அவ்வப்போது ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஒரு பட்டியல் கொடுக்கும். அதில் யார் நம்பர் 1, யார் நம்பர் 2 என்று போட்டிருக்கும். பில் கேட்ஸ், வாரன் பஃபட், லக்ஷ்மி மிட்டல், முகேஷ் அம்பானி, அனில் அம்பானி....
பலர் என்னிடம் இதைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். நிஜமாகவே இந்த ஆசாமிகளிடம் இவ்வளவு பணம் உள்ளதா என்று. 50 பில்லியன் டாலர் இவர்களது சொத்து மதிப்பு என்றால் என்ன பொருள்? இன்று இவர் நினைத்தால் 50 பில்லியன் டாலரை அள்ளிக்கொடுத்துவிட முடியுமா?
முடியாது என்பதுதான் பதில்.
முதலில் இவர்களுடைய சொத்து மதிப்பை ஃபோர்ப்ஸ், அல்லது பிறர், எவ்வாறு கணிக்கிறார்கள்? இந்தக் கணிப்புகள் முழுமையானவை கிடையாது. பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் (listed public companies) இவர்களிடம் எத்தனை சதவிகிதப் பங்குகள் இருக்கின்றன என்பதை வைத்து, ஒரு பங்கின் இன்றைய விலை என்பதைக் கணக்கிட்டு, ஓர் எண்ணை உருவாக்குகிறார்கள். இது 'நிஜமான' பணம் அல்ல. பிரைவேட் லிமிடட் நிறுவனங்கள், வீடு, நிலம், வங்கிக் கணக்கு ஆகியவற்றை இந்தக் கூட்டல் கழித்தலில் முறையாகச் சேர்ப்பதில்லை.
ஒருசில 'ஃபைனான்ஷியல் எஞ்சினியரிங்' காரணங்களால் திடீரென ஒருவரது சொத்து மதிப்பு உயரும். எலுமிச்சை சாற்றால் ஓடும் கார் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்ஸ் நாட்டில் யாரோ சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். உடனே அனில் அம்பானி, ரிலையன்ஸ் எலுமிச்சம்பழம் லிமிடெட் என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்குகிறார். இந்த நிறுவனத்தில் அனில் அம்பானி முதலீடு செய்வது ரூ. 100 கோடி. At par. அவருக்கு மொத்தம் 10 கோடி பங்குகள், ஒரு பங்கு ரூ.10 என்ற விகிதத்தில் அந்த நிறுவனம் தருகிறது.
அனில் அம்பானி எலுமிச்சை சாறு தயாரித்து கார் விடப்போகிறார் என்ற தகவல் ஊரெல்லாம் பறக்கிறது. உடனே நான்கைந்து இன்வெஸ்ட்மெண்ட் வங்கிகள், 'எனக்கும் பங்கு கொடு' என்று கேட்டு வருகின்றன. தருகிறேன் என்கிறார் அனில் அம்பானி. ஆனால் பங்கு ஒன்று ரூ. 500 என்கிறார். சரி என்று ஒப்புக்கொண்டு ரூ. 500 கோடி கொடுத்து, ஒரு கோடி பங்குகளைப் பெற்றுக்கொள்கிறது 'நகர வங்கி'.
இப்பொழுது அனில் அம்பானியிடம் 10 கோடி பங்குகள், நகர வங்கியிடம் 1 கோடி பங்குகள். கடைசியாக நடந்த ஷேர் டிரான்சாக்ஷனில் ஒரு பங்கு ரூ. 500 என்று போயிருப்பதால், அனில் அம்பானியிடம் உள்ள 10 கோடி பங்குகளின் மதிப்பு ரூ. 5,000 கோடி.
அனில் அம்பானி மொத்தமாக உள்ளே கொண்டுவந்ததே ரூ. 100 கோடிதான். ஆனால் இப்போதோ அவரது நிகர மதிப்பு பலூன் போல ஊதிப் பெருத்துவிட்டது. அதாவது இனி, எலுமிச்சைகளைப் பயிர் செய்ய நிலம் வாங்கி, எலுமிச்சை போட்டு, அதை அறுவடை செய்து, அதிலிருந்து சாறு பிழிந்து, பிரான்ஸ் நாட்டு கார் நாடெங்கும் ஓடும்போது ரிலையன்ஸ் எலுமிச்சை லிமிடட் காட்டில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்பதால் இன்றே அதன் பங்குகளுக்கு இத்தனை மதிப்பைக் கொடுக்க நகர வங்கி தயாராக உள்ளது.
இன்னும் எலுமிச்சையே பயிர் செய்ய ஆரம்பிக்கவில்லை. ஆனால் அனில் அம்பானி தனது நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட விரும்புகிறார். அனில் கம்பெனி என்றால் கண்ணை மூடிக்கொண்டு பணத்தைப் போடலாம் என்று மக்களும் நினைக்கிறார்கள். புக் பில்டிங் ரூட் என்று சொல்லி, செபியிடம் அனுமதி வாங்கி, ரெட் ஹெர்ரிங் பிராஸ்பெக்டஸ் கொண்டுவருகிறார் அனில். யாரும் அதைப் படிப்பதில்லை. ஆனால் பங்கு ஒன்றுக்கு ரூ. 950-1050 என்ற ரேஞ்சில் இருக்கும் என்பதை மட்டும் கவனிக்கிறார்கள்.
ஆளாளுக்கு கூட்டம் அலைமோதுகிறது. அனில் மேற்கொண்டு கொடுப்பதாகச் சொல்வது 1 கோடி பங்குகளை. ஆனால் அதைப்போல நூறு மடங்கு கேட்டு மக்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள். கடைசியில் பங்கு ஒன்றுக்கு ரூ. 1000 என்று தீர்மானித்து வழங்குகிறார் அனில் அம்பானி.
இப்போது, அனிலிடம் இருக்கும் 10 கோடி பங்குகளும் சேர்ந்து சந்தை மதிப்பு ரூ. 10,000 கோடி. இதுதான் ரூ. 100 கோடி, ரூ. 10,000 கோடி ஆன கதை!
பங்குகள் மும்பை, தேசியப் பங்குச்சந்தைக்கு வருகின்றன. செகண்டரி மார்க்கெட்டில் ஆளாளுக்கு ஏற்றிவிட, பங்கு ஒன்று ரூ. 2,000-ல் பறக்கிறது. அனில் கையில் இருக்கும் பங்குகளின் மதிப்பு இப்போது ரூ. 20,000 கோடி.
பிரகாஷ் காரத் ஏதோ சொல்கிறார் அல்லது அமெரிக்காவில் ஏதோ ஒரு வங்கி திவாலாகிறது. அடுத்த நாள் பங்குச்சந்தை தடாரென கீழே விழுகிறது. ரிலையன்ஸ் எலுமிச்சை லிமிடட் பங்குகளின் விலை ரூ. 2,000-லிருந்து ரூ. 1,500க்குக் கீழே விழுகிறது. உடனே எகனாமிக் டைம்ஸ், லூசுத்தனமாக, அனில் அம்பானியின் சொத்தில் ரூ. 5,000 கோடி காணாமல் போய்விட்டது என்று அழுகிறது.
அத்தனையுமே 'தாள் பணம்'. இதில் 100 கோடி மேலே போனால் என்ன, 400 கோடி கீழே போனால் என்ன?
இப்படித்தான் தினம் தினம் பல லட்சம் கோடிகள் 'உருவாக்கப்பட்டு', 'அழிக்கப்படுகின்றன'.
ஆனால் இவையெல்லாமே fraud என்று நினைக்கக்கூடாது. ஒரு நிறுவனம் நன்றாகக் காலூன்றி, உருப்படியாக ஆண்டாண்டுக்கு வருமானத்தைக் கொடுக்கிறது, அந்த வருமானம் ஆண்டாண்டுக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது, லாபமும் அதிகமாகிக்கொண்டே போகிறது என்றால், அந்த நிறுவனத்தின் அடிப்படை - fundamentals - நன்றாக உள்ளது என்று பொருள். P/E விகிதம் என்று சொல்வோம். ஒரு குறிப்பிட்ட துறையில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டை வைத்து அதன் ஒவ்வொரு பங்கும் எவ்வளவு சம்பாதித்துக் கொடுக்கிறது என்பதைக் கணிக்கலாம். அந்தப் பங்கின் இப்போதைய சந்தை விலை என்ன என்பது தெரியும். அந்தப் பங்கின் புக் வேல்யூ - அதன் சொத்துகள், கடன்கள் ஆகியவற்றை வைத்து உருவாக்கப்படும் மதிப்பு என்ன என்பதைக் கணிக்கலாம். அதனை வைத்து அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கும் குறைந்த பட்சம் என்ன விலை போகலாம் என்பதைத் தீர்மானிக்கலாம்.
அப்படி வரும் மதிப்புகூட உடனடியாகப் பணமாக மாற்றக்கூடியதல்ல.
உங்கள் கையில் ஒரு கிலோ தங்கம் இருந்தால், அதை உடனடியாக வாங்கிக்கொள்ள ஆள் இருந்தால்தான் அந்தத் தங்கத்துக்கு மதிப்பு. ஆளே இல்லாத தீவு ஒன்றில் உங்கள் கையில் ஒரு கிலோ அல்லது நூறு கிலோ தங்கமே இருந்தாலும் அதற்கு மதிப்பு பூஜ்யம்தான்.
அதேபோல பில் கேட்ஸ், தன் கையில் இருக்கும் அத்தனை பங்குகளையும் விற்க சந்தைக்கு வருகிறார் என்றால், அதை வாங்க யாருமே இல்லை என்றால் விளைவு என்னாகும்? பில் கேட்ஸ் கையில் வெறும் பேப்பர்தான் மிஞ்சும்.
எனவே அடுத்தமுறை இவர் சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலர், அவர் சொத்து மதிப்பு எங்கேயோ போய்விட்டது என்றால் அதைப் பார்த்து அதிர்ச்சி அடையாதீர்கள்.
ரியல் மதிப்பு என்பது - அதாவது இன்றைக்கு விற்று பைசாவாகக் கையில் கிடைப்பது - ஃபோர்ப்ஸ் போன்றவர்கள் சொல்லும் நம்பரைவிட மிகமிகக்குறைவாகத்தான் இருக்கும்.