Friday, February 28, 2014

தமிழக தேர்தல் நிலவரம்

2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் குறித்து தந்தி டிவியில் ஒரு கருத்துக் கணிப்பை அடிப்படையாக வைத்து தொடர் நிகழ்ச்சி ஒன்று நடந்துவருகிறது. இரண்டு நாள்கள் முன்பு அந்நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். திருச்சி, மதுரை, காஞ்சி போன்ற எட்டு தொகுதிகள் பற்றியது. இந்தக் கருத்துக் கணிப்புகளில் கிடைத்த தகவல்களிலிருந்து நான் புரிந்துகொண்டவை:
 1. ஒவ்வொரு தொகுதியிலும் அஇஅதிமுகதான் முன்னிலையில் உள்ளது. திமுக இரண்டாம் இடம்.
 2. திமுகவும் தேமுதிகவும் சேர்ந்தாலொழிய அஇஅதிமுகவைத் தோற்கடிப்பது இயலாத காரியம்.
 3. பாஜக, பல இடங்களில் தேமுதிகவைவிட அதிக வாக்குகள் பெறுவதாகத் தெரிகிறது.
 4. பாஜகவும் தேமுதிகவும் இன்னபிறரும் சேர்ந்தாலும்கூட திமுகவை இரண்டாவது இடத்திலிருந்து நகர்த்த முடியாது. அஇஅதிமுகவை நெருங்கக்கூட முடியாது.
திமுக-தேமுதிக கூட்டணி ஏற்பட்டால், அந்தக் கூட்டணியால் சில இடங்களைப் பெற முடியும். இது நடைபெறாதபட்சத்தில், தமிழகத்தின் 39 இடங்களும் அஇஅதிமுகவுக்கே. பாண்டிச்சேரி விஷயம் எனக்குப் புரியவில்லை.

தேமுதிக-பாஜக கூட்டணி ஏற்பட்டால் அதனால் ஒருவருக்கும் ஓர் இடம்கூடக் கிடைக்காது. பாஜக-தேமுதிக-மதிமுக-பாமக என்று பெரும் கூட்டணி ஏற்பட்டாலும் அந்தக் கூட்டணிக்கும் ஓர் இடம்கூடக் கிடைக்காது.

அஇஅதிமுக, கம்யூனிஸ்டுகளுக்கு ஓர் இடம்கூடக் கொடுக்கவேண்டிய தேவையில்லை. கம்யூனிஸ்டுகளால் அஇஅதிமுகவுக்கு எந்த லாபமும் இருப்பதுபோலத் தெரியவில்லை.

தனிப்பட்ட முறையில் இந்தத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரிய ஆதாயம் இருக்கும். தேமுதிகவைவிட அதிக வாக்குகள் பாஜகவுக்குக் கிடைக்கும். தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக ஆகிவிடும் என்று தோன்றுகிறது. அதாவது தமிழகத்தில் காங்கிரஸின் இடத்தை பாஜக எடுத்துக்கொண்டுவிடும் என்று தெரிகிறது; காங்கிரஸ் பாஜகவின் இடத்துக்குப் போய்விடும்.

கம்யூனிஸ்டுகள்போல, பாமக, மதிமுக ஆகியோரும் எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத அமைப்புகளாக ஆகிவருகின்றனர் என்பதும் இந்தக் கணிப்பில் தெரிகிறது. இதில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற தலித் கட்சிகளையும் மனிதநேய மக்கள் கட்சி போன்ற இஸ்லாமியக் கட்சிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

அட்வாண்டேஜ் ஜெயலலிதா.

Wednesday, February 19, 2014

தில்லி புத்தகக் கண்காட்சி: பிராந்திய மொழிகளில் பதிப்பித்தல்

PublishingNext என்ற கோவாவைச் சேர்ந்த அமைப்பு, நேஷனல் புக் டிரஸ்ட் ஆதரவுடன் ஒருநாள் கருத்தரங்கு ஒன்றை தில்லி புத்தகக் கண்காட்சியில் நடத்தியது. அதில் கலந்துகொள்வதற்காக நான் சென்றிருந்தேன். பிராந்திய மொழிப் பதிப்பு, மின்பதிப்பு, சுயபதிப்பு ஆகிய மூன்று தலைப்புகளில் மூன்று அமர்வுகள். இண்டப் பதிவில் பிராந்திய மொழிகளில் பதிப்பித்தல் தொடர்பான அரங்கில் நடந்ததை மட்டும் எழுதுகிறேன்.

இந்தி மொழி பற்றி அலிந்த் மஹேஷ்வரி பேசினார். இவர் ராஜ்கமல் பிரகாஷன் என்ற மிகப்பெரிய இந்திப் பதிப்பு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர். இளைஞர். இந்திப் பதிப்புலகம் இன்னமும் ‘தொழில்துறை’ என்ற நிலையை அடையவில்லை என்றார். (அதாவது புரஃபஷனலான நிலையில் இல்லை என்பது அவர் கருத்து. அப்படிப் பார்த்தால் இந்தியாவில், தமிழையும் சேர்த்து, எந்த மொழியிலும் இப்படிப்பட்ட நிலை கிடையாது.) கடந்த பத்து ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி இருக்கிறது என்றார். பல்வேறு புதிய தலைப்புகளில் பல புதுப் புத்தகங்கள் இந்தியில் வெளியாகின்றன. எழுத்தாளர் சந்திப்புகள், இலக்கியத் திருவிழாக்கள், புத்தகக் கண்காட்சிகள் என்று புத்தக விற்பனையைப் பரவலாக்கும், அதிகமாக்கும் முயற்சிகள் நிறைய நடப்பதாகச் சொன்னார். படிப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள்; ஆனால் அவர்களைச் சென்றடைவதுதான் கடினமாக உள்ளது என்றார். (இதே நிலைதான் பிற மொழிகளிலும்!) மொழிமாற்றல் புத்தகங்கள் நிறைய வருவதாகச் சொன்னார். புத்தம்புது ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமல்லாது, நிறைய பழைய கிளாசிக் புத்தகங்களும் ஆங்கிலத்திலிருந்து அல்லது ஆங்கிலம் வழியாக இந்தி மொழிக்கு மாற்றப்படுகின்றனவாம். இந்திப் புத்தகங்கள், 50% மேற்பட்டவை அரசு நூலகங்கள்மூலம் வாங்கப்படுகின்றன என்றார். மத்திய அரசு, பல மாநில அரசுகள் என்று மிகப்பெரிய சந்தை உள்ளது. அதனால் தரமற்ற புத்தகங்கள் பலவும் அச்சிடப்பட்டு, அரசுகளுக்குத் தள்ளிவிடப்படுகின்றன என்றார்.

இந்திப் பதிப்பாளர்கள் பெரும்பாலும் ஹார்ட் பவுண்ட் கெட்டி அட்டைப் புத்தகங்களையே முதலில் பதிப்பிக்கிறார்கள்; பின்னர் பேப்பர் பேக் வடிவத்துக்கு மாறுகிறார்கள் என்றார். (ஆனால் ஹிந்த் பாக்கெட் புக்ஸ், பெங்குவின் போன்ற புதிய இந்திப் பதிப்பாளர்கள் முழுவதும் பேப்பர் பேக் வடிவிலேயே அச்சிடுகிறார்கள்.)

தேஸ்ராஜ் காலி, பஞ்சாபி பற்றிப் பேசினார். சுதந்தரம், தேசப் பிரிவினை ஆகிய காரணங்களால், பஞ்சாபி புத்தக உலகம், பாதிப் பேரை இழந்துவிட்டது. மேற்கு பஞ்சாப் சென்றவர்கள் பாரசீக எழுத்துருவில் பஞ்சாபியை எழுத ஆரம்பித்துவிட்டனர். பின்னர் மேலும் பாதிப் பேர், அதே மதக் காரணங்களுக்காக குருமுகியிலிருந்து விலகி இந்தி மொழி, நாகரி லிபி என்று மாறிவிட்டனர். இன்று குருமுகியில் எழுதப்படும் பஞ்சாபி மொழி இலக்கியம் பெரும்பாலும் மத இலக்கியமாக ஆகிவிடும் போக்கும் உள்ளது. ஆனாலும் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் குருமுகி/பஞ்சாபி எழுத்தாளர்களில் 70% பேர் தலித்துகள் என்று தான் ஆய்வுசெய்து கண்டறிந்துள்ளதாக தேஸ்ராஜ் கூறினார். அதனால் தலித் இலக்கியம் பெருமளவு பரவிவருவதாக அவர் சொன்னார். பஞ்சாபி மொழியில் புத்தகம் பதிப்பிக்கும் மிகப் பெரும் பதிப்பாளர்கள் பெரும்பாலும் சீக்கிய மதம் சார்ந்த புத்தகங்களையே வெளியிடுகிறார்களாம். கனடா போன்ற நாடுகளில் இந்தப் புத்தகங்களுக்குப் பெரும் சந்தை இருக்கிறதாம். ஆனால் மதத்துக்கு வெளியே அவர்கள் பதிப்பிப்பது மிகவும் குறைவு என்றார். இலக்கியம் போன்றவற்றைப் பதிப்பிப்பவர்கள் சிறு பதிப்பகங்கள்தான். அவர்களுடைய வியாபாரம் மிகவும் குறைவானது. ஆனால் சமீபத்தில் ஒன்பது சிறு பதிப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து, கல்லூரிகள், பள்ளிகள் ஆகிய இடங்களுக்குச் சென்று தங்கள் புத்தகங்களை விற்பனை செய்ய முனைந்துள்ளனராம். வரலாற்றுரீதியாக, மிகப் பெரிய பஞ்சாபி எழுத்தாளர்கள் (பேரா. மோகன் சிங், நானக் சிங், அம்ரிதா பிரீதம் ஆகியோர்) அனைவருமே சுயமாகப் புத்தங்களை வெளியிட்டு விற்றுவந்தவர்கள்தாம் என்றார். சமீபத்தில் நடந்த ஒரு என்.பி.டி புத்தகக் கண்காட்சியில் மொத்தம் 70 லட்ச ரூபாய்க்கு வியாபாரம் நடந்தது என்றார். (ஒப்பீட்டளவில் இது தமிழ்நாட்டில் சென்னையல்லாத ஒரு நகரில் நடக்கும் வியாபாரத்தைவிடக் குறைவானது. உதாரணமாக, சமீபத்தில் ராமநாதபுரத்தில் முதல்முறையாக நடந்த புத்தகக் கண்காட்சியிலேயே இந்த அளவு புத்தகங்கள் விற்பனை ஆகியிருக்கும்.)

ஒரு கட்டத்தில் அம்பேத்கர் புத்தகங்கள் விற்றன. பின்னர் நக்சலைட் கருத்துகள் கொண்ட புத்தகங்கள் அதிகம் விற்றன. அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அதற்கேற்றவாறு புத்தக விற்பனையிலும் மாற்றங்கள் நடைபெறுகின்றன. இப்போது தலித் இலக்கியம் வெகுவாக விற்கிறது என்றார்.

மங்கல் மாஜி, ஜார்க்கண்டிலிருந்து வந்திருந்தார். சந்தாலி என்ற மொழியில் புத்தகங்கள் எழுதுபவர், பதிப்பிப்பவர். சந்தாலி மொழி பேசுவோர் பிகார், ஜார்க்கண்ட், ஒடிஷா, சத்தீஸ்கர், அஹோம், வங்காளம், வங்கதேசம், நேபாளம் என்று பிரிந்துகிடக்கிறார்களாம். சந்தாலி மொழிதான் இந்தியாவிலேயே மிகவும் பழமையான மொழி என்றார். உலக மொழிகளுக்கெல்லாம் தாய் சந்தாலி மொழிதான் என்றார். (தமிழர்கள் இவரைத் தனியாகக் கவனித்துக்கொள்ளுங்கள்!) ஆனால் இந்த மொழி எழுத்து இல்லாமல் வாய்மொழியாக மட்டுமே இருந்துவந்திருக்கிறது. 1925-ம் ஆண்டில் ரகுநாத் முர்மு என்பவரும் வேறு சிலரும் இந்த மொழிக்கு ஒரு எழுத்துருவை உருவாக்கியிருக்கிறார்கள். அப்போதிலிருந்து சிறிது சிறிதாக இந்த மொழி, பள்ளிக்கூடங்களுக்குச் சென்றிருக்கிறது. இன்று இந்த மொழியில் கல்லூரிப் படிப்பும் படிக்கலாமாம். ஆனால் 2003-ல்தான் இந்த மொழியை மத்திய அரசு அங்கீகரித்திருக்கிறது.

ஆண்டுக்கு சுமார் 100 புத்தகங்கள் சந்தாலி மொழியில் வெளியாகிறதாம். இது அதிகாரபூர்வ தகவல், ஆனால் இதற்குமேலும் சில புத்தகங்கள் வெளியாகலாம் என்கிறார் மங்கல் மாஜி. பதிப்பாளர்கள் என்று நிறுவனமயமாக ஒருவரும் இல்லையாம். தனித்தனி மனிதர்கள்தான் புத்தகங்களை எழுதி, பதிப்பித்து வெளியிடுகிறார்கள். மங்கல் மாஜி 1996-ல் புத்தகங்களை விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார். கொல்கத்தா புத்தகக் கண்காட்சியில் என்று நினைக்கிறேன். பலப்பல மாநிலங்களிலிருந்து மக்கள் வந்து சந்தாலி மொழிப் புத்தகங்களை வாங்கிச் செல்வதைப் பார்த்து, இந்தத் தொழிலிலேயே இறங்கிவிட்டார்.

நிறைய non-fiction புத்தகங்கள் விற்கின்றன என்றார். 25-26 பேர் ஒன்று சேர்ந்து ஒரு பதிப்பாளர் சங்கத்தை ஆரம்பித்துள்ளனராம். நாவல்கள், பாடல்கள் ஆகியவை அதிகம் விரும்பி வாங்கப்படுகின்றன என்றார். வங்காளத்தில் உள்ள நூலகங்கள்கூட சந்தாலிப் புத்தகங்களை வாங்குகின்றன; ஆனால் ஜார்க்கண்ட் அரசிடமிருந்து ஆதரவு இல்லை என்றார்.

ஸ்ரீதர் கௌடா, கன்னடப் பதிப்பாளர். கன்னடப் புத்தகங்களைப் படிப்பவர்களெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றார். குழந்தைகள் எல்லாம் ஆங்கில வழிக் கல்வி பயிலச் சென்றுவிடுகின்றனர்; அதனால் கன்னடம் படிப்பது குறைந்துவருகிறது என்றார். ஆண்டுக்கு 7,000 புத்தகங்கள் (புதியவை + ரீபிரிண்ட்?) அச்சாகின்றன; ஆனால் 20% மட்டுமே புத்தகக் கடைகளுக்குச் செல்கின்றன என்றார். பிறவெல்லாம் நூலகங்களுக்காக என்றே அச்சிடப்படுகின்றன என்றார். மிகச் சிலதான் மீண்டும் மறு அச்சாக்கம் பெறுகின்றன என்றார்.

பூர்ணசந்திர தேஜஸ்வி என்ற எழுத்தாளரைப் பற்றிப் பேசினார். குவேம்பு என்ற புகழ்பெற்ற எழுத்தாளரின் மகன் இவர். கன்னடப் புத்தகங்களை பத்தாம் வகுப்பு படித்திருப்போரும் படிக்கவேண்டும் என்பதற்காக, எழுத்து நடையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தவர் இவர் என்றார். (2009-ம் ஆண்டில் இவர் இறந்துவிட்டார்.) இவருடைய புத்தகங்கள் ஆண்டுக்கு 3,000 பிரதிகள் விற்கின்றனவாம். ஆனால் யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்றோர் பேசுவது தலைப்புச் செய்திகளாக ஆகின்றனவே ஒழிய, அவர்களுடைய புத்தகங்கள் அதிகம் விற்பதில்லை என்றார். தேவனூர் மகாதேவா என்ற தலித் எழுத்தாளரைப் பற்றிச் சொன்னார். (என்ன சொன்னார் என்பதை நான் சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லை.) பெங்களூர் புத்தகக் கண்காட்சி ரத்தானது குறித்து வருத்தம் தெரிவித்தார். மாறாக சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தபோது, பெங்களூர் போல 20 மடங்கு பெரிதாக இருப்பதையும் இங்கு மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் புத்தகம் வாங்கிச் செல்வதைப் பார்த்து தான் அதிசயித்துப்போனதையும் சொன்னார். தனியாக இவருடன் பேசிக்கொண்டிருந்தபோது பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் கன்னடப் புத்தகங்களை விற்கும் ஸ்டால் போடுவதில் பிரயோஜனமே இல்லை என்றார். போட்ட முதல்கூடத் திரும்பக் கிடைப்பதில்லை என்றார்.

கௌரி நாத் என்ற இந்தி/மைதிலி எழுத்தாளர்/பதிப்பாளர் அடுத்துப் பேசினார். மைதிலி என்பது மக்கள் மொழி (ஜனபாஷா). ஒருவித வட்டார வழக்கு என்று எடுத்துக்கொள்ளலாம். (தமிழில் நாம் வட்டார வழக்குகளை இப்படிப் பிரித்துப் பார்ப்பதில்லை.) பிகாரில் மைதிலி பேசுபவர்கள் சுமார் 6 கோடிப் பேர் இருக்கிறார்களாம். நேபாளத்தில் 4 கோடிப் பேர். மைதிலி வட்டார வழக்கு என்ற நிலையில் இருப்பதால் அரசு எந்த ஆதரவையும் தருவதில்லை. எனவே விற்பனை செய்யும் புத்தகங்கள் எல்லாம் மக்கள் நேரடியாக வாங்குவதுதான். சாதாரண மக்கள் வாங்கி வாசிக்கிறார்கள் என்றார். சில எடுத்துக்காட்டுகளைக் கொடுத்தார். ராஜ்கமல் பதிப்பித்துள்ள சில இந்திப் புத்தகங்களின் மைதிலி வடிவம், இந்திப் பதிப்பு விற்பதைவிட மூன்று மடங்கு விற்கிறது என்றார். (அதாவது சில புத்தகங்கள் இந்தியிலும் மைதிலியிலும் ஒரே நேரத்தில் அச்சாகி விற்பனை ஆகின்றன! எழுத்துத் தமிழிலும் நாஞ்சில் நாட்டுத் தமிழிலும் ஒரு non-fiction விற்பனை ஆவதாக வைத்துக்கொள்ளுங்கள்!) சில ஆண்டுகளுக்குமுன் ராஜ்கமல் ஐந்து புத்தகங்கள் அடங்கிய ஒரு செட்டை மைதிலியில் வெளியிட்டார்கள்; ஆனால் அதன்பின் நிறுத்திவிட்டார்கள் என்றார். ஆண்டுக்கு 100 மைதிலி மொழிப் புத்தகங்கள் வெளியாவதாகச் சொன்னார்.

நேபாளத்தில் வெளியாகும் சில மைதிலிப் புத்தகங்கள் படுவேகமாக விற்கின்றன என்றார். சமீபத்தில் வெளியான ஒரு நாவல், இரண்டே மாதங்களில் 11 எடிஷன் விற்பனையாயின என்றார். ஆனால் இந்தியாவில் இந்தியின் தாக்கத்தால் மைதிலிப் புத்தகங்களுக்கு நெருக்கடி இருக்கிறது என்றார். இவரே ஆண்டுக்கு 50 புத்தகங்கள் வெளியிடுகிறார்; ஆனால் அதில் வெறும் 10 மட்டுமே மைதிலியிலானது என்றார்.

மைதிலி ஆரம்பத்தில் மிதிலாக்‌ஷர் என்ற எழுத்துருவில் எழுதப்பட்டுவந்ததாம். இது கிட்டத்தட்ட வங்கமொழி எழுத்துருவைப் போன்றதாம். ஆனால் நாளடைவில் இந்த எழுத்துருவை விட்டுவிட்டு நாகரி எழுத்துருவுக்கு மாறிவிட்டார்களாம். ஆரம்பக் கட்டத்தில் இதற்கு எதிராகவெல்லாம் சில போராட்டங்கள் நடந்தனவாம். ஆனால் இன்று யாரும் மைதிலியை நாகரியில் எழுதுவதற்கு எதிர்ப்பு எதையும் தருவதில்லை என்றார். இவராலேயே மிதிலாக்‌ஷர் லிபியைக் கஷ்டப்பட்டுத்தான் படிக்கமுடியும்; ஆனால் எழுதமுடியாது என்றார். இவர் எழுதுவது நாகரியில்தானாம். இன்று மைதிலியில் அச்சாகும் புத்தகங்கள் எல்லாம் நாகரி லிபியிலேயே எழுதப்படுகின்றன என்றார்.

நிகழ்ச்சியை வினுதா மால்யா மிக அழகாக ஒருங்கிணைத்தார். ஸ்ரீதர் கௌடாவைத் தவிர அனைவரும் இந்தியிலேயே பேசினர். அதையெல்லாம் ஆங்கிலத்தில் மாற்றி அழகான சுருக்கத்தை அவ்வப்போது அளித்துவந்தார்.

***

Tuesday, February 18, 2014

தஸ்லிமா நஸ்ரினின் லஜ்ஜா குறித்து...

கிழக்கு பதிப்பகம், வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் எழுதியுள்ள லஜ்ஜா என்ற நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.

16-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று என் செல்பேசியில் ஒருவர் தொடர்புகொண்டு பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் நான் அப்போது தில்லி புத்தகக் கண்காட்சியில் ஒரு கருத்தரங்கில் இருந்தேன். அதனால் தொலைப்பேசியை எடுக்கவில்லை. அதே நபர் பின்னர் டயல் ஃபார் புக்ஸ் எண்ணான 94459-01234-ஐத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதன் சுருக்கம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டது:
இன்று தமிழ்நாடு முஸ்லிம் கழகம் (sic) என்ற அமைப்பிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. எக்மோரிலிருந்து பேசுவதாக சொன்னார்கள்.

“லஜ்ஜா புத்தகத்தை நீங்கள் போட்டிருக்கக்கூடாது. அது இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது. அதில் உள்ளவை எல்லாமே பொய். இதன் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும். எனவே அந்த லஜ்ஜா புத்தகத்தை இனி நீங்கள் பதிப்பிக்கக்கூடாது” என்றார்கள்.

தகவலுக்காக.
17-02-2014 திங்கள்கிழமை அன்று நான் எனக்கு அழைப்பு வந்த எண்ணுக்குப் பேசினேன். அதனை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தேன்.
எனக்கு வந்திருந்த ஒரு மிஸ்ஸ்டு கால் எண்ணைக் கூப்பிட்டுப் பேசினேன். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் பேசுவதாகச் சொன்னார். அவர் தன் பெயரைத் தெரிவிக்கவில்லை. தலைமையிலிருந்து பேசச் சொன்னதாகச் சொன்னார். லஜ்ஜா புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது என்றும் அதனால் அதைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். நான் பதிலுக்கு அப்படியெல்லாம் இல்லை; தடை ஏதும் கிடையாது; புத்தகம் ஆங்கிலத்தில் பெங்குவின்மூலம் விற்பனை ஆகிக்கொண்டுதான் உள்ளது; உறுதி செய்துகொண்டு, முறையாக அனுமதி பெற்றுத்தான் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளோம் என்றேன். அப்படியென்றால் தான் மேற்கொண்டு விசாரிப்பதாகச் சொன்னார். உரையாடல் மிகவும் தன்மையாகவே நடைபெற்றது.
நான் பேசி முடித்த இரண்டு மணி நேரத்தில் அதே எண்ணிலிருந்து இன்னோர் அழைப்பு வந்தது. அந்தத் தகவலையும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.
அப்டேட்: அதே எண்ணிலிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. அவருடைய பெயர் தாரிக் என்றார். லஜ்ஜா புத்தகம் தடை செய்யப்பட்டுள்ளது என்று ஊர்ஜிதம் செய்துவிட்டதாகச் சொன்னார். அதுகுறித்த அரசாணை தகவல் ஏதும் தரமுடியுமா என்று கேட்டேன். பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் இந்திய முஸ்லிம்களுக்கு இந்தப் புத்தகம் எதிரானது என்றும் சொன்னார். நான் புத்தகம் எதைப் பற்றியது என்று பேச முற்பட்டபோது இப்புத்தகத்துக்கு எதிராகக் காவல்துறையில் புகார் தரப்போவதாகச் சொன்னார். அது அவர்களின் உரிமை என்று ஒப்புக்கொண்டேன். காவல்துறையினர் அழைத்துப்பேசினால் அவர்களிடம் பேசிக்கொள்வதாகத் தெரிவித்தேன். அத்துடன் அழைப்பு முடிவுற்றது.
லஜ்ஜா புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை. ஆங்கிலத்தில்  பெங்குவின், இந்தியில் வாணி பிரகாஷன், குஜராத்தியில் சேத், வங்காளத்தில் ஆனந்தா, மராத்தியில் மேத்தா, தெலுங்கில் விசாலாந்திரா, பஞ்சாபியில் யூனிஸ்டார், மலையாளத்தில் கிரீன் புக்ஸ் ஆகியோர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுவருகிறார்கள். நான் தில்லி புத்தகக் கண்காட்சியிலேயே இருந்ததால் உடனே வாணி பிரகாஷன் சென்று இந்தப் படத்தை எடுத்தேன். இதில், தஸ்லிமா நஸ்ரினின் பல புத்தகங்களையும், முக்கியமாக லஜ்ஜாவையும் காணலாம்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்துக்கு இந்தப் புத்தகத்தின்மீது பல பிரச்னைகள் இருக்கலாம். அதற்காக நாங்கள் இந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்காமல் இருக்கமுடியாது.

ஒருங்குறியில் தமிழ் - தேவைகளும் தீர்வுகளும்

தமிழ் இணையக் கல்விக்கழகம் (Tamil Virtual Academy), 05.03.2014, புதன்கிழமை அன்று யூனிகோட் தொடர்பான ஒருநாள் கருத்தரங்கு ஒன்றை, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

ஒருங்குறியில் தமிழ் - தேவைகளும் தீர்வுகளும்
 1. தமிழ் பின்னம் – பெயரிடல் மற்றும் வரிவடிவம் தொடர்பாக.
 2. ஒருங்குறி எழுத்துருக்களும், விசைப்பலகையும் - பயன்பாடு
 3. ஒரு இந்தியா - ஒரு எழுத்துரு - திரு. அமைதி ஆனந்தம் அவர்களின் கருத்துரு
 4. தமிழ் 16-பிட்டு அனைத்துரு எழுத்துரு (TACE16) – செயல் திட்டம்
 5. நவீன கருவிகளில் தமிழ் - சிக்கல்களும் தீர்வும்
 6. கலந்துரையாடல்
இதில் ‘நவீன கருவிகளில் தமிழ் - சிக்கல்களும் தீர்வு(களு)ம்’ என்னும் தலைப்பில் பேசுவதற்கும் அந்த அமர்வை ஒழுங்குபடுத்துவதற்கும் என்னைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நவீன கருவிகள் என்று நாம் கணினி அல்லாத அனைத்து கணிக் கருவிகளையும் குறிப்பிடுகிறோம். செல்பேசிகள், பலகை/சிலேட்டு/டேப்லட் கணினிகள், கிண்டில் போன்ற மின்புத்தகப் படிப்பான்கள், இவைபோல் நாளை வரப்போகும் பல்வேறு கையடக்கக் கருவிகள் அனைத்தும் இதில் அடக்கம். அவற்றில் தமிழ் (யூனிகோட்) தெரியவேண்டும்; எழுத்துகள் உள்ளிடப்படும் வசதி வேண்டும். தமிழ் சார்ந்த கருவிகள் (எழுத்துணரி, எழுத்திலிருந்து பேச்சு, பேச்சிலிருந்து எழுத்து, சொற்பிழை திருத்தி, மொழிமாற்றி, அடிப்படை அகராதி இம்மாதிரியானவை...) வேண்டும்.

அதற்குமுன், இன்று சந்தையில் கிடைக்கும் அனைத்துக் கருவிகளிலும் இன்றைய நிலை என்ன என்பது தெரியவேண்டும். அதன்பின்னரே இக்கருவிகளில் எம்மாதிரியான மாற்றம் தேவை என்பதை நாம் ஆராய முடியும். இதில் அரசு என்ன செய்யவேண்டும் என்று அரசுக்கு ஆலோசனை கூறமுடியும். இதற்கு எனக்கு உங்களுடைய உதவி வேண்டும். என்னிடம் இதுபோல் பல கருவிகள் உள்ளன. ஆனால் உலகில் இதுவரை வெளியாகியுள்ள அனைத்துக் கருவிகளையும் நான் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே உங்களிடம் இதுபோன்ற கருவிகள் இருந்தால் அவை குறித்து எனக்குக் கீழ்க்கண்ட தகவல்களை அளிக்க முடியுமா?
 1. உங்கள் கருவியின் தயாரிப்பாளர் யார்? பிராண்ட், மாடல் பெயர்?
 2. அக்கருவியின் இயக்குதளம் யாது? அதன் வெர்ஷன் எண் என்ன?
 3. அதில் தமிழ் படிக்க முடிகிறதா? தமிழ் எழுத்துகள் உடையாமல் தெரிகின்றனவா? தமிழ் எழுத்துகள் பழைய லை/னை/ணை என்று தெரிகின்றனவா?
 4. உங்கள் கருவியில் தமிழ் (யூனிகோட்) எழுத்துகளை உள்ளிட முடிகிறதா? முடிகிறது என்றால் உங்கள் இயக்குதளத்திலேயே அதற்கான வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதா அல்லது வெளிச் செயலி எதையேனும் பயன்படுத்தி இதைச் செய்கிறீர்களா?
 5. மின்புத்தகப் படிப்பான் என்றால் அதில் இயல்பாகவே தமிழ்க் கோப்புகளை, தமிழ் மின்புத்தகங்களைப் படிக்க முடிகிறதா? முடிகிறது என்றால் எம்மாதிரியான கோப்பு வடிவம்?
 6. மின்புத்தகங்களைத் தமிழில் எந்தத் தளத்திலிருந்தாவது வாங்கி, தரவிறக்கிப் படிக்கிறீர்களா? படிப்பதில் சிக்கல்கள் ஏதேனும் உள்ளனவா?
 7. சிக்கல்கள் இருக்கும்பட்சத்தில் அவை எம்மாதிரியானவை என்று தமிழிலோ, ஆங்கிலத்திலோ விளக்கி எழுதி என் மின்னஞ்சலுக்கு அனுப்ப முடியுமா? அனுப்புவதுடன் ஸ்க்ரீன்ஷாட் படங்களையும் சேர்த்து அனுப்ப முடியுமா?
என் மின்னஞ்சல் முகவரி bseshadri@gmail.com

நீங்கள் அனுப்பும் தகவல்களையெல்லாம் ஒழுங்குசெய்து, சேகரித்து, கருத்தரங்கு அன்று பேசுகிறேன். அங்கு நேரில் வருவோருடன் சேர்ந்து, அரசுக்கு எம்மாதிரியான ஆலோசனைகளைத் தரமுடியும் என்று கலந்தாலோசிப்போம். அவை குறித்தும் என் வலைப்பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

நன்றி.

Monday, February 17, 2014

அர்விந்த் கெஜ்ரிவாலாக இருப்பதன் முக்கியத்துவம்

கடந்த இரு தினங்களாக தில்லியில் உள்ள வாகன ஓட்டிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். இப்போது தில்லி விமான நிலையம் வரும்போது கடைசியாக அதே. பேச்சு அர்விந்த் கெஜ்ரிவால் பற்றியே இருந்தது. அவருக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு மலைக்கவைப்பதாக இருக்கிறது. எங்கோ தொலைதூரத்தில் இருக்கும்போது தில்லியில் மக்கள் நினைப்பதைப் புரிந்துகொள்ள முடியாது. அந்தவகையில் இந்த தில்லிப் பயணம் எனக்கு முக்கியமானது.

தொலைக்காட்சிகள் காட்டுவதுபோல் நான் பேசியவர்கள் இல்லை. அவர்கள் ஆம் ஆத்மி கட்சிமீதும் கெஜ்ரிவால்மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையில் சிறிதுகூடக் குறைவு இல்லை. 40 நாள்களில் ஒருவரால் ஒன்றும் செய்துவிட முடியாது என்றுதான் சொல்கிறார்கள். மீண்டும் தில்லி சட்டமன்றத் தேர்தல் நடந்தால் அவருக்கே வாக்களிப்போம் என்கிறார்கள்.

சட்ட அமைச்சர் பற்றிக் கேட்டேன். அவர் கெட்டவர் என்றார்கள். ஆனால் கெஜ்ரிவாலுக்கு டெஃப்லான் கோட்டிங். குற்றம் கெஜ்ரிவால்மீது இல்லையாம். புதியவர் என்பதால் இப்படி, அடுத்தமுறை நல்ல ஆசாமியைப் பிடித்துவிடுவார் என்றார்கள். இந்த அளவுக்கு கெஜ்ரிவாலை மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள்.

காங்கிரஸின் ஊழல் குறித்துக் குமுறினார்கள். காமன்வெல்த் ஊழல்தான் அதிகம் பேசப்பட்டது. எல்லா காண்டிராக்டிலும் லஞ்சம், ஒவ்வொரு காங்கிரஸ் எம்.எல்.ஏவும் கோடி கோடியாக அடித்துவிட்டார்கள் என்றார்கள். பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டீர்களா என்று கேட்டேன். பாஜகவுக்கு வாக்களித்த ஒருவர், அடுத்த தேர்தலில் ஆம் ஆத்மிக்குத்தான் வாக்கு என்றார். நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்கு என்று கேட்டேன். அதற்கு இன்னும் நாள்கள் உள்ளன; பார்க்கலாம் என்றார்.

40 நாள்களில் அரசு அலுவலகங்களில், போக்குவரத்துக் காவலில் லஞ்சம் வாங்குவது கடுமையாகக் குறைந்துள்ளது என்றார்கள். ஆனால் இன்று குடியரசுத் தலைவர் ஆட்சி தொடங்குவதால் மீண்டும் ஊழல் ஆரம்பித்துவிடும் என்றார்கள். ஜன் லோக்பால் சட்டம் ஊழலைக் கட்டுப்படுத்தும், தவறு செய்யும் அதிகாரிகளை ஜெயிலில் போடும் என்று நிஜமாகவே நம்புகிறார்கள்.

மத்திய அமைச்சர்கள்மீது வழக்கு தொடுக்கலாமா, அவர்களை ஜெயிலில் போடும் அதிகாரம் தில்லி முதல்வருக்கு இருக்கலாமா என்று கேட்டேன். அதில் என்ன தப்பு என்று பதில் கேள்வி கேட்டார்கள். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுதானே என்றார்கள். பிறகு ரிலையன்ஸைக் கடுமையாகத் திட்டினார் ஓட்டுனர் ஒருவர். காங்கிரஸும் பாஜகவும் முகேஷ் அம்பானியின் பைக்குள் இருக்கிறார்கள் என்றார். கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவர்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்திவிடுவார் என்றார்.

காங்கிரஸ் ஆட்சியில்தானே மெட்றோ ரயில் போடப்பட்டது, அது நல்ல விஷயம்தானே என்றேன். இவ்வளவு நாள்கள் ஆட்சியில் இருந்தவர்கள் அதுகூடச் செய்யவில்லை என்றால்? என்று பதில் கேள்வி கேட்டார்.

ஆம் ஆத்மி, அரசுப் பள்ளிகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக மாற்றிவிடுவார்கள் என்று நம்புகிறார் ஓர் ஓட்டுனர். அரசு ஆசிரியர்களையெல்லாம் கடுமையாக ஏசினார். அவர்கள் வேலையே செய்வதில்லை என்றார்.

48 நாள்கள் வெளியே இருக்கும் நாம் கெஜ்ரிவால் செய்வதை வெறும் டிராமா என்பதாக நினைத்தோம். ஆனால் நான் பேசியவர்களின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது!

கெஜ்ரிவால் காலில் ஷூகூடப் போட்டுக்கொள்வதில்லை, சாதாரண சப்பல்தான் என்றார் ஒருவர். நான் கவனிக்கவில்லை. அவருடைய உடைகள் குறித்துப் பிறர் கேலி செய்வதை இவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. ஏதோ ஒருவிதத்தில் கெஜ்ரிவால் இவர்களைப் பொருத்தமட்டில் நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறார். 

கெஜ்ரிவால் பாஜகவுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தல். (காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக தில்லியில் காலி.)

Tuesday, February 11, 2014

கேணி: பி.ஏ.கிருஷ்ணன், தமிழ்மகன் (வீடியோ)

ஞாயிறு அன்று எழுத்தாளர்கள் பி.ஏ.கிருஷ்ணன், தமிழ்மகன் இருவரும் வந்திருந்தனர். இலக்கியத்தில் சமகால அரசியலின் பிரதிபலிப்பு என்பது தொடர்பான தத்தம் அனுபவங்களை இருவரும் பேசினர். புலிநகக் கொன்றை, கலங்கிய நதி ஆகிய நாவல்களை எழுதியவர் கிருஷ்ணன். தமிழ்மகன், வெட்டுப்புலி, ஆண்பால் பெண்பால், வனசாட்சி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.


Monday, February 10, 2014

சென்னை புத்தகக் காட்சி 2014 - கிழக்கு டாப் 25

 1. கிமு கிபி
 2. தன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க
 3. லஜ்ஜா - அவமானம்
 4. குமரிக் கண்டமா சுமேரியமா: தமிழர்களின் தோற்றமும் பரவலும்
 5. உலகை மாற்றிய புரட்சியாளர்கள்
 6. ராஜராஜ சோழன்
 7. மனிதனும் மர்மங்களும்
 8. நரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர்
 9. ஸ்ரீரங்கத்து தேவதைகள்
 10. ஹிட்லர்
 11. மணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல்
 12. பிரபல கொலை வழக்குகள்
 13. சே குவேரா: வேண்டும் விடுதலை
 14. ஸீரோ டிகிரி
 15. மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி
 16. குஜராத் 2002 கலவரம்
 17. இட்லியாக இருங்கள்
 18. சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
 19. ராஜிவ் கொலை வழக்கு
 20. குஜராத் - இந்துத்துவம் - மோடி
 21. இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு
 22. வீர சிவாஜி
 23. முசோலினி: ஒரு சர்வாதிகாரியின் கதை
 24. நெப்போலியன்: போர்க்களப் புயல்
 25. மொழிப்போர்
இந்தப் புத்தகங்களை மேலே உள்ள சுட்டிகள்மூலம் இணையத்தில் வாங்கலாம்.  அல்லது டயல் ஃபார் புக்ஸ் வாயிலாக 94459-01234 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு வாங்கலாம்.