நாகையை ஒட்டிய கீழவெண்மணி படுகொலைகள் மீதான விவரணப்படம் ஒன்று வெளியாகப்போகிறது என்ற தகவல் ஜூன் முதற்கொண்டே சிறுபத்திரிகைகள் பலவற்றிலும் வெளியானது. குறுந்தட்டு வெளியீட்டு விழா பற்றிய விவரங்கள் மதுமிதாவின் பதிவில்: ஒன்று | இரண்டு
திண்ணை இணைய இதழில் டிஜிகே என்பவர் எழுதியுள்ள அறிமுகம்.
நேற்று இந்த விவரணப் படம் எனக்குக் கிடைத்தது. இதைப் பார்ப்பதற்குமுன் ஓரளவுக்கு எனக்கு இந்த விஷயம் பற்றித் தெரியும். சம்பவம் நடந்தபோது நான் பிறக்கவில்லை என்றாலும் என் தந்தையிடமிருந்து இதுகுறித்து பல கதைகளைக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அப்பொழுது கதை கேட்கும்போது இந்தச் சம்பவம் என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை. அதன்பின் இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் வழியாகத்தான் ஓரளவுக்குக் கோர்வையாக என்ன நடந்திருக்கும் என்று தெரிந்துகொண்டேன். குருதிப்புனல் ஒரு நாவல்தான். உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதிய அ-புதினம் அல்ல. ஆசிரியர் இல்லாத சில பாத்திரங்களை உருவாக்குகிறார். ஆனால் நிலக்கிழார், விவசாயக் கூலிகள், ரவுடிகள், வன்முறை ஆகிய சம்பவங்களைப் பொருத்தமட்டில் அதிகம் விலகுவதில்லை. இந்தச் சமபவம் மீதான கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் எழுதிய எதையும் நான் இதுவரையில் படித்ததில்லை. (அவை எனக்குக் கிடைத்ததில்லை)
அந்த வகையில் பாரதி கிருஷ்ணகுமாரின் ஆவணப்படம் மிகவும் முக்கியமானது. இந்த ஆவணப்படத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் பேசுகிறார்கள். நிலக்கிழார்களின் கூலிப்படையினர், காவல்துறை ஆகியோரால் தாக்கப்பட்டு, இன்னமும் உயிருடன் இருக்கும் கிராம மக்கள் பேசுகிறார்கள். நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் அப்பொழுதைய தலைவராக இருந்த கோபாலகிருஷ்ண நாயுடுவின் உறவினர் பேசுகிறார். அந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி பேசுகிறார். சம்பவத்துடன் தொடர்புகொண்ட உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் பேசுகிறார்கள்.
கீழவெண்மணியில் நடந்தது என்ன? உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் நடந்து வந்த நிலவுடைமைச் சமுதாயத்தின் கொடுமைதான் தஞ்சை மாவட்டத்திலும் கீழவெண்மணியிலும். ஒருசில நில உடைமைக்காரர்கள் கையில் ஆயிரக்கணக்கில் ஏக்கர்கள். ஏகப்பட்ட ஏழைகள் கையில் ஒரு துளி நிலம் கூடக் கிடையாது. ஏழைகள் நிலக்கிழார்களின் வயல்களில் கூலிக்கு வேலை செய்யவேண்டும். அப்படி வேலை செய்து சம்பாதித்தால்தான் சாப்பாடு.
வேலை என்றாலே கொடுமைதான். நேர வரைமுறை கிடையாது. வேலையை மேற்பார்வை செய்ய நிலக்கிழார், அவரது ரவுடி கும்பலுடன் இருப்பார். நிலக்கிழாரைப் பார்த்தாலே நடுங்கும் மக்கள். குறைந்த கூலி. ஏதேதோ 'குற்றங்களுக்காக' சவுக்கடி தண்டனை. பணம் அபராதம் என்று எத்தனையோ.
கம்யூனிஸ்டுகள் தஞ்சை மாவட்டம் வந்து விவசாயக் கூலிகளை ஒருங்கிணைத்து அவர்களின் உரிமைக்காகப் போராட ஆரம்பித்தனர். இது நிலக்கிழார்களை மிகவும் தொந்தரவு செய்தது. நிலக்கிழார்கள் தமக்கென ஒரு சங்கம் ஆரம்பித்தனர். (முதலில் 'உணவு உற்பத்தியாளர் சங்கம்', பின் 'நெல் உற்பத்தியாளர் சங்கம்' என்று பெயர்மாற்றம்.) டிசம்பர் 1968 சம்பவம் நடக்கும் நேரத்தில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் கோபாலகிருஷ்ண நாயுடு.
விவசாயக் கூலிகள் கம்யூனிஸ்ட் கட்சி சங்கத்தில் சேரக்கூடாது என்றும் அனைவரும் நெல் உற்பத்தியாளர் சங்கத்தில் சேரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.
நாயுடுவின் வயலில் வேலை செய்வதில் சில பிரச்னைகள் எழுந்தன. இதனால் நாயுடு வெளியூரிலிருந்து விவசாயக் கூலிகளை அழைத்து வந்து வேலை செய்ய நினைத்தார். அதனை உள்ளூர் கூலிகள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆதரவுடன் எதிர்த்தனர். இதற்கிடையில் நாயுடுவின் வீட்டுக்கருகே ஓர் இளம்பெண்ணின் சடலமும் கிடந்தது. இந்தக் கொலைக்கு நாயுடுதான் காரணம் என்று ஊர் கொதித்தது. அந்த மாதம் முழுவதுமே பிரச்னை வளர்ந்தவண்ணம் இருந்தது. நாகையில் கூட்டம் கூடிப் பேசிவிட்டு வெண்மணி திரும்பிக்கொண்டிருந்த விவசாயக் கூலிகளை சிக்கல் அருகில் கூலிப்படை ஒன்று தாக்கி ஒருவரைக் கொன்றது. வெண்மணி கிராமத்தின் நாட்டாமை, பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோரை நெல் உற்பத்தியாளர் சங்கத்தில் சேரச் சொல்லி ஒரு ரவுடி கும்பல் மிரட்டி அவர்களது டீக்கடையை அடித்து நொறுக்கியது.
அந்த நேரம் வெண்மணி மக்கள் திரண்டு தங்களைத் தாக்கிய ரவுடிகளில் ஒருவரை பிடித்து அடிக்கத் தொடங்க, மற்றவர்கள் ஓடிவிட்டனர். மாட்டிய ரவுடி (பக்கிரிசாமி, நாயுடுவின் ஆள்) அடிபட்டு இறந்துவிட்டார். இதனால் வெகுண்ட நாயுடு இன்னமும் நிறைய ரவுடிகளை அழைத்துக்கொண்டு வெண்மணி கிராமத்தைத் தாக்க வந்திருக்கிறார். கூட்டமாக வந்த பலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே வந்துள்ளனர். வெண்மணி கிராம மக்கள் தாங்கள் தாக்கப்படுவோம் என்று நினைத்து தங்களால் முடிந்த அளவு கம்புகள், கற்கள் என்று வைத்திருந்தாலும் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை எதிர்கொள்ளமுடியவில்லை. சிறிது சிறிதாக அவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பெயர, தாக்குதல் தொடர, வீடுகளுக்குத் தீவைப்பு நிகழ்ந்துள்ளது. சற்றே பெரிய குடிசைக்குள் நுழைந்து தங்களைக் காத்துக்கொள்ள முயற்சி செய்த 44 பேர்கள் எரிந்து கருகியுள்ளனர். அவர்கள் அனைவரும் எரிந்தது ராமைய்யா என்பவரின் குடிசையில்.
இரவில் அந்த இடத்தை விட்டு ஓடிச்சென்ற கிராம மக்கள் பலரும் அடுத்த நாள் காலையில் வந்துதான் எத்தனை பேர் எரிந்தனர், எந்த உறவினர் உயிருடன் இருக்கிறார், செத்துவிட்டார் என்று கண்டறிந்துள்ளனர். இறந்ததில் 5 பேர் ஆண்கள். மீதி அனைவரும் பெண்களும் குழந்தைகளும்.
கோரம் இத்துடன் நிற்கவில்லை. இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. காவல் தரப்பில் எரிந்து இறந்தவர்கள் 42 பேர் என்று முடிவாகி (ஆனால் இறந்தது 44 பேர் என்கிறார்கள் கிராம மக்கள்), அதற்கென ஒரு வழக்கு போடப்பட்டு அதில் 23 பேர் குற்றவாளிகளாக நிர்ணயிக்கப்படுகின்றனர். கோபாலகிருஷ்ண நாயுடு குற்றவாளி நம்பர் 1. அதேபோல ரவுடி பக்கிரிசாமி கொல்லப்பட்டதற்காக வெண்மணி கிராம மக்கள் (அதாவது செத்தது போக மீதமிருந்தவர்கள்) மீது ஒரு வழக்கு, அதிலும் குற்றவாளிகள் 23 பேர். இரண்டு வழக்குகளும் ஒருசேர நாகை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடக்கின்றன.
பக்கிரிசாமி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை; மீதி அனைவருக்கும் ஏதோ சில வருடங்களாவது தண்டனை. அதேபோல 42 (44) பேர் எரியுண்ட வழக்கில் நிலச்சுவான்தார்கள், ரவுடிகளுக்கு ஆளுக்கு சில வருடங்கள், ஆனால் யாருக்கும் ஆயுள் தண்டனையில்லை. மேல் முறையீடு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு.
உயர் நீதிமன்றம் பக்கிரிசாமி கொலை வழக்கின் தீர்ப்பை உறுதி செய்கிறது! ஆனால் 42 (44) பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியங்கள் சரியாக இல்லை என்று அத்தனை பேரையும் - 23 பேரையும் - விடுதலை செய்கிறது!
வழக்கு உச்ச நீதிமன்றம் செல்கிறது. பக்கிரிசாமி கொலைவழக்கின் தீர்ப்பு இந்தியாவின் உச்சபட்ச நீதிமன்றத்தில் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் உச்ச நீதிமன்றமும் கோபாலகிருஷ்ண நாயுடு முதல் பிற 22 பேர்கள் மீதும் குற்றம் ருசுவாகவில்லை என்று விடுதலை செய்கிறது!
இந்த ஆவணப்படத்தில் 42 (44) பேர் எரிந்த வழக்கில் குற்றவாளி 4-ஆக இருந்த ஒரு நிலக்கிழார், தான் எவ்வாறு அலிபி தயார் செய்தேன் என்று விளக்குகிறார். அதை செஷன்ஸ் நீதிமன்றம்முதல் உச்ச நீதிமன்றம்வரை ஏற்றுக்கொண்டுள்ளது.
-*-
இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்த நேரத்தில் - டிசம்பர் 1968 - 13 வயதான நந்தன் என்ற சிறுவன், 12 வருடங்கள் கழித்து - டிசம்பர் 1980-ல் - சில நண்பர்களைக் கூட்டு சேர்த்துக்கொண்டு கோபாலகிருஷ்ண நாயுடுவைக் கத்தியால் குத்திக் கொலை செய்கிறார். ஆக, நியாயம் சட்டத்துக்கு வெளியில்தான் கிடைத்திருக்கிறது. (நந்தன், பிறர் இதற்காக சிறைதண்டனை அனுபவித்து வெளியே வந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.)
-*-
அனைவரும் பார்க்கவேண்டிய ஆவணப்படம். விசிடி விலை ரூ. 250 என்று வைத்திருக்கிறார். இது அதிகமாகத் தோன்றுகிறது. இந்தப் படம் பரவலாகக் கவனிக்கப்படவேண்டும் என்றால் விலை ரூ. 50-75 என்ற அளவில் இருக்க வேண்டும்.
அடுத்து இந்தப் படம் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படப் போவதில்லை. ஏனெனில் இது கம்யூனிஸ்ட் இயக்கம் சார்ந்து எடுக்கப்பட்ட படம். நாரேஷனில் 'இயக்கம்', 'செங்கொடி', கம்யூனிஸ்ட் தலைவர்கள் பற்றி என்றெல்லாம் நிறைய வருவதால் தமிழக தொலைக்காட்சிகள் (சன், ராஜ், விஜய் etc.) இந்தப் படத்தின்மீது ஆர்வம் காட்டமாட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சிதான் இதனை கிராமம் கிராமமாக தங்களது இயக்கத்தை வலுப்படுத்தப் பயன்படுத்தலாம். ஆனால் இந்தப் படம் போய்ச்சேரவேண்டிய மத்தியதர மக்களுக்கு இது போய்ச்சேராது.
எனவே சில மாறுதல்களுடன் கட்சி சார்பற்றதாக மாற்றினால், இன்னமும் கொஞ்சம் sophistication-ஐ அதிகரித்தால், ஆங்கிலத்தில், ஹிந்தியில், பிற இந்திய மொழிகளில் டப்பிங் செய்தால் இந்திய அளவில் சில தொலைக்காட்சிகளில் காண்பிக்க முடியும். அதேபோல உலக அளவில் காண்பிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்றே தோன்றுகிறது. தொழில்நுட்ப ரீதியில் சுமார்தான்.
இதுபோன்ற ஒரு விஷயத்தில் ஏன் தொழில்நுட்பம், எடிடிங் ஆகியவற்றைப் பற்றிப் பேசவேண்டியுள்ளது என்றால் இன்று இந்தச் சம்பவத்தைப் பலரிடமும் கொண்டுசேர்க்க அதெல்லாம் தேவையாக உள்ளது. ஏற்கெனவே பாரதி கிருஷ்ணகுமார் எடுத்துள்ள footage-ஐக் கொண்டே இன்னமும் சிறப்பான ஆவணப்படத்தைத் தயாரிக்க முடியும்.
கவளம்
8 hours ago