Thursday, March 31, 2005

இந்த வார தெஹெல்காவிலிருந்து

தெஹெல்கா என்றொரு வாரப் பத்திரிகை வெளிவருவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பொதுவாக பிற செய்தித்தாள்கள், பத்திரிகைகள் கவனிக்காத விஷயங்களை இவர்கள் எழுதுகிறார்கள். இந்த வார இதழிலிருந்து (ஏப்ரல் 2, 2005) சிலவற்றை சுருக்கமாக இங்கு தருகிறேன்.

*** கனிஷ்கா விமானத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்த சதியில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சீக்கியர்கள் விடுதலை செய்யப்பட்டது பற்றி, இந்தியாவின் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் தர்லோச்சன் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

*** உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ், தன் சகோதரர் ஷிவ்பால் சிங் யாதவ் நடத்தும் தனியார் கல்லூரிக்கு ரூ. 69 கோடி மான்யம் அளித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் உயர் கல்விக்கான இந்த வருடத்தைய மொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 71 கோடி என்பது கவனிக்கத்தக்கது.

*** குவஹாத்தி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி B.K.ராய், 18 வயதுக்குக் கீழான பெண்கள் வன்புணர்ச்சிக் கொடுமையால் கருவுற்றால், பெண்ணின் பாதுகாவலர்கள் வேண்டினால், அந்தக் கருவைக் கலைக்க சட்டப்படி அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளார். ஒரு வழக்கின் மீதான அவரது ஆணையில் இவ்வாறு கூறுகிறார்: "Whether the allegations against the accused are true or not is not material in the present writ petition; what is material is the fact that she presently carries pregnancy caused as a result of the alleged rape committed on her by the accused. In such a situation, when the victim suffers from anguish, it would constitute a grave injury to her mental health and in such circumstances, termination of her pregnancy by a registered medical practitioner is permitted and will not constitute any offence."

[இந்த நீதிபதி B.K.ராய் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். அப்பொழுது பிற உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாநிலங்களில் உள்ள பிற உயரதிகாரிகள் ஆகியோர் ஊழல்கள் செய்வது போலத் தெரிந்ததால் அதை வெகுவாகக் கண்டித்து அலுவலக ஆணைகள் பலவற்றை பிறப்பித்தார். இதனால் பிற நீதிபதிகள் அனைவரும் விடுப்பில் சென்றனர் - அதாவது ஸ்டிரைக் செய்தனர். பின் உச்ச நீதிமன்ற நீதிபதி ராயை அவர் பிறந்த மாநிலமான பிஹாருக்கே மாற்ற முடிவு செய்தார். ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் தரவில்லை. அதனால் ராயின் விருப்பத்துக்கு மாறாக அவரை அஸாம் மாநிலத்துக்கு மாற்றி விட்டார். இதைப்பற்றிய கட்டுரை ஒன்றும் தெஹெல்காவில் உள்ளது.]

*** 'இண்டியா டிவி'யின் விடியோ அம்பலங்களை திட்டம் போட்டு படம் பிடித்தவர் சுஹாயிப் இல்யாசி. இவர் "India's Most Wanted" என்று ஜீ டிவியின் வந்த தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமானவர். பின் தனது மனைவியின் கொலைக்குக் காரணமானவர் என்று சந்தேகத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு திஹார் ஜெயிலில் சில மாதங்கள் இருந்தவர். அந்த வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Wednesday, March 30, 2005

தமிழ் எழுத்துச் சீர்மை

காசி தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி எழுதியிருந்தார்.

2003 தமிழ் இணைய மாநாட்டில் பேசப்பட்ட அளவுக்கு இதைப்பற்றி 2004 மாநாட்டில் பேசவில்லை.

2003 மாநாட்டில் குழந்தைசாமி இதுபற்றிப் பேசும்போது சொன்ன சில கருத்துகள் இங்கே:
  • எழுத்துச் சீரமைப்பு என்றால் எழுத்தைக் குறைப்பது அல்ல, கற்பதை எளிதாக்குவது (247 எழுத்துக்களை இம்மியும் குறைப்பதல்ல). எழுத்தைக் குறைக்கப் போனால் மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், அதனால் 'சீரமைக்கும்' பணியே கெட்டு விடலாம். உதாரணத்துக்கு, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 'ஐ', 'ஔ' ஆகிய இரண்டையும் நீக்க முயற்சி செய்தார். ஆனால் மக்கள் அதை ஒப்புக்கொள்ளாததனால், விட்டு விட்டார்.
  • எழுத்துச் சீர்திருத்தம் என்பது சமீபத்திய கருத்துருவாக்கம் அல்ல. இதைப்பற்றி 1933 இல் பெரியார் சில கருத்துக்களைக் கூறினார். 1978-ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது பெரியார் சொன்ன சீர்திருத்தத்தில் பாதி நிறைவேற்றப்பட்டது, மற்றது இதுவரையில் செயல்படுத்தப் படவில்லை.
  • தமிழ் பன்னாட்டு மொழி; உலகு தழுவி வாழும் மொழிக்குடும்பத்தால் பேசப்படும் மொழி. இந்த மொழியைக் கற்றுக் கொள்ள ஆகும் நேரத்தைக் குறைக்க வேண்டும். உயிர்மெய் என்பது ஐரோப்பிய நாடுகளின் மொழிகளில் கிடையாது, மத்திய தரை நாடுகளிலும் கிடையாது.
  • இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் இதில்தான் குழப்பமே, வித்தியாசமே. இவற்றைக் கற்கத்தான் நாம் அதிகக் குறியீடுகளை உண்டாக்குகிறோம். தமிழ் கற்கும் இடத்தில் ஆங்கிலம், மற்றும் ஃபிரெஞ்சைப் பார்க்கையில் தமிழ் கற்பது பிரமிப்பாக இருக்கிறது, ஏனெனில் அந்த மொழிகளில் எழுத்துக்கள் குறைவு.
  • இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்களை வெறும் நான்கு குறியீடுகளை வைத்துச் செய்ய வேண்டும். சண்டை சச்சரவு இல்லாமல் இந்த நான்கு வரிசைகளையும், நான்கு குறியீடுகளினால் எழுதுவோம் என்ற கொள்கையை மட்டும் ஏற்றுக் கொள்வோம். எந்தக் குறிகளைக் கொண்டு வருவது என்பது பற்றி அறிஞர் குழு ஒன்றின் மூலம் முடிவு செய்யலாம். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது எளிதாகிறது, அவர்களுக்கும் தமிழ் கற்பதில் அச்சம் இல்லாது இருக்கும். இதனையும் விட குறைக்கலாம், ஆனால் தமிழ் உலகம் ஒப்புக்கொள்ளாது என்பதால் அதைப்பற்றி இப்பொழுது பேசிப் பிரயோசனமில்லை.
  • வரி வடிவம் நிரந்தரமானதல்ல, ஒலி வடிவம்தான் நிரந்தரம். காலக்கணக்கில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. [பார்க்க: காசியின் பதிவில் உள்ள படங்கள்.]
  • கிரந்தக் குறியீடுகள் உகர, ஊகாரத்துக்கு எளிதானவை.
  • முடிவு: மாற்றங்கள் தேவை, 1978க்குப் பிறகு பல முயற்சிகளுக்குப் பிறகும் ஒன்றும் நடக்கவில்லை. இனியாவது நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.
தமிழ் உயிர்மெய் எழுத்துகளில் மொத்தம் ஐந்து வகைகள்:
  1. அகரமேறிய உயிர்மெய் வரி வடிவத்துக்குப் பக்கத்தில், ஆனால் அதனைத் தொடாமல், வரும் மாற்றிகள் (துணைக்கால்). எ.கா: ஆகார உயிர்மெய்
  2. அகரமேறிய உயிர்மெய் வரி வடிவத்தைத் தொட்டுக்கொண்டு, ஆனால் எழுத்துக்கு வலப்புறத்திலிருந்து தொடங்குமாறு இருப்பது. எ.கா: இகரம், ஈகாரம்
  3. அகரமேறிய உயிர்மெய் வரி வடிவத்துக்குப் பக்கத்தில், அதனைத் தொடாமல், ஆனால் அதனை எழுதுவதற்கு முன்னதாகவே வரும் மாற்றிகள் (கொம்புகள்). எ.கா: எகரம், ஏகாரம், ஐகாரம்
  4. அகரமேறிய உயிர்மெய் வடிவத்தை முழுவதுமாக மாற்றி அமைத்து எழுதுவது. எ.கா: உகரம், ஊகாரம்
  5. அகரமேறிய உயிர்மெய் வடிவத்தை இரு பக்கங்களிலிருந்தும் மாற்றி அமைப்பது, ஆனால் எழுத்தைத் தொடாமல். எ.கா: ஒகரம், ஓகாரம், ஔகாரம்.
சின்னத்துரை ஸ்ரீவாஸ் Linear Tamil என்று சிலவற்றை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார். ஸ்ரீவாஸ் லினியர் தமிழ் என்பதில் அனைத்து மாற்றிகளையும் (modifiers) அகர உயிர்மெய்க்குப் பக்கத்தில் போடவேண்டும் என்கிறார்.

குழந்தைசாமி போன்ற பலரும் சொல்வது - முதலில் நாம் உகர, ஊகாரப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்பதே. அதன் பின் வேண்டுமானால் இகர, ஈகாரங்களைத் தொடலாம். இவைதான் கற்றலை எளிதாக்கும். அதைப்போலவே கணினி, டிஜிட்டல் வடிவங்களில் பிரச்னைகளைத் தீர்க்கும். ஒளிவழி எழுத்துணரி (OCR) போன்ற மென்பொருள்களை எளிதாகத் தயாரிக்கலாம்.

சுரதா கீறு (glyph) அமைப்பிலான எழுத்துக் குறியீடுகள் மூலம் (எ.கா: டிஸ்கி) ஏற்கெனவே இருக்கும் ஒரு டிஸ்கி கோப்பை உகர/ஊகாரச் சீர்மையை உள்ளடக்கி உருமாற்றத் தேவையான மாற்றியை வடிவமைத்துள்ளார். ஆனால் மீண்டும் மீண்டும் கோப்புகளை மாற்றியமைக்காமல் எழுத்துருவை மட்டும் மாற்றி சீர்மை எழுத்திலும், இப்பொழுது புழங்கும் எழுத்திலும் படிக்க வேண்டுமானால் யூனிகோட் முறையில் இது சாத்தியமாகிறது.

அதாவது ஒரே கோப்பு (இப்பொழுது நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் கட்டுரை என்றே வைத்துக்கொள்ளுங்கள்...) - இதனை லதா, இணைமதி, தேனி போன்ற கணினியில் ஏற்கெனவே இருக்கும் தமிழ் யூனிகோட் எழுத்துருவில் வாசித்தால் தற்போதைய தமிழ் எழுத்து முறையில் தெரியும். எழுத்துருவை புதிதாக வடிவமைத்த சீர்மை எழுத்துக்கு மாற்றினால் உடனே உகர, ஊகாரச் சீர்மையுடன் தெரியும். நாக.கணேசன் இந்தக் கருத்தை முன்வைக்கிறார்.

இம்மாதிரி பல்வேறு சீர்மை முறைகளைக் கொண்டுவர, அந்தச் சீர்மைகளைத் தாங்கிய யூனிகோட் எழுத்துருக்களை உருவாக்குவதன் மூலம் செய்ய முடியும். இதனால் ஏற்கெனவே நம்மிடம் இருக்கும் கோப்புகளைப் பல்வேறு உருக்களின் காண முடியும். அதன்மீதான நமது கருத்துக்களைப் பிறருக்கு முன் வைக்க முடியும். எது பலரது நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுகிறதோ, அதனை அரசின் மீது சுமத்த முடியும்.

நான் உகர, ஊகார எழுத்துக்களை மாற்றி கிரந்தக் குறியீடுகளைப் பயன்படுத்துவதை முழுமையாக ஆதரிக்கிறேன்.

Tuesday, March 29, 2005

தொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் 570 & 261/2 டிக்ளேர்ட். இந்தியா 449 & 214. பாகிஸ்தான் 168 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது. மூன்று டெஸ்ட்கள் அடங்கிய போட்டித்தொடர் 1-1.

25/0 என்ற நிலையிலிருந்து ஐந்தாம் நாள் இந்தியா ஜெயிக்க வேண்டுமென்றால் சேவாக் கடைசிவரை ஆடவேண்டியிருக்கும் என்று நான் நினைத்தது சரியாகவே இருந்தது.

காலையில் சேவாக், கம்பீர் இருவரும் களத்தில் இருக்கும்வரை இந்தியா ஜெயித்துவிடுமோ என்ற பயம் பாகிஸ்தானுக்கு இருந்தது. காலையில் முதல் இரண்டு ஓவர்களில் ரன் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கடுத்த சில ஓவர்களில் சேவாக் சில பவுண்டரிகளை அடித்தார். கம்பீரும் சேர்ந்து கொண்டார். கம்பீருக்கு எதிராக அப்துல் ரஸாக் பந்தில் கேட்ச் ஒன்றுக்காக அப்பீல் செய்தனர். ஆனால் நடுவர் டாஃபெல் அதனை நிராகரித்தார். (ரீப்ளேயில் அது அவுட் என்று தெரிய வந்தது.) அடுத்த ஓவரில், சாமி பந்தில் சேவாகுக்கு எதிராக மற்றுமொரு அப்பீல். (இம்முறை ரீப்ளேயில் இது அவுட் இல்லை என்று தெரிய வந்தது.) இந்த விண்ணப்பத்தை நடுவர் பவுடன் நிராகரிக்கவே இன்ஸமாம் பயங்கரக் கோபத்துடன் ஓடிவந்து அரங்கில் ஒரு டிராமாவையே நிகழ்த்திக் காட்டினார். (இதன் விளைவாக நேற்று, மேட்ச் ரெஃபரீ இன்ஸமாமின் செயலைக் கண்டித்து அடுத்த ஒரு டெஸ்ட் விளையாடுவதிலிருந்து இன்ஸமாமைத் தடை செய்துள்ளார்.)

இந்தத் தடங்கல்களுக்குப் பின்னர் கம்பீரும் சேவாகும் சிறிதும் கவலையின்றி ஓவருக்கு நான்கு ரன்கள் வீதம் பெற ஆரம்பித்தனர். இதனால் பாகிஸ்தான் பெரிதாகக் கலங்கிப் போயிருந்தது. ஆனால் கம்பீர் கனேரியாவின் பந்தை மிட்-ஆனுக்குத் தட்டிவிட்டு ஒரு ரன் பெற சேவாகை அழைத்தார். சேவாக் பத்தடி முன்னே வந்ததும், அப்துல் ரஸாக் பந்தை நோக்கி வேகமாக முன்னேறுவதைக் கண்ட கம்பீர், முன்வைத்த காலைப் பின்வாங்கினார். சேவாகால் திரும்ப முடியவில்லை. ரஸாக் பந்தைப் பிடித்து குறிவைத்து ஸ்டம்ப்களைத் தகர்த்து சேவாகை ரன் அவுட் செய்தார். அப்பொழுது பாகிஸ்தான் வீரர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை! இதுதான் டெஸ்ட் போட்டிகளில் சேவாக் ரன் அவுட் ஆவது முதல் முறை. தொடர்ச்சியாக இரண்டாவது இன்னிங்ஸில் சரியாக ரன்கள் பெறுவதில்லை என்பதை மனதில் வைத்திருந்து கவனமாக சேவாக் அடிவந்தாலும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை. சேவாக் 38, இந்தியா 87/1.

அவ்வளவுதான். திடீரென ஆட்டம் மாறியது. உள்ளே வந்த திராவிட் நுழைந்தவுடனேயே தோல்வி மனப்பான்மையுடன் வந்தது போலக் காணப்பட்டார். ஒவ்வொரு பந்தையும் ஏதோ அணுகுண்டை அணுகுவது போல பயந்து பயந்து நெருங்கினார். சேவாகுடன் விளையாடும்போது கம்பீரமாக விளையாடிய கம்பீரும், இப்பொழுது தடவத் தொடங்கினார். விளைவு? அடுத்த பத்து ஓவர்களில் இந்தியா பத்து ரன்களைத்தான் பெற முடிந்தது. உணவு இடைவேளையின்போதே இனி இந்தியாவால் ஜெயிக்க முடியாது என்பது முடிவாகி விட்டது. ஆனால் தோல்வியையாவது தவிர்க்க முடிந்திருக்கும்.

ஆனால் இடைவேளைக்குப் பின், இந்தியா தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டது. ஒவ்வொரு பந்தையும் தடுத்தாடுவது என்று முடிவு செய்தவுடனே, பாகிஸ்தான் அணித்தலைவர் இன்ஸமாம் தோலைவில் நின்றுகொண்டிருந்த அனைத்துத் தடுப்பாளர்களையும் மட்டையைச் சுற்றிக் கொண்டுவந்தார். எப்பொழுதும் மட்டையைச் சுற்றி [விக்கெட் கீப்பரைத் தவிர்த்து] ஆறு பேர் நின்றனர். சுழற்பந்து வீச்சாளர்கள் விடாது மட்டையின் விளிம்பைத் தேடினர்.

முதலில் அவுட்டானது கம்பீர். மொஹம்மத் சாமியின் வேகப்பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். கம்பீர் 52, இந்தியா 108/2. டெண்டுல்கர் வந்து காவஸ்கரின் மொத்த ரன்களைத் தாண்டினார். மறுமுனையில் தடவித் தடவி ஆடிக்கொண்டிருந்த திராவிட் அர்ஷத் கானின் பந்தில் சில்லி பாயிண்டில் யூனுஸ் கானால் பிடிபட்டு ஆட்டமிழந்தார். திராவிட் 64 பந்துகளில் 16. இந்தியா 118/3. லக்ஷ்மண் வந்து அற்புதமான நான்கு ஒன்றை அடித்தார். பின் ஷாஹித் ஆஃப்ரீதியின் வேகமான பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். லக்ஷ்மண் 5, இந்தியா 127/4.

கங்குலி கடந்த சில டெஸ்ட்களாகவே மோசமாக விளையாடிக்கொண்டிருக்கிறார். சொல்லிக்கொள்ளும்படியாக அவரிடமிருந்து ஓர் இன்னிங்ஸும் இதுவரையில் இல்லை. கடைசியாக மெல்போர்னில் - 2003ல் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு சதமடித்திருந்தார். இந்த டெஸ்ட் போட்டித்தொடரில் உருப்படியாக ஒன்றுமில்லை. முதல் இன்னிங்ஸில் ஒரு ரன். இரண்டாவது இன்னிங்ஸில் தட்டுத்தடுமாறி இரண்டு ரன்களைப் பெற்றார். பின் என்ன ஏது என்று புரியாமலேயே ஷாஹீத் ஆஃப்ரீதி பந்துவீச்சில் - பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து உள்நோக்கி ஸ்பின் ஆனது - பவுல்ட் ஆனார். கங்குலி 2, இந்தியா 135/5. தேநீர் இடைவேளைக்கு முன் வேறெந்த விக்கெட்டும் விழவில்லை.

இந்த நேரத்தில் நாலரை நாள்களுக்குப் பிறகு ஆடுகளமும் நொறுங்க ஆரம்பித்திருந்தது. பந்துகள் கன்னா பின்னாவென்று எகிறின. அதுவும் பந்துவீச்சாளர்களின் கால்தடங்களில் விழுந்த பந்துகள் எப்படி எழும்பும் என்று தெரியாதவண்ணம் இருந்தன. கார்த்திக் நன்றாகவே விளையாடினார். இரண்டு ஆக்ரோஷமான நான்குகளைப் பெற்றார். ஆனால் மொஹம்மத் சாமி வீசிய அற்புதமான ரிவர்ஸ் ஸ்விங் யார்க்கரில் பவுல்ட் ஆனார். இந்தப் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியேயிருந்து காற்றிலே வளைந்து உள்நோக்கி வந்து கார்த்திக்கை முற்றிலுமாக ஏமாற்றி ஆஃப் ஸ்டம்பைப் பறக்க வைத்தது. கார்த்திக் 9, இந்தியா 164/6. கார்த்திக் ஆட்டமிழந்ததுமே அடுத்த ஓவரிலேயே டெண்டுல்கர் ஆஃப்ரீதியின் பந்தில் ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் ஆசீம் கமால் கையில் பிடிபட்டு ஆட்டமிழந்தார். டெண்டுல்கர் 98 பந்துகளில் 16 ரன்கள் பெற்றிருந்தார். இந்தியா 164/7.

டெண்டுல்கர், திராவிட் ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. கங்குலி, லக்ஷ்மண் அவுட்டானது பெருத்த கோபத்தை ஏற்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் நன்றாக விளையாடிய கும்ப்ளே கார்த்திக் அவுட்டானதும் வந்திருந்தார். அவர் பதானுடன் ஜோடி சேர்ந்து நன்றாக விளையாடினார். பதான் ரன்கள் எடுக்க முனையாமல் பந்துகளைத் தடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினார். கும்ப்ளே, பயமேதுமின்றி, பந்துகளை அடித்து நொறுக்கினார். தடதடவென நான்கு பவுண்டரிகள் கிடைத்தன. பதானும் வெகு நேரம் கழித்து அர்ஷத் கான் பந்துவீச்சில் யூசுஃப் யோஹானாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பதான் 29 பந்துகளில் 0. இந்தியா 189/8.

இனி இறுதிச்சடங்குகள் மட்டும்தான் பாக்கி. ஹர்பஜன் வந்து கும்ப்ளேவுக்கு கொஞ்ச நேரம் கம்பெனி கொடுத்தார். அவரும் தன்னைச் சுற்று இருக்கும் ஆறு பேரில் ஒருவருக்கு - யூனுஸ் கான் - கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹர்பஜன் 8, இந்தியா 210/9. பாலாஜி ஒவ்வொரு பந்தையும், அதன் மீது விழுந்து விழுந்து தடுத்தாடினார். ஆனால் கனேரியாவின் நேராகச் செல்லும் வேகப்பந்து ஒன்றில் எல்.பி.டபிள்யூ ஆனார். பாலாஜி 16 பந்துகளில் 0. இந்தியா 214 ஆல் அவுட். கும்ப்ளே ஒருவர்தான் 52 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து - அதில் 7x4 - ஓரளவுக்கு நன்றாக விளையாடினார்.

இந்தியா தோற்றதன் முக்கியக் காரணம் - டிரா செய்ய வேண்டும் என்ற நினைப்புடன் ஆடியது. அதனால்தான் பாகிஸ்தான் பயமின்றி எல்லாத் தடுப்பாளர்களையும் மட்டையாளரின் பக்கத்தில் கொண்டுவந்து நிற்கவைக்க முடிந்தது. ஆறு/ஏழு பேர் பக்கத்தில் நின்றால் கடைசி நாள் ஆட்டத்தில் தோற்றுப் போவதைத் தவிர வேறு வழியில்லை.

ஆட்ட நாயகர் யூனுஸ் கான். இந்த டெஸ்டில் 351 ரன்கள் பெற்று ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்தார். தொடரின் நாயகன் சேவாக். இந்தத் தொடரில் மொத்தமாக 544 ரன்களைப் பெற்றார். (யூனுஸ் கான் 508). மூன்று டெஸ்ட்களிலும் ரன்கள் பெற்றார். (யூனுஸ் முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ் சேர்த்து மொத்தமாக 10 ரன்கள்.)

இந்த டெஸ்ட் தொடரில் சேவாக் இந்தியாவின் தலைசிறந்த மட்டைவீரர் ஸ்தானத்துக்குச் சென்றுள்ளார். அவருக்கு அடுத்தபடி திராவிட். அடுத்து டெண்டுல்கர். அடுத்து லக்ஷ்மண். கங்குலி முன்னணி மட்டைவீரர் என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டியுள்ளது. பந்துவீச்சில் பதான் பலத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளார். பாலாஜி தொடக்கத்திலிருந்து சிறிது சிறிதாகக் கீழே வந்து பதான் இடத்தைத் தொட்டுவிட்டார். இதுவும் ஏமாற்றமே. கும்ப்ளே கடைசி டெஸ்டில் மோசமாக வீசினார். ஹர்பஜன் ஐசிசி குற்றச்சாட்டிலிருந்து மீள வேண்டும். எனவே இந்திய அணியின் பந்துவீச்சு இப்பொழுதைக்கு பலவீனமாகவே உள்ளது. வரும் ஒருநாள் போட்டிகளில் இது இந்தியாவுக்குக் கவலையை அளிக்க வேண்டும்.

டெஸ்ட் போட்டிகளுக்கு எழுதுவது போல தினசரிப் பத்திகளை நான் அடுத்து ஒருநாள் போட்டிகளுக்கு எழுதப்போவதில்லை. ஏதாவது முக்கியமான விஷயமிருந்தால் மட்டும்தான் எழுதுவேன்.

Monday, March 28, 2005

சுவாரசியமாகும் ஐந்தாம் நாள்

பாகிஸ்தான் 570 & 261/2 டிக்ளேர்ட். இந்தியா 449 & 25/0.

நான்காம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தன் ஆளுமையை முழுவதுமாகக் காட்டியது. ஆனாலும் ஐந்தாம் நாள் இந்தியா ஜெயிக்கவும் ஒரு வாய்ப்பு உள்ளது. இந்த ஆட்டத்தை எப்படியும் ஜெயித்தே தீருவது என்ற எண்ணத்தில் இன்ஸமாம், இந்தியா வெற்றி பெற 383 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தார்.

முதலில் இந்தியாவுடைய ஆட்டம் திசையிழந்து தவித்தது. இர்ஃபான் பதான், மொஹம்மத் சாமி பந்தில் பாயிண்ட் திசையில் தூக்கியடித்து யூசுஃப் யோஹானவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பதான் 5, இந்தியா 386/7. அடுத்து ஹர்பஜன் சிங் கனேரியாவின் கூக்ளியைத் தூக்கி அடிக்கப்போய் மிட் விக்கெட்டில் நின்றிருந்த அப்துல் ரஸாக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹர்பஜன் 1, இந்தியா 388/8. அடுத்து பாலாஜி கனேரியாவை ஸ்வீப் செய்யப்போய் விக்கெட் கீப்பரால் பிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் ரீப்ளேயில் பந்து மட்டையில் பட்டிருக்காது என்று தோன்றியது. பாலாஜி 2, இந்தியா 396/9.

கும்ப்ளே நின்று விளையாடியிருக்காவிட்டால் லக்ஷ்மண் துணையின்றி மாட்டிக்கொண்டிருப்பார். தொடக்கத்தில் லக்ஷ்மணை விட கும்ப்ளேயே நன்றாகவும், தைரியமாகவும் விளையாடினார். சில நான்குகளை அடித்தார். பின் லக்ஷ்மண் சிறப்பாக விளையாட ஆரம்பித்தார். மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் ஏதும் கொடுக்காமல் இந்தக் கடைசி விக்கெட் ஜோடி நன்றாக ரன்களை சேர்த்து பாகிஸ்தான் அணியை சோர்வுறச் செய்தது. ஆனால் இடைவேளைக்குப் பின்னர் ஆஃப்ரீதி வீசிய வேகமான பந்தில் கும்ப்ளே பவுல்ட் ஆனார். கும்ப்ளே 22, லக்ஷ்மண் 79*, இந்தியா 449 ஆல் அவுட். பாகிஸ்தான் 121 ரன்கள் முன்னிலையில்.

தொடர்ந்து விளையாட வந்த பாகிஸ்தான் அற்புதமான தாக்குதலைக் காண்பித்தது. ஷாஹீத் ஆஃப்ரீதி தான் சந்தித்த முதல் மூன்று பந்துகளை நான்குகளாக விளாசினார். 26 பந்துகளில் தன் அரை சதத்தைத் தொட்டார். பாலாஜி, பதான் இருவரையும் கதற வைத்தார். இதனால் கங்குலி கும்ப்ளே, டெண்டுல்கர் இருவரையும் பந்துவீச்சுக்குக் கொண்டு வந்து, இருவரையும் வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர வந்து லெக் ஸ்டம்புக்கு வெளியிலிருந்து லெக் பிரேக் போடுமாறு பணித்தார். டெண்டுல்கரை இறங்கி வந்து அடிக்க முயற்சி செய்து ஆஃப்ரீதி ஸ்டம்பிங் ஆனார். ஆஃப்ரீதி 34 பந்துகளில் 58, பாகிஸ்தான் 91/1. அடுத்து உள்ளே வந்த யூனுஸ் கானும், தொடக்க்க ஆட்டக்காரர் யாசிர் ஹமீதும் பிரச்னை ஏதுமின்று ரன்களைப் பெற்றனர். இருவரும் அரை சதங்களைத் தாண்டினர். யாசிர் ஹமீத் கும்ப்ளே பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். ஹமீத் 76, பாகிஸ்தான் 183/2.

பின் முதல் இன்னிங்ஸ் ஹீரோக்கள் யூனுஸ் கான், இன்ஸமாம்-உல்-ஹக் இருவரும் அருமையாக விளையாடி அணியின் எண்ணிக்கையை 50 ஓவர்களில் 261 ஆகக் கொண்டுவந்தனர். அந்நிலையில் இன்ஸமாம் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். இந்தியாவுக்கு நான்காம் நாள் மாலை 6 ஓவர்களும், ஐந்தாம் நாள் 90 ஓவர்களும் உண்டு. அதில் 383 ரன்கள் அடித்தால் ஜெயிக்கலாம். முதல் ஆறு ஓவர்களில் இந்தியா 25/0 என்ற எண்ணிக்கையில் இருந்தது.

ஐந்தாம் நாள் இந்தியா ஜெயிக்க வேண்டுமானால் சேவாக் ஒருவரால்தான் அதைச் செய்ய முடியும். சேவாக் சீக்கிரம் அவுட் ஆகிவிட்டால், ஆட்டம் டிரா, அல்லது பாகிஸ்தான் வெற்றி.

Sunday, March 27, 2005

பெரியத்திரையில் காதல்

நேற்றைய ஆட்டத்தில் சிறு இடைவேளை. ராஹுல் திராவிட், விரேந்தர் சேவாக் இருவரும் பேட்டிங் செய்து கொண்டிருக்கின்றனர். தண்ணீர் இடைவேளை. திராவிடுக்கு அவசர அவசரமாக உள்ளே போகவேண்டியிருந்தது போல. நடுவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு சென்றார். அதுவரை சும்மா இல்லாத டெலிவிஷன் கேமரா கூட்டத்தில் உட்கார்ந்திருப்பவர்களை மேய்ந்துகொண்டிருந்தது.

ஓர் அழகான இளம்பெண். முகத்தில் மூவர்ண பெயிண்ட். கையில் "Zaheer I <இதயம்> you" என்னும் அட்டை. கேமரா அவரைப் பிடித்துக் காண்பிக்க, அது அரங்கில் உள்ள பெரியத்திரையில் பெரிதாகக் காண்பிக்கப் பட்டது. அதைப் பார்த்ததும் அந்தப் பெண்ணின் முகம் வெட்கத்தில் இன்னமும் சிவந்தது. அதே நேரம் இந்தப் படத்தை இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் யுவராஜ் சிங்கும், ஜாகீர் கானும் பார்த்துக்கொண்டிருந்தனர். அடுத்து கேமரா அவர்களை நோக்கித் திரும்பியது. யுவராஜ், ஜாகீரை நோக்கிக் கையைக் காண்பித்துக் கொண்டிருந்தார்.

கேமரா மீண்டும் அந்தப் பெண்ணை நோக்கி. இப்பொழுது அந்தப் பெண் பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பினார். கேமரா கட் செய்து ஜாகீரைக் காண்பித்தது. ஜாகீர் விளையாட்டாக முத்தத்தைப் பிடித்து பதிலுக்கு ஒன்றை அனுப்பினார். அடுத்து இரண்டு கேமராக்கள் இருவரையும் பிடித்து பக்கத்தில் பக்கத்தில் வைத்து முழுதாகத் திரையில் காண்பித்தது. பார்த்துக் கொண்டிருந்த சேவாகும், அரங்கில் உள்ள நாங்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம்.

அந்தப் பெண்ணின் பெயர் நூர் ஹுசைன். பெங்களூர் கல்லூரியில் படிக்கிறாராம்.

சேவாக்: ஒரு நகல் சகாப்தமாகிறது

பாகிஸ்தான் 570, இந்தியா 379/6

அசல், நகல் என்று ஏற்கெனவே பலமுறை எழுதியாகி விட்டது. விரேந்தர் சேவாகை இனியும் அசலா, நகலா என்னும் கேள்விகளுக்குள் கட்டுப்படுத்துவது அவருக்கும் நியாயமல்ல, இந்திய கிரிக்கெட்டுக்கும் நியாயமல்ல.

விரேந்தர் சேவாக் சதமடித்தார். அதன்பிறகு இரட்டை சதமடித்தார்.

அவ்வளவுதானா? அதற்கு மேல் பலவற்றையும் தனது ஆட்டத்தில் காண்பித்தார் சேவாக்.

முதலில் கவனிக்க வேண்டியது: சேவாகின் ரன்கள் பெறும் வேகத்தை. அவர் சந்திக்கும் 100 பந்துகளில் 70க்கும் மேலான (72.4) ரன்களைப் பெற்று வருகிறார். இன்றும் அப்படியே. உதாரணத்துக்கு பாகிஸ்தானுக்காக இன்ஸமாம்-உல்-ஹக் 264 பந்துகளில் 184 ரன்கள் பெற்றார். அதாவது 100 பந்துகளுக்கு கிட்டத்தட்ட 70 ரன்கள். அதே நேரம் யூனுஸ் கான் 100 பந்துகளுக்கு சுமார் 50 ரன்கள் பெற்றார். இதனால் இன்ஸமாம் வெகு வேகமாக ரன்களைப் பெறுவது போல நமக்குத் தோன்றியது. சேவாக் 262 பந்துகளில் பெற்ற ரன்கள் 201. அதாவது 77 ரன்கள். இது இப்பொழுதைக்கு உலகில் கிரிக்கெட் விளையாடுவோரில் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்டுக்கு அடுத்த நிலையில் உள்ளது. (கில்கிறிஸ்ட் 83.10 என்ற நிலையில் இருக்க்கிறார்!)

இரண்டாவது: சேவாகின் ரன் பசி. நூறு அடித்தால் போதும் என்று விட்டுவிடுவதில்லை. இதுவரை பத்து முறை சதத்தைத் தொட்டுள்ளார். ஆனால் அதில் 6 தடவை 150க்கு மேல்! அதில் நேற்று 201, பாகிஸ்தானில் 309. ஆஸ்திரேலியாவில் 195. இதே போட்டித்தொடரில் மொஹாலியில் 173. இதே போல ஐம்பதைத் தாண்டினால் பாதிக்குப் பாதி நூறைத் தொடுகிறார். அதாவது இதுவரையில் இவர் பத்து முறை நூறுக்கு மேலும், ஒன்பது முறைதான் ஐம்பதிலிருந்து நூறுக்குள்ளாகவும் இருந்துள்ளார். இதுவும் இந்தியாவுக்கு மிகவும் உபயோகமானது.

மூன்றாவது: டைமிங். சேவாக் பந்தை அடிக்கும்போது அந்த அடியில் மிக அதிகமான விசை இருப்பது தெரிய வரும். எப்படித் தெரிய வரும்? பாயிண்ட், கவர் திசைகளில் இருக்கும் தடுப்பாளர்கள் திரும்புவதற்கு முன்னரே பந்து அவர்களைத் தாண்டி விடும். அவர்கள் ஓரடி எடுத்து வைப்பதற்கு முன்னமேயே பந்து எல்லைக்கோட்டைக் கடந்து விடும். அதென்ன சேவாக் 'காட்டடி' அடிக்கிறாரா என்ன? கிடையாது. இதைத்தான் டைமிங் என்று சொல்வோம். சரியான நேரத்தில் பந்தை மட்டையால் சந்திக்க வேண்டும். சிறிது முன்னதாகவோ, அல்லது சிறிது தாமதித்தோ மட்டையால் பந்தை அடித்தால் பந்து கேட்சாக மாறலாம். அல்லது எதிர்பார்த்த இடத்துக்குச் செல்லாமல் வேறு இடத்துக்குச் செல்லலாம். அல்லது சற்றே மெதுவாகச் செல்லலாம்; எனவே தடுப்பாளர்களால் தடுக்கப்படலாம். சேவாகின் டைமிங் இன்றைய தேதியில் உலக கிரிக்கெட் வீரர்கள் அனைவரையும் ஒப்பிடுகையில் முதலாவதாக உள்ளது. பிரையன் லாராவை விட உயர்வாக. அதனால்தான் இவர் பந்துவீச்சாளர்களின் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். நேற்று இவர் அடித்த சில ஸ்கொயர் கட், கவர் டிரைவ்களை உதாரணமாகச் சொல்லலாம். அதே அடியை அடுத்து டெண்டுல்கரோ, லக்ஷ்மணோ அடித்த போது பந்தை தடுப்பாளர்களால் எளிதாகத் தடுக்க முடிந்தது. ஆனால் சேவாக் அடித்தபோது பந்தைத் துரத்தக் கூட முடியவில்லை. எல்லைக்கோட்டுக்கு வெளியே இருந்து பொறுக்கிக் கொண்டு வரமட்டும்தான் முடிந்தது.

நான்காவது: புதுமை. இன்னோவேஷன் என்பார்களே... இதை ஜீனியஸ் கிரிக்கெட் வீரர்களால்தான் செய்ய முடியும். பந்து வீச்சாளர் ஒரு குறிப்பிட்ட தடுப்பு வியூகத்தை அமைத்து குறிப்பிட்ட முறையில் பந்து வீசி அதன்மூலம் மட்டையாளரை சிரமத்தில் ஆழ்த்தத் திட்டமிடுகிறார். ஆனால் பந்து வீசுபவர் எதிர்பாராத வகையில், வேறெந்த பேட்ஸ்மேனும் செய்யாத ஒன்றைச் செய்வதன் மூலம் எதிரணியின் திட்டங்களை உடைப்பது. கனேரியா வீசும் கை விக்கெட்டை விலகி வர (ரவுண்ட் தி விக்கெட்) லெக் ஸ்டம்புக்கு வெளியே லெக் ஸ்பின்னர்களை வீசுகிறார். ரன்களைத் தடுக்க கால் திசையில் நிறைய தடுப்பாளர்கள் வேறு. இந்தப் பந்துகளை விளையாடி ரன்கள் பெறுவது கஷ்டம். முடிந்தவரை கால்களில் வாங்கிக்கொள்வதுதான் முடியும். ஆனால் சேவாக் கைகளை விதம் விதமாகத் திருப்பு பந்தைச் சந்தித்து தர்ட்மேன் வழியாகவெல்லாம் நேற்று ரன்களைப் பெற்றார்.

ஐந்தாவது: பொறுமை! என்ன? சேவாகிடம் பொறுமையா என்ற கேள்வியை எழுப்பலாம். கடந்த இரண்டு வருடங்களில், சேவாக் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். சேவாக் குறைந்த அளவு கொண்டு, எழும்பி வரும் பந்தைச் சரியாக விளையாடுவதில்லை என்பது எதிரணி வீரர்களுக்குத் தெரிந்துள்ளது. அதனால் மொஹம்மத் சாமி, அப்துல் ரஸாக் வீசிய அதுபோன்ற பந்துகளை எதிர்கொள்ளும்போது முடிந்தவரை விலகியே சென்றார். அதை ஹூக், புல் செய்ய முயற்சி செய்யவில்லை. சில முறை உடலில் அடிவாங்கினார். சிலமுறை எதிரணி வீரர்கள் அவரைத் தூண்டிவிட அருகில் வந்து சதா பேச்சுக்கொடுத்துக் கொண்டே இருப்பதை முற்றிலுமாக அசட்டை செய்தார். தன் பணியில் கண்ணும் கருத்துமாக உள்ளார்.

ஆக முற்றிலுமாக ஒரு முழுமையான மட்டையாளராகப் பரிணமித்துள்ளார் சேவாக்.

நேற்று தனது 34வது டெஸ்டில், 55வது இன்னிங்ஸில் 3,000 ரன்களைத் தாண்டினார் சேவாக். இதுதான் இந்தியாவுக்காக அதிவேகமாக ஒருவர் 3,000 ரன்கள் எடுத்துள்ளது. டெண்டுல்கரை விட வேகமாக. காவஸ்கரை விட வேகமாக. திராவிடை விட வேகமாக. குண்டப்பா விஷ்வனாத்தை விட வேகமாக.

உலக அரங்கில் சேவாகை விட வேகமாக இந்தச் சாதனையைச் செய்தது யாரெல்லாம் தெரியுமா? டொனால்ட் பிராட்மேன் (ஆஸ்திரேலியா), எவெர்டன் வீக்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), ஹெர்பெர்ட் சட்கிளிஃப் (இங்கிலாந்து), பிரையன் லாரா (மேற்கிந்தியத் தீவுகள்), நீல் ஹார்வே (ஆஸ்திரேலியா), விவியன் ரிச்சர்ட்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்). சேவாகுக்கு அடுத்த நிலையில் இருப்பது யார் தெரியுமா? கேரி ஸோபெர்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்)!

ஆக உலகின் மிக முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் சேவாக்; இந்தியாவின் டெண்டுல்கரை விடவும் பல அதிக சிறப்புகளைத் தன் குறுகிய கிரிக்கெட் வாழ்க்கையில் சாதித்தவர் சேவாக் என்பது தெளிவாகிறது.

இனியும் சேவாகை, டெண்டுல்கருடன் ஒப்பிடுவதை நாம் நிறுத்த வேண்டும்!

சரி, இனி நேற்றைய ஆட்டத்துக்கு வருவோம். முதல் நான்கு விக்கெட்டுகள் மோசமான முறையில், தேவையற்ற வகையில் விழுந்தன. கவுதம் கம்பீர் கேட்ச் பிராக்டீஸ் கொடுப்பது போல மொஹம்மத் சாமி பந்துவீச்சில் இரண்டாவது ஸ்லிப்பில் இருக்கும் யூனுஸ் கான் கையில் கேட்ச் கொடுத்தார். கம்பீர் 24, இந்தியா 98/1. அடுத்து திராவிட் - மிகவும் நம்பிக்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தவர் - கனேரியாவின் பந்தில் முன்னதாகவே முடிவு செய்து ஸ்வீப் செய்யப்போய் எல்.பி.டபிள்யூ ஆனார். திராவிட் 22, இந்தியா 172/2. டெண்டுல்கர், இம்முறை மிகவும் நன்றாகவே ஆரம்பித்தார். அர்ஷத் கானை பலமுறை ஸ்வீப் செய்து ரன்கள் பெற்றார். ஆனால் ஆஃப்ரீதி பந்தை கட் செய்யப்போய், கல்லியில் யூனுஸ் கான் கையில் எளிதான கேட்சைக் கொடுத்தார். 35வது சதத்துக்காக நாம் இன்னமும் காத்திருக்க வேண்டும். டெண்டுல்கர் 41, இந்தியா 257/3. அடுத்து கங்குலிக்கு பதில் லக்ஷ்மண் வந்தார். சேவாக் தன் இரட்டை சதத்தைத் தொட்ட விதமே சற்று மோசமாக இருந்தது. சதத்தைத் தாண்டும்போது மிகவும் அருமையாக ஒரு நான்கு, பின் ஒரு வேகமான ஒன்று என்று வந்தார். 150ஐத் தொடுவது கனேரியா பந்துவீச்சில் ஒரு சிக்ஸாக இருந்தது. ஆனால் 200ஐத் தாண்ட பந்தை கவர் திசையில் தூக்கி அடித்தார். நல்லவேளையாக அங்கு யாரும் இல்லை கேட்ச் பிடிக்க. ஆனால் அதே ஓவரில் பந்தை சரியாக, நெருங்கி அணுகாமல் நின்ற இடத்திலிருந்தே மெதுவாகத் தட்டிவிட, கனேரியாவிடமே கேட்ச் ஆனது. சேவாக் 201, இந்தியா 337/4.

அடுத்து கங்குலி மிக மோசமான முறையில் அவுட்டானார். முதலில் நெருங்கிய எல்.பி.டபிள்யூ அப்பீல். அடுத்த பந்தில் இறங்கி அடிக்க முயற்சி செய்து கனேரியாவின் கூக்ளியில் ஏமாந்து ஸ்டம்பிங் ஆனார். கங்குலி 1, இந்தியா 343/5. கார்த்திக், லக்ஷ்மண் ஜோடி சேர்ந்து இந்தியாவை ஃபாலோ-ஆன் நிலையிலிருந்து காத்தனர். ஆனால் சாமியின் பந்தை கட் செய்து கார்த்திக் கல்லியில் நின்ற அசீம் கமாலிடம் கேட்ச் கொடுத்தார். கார்த்திக் 10, இந்தியா 374/6. நாளின் இறுதியில் இந்தியா 379/6 என்ற நிலையில் இருந்தது.

நிச்சயமாக இப்பொழுது பாகிஸ்தானே முன்னிலையில் உள்ளது. ஆனால் இப்பொழுதும் இந்தியா ஜெயிக்க வாய்ப்புள்ளது. நான்காம் நாள் காலையில் உணவு இடைவேளைக்கு முன்னர் இந்தியா 100 ரன்கள் சேகரித்து ஆட்டமிழந்தால், அடுத்த இரண்டு வேளைகளில் - நான்கு மணிநேரங்களில், 60 ஓவர்களில் - பாகிஸ்தானை 180க்குள் ஆல் அவுட் ஆக்க வேண்டும். அப்படியானால் ஐந்தாம் நாள் இந்தியாவுக்கு 270 ரன்கள் வரை எடுக்க வேண்டியிருக்கும். அது முடியக்கூடிய காரியமே.

பார்க்கலாம் நான்காம் நாள் என்ன நடக்கிறதென்று.

Saturday, March 26, 2005

குமுதத்தை முந்தியது ஆனந்த விகடன்

Ananda Vikatan, largest-selling Tamil weekly

ஆடிட் பீரோ ஆஃப் சர்குலேஷன் (ABC) ஜூலை-டிசம்பர் 2004 கணிப்பின்படி ஆனந்த விகடன் சராசரியாக 4,30,000 பிரதிகள் விற்பதாகவும், குமுதத்தை விற்பனையில் தாண்டி விட்டதாகவும் 'தி ஹிந்து' செய்தி தெரிவிக்கிறது.

பெரிதும் பேசப்பட்ட மஞ்சள் தூள், மிளகு, உப்பு, ஷாம்பூ, குங்குமம் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. 10 லட்சத்தைத் தாண்டிவிட்டோம் என்று விட்ட புருடாக்கள் ABCஇடம் பலிக்கவில்லை போலும்.

குமுதம் 4,10,000 என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குங்குமம் 1 லட்சத்துக்கு சற்று மேலாக இருக்கலாமாம்.

பல வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் விகடன் குமுதத்தைத் தாண்டியுள்ளது. குமுதம் பல்வேறு நேரங்களில் 5 லட்சம், 6 லட்சம் பிரதிகளையெல்லாம் தாண்டியிருக்கிறது. விகடன் பல நாள்களாக 2.5 லட்சத்திலிருந்தது. கடந்த இரண்டு வருடங்களில் திடீரென அதிகமாவதற்கு என்ன காரணமாக இருக்கும்? அதுவும் குமுதத்தையும் மிஞ்சுவதற்கு?

யூனுஸ் கான் பாத்ஷாஹ்

பாகிஸ்தான் 570, இந்தியா 55/0

இரண்டாம் நாள் ஆட்டம் இரண்டு ஆட்டக்காரர்களின் கதை. ஒருவர் யூனுஸ் கான். அடுத்தவர் ஹர்பஜன் சிங். யூனுஸ் கான் முதல் நாள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். ஹர்பஜன் சிங் முதல் நாள் செய்யாததைச் செய்தார்.

இரண்டாம் நாள் காலை முதல் ஓவரில் யூனுஸ் கான் இரண்டு நான்குகளைப் பெற்றார். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பாலாஜி இன்ஸமாம்-உல்-ஹக்கை ரன்கள் ஏதும் புதிதாகப் பெறாமலேயே எல்.பி.டபிள்யூ ஆக்கினார். இன்ஸமாம் 184, பாகிஸ்தான் 331/3. ஆனால் யூசுஃப் யோஹானாவும், யூனுஸ் கானும் இணைந்து வேகமாக ரன்கள் சேர்க்க ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட நிமிடத்துக்கு ஒரு ரன் வீதம் வந்துகொண்டிருந்தது. இர்ஃபான் பதான் பந்துவீச்சில் யூனுஸ் கான் இரண்டாம் ஸ்லிப்பில் நின்ற லக்ஷ்மண் கைக்கருகில் ஒரு கேட்ச் கொடுத்தார். லக்ஷ்மண் பிடிக்கவில்லை. அதைத் தவிர யூனுஸ் வேறெந்தத் தவறையும் செய்யவில்லை.

உணவு இடைவேளை நெருங்கும்போது யாரும் எதிர்பாராத வகையில் யோஹானா ஹர்பஜன் சிங் பந்தை வெட்டி ஆட முயன்று மெலிதான விளிம்பில் பட்டு தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்தார். யோஹானா 37, பாகிஸ்தான் 415/4.

ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகுதான் ஹர்பஜன் தன் முழுத்திறமையையும் காட்டினார். ஆசீம் கமால் பல நிமிடங்களை வீண் செய்துவிட்டு ஹர்பஜன் சிங்கை ஸ்வீப் செய்யப்போய் டாப் எட்ஜ் பட்டு ஷார்ட் ஃபைன் லெக்கில் இருக்கும் கங்குலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கமால் 4, பாகிஸ்தான் 428/5. அடுத்து வந்த அப்துல் ரஸாக்கும் நிறைய நேரத்தை வீணாக்கினார். வேகமாக ரன்கள் சேர்க்காமல் 37 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஹர்பஜன் பந்துவீச்சில் - அருமையான ஆஃப் பிரேக் - உள்புற மட்டையில் பட்டு ஹர்பஜனுக்கே கேட்ச் கொடுத்தார். பாகிஸ்தான் 446/6.

ஆனால் அடுத்த ஜோடி:- கம்ரான் அக்மல்+யூனுஸ் கான் வேகமாக ரன்கள் எடுத்து எண்ணிக்கையை 500க்கு மேல் கொண்டு சென்றது. யூனுஸ் கான் தனது இரட்டை சதத்தைப் பெற்றார். தேநீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரில் ஹர்பஜன் அதிகமாக ஸ்பின் ஆன ஆஃப் பிரேக் மூலம் கம்ரான் அக்மலை பவுல்ட் ஆக்கினார். அக்மல் 28, பாகிஸ்தான் 504/7.

தேநீர் இடைவேளைக்குப் பின்னர் பாகிஸ்தான் எந்தவொரு திட்டமும் இல்லாமல் நேரத்தைக் கடத்தினர். மொஹம்மத் சாமி யூனுஸ் கானுக்கு நல்ல ஆதரவு கொடுத்தார். இருவரும் சேர்ந்து 61 ரன்கள் பெற்றனர். பின் சாமி கும்ப்ளே பந்துவீச்சில் பந்தை மிட்விக்கெட் தட்டிவிட்டு ரன் எடுக்கப் போனார். ஆனால் யூனுஸ் கான் நகரவேயில்லை. மிட்விக்கெட்டில் கம்பீர் பந்தைப் பிடித்து கார்த்திக்கிடம் கொடுக்க, அவர் எளிதான ரன் அவுட்டை நிகழ்த்தினார். சாமி 17, பாகிஸ்தான் 565/8. அடுத்த ஓவரில் யூனுஸ் கான் ஹர்பஜனை மிட் விக்கெட் மேலாக அடிக்க முனைய, பந்தில் ஏமாந்து கவர் திசையில் இர்ஃபான் பதானிடம் கேட்ச் கொடுத்தார். யூனுஸ் கான் 267. பாகிஸ்தான் 569/9. இதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் அடித்த மிக அதிகமான ஸ்கோர், இந்தியாவில் அவர்கள் அடித்த முதல் இரட்டை சதமும் கூட. அத்துடன் இதுதான் இந்தியாவில் வெளிநாட்டவர் அனைவரும் அடித்த ரன்களிலேயே மிக அதிக ஸ்கோரும் கூட. இதுதான் பாகிஸ்தான் இந்தியாவில் 500க்கு மேல் அடித்த முதல் எண்ணிக்கை. மிக அதிகமான எண்ணிக்கையும் கூட. இதுதான் பெங்களூரின் வெளிநாட்டினர் அடித்த முதல் 500+ எண்ணிக்கை. பெங்களூரின் எந்த அணியும் (இந்தியா சேர்த்து) அடித்த அதிகமான எண்ணிக்கை.

இரண்டு பந்துகள் கழித்து தனீஷ் கனேரியா ஹர்பஜனை மிட் விக்கெட் திசையில் தூக்கி அடித்தார். லக்ஷ்மண் கேட்சைப் பிடிக்க, பாகிஸ்தான் 570க்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து ஆட வந்த இந்தியாவுக்கு பத்து ஓவர்கள். பத்திலும் சேவாக் விளாசித் தள்ளினார். ரஸாக் பந்தில் மிட் ஆன், மிட் ஆஃப் இரண்டிலும் நான்குகள். தனீஷ் கனேரியா பந்தில் லாங் ஆன் மேல் ஒரு சிக்ஸ். மற்றும் சில நான்குகள். கம்பீர் தன் சாக்குக்கு இரண்டு நான்குகள் அடித்தார். ஆக பத்து ஓவர்களில் இந்தியா 55/0 என்ற ஸ்கோரில் இருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டம் இந்த விளையாட்டு எந்தத் திசையில் செல்லப்போகிறது என்பதை நிர்ணயிக்கும்.

Friday, March 25, 2005

இன்ஸமாம்-உல்-ஹக் = 100/100

பாகிஸ்தான் 323/2 (யூனுஸ் கான் 127*, இன்ஸமாம் 184*)

தன் நூறாவது டெஸ்டில் சதமடித்து பிரமாதமான சாதனை புரிந்தார் இன்ஸமாம். முதல்நாள் ஆட்டத்தின் சிறப்பம்சம் யூனுஸ் கான் - இன்ஸமாம் இணைந்து எடுத்த 300க்கும் மேலான ஜோடி. இது முடியாமல் இன்னமும் தொடர்கிறது என்பது இந்தியாவுக்கு கலக்கத்தைத் தடரக்கூடியது.

காலையில் இன்ஸமாம் டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தபோது அவரை யாருமே குறஒ சொல்லியிருக்க முடியாது. பெங்களூர் ஆடுகளம் சிமெண்ட் தரையைப் போல கெட்டியாக, பிளவுகள் ஏதுமின்றி, வேண்டிய அளவுக்கு ரன்கள் நிறைந்ததாகவே காணப்பட்டது.

ஆனால் பாலாஜி வீசிய முதல் பந்தில் - இந்தியாவின் இரண்டாவது ஓவரில் - ஷாஹீத் ஆஃப்ரீதி முதல் ஸ்லிப்பில் நிற்கும் திராவிடுக்கு கீழாகச் செல்லும் ஒரு கேட்சைக் கொடுத்தார். சென்ற டெஸ்ட் போட்டியில் சில கேட்ச்களைத் தடவவிட்ட திராவிட் இம்முறை தவறேதும் செய்யவில்லை. ஆஃப்ரீதி 0, பாகிஸ்தான் 4/1. தொடர்ந்து பதான் வீசிய பந்தில் யாசிர் ஹமீது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குக்கு எளிதான கேட்சைக் கொடுத்தார். ஹமீது 6, பாகிஸ்தான் 7/2.

இந்நேரத்தில் இன்ஸமாம் உள்ளே வந்தார். ஏற்கெனவே உள்ளே இருந்த யூனுஸ் கானும் ரன்ன்கள் ஏதும் பெற்றிருக்கவில்லை. இக்க்கட்டான சூழ்நிலை. யூனுஸ் தடுத்தாடவும், இன்ஸமாம் அடித்தாடவும் முடிவு செய்தனர். இன்ஸமாம் தானடித்த முதல் நான்கிலிருந்தே அற்புதமாக ஆட ஆரம்பித்தார்.

காலை, முதல் அரை மணிநேரத்துக்குள் விழுந்த இரண்டு விக்கெட்டுகளுக்கு மேல் நாள் முழுதும் வேறெந்த விக்கெட்டுகளும் விழவில்லை. அது கிடக்கட்டும்! நாள் முழுதுமாகச் சேர்ந்து மொத்தமாகவே இந்தியர்கள் பத்துமுறைதான் விக்கெட் கிடைக்குமோ என்று அப்பீல் செய்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்?

யூனுஸ் கான் பந்துகளை கால்களில் படுமாறு வைத்துக்கொள்ளவேயில்லை. அனைத்துமே பேட்டின் நடுவில்தான். விளிம்பில் பட்டு எதுவுமே ஸ்லிப் திசையில் கேட்ச் போலச் செல்லவில்லை. மட்டை, கால்காப்பு வழியாக எதுவுமே அருகில் நிற்கும் தடுப்பாளர்களிடம் கேட்ச் ஆகச் செல்லவில்லை. ஒரேயொருமுறை ஹர்பஜன் பந்தில் யூனுஸ் கான் சிக்ஸ் அடித்தபிறகு, அடுத்த பந்தில் அதையே திருப்பிச் செய்வதற்காக, இறங்கி வந்து தூக்கி அடிக்கப் போய் பந்து மேல்நோக்கிச் சென்று கவர் திசையில் விழுந்தது. ஆனால் அங்கு எந்தத் தடுப்பாளரும் இல்லாத காரணத்தால் கேட்ச் பிடிக்க முடியவில்லை.

மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் இன்ஸமாம் தன் சதத்தைப் பெற்றார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு இன்ஸமாம் 150ஐயும், யூனுஸ் கான் தன் சதத்தையும் பெற்றனர்.

கும்ப்ளே கொல்கத்தாவில் விக்கெட் எடுத்துக் குவித்தவரைப் போலவே காணப்படவில்லை. ஹர்பஜன் ஐசிசிக்குப் பயந்து ஒரு தூஸ்ராவையும் போடவில்லை. (இது முட்டாள்தனம். ஏற்கெனவே இவர் மீது குற்றச்சாட்டு வந்துவிட்டது. இந்த டெஸ்டில் தூஸ்ரா போட்டால் யாரும் இவரை ஆட்டத்தை விட்டு வெளியேற்ற முடியாது.) இதனால் ஹர்பஜன் ஒன்றுக்கும் உபயோகமில்லாமல்தான் வீசிக்கொண்டிருந்தார்.

இந்தியா நான்கு சப்ஸ்டிடியூட்டுகளையும் பணியில் இறக்கியது. வெய்யிலிலும், பாகிஸ்தானியர்களின் ஆட்டத்தாலும் சோர்வுற்று வெவ்வேறு நேரங்களில் லக்ஷ்மண், கங்குலி, ஹர்பஜன் ஆகியோர் வெளியேற, யுவ்ராஜ், ஜாகீர் கான், காயிஃப், நேஹ்ரா என்று அனைவரும் வந்து வந்து பந்தைப் பொறுக்கிப் போட்டனர்.

நாளின் கடைசிப் பந்தில் இன்ஸமாம் அற்புதமான நான்கை அடித்தார். அத்துடன் நாள் முழுதும் தான் ஆட்டத்தின் மீது வைத்திருந்த ஆளுமையை நிலை நாட்டினார். நிமிர்ந்த மார்போடு இன்ஸமாமும், யூனுஸ் கானும் வெளியேற, தலையைக் குனிந்து கொண்டு இந்தியர்கள் சோர்வுடன் வெளியேறினர்.

ஆனால் இந்தச் சோர்வு தேவையில்லை. இந்தப் போட்டித் தொடரில் ஓரணி முன்னுக்கு வரும்போது எதிரணி எப்பொழுதுமே எதிர்த்துப் போராடியுள்ளது.

நாளை மற்றுமொரு நாளே.

Thursday, March 24, 2005

அறுபத்து மூவர் 2005

நேற்று திசைகள் இயக்கம், சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு (அது ஏற்கெனவே முடிந்து போனாலும்) (பெண்) எழுத்தாளர்கள் மூவருடைய நூல்களைப் பற்றிய அறிமுகக் கூட்டத்தை மயிலை பாரதீய வித்யா பவனில் ஏற்பாடு செய்திருந்தனர். அந்தக் கூட்டத்தைப் பற்றி பிறகு...

மயிலாப்பூரில் நேற்று அறுபத்து மூவர் விழா. கூட்டம் அதிகம் இருக்கும் என்று எழுதியிருந்தேன். அது எப்பேற்பட்ட கூட்டம் என்பதை நேரில் சென்று பார்த்திருந்தால்தான் உங்களுக்குத் தெரியும்.





மயிலாப்பூர் லஸ் தாண்டியவுடனேயே இந்த இடத்தில் ஏதோ விசேஷம் என்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எப்பொழுதும் பேருந்துகள், பிற வாகனங்கள் செல்லும் சாலைகளை மறித்து மக்கள் நடமாடுவதற்கு மட்டும் அனுமதி கொடுத்தனர்.

அன்னதானம் என்றால் நமக்கெல்லாம் தெரிந்தது ஏதோ கலந்த சாதம் தருவார்கள் என்பதுதான். ஆனால் மயிலை மக்கள் அதை அடுத்த பரிமாணத்துக்குக் கொண்டு சென்றிருந்தனர். சர்க்கரைப் பொங்கல், பார்லே ஜி பிஸ்கெட்டுகள், பலாச்சுளை, வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், புளிசாதம், தயிர் சாதம், (தண்ணி மோரும் உண்டு!), சுடச்சுட தோசை (ஆமாமய்யா, ஆனால் குட்டி குட்டி தோசைதான்), ரவா கேசரி, ரவா உப்புமா? (அல்லது கிச்சடி என்று நினைக்கிறேன்), இன்னும் என்னென்னமோ அய்ட்டங்கள். கூடை கூடையாக மக்கள் வைத்துக்கொண்டு வருபவர்கள் அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தனர். வரிசை வரிசையாக மக்கள் உணவுப் பதார்த்தங்களை வாங்கி ருசித்துக்கொண்டே, அடுத்த பந்தலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

தெருவில் பொருள்களைப் பரப்பி பலர் கடைகள் வைத்திருந்தனர். பலூன்கள், கிலுகிலுப்பைகள், குதிக்கும் குட்டி நாய்கள், நெற்றியில் ஒட்ட விதவிதமான பொட்டுகள், சோப்புக் குமிழைக் கிளப்பும் ஊதுவான், ஊதுகுழல்கள்... இப்படி என்னென்னவோ விஷயங்கள் அங்கே விற்கப்பட்டன.

கிரிமினல்கள் ஜாக்கிரதை!

ஒவ்வொரு மாடவீதியிலும் உயரமான மேடையமைத்து அங்கு இரண்டு காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். ஒருவர் கையில் பைனாகுலரை வைத்துக்கொண்டு தெருவில் கெட்ட நபர்கள் ஜேப்படி செய்கின்றனரா, கழுத்துச் சங்கிலியை அறுக்கின்றனரா என்று கவனித்துக்கொண்டிருந்தார். மற்றவர் கையில் மெகாபோனை வைத்துக்கொண்டு ஓயாது ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.

ஆங்காங்கு, "கூட்டங்களில் செயினைத் திருடுபவர்கள் இவர்கள்" என்று நாமகரணம் சூட்டப்பட்டு பலரது உருவப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதையெல்லாம் யாராவது கவனித்தார்களா என்று தெரியவில்லை. அவ்வப்போது காவலரும் தன் மெகாபோனில், சந்தேகப்படுமாறு யாராவது ஏதாவது செய்தால் அவர்களைப் பற்றி உடனே காவலர்களிடம் தகவல் தருமாறு கேட்டுக்கொண்டிருந்தனர்.

சமீபத்தில் ஞானக்கூத்தன் அசோகமித்திரன்-50 கூட்டத்தில் பேசும்போது தஞ்சைப் பகுதிகளில் ஒவ்வொருவர் வீட்டிலும் யாராவது ஒருவர் வீட்டைவிட்டு ஓடிப்போயிருப்பார்கள் என்று சொன்னார். அதைப்போல அறுபத்து மூவர் கூட்டத்துக்கு வந்திருக்க்கும் ஒவ்வொருவர் குடும்பத்திலும் ஒருவராவது கூட்டத்தில் தொலைந்துபோயிருப்பார்கள் என நினைக்கிறேன். ஒவ்வொரு மாட வீதியிலும் காணாமல் போனவர்கள் யாரை எங்கு வந்து சந்திக்கவேண்டும் என்று காவலர்கள் அறிவித்த வண்ணம் இருந்தனர். கூட்டம் அப்படிப்பட்டது.

பிரமன் ஓட்டிய தேர்

நான்கு தலை பிரமன் ஓட்டிய தேர் (முந்தைய நாள் போலிருக்கிறது), ஓர் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தது.



அறுபத்து மூவரும் வலம் வர இத்தனை பெரிய தேர் கிடையாது. சிறு சப்பரங்கள்தான் என நினைக்கிறேன். அதுவும் கூட அறுபத்து மூன்று குட்டிச் சப்பரங்களா, இல்லை சிறு பல்லக்குகளா என்றும் தெரியவில்லை. அறுபத்து மூவரும் வலம் வருவது எப்பொழுது... எதையும் அருகில் இருந்து பார்க்க நேரமில்லை. திசைகள் கூட்டத்துக்குச் சென்றுவிட்டு, இரவி ரயில்வண்டியைப் பிடித்து பெங்களூர் வந்துவிட்டேன்.



அடுத்த வருடம் இந்நிகழ்ச்சியின் பல படங்களோடும், விடியோவோடும் சந்திப்போம்!

அறுபத்து மூவர் - ஹரி கிருஷ்ணன்

[அறுபத்து மூவர் விழாவின் பின்னணி என்ன என்று ஹரி கிருஷ்ணனிடம் கேட்க, அவர் எழுதி அனுப்பியது.]

'தண்ணீரே! உனக்கு ஆகாயத்தில் உலவும்போது மேகம் என்று பெயர்; பூமியில் வந்து விழுந்தவுடன் நீர் என்று பெயர்; ஆய்ச்சியரின் கைக்கு வந்ததும், அவர்களுடைய பானையில் சேர்ந்ததும் மோர் என்று பெயர்' என்று காளமேகம் கிண்டலடித்த பாடல் ஒன்று இருக்கிறது. நான் சின்னப் பையனாக இருந்த போது அதற்குச் சமமான மொழி ஒன்று இருந்தது. 'என்னது இது! நீர்மோரா! நீருன்னாலும் நீரு சரியான அறவத்தி மூவர் தண்ணிப் பந்தல் நீரு' என்று கேலி செய்வார்கள்.

அறுபத்து மூவர் என்றால் அந்த நாளில் முதலில் நினைவுக்கு வந்தது அந்தத் தண்ணீர்ப் பந்தலும், நீர் மோரும்தான்.

தொன்மையான தொண்டை நாட்டுச் சைவத் திருப்பதிகள் ஏழு. (முப்பத்திரண்டு என்று ஒரு கணக்கும் உண்டு.) தொண்டை நாடு என்பது வேறு எதுவுமில்லை. நம்ம சென்னையும் அதைச் சுற்றியுள்ள இடங்களும்தான். அவற்றில் மிக முக்கியமான தலங்களில் ஒன்று மயிலை. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஐம்பத்தோராவது இடம் வகிக்கும் வாயிலார் நாயனார் அவதரித்த திருத்தலம். வேளாளர் குடியில் பிறந்தவர் வாயிலார். சென்னையில் வேளாண்மை வேற பண்ணினாங்களா என்று கேட்பீர்கள். எனக்குத் தெரிந்தே ஆள்வார்பேட்டை மவுபரீஸ் சாலை (கவிஞர் பாரதிதாசன் சாலை என்றால்தான் இப்போது தெரியும்) வயலும் தென்னந்தோப்புமாக இருந்த இடம்தான். அதாவது சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கூட.

இந்த மைலாப்பூரில் மட்டும்தான் 'அறுபத்து மூவர்' என்றழைக்கப்படும் திருவிழா கொண்டாடப்படுகிறது. வேறெந்த இடத்திலும் இப்படி ஓர் உற்சவம் நடப்பதாகத் தெரியவில்லை. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோத்சவம் கொண்டாடுகிறார்கள். பத்து நாள் விழாவான பிரம்மோத்சவத்தின் எட்டாவது நாள் அறுபத்து மூவர். (பத்தாம் நாள் பங்குனி உத்திரம்.) அறுபத்து மூன்று நாயன்மார்களுடைய திருவுருவங்களையும் உலாச் செய்தாலும், இந்த நாள் நடப்பது என்னவோ சிவநேசஞ் செட்டியாரையும் அவர் மகள் அங்கம் பூம்பாவையையும் சுற்றிதான். திருஞான சம்பந்தர் காலத்தில் வாழ்ந்தவர் சிவநேசஞ் செட்டியார். தன் மகளைத் திருஞான சம்பந்தருக்கே அளிப்பதாக முடிவு செய்திருந்தவர்.

சுற்றம் நீடிய கிளையெலாம் சூழ்ந்துஉடன் கேட்பக்
கற்ற மாந்தர்வாழ் காழி நாடு உடையவர்க்கு அடியேன்
பெற்றெடுத்த பூம்பாவையும் பிறங்கிய நிதியும்
முற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார்

என்று சேக்கிழார் இதைச் சொல்கிறார். நமக்குத் தெரியும். அங்கம்பூம்பாவையைப் பாம்பு கடித்தது. அவளுடைய எலும்பையும் சாம்பலையும் ஒரு குடத்தில் சேமித்து வைத்திருந்தார் சிவநேசஞ் செட்டியார். பின்னொரு நாளில் திருஞான சம்பந்தர் மயிலாப்பூர் கபாலீச்சரத்துக்கு வந்த போது, அந்தக் குடம் அவர் முன் வைக்கப்பட்டது. திருஞான சம்பந்தர் அப்போது பாடிய பதிகத்தின் வலிமையால் அங்கம்பூம்பாவை உயிர் பெற்று எழுந்தாள். சாம்பலில் இருந்து.

அறுபத்து மூவர் உற்சவத்தின்போது அங்கம்பூம்பாவை மற்றும் சிவநேசஞ் செட்டியாருடைய திருவுருவங்களும் திருச்சுற்றாக எடுத்து வரப்படுகின்றன. கடைசியில் 'மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை' என்று தொடங்கும் - பூம்பாவையை உயிர்ப்பித்த - திருஞான சம்பந்தரின் பதிகம் படிக்கப்படுகிறது.

ஆமா, ஒண்ணு கேக்கறேன். சாம்பலில் இருந்து ஃபீனிக்ஸ் மாதிரி எழுந்தார் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோமே, ஒரு மாறுதலுக்கு 'அங்கம் பூம்பாவையைப் போல' இல்லாவிட்டால் சுருக்கமாக 'பூம்பாவையைப் போல எழுந்தார்' என்று சொன்னால் என்ன? மரபுக்கு மரபும் ஆச்சு. புதுமைக்குப் புதுமையும் ஆச்சு. தையலை உயர்வும் செய்த மாதிரி ஆச்சு. மண்ணின் மணத்தைப் பரப்பியதும் ஆச்சு.

Wednesday, March 23, 2005

அறுபத்து மூவர் விழா

இன்று மயிலாப்பூரில் அறுபத்து மூவர் விழா. மயிலை கபாலீசுவரர் கோயிலைச் சுற்றி கூட்டம் தாங்கமுடியாது. அறுபத்து மூன்று நாயன்மார்களும் இன்று ஊர்வலமாக அழைத்து வரப்படுவர்.

ஆங்காங்கு பல இடங்களில் பொதுமக்கள் தண்ணீர்ப் பந்தல்களை நிறுவியுள்ளனர்.

இந்த விழா ஏன், கபாலி கோயில் பக்கம் என்ன நடக்கும் என்று மயிலாப்பூரின் எல்லையில், கோபாலபுரத்தில் அமர்ந்திருக்கும் எனக்குத் தெரியவில்லையே என்று அருமை கூகிளில் தேடினேன். அங்கும் ஒன்றும் கிடைக்கவில்லை. உடனடியாக ஹரி கிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு 'இதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்' என்று கேட்டதற்கு 'முன் சென்னை ஆன்லைனில் எழுதிய கட்டுரை ஒன்று உள்ளது. மாலையில் தருகிறேன்' என்று சொன்னார். எனவே மாலை காத்திருங்கள். எனக்குக் கிடைப்பதை உங்களுக்குத் தருகிறேன்.

விழா என்னவாக இருந்தாலும் இன்று மயிலாப்பூரை ஒரு சுற்று சுற்றினால் ஜம்மென்று நீர்மோர் கிடைக்கும்.

நீர்மோர் என்றவுடன் எனக்கு நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் திருவிழாவும் அதையொட்டி நாகை வீதிகளில் முக்குக்கு முக்கு இருக்கும் தண்ணீர்ப் பந்தல்களும்தான் ஞாபகம் வந்தன. மாரியம்மன் தேர் பெருமாள் தேரைவிடப் பெரிசு. இழுப்பதும் கஷ்டம். ஒரு முழு நாள் தேவைப்படும். பெருமாள் தேர் அரை நாளில் கிளம்பிய இடத்துக்கு வந்துவிடும். நீலாயதாட்சியம்மன் கோயில் தேர் மாரியம்மன் தேரை விடப் பெரிசு. வந்து சேர சில சமயங்கள் மூன்று-நான்கு நாள் ஆகிவிடும். எங்காவது அச்சாணி முறிந்து நிற்கும்.

மாரியம்மன் தேருக்கு வருவோம். ஞாயிற்றுக் கிழமைதான் தேர். அன்று காலை முதலே காவடிகள் - பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடி - என்று ஆரம்பித்து விடும். காலை தொடங்கி தேர், பெருமாள் கிழக்கு வீதியிலிருந்து தெற்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி வந்து மீண்டும் கிழக்கு வீதியில் நின்றாக வேண்டும். அதன்பின் செடில் ஆரம்பிக்கும்.

சிறுவர்களாகிய எங்களுக்கு தேரை இழுப்பது என்னவோ எங்களின் பிரயாசையால்தான் என்று தோன்றும். அவ்வப்போது முட்டுக்கட்டை போடும் இடம் வரை சென்று பார்ப்போம். சக்கரத்தின் பிரம்ம்மாண்டம் பிரமிக்க வைக்கும். நசுங்கித் தூக்கிப்போடும் முட்டுக்கட்டைகளைப் போல நாமும் முறிந்துவிடுவோமோ என்று தோன்றும். நமக்குச் சரியான இடம் தேர்வடத்தின் கடைசியில். தேரை, குறுகிய வீதிகளின் முனைகளில் திருப்புவது கலைஞர்களால் மட்டுமே சாத்தியம். ஆங்காங்கு தேர் நின்று பக்தர்களின் அர்ச்சனைகளை ஏற்றுக்கொண்டு பயணத்தைத் தொடரும்.

மாவிளக்கு மாவு, சத்து மாவு, வேண்டிய அளவு நீர்மோர். பானகம் எங்கேயாவது கொஞ்சம் மட்டும்தான் கிடைக்கும். திடீரென்று ஓரிடத்தில் 108 தேங்காய்களை உடைப்பார்கள்.

எங்கும் வேப்பிலைக் கொத்துகள் காணக்கிடைக்கும்.

தெற்கு வீதியில் வரும்போது வெய்யில் ஏறத்தொடங்கியிருக்கும். மேற்கில் தடம்பதிக்கும்போது கால்களைத் தரையில் வைக்க முடியாது. ஒவ்வொருவரும் தத்தம் வீட்டு வாயிலில் தண்ணீரைக் கொட்டிவைத்திருப்பர். ஆனால் நிமிடத்தில் தண்ணீர் காய்ந்துவிடும். காலையிலிருந்து விரதமிருக்கும் காவடி சுமக்கும் பெண்கள் சிலருக்கு சாமி ஆவேசம் வரும். சாமிக் காவடிகளை நிலைநிறுத்தி, அங்கிருந்து அகற்றி முன்னே கொண்டுசெல்வார்கள்.

சாதாரணக் காவடிகளை விட அலகு குத்திக்கொண்டு வருபவர்கள் எனக்கு எப்பொழுதுமே திகிலை வரவழைப்பவர்கள். இது பிச்சையெடுப்பதற்காக செட்-அப் செய்துகொண்டு வரும் அலகு அல்ல. நிஜமாகவே நாக்கைத் துளைத்திருப்பார்கள். கன்னம் வழியாகக் குத்தியிருப்பார்கள். முகத்தைத் திருப்பிக் கொள்வேன். முதுகிலும் உடலிலும் கொக்கி போட்டு அதன்மூலம் காவடி இழுப்பவர்கள் சிலர். அதுவும் பயமுறுத்த வைக்கும் விஷயம்.

ஒருவழியாக, எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தேர் நிலைக்கு வந்து சேரும். எனக்குத் தெரிந்து மாரியம்மன் தேரோ, பெருமாள் தேரோ எந்தப் பிரச்னையும் இல்லாமலேதான் வந்து சேர்ந்துள்ளது.

மாரியம்மனிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு ஒருவர் செடில் மரம் ஏறுவார். ஒரு காலத்தில் ஆளுக்கு மூன்று சுற்று என்று வைத்திருந்தார்கள். பின் அதை ஒரு சுற்றாகக் குறைத்து விட்டார்கள். அப்படியுமே இப்பொழுதெல்லாம் முழுவதுமாகச் சுற்றி முடிக்க இரண்டு நாள்கள் ஆகின்றன என்று கேள்விப்படுகிறேன்.

செடில் தமிழகத்தில் எத்தனையிடங்களில் இன்னமும் பழக்கத்தில் உள்ளது என்று தெரியவில்லை. நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் செடில் மிகவுமே பிரசித்தம். கார்த்தவீர்யார்ஜுனனைக் கழுவில் ஏற்றுவதற்கும், செடில் மரம் சுற்றுவதற்கும் ஏதோ தொடர்பு என்பது மட்டும் தெரியும். செடில் என்பது தரையில் குழு தோண்டி அதில் ஒரு மர உருளையைப் புதைத்திருப்பார்கள். அந்தை உருளையில் குறுக்காக ஒரு மரத்துண்டு செல்லும். இந்த மரத்துண்டை புதைத்துள்ள உருளையை மையமாக வைத்து சுற்றி வரலாம். குறுக்கு மரத்தின் ஒரு பக்கம் நீட்டமாக நான்கைந்து பேர் தள்ளிக்கொண்டு ஒரு வட்டச் சுற்றாகச் செல்லுமாறு இருக்கும். மறு முனையில் மரச்சட்டகம் ஒன்றில் மனிதர்கள் ஏறி நிற்குமளவுக்கு இடம் இருக்கும். குறுக்கு மரம் மேலும் கீழுமாகவும் செல்லுமாறு இருக்கும்.

முதலில் மரச்சட்டகம் கீழே வருமாறு குறுக்கு மரத்தின் நீண்ட பகுதியை மேலே உயர்த்துவார்கள். செடில் சுற்ற வேண்டிக்கொண்டவரை ஏற்றிக்கொண்டதும் நீண்ட பகுதியைக் கீழே இறக்குவர். சட்டகம் மனிதர்களைச் சுமந்து கொண்டு மேலே செல்லும். இப்பொழுது குறுக்கு மரத்தை ஒரு சுற்று சுற்றிக் கொண்டுவந்து நிறுத்தி, சட்டகத்தைக் கீழே இறக்கி, அடுத்த ஆளை ஏற்றிக்கொள்வார்கள்.

[அடுத்த முறை இந்த விழா நடக்கும்போது சில படங்களைப் பிடித்துக் கொண்டுவந்து காட்டுகிறேன். அப்பொழுது நன்றாகப் புரியலாம்.]

இரவு ஆனதும், ஒரு பக்கம் செடில் நடக்க, மறுபக்கம் எலெக்டிரிக் காவடிகள் என்று சொல்லப்படும் மின்விளக்குகள் பொருத்தப்பட்ட ஜில் ஜில் காவடிகள் வரும். பின்னால் டீசல் ஜெனரேட்டர் ஒரு மாட்டு வண்டியில் பெருத்த இரைச்சலுடன் வரும். நான்கு வீதிகளிலும் ஆங்காங்கே நிறுத்தி குறவன் குறத்தி ஆட்டம், கரகாட்டம் நடைபெறும். சாமி, பக்தி எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு குறையாடைகளுடன் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்கள் ஆடுவதைப் போன்று குறத்தி வேடம் அணிந்த பெண்கள் ஆடுவார்கள். [அதெல்லாம் பிறகு ஒரு பதிவுக்காக வைத்துக் கொள்வோம்.] தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத அந்தக் காலத்தில் மிட்நைட் மசாலா என்றால் இதுதான் எங்களுக்கு!

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ வந்துவிட்டேன். இன்று மயிலாப்பூர் தண்ணீர்ப் பந்தல் ஒன்றில் புகுந்து நீர்மோர் வாங்கி குடிக்க வேண்டும். நாகப்பட்டினம் குவாலிடியில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

Tuesday, March 22, 2005

ஜெமினி கணேசன் மறைவு

வலைப்பதிவுகளில் இதுவரை காணவில்லை, எனவே... நேற்று இரவு, தமிழ் நடிகர் ஜெமினி கணேசன் காலமானார்.

Monday, March 21, 2005

முரளி கல்யாண வைபோகமே...

இலங்கையில் மிக அதிகமாக அறியப்பட்ட விளையாட்டு வீரர், கிரிக்கெட் ஆட்டக்காரர், வலது கை சுழற்பந்து வீச்சாளர், மு.முரளிதரனது திருமணம் இன்று (21 மார்ச் 2005, திங்கள்கிழமை) சென்னையில் ராணி மெய்யம்மை ஹாலில் நடந்தது. முரளிதரன் சென்னையைச் சேர்ந்த மதி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

நாளை போட்டோக்கள் எல்லா செய்தித்தாள்களிலும் வருமுன்னர் இதோ உங்களுக்காக, மணமாந்தரும், மற்றோரும்:

முரளிதரன் + மதி

கும்ப்ளே பந்துவீச்சில் ...

ஜெயித்தது இந்தியா ...


தொண்ணூறு ஓவர்களில் 327 ரன்கள் பெற வேண்டும், கையில் ஒன்பது விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு. அதுவும் ஐந்தாவது நாள் ஆடுகளத்தில். நிச்சயமாக இது முடியாத காரியம் என்று நேற்றே சொல்லியிருந்தேன்.

ஐந்தாம் நாள் காலை முதல் பந்திலேயே கும்ப்ளே ஒரு விக்கெட்டைப் பெற்றார். கும்ப்ளே வீசிய பந்து கால்திசையில் லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றது. பந்து அளவு அதிகமாக, கிட்டத்தட்ட ஃபுல் டாஸ் ஆக வந்ததால், யூனுஸ் கான் முன்னால் வந்து தடுக்கவோ, அடிக்க்கவோ போனார். ஆனால் பந்தைத் தவற விட்டார். சற்றே தடுமாற்றத்துடன் பின்னால் திரும்புவதற்குள் தினேஷ் கார்த்திக் பந்தை அழகாகக் கைப்பற்றி விநாடியில் ஸ்டம்பைத் தட்டிவிட்டார். யூனுஸ் கான் 0, பாகிஸ்தான் 95/2. இப்படி முதல் பந்திலேயே விக்கெட்டைப் பெற்ற பின்னர் இந்தியப் பந்துவீச்சு நன்றாகப் பிரகாசித்தது. பாலாஜி ஒருமுனையிலும் கும்ப்ளே மறுமுனையிலும் அற்புதமாக வீசினர். ரன்கள் பெறும் வாய்ப்பை வெகுவாகக் கட்டுப்படுத்தினர்.

இன்ஸமாம்-உல்-ஹக் முன்னதாக ஆடவந்திருந்தார். இதுவரையில் எந்தக் கஷ்டமும் இல்லாமல் விளையாடிக்கொண்டிருந்த இன்ஸமாம் இந்த இன்னிங்ஸில் பந்தை சரியாகக் கணிக்கமுடியாமல் தடுமாறினார். கடைசியாக கும்ப்ளே வீசிய டாப் ஸ்பின்னரைத் தடுத்தாட, பந்து தரையில் விழுந்து, கால் காப்பில் பட்டு, உள்நோக்கித் திரும்பி ஆஃப் ஸ்டம்பைத் தட்டியது. இன்ஸமாம் 13, பாகிஸ்தான் 115/3. இந்த விக்கெட் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்திய அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் ஒரு கையை மறு கையால் குத்தி சந்தோஷத்தை வெளிக்காட்டியதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பாலாஜி நடு ஸ்டம்பில் விழுந்த பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இழுக்க, தவ்ஃபீக் உமர் சரியாக மாட்டிக்கொண்டார். மட்டையின் வெளி விளிம்பில் பட்டு இரண்டாம் ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த சேவாக் கையில் எளிதான கேட்ச் ஆகப் போனது. உமர் 35, பாகிஸ்தான் 115/4.

நாளின் முதல் பந்தில் ஒரு விக்கெட். இப்பொழுது அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட். இனி இந்தியா எப்பொழுது ஜெயிக்கும், எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிக்கும் என்பது மட்டுமே சுவாரசியமாக விஷயங்களாக இருந்தன. ஆனால் உணவு இடைவேளைக்கு முன்னதாக வேறெந்த விக்கெட்டும் விழவில்லை. அசீம் கமால், யூசுஃப் யோஹானா இருவரும் மெதுவாக ரன்களை சேர்ப்பதும், அவுட்டாவதிலிருந்து தப்பிப்பதுமாக நேரத்தைக் கழித்தனர். உணவு இடைவேளையின்போது பாகிஸ்தான் 174/4.

இடைவேளைக்குப் பின்னர் ஹர்பஜன், கும்ப்ளே வீசிய அனைத்தையும் தடுத்து வந்த யோஹானா ஒரு டாப் ஸ்பின்னரில் மிக மெலிதான உரசல் பட்டு, ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் இருந்த கவுதம் கம்பீரிடம் கேட்ச் கொடுத்தார். யோஹானா 22, பாகிஸ்தான் 178/5. அப்துல் ரஸாக் கும்ப்ளே வீசிய வேகமான பிளிப்பரில் ஏமாந்தார். பந்தும் சற்று உயரம் குறைந்து வந்தது. மட்டையைக் கீழே இறக்குவதற்கு முன்னால் ஸ்டம்ப்கள் பறந்தன. நிஜமாகவே பறந்தன. நடு ஸ்டம்ப் எகிறி இரண்டடி தள்ளி விழுந்தது. அந்த அளவுக்கு வேகமாக கும்ப்ளே பந்துவீசினார். ரஸாக் 6, பாகிஸ்தான் 188/6. இது கும்ப்ளேயின் ஐந்தாவது விக்கெட்.

ஆசீம் கமால் இப்பொழுது தோற்றுவிடுவோம் என்பதைப் புரிந்து கொண்டார். ஆனாலும் பொறுமையாக ஒரு முனையைக் காப்பதில் கவனத்தைச் செலுத்தினார். இப்பொழுது முதல்முறையாக ஹர்பஜன் தன் முழுத்திறமையைக் காட்டினார். கம்ரான் அக்மல் சென்ற டெஸ்டைக் காத்தவர். ஆனால் ஹர்பஜன் வீசிய ஓர் ஓவரில் முதல் இரண்டு பந்துகள் ஆஃப் ஸ்பின்னர். அக்மல் அவற்றைத் தடுத்தாடினார். அடுத்த பந்து தூஸ்ரா. நேராக, வீசிய திசையிலேயே செல்வது. இந்தப் பந்தில் ஏமாந்தார். ஆனால் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே. அடுத்த இரண்டு பந்துகளும் மீண்டும் ஆஃப் பிரேக். இவற்றைத் தடுத்தாடினார். கடைசிப் பந்து மீண்டும் நேராகச் செல்லும் பந்து. முன்னால் வந்து தடுத்தாடியவர் முழுவதுமாக ஏமாந்தார். இம்முறை பந்து நடு ஸ்டம்பில் விழுந்தது. அக்மல் 7, பாகிஸ்தான் 203/7.

அசீம் கமால் தன் அரை சதத்தைப் பெற்றவுடன் கும்ப்ளே பந்துவீச்சில் ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் நின்ற மொஹம்மத் காயிஃபிடம் கேட்ச் கொடுத்தார். கமால் 50, பாகிஸ்தான் 214/8.

இங்கிருந்து தேநீர் இடைவேளை வரை வேறெந்த விக்கெட்டும் விழவில்லை. தேநீர் இடைவேளைக்குப் பின்னர் முதல் பந்திலேயே கும்ப்ளே மொஹம்மத் சாமியை எல்.பி.டபிள்யூ ஆக்கினார். சாமி 9, பாகிஸ்தான் 223/9. இது கும்ப்ளே இந்த டெஸ்டில் எடுக்கும் பத்தாவது விக்கெட். அதன்பின் ஏழு ஓவர்கள் கழித்து ஹர்பஜன் பந்துவீச்சில் கனேரியா பவுல்ட் ஆனார். பாகிஸ்தான் 226 ஆல் அவுட். இந்தியா 195 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது. ராஹுல் திராவிட், தன் இரண்டு இன்னிங்ஸ் சதங்களினால் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

அடுத்த டெஸ்ட் பெங்களூரில். இதைப் பார்க்க நேரில் செல்கிறேன்.

Sunday, March 20, 2005

SPB Golden Night

இன்று மாலை சென்னை காமராஜர் அரங்கில் லக்ஷ்மண் ஸ்ருதி இன்னிசைக்குழுவினருடன் SPB Golden Night என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6.30க்குத் தொடங்கிய நிகழ்ச்சியில் எஸ்.பி.பி கீழ்க்கணட பாடல்களைப் பாடினார்.
  1. ராகங்கள் பதினாறு
  2. நிலவு தூங்கும் நேரம்
  3. மடை திறந்து பாயும் நதியலை நான்
  4. சம்சாரம் என்பது வீணை
  5. மன்றம் வந்த தென்றலுக்கு
  6. மாதமோ ஆவணி
  7. கணாக் காணும் கண்கள் மெல்ல
  8. வந்தனம்... என் வந்தனம்
  9. சுந்தரி கண்ணால் ஒரு சேதி
  10. பாரதி கண்ணம்மா
  11. பூந்தேனில் கலந்து
  12. இலக்கணம் மாறுதோ
  13. யார் வீட்டு ரோஜா
  14. நான் ஒன்ன நெனச்சேன்
  15. கண்ணுக்குள் நூறு நிலவா
  16. இதயம் ஒரு கோவில்

எங்கெல்லாம் பாடல்களுக்கான தளம் உள்ளதோ அதற்கான சுட்டிகளைக் கொடுத்துள்ளேன்.

9.00 மணியானதும் கிளம்ப வேண்டியிருந்தது. நிகழ்ச்சி அதற்கு மேலும் தொடர்ந்தது.

வயதானாலும் எஸ்.பி.பி குரலில் மாற்றம் ஏதுமில்லை. ஆனால் அரங்கில் ஒலியமைப்பு சுமாராகத்தான் இருந்தது. அவ்வப்போது குரலை விட பக்கவாத்தியங்களின் சத்தம் தாங்க முடியவில்லை. தொடக்கத்தில் நிகழ்ச்சியை ரெகார்ட் செய்துகொண்டிருந்த விடியோ கேமரா இயக்குனர்களுடன் சில பார்வையாளர்கள், தங்கள் பார்வையை மறைப்பதாக, கடுமையாகச் சண்டை போட்டனர். எஸ்.பி.பி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டும் சத்தம் அடங்கவில்லை.

பாடல்களுக்கு இடையே 'இந்தப் பாட்டைப் பாடுங்கள், அந்தப் பாட்டைப் பாடுங்கள்' என்று ஓயாத விண்ணப்பங்கள். பலமுறை எஸ்.பி.பி கோபப்பட்டார், ஆனால் பார்க்க வந்த ஜனங்கள் இதைப்பற்றியெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. ஒரு பாடகன் அனைத்துப் பாடல்களையும் தன் விரல் நுனியில் வைத்திருப்பதாக நம்மூர் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். "ம்.. பாடு" என்றால் உடனே பாடுவதற்கு. பின் எஸ்.பி.பி தான் இன்று பாடவந்துள்ள பாடல்களை ஏற்கெனவே ரிஹர்சல் செய்து வந்திருப்பதாகவும் வேறு பாடல்களைக் கேட்டவுடன் பாடுவது தம்மால் முடியாது, கூடவுள்ள இசைக்கலைஞர்களாலும் ஈடுகட்ட முடியாது என்று விளக்கியும் ரசிக சிகாமணிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

[Thanks: Prakash]

திராவிட் சாதனையில் ...

இந்தியா வெற்றியை நோக்கி...


எப்பொழுதெல்லாம் கவலைகள் வருகின்றனவோ அப்பொழுது பக்தர்கள் கடவுளை துணைக்கு அழைப்பதைப் போல இந்திய அணியினர் திராவிடை அழைக்கிறார்கள். அவரும் அருள் பாலிக்கிறார்.

மூன்றாம் நாள் இறுதியில் டெண்டுல்கர் தவறாக அவுட் கொடுக்கப்பட்டதும் ஆட்டம் சமநிலைக்குத் திரும்பியது. ஆனால் நான்காவது நாள் காலை மொஹம்மத் சாமியின் பந்துவீச்சால் ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது. கங்குலி எழும்பி வரும் சாமியின் பந்துவீச்சை சரியாக எதிர்கொள்ளாமல் புல் செய்யப்போய் பந்தை வானில் தூக்கி அடித்தார். பந்துவீச்சாளரே ஓடிச்சென்று அதைப் பிடிக்க இந்தியா 154/4, கங்குலி 12. தொடர்ந்து சாமி அளவு குறைந்த பந்துகளாகவே வீசிக்கொண்டிருந்தார். ஆனால் பெரிய தொல்லை என்னவென்றால் பந்துகள் ஒரே சீராக எழும்பவில்லை. ஒரே இடத்தில் குத்திய பந்துகள் சில தலைக்கு மேலும், சில கழுத்தளவிலும், சில மார்பளவிலும் எழும்பின. புதிதாக உள்ளே வந்த லக்ஷ்மண் எதிர்கொண்ட ஒரு பந்து எதிர்பார்த்ததை விட எழும்பி மட்டைக்கு மேலாக வந்து ஹெல்மெட்டின் கிரில் மீது ஓங்கி அடித்தது. ஹெல்மெட்டின் உள்பகுதி இடது கண்ணின் மீது அழுத்திக் குத்தியதால் லக்ஷ்மண் சில நிமிடங்களுக்கு அதிர்ந்து போய்விட்டார். இடதுகண் வீங்கி விட்டது. உடனே களத்தை விட்டு வெளியே செல்லவேண்டியதாகி விட்டது. அவரது எண்ணிக்கை அப்பொழுது 2. இந்தியாவோ 156/4.

உள்ளே வந்த தினேஷ் கார்த்திக் வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னிங்ஸை விளையாட வேண்டிய கட்டாயம். சாமி நெருப்பைக் கக்கிக்கொண்டு வீசுகிறார். வெளியே பார்த்திவ் படேல் ரெடியாக உள்ளே நுழையக் காத்திருக்கிறார். விக்கெட் போனால் பாகிஸ்தான் ஆட்டத்தை நிச்சயமாக ஜெயித்து விடும். சாமி தனக்கு வீசிய முதல் பந்தை அற்புதமாக ஸ்கொயர் டிரைவ் செய்து நான்கைப் பெறுகிறார். ஆனால் தொடர்ந்து ஒரு பக்கம் சாமி, மறுபக்கம் தனீஷ் கனேரியா வீச்சை சமாளிக்க வேண்டும்.

திராவிடும் சாமியின் பந்துவீச்சில் வெகுவாகத் தடுமாறினார். பின் தற்போதைய ஒரே நோக்கம் சாமியை பந்துவீச்சிலிருந்து விடுவிக்க வைப்பது என்று அவரது பந்துகளைத் தடுத்தாடத் தொடங்கினார். கனேரியாவின் பந்துவீச்சில் ரன்கள் எளிதாகக் கிடைத்தன. சாமி ஒரு மணிநேரம் ஓயாமல் வீசியபின் ஓய்வெடுத்துக் கொண்டார். அப்பொழுதுதான் இந்தியாவின் மறுமலர்ச்சி தொடங்கியது. தினேஷ் கார்த்திக்கின் ஆக்ரோஷமான ரன் சேகரிப்பு திராவிடுக்கு நிம்மதியைக் கொடுத்தது. ரன்கள் வேகமாக வந்தன. உணவு இடைவேளை வரை வேறெந்த விக்கெட்டும் விழவில்லை.

இந்தியா 350 ரன்கள் முன்னிலை வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் கார்த்திக்-திராவிட் ஜோடி மிக எளிதாக ரன்களைப் பெற்றது. எனவே நான்காவது நாள் அன்று கடைசி ஒரு மணிநேரத்தை மட்டும் வைத்துவிட்டு டிக்ளேர் செய்யலாம் என்று கங்குலி எதிர்பார்த்திருக்கலாம். ஒவ்வொரு ரன்னாகச் சேர்த்து திராவிட் மதியம் தனது சதத்தைப் பெற்றார். எத்தனையோ ஆட்டங்களை இந்தியாவுக்காக திராவிட் வென்று தந்துள்ளார். இந்த மேட்சில் இந்தியா ஜெயித்தால் அதற்கும் திராவிட்தான் முக்கியக் காரணமாக இருப்பார். சதத்துக்குப் பிறகு வேகமாக ரன்கள் சேர்க்க முயற்சி செய்து கனேரியா பந்துவீச்சில் லாங் ஆஃப் அசீம் கமாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். திராவிட் 135. இந்தியா 321/5. கார்த்திக்கும், திராவிடும் சேர்ந்து 165 ரன்கள் சேர்த்தனர். இடது கண்ணை இடுக்கிக் கொண்டே லக்ஷ்மண் விளையாட வந்தார். இப்பொழுது வேக வேகமாக ரன்கள் சேர்க்க வேண்டும். கார்த்திக் கனேரியாவை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து 90களுக்கு வந்தார். ஆனால் அதே ஓவரில் கால்களுக்கு பின்னால் பவுல்ட் ஆனார். கார்த்திக் 93, இந்தியா 331/6. அத்துடன் தேநீர் இடைவேளை.

இடைவேளைக்குப் பின்னர் இந்தியா ஒரு மணிநேரம் விளையாட முன்னரே முடிவு செய்திருக்க வேண்டும். லக்ஷ்மண் சில ரன்களைப் பெற்றார். ஆனால் கனேரியா பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆனார். லக்ஷ்மண் 24, இந்தியா 377/7. அடுத்து உள்ளே வந்த ஹர்பஜன் சிங், பாலாஜி இருவரும் ரன்கள் பெறாமலேயே ஆட்டமிழந்தனர். ஆனால் இர்ஃபான் பதானும் கும்ப்ளேயும் ரன்களைச் சேர்த்தனர். பத்தாவது விக்கெட்டுக்காக இருவரும் 29 ரன்களைப் பெற்றனர். கடைசி ஒரு மணிநேரம் இருக்கும்போது கங்குலி டிக்ளேர் செய்தார். இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோரும் 407. ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு.

பாகிஸ்தான் வெற்றி பெற ஒரு நாளும் (குறைந்தது 90 ஓவர்கள்) 20 ஓவர்களும் இருந்தன. தேவை 422 ரன்கள். ஷாஹீத் ஆஃப்ரீதி எடுத்தவுடனேயே தடாலடியாக ஆரம்பித்தார். நல்ல பந்துகளும் கெட்ட பந்துகளும் சமமாகவே உதை வாங்கின. அரை மணி நேரத்துக்குள் இந்தியாவுக்கு குலை நடுங்கிப் போயிருக்க வேண்டும். ஓவருக்கு 5-6 ரன்கள் வேகத்தில் பாகிஸ்தான் ரன்களைச் சேகரித்தது. 20 ஓவர்களில் பாகிஸ்தான் 100 ரன்களைப் பெற்றுவிடும் போலிருந்தது. விக்கெட்டோ விழுவதைப் போலத் தெரியவில்லை. ஆனால் ஆட்டத்தில் கடைசி நிமிடங்களில் கும்ப்ளே கால்திசையில் வீசிய பந்தை ஸ்வீப் செய்யப்போய் டாப் எட்ஜ் ஆனதால் ஷார்ட் ஃபைன் லெக்கில் நின்றிருந்த கங்குலி கையில் எளிதான கேட்ச் கிடைத்தது. அவருக்கும் நிம்மதி, இந்தியாவுக்கும் நிம்மதி. அதற்குள்ளாக ஆஃப்ரீதி 59 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்தார். 9 நான்குகள், 2 ஆறுகள்.

ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்தியாவின் கையே ஓங்கியிருக்கும். இன்னமும் 327 ரன்கள் தேவை. ஆஃப்ரீதியைப் போல் வேகமாக ரன்கள் எடுக்க யாரும் இல்லை. ஆடுகளம் ஸ்பின்னுக்கு சாதகமாக - கொஞ்சமாவது - இருக்கும். பாலாஜி - ஆஃப்ரீதியால் கடுமையாக தண்டிக்கப்பட்டவர் - நிச்சயமாகத் திரும்பி வந்து நன்றாக வீசுவார். பாகிஸ்தானின் பேட்டிங் நீண்டது. எட்டாவது இடத்தில் விளையாடும் கம்ரான் அக்மல் வரை நன்றாக விளையாடுவார்கள். ஆனால் 90 ஓவர்களில் 327 ரன்கள் பெறுவார்களா, அத்தனை விக்கெட்டுகளையும் தக்க வைத்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே. டிராவும் நடைபெறலாம்... ஆனால் சாத்தியங்கள் அத்தனையும் இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளன என்று எனக்குத் தோன்றுகிறது.

Saturday, March 19, 2005

ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு இந்த வருடத்துக்கான ஞானபீட விருது கிடைத்துள்ளது. வாழ்த்துகள்.

சம அளவில் இரண்டு அணிகளும்

பொதுவாக முதலிரு தினங்களில் ஏதேனும் ஓரணி முன்னுக்கு வந்து ஆட்டத்தின் போக்கை நிர்ணயித்துவிடும். ஆனால் கொல்கத்தா டெஸ்டில் இரண்டு அணிகளும் மாறி மாறி அடுத்த அணியின் முன்னேற்றத்தைத் தடுத்து ஆட்டத்தைச் சமன் செய்த வண்ணம் உள்ளன.

முதல் நாள் இந்திய மட்டையாளர்கள் வெகு வேகமாக ஆட்டத்தை பாகிஸ்தான் கையை விட்டு எடுத்துச் சென்றனர். ஆனால் நாளின் கடைசிப் பகுதியில் பாகிஸ்தான் வேகமான நான்கு விக்கெட்டுகளைப் பெற்று மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தனர். இரண்டாம் நாள் காலையில் பிர விக்கெட்டுகளைப் பெற்றதும் பாகிஸ்தான் தனது சிறப்பான மட்டையாட்டத்தால் முன்னணிக்கு வந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் முடியும்போது பாகிஸ்தான் மிக வலுவான நிலையில் இருந்தது. கையில் எட்டு விக்கெட்டுகள். இந்தியாவைவிட 134 ரன்கள் பின்னால். நல்ல ஃபார்மில் உள்ள இன்ஸமாம்-உல்-ஹக், அசீம் கமால், அப்துல் ரஸாக், கம்ரான் அக்மல் ஆகியோர் இனிதான் விளையாட வரவேண்டும். கிரீஸில் இருக்கும் யூனுஸ் கான், யூசுஃப் யோஹானா இருவருமெ அற்புதமாக விளையாடிக் கொண்டிருந்தனர். இந்தியாவுக்கு அடுத்த விக்கெட் எங்கிருந்து, யாரிடமிருந்து வரும் என்பது தெரியாத வண்ணம் இருந்தது.

மூன்றாம் நாள் காலை பாலாஜி முதல் அடியைக் கொடுத்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்து உள்நோக்கித் திரும்பியது. யூசுஃப் யோஹானா பந்தை சரியாகக் கணிக்காமல் மட்டையை மேலே உயர்த்தி வழிவிட்டார். ஆனால் பந்து கால்காப்பில் பட்டது. ஸ்டிரோக் ஏதும் அடிக்காத காரணத்தால் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். 281/3. யோஹானா 104. அடுத்து விளையாட வந்த இன்ஸமாம் தான் எப்போதும் விளையாடுவது போல ஜாலியாக விளையாடினார். அடித்த ஒவ்வொரு பந்தும் மட்டையின் நடுவில் பட்டது. எளிதாக ரன்கள் பெற்றார். ஆனால் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் பதான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கார்த்திக்கிடம் கேட் கொடுத்து அவுட்டானார். இன்ஸமாம் 30, பாகிஸ்தான் 331/4. இந்நிலையில் இந்தியாவின் லீட் 76 ரன்கள் மட்டுமே. யூனுஸ் கான் லாங் ஆன் திசையில் அடித்துவிட்டு மூன்றாவது ரன்னைப் பெற முயற்சி செய்தனர். எல்லைக்கோட்டுக்கருகே பந்தை நிறுத்திய கங்குலி பந்தை மேல் நோக்கித் தட்டிவிட, பின்னால் வந்த டெண்டுல்கர் பந்தைப் பிடித்து பந்துவீச்சாலரிடம் அனுப்பாமல் நேராக விக்கெட் கீப்பரிடம் விட்டெறிந்தார். இதை எதிர்பார்க்காது மெதுவாக ஓடிவந்த அசீம் கமால் ரன் அவுட் ஆனார். கமால் 6, பாகிஸ்தான் 347/5.

இப்படியாக இந்தியா ஓரளவுக்கு சமநிலையை அடைந்தது. ஆனால் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் முதல்முறையாக தமது திறமையைக் காட்டினர். கும்ப்ளே, ஹர்பஜன் இருவருமே பந்தை காற்றில் மிதக்கவிட்டு ஆடுகளத்தின் உதவியால் சுழல வைத்து அதிலிருந்து நிறையப் பலனை அடைந்தனர். யூனுஸ் கான் கும்ப்ளேயின் லெக் பிரேக்கில் ஏமாந்து இரண்டாம் ஸ்லிப்பில் நின்ற லக்ஷ்மண் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். யூனுஸ் கான் 147, பாகிஸ்தான் 361/6. மொஹாலியில் அற்புதமான சதமடித்து இந்தியாவுக்கு வெற்றிகிட்டாமல் செய்த கம்ரான் அக்மல் ஹர்பஜனின் ஆஃப் பிரேக்கை சரியாகக் கணிக்காமல் மிட்-ஆஃப் மேல் அடிக்க நினைத்தார். பந்து அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஸ்பின் ஆனதால் உள்புற விளிம்பில் பட்டு மிட்-ஆனுக்கு கேட்ச் ஆகப் போனது. அங்கு டெண்டுல்கர் அந்த கேட்சைப் பிடித்தார். அக்மல் 0, பாகிஸ்தான் 362/7. ரன்கள் பெறுவது இப்பொழுது பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமாகிப் போனது.

கும்ப்ளேயின் மற்றுமொரு லெக் பிரேக்கில் அப்துல் ரஸாக் விளிம்பில் தட்டி, கார்த்திக்கின் கையுறை வழியாக முதல் ஸ்லிப்பில் நின்ற திராவிடுக்கு கேட்ச் கொடுத்தார். ரஸாக் 17, பாகிஸ்தான் 378/8. அடுத்த ஓவரிலேயே மொஹம்மத் சாமி ஹர்பஜனை ஸ்வீப் செய்யப்போய் டாப் எட்ஜ் ஆகி ஃபார்வர்ட் ஷார்ட் லெக் திசையில் கங்குலி பின்னால் ஓடிச்சென்று எளிதான கேட்ச் ஒன்றைப் பிடித்தார். சாமி 7, பாகிஸ்தான் 378/9. கடைசி விக்கெட்டுக்கு சில ஓசி ரன்கள் கிடைத்தன. ஒரு பை நான்கு ரன்கள், ஒரு லெக் பை நான்கு ரன்கள், ஒரு விளிம்பில் பட்ட நான்கு ரன்கள் என்று சில ரன்களுக்குப் பிறகு கும்ப்ளேயின் பந்தில் மிட்-ஆஃப் சேவாகுக்கு கேட்ச் கொடுத்து மொஹம்மத் கலீல் ஆட்டமிழந்தார். 392 ஆல் அவுட். இந்தியாவுக்கு 14 ரன்கள் லீட் கிடைத்தது.

இந்தியாவின் இரண்டாம் இன்னிங்ஸ் முதல் ஓவரில் சேவாக் அடுத்தடுத்து மூன்று நான்குகள் அடித்தார். முதலிரண்டு பந்துகளும் கால் திசையில் வந்தன. அருமையாக ஃபிளிக் செய்தார். மூன்றாவது கவர் திசைக்குப் பறந்தது. ஆனால் அடுத்த ஓவரில் சாமி யார்க்கரில் கம்பீர் பவுல்ட் ஆனார். கம்பீர் 1, இந்தியா 14/1. நான்காவது ஓவரில் சேவாக் சாமியை கட் செய்யப்போக, அடி விளிம்பில் பட்டு பந்து ஸ்டம்பில் விழுந்தது. சேவாக் 15, இந்தியா 23/2.

டெண்டுல்கர் தேநீர் இடைவேளைக்கு முன் ஆடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். திராவிட், ஆனால், எந்தப் பிரச்னையுமின்றி ஆடினார். தேநீர் இடைவேளைக்குப் பின்னர் டெண்டுல்கரின் ஆட்டத்தில் பெருத்த மாற்றம் இருந்தது. கடந்த இரண்டு வருடங்களில் டெண்டுல்கர் இவ்வளவு அருமையாக விளையாடியதில்லை. தன் வாழ்க்கையின் உச்சத்தில் எப்படி விளையாடினாரோ அப்படி விளையாடினார். ஆஃப் ஸ்டம்பில் விழும் பந்துகளை அவர் திறமையாக ஃபிளிக் செய்வதைப் பார்க்க மிக அழகாக இருந்தது. ஸ்டிரெயிட் டிரைவ், கவர் டிரைவ், பாடில் ஸ்வீப், கட் என்று ஒவ்வொரு அடியும் அற்புதமாக இருந்தது. திராவிடின் எண்ணிக்கையை சுலபமாகத் தாண்டி தன் அரை சதத்தை நெருங்கினார்.

இதற்குள் மைதானம் இருளில் மூழ்கத் தொடங்கியது. டெண்டுல்கர் அப்துல் ரஸாக்கின் பந்துகள் சிலவற்றை சரியாகக் கணிக்க முடியாமல் தடுமாறினார். நடுவர் ஸ்டீவ் பக்னாரிடம் சென்று வெளிச்சக்குறைவு பற்றி புகார் செய்தார். ஆனால் பக்னார் அதைக் கண்டுகொள்ளவில்லை. அரங்கில் உள்ள மின்விளக்குகள் ஒளிர ஆரம்பித்தன. ஆனால் இந்த விளக்குகள் வரும்போது அணைந்து அணைந்து எரியும். அதுவும் டெண்டுல்கரை வெகுவாகப் பாதித்தது. ஆனாலும் தொடர்ந்து விளையாடி பாயிண்ட் திசையில் கட் செய்து நான்கைப் பெற்று தனது அரை சதத்தைப் பெற்றார். ஆனால் ரஸாக் பந்து ஒன்றில் முழுவதுமாக ஏமாந்தார். பந்து மட்டையில் படாமல் விக்கெட் கீப்பரை நெருங்கும்போது ஸ்விங் ஆனது. அதைப் பிடித்த விக்கெட் கீப்பர் கூட அப்பீல் செய்யவில்லை. ஆனால் ரஸாக் அரைகுறையாக செய்த அப்பீலில் பக்னார் டெண்டுல்கரை அவுட் கொடுத்தார்! டெண்டுல்கர் 52. இந்தியா 121/3.

டெண்டுல்கருக்குப் பெருத்த அதிர்ச்சி. ரீப்ளேயில் பந்துக்கும் மட்டைக்கும் இடையே கிட்டத்தட்ட இரண்டு இஞ்ச் இடைவெளி இருக்கும் போலத் தோன்றியது. அற்புதமான ஓர் ஆட்டத்தை பார்வை குறைந்த பக்னார் ஒழித்து விட்டார்! அதைத் தொடர்ந்தும் திராவிட், கங்குலி இருவரும் வெளிச்சம் பற்றி புகார் செய்தவண்ணம் இருந்தனர். சாமியின் பந்தை புல் செய்து திராவிட் தன் அரை சதத்தைப் பெற்றார். கங்குலியும் கவர் திசையில் ஒரு நான்கைப் பெற்றார். அந்நிலையில் மீண்டும் கங்குலி புகார் கொடுக்க, நடுவர்கள் போனால் போகிறதென்று வெளிச்சம் போதாமையால் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர். ஆட்டம் முடியும்போது இந்தியா 133/3 என்ற நிலையில் இருந்தது.

இந்தியா இன்னமும் 150-200 ரன்கள் சேர்க்க வேண்டும். பாகிஸ்தானுக்கு கிட்டத்தட்ட 110 ஓவர்கள் இருக்குமாறு வைத்து டிக்ளேர் செய்யலாம். ஸ்பின் நன்றாக எடுப்பதால் இந்தியா ஜெயிக்க நல்ல வாய்ப்பு உள்ளது.

இந்தியா டிவியின் அத்துமீறல்கள்

கடந்த சில தினங்களாக இந்தியா டிவி என்னும் தொலைக்காட்சி சானல் சில பலான விஷயங்களை, புலனாய்வுச் செய்திகள் என்ற பெயரில் ஒளிபரப்பி வருகிறது.

ரஜத் ஷர்மா என்று முன்னர் 'ஆப் கி அதாலத்' என்னும் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர்தான் இந்தியா டிவியின் முக்கிய எடிட்டர் என்று கேள்விப்படுகிறேன்.

ஜார்க்கண்ட், பிஹார், ஹரியானா தேர்தல்கள் முடிவுகள் வெளியாகும் நாள் அன்று எல்லாத் தொலைக்காட்சிகளும் அந்த முடிவுகளைப் பற்றி அலசிக்கொண்டிருக்கும்போது, இந்தியா டிவி மட்டும் ரகசிய கேமராக்களினால் பிடிக்கப்பட்ட சில படங்களைக் காட்டினராம். (எனக்கு இந்த சானல் கிடைப்பதில்லை.) அதில் தற்போதைய சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தம் மனைவியல்லாத பிறருடன் உடலுறவு கொள்வதைப் போன்ற காட்சிகள் இருந்தனவாம். இதை முன்வைத்து நம் சட்டமன்ற/பாராளுமன்ற உறுப்பினர்கள் எப்படித் தரங்கெட்டு நடந்துகொள்கின்றனர் என்பதை முன்வைத்து அந்த சானலில் விவாதங்கள் நடந்தனவாம். இந்த சானலின் நிருபர்கள் தெருவில் போகும் மக்களைப் பிடித்து அவர்களிடம் கருத்து கேட்டனர். மக்களும் நேரடியாகவும், மொபைல் குறுஞ்செய்திகள் மூலமும் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும், ஆணுறுப்பை அறுக்க வேண்டும் போன்ற காட்டுமிராண்டித்தனமான கருத்துகளை வெளியிட்டுள்ளனர். [இதுபற்றி தி ஹிந்துவில் செவந்தி நினான் எழுதியுள்ள பத்தி.]

இந்த சூப்பர் டூப்பர் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகர்கள் சிலரின் அந்தரங்க வாழ்க்கையை அம்பலப்படுத்தியுள்ளது இந்த சானல். ஷக்தி கபூர் என்னும் ஹிந்தி வில்லன் நடிகர். அவரை சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்பது போல இந்தியா டிவி பெண் நிருபர் ஒருவர் அணுகியுள்ளார். ரகசிய கேமரா இதைப் படம் பிடிக்கிறது. கபூர் அந்தப் பெண்ணைப் படுக்கைக்கு வருமாறு அழைக்கிறார். அத்துடன் எந்தெந்த பாலிவுட் நடிகைகள் யார் யாருடன் casting couchல் கிடந்தார்கள்; அதனால் எப்படி வாழ்க்கையில் முன்னேறினார்கள் என்ற உபதேசம் வேறு. [ஐஷ்வர்யா ராய், பிரீத்தி ஜிந்தா என்று யார் பெயரையும் விட்டுவைக்கவில்லை.]

இந்தியா டிவி அதையும் ஒளிபரப்பியது. [பிரகாஷ் தன் வலைப்பதிவில் இதை மிகவும் சிலாகித்து "ம், போடு சாத்து!" என்று புகழ்ந்துள்ளார்.]

அதைத்தொடர்ந்து இன்னமும் பல புள்ளிகள் இந்தியா டிவியின் வலையில் சிக்கியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

தெஹெல்கா இணையத்தளம் [இப்பொழுது வாரமொருமுறை டாப்லாய்ட் ஆக மலர்ந்திருக்கிறது.] சில விவகாரங்களில் ரகசிய கேமராக்களைப் பயன்படுத்தியிருந்தது. அதில் ஒன்று கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் தொடர்பானது. மனோஜ் பிரபாகரைப் பயன்படுத்தி அவர் பல முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களுடன் பேசும்போது படம் பிடித்து அந்த டிரான்ஸ்கிரிப்ட்களை தெஹெல்கா வெளியிட்டது. அதைப்போலவே ராணுவத்தில் நடக்கும் சில ஊழல்களை அம்பலப்படுத்த ஆயுதப் பேரம் பேசும் ஆசாமிகளாக இரண்டு நிருபர்கள் பலருடன் பேசி அதைப் படம் பிடித்திருந்தனர். அத்துடன் சில இடங்களில் செக்ஸ் தொழிலாளர்களை ஈடுபடவைத்து சில ராணுவ அதிகாரிகளைப் பேசவைத்து சில படங்களும் எடுத்திருந்தனர்.

இதில் ராணுவ ஊழலை அம்பலப்படுத்தும் ரகசியப் படப்பிடிப்புகளை ஓரளவுக்கு நியாயப்படுத்தலாம். அதிலும் செக்ஸ் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி எடுத்த படப்பிடிப்புகள் மீது பலரும் கவலை தெரிவித்திருந்தனர். மேட்ச் பிக்ஸிங் தொடர்பான ஒலி/ஒளிப்பிடிப்புகள் ஓரளவுக்காவது நியாயப்படுத்தக் கூடியவை. நாட்டில் பலரும் இந்த விவகாரங்கள் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டனர். இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு நாடுகளையும் உலுக்கிய வகையில் சில கிரிக்கெட் வீரர்கள் பெயர் அடிபட்டது. இரண்டு நாடுகளிலும் விசாரணைக் கமிஷன், காவல்துறை ஆய்வுகள் நடந்தன. உண்மைகளை முழுவதுமாக வெளிக்கொணர்வது அவசியமானது. எனவே ஒரு பத்திரிகை இதில் ஈடுபடலாம் (ஆனால் சட்ட விதிகளுக்குள்ளாக) என்று நம்மால் சொல்ல முடிந்தது.

ஆனால் தற்போது இந்தியா டிவி செய்வது தனி மனிதரது அந்தரங்கத்தைப் பெரிதும் பாதிக்கிறது. ஷக்தி கபூர் தன் சக சினிமா ஊழியர்களைப் பற்றி புறம்பேசக் கூடாது என்று இந்தியச் சட்டங்களில் ஏதேனும் இருக்கிறதா? அவர் தன்னைப் பார்க்க வரும் பெண்ணை படுக்கைக்கு அழைக்கக் கூடாது என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா? தனிப்பட்ட முறையில் அந்தப் பெண், அந்த நடிகர் மீது வழக்குத் தொடுக்கலாம். அதற்கான வழிமுறைகள் உள்ளன. ஆனால் இதை நாடெங்கும் பார்க்கும் வண்ணம் ஒளிபரப்புவதால் இந்த சானல் என்ன சாதித்தது? அதைப்போலவேதான் மக்கள் பிரதிநிதிகள் அந்தரங்கங்களை ஒளிபரப்புவதும். நாம் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர் யார் யாருடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று ஏதேனும் ஒப்பந்தத்தில் இறங்குகிறோமா? அதை ஒரு பெரிய குற்றம் என்று டிவியில் காண்பிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது? அவர்கள் உறுப்பை வெட்ட வேண்டும், அவர்களைத் தெருவில் நிற்க வைத்துக் கல்லால் அடிக்க வேண்டும் என்றும் சொல்லும் அளவுக்கு நம் மக்களின் மூளை குழம்பிப்போய் உள்ளது!

அடுத்து தொழிலதிபர்கள் ரகசியமாகப் படம் பிடிக்கப்படுவார்கள். பிரைம் டைம் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகும். பின்னர் நானும் நீங்களும் படம் பிடிக்கப்படுவோம். ஐந்து வயதுக் குழந்தை வீட்டில் ஐம்பது காசு திருடியது என்பது ரகசிய கேமராக்களால் படம் பிடிக்கப்பட்டு ஒளிபரப்பாகும். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்தக் குழந்தையை என்ன செய்யவேண்டும் என்பது பற்றி குறுஞ்செய்தி அனுப்புவார்கள்.

நிச்சயம் இந்தத் தொலைக்காட்சி பத்திரிகை தர்மத்தை மீறியுள்ளதோடு, நாட்டின் சட்டங்களுக்கும் புறம்பாக நடந்துகொண்டிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்தியா டிவியால் பாதிக்கப்பட்ட அனைவரும் அந்தத் தொலைக்காட்சியின் மீது கடுமையான வழக்குப் போட்டு நஷ்ட ஈட்டுத் தொகையைக் கறந்து அந்த நிறுவனத்துக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

Friday, March 18, 2005

யூனிஸ் + யோஹானா = ஸ்டைல்

இந்தியா-பாகிஸ்தான் இருவரும் சமீப காலத்தில் விளையாடும் ஐந்தாவது டெஸ்ட் இது. முந்தைய நான்கில் காணாத பேட்டிங் இந்த டெஸ்டில் காணக்கிடைத்தது. பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் இது என்றாலும் பாகிஸ்தான் எப்பொழுதுமே முன்னணி விக்கெட்டுகளை இழந்து பின் இன்ஸமாம்-உல்-ஹக் மற்றும் கடைசி சில ஆட்டக்காரர்களின் திறமையால் மட்டுமே பிழைத்து வந்தது.

இரண்டாம் நாள் காலையில் மிச்சம் மீதி உள்ள இந்திய விக்கெட்டுகளை பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் எடுத்தனர். கடைசி விக்கெட்டுக்காக ஹர்பஜனும் கும்ப்ளேயும் சில ரன்களைப் பெறாதிருந்தால் இந்தியா 400ஐத் தாண்டியிருக்காது! பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷாஹீத் ஆஃப்ரீதி, தவ்ஃபீக் உமர் இருவரும் மிக மாறுபட்ட ஆட்டத்தைக் காண்பித்தனர். ஆஃப்ரீதி எடுத்தவுடனேயே - சேவாக் போல - அடிதடியில் இறங்கினார். மறுமுனையில் உமர் மிகவும் தடுமாறியே விளையாடினார். எண்ணிக்கை எதையும் சேர்க்காதபோது பாலாஜியின் பந்துவீச்சில் முதல் ஸ்லிப்பில் திராவிட் கையில் ஒரு சுலபமான கேட்ச் கொடுத்தார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் திராவிட் அந்த கேட்சைத் தடவினார்! உணவு இடைவேளை வரையில் பாகிஸ்தான் விக்கெட் எதையும் இழக்கவில்லை.

இடைவேளைக்குப் பின் பதான் பந்துவீச்சில் ஆஃப்ரீதி மிட் ஆனில் நின்றுகொண்டிருக்கும் டெண்டுல்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பாலாஜி பந்துவீச்சில் உமர் மூன்றாவது ஸ்லிப்பில் இருக்கும் சேவாகிடம் ஒரு கேட்ச் கொடுத்து அதுவும் தவற விடப்பட்டது! ஆனால் அதிக நாசம் ஏற்படும் முன்னர் பாலாஜியின் பந்துவீச்சிலேயே உமர் ஸ்கொயர் லெக் திசையில் தூக்கி அடிக்க ஹர்பஜன் எம்பிக் குதித்து அருமையான கேட்ச் ஒன்றைப் பிடித்தார். பாகிஸ்தான் 70/2.

அவ்வளவுதான். அதற்கடுத்து உள்ளே வந்த யூசுஃப் யோஹானா, தற்போதைய உதவி அணித்தலைவர் யூனிஸ் கானுடன் சேர்ந்து அற்புதமாக விளையாடினார். யூனிஸ் கான் தொடக்கத்தில் தடாலடியாக அடித்துக்கொண்டிருந்தார். ஏகப்பட்ட நான்குகள். ஆனால் சற்று நேரம் செல்லச்செல்ல தான் நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தியப் பந்துத் தடுப்பாளர்களை மிகவும் தொல்லைப்படுத்தினார். அங்கும் இங்குமாகத் தட்டி ஒரு ரன், இரண்டு ரன்கள் என்று எடுத்தனர் இருவரும். இருவரும் அரை சதத்தைத் தாண்டினர். பின் தேநீர் இடைவேளைக்குப் பிறகு தமது அருமையான ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்தியாவுக்கு அடுத்த விக்கெட் எங்கிருந்து கிடைக்கும் என்பதே தெரியாமல் இருந்தது. கும்ப்ளே பலமுறை இரண்டு மட்டையாளர்களையும் கஷ்டப்படுத்தினார். பலமுறை எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்தார். ஆனால் நடுவர்கள் அவரது அப்பீல்களை நிராகரித்துக்கொண்டே இருந்தனர். ஹர்பஜன் நன்றாகவே பந்துவீசினாலும் விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை. பதான், பாலாஜி இருவரும் மீண்டும் வந்து ரிவர்ஸ் ஸ்விங் வீசியும் ஒன்றும் நடக்கவில்லை. ஓவருக்கு 5.5 ரன்கள் எடுத்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் மெதுவாக 4.2 என்ற அளவுக்குக் குறைந்தது.

யூனிஸ் கான், யூசுஃப் யோஹானா - இருவருமே ஆஃப் திசையில் அற்புதமாக கட், டிரைவ் விளையாடினர். யோஹானா லெக் திசையிலும் தனது மணிக்கட்டின் திறமையைக் காட்டினார். பல சமயங்களில் லக்ஷ்மண் விளையாடுவதைப் போலவே இருந்தது. யூனிஸ் கான் ஸ்பின்னர்களின் பந்தை, தடுப்பாளரின் தலைக்கு மேல் தூக்கி அடிப்பதற்கு சிறிதும் பயப்படவில்லை. ஆட்டம் முடிவதற்கு முன்னதாகவே இருவரும் தத்தம் சதத்தைப் பெற்றனர்.

மூன்றாம் நாள் ஆட்டம் இப்பொழுது மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது. பாகிஸ்தான் இப்பொழுதைக்குப் பார்க்கும்போது இந்தியாவின் எண்ணிக்கையைத் தாண்டும் என்றே தோன்றுகிறது. எத்தனை லீட் எடுக்கும் என்பதுதான் ஆட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும். இன்ஸமாம், அசீம் கமால், அப்துல் ரஸாக், சென்ற டெஸ்டில் சதமடித்த கம்ரான் அக்மல் ஆகியோர் இனிமேல்தான் பேட்டிங் செய்யவேண்டும். பாகிஸ்தான் 600 வரை செல்ல ஆசைப்படுவார்கள்.

Thursday, March 17, 2005

பால் உல்ஃபோவிட்ஸ் உலக வங்கியின் தலைவர்?

அமெரிக்கா அதிபர் ஜார்ஜ் புஷ், தன் குழுவிலேயே அதிகமான போர்வெறி கொண்ட கொடுமையான மனிதர் பால் உல்ஃபோவிட்ஸை உலக வங்கியின் தலைவராக நியமித்துள்ளார்.

இதைப் பிற நாடுகள் கடுமையாக எதிர்க்க வேண்டும். உலக வங்கியின் இயக்குனர்கள் இந்த நியமனத்தை எதிர்த்து, வேறு யாரையாவது நியமிக்கச் சொல்ல வேண்டும்.

உலக வங்கியின் தலைவரை அமெரிக்க அதிபர் நியமிப்பது என்பதே அபத்தமாக இருக்கிறது.

பால் உல்ஃபோவிட்ஸ் தன் வாழ்க்கையில் அதிகமாக சாதித்திருக்கலாம். ஆனால் நமக்கெல்லாம் தெரிய வருவது ஈராக் தொடர்பான அவரது சத்தங்கள் மட்டுமே. உலக வங்கியின் மீது இடதுசாரிகளுக்கும், உலகமயமாதலை எதிர்ப்பவர்களுக்கும் எப்பொழுதுமே நல்ல அபிப்ராயங்கள் இருந்ததில்லை. இப்பொழுது அத்துடன் இன்னும் பலரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

உல்ஃபோவிட்ஸ் தலைமையிடத்துக்கு வந்தால் உலக வங்கியின் பணத்தை வைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு வால் பிடிப்பவர்களுக்கு மட்டும்தான் பணம் தருவேன் என்று நிச்சயமாக மிரட்டுவார். பிற நாடுகள் மீதும், பிற கலாசாரங்கள் மீதும் உல்ஃபோவிட்ஸுக்கு சிறிது கூட மரியாதை இருந்ததில்லை. இவரது எழுத்துக்கள் Project for the New American Century என்னும் இணையத்தளத்தில் இருக்கின்றன. (கூகிள் தேடுதல் மூலம் பெறலாம்.)

போர்வெறியர் மட்டுமல்ல, உல்ஃபோவிட்ஸ் நியோ-கன்சர்வேடிவ்களின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளையும் சிறு நாடுகள் மீது விதிக்க சற்றும் தயங்கமாட்டார். அமெரிக்காவின் நலன் மட்டும்தான் தன் குறிக்கோள் என்பதைத் தவிர வாழ்நாளில் உல்ஃபோவிட்ஸ் உருப்படியாக பிற நாடுகளைப் பற்றி யோசித்தது கூடக் கிடையாது. சுனாமிக்குப் பிறகு இந்தோனேஷியா மீது பறந்து சென்று அங்கு நிகழ்ந்த சேதங்களுக்கு வருத்தம் தெரிவித்தாராம். அது ஒன்றுதான் அவரது ஆதரவாளர்களால் சொல்லப்படக்கூடியதாக உள்ளது!

எதிர்ப்புகளை மீறி உலக வங்கியின் தலைவராக இந்த மனிதர் வந்தால் உலக வங்கிக்கு மாற்றாக மற்றுமொரு நிதி நிறுவனத்தை உருவாக்க பிற நாடுகள் முயற்சி செய்யவேண்டும். அது ஒன்றின் மூலம்தான் சிறு நாடுகள் உருப்படியான பயனைப் பெற முடியும்.

அசைக்க முடியாத சுவர் - திராவிட்

கொல்கத்தா முதல் நாள், கங்குலி டாஸில் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்தியா ஜாகீர் கானுக்கு பதில் ஹர்பஜன் சிங்கைக் கொண்டுவந்திருந்தனர். பாகிஸ்தான் சல்மான் பட்டுக்கு பதில் ஷாஹீத் ஆஃப்ரீதியையும், நவீத்-உல்-ஹஸனுக்கு பதில் மொஹம்மத் கலீல் என்னும் இடதுகை வேகப்பந்து வீச்சாளரையும் கொண்டுவந்திருந்தனர்.

மொஹம்மத் சாமி, மொஹம்மத் கலீல் இருவருமே தொடக்கத்தில் வெகு சுமாராகப் பந்து வீசினர். அளவு குறைந்த பந்துகளாகவே வீசினர். விரேந்தர் சேவாக், கவுதம் கம்பீர் இருவருமே மிகச் சுலபமாக இந்தப் பந்துகளை எதிர்கொண்டனர். ஆடுகளத்தில் சிறிது புல் இருந்ததனால் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்று சிலர் எதிர்பார்த்திருக்கலாம். அப்படியொன்றும் இல்லை. மட்டையாட மிகவும் வசதியாகவே இருந்தது களம். மைதானத்தின் புல்தரையும் சீராக இருந்ததால் பந்து வேகமாக எல்லைக்கோட்டுக்குச் சென்றது. சேவாக் எப்பொழுதும் போல பிரமாதமாக விளையாடினார். நன்றாகவே விளையாடிக்கொண்டிருந்த கம்பீர், 29 ரன்கள் எடுத்திருந்த போது, தனீஷ் கனேரியா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். (80/1)

அடுத்து உள்ளே நுழைந்த திராவிட் ஒன்று ஒரு தீர்மானத்துடனே வந்திருந்தது போல விளையாடினார். தொடக்கத்திலிருந்தே ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்தார். எப்பொழுதும் அடிப்பதை விட அதிகமாக நான்குகளையும் பெற்றார். உணவு இடைவேளைக்கு முன் சேவாக் தன் அரை சதத்தைப் பெற்றார். உணவு இடைவேளையைத் தாண்டியதும் தேவையற்று ஷாஹீத் ஆஃப்ரீதி பந்தில் தூக்கி அடிக்கப்போய் கவரில் நின்றிருந்த இன்ஸமாம்-உல்-ஹக் பின்னால் ஒடிச்சென்று கேட்சைப் பிடித்தார். சேவாக் 81, இந்தியா 156/2.

பெருத்த கரகோஷத்துடன் உள்ளே வந்த டெண்டுல்கர் சுமாராகத்தான் விளையாடினார். அவ்வப்போது அவரது மட்டையிலிருந்து ஒருசில நல்ல அடிகளும் வந்தன. தேநீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரில் டெண்டுல்கர் தன் 10,000 ஆவது ரன்னைப் பெறுவாரா என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடக்கவில்லை. தேநீர் இடைவேளைக்குப் பிறகே அது அவருக்குக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து டெண்டுல்கர் தன் அரை சதத்தையும் பெற்றார். மறுமுனையில் திராவிட் சலனமேயின்றி தன் அரை சதத்தைத் தாண்டி 80களில் இருந்தார். இந்திய அணியின் எண்ணிக்கை 270ஐத் தாண்டி விட்டது.

இப்பொழுதுதான் பாகிஸ்தான் மீண்டும் ஆட்டத்துக்குள் நுழைந்தது. ஆஃப்ரீதி வீசிய மோசமான பந்து - ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து லெக் பிரேக் ஆனது. டெண்டுல்கர் அதைத் துரத்திச் சென்று மொருதுவான ஒரு கேட்சை விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மலுக்குக் கொடுத்தார். டெண்டுல்கர் 52, இந்தியா 272/3. அடுத்து வந்த கங்குலி தடாலடியாக மூன்று பவுண்டரிகள் அடித்தார். அதிலொன்று ஸ்லிப் வழியாகச் சென்றது. அதையடுத்து அப்துல் ரஸாக் வீசிய வெளியே செல்லும் பந்தைத் தட்டி விக்கெட் கீப்பருக்குக் கேட்ச் கொடுத்தார். கங்குலி 12, இந்தியா 298/4. அதற்கடுத்த பந்திலேயே - ரிவர்ஸ் இன்ஸ்விங் ஆனது - விவிஎஸ் லக்ஷ்மண் எல்.பி.டபிள்யூ ஆனார். இந்தியா 298/5.

திராவிட் அமைதியாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குடன் சேர்ந்து ரன்கள் பெற்றார். அடுத்தடுத்து இரண்டு நான்குகள் அடித்து தன் சதத்தைப் பெற்றார். கார்த்திக் மிகவும் தன்னம்பிக்கையுடன் ரன்கள் சேர்த்தார். இப்படியே நாளின் கடைசி ஓவர் - 90வது ஓவர் - வீச இருக்கும்போது இந்திய எண்ணிக்கை 344/5 என்று இருந்தது. தனீஷ் கனேரியா கடைசி ஓவரை வீச வந்தார். திராவிட் இந்த ஓவரை அமைதியாக விளையாடி அடுத்த நாள் வரவேண்டும் என்றுதான் நினைத்திருப்பார். ஆனால் விதிவசம்... நல்ல லெக் பிரேக் ஒன்றில் மெலிதாக விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்சாக முடிந்தது. திராவிட் 110. இந்தியா 344/6.

இந்நிலையில் பாகிஸ்தான் மிகப் பலமாக ஆட்டத்தில் மீண்டு வந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். திராவிடின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. அவுட்டாகும் வரை அவர் எதையுமே தவறாகச் செய்யவில்லை. அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தார். கவர் டிரைவ்கள், கட்கள், ஆன் டிரைவ்கள் என்று இரண்டு பக்கங்களிலும் ரன்கள் குவித்தார். சில சமயம் எழும்பி வரும் பந்துகளை ஹூக் செய்ய முனைந்தார். அப்பொழுதுதான் பார்க்க சற்றே சகிக்கவில்லை. ஆனால் முடிந்தவரை எழும்பிவரும் பந்துகளை மொத்தமாக விட்டுவிடுவதே சிறப்பு என்று விளையாடினார். தனீஷ் கனேரியா பந்துகளை - முக்கியமாக கூக்ளி - சரியாகக் கணித்தார்.

சேவாக், திராவிட் இருவரும்தான் தன்னம்பிக்கையுடன் விளையாடியவர்கள். டெண்டுல்கர் ஓரளவுக்குத்தான். கம்பீர் நிதானித்து நின்று தன் தொடக்கத்தை நல்ல ஸ்கோராக மாற்றாதது ஏமாற்றத்தைத் தருகிறது. இரண்டாம் நாள் எத்தனை ரன்கள் அதிகம் சேர்க்கும் இந்தியா என்பதிலிருந்துதான் ஆட்டத்தின் போக்கைக் கணிக்க முடியும்.

Wednesday, March 16, 2005

புத்தகம் வாசிக்கும் மிஸோரம் மக்கள்!

நமக்கெல்லாம் நேரத்தை எப்படிச் செலவிடுவது என்பதுதான் கவலை! சினிமாப் படம் என்றால் குறைந்தது மூன்று மணி நேரமாவது ஓடவேண்டும். எத்தனை ரூபாய் டிக்கெட் என்றாலும் பரவாயில்லை. நூறு நாள் 'கியூ'வில் தவங்கிடந்தாவது, அல்லது 'பிளாக்' மார்க்கெட்டிலாவது டிக்கெட் வாங்கியாக வேண்டும். ஏனோ புத்தகங்களைப் படிக்கும் நல்ல பழக்கம் ஏற்படவில்லை. தமிழகத்தின் மக்கட்தொகை நாலு கோடியே பதினோரு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து நூற்று அறுபத்தெட்டு (4,11,99,168). அதில் படித்தவர்கள் 1,62,56,393. அதாவது ஏறத்தாழ 40 சதவிகிதம். கல்லூரிகளுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும், நூலகங்களுக்கும், வாசகசாலைகளுக்கும், கோவில்களுக்கும் குறைச்சல் இல்லை. சரி, நாலு லட்சம் ஐந்து லட்சம் பத்திரிகைகள் விற்பனையாகின்றன. போகட்டும், நல்ல செய்திதான். ஆனால் எஞ்சிய எழுதப் படிக்கத் தெரிந்த தமிழ் மக்கள் எங்கே போனார்கள்? அவர்கள் படிப்பதே இல்லையா? படிப்பதில் அக்கறை இல்லையா, புத்தகம் வாங்கப் பணம் இல்லையா? இந்தப் புள்ளி விவரங்களைப் பார்த்தால் அல்லது கணித்தால் பதிப்பாளர்களின் நிலை எங்கே என்பது விளங்கும். பசுமைப் புரட்சி, தொழில் புரட்சி, அந்தப் புரட்சி, இந்தப் புரட்சி என்று புரட்சிக்கோஷங்களை எழுப்புகிறோம்; ஆனால் வாசிப்புப் புரட்சிதான் ஏற்படவில்லை.

சென்ற மாதம் மிஜோரமிற்குச் சென்றிருந்தேன். மிஜோரம் பங்களாதேசத்திற்கும், பர்மாவுக்கும் இடையே, வடகிழக்கு இந்தியாவில் இருக்கின்ற ஒரு மலை ராஜ்யம். அங்குள்ள எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. மொத்த மக்கள் தொகை 3,50,000. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 56 சதவிகிதம். அவர்கள் மொழி எழுத்து வடிவம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. மக்கள் எல்லோரும் கிறிஸ்தவர்கள். அவர்கள் புத்தக வெளியீடு எனக்குப் பெருவியப்பை அளித்தது. ஒரே பதிப்பில் ஒரு புத்தகம் எண்ணாயிரம் பிரதிகளுடன் வெளிவருகின்றது. ஏழாயிரம் பிரதிகள் ஒரு ஆண்டு முடிவதற்குள் தீர்ந்துவிடுகின்றன. ஆகவே அந்தப் பதிப்பகம் 'லெட்டர் பிரஸி'லிருந்து 'ஆப்செட்' பிரஸுக்கு மாறத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது! அந்த மக்களின் பொருளாதாரமும், வளர்ச்சியும் நமக்கிருப்பதில் நூறில் ஒரு பங்கு கூட இல்லை. நூல் படிக்கும் ஆர்வம் அந்தச் சின்னஞ்சிறு ராஜ்யத்தில் ஓங்கி நிற்கின்றது!
---- தி.பாக்கியமுத்து. "தமிழ்ப் புத்தக வெளியீடும், பத்திரிகைகளும்" என்னும் கட்டுரையிலிருந்து. "வரும் பத்தாண்டுகளில் தமிழ்ப் புத்தக வெளியீடு", தொகுப்பாசிரியர்: ஆதவன் சுந்தரம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, புதுடில்லி, 1978. நேஷனல் புக் டிரஸ்ட் சென்னையில் நவம்பர் 26, 27, 28, 1977-ல் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.

தி. பாக்கியமுத்து பற்றி: பதிப்புச் செயலாளர், கிறிஸ்தவ இலக்கிய சங்கம், சென்னை. பிறந்தது 20-6-1923. பி.ஏ. (பொருளாதாரம்), எம்.ஏ. (தமிழ்); பாளையங்கோட்டை புனித ஜான் கல்லூரியில் 1949-1968 பணியாற்றினார். 1967-ல் உலக சர்ச்சுகள் கவுன்சிலின் உதவிப்பணம் பெற்று அமெரிக்கா சென்று கொலம்பியா, நியூ யார்க் பல்கலைக் கழகங்களில் நாடகம் எழுதுவதிலும் பதிப்புக் கலையிலும் தேர்ச்சி பெற்றார்; தமிழில் சில நாடகங்களை இயற்றியுள்ளார். ஆங்கிலத்திலிருந்து கிறிஸ்துவ நூல்களை மொழி பெயர்த்துள்ளார். தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றிய நான்கு தொகுப்புகளின் பதிப்பாசிரியர்.

தமிழகச் சிறார்கள் விற்பனை பற்றிய ரிட் மனு

2 பிப்ரவரி 2005, மாத்ருபூமி செய்தித்தாளில் வந்த செய்தி ஒன்றை இரா.முருகன் தமிழில் மொழிபெயர்த்து எனக்குக் கொடுத்தார். அதை நான் என் வலைப்பதிவில் சேர்த்திருந்தேன். குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக்கு

மாத்ருபூமி செய்தியைப் பார்த்தபின்னர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கே.ராமகிருஷ்ணன் திருச்சூர் சென்று விஷயத்தை உறுதிப்படுத்தியபின் இதுபற்றி சேலம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் 4 பிப்ரவரி 2005 அன்று புகார் செய்துள்ளார். ஆனால் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுபற்றிய தினமணிச் செய்தி இதோ.

இப்பொழுது தமிழகச் சட்டமன்றம் அமர்வில் உள்ள நேரம். இதுபோன்ற விஷயங்கள் சட்டமன்றத்திலே எழுப்பப்பட வேண்டும். ஆனால் நம் சட்டமன்ற உறுப்பினர்களோ "யார் வீரர்" - தண்டவாளத்தில் தலையைக் கொடுத்தால் வீரனா இல்லை வீரப்பனைச் சுட்டுக்கொன்றால் வீரனா என்பது பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள்.

எந்தத் தமிழ் ஊடகமும் கண்டுகொள்ளாத இந்தப் பிரச்னையில் தீவிர ஆர்வம் காட்டிய ராமகிருஷ்ணனைப் பாராட்டுவோம். இவர் போன்றவர்கள் நம் நாட்டுக்கு நிறைய தேவை. இப்பொழுது நீதிமன்றம் வாயிலாக தமிழக உள்துறைச் செயலருக்கும் சேலம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை இன்று செய்தித்தாளில் படித்தபின்னராவது நடக்கும் சட்டமன்ற அமர்வில் இதைப்பற்றி சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதிப்பார்களா?

Tuesday, March 15, 2005

கிராமங்களில் தொலைதொடர்பும் இணையமும்

சென்ற வாரம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள என்-லாக் கணினி மையங்கள் சிலவற்றுக்குச் சென்றிருந்தேன். செங்குன்றத்தில் (அதாங்க... Red Hills) சுய உதவிக் குழு ஒன்றின் மையத்துக்கும் சென்றிருந்தேன்.

என்-லாக் கிராமப்புறங்களுக்கு இண்டெர்நெட் இணைப்புகளைக் கொண்டுவரும் பணியில் உள்ளது. ஒவ்வொரு பெரிய வட்டத்துக்கும் ஒரு உள்ளூர் சேவை அளிப்பவர் (Local Service Provider - LSP) இருக்கிறார். இவரிடமிருந்து சின்னஞ்சிறு கிராமங்களில் உள்ளவர்கள் வயர்லெஸ் மூலமான இணைப்பைப் பெற்று அந்த கிராம மக்களுக்கு சில சேவைகளை அளிக்கிறார்கள். இந்தக் கணினி மையத்துக்கு சிராக் (Chiraag) என்று பெயர்.

இதென்ன பெரிய விஷயம்? இப்பொழுதெல்லாம் பி.எஸ்.என்.எல் தான் மாதம் ரூ.500க்கு பிராட்பேண்ட் இணைப்பைத் தருகிறேன் என்கிறார்களே என்று நீங்கள் கேட்கலாம். அதெல்லாம் நகரங்களில் மட்டும்தான். அதுவும் நகரங்களின் வெளிப்புறங்களில் (சென்னை என்றால் குரோம்பேட்டிலோ, தாம்பரத்திலோ) இந்த பிராட்பேண்ட் இணைப்புகள் கிடைக்காது; அல்லது இன்னமும் சில வருடங்களாகலாம். சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்திலேயே மொபைல் சிக்னல்கள் முழுவதுமாகக் கிடைப்பதில்லை. பல கிராமங்களில் ஒரு தொலைபேசி இணைப்பு கூடக்கிடையாது.

சிராக் மையங்கள் இருக்கும் பல கிராமங்களில் அவர்கள் தொலைபேசியைக் கண்ணால் கூடப் பார்த்ததில்லை என்கிறார் திருவள்ளூர் LSP வரதராஜன்.

ஆனால் சிராக்/என்-லாக் தொழில் கஷ்டமானதுதான். திருவள்ளூரிலிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் leased line மிகக்குறைந்த bandwidth உடையது. அதற்கான செலவோ அதிகம். இதனால் சிராக் மையத்தில் உட்கார்ந்து கொண்டு இணையத்தில் உலாவுவது என்பது படு மோசமான அனுபவமாக இருக்கிறது. இதற்கான செலவும் நகரங்களில் உள்ள கணினி மையங்களைக் காட்டிலும் வெகு அதிகம். சென்னையில் இப்பொழுதெல்லாம் அதிவேக இணைய மையங்களில் ரூ. 10/- க்கு ஒரு மணிநேரம் உலாவலாம். ஆனால் சிராக் மணிக்கு ரூ. 50 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்! இது தாங்காது. ரூ. 10 அல்லது 20க்குக் குறைக்க வேண்டும். அதேபோல bandwidthஐயும் அதிகரிக்க வேண்டும்.

அதற்கு மேலும் செய்யவேண்டும். சிராக், WiLL எனப்படும் wireless in the local loop தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இதன்வழியாக தொலைபேசி இணைப்புகளையும் கொடுக்கலாம். ஆனால் தொலைபேசி இணைப்புகளைக் கொடுக்க வேண்டுமானால் அதற்கென உரிமம் பெற்ற தொலைபேசி நிறுவனங்கள்தான் செய்யமுடியும். சில மாவட்டங்களில் - உதாரணமாக மயிலாடுதுறையில் - டாடா இண்டிகாம் வழியாக தொலைபேசி இணைப்புகளையும் சிராக் மையங்களில் வழங்குகிறார்களாம். ஆனால் டாடா இண்டிகாம், பார்த்தி (ஏர்டெல்) போன்றோர் தமிழகத்தில் (இந்தியாவில்) எல்லா இடங்களிலும் இல்லை. பி.எஸ்.என்.எல் மட்டும்தான் அனைத்து இடங்களிலும் உள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனமோ என்-லாக் வழியாக தொலைபேசி இணைப்புகளை வழங்க விரும்புவதில்லை. அவர்களுக்கு எதையெடுத்தாலும் தாங்களே செய்யவேண்டும் (அதற்கு நூறாண்டுகள் ஆனாலும் பரவாயில்லை!).

இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.

சில மையங்களில் சிறுவர்கள் கணினியில் விளையாடிக்கொண்டிருந்தனர். பத்துப் பதினைந்து சிறுவர்கள் ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு, கம்ப்யூட்டரில் தடால் புடாலென்று ஆளைத் தூக்கி அடிக்கும் ஹீரோவை இயக்கிக் கொண்டிருந்தனர். இந்த ஹீரோவும் எதிரே நிற்கும் இருபது கெட்ட வில்லன்களைத் தாக்கிக் கொண்டிருந்தார்.

இப்படித் தொடங்கினாலும் இந்தச் சிறுவர்கள் வெகு சீக்கிரமே இணையத்தின் சூக்குமங்களைப் புரிந்துகொள்வார்கள். பிரவுசர் என்றால் என்ன என்று தடுமாற மாட்டார்கள். கூகிள் என்றால் என்ன என்று தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் மொழித் தகராறு இருக்கத்தான் செய்யும். தமிழில் விக்கிபீடியா, தரமான அகராதிகள் ஆகியனவும், பல்வேறு உருப்படியான இணையப்பக்கங்களும் எவ்வளவு அவசியம் என்பது இப்பொழுதுதான் புரிகிறது!

நாள் ஒன்றுக்கு நம்மால் முடிந்த விஷயங்களை - உருப்படியானவற்றை - தமிழில் எழுதி இணையத்தில் சேமித்தால், எங்கோ ஒரு கிராமத்தில் உள்ள குழந்தைகள் அதைப் படிப்பார்கள்.

வாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு

எனக்கு வாழ்க்கை வரலாறுகள் மிகவும் பிடிக்கும். வாழ்க்கை வரலாறுகள் வழியாக நாம் நிறையக் கற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

கிழக்கு பதிப்பகம் வாயிலாகப் பலருடைய வாழ்க்கை வரலாறுகளையும் வெளியிட முயற்சி செய்கிறோம். திருபாய் அம்பானி, ரஜினிகாந்த், ரமண மஹர்ஷி, வீரப்பன், காமராஜர், சச்சின் டெண்டுல்கர், சார்லி சாப்ளின் - இப்படி அனைவரும் உண்டு இதில். இன்னமும் ஆயிரக்கணக்கானோருடைய வாழ்க்கை வரலாறுகள் வரப்போகின்றன. அடுத்து வரப்போகும் சிலவற்றினை இப்பொழுதே சொல்லி விடுகிறேன்: தாமஸ் ஆல்வா எடிசன், நாராயண மூர்த்தி, எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.எஸ்.சுப்புலட்சுமி.

ராமச்சந்திர குஹா சில மாதங்களுக்கு முன் சென்னையில் பேசிய பேச்சொன்றுக்குச் சென்றிருந்தேன். அதைப்பற்றி எனது பதிவில் எழுதியிருந்தேன். [குஹாவின் வேறொரு பேச்சு பற்றிய முந்தைய இரண்டு பதிவுகள்: ஒன்று | இரண்டு.] பெரிய ஆசாமிகள்தான் என்றில்லை. சாமான்யர்களுடைய வாழ்க்கை வரலாறுகளின் மூலம் சொல்லப்படாத பல விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்பது குஹாவின் வாதம். நான் முழுமையாக இதனை ஏற்றுக் கொள்கிறேன்.

சாமான்யர்களோ, பெரிய ஆசாமிகளோ... யாரைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சுவையானதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கை வரலாறுகளைத் தமிழில் எழுத விரும்புபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Monday, March 14, 2005

கல்கி சதாசிவம் நினைவு விருது

சில வாரங்களுக்கு முன்னர் கல்கி சதாசிவம் நினைவு விருதுக்காக தமிழ்ப் பத்திரிகைகளில் வந்திருக்கும் சமூக நோக்குடன் கூடிய விளம்பரங்களுள் சிறந்ததாக ஒன்றைத் தேர்ந்தெடுக்க என்னை ஒரு நடுவராக இருக்க அழைத்திருந்தனர்.

நடுவர்கள் நாங்கள் தேர்ந்தெடுத்த விருதுக்கான விளம்பரம் Indian Centre for Plastics in the Environment என்னும் நிறுவனத்துடையது. இந்த விளம்பரம் பிளாஸ்டிக்கை அடியோடு நிராகரிக்க வேண்டும் என்ற கோணத்தில் சில சூழலியல் போராளிகள் பேசிக்கொண்டிருந்தபோது வெளியான விளம்பரம். பிளாஸ்டிக்கை நிராகரிக்க முடியாது. ஆனால் உபயோகித்தபின் கண்டபடி தூக்கியெறியாமல் பத்திரமாகப் பாதுகாத்து மறுசுழற்சிக்கு அனுப்பவேண்டும். இந்தத் தகவலைச் சொல்லவேண்டும். அதே நேரத்தில் பிளாஸ்டிக் எப்படிப்பட்ட மாறுதலை மக்கள் மத்தியில் கொண்டுவந்துள்ளது என்பதை உணர்வுப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். அதற்கு விளம்பர நிறுவனம் தேர்ந்தெடுத்தது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட ஜெய்ப்பூர் செயற்கைக் கால்கள். நான்கைந்து கால் ஊனமுற்ற சிறுவர் சிறுமிகள் பிளாஸ்டிக் செயற்கைக் கால்களைப் பொருத்திக்கொண்டு ஓட்டப்பந்தய மைதானத்தில் ஓடிவருகிறார்கள். எல்லைக்கோட்டுக்கருகே சிறுமி. இந்த விளம்பரத்தில் ஒரு பெண்குழந்தை மையப்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் எவ்வாறு ஊனத்தை ஓரளவுக்கேனும் வெல்ல உதவுகிறது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பிளாஸ்டிக்கை எவ்வாறு கையாளவேண்டும் என்று விளக்கும் வரிகள்.

விருது வழங்கும் விழா சனிக்கிழமை (12 மார்ச் 2005) சென்னை பாரதீய வித்யா பவன் அரங்கத்தில் நடைபெற்றது.

ICPE சார்பாக சென்னை CIPET டைரக்டர் ஜெனரல் டாக்டர் சுஷில் வர்மா வந்திருந்தார்.

மேற்சொன்ன விருதுடன், பத்திரிகை/இதழியல் சார்ந்த படிப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கான கல்கி சதாசிவம் உதவித்தொகையும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின்போது சக்தி டெக்ஸ்டைல் நிறுவன சேர்மன் கிருஷ்ணராஜ் வாணவராயர் "நவீன சமுதாயத்தில் மீடியாவின் பங்கு" என்ற தலைப்பில் பேசினார்.

கடைசியில் "A Gift of the Gods" என்னும் அவினாஷ் பஸ்ரிச்சா எடுத்த எம்.எஸ்.சுப்புலட்சுமி மீதான ஆவணப்படம் ஒன்றும் காண்பிக்கப்பட்டது.

சென்னையில் சுயதொழில் பயிற்சிப் பள்ளி

நேற்று (ஞாயிறு, 14 மார்ச் 2005) சென்னை அரும்பாக்கத்தில் Indian School for Self Employment என்னும் சுயதொழில் பயிற்சிப் பள்ளியின் தொடக்க விழா நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இங்கு நடத்தப்படும் வகுப்புகள்:

1. Diploma in fashion technology - 6 months - Rs. 10,000 - சிறுவர், பெரியவர்களுக்காக ஆடைகளை வடிவமைத்து உருவாக்குவது
2. Post graduate diploma in fashion technology - 6 months - Rs. 14,000
3. Call centre training - 1 month - Rs. 2,500
4. Diploma in interior designing - 6 months - Rs. 10,000
5. Diploma in photography - 3 months - Rs. 4,000
6. Diploma in videography (including non-linear editing) - 3 months - Rs. 4,000
7. Modeling and co-ordination - 2 months - Rs. 6,500
8. Personality development - 2 months - Rs. 3,000
9. Finishing school - 3 months - Rs. 7,500

நேற்றைய தொடக்க நிகழ்ச்சியில் D.ராஜேந்திரன் IAS, சிறுதொழில் துறைச் செயலர், தமிழ்நாடு, R.நடராஜ் IPS, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர், நடிகர் சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். ராஜேந்திரன் பேசும்போது நாட்டில் அரசுத்துறையிலோ, பெரும் நிறுவனங்களிலோ வேலைவாய்ப்புகள் அதிகமாகக் கிடைப்பதில்லை. எனவே சிறுதொழில், குறுதொழில் மூலம்தான் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும். (குறுதொழில் என்றால் ரூ. 25 லட்சத்துக்குக் குறைவாக முதலீடு செய்திருப்பது. அதற்கு மேல், ரூ. 3 கோடி வரை என்றால் சிறுதொழில் என நினைக்கிறேன்.) மேற்படி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்து வெளியே வரும் மாணவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பினால் அரசு ஆவண செய்யத் தயாராக உள்ளது என்றார். [ஆனால் எனக்கு இன்னமும் அரசு எந்த வகையில் குறுந்தொழில், சிறுதொழில் செய்பவர்களுக்கு உதவுகிறது என்று புரியவில்லை. ஒருநாள் ராஜேந்திரனிடம் சென்று பேசிப் புரிந்து கொள்ள வேண்டும்.]

இந்தப் பள்ளியின் தலைவர் பத்திரிகையாளர், ஜெயா டிவி சுதாங்கன்.

சுயதொழில் சார்ந்த இன்னமும் பல பாடத்திட்டங்களையும் புகுத்தப் போவதாகச் சொன்னார். சமையல் கலை, இதழியல் போன்ற சிலவும் சேர்க்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

Indian School for Self Employment
(Regd. Under Tamilnadu Society Act 1975 No. 287/2003)
Office: 666, PH Road, 1st Floor, Aminjikarai, Chennai 600029
Workshop: 842 (New. No. 447), P.H.Road (Near Vaishnava College), Arumbakkam, Chennai 600106. Ph: 2475 4445, 98840-52369

Saturday, March 12, 2005

வெல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா

நான்காம் நாள் ஆட்டத்தின் இறுதியில் இந்தியாவால் இந்த ஆட்டத்தை இனி வெல்லாமல் இருக்க முடியாது என்றிருந்த நிலை ஐந்தாம் நாள் முற்றிலுமாக மாறிப்போனது.

முதலில் நான்காம் நாள்.

இந்தியாவின் எஞ்சியுள்ள விக்கெட்டுகள் சில உருப்படியான ரன்களைச் சேர்த்தன. பாலாஜி மட்டையாலும் சில அதிரடிகளை வழங்கினார். லக்ஷ்மண் அரை சதமடித்தார். தனீஷ் கனேரியா விழுந்த மிச்சமுள்ள நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இந்தியாவுக்கு 204 ரன்கள் அதிகப்படியாகக் கிடைத்திருந்தன.

பாகிஸ்தானின் ஆட்டம் கோமாளித்தனமாகத் தொடங்கியது. தவ்ஃபீக் உமர் முன்காலில் வந்து தடுத்தாட, பந்து கால் காப்பில் பட்டு எழும்பி மட்டையின் அடி விளிம்பில் பட்டு மேல் நோக்கிச் சென்றது. அதுவரை எல்.பி.டபிள்யூவுக்காக அப்பீல் செய்து கொண்டிருந்த பாலாஜி ஓடிச்சென்று அந்த கேட்சைப் பிடித்தார். அடுத்து யூனுஸ் கான் பாலாஜியின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்தை, தோள்களைக் குலுக்கி விட்டுவிட எத்தனிக்க பந்து சடாரென உள்ளே புகுந்து அவரை பவுல்ட் ஆக்கியது. உச்சபட்ச கோமாளித்தனம் அடுத்த ஓவரின் முதல் பந்தில் நிகழ்ந்தது. இர்ஃபான் பதான் வீசிய அளவு குறைந்த பந்தை, குனிந்து உட்கார்ந்து விட்டுவிடத்தான் தீர்மாணித்தார் சல்மான் பட். ஆனால் பந்து அவர் நினைத்த அளவு எழும்பவில்லை. சல்மான் பட்டும் மட்டையை கீழாக நிறுத்தி வைக்காமல் நீர்மூழ்கிக் கப்பலின் பெரிஸ்கோப் போல மேல்நோக்கி வைத்திருந்தார். பந்து மட்டையின் அடிவிளிம்பில் பட்டு விக்கெட்கீப்பர் தினேஷ் கார்த்திக் கையில் கேட்ச் ஆனது. 10/3! இதைவிட மோசமான நிலை பாகிஸ்தானுக்கு இருந்திருக்க முடியாது.

ஆனால் தொடர்ந்து இன்ஸமாம்-உல்-ஹக்கும் யூசுஃப் யோஹானாவும் அற்புதமாக விளையாடினர். தம் அணி இருக்கும் மோசமான நிலைமை அவர்களை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவில்லை. ஓர் ஓவரில் இன்ஸமாம் பாலாஜியை பிரமாதமாக அடுத்தடுத்த பந்துகளில் மூன்று நான்குகள் அடித்து தன் ஃபார்மை வெளிப்படுத்தினார்.

அடுத்த விக்கெட் எங்கிருந்து வரப்போகிறது என்று இந்தியர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். கடைசியாக தேநீர் இடைவேளைக்கு முன்னர் கும்ப்ளே முதல் இன்னிங்ஸைப் போலவே நேராக வீசிய வேகமாண டாப் ஸ்பின்னர் மூலம் இன்ஸமாமை எல்.பி.டபிள்யூ ஆக்கினார். இன்ஸமாம் 86 ரன்கள் எடுத்திருந்தார். அதே ஓவரில் புதியவர் ஆசீம் கமால் முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த திராவிடுக்குக் கொடுத்த கேட்ச் நழுவிப்போனது. அங்கிருந்துதான் இந்தியர்களின் அதிர்ஷ்டம் திசைமாறிப் போயிருக வேண்டும்.

தேநீர் இடைவேளைக்குப் பின்னர் கும்ப்ளே யோஹானாவை பவுல்ட் ஆக்கினார். அப்படிச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போகக்கூடிய நிகழ்வல்ல இது. அடுத்தடுத்து நான்கு பந்துகள் கும்ப்ளே ஸ்டைல் லெக் பிரேக் ஆக அமைந்தது. அதாவது அதிகமாக ஸ்பின் ஆகாத, லெக் ஸ்டம்பில் விழுந்து மிடில்/ஆஃப் ஸ்டம்பை நோக்கிச் செல்லும் பந்துகள். அதே சமயம் பந்துகளின் வேகம் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே வந்தது. நான்கையுமே தடுத்தாடினார் யோஹானா. ஐந்தாவது பந்து அதி வேக டாப் ஸ்பின்னர். பந்து எதிர்பார்த்ததை விட ஓவர் ஸ்பின் ஆனது. கால் காப்பில் பட்டு, மட்டையில் பட்டு பின் நோக்கிச் சென்று ஸ்டம்பை நோக்கி உருண்டு பெயில்களைத் தட்டிவிட்டது. யோஹானா 68 ரன்கள் பெற்றிருந்தார்.

ஆசீம் கமாலும், அப்துல் ரஸாக்கும் மிகப் பொறுமையாக விளையாடினர். ஆசீம் கமால் ஆட்டம் முடியும் தருவாயில் பாலாஜியின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். நாளின் இறுதியில் பாகிஸ்தான் 53 ரன்கள் அதிகத்தில், கையில் வெறும் நான்கு விகெட்டுகளை மட்டும் வைத்திருந்தது.

ஐந்தாம் நாள் ஆட்டம் முடிய எத்தனை நேரம் ஆகும் என்பது மட்டும்தான் பலரின் யோசனையாக இருந்தது.

ஆனால் பாகிஸ்தான் விகெட் கீப்பர் கம்ரான் அக்மல் வேறு சில ஐடியாக்களை வைத்திருந்தார். ஐந்தாம் நாள் காலை சிறிதும் கவலைப்படாமல் அடித்தாடத் தொடங்கினார். ஒருவர் விடாது விளாசித் தள்ளினார். இந்திய ரசிகர்கள் எரிச்சல் அடைந்தாலும் அவரைப் பாராட்டத் தவறவில்லை. கங்குலி தன் கையில் உள்ள எல்லாத் துருப்புச் சீட்டுகளையும் பௌஅன்படுத்தினார். ம்ஹூம்! விக்கெட் விழுவதாக இல்லை. மறுமுனையில் ரஸாக் கட்டை போட்டுத் தள்ளிவிட்டார். "அறுவை, பிளேடு என்று எப்படி வேண்டுமானாலும் திட்டிக்கொண்டு போங்கள், என் பணி அவுட்டாகாமல் இருப்பதே" என்று தன் பணியைத் திறம்படவே செய்தார்.

அக்மல் தன் சதத்தை அடித்து முடித்தபின்னர்தான் பாலாஜியின் பந்துவீச்சில் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதற்குள் பாகிஸ்தான் லீட் எகிறியிருந்தது; நேரமும் அதிகம் கையில் இல்லை. மிச்சமிருந்த விக்கெட்டுகளும் சில ரன்களைப் பெற. இன்ஸமாம் 496/9 என்ற கணக்கில் டிக்ளேர் செய்தார்.

இந்தியா ஜெயிக்க 25 ஓவர்களில் 293 ரன்கள் பெற வேண்டும்! ஆனால் கடைசியில் 17 ஓவர்களில் 85/1 என்ற கணக்கில் இருகும்போது இனியும் ஆட்டம் நடைபெறுவதில் எந்த பிரயோசனமும் இல்லை என்று முடிவாகி ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததாகத் தீர்மானிக்கப்பட்டது.

தன் பிடிவாத ஆட்டத்தால் கம்ரான் அக்மல் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

இந்தியா நிச்சயம் ஏமாற்றம் அடைந்திருக்கும்.

Friday, March 11, 2005

சதமடிக்கவில்லை டெண்டுல்கர்!

மூன்றாம் நாள் மழையால் தொல்லை ஏதுமில்லை. சேவாக் தன் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்து வெகு விரைவிலேயே சதமடித்தார். திராவிட் தன் எண்ணிக்கையை அதிகரித்து 50ஐத் தொட்டார். ஆனால் உடனேயே சாமியின் பந்து வீச்சில் கல்லியின் நின்ற அசீம் கமாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். திராவிட் இம்மாதிரி அவுட்டாவது ஆச்சரியத்தைத் தந்தது. இப்படி உடலுக்குத் தள்ளி மட்டையை நீட்டி பந்தை மேலாகத் தட்டுவது அவரது வழக்கமல்ல.

அடுத்து டெண்டுல்கர் ஆட வந்தார். டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களைத் தாண்ட 121 ரன்கள் பாக்கி. இன்னுமொரு சதமடித்தால் டெஸ்ட் வாழ்க்கையில் மிக அதிக சதங்களைப் பெற்றவர் என்ற புது ரெகார்டை ஏற்படுத்துவார். ஆனால் ஆரம்பத்தில் அவர் விளையாடியது எந்தவிதமான நம்பிக்கையையும் தரவில்லை. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அனாவசியமாகத் தட்டப்போய் தோற்றுக்கொண்டே இருந்தார். மறுமுனையில் சேவாக் எந்தவிதக் கவலையுமின்றி ரன்கள் சேகரித்தார். திடீரென டெண்டுல்கர் சுயநிலைக்க்கு வந்தவராக சேவாகையும் மிஞ்சும் வகையில் ஆடத் தொடங்கினார்.

இதற்கிடையில் நடுவர் கோர்ட்சன் உதவியுடன் ஓர் அவுட்டிலிருந்து டெண்டுல்கர் தப்பினார். தனீஷ் கனேரியா பந்துவீச்சில் மட்டை-கால் காப்பு வழியாக சில்லி பாயிண்டில் ஒரு கேட்ச். ஆனால் நடுவர் கண்ணில் பந்து கால்காப்பில் மட்டும் பட்டது போலத் தோன்றியது.

உணவு இடைவேளைக்குப் பின் நிலைமை சற்று மாறியது. டெண்டுல்கர் அரை சதத்தைத் தாண்டினாலும் மேற்கொண்டு ரன்கள் பெறத் தடுமாறினார். சேவாக் அப்துல் ரஸாக்கை அரங்கை விட்டு வெளியேற்ற நினைத்து அடித்த அடி வானளாவச் சென்று மிட் ஆனில் நின்ற யூசுஃப் யோஹானா கையில் விழுந்தது. சேவாக் 173 ரன்கள் பெற்றிருந்தார். அதில் மூன்று கேட்ச்களை பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் நழுவ விட்டிருந்தனர். அதைத்தவிர எண்ணற்ற அரை-வாய்ப்புகள் வேறு இருந்தன. ஆனால் சேவாக் ஆட்டம் எப்பொழுதுமே இப்படித்தான் இருக்கும்.

கங்குலி டெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து 'தடவு தடவு' என்று தடவிக்கொண்டிருந்தார். தேநீர் இடைவேளை வரை விக்கெட்டுகள் ஏதும் விழவில்லை. ரன்களும் அதிகமாகக் கிடைக்கவில்லை.

பொதுவாகவே பாகிஸ்தான் கேட்ச் பிடிப்பது படு மோசமாக இருந்தது. அப்படி தவறிப்போய் ஒரு கேட் பிடித்தாளும் அது நோ-பாலாக அமைந்தது. மொஹம்மத் சாமி வீசிய ஒரு நோ-பால் - கங்குலி ஸ்லிப்புக்குத் தட்ட, யூனிஸ் கான் அற்புதமாக அந்த கேட்சைப் பிடித்தார்! அடுத்த பந்து, இம்முறை நோ-பால் இல்லை, ஆனால் பாயிண்ட் திசையில் கையில் விழுந்த கேட்சைத் தடவினார் தவ்ஃபீக் உமர்!

கங்குலி பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமப்படுவதில்லை. ஆனால் கனேரியா பந்துவீச்சில் மிகவும் தடுமாறினார். சாதாரணமாக இரண்டடி முன்னால் ஓடி வந்து மட்டையைச் சுழற்றி ஆறு ரன்கள் பெறுவார். இப்பொழுது கனேரியாவின் கூக்ளி, லெக் பிரேக் இரண்டிலுமே நிறையத் தடுமாறினார். தேநீர் இடைவேளையைத் தாண்டியதுமே சீக்கிரமாகவே கனேரியா பந்துவீச்சில் சில்லி பாயிண்டில் இலகுவான கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கங்குலி.

இனி இன்றைய நாளின் ஒரே சுவையான கட்டம் டெண்டுல்கர் 100ஐத் தொடுவாரா என்பதுதான். 90லிருந்து ஒரு நான்கைப் பெற்று 94 சென்றார். 120 ஓவர்கள் வரை பழைய பந்தை வைத்தே காலத்தை ஓட்டிய பாகிஸ்தான் கடைசியாக புதுப்பந்தை எடுத்தனர். ரானா நவீத்-உல்-ஹஸன் புதுப்பந்துடன் வீசிய மூன்றாவது பந்தில் திராவிடைப் போலவே கல்லியில் நின்ற அசீம் கமாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் டெண்டுல்கர்.

அத்துடன் அரங்கில் இருந்த கூட்டமும் பெரும்பாலும் காலியானது. ஆட்டம் இன்னமும் தொடர்ந்தது. லக்ஷ்மண் மீதியுள்ள சிறுவர்களுடன் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ரன்கள் சேகரித்தார். இப்பொழுதைக்கு இந்தியாவின் லீட் 135 ரன்கள். இன்னமும் இரண்டு நாள்கள்தான் பாக்கி.

மழை ஏதும் பெய்யாவிட்டால் இந்தியா ஜெயிப்பது உறுதி.