல் தலைவர்கள். பொதுவாழ்வு பற்றி. கடந்த நாற்பதாண்டு காலத்தில் அவர் கண்ணுக்குப் பட்ட, காதுக்குக் கேட்ட சுவாரசியமான நிகழ்வுகள்.

இப்படிச் சேர்த்தால் 3000 பக்கங்களுக்கு மேல் வந்திருக்கும். அதை வெட்டி, 2000க்குள் கொண்டுவந்து இரண்டு புத்தகங்களாக்கினோம். இதில் மிகப்பெரிய வேலை புத்தகத்தின் கடைசியில் போட்ட index - பெயரகராதி. ஆங்கிலத்தில் படு எளிதாகச் செய்து முடிக்கலாம். தமிழில்? கடைசியாக தமிழ் யுனிகோட் sort orderஐ நம்பி அதன்படி index செய்தோம். ர/ற; ந/ண/ன; ல/ள/ழ தகராறு இருக்கும். ஆனாலும் அது பெரிய பிரச்னை இல்லை.

அந்த பெயரகராதியை மட்டுமே வைத்துப் பார்த்தால் என்னவெல்லாம் பற்றி அசோகமித்திரன் எழுதியுள்ளார் என்று தெரியவரும். பிரமிக்கவைக்கும் வீச்சு அவருடையது.

மற்றும் சில இணைய நண்பர்கள் கண்ணுக்குப் பட்டனர். இரா.முருகன் பொறுமையாக அசோகமித்திரன் வரும்வரை காத்திருந்து கட்டுரைத் தொகுதிகளை கையெழுத்து வாங்கி எடுத்துக்கொண்டார். அசோகமித்திரனின் தெலுங்கு மொழிபெயர்ப்பாளர் ஜி.வி வந்திருந்தார். (சாஹித்ய அகாதெமிக்காக அசோகமித்திரனின் சில நாவல்களை தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார்.) இருவரும் தமிழிலும் தெலுங்கிலும் மாறி மாறி சரளமாக உரையாடினர். (அசோகமித்திரன் சிறுவயதில் இருந்த இடம் சிகந்தராபாத்).

கிடைத்த சிறிது நேரத்தில் காலச்சுவடு சென்று சல்மாவின் நாவல் (இரண்டாம் ஜாமங்களின் கதை), அடையாளம் சென்று "தமிழ் மொழிநடைக் கையேடு" (தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கி அடையாளம் பதிப்பகம் வழியாக வெளிவருகிறது) இரண்டும் வாங்கினேன். தமிழில் - வலைப்பதிவுகளில் மட்டும் எழுதினாலும் கூட - உருப்படியாக எழுத விரும்புபவர்கள் அவசியம் வாங்க வேண்டிய புத்தகம் "தமிழ் மொழிநடைக் கையேடு". மற்றபடி இன்று தமிழில் எழுதுபவர்கள் நடையும், இலக்கண அறிவும் படுமோசமாக இருக்கிறது.

"நான் எழுதும் இந்தத் தமிழ் எனக்குப் போதும்" என்ற நிலை மிகவும் தவறானது. மொழியை சரியாகக் கையாள்வது, சொல்ல வந்த கருத்தை எதிராளியிடம் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க உதவும். ஆங்கிலமாக இருந்தாலும், தமிழாக இருந்தாலும் அப்படியே.

மேலும் கார்ட்டூன்கள்

கிழக்கு பதிப்பகம் விளம்பரங்களில் காணப்படும் பிற கார்ட்டூன்கள்:

1. 9/11 : சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி புத்தகத்துக்காக2. டாலர் தேசம்3. சார்லி சாப்ளின் கதை


Sunday, January 09, 2005

புத்தகக் கண்காட்சியில் சனிக்கிழமை அன்று

காட்சியின் முதல் நாள் (என்று சொல்லலாம்).

சந்தித்தது: இணைய நண்பர்கள் பலரையும். பிரபஞ்சன், சா.கந்தசாமி, பாக்கியம் ராமசாமி (அ) ஜ.ரா.சுந்தரேசன், இரா.முருகன், சுதாங்கன், சோம.வள்ளியப்பன், சொக்கன், இன்னமும் பலர்.

வாசகர்கள் பலரும் சுதாங்கன், வள்ளியப்பன், சொக்கன் புத்தகங்களில் கையெழுத்து வாங்கி கொண்டிருந்தனர்.

பல வாசகர்கள் வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை முன்னதாகவே தயார் செய்துகொண்டு வந்திருந்தனர். டக்-டக்கெனறு வேண்டிய கடைகளுக்குச் சென்றனர். தமக்குத் தேவையான புத்தகங்களை மட்டும் வாங்கினர். வேறு எதிலும் நேரத்தைச் செலவிடவில்லை.

இராம.கி காலையிலேயே வந்திருந்தார். பொறுமையாகச் சுற்றிக் கொண்டிருந்தார். கடைசியாக எங்கள் கடைக்கு வந்து வாங்கிய புத்தகம் முருகனின் அரசூர் வம்சம்.

கையில் கேம்கார்டருடன் ஒரு பகுதிக் கடைகளைப் படமெடுத்துக் கொண்டிருந்தேன். தீம்தரிகிட ஞாநி கடைக்குச் சென்று அவரைப் பிடித்தேன். எப்பொழுதும் போல அவரது ஸ்டாலில் வாக்கெடுப்புகளை நடத்திக் கொண்டிருந்தார். இம்முறை சங்கராச்சாரியார் கைது சரியா, தவறா என்பதும், மற்றொரு கேள்வியும். வாக்கெடுப்பு படு ஜரூராக நடந்துகொண்டிருந்தது.

"சார், உங்கள் நெடுநாள் வாசகன் பத்ரி சேஷாத்ரி"
"தெரியுமே! ஆனால் இப்பொழுது நீங்கள் பதிப்பாளர். என்னைப் பேட்டியெடுக்க வந்திருக்கும் உங்களை நான் பேட்டியெடுக்கலாமா?"

என் கேமராவை வாங்கி, என்னையே சில கேள்விகள் கேட்டார். சொன்னேன். அனைத்தும் என் கேமராவில் பதிவானது. பொறுமையாக ஒருநாள் இணையத்தில் போடுகிறேன்.

புத்தகக் கண்காட்சியில் இரண்டே இரண்டு கடைகளில் இருந்தவர்கள்தான் சீருடை அணிந்து வந்தவர்கள். திராவிடர் கழகப் பதிப்பகத்தில் அனைவரும் கறுப்புச் சட்டை, வெள்ளை வேட்டி. கிழக்கு பதிப்பகத்தில் அனைவரும் வெள்ளை டி-ஷர்ட், அதில் கிழக்கு பதிப்பகம் லோகோ முன்னும் பின்னும். எங்கிருந்து பார்த்தாலும் உடனே அடையாளம் காண முடியும்!

ஹர ஹர சங்கர - அவசர விமர்சனம்

ஜெயகாந்தன் 26 வருடங்களுக்கு முன்பு "ஜய ஜய சங்கர" என்ற நாவலை எழுதி வெளியிட்டார். கடந்த சில வருடங்களாக எழுதுவதை முற்றிலுமாக நிறுத்தி வைத்திருந்தார் ஜெயகாந்தன். இப்பொழுது எழுதி, கவிதா பப்ளிகேஷன் வெளியிட்டிருக்கும் நாவல் "ஹர ஹர சங்கர".

அறுபத்தி நான்கு பக்கங்கள் கொண்ட நடுவில் பின் போட்டிருக்கும் மாத நாவல் மாதிரியான தோற்றம். பெரிய எழுத்து. அங்கங்கே படங்கள், சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பொன்மொழிகள் தனியாக கட்டம் கட்டி, பல பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. மாலைமதி வாசிப்பது போன்ற தோற்றம் கிடைக்கும்.

முன்னுரையில் ஜெயகாந்தன் சொல்கிறார்: "நடந்தது, நடப்பது, நடக்கப் போவது, நடவாதது, நடக்க முடியாதது, நடக்கக் கூடாதது ஆகிய அனைத்தையும் பிரதிபலிப்பதே கற்பனை. ஏனெனில் அதுவே சத்தியம்."

முதலில் விமர்சனமாக எழுதலாம் என நினைத்தேன். அதற்கு பதில் கதையிலிருந்து 10 மேற்கோள்களைக் காட்டி முடிவை உங்களிடமே விட்டுவிடலாம் என்று எண்ணியுள்ளேன். இப்பொழுது...

1. நகரேஷு காஞ்சி.

2. ஊரின் நடுவே உள்ள அந்தத் திருமடமும், உயர்ந்து கம்பீரமாய்க் கோபுரம்போல் அமைந்து, காவிக்கொடி பறக்கப் பெரிதும் உருமாறித்தான் காட்சி தருகிறது.

...

மடம் என்னதான் அகத்தே ஆன்மிக ஈடுபாடு கொண்டிருந்தாலும் புறத்தே இந்த சமூகத்துடன் தொடர்புடைய இந்த சமூகத்தின் ஓர் அங்கம்தானே? சமூகத்தில் செல்வம் படைத்தோரும் அரசும் போட்டியிடும் எல்லாத் துறைகளிலும் மடமும் அவர்களுக்கு இணையாக ஈடுபட்டு சமூகப் பணி புரிய நேர்ந்தது.

3. மஹா ஸ்வாமிகள் சித்தியடைந்தபின்னர், [...] இந்த மடத்தைச் சேர்ந்த சிலருக்கே தாங்கள் திருமடத்தின் மரபுகளை மீறிச் செயல்படுகிறோமோ என்கிற மனக்கிலேசமும் ஒரு பக்கம் கனத்துக் குமுறிக்கொண்டிருந்தது.

...

அவர்களின் இறுகிய முகங்களைக் காணுந்தோறும் அவர்களது மவுனமான பார்வை அந்த மனக்கிலேசத்தை புதிய ஸ்வாமிகளின் உள்ளேயும் பரவச் செய்தது. அத்தகைய ஆன்மிக மன உளைச்சலில் சமீப காலமாய் அடிக்கடி சிக்கித் தவிக்கிறார் புதிய ஸ்வாமிகள்.

...

புதிய பீடாதிபதி ஸ்வாமிகள் என்ன செய்தபோதிலும் ஆத்ம துரோகத்துக்கு இணையான குருத் துரோகம் புரிந்தவர் அல்லர்!

4. அறைவாசலில் கரிய நிழல் போல் நான்கைந்து உருவங்கள் தெரிந்தன. தம் எதிரே நெருங்கி வந்த ஆஜானுபாகுவான ஆள், மீண்டும் "சாமி, புறப்படுங்க!" என்று தாழ்ந்த ஸ்தாயியில் கனத்த குரலில் பேசினான்.

...

"நீ... நீ வீரப்பன் இல்லையோ?" [...]

"இல்லை. சூரப்பன்!" என்று பணிவான குரலில் கூறி மீண்டும் ஒருமுறை வணங்கினான் அவன்.

5. ஸ்வாமிகளின் மீது இந்தச் சமூகம் எதிர்காலத்தில் சுமத்தப்போகிற குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடுகிற மாதிரி கூறினான் அந்த மாயாவி [சூரப்பன்]:

"மதவெறியையும் வகுப்புவாதத்தையும் வளர்க்கிற சில இயக்கங்களோடு நீங்கள் உறவாடினீர்களாம்! நாஸ்திகர்களோடும், மக்களை வஞ்சிக்கிற ஊரறிந்த மாய்மாலக்காரர்களோடும் மத்யஸ்தம் செய்து கொண்டீர்களாம்!"

...

"அது மட்டும் இல்லே சாமி! எனக்கு சொல்லவே நாக்கு கூசுது. நினைச்சா நெஞ்சு பதைக்குது!" என்று தயங்கினான் அந்த மாயாவி.

...

"[...] உங்க மேல, கொலைக்குற்றம் சுமத்தப்போறாங்க!"

...

"உங்க கையால நீங்க செஞ்சீங்கன்னு இல்லசாமி, நீங்க தான் தூண்டி விட்டீங்களாம்?"

6. சந்திரமவுலீஸ்வரர் சன்னிதியில், திரைக்குப் பின்னால் ஸ்வாமிகள் பூஜையில் அமர்ந்திருந்தபொழுது, அவன் [சூரப்பன்] மண்டபத்தில் கூடியிருந்த பக்தர் கூட்டத்தின் இடையே ஓர் ஒற்றனைப் போல் உலவிக் கொண்டிருந்தான்! இவர்களில் எத்தனை பேர் உண்மையான பக்தர்கள்! எத்தனை பேர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் வஞ்சகர்கள்!

ஊரெல்லாம் கடன்வாங்கி ஏமாற்றி விட்டு ஊரார் எவர் கண்ணிலும் படாமல் ஒளிந்துகொள்வதற்கு ஏற்ற இடமாகத் தேர்ந்து பதுங்கிக் கொண்டு இங்கே பக்திப் பரவசத்துடன் வந்து நிற்கிறானே ஒருவன்...

கண்களில் தீட்டிய மையோடு ஜாடைகாட்டி அபிநயம் புரிபவள்... யாரோ ஒருவனோடு சரசமாடிக் கொண்டிருக்கிறாளே ஊரறிந்த ஓர் உத்தமி...

அவள் பக்கத்தில் பக்திப் பரவசமும் பளபளக்கும் பட்டு அங்கவஸ்திரமுமாய் நிற்கிறானே ஒரு மாமா...

...

'இவர்கள் யாரேயாயினும், இவர்கள் அனைவரும் என் அன்பிற்குரிய குழந்தைகள். இவர்களை வேவு பார்ப்பதையும், இவர்களில் வித்தியாசம் காண்பதையும் என் மனம் ஏற்காது' என்று ஸ்வாமிகளின் குரல் கேட்டது; பக்தர்களில் ஜெயகோஷத்திற்கிடையே அவனுக்கு மட்டும் அவர் குரல் கேட்டது.

7. "சாமி, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பலமான ஆதாரங்கள் வேறு இருக்கிறதாம்! அதெல்லாம் பிறகு அடுக்கடுக்காய் வெளிவருமாம்!" என்று தான் சேகரித்த செய்திகளைக் கடமைபோல் சொன்னான் மாயாவி.

"சேகரித்த ஆதாரங்கள்தானே? எல்லாவற்றுக்கும் மேலாக மூலாதாரம் என்று ஒன்றும் உண்டு" என்று உறுதியாகச் சொன்னார் ஸ்வாமிகள்.

எந்தத் துறவி, எந்த அவதாரம், எந்தக் கடவுள் சோதனைகளை எதிர்கொள்ளாமல் இருந்தது? தருமத்தின் வாழ்வை சூது கவ்வுவதும், தருமம் மறுபடி வெல்லும் என்பதும் மஹாபாரதக் கதை மட்டும்தானோ? சத்யமேவ ஜெயதே!

"பாவம் பத்திரிகைகளும், ஊடகங்களும் என்ன செய்யும்? இறுதியில் சத்தியம் வெளிப்படும் போதுதானே அவர்கள் சத்தியத்தை வெளியிட முடியும்? அதுவரை இந்த அடுக்கடுக்கான அபவாதச் செய்திகளைத்தானே அவர்கள் பரப்பிக் கொண்டிருப்பார்கள்! இந்தக் காலத்தில் பத்திரிகைகள் செய்திகளை மட்டுமா பரப்புகின்றன? ....

பாவம் பக்தர்கள்! ஈஸ்வரன் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் மனோதிடமும் தந்து காப்பாற்றுவாராக! ஈஸ்வரோ ரக்ஷது!"

8. ஸ்வாமிகள் படுத்திருந்த அறையின் திரைச்சீலையை விலக்கிக்கொண்டு மடத்தின் காரியஸ்தர் பேயறைந்த கோலமாய் வந்து நின்று "அவாள்லாம் வந்திருக்கா!" என்று பதற்றத்துடன் தெரிவித்தார்.

"எவாள்லாம்?" என்று எழுந்து அமர்ந்தார் ஸ்வாமிகள்.

"போலீஸ்காரா!"

9. "நமது சன்னிதானத்தின் கதவுகளை, சட்டம் வந்து தட்டி அழைக்கிறது. உரிய இடத்தில் சட்டத்தைச் சந்திக்க நாமும் புறப்படுகிறோம். இதன்பொருட்டு பக்தர்கள் எவரும் கவலையுறுதல் கூடாது. இந்தத் திருமடத்தின் ஸ்ரீ காரியங்கள் எதுவும் இதனால் தடைபடக் கூடாது.

...

"என்னை ஜாமீனில் எடுக்கவோ, என் பொருட்டு ஆர்ப்பாட்டங்கள் எதுவும் செய்யவோ வேண்டாம். சோதனைக் காலத்தில்தான் நமது சுயம் தெரியும்! அதைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். மனம் தளராதீர்கள்!"

...

சுவரில் சாத்திவைத்திருந்த தண்டத்தைப் பார்த்தார்.

"இதோ இருக்கே இந்தத் தண்டம். இனிமேல் இந்தத் தண்டம்தான் நான். என்னை, இந்த உடம்பைத் தான் கைது செய்ய முடியும். என் ஜீவன் இந்தத் தண்டம்தான். எல்லா அதிகாரமும் இன்மேல் இதற்குத்தான்... நான் திரும்பிவந்து இதை எடுத்துக்கொள்ளும் வரை எனக்கு செய்கிற எல்லா மரியாதைகளும் பூஜைகளும் இதுக்குத் தான்..."

10. கூட்டத்திலிருந்து ஓர் ஒற்றைக் குரல் "துறவிக்கு வேந்தன் துரும்பு" என்று முழங்கியது அனைவர் செவிகளிலும் உறைத்தது.

"இப்போது, நான் துறவிதானா என்பதற்கான சோதனை நடக்கிறது. என்னை நன்றாக சோதித்து அறிந்து கொள்ளட்டும்."

...

"நான் மெய்யாலும் துறவி என்றால், வேந்தன் எனக்குத் துரும்புதான்!"

...

ஸ்வாமிகள் வேனில் ஏறினார். போலீஸ் வேன் விரைந்தது. திருமடத்தின் முன்னால் திரண்டிருந்த பக்தர்கள் நம்பிக்கையுடன் முழக்கமிட்டார்கள்:

"ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !"

-*-* முற்றும் -*-*-

Friday, January 07, 2005

சென்னை புத்தகக் கண்காட்சி 2005 - முன்னோட்டம்

இன்று சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கியது. இன்று பலரும் தத்தம் கடைகளை ஒழுங்கு செய்வதிலேயே நேரத்தைச் செலவிட்டனர். மாலை ஓரளவுக்குக் கூட்டம் வரத்தொடங்கியது.

கிழக்கு பதிப்பகம் வாசலில் நுழைவுச்சீட்டு வழங்குமிடத்தில் செய்துள்ள விளம்பரமும், கடை எண் 67-ன் ஒரு காட்சியும் இங்கே.

நுழைவுச்சீட்டு வாயில்


கடை உள்ளே


இம்முறை கிட்டத்தட்ட 250 கடைகள். போனமுறையை விட அதிகமான பங்கேற்பு என அறிகிறேன். சென்றமுறை போலல்லாமல் இரண்டு வாயில்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு வாயில் வழியாக உள்ளே வந்து மற்ற வாயில் வழியாக வெளியே போக வேண்டும். அடுத்த நாள் உள் - வெளி இரண்டும் மாறும்.

இம்முறை நான் வாங்க வேண்டிய நூல்களை முன்னதாகவே முடிவு செய்து விட்டேன். இன்று முதல் தவணையாக பெரியாரின் வாழ்க்கை வரலாறு (சாமி சிதம்பரனார்), மற்றும் பெரியாரின் மொத்த எழுத்துகள் - 8 தொகுதிகளாக. அதைத்தவிர திராவிடர் கழக பிரசுரங்கள் சில. ஜெயகாந்தனின் "ஹர ஹர சங்கர" (விலை ரூ. 15, கவிதா பதிப்பகம்). இதை நாவல் என்று சொல்வதை விட சிறுகதை என்றே சொல்லவேண்டும். இன்னமும் படிக்கவில்லை. மேலோட்டமாகப் பார்த்தேன். நாளைக்குள் படித்துவிடுவேன்.

இன்னமும் வாங்க வேண்டியது சல்மாவின் நாவல், ஆ.இரா.வேங்கடாசலபதியின் பாரதியார் விஜயா பத்திரிகை தொகுப்பு - இரண்டும் காலச்சுவடு பதிப்பகம்; எஸ்.ராமகிருஷ்ணனின் உலக சினிமா பற்றிய அருமையான புத்தகம் (விலை ரூ. 500, கனவுப்பட்டறை வெளியீடு). இதற்கு மேல் ஒன்றும் காசுகொடுத்து வாங்கப்போவதில்லை. (மீதி உருப்படியான புத்தகங்கள் எல்லாம் நாங்கள் பதிப்பித்தது:-)

புத்தகக் கண்காட்சி பற்றி தினமும் ஒரு சிறு ரிப்போர்ட் தருகிறேன்.

மைலாப்பூர் திருவிழா படங்கள் நாளை.

மைலாப்பூர் திருவிழா 2005

கடந்த சில வருடங்களாக மைலாப்பூர் திருவிழா (Mylapore Festival) என்னும் விழா 'மைலாப்பூர் டைம்ஸ்' இதழால் நடத்தப்படுகிறது. மைலாப்பூர் டைம்ஸ் என்பது மைலாப்பூரில் கிடைக்கும் இலவச வார இதழ்.

இந்த வருடம் 6, 7, 8, 9 ஜனவரி - நான்கு நாள்களும் நடக்கிறது. நேற்று தொடங்கியது.

மைலாப்பூர் கபாலீசுவரர் கோவில், (நீரில்லாத) குளம், தேர், சுற்றியுள்ள மாட வீதிகள் - இதுதான் விழா நடக்கும் சுற்றுப்புறம்.

குளத்தின் தெற்குக் கரை - தெற்கு மாடவீதி வழியாக காய்கறிகளை வாங்கிக்கொண்டு அப்படியே குளத்திற்கும் கோவிலுக்கும் இடையேயான சிறு சந்தில் நுழையுங்கள். குளத்தில் கிழக்கு கரையையொட்டி, வரிசையாக, புத்தகங்கள் பரப்பி வைக்கப்பட்டிருக்கும். கிழக்கு பதிப்பகம், காலச்சுவடு, உயிர்மை, அடையாளம், ராஜேஸ்வரி, மதி நிலையம், பழனியப்பா பிரதர்ஸ், ராமகிருஷ்ணா மடம், கவுரா ஏஜென்சீஸ் போட்டிருக்கும் பல்வேறு புத்தகங்கள், இன்னமும் சிலரது புத்தகங்கள். மாலை நேரத்தில் சாவகாசமாக புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து, காசு கொடுத்து வாங்கிய பின்னர், அப்படியே கோவிலின் தெற்கு மதிலையொட்டித் திரும்புங்கள்.

மயிலையின் பழங்கால ஆவணங்களாக சில கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் கோவிலின் சுவரோரம் இருக்கும். பார்த்துக்கொண்டே நடையைக் கட்டி, தெருக்கோடியில் வலதுகைப் பக்கம் திரும்பி, உடனே இடதுகைப் பக்கம் திரும்புங்கள். சிறு சந்தில் "குயவர் மண்பாண்டம் சமைப்பர்" என்று பழந்தமிழ் இலக்கியங்களில் மட்டும் படித்ததைக் கண்ணால் காணலாம். குட்டிக் குட்டிச் சட்டிகள், கண்ணுக்கு முன்பாக குயவர் சக்கரத்தில் உருவாவதைப் பார்க்கலாம். அருகே சுவரில் வண்ணம் தீட்டும் இளம்பெண்கள். கோலம் போடுவதற்கெனவே ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் நேற்று கோலங்கள் எதையும் நான் பார்க்கவில்லை. ஒருவேளை இன்று முதல், என இருக்கலாம். கைவினைப் பொருட்கள். இன்னும் பல. அப்படியே தொடர்ந்து நடந்து சிவசாமி மேல்நிலைப் பள்ளிக்குப் போகும் வழியில் செல்லுங்கள். இன்னமும் பல கைவினைப் பொருட்கள். நகையலங்காரங்கள். சிறு மேடையில் நாகசுரம், தவிலுடன் கச்சேரி.

ஒருவர் வெகுவேகமாக இரு கைகளாலும் படுவேகமாக முறுக்கு சுற்றுவார். இன்னொருவர் ஜாங்கிரி பிழிவார். காபிக்கு ஒரு கடை, தோசைக்கு ஒரு கடை. மசால் தோசைக்கு மற்றொரு கடை. பல்வேறு சுவையுணவுகள். கடைசிவரை ஒரு கை பார்த்துவிட்டு அப்படியே மீண்டும் கோவில் தேர் இருக்கும் இடத்துக்கு வாருங்கள். கோவில் வாசலில் பெரிய மேடை. அதன் முன் நூறு பேர் அமர இருக்கைகள். பெரிய திரை. நேற்று மைலாப்பூர் பொதுமக்கள் சிலர் தம் இருப்பிடத்தை எப்படி அழகாக வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி பேசி, முன்னமே பதிவாகியிருந்த படங்களைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். மேடையில் இசைக்குழு ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது. (கண்பார்வையற்றோர் சிலர் மேடையில் இருந்தனர் என்று ஞாபகம்).

மைலாப்பூரிலோ, அருகிலோ இருந்தால் தவறவிட்டு விடாதீர்கள்.

நேற்று போகும்போது கையில் கேமரா எடுத்துச் செல்லவில்லை. இன்று சில புகைப்படங்களுடன் வருகிறேன்.

இலைப் பூச்சி

எங்கிருந்தோ பறந்து வந்து வீட்டில் உட்கார்ந்திருந்தது இந்தப் பூச்சி. சுற்றியுள்ள இடங்களில் தாவரங்களுக்கே இடமில்லை. எல்லாமே கான்கிரீட் கட்டடங்கள். பாவம் இந்தப் பூச்சி!

இலைப் பூச்சி


இதன் விலங்கியல் பெயர் யாருக்காவது தெரியுமா?

Thursday, January 06, 2005

TRO-வுக்கு மருந்துகள்

சென்ற வாரம் ஈழநாதன் வலைப்பதிவிலும், பின்னர் என் பதிவில் ரோஸாவசந்த் எழுதியதையும் பார்த்து, TRO அமைப்புக்கு சென்னையிலிருந்து சில மருந்துப் பொருட்களை வாங்கி அனுப்ப முடிவு செய்தேன். வெள்ளிக்கிழமைக்குள் (31.12.2004) கிட்டத்தட்ட இந்திய ரூபாய் 25,000 மதிப்புள்ள சில மருந்துகளை வாங்கி பெட்டியில் கட்டி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்கு அனுப்பினோம்.

ஸ்ரீலங்கன் விமானச் சேவை, சுனாமி உதவிப்பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லும் என்று சொல்லியிருந்தது.

வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பினாலும் ஏதோ காரணங்களுக்காக இந்த மருந்துகள் ஏற்றிச் செல்லப்படவில்லை. முதலில் சென்னை சுங்கத்துறைப் பரிசோதனைக்காக (மருந்துகள்தானா என்று...) சனி, ஞாயிறு செலவானது. திங்கள் அன்று அதைத் தாண்டி, கிளம்பலாம் என்றால், இலங்கை தூதரக அனுமதியில்லாமல் பொருட்களை எடுத்துச் செல்லமுடியாது என்று ஸ்ரீலங்கன் சொல்லிவிட்டது.

இலங்கைத் தூதரகத்தார், TRO அனுமதிக்கப்பட்ட நிவாரண உதவிக்குழு அல்ல என்று சொன்னார்கள். அவர்களிடம் இரண்டு நாள்கள் போராடி, கடைசியாக நேற்று அனுமதி பெற்று பெட்டியை அனுப்பினோம். அனுமதி பெற, மருந்துகளை "சுகாதார அமைச்சரகம், கொழும்பு-10" க்கு அனுப்ப வேண்டுமென்றும், அங்கிருந்துதான் TRO மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று இலங்கைத் தூதரகம் சொன்னதால் அப்படியே செய்தோம். வேறு வழி தெரியவில்லை.

அனுப்பிய பொருளுக்கான Airway Bill-இல் மருந்துப் பொருட்கள் யாருக்கு (TRO) என்பதனை விளக்கி, சுகாதார அமைச்சரகத்தைச் போய்ச்சேர்ந்ததும் TRO-வுக்குத் தகவல் சொல்லச் சொல்லி எழுதியுள்ளோம். நேற்று இரவு இந்த பில் பிரதியினை தோலைநகல் மூலம் TRO கொழும்பு அலுவலகத்துக்கு அனுப்பி, அங்கிருந்த ஒருவரிடம் பேசினோம். அவர்கள் இன்று பொருட்களை எடுத்தபின் (எடுக்க முடிந்தால்!) எங்களுக்குத் தகவல் சொல்வதாகச் சொல்லியுள்ளனர்.

மேற்கொண்டு இன்னமும் சில மருந்துப் பொருட்கள் (கிட்டத்தட்ட ரூ. 20,000) என் அலுவலகத்தில் இருக்கிறது.

இன்று TRO-வுக்கு சரியான முறையில் கிடைத்த செய்தி தெரிந்தால் அதை அனுப்ப வேண்டும்.

இதற்கிடையே ஸ்ரீலங்கன் விமானச்சேவை இனி பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லப்போவதில்லை என்றும் அதற்கென கட்டணம் வசூலிக்கப்போவதாகவும் சொல்லியுள்ளனர். அதுபற்றிய விவரங்கள் இன்றுதான் எனக்குத் தெரியவரும்.

இன்று காலை 9.05 வானொலிச் செய்தியில் கேட்டது: "விடுதலைப் புலிகள் கீழிருக்கும் பகுதிகளுக்கு இந்திய அரசு நேரிடையாக எந்த உதவிப்பொருளையும் அனுப்பாது."

Wednesday, January 05, 2005

ஜ்யோதீந்திர நாத் தீட்சித் 1936-2005

சென்னையில் பிறந்த மலையாளி, வட இந்தியப் பெயரை வைத்துக்கொண்டவர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நம் அண்டை நாடுகளில் இந்தியத் தூதராகப் பணியாற்றியவர். வெளியுறவுத் துறைச் செயலராக இருந்தவர். ஓய்வு பெற்ற பின்னர், 2002இல் காங்கிரஸ் இணைந்து, மன்மோகன் சிங் பிரதமரானதும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எனும் பதவி வகித்தவர். ஜே.என்.தீட்சித், ஜனவரி 3, 2005 அன்று மாரடைப்பால் காலமானார்.

கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதில் தீட்சித்துக்கு முக்கியப் பங்கு உண்டு. தனது கடைசி வேலையில், சீனா, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். இந்திரா காந்தி காலத்தில் 1971-ல் பங்களாதேஷ் பிறந்தபோது அந்நாட்டிற்கான இந்தியாவின் முதல் தூதராக இருந்தார். ராஜீவ் காந்தி காலத்தில் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியபோது இலங்கைக்கான இந்தியாவின் தூதராக இருந்தார்.

வி.பி.சிங் (, சந்திரசேகர்) காலத்தில் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரானார். கடைசியாக, ஓய்வு பெறுவதற்கு முன்னர், நரசிம்ம ராவ் காலத்தில் வெளியுறவுத் துறைச் செயலராக இருந்தவர்.

அதைத் தொடர்ந்து பல்வேறு பத்திரிகைகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் பற்றி எழுதினார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ரீடிஃப்.காம், ஃப்ரண்ட்லைன் போன்ற இதழ்களில் இவரது பத்தி தொடர்ச்சியாக வந்தது.

ராஜீவ் காந்தியின் இலங்கைக் கொள்கையை உருவாக்குவதில் தீட்சித் முக்கியப் பங்கு வகித்தார். தீட்சித் விடுதலைப் புலிகள் அமைப்பைக் கடுமையாக எதிர்த்தவர்/எதிர்ப்பவர்களில் ஒருவர். ராஜீவ் காந்தியின் இலங்கைக் கொள்கைகளை உருவாக்குவதில் அப்பொழுது நட்வர் சிங், எம்.கே.நாராயணன் ஆகியோரும் பங்கு வகித்தனர். [நட்வர் சிங் அப்பொழுது ராஜீவின் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தார். நாராயணன் ஐ.பி உளவுத்துறைத் தலைவராக இருந்தார். இன்று நட்வர் சிங் வெளியுறவுத் துறை கேபினெட் அமைச்சர், நாராயணன் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர்; தீட்சித் மறைவுக்குப் பிறகு இப்பொழுதைக்கு தாற்காலிக தே.பா.ஆ கூட.]

தீட்சித் இந்தியாவின் நலனைக் கருத்தில் வைத்தே எப்பொழுதும் இயங்கி வந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், இலங்கை பிரச்னையைப் பொறுத்தமட்டில் ராஜீவ் காந்தி முரட்டுத்தனமாகவும், ஆழமாகவும் இந்தப் பிரச்னையில் காலை விடுவதற்கும், அதே சமயம் விடுதலைப் புலிகளைக் குறைவாக மதிப்பிட வைத்ததற்கும் தீட்சித்தும் ஒரு முக்கியக் காரணமாவார். (மிகப்பெரிய குற்றவாளி ஜெனரல் கே.சுந்தர்ஜி... "இரண்டே வாரங்களில் விடுதலைப் புலிகளை நொறுக்கி விடுவோம்" என்றவர்.)

தீட்சித், இலங்கைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சரியான முறையில் அளவிட்டிருந்தால், இலங்கை அரசியல்வாதிகளை சரியாக எடை போட்டிருந்தால், ராஜீவ் காந்திக்கு சரியான ஆலோசனையைக் கொடுத்திருக்கலாம். இந்தியா சரியான முறையில் தலையிட்டிருந்தால், இன்று இலங்கைப் பிரச்னை இவ்வளவு மோசமானதாக இல்லாதிருக்கலாம்.

இலங்கையின் பல்வேறு மக்கள் தீட்சித்தின் நண்பராக இல்லாவிட்டாலும், பங்களாதேஷ் மக்கள் தீட்சித்தைப் பாசத்துடன் பார்க்கின்றனர். பாகிஸ்தான் தீட்சித்திடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தது. மிகக் குறுகிய காலத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் நல்ல பெயரைப் பெற்றவர் தீட்சித். அவரது இழப்பு மன்மோகன் சிங்குக்குப் பேரிழப்புதான். சீக்கிரத்தில் ஈடுகட்டமுடியாத இழப்பு. மன்மோகன் சிங் வேறொருவரைக் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படுவார்.

தீட்சித் ஆங்கிலத்தில் சில புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள், இலங்கை பிரச்னை பற்றி, பாகிஸ்தானுடனான சண்டை, சமாதானம் பற்றி, ஆப்கானிஸ்தான், அது தொடர்பாக நடந்த 9/11 தாக்குதல் பற்றி என்று முக்கியமான விஷயங்களைத் தன் அனுபவத்தின் பார்வையில் எழுதியுள்ளார். முக்கியமாகப் படிக்க வேண்டியது, இவரது "Assignment Colombo" எனும் புத்தகம்.

தீட்சித், தே.பா.ஆ ஆக நியமனம் ஆனவுடன் நான் எழுதிய பதிவு

28வது சென்னை புத்தகக் கண்காட்சி

28வது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு
கிழக்கு பதிப்பகம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.


சென்னை புத்தகக் கண்காட்சி 7.01.2005 வெள்ளிக்கிழமை மாலை தொடங்குகிறது. பத்து தினங்கள் - 16. 01.2005 ஞாயிறு முடிய நடைபெறும். இக்கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் பங்குகொள்கிறது. (கடை எண் 67)

கண்காட்சி தினங்கள் அனைத்தும் எங்கள் பதிப்பகத்தின் கடைக்கு சிறப்பு விருந்தினர்களாகப் பிரபல எழுத்தாளர்கள் பலர் வந்து சிறப்பிக்கிறார்கள்.

கிழமைகாலை 11.30மாலை 5.00
வெள்ளி / 7.1.05  
சனி / 8.1.05என். சொக்கன்சுதாங்கன்
ஞாயிறு / 9.1.05சோம.வள்ளியப்பன்அசோகமித்திரன்
திங்கள் / 10.1.05 வீரபாண்டியன்
செவ்வாய் / 11.1.05 யுகபாரதி
புதன் / 12.1.05 மாலன்
வியாழன் / 13.1.05 இயக்குனர் வஸந்த்
வெள்ளி / 14.1.05 திருப்பூர் கிருஷ்ணன்
சனி / 15.1.05நாகூர் ரூமிஇரா. முருகன்
ஞாயிறு / 16.1.05ஹரி கிருஷ்ணன்பிரபஞ்சன்


புத்தகக் கண்காட்சிக்கும், கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டாலுக்கும், சிறப்பு விருந்தினர்களுடன் கலந்துரையாடவும் உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

Tuesday, January 04, 2005

அள்ள அள்ளப் பணம்

[நான் ஈடுபட்டுள்ள கிழக்கு பதிப்பகம் வெளியிடும் புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த சிலவற்றைப் பற்றி இங்கே எழுத இருக்கிறேன். அதில் இரண்டாவதாக இந்தப் புத்தகம்.]

கிழக்கு பதிப்பகம் தொடங்கிய முதல் சில நாள்களிலேயே பங்குச்சந்தை பற்றி ஓர் எளிமையான புத்தகத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்பொழுது அறிமுகமானவர்தான் சோம.வள்ளியப்பன்.

பிப்ரவரி 2004, திசைகள் இயக்கம் சார்பாக ஆம்பூரில் ஒரு கூட்டம் நடந்தது. அப்பொழுது ரயிலில் பிரயாணம் செய்யும்போது நானும் ராகவனும் வள்ளியப்பனுடன் இதைப்பற்றிப் பேசினோம். அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். ஏப்ரல் 2004-ல் கையெழுத்தில் எழுதிய ஒரு பிரதி வந்துவிட்டது. ஆனால் முதலில் கையில் கிடைத்த பிரதியில் எனக்குத் திருப்தியில்லை. நிறைய மாற்றங்கள் செய்யவேண்டியிருந்தது.

அதன்பின் முன்னும் பின்னுமாக பிரதியை ஒழுங்குபடுத்த கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் தேவைப்பட்டன. அதற்கிடையே வேறு எத்தனையோ பல புத்தகங்கள் எங்கள் பதிப்பகத்திலிருந்தே வெளிவந்துவிட்டன. வள்ளியப்பனுக்கு, தான் எழுதிய பங்குச்சந்தை பற்றிய புத்தகம் பதிப்பாகுமா என்ற சந்தேகமே வந்துவிட்டது.

கடைசியாக ஓரளவுக்கு மகிழ்ச்சி தரக்க்கூடிய வகையில் பிரதியை ஒழுங்குபடுத்தியிருந்தேன்.

ஓ'ரெய்லி பதிப்பகத்தார் கணினித் தொழில்நுட்பத் துறையில் கொண்டுவரும் ஆழமான புத்தகங்களைப் போலல்லாமல் ".... for dummies" வரிசையைப் போன்ற மிக எளிமையான, ஆரம்ப நிலை வாசகர்களை - ஒன்றுமே தெரியாதவர்களை - சென்றடையுமாறு ஒரு புத்தகத்தைத்தான் முதலில் கொண்டுவர முடிவு செய்தோம்.

இந்தப் புத்தகத்தில் பங்குச்சந்தை பற்றிய மிக எளிய அறிமுகம் உண்டு. எல்லாவற்றுக்கும் இந்தியச் சூழ்நிலையிலான எடுத்துக்காட்டுகள். கம்பெனிகள், மூலதனம், பங்குகள், சந்தையில் லிஸ்ட் செய்வது, பங்குகளில் வர்த்தகம் செய்வது, பங்குகளின் முகப்பு விலை, சந்தை விலை, பங்குகளை எப்படி வாங்கி விற்பது, சந்தையில் ஏன் விலை ஏறுகிறது, இறங்குகிறது என ஒவ்வொரு சிறு விஷயமும் விளக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தொடங்கி P/E விகிதம், டெக்னிகல் அனாலிசிஸ் பற்றிய சிறு அறிமுகம் என பல நுணுக்கமான விஷயங்களைப் பற்றியும் வள்ளியப்பன் விளக்குகிறார். பங்குச்சந்தையின் மொழி ஆங்கிலமல்லவா? எனவே புத்தகத்தின் இறுதியில் பங்குச்சந்தை குழூஉக்குறிகளின் விளக்கம் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலச் சொற்றொடர், அதன் தமிழ் ஒலிவடிவம், அதன் பொருள், அதன் விளக்கம் என்று.

ஆனால் "சே, சுத்த போர்" என்று சொல்லாமல் படிப்பவரை மிக நெருக்கமாக வைத்துக்கொள்ளும் விதமாக வள்ளியப்பன் நிறையக் கதைகள் சொல்கிறார். படிக்கும்போது எங்குமே தொய்வு இல்லாமல் செல்வது புத்தகத்தின் சிறப்பு.

நான் அதிக நேரம் எடுத்து வேலை செய்த பிரதி என்பதால் எனக்கு இந்தப் புத்தகம் மிகவும் நிறைவை அளித்தது. மேலும் இந்தியச் சூழலில், இதுபோன்ற எளிதான பங்குச்சந்தை பற்றிய அறிமுகப் புத்தகம் ஆங்கிலத்தில் கூடக் கிடைப்பதில்லை! வெளிநாட்டுப் புத்தகங்கள் எதையும் அப்படியே நேரடியாக இந்தியச் சூழலில் பயன்படுத்த முடியாது.

அள்ள அள்ளப் பணம், சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், அக்டோபர் 2004, விலை ரூ. 100

இணையத்தில் வாங்க: காமதேனு.com

Monday, January 03, 2005

சுட்டாச்சு சுட்டாச்சு கார்ட்டூன்

சென்னை புத்தகக் கண்காட்சிக்கென கிழக்கு பதிப்பகம் வெளியிடவிருக்கும் சில புத்தகங்கள் பற்றிய கார்ட்டூன்கள் இங்கே.

நுழைவுச் சீட்டு வாங்குமிடத்தை ஸ்பான்சர் செய்கிறோம். எனவே அந்த இடத்திலும், எங்கள் கடையிலும் (எண் 67) இவற்றைக் காணலாம்.சுட்டாச்சு சுட்டாச்சு

[நான் ஈடுபட்டுள்ள கிழக்கு பதிப்பகம் வெளியிடும் புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த சிலவற்றைப் பற்றி இங்கே எழுத இருக்கிறேன். அதில் முதலாவதாக இந்தப் புத்தகம்.]

1967இல் எம்.ஜி.ஆர், திமுக வேட்பாளராக பரங்கிமலை தொகுதியில் தேர்தலுக்கு நிற்கிறார்.

இந்தத் தேர்தலில், முதல்முறையாக காங்கிரஸை எதிர்த்து பலமான ஓர் அணி - அண்ணதுரையின் திமுக - போட்டியிடுகிறது. ராஜாஜி திமுகவை ஆதரிக்கிறார். காமராஜ் காங்கிரஸ் கட்சி சார்பில் விருது நகரில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சீனிவாசன் என்னும் கல்லூரி இளைஞன். பெரியார், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு. எம்.ஆர்.ராதா, பெரியாரின் திராவிடர் கழக ஆதரவாளர்.

'நாத்திகன்' எனும் பத்திரிகையில், எம்.ஆர்.ராதா பெயரில் ஒரு கட்டுரை வருகிறது. அதில் எம்.ஜி.ஆர் பணம் கொடுத்து சில கூலிகளை வேலைக்கு அமர்த்தி காமராஜரைக் கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று எம்.ஆர்.ராதா குற்றம் சாட்டுகிறார். எம்.ஜி.ஆரின் பெயர் நேரடியாக அந்தக் கட்டுரையில் வரவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்படுபவர் எம்.ஜி.ஆர் என்று அந்தக் கட்டுரையைப் படிக்கும் அனைவருக்கும் தெரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. பலர் எம்.ஜி.ஆரிடம் நேரிடையாகவே வந்து "என்ன, எம்.ஆர்.ராதா இப்படி எழுதியிருக்காரே" என்று விசாரிக்கவும் செய்கின்றனர்.

எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர் இருவருக்குமிடையே ஏற்கனவே கட்சி விஷயத்தில் தகராறு. இருவரும் இணைந்து நடித்த, சின்னப்பா தேவர் தயாரித்து, இயக்கிய 'தொழிலாளி' என்னும் படம் 1964-ல் படமாக்கப்படுகிறது. அதில் ஒரு காட்சியில் "நமக்குனு வெளிச்சம் கொடுக்கப்போற நம்பிக்கை நட்சத்திரம் இதுதான்" என்ற வசனத்தை எம்.ஜி.ஆர் பேசும்போது "நமக்குன்னு வெளிச்சம் கொடுக்கப்போற உதயசூரியன் இதுதான்" என்று மாற்றிப் பேசுகிறார். உடனே எம்.ஆர்.ராதா "உன் கட்சி சின்னத்தையெல்லாம் இங்க கொண்டு வராதே" என்கிறார். பலத்த வாக்குவாதங்களுக்குப் பின்னர் எம்.ஜி.ஆர் பழையபடி 'நம்பிக்கை நட்சத்திரம்' வசனத்துக்குப் போகிறார்.

மீண்டும் 1967க்கு வருவோம். தேர்தல் பிரசாரம் முடிந்து வீட்டுக்கு வரும் எம்.ஜி.ஆரை, 'பெற்றால்தான் பிள்ளையா' படத் தயாரிப்பாளர் வாசுவும், எம்.ஆர்.ராதாவும் சந்திக்கின்றனர். சந்திப்பின்போது, சிறிது சிறிது இடைவெளி விட்டு, துப்பாக்கியிலிருந்து மூன்று குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. எம்.ஜி.ஆருக்கு தொண்டையில் குண்டு. எம்.ஆர்.ராதாவுக்கு நெற்றியிலும், தோள்பட்டையிலும்.

இருவரும் உயிர் பிழைக்கின்றனர். மருத்துவமனையில் இருந்தபடியே எம்.ஜி.ஆர் சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்கிறார். திமுகவுக்குப் பெரும் வெற்றி.

காவல்துறை எம்.ஆர்.ராதா மீது கொலை முயற்சி, தற்கொலை முயற்சி, லைசென்ஸ் தீர்ந்துபோன துப்பாக்கியை வைத்திருந்ததால் ஆயுதச் சட்டத்தை மீறியது ஆகிய பிரிவுகளின் மேல் வழக்குப் பதிவு செய்கிறது. எம்.ஆர்.ராதா பழைய விரோதம் காரணமாகவும், வேறு சில காரணங்களுக்காகவும் எம்.ஜி.ஆரைச் சுட்டார், பிறகு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார் என்பது காவல்துறை வாதம்.

ராதாவின் வழக்கறிஞர் வானமாமலை தன் வாதத்தில் "நாத்திகன் இதழில் வெளிவந்த கட்டுரையினால் எம்.ஜி.ஆருக்கு எம்.ஆர்.ராதா மீது எக்கச்சக்க கோபம். எனவே எம்.ஜி.ஆர் தான் முதலில் எம்.ஆர்.ராதாவைச் சுட்டார். தன்னைத் தற்காத்துக்கொள்ளத்தான் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரின் கையிலிருந்து துப்பாக்கியைப் பிடுங்கி அவரைச் சுட்டார்" என்கிறார்.

சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் இரண்டிலும் எம்.ஆர்.ராதா மீதான குற்றம் நிரூபிக்கப்படுகிறது. எம்.ஆர்.ராதா தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் கொண்டுவரப்படும் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது. எம்.ஆர்.ராதாவுக்கு ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

1967-ல் தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கை சுதாங்கன் தினமணி கதிரில் 1992-ல் வாராவாரம் தொடராக எழுதி வந்தார். இப்பொழுது கிழக்கு பதிப்பகம் மூலம் புத்தகமாக வருகிறது.

சரளமான நடை. ஏகப்பட்ட துண்டு விஷயங்கள். எம்.ஆர்.ராதா எனும் முரட்டுப் பிடிவாதக்காரரைப் பற்றிய விவரங்கள். சீர்திருத்தக் கருத்துகளை அவர் நாடகத்தில் கையாண்ட விதம். எம்.ஆர்.ராதாவின் நாடகங்களை முறியடிக்க காங்கிரஸ்காரர்கள் செய்யும் பல்வேறு விதமான சதிகள், எம்.ஜி.ஆர்-எம்.ஆர்.ராதா பகை, நீதிமன்றத்தில் நடந்த விவாதங்கள், விசாரணை, குறுக்கு விசாரணை என்று மிகவும் சுவையான பல விஷயங்களைத் திறம்படச் சொல்கிறார் சுதாங்கன்.

சுட்டாச்சு சுட்டாச்சு, சுதாங்கன், கிழக்கு பதிப்பகம், டிசம்பர் 2004, பக்கங்கள் 312, விலை ரூ. 120

இணையத்தில் வாங்க: காமதேனு.com

சென்னைப் புத்தகக் கண்காட்சி (7-16 ஜனவரி 2005) ஸ்டால் எண் 67-ல் கிழக்கு பதிப்பகம் புத்தகங்களை வாங்கலாம்.

Sunday, January 02, 2005

நிவாரணப் பணிகள் பற்றிய சிறுகுறிப்பு

* நாளுக்கு நாள் தேவைகள் புதிது புதிதாக மாறுகின்றன. காலரா வரும் என எதிர்பார்த்த மருத்துவர்கள் காலரா மருந்துகளை சேர்த்து வைக்க, காலராவுக்கு பதில் டைபாய்டால்தான் பலர் பாதிக்கப்படுகிறார்கள் என்று நாகையில் விவரம் கேட்ட நண்பர் சொன்னார். அதைப்போல கண்களைத் தாக்கும் ஜுரமும் வருகிறதாம்.

* பள்ளிக்கூடங்களில் தங்கிக்கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களை, பள்ளிக்கூடங்கள் திறக்கவேண்டியிருப்பதால் வெளியேறச் சொல்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். நிலைமை என்னவென்று இப்பொழுதைக்குச் சரியாகப் புரியவில்லை. திங்கள் கிழமையே (நாளையே) பள்ளிக்கூடங்களைத் திறக்க நாகை DEO விரும்புகிறார் என்று கேள்வி. என்ன அப்படித் தலைபோகிற அவசரமோ!

* உணவு, உடைகளுக்கு அப்பால், மற்ற தேவைகள் உள்ளன. நேற்று தலைக்குத் தடவிக்கொள்ளும் தேங்காய் எண்ணெய், சோப்புக் கட்டிகள் என்று சிலவற்றை வாங்கி அனுப்பினோம். ராம்கி விநியோகம் செய்வார். இவை போதாது. இன்னமும் நிறையத் தேவைகள் இருக்கும்.

* சிறு குழந்தைகளுக்கென பால் பவுடர், பாலைச் சூடாக்கும் மின்சார ஹீட்டர்கள், பீடிங் பாட்டில்கள் என்று தேவைப்படுகின்றன. நாளை முடிந்தவரை பீடிங் பாட்டில்களை வாங்கி அனுப்ப வேண்டும்.

இவையெல்லாம் தாற்காலிகத் தேவைகள்தான். மற்றபடி கரையோரப் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சும்மா "மீனவர்கள்தானே!" என்று பலர் தத்தம் வேலைகளைப் பார்க்கப் போய்விடலாம். ஆனால் ஓர் இயந்திர விசைப்படகு குறைந்தது ரூ. 1 லட்சம் ஆகிறது. நாகை போன்ற இடங்களில் ஆயிரக் கணக்கில் படகுகள் இருந்தன. சில பெரிய படகுகள் ரூ. 2, 3 லட்சங்களுக்கு மேல். மொத்தத்தில் தமிழகக் கரையோரத்தில் மட்டும் உடைந்து நொறுங்கி வீணான படகுகள் சுமார் ரூ. 100 கோடி இருக்கலாம் என நினைக்கிறேன். இதை எப்படி ஈடுகட்டப்போகிறோம்?

ஏற்கனவே படகுகளை வைத்திருந்த, இப்பொழுது உயிருடன் இருப்போருக்கு அரசு வங்கிகளாவது வட்டியில்லாக் கடன் - அல்லது மிகக்குறைந்த வட்டியுடன் கடன் - (ஐந்து வருடங்களில் திருப்பி அடைக்கக் கூடியதாக) கொடுக்குமா? இது அவசியத் தேவை என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு படகும் நாளொன்றுக்கு ரூ. 2,000-5,000 வரை சம்பாதிக்கக் கூடியவை. நாகைப் பகுதிகளில் கட்டுமரத்தை மட்டுமே பயன்படுத்தி சில மாதங்களில், நள்ளிரவு நேரங்களில் 'கோலா' என்ற மீனைப் பிடிப்பார்கள். நிறைய விலை போகக்கூடிய மீன்கள் இவை. கட்டுமரங்களில் பல அழிந்துள்ளது. மீன்வலைகள் நாசமாகியுள்ளன. இதைப்போல கரையோரங்களில் இறால் பண்ணைகள் வைத்திருந்தவர்களின் முழு முதலீடும் அழிந்துபோயுள்ளது. இந்தத் தொழிலையெல்லாம் நம்பி பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளனர்.

இந்த வருமானத்தை நம்பியே பல்வேறு உப தொழில்கள் உள்ளன.

உளவியல் வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகள் எப்படிக் கிடைக்கப் போகின்றன? அநாதைகளாகிய சிறு குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறோம்? இதற்கெல்லாம் அரசிடமிருந்தும், தொண்டார்வ நிறுவனங்களிடமிருந்தும் பல பதில்கள் தேவை.

===

வேறொரு வகையில் நான் ஈடுபட்டுள்ள தொழில் ஒன்றிலும் சில பாதிப்புகள். சென்னையில் புத்தக அச்சகங்கள் பலவும் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ளன. அங்கு அச்சகங்களில் வேலை செய்வோர் பலரும் கடலையொட்டிய குடியிருப்புகளிலிருந்து வந்தவர்கள். புத்தகங்களை பைண்டிங் செய்யும் பெண்கள் பலரும் இந்தக் குடும்பங்களிலிருந்து வருபவர்கள்தான்.

ஏதோவொரு வகையில் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்தோ, உறவினர்களில் யாரையாவது இழந்தோ...

அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு (7-16 ஜனவரி 2004) வரும் புத்தகங்களில் பெரும்பாலானவை திருவல்லிக்கேணியில் பைண்டிங் செய்யப்பட்டு வந்தவை. புத்தகப் பதிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பதிப்பாளரும் தமது சென்னைப் புத்தகக் கண்காட்சி வருமானத்தில் ஒரு சிறு சதவிகிதத்தையாவது ஒதுக்க முன்வருவார்களா என்று தெரியவில்லை. விசாரித்துப் பார்க்கிறேன்.

Saturday, January 01, 2005

தமிழ் வலைப்பதிவு விக்கி

தமிழ் வலைப்பதிவுகளுக்கென ஒரு விக்கி தேவை என்று பல நாள்களாக எதிர்பார்த்திருந்தது இப்பொழுது நடந்துள்ளது. வெங்கட் தளத்தில் தமிழ் வலைப்பதிவு விக்கி வந்துவிட்டது.

தமிழில் வலைப்பதிவுகளை வைத்திருப்பவர்கள் இந்த விக்கியில் தமக்குத் தெரிந்தவற்றை சேர்த்து, அதன்மூலம் பிறருக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நானும் இன்றிலிருந்து நாளுக்கு ஒன்றாக கொஞ்சம் கொஞ்சமாக எழுதி சேர்க்கிறேன்.

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியத்தில் சுனாமி தினத்தன்று நடந்த கிரிக்கெட் ஆட்டங்கள், நியூசிலாந்துக்கு விளையாடச் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மனநிலை, சுனாமி பற்றி இதுவரை இரங்கல் மட்டும் தெரிவித்து விட்டு பர்ஸை பத்திரமாக இழுத்து மூடிவைத்திருக்கும் ஐசிசி ஆகியவை பற்றி.

இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ. 10 கோடி கொடுக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் அடுத்து விளையாட இருக்கும் ஒருநாள் போட்டிக்கான சம்பளத்தைக் கொடுக்கிறார்கள் (இது கிட்டத்தட்ட ரூ. 1 கோடிக்கு மேல் வரும்). இவையிரண்டும் இந்தியப் பிரதமரின் நிவாரண நிதிக்குப் போய்ச்சேரும்.

பங்களாதேஷ் அடுத்து ஜிம்பாப்வேயுடன் விளையாட இருக்கும் ஆட்டங்களில் மைதானத்தில் சேரும் பணத்தை அப்படியே இலங்கை நிவாரணத்துக்குக் கொடுக்க உள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்கள் தாம் விளையாடிய கடைசி ஆட்டத்தில் கிடைத்த பணத்தை கொடுக்கின்றனர்.

ஆஸ்திரேலியா, சுனாமி நிவாரணத்துக்கென ஓர் ஆட்டத்தை நடத்தி அதில் கிடைக்கும் பணத்தைக் கொடுக்கலாம் என்ற திட்டத்தை முன்வைத்துள்ளது.