Tuesday, July 30, 2013

ஹேபர் பாஷ்: நைட்ரஜன் உரத்தின் பின்னணிக் கதை

சில வாரங்களுக்குமுன் கோபு தன் வலைப்பதிவில் ஹேபர் பாஷ் முறை பற்றி, தாமஸ் ஹாகர் எழுதிய The Alchemy of Air என்ற புத்தகத்தை முன்வைத்து எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தை வாங்கி சமீபத்தில் படித்து முடித்தேன்.

நாம் பலரும் ஹேபர்-பாஷ் முறை பற்றி வேதியியல் புத்தகத்தில் படித்திருப்போம். காற்றில் உள்ள நைட்ரஜனைப் பிடித்து அதனை அம்மோனியா என்ற வேதிப்பொருளாக மாற்றுவதற்கான வழிமுறையே இது.

உலகில் உள்ள அனைத்து உயிருள்ள பொருள்களிலும் நான்கு முக்கியமான தனிமங்கள் - கரி (கார்பன்), நைட்ரஜன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் - உள்ளன. இவைதவிர கொஞ்சம் கொஞ்சம் பிற தனிமங்கள் உள்ளன. ஆனால் இந்த நான்கும்தான் மிக மிக முக்கியமானவை. இவற்றில் ஒன்று கிடைக்காவிட்டாலும் உயிர்கள் உருவாக முடியாது; பிழைக்க முடியாது.

இவற்றுள் ஆக்சிஜனும் நைட்ரஜனும் காற்றில் வேண்டிய அளவு உள்ளன. மிகக் குறைந்த அளவில் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைட்) வடிவில் கரி உள்ளது. ஹைட்ரஜன் பொதுவாக தனியாகக் கிடைக்காது. ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்து நீராக வேண்டிய அளவு கிடைக்கின்றன.

தாவரங்கள் காற்றிலிருந்து கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு, மண்ணிலிருந்து நீரை எடுத்துக்கொண்டு சூரிய ஒளியில் அவற்றை இணைத்து உணவு தயாரிக்கின்றன என்று படித்திருப்போம். இதற்குத்தான் ஒளிச்சேர்க்கை (ஆங்கிலத்தில் ஃபோடோசின்தெசிஸ்) என்று பெயர். கரியமில வாயு, நீர் இரண்டிலிருந்தும் கரி, ஆக்சிஜன், ஹைட்ரஜன் கிடைக்கும். நைட்ரஜன் எங்கிருந்து கிடைக்கும்?

காற்றில் எக்கச்சக்கமான அளவு நைட்ரஜன் உள்ளது. கிட்டத்தட்ட 78%. ஆக்சிஜன் 21%. ஆனால் இந்த நைட்ரஜன் N2 என்ற மூலக்கூறு வடிவில் உள்ளது. தாவரங்களால் இந்த நைட்ரஜனைப் பயன்படுத்த முடியாது. தாவரங்களுக்குத் தேவை N என்ற தனியான வடிவில் இருக்கும் ஃபிக்ஸட் நைட்ரஜன். இந்த ஃபிக்ஸட் நைட்ரஜன் இல்லாவிட்டால் தாவரங்களால் வளர முடியாது. தாவர, விலங்குகளுக்குத் தேவையான புரதங்கள் அனைத்தும் அமினோ அமிலங்கள் மூலமாக உருவாகின்றன. இந்த அனிமோ அமிலங்களுக்கு மிக அடிப்படை இந்த ஃபிக்ஸட் நைட்ரஜன்.

தாவரங்களுக்கு இந்த ஃபிக்ஸட் நைட்ரஜன் இரண்டு விதங்களில் கிடைத்துவந்தது. சில தாவரங்கள், முக்கியமாக பயறு, பருப்பு, சோயா போன்றவற்றின் வேர்களை குறிப்பிட்டவகை நுண்ணுயிரிகள் தாக்கி, முடிச்சுகளை ஏற்படுத்தி அவற்றில் உட்கார்ந்துகொள்ளும். ஆனால் இந்த நுண்ணுயிரிகள் நல்லது செய்பவை. அவை காற்றில் உள்ள N2 நைட்ரஜனைப் பிடித்து, அவற்றை ஃபிக்ஸட் நைட்ரஜன் இருக்கும் மூலக்கூறுகளாக அம்மோனியா, யூரியா போன்றவையாக மாற்றும். இவை மண்ணில் கலந்துவிடும். இந்த ஃபிக்ஸட் நைட்ரஜனை தாவரங்கள் பயன்படுத்திக்கொண்டு நன்கு வளரும்.

இந்தக் காரணத்தால்தான் பாரம்பரியமான உழவர்கள் பயிர் மாற்றம் செய்து, நெல்லோ கரும்போ விளைவிப்பதற்கு இடையிடையே பயறு விளைவிப்பார்கள். நெல், கோதுமை, கரும்பு ஆகியவற்றால் இந்த ஃபிக்ஸட் நைட்ரஜனை உருவாக்கும் நுண்ணுயிரிகளைத் தம்மை நோக்கி இழுக்கமுடியாது. ஆனால் பயறு போன்றவை மண்ணில் உருவாக்கியிருக்கும் ஃபிக்ஸட் நைட்ரஜனை இவை நன்கு பயன்படுத்திக்கொள்ளும்.

இரண்டாவது வழிமுறை, உரங்களைப் பயன்படுத்துவது. தாவர உண்ணி விலங்குகளின் (முக்கியமாக மாடுகள்) கழிவுகளில் ஃபிக்ஸட் நைட்ரஜன் அதிகமாகக் கிடைக்கிறது. அதேபோல தாவரக் கழிவுகளை மண்ணில் புதைத்துவைத்து உருவாக்கும் மக்கிய உரம் (கம்போஸ்ட்), அல்லது மண் புழுக்களைக் கொண்டு உருவாக்கும் மண்புழு உரம் (வெர்மி கம்போஸ்ட்) ஆகியவற்றிலும் ஃபிக்ஸட் நைட்ரஜன் நிறைய உள்ளது. அதனால்தான் விவசாயிகள் பாரம்பரியமாக இந்த உரங்களைப் பயன்படுத்தி வந்தனர். இந்த உரங்கள் இருக்கும்போது விளைச்சல் அதிகமாக இருக்கும்.

***

ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் 19 நூற்றாண்டில் மருத்துவ முன்னேற்றம் காரணமாக மக்கள் தொகை அதிகமாக அதிகமாக, உரத்துக்கான தேவை அதிகமானது. இருக்கும் குறைவான இடத்தில் விளைச்சலை அதிகப்படுத்தவேண்டியிருந்தது. இல்லாவிட்டால் பஞ்சம்தான். அப்போது அவர்கள் முதலில் கண்டறிந்தது தென்னமெரிக்கக் கண்டத்தில் உள்ள பெரு என்ற நாட்டில் உள்ள ஒரு சிறு தீவு. அந்தத் தீவில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கடல் பறவைகள் மண்ணில் எச்சம் இட்டிருந்தன. இந்த எச்சங்கள் (குவானோ என்று இதற்குப் பெயர்), பல அடி ஆழத்தில் பெரும் பரப்பில் குவிந்திருந்தன. இவற்றில் ஃபிக்ஸட் நைட்ரஜன் பெருமளவில் இருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், இதனை விற்றுப் பணம் பண்ணும் தொழிலில் சிலர் இறங்கினர். இந்த குவானோவில் உள்ள வலுவான ரசாயனங்கள் காரணமாக மனிதர்களால் எளிதாக இவற்றைக் கையாள முடியாது. பல ஆயிரம் சீனர்கள் கொத்தடிமைகளாகக் கொண்டுவரப்பட்டு, மிக மோசமான சூழலில் இந்தப் பறவை எச்சத்தைக் கையாளக் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஆனால் சில பத்தாண்டுகளில் இந்த எச்சம் தீர்ந்துவிட்டது. உடனே ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பதற்றம் அதிகமாகிவிட்டது. அந்நாட்டு விவசாயிகள் இந்த உரத்துக்கு ஒருவகையில் அடிமையாகியிருந்தனர்.

அந்த நேரத்தில்தான் அதே பெரு நாட்டில் எக்கச்சக்கமான அளவில் ஒருவகை உப்பு இருப்பது தெரியவந்தது. சீனர்கள் ஆறு/ஏழாம் நூற்றாண்டிலேயே வெடியுப்பு (சால்ட்பீட்டர்) என்ற பொருளைக் கண்டுபிடித்து அதனைக் கொண்டு வெடிகளை உருவாக்கியிருந்தனர். பின்னர் ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே துப்பாக்கி, பீரங்கிகளுக்குத் தேவையான வெடிமருந்தை இந்த வெடியுப்பிலிருந்தே தயாரித்தனர். இந்த வெடியுப்பு இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் பெருமளவு கிடைத்தது. ஆங்கிலேயர்கள் இந்தியா வந்தபோது சாதாரண உப்பு (சோடியம் குளோரைடு), வெடியுப்பு (பொடாஷியம் நைட்ரேட்டு) ஆகியவற்றை வாங்கி தங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்ல முகலாயப் பேரரசிடம் வரியில்லா உரிமை பெற்றனர். ஆனால் பிற ஐரோப்பிய நாடுகளிடம் வெடியுப்புக்கான சரியான இடம் கிடைக்கவில்லை. அப்போதுதான் பெரு நாட்டில் கிடைத்த உப்பு அவர்களுக்குத் தெரியவந்தது.

பெரு உப்பு என்பது சோடியம் நைட்ரேட்டு NaNO3. இது இந்திய வெடியுப்பான பொடாஷியம் நைட்ரேட்டைவிட KNO3 சக்தி குறைவானது. ஆனாலும் அதைக்கொண்டும் சுமாரான வெடிமருந்தைத் தயாரிக்கலாம். எனவே இந்த பெரு நைட்ரேட் உப்பு பெருமளவு ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியானது. அதைக்கொண்டு அங்கே பல நாடுகளும் வெடிமருந்து தயாரித்தனர். யாருக்கெல்லாம் வெடியுப்பு (பொடாஷியம் நைட்ரேட்) கிடைத்ததோ, அவர்கள் மேலும் சிறப்பான வெடிமருந்தைத் தயாரித்துக்கொண்டனர்.

பெருவில் கிடைத்துக்கொண்டிருந்த பறவை எச்சம் தீர்ந்ததும், பெரு உப்பில் ஃபிக்ஸட் நைட்ரஜன் உள்ளது என்ற விஷயம் மக்களுக்குத் தெரியவந்தது. எனவே இந்தப் பெரு உப்பை (சோடியம் நைட்ரேட்டை) விவசாயிகள் வயல்களில் தெளிக்க ஆரம்பித்தனர்.

இதுதான் உலகின் முதல் செயற்கை உரம் எனலாம். ஆனால் இந்த செயற்கை உரம் ஆரம்பத்தில் இயற்கையாகக் கிடைத்தது என்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்! (குழம்பாதீர்கள்... விரைவில் தெளிவாகும்.)

பெரு உப்பு விளைவிக்கும் பூமி ஒரு பெரும் சண்டைக்குக் காரணமானது. பொலிவியாவும் பெருவும் ஒரு பக்கம், சீலே ஒரு பக்கம் என இந்த நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டு, சீலே நாடு இந்த உப்பு விளைவிக்கும் பகுதியைத் தான் பிடுங்கிக்கொண்டது. அதனால் பெரு உப்பு என்பது சீலே உப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இன்று இந்தப் பகுதி சீலே நாட்டின் ஒரு பகுதியாகவே உள்ளது.

***

1899-ல் சர் வில்லியம் க்ரூக்ஸ் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி, சீலே உப்பும் தீர்ந்துவிட்டால் என்ன ஆகும் என்ற கேள்வியை முன்வைத்தார். பெரு பறவை எச்சம் தீர்ந்துபோனதுபோல சீலே உப்பும் தீர்ந்துவிடலாம். அப்போது ஐரோப்பிய மக்கள் என்ன செய்வார்கள்? உணவு விளைச்சல் குறைந்து, பஞ்சம் ஏற்பட்டு, மக்கள் கொத்துக் கொத்தாக மடிவார்கள் என்று அவர் ஆரூடம் சொன்னார்.

ஜெர்மன் விஞ்ஞானிகளுக்கோ வேறு பயம் இருந்தது. நாளை ஜெர்மனிக்கும் பிரிட்டனுக்கும் போர் ஏற்பட்டால், சீலேயிலிருந்து ஜெர்மனிக்கு வரும் உரக் கப்பல்களை பிரிட்டன் வழிமறித்துவிட்டால் ஜெர்மனியால் வெடிமருந்தும் தயாரிக்க முடியாது; உணவும் தயாரிக்க முடியாது. ஜெர்மானியர்கள் போரில் தோற்றுவிடுவார்கள்.

இதன்விளைவாக ஃப்ரிட்ஸ் ஹேபர் என்ற ஜெர்மன் விஞ்ஞானி உருவாக்கியதுதான் ஹேபர் வழிமுறை. ஆஸ்ட்வால்ட் (Wilhelm Ostwald), நெர்ன்ஸ்ட் (Walther Nernst) ஆகிய முன்னோடிகள் முன்வைத்த வழிமுறையில் மிகப்பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்து, அதி அழுத்தக் கலனில், ஆஸ்மியம் என்ற செயலூக்கி உலோகத்தின் முன்னிலையில், நைட்ரஜனை உடைத்து ஹைட்ரஜனுடன் அதனைச் சேர்ப்பதன்மூலம் அம்மோனியாவை ஹேபர் உருவாக்கினார். N2 நைட்ரஜனை உடைக்க அதிக வெப்பநிலை தேவைப்பட்டது. ஆனால் அப்போது உருவாகும் அம்மோனியா NH3, அந்த அதிக வெப்பநிலையில் உடைந்துபோனது. ஆனால் அழுத்தத்தை அதிகரித்தால், குறைந்த வெப்பநிலையிலேயே நைட்ரஜனை உடைக்க முடியும் என்று ஹேபர் கண்டுபிடித்தார். கூடவே, ஆஸ்மியம் என்ற செயலூக்கியை வினை நடக்கும் இடத்தில் சேர்த்தால் வினை வேகமாக நடைபெறுகிறது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

இந்தச் செயல்முறையை ஹேபர், BASF என்ற ஜெர்மன் நிறுவனத்துக்கு விற்றார். அந்த நிறுவனத்தில் வேலை செய்த கார்ல் பாஷ், இந்த வழிமுறையை எடுத்துக்கொண்டு இதனை மிகப்பெரிய தொழிற்சாலை வழிமுறையாக மாற்றினார். ஆஸ்மியம் மிகக் குறைவாகக் கிடைக்கக்கூடிய ஒரு பொருள். எனவே பாஷின் மேற்பார்வையில் ஆல்வின் மிட்டாஷ் என்ற விஞ்ஞானி இரும்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தி அதனைச் செயலூக்கியாக அறிமுகப்படுத்தினார். பாஷ், ஜெர்மனியில் ஓப்பா என்ற நகரில் மாபெரும் தொழிற்சாலையைக் கட்டி, காற்றிலிருந்து நைட்ரஜனையும் மின்னாற்பகுப்பு முறையில் நீரை உடைத்து உருவாக்கிய ஹைட்ரஜனையும் கொண்டு அம்மோனியா திரவத்தை உருவாக்க ஆரம்பித்தார்.

NH3 என்ற இந்த அம்மோனியாவை யூரியா CO=(NH2)2 என்ற பௌடராக ஆக்கலாம். இதனை நீரில் கரைத்து மண்ணில் தெளித்தால் தாவரங்களுக்கு வேண்டிய ஃபிக்ஸட் நைட்ரஜன் கிடைக்கும். இதனால் தாவர வளர்ச்சி அதிகமாகும்.

இப்படித்தான் ஜெர்மனியில் முதல் செயற்கை உரத் தொழிற்சாலை உருவானது. இன்று உலகெங்கிலும் உள்ள மக்களுக்குச் சோறு போடுவதற்கு இந்த உரத் தொழிற்சாலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல கணிப்புகளின்படி, உலகத்தில் விளையும் தாவரங்களுக்குத் தேவையான மூன்றில் ஒரு பங்கு ஃபிக்ஸட் நைட்ரஜன் செயற்கை உரங்களாலேயே கிடைக்கிறது. அதாவது இந்தச் செயற்கை உரங்கள் இல்லாவிட்டால், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மரிக்கவேண்டியிருக்கும். வேறு கணிப்புகளின்படி, நம் ஒவ்வொருவர் உடம்பிலும் உள்ள நைட்ரஜனில் பாதி இம்மாதிரியான செயற்கை உரங்கள் வாயிலாக உருவானவை.

இன்று இயற்கை உரங்கள், ஆர்கானிக் உணவு உற்பத்தி ஆகியவை பற்றிப் பேசுகிறோம். ஆனால் இன்றைய மக்கள் தொகையைக் கணக்கில் எடுத்துப் பார்க்கும்போது, உலகில் உள்ள அனைவருக்கும் வேண்டிய உணவை இயற்கை உரங்களைக் கொண்டு உற்பத்தி செய்ய முடியாது. மக்கள் தொகையைக் குறைத்தாலன்றி இயற்கை உரங்களாலான உணவு உற்பத்தி அனைவருக்கும் சாத்தியமில்லை.

ஆனால் செயற்கை உரங்கள் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகின்றன. அதிக அளவு ஃபிக்ஸட் நைட்ரஜன் உரங்கள் மண்ணின் தன்மையை வெகுவாக பாதித்து, மேலும் மேலும் அந்த உரங்கள் இருந்தால்தான் விளைச்சலே நடக்கும் என்ற நிலையை உருவாக்கியுள்ளன. தொழிற்சாலைகளில் உருவாகும் அம்மோனியா காற்றில் பரவி அமில மழை போன்ற பிரச்னைகளை உருவாக்குகிறது.

***

தாமஸ் ஹாகரின் புத்தகம், இந்த வரலாற்றை மிக முழுமையாகப் பதிவு செய்கிறது. தென்னமெரிக்காவின் பெரு, சீலே, பொலிவியா நாடுகளில் நடந்த நிகழ்வுகள், போர், சீனக் கொத்தடிமைகள், சீலேயின் தொழிலாளர் போராட்டம், ஜெர்மனியில் ஹேபரின் வாழ்க்கை, முதல் உலகப்போரின்போது ஹேபர் பாஷ் அம்மோனியா ஜெர்மனியை எப்படிக் காப்பாற்றியது, கூடவே எப்படி உணவு மட்டுமின்றி வெடிமருந்தையும் தயார் செய்துகொடுத்தது, ஹேபர் என்ற யூதர் எப்படி குளோரின் ரசாயன குண்டை உருவாக்கி ஜெர்மனிக்குக் கொடுத்தார், அவர் எப்படி கிறிஸ்தவராக மதம் மாறி ஜெர்மன் அரசுக்கு ஆதரவாக நடந்துகொண்டாலும் பின்னர் ஹிட்லர் ஆட்சிக்கு வரும்போது எப்படி வேட்டையாடப்பட்டார், ஹேபருக்கும் ஐன்ஸ்டைனுக்குமான உறவு, பாஷின் வாழ்க்கை, பாஷ் பின்னர் இரண்டாம் உலகப்போரின்போது கரியிலிருந்து பெட்ரோலைப் பெருமளவு உருவாக்கி ஹிட்லருக்குக் கொடுத்தது (இது நடந்திருக்காவிட்டால் இரண்டாம் உலகப்போர் சீக்கிரமே முடிந்திருக்கும் - இறுதியில் இந்தத் தொழிற்சாலைகளை அழித்ததன்மூலமாகவே நேச நாடுகள் ஜெர்மனியை வீழ்த்தின), ஹேபர் பாஷ் தொழிற்சாலை ரகசியங்கள் எப்படி பிரான்சுக்குச் சென்று, பிரிட்டனுக்குக் கடத்தப்பட்டு, அமெரிக்காவால் விலைக்கு வாங்கப்பட்டு, அங்கிருந்து உலகின் பல பாகங்களுக்கும் சென்று நம் அனைவருக்கும் உணவு தருகிறது, ஆனால் அதே நேரம் இந்த உரங்களால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு என அனைத்தையும் இந்தப் புத்தகத்தில் படிக்கலாம்.

அறிவியல் நிரம்பிய புத்தகம் என்றாலும் ஓரிடத்தில்கூட தடங்காமல், ஒரு துப்பறியும் கதையின் வேகத்தில் இந்தப் புத்தகத்தை ஆக்கியிருக்கிறார்.

சமீப காலத்தில் நான் படித்ததிலேயே மிகச் சிறந்த புத்தகம் இது என்று தயங்காமல் சொல்வேன்.

The Alchemy of Air: A Jewish Genius, a Doomed Tycoon, and the Scientific Discovery That Fed the World but Fueled the Rise of Hitler
Hardcover: 336 pages
Publisher: Crown; 1 edition (September 9, 2008)
Language: English
ISBN-10: 0307351785
ISBN-13: 978-0307351784

நான் இதனை கிண்டில் எடிஷனில் வாங்கிப் படித்தேன். ரூ. 438 ஆனது. நல்ல நூலகம் உங்கள் அருகில் இருந்தால் அங்கேயும் தேடிப் பார்க்கலாம்.

Sunday, July 28, 2013

சாப்பாட்டுக் கணக்கு

ஒருநாள் சாப்பாட்டுக்கு எவ்வளவு செலவாகும் என்று நான் எழுதிய பதிவைக் கண்டு பலர் பொங்கிப் புறப்பட்டுவிட்டார்கள். அதில் பலர் முதல்முறையாக என் பதிவைப் படிப்பவர்கள் என்று நினைக்கிறேன். யாரோ ஃபேஸ்புக்கில் என் பதிவை இணைத்து, அதைப் படித்துவிட்டு இங்கு வந்து குமுறியிருப்பவர்கள் பலர். மொத்தத்தில் அவர்கள் குமுறல் எல்லாமே அறிவார்ந்ததாக எனக்குப் படவில்லை. வெறும் அவுட்ரேஜ் வகையறாக்கள்.

1) உணவகத்தில் ஒருவேளை சாப்பாடு என்ன விலை தெரியுமா - வகைக் கேள்விகளை முதலில் எடுத்துக்கொள்கிறேன்.

உணவகத்தில் ஒரு தோசை என்ன விலை விற்றால் எனக்கென்ன கவலை? வீட்டில் ஒரு தோசையைச் செய்ய என்ன செலவாகிறது என்பதைத்தான் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்கு இடுபொருள், எரிபொருள், மின்சார விலைகளை மட்டும்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். சரவணபவனில் என்ன விலை, அம்மா உணவகத்தில் என்ன விலை என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யக்கூடாது.

2) திட்டக்குழு ஏழைமைக்கோடு பற்றிச் சொன்னதற்கும் நான் சொல்வதற்கும் சில வித்தியாசங்கள் உள்ளன.

திட்டக்குழு, ஒருவர் ஒரு நாளைக்குச் செய்யும் மொத்தச் செலவு - உணவு, காஸ்மெடிக்ஸ், துணி, மருந்து என அனைத்தையும் சேர்த்துச் சொல்கிறது. நான் உணவுக்கு, அதுவும் எனக்கு இன்று ஆகும் செலவைக் குறிப்பிட்டேன். திட்டக்குழு மதிப்பீடு கொஞ்சம் குறைவானதே. ஆனால் மிக மிக குறைவானதல்ல என்பது என் கருத்து. பொங்கிப் புறப்படுவோருக்கு வீட்டுப் பொருள்களை வாங்குவதிலோ அல்லது வீட்டு வேலைகளைச் செய்வதிலோ எந்த அனுபவமும் இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது.

கடந்த இரு நாள்களில், வீட்டுக்குப் பொருள்கள் வாங்கி, குடும்பத்துக்குப் பொங்கிப் போடும் சில இல்லத்தரசிகளிடம் விசாரித்துப் பார்த்தேன். என்னுடைய எஸ்டிமேட் மிகச் சரி என்பதைக் கண்டுகொண்டேன். தாம் தூம் என்று செலவழிப்போரை விடுத்துப் பார்த்தால், நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு 3,500 ரூபாய்க்குமேல் செலவாவதே இல்லை. சில வீடுகளில் அதிகமாகப் பழம் வாங்குவார்கள் என்றால் 4,000 வரை போகிறது. (வெஜிட்டேரியன்கள் மட்டும்.) ஆக ஒரு நாளைக்கு ஒருவருக்கு அதிகபட்சம் 30 ரூபாய்தான். இல்லை என்றால் பதிலுக்கு எனக்குக் கணக்கு காண்பியுங்கள்.

3) காங்கிரஸ் - பாஜக சண்டை.

இதைப்பற்றி எனக்கு என்ன கவலை? நான் பாஜகவை ஆதரிக்கவில்லை. மோதி பிரதமர் ஆவதை ஆதரிக்கிறேன். பாஜகவினர் சொல்வதையெல்லாம் நான் ஆதரித்துப் பேசவேண்டியதில்லை. மோதி சொல்லும் எல்லாவற்றையும்கூட நான் ஆதரிக்கவேண்டியதில்லை. அதேபோல காங்கிரஸ் தோற்கவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக அந்த அரசு சொல்லும் எல்லாவற்றையும் மறுக்கவேண்டியது என் வேலை இல்லை.

திட்டக்குழு சொல்வதற்கு ஒரு தெளிவான பின்னணி இரூக்கிறது. தெண்டுல்கர் முறைமையைப் பின்பற்றியே அவர்கள் இந்த எண்ணிக்கையைத் தருவித்திருக்கிறார்கள். அந்த மெதடாலஜியைப் படித்துப் பார்த்தேன். சரியாகத்தான் தெரிகிறது.

4) உணவு இல்லை பிரச்னை. பிற செலவுகள்தாம் பிரச்னையே. அதிலும் முக்கியமாக கல்வி, பொதுச் சுகாதாரம், போக்குவரத்து ஆகியவற்றில் உள்ள செலவுகளைக் கட்டுப்படுத்தவேண்டும். அதில் பெரும்பாலான மாநில அரசுகள் தோல்விகண்டுள்ளன. தரும் சேவையும் தரமற்று உள்ளது. நகரங்களில் வீட்டுவசதிக்காகப் பெரும் செலவு ஆகிறது. அதைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளேன்.

நான் மேற்கொண்டு எழுத, விளக்க ஒன்றும் இல்லை. அவுட்ரேஜ் மட்டும் செய்ய விரும்புவோர் கொஞ்சம் உங்கள் அம்மா, மனைவி, சகோதரியிடம் உட்கார்ந்து கணக்கு போட்டுவிட்டு வந்து செய்யுங்கள்.

Wednesday, July 24, 2013

பெரு நகரைச் சுற்றித் துணை நகரங்கள்

உணவு பெரிய பிரச்னை இல்லை. பொதுச் சேவைகளைத் தருவதில் அரசு வெகுவாகப் பின்தங்கியுள்ளது என்றாலும் பிரச்னைகளைச் சமாளித்துவிட முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் பெருநகரங்களில் பெருகிவரும் மக்கள் தொகையைச் சமாளிக்க அரசிகள் திட்டம் எதுவும் தீட்டுவதாகத் தெரியவில்லை.

மிகப் பெரிய சிக்கலே வீட்டு வாடகை. இதில்தான் அரசு மிகப்பெரும் கவனத்தைச் செலுத்தவேண்டும். உதாரணமாகச் சென்னையை எடுத்துக்கொண்டால், அரசு கீழ்க்கண்ட காரியத்தைச் செய்யலாம்.

சென்னையைச் சுற்றிப் பல துணை நகரங்களை உருவாக்கவேண்டும். ஒவ்வொரு துணை நகரத்திலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பல சேர்த்து மொத்தமாக அதிகபட்சம் 10,000 வீடுகள் வரை மட்டுமே இருக்கலாம். அவற்றில் பாதி இடங்களைத் தனி நபர்களுக்கு விற்பனை செய்துவிட்டு, மீதி இடங்களில் குறைந்த விலை வீடுகளை அரசின் செலவில் கட்டவேண்டும். இதைக் கட்டித் தருவதும் தனியார்தான். இந்தக் கட்டுமானச் செலவு, நிலங்களைக் கையகப்படுத்தி அதிக விலைக்கு தனியார் டெவலப்பர்களிடம் விற்பனை செய்வதன்மூலம் அரசுக்குக் கிடைத்துவிடும். இந்த வீடுகளை அரசு, ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கு மாத வாடகைக்குத் தரும். இந்த வீடுகளுக்கு எல்லாவித வசதிகளும் ஆரம்பத்திலேயே இருக்கும். சாக்கடை, கழிவுநீர், குடிநீர் இணைப்புகள், மின் இணைப்பு, இணைய இணைப்பு, தொலைக்காட்சி இணைப்பு என அனைத்தையும் அந்தக் குடியிருப்புகளில் ஏற்படுத்திவிடலாம்.

600 சதுர அடி வீட்டுக்கு மாத வாடகை ரூ. 1,500 (2013-ல்)
800 சதுர அடி வீட்டுக்கு மாத வாடகை ரூ. 2,000
1,000 சதுர அடி வீட்டுக்கு மாத வாடகை ரூ. 2,500

இந்த வீடுகளில் மக்கள் தங்குவது மட்டுமே அனுமதிக்கப்படும். தொழில்கள் செய்யக்கூடாது. அலுவலகங்களை நடத்தக்கூடாது. இந்தப் பகுதிகள் அனைத்தும் மெட்ரோ ரயில்கள் மூலம் இணைக்கப்படவேண்டும்.

இப்படி 30 கிளை நகரங்கள் தொடங்கப்பட்டால், மொத்தம் 3 லட்சம் வீடுகளை சென்னையைச் சுற்றி உருவாக்கலாம். அவற்றில் எளிதாக 12-15 லட்சம் மக்களைக் குடியேற்றலாம். வேண்டுமென்றால் அடுத்த வட்டத்தில் மேலும் 40-50 கிளை நகரங்களை உருவாக்கலாம். ஒரு கிளை நகரத்தில் அதிகபட்சம் 10,000 வீடுகள். இப்படி வட்டமாக விரிந்துகொண்டே போகும் நகரங்களை உருவாக்கிக்கொண்டே போகலாம். அவை உருவாக்கப்படும்போதே வேண்டிய அனைத்து வசதிகளும் கொண்ட சிறு நகரமாக, அவற்றுக்கான உள்ளாட்சி அமைப்புடனேயே அவை உருவாக்கப்படவேண்டும்.

ஒவ்வொரு கிளை நகரத்திலும் நூலகம், பூங்காக்கள், மருத்துவமனை, இரண்டு, மூன்று பள்ளிக்கூடங்கள், நகராட்சி அலுவலகங்கள், கடைகளுக்கான இடங்கள், சினிமா தியேட்டர், விளையாட்டு அரங்குகள், பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவை இருக்கவேண்டும்.

இதேபோன்ற தேவைகள் கோவை, திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய நகரங்களைச் சுற்றியும் ஏற்படவேண்டும். ஆனால் அவை இவ்வாறு பெரிதாக இருக்கவேண்டியதில்லை. 5,000 வீடுகள் கொண்டவையாக இருந்தாலே போதும். மாத வாடகையையும் மேலே சொன்னதிலிருந்து குறைத்துக்கொள்ளலாம். இந்த வருமானம் நேரடியாக அந்தச் சிறு நகராட்சிக்குச் சென்றுவிடும். இதனால் கணிசமான வருமானம் முதல் நாளிலிருந்தே அந்த நகராட்சிக்குக் கிடைத்துவிடும்.

அனைத்து வசதிகளும் உள்ள இம்மாதிரி நகரங்களில் வசிப்பதை மக்களும் பிரச்னையாகக் கருத மாட்டார்கள்.

ஏழைமையைக் குறைக்க ஓர் அரசு என்னவெல்லாம் செய்யலாம்?

உணவுக்குப் பெரும் செலவு ஆவதில்லை என்றால், ஒரு குடும்பத்தில் பணமெல்லாம் எங்குதான் செலவாகிறது?
  • பெரும்பகுதிச் செலவு வாழ்விடத்தின்மீதுதான். நகரங்களில் ஒருவர் செய்யும் மிகப்பெரும் செலவு மாத வாடகை. அல்லது வீடு கட்டுவதற்கான கடன் அடைப்பு. வீட்டின் பிற வசதிகளான மின்சாரச் செலவு, தொலைக்காட்சி, இணையம், செல்ஃபோன் ஆகியவற்றுக்கான செலவு. இதுதான் உணவைவிடப் பல மடங்கு ஆகிறது.
  • அணிந்துகொள்ளத் துணி, செருப்பு, சோப்பு, ஷேவிங் கிரீம், முகப் பவுடர் இன்னபிறப் பொருள்கள்.
  • சரியான அடுப்பு வசதி இல்லாதபோது அதற்காகமட்டுமே மிக அதிகமாகச் செலவு செய்யவேண்டியிருக்கிறது. என் வீட்டில் இப்போது பெரும்பாலும் மின்சார இண்டக்‌ஷன் அடுப்பைத்தான் பயன்படுத்துகிறோம். இதன்காரணமாக கேஸ் அடுப்பை மிகக் குறைவாகவே பயன்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது. ஓராண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் கூடப் பயனாவதில்லை. விரைவில் கேஸ் சிலிண்டரே பயன்படுத்தாமல் இருக்க என்ன செய்யலாம் என்பது குறித்துச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். இண்டக்‌ஷன் ஸ்டவ், சூழலுக்கு உகந்ததாக உள்ளது. செலவும் குறைவு. இலவசமாக மக்களுக்கு ஏதேனும் தரவேண்டும் என்று ஓர் அரசு ஆசைப்பட்டால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் மின்சார இண்டக்‌ஷன் ஸ்ட்வ்களைத் தரலாம். இதனால் பல நன்மைகள். கேஸ் சிலிண்டருக்குத் தரும் மானியத்தை வெட்டிவிடலாம். கச்சா எண்ணெய்ப் பொருளை மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். (ஆனால் மாநிலத்தில் தரமான மின்சாரம் கிடைக்கவேண்டும்!)
  • குடிநீருக்கு ஆகும் செலவு.
  • உடல் நலத்துக்கு ஆகும் செலவு.
  • நகரங்களில் தினசரிப் போக்குவரத்துக்கு ஆகும் செலவு. கிராமங்களில் இருந்தால் அவ்வப்பொது நகரத்துக்கு வந்து செல்ல ஆகும் செலவு.
  • கல்விக்கு ஆகும் பெருஞ்செலவு.
  • கேளிக்கைக்கு ஆகும் செலவு. (விருந்து, சாராயம், சினிமா பார்த்தல் முதலான பலவற்றையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.)
  • மற்ற, எதிர்பாராத திடீர்ச் செலவுகள்.
ஏழைமையைக் குறைக்க ஓர் அரசு என்னவெல்லாம் செய்யலாம்?
  • தரமான பொதுப் போக்குவரத்து. மெட்ரோ, பேருந்துகள், ரயில்கள் போன்ற பலவற்றை அதிகமாக ஓடச் செய்வதன்மூலம் இந்தச் செலவை ஏழைகளுக்குப் பெருமளவு குறைக்க முடியும்.
  • தரமான கல்விச் சாலைகள் - இன்று தமிழகத்தில் 12-ம் வகுப்புவரை செலவே இல்லாமல் படிக்க முடியும் என்றாலும் உண்மை நிலை அதுவல்ல. அரசுப் பள்ளிகள்மீது நம்பிக்கை இழந்துள்ள மக்கள் எக்கச்சக்கமான பணத்தை தனியார் கல்வி நிறுவனங்கள்மீது செலவழிக்கிறார்கள்.
  • குறைந்த கட்டணத்தில் தரமான குடிநீர். இது இன்று பெரும்பாலான இடங்களில் கிடையாது. சென்னையில் என் வீட்டுக்கு மிக மிகக் குறைந்த கட்டணத்தில் அளவற்ற குடிநீர் கிடைக்கிறது. இந்த நீரைத்தான் நாங்கள் அனைத்துக்கும் பயன்படுத்துகிறோம். ஓராண்டுக்கு நான் அதிகபட்சம் 1,500 ரூபாய்க்குமேல் செலவிடுவது கிடையாது. அதாவது மாதம் 150 ரூபாய்கூடச் செலவில்லை. ஆனால் அதே நேரம் நகரின் பல பகுதிகளில் நீர் தரப்படுவதே இல்லை. மாநிலத்தில் பல பகுதிகளிலும் மக்கள் நிராதரவாக விடப்படுகிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வைத்தான் மிக அவசரமாகத் தீர்க்கவேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் நியாயமான விலையில் நீர் தரப்படவேண்டும். இது சாத்தியம் என்றே தெரிகிறது. குஜராத் மாநிலத்தில் இதற்கான ஒழுங்கான ஒரு வழிமுறை இருப்பதுபோலத் தெரிகிறது.
  • தரமான பொது மருத்துவமனைகள். கூடவே அரசு மானியம் பெற்றுக்கொண்டு நடத்தப்படும் தனியார் மருத்துவமனைகள். (எவ்வாறி அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளனவோ, அதுபோல அரசு நிதியுதவி பெறும் தனியார் மருத்துவமனைகளை நிறுவலாம். இதில் ரேட் கார்டை அரசு நிர்ணயிக்கும். சாதாரண கன்சல்டேஷனுக்கு இவ்வளவு, சிகிச்சைக்கு இவ்வளவு என்று. இவ்விடங்களில் நிறைய கீழ் நடுத்தர மக்கள் பயனடைவார்கள். ப்ளஸ் அரசின் காப்பீட்டில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை.
ஆனால் மிகப்பெரிய பிரச்னையே வீட்டு வசதிதான். முக்கியமாகப் பெருத்துக்கொண்டே வரும் பெரு நகரங்களில் இந்தப் பிரச்னை சமாளிக்க முடியாதபடிக்கு உள்ளது. அதுகுறித்து அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

ஒரு நாள் சாப்பாட்டுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?

என் சாப்பாட்டுத் தேவைகள் மிகக் குறைவானவை. ஆடியோடி வேலை செய்வதில்லை. உடம்பு பெருத்துவிட்டது. இளைக்காவிட்டால் வியாதிகள் பெருகும். வயது ஆகிறது.

காலையில் நான் பல்வேறு தானியங்களையும் பயறுகளையும் சேர்த்து அரைத்த மாவைக்கொண்டு கஞ்சி செய்து சாப்பிடுகிறேன். அதில் பால் சேர்த்துக்கொள்கிறேன். இனிப்புக்கு வெல்லம். அதற்கு ஆகும் செலவைக் கணக்கிட்டேன். நான் சாப்பிடும் இரண்டு டம்ளர் கஞ்சிக்கு (பால், வெல்லம் சேர்த்து) சுமார் 6 ரூபாய் ஆகிறது. கம்பு, கேழ்வரகு, சோளம், சம்பா கோதுமை, சிகப்பரிசி, பல்வேறு பருப்புகள் (நிலக்கடலை, கொள்ளு, பச்சைப் பயறு, பொட்டுக்கடலை), வேண்டுமென்றால் கொஞ்சமாக பாதாம், முந்திரி, வாசனைக்குக் கொஞ்சம் ஏலக்காய் என்று தடபுடலாகச் சேர்த்தாலுமே இதுதான் செலவு. இவற்றை நன்கு வறுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுவைத்து, வேண்டியபோது மில்லில் கொடுத்து நைஸாக அரைத்து வைத்துக்கொள்வோம். இன்று என் வீட்டில் நான், மனைவி, மகள் மூவரும் காலையுணவாக இதைத்தான் உட்கொள்கிறோம்.

மதிய உணவு, கோதுமைச் சப்பாத்தி அல்லது அரிசிச் சாதம். சப்பாத்தி செய்ய விலையுயர்ந்த பிராண்ட் கோதுமை மாவு + பல தானிய மாவு இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தினால், ஒரு சப்பாத்திக்கு ஆகும் செலவு 60-70 பைசா. அதிகபட்சமாக என்னால் ஐந்து சப்பாத்திக்குமேல் சாப்பிட முடியாது. ஆக மொத்தச் செலவு ரூ. 3.50. அரிசிச் சாதமாக இருந்தால் எவ்வளவு ஆகும்? மிக நல்ல பொன்னி பச்சரிசி/புழுங்கரிசி விலை கிலோ ரூ. 50 என்று எடுத்துக்கொண்டால், ஒரு வேளைக்கு எனக்குத் தேவை 125-150 கிராமுக்குமேல் கிடையாது. அதிகபட்சம் ரூ. 7.5 அரிசிச் சாதத்துக்கு.

இதற்குத் தொட்டுக்கொள்ள ஆகும் சைட் டிஷ் அல்லது சாம்பார்/ரசம்/கறி? சப்பாத்திக்கு சைட் டிஷ் என்றால் தலைக்கு 25 ரூபாய் தாண்டாது. குறைந்தபட்சம் ரூ. 5 (வெறும் பருப்பு மட்டும் என்றால்), அதிகபட்சம் ரூ. 25 (பன்னீர், கிழங்கு...). சாம்பார்/ரசம்/கறி என்றால் ரூ. 30 வரை ஆகலாம் என்று யூகிக்கிறேன். சில காய்கறிகள் அதிக விலை கொண்டவையாக இருக்கலாம். ஆனால் ஒரு மாதச் சராசரி என்றால் ஓர் ஆளுக்கு இதற்குமேல் போகாது என்றே நினைக்கிறேன்.

இரவு உணவு ஓட்ஸ் கஞ்சி. விலையுயர்ந்த ஓட்ஸ் வெரைட்டி கிலோ ரூ. 120. இதில் ஒரு நாள் கஞ்சிக்கு எவ்வளவு ஆகிறது என்று கணக்கிட்டுப் பார்த்தேன். ரூ. 5 மட்டுமே. ஓட்ஸ் கஞ்சியில் சேர்த்துக்கொள்ளும் உப்பு, மோருக்கும் சேர்த்து குத்துமதிப்பாக இவ்வளவுதான் ஆகிறது.

இவற்றை மட்டுமே உண்டால் சமச்சீர் போஷாக்கு கிடைக்காது என்று வைத்துக்கொள்வோம். எனவே ஒரு நாளைக்குக் குறைந்தது 250 மில்லி பால் உட்கொள்ளவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு ஒரு 10 ரூபாய். முட்டை விரும்பி உண்பவராக இருந்திருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் என்றால் அது அதிகபட்சம் ரூ. 8 (இரண்டுக்கும் சேர்த்து). கூட நாள் ஒன்றுக்கு பழங்களாக ரூ. 30, மசாலாப் பொருள்களுக்கு ரூ. 10, சமையலுக்கு ஆகும் கேஸ்/மின்சாரம் ரூ. 10 என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆக,
    காலையுணவு: ரூ. 6
    மதிய உணவு: ரூ. 20 - 40
    இரவு உணவு: ரூ. 5
    பால், முட்டை, பழம், சமையல் செலவு: ரூ. 70

ஒரு நாள் உணவுச் செலவு
    (குறைந்தபட்சமாக): ரூ. 50
    (அதிகபட்சமாக): ரூ. 120

இதிலிருந்து கட்டாயமாகக் கீழ்நோக்கிக் குறைக்கலாம். அரிசி, பருப்பு, கோதுமை, ஓட்ஸ் எனப் பலவற்றிலும் விலைகுறைந்த பிராண்டுகளும் உள்ளன. நான் உள்ளதிலேயே அதிகமான விலை உள்ள பிராண்டுகளை மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

என்னைவிட மிக அதிகமாக உடல் உழைப்பைச் செய்பவர்கள், வளரும் சிறு பிள்ளைகள், இளைஞர்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்குக் கட்டாயமாக அதிக உணவு தேவை. அது மேலே சொன்னதைப் போல அதிகபட்சம் இரண்டு மடங்கு இருக்கலாம் என்று யூகிப்போம். இவையெல்லாம் ஒரு பெரு நகரத்தில் அதிக விலைப் பொருளை அடிப்படையாக வைத்துச் சொல்லும் எண்கள்.

அரசு தரும் விலை மலிவான அரிசி, கோதுமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், ஒரு நாளைக்கு ரூ. 30-க்குள்ளேயே ஒருவருடைய உணவுத் தேவைகள் பூர்த்தி ஆகிவிடும் என்று சொல்லலாம். அதற்குமேலும் ஒருவர் செலவு செய்யலாம்; பணம் இருந்தால். ஆனால் இதற்குள்ளாகவே அடிப்படைப் பசியை எளிதில் போக்கிவிடலாம். போஷாக்கான உணவும் கிடைத்துவிடும்.

Monday, July 15, 2013

உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம்

மசோதாவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விவாதம் என்று வராமல் அவசரச் சட்டமாக குடியரசுத் தலைவரை வைத்து வெளியிட்டுள்ளது மன்மோகன் சிங் அரசு. இந்தச் சட்டத்தைக் கொண்டுவரவில்லை என்பதால்தான் அருணா ராய் கோபித்துக்கொண்டு தேசிய ஆலோசனைக் குழுவிலிருந்து விலகினார்.

இந்தச் சட்டம் என்ன செய்ய முனைகிறது?

* கிராமங்களில் 75% பேர், நகரங்களில் 50% பேர் வரை, ஆளுக்குக் குறிப்பிட்ட அளவு அரிசி கிலோ ரூ. 3, கோதுமை கிலோ ரூ. 2, கம்பு/கேழ்வரகு/சோளம் போன்றவை கிலோ ரூ. 1 என்ற கணக்கில் விற்கப்படும்.
* இதற்கான மானியத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்கும்.

இதன்மூலம் ஏழை மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு ஏற்படும்; அவர்கள் பட்டினி கிடக்க நேரிடாது என்பது உட்கருத்து.

சரி, இதற்கு எதற்குச் சட்டம் போடவேண்டும்?

தமிழ்நாட்டில் எந்தச் சட்டமும் இல்லாமல் கிட்டத்தட்ட 100% பேருக்கும் தானியங்கள் தரப்படுகின்றனவே? ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் அரிசி 20 கிலோ இலவசம், குறிப்பிட்ட அளவு அரிசி ரூ. 1, இன்னும் அதிகத் தரமான அரிசி கிலோ ரூ. 20 என்றெல்லாம் கிடைக்கிறதே? சத்தீஸ்கரிலும் இதேபோல ஒன்று நடைமுறையில் இருக்கிறதாம்.

ஆனால் மன்மோகன்/சோனியா அரசுக்கு எல்லாமே சட்டமாக்கப்படவேண்டும். அவை நிஜத்தில் நடக்கிறதா, இல்லையா, நடந்தால் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டிவரும் என்பதுபற்றியெல்லாம் கவலை இல்லை.

ஒவ்வொரு மாநிலமும் தனக்கான சட்டங்களைத் தாமேதான் உருவாக்கிக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு மாநிலத்தின் நிதிநிலையும் அதற்கு இடம் தரவேண்டும். ஆனால் அதுகுறித்தெல்லாம் மத்திய அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்தச் சட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே ஆளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு மானியம் தரவேண்டும். இதனை இந்த இரு அரசுகளாலும் தாங்கிக்கொள்ள முடியுமா? இதனால் நிதிப் பற்றாக்குறை இருவருக்குமே அதிகமாகுமே, அதனை எவ்வாறு எதிர்கொள்வது?

தமிழகத்தில் சாராயக் கடைகளைப் பராமரிப்பதன்மூலமே அரசு இதுபோன்ற திட்டங்களுக்கான நிதியைப் பெறுகிறது. இரவோடு இரவாக சாராயக் கடைகள் அனைத்தையும் மூடிவிட்டால் தமிழக அரசே இதுபோன்ற திட்டங்களை (இலவச அரிசி, இலவச லாப்டாப், அம்மா உணவகங்கள்...) நடத்துவதில் திண்டாட ஆரம்பித்துவிடும். எனவே பிற மாநிலங்களுக்கும் ஒரே வழி, அனைத்து மாநில அரசுகளும் சாராய வியாபாரத்தில் இறங்கவேண்டியதுதான்.

உணவுப் பாதுகாப்பு மசோதாவை உண்மையிலேயே செயலாக்கவேண்டும் என்றால் அதனால் எம்மாதிரியான செலவுகளும் அதன்காரணமாக எம்மாதிரியான அழிவுகளும் ஏற்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் விளக்கியுள்ளனர்.

* மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறை அதிகமாகும். Fiscal Responsibility and Budget Management Act, 2003 காற்றில் பறக்கவிடப்படும்.
* அரசு அதிகக் கடன்களைச் சந்தையிலிருந்து பெறவேண்டியிருக்கும்.
* இதனால் தனியாருக்குக் கிடைக்கக்கூடிய கடன் குறையும்; தனியார் கடன் வட்டி விகிதம் அதிகமாகும். (Crowding out.)
* இதனால் ஏற்கெனவே நலிந்துகொண்டிருக்கும் உற்பத்தித் துறை மேலும் நசியும்.
* இதனால் வேலைவாய்ப்புகள் கட்டாயமாகக் குறையும். ஏற்கெனவே தள்ளாடும் வளர்ச்சி விகிதம் மேலும் குறையும்.
* குறைந்த விலை தானியம் தரப்படுவது உரிமை என்றானால், அவை பயனாகிறதோ இல்லையோ அவற்றை வாங்கி, மறுவிற்பனை செய்யும் முறை அதிகமாகும். உதாரணமாக அவற்றை அரைத்துக் கோழிகளுக்கும் மாடுகளுக்கும் தீவனமாகத் தரலாம். இதனால் அரசின் மானியம் போய்ச்சேரவேண்டிய மக்களுக்குப் போகாமல் பயனற்றுப் போகும்.
* விவசாயிகளிடமிருந்து அதிக நெல்/கோதுமை/தானியங்கள் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்யப்படும். Minimum support price அதிகமாகாது. அப்போதுதான் அரசின் மானியத்தை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
* அரசுக்கே அதிக தானியங்கள் தேவைப்படுவதால், தனியார் கொள்முதலுக்குத் தானியங்கள் குறையும். தனியார் தொழில்கள் பாதிக்கப்படும்.
* ஏற்கெனவே தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் அடித்திருக்கும் சாவு மணிக்கு மேலாக இந்தச் சாவு மணியும் சேர்ந்து விவசாயத்தைப் பாடையில் ஏற்றிவிடும்.

கல்வி உரிமை, உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உரிமை என்று அடுத்தடுத்து காங்கிரஸ் அரசு கொடுத்திருக்கும் உரிமைகள் எவையும் உண்மையில் உரிமைகளே அல்ல, அவை வெறும் கண்துடைப்பு, ஊழல் பெருக வாய்ப்பு என்பதை மக்கள் உணரும்போது நாம் இவற்றுக்குப் பெரும் விலை கொடுத்திருப்போம்.

எதிர்க்கட்சியான பாஜக இதனை முழுமையாகப் புரிந்துகொண்டமாதிரி தெரியவில்லை. நாங்கள் உணவுப் பாதுகாப்பு மசோதாவை எதிர்க்கிறோம் என்று தைரியமாகச் சொல்லமாட்டேன் என்கிறார்கள். யஷ்வந்த் சின்ஹா, நரேந்திர மோதி ஆகியோர் எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளனர். அவ்வளவுதான். இந்தச் சட்டம் தேவையே இல்லை, மாநிலங்கள் தாமாகவே தத்தம் மாநிலங்களுக்குத் தேவையான உணவுப் பாதுகாப்பை செயல்முறையில் கொண்டுவருவார்கள் என்று மிக வலுவாகச் சொல்வதுதான் சரியானது.

இந்தச் சட்டத்தை எதிர்ப்போம்.

Saturday, July 06, 2013

இளவரசன் - திவ்யா - விடுதலைச் சிறுத்தைகள் - பாமக

நேற்றி இரவு தந்தி டிவியில் ‘ஆயுத எழுத்து’ விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், பாமக மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன்.

இளவரசன் மரணம் குறித்த சர்ச்சைதான் தலைப்பு என்றாலும் விவாதம் பெரிதும் பாமகவின் நிலைப்பாடு குறித்தே நிகழ்ந்தது. முக்கியமான சில விஷயங்களைப் பற்றி மட்டும் இந்தப் பதிவில் குறிப்பிடுகிறேன்.

வடிவேல் ராவணனின் முக்கியமான குற்றச்சாட்டு, வட மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தொடர்புகொண்ட பறையர் இளைஞர்கள் முக்கியமாக வன்னியர் பெண்களைக் குறிவைத்து அவர்களைக் காதல் நாடகம் என்ற வலைக்குள் வீழ்த்தி, அதைக் கொண்டு பணம் பறிக்க முற்படுகிறார்கள் என்பதே. இம்மாதிரியாக வட மாவட்டங்களில் ஒவ்வோர் ஊரிலும் பத்து பத்து வழக்குகளையாவது காணலாம் என்றார். இதுமாதிரியான நிகழ்வுகள் தென் மாவட்டங்களில் நடப்பதில்லை என்றார். தேவேந்திரகுல வெள்ளாளர்கள் எனப்படும் பள்ளர்கள் பல சாதிகளைச் சேர்ந்தவர்களையும் திருமணம் செய்துகொண்டு பிரச்னையில்லாமல் இருக்கிறார்களாம். ஆனால் வட மாவட்டத்தில் பறையர்கள்தான், அதுவும் குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தொடர்புள்ளவர்கள்தான் மேலே குறிப்பிட்ட பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்களாம்.

முதலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த, ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைச் சேர்ந்த என்றெல்லாம் குறிப்பிட்டார். நான் நேரடியாக, ‘நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள், விடுதலைச் சிறுத்தைகளையா?’ என்று கேட்டேன். அதற்கு, ‘விடுதலைச் சிறுத்தைகள்தான்’ என்று தெளிவாகச் சொன்னார்.

இதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் பாமகவுக்கு நல்ல கூட்டணியும், அதையும் தாண்டி இரு கட்சியின் தலைவர்களிடமும் நெருங்கிய உறவும் இருந்ததே, அப்போதெல்லாம் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கவில்லையா, கடந்த ஓரிரு வருடங்களில்தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றனவா என்று கேட்டேன். முன்னும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன, ஆனால் நல்லுறவு வேண்டுமே என்ற காரணத்தால் உறவைத் துண்டிக்காமல் இருந்தோம் என்றார்.

சரி, திவ்யா-இளவரசன் விவகாரம் இப்படிப்பட்டதுபோலத் தெரியவில்லையே, எந்த இடத்திலும் திவ்யா அவ்வாறு குற்றம் சாட்டவில்லையே என்றேன். இல்லை, இந்த திவ்யா-இளவரசன் உறவும் நாடகக் காதல்தான்; இங்கேயும் ஐந்து லட்ச ரூபாய் கேட்டார்கள்; இரண்டு லட்ச ரூபாய் கொடுக்கவும் பட்டது என்றார் வடிவேல் ராவணன்.

***

இவை மிகவும் காட்டமான குற்றச்சாட்டுகள். ஃபேஸ்புக் பக்கத்தில் வைக்கப்படும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளைத் தாண்டி நேரலைத் தொலைக்காட்சியிலேயே ஓர் அரசியல் கட்சியின் பொறுப்புமிக்க தலைவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். இவற்றில் எந்த உண்மையும் இல்லை என்றும் தம் கட்சி இதைப்போன்ற செயலில் ஒருபோதும் ஈடுபடவில்லை என்றும் சொல்லவேண்டியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அவசியமாகும்.

தனி நபர் செயல்பாடுகளை ஒரு சமுதாயத்தின்மீதும் ஒரு கட்சியின்மீதும் ஏற்றி, சதித்திட்டம் தீட்டப்பட்டே இம்மாதிரி செயல்களில் ஒரு குறிப்பிட்ட மக்கள் ஈடுபடுகின்றனர் என்று ஆதாரம் இன்றிச் சொல்வது அபாண்டமானது. உண்மையிலேயே இம்மாதிரியெல்லாம் நடந்திருந்தால் அவற்றைத் தொகுத்து ஒரு வெள்ளையறிக்கையை ஏன் உங்கள் கட்சி வெளியிடக்கூடாது என்று வடிவேல் ராவணனிடம் கேட்டேன். பாமக அவ்வாறு செய்யுமா என்று பார்ப்போம்.

இளவரசன் - திவ்யா என்ற இரு தனி நபர்களின் காதல், இவ்வளவு பெரிய கொடுஞ்செயலாக இரு சமூகத்தின்ரிடையே பகைமையைத் தூண்டும் அளவுக்கு மாறியிருப்பது மிகவும் பயம் தரக்கூடியதாக இருக்கிறது.

Thursday, July 04, 2013

ராஜராஜ சோழனின் கன்னடக் கல்வெட்டு

நேற்று தமிழ் ஆர்ட்ஸ் அகாடெமி சார்பில் முனைவர் நாகசாமியின் அடுக்ககத்தின் வண்டிகள் நிறுத்திமிடத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தியத் தொல்லியல் நிறுவனத்திலிருந்து இரு நாள்களுக்கு முன் ஓய்வுபெற்றிருந்த முனைவர் வெங்கடேசன், கர்நாடகப் பகுதியில் தான் கண்டுபிடித்த சோழக் கல்வெட்டு ஒன்றைக் குறித்துப் பேசினார்.

இந்தியத் தொல்லியல் துறையின் முனைவர் வெங்கடேசன்
கர்நாடகப் பகுதியின் வரலாற்றைக் குறிப்பிட்டு, அங்கு ஆட்சி செய்த வெவ்வேறு அரச வம்சங்களையும் அவர்களது கோயில் கட்டுமானங்களையும் படங்களாக வேகமாக காட்டிச் சென்றார். பிறகு முக்கியமான பகுதிக்கு வந்தார்.

ராஜராஜனது மெய்க்கீர்த்தியில் இவ்வாறு வரும்:
ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும்...
இவையெல்லாம் ராஜராஜன் வெற்றிகொண்ட நாடுகள். இவற்றில் கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி, குடமலை நாடு ஆகியவை இன்றைய கர்நாடக மாநிலத்தையும் ஒருபகுதி தமிழக மாநிலத்தையும் சேர்ந்தவை.

கங்கபாடி என்பது மைசூர், மாண்டியா, சாமராஜ நகர், ஹெக்கடதேவன கோட்டே போன்ற இடங்களை உள்ளடக்கியது. நுளம்பபாடி என்பது கோலார், பெங்களூரு, சேலம், தர்மபுரி போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. தடிகைபாடி என்பது கிருஷ்ணராஜபேட் போன்ற இடங்களைக் கொண்டது. குடமலைநாடு என்பது குடகு (கூர்க்).

கங்கபாடியை ஆண்ட கங்கர்களின் ஆளுமைக்கு உட்பட்டதுதான் பிற மூன்று இடங்களும். ஆனால் மற்ற மூன்றும் ஓரளவுக்குத் தன்னாட்சி பெற்று, கங்கர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டவர்கள் என்பதால் அனைத்து நாடுகளையும் மெய்க்கீர்த்தியில் தனியாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்த இடங்களைப் பிடிப்பதற்கான போர் பலமுறை, பல இடங்களில் நடந்தது. அதில் ஒரு குறிப்பிட்ட போர் கலியூரு என்ற இடத்தில் நடைபெற்றது. இந்தப் போரில் ராஜராஜனின் படைகளுக்குத் தலைமை தாங்கியவர் அப்ரமேயன் என்ற தளபதி.

கலியூரு என்பது காவிரியின் வலக்கரை. அதற்கு மறுபக்கம் கங்கர்களின் அப்போதைய தலைநகராகிய தலக்காடு. எனவே தங்கள் தலைநகரம் வீழ்ந்துவிடக்கூடாது என்பதால் கங்கர்கள் தரப்பில் மிகப்பெரும் படை இறங்கியிருந்தது.

இந்தப் போர் குறித்து விக்கிரம சோழன் உலாவில் ஒரு வரி வருகிறது. ‘தூதர் காப்புண்டு பகல் ஒன்றில் ஈரொன்பது சிரமும் கொண்டு மலைநாடு கொண்டோனும்’ (‘சிரமும் கொண்டு’ என்பதற்குபதில் ‘சுரமும் கொண்டு’ என்றும் படிக்கலாம்). அதாவது எதிர்த்துப் போரிட்ட பதினெட்டு (18) தலைவர்களைக் கழுத்தை அரிந்து வெற்றிகண்டு மலைநாட்டை (குடமலை நாட்டை) வெற்றிகண்டவன் என்பது பொருளில். ராஜராஜனின் ஒரு பட்டப் பெயர் ‘பாண்டியரைச் சுரம் இறக்கிய தேவர்’ என்பதைப் பொன்னியின் செல்வன் படித்துத் தெரிந்துகொண்டிருப்பீர்கள். சுரம் இறக்கிய அல்லது சுரம் கொண்ட அல்லது சிரம் கொண்ட என்றால் ‘கொன்ற’ என்ற பொருள் வரும்.

இணையத்தில் தேடியதில் கௌசல்யா ஹார்ட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பிலான விக்கிரம சோழன் உலாதான் கிடைத்தது. அதில் ‘தன் தூதனுக்காக ஒரு பகலில் பதினெட்டு காடுகளைத் தாண்டி மலைநாட்டைக் கொண்டவன்’ என்று பொருள் படுமாறு மொழிமாற்றம் செய்திருக்கிறார். (The emperor, the first Rajaraja Chola for the sake of his messenger, crossed eighteen forest one day and took over the Malainaadu.) ஆனால் வெங்கடேசனின் பொருள்தான் சரியானதாகத் தோன்றுகிறது. ஒரு பகலில் 18 எதிரிகளைக் கழுத்தை அரிந்து, மலைநாட்டைக் கைப்பற்றியவன்.

இது உண்மை என்றால் யார் இந்தப் பதினெட்டு பேர்?

வெங்கடேசன் கர்நாடகத்தில் காவிரிக் கரையில் கண்டுபிடித்த கல்வெட்டு ஒன்று இதனைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆண்டு பொது யுகம் 1004. (1004 CE).
ஸ்வஸ்தி

...

பராபவ சம்வத்சரவ சைத்ர மாசத வகுள பஞ்சமியும் ஆதித்யராகதந்து ஸ்வஸ்தி சமஸ்த ராஜ்ய நிரூபித மஹாமாத்யா பதவி விராஜமான அசகாயசிங்க தென்னகுலதிலக ஸ்வாமி நி ம்ருத்ய வத்சலம்.... ஹிதாசரண மேலே வகுளகாலே ஸ்ரீமது ராஜராஜதேவ பாதபங்கஜ பிரம்மராஜித குசமர குலமாணிக்ய கொத்தமங்கல நாதா ஸ்ரீமத் அப்ரமேயன ஜயஸ்தம்பம்...
இவ்வாறு ராஜராஜனின் படைத் தளபதியாகிய அப்ரமேயன் என்போன் வெட்டுவித்த கல்வெட்டு என்று தொடங்கி, அடுத்து தான் கொன்ற 18 வீரர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார்.
ஹொய்சலன நாகவர்ம, மலேபர மல்ல ஓயிகா, ஹொய்சலன பெல்ஹொப்பா, சோலக சஞ்சிகா, சின்னிவாரா, மாதல எரேகங்கா, மத்தச பரமன்னனும் ரண்டகண்டனும், முண்டா, ஜககாரிகா, வீருகா, நாகவர்மா, புத்தரா, மேயின்வரா, சந்திகா, ஹொன்னா, நன்னிகம்...
போர் எப்படி நடந்ததாம்?
அனஹொரி தொக்கி பந்தனீய நாயத்தொறக்கி வஞ்சிசே புங்கி தொல்பொணமாயித்து சிவாமயமாயித்து தாக்னிகணமாயித்து ருத்ரமயவாயித்து மருள்மயவாயித்து ராயசகோணாமயவாயித்து தொட்டநேர நொந்தேனி நிகழ்திப்ப அப்ரமேயன் அக்கரே இக்க சொச்சங்களே நொரே பண்ணதாத்மா...
உடல்களை வெட்டித் துண்டம் துண்டமாகப் போட்டதால் பிணங்கள் அழுகத்தொடங்கின. நரிகள் அவற்றைத் தின்னப் பரவின. அந்த இடம், பூதகணங்கள் ஆட்டம்போடும் இடமாயிற்று. வல்லூறுகள் வானில் வட்டமிடும் இடமாயிற்று. இருள் பரவியது. காக்கைகள் மிச்சங்களைத் தின்ன வந்தன.

***

இப்போது இந்த இடத்தில் ஒரு கிராமம் குடியேறியுள்ளது. அங்கு மண்ணைத் தோண்டினால் எலும்புகளாக வருகின்றனவாம். பொதுவாக அப்படிப்பட்ட இடத்தில் வீடு கட்டக்கூடாது என்கிறது வாஸ்து சாஸ்திரம். ஆனால் நிலம் விற்கும் விலையில்...

அந்த எலும்புகள் சிலவற்றைச் சேகரித்து அவற்றின் காலம் என்ன என்பதைக் கணிக்க வெங்கடேசன் அனுப்பினாராம். முதல் கணிப்புகளின்படி, எலும்புகள் படிமங்களாகிவிட்டன (fossilised) என்றும் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முந்தையவைதான் என்றும் மேலும் வேறு பரிசோதனைகளைச் செய்ய அவை அனுப்பப்பட்டுள்ளன என்றும் சொன்னார்.

(நான் செய்திருந்த ஒலிப்பதிவிலிருந்து கேட்டு எழுதியது. சில இடங்களில் கேட்டு எழுதிய கல்வெட்டு வார்த்தைகளில் கட்டாயம் தவறுகள் இருக்கும்.)

மாரிச்செல்வம்: தொடரும் சாதனை

இரண்டு ஆண்டுகளுக்குமுன், மாரிச்செல்வம் என்ற இளைஞனைப் பற்றி என் பதிவில் எழுதியிருந்தேன். உங்களில் சிலர் அந்தப் பதிவைப் படித்திருக்கலாம். படிக்காதவர்கள் இங்கே சென்று முதலில் படித்துவிடுங்கள்.

மாரிச்செல்வம் - அறிமுகம்
ஒரு நிஜ ஹீரோ (அல்லது) மாரிச்செல்வம் - துயரங்களுக்கு மத்தியில் ஒரு சாதனை

இதனை எழுதி இரண்டு வருடங்கள் முடிந்துவிட்ட காரணத்தால், இப்போது மாரிச்செல்வம் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று தெரிந்துகொள்ள அவனைத் தொடர்புகொண்டேன். இப்போது பன்னிரண்டாவது முடித்துவிட்டான்.

மாரிச்செல்வம்
நான் என் வலைப்பதிவிலும் தமிழ்பேப்பர் வழியாகவும் மாரிச்செல்வத்தைப் பற்றி எழுதியதைத் தொடர்ந்து, பலர் அவனுக்குப் பணம் அனுப்பினர். கிட்டத்தட்ட 1.5 லட்ச ரூபாய் அவனுடைய வங்கிக் கணக்குக்கு உங்களிடமிருந்தெல்லாம் வந்திருக்கிறது. வேறு ஒரு நகரில் உள்ள உயர்மட்டப் பள்ளி ஒன்று அவனைத் தொடர்புகொண்டு, செலவே இல்லாமல் அவனை மேற்கொண்டு படிக்கவைப்பதாகச் சொல்லியுள்ளது. ஆனால் அவன் தொடர்ந்து தான் படிக்கும் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியிலேயே, தமிழ் மீடியத்திலேயே, +2 படித்து முடித்தான். அவன் வாங்கிய மதிப்பெண்கள்

தமிழ் - 189, ஆங்கிலம் - 183, இயற்பியல் - 195, வேதியியல் - 197, உயிரியல் - 198, கணிதம் - 195.

மருத்துவப் படிப்புக்கான கூட்டுத் தொகை 196.5 என்று வந்திருக்கிறது. கவுன்செலிங்கில் பல அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது, ஆனால் சென்னைக் கல்லூரிகள் எதிலும் இடம் கிடைக்கவில்லை. எனவே கன்யாகுமரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்துள்ளான். இந்த மாதம் சென்று சேரவேண்டும்.

மருத்துவப் படிப்பு படித்து முடித்ததும் மேற்கொண்டு என்ன செய்ய விரும்புகிறாய் என்று கேட்டேன். இதய சிகிச்சை பற்றி மேலே படிக்க விரும்புவதாகச் சொன்னான்.

மருத்துவப் படிப்புக்கு நிறையச் செலவாகுமே, கன்யாகுமரியில் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கவேண்டியிருக்குமே என்றேன். மிகவும் அப்பாவியாக, இதுவரை அவனுடைய வங்கிக் கணக்கில் சேர்ந்துள்ள ரூ. 1.5 லட்சத்தைக் குறிப்பிட்டு, வேண்டிய அளவு பணம் இருப்பதாகச் சொன்னான்.

நீங்கள் நினைத்தால் அவனுடைய தேவைக்கான பணம் எளிதில் கிடைத்துவிடும். தமிழ் வழிக் கல்வியிலிருந்து தாண்டி மருத்துவக் கல்வி உலகுக்குள் நுழைய நிறையப் பிரயத்தனம் செய்யவேண்டியிருக்கும். இதுநாள்வரை இருந்த சிறு கிராமத்திலிருந்து நிறைய மாணவர்களுடன் சேர்ந்து வாழக் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கும்.

அதையெல்லாம் மாரிச்செல்வம் செய்துவிடுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மருத்துவர்கள், சமீபத்தில் மருத்துவம் படித்தவர்கள் விரும்பினால் மாரிச்செல்வத்துக்கு மருத்துவப் படிப்பு பற்றிச் சொல்லி உதவலாம். உங்களிடம் படித்துப் பயன்படுத்திய பழைய மருத்துவப் புத்தகங்கள் இருந்தால் கொடுத்து உதவலாம்.

(உங்களில் யாரேனும் மாரிச்செல்வத்தை தொலைப்பேசியில் அழைத்துப் பேச விரும்பினால், எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். மாரிச்செல்வத்தின் போன் நம்பரைத் தருகிறேன்.)

Tuesday, July 02, 2013

நரேந்திர மோதியின் சாதனைகள்

[நரேந்திர மோதி பற்றி இரண்டு புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன், அவற்றை முடித்துவிட்டு சரவணகார்த்திகேயனின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்போகிறேன். அதற்குமுன் ஒரு சின்ன போஸ்ட் இங்கே.]

‘மோதிக்கு என்ன தெரியும், அவர் குஜராத்தைத் தாண்டி வெளியே வந்ததே கிடையாது’ என்பது பலருடைய வாதம். அதற்குக் காரணம் பெரும்பாலானோர் மோதியை கடந்த பத்தாண்டுகளாக, குஜராத் வாயிலாக மட்டுமே கவனித்துவந்துள்ளனர். ஆனால் குஜராத்தில் பாஜகவின் செயலராக, பின்னர் பாஜக பொதுச் செயலராக மோதி பல செயல்பாடுகளைப் புரிந்துள்ளார். குஜராத்தில் கேஷுபாய் படேல் தலைமையில் முதன்முதலில் பாஜக ஆட்சி அமைத்ததற்குக் காரணமே மோதியின் பணியினால்தான். அப்போது அவர்தான் குஜராத்தில் பாஜகவின் தேர்தல் வேலைகளுக்குப் பொறுப்பான செயலராக இருந்தார். அதை விட்டுவிடுவோம். குஜராத்துக்கு வெளியே மோதி என்ன செய்துள்ளார் என்று பார்ப்போம்.

* மோதி பாஜக பொதுச் செயலராக வட மாநிலங்களின் பொறுப்பு வகுக்கும்போதுதான், பன்சி லாலின் ஹரியானா விகாஸ் கட்சியுடன் பாஜக தேர்தல் உடன்பாடு செய்துகொண்டது. அதன் பலனாக, 1996-ல், ஹரியானாவில் காங்கிரஸ் அமைச்சரவையை வீழ்த்தி ஹரியானா விகாஸ் கட்சி - பாஜக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. (ஆனால் பின்னர் கூட்டணி பிரிந்தது.)

* 1996-ல், மோதிதான் பாதல் தலைமையிலான அகாலி தளத்துடன் கூட்டணி ஏற்படுத்தி, சண்டிகர் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸைத் தோற்கடிக்கக் காரணமாக இருந்தார்.

* அதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டு 1997-ல் பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்தார்கள். இடையில் தோல்விகள் ஏற்பட்டாலும், இன்றும் அகாலி தளம் - பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது, பஞ்சாபின் ஆட்சியில் உள்ளது.

* இமாச்சலப் பிரதேசத்தில் மோதிதான், சாந்தா குமாருக்கு பதில் பிரேம் குமார் துமாலை முன்னிறுத்தி, காங்கிரஸ் ஆட்சியைத் தோற்கடித்து, மார்ச் 1998-ல் பாஜக அங்கு ஆட்சியைக் கைப்பற்ற வழி வகுத்துக் கொடுத்தார். (இப்போது ஆட்சியில் இருப்பது காங்கிரஸ்.)

* மத்தியப் பிரதேசம், கர்நாடகம் என்ற இரு மாநிலங்களும் கோவிந்தாசார்யாவின் பொறுப்பில் இருந்தன. அவர் வாஜ்பாயியை கேலி செய்யும் விதமாக (“வாஜ்பாய் வெறும் முகமூடி, அத்வானிதான் எல்லாம்”) பேசியதால், அவர் கழற்றிவிடப்பட்டு, அந்த இரு மாநிலங்களும் மோதியின்வசம் ஒப்படைக்கப்பட்டன. அப்போதுதான் கர்நாடகத்தில் ஏடியூரப்பா முன்னிறுத்தப்பட்டார். அவரும் கர்நாடகத்தில் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றினார். இப்போது ராஜ்நாத் - மோதி சேர்ந்துள்ள காரணத்தால் மீண்டும் ஏடியூரப்பா பாஜகவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது.

ஒருவிதத்தில் பார்த்தால் பாஜக ஏற்கெனவே வலுவாக இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தில்லி தவிர பிற மாநிலங்களில் பாஜகவுகு வலு கொடுத்து கூட்டணிகளை ஏற்படுத்தியதில் பெரும் பங்கு மோதியையே சாரும். (மகாராஷ்டிரக் கூட்டணியை ஏற்படுத்தி வழிநடத்தியவர் பிரமோத் மஹாஜன்.) அப்போதெல்லாம் கட்சியின் பின்புலமாக இருந்து பணியாற்றுபவருக்குப் பெரிய அளவில் பேரும் புகழும் இல்லாதிருந்த காலம். பாஜக என்றாலே அத்வானி, வாஜ்பாயி என்பதாகத்தானே பேச்சு இருந்தது?

மோதி இன்றளவும் இந்த மாநிலங்களில் தோழமைக் கட்சிகளுடனும் பாஜக தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். ஆனால் நிதிஷ் குமார் ஒருவரை மட்டும் முன்னிறுத்தி அவர் கூட்டணியிலிருந்து விலகிவிட்டார் என்ற காரணத்துக்காக மோதி ஒரு பிளவுவாதி என்று பத்திரிகைகள் பேசுவது அபத்தமாக உள்ளது.

Monday, July 01, 2013

அம்மா உணவகம்

பொதுவாக மானியங்கள் கொடுப்பதை ஊக்கப்படுத்தக்கூடாது என்பது என் பொருளாதாரக் கருத்து. மிகச் சில விதிவிலக்குகள் மட்டுமே இருக்கலாம். உதாரணம்: பசியைப் போக்கும் அனைத்தும். ஏனெனில் இன்று ஏழைமை மிகுந்த நம் நாட்டில் பசியால் வாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். புதிய பொருளாதாரக் கொள்கையால்தான் இது என்று இடதுசாரியினர் சொன்னாலும் நான் அதனை ஏற்கவில்லை. சில ஏற்றத்தாழ்வுகளை விரைவாகச் சரி செய்ய முடியாது. அந்தச் சரிசெய்யல் நடைபெறும்வரை சில இடங்களில் மானியங்கள் கொடுக்கலாம். ஆனால் அதுவே ‘உரிமை’ என்ற பெயரில் நிலை நாட்டப்பட்டு, உண்மையான உற்பத்தி இல்லாது அரசின் தானத்தை மட்டுமே நம்பியிருப்பதோடு மேலும் மேலும் கேட்க நினைக்கும் ஓர் எண்ணத்தைக் கொண்டுவரும். இது கட்டாயமாகத் தவிர்க்கப்படவேண்டியது.

அம்மா உணவகம் ஆரம்பித்து அது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால் அது unsustainable என்பதாகவே நான் கருதினேன். நல்லது என்றாலும் நடைமுறையில் அதனைச் செயல்படுத்துவது கடினம் என்பதனை விளக்கி ஆழம் இதழுக்கு ஒரு கட்டுரை வந்துள்ளது. அடுத்த மாதம் (ஆகஸ்ட் இதழில்) வெளியாகும்.

சரியாக நிதி ஒதுக்காமை; அடுத்தடுத்துப் பல இடங்களில் ஆரம்பித்தல்; ஒரு நகரத்தில் தன்னை முதலில் நிலைநிறுத்துவதற்குமுன் பல நகரங்களுக்கு விஸ்தரித்தல்; இதற்கெனத் தனியாக யாரையும் நியமிக்காமல் மாநகராட்சி அதிகாரிகளை இந்த வேலையையும் செய்யுமாறு சொல்லுதல்; இடம் பார்ப்பது முதல் தக்காளி வாங்குவதுவரை எதனை எப்படிச் செய்வது என்று தெரியாத அதிகாரிகளைக் கூலி வேலைக்காரர்கள்போல ஓட ஓட விரட்டுதல், எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடையிலும் ஓட்டைப்பானை போலப் பணம் செலவாதல்; இதற்கிடையே புதுப் புது மெனு ஐட்டம்களைச் சேர்த்தல். இப்படி எல்லாமே கோணல்.

ஓர் உணவகத்தை நடத்துவது என்பது எளிதல்ல என்பதை இந்தத் திட்டம் முற்றிலுமாக உடைந்து நொறுங்கியதும் அனைவரும் உணர்வார்கள். அப்போதுதான் ஓட்டல் நடத்தும் சிறு முதல் பெரு தொழில்முனைவோர்மீது மக்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.