(From: Grimm's Fairy Tales, abridged and retold by Badri)
பிரெடெரிக் என்பவனுக்கு கேதரைன் என்ற மனைவி இருந்தாள். அவர்கள் நெடுநாட்களாக மணவாழ்க்கை வாழ்ந்துவந்தனர். ஒரு நாள், பிரெடெரிக் கேதரைனிடம், தான் வயலுக்குச் சென்று வேலைசெய்துவிட்டு வரப்போவதாகவும் நல்ல இரவு உணவு தயார்செய்து வைக்குமாறும் சொல்லிவிட்டுச் சென்றான்.
கேதரைன் நல்ல ஆட்டுக்கால் ரோஸ்ட் செய்து, கூட ஒரு கூஜா மதுவையும் கொடுக்க நினைத்தாள். இறைச்சியை அடுப்பில் வைத்து வறுத்தாள். இன்னும் சிறிதுநேரத்தில் நன்கு சமைந்துவிடும் என்ற நிலையில் அதை அப்படியே அடுப்பில் வைத்துவிட்டு, மது வைத்திருக்கும் சுரங்க அறைக்குச் சென்று ஒரு கூஜாவில் மதுவை நிரப்ப ஆரம்பித்தாள். பீப்பாயிலிருந்து மதுவைப் பிடித்துக்கொண்டிருக்கும்போது திடீரென, வாசல் கதவைத் தாழிடாமல் வந்தது நினைவுக்கு வந்தது. ‘அய்யோ, நாய் வந்து சமையல் அறையில் இருக்கும் ஆட்டுக்கால் சதையை எடுத்துக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது' என்று போட்டது போட்டபடி, அலறியடித்துக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.
அங்கே நாய் ஏற்கெனவே மாமிசத்தை சுவைத்துக்கொண்டிருந்தது. கேதரைன் அதைத் துரத்த அது வேகமாக ஓடியது. அதனைத் துரத்திக்கொண்டு வந்தவள், அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாததால், மீண்டும் வீட்டுக்குத் திரும்பினாள். கீழே அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவளுக்கு அப்போதுதான் பீப்பாயிலிருந்து கூஜாவில் கொட்டிக்கொண்டிருக்கும் மது ஞாபகத்துக்கு வந்தது. குழாயை மூடவில்லையே என்று மீண்டும் மது வைத்திருக்கும் இடத்துக்கு ஓடினாள். அங்கே பீப்பாய் மதுவும் காலியாகி அறை முழுதும் கொட்டிக்கிடந்தது.
இப்போது என்ன செய்வது என்ற கவலையில் இருந்தவளுக்கு சந்தையில் வாங்கிவந்த மாவு மூட்டை ஞாபகத்துக்கு வந்தது. அந்த மூட்டையிலிருந்து மாவைக் கொண்டுவந்து கொட்டிக்கிடக்கும் மதுவில் போட்டால், அது மதுவை உறிஞ்சி, அறையைச் சுத்தம் செய்துவிடும் என்று நினைத்தாள். அவ்வாறு செய்யும்போது நடந்த களேபரத்தில், ஏற்கெனவே கூஜாவில் நிரம்பியிருந்த மதுவும் கைதவறிக் கீழே விழுந்து கொட்டியது.
மதியம் வீட்டுக்கு வந்த பிரெடெரிக் இரவு உணவு எப்படிச் செல்கிறது என்று கேட்டான். நடந்தது அனைத்தையும் கேதரைன் அவனுக்குச் சொன்னாள். ஆடிப்போன அவன், ‘ஏன் இப்படி அடுப்பில் ஒரு பொருளை வைத்துவிட்டு, கதவைச் சாத்தாமல் மதுவைப் பிடிக்கப் போனாய்' என்று அவளைத் திட்டினான். ‘நான் என்ன செய்வேன்? நல்லதாக நடக்கும் என்றுதானே நான் நினைத்தேன்? இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று நீ முன்னாலேயே என்னிடம் சொல்லியிருந்தால் நான் இப்படிச் செய்திருக்கமாட்டேன்' என்றாள்.
இந்த மாதிரி இவள் வீட்டைப் பார்த்துக்கொண்டால், அதோகதிதான் என்ற முடிவுக்கு வந்தான் பிரெடெரிக். வீட்டில் கொஞ்சம் தங்கக் கட்டிகளை வைத்திருந்தான். அவற்றை எப்படியாவது பாதுகாக்கவேண்டும் என்ற முடிவுடன், அதைக் கொண்டுபோய் தோட்டத்தில் புதைத்துவிட்டு வந்தான். வந்து மனைவியிடம், ‘கொஞ்சம் மஞ்சள் துண்டுகள் இருந்தன. அவற்றை தோட்டத்தில் புதைத்துவைத்துள்ளேன். அதன் பக்கம் போகவே போகாதே' என்றான். அவளும் தான் அதன் பக்கம் நெருங்கமாட்டேன் என்று உறுதி கூறினாள்.
அவன் மீண்டும் வயலுக்குச் சென்றபிறகு, இரண்டு ஆசாமிகள் பண்டபாத்திரம் விற்க வந்தார்கள். தட்டுகள், பாத்திரங்கள் என்று அவளுக்குப் பலவற்றையும் காட்டினார்கள். ‘என்னிடம் பணம் இல்லை, அதனால் இவற்றை வாங்கமுடியாது. தோட்டத்தில் வேண்டுமானால் கொஞ்சம் மஞ்சள் துண்டுகள் இருக்கின்றன. அவை உங்களுக்குப் பயன்படுமா என்று பாருங்கள்' என்றாள் அவள். அந்த இரண்டு ஆசாமிகளும் பெரும் போக்கிரிகள். அவர்கள் தோட்டத்துக்குச் சென்று தோண்டிப் பார்த்து, தங்கம் என்று கண்டுகொண்டார்கள். அவற்றை அப்படியே லவட்டிக்கொண்டு ஓடிவிட்டார்கள். கேதரைன் அவர்கள் விட்டுச் சென்ற பண்டபாத்திரங்களை வீடுமுழுதும் வைத்து அழகுபார்க்கத் தொடங்கினாள்.
இரவு வீட்டுக்கு வந்த பிரெடெரிக், விஷயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ந்துபோனான். ‘நான்தான் உன்னை மஞ்சள் துண்டுகள் பக்கம் போகவே கூடாது என்று சொன்னேனே?' என்றான். ‘நான் போகவே இல்லை. அவர்கள்தான் போய் எடுத்துக்கொண்டார்கள். நான் இங்கேயேதான் இருந்தேன்' என்றாள் அவள். தலையில் இடிவிழுந்ததைப் போல அவன் உட்கார்ந்துவிட்டான். கேதரைன் அவனிடம், நாம் ஏன் ஒடிச்சென்று அந்தத் திருடர்களைப் பிடிக்ககூடாது என்றாள்.
‘நல்ல யோசனையாக இருக்கிறது, வா, செல்வோம்' என்று இருவரும் ஓடத் தொடங்கினர். சாப்பாட்டுக்கு இருக்கட்டும் என்று பிரெட், சீஸ், வெண்ணெய் ஆகியவற்றை எடுத்துக்கொண்டாள் அவள். பிரெடெரிக் வேகமாக ஓடினான். கேதரைன் பின்தங்கினாள். வழியில் ஒரு குறுகிய பாதையில் இரு பக்கங்களிலும் உள்ள மரங்களில் வண்டிகளின் சக்கரம் உராய்வதால் வெட்டுப்பட்டிருப்பதை அவள் கவனித்தாள். ‘அய்யோ, பாவம் இந்த மரங்கள்' என்று சொல்லிவிட்டு மரங்களின் வெட்டுப்பகுதியில் வெண்ணெயைத் தடவினாள்.
தொடர்ந்து செல்லும்போது கையில் வைத்திருந்த பையிலிருந்து சீஸ் கட்டி ஒன்று கீழே விழுந்து உருண்டு ஓடியது. அது எங்கே சென்றிருக்கும் என்று அவளுக்குத் தெரியவில்லை. ஒரு சீஸ் கட்டி எங்கே சென்றிருக்கும் என்பது பிற சீஸ் கட்டிகளுக்குத் தெரியலாம் என்பதால் கையில் வைத்திருந்த எல்லா சீஸ் கட்டிகளையும் கீழே போட்டாள். எல்லாம் கொட்டிச் சிதறி காணாமல் போய்விட்டன.
மேலும் நடந்து, தன் கணவன் பிரெடெரிக் இருக்கும் இடத்தை வந்தடைந்தாள். அவன் சாப்பிடுவதற்குக் கேட்க, கையில் வைத்திருந்த வெறும் பிரெட்டை மட்டும் கொடுத்தாள். சீஸ், வெண்ணெய் எங்கே என்று அவன் கேட்க, அதற்கு அவள் சொன்ன பதில் அவனது கோபத்தை அதிகரித்தது. வெறும் பிரெட்டை இருவரும் கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்தனர்.
அவள் வாசல் கதவைப் பூட்டிவிட்டு வந்தாளா என்று பிரெடெரிக் கேட்டான். யோசித்துப் பார்த்த அவள் இல்லையென்று பதில் சொன்னாள். ‘போ, ஓடு! கதவைப் பூட்டிவிட்டு வா. இல்லாவிட்டால் திருடர்கள் திருடிக்கொண்டு போய்விடுவார்கள்' என்று அவளை அனுப்பினான்.
மீண்டும் வீட்டுக்கு வந்த அவள், ஏன் கதவைக் கணவன் பூட்டச்சொன்னான் என்று புரியாமல், கதவையே ஒட்டுமொத்தமாகப் பெயர்த்து எடுத்துக்கொண்டாள். கதவைத் தன்னுடனேயே வைத்திருந்தால், அது பத்திரமாக இருக்கும் என்று நினைத்தாள். கணவன் பிரெட் சாப்பிட விரும்பவில்லை என்று நினைத்துக்கொண்டு, கொஞ்சம் முந்திரி, பாதாம் போன்றவற்றை எடுத்துக்கொண்டாள். குடிக்க மது இல்லாததால், கொஞ்சம் வினீகரை எடுத்துக்கொண்டாள்.
பெயர்த்தெடுத்த கதவையும் பருப்புகளையும் வினீகரையும் எடுத்துக்கொண்டு வேகமாக வந்து கணவனை அடைந்தாள். அவன் அதிர்ந்துபோனான். ‘கதவை ஏன் பெயர்த்துக்கொண்டு வந்தாய்? இப்போது ஊரில் உள்ள அனைவருமே வீட்டுக்குள் செல்லமுடியுமே' என்றான். ‘நீ அப்படிச் செய்யக்கூடாது என்று சொல்லவில்லையே? அதனால்தான் அப்படிச் செய்தேன்' என்று கேதரைன் பதில் சொன்னாள்.
கதவு கனமாக இருந்ததால் அதைத் தூக்கிக்கொண்டு நடக்க கேதரைனால் முடியவில்லை. இனி பருப்புகளையும் வினீகரையும் தன்னால் தூக்கிக்கொண்டு செல்லமுடியாது என்றாள். அதற்கு பதில், அவற்றை கதவில் கட்டிவிடுவதாக அவள் சொன்னது அவனுக்கு ஏற்புடையதாக இருந்தது.
கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு மரத்தை அடைந்தனர். அப்போது அந்த இடத்தை நோக்கி அந்த இரண்டு போக்கிரித் திருடர்களும் வந்துகொண்டிருந்தனர். உடனே பிரெடெரிக்கும் கேதரைனும் மரத்தின்மீது ஏறிக்கொண்டனர்.
இரண்டு திருடர்களும் மரத்தடியில் வந்து உட்கார்ந்துகொண்டனர். தங்கள் கையில் இருந்த தங்கக் கட்டிகளைக் கீழே வைத்தனர். கேதரைனால் தன் கையில் வைத்திருந்த பளுவைத் தாங்கமுடியவில்லை. தான் கதவில் கட்டிவைத்திருக்கும் முந்திரிப் பருப்புதான் காரணமோ என்று நினைத்து அதனைக் கீழே போடப்போவதாக அவள் சொன்னாள். பிரெடெரிக் வேண்டாம் என்று தடுத்தான். திருடர்களுக்குத் தெரிந்தால் பிரச்னை என்றான். ஆனால் கேதரைன் தன்னால் தாங்கமுடியவில்லை என்று பருப்புகளைக் கீழே போட்டாள். சரசரவென்ற சத்தம் கேட்டு மழைவரப்போகிறது என்று திருடர்கள் நினைத்துக்கொண்டனர்.
சிறிது நேரம் கழித்து வினீகரையும் கீழே போட விரும்பினாள் கேதரைன். பிரெடெரிக் தடுத்தான். ஆனால் கேட்காமல் கேதரைன் வினீகர் குடுவையைக் கீழே போட்டாள். தெறிக்கும் வினீகரைப் பார்த்து மழைச்சாரல் என்று திருடர்கள் நினைத்தனர்.
கடைசியில் தன் தலையில் இருக்கும் பளுவுக்குக் காரணம், தான் கொண்டுவந்திருக்கும் கதவுதான் என்று கேதரைனுக்குப் புரிந்தது. அதைக் கீழே போட எத்தனித்தாள். பிரெடெரிக் தடுத்தான். ஆனால் கேதரைன் கதவைக் கீழே எறிய, அது திருடர்கள்மீது விழுந்ததும் அவர்கள் பயந்துபோய் அங்கிருந்து ஓடிவிட்டனர். தங்கக் கட்டிகளை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருந்தனர்.
கேதரைனும் பிரெடெரிக்கும் கீழே இறங்கி வந்தபோது தங்கக் கட்டிகள் அங்கேயே இருந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு பிரெடெரிக்கும் கேதரைனும் சந்தோஷமாக வீடு திரும்பினர்.