Wednesday, March 31, 2010

தமிழ் பாரம்பரியம்: கடலோரத்தில் புதையுண்டிருக்கும் நகரங்கள் - பாலசுப்ரமணியன் B+

டிசம்பர் 2009-ல் தமிழ் பாரம்பரியம் குழுமம் நிகழ்வில் கலந்துகொண்டு பாலசுப்ரமணியன் B+ பேசியதன் வீடியோ. இது சொற்பொழிவாக இல்லாமல் ஓர் உரையாடலாக இருந்தது. உடன் உரையாடுபவர் நிர்மலா ஸ்ரீதர்.


Watch Balasubramanian B+ on Submerged Ancient Cities in the Coast of Tamil Nadu in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

தமிழ் பாரம்பரியம்: கே.பி.ஜீனன் - கலை, கல்வி, கற்றல்

மார்ச் மாதம் (6 மார்ச் 2010) அன்று தமிழ் பாரம்பரியம் நிகழ்வில், கே.பி.ஜீனன் கலந்துகொண்டு பேசினார். பொறியியல் கல்வி பயின்ற ஜீனன், பின்னர் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைனில் கல்வி பெற்றபின், நகர நாகரிகத்தை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு, கேரளாவில் அரவக்கோடு என்ற இடத்தின் அருகே ஒரு கிராமத்தில் வசித்துவருகிறார்.

அங்கே குழந்தைகள் எப்படி கலையை எளிதாக உள்வாங்குகிறார்கள், அற்புதமாகப் படைக்கிறார்கள், எப்படி ‘படிப்பறிவில்லாத’ கிராம மக்கள் கலையைப் படைக்கிறார்கள் ஆகியவற்றை அருகே இருந்து படம் பிடித்து ஆவணப்படுத்தியுள்ளார். கலை, கல்வி ஆகியவை தொடர்பான தன் கருத்துகளை அவர் முன்வைத்தார். அதனை கீழே காணலாம்.


Watch KB Jeenan on Art, Learning and Education (1/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch KB Jeenan on Art, Learning and Education (2/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

Tuesday, March 30, 2010

மாமல்லை ‘அர்ச்சுனன் தபசு’ பற்றி முனைவர் பாலுசாமி


தமிழ் பாரம்பரியம் வழங்கும் நிகழ்ச்சி
முனைவர் எஸ்.பாலுசாமி
மாமல்லை ‘அருச்சுனன் தபசு’ சிற்பத் தொகுதி
நாள்: 3 ஏப்ரல் 2010
நேரம்: மாலை 5.30 மணி
இடம்: வினோபா ஹால், தக்கர் பாபா வித்யாலயா, தி.நகர்

வெளிப்புறப் புடைப்புச் சிற்பம் என்பது பல்லவர் காலத்துக்கு முன்னும் இருந்ததில்லை, பின்னும் இருக்கவில்லை. மாமல்லையில் காணப்படும் புடைப்புச் சிற்பங்களிலேயே மிக முக்கியமானது ‘பெருந்தவச் சிற்பத் தொகுதி’ என்பது.

சில அறிஞர்கள் இது அர்ஜுனன் தவம் செய்யும் காட்சி என்கிறார்கள். தவம் செய்பவர் அர்ஜுனன் என்பதும், அவர் சிவனை நோக்கி தவம் செய்து பாசுபத அஸ்திரத்தைப் பெறும் விருப்பத்தில் உள்ளார் என்பதும் இவர்கள் கருத்து. வேறு சிலர் இது பகீரதன் தவத்தைக் குறிக்கிறது என்கிறார்கள். தன் தந்தையும் பாட்டனும் சாதிக்கமுடியாததை பகீரதன் சாதிக்கிறான். கங்கையிடம் தவம் இருந்து அவளை பூமிக்கு வரச் சம்மதிக்க வைக்கிறான். அவளது வேகத்தைத் தாங்கக்கூடிய திறன் சிவனுக்கு மட்டுமே உண்டு. எனவே சிவனிடம் தவம் இருந்து அவரையும் சம்மதிக்கவைக்கிறான்.

இந்த இரு கதைகளில் எந்தக் கதையை மாமல்லை காண்பிக்கிறது? சில அறிஞர்கள் இது சிலேடை என்றும் ஒரே சிற்பத் தொகுதியில் இரண்டு கதைகளையும் குறிப்பிடுகிறது என்றும் சொல்கிறார்கள்.

முனைவர் பாலுசாமி முற்றிலும் புதிய கருத்தை முன்வைக்கிறார். பெருந்தவச் சிற்பத் தொகுதியில் தவத்துக்கு மேலும் பல விஷயங்கள் உள்ளன என்பது அவர் கருத்து. இங்கு தவம் செய்பவர் பாசுபதம் வேண்டி நிற்கும் அர்ஜுனன்தான் என்பதை ஏற்கும் பாலுசாமி, மாமல்லையின் சிற்பிகள் அதையும் தாண்டி சிந்தித்துள்ளனர் என்கிறார்.

இதனை விளக்கும் செயல்பாட்டில் பாலுசாமி அந்தச் சிற்பத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு தனிச் சிற்பத்தையும் கவனமாகப் பட்டியல் இடுகிறார். ஒவ்வொரு விலங்கு, ஒவ்வொரு பறவை, ஒவ்வொரு கடவுளர், ஒவ்வொரு மனிதர் என்று யாரையும் விடவில்லை. இங்கே காண்பிக்கப்படும் விலங்குகள் எல்லாம் இஷ்டத்துக்கு செதுக்கப்பட்டவை அல்ல, மிகக் குறிப்பாக, கவனமாகசத் தேர்ந்தெடுத்துச் செதுக்கப்பட்டவை என்பது அவரது வாதம்.

ஏன் இந்தத் தொகுதியில் ‘பொய்த்தவப் பூனை’ செதுக்கப்பட்டுள்ளது? வெறும் நகைச்சுவைக்காக மட்டும்தானா? இதற்கும் பாலுசாமியிடம் பதில் உள்ளது.

பாலுசாமியின் ஆழ்ந்த ஆராய்ச்சியின் பயனாக விளைந்துள்ள இந்த விளக்கம் சாதாரண மனிதர்களும் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது. இது சமீபத்தில் காலச்சுவடு வாயிலாக தமிழில் புத்தகமாக வெளிவந்துள்ளது.

Monday, March 29, 2010

அறுபத்து மூவர் 2010

சுமார் 4 மணிக்கு ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டிலிருந்து நடையாகவே கிளம்பினோம். அப்படியே சி.பி.ராமசாமி தெரு வழியாக சாய்பாபா கோயில் வழியாக நடந்து மாடவீதி. இம்முறை அப்ரதட்சிணமாகச் சுற்றலாம் என்று முடிவு செய்தோம். நேரம் அதிகமாக அதிகமாக தெற்கு மாடவீதிக்குள் அறுபத்து மூவர் விக்கிரகங்கள் வந்துவிட்டால், அங்கே தெருவில் நிற்கவே முடியாது. எனவே தெற்கு மாடவீதியில் நுழைந்து, அப்படியே கிழக்கு, வடக்கு என்று சுற்றி, மீண்டும் அலுவலகம் நோக்கி நடந்து சென்றுவிடுவது.

நடுத்தெருவில் சூடம் ஏற்றி வழிபட்டுக்கொண்டிருந்தனர் பலர். கொஞ்சம் அபாயமான விஷயம்தான் இது. சரியாகக் கவனிக்காதவர்கள் உடையில் நெருப்பு பற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது.


ஒவ்வொரு முனையிலும் காவல்துறை கண்காணிப்பு ‘கோபுரம்’ மாதிரி ஒரு தாற்காலிக மேடை அமைத்து வீடியோ கேமரா கண்காணிப்பும் உள்ளது. ‘இவர்கள் பிக்பாக்கெட் திருடர்கள்’ என்று ஒரு பட்டியல் அங்கே காணப்பட்டது. அதில் பல முகங்கள். பெண்களுக்கான 33% அளவுக்கு அதிலும் இட ஒதுக்கீடு இருந்தது! அதைப் பார்த்தபின் சுற்றி யாரைப் பார்த்தாலும் பிக்பாக்கெட் போலவே தோன்றியது.


தெற்கு மாடவீதியில் ஒரு கட்டடத்தில் வித்தியாசமான அலங்காரங்கள் இருந்தன. வெள்ளைக்கார சிப்பாய்கள் போல பல கட் அவுட்கள் வாசலில் தூணுக்குத் தூண் தென்பட்டன. இதன் தாத்பர்யம் என்ன என்று புரியவில்லை.


கொஞ்சம் தள்ளி, ஒரு காய்கறிக் கடைக்காரர் பிளாஸ்டிக் பாக்கெட்டில் தக்காளி, வெங்காயம் ஆகியவற்றைக் கட்டி தூக்கி எறிந்துகொண்டிருந்தார். ஆள் ஆளுக்குப் பிரசாதம் வழங்குவதைப் போல இவர் காய்கறிப் பிரசாதம்! பின் திடீரென மாங்காய்கள் பறக்க ஆரம்பித்தன.


கொஞ்சம் தள்ளி சுடச்சுட சர்க்கரைப் பொங்கல். பல இடங்களிலும் சர்க்கரைப் பொங்கல் கிடைத்தது. அதற்குள் பல விக்கிரகங்கள் உலா வரத் தொடங்கியிருந்தன.


தெற்கு மாடவீதியில் கூட்டம் அதிகமாக, குளத்தை ஒட்டிய தெருவில் நுழைந்து மாமி மெஸ் வழியாக வந்தால், அங்கு நல்ல எலுமிச்சை சர்பத். பிறகு மீண்டும் சர்க்கரைப் பொங்கல்! அப்படியே கிழக்கு மாடவீதிக்குள் நுழைந்தால் மீண்டும் கூட்டம் அப்பியது. அங்கே சேஷாத்ரி ஸ்வாமிகள் என்று கொட்டகை போட்டு ‘தனலட்சுமியை அப்படியே வாரி எடுத்துக்கொண்டு போங்கள்’ என்று மைக்கில் பேசிக்கொண்டிருந்தார் ஒரு மாமி. வாங்கிச் சென்றால், ‘அறுபதே நாட்களில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்’ என்று தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தார்.


வந்த வழியே திரும்பி, கோயில் வாசலுக்குச் சென்றோம். அங்கிருந்து சந்நிதித் தெரு வழியாக தேர் வரை கூட்டமே இல்லாமல் போகமுடிந்தது.


தேர் அருகில் ஒரு வீட்டில் போளி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் கூட்டம் அம்மியது. தேரை ஒட்டிப் பின்னால் திரும்பினால் குடை ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தது.


சற்று தள்ளி மூன்று பேர் தாரை, தப்பு வைத்துக்கொண்டு அடித்துப் பின்னிக்கொண்டிருந்தார்கள். நான் படம் எடுக்க ஆரம்பித்ததும் சூடு அதிகமாகியது. என்ன ஒரு ஒருங்கிணைப்பில் ‘தாளம்’ மாறுகிறது என்று பாருங்கள்.


எதிரே என் ஃபேவரிட்டான அம்மன் முகம் வந்தது.


அதைத் தாண்டியதும் திருவள்ளுவர், வாசுகியுடன் பவனி வரத் தொடங்கினார். இதற்குமுன், இப்படி தாடி வைத்து விக்கிரகமாக வழிபடப்படும் திருவள்ளுவரை நான் தரிசித்ததில்லை. ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்று சொல்லியா இவரை தினம் தினம் அர்ச்சிப்பார்கள்?


கூட்டம் கட்டுக்கடங்காமல் போகும் நிலையில் அழகாக எஸ்கேப் ஆகி, அலுவலகத்தை மீண்டும் வந்தடைந்தோம். இரண்டு முழு மணி நேரங்கள். கால் வலி. நிறையப் பிரசாதம்.மற்றுமொரு 63-வர் நிறைவுற்றது.

2007 | 2005

Saturday, March 27, 2010

சென்னை மயிலாப்பூர் அறுபத்து மூவர்

இன்று மயிலையில் அறுபத்து மூவர் திருவிழா. காலையில் திரும்பிய திசை எல்லாம் ஷாமியானா கட்டி, ஸ்பீக்கர் வைத்து ‘நமசிவாயம் நமசிவாயம் ஓம் நமசிவாயம்’ பாட்டு. தெரு ஓரத்தில் ஆட்டோ ஸ்டாண்ட்கள் எல்லாவற்றிலும் தண்ணீர் பந்தல். வித விதமான மெனு. ஓரிடத்தில் பிரிஞ்சி என்றால் இன்னோர் இடத்தில் சாம்பார் சாதம்.

நீங்கள் சென்னையில் இருக்கிறீர்களா? இன்று மதியம் வேலை வெட்டி இல்லையா? அப்படியே ஜாலியாகக் கிளம்புங்கள். முதுகுப் பை ஒன்று இருப்பது உத்தமம். வண்டியில் வந்தால் வண்டியை நாகேஸ்வரராவ் பூங்கா பக்கத்தில் எங்காவது நிறுத்திவிட்டு, பொடி நடையாக லஸ் சந்திக்கு வாருங்கள். அங்கிருந்து கபாலீஸ்வரர் கோயிலுக்கு சுற்றிப் பிரதட்சிணமாகப் போங்கள். வழியில், வெட்கம் பாராமல் வரிசையாகக் கிடைக்கும் பிரசாதங்களை உண்டு மகிழுங்கள். கையோடு பேப்பர் நாப்கின் கைத்துடைக்க எடுத்துச் செல்லுங்கள், அல்லது நல்ல பெரிய கைக்குட்டைகள் சில.

இன்று மாலை நானும் அங்குதான் இருப்பேன்.

2007 விழா பற்றி நான் எழுதியது
2005 விழா பற்றி நான் எழுதியது

Wednesday, March 24, 2010

உடைக்கப்படும் கோயில்

இன்று காலை நான் அலுவலகம் வரும்போதுகூட அங்குதான் கோயில் இருந்தது. கோபாலபுரம், லாயிட்ஸ் ரோட் அல்லது அவ்வை சண்முகம் சாலை. அங்கே பெயர் எழுதப்படாத, செங்கற்களைக் கொண்டு எழுப்பிய ஒரு அம்மன் கோயில். ஆடி மாதம் சென்னையின் எல்லா இடங்களையும் போல இங்கும் கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள், திருவிழா நடக்கும், ஜீரோ வாட் பல்புகள் சரம் சரமாகப் போட்டு அம்மன் படம் மின்னும்.

சென்னையின் பல பகுதிகளையும்போன்று இங்கும் ஒரு பக்கம் பணக்காரர்களின் பகட்டான வீடுகள், அந்த வீடுகளுக்குத் தேவையான கல்யாண மண்டபங்கள், குளிரூட்டப்பட்ட கடைகள், இப்போது அருகே ஒரு பழமுதிர் நிலையம் காய்கறிக் கடையும் வந்துவிட்டது. அதற்கு எதிர்ச்சாரியிலேயே சிறு ‘சேரி’ - சுமார் 3000-5000 சதுர அடி இடத்துக்குள்ளாக சுமார் 70-80 குடும்பங்களாவது இருக்கும் என்று கணிக்கிறேன். நான் உள்ளே சென்றுகூடப் பார்த்தது கிடையாது. பெரும்பாலான மக்கள் தெருவில்தான் படுத்துத் தூங்குவார்கள். குழந்தைகள் தெருவில்தான் வெளிக்குப் போவார்கள். தெருவில் உள்ள ஒரு குழாய் அடியில் உட்கார்ந்து குளிப்பார்கள், துணி துவைப்பார்கள்.

நகரின் ஓயாத இடப் பசிக்கு இரையாகி சீக்கிரமே ஒரு நாள் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து துரத்தப்படுவார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் இருக்கும் இடம் யாருக்குச் சொந்தம் என்று தெரியவில்லை. யாருக்குச் சொந்தமானாலும் இன்றே அது 10 கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டித் தரக்கூடியது. எனவே யாராவது அதன்மீது கண் வைத்திருப்பார்கள்.

இன்று அவர்களது கோயில்மீது கை வைத்திருக்கிறார்கள்.


இன்றும் மதிய உணவுக்கு வீட்டுக்குப் போகும்போது ஒரே போலீஸ் கூட்டம். எதிரே கொதித்துப்போன மக்கள் கூட்டம். ராட்சத இயந்திரம் ஒன்று கோயிலை உடைத்து கற்களை அள்ளி டிராக்டரில் போட்டுக்கொண்டிருந்தது. ஜெயா டிவி கேமரா மக்களிடம் பேசிக்கொண்டிருந்தது. சில செய்தித்தாள்களின் புகைப்படக்காரர்கள் படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.


ஒரு அம்மா ஆவேசமாகப் பேசினார். ‘இந்தக் கோயில் 90 - 100 வருஷமா இருக்குதுங்க. நாங்க பொறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து இருக்குதுங்க.’ சிலர் காவலர்கள் தங்களை அடித்ததாகப் புகார் சொன்னார்கள். ஆனால் நான் பார்த்தவரை காவலர்கள் ஒரு ஓரமாகவே அமர்ந்திருந்தனர்.

கோயில் கட்டடத்தை இடித்தபின்னர், சிலைகள் மட்டும் ஒரு பீடத்தில் வைக்கப்பட்டிருந்தன. திடீரென மக்கள் பலரும் கூட்டமாக வந்து வேகாத வெயிலில் அந்தச் சிலைகளுக்குமுன் சட்டென்று உட்கார்ந்துவிட்டனர்.


அருகில் இருந்த ‘சேட்டு’ கல்யாண மண்டபத்தினர்தான் பணம் கொடுத்து அந்தக் கோயிலைப் பெயர்த்துவிட்டார்கள் என்பது மக்களின் வாதம். ‘அவனுக கையைப் பாம்பு புடுங்கிடுங்க. நாகாத்தம்மா சும்மா இருக்கமாட்டா’ என்றார் ஒருவர். ‘சிலைல கை வெச்ச, மவனே நீ ஒழிஞ்சடா’ என்றார் இன்னொருவர் ஆவேசமாக.கார்பரேஷன் இயந்திரமும் ஊழியர்களும் தங்கள் பணியை விடாது செய்துகொண்டிருந்தனர்.

Tuesday, March 23, 2010

நாகர்கோவில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்

மார்ச் 25, 2010 அன்று கிழக்கு பதிப்பகத்தின் பிரத்யேக ஷோரூம் நாகர்கோவில் நகரில் திறக்கப்பட உள்ளது.

முகவரி:

கிழக்கு பதிப்பக ஷோரூம்
சி.என்.ஆர் புத்தக உலகம்
2/66, ஒழுகினசேரி பாலம் அருகில்
திருநெல்வேலி ரோடு
நாகர்கோவில் - 629 001.

தொடர்புக்கு: 96774 79976

முந்தைய ஷோரூம் திறப்பு பற்றிய பதிவுகள்: கரூர், திருநெல்வேலி, ஈரோடு, மதுரை, திருச்சி, வேலூர்

Saturday, March 20, 2010

மோசின் கான், முடாஸர் நாஸர், ஜாஹீர் அப்பாஸ், ஜாவீத் மியாந்தத்

நீங்கள் முப்பது வருடங்களுக்கு முன்னால் இந்திய கிரிக்கெட்டைப் பார்க்க ஆரம்பித்திருந்தீர்கள் என்றால் இந்தப் பெயர்கள் உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்காது.

இன்றைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் இருக்கும் கந்தரகோலமான நிலை அப்போது இருக்கவில்லை. அதுவும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்றால் போருக்குச் சமானமாகக் கருதப்பட்ட அந்த நாள்களில், வலுவான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு, தட்டுத் தடுமாறி டிரா செய்தோ அல்லது செருப்படி வாங்கியோ திரும்பும் இந்திய அணி உங்களுக்கு அல்சரைப் பெற்றுத் தந்திருக்கும்.

அப்போதெல்லாம் இந்திய அணி வீரர் யாராவது செஞ்சுரி அடித்தாலே நாங்கள் எல்லாம் எம்பிக் குதிப்போம். பொதுவாக அது காவஸ்கராக மட்டுமே இருக்கும். அவ்வப்போது விஸ்வநாத் அல்லது வெங்சர்க்கார். திடீரென எங்கிருந்தோ வந்தார் மொஹீந்தர் அமர்நாத். இதில் இரட்டை சதம் என்பது மருந்துக்கும் இருக்காது. ஆனால் பாகிஸ்தான் அணியிலோ கண்ணில் ரத்தம் வர வைத்துவிடுவார்கள்.

முடாஸர் நாஸரும் ஜாவீத் மியாந்ததும் சேர்ந்து நம்மைக் கதற அடித்து, ஆளுக்கு இரட்டை சதம் போட்ட ஆட்டம் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம் (முடாஸர் நாஸர் 231, ஜாவீத் மியாந்தத் 280*). என்னால் கடைசிவரை இதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அதெப்படி ஐயா, இவர்களில் ஒருவரைக்கூட அவுட் ஆக்க முடியவில்லை? ஒரு ஆள் இரட்டை சதம் என்றால்கூடப் பரவாயில்லை. இரண்டு பேருமா? பின்னர் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக 900 ரன்களைத் தாண்டிய கொடுமையும் நிகழ்ந்துள்ளது. (அதில் ஜயசூரியா 340, மஹாநாமா 225, அரவிந்த டி சில்வா 126!)

முடாஸர் நாஸர் கொஞ்சம் அழுக்கான பேட்ஸ்மன். ஜொலிக்கும் ஆட்டம் அல்ல அவரது. மோசின் கானுடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரர். இதில் மோசின் விளையாட்டு கொஞ்சம் அழகாக இருக்கும். ஆனால் மோசின் எப்படியும் கபில் தேவ் பந்துவீச்சில் அவுட் ஆகிவிடுவார். அவர் அப்போது இந்திய நடிகை ரீனா ராய் என்பவரைக் கணக்கு பண்ணிக்கொண்டிருந்தார். அதனால்தான் சீக்கிரம் அவுட் ஆகி, இந்தியாவின் மானம் கப்பல் ஏறாமல் காப்பாற்றிவந்தார் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் முடாஸருக்கு இதுபோல இளகிய மனம் கிடையாது.

இதில் ஜாஹீர் அப்பாஸ் ரொம்பவே மோசம். அடுத்தடுத்த ஆட்டங்களில் வரிசையாக செஞ்சுரி அடித்து ரொம்பவே கடுப்பேத்துவார். அந்த மோசமான பாகிஸ்தான் தொடர் - 1982-83 - உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இம்ரான் கான் மிகச் சிறப்பாகப் பந்து வீசிய தொடர். மொஹீந்தர் அமர்நாத், காவஸ்கர் தவிர மீதி அனைவருமே திணறிய தொடர். முதல் மூன்று டெஸ்ட்களிலும் அப்பாஸ் வரிசையாக செஞ்சுரி. 215, 186, 168. அடுத்த மூன்று டெஸ்ட்களில் நல்ல வேளையாக இந்த அசம்பாவிதம் தொடரவில்லை. எப்படி ஒரு ஆள் அடுத்தடுத்த டெஸ்டில் தொடர்ந்து சதம் அடிக்கிறார் என்பது புரியவில்லை. பாகிஸ்தான் அம்பயர்கள் அழுகுணி ஆட்டம் ஆடுகிறார்கள் என்று சொல்லி தேற்றிக்கொண்டோம்.

நல்லவேளையாக மோசின் கான், ஜாஹீர் அப்பாஸ் விரைவிலேயே காணாமல் போனார்கள். முடாஸர் நாஸர்கூட கொஞ்ச நாள் கழித்துக் காணோம். ஆனால் ஜாவீத் மியாந்தத் வெகு நாள்கள் தொடர்ந்து இருந்து கழுத்தறுத்தார். ஷார்ஜாவில் சேத்தன் ஷர்மாவைக் கடைசிப் பந்தில் சிக்ஸ் அடித்து பெரும்பாலான இந்தியர்களை கிரிக்கெட் ஆட்டம் பார்ப்பதிலிருந்து விடுவித்தார்.

இந்த நால்வர் இடத்தை ஆக்ரமிக்க வந்த ஆட்டக்காரர்களில் சலீம் மாலிக், இன்ஸமாம்-உல்-ஹக் தவிர வேறு யாரும் இந்திய ரசிகர்களை அதிகமாகப் புண்படுத்தியதில்லை.

இன்று யோசித்துப் பார்த்தால் யார் பாகிஸ்தான் அணியில் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அக்ரம், உக்ரம், குல், முஷ்டாக், இம்ரான் என்று நான்கைந்து முஸ்லிம் பெயர்களை எடுத்துக்கொண்டு அதில் ஏதோ இரண்டை அடுத்தடுத்துப் போட்டால் வரும் பெயரில் யாராவது ஒருவர் இருப்பார். அவர் வலது கையா, இடது கையா, தடுத்தாடுவாரா, அடித்தாடுவாரா, ஆல் ரவுண்டரா, இல்லையா என்று புரிந்துகொள்வதற்குள் காணாமல் போய்விடுவார். ஹெராயின் அடித்து மாட்டிக்கொள்வார். செக்ஸ் பிரச்னையில் சிக்கிக்கொள்வார். மேட்ச் ஃபிக்ஸிங்கில் மாட்டி நான்கு மாதங்கள் தடை செய்யப்பட்டு, மீண்டும் அணிக்குள் நுழைந்து, அடுத்து வாழ்க்கை முழுவதும் தடை என்று உதை வாங்கி, காணாமல் போய்விடுவார்.

இவ்வளவு திறமையைக் கொண்ட ஒரு நாட்டில் இப்படி ஒரு குழப்படி நிர்வாகத்தினால் இவ்வளவு கேவலமான நிலையா என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. கொஞ்சம் ஆசுவாசமாகவும் உள்ளது.

Friday, March 19, 2010

பரிணாம வளர்ச்சி நிஜமே!

ரிச்சர்ட் டாக்கின்ஸ் உலகப் புகழ் பெற்ற பரிணாம உயிரியல் விஞ்ஞானி. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். ஆனால், பொதுவாக பரிசோதனைச் சாலையில் உட்கார்ந்து ஆராய்ச்சிகள் செய்து, விஞ்ஞான மாநாடுகளில் கட்டுரை வாசித்து, வீட்டுக்குப் போய் ஓய்வெடுக்கும் ரகம் அல்ல அவர். பொதுமக்கள் படித்து புரிந்துகொள்ளும் வகையில் புத்தகங்கள் எழுதுவது; அந்தக் கருத்துகள் மக்களிடம் சென்று சேரக்கூடியவகையில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் தயாரிப்பது, மக்கள் கூட்டத்துக்கு இடையே பேசுவது என தீவிர களப்பணி ஆற்றுவதிலும் முன்னணியில் நிற்பவர்.

ஆனால் மிகவும் சர்ச்சைக்குரிய மனிதர்!

இதில் சர்ச்சை எங்கிருந்து வருகிறது? ரிச்சர்ட் டாக்கின்ஸ் வேலை செய்துவந்த துறை அப்படிப்பட்டது. சார்லஸ் டார்வின், பரிணாம வளர்ச்சி என்ற கோட்பாட்டை முன்வைத்தார். இந்தக் கோட்பாட்டின்படி, பல்வேறு விதமான உயிர்கள் உருவாவதற்கு கடவுள் என்ற கோட்பாடு அவசியமே இல்லை. ரிச்சர்ட் டாக்கின்ஸும் மற்ற பலரும் இந்தக் கோட்பாட்டை மேலும் முன்னுக்கு எடுத்துச் சென்றனர். அதனால் கிறிஸ்தவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்தக் குறிப்பிட்ட அறிவியல் துறைமீது பிரச்னை ஏற்பட்டது. அவர்கள், ‘படைப்புவாதம்’ (கிரியேஷனிசம்) என்ற புதிய ‘அறிவியல்’ துறையை உருவாக்கினார்கள்.

இதைப்பற்றி இந்தியாவில் இருக்கும் நாம் அதிகம் கேட்டிருக்கக்கூட மாட்டோம். ஆனால் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு துறை இது. அமெரிக்க மக்கள்தொகையில் 40% மேலானவர்கள் டார்வின் ஒரு சாத்தான் என்றும், அவரது பரிணாம வளர்ச்சிக் கொள்கை அவர்களது மதத்துக்கு எதிரானது என்றும், படைப்புவாதமே சரியானது என்றும் நினைக்கிறார்கள். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் வலுவான எண்ணிக்கையில் இருக்கும் இவர்கள் பள்ளிக்கூடங்களில் டார்வினின் கருத்துகளைச் சொல்லிக்கொடுக்கக்கூடாது என்பதில் பல இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

எவொல்யூஷன் எனப்படும் பரிணாம வளர்ச்சிக் கொள்கை என்பது உண்மைதானா? அதற்கு என்ன சாட்சிகள், நிரூபணங்கள் உள்ளன என்று படைப்புவாதிகள் கேட்கிறார்கள். முதலில் சுருக்கமாக பரிணாம வளர்ச்சி என்றால் என்ன என்று புரிந்துகொள்வோம். உயிர் வகைகள் புதிது புதிதாகத் தோன்றுகின்றன என்கிறது பரிணாம வளர்ச்சிக் கொள்கை. ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் சில தனிப்பட்ட நபர்களில் ஏற்படும் மாற்றங்கள், அந்த நபர்கள் பிறரைவிட அதிக நாள் உயிர்வாழும் சாத்தியத்தை ஏற்படுத்தினால், அந்த ‘நல்ல’ மாற்றங்கள் குறிப்பிட்ட உயிரினத்தில் அதிகரிக்க ஆரம்பிக்கும். அந்த ‘நல்ல’ குணம் கொண்ட நபர்களின் சந்ததிகள் அதிகரிப்பதால் இது நிகழ்கிறது. இப்படியே இந்த மாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தால், இறுதியில் ஒரு புதுக் கிளை உருவாகி, நாளடைவில் முற்றிலும் புதிய உயிரினம் உருவாகிவிடுகிறது.

இப்படித்தான் ஏதோ ஓர் உயிரினத்தில் தொடங்கி இன்று மனிதர்கள் தோன்றியுள்ளனர். மனிதர்கள் போன்ற பாலூட்டிகள் அனைத்துக்கும் ஒரு கட்டத்தில் ஒரு பொதுவான பெற்றோர் உயிரினம் இருந்துள்ளது. பாலூட்டிகளுக்கும் பறவைகளுக்கு பொதுவான ஒரு பெற்றோர் உயிரினம் இருந்துள்ளது. இப்படியே பின்னோக்கிப் போனால் எல்லாவித உயிரினங்களுமே ஒரே ஒரு உயிரிலிருந்து கிளைத்ததாக இருக்கவேண்டும்.

இந்தக் கொள்கை தீவிர ஆப்ரகாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் (யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்) அனைவருக்கும் கோபத்தைக் கிளப்புவதில் ஆச்சரியமில்லை. அந்த மதங்களின்படி, உலகம் என்பதை இறைவன் தோற்றுவித்தது மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஆறே நாள்களில் உருவாக்கினான். அப்போதே உலக உயிர்கள் அனைத்தையும், ஈ முதல் எறும்பு வரை, மாடு முதல் மான் வரை, திமிங்கிலம் முதல் தேள்வரை அனைத்தையும் உருவாக்கிவிட்டான். அப்போது உருவாக்கப்படாத எந்தப் புது உயிரும் இனி உருவாகாது. இன்று காணப்படும் எந்த உயிரும் என்றோ உருவாக்கப்பட்டுவிட்டன. அதுவுமின்றி இந்தத் தோற்றம் அனைத்தும் நடந்து சுமார் 5,000 வருடங்கள்தான் ஆகியுள்ளன.

ஆனால் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின்படி, தினம் தினம் மாற்றங்கள் நிகழ்கின்றன; சில லட்சம் ஆண்டுகள் கழித்து முற்றிலும் புதிய, இதுவரையில் இல்லாத உயிரினங்கள் உருவாகியிருக்கும். மேலும் உயிர்கள் தோன்றி பல கோடி ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன.

பரிணாம வளர்ச்சியை ஏற்காத படைப்புவாதிகள் பல கேள்விகளை முன்வைக்கின்றனர். ரிச்சர்ட் டாக்கின்ஸின் புத்தகம் இந்தக் கேள்விகளை ஒன்றன்பின் ஒன்றாக எதிர்கொள்கிறது. மிகவும் எளிய முறையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம், அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆதங்கத்துடன் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

டாக்கின்ஸ் படிப்படியாக நம்மை பரிணாம வளர்ச்சிக் கொள்கைக்குள் அழைத்துச் செல்கிறார். முதல் கேள்வி: இந்த விஷயத்தை டார்வின் என்று ஓர் ஆசாமி 19-ம் நூற்றாண்டில் வந்து சொல்லும்வரை ஏன் வேறு யாரும் கண்டுபிடிக்கவில்லை? இதற்குக் காரணம், பிளேடோ என்ற கிரேக்கத் தத்துவஞானியின் கருத்துகள் மேற்கத்திய விஞ்ஞானிகளை பரிணாம வளர்ச்சிக் கொள்கை பற்றி சிந்திக்கவிடாமல் செய்துவிட்டதே என்கிறார் டாக்கின்ஸ். பிளேடோவின் அடிப்படைக் கொள்கை, சாராம்சவாதம். எல்லா உயிரினங்களும் ஒரு சிறந்த வடிவமைப்பின் குறைபட்ட வடிவங்களே. டார்வினின் கருத்தாக்கத்தில் இப்படி ‘கச்சிதமான’ வடிவமைப்பு ஏதும் கிடையாது. ஆனால் மேற்கத்திய விஞ்ஞானிகள் அனைவருமே பிளேடோவின் சிந்தனைத் தாக்கத்திலிருந்து மீளாததால் மாற்றி யோசிக்கவில்லை. எனவே டார்வினின் தரிசனம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

டார்வின் தன்னைச் சுற்றிலும் நடப்பதைக் கவனமாகப் பார்த்தார். மனிதன் தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு நாய்களையும், புறாக்களையும், குதிரைகளையும் உருவாக்குவதைக் கண்டார். மனிதன் செயற்கையாக தனக்கு விருப்பமான தன்மைகள் உடைய உயிரினங்களை உருவாக்கும்போது, இயற்கையிலேயேகூட அப்படி ஒரு நிகழ்வு ஏன் நடந்திருக்கக்கூடாது என்று யோசித்தார். அப்படி அவர் உருவாக்கிய கருத்துதான் ‘இயற்கைத் தேர்வுமுறை’.

ஆனால் இந்த இயற்கைத் தேர்வு நடப்பதை மனிதக் கண்ணால் பார்ப்பது கடினம். ஏனெனில் இந்த முறையின்மூலம் மாற்றங்கள் ஏற்பட பல ஆயிரம் வருடங்களாவது குறைந்தது ஆகிவிடும். நம் வாழ்நாளோ நூறு வருடங்களுக்கும் குறைவே. ஆனால் புதைபடிவ நிரூபணங்கள் நிறையக் கிடைக்கின்றன. மண்ணுக்கு அடியில் புதைந்துள்ள பல்வேறு உயிரினங்களை எடுத்து ஆராயும்போது என்னென்ன முற்றிலும் வித்தியாசமான உயிரினங்கள் ஒரு காலத்தில் வாழ்ந்துள்ள என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

அடுத்து டாக்கின்ஸ் எதிர்கொள்வது உயிர்களின் வயதை. கார்பன் டேட்டிங் என்ற முறையைப் பற்றி எளிமையாக விளக்கும் டாக்கின்ஸ் எப்படி உலகத்தின், மரங்களின், உயிர்களின் வயதைக் கணக்கிடமுடியும் என்று காண்பிக்கிறார். பிறகு அந்தக் கணக்குகளின்மூலம் இந்த உலகம் எப்படி பல கோடி ஆண்டுகள் என்பதைத் தெளிவாக்குகிறார்.

பரிணாம வளர்ச்சி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று சொல்லித் தான் தப்பித்துவிடவில்லை எனும் டாக்கின்ஸ் சில பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே நடக்கும், நடந்துள்ள சில பரிணாம வளர்ச்சி மாற்றங்களை உதாரணங்களாகத் தருகிறார்.

குரோவேஷியா நாட்டுக்கு அருகில் உள்ள இரண்டு தீவுகள் போட் கோபிஸ்டே, போட் மெர்காரு. போட் கோபிஸ்டாவில் வாழும் ஒரு பல்லி இனம், போட் மெர்காருவில் ஒன்றுகூடக் கிடையாது. 1971-ல் கோபிஸ்டாவில் இருந்து இந்தப் பல்லிகள் சிலவற்றைப் பிடித்து மெர்காருவில் போட்டார்கள். மீண்டும் 2008-ல் மெர்காரு சென்று கடந்த 37 வருடங்களில் என்னதான் ஆகியுள்ளது என்று கண்டறிய முற்பட்டார்கள். மெர்காருவில் உள்ள பல்லிகளுக்கு கோபிஸ்டேவில் உள்ளவற்றைவிட தலை சற்றே நீளமாகவும் அகலமாகவும் ஆகியிருந்தன! ஏன்? கோபிஸ்டேவில் உள்ள பல்லிகள் பூச்சிகளைப் பிடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தன. ஆனால் அதிக பூச்சிகள் இல்லாத மெர்காருவில், அங்கே உள்ள தாவர இலைகளைத் தின்று பழக ஆரம்பித்த இந்தப் பல்லிகள். தாவர இலைகளைக் கடித்துத் தின்ன அழுத்திக் கடிக்கவேண்டும். எனவே தலை பெரிதாக வளர்ந்தது; பற்கள் சற்றே பெரிதாக, கடினமாக இருந்தன. ஆக, வெறும் 37 ஆண்டுகளிலேயே, சூழ்நிலை மாற்றத்துக்குத் தக்கவாறு, ஓர் உயிரினத்தின் கிளையில், கண்ணால் கண்டறியக்கூடிய மாற்றம் உருவாகத் தொடங்கிவிடுகிறது.

இதேபோல் நுண்ணுயிரிகளைக் கொண்டு நடந்த சோதனை முயற்சி ஒன்றையும் விளக்குகிறார் ரிச்சர்ட் டாக்கின்ஸ். கப்பி மீன்கள் கொண்டு நடந்த ஒரு சோதனையை விளக்குகிறார். இயற்கையில் பரிணாம வளர்ச்சி என்பதை என்று சில உயிரினங்களில் காணவும் முடிகிறது. ஆனால் பொதுவாகவே, கண்டறியக்கூடிய மாற்றங்கள் கொண்ட பரிணாம வளர்ச்சி நடைபெறும் காலகட்டம் என்பது பல ஆயிரம் வருடங்களாவது இருக்கும்.

பொதுவாக படைப்புவாதிகள் மட்டுமல்லாது படித்தவர்களுமே கேட்கும் ஒரு கேள்வி, ‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் குரங்குகள் இன்னமும் ஏன் உள்ளன?’ என்பது. இது, பரிணாம வளர்ச்சித் தத்துவத்தைப் புரிந்துகொள்ளாததான் உருவாகும் கேள்வி. திடீரென ஒரு குறிப்பிட்ட நாள் அன்று இன்று நாம் காணும் ஒரு குரங்குவகை, தன் தோலை சட்டையைக் கழற்றுவதுபோல் கழற்றி மனிதத்தோலை அணிந்துகொண்டு இரண்டு கால்களால் நடந்து மனிதனாக ஆகிவிடுவதில்லை. எந்த ஒரு தனி குரங்கும், மனிதனாக ஆகிவிடுவதில்லை. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று சொல்வதே தவறு. குரங்கு, மனிதன் இரண்டுக்கும் ஒரு பொது பெற்றோர் இனம் ஒன்று இருந்தது. அந்தப் பெற்றோரிலிருந்து குரங்குக் கிளையும் மனிதக் கிளையும் பிரிந்தன. தனித்தனியாக வளர்ந்தன. இதுதான் உண்மை நிலை.

எப்படி இயற்கையில் விதவிதமான உருவங்கள் உருவாகின்றன என்பது பற்றி விளக்குகிறார் டாக்கின்ஸ். ஒரு நண்டு, ஒரு வண்டு இரண்டும் எப்படி முற்றிலும் புதுமையான, வித்தியாசமான வடிவத்தைப் பெறுகின்றன? தெளிவற்ற ரேண்டம் வரைகணித முறைப்படி இயங்கும்போது, புதிது புதிதான தோற்றங்கள் உருவாகும் அல்லவா? தாள் ஒன்றில் இங்கைத் தெளித்து, அந்தத் தாளை கன்னாபின்னாவென்று மடித்து, மீண்டும் பிரித்துப் பார்க்கும்போது அந்தத் தாளில் ஒரு அழகான வடிவம் ஒன்றைக் காண்பீர்கள். அப்படிப்பட்ட வடிவங்கள்தான் இயற்கையில் உயிர்களின் உருவமாக உருவாகின்றன. அவற்றில் பல வடிவங்கள் வாழமுடியாமல் அழிந்துபோக, ஒரு சில வடிவங்கள் மட்டும் கடல்வாழ், நிலவாழ் உயிரினங்களின் வடிவங்களாகத் தங்கிவிடுகின்றன என்பதை பல ஆதாரங்களுடன் எடுத்துக்காண்பிக்கிறார்.

உயிர்கள் மிகவும் சிக்கலான வடிவம் கொண்டவை என்பதால் அவை நிச்சயம், மிக அதிக சக்திவாய்ந்த ‘கடவுள்’ போன்ற ஒருவரால் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கமுடியும் என்ற வாதத்தை மிக அழகாகக் கையாளுகிறார் டாக்கின்ஸ். கேயாஸ் சிஸ்டம் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து, எப்படி மிகவும் சிக்கலான இடங்களிலும் வரிசையும் தெளிவும் ஏற்படுகின்றன என்பதைக் காண்பித்து, உயிர்கள் ஒற்றை செல்லிலிருந்து பிரிந்து பிரிந்து பல செல்களாக மாறி, கடைசியில் ஒரு மானாக, ஒரு கழுதையாக, ஒரு கனகாம்பரம் செடியாக ஆகும்போது எப்படி ஒரு செல்லுக்கு தான் பூவாகவேண்டும், தான் காதாக வேண்டும், கண்ணாக வேண்டும் என்றெல்லாம் தெரிகிறது என்றும் அதனை மிகச் சரியாக அது எப்படிச் செய்கிறது என்பதையும் மிக எளிமையான முறையில் விளக்குகிறார்.

இந்தப் புத்தகத்தில் டாக்கின்ஸ் எழுதியுள்ள மிக அற்புதமான அத்தியாயம் அத இறுதி அத்தியாயம். அதில் டார்வினின் ‘உயிர்களின் தோற்றம்’ (ஆரிஜின் ஆஃப் ஸ்பீஷிஸ்) என்ற புத்தகத்தில், அவரது கடைசி வரியை எடுத்துக்கொண்டு, அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாக விளக்குவது. அந்த ஓர் அத்தியாயத்துக்காகவே இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்!

உலகத்திலேயே மிகவும் ஆச்சரியகரமான விஷயம் என்பது உயிர்கள்தான். ஆனால் இந்த ஆச்சரியத்தை முற்றிலும் புரிந்துகொண்டு ரசிப்பதைக் காட்டிலும், எல்லாமே ஒரு ‘மீ-சக்தியின்’ திருவிளையாடல் என்று தவறாகப் புரிந்துகொண்டு, இயற்கையின் அழகை மக்கள் ரசிக்காமல் விட்டுவிடுகிறார்களே என்ற ஆதங்கம் புத்தகம் முழுக்க விரிவடைகிறது.

அவசியம் படித்தே ஆகவேண்டிய நூல்களில் ஒன்று இது.

The Greatest Show on Earth: The Evidence for Evolution, Richard Dawkins, Bantam Press (A unit of Transworld Publishers, A Random House Group Company)

பேரரசு

உலக சரித்திரத்திலேயே பேரரசு என்றால் அது ஒன்றுதான். 1600-கள் தொடங்கி 1947 வரை இருந்த பிரித்தானியப் பேரரசு. அதற்குமுன் எந்தப் பேரரசும் அவ்வளவு பெரியதாக, வலிமை பொருந்தியதாக இருந்திருக்கவில்லை. அதற்குப்பின் இதுவரையிலும் இருக்கவில்லை.

காலனிய நாடான இந்தியாவில் வாழும் நமக்கு பிரித்தானியப் பேரரசின்மீது வெறுப்பும் பிரமிப்பும் ஒருசேர இருப்பதில் வியப்பில்லை. நம்மை ஆண்டு, நம் நாட்டைச் சீரழித்தவர்கள்தானே இவர்கள் என்ற விரக்தி ஒரு பக்கம். எப்படி, எங்கோ ஒரு தேசத்திலிருந்து இங்கு வியாபாரம் செய்ய வந்து, கைவினைத் திறனிலும் செல்வத்திலும் பின்தங்கிய நிலையில் இருந்தும், தம் மதிநுட்பத்தாலும், ஆயுத பலத்தாலும் இந்தியா என்ற மாபெரும் நிலப்பரப்பை பிரிட்டன் என்ற தம் சிறு தீவின் காலனியாக ஆக்கினார்கள் என்ற வியப்பு மறுபக்கம்.

நியால் ஃபெர்குசன் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். வரலாற்று ஆய்வாளர். தற்போது அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். அதே நேரம் பண்டிதத் தன்மையோடு எழுதாமல் பாமரர்களும் எளிதில் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் வரலாற்றை எழுதுவதில் வல்லவர். அவர் எழுதியுள்ள மிக முக்கியமான புத்தகம் ‘Empire: How Britain Made the Modern World’ என்பது.

பிரிட்டன் என்பது சற்றே குழப்பம் தரக்கூடிய அரச அமைப்பு. அந்த அமைப்பே நான்கு நாடுகள் ஒன்று சேர்ந்து அமைத்துள்ள ஒருவிதமான கூட்டாட்சி அமைப்பு. மன்னராட்சி என்பது பெயரளவுக்கு இருந்தாலும் மக்களாட்சிதான் அந்த அமைப்பை முன்னெடுத்துச் செல்வது. ஆனால் 1800-களின் இறுதி வரை மன்னர் பரம்பரைக்கு அதிகச் செல்வாக்கு இருந்தது. கிரேட் பிரிட்டன் எனப்படும் அமைப்பில் இன்று இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகள் உள்ளன.

17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து நாட்டவர்கள் வியாபாரக் காரணங்களுக்காக முகலாயர்கள் ஆண்டு வந்த இந்தியாவின் பகுதிக்கு வந்தனர். அதே காலகட்டத்தில்தான் இங்கிலாந்து நாட்டவர்கள் அவர்களது தீவுக்கு அருகில் இருந்த அயர்லாந்து என்ற தீவுக்குச் சென்று அங்குள்ள மக்களைப் பெயர்த்துத் தள்ளி, தங்களது காலனியை நிலை நாட்டினர்.

இங்கிலாந்தாக இருந்து பிரிட்டனாக உருவெடுத்த ஒரு நாடு உலகை வெல்ல அடிபோட்டது 17-ம் நூற்றாண்டில்தான். ஆரம்பத்தில் அவர்கள் உலகை வென்று ஒரு குடையின்கீழ் கொண்டுவரவெல்லாம் எண்ணவில்லை. அவர்களுக்குத் தேவையாக இருந்தது மிளகும் ஜாதிக்காயும். பின்னர் துணிகள். அவற்றை இந்தியாவிலிருந்தும் இந்தோசீனாவிலிருந்தும் பெறுவதற்காகக் கடல் வழியை நாடிய அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உலகைச் சுற்றிவர ஆரம்பித்தார்கள்.

ஆனால் உலகைச் சுற்றிவருவது அவ்வளவு எளிதான ஒரு காரியமாக இருக்கவில்லை. 16-ம் நூற்றாண்டில் உலகின் கடல்வழி வாணிபத்தில் உச்சத்தில் இருந்தது ஸ்பெயின், போர்ச்சுகல் நாட்டவர்கள். அவர்களிடம்தான் தரமான உலக வரைபடம் இருந்தது. மிகப் பெரிய கப்பல்கள் இருந்தன. இங்கிலாந்தவர்கள் அந்தக் கட்டத்தில் வெறும் கடல்கொள்ளையில் மட்டுமே ஈடுபட்டனர். உலகெங்கும் சென்று செல்வம் ஈட்டிவந்த ஸ்பெயின், போர்ச்சுகல் கப்பல்களைக் கொள்ளையடித்துப் பணம் பெறும் செயலைத்தான் அவர்கள் புரிந்துவந்தனர்.

பின்னர் இங்கிலாந்தவர்கள் வரைபடங்களைத் திருடி, காப்பியடித்து, ஓரளவுக்குத் திறமையான கப்பல்களைக் கட்டி உலகின் பல பாகங்களுக்கும் சென்று காலனிகளை உருவாக்க ஆரம்பித்தனர். மெக்சிகோவிலும் தென் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் ஸ்பெயின் நாட்டவர் முன்னதாகவே சென்று வலுவான காலனிகளை அமைத்திருந்தனர். எனவே இங்கிலாந்தவர் சில மத்திய அமெரிக்கத் தீவுகள் (ஜமாய்க்கா போன்றவை), வட அமெரிக்கா (இன்றைய அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா) ஆகிய இடங்களைச் சென்றடைந்தனர்.

மற்றொரு பக்கம், இந்தியாவுக்குச் சென்று வியாபாரம் செய்ய அப்போதைய இங்கிலாந்து ராணி, 17-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி என்ற ஓர் அமைப்புக்கு ஏகபோக உரிமை ஒன்றை அளித்தார். அதாவது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வேறு எந்த அமைப்போ தனி மனிதர்களோ இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்கி இங்கிலாந்தில் உள்ளவர்களுக்கு விற்கமுடியாது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி மட்டும்தான் இதனைச் செய்யமுடியும்.

ஆனால் இந்தியாவுக்குள் நுழைந்த இங்கிலாந்தவர்களுக்கு பல ஆண்டுகளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. முகலாயர்கள் வலுவாக இருந்த காலத்தில் - ஔரங்கசீப் ஆட்சி முடியும்வரையில், அதாவது 17-ம் நூற்றாண்டு முடியும் வரையில் - ஆங்கிலேயர்களால் வலுவாக வேர் ஊன்ற முடியவில்லை. இந்தியாவின் கடல் ஓரங்களில் சில ‘தொழிற்சாலைக’ளை அமைத்தனர். தெற்கில் முகலாயர்களின் கை நீளாத இடத்தில் சென்னை என்ற நகரத்தை நிர்மாணிக்க ஆரம்பித்திருந்தனர். அவர்களது ஆரம்ப காலச் சண்டையெல்லாம் எப்படி தமக்கு முன் வந்திருந்த போர்ச்சுக்கீசிய, டச்சு வணிகர்களை விடச் சிறப்பாக வியாபாரம் செய்வது என்பதில்தான் இருந்தது.

ஆனால் முகலாய சாம்ராஜ்யம் அழியத் தொடங்கிய 18-ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களுக்குத் தானாகவே வாய்ப்பு கிட்டியது. அதற்குள்ளாக பிரெஞ்சு வணிகர்களும் இந்தியாவில் கால் ஊன்றத் தொடங்கியிருந்தனர். பிரித்தானிய வியாபாரிகளுக்கு இப்போது பிரெஞ்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் ஆகியோர் ஒருபக்கம்; இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் அரசர்கள், பாளையக்காரர்கள், ஜமீன்தார்கள் எனப் பலரையும் எதிர்கொள்ளவேண்டிய அவசியம். ஒரு நூற்றாண்டுக்குள் பிரித்தானியர்கள் அனைத்தையும் சாதித்தனர். 19-ம் நூற்றாண்டு ஆரம்பம் ஆகும்போது, இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் பிரதானமாக இருந்தது. முகலாயர்கள், மராட்டியர்கள், திப்பு சுல்தான், சீக்கியர்கள் எனப் பலரையும் அழித்தாயிற்று. எஞ்சியவர்கள் பிரித்தானியர்களை முற்று முழுதாக ஏற்றுக்கொண்டனர்.

இத்தனையையும் சாதிக்க ஆங்கிலேயர்கள் பெரும் படைகளை நம்பி இருக்கவில்லை. நன்கு பயிற்சி கொடுக்கப்பட்ட குறைவான சிலர் மட்டுமே இருந்தனர். மீதமெல்லாம் இந்தியப் போர்வீரர்கள்தான்.

கொள்ளைக்காரர்களாலும் குடியேறிகளாலும் அமெரிக்கக் கண்டம் ஆங்கிலேயர் வசம் என்றால், வியாபாரிகளால் இந்தியா. ஆனால் ஆப்பிரிக்காவைக் கைப்பற்றப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப விரும்பிய எவாஞ்செலிகல் குழுவினர். ஆப்பிரிக்காவில் 16-ம் நூற்றாண்டு முதலே அடிமை வியாபாரம் தழைத்து வளர்ந்தது. பிரெஞ்சு, பிரித்தானிய, டச்சு, ஸ்பானிய என்று ஒருவர் விடாமல் அடிமைகளைப் பிடித்து அமெரிக்காமுதல் உலகின் பல பாகங்களுக்கும் விற்பனை செய்துவந்தனர். ஆனால் அடிமை முறை ஒழிக்கப்படவேண்டும் என்ற கொள்கையை முதலில் முன்வைத்தது பிரிட்டனின் கிறிஸ்தவ தேவாலயங்களே. 18-ம் நூற்றாண்டில் ஆரம்பித்து, 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவில் அடிமை முறை முற்றிலுமாக ஒழிக்கப்படுவதற்கு பிரிட்டன்தான் காரணமாக இருந்தது.

ஆனால் அதே நேரம், ஆப்பிரிக்காவின் பழங்குடியினர் மத்தியில் ‘நாகரிகம்’, ‘நல்ல மதம்’ ஆகியவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கிய எவாஞ்செலிகல் கிறிஸ்தவர்கள், அதனை ஆயுத பலம் கொண்டே சாதித்தனர். மேக்ஸிம் என்ற தானியங்கி குண்டுவீசி ஆயுதங்களுடன் ஆப்பிரிக்காவில் பல பகுதிகளைப் பிடித்து, எக்கச்சக்கமான பழங்குடிக் குழுவினரை சில நாடுகளாக மாற்றியமைத்தனர்.

தவிர ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பகுதிகளுக்குச் சென்ற பிரித்தானியர்கள் அங்குள்ள பழங்குடியினரை முற்றிலுமாக அழித்து அந்த நாடுகளை முழுமையாகத் தம் வசப்படுத்தினர்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாம் உலகப் போர் ஆரம்பிக்க இருந்த நேரத்தில் பிரித்தானியப் பேரரசு உலகின் அனைத்து கண்டங்களிலும் காலனிகளை அமைத்திருந்தது. உலகின் மாபெரும் கப்பல்படையை வைத்திருந்தது. தான் ஆண்ட பகுதிகளில் ஆங்கில மொழியைப் பரப்பியிருந்தது. தெளிவான சட்டங்கள் இல்லாத இடங்களில் இங்கிலாந்தீன் சட்ட முறையப் பின்பற்றி சட்டங்களை வகுத்து, சட்டங்களை நிலைநாட்ட நீதிமன்றங்கள், காவல்துறை ஆகியவற்றை நிலநாட்டியிருந்தது. பணக் கொள்கையைப் புகுத்தியிருந்தது. பொதுவாக மக்கள் அமைதியாக வாழ அனைத்துச் செயல்களையும் செய்திருந்தது.

ஆனால், அதே நேரம் எல்லாப் பகுதிகளிலும் உள்ள மக்கள் சுயாட்சியை நோக்கிச் செலுத்திய போராட்டங்களை வன்முறையுடன் அடக்கியது.

முதலாம் உலகப்போரில் தன் காலனிகளின் வளங்களை தன் போருக்காகப் பயன்படுத்தியது பிரிட்டன். வெற்றிகரமான போருக்குப் பின்னரும் தன் காலனி நாடுகளின் சுயாட்சி உரிமைகளைப் பற்றி பிரிட்டன் கவலைப்படவில்லை.

18-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே அமெரிக்கா என்ற தேசம், பிரிட்டனுடன் போரிட்டு, சுயாட்சி அதிகாரம் பெற்றது. முதலாம் உலகப்போருக்குப் பின் அயர்லாந்து பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி தேசமாக ஆனது. ஆனால் இரண்டாம் உலகப்போர் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. அந்தக் காலகட்டத்தில் முக்கியமாக இந்தியாவில் சுதந்தரப் போராட்டம் கடுமையாக இருந்தது. போரின்போது பிரிட்டன் அடைந்த கடுமையான கடன் சுமை, பிரிட்டனில் நிலவிய லிபரல் மனப்பான்மை ஆகிய காரணங்களால் இந்தியாவுக்கு விடுதலை தர பிரிட்டன் முடிவெடுத்தது. அடுத்த பத்தாண்டுகளுக்குள் பெரும்பான்மையான காலனிகளுக்கு பிரிட்டன் சுதந்தரம் அளித்துவிட்டது.

நியால் ஃபெர்குசன், பிரிட்டன் எப்படி உலகின் ஒரு பெரும் சாம்ராஜ்ஜியத்தை அமைத்தது என்பதை மிக அழகாகப் படம் பிடித்துக்காட்டுகிறார். அந்த சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி அமைத்தது பெரும்பாலும் 15 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இங்கிலாந்து, ஸ்காட்லாந்து இளைஞர்கள்! மிகக் குறைவான ராணுவ வீரர்கள், மிக உறுதியான, ஊழலற்ற சிவில் சர்வீஸ் அமைப்பு, பொதுவான நியாயத்தை வழங்கும் சட்டங்கள், நாடாளுமன்ற ஜனநாயகம், ஆங்கில மொழி என்று பலவற்றை உலகின் பல பகுதிகளுக்கும் வழங்கியது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கொடை என்று நிறுவுகிறார் ஃபெர்குசன்.

அதே நேரம், எங்கெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிமுறையில் தவறுகள் இழைக்கப்பட்டன என்பதை எடுத்துக்காட்டவும் ஃபெர்குசன் தவறவில்லை. ஆனால் அதே நேரம் இந்தத் தவறுகள் நிகழும்போதெல்லாம் பிரிட்டனுக்கு உள்ளிருந்தே எதிர்க்குரல்கள் எழுப்பப்பட்டன என்றும் தெளிவாக்குகிறார் ஃபெர்குசன். அடிமை முறைக்கு எதிராகக் குரல் எழும்பியது பிரிட்டனில்தான். காலனிகளின் சுதந்தரப் போராட்டங்களுக்கான ஆதரவும் பெரும்பாலும் பிரிட்டனிலிருந்தே கிளம்பின. தவறு செய்த கிழக்கிந்திய கம்பெனி கவர்னர்களை இங்கிலாந்துக்கு அழைத்து இம்பீச்மெண்ட் செய்த பெருமையும் அந்நாட்டு மக்களுக்கே இருந்தது.

பிரிட்டனுக்கு பதில் வேறெந்த நாடாவது - பிரான்ஸ், ஜெர்மனி... - இதே அளவுக்கு காலனி நாடுகளைக் கொண்டிருந்தால் அவர்கள் பிரிட்டன் அளவுக்கு நாகரிகமாக நடந்திருக்க மாட்டார்கள்; அவர்களது ஆட்சியில் இந்த காலனி நாடுகளின் மக்களும் வளர்ந்திருக்கமாட்டார்கள் என்பது ஃபெர்குசனின் கோட்பாடு.

இதை நாம் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

Empire: How Britain Made the Modern World, Niall Ferguson, Penguin (First published in 2003)

மால்கம் கிளாட்வெல்லின் Outliers

நியூ யார்க்கர் பத்திரிகையில் வேலை செய்கிறார் மால்கம் கிளாட்வெல். அதற்குமுன் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வேலை செய்திருக்கிறார். நான்கு புத்தகங்கள் எழுதியிருக்கிறார்: The Tipping Point, Blink, Outliers. இறுதியாக, What the dog saw. இந்த நான்காம் புத்தகத்தில் உள்ளவை அவர் நியூ யார்க்கர் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரைகளின் ஒரு தேர்வு.

எந்தக் கட்டத்தில் ஒரு புது சிந்தனை, கருத்து... பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது? எந்தக் கட்டத்தில், எத்தனாவது வைக்கோல் வைக்கப்படும்போது வண்டியின் அச்சாணி முறிந்து வண்டி குடை சாய்கிறது? அந்தக் கணம் எது? அதுதான் tipping point புத்தகம் எடுத்துக்கொண்ட கருத்து. யோசித்துப் பாருங்கள்... சல்வார் கமீஸ் என்ற உடை இந்தியாவில் எத்தனையோ ஆண்டுகளாக இருந்துவருகிறது. ஆனால் எந்தக் கட்டத்தில் தமிழகத்தில் அது ubiquitous உடையாக, மற்ற அனைத்தையும் நசுக்குத் தள்ளி, தனியொரு உடையாக ஆனது என்று உங்களால் சொல்லமுடியுமா? புடைவை, தாவணி எல்லாம் இன்று அம்பேல். பிற நவீன உடைகள் எல்லாம் உள்ளன; ஆனால் சல்வாருக்கு நான்கடிகள் பின்னேதான்.

ஒரு நொடியில், கண் இமைக்கும் நேரத்தில், உங்கள் மூளை என்னவெல்லாம் யோசிக்கிறது? படுவேகமாக மூளை எப்படியெல்லாம் முடிவெடுக்கிறது? அந்த முடிவுகள் நல்லவையா, கெட்டவையா? மிக மோசமான ஒரு பிரச்னையில் சிக்கிக்கொண்டிருக்கும்போது அடுத்து என்ன செய்வது என்பதை நம் மூளை எப்படித் தீர்மானிக்கிறது? ஒரு போர்க்களத்தில்? ஆபரேஷன் தியேட்டரில்? விபத்தில் சிக்க உள்ள விமானத்தை இயக்கும்போது அல்லது காரின் ஸ்டியரிங் வீலைப் பிடித்திருக்கும்போது? இவற்றை blink ஆராய்கிறது.

***

Outliers கேட்கும் கேள்வி மிக முக்கியமானது. யார் வெற்றி பெறுகிறார்கள்? வெற்றி பெற என்னவெல்லாம் தேவை?

மால்கம் கிளாட்வெல் அழகாகக் கதை சொல்கிறார். அவசரமே படுவதில்லை. மெதுவாக, மிக மெதுவாக உங்களை வழிநடத்திச் செல்கிறார். அவரது சிந்தனை தெளிவாக உள்ளது.

தனித் திறமை இல்லாவிட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்காது என்பதை முழுதும் ஏற்றுக்கொள்கிறார் கிளாட்வெல். ஆனால் அந்தத் திறமை மட்டும் இருந்தால் போதாது என்பதற்கு அழகான உதாரணங்கள் பலவற்றைக் காட்டுகிறார். வேறு என்னதான் வேண்டும்?

கடின உழைப்பு.

கடின உழைப்பு இல்லாமல் யாராலும் வெற்றி பெற முடியாது. மொஸார்ட் ஒரு குழந்தை மேதை என்பதை ஆதாரங்களுடன் மறுக்கும் கிளாட்வெல், அவரது சிறப்பான இசை ஆக்கங்கள் அனைத்துமே அவரது 20-ம் வயதுக்குப் பிறகுதான் உருவாயின என்கிறார். பில் கேட்ஸ், பில் ஜாய், பீட்டில்ஸ் என யாராக இருந்தாலும் குறைந்தபட்சம் 10,000 மணி நேரங்கள் கடுமையாக உழைத்தபின்னரே அவர்களால் சாதிக்க முடிந்துள்ளது என்பதைக் காட்டுகிறார்.

அமெரிக்க, கனேடிய, ஐரோப்பிய விளையாட்டு வீரர்களை எடுத்துக்கொண்டு, எப்படி அவர்கள் பிறந்த தேதி அவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகளைத் தருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார். அவர்களது பிறந்த தேதி அவர்களுக்குத் தருவது நிறைய பயிற்சியை. அந்தப் பயிற்சி அவர்களை சிறப்பான வீரர்கள் ஆக்குகிறது.

திறமை, கடின உழைப்பு. வேறு என்ன வேண்டும்?

அதிர்ஷ்டம் என்பதைவிட வாய்ப்புகள் என்பது அடுத்து. வாய்ப்பை இறுகப் பற்றிக்கொள்ள திறமையும் உழைப்பும் வேண்டும். ஆனால் வாய்ப்புகளே கிடைக்காவிட்டால், இல்லாவிட்டால், எது இருந்தும் பயனில்லை. எப்படி திறமையும் உழைப்பும் உள்ள பலரும் அமெரிக்காவில் Great Depression காலத்தில் அழிந்துபோனார்கள் என்பதை விளக்கும் கிளாட்வெல், அதே நேரம் கிடைத்த வாய்ப்புகளைப் பற்றிக்கொண்ட திறமையும் உழைப்பும் கொண்டவர்கள் எப்படி முன்னேறினார்கள் என்பதற்கு ஏகப்பட்ட உதாரணங்களை அடுக்குகிறார்.

அதில் உள்ள பல சுவாரசியமான கதைகளில் ஒன்று மால்கம் கிளாட்வெல்லின் தாய் எப்படி ஜமாய்க்காவில் இருந்து பிரிட்டன் வந்தார் என்பது பற்றிய கதை.

வாய்ப்புகள் பற்றிப் பேசும்போது, எப்படி குடும்ப, கலாசார, இன, தேசியச் சூழல் வாய்ப்புகளை புதிய தலைமுறைக்குத் தருகிறது என்பதைப் பற்றிய அலசலும் உள்ளது.

பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் இரண்டே இரண்டு விதங்கள்தான் உள்ளன என்கிறார் கிளாட்வெல். வசதி படைத்த மத்தியதர வர்க்கத்தினர் தம் பிள்ளைகளை கவனமாக வளர்க்கிறார்கள். Concerted Cultivation என்கிறார் கிளாட்வெல். தம் பிள்ளைகளின் ஆர்வங்கள், விருப்பங்கள், திறன்கள் ஆகியவற்றை அலசும் இந்தவகைப் பெற்றோர்கள், அந்தத் துறைகளில் தம் பிள்ளைகள் மிளிர என்னவெல்லாம் செய்யலாமோ அனைத்தையும் செய்து தருகிறார்கள்.

மாறாக, அதிகம் படிக்காத, கையில் பணம் இல்லாத பெற்றோர்கள், தம் பிள்ளைகளை அவர்கள் வழியே செல்ல விட்டுவிடுகிறார்கள். இதனால் இப்படிப்பட்ட பிள்ளைகள் சாதிப்பது குறைவாகவே உள்ளது.

இந்தவகைப் பிள்ளைகளையும் அந்தவகைப் பிள்ளைகளையும் ஒப்பிட்டு நாம் எதையும் சொல்லிவிட முடியாது. பெற்றோர்களின் கவனிப்பு இருந்தும் உருப்படாதவர்களாக எத்தனையோ பிள்ளைகள் உண்டு. பெற்றோர்களின் கவனிப்பு இல்லாமலேயே சாதித்த எத்தனையோ பிள்ளைகள் உண்டு. கிளாட்வெல்லின் விவாதம் அதுவல்ல. பெற்றோர்களின் கவனிப்பு இருக்கும் பட்சத்தில் ஒரு பிள்ளையால் அதிகமாகச் சாதிக்க முடியும் என்பதே.

***

கிளாட்வெல் சொல்வது அனைத்துமே ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ள நீதி போதனைகள்தானே? திறமையை வளர்! கடினமாக உழை! வாய்ப்பு கிடைத்தால் பற்றிக்கொள்! பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும்! ஒரு சமுதாயமே தன் புதிய தலைமுறைக்கு வளமான வாய்ப்புகளைச் செய்து தரவேண்டும்! இப்படி, இதில் வேறு என்ன புதிதாக உள்ளது?

தெரியவில்லை. எதுவுமே புதிதல்ல என்றும் தோன்றுகிறது. எல்லாமே புதிதாகவும் தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது கதை சொல்லும் திறனும், எளிமையான, ஆழமான எழுத்தும் வசீகரிக்கிறது.

நான் சமீபத்தில் விரும்பிப் படித்து, ரசித்த புத்தகங்களில் Outliers-ம் ஒன்று.

***

நியூ யார்க்கரில் மால்கம் கிளாட்வெல் எழுதும் கட்டுரைகளின் தொகுப்பு

Sunday, March 14, 2010

இது ஒரு ‘போர்’ காலம்

நேற்று தினமணியில் வெளியான கட்டுரை.

நான்கைந்து தினங்களுக்குமுன் திருச்சி சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் இப்படிப்பட்ட ஒரு ‘போர்’ காலக் கருத்தரங்கில் நானும் கலந்துகொண்டு பேசினேன்.

கட்டுரையாளர் சொல்வதைப்போல, இந்தக் கருத்தரங்கு நிகழ்த்தப்பட்டதன் முதன்மை நோக்கம் UGC நிதியில் ஒவ்வொரு கல்லூரியின் ஒவ்வொரு துறையும் ஏதோ ஒரு கருத்தரங்கை நிகழ்த்தவேண்டுமே என்ற கட்டாயம்தான்.

நான் எதைப் பற்றிப் பேசினேன் என்பது முக்கியமில்லை. அதனால் அங்குள்ள மாணவிகளுக்கு ஏதேனும் உபயோகம் இருந்ததா என்று எனக்குத் தெரியாது. அந்த மாணவிகள் இந்த வலைப்பதிவைப் படிக்கிறார்களா என்று தெரியாது. படித்தாலும் வெளிப்படையாகக் கருத்து சொல்வார்களா என்றும் தெரியாது.

மொத்தத்தில் இதுபோன்ற கருத்தரங்குகளால் எந்தப் பயனும் கிடையாது என்ற எண்ணம் வலுவாகியுள்ளது.

இதற்கு என்ன மாற்று இருக்கலாம் என்று என்னால் உடனடியாகச் சொல்லமுடியவில்லை.

மாணவர்களிடமே இந்தப் பணியை விட்டுவிட்டால், அவர்களாக உருப்படியான கருத்தரங்குகளை நிகழ்த்துவார்களா? சரியான context இல்லாத நிலையில், மாணவர்கள் எனோதானோவென்று கல்லூரிப் பாடங்களைப் படித்து, எப்படியோ பரீட்சை எழுதி பாஸ் செய்தால் போதும் என்று நினைக்கும் நிலையில், கருத்தரங்குகள் மூலம் ஏதேனும் பயன் கிட்டும் என்று விரும்பி அவர்களாக உருப்படியான கருத்தரங்குகளை நிகழ்த்துவார்களா?

Thursday, March 11, 2010

Zoho University - ஸ்ரீதரின் பதில்

Zoho University பற்றி நான் எழுதிய பதிவுக்கு சில எதிர்வினைகள் இருந்தன. அதைத் தொடர்ந்து ஸ்ரீதர் எனக்கு அனுப்பிய நீண்ட ஆங்கிலக் கட்டுரையைத் தமிழாக்கி இங்கே இட்டுள்ளேன். கூடவே ஆங்கில வடிவத்தையும் கொடுத்துள்ளேன்.

*** ஸ்ரீதர் எழுதியது ***

Zoho University பற்றிப் பதிவு எழுதியதற்கும், அது தொடர்பாக வந்துள்ள விமரிசனங்களுக்குப் பதில் அளிக்க வாய்ப்பளித்ததற்கும் பத்ரிக்கு நன்றி. மேற்கொண்டு படிப்பதற்குமுன், நான் எழுதியுள்ள How We Recruit - On Formal Credentials vs Experience Based Education என்ற பதிவைப் படியுங்கள். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதற்குப் பின்னால் உள்ள கருத்துகள் விளங்கும். அங்கே சொல்லியிருப்பனவற்றை இங்கே நான் மீண்டும் பதியப் போவதில்லை.

நாங்கள் ஏன் மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று வேலைக்கு எடுக்கிறோம்? என் அனுபவத்தில், நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்களை வேலைக்கு எடுத்ததிலும் நிஜ வாழ்க்கையில் அவர்கள் வேலை செய்வதைக் கவனித்ததிலும் சிலவற்றைப் புரிந்துகொண்டுள்ளேன். கல்லூரிகள் மிகச் சிறப்பாகக் கல்வி அளித்தாலும் (நம் ஊரில் பொறியியல் கல்லூரிகளில் அரிதாகவே இது நடக்கிறது) மாணவர்கள் பாடங்களை ஒழுங்காகக் கவனிப்பதில்லை; பாடங்களின் சிறப்பை அறிந்துகொள்வதும் இல்லை. இதற்குக் காரணம் அறிவு என்பது சூழலைப் பொருத்தது.

இதற்கு வரலாற்றை உதாரணமாகக் காண்பிக்கிறேன். ஏனெனில் கல்வெட்டு தன் விமரிசனத்தில் வரலாற்றைக் குறிப்பிட்டிருந்தார். கூகிளைப் பயன்படுத்தாமல் இந்தச் சோதனையை மேற்கொள்ளுங்கள்: குப்தப் பேரரசு சுமாராக எந்தக் காலகட்டத்தில் இருந்தது? அவர்களது பரப்பை முகலாயர்களின் பரப்புடன் ஒப்பிடுங்கள். முகலாயர்களுக்கும் குப்தர்களுக்கும் இடைப்பட்ட காலம் எவ்வளவு? கட்டாயம், இந்தியப் பள்ளிகளில் படித்திருக்கும் அனைத்துக் குழந்தைகளும் இவற்றைப் படித்திருப்பார்கள். எண்ணற்ற பரீட்சைகளை எழுதியும் இருப்பார்கள். நம் பொறியியல் கல்லூரிகளில் படித்து வெளியே வந்துள்ள 100 பேரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டால், கட்டாயம் 99 பேர் திருதிருவென விழிப்பார்கள். ஏன்? பரீட்சைகளே வரலாற்றில் ஒருவருக்கு உள்ள ஆர்வத்தை அழித்துவிடுகின்றன. நோக்கம் வரலாற்றைத் தெரிந்துகொள்வது அல்ல; பரீட்சையில் தேர்ச்சி பெறுவது. நாம் பலரும் அந்த நோக்கத்தை அடைந்துவிட்டோம்.

விரிந்த பொறியியல் அறிவைப் பொருத்தமட்டில் எந்தச் சூழலில் கற்றுக்கொள்தல் நிகழ்கிறது என்பது முக்கியமாகிறது. எனக்கு ஐஐடி மெட்ராஸில் எலெக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங்கில் பட்டம் கிடைத்துள்ளது. அதுவும் ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்களுடன். ஐஐடியில் ஆண்டெனாக்கள் பற்றி எனக்கு ஒரு பாடம் இருந்தது. இன்று நீங்கள் ஆண்டெனாக்கள் பற்றி சற்றே ஆழமாக விவரிக்கச் சொல்லிக் கேட்டால் எனக்கு ஒன்றும் தெரியாது. நான் விக்கிபீடியாவைத் தேடிச் செல்லவேண்டும். ஆண்டெனா பற்றி, எனக்குத் தெரிந்ததும், 12-ஆம் வகுப்பில் இயல்பியல் பாடம் படித்த ஒருவருக்குத் தெரிந்ததும் ஒன்றே. (ஆண்டெனாக்கள் கம்பி இல்லாமல் சிக்னலை பெறும்/அனுப்பும். டிஷ் ஆண்டெனாக்கள் கண்ணாடியைப் போல வேலை செய்யும். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்! நான் பொய் சொல்லவில்லை.)

ஐஐடியில் நான் இந்தத் துறையில் ஒரு பாடத்தை எடுத்து, தேவையான எல்லாப் பரீட்சைகளிலும் தேர்வு பெற்று, நல்ல மதிப்பெண்ணையும் பெற்றிருந்தேன். ஆனாலும் அந்தப் பாடத்தின்போது நான் கவனத்தைச் செலுத்தவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என் வாழ்க்கையில் அப்போது நடந்துகொண்டிருந்த பிற விஷயங்களுடன் ஒப்பிடும்போது இந்தப் பாடம் அவ்வளவு முக்கியமானதாக இல்லை. என் வாழ்க்கைக்கு போரடிக்கும் ஆண்டெனாக்கள் தேவையே இல்லை என்று கருதினேன். பிற்காலத்தில் குவால்காம் என்ற வயர்லெஸ் நிறுவனத்தில் வேலை செய்யப்போகிறேன் என்று தெரிந்திருந்தால், செல்பேசிகள் இயங்குவதற்கு ஆண்டெனாக்கள் மிகவும் அவசியம் என்று தெரிந்திருந்தால் (நான் பட்டம் பெற்றது 1989-ல். செல்பேசிகள் பிறகுதான் வர இருந்தன), ஆண்டெனாக்கள்மீது அதிக கவனம் செலுத்தியிருந்திருப்பேன். ஆனால் அந்தச் சூழலில் இந்தப் பாடத்தை நான் கவனிக்க வாய்ப்பே இருந்திருக்கவில்லை. ஒரு சராசரி மாணவன் இப்படித்தான் இருந்திருப்பான். சொல்லப்போனால் என்னை சராசரிக்கும் மேலான மாணவனாகவே கருதினர்.

1985-ல் ஐஐடியில் எலெக்ட்ரானிக்ஸ் படிப்பை நான் எடுத்துக்கொண்டதற்குக் காரணம் அப்போது கம்ப்யூட்டர் சயன்ஸ், புரோகிராமிங் ஆகியவை சுவாரசியம் அற்றவையாகத் தெரிந்தன. மாறாக, சர்க்யூட்கள் சுவாரசியமாகத் தெரிந்தன. ஐஐடியில் இருந்த காலத்தில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் மழைக்குக்கூட ஒதுங்கமாட்டேன் என்று நினைத்திருந்தேன். என் தந்தை இப்போதும் இதை ஞாபகப்படுத்துவதை நிறுத்துவதில்லை.

இன்று பொறியியல் கல்லூரிகளில் எலெக்ட்ரானிக்ஸ் படிப்பில் ஒரு செமஸ்டரில் இருக்கும் பாடங்கள்: மொபைல் கம்யூனிகேஷன்ஸ், சாடிலைட் கம்யூனிகேஷன்ஸ், சி புரோகிராமிங், இமேஜ் ப்ராசஸிங், ப்ரொஃபஷனல் எதிக்ஸ். இவற்றைக் கற்றுக்கொள்ள, அதிர்ஷ்டசாலி மாணவர்கள் நிறையப் பணம் செலவழித்திருப்பார்கள். முக்கியமாக அந்த ப்ரொஃபஷனல் எதிக்ஸ் பாடம்! அந்தப் பாடத்தில் 90%-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் (என்னைப் போல) அந்தப் பாடத்தையே எடுக்காதவர்களைவிட அற உணர்ச்சி அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று நம்புகிறீர்களா?

என் கருத்து இதுதான்: பெரும்பாலான அறிவுத் துறைகளில், முக்கியமாக பொறியியல், மென்பொருள் துறை போன்ற தீவிரமான அறிவுத் துறைகள், அறிவு என்பது சூழலைப் பொருத்தே அமைகிறது. கல்லூரி பெரும்பாலும் சரியான சூழலாக இருப்பதில்லை. சொல்லப்போனால், கல்லூரி சரியான சூழலே அல்ல.

ஒரு கல்லூரி நன்கு பாடம் நடத்தினாலே இதுதான் நிலை. 90% இந்தியப் பொறியியல் கல்லூரிகளில் சரியான ஆசிரியர்கள் இல்லை. லீனியர் அல்ஜீப்ரா பாடத்தைக்கூடச் சரியாகச் சொல்லித்தருவதில்லை.

“கொத்தடிமை” என்ற கருத்து தொடர்பாக: இந்தியச் சமூக நிலையைப் பார்க்கும்போது அந்த விமரிசனம் ஏன் வந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம். Zoho Corp-இல் எந்தவிதமான கைவிலங்கோ, கட்டுப்பாடோ கிடையாது. மாணவர்கள் சேர்ந்து, ஒரே மாதத்தில் விலகியிருக்கிறார்கள். மேற்கொண்டு கல்லூரியில் சேர்ந்து படி என்று உறவினர் வற்புறுத்தியிருப்பார். சேர்ந்த 6 மாதத்தில் கல்யாணம் என்ற காரணத்தால் விலகியிருக்கிறார்கள். இன்றும்கூட எங்களிடம் சேரும் பல பெண்களுக்கு இதுதான் நடக்கிறது. வேலைக்கு சேர்ந்தவர்களும்கூட எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வேலையிலிருந்து விலகலாம்.

கொத்தடிமை பற்றிப் பேசும்போது, நான் வேறு இடத்தில் Jail College Phenomenon என்று எழுதியிருப்பதைப் பாருங்கள். நவீன கல்வி, மாணவர்களை பச்சைக் குழந்தைகளாகப் பார்க்கிறது. எங்களது மாற்றுக் கல்வி முறை, மாணவர்களை வயதுக்கு வந்தவர்களாகப் பார்க்கிறது. இதனால் மாணவர்கள் மேலும் வேகமாக வளர்கிறார்கள். இதுபற்றி நான் பின்னர் எழுத உள்ளேன்.

நாங்கள் எங்கள் மாணவர்கள்மீது நிறைய முதலீடு செய்கிறோம். ஆசிரியர்-மாணவர் விகிதம் எங்கள் இடத்தில் இருக்கும் அளவுக்கு அதிகமாக வேறு எங்கும் இருக்க முடியாது. மாணவர்கள் படிக்கும்போதே அவர்களுக்கு உதவித்தொகை அளிக்கிறோம். ஏன் இத்தனையையும் செய்கிறோம்?

உதவித்தொகை அளித்தல், அவர்களுக்கு வேலை காத்திருக்கிறது என்ற உத்தரவாதத்தைத் தருதல், நிஜமான வேலையில் பணிபுரிவோருடன் தினம் தினம் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு ஆகியவையே அவர்கள் ஆர்வத்துட்ன ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம். அந்தச் சூழல்தான் முக்கியம். எங்கள் மாணவர்கள் விரைவிலேயே அவர்களது குடும்பத்தின் முக்கிய சம்பாதிப்பவராக ஆகிறார். அது தரும் தன்னம்பிக்கை விலைமதிப்பற்றது.

இறுதியாக, என் சொந்த மகனை இங்கு சேர்த்துப் படிக்க வைப்பேனா? நிச்சயமாக! (ஆனால் அதற்குமுன் அவன் ஆடிசத்திலிருந்து மீண்டு வரவேண்டும். அது ஒரு தனிக்கதை!)

*** முற்றும் ***

*** ஆங்கில வடிவம் ***

I want to thank Badri for blogging about Zoho University, and giving me the opportunity to respond to critical comments. Before I begin, I want to point to a blog post I made some time ago How We Recruit - On Formal Credentials vs Experience Based Education, which explains the philosophy behind what we are doing. It is worth reading that post, so I won't repeat that material here.

Why do we go to high school to recruit? It is my belief, based on years of observation and experience, both my own, as well based on recruiting hundreds of college graduates and observing their real world performance, that even when colleges teach well (a very rare situation in our engineering colleges in India), the fact that most advanced knowledge is contextual makes it hard for students to appreciate its significance or pay attention.

I will use a history example, because kalvettu brought up history in his comment. Take this quick test (no Google please): approximately what era was the Gupta empire and what was its significance to Indian history? Compare their geographic reach to that of the Mughals later; approximately how many centuries separated the Guptas and the Mughals? Practically every school kid in India would have studied all this, and written countless exams on it. If I asked that question to 100 of our college-educated engineers, 99 would draw a complete blank on that one (yes, I have performed this "test"). Why? Those blasted exams *themselves* killed any possible interest anyone could have had in history. The objective was not to learn history, but pass the exams. Most of us met *those* expectations well.

When it comes to detailed engineering knowledge, the context in which learning takes place matters a lot. I am supposed to have a degree in Electronics Engineering from IIT Madras. I even have a fairly good GPA to go with it. Consider the subject of antennas, on which I had a course in IIT. If I were asked to explain antennas at a fairly high level, I would draw a blank, and have to hit the Wikipedia. My level of knowledge of antennas is no more than that of a person who had a Physics class in 12th standard (antennas receive/transmit wireless signals, and dish antennas work like a mirror - that's about it, and I am not making this up). On paper, I had a class in IIT on that subject, passed all the requisite exams, even got a decent grade out of it. But at some deeper level, I *know* I wasn't paying attention to it. It wasn't *important* compared to everything else going on in life at that time for me, and I couldn't see the significance of something mundane and boring like antennas in the overall scheme of things in life. If I had realized I would end up working for a wireless company later (Qualcomm), and if I had realized antennas would be important in cell phones (which were to come later - I graduated in 1989), I might have paid more attention. Basically, there was no context in which I felt like paying attention to this fairly esoteric subject. I consider myself an entirely typical student in that respect - in fact, by the standards of the system, I was considered a "high achiever".

In fact, I opted for Electronics in IIT in 1985, mainly because computer science and programming sounded incredibly boring compared to building circuits. During my years in IIT, I would have sworn that I would not be caught dead in a software company. My father still reminds me of that once in a while.

A typical engineering college curriculum (in Electronics) will have the following courses all in one semester, taken from a real world example: Mobile Communications, Satellite Communications, C Programming, Image Processing and Professional Ethics. The lucky recipients of that education paid enormously for the privilege. Take that Professional Ethics course. Does anyone believe that the student who went through that class and got 90% in their exams is more ethical than someone (like me) who never had the good fortune to attend a formal ethics class?

My basic point is this: most knowledge, particularly higher order knowledge you use in an engineering or software job, is highly contextual. The *motivation* to learn something (for most people) is a function of the context they are in. College is *not* always a great context, unfortunately. In fact, for most students, college is not a very good context.

All of the above applies even when college teaches well. I will not dwell on the fact that 90% of engineering colleges in India do not have anything remotely resembling decent faculty, and basic stuff like Linear Algebra are not taught well.

On the "bonded labour" comment, it is understandable, considering the society we live in India. We do not require any sort of commitment, bond, nothing at Zoho Corp. We have examples of students joining, and then dropping out in 1 month because some uncle told them to go to college or after 6 months because of pressure from their families to marry - unfortunately that still happens to some of our female students. Students can leave at any time (and some do) even after joining the job. Now, tangentially on the subject of bonded labour, I have posted about the Jail College Phenomenon elsewhere. I believe modern education infantilizes students, and I believe our alternative treats students as the young adults they are, and therefore they actually grow up faster. This is a separate topic which I hope to write about some day.

We invest heavily in our students. Our faculty to student ratio would be among the highest anywhere. We pay students during their time learning. Why do we do all that? Because we believe actually paying them, and the knowledge on the part of the students that there is a job waiting for them, and the extensive opportunity to interact with people doing a real world job on a daily basis, create the *context* in which they have the motivation to learn. That context really matters. Our students actually become primary breadwinners for their families fairly quickly, and the resulting sense of self-worth is incalculable.

Finally, would I put my own son in this? Absolutely (he has to recover from autism first, but that is a whole another topic).

Friday, March 05, 2010

ராமதுரைக்கு தேசிய அறிவியல் விருது

ராஷ்ட்ரிய விஞ்ஞான் ஏவம் பிரதியோகிகி சஞ்சார் பரிஷத் (தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் தொடர்புக் கழகம்) என்ற மத்திய அரசின் அமைப்பு அறிவியல் வளர்ச்சிக்குப் பங்காற்றுபவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருது அளித்து கௌரவிக்கிறது. இந்த ஆண்டு, ”புத்தகம் மற்றும் இதழ்கள் மூலம் அறிவியல், தொழில்நுட்ப தகவல் தொடர்பில் தனித்துவ ஈடுபாட்டு முயற்சிக்கான தேசிய விருது” என்ற பிரிவின்கீழ் கிழக்கு பதிப்பக எழுத்தாளர் ராமதுரைக்கு விருது கிடைத்துள்ளது. ராமதுரையைப் போன்றே ராஜஸ்தானைச் சேர்ந்த டாக்டர் டி.டி.ஓஸா என்பவருக்கும் இந்த விருது தரப்பட்டுள்ளது. (மீதமுள்ள விருதுகள் விவரம் இங்கே.) கீழே உள்ள படத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் பிருத்விராஜ் சவான் விருதைத் தர ராமதுரை பெற்றுக்கொள்கிறார்.


கிழக்கு பதிப்பகம், பிராடிஜி புக்ஸ் என்ற இரண்டு பதிப்புகளிலும் ராமதுரை எழுதியுள்ள அறிவியல் புத்தகங்கள் காரணமாக அவருக்கு இந்த விருது (ரூபாய் ஒரு லட்சம்) கிடைத்திருப்பது, எங்களுக்கெல்லாம் மிகுந்த பெருமை தரக்கூடிய ஒன்று.

ராமதுரை தினமணி பத்திரிகை ஆசிரியர் குழுவில் வேலை செய்தவர். ஐராவதம் மகாதேவன் தினமணி ஆசிரியராக இருந்தபோது அறிவியலுக்கு எனக் கொண்டுவரப்பட்ட வார இதழ் சப்ளிமெண்டின் பொறுப்பாசிரியராக இருந்தவர்.

இந்தச் சிறப்பான விருதைப் பெற்ற ராமதுரையை நாம் அனைவரும் பாராட்டி, வாழ்த்துவோம்.

ராமதுரை எழுதியுள்ள புத்தகங்கள்

(இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால், அறிவியல் எழுதினாலும் அங்கீகாரம், விருது ஆகியவை கிடைக்கும்! எனவே தமிழில் அறிவியல் புத்தகங்கள் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் உடனடியாக என்னைத் தொடர்புகொள்ளவும்!)

அமர சித்திரக் கதைகள் - தமிழில்

   
   

முன்னொரு காலத்தில் அமர சித்திரக் கதைகள் தமிழில் வந்தன. பழைய காலத் தமிழில். ஒரு பத்துப் புத்தகங்கள் வந்திருந்தால் பெரிது. அதில் னை, லை எல்லாம் பழைய மாடல் எழுத்துகள். எம்.ஜி.ஆர் சீர்திருத்தத்துக்கு முந்தையவை. கம்ப்யூட்டர் டைப்செட்டிங் காலத்துக்கு முந்தையவை. எழுத்துகள் கொட்டை கொட்டையாக கையால் எழுதப்பட்டிருக்கும்.

இப்போது அமர சித்திரக் கதை நிறுவனமும் நியூ ஹொரைஸன் மீடியாவும் இணைந்து இந்தப் புத்தகங்களுக்குப் புத்துயிர் ஊட்டுகின்றன. இன்று ஆங்கிலத்தில் மட்டும் (கொஞ்சம் ஹிந்தி...) இருக்கும் இந்தப் புத்தகங்களை தமிழகக் குழந்தைகள் மனம் மகிழும் வகையில் இன்றைய தமிழில், எளிய நடையில் கொண்டுவருகிறோம். முதல் நான்கு புத்தகங்கள் இப்போது வெளியாகியுள்ளன. 32 பக்கங்கள் கொண்ட இந்த கிரவுன் 1/4 வண்ணப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் விலை ரூ. 35 மட்டுமே.

குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்த இந்தப் புத்தகங்கள் நிச்சயம் உதவும் என்று மனப்பூர்வமாக நம்புகிறோம். இனி வரும் மாதங்களில் மேலும் மேலும் புதிய புத்தகங்கள் வெளியாகத் தொடங்கும்.

Tuesday, March 02, 2010

Zoho பல்கலைக்கழகம்

10 நாள்களுக்குமுன் Zoho அலுவலகம் சென்றதைக் குறிப்பிட்டிருந்தேன். அப்போது அவர்களது திட்டமான Zoho University பற்றிக் கேள்விப்பட்டேன்.

பொதுவாகவே மென்பொருள் நிறுவனங்களுக்கு உள்ள பிரச்னை இது. இந்தியாவில் திரும்பிய திசை எல்லாம் மென்பொருள் நிறுவனங்கள். இதில் ஃபைவ் ஸ்டார் நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல், காக்னசண்ட், ஆக்சென்ச்சர் ஆகியவை தொடங்கி அதிகம் சத்தம் போடாமல் நடக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கேப்டிவ் பேக் ஆஃபீஸ் நிறுவனங்கள் வரை பலவும் உண்டு. இவை அனைத்துக்கும் பிராண்ட் பெயர் உண்டு. எனவே பொதுவாக வேலை தேடும் இளைஞர்கள் இந்த நிறுவனங்களுக்கு வரிசையில் சென்று நிற்பார்கள்.

இன்ஃபோசிஸின் மோகன்தாஸ் பாய் சொல்வதைப் பாருங்கள்: எங்களுக்கு ஆண்டுக்கு 3 லட்சம் விண்ணப்பங்கள் வருகின்றன. அதில் 35,000 பேரை மட்டுமே தேர்ந்தெடுத்து பயிற்சிக்கு எடுத்துக்கொள்கிறோம். அதில் பாதி பேர் சில மாதங்களிலேயே தாங்களாகவே விலகிவிடுகிறார்கள் (அதிகச் சம்பளத்துக்கு மற்றொரு கம்பெனி) அல்லது எங்களால் வெளியேற்றப்படுகிறார்கள். ஆக 18,000 பேர் மட்டுமே நெடுநாள்கள் வேலை செய்கிறார்கள்.

இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் நல்ல பொறியியல் கல்லூரிகளுக்குப் போய் திறமையான ஆட்களை அள்ளிக்கொண்டு போய்விடுகிறார்கள். இதுபோன்ற நிலையில் Zoho-வின் முயற்சி சுவாரசியமானது. அவர்களும் கிடைக்கும் எல்லா இடத்திலும் ஆட்களை வேலைக்குச் சேர்த்தாலும், ஒரு புது முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அடிப்படையில் யாரை வேண்டுமானாலும் ‘சராசரிக்கும் சற்றே அதிகமான திறன் கொண்ட’ மென்பொருளாளர் ஆக்கலாம் என்பதுதான் Zoho-வின் நம்பிக்கை. ஆனால் நான்கு ஆண்டுகள் நம்மூர் பொறியியல் கல்லூரிகளில் என்ன நடக்கிறது? உருப்படியாக ஒன்றும் இல்லை. மாணவர்கள் தத்தம் துறைகளில் ஒன்றையும் கற்றுக்கொள்வதில்லை. Soft Skills என்று ஒன்றும் கிடையாது. ஆனால் லட்சக்கணக்கில் காசு கொடுத்துப் படித்த ஒரே காரணத்தால் எக்கச்சக்கமாக சம்பளம் வேண்டும் என்று மட்டும் எதிர்பார்க்கிறார்கள்.

Zoho, நேராக 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களை பயிற்சிக்கு எடுத்துக்கொள்கிறது. ஆனா இந்தக் காலத்தில் யார்தான் 12-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தப் பார்க்கிறார்கள்? நாட்டில் இருக்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அல்லவா படையெடுக்கிறார்கள்?

ஏழைக் குடும்பங்கள், பிற்படுத்தப்பட்ட பின்னணியில் வந்தவர்கள் மட்டுமே விதிவிலக்கு. அவர்களால் மேற்கொண்டு படிக்க முடிவதில்லை. அப்படிப்பட்ட மாணவர்களை சோதித்து, அவர்களைப் பயிற்சிக்கு எடுக்கிறது Zoho University. அங்கே அவர்களுக்கு உதவித் தொகை கொடுக்கப்பட்டு, அடிப்படைக் கணிதம், ஆங்கிலம், கணினி அல்காரிதம் ஆகியவற்றில் பயிற்சி தரப்படுகிறது. அத்தனையும் தமிழில்! இதனால் மாணவர்கள் பயப்படவேண்டியதில்லை.

வெறும் 18 மாதங்களில் இந்த மாணவர்களை மென்பொருள் எழுதும் திறன் கொண்டவர்களாக ஆக்கிவிடுகிறோம் என்கிறார் டீன் ராஜேந்திரன். ஊக்கம் கொண்ட பயிற்சியாளர்களை நான் சந்தித்துப் பேசினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

கல்லூரிப் படிப்பு என்பது முக்கியமானது. அங்கே கிடைக்கும் அனுபவம் முக்கியமானது. ஆனால் இன்றைய கல்லூரிகள் இருக்கும் நிலையில், மிகச் சில கேம்பஸ்கள் தவிர்த்து மீதி இடங்களில் கல்வி என்று எதுவும் கற்றுத்தரப்படுவதே இல்லை.

ஆனால் மாறாக Zoho University போன்ற இடங்களில் நிச்சயமாக நல்ல தரமான கல்வி கற்றுத்தரப்படுகிறது என்பது உறுதி. ஏனெனில் அவர்கள் கைக்காசைச் செல்வழித்து, உதவித்தொகை கொடுத்து கல்வி கற்றுத்தருகிறார்கள். அந்தக் கல்வியைப் பெற்ற மாணவர்களை அவர்கள் உலகத்தரம் வாய்ந்த மென்பொருள்களை உருவாக்குவதில் ஈடுபடுத்தப்போகிறார்கள். எனவே ஏனோதானோவென்று கற்றுத்தந்தால் பிரயோஜனம் இல்லை.

Infosys கூட மைசூரில் மாபெரும் பயிற்சி மையம் அமைத்துள்ளனர். ஆனால் ஒரு வித்தியாசம். இன்ஃபோசிஸ் பொறியியல் படித்தவர்களை மட்டுமே பெரும்பாலும் பயிற்சிக்குச் சேர்க்கிறது. குறைந்தது பட்டப் படிப்பு படித்திருக்கவேண்டும். காக்னசண்ட் போன்ற இடங்களில் பி.எஸ்சி இயல்பியல், கணிதம் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கிறது. ஆனால் யாருமே 12-ம் வகுப்பு போதும் என்று யோசித்ததில்லை. அதுவும் Zoho தமிழகத்தின் கிராமப்புறங்கள் வரை சென்று பின்தங்கிய வகுப்பு மாணவர்களைத் தேடிப் பிடிக்கிறார்கள்.

12-ம் வகுப்பு முடித்துள்ளவரா? மேற்கொண்டு படிக்க உங்கள் சூழ்நிலை உதவவில்லையா? இந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்: univ@zohocorp.com