Sunday, February 16, 2003

இராக் போர்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இப்பொழுது நடந்து கொண்டிருப்பதால் வேலை பளு அதிகமாக உள்ளது. தொலைதொடர்பு நிறுவனங்கள் பற்றிய எண்ணங்கள் தொடரும் - சிறிது கால இடைவெளிக்குப் பிறகு.

அமெரிக்காவும், பிரிட்டனும் இராக் மீது போர் தொடுத்தே தீறுவேன் என்று ஏகாதிபத்திய அறிக்கை வெளியிட்டுக்கொண்டிறுந்தாலும், மற்ற நாடுகள், முக்கியமாக ஃபிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகள் அதை எதிர்த்திருப்பது வரவேற்கத் தகுந்தது. இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இதையே வலியுறுத்தியிறுப்பதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால், இதையெல்லாம் விட மேலாக, 5 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட அமெரிக்க மக்களே நியூயார்க் நகரில் போர் எதிர்ப்பு மாநாடு நடத்தியிருப்பது பெருமகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. இன்னும் ஒரு சில அமெரிக்கர்கள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு தன்னாதிக்கமாக இராக் மீது போர் தொடுக்க அதிகாரம் இல்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செனேட் (Senate) மற்றும் கீழவையின் (House of Representatives) அனுமதி இல்லாமல் அவர் இந்த விஷயத்தில் இயங்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளனர்.

இதனால் தேவையில்லாத போர் நடக்காது என்று நம்புவோம். இராக் அதிபர் சத்தாம் ஹுஸைன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு இடம் கொடுத்து தன் நாட்டில் உள்ள பொது அழிவு ஆயுதங்களை ஒட்டுமொத்தமாக அழித்தல் அவருக்கும், அவரது நாட்டு மக்களுக்கும், பிற நாட்டு மக்களுக்கும் மிகவும் நல்லது.

Friday, February 07, 2003

தொலைதொடர்பு நிறுவனங்கள் - பகுதி 2

செல்லுலார் தொலைபேசிகள் உலகில் 1980ஆம் ஆண்டு முதல் உபயோகத்தில் இருந்து வருகின்றன. முதன் முதலில் செல்லுலார் தொலைபேசிச் சேவைகள் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில்தான் தொடங்கப்பட்டது. இத்தொலைபேசிகள் அனலாக் (analogue) என்ற தொழில்நுட்ப முறையில் இயங்கி வந்தன. ஆனால் பல்வேறு நாடுகளில் இயங்கிவந்த இந்த செல்லுலார் தொலைபேசித் தொழில்நுட்பம் ஒன்றோடு ஒன்று இணங்காமல் தனித் தனி திசைகளில் சென்றுகொண்டிருந்தன. 1982-83இல், அப்பொழுது இந்த சேவையினை அளித்து வந்த ஒரு சில நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து Groupe Speciale Mobile (GSM) என்ற ஒரு தரம் நிர்ணயிக்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்கின. 1988இல் GSM ஒரு பொதுவான செல்லுலார் தொலைபேசித் தொழில்நுட்பத்தை உருவாக்கி, உபயோகிக்கத் தொடங்கினர். அதுவே இப்பொழுது Global System for Mobile Communication (GSM) என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. இந்த GSM தொழில்நுட்பம், டிஜிட்டல் (digital) மற்றும் TDMA (Time Division Multiple Access) ஆகிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கி இயங்குகிறது.

1992ஆம் ஆண்டு இந்திய அரசு தனியார் நிறுவனங்களை செல்லுலார் தொலைபேசிச் சேவையை அளிக்க அனுமதிக்க முடிவு செய்தது. 1994ஆம் ஆண்டு, தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு பெருநகரங்களில், நகருக்கு இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி (license) அளிக்கப்பட்டது. அதன்பிறகு, 1995ஆம் ஆண்டில் தமிழகம் (சென்னை இல்லாமல்), மஹாராஷ்டிரம் (மும்பை இல்லாமல்), மேற்கு வங்காளம் (கொல்கத்தா இல்லாமல்), மற்றும் இதர மாநிலங்களுக்கு முழுமையாகவும் ஒரு வட்டத்திற்கு (circle) இரு நிறுவனங்கள் வீதம் என்று செல்லுலார் தொலைபேசிச் சேவை வழங்க அனுமதி தரப்பட்டது.

இச்சேவை ஆரம்பிக்க, தனியார் நிறுவனங்கள் அரசுக்கு அனுமதித் தொகையாக (license fee) பெரும் அளவில் பணம் செலுத்த வேண்டியிருந்தது. மேலும், பெருமளவில் கருவிகளை நிர்மானிக்க முதலீடும் செய்ய வேண்டியிருந்தது. இதனால், இந்த சேவை ஆரம்பித்த காலகட்டங்களில், இந்நிறுவனங்கள் உள்ளூரில் பேச ஒரு நிமிடத்திற்கு கிட்டத்தட்ட 36 ரூபாய் வரை வசூலித்து வந்தன. இதற்கும் மேலாக, இந்த சேவையினைப் பெற விரும்புவோர் கையோடு எடுத்டுச் செல்லுமாறு உள்ள செல்லுலார் தொலைபேசியினை ரூ. 20,000 வரை செலவு செய்து வாங்க வேண்டியிருந்தது. இதனால் பொதுமக்கள் இந்த சேவை பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே என்று இதன் பக்கம் கூட நெருங்கவேயில்லை.

1996 முதல் 2000ஆவது ஆண்டு வரை அரசின் போக்கிலும், இந்நிறுவனங்களின் போக்கிலும் பலத்த மாறுதல் ஏற்பட்டது. 1999ஆம் ஆண்டு இந்திய அரசு புதிய தேசியத் தொலைதொடர்புக் கொள்கையை அறிமுகம் செய்தது. இதன்படி, செல்லுலார் தொலைபேசி நிறுவனங்கள் அனுமதித்தொகையை, முழுத்தொகையாக இல்லாமல், நிகர வருமானத்தில் ஒரு பங்காகச் செலுத்த அரசு அனுமதித்த்து. இதனை மேற்கொண்டு, செல்லுலார் நிறுவனங்களும் கட்டணத் தொகையை வெகுவாகக் குறைக்க ஆரம்பித்தன.
ஆனாலும், செல்லுலார் தொலைபேசிக் கட்டணம் ஒரு நிமிடத்திற்கு ரூ. 3-8 வரை இருந்து வந்தது. இதுவும் கூட Airtime, அதாவது செல்லுலார் தொலைபேசி உபயோகத்தில் இருக்கும் நேரத்திற்கான கட்டணம் ஆகும் - வெளிச்செல்லும் மற்றும் உள்ளே வரும் இணைப்புகள் இரண்டிற்குமே உபயோகிப்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இதன் மேலும், நிலம் சார்ந்த தொலைபேசியினைக் (fixed line அல்லது land line) கூப்பிட இன்னும் அதிகக் கட்டணம் கூடச் சேர்த்து செலுத்த வேண்டியிருந்தது.

இப்படி கட்டுக்கடங்காத கட்டணம் இருந்தபோதும் வியாபாரப் பெருமக்களும், அரசியல்வாதிகளும் இந்த செல்லுலார் சேவையினைப் பெரிதும் உபயோகித்து வந்தனர். இதன் மூலம், அவர்கள் எங்கு இருந்தாலும், அவர்களைக் கூப்பிட முடிந்தது. செல்லுலார் தொலைபேசிச் சேவையின் இன்னுமொரு முக்கிய அம்சம் Roaming (அதாவது "உலாவுதல்") என்பது. இதன்மூலம், கையிலே எடுத்துச் செல்லும் செல்லுலார் தொலைபேசியினை இந்தியாவில் உள்ள எந்த ஊருக்கும், ஏன்? உலகில் GSM தொழில்நுட்ப முறையில் செல்லுலார் சேவை நடந்துகொண்டிருக்கும் எந்த நாட்டிற்கும் எடுத்துச் செல்ல முடிந்தது. உலாவும் செல்லுலார் தொலைபேசி வைத்திருக்கும் ஒருவரை, அதே தொலைபேசி எண் மூலம், அவர் எந்த ஊரிலும், எந்த நாட்டிலும் இருந்தாலும் கூப்பிட முடிந்தது.

மேல்மட்டத்திலே ஆடம்பரப் பொருளாகவும், காட்சிப் பொருளாகவும் இருந்து வந்த செல்லுலார் தொலைபேசி எப்படி சாதாரண மனிதர்களின் அத்தியாவசியத் தேவையாகவும், தினமும் உபயோகிக்கும் ஒரு சாதனமாகவும் மாறத்தொடங்கியுள்ளது என்பதை நாளை பார்ப்போம்.

Thursday, February 06, 2003

தொலைதொடர்பு நிறுவனங்கள் - பகுதி 1

1986ஆம் ஆண்டு வரை நாடு முழுதும் தொலைபேசி வசதிகளை செய்து கொடுத்து வந்தது இந்திய அரசாங்கத்தின் தொலை தொடர்புத் துறை (Department of Telecommunication அல்லது DOT) ஆகும். தொலைதொடர்புத் துறையானது மத்திய அரசின் தொலை தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கியது.

தொலை தொடர்புத் துறை, நாடு முழுவதும் தொலைபேசி இணைப்பகங்களை (Telephone Exchange) நிறுவி, அவைகளைப் பராமரித்து வந்தது. இதன் மூலம் கொடுக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளால் (Telephone connections) உள்ளூர் (local calls) மற்றும் நாடு முழுவதும் (National Long Distance - NLD) பேச முடிந்தது. தொலை தொடர்புத் துறையின் மற்றொறு பகுதியான வெளிநாட்டு தொடர்புச் சேவை (Overseas Communication Service - OCS), இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குமான தொலைபேசி வசதிகளைச் (International Long Distance - ILD) செய்து வந்தது.

ஏப்ரல் 1986ஆம் ஆண்டு, 1ஆம் தேதி முதல், இந்திய அரசு இரு லிமிடெட் (limited, அதாவது வரையறுக்கப்பட்ட) நிறுவனங்களை உருவாக்கியது. ஒன்று மஹாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட் (Mahanagar Telephone Nigam Limited - MTNL), அதாவது வரையறுக்கப்பட்ட பெருநகர் தொலைபேசி வாரியம் - இந்நிறுவனம் தில்லி மற்றும் மும்பை மாநகரங்களில் மட்டும் அரசின் தொலை தொடர்புத் துறை செய்து வந்த சேவையினை மேற்கொண்டது. அதே நாளில் உருவாக்கப்பட்ட விதேஷ் சன்சார் நிகம் லிமிடெட் (Videsh Sanchar Nigam Limited - VSNL) என்ற நிறுவனம் OCS செய்து வந்த வெளிநாட்டுத் தொலை தொடர்பு வசதியினை மேற்கொண்டது. இந்த இரு நிறுவனங்களையும் அரசு பங்குச் சந்தைக்கு கொண்டு வந்தது.

MTNL நிறுவனம் உருவாக்கப்பட்டதின் காரணமே DOTயிணால் மும்பை மற்றும் தில்லி மாநகரங்களின் தொலைபேசித் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதே. அதற்கு ஏற்றமாதிரியே MTNL ஆரம்பித்த பிறகு இவ்விரு நகரங்களிலும் தொலைபேசி சேவை வெகுவாக முன்னேறியது. இன்று கூட, இதே நிலமைதான் நீடிக்கிறது.

VSNL நிறுவனமும் நல்லமுறையில் வெளிநாட்டுத் தொலைதொடர்பு வசதிகளை செய்து வந்ததோடு இல்லாமல், 1995ஆம் ஆண்டு இணைய இணைப்புக்கான (Internet) சேவையையும் தொடங்கியது. அதைப் பற்றி வரும் பகுதிகளில் பார்ப்போம்.

1995ஆம் ஆண்டு வரை, தொலைபேசிச் சேவை அரசின் கையிலும் (DOT), அரசு சார்ந்த நிறுவனங்கள் (MTNL, VSNL) கையிலுமே இருந்து வந்தது. முதன்முறையாக, 1994ஆம் ஆண்டு செல்லுலார் தொலைபேசி (Cellular Mobile Telephony) சேவையினைத் தொடங்க அரசு தனியார் நிறுவனங்களை அனுமதித்தது.

இதைப்பற்றி நாளை பார்ப்போம்.

Wednesday, February 05, 2003

தொலைதொடர்பில் புரட்சி (Telecom Revolution)

தொலைதொடர்பில் புரட்சியா? ஆங்கில நாளேடுகளைப் புரட்டாதவர்களுக்குப் புரியாத ஒரு புதிர் இது. பல்வேறு ஆங்கிலச் சொற்றொடர்கள், சுருக்கங்கள் (abbreviations) பல இந்த நாளேடுகளில் தூவப்பட்டிருக்கும். இவைகளின் பொருள் என்ன? இதனால் நம்முடைய வாழ்வில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது? ஏற்படப் போகிறது? இது சென்னை, மும்பை போன்ற பெரிய நகரங்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? சின்னஞ்சிறு ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் பொருந்துமா?

இந்த வினாக்களுக்கு விடை எழுப்புவதுதான், இந்தத் தொடரின் நோக்கம்.

இத்தொடரின், முதற்பகுதியாக, 1990 வரை எந்தவிதமான தொலைதொடர்பு வசதிகள் இருந்து வந்தன, அவற்றை எந்த நிறுவனங்கள் நமக்கு அளித்து வந்தன என்பதைப் பற்றி பார்ப்போம்.

Monday, February 03, 2003

இந்தியக் கனவு

தனி ஒருவனுக்கு உணவில்லையேல்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம் - பாரதி

சற்றே தீவிரமான ஒரு எண்ணம். ஆனால், ஒருவகையில் பார்க்கிற போது, அதில் தவறு இல்லையோ எனத் தோன்றும். பட்டினியுடன் இருப்பவர்கள் மத்தியில் எந்த ஒரு சமூகமும் மகிழ்ச்சியாய் இருந்து விட முடியாது. உணவு மட்டுமில்லை - ஒருவனுக்கு (ஒருத்திக்கு) அத்தியாவசியத் தேவைகள் தீர்வு அடைந்தால் மட்டும் போதாது - அதற்கு மேலும் போக முடியும் என்றதொரு நம்பிக்கை வரக்கூடிய நாடாக நமது இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை வராத பட்சத்தில், ஒருவனுக்கு தனது உயிரில் பிடிப்பு இருக்காது. தன் உயிரில் ஆசை இல்லாத ஒருவனுக்கு, பிறரது உயிரின் மேல் மதிப்பு இருக்காது. பிறனுயிர் மதிக்காதவன், கொலையும் செய்வான்.

தன் வீடு குப்பைமேட்டில் தான் என்ற எண்ணம் தெருவெல்லாம் குப்பை போட வைக்கும். தன் உயிர் செல்லாக் காசு என்பவன் ஓட்டிச் செல்லும் ஆட்டோ ரிக்ஷா தெருவில் போகும் மக்கள் மீதுதான் ஏறும்.

அந்த நம்பிக்கை - தன்னால் மேலே போக முடியும் என்ற நம்பிக்கை - ஒருவனுக்கு எப்பொழுது வரும்? இதைத்தான் "American Dream" (அமெரிக்கக் கனவு) என்று அமெரிக்கர்கள் சொல்வார்கள்.

தன் முன்னேற்றத்துக்கு தான் மட்டுமே காரணம். தனது சக்திக்கு உட்பட்டு தன்னால் படிப்படியாகத் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்; அதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ளது, அப்படி இல்லாவிட்டாலும், முயற்சியின் மூலம் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதுதான் இந்தியக் கனவாக இருக்க வேண்டும்.

இந்தக் கனவு காண விரும்புபவர்கள் மற்ற யாரையும் முழுதாக நம்பி வீணாய்ப் போகக் கூடாது. அரசாங்கம்/NGO இயக்கங்கள் என்று பிறரை மிகவும் சார்ந்து இருக்கக் கூடாது.

படிப்பு அவசியம் - சான்றிதழ்கள் அல்ல - ஆனால், தனக்குத் தேவையானவற்றை இணையதளங்கள் (websites) மூலம் அறிந்து கொள்ளும் அளவிற்குத் தேவையான படிப்பு அவசியம். இணைய இணைப்பு (internet connection) அவசியம். ஆனால், இணையத்தின் மொழி ஆங்கிலமாக உள்ளது, அம்மொழி தெரியா இந்தியரின் கனவை ஆரம்பத்திலேயே அழித்துவிடும். அதைத் தடுக்க வழி அனைவருக்கும் ஆங்கிலம் கற்பிப்பது அல்ல. தமிழிலே தளங்கள் அமைப்பது. இதைச் செய்வது இனியும் கடினம் அல்ல.

(இந்தக் கட்டுரை எழுதும் முயற்சியே, தமிழில் மிகவும் இயல்பாக, சுலபமாக எண்ணங்களை வெளிப்படுத்தவும் முடியும், பிறருக்குப் போய்ச் சேர்க்கவும் முடியும் என்பதை காண்பிப்பதற்குத்தான்.)

சென்றிடுவோம் எட்டுத் திக்கும் (இணைய தளங்களுக்கு). அங்கு காண்பதையெல்லாம் இங்கு (தமிழுக்கு) கொண்டு வந்து சேர்ப்போம்.

Sunday, February 02, 2003

கல்பனா சாவ்ளா இழப்பு

கொலம்பியா விண்கலம் வானத்திலேயே வெடித்துச் சிதறியுள்ளது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து விண்ணிலே சிதறியுள்ளார் கல்பனா சாவ்ளா. அவர் இறந்ததுற்கு வருந்துவோம் - ஓர் மனித உயிர் இறந்ததற்காக. ஆனால் அவர் இறந்தது இந்தியாவின் இழப்பு என்று நாட்டின் பிரதமர் முதல் கூறுவது வருந்தத்தக்கது. அவரது இழப்பு அமெரிக்காவினுடையது.
How can I start a tamil blog?

I am assuming that I can use Murasu to create the content. I will use the unicode font. If someone opens the page, if they do not have the font, it will get dynamically loaded, and hence they should be able to get the content in Tamil.

I will try it out tonight. I will need to change the blogger template.

Badri Seshadri
A humble beginning

I am starting a new blog - which will be in Tamil.

Badri Seshadri