Thursday, October 23, 2014

கத்தி கபடா

நான் கத்தி படத்தை இன்னமும் பார்க்கவில்லை. இன்று திமுக அன்பர்கள் ஒரு சின்ன பிட் ஃபேஸ்புக்கில் போட்டிருந்தார்கள். அதில் 2ஜி பற்றி வருகிறது. மேலும் தொலைக்காட்சியில் டான்ஸுக்கு மார்க் போடுவீர்களே தவிர, ஒரு விவசாயியின் தற்கொலையைப் பற்றிப் பேச மாட்டீர்கள் என்று வருகிறது. அது கலைஞர் டிவியின் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியைக் குறிக்கிறது என்று அன்பர்கள் கவலைப்படுகிறார்கள். அவர்கள் கவலை அவர்களுக்கு. என் கவலை எனக்கு.

அந்த ஆறு நிமிடப் பேச்சு முழுவதுமே அபத்தம். எதை சினிமாட்டிக்காகச் சொன்னால் மக்கள் கை தட்டுவார்கள், வசூல் அள்ளும் என்பதுதான் தமிழ் சினிமாவின் இலக்கணம். யாருக்கும் மனத்தில் எதுவும் பதியப்போவதில்லை. என் பங்குக்கு, அதில் உள்ள சில உளறல்களை மட்டும் குறிப்பிடுவதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

(1) ஆறு நதிகளை மூடிட்டாங்க, இத்தனை குளத்தை மூடிட்டாங்க, அத்தனை ஏரியை மூடிட்டாங்க....

யாருங்க சார்? கார்ப்பரேட்டா? இந்த கார்ப்பரேட் என்ற பாவப்பட்ட வில்லன் இந்தக் கோமாளிகளிடம் மாட்டிக்கொண்டு படவேண்டிய துன்பம் இருக்கிறதே, தாங்க முடியவில்லை. நீர்வளம் காக்கப்படாமல் போனதில் பெரும் பங்கு அரசுகளுக்கும் கிராம மக்களுக்கும் விவசாயிகளுக்கும்தான். கார்ப்பரேட் பாவிகளை மன்னித்துவிடுவோம். சில இடங்களில் ஆற்று நீரை மாசுபடுத்தியிருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் அதை விடுத்துப் பார்த்தால் மக்கள் தங்கள் பாரம்பரிய நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறியுள்ளனர். மழை நீர் சேமிப்பு என்பதை கிராமங்கள் முழுவதுமாக மறந்தன. இன்று திண்டாடுகிறார்கள். ஆற்று நீரைப் பொருத்தமட்டில், மேல்நிலையில் அதிக நிலம் விவசாயத்துக்கு வருவதால் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு நீர் கிடைப்பதில்லை. நகரங்கள் பெரிதாகும்போது நகர மக்கள் குடிக்கத் தண்ணீர் வேண்டும். ஒரு சில வகைத் தொழிற்சாலைகளுக்கு நிறைய தண்ணீர் தேவை. எலெக்ட்ரானிக் சிப், சிமெண்ட், உரம் போன்ற அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் நீர் தேவை. மொபைல் ஃபோன் வேண்டாம், வயலுக்கு உரம் வேண்டாம், வீடு கட்ட சிமெண்ட் வேண்டாம் என்று விஜய் உரக்கச் சொல்லட்டும். தண்ணீரை வயல்கள் வேண்டும் அளவுக்குத் தந்துவிடலாம்.

நீர்ப் பங்கீடு என்பது முக்கியமான பிரச்னை. நீண்டகால நோக்கில் நீரைச் சேமித்துவைக்கும் திட்டங்களில் முதலீடு செய்வது முக்கியமானது. ஆனால் அபத்தக் களஞ்சியமாய் வீரவசனம் பேசிவிட்டுப் போவதில் பிரயோசனமே இல்லை.

(2) மீத்தேன் பிரச்னை

இது உண்மையான பிரச்னை. நாகை/தஞ்சை மாவட்டத்தில் நரிமணம் பெட்ரோலியம் தோண்டுவதால் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனைச் செய்தது ஏதோ ‘தனியார்’ கார்ப்பரேட் அல்ல. நம் அரசின் ஓ.என்.ஜி.சி. அதாவது நமக்கு நாமே குழிதோண்டிக்கொள்ளும் திட்டம் இது. ஆயில் வேண்டுமென்றால் வயல்கள் பாதிப்படையும். வேறு வழியே இல்லை. பிரச்னை, அரசும் அரசியல்வாதிகளும் மக்களிடம் கலந்து பேசாமல் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதன் விளைவு. இதில் அரசியல்வாதிகளை நோக்கிச் சுட்டாமல், யாரோ ஒரு தனியார் கார்ப்பரேட்மீது கை காண்பித்துவிட்டு தப்பிப்பது சாமர்த்தியம் என்பதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை.

மீத்தேனைக் கடத்தப் பதிக்கும் குழாய்கள் வயல்கள் ஊடாகச் செல்லலாமா கூடாதா? சமீபத்தில் ஆந்திராவில் நடந்த விபத்தைப் பார்க்கும்போது, இந்தக் குழாய்களை வயல்கள் வழியாகப் பதிக்காமல் சாலைகள் அல்லது தரிசுகள் வழியாகப் பதிக்கலாம். எண்ணெய்க் குழாய்களும் எரிவாயுக் குழாய்களும் அமைப்பது முக்கியம். நம் விவசாயிகளுக்கும் இவை பயன் தரும். இதற்கும் போய் கார்ப்பரேட்டுகள்மீது எதற்குத் தாக்குதல்? மீத்தேன் வாயுக் குழாய் பதிக்கும் வேலையை அரசு நிறுவனமான கெயில்தான் செய்கிறது.

மாயவரத்தான் ஃபேஸ்புக் பதிவை அடுத்து, புதிதாக எழுதிச் சேர்த்தது:

“மீத்தேன் விவகாரம்” என்று நான் எழுதியதில், கொச்சியிலிருந்து பெங்களூருக்கு தமிழகம் வழியாக அரசு நிறுவனமான கெயில் நிறுவனம் பதிக்கும் குழாய்களைப் பற்றிய பிரச்னை என்று நான் எடுத்துக்கொண்டேன். மாறாக படம், தஞ்சாவூர் மாவட்டத்தில் கோல் பெட் மீத்தேன் எடுக்கும் திட்டம் குறித்துப் பேசுகிறது. அதில் ஒரு தனியார் கம்பெனி ஈடுபட்டிருக்கிறது. தரையிலிருந்து ஹைட்ராலிக் பிராக்கிங் மூலம் மீத்தேன், ஷேல் எரிவாயு ஆகியவற்றை எடுக்கும்போது கட்டாயமாக அருகில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படும். நரிமணத்தில் எண்ணெய் எடுக்கும்போது இதுதான் நிகழ்ந்தது. இங்கு அரசோ, தனியாரோ, இதனைச் செயல்படுத்துவதை அனுமதிக்காமல் மக்கள் போராடினால், அதில் மக்கள் பக்கம் முழு நியாயம் உள்ளது.

(3) கோக கோலா, தாமிரவருணி

நியாயமான பொங்குதல். அதே கோக கோலா கம்பெனிக்காக விஜய் விளம்பரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்று நான் சொல்ல மாட்டேன், வினவு சொல்லும். தண்ணீரைப் பங்கிடுவதில், கோக கோலா போன்ற கம்பெனிகளுக்கு முதல் உரிமையாக இல்லாமல் கடைசி உரிமையாகத் தருவதில் எனக்குப் பிரச்னை இல்லை. எந்த அளவுக்குத் தண்ணீர் எடுக்கிறார்களோ அதைவிட அதிகமாகச் சேமிக்கவேண்டும் என்ற கடுமையான கட்டளைகளை அவர்களுக்கு இடலாம்.

(4) தொழிற்சாலையே வேண்டாம்னு சொல்லலை... கேரட்டிலிருந்து செய்யும் ஃபேர்னெஸ் கிரீம் வேண்டாம்னு சொல்றோம், etc. etc.

யார் எந்தத் தொழிற்சாலையைக் கட்டலாம், கூடாது என்று சொல்லும் உரிமை கதாநாயகர்களுக்கு வேண்டுமானால் சினிமாவில் இருக்கலாம். அரசியலமைப்புச் சட்டம் நமக்குக் கொடுத்துள்ள உரிமைகளுள் ஒன்று, சட்டத்துக்கு உட்பட்டு எந்தத் தொழிலையும் செய்து பணமீட்டலாம் என்பது. எனவே எதற்குத் தொழிற்சாலை கட்டவேண்டும், எதற்குக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் எந்தப் பொருளைப் பயன்படுத்துவது, எதை பகிஷ்கரிப்பது என்று யார் வேண்டுமானாலும் முடிவு செய்யலாம்.

(5) 5,000 கோடி கடன் வாங்கிய ஒரு தொழிலதிபர், இல்லைன்னு கைவிரிச்சான். தற்கொலை பண்ணிக்கலை. கடன் கொடுத்த வங்கி அதிகாரிகளும் தற்கொலை செய்துக்கலை. ஆனால் 5,000 வாங்கின விவசாயி, பூச்சி மருந்து குடிச்சுச் சாகறான்.

சிறு விவசாயி, சிறு தொழில்முனைவோன், நடுத்தர வர்க்க மாதச் சம்பளக்காரன் என்று எல்லோருக்குமே கடன்களைக் கட்டுவதில் உள்ள சிரமம் பெரும் பணக்காரர்களிடம் இல்லை. முதலில் விஜய் மல்லையா நேரடியாகக் கடன் வாங்கவில்லை. அவருடைய நிறுவனம் வாங்குகிறது. இந்த நிறுவனங்களுக்கு limited liability companies என்று பெயர். இந்த நிறுவனத்தின் கடன்களுக்காக இந்த நிறுவன உரிமையாளர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடியாது. (அவர்கள் சொந்த கேரண்டி கொடுத்திருந்தால் மட்டுமே இந்தப் பிரச்னை எழும்.) அதே உரிமையாளர்கள் வேறு சில கம்பெனிகளை நடத்தி அவற்றில் லாபம் சம்பாதித்து சந்தோஷமாக இருக்கலாம். கம்பெனி சட்டம் இப்படித்தான் சொல்கிறது.

ஆனால் சொந்தப் பெயரில் கடன் வாங்கும்போது அதைக் கட்டவேண்டிய தேவை அந்தத் தனி நபரிடம் இருக்கிறது. அதனால்தான் வான் பொய்க்கும்போது அல்லது விவசாயம் திண்டாடும்போது கடன் ரத்து செய்யப்படுகிறது. மேலும் பல சிறு விவசாயிகளின் பிரச்னையே subsistence farming. அவர்களின் மிகச் சிறிய விவசாய நிலத்தில் கிடைக்கும் வருமானம் அவர்கள் உயிர் வாழப் போதுமானதல்ல. அவர்கள் விவசாயத்திலிருந்து வெளியேறுவதுதான் நல்லது. இதனை உணர்வுரீதியாக மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பது சரியல்ல.

ஆண்டுக்காண்டு விவசாயத்திலிருந்து மக்கள் வெளியேறுவதுதான் பொருளாதாரத்தின் அவசியமுமாகும். அவர்கள் திறன்களைப் பெற்று உற்பத்தி அல்லது சேவைத் துறையில் வேலை பெறவேண்டும். நாட்டின் 20% அல்லது அதற்குக்கீழ்தான் விவசாயத்தில் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் விவசாயிகளுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும், பிறருக்கும் நல்ல வேலை இருக்கும். விவசாயத்திலிருந்து வெளியேறிய மக்கள் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு ஒரே வருத்தமாக செண்டிமெண்ட் போடவேண்டிய அவசியம் என்ன? அவர்கள் அனைவரும் சரியான செயலைச் செய்திருக்கிறார்கள் என்று பாராட்டவேண்டும்.

விவசாயத்திலிருந்து வெளியேறுபவர்கள் சரியான திறன் இல்லாவிட்டால் நிச்சயம் கஷ்டப்படுவார்கள். எனவேதான் விவசாயக் கூலிகளாக இருப்போர் தம் பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து வேறு வேலைகளை நோக்கி அனுப்பவேண்டும். இதில் அமைப்புரீதியாகப் பல சிக்கல்கள் உள்ளன. லைக்கா, முருகதாஸ், விஜய் ஆகியோர் இந்தச் சினிமாவிலிருந்து பெறும் லாபத்தின் ஒரு பகுதியை விவசாயக் கூலிகளின் பிள்ளைகள் நன்கு படித்துத் திறன் பெறும் வகையில் செலவிட்டார்கள் என்றால் நாம் உண்மையிலேயே மகிழ்வோம்.

Tuesday, October 21, 2014

அம்மா மொபைல்?

நோக்கியாவின் சென்னைத் தொழிற்சாலை மூடப்படப்போகிறது. இந்த ஆலையின் தொழிற்சங்கத் தலைவர்கள் ஆட்சியாளர்களைச் சந்தித்து இந்த ஆலையைத் தமிழக அரசே எடுத்துக்கொண்டு, மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொருள்களில் செல்பேசியையும் ஏன் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்கிறார்கள். அம்மா மொபைல் என்று அழைக்கவேண்டுமாம்.

எந்த ஆலை மூடப்பட்டாலும் அது சோகமே. பல ஆயிரம் பேர் வேலை இழக்க நேரிடும். நோக்கியா வரி ஏய்ப்பு செய்துள்ளது என்று தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது. இதன் காரணமாக, நோக்கியா தன்னையே மைக்ரோசாஃப்டுக்கு விற்கும்போது இந்த ஆலையையும் சேர்த்து விற்க முடியவில்லை. ஏனெனில் ‘தலைவலி’ ஒன்றை விலைக்கு வாங்க மைக்ரோசாஃப்ட் தயாராக இல்லை.
இந்நிலையில் சென்னை (திருப்பெரும்புதூர்) நோக்கியா தொழிற்சாலையின் எதிர்காலம் என்னவாக இருக்கலாம்?

(1) முற்றிலுமாக இழுத்து மூடுதல். இதனால் நோக்கியா பங்குதாரர்கள் பாதிப்படைவார்கள். ஆனால் அவர்களைப் பொருத்தமட்டில் ஜான் போனாலென்ன, முழம் போனாலென்ன நிலைதான். ஏதோ எப்படியோ கம்பெனியை மைக்ரோசாஃப்டுக்கு விற்று, கிடைத்த பணத்தை வாங்கிக்கொண்டுவிட்டார்கள். அவர்கள் இப்போது சென்னை ஆலையை மறந்தேபோயிருப்பார்கள்.

அடுத்து தொழிலாளர்கள். தனிப்பட்ட முறையில் வேலையை இழப்பது என்பது எப்போதுமே ஒரு நபருக்குக் கடினமானதுதான். அந்த 4,000/5,000 ரூபாயை நம்பித்தான் ஒரு குடும்பம் இருக்கிறது. ஆனால் அதற்காக அந்த ஆலையை அப்படியாவது திறந்து வைத்திருக்கவேண்டும் என்று சொல்வது சரியாகத் தெரியவில்லை. இந்தத் தொழிலாளர்கள் வேறு வேலை தேடிப்போவதுதான் உசிதம். நோக்கியா ஆலையில் வேலை செய்தவர் என்பதால் வேறு மின்னணுப் பொருள் உற்பத்தி ஆலையில் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். கிடைக்கும் வேறு வேலையை எடுத்துக்கொண்டு, சிறிது சிறிதாக வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவேண்டும்.

(2) அரசு இந்த ஆலையைக் கையகப்படுத்துதல். இதைவிட அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஒரு தனியார் நிறுவனமே, அதுவும் ஒரு காலத்தில் மொபைல் உலகைக் கட்டியாண்ட ஒரு நிறுவனமே இம்மாதிரியான சந்தையில் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் அரசு முதல் நாளே ஆடிப்போய்விடும். எத்தனை கோடியை இதில் கொட்டினாலும் அரசுக்கு ரிட்டர்ன்ஸ் இருக்கவே இருக்காது. நம்மூர் இடதுசாரிகள் இதைச் சிந்திக்கவே மாட்டார்கள். உண்மையில் இந்த ஆலையில் வேலை இழக்கப்போகும் அனைவருக்கும் மாதா மாதம் சம்பளத்தை வெறும் உதவித்தொகையாகக் கொடுத்தால் அரசுக்கு என்ன பனம் செலவாகுமோ அதைப் போலப் பல மடங்கு பணம் இந்த ஆலையைக் கையகப்படுத்தி நடத்துவதால் இழக்கப்படும். எனவே தொழிற்சங்கத் தலைவர்களின் ‘அம்மா மொபைல்’ திட்டத்தை நாம் எதிர்க்கவேண்டும்.

மேலும் இன்று ‘அம்மா’ எதிர்கொண்டிருக்கும் இருப்பியல் பிரச்னைகளில் ‘அம்மா மொபைல்’ போன்ற அற்புதத் திட்டங்களைச் செயல்படுத்த வாய்ப்பே இல்லை.

(3) வேறு தனியார் நிறுவனத்துக்கு இந்த ஆலையை விற்பது. இது நடக்கச் சாத்தியம் இப்போது குறைவு என்று தோன்றுகிறது. இன்று பெரும்பாலான ஃபோன்கள் சீனா, தாய்வான், கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. நோக்கியா தன் ஆலையை சென்னையில் அமைக்க முன்வந்தபோது அதனிடம் ஒரு பெரும் தொலைநோக்குத் திட்டம் இருந்தது. (அது உருப்படாமல் போனது என்பது வேறு விஷயம்.) எனவே வேண்டிய அளவு பணத்தை முதலீடு செய்ய அது அப்போது தயாராக இருந்தது. இன்றைய இந்திய மொபைல் ஃபோன் விற்பனையாளர்கள் எவ்வளவு பணத்தை ஓர் ஆலையில் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்படி அவர்கள் விரும்பியிருந்தால் இத்தனை நாள்களில் தமிழக அரசிடமும் நோக்கியாவிடமும் பேசியிருப்பார்கள். ஏமாற்றிய வரியை ஒழுங்காகக் கட்டிவிட்டு, ஆலையை விற்றுவிட்டுப் போகலாம் நோக்கியா. அப்படி வாங்க யாரும் தயாராக இல்லை என்பது தெரிகிறது.

(4) வேறு மின்னணுப் பொருளைத் தயாரிக்கும் ஆலையாக இந்த ஆலையை மாற்றுவது. இதுவும் சாத்தியமா என்று தெரியவில்லை.

கடைசியில், இந்தத் தொழிற்சாலையின் பல்வேறு இயந்திரங்கள் காயலான் கடைக்கு அடிமாட்டு விலையில் விற்கப்படப்போகின்றன என்றுதான் தோன்றுகிறது.


இதன் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் வெறும் போராட்டங்களை நிகழ்த்துவதால் பயன் ஏதும் இல்லை. தொலைக்காட்சி விவாதங்களில் இதனைக் காரணமாகக் காட்டி புதிய பொருளாதாரக் கொள்கையில் பயனற்ற தன்மை பற்றிப் பேசுகிறார்கள். லிபரல் பொருளாதாரக் கொள்கையில் ஆலைகள் திறக்கப்படும், மூடப்படும். எதுவும் சாசுவதம் கிடையாது. அவை உருவாக்கும் பொருள்கள் மக்கள் மத்தியில் பயன்பாட்டில் இருக்கும்வரைதான் அந்த நிறுவனத்துக்கு மதிப்பு. அதில் வேலை செய்வோருக்குச் சம்பளம். நோக்கியா தன் ஸ்ட்ரேட்டஜியில் பிழை செய்த காரணத்தால் மக்கள் நோக்கியாவை விட்டு நகர்ந்தார்கள். 

இந்த ஆலை தொடரவேண்டும் என்று விரும்பும் எத்தனை பேர் இந்த ஆலை உருவாக்கும் மொபைலை மட்டுமே வாங்குவோம் என்று சொல்லத் தயார்?

Creative destruction என்பது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்.

Wednesday, October 15, 2014

புத்தக வாசிப்பு வாரம்

இன்று காலை பிர்லா கோளரங்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். வாசிப்புத் திறன் மேம்பாட்டுக் கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்த நிகழ்ச்சியை நடத்தியது. புத்தக வாசிப்பைப் பரவலாக்கும் விதத்தில் பள்ளிக்கூடங்களில் புத்தக வாசிப்பு வாரம் என்று நடத்துகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொடக்க விழா இது. சென்ற ஆண்டு இதே நிகழ்ச்சிக்காக சில பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகளிடம் கதைகள் படித்துக் காண்பித்தேன். அவர்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு வண்ணக் கதைப் புத்தகம் கொடுத்தேன்.

இன்றைய நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் இரா.நடராசன், பாஸ்கர் சக்தி, விழியன் ஆகியோரும், சினிமா இயக்குநர் பா.ரஞ்சித்தும் கலந்துகொண்டனர். வேறு இருவர் கலந்துகொள்வதாக இருந்து சில அபத்த அரசியல் காரணங்களுக்காகக் கலந்துகொள்ளவேண்டாம் என்று வற்புறுத்தப்பட்டதால் மேடைக்கு வரவில்லை. அதில் ஒருவர் பார்வையாளராகக் கலந்துகொண்டு மாணவர்களுடன் பின்னர் உரையாடினார்.

விழா இறுதியில் நான் கோட்டூர் மாநகராட்சிப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களுடன் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தேன். மிக சுவாரசியமான கலந்துரையாடல் அது. அதிலிருந்து ஒரு சில துளிகள் மட்டும்:

* அனைவருக்கும் பிரிட்டானியா ஆரஞ்ச் கேக் பேக்கெட்டும் ஆப்பிள் ஜூசும் கொடுத்திருந்தார்கள். சில மாணவர்கள் குப்பைகளைக் கீழே போட்டிருந்தனர். நானும் சில மாணவர்களும் கீழே விழுந்துகிடந்த குப்பைகளையெல்லாம் எடுத்து குப்பைத்தொட்டியில் போடப்போனோம். உடனே அனைத்து மாணவர்களும் அருகில் இருந்த குப்பைகளைத் திரட்டி எடுத்துக்கொண்டனர். ‘பிரதமரின் தூய்மை இந்தியா’ திட்டம் பற்றி உடனே பலர் நினைவுகூர்ந்தனர்.

* படித்தால் நல்ல வேலை கிடைக்குமா என்ற கேள்வியை ஒரு மாணவி எழுப்பினார். வேலை என்றால் என்ன, படிப்புக்கும் வேலைக்கும் என்ன தொடர்பு ஆகியவை குறித்து விளக்கினேன். அவர்கள் அனைவரும் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளவேண்டும் என்றேன். அவர்கள் 12-ம் வகுப்பு வரும்போது இலவசமாக கம்ப்யூட்டர் தருவார்கள், அதனை அவர்கள் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்றேன். உடனேயே ஒரு மாணவன் “இப்பத்தான் அம்மாவை ஜெயிலில் போட்டுவிட்டார்களே, இனி கம்ப்யூட்டர் எப்படிக் கிடைக்கும்?” என்று கேட்டான். அதற்கு நான், வேறு யார் முதல்வராக இருந்தாலும் இந்தத் திட்டம் தொடரும், உங்களுக்கெல்லாம் கட்டாயமாக கம்ப்யூட்டர் கிடைக்கும் என்றேன். [இதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும்...] அந்த மாணவனும் இன்னும் சிலரும் இதனை நம்பவில்லை. இனி வரும் அரசுகளும் இப்போதிருக்கும் அரசும் தொடர்ந்து இந்த நற்செயலை மட்டுமாவது தொடர்ந்தால் நல்லது.

* நான் பேசிய அனைவருக்கும் சினிமா பிடித்திருக்கிறது, தொலைக்காட்சி பிடித்திருக்கிறது. ஆனால் உண்மையில் புத்தகங்கள் குறித்து அவர்களுக்கு அவ்விதமான சந்தோஷம் இல்லை. ஒரு சினிமாவைப் பார்க்கவேண்டும் என்று எதை வைத்துத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டேன். தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் திரை விமர்சனம் நிகழ்ச்சியை வைத்து என்று பலர் சொன்னார்கள். அதற்கு இணையான புத்தக விமர்சன நிகழ்ச்சி ஏதும் இல்லாதது ஒரு பெரிய குறைபாடுதான். தொலைக்காட்சியில் இல்லாவிட்டாலும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.

* நான் பேசிய மாணவர்கள், வகுப்பறை உண்மையிலேயே போரடிக்கிறது என்றார்கள். அனைவரும் தங்களுக்குப் பிடித்தமானவை என்று சொன்னது: விளையாடுதல், சினிமா பார்த்தல், தொலைக்காட்சி பார்த்தல், படம் வரைதல், பாட்டு கேட்டல், வெட்டிக்கதை பேசுதல். (வெட்டிக்கதை என்ற பதம் அவர்களுடையது. என்னுடையதல்ல.) புத்தகங்கள் அறிவைத் தரும், புத்தகங்கள் உன்னைச் சிறந்தவனாக்கும் என்றெல்லாம் சொல்லாமல், புத்தகங்களும் மகிழ்ச்சியைத் தரும் என்றேன். எம்மாதிரியான புத்தகங்களைப் படித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன் என்பதைப் பற்றி கோடிட்டுக் காட்டினேன். கையோடு கொண்டு சென்றிருந்த கிண்டில் கருவியை அவர்களிடம் கொடுத்து அதில் எம்மாதிரியான புத்தகங்களை வைத்துப் படித்துவருகிறேன் என்று காட்டினேன். தேவை: ஆளுக்கு ஒரு கிண்டில் போன்ற (புத்தகம் மட்டும் படிக்க உதவும்) கருவி + பல ஆயிரம் தமிழ்ப் புத்தகங்கள். சில லட்சம் மாணவர்களுக்கு இக்கருவியை இலவசமாகக் கொடுப்பதன்மூலம் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரலாம் என்று நினைக்கிறேன். (நடக்ககூடிய காரியமா என்று தெரியவில்லை...)

Monday, October 06, 2014

ராஜபாட்டை - தந்தி டிவி - நேர்காணல்கள்

நான் தந்தி தொலைக்காட்சியில் வாராந்திர நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறேன். இதுவரை ஐந்து பேருடன் பேசியிருக்கிறேன். அந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் யூட்யூபில் கிடைக்கின்றன.

அனைத்தையும் தொகுத்து என் வலைப்பக்கம் ஒன்றில் வைத்திருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தை எனக்கு எழுதி அனுப்புங்கள்.

சுப்பிரமணியன் சுவாமி, சத்குரு ஜக்கி வாசுதேவ், சரத்குமார், க்ரேஸி மோகன், விக்கு விநாயக்ராம் ஆகியோர் முதல் ஐந்து வாரத்தின் விருந்தினர்கள்.

நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிறு இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை செல்லும். கடந்த வார நிகழ்ச்சிகள்  சனி மதியம் மறு ஒளிபரப்பாகும்.

Friday, October 03, 2014

அமேசான் - நெட்ஃப்லிக்ஸ்


சமீபத்தில் படித்து முடித்த இரண்டு புத்தகங்கள், அமேசான், நெட்ஃப்லிக்ஸ் இரண்டு நிறுவனங்களும் உருவான கதையை விளக்குவன.

கடந்த சில ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றிய நிறுவனங்கள் சிலவற்றில் இவ்விரண்டையும் சொல்லலாம்.

நாம் பொருள்களை வாங்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியது அமேசான். அதன் தாக்கம் இந்தியாவில் தற்போது குறைவு என்றாலும் அடுத்த பத்தாண்டுகளில் இணையம் வழி வர்த்தகம்தான் கோலோச்சப்போகிறது என்பது தெளிவு. திரைப்படங்கள், தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் என்று கேளிக்கை நிகழ்ச்சிகள் அனைத்தையும் இப்போதும் இனியும் நாம் எப்படி நுகரப்போகிறோம் என்பதை முற்றிலுமாக மாற்றியமைத்த நிறுவனம் நெட்ஃப்லிக்ஸ். இந்தியாவில் அமேசானைப் பற்றித் தெரிந்தவர்களுக்குக்கூட நெட்ஃப்லிக்ஸ் பற்றித் தெரிந்திருக்காது. ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் அமேசானைவிட நெட்ஃப்லிக்ஸ்தான் இந்தியாவில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

அமேசான், நெட்ஃப்லிக்ஸ் என்றால் அந்த இரண்டு நிறுவனங்கள் மட்டுமல்ல. அவைபோன்ற, அவற்றின் வழிமுறையில் தொழிலில் இறங்கியிருக்கும் பிற நிறுவனங்களும்தான். ஆனால், இந்த இரண்டும் அவரவர் துறையில் முன்னோடிகள் என்பதால் அவர்கள்தான் தம் துறையின் பாதையைக் கட்டியமைக்கிறார்கள்.

மக்கள் வாங்கும் அனைத்துப் பொருள்களையும், அவர்கள் வீட்டில் இருந்தபடியே ஒரு க்ளிக்கில் வாங்க, பொருள்கள் அவரவர் வீடுகளுக்குக் போய்ச் சேரும் இணைய வணிக முறையை அமேசான்தான் உயர்ந்த இடத்துக்குக் கொண்டுசென்றது. இன்று நானும்கூடத்தான் இணையம் வழியாகத் தமிழ்ப் புத்தகங்களை விற்கிறேன். ஆனால் அமேசானும் நானும் ஒன்றாக முடியுமா? இது நிகர விற்பனை பற்றியதல்ல. அதன் அடிப்படையில் இருக்கும் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் தகவல்களிலிருந்து அவர்களுடைய விருப்பத்தைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போலப் பொருள்களை அவர்களிடம் கொண்டுசேர்ப்பது, பிற போட்டியாளர்களைவிட வாடிக்கையாளரின் தேவையை மிகச் சரியாக நிறைவேற்றுவது என்று பலவற்றைச் சொல்லலாம்.

அமேசான் புத்தகங்களை விற்பதிலிருந்து தொடங்கினாலும் இன்று பலவிதப் பொருள்வகைகளையும் விற்பனை செய்கிறார்கள். சோனி போன்றோர் மின்புத்தகங்களை அறிமுகப்படுத்தினாலும் அமேசானுக்கு மட்டும்தான் அதனை எப்படி வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லமுடியும் என்பது தெரிந்திருந்தது. இன்று கிண்டில் மின்புத்தகப் படிப்பான் கருவிக்குப் போட்டியாக சந்தையில் சொல்லிக்கொள்ளும் வகையில் ஒன்றுமே இல்லை. இது வெறும் கருவி வடிவமைப்பு பற்றியது மட்டுமல்ல. புத்தகம் படிப்பவர்களின் மனத்தைப் புரிந்து அவர்களுடைய தேவையை மிகச் சரியாக வடிவமைப்பது, அவர்கள் விரும்பும் அனைத்துப் புத்தகங்களையும் அவர்களிடம் கொண்டுசேர்ப்பது என அனைத்தையும் உள்ளடக்கியது.

கிண்டில் படிப்பான் இல்லாவிட்டால் இன்று நான் படிக்கும் புத்தகங்களின் ஒரு சிறு விழுக்காட்டுக்குமேல் நான் படித்திருக்க மாட்டேன். அச்சாகிக் காணாமல் போன பல புத்தகங்களுக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கிறது கிண்டில்.

அமேசான் எவ்வாறு உருவானது, அதனை உருவாக்கிய ஜெஃப் பேய்சோஸ் எப்படிப்பட்ட நபர், அமேசான் தன் நிலையை அடைந்தது எப்படி, அதன்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்னென்ன போன்ற பலவற்றையும் பிராட் ஸ்டோன் ஆராய்ந்து மிக அற்புதமாக இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். 

இந்தியாவின் ஃப்லிப்கார்ட், அமேசானின் தரத்திலானதா? அதன் அடிப்படைத் தொழில்நுட்பத்தால் அமேசானுடன் போட்டி போட முடியுமா? அமெரிக்காவில் சிறப்பாக ஒரு தொழிலைச் செய்வதாலேயே இந்தியாவிலும் அமேசானால் வெல்ல முடியுமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இனி வரும் காலத்தில்தான் நமக்குக் கிடைக்கும்.
அமேசான், லாபத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நடக்கும் கம்பெனி. அது தன் பணத்தையெல்லாம் மேற்கொண்டு தொழிலில் முதலீடு செய்துகொண்டே வருகிறது. ஜெஃப் பேய்சோஸால் அவரது பங்குதாரர்களைச் சமாளிக்க முடிகிறது. குறைந்தபட்சம் இப்போதைக்காவது. ஃப்லிப்கார்ட்டால் அது சாத்தியமா, இன்னும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை.

இணைய வர்த்தகத்தின் ஆர்வம் கொண்டவர் என்றால் நீங்கள் கட்டாயம் இந்தப் புத்தகத்தைப் படித்தே ஆகவேண்டும்.


இணைய வர்த்தகத்துக்கு அமேசான் எப்படியோ, திரைப்படங்களுக்கு நெட்ஃப்லிக்ஸ் அப்படிப்பட்டது. பார்ன்ஸ் அண்ட் நோபிள்ஸ் என்ற புத்தகக் கடைச் சங்கிலியை இணைய வர்த்தகத் திறனால் அழித்து வளர்ந்தது அமேசான். பிளாக்பஸ்டர் என்ற வீடியோ வாடகைக் கடைச் சங்கிலியை அழித்து வளர்ந்தது நெட்ஃப்லிக்ஸ்.

இந்தியாவில் ஒரு கட்டத்தில் தெருவுக்குத் தெரு ஒரு வீடியோ வாடகைக் கடை இருந்தது. A2 சசிகலாகூட அப்படியொரு கடை வைத்திருந்தவர்தான். வி.எச்.எஸ் கேசட்டுகளை வாடகைக்கு எடுத்துவந்து வீடியோ பிளேயர்மூலம் படம் பார்த்துவந்தோம். அமெரிக்காவில் இப்படிப்பட்ட பல சிறு சிறு கடைகள் இருந்தன. இவற்றுக்கிடையே, பிளாக்பஸ்டர் என்ற சங்கிலி நாடு முழுதும் பரந்துவிரிந்த ஒரு வீடியோ வாடகைக் கடையாக இருந்தது.

வீட்டில் இருந்துகொண்டே படம் பார்க்க விரும்புவோருக்கான சேவையை நெட்ஃப்லிக்ஸ் கொடுக்க விரும்பியது. ஆனால் வி.எச்.எஸ் கேசட்டை அவ்வாறு அனுப்பவது சிரமமானதாகவும் செலவு அதிகம் பிடிப்பதாகவும் இருந்தது. அவர்களுடைய அதிர்ஷ்டம், டிவிடி தொழில்நுட்பம் அப்போதுதான் அறிமுகமானது. திரைப்பட நிறுவனங்கள் தம் படங்களை டிவிடியில் வெளியிட, நெட்ஃப்லிக்ஸ் டிவிடியை வாடகைக்குத் தர ஆரம்பித்தது. அமெரிக்க அஞ்சல் துறை நம்மூர் உருப்படாத அஞ்சல் துறை போல் கிடையாது. நெட்ஃப்லிக்ஸிலிருந்து உங்கள் வீட்டுக்கு டிவிடியை எடுத்து வந்து தெருவார்கள்; கூடவே நீங்கள் பார்த்து முடித்த டிவிடியை உங்கள் வீட்டிலிருந்து எடுத்து, நெட்ஃப்லிக்ஸ் அலுவலகத்துக்கு அனுப்புவதையும் செய்வார்கள். ஒரு கட்டத்தில் அமெரிக்க அஞ்சல் துறையின் நம்பர் ஒன் கஸ்டமராக நெட்ஃப்லிக்ஸ் இருந்தது.

சாதாரண டிவிடி வாடகைத் தொழிலை வேறு யாரேனும் நெட்ஃப்லிக்ஸைவிடச் சிறப்பாகச் செய்திருக்க முடியாதா? ஏன் அமேசானே செய்திருக்க முடியாதா? அமேசான் முயற்சி செய்தது. ஆனால் வெல்ல முடியவில்லை. ஏனெனில் நெட்ஃப்லிக்ஸ் இரண்டு, மூன்று அருமையான திட்டங்களைக் கொண்டுவந்திருந்தார்கள்.

அதற்குமுன்புவரை ஒவ்வொரு டிவிடியை வாடகைக்கு எடுக்கும்போது அதற்குப் பணம் செலுத்தவேண்டும். பின்னர் குறிப்பிட்ட தினத்தில் அதனைத் திருப்பித் தராவிட்டால் அபராதம் விதிக்கப்படும். நெட்ஃப்லிக்ஸ் இவற்றை ஒழித்தது. அபராதமே கிடையாது. மாதம் குறிப்பிட்ட தொகையைச் செலுத்திவிட்டால் போதும். வேண்டிய டிவிடிக்களை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் அல்ல. இரண்டு அல்லது நான்கு டிவிடிக்களை எடுத்து, பார்த்துவிட்டு, திரும்ப அனுப்பினால் அடுத்து உங்கள் தேர்வு உங்கள் வீட்டுக்கு வந்துவிடும். நீங்கள் பார்த்துவிட்டு அனுப்ப அனுப்ப, உங்கள் வீட்டுக்கு அடுத்த டிவிடிக்கள் வந்துகொண்டே இருக்கும். இந்த கியூ வரிசை முறை வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்தது.

அடுத்தது சினிமேட்ச் என்னும் மிகச் சிக்கலான ஒரு கணக்குமுறை. நீங்கள் எம்மாதிரியான படத்தைப் பார்க்கிறீர்கள் என்பதைக் கொண்டு,. அதேபோன்ற படத்தைப் பார்க்கும் பலர் வேறு எந்தெந்தப் படங்களையும் பார்க்கிறார்கள் என்பதை வைத்து, நீங்கள் அடுத்து இந்த இந்தப் படங்களையெல்லாம் பார்க்கலாம் என்ற பரிந்துரையை முன்வைக்கும் ஒரு அல்காரிதம். இதுவும் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்தது.
டிவிடி வாடகை என்று தொழிலை ஆரம்பித்தாலும், இணையம் வழியாக ஸ்ட்ரீமிங் செய்ய முடியும் என்று கணித்தவுடனேயே தன் தொழிலை மாற்றிக்கொண்டு முன்னேறியது நெட்ஃப்லிக்ஸ். மாறாக, பழைய தொழிலையே கட்டிக்கொண்டு அழுத ப்ளாக்பஸ்டர், அல்லது அதுபோன்ற வீடியோ வாடகைக் கம்பெனிகளெல்லாம் அழிந்துபோயின.

இந்தியாவில் திருட்டி விசிடி பரவலாகக் கிடைக்க ஆரம்பித்ததும் வீடியோ வாடகை நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. சேரனின் சி2எச் அவ்வப்போது சத்தம் போடுகிறது. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சிடி அடித்துத் தருவோம் என்கிறது. எனக்கென்னவோ இது வேலைக்கு ஆகாதது என்றுதான் தோன்றுகிறது. பிராட்பாண்ட் இணைப்பு வெகு சீக்கிரமே ஒவ்வொரு வீட்டுக்கும் வந்துவிடும். தற்போதைய நெட்ஃப்லிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் வீடியோ சேவைதான் ஒரே வழி.

அதனைச் செயல்படுத்த மிகச் சிறப்பான அடிப்படைத் தொழில்நுட்பம் வேண்டும். கிரெடிட் கார்ட் இல்லாவிட்டாலும் மக்கள் அருகில் ஓரிடத்தில் மாதக் கட்டணத்தைச் செலுத்துவதாக வைத்துக்கொள்ளலாம். மாதம் 100 அல்லது 200 ரூபாய்க்கு, வேண்டிய படத்தை வேண்டியபோது பார்த்துக்கொள்ளலாம். புதுப்படம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகுதான் வீட்டுக்கு வரும். இப்படி இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு இந்தத் தொழில் ஜெயிக்கும். கவனியுங்கள், இந்தப் படங்களுக்கு நடுவே விளம்பரக் குப்பைகள் எவையும் இருக்காது. விட்ட இடத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பார்த்துக்கொள்ளலாம். எச்.டி தரத்தில் படங்களைத் தர முடியும். முதலில் பெரு நகரங்கள், பிறகு சிறு நகரங்கள், அடுத்து சின்னச் சின்ன கிராமங்களுக்குக்கூட 4ஜி சேவை பரவப் பரவ நல்ல பேண்ட்விட்த் கிடைத்துவிடும்.

இதனால்தான் அமேசானைவிட நெட்ஃப்லிக்ஸ் இந்தியாவில் பெரும் தாக்கத்தைச் செலுத்தும் என்று நான் நம்புகிறேன். நாம் படிக்கும் நாடு கிடையாது. பார்க்கும் நாடுதான்.